தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஈழத்தமிழரின் பிரச்சனையில் திமுக மற்றும் அதிமுகவின் உண்மையான நிலைப்பாடு என்ன?
அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழக சட்டசபை தேர்தல் இடம்பெற இன்னும் இரண்டு வாரங்களுக்குக் குறைவாகவே இருக்கிறது. இரு பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தேர்தல் பிரச்சாரங்களை முடக்கிவிட்டுள்ளார்கள். ஒருவரையொருவர் குற்றம் சொல்வதிலிருந்து, திரைப்படத்துறையினரின் நகைச்சுவையான கருத்துக்களும் முன் எப்பொழுதும் இல்லாதவாறு இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது. தேர்தல் களத்தில் நிற்கும் ஒருவரிடத்திலிருந்தும் ஈழத்தமிழரைப் பற்றி ஒரு வார்த்தையேனும் வெளிவரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெறும் சட்டசபை தேர்தலென்றாலென்ன, நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலுமென்ன ஈழத்தமிழரின் விவகாரம் தமிழகத்தில் முக்கிய இடத்தை பெற்று வந்துள்ளது. மே 2009-இல் முடிந்த நான்காம் கட்ட ஈழப்போருக்கு பின்னர் சில மாதங்கள் ஈழத்தமிழர் விடயம் பெரிதாக தமிழகத்தில் பேசப்பட்டு வந்துள்ளது. அந்நிலை இப்பொழுது இல்லாமல் போய்விட்டது.
திமுகவினால் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதி ஈழத்தமிழர்கள் சமாதானத்துடனும் கண்ணியத்துடனும் வாழும் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியதுடன் நின்றுவிட்டது. அதிமுகவினால் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலையைப் பற்றி ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. அகதிகளாக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் தமிழகத்தில் வாழ்வதற்கு அதிமுக ஆட்சியைக் கைப்பற்றினால் நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகிறது.
அதிமுகவின் ஈழத்தமிழர்கள் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் காணவில்லை. 1991-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களை படாதுபாடு படுத்தியது. ஈழத்தமிழ் அகதிகளுக்கு வீடுகளை வாடகைக்கு கொடுக்கக்கூடாது என்று தமிழக மக்களை கேட்டதுடன், சிங்கள அரசு எப்படி அதன் பாதுகாப்புப் படையினரிடம் தமிழர்களை வதைக்க சட்டங்களை ஏவிவிட்டதோ அதைப்போலவேதான் ஜெயலலிதாவும் காவல்துறையினரிடம் அதிகாரங்களை வழங்கி ஈழத்தமிழர்களை வதைத்தார்கள்.
ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றத்தையும் பல காலங்களாகக் காண முடியவில்லை. நான்காம் கட்ட ஈழப் போர் உக்கிரம் அடைந்திருந்த வேளையில் மட்டும் தமிழக மக்களின் ஏகோபித்த ஈழத்தமிழர் மீதான அனுதாபத்தைப் பார்த்து தானும் ஏதோ ஈழத்தமிழர் மீது அதீத பாசம் கொண்டவர் போல சில அறிக்கைகளை வெளியிட்டார். விடுதலைப்புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு என்று 1991-ஆம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ந்தும் கூறிவருகிறார். அத்துடன் பயங்கரவாதத்திற்கு தமிழகத்தில் இடமில்லை எனவும், பிரிவினைவாதம் பேசினாலே அதிமுக சும்மா இருக்காது என்று கூறுகிறது அதிமுகவின் தேர்தல் விஜ்ஜாபனம். ஐக்கிய நாடுகள் சபையே பயங்கரவாதம் என்றால் என்ன என்று அர்த்தம் தெரியாமல் அலையும்போது ஜெயலலிதா போன்றவர்கள் கூறும் அர்த்தங்கள் மக்களை ஏமாற்றவேதான் என்பது உண்மை. எது எப்படியாயினும், தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் ஈழத்தமிழரின் விடயத்தில் கடுகளவேனும் அக்கறை கொள்ளவில்லை.
ராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன?
அனைவருமே குழம்பிய தண்ணீருக்குள் மீன் பிடிப்பவர்களே. அதிகமான மக்கள் எதை நினைக்கிறார்களோ அவர்களின் வாக்குகளை தமதாக்க வேண்டும் என்கிற மனப்பாங்குடன் களம் இறங்குபவர்களே அரசியல்வாதிகள். தமிழக அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழரின் தேசிய விடுதலைக்கு தீர்வு வந்துவிடுமென்றோ அல்லது திமுக ஆட்சிப்பீடம் மறுபடியும் ஏறினால் ஈழத்தமிழர்கள் அவர்களின் தாயகத்தில் கண்ணியத்துடன் வாழ இந்திய மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கை எடுப்பதென்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகமே.
திமுக துவங்கிய பின், 1957-ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய கலைஞர், இதுவரை 11 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஐந்து முறை தமிழகத்தையே ஆண்டாலும், சொந்த தொகுதியில் இதுவரை போட்டியிட்டதில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, வரும் சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கலைஞரின் அரசியல் வாழ்வில் மக்களுக்கு செய்ததை விட தனக்கும் தனது குடும்பத்திற்கும் செய்ததே அதிகம். பொதுப் பிரச்சனைகள் என்றால் ஆரப்பாட்டங்கள் செய்வதும், பேருந்துகளை உடைப்பதும், புகையிரதப் போக்குவரத்தை நிறுத்தும் போராட்டங்களை செய்வதும், உண்ணாவிரதமிருப்பதும் மற்றும் கருப்புக்கொடி காட்டும் போராட்டங்களை செய்வதுமாகவேதான் மக்களின் ஆதரவை இன்றுவரை கலைஞர் நிலைநிறுத்தியுள்ளாரே தவிர மக்களுக்கென்று விரல்விட்டு எண்ணக்கூடிய காரியங்களைத் தவிர அனைத்துமே அவர் குடும்பம் சார்ந்ததாகவே இருந்துள்ளது.
முதன் முதலில் 1957-ஆம் ஆண்டு குளித்தலையில் போட்டியிட்ட கலைஞர், 8,296 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1962-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் போட்டியிட்டு, 1,928 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1967-ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்டு, 20,482 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1971-ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்டு, 12,511 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1977-ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்டு, 16,438 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1980-ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்ட இவர், 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1989-ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்டு, 31,991 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1991-ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்டு, 890 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1996-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 35,784 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2001-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட இவர், 4,834 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2006-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 8,526 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலவை உறுப்பினராக இருந்ததால், 1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இப்படியாக 11 தடவைகள் போட்டியிட்டு வென்றதுடன், ஐந்து தடவைகள் முதல்வராகவும் இருந்துள்ளார் கலைஞர்;.
கலைஞரை எப்படியேனும் வென்றுவிட வேண்டுமென்று கங்கணம் கட்டி செயற்படும் ஜெயலலிதாவும், சிறீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜெயலலிதா இதுவரை ஐந்து தேர்தல்களை சந்தித்துள்ளார். 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலைத் தவிர, நான்கு தேர்தலிலும் வெற்றி பெற்றார். இவரும் மாபெரும் ஊழல்களைச் செய்து மாபெரும் “மகா ஊழல் ராணி" என்கிற பட்டத்தை பெற்றவர்தான். தமிழக மக்கள் இவைகளையெல்லாம் மறந்துவிட்டார்கள். ஏதோ சிலவற்றை இலவசமாகக் கொடுப்பதாக வாக்குறுதியளித்துவிட்டாலே போதும் அவர்களின் பின்னால் சென்றுவிடுவார்கள் தமிழக மக்கள்.
முதன் முதலாக ஜெயலலிதா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 1989-இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஈரோடு மாவட்டம், காங்கயம் தொகுதியில், 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த சுகவனம் 9,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில், 2002-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006-ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
குறித்த இரு பிரதான கட்சிகளையும் தலைமைப்படுத்தும் தலைவர்கள் தொடர்ந்தும் வென்றுகொண்டே வருகிறார்கள். நடந்த சம்பவங்களை மூடி மறைப்பதும், மக்களை மென்மேலும் வதைப்பதுமே இவர்களின் நோக்கமாக இருந்து வந்துள்ளது. எப்ப மக்கள் தெளிவடைகிறார்களோ அப்போது தமது அரசியலுக்கு ஆப்பு விழுந்துவிடும் என்று கதிகலங்கியோ என்னவோ மக்களை முட்டாள்களாகவேதான் வைத்திருக்க இவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே தமிழக மக்களோ அல்லது உலகத்தமிழர்களோ இவர்களைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தமிழர்களுக்கு ராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்கிற நிலையே நிலவுகிறது.
காங்கிரஸின் முதல் எதிரி சீமானின் நாம் தமிழர் இயக்கமே
சீமானின் நாம் தமிழர் இயக்கத்தைப் பற்றி தாம் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை என்கின்றனர் தமிழக காங்கிரஸ் தரப்பினர். காங்கிரஸ் ஒதுங்கினாலும், நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனர் சீமான் ஒதுங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். தமிழ்த் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயற்பட்டு தமிழ் இனத்தை சிறிலங்காவில் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம் என கூறி பிரச்சார பணிகளில் முழுமூச்சாக இறங்கியுள்ளார் சீமான்.
தாம் தமிழராய் உருவெடுத்து உள்ளதாகவும், காங்கிரசை கருவறுக்கும் வரை தான் ஓயமாட்டோம் என்கிறார் சீமான். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரச்சாரம் அமையும் என்று அடித்துச் சொல்கிறார். இலவச திட்டங்கள் வழங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். காங்கிரசை பழிவாங்க அரசியல் களத்தில் குதித்து உள்ளோம். வைகோவை அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றியது வருத்தம் அளிக்கிறது. அவர் அனுபவம் மிக்க தலைவர் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும். எங்கிருந்தாலும் அவரது வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். காங்கிரசை தோற்கடிக்கக் கூடிய வலுவான சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் அதை ஆதரிப்போம். காங்கிரசை அழிப்பது தான் எங்களது நோக்கம்’’ என்று கூறினார்.
அவர் தெரிவித்ததுபோலவே தேர்தல் களப் பிரச்சாரங்களை முடக்கிவிட்டுள்ளார். காங்கிரஸ்காரர்களை களத்திலிருந்து ஓடுமளவு அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்கிறார் சீமான். தமக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை பாவித்து சீமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முயல்கிறது காங்கிரஸ். கொலைக் குற்றச்சாட்டுக்கள் முதல் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் வரை காவல்நிலையத்தில் இவருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளது. எப்படியேனும் சீமானை பயமுறித்தி விடலாமென்று கங்கணம் கட்டிநிற்கிறது காங்கிரஸ். சீமானிடம் அது சாத்தியப்படாது என்கிறார்கள் நாம் தமிழர் இயக்க உறுப்பினர்கள்.
ஈழத்தமிழர்கள் சீமானிடத்திலிருந்து ஒன்றை மட்டும் கேட்க ஆவலாக உள்ளார்கள். சீமான் ஆதரித்து பிரச்சாரம் செய்யும் அதிமுக கூட்டணியினர் ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாள்வார்கள் என்று இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது. ஆகவே, அதிமுக கூட்டணியினர் தமிழீழ தனியரசு நிறுவ உதவியாக இருப்பார்களா அல்லது சிங்கள அரசிற்கு ஈழம் என்கிற சொல்லைக் கேட்டாலே கசப்பதுபோல அதிமுகவும் இருக்குமா? ஈழம் என்கிற வார்த்தையை சொல்வதற்கே கூச்சப்படுபவர் ஜெயலலிதா. இலங்கைத் தமிழர் அல்லது சிலோன் தமிழர் என்கிற சொற்களையே இன்றுவரை கூறுபவர் ஜெயலலிதா. இப்படிப்பட்டவரின் தலைமையில் உருவாகும் அரசினால் எப்படி ஈழத்தமிழர் நன்மை அடைவார்கள் என்பதனை சீமான் போன்றவர்கள் விளங்கப்படுத்த வேண்டுமென்பதுவே ஈழத்தமிழரின் அவா.
ஈழத்தமிழரின் விடயத்தில் திமுகவாக இருந்தாலும் சரி அதிமுக என்றாலும் சரி, இவ்விரு பிரதான கட்சிகளும் ஈழத்தமிழர்கள் மானத்துடனும் கவுரவத்துடனும் வாழ்வதற்கு சுயநிர்ணய அதிகாரம் கொண்ட தீர்வே ஒரே வழி என்கிற வாதத்தை இன்றுவரை மானசீகத்துடன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு காலத்தில் தமிழீழமே தீர்வு என்று கொக்கரித்தவர்கள், ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயேதான் தமிழர்கள் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள். ஆகவே, இவர்களைப் போன்றவர்களை நம்பி எப்படி படகில் பயணித்து பாதுகாப்பாக கரைசேர முடியும் என்பதே கேள்வி.
--இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் வளரும்--
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com