யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்,
நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம்.
யாழுடன் எனக்கு பல வருடங்கள் பரிச்சயம் உண்டு. தாயகச் செய்திகளை அறிவதற்கு பல்வேறு இணையத் தளங்களிற்கு போகாமல் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி யாழில் உள்ளது என்பதும் செய்திகளுக்கு வரும் கருத்துக்கள் மூலம் கள உறவுகளின் சிந்தனை ஓட்டத்தை அறிய முடிவதும் பிடித்தமான விடயங்கள். தனியே செய்தித் தளமாகவும் , பொழுதுபோக்கு தளமாகவும் இயங்காமல் தமிழில் ஆர்வமாக எழுதக் கூடியவர்களை ஊக்குவித்து பல படைப்பாளிகளை உருவாக்கியுள்ளதும் யாழுக்கே மிகவும் தனித்துவமானது. இந்த நேரத்தில் யாழ் களத்தை பல சிரமங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் சிறப்பாக இயங்கச் செய்துவரும் யாழ்களப் பொறுப்பாளர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
யாழ் முரசத்தில் வந்துள்ள அறிவித்தலின் படி யாழ்கள பொறுப்பாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் சக கருத்துக்கள உறவு நுணாவிலானுடன் மட்டுறுத்துனராக செயற்பட சம்மதித்தேன். எனினும் அதிக சர்ச்சைகள் இல்லாமல் யாழ் களம் இயங்குவதால் மட்டுறுத்தல் வேலை எனக்கு குறைவாகவே இருக்கும் என நம்புகிறேன். யாழ் கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைய மட்டுறுத்தும் பணியில் ஈடுபட்டாலும் தவறுகள் ஏற்படலாம். அப்படி ஏதாவது பிழைகள் வந்தால் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி ஒத்துழைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நியானி - நியாயம், அநியாயம், ஞானம், அஞ்ஞானம் எல்லாம் கலந்த கலவை. அநியாயமும் ஞானமும் மிகவும் சொற்பமாக இருக்கும்.
நன்றி.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=109049&hl=