"சான்றாண்மை" குறித்த ஓர் முழுமையான சிறந்த இக் கட்டுரை தந்த சில சிந்தனைகள்:
சான்றாண்மை என்ற சொல் சான்று+ஆண்மை என்று விரியும். ஏனையோர் பின்பற்றும்படி சான்றாக வாழ்ந்துஇ நடந்து காட்டிய ஆண்மை என்று பொருள். என்றாலும்இ சான்ற என்ற சொல் “சிறந்த” என்ற பொருளிலேயே பெரும்பாலும் கையாளப் பெற்றிருக்கின்றது. சங்ககால வீரனுக்குச் சிறந்த குணங்கள் "போரில் புறங்காட்டாமை"; 'போரில் பங்கு பெறாத எவரையும் கொல்லாமை" என்பதாகக் கற்பிக்கப்படுகிறது. இத்தகைய சிறந்த கற்பிதங்கள் சான்றாண்மை ஆகும்.
தமிழகத்தின் பெருஞ் சொத்தான திருக்குறளின் திரண்ட கருத்துஇ "மக்களாய்ப் பிறந்தவர்கள் அனைவரும் மக்கட் பண்போடு வாழவேண்டும்" என்பது. மக்கட்பண்புகளில் சிறந்த பண்பாம் சான்றாண்மையுடையவரே சான்றோர் ஆவர் .
வேழ முடைத்து மலைநாடுஇ மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து
சான்றோரே தமிழகத்தின் செல்வம். நிலவளமாகிய நெல்லும், மலை வளமாகிய யானையும், கடல் வளமாகிய முத்தும், மக்கள் வளமாகிய சான்றோரும், தமிழகத்தின் செல்வங்கள் என்ற உண்மையை ஒளவையார் வாக்கிலிருந்து நன்கு உணரலாம்.
"சான்றாண்மை என்ற சொல் தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது. சான்றாண்மைத் தன்மை தமிழ் மக்களின் கலை. சான்றாண்மைப் பண்பு தமிழகத்தின் தனிப்பட்ட சொத்து. சான்றாண்மை என்ற சொல்லைக்கூடப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியாது. மொழி பெயர்த்துக் கூறினாலும் அச்சொல்லில் தமிழ் கூறும் பொருள் இராது." என்பது முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் வாக்கு.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
என்ற ‘படைச்செருக்கு’ என்ற அதிகாரத்தில் வந்துள்ள திருக்குறளில் "தன்னைக் கொல்லவந்த பகைவனது யானை மீது கைவேலை குறிபார்த்து எறிந்தான். யானையொடு வேலும் போய் விட்டது. வெறுங்கையனானான். கைவேலை எறிந்து போக்கி விட்டு, வெறுங்கையுடன் ஆயுதமின்றி வரும் (வருபவன்) வீரன் மார்பின் மீது, மறைந்திருந்து பகைவனால் எறியப் பெற்ற வேல் ஒன்று பாய்ந்தது. சற்றும் கலங்காத வீரன் அதனைப் பிடுங்கிக் கொண்டு நகைத்தான்" என்கிறார் வள்ளுவர்.
வேலைப்பறித்துக் கையிற் பற்றிக்கொண்டு, வேல் எறிந்த வீரன் தன்முன் இல்லாமை கண்டு, "மறைந்திருந்து தாக்கும் இழிமக்களும் இவ்வுலகில் உள்ளார்களே?" என எண்ணிப் புண்பட்ட மனத்தோடு நகைத்திருப்பானோ அவ் வீரன்? எனக்கென்னவோ, "இராமன் மறைந்திருந்து எய்த அம்பு, மாவீரன் வாலியின் மார்பைத் துளைத்தபோது, இராமனின் அம்பைப் பிடுங்கி, மாவீரன் வாலி நகைத்த செயலை" நினைந்து வள்ளுவனார் இக்குறளை இயற்றியிருப்பாரோ என்றே தோன்றியது.
“மெய் வேல் பறியா நகும்” என்ற நான்கு சொற்களுக்குள், இத்துணை சிந்தனை ஓட்டங்களையும் நம்முள் எழுப்புகின்ற வள்ளுவரது புலமையும், திறமையும் எண்ண எண்ண வியப்படைக்கிறேன்.
பழங்காலத்துத் தமிழ் மக்களில் ஆண்இ பெண் ஆகிய இருபாலரிடத்துங் காணப்பெற்ற சிறந்த வீரச் செயல்களைப் புறநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. எனினும் வள்ளுவரது குறள் அதனை இன்னும் தெளிவாக்கிக் காட்டுகிறது.
மோசமான விளைவுகளைத் தவிர்க்கும் வண்ணம் பண்டைக் காலத்தில் சில அறம் சார்ந்த வரையறை சான்றாண்மைகளோடு, போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. போர் தொடங்குவதற்கு முன்னர்ப் போரைப் பற்றி அறிவித்து, கொல்லக்கூடாத உயிரினங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு எச்சரிக்கை விடப்பட்டது. இது போரின் அறத்தாறு எனக் குறிப்பிடப்படுகிறது.
“ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்இ
பெண்டிரும் பிணியுடையீரும்இ பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர் பெறாஅதீரும்இ
எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என
அறத்தாறு நுவலும் பூட்கை”
என்று நெட்டிமையார் பாடிய புறநானூற்றுப் பாட்டினால் அக்காலப் போர்களில் எவ்வாறு 'அறப்போர்' என்ற சான்றாண்மைக் கருத்து செயல் வடிவம் பெற்றது, எவரையெல்லாம் கொல்லக்கூடாது என்றுக் கருதினார்கள் எனத் தெளிவாக விளக்குகிறது.
தமிழர் முயலைக் கொன்று வெற்றிபெறுவதைவிட, யானையை எய்து தோல்வியடைவதையே பெருமையாகக் கருதும் கொள்கை கொண்டவர். தம்மின் வலிமைகுறைந்த எவரையும் தமிழர் தாக்குவதில்லை. மெலியோர் தம்மைத் தாக்க முன்வந்தபோதும் வலியோர் அவர்களைத் தாக்காது, அவர்களை நோக்கி, “போர் எண்ணங்கொண்டு என்முன் நில்லாதே. நின்றால் மடிந்து மண்ணிற் புதையுண்டு நடுகல்லாக நிற்பாய்” என வழிகூறி அனுப்பிடுவர். அவரது அறம் அத்தகையது.
தம்மோடு ஒத்த அல்லது உயர்ந்த வலிமையுடையவரோடு மட்டுமே போரிடுவர். அப்போதுங்கூடப் பகைவரது வலிமை குறைந்துவிட்டால் மேலும் தாக்காமல் "இன்று போய் நாளை வா" என்று அவர்களை அனுப்பி வைப்பர். அவரது போராண்மை அத்தகையது. வாலியின் மேல் மறைந்திருந்து வாளி(அம்பு)விட்ட இழிசெயலைச் சமன்செய்யும் பொருட்டு, இந்தச் சான்றாண்மையை இராமன் மேல் ஏற்றி, கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த பாடல்
'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய்இ போர்க்கு
நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.
ஏன் கோசல நாடுடை வள்ளல் என்கிறார் கம்பர்? அயோத்தி பரதனுக்கும், மிதிலை சனகருக்கும், வெல்லப்போகும் இலங்கை வீடணுக்கும் ஈந்த இராமபிரானுக்கு, தாய் கோசலையின் நாடு ஒன்றே உள்ளது என்று குறிப்பால் சிறப்பிக்கிறார் கவிச்சக்கரவர்த்தி .
என்னதான் கம்பனின் கவிதையை இரசித்தாலும், இன்றுவரைஇ வாலியை மறைந்திருந்து அம்பு எய்து கொன்ற இழிசெயலை மறக்காத தமிழர்கள் உள்ளங்களை, இராமனால் வெல்லவே முடியவில்லை. அதுதான் தமிழரின் தனித்துவம்!
தமிழரின் சான்றாண்மை குறித்த இத்துணை சிந்தனைகளும் ஐயா சுப. சோமசுந்தரனார் படைத்த கட்டுரைக்கே சமர்ப்பணம்.