யுவான் சுவாங்: அரசின் தடையை மீறி 4,500கி.மீ பயணித்து இந்தியாவுக்கு வந்த சீன பயணி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சீன நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் யுவான் சுவாங்
கட்டுரை தகவல்
கி.பி. 629இன் குளிர்காலத்தில் சீன நகரம் சங்கானில் (Chang'an) இருந்து உயரமான, உறுதியான 29 வயது நபர், இந்தியாவை அடையும் நோக்கில் நடைபயணமாகப் புறப்பட்டார். அந்தப் பயணியின் பெயர் யுவான் சுவாங்.
அது சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற சமயம். எனவே, பயணம் செய்வதற்குச் சரியான நேரமாகக் கருதப்படவில்லை. ஏனெனில், வழிப்பறிக் கொள்ளையர்களின் அச்சுறுத்தல் இருக்கலாம். மேலும், நாட்டைவிட்டு வெளியேறும் சீன குடிமக்கள் மீது தடையும் இருந்தது.
‘தி கோல்டன் ரோட், ஹௌ ஏன்சியண்ட் இந்தியா டிரான்ஸ்ஃபார்ம்ட் தி வார்ல்ட்’ (The Golden Road, How Ancient India Transformed the World) எனும் புத்தகத்தில், வில்லியம் டால்ரிம்பிள் இவ்வாறு எழுதியுள்ளார்.
“நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு படிக்க வேண்டும் என்பதுதான் யுவான் சுவாங்கின் நோக்கமாக இருந்தது. அந்த நேரத்தில், நாளந்தாவில் உலகிலேயே மிகப்பெரிய பௌத்த நூலகம் இருந்தது. சங்கானுக்கும் நாளந்தாவுக்கும் இடையே 4,500 கி.மீக்கும் அதிகமான தொலைவு இருந்தது.”
அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட சூழலில் நாளந்தாவை அடைவதென்பது எளிதான காரியமல்ல; நாளந்தா செல்வதற்கான சுவாங்கின் விண்ணப்பத்தை சீன நிர்வாகம் நிராகரித்தது.
“அந்த ஆண்டு சீனாவில் கடும் வறட்சி ஏற்பட்டது. சீன நிர்வாகத்திடம் இருந்தும் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்தும் யுவான் சுவாங் தப்பினாலும், அங்கு நிலவிய பசிக் கொடுமையும் அவரது பயணத்தைத் தடை செய்தது. ஆனால், யுவான் சுவாங் அபாயங்களைச் சந்திக்கப் பழகியவர்," என்று டால்ரிம்பிள் எழுதுகிறார்.
அம்புகள் மூலம் தாக்குதல்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, புகழ்பெற்ற வரலாற்று எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள்
சுமார் 150 கி.மீ. நடந்தபின், யுவான் சுவாங் லியன்ஜோ (Lianzhou) நகரை அடைந்தார். அங்கு அவர் குதிரை ஒன்றை வாங்கினார். சந்தையில் குதிரையை வாங்குவதற்கு பேரம் பேசியபோது, பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பார்த்துவிட்டனர்.
இதையடுத்து, பயணத்தைக் கைவிட்டு திரும்புமாறு உள்ளூர் ஆளுநர் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை பின்பற்றாமல், யாருக்கும் தெரியாமல் விடியலுக்கு முன்பாகவே நகரைக் கடந்தார் சுவாங். மேற்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தார். தன்னை யாரும் பிடித்துவிடக் கூடாது என்பதற்காகப் பகல் பொழுதில் தலைமறைவாக இருந்துவிட்டு, இரவில் பயணத்தைத் தொடர்வார்.
ஸ்ரம்னா ஹிலாய் (Sramna Huilai) மற்றும் ஷி யன்கோங் (Shi Yankong) தங்களின், “எ பயோகிராஃபி ஆஃப் தி டிரிபிடாகா மாஸ்டர் ஆஃப் தி கிரேட் சியன் மோனாஸ்டரி’ (A Biography of the Tripitaka Master of the Great Cien Monastery) எனும் புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளனர்.
“கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து பாதுகாவலர்கள் தன்னைப் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில், மணற்குழிகளில் இரவு வரை மறைந்திருப்பார். ஒருமுறை, இரவு நேரத்தில் குளத்தில் இருந்து தண்ணீர் எடுக்கச் சென்றபோது, அம்பு ஒன்று கிட்டத்தட்ட அவர் மீது உரசிச் சென்றது. சிறிது நேரத்திலேயே மற்றொரு அம்பு அவரை நோக்கி வந்தது. தன்னை குறிவைக்கிறார்கள் என்பதை உணர்ந்த அவர், ‘நான் தலைநகரில் இருந்து வந்த துறவி, என்னைக் கொல்லாதீர்கள்’ என உறக்கக் கத்தினார்” என்று எழுதியுள்ளனர்.
கண்காணிப்பு கோபரத்தில் இருந்த தலைமை காவலர் புத்த மதத்தைச் சேர்ந்தவர். யுவான் சுவாங்கை கைது செய்யுமாறு அவருக்கு ஏற்கெனவே உத்தரவுகள் வந்திருந்தன. ஆனால், அவர் யுவான் சுவாங்குக்கு உதவி செய்ய முடிவெடுத்தார்.
சுவாங்குக்கு அவர் உணவளித்து, பிடிபடாமல் இருக்க எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் கூறினார். சில தொலைவு வரை சுவாங்குடன் அந்தப் பாதுகாவலரும் உடன் சென்றார்.
சுவாங்கை சூழ்ந்த கொள்ளையர்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, பல தடைகளை மீறி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் யுவான் சுவாங்
இதையடுத்து, மொஹேயன் பாலைவனம், பமீர் மலைத்தொடர், சமார்கண்ட் மற்றும் பாமியான் வழியாக ஜலதாபாத் அருகே இந்தியாவை அடைந்தார்.
சமவெளிப் பகுதியை அடைந்த பின்னர், கங்கையாற்றில் படகு மூலம் பயணிக்க ஆரம்பித்தார். அவருடன் சுமார் 80 பயணிகள் இருந்தனர். சுமார் 100 மைல்கள் கடந்த பின்னர், கரையின் இருபுறமும் அசோகா மரங்கள் நிரம்பிய ஓரிடத்தை அடைந்தார்.
திடீரென அந்த மரங்களுக்குப் பின்னால் இருந்து கொள்ளையர்கள் அவர்களை நோக்கி வந்தனர். இதனால் படகை எதிர்புறமாக திருப்பிச் செலுத்த தொடங்கினார். அப்படகில் இருந்தவர்கள் மிகவும் பயந்து, ஆற்றில் குதிக்க ஆரம்பித்தனர்.
கொள்ளையர்கள் படகை கரைக்கு செலுத்துமாறு கட்டாயப்படுத்தினர். கரையை அடைந்தவுடன், நகைகள், ரத்தினங்கள் இருக்கிறதா என்பதைச் சோதிக்க படகில் இருந்தவர்களின் ஆடைகளை அகற்றுமாறு வற்புறுத்தினர்.
ஸ்ரம்னா ஹிலாய், ஷி யன்கோங் இருவரும், “அந்த கொள்ளையர்கள் பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள். அத்தெய்வத்திற்கு இலையுதிர் காலத்தில் வலுவான, வசீகரமான ஆண்களை பலியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் யுவான் சுவாங்கை பார்த்தவுடன், பூஜைக்கான காலம் நெருங்குகிறது, நாம் ஏன் அவரை பலியிடக் கூடாது எனத் தங்கள் கண்களாலேயே பேசிக்கொண்டனர்” என்று எழுதியுள்ளனர்.
கரும்புயலால் காப்பாற்றப்பட்ட சுவாங்
பட மூலாதாரம்,GETTY IMAGES
அவரை பலியிடுவதற்காக கூடாரம் ஒன்று தயார் செய்யப்பட்டது. யுவான் சுவாங் தான் அச்சத்தில் இருப்பதைச் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. கடைசியாக பிரார்த்தனை செய்வதற்கு அனுமதி கேட்டார் சுவாங். அதன்பின், அவர் தியான நிலைக்குச் சென்றார்.
“படகில் இருந்த அனைத்துப் பயணிகளும் அழுதனர், அலறினர். பின்னர், எல்லா திசையிலிருந்தும் தூசி நிறைந்த கரும்புயல் வீசியது. ஆறு திடீரென கொந்தளித்தது. படகு கிட்டத்தட்ட கவிழ்ந்துவிட்டது. பயந்துபோன கொள்ளையர்கள், இந்தத் துறவி எங்கிருந்து வருகிறார், அவருடைய பெயர் என்னவென்று பயணிகளிடம் கேட்டனர்” என ஸ்ரம்னா ஹிலாய், ஷி யன்கோங் எழுதியுள்ளனர்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பது குறித்த விவரிப்பு சுவாரஸ்யமானது. “சீனாவில் இருந்து மதத்தைத் தேடி இந்த துறவி வருவதாக பயணிகள் பதிலளித்தனர். உங்கள் மீது தெய்வம் கோபமாக இருப்பதைத்தான் இந்தப் புயல் காட்டுகிறது. உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேளுங்கள், இல்லையென்றால் நீங்கள் அழிந்துவிடுவீர்கள். கொள்ளையர்கள் ஒவ்வொருவராக சுவாங்கிடம் மன்னிப்பு கேட்டனர். அவர் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்பு கேட்டனர். ஆனால், தன் கண்களை மூடியவாறே யுவான் சுவாங் அமர்ந்திருந்தார். கொள்ளையர்கள் அவரைத் தொட்டபோது தனது கண்களைத் திறந்தார்” என்று அவர்கள் எழுதியுள்ளனர்.
நாளந்தாவில் பெரும் வரவேற்பு
ஆறு ஆண்டுகள் தொடர் நடைபயணத்தின் மூலம், கௌதம புத்தர் நடந்த அதே நிலத்தை யுவான் சுவாங்கும் அடைந்தார். முதலில் அவர் ஷ்ராவஸ்தியை (Shravasti) அடைந்தார். பின்னர், புத்தர் தன் முதல் போதனையை போதித்த சார்நாத்தை (Sarnath) அடைந்தார்.
அங்கிருந்து, அசோகர் பௌத்தத்தைத் தழுவிய பாடலிபுத்திராவுக்கு (Pataliputra) சென்றார். பிறகு, புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்து (Kapilavastu) வாயிலாக புத்த கயாவை (Bodh Gaya) அடைந்தார்.
ஆனால், புத்தர் அமர்ந்து தியானம் செய்த மரம் அங்கு இல்லாததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். புத்த கயாவை அடைந்து பத்து நாட்கள் கழித்து நான்கு புத்த துறவிகள் அவரைச் சந்திக்க வந்தனர்.
“நாளந்தாவில் அவருக்காகக் காத்திருக்கும் புத்த குரு ஷைலபத்ராவிடம் (Shilabhadra) அவரை அழைத்துச் செல்வதற்காக அவர்கள் வந்திருந்தனர். யுவான் சுவாங் நாளந்தாவை அடைந்தவுடன் அங்கு அவரை சுமார் 200 துறவிகள் மற்றும் 1,000 பேர் அவரை வரவேற்றனர்.
தங்கள் கைகளில் கொடிகள் மற்றும் நறுமணமிக்க ஊதுபத்திகளை வைத்திருந்தனர். அச்சமயத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேருவது மிகவும் கடினம். அதில் சேருவதற்கு கடினமான தேர்வு வைக்கப்படும்" என்று ஸ்ரம்னா ஹிலாய், ஷி யன்கோங் குறிப்பிட்டுள்ளனர்.
நாளந்தா பல்கலைக்கழகத்தின் பிரமாண்ட கட்டடம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, நாளந்தா பல்கலைக்கழக கட்டடம் மிக பிரமாண்டமானதாக இருந்தது
நாளந்தாவுக்கு சென்றது குறித்து யுவான் சுவாங் விவரிக்கையில், “உள்ளூர் விதிகளைப் பின்பற்றி, மண்டியிட்டுக் கொண்டே நான் நாளந்தாவுக்குள் நுழைந்தேன். ஷைலபத்ராவுக்கு என் மரியாதையைத் தெரிவிக்கும் பொருட்டு மண்டியிட்டுச் சென்றேன். அவரைப் பார்த்தவுடன், அவரின் பாதத்தில் முத்தமிட்டு வணங்கினேன்” என எழுதியுள்ளார்.
நாளந்தா பல்கலைக்கழக வளாகம் ஆறு மன்னர்களால் உருவாக்கப்பட்டது. நாளந்தா பல்கலைக்கழகத்தில் ஒரு நுழைவு வாயில் உள்ளது. ஆனால், அதன் உள்ளே சதுர வடிவிலான கட்டடங்களாகப் பிரிந்து, அவற்றில் எட்டு துறைகள் உள்ளன.
“பல்கலைக்கழகத்தின் நடுவே உள்ள குளத்தின் தெளிந்த நீரில் நீலநிற தாமரைகள் பூத்திருக்கும். அதன் முற்றத்தில் சந்தன மரங்கள் இருக்கும். மேலும், அதன் வெளியே உள்ள பகுதியில் அடர்ந்த மாந்தோப்பு இருக்கும். ஒவ்வொரு துறையின் கட்டடத்திலும் நான்கு தளங்கள் இருக்கும்.
இந்தியாவில் அந்தச் சமயத்தில் ஆயிரக்கணக்கான மடங்கள் இருந்தன. ஆனால், இந்தக் கட்டடம் வித்தியாசமானதாகவும் பிரமாண்டமாகவும் இருந்தது” என, ஸ்ரம்னா ஹிலாய் மற்றும் ஷி யன்கோங் எழுதியுள்ளனர்.
உயர்தர கல்வி
பட மூலாதாரம்,GETTY IMAGES
யுவான் சுவாங் அதன் வகுப்பறைகள், ஸ்தூபிகள், மடங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துறவிகள் மற்றும் மாணவர்கள் தங்குவதற்கான சுமார் 300 அறைகளையும் சென்று பார்த்தார்.
பல்கலைக்கழகத்தில் மகாயானம், நிகாயா பௌத்தம், வேதங்கள், தர்க்க சாஸ்திரங்கள், இலக்கணம், தத்துவம், மருத்துவம், கணிதம், வானியல், இலக்கியம் ஆகியவை கற்பிக்கப்பட்டன.
“நாளந்தா மாணவர்களின் திறமையும் திறனும் உயர்ந்த அளவில் இருந்தன. அங்கு கடுமையான விதிமுறைகள் இருந்தன. அவற்றை மாணவர்கள் பின்பற்ற வேன்டும். காலையிலிருந்து மாலை வரை அங்கு விவாதங்கள் நடக்கும்.
அதில், மூத்தவர்களும் இளைய மாணவர்களும் சமமான அளவில் பங்கேற்பார்கள். 100 வெவ்வேறு அறைகளில் தினந்தோறும் வகுப்புகள் நடக்கும். எந்தவொரு தருணத்தையும் தவிர்க்காமல், அங்கிருந்த மாணவர்கள் கடுமையாகப் படித்தனர்” என யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார்.
யுவான் சுவாங்குக்கு ஆதரவளித்த அரசர் ஹர்ஷவர்த்தனர்
பட மூலாதாரம்,NUMATA CENTER FOR BUDDHIST TRANSLATION
படக்குறிப்பு, நாளந்தா பல்கலைக்கழகத்தின் திறமைகள் மற்றும் திறன்கள் குறித்து யுவான் சுவாங் எழுதினார்
யுவான் சுவாங் இந்தியா வந்தபோது, அரசர் ஹர்ஷவர்த்தனர் வட இந்தியாவை ஆண்டார். மிகுந்த அறிவார்ந்தவராகவும் ஆர்வம் கொண்டவராகவும் எளிமையானவராகவும் அவர் அறியப்பட்டார். அவருடைய தந்தை ஹூணர்களை தோற்கடித்ததன் மூலம், அவர்களின் பேரரசு வங்காளத்திலிருந்து சிந்து நதி வரை பரவியிருந்தது.
குப்தா பேரரசு வீழ்ந்ததிலிருந்து முதன்முறையாக, அப்பிராந்தியத்தில் அமைதியும் வளமும் ஏற்பட்டது. இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தபோதிலும், ஹர்ஷவர்த்தனர் புத்த மதத்திற்கும் ஆதரவாக இருந்தார். நாளந்தா பல்கலைக்கழகம் வளர்ச்சிக்கும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
அங்கு படிக்கும் மாணவர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற தன்னுடைய 100 கிராமங்களையும் அந்த கிராம தலைவர்களையும் வழங்கினார். பல்கலைக்கழகத்திற்கு நாள்தோறும் மாட்டு வண்டிகளில் அரிசி, பால், வெண்ணெய் போன்றவற்றை கொண்டு சேர்ப்பதற்கு அக்கிராமங்களி சேர்ந்த 200 குடும்பங்கள் பொறுப்பானவர்கள்.
“சிறப்பு அந்தஸ்து கொண்ட மாணவரான தனக்கு தினந்தோறும் 20 வெற்றிலைகள், வெற்றிலை பாக்கு, ஜாதிக்காய், ஊதுபத்திகள், அரை கிலோ அரிசி மற்றும் அளவே இல்லாமல் பால் மற்றும் வெண்ணெய் போன்றவை வழங்கப்பட்டன. அதற்காக எந்த பணமும் வாங்கப்படவில்லை. நான் அங்கு இருந்தபோது, நேபாளம், திபெத், இலங்கை, சுமத்ரா மற்றும் கொரியாவிலிருந்தும் கூட துறவிகள் இங்கு படிக்க வந்தனர்” என யுவான் சுவாங் எழுதுகிறார்.
உலகிலேயே பெரிய நூலகம்
பட மூலாதாரம்,FACEBOOK
நாளந்தா பல்கலைக்கழகத்தின் நூலகம் அனைவரையும் அதிகளவில் ஈர்த்தது. அலெக்சாண்ட்ரியா நூலகம் அழிக்கப்பட்ட பிறகு, இந்த நூலகம் அச்சமயத்தில் உலகிலேயே பெரிய நூலகமாகக் கருதப்பட்டது.
வாங் ஸியாங் தனது ‘ஃப்ரம் நாளந்தா டூ சங்கான்’ எனும் புத்தகத்தில், “அந்த நூலகம் ஒன்பது தளங்கள், மூன்று பகுதிகளை உடையது. முதல் பகுதி ‘ரத்னதாதி’ (Ratnadadhi) . இரண்டாவது பகுதி ‘ரத்னசாகர்’ (Ratnasagar), மூன்றாவது பகுதி ‘ரத்னரஞ்சக்’ (Ratnaranjak) என்று அழைக்கப்பட்டன.
அங்கிருந்து எந்த ஓலைச்சுவடியை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். ஆனால் பல்கலைக்கழகத்தைத் தாண்டி அவற்றை எடுத்துச் செல்ல அனுமதியில்லை” என எழுதியுள்ளார்.
சிறப்பு வாய்ந்த புத்த அறிஞர் ஷைலபத்ராவின் கண்காணிப்பில் யுவான் சுவாங் அங்கு படித்தார். அங்கு மூன்று ஆண்டுகள் படித்தபோது அவருக்கு யோகா, தத்துவம் ஆகியவற்றை ஷைலபத்ரா கற்றுக் கொடுத்தார்.
நாளந்தாவில் ஆசிரியர்களுக்கு மசாஜ் செய்வது, அவர்களின் துணியை மடித்து வைப்பது, அவர்களின் அறைகளைச் சுத்தம் செய்வது என அனைத்து வேலைகளையும் மாணவர்கள்தான் செய்ய வேண்டும்.
‘யுவான்சுவாங், சைனாஸ் லெஜெண்டரி பில்கிரிம் அண்ட் டிரான்ஸ்லேட்டர்’ (Hwensang, China's Legendary Pilgrim and Translator) எனும் புத்தகத்தில் பெஞ்சமின் புரோஸ், “தன்னுடைய 10க்கு 10 அடி அறையில் மேளச் சத்தத்தின் ஒலியைக் கேட்டு தினமும் யுவான் சுவாங் காலையில் எழுவார். அதன்பின், வகுப்புகளைக் கவனிப்பார், சில நேரங்களில் அவரே விரிவுரை ஆற்றுவார்.
ஒவ்வொரு நாள் மாலையிலும், நூலகத்தில் தான் சீனாவுக்கு எடுத்துச் செல்ல விரும்பும் சமஸ்கிருத ஓலைச் சுவடிகளை பிரதியெடுப்பார். ஐந்து ஆண்டுகள் கழித்து, அவரிடம் அரிய இந்திய ஓலைச் சுவடிகளின் நூலகமே இருந்தது. அவற்றை அவர் சீனாவுக்கு எடுத்துச் செல்ல விரும்பினார்” என எழுதியுள்ளார்.
குதிரைகளில் சீனாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நூல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
கி.பி. 643இல் இந்தியாவில் பத்து ஆண்டுகளைக் கழித்த பின்னர், இறுதியாக வங்கத்தில் உள்ள மடங்களுக்குச் சென்றார். பின்னர், சீனாவுக்கு திரும்பி செல்லத் தயாரானார்.
அவர் புறப்படுவதற்கு முன் மன்னர் ஹர்ஷவர்த்தனர் தன் அரசவையில் சுவாங்கை விவாதத்திற்கு அழைத்தார். இருவரும் இதற்கு முன்பே சந்தித்திருந்தனர். முதல் சந்திப்பின்போது சீனா மற்றும் அதன் மன்னர்கள் குறித்து அவர் சுவாங்கிடம் விசாரித்தார்.
சுவாங்கின் வாயிலாக சீன அரசர் தைஸூனுக்கு (Taizun) சில புத்த இலக்கியம் குறித்த ஓலைச்சுவடிகளை ஹர்ஷவர்த்தனர் அனுப்பினார். ஹர்ஷவர்த்தனர் முன்பு பகுத்தறிவு தத்துவவாதிகளுடன் யுவான் சுவாங் விவாதத்தில் ஈடுபட்டார்.
தன்னுடைய வாதங்கள் மூலம் அவர்களை யுவான் சுவாங் அமைதியாக்கியதாக ஸ்ரம்னா ஹிலாய் குறிப்பிடுகிறார்.
“சீனாவுக்கு திரும்பத் தயாரானபோது அவரிடம் 657 புத்தகங்களும் பல சிலைகளும் இருந்தன. மேலும் அவர் தன்னுடன் பல செடிகள் மற்றும் விதைகளை எடுத்துச் சென்றார். அவருடைய உடைமைகள் அனைத்தும் 72 குதிரைகள், 100 சுமை தூக்குபவர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஹர்ஷவர்த்தனர் பரிசாக வழங்கிய யானை மீது அவர் இம்முறை சவாரி செய்தார். அவர் யுவானுக்கு பணமும் வழங்கினார். அதோடு, யுவான் சுவாங் செல்லும் வழியில் உள்ள அரசர்களுக்கு வழங்க வேண்டிய கடிதங்களையும் ஹர்ஷவர்த்தனர் வழங்கியிருந்தார்.
புயலில் அழிந்த ஓலைச் சுவடிகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, யுவான் சுவாங் சீனாவுக்கு திரும்ப தயாரானபோது அவரிடம் 657 புத்தகங்களும் பல சிலைகளும் இருந்தன.
சீனா திரும்பும் வழியில் யுவான் சுவாங் விபத்தை சந்தித்தார். அட்டாக் (Attock) எனும் பகுதியில் சிந்து நதியைக் கடக்கும்போது ஏற்பட்ட பெரும்புயலில் மதிப்புமிக்க ஓலைச்சுவடிகள் சில நாசமாகின.
“யானை மீது சவாரி செய்த யுவான் சுவாங் ஒருவழியாக ஆற்றைச் சமாளித்துக் கடந்தார். ஆனால், ஓலைச்சுவடிகள் ஏற்றப்பட்டிருந்த சில படகுகள் புயலில் கவிழ்ந்தன. படகோட்டிகள் காப்பாற்றப்பட்டனர்.
ஐம்பது ஓலைச் சுவடிகளும், விதைகள் அடங்கிய சில பெட்டிகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. சீனாவை அடைவதற்கு முன்பாக அவர் அரசர் தைஸூனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், சீனாவில் இருந்து சட்ட விரோதமாக வெளியேறியதற்கு மன்னிப்பு கோரினார்.
மேலும், இந்தியாவில் இருந்து தான் எடுத்து வந்தவை குறித்தும், அவை எவ்வாறு அரசுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்தும் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்,” எனக் குறிப்பிடுகிறார் பெஞ்சமின் புரோஸ்.
அவருடைய கடிதத்திற்கு பதிலளித்த அரசர், “ஞானம் பெற்ற பின்னர் நீங்கள் நாட்டுக்குத் திரும்புவதில் மிகுந்த மகிழ்ச்சி. என்னை உடனடியாகச் சந்தியுங்கள். சமஸ்கிருத மொழியைப் புரிந்துகொள்ளும் துறவிகளையும் உங்களுடன் அழைத்து வாருங்கள். பொருட்களை எடுத்து வருவதற்கு குதிரைகள் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளோம்,” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, சீன அரசர் தைஸூன்
கி.பி. 645, பிப்ரவரி 8 அன்று, யுவான் சுவாங்கை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் சாங்கான் தெருக்களில் திரண்டனர்.
இந்த இடத்தில் இருந்துதான் 16 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இந்தியாவுக்கான பயணத்தைத் தொடங்கினார். அங்கு அவர் முதலில் ஹோங்ஃபூ (Hongfu) மடத்திற்குச் சென்றார். 15 நாட்கள் கழித்து பிப்ரவரி 23 அன்று, அரசர் தைஸூன் லோயாங்கில் (Luoyang) உள்ள தன் அரண்மனையில் யுவான் சுவாங்கை சந்தித்தார்.
அந்தச் சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்றன. அச்சந்திப்புகளில் இந்தியாவில் அவருடைய அனுபவம், வானிலை, சடங்குகள் குறித்து அரசர் சுவாங்கிடம் கேட்டார்.
‘புத்திசம் அண்டர் தி டாங்’ (Buddhism Under the Tang) எனும் புத்தகத்தில் ஸ்டான்லி வெயின்ஸ்டெயின், “தன்னுடைய அரசில் இணையுமாறும் அரசர் சுவாங்கை அழைத்தார். ஆனால், அரசு அதிகாரியாக இருப்பதற்கான பயிற்சி தனக்கு இல்லை எனக் கூறி சுவாங் அதை மறுத்துவிட்டார். பின்னர் சுவாங் சங்கானில் பிரமாண்டமான மடத்தில் வசித்தார். இந்தியாவில் தன்னுடைய பயண அனுபவங்கள் குறித்து அவர் எழுதினார். பின்னர், அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா குறித்து சீனாவில் மேற்கொள்ளப்பட்ட நம்பத்தகுந்த, முக்கியமான ஆராய்ச்சியாக இது கருதப்படுகிறது. அரசர் ஹர்ஷவர்த்தன் காலம் குறித்து அறிந்துகொள்ள யுவான் சுவான் குறிப்பிட்டுள்ளவை இன்றைக்கும் உதவியாக உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு