பெரிய முட்டாள்
ஒரு முறை விஜயநகர பேரரசர் தன் அமைச்சரவையில் கூடி இருக்கும் போது, அரேபிய வியாபாரி வந்தார், தன்னிடம் விலை உயர்ந்த குதிரை இருப்பதாகவும், அதை அரசருக்கு பரிசாக கொடுக்க இருப்பதாகவும் சொன்னார்.
அரசரும் அதை ஏற்றுக் கொண்டு, குதிரையை பார்வையிட்டு, அதன் மீது ஏறி சவாரி செய்தார், மிகவும் பிடித்து விட்டது, அத்தனை கம்பீரமான வெள்ளைக்குதிரை.
அரசரும் வியாபாரிக்கு தன் பரிசுகளை கொடுத்து, வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்தார். அமைச்சர் ஒருவர் அரசரிடம் "அரசே! குதிரை நன்றாக இருக்கிறது, இதன் விலை 1000 தங்க நாணயங்கள் தான், இது மாதிரி 100 குதிரைகள் வாங்க, நாம் இப்போவே பணத்தை கொடுத்தால், அடுத்த முறை கொண்டு வந்துவிடுவார்" என்று கூற, அரசரும் உங்கள் விருப்பம் போல் செய்யுங்க என்று சொல்லிவிட்டார்.
சில நாட்களுக்குப் பின்பு அரசர் தெனாலிராமனை அழைத்து, நம் நாட்டிலேயே பெரிய முட்டாள் யார் என்று கண்டுபிடித்து, நாளைக்குள் சொல் என்றார்.
அடுத்த நாள் தெனாலி ராமன் அரசனிடம் போய் தன்னுடைய கண்டுபிடிப்பை சொல்ல, அரசனுக்கு சரியான கோபம். எப்படி நீ அமைச்சரை பெரிய முட்டாள் என்று சொல்கிறாய் என்று கேட்டார்.
தெனாலிராமன்: அரசே! அரேபிய வியாபாரிக்கு குதிரைகள் வாங்கும் முன்பே 1 இலட்சம் பொன் கொடுத்தாரே அமைச்சர், அந்த வியாபாரி குதிரையோடு வருவானா, கண்டிப்பாக வர மாட்டான்" என்றார்.
அரசர் : ஒருவேளை அந்த வியாபார் குதிரைகளை கொண்டு வந்து கொடுத்தால்..
தெனாலி: அரசே! ஒரு சின்ன மாற்றம் தான் செய்ய வேண்டும், மிகப் பெரிய முட்டாள் அந்த வியாபாரி என்று மாற்ற வேண்டியது தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
_________________