புதிய பதிவுகள்2

காவல்துறையினாின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரை பின் தொடர்ந்து அச்சுறுத்தும் நபர்கள்

4 days 19 hours ago
காவல்துறையினாின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரை பின் தொடர்ந்து அச்சுறுத்தும் நபர்கள் adminApril 1, 2026 அல்லைப்பிட்டியில் காவல்துறையினாின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினா் குடும்பத்தினரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை குற்ற சாட்டுக்கு உள்ளாகியுள்ள காவல்துறைப் பிரிவினரே அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெவ்ரவரி மாதம் 10ஆம் திகதி காவல்துறையினரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அல்ஃபினோ அருள்பாய்ஸ் (வயது 17) எனும் சிறுவன் உயிரிழந்திருந்தாா். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் , தமக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் தம்மை மோட்டார் சைக்கிள்களில் இனம் தெரியாத நபர்கள் பின் தொடர்பாகவும் தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் தெரிவித்திருந்தனர். அதேவேளை கடந்த 10ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் தம்மை அச்சுறுத்தும் வகையில் இருவர் பின் தொடர்ந்ததாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர் .முறைப்பாட்டின் போது , தம்மை பின் தொடர்பவர்கள் குறித்த ஒளிப்படம் மற்றும் காணொளி ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். குறித்த முறைப்பாட்டை அடுத்து, அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் யாழ்.மாவட்ட காவல்துறை அத்தியட்சகருக்கு பணித்துள்ளார். அது தொடர்பிலான விசாரணைக்காக , முறைப்பாட்டாளரான உயிரிழந்த சிறுவனின் தாயாரை இன்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை பிரிவுக்கான உதவி காவல்துறை ர் அத்தியட்சகர் வாக்கு மூலம் பெறுவதற்காக அழைத்துள்ளார். அதேவேளை குற்றம் சாட்டப்படும் காவல்துறைப் பிரிவினரே குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தின் வேறு பிராந்திய காவல்துறையினரோ , மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அதேவேளை சிறுவன் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றம் சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொள்வதற்கும் , யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினரின் விசாரணைகளில் திருப்தி இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் நலன்சார்ந்த மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்ததை அடுத்து , துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு துறையினருக்கு மாற்ற நீதிமன்று உத்தரவிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/231347/

இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் — அ. வரதராஜா பெருமாள் —

4 days 19 hours ago
மாகாண ஆட்சி முறையின் தேவையை தமிழர்களின் அரசியலே தீர்மானிக்க வேண்டும் March 29, 2026 — அ. வரதராஜா பெருமாள் — இப்போதும் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் மாகாண ஆட்சிக் கட்டமைப்புகள் இருக்கின்றன – ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாகாணத்திலும் ஐந்து அமைச்சுக்களினதும் நிர்வாகங்கள் செயற்படுகின்றன. இலட்சக்கணக்கான அரச ஊழியர்கள் மாகாண ஆட்சியின் சேவகர்களாக பணி புரிகிறார்கள். இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை மாறி மாறி வந்த மத்திய அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் ‘இந்த ஆண்டு இறுதியில் நடக்கும்’, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடக்கும்’ என கடந்த எட்டு ஆண்டுகளாக காலம் தள்ளிப் போட்டு வந்துள்ளன. ‘செவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது சினிமா நகைச்சுவை மட்டுமல்ல, இப்போது மத்திய ஆட்சியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த தேர்தல் கால பிரச்சாரங்களின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மாகாண ஆட்சிக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றார்கள். இவர்கள், ‘இடதுசாரிகள், சாதாரண மக்களிடையே இருந்து எழுந்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் – தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு நேர்மையாக இருப்பார்கள்’ என்று பொது மக்கள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் நம்பினார்கள், ஆனால் இவர்களும் மாகாண ஆட்சிகளுக்கான தேர்தல்களை நடத்தாமலே காலத்தைக் கடத்தியபடியே தமது அதிகார அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறார்களா? அல்லது இந்த ஆண்டுக்குள் நடத்துவார்களா? இல்லாவிடினும் அடுத்த ஆண்டாவது நடத்துவார்களா? என இடைக்கிடை கேள்விகளோடு மக்கள் அன்றாடம் தாம் எதிர்நோக்கும் நெருக்கடிகளை சமாளிப்பதில் மூழ்கியபடியே தமது சீவியத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு தென்னிலங்கை எதிர்க்கட்சிகள் தமது வாக்காளர் வங்கிகளைத் திருப்திப்படுத்துவதற்காக அவ்வப்போது மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தைக் கோருகிறார்களே தவிர, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் விரைந்து நடத்துவதற்கான அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடியதாக தமது செயற்பாடுகளை அவர்கள் மேற் கொள்வதாகத் தெரியவில்லை. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தமது சுய மற்றும் தமது கட்சி நலன்களுக்கு சாதகமாக அமையுமா – தமக்கு அவசியம்தானா – இப்போது மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடந்து அதில் தாங்கள் படுதோல்வி அடைந்து விட்டால் அது தமது எதிர்கால அரசியல் கனவுகளை கலைத்து விடாதா என்ற கேள்விகளோடும் சந்தேகங்களோடும் தன்னம்பிக்கை தளர்ந்தவர்களாக தென்னிலங்கை எதிர்க் கட்சியினர் மாகாண சபைகள் தொடர்பில் ஓர் மென்மையான அரசியலை கடைப்பிடிப்பதாகவே தெரிகிறது. இதேவேளை, தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் சமூக சக்திகள் மத்தியில் மாகாண சபைகள் தொடர்பாக பெரும் குழப்பமான கருத்துக்களையும், குழறுபடியான நிலைப்பாடுகளையுமே காண முடிகிறது. உழுபவன் ஏரை ஓரடி இழுக்க வக்கில்லாத மாடு நல்லூரான் தேரை தலையாலேயே தள்ளி விடுமாம் ஒரு பகுதியினர், இந்த மாகாண ஆட்சிக்கான தேர்தல் நடைபெற்றால் அதில் பங்குபற்றி மாகாண சபை உறுப்பினர்களாக தாங்கள் வந்துவிட வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தாலும், இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறை தமிழர்களுக்கு பாதகமே தவிர பயனில்லை என்கின்றனர், அத்துடன் ஒரு படி மேலே போய் ஒற்றையாட்சி அரச கட்டமைப்புக்குள் எந்த வகையிலான அதிகாரப் பகிர்வு முறையையும் தாங்கள் ஏற்க மாட்டார்கள் என்கின்றனர். இவர்கள் அடைந்தால் சமஸ்டி ஆட்சி முறை அடைய வேண்டும் இல்லையென்றால் இந்த மாகாண ஆட்சி முறை மரணித்துப் போகட்டும் என்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் இப்போது அரசியல் யாப்பில் இருக்கும் அதிகாரப் பகிர்வுக்கான சட்ட ஏற்பாடுகள் பற்றி இவர்கள் பேசும் போதெல்லாம் ஒற்றையாட்சி அரச கட்டமைப்புக்குள் அமையும் மாகாண ஆட்சி முறையை ஏற்க முடியாது – ஏற்கக் கூடாது – அதில் ஒன்றுமில்லை – அதனால் தமிழர்களுக்கு எந்தவித பயனுமில்லை எனும் தமது கருத்து நிலைப்பாட்டை நிரூபிக்கும் உள் நோக்குடனேயே பேசுகிறார்கள் – பிரசங்கங்களை ஆற்றுகிறார்கள். இவர்கள் ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரே ஆட்சி நிலப்பரப்பாக இணைத்து அதன் மீது தமிழர்களுக்கு உள்ள இறைமையின் அடிப்படையிலான சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட சமஸ்டி ஆட்சி முறை’ அமைய வேண்டும் என்கிறார்கள். அதுவல்லாத எந்த அரசியல் ஏற்பாட்டையும் நிராகரிக்கிறார்கள் – எதிர்க்கிறார்கள். இவர்கள் இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறைக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிரவு ஏற்பாடுகளைப் பற்றி – அதிலுள்ள நிறைகள் குறைகள் பற்றி, அவற்றை எவ்வாறு திருத்தினால், மாற்றி அமைத்தால் எவ்வகையான ஏற்பாடுகளை உள்ளடக்கினால் இந்த மாகாண ஆட்சி முறையை முன்னேற்றகரமானதாக்கலாம், பயனுடையதாக்கலாம் என்பது பற்றி தாமாக பேசவோ அல்லது மற்றவர்களுடன் உரையாடவோ தயாராக இல்லை என்பதையே காண முடிகிறது. இவர்கள் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடந்தால் தாங்கள் பங்குபற்றப் போவதாக கூறுகிறார்கள். ஆனால் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஒரு மக்கள் இயக்கத்தை அணி திரட்டுதற்கு தயாராக இல்லை. அப்படி ஒரு மக்கள் இயக்கதை அணி திரட்ட தாங்கள் முற்பட்டால் அது தங்களது சமஸ்டிக் கோரிக்கையை பலயீனப்படுத்தும் என கூறுகிறார்கள். இவர்களின் இந்த வகையான நியாயம் மாகாண ஆட்சி முறையை நிராகரிக்கும் அல்லது இல்லாது செய்யும் தளத்திலிருந்தே பிறப்பதனால் இதனை இங்கு விவாதிப்பது பொருத்தமற்றதாகும். தமிழ்ப் பேசும் மக்களிடையே உள்ள அரசியல் சமூக பிரமுகர்களில், மேலே கூறப்பட்ட வகையினரைத் தவிர்ந்த ஏனையோரோ, இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறை இலங்கையின் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் அரசியற் தீர்வாக அமையக் கூடியதல்ல எனவும் மேலும், சமஸ்டி அமைப்பு முறை மட்டுமே நிரந்தரமான அரசியற் தீர்வாக அமைய முடியும் எனவும் கூறுகிற அதேவேளை, அதுவரை, இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறையானது இலங்கையின் அரசியல் யாப்பு மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக கொண்ட வகையாக செயற்படுவது தமிழ்ப் பேசும் மக்களின் உடனடியான தேவைகளுக்கு அவசியமானது என்கின்ற அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசைக் கோருவதோடு, அவற்றிற்கு இந்திய அரசின் துணையையும் அவ்வப்போது நாடுகிறார்கள்;. சாதித்துள்ள முன்னேற்றங்கள் அனைத்தும் உழைப்பாலும் போராட்டங்களாலும் அடைந்தவைகளே இந்த வகையினர் ஓரணியாக திரள முடியாதவர்களாக – ஒரு அரங்கத்தில் ஒன்று கூடி பேச முடியாதவர்களாக தமக்குத் தாமே தடைகளைப் போட்டு, பல கூறுகளாக உள்ளனர். இருப்பினும் இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கில் வாழும் மக்களிடம் கடைசியாக நடைபெற்ற தேர்தல்களின் போது பெற்ற வாக்குகளை கூட்டிப் பார்த்தால் கூட, தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் ஒட்டு மொத்தமாக இவர்களின் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் மொத்த எண்ணிக்கையே மிகப் பெரும்பான்மை. இந்த வகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் மாகாண ஆட்சிகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும் எனவும் அத்துடன் மாகாண ஆட்சிகளுக்கு இலங்கையின் அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் முழுமையாக மாகாண ஆட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் இலங்கை அரசைக் கோருகிறார்கள் என்று கொள்வதே சரியாகும். மேலே குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவற்றுள் உள்ள அரசியற் கட்சிகள் பெரும்பாலும், இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறையினுடைய கட்டமைப்பிலுள்ள குறைபாடுகளும், மாகாண ஆட்சிக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பான குறைகள் மற்றும் குழறுபடிகள் காரணமாக இந்த மாகாண ஆட்சி முறையில் திருப்தி கொள்ளாவிட்டாலும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி அதிகாரத்தில் இருப்பது தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு குறிப்பிட்டளவு பாதுகாப்பை ஏற்படுத்தும் எனவும் அத்துடன் மக்களுக்கான சில அடிப்படையான பொருளாதார விடயங்களில் கரிசனை கொண்டு ஓரளவு முன்னேற்றங்களை ஏற்படுத்தும் வகையாக செயற்பட முடியும் என்றும் கூறுகின்றமை கவனத்துக்குரிய தொன்றாகும். பொதுவாக தேர்தல் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் தமது மற்றும் தமது கட்சியின் நலன்களின் நோக்குகளிலிருந்தே தேர்தல்களை அணுகுவர். இந்த வகையில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் உள்ள குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கை தளமாக கொண்ட கட்சிகளின் தலைவர்கள் மாகாண சபைத் தேர்தலுக்கும் தமது சொந்த நலன்களுக்கும் தமது கட்சியின் நலன்களுக்கும் இடையிலான பயன்பாடு மற்றும் நலன்களின் அவசியத்திலிருந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் தமது குரல்களை எழுப்புகின்றனர் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமானதல்ல. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைந்து நடக்க வேண்டியது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையான தேசிய இனங்களின் நலன்களுக்கு கட்டாயமானதொரு தேவையாகும். இந்த நாட்டின் ஜனாதிபதியிடம், அவர் எவராயிருப்பினும், நிறைவேற்று அதிகாரங்கள் எல்லையற்ற அளவுக்கு குவிந்திருப்பதனால், இலங்கையின் மத்திய ஆட்சி அமைப்பானது அடிப்படையில் எதேச்சாதிகார கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றது என்பதே யதார்த்தமாகும். இந்த நிலைமையில் இலங்கையில் மாகாண ஆட்சிகள் முறையாகவும் முழுமையாகவும் சுயாதீன ஆற்றல்களுடனும் செயற்படுவது இந்த நாட்டின் ஜனநாயக பண்பாட்டின் முன்னேற்றத்துக்கு மிக மிக அவசியமாகும். இந்த வகையில் மாகாணங்களில் எப்போதும் மக்களாட்சிகள் செயற்படுவது முழு நாட்டினதும் அனைத்து இன மக்களினதும் பொது நலன்களோடு பின்னிப் பிணைந்தது என்பதையும் இவர்கள் உணர வேண்டும். அந்த வகையில் அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை தள்ளிப் போடும் தந்திரங்களை முழு மூச்சோடு எதிர்ப்பதுவும் தேர்தல்கள் விரைவாக நடப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை பரந்த அளவில் முன்னெடுப்பதுவும் இன்றைக்கு முக்கியமானதாக உள்ளது. ஆனால் தமிழர்கள் மத்தியிலுள்ள அரசியல் யதார்த்தமானது, தமிழர்களின் அரசியல் சமூக சக்திகளில் எவராவது அதற்குரிய வகையில் அர்ப்பணிப்போடு செயற்படுகிறார்களா என்ற கேள்வியையே எழுப்புகிறது. எதிர்க்கட்சியாக இருக்கையில் வேற வாய் ஆளும் அதிகாரத்தில் இருக்கையில் நாற வாய் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பெரிய கட்சி என்று சொல்லப்படுகிற தமிழரசுக் கட்சியினர் பெற்ற இடங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவ எண்ணிக்கையை இப்போது அரச அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களிடையேயிருந்து பெற்றிருக்கிறார்கள – யாரும் எதிர்பாரத்திருக்க முடியாத அளவுக்கு வாக்குளைப் பெற்றிருக்கிறார்கள். இது ஓர் அரசியல் வரலாற்று ஆச்சரியமே – சாதனையே. 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் பாராளுமன்னறத் தேர்தலின் போதும் மக்கள் விடுதலை முன்னணியினர் ‘ஊழல் மோசடிகளற்ற ஆட்சி’, ‘இனவாத கருத்துகளுக்கோ செயல்களுக்கோ இடமளிக்காத ஆட்சி’, ‘தமிழ்ப் பேசும் மக்களுக்கு கடந்த காலத்தில் நடந்த அநீதிக் கெல்லாம் நீதியை நிலை நாட்டும் ஆட்சி’, ‘இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும் நல்லிணக்கமான உறவுகளையும் நாட்டும் ஆட்சி’, ‘தமிழர்கள் போராடிப் பெற்ற மாகாண ஆட்சி முறையை அங்கீகரித்து பாதுகாப்பது தமது கடமை’ என்றே தமது பிரச்சாரங்களை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் பரப்பினார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாகாண ஆட்சிக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றார்கள். இப்போது அவர்களின் அரசியல் காட்சிகள் மாறி விட்டதற்கான சாட்சியங்களே அதிகமாக உள்ளன. இவர்கள் இப்போதாயினும் மாகாண ஆட்சிகளுக்கான தேர்தல்களை நடத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமது ஆட்சிகளை அமைப்பார்களோ இல்லையோ, நிச்சயமாக வலுவான எதிர்க்கட்சியாக ஆவார்கள் என்றே அரசியற் கணிப்புகள் உள்ளன. மாகாண சபைத் தேர்தல்கள் நடந்தால் மக்கள் விடுதலை முன்னணியினரும் மிகுந்த உற்சாகத்துடன் நாடு முழுவதும் தேர்தல் களத்தில் இறங்குவார்கள் என்பது தெரிந்ததே. இருப்பினும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணியினர் மாகாண சபைகளுக்கான தேர்தலை காலம் தாழ்த்தாது நடத்தும்படி மத்திய ஆட்சியிலுள்ள தமது கட்சித் தலைமையை வலியுறுத்துவார்கள் என எதிரபார்க்க முடியாத நிலைமையே இங்கு உள்ளது. மதிப்பிற்குரிய ஜனாதிபதி அநுரா அவர்களும் அவரது மக்கள் விடுதலை முன்னணியினரும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் வேறெந்தவொரு தேர்தலை நடத்தினாலும் அது தமக்கு வேதனையாக முடியக் கூடிய சோதனையாக அமைந்து விடக்கூடும் என்ற எச்சரிக்கைகளுக்கே உள்ளாகியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையிலும் பலயீனமாக இருக்கும் இன்றைய நிலையிலேயே ஆட்சியிலிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசியல் யாப்பின் மீது தாம் சத்தியம் செய்து ஏற்றுக்கொண்டுள்ள ஜனநாயகக் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற தயங்குவார்களேயானால், பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் மத்தியில் ஏற்படக் கூடிய விரக்திகள் வெறுப்புகள், அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் ஊழல் மோசடி குற்றச் சாட்டுகள், உட்கட்சிக்குள் வளர்ந்து வரும் உரசல்கள் முறுகல்கள் என்பன அதிகரிக்க அதிகரிக்க மக்கள் விடுதலை முன்னணியினரின் துணிச்சல்களும் தன்னம்பிக்கைகளும் ஆதரவு சக்திகளின் திரட்சிகளும் பலயீனமடைந்து செல்வது இயல்பாகி விடும். மாகாண சபைத் தேர்தல்களை இப்பொழுதே விரைவாக மக்கள் விடுதலை முன்னணியினர் துணிந்து நடத்த வேண்டும், இல்லையென்றால், இவர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் எந்த தேர்தலையும் நடத்த மாட்டார்கள் என்பதே உண்மையாகும். தேசிய மக்கள் சக்தியின் அணியில் இல்லாத எந்தவொரு சிங்கள சமூக அரசியல் பிரமுகரும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தைக் கோருவதில் முனைப்போடு செயற்பட மாட்டார்கள் என்பது தெளிவான ஒன்றாகும் -பெயரளவில் அவ்வப்போது குரல் கொடுப்பார்கள். எனவே இலங்கையின் சிறுபான்மையான தேசிய இனங்களாக உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் சமூக சக்திகளே மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற விடயத்துக்கான அரசியல் செயற்பாடுகளை நோக்கி திரள வேண்டும், முனைப்போடு விடா முயற்சியாக செயற்பட வேண்டும். அத்துடன், மாகாண ஆட்சிகளுக்காக அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும். நல்ல யானைகளை சரியாக பராமரித்து முழுமையாக பயன்படுத்தாமல் கட்டிப் போட்டால் நல்ல யானைகளும் ‘வெள்ளை யானைகளே’ மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் வழங்காமல் அவற்றை பயனெதுவுமற்றவை, வீண் செலவுச் சுமைகளை ஏற்படுத்துபவை என காட்டி சிங்கள மக்களுக்கு அதன் மீது வெறுப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேசும் மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியதைத்தான் இதுகாலவரை சிங்கள பேரின மேலாதிக்க வாதிகள் செய்து வந்திருக்கிறார்கள். நாளைக்கு இப்போது ஆட்சியிலிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரும். ‘மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நாங்கள் நடாத்தி விட்டோம், இனி அதனை மாகாண ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என அதே பழைய ஒழித்து பிடித்து விளையாடும் ஆட்டத்தில் இறங்கி விட மாட்டார்கள் என்றில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் யார் யார் முதலமைச்சர்களாக ஆக விரும்புகிறார்கள் – முதலமைச்சர்களாய் ஆவதற்கு யார் யார் போட்டியிடக் கூடும் – யார் யார் முதலமைச்சர்கள் ஆவார்கள் என்பவை இங்கு முக்கியமானவையல்ல. கடந்த கால அநுபவங்கள் – ஏமாற்றங்கள் காரணமாக மாகாண ஆட்சி முறை மீதும் தமிழ் அரசியற் பிரமுகர்கள் மீதும் எந்த அளவுக்கு தமிழ்ப் பேசும் மக்கள் பொதுவாகவே விரக்தியும் நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் உள்ள சக்திகள் அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். மாகாண ஆட்சிகளுக்கான அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் பெற்றுக் கொள்வது மிக அவசியமாகும். அதன் மூலமே மாகாண ஆட்சி முறையானது அர்த்தமுடையதாகவும் பயனுடையதாகவும் காத்திரமான செயற்பாடுகள் கொண்டதாகவும் அமைய முடியும். இதனை தெளிவாக புரிந்து கொண்டு, இப்போதிருந்தே அதை நோக்கிய செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்பதில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள அனைத்து அரசியல் சமூக சக்திகளும் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொள்ள வேண்டும் https://arangamnews.com/?p=12789

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்

4 days 19 hours ago
வரலாற்றுப் பெருமை தேடித்தந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய சிறீதரன் எம்.பி! நேற்றைய தினம் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன், கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் ஆனந்த் கிருசோந் மற்றும் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வி கமலநாதன் மதுமினி ஆகிய மாணவச் செல்வங்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள், "இது கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அடையாளத்தைப் பதித்துள்ளது. கல்வி ரீதியாகவும், வளங்கள் ரீதியாகவும் பின்தங்கிய மாவட்டம் என்று பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், இங்கிருந்து ஒரு மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்திருப்பது எமக்குக் கிடைத்த ஒரு வரலாற்று வெற்றியாகும்" என்று குறிப்பிட்டார். பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அவர் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார். வாட்ஸப் மூலம்

அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

4 days 19 hours ago
அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை! Apr 1, 2026 - 08:34 AM மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய எல்லைக்குள் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. ஈரானிய செய்தி நிறுவனமான 'தஸ்னிம்' வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த தாக்குதல் பட்டியலில் பின்வரும் முன்னணி நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன: அப்பிள் (Apple) மைக்ரோசொப்ட் (Microsoft) கூகுள் (Google) டெஸ்லா (Tesla) இன்டெல் (Intel) ஐ.பி.எம் (IBM) போயிங் (Boeing) ஈரானிய மண்ணில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு பயங்கரவாதச் செயலுக்கும் கைமாறாக, அந்தந்த நிறுவனங்களின் கிளைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த இலக்குகள் மீதான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் அமைந்துள்ள இந்த நிறுவனங்களின் தரவு மையங்கள் மற்றும் அலுவலகங்கள் ஈரானின் ஏவுகணை அல்லது சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என சர்வதேச அரசியல் அவதானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே அமேசான் நிறுவனத்தின் சில தரவு மையங்கள் கடந்த வாரம் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnfgirew0005356plju5scgs

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

4 days 20 hours ago
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு Apr 1, 2026 - 10:01 AM எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று (31) வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கமைய மாணவர்கள் அந்தந்த திகதிகளுக்கு ஏற்ப தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். பல்வேறு காரணங்களினால் பரீட்சை காலப்பகுதிகள் மாற்றமடைந்ததால் கடந்த காலங்களில் மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், அதன் காரணமாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும் இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார். இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறவுள்ளதுடன், தற்போது முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (01) முதல் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இங்கு மேலும் தெரிவித்தார். ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் மூன்றாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதியும் மற்றும் சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 08 ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளன. https://adaderanatamil.lk/news/cmnfjr4wr0009356pwvvlq4ke

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்

4 days 20 hours ago
கானலி தனி ஆவர்த்தனம்: 'த்ரில்' ஆட்டத்தில் குஜராத் சவாலை பஞ்சாப் முறியடித்தது எப்படி? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் கட்டுரை தகவல் என்.எஸ் பிபிசி தமிழுக்காக 1 ஏப்ரல் 2026, 02:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஒருபக்கம் 200க்கும் அதிகமான ரன்கள் இலக்கு என்றாலும் தளராமல் 15 ஓவர்களில் விரட்டி ஜெயித்த அணிகள், மறுபக்கம் அதிக எதிர்பார்ப்புகளோடு களமிறங்கி கோட்டைவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் என இந்த ஐ.பி.எல் சீசனின் முதல் சில ஆட்டங்கள் ரசிகர்களை பெரிதும் ஏமாற்ற, இரு சமபலம் பொருந்திய அணிகள் மோதும் போட்டிக்காக அவர்கள் காத்திருந்தார்கள். அது ஒருவழியாக நேற்று (மார்ச் 31) நிகழ்ந்தது. குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ். இந்த இரு அணிகளுமே கடந்த முறை ப்ளே ஆஃபுக்கு தகுதி பெற்றிருந்தவை. இந்த தொடருக்கு முந்தைய ஏலத்திலும் இந்த இரண்டு அணிகளுக்கும் வீரர்களை வாங்க பெரிதாக எந்த தேவையும் இருந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட போன சீசனில் ஆடிய அதே டீமோடு தான் இந்த முறையும் களமிறங்கி இருக்கிறார்கள். சமபலம் எனச் சொல்லப்படுவது இதனால்தான். ஆட்டம் நடப்பது பஞ்சாப் அணியின் ஹோம் கிரவுண்டான முல்லன்பூரில். ஐ.பி.எல் நடக்கும் பிற மைதானங்களை ஒப்பிடுகையில் இந்த மைதானம் மிகவும் புதிது. இதுவரை இங்கு ஆடப்பட்டிருக்கும் 11 டி20 போட்டிகளில் ஆறில் முதலில் பேட் செய்த அணிகளும் ஐந்தில் இரண்டாவது பேட் செய்த அணிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த தரவுகள் எல்லாம் மழை மைதானத்தை தொடும்வரையில்தான். கருமேகம் தென்பட்டாலே இரண்டாவது பேட்டிங் தேர்ந்தெடுப்பது கேப்டன்களின் வழக்கம். முல்லன்பூரிலும் மழை எதிர்பார்ப்புகளால் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நினைத்தது போலவே பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில், ரிக்கி பான்டிங்கின் நம்பிக்கைக்கு உரிய ஆல்ரவுண்டர் கூப்பர் கானலிக்கு வாய்ப்பு தரப்பட்டிருந்தது. கூடவே மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஜேவியர் பார்ட்லெட்டுக்கும். குஜராத் அணியில் பலகோடி ரூபாய் கொட்டி ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜேசன் ஹோல்டருக்கு இடமில்லை. அவருக்கு பதில் அனுபவம் வாய்ந்த ரபாடாவே களமிறக்கப்பட்டார். குஜராத் அணியை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த முடிவு பெரிய ஆச்சர்யம் எல்லாம் இல்லை. அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, 'பேட்ஸ்மேன்களால் அந்தந்த போட்டிகளை மட்டும்தான் வெல்ல முடியும். ஆனால் பவுலர்களால் தான் ஒட்டுமொத்தத் தொடரையும் வெல்ல முடியும்' என்கிற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் ரபாடா, சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ரஷித் கான் என சர்வதேச பவுலர்கள் அத்தனை பேர் இருந்தாலும் கூடவே ராஜஸ்தானை சேர்ந்த இளம் பவுலரான அசோக் ஷர்மாவுக்கும் ப்ளேயிங் லெவனில் இடம் கொடுத்திருந்தார். குஜராத் அணிக்கு ஓப்பனிங் இறங்கியது சுப்மன் கில்லும் சாய் சுதர்ஷனும். 'ஒன் டவுன்' கடந்த முறை போலவே பட்லர். குஜராத் அணி கடந்த சீசனில் மொத்தம் எடுத்த ரன்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் ரன்கள் இவர்கள் மூவரும் அடித்தவையே. இந்த முறையும் இவர்கள் மூவரின் பேட்டிங்கைத்தான் மலை போல நம்பியிருக்கிறது இந்த அணி. அணியின் வெற்றியை தாண்டி இந்த மூவருக்கும் தனிப்பட்ட முறையிலும் இந்த சீசனில் பெருவெற்றி தேவையாய் இருக்கிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான கில்லுக்கு இந்திய டி20 அணியில் இடமில்லை. காயமடைந்து ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியிருக்கிறார் சாய் சுதர்ஷன். பட்லரோ சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் மிக மோசமாக ஆடியிருந்தார். எனவே, இந்த தொடரில் இவர்கள் மூவருக்குமே ஏதோவொரு வகையில் தங்களை நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஷ்ரேயாஸ் ஐயர் (கோப்புப்படம்) முதல் ஓவர் தொடங்கும்போதே மழை தூறத் தொடங்கியிருந்தது. கூடவே தீவிரக் காற்றும். எனவே, மிக நிதானமாகவே ஆடத் தொடங்கினார்கள் குஜராத் பேட்ஸ்மேன்கள். முடிந்த அளவுக்கு சிங்கிள் தட்டுவது, வசதியான பந்துகளை மட்டும் கவனமாய் பவுண்டரிக்கு அனுப்புவது என்கிற அவர்களின் திட்டத்திற்கு ஓரளவு பயனும் கிடைத்தது. முதல் மூன்று ஓவர்களில் 35 ரன்கள். யான்சன் வீசிய நான்காவது ஓவரில் பந்தை தவறாக கணித்து ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சாய் சுதர்ஷன். இப்போது ஜாஸ் பட்லரின் முறை. யானை, ரயில், குழந்தையின் சிரிப்பு என பார்க்கச் சலிக்காதவை பட்டியலில் கவர் ட்ரைவ் ஆடும் பேட்ஸ்மேன்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படியொரு அழகான கவர் ட்ரைவ் ஆடி தன் கணக்கைத் தொடங்கினார் பட்லர். ஆறு ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 54/1. பவர்ப்ளேயில் குஜராத் பேட்ஸ்மேன்கள் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பதே அவர்கள் எவ்வளவு கவனமாக ஆடினார்கள் என்பதற்கான சான்று. ஏழாவது ஓவரில் விஜயகுமார் வைஷாக் வீசிய ஃபுல் லென்த் பாலில் சிக்ஸர் அடித்து அந்தக் குறையையும் போக்கினார் பட்லர். எட்டாவது ஓவருக்கு சஹல் வந்ததும், தூறல் காரணமாக பிட்ச் ஸ்லோவாகவும் சரியாக இருந்தது. அதைப் பயன்படுத்தி முடிந்தவரை ரன்களை கட்டுப்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தார் சஹல். விளைவு, தூக்கி அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டைப் பறிகொடுத்தார் கில். அடுத்ததாக களமிறங்கிய க்ளென் ஃ ப்லிப்ஸும், கில் ஆடிய அதே முறையில் நிதானமாக ஆடினார். அவரும் ஒரு கட்டத்தில் வெளியேற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களம் கண்டார். ஆனால் அவராலும் விரைவாக ரன் குவிக்கமுடியவில்லை. ஸ்லோ பிட்ச் என தெரிந்தபின் ஸ்லோ பவுன்சர்களாக போட்டு குஜராத் பேட்ஸ்மேன்களை தடுமாறவிட்டார்கள் பஞ்சாப் பவுலர்கள். இதனால் அழுத்தம் அதிகமாகி ஒவ்வொருவராக தங்கள் விக்கெட்டை சீரான இடைவெளியில் பறிகொடுத்து பெவிலியன் திரும்பத் தொடங்கினார்கள். கடைசி ஐந்து ஓவர்களில் குஜராத் அணியால் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 162/6. பஞ்சாப் சார்பில் விஜயகுமார் வைஷாக் மூன்று விக்கெட்களும் சஹல் இரண்டு விக்கெட்களும் வீழ்த்தியிருந்தார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சாய் சுதர்ஷன் (கோப்புப்படம்) ஐ.பி.எல் தொடரை அணி நிர்வாகங்கள் மிகத் தீவிரமாக அணுகத் தொடங்கியபின் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றங்கள் இரண்டு. ஒன்று தேசிய அணியில் இடம்பெற ஒரு நுழைவுத் தேர்வு போல மாறியது இந்தத் தொடர். இரண்டாவது 'டேலன்ட் ஸ்கெளட்டிங்'. இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் அணி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பயணித்து தகுதியான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கத் தொடங்கினார்கள். அப்படி கடந்த ஆண்டு பஞ்சாப் நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்ட வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் பந்தை நாலாபுறமும் சிதறடித்து சதம் போட்டவர். அதனால் இந்தமுறை அவர் எப்படி ஆடுவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு இருந்தது. முதல் ஓவரிலேயே சீனியரான சிராஜ் பந்தில் சிக்ஸ் அடித்து நம்பிக்கை கூட்டினார். ஆனால் அடுத்த ஓவரே ரபாடா வீசிய ஷார்ட் பாலில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மூன்றாவதாக ஷ்ரேயாஸ் களமிறங்குவாரா இல்லையா என்பதுதான் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்புவரை விவாதப்பொருளாக இருந்தது. ஐ.பி.எல்லில் மூன்றாவது இடத்தில்தான் பெரும்பாலும் ஆடியிருக்கிறார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் வழக்கமாக நான்காவது வீரராக களமிறங்குபவர். இப்போது இந்திய டி20 அணியில் நான்காவது இடத்தில் ஆடிவரும் சூர்யகுமார் யாதவ் ஓய்வு பெற்றால் அவரின் இடத்தில் தேசிய அணிக்கு ஆடலாம். அதுமட்டும்தான் இந்திய டி20 அணியில் இடம்பெற ஒரே வழி என அவர் யோசிப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதை மெய்யாக்குவது போலவே கூப்பர் கானலியை களமிறங்கினார் பாண்டிங். மறுபக்கம் பிரப்சிம்ரன் சிங். இருவரும் சீனியர், ஜூனியர் என்றெல்லாம் பார்க்காமல் ரபாடா, ரஷித் கான், அசோக் ஷர்மா என எல்லாரையும் பந்தாடினார்கள். 9 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 81/1. ஒருவழியாக பத்தாவது ஓவரில் ப்ரப்சிம்ரனை வெளியேற்றினார் ரஷித் கான். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... மழை இப்போது கொஞ்சம் தீவிரமடைந்திருந்தது. அதனால் ஆட்டத்தை சீக்கிரம் முடித்துவிடவேண்டும் என அவசரம் காட்டினார்கள் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள். இதனால் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார் ஸ்ரேயாஸ். ஆனால் அடுத்த ஓவரில் கானலி ஓங்கி அடித்த பந்து ஸ்ரேயாஸ் கையில் சீறிவந்து பட, தடுமாறிப் போனார் ஷ்ரேயாஸ். அந்த தாக்கத்தில் அவரால் பிரஷித் கிருஷ்ணாவின் பந்தை சரியாக அடிக்கமுடியாமல் போனது. டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் வந்த நேஹால் வதேரா, சஷாங்க் சிங், ஸ்டாய்னிஸ் என அனைவரும் அதே அவசரகதியில் ஆடி அவுட்டாக, முதல்முறையாக ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற ஒரு வாய்ப்பு தூரத்தில் தெரிந்தது. ஸ்கோர் 15 ஓவர்கள் முடிவில் 121/6. இனிமேல் விக்கெட்கள் விழுந்தால் மீள்வது கஷ்டம் என உணர்ந்த கானலியும் யான்சனும் கவனமாக அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்கள். 34 பந்துகளில் அரைசதம் கடந்தார் கானலி. ஐபிஎல்லில் அறிமுகப் போட்டியிலேயே ஐம்பதிற்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த 25வது வீரர் இவர். இறுதியாக 20வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அணியின் வெற்றியையும் அவரே உறுதி செய்தார். ஆட்ட நாயகனும் அவரே. பலவீனங்களே இல்லை என மெச்சப்பட்ட பஞ்சாப் அணி ஹோம் கிரவுண்டிலேயே தட்டுத் தடுமாறித்தான் வெற்றி பெற்றிருக்கிறது. மறுபக்கம் கடந்த சீசனில் சொல்லப்பட்ட 'பலவீனமான மிடில் ஆர்டர்' எனும் குறைபாடு இந்த சீசனிலும் குஜராத் அணியை துரத்துகிறது. இது முதல் வாரம்தான். தவறுகளை சரிசெய்துகொள்ளவும் சரியான பிளேயிங் லெவனை தீர்மானிக்கவும் இந்த தடுமாற்றங்கள் நிச்சயம் உதவியாய் இருக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxkvlg6q9go

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்

4 days 20 hours ago
A/L பெறுபேறுகள் : வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாணவன் முதலிடம் Apr 1, 2026 - 10:25 AM 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவரான சுபைதீன் முஹம்மட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnfkly19000a356poagzecs4 A/L Results : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள் இதோ! Apr 1, 2026 - 10:50 AM 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று (31) இரவு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 281,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியதுடன், அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை, 111 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாண ரீதியான பல்கலைக்கழகப் பிரவேசத் தகுதி வீதம்: மேல் மாகாணம்: 69.42% வடமேல் மாகாணம்: 68.48% வட மாகாணம்: 66.91% கிழக்கு மாகாணம்: 66.32% தென் மாகாணம்: 65.69% சப்ரகமுவ மாகாணம்: 64.97% ஊவா மாகாணம்: 63.53% மத்திய மாகாணம்: 63.04% வடமத்திய மாகாணம்: 60.91% பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மாணவிகளாவர். இருப்பினும், உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் மாத்திரம் மாணவர்களே அதிகளவில் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை கலைப்பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 32.03% ஆகக் குறைவடைந்துள்ளதுடன், உயிரியல், பௌதீகவியல், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இதன்படி, இம்முறை தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் வருமாறு: உயிரியல் விஞ்ஞானப் பிரிவு: முதலிடம் - டிலான் சஞ்சன (கொழும்பு றோயல் கல்லூரி) இரண்டாமிடம் - கிரிஷான் சசிந்து நம்தர (ஹொரணை தக்ஷிலா மத்திய மகா வித்தியாலயம்) மூன்றாமிடம் - தர்ஷனா கோனேஷ் (திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி) பௌதீகவியல் (கணித) பிரிவு: முதலிடம்: தேவேந்தன் திருகுமரன் (கிளிநொச்சி மகா வித்தியாலயம்) இரண்டாமிடம்: தருஷ கிம்ஹான கம்லத் (குருணாகலை மலியதேவ வித்தியாலயம்) மூன்றாமிடம்: வினுர பிரசாத் டி மெல் (பாணந்துறை ஸ்ரீ சுமங்கல ஆண்கள் பாடசாலை) வணிகப் பிரிவு : முதலிடம்: சுபைதீன் மொஹமட் ஃபர்தான் மொஹமட் (காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)) இரண்டாமிடம்: செனாதி திஹஸ்னா சுமனசேகர (கொழும்பு மியூசியஸ் கல்லூரி) மூன்றாமிடம்: திலீப சந்தெரஸ் கருணாரத்ன (கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயம்) https://adaderanatamil.lk/news/cmnflbyh3000b356p8d1e7pj1

க்ரைமியாவில் ரஷ்ய இராணுவ விமானம் விபத்து: 29 பேர் பலி

4 days 20 hours ago
க்ரைமியாவில் ரஷ்ய இராணுவ விமானம் விபத்து: 29 பேர் பலி Apr 1, 2026 - 07:18 AM க்ரைமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் 'அன்டோனோவ்-26' (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் (31), மொஸ்கோ நேரப்படி மாலை 6:00 மணியளவில் க்ரைமியா தீபகற்பத்தின் மேல் திட்டமிடப்பட்ட பயணத்தில் இருந்த குறித்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தில் 6 விமானப் பணியாளர்களும் 23 பயணிகளும் என மொத்தம் 29 பேர் பயணித்திருந்ததுடன், அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்ததில், வெளிப்புறத் தாக்குதல்கள் எதற்கும் இலக்கானதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைய நாட்களாக வான்வழி அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விபத்து சர்வதேச ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnfdsxys0002356pks6omk41

'உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்' மஹிந்த, மைத்திரி, கோட்டா,சஜித் பங்கேற்புடன் நூல் வெளியீடு

4 days 20 hours ago
'உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்' மஹிந்த, மைத்திரி, கோட்டா,சஜித் பங்கேற்புடன் நூல் வெளியீடு Published By: Vishnu 01 Apr, 2026 | 05:21 AM (இராஜதுரை ஹஷான்) பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பிலவினால் எழுதப்பட்ட 'உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்' எனும் நூல் செவ்வாய்க்கிழமை (31) வெளியிடப்பட்டது. நூல் வெளியீட்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31) கொழும்பு சம்புத்த ஜயந்தி மண்டபத்தில் நடைபெற்றது. நூல் வெளியீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, திலித் ஜயவீர உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர். முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ், டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச,அநுர பிரியதர்ஷன யாப்பா,சாகல ரத்நாயக்க, வஜிர அபேவரத்தன, உட்பட பலர் கலந்துக் கொண்டனர். பௌத்த மத அனுஸ்டானத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க ஆரம்ப உரையாற்றி ' உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்புண்டு என்பதை ஏற்க முடியாது. ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வருவதற்காக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடுவதை முற்றாக நிராகரிக்கிறேன். ஏனெனில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ராஜபக்ஷர்கள் அதிகாரத்துக்கு வந்து விட்டார்கள்' என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து உதய கம்மன்பில தான் எழுதிய நூலை பௌத்த மத தலைவர்களுக்கு வழங்கி வைத்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கி வைத்தார். நிகழ்வு ஆரம்பமாகி 10 நிமிடத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிகழ்வில் இருந்து இடைநடுவே சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய உதய கம்மன்பில, குண்டுத்தாக்குதல் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்வதற்கு தான் எழுதிய புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பயங்கரவாதி சஹ்ரான் என்றும், தாக்குதல்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்ட இப்ராஹிம் 300 மில்லியன் ரூபா செலவழித்ததாகவும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/242448

பயங்கரவாத சட்ட வரைவு; மனித உரிமை சீர்திருத்தத்தில் தயக்கம் - சர்வதேச ஆய்வாளர் எச்சரிக்கை

4 days 20 hours ago
பயங்கரவாத சட்ட வரைவு; மனித உரிமை சீர்திருத்தத்தில் தயக்கம் - சர்வதேச ஆய்வாளர் எச்சரிக்கை Published By: Vishnu 31 Mar, 2026 | 11:02 PM (நா.தனுஜா) அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது நீண்டகாலமாக பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சட்டங்களை அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைப்பதற்குப் புதிய நிர்வாகத்துக்கு இருக்கும் தயக்கத்தைக் காண்பிக்கிறது. இந்த அணுகுமுறை சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கிறது. அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது. அதுமாத்திரமன்றி இந்தப் போக்கு இலங்கைக்கு நீண்டகால அடிப்படையிலான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என நெதர்லாந்தின் டி.எம்.சி அஸேர் நிலையத்தின் ஆய்வாளர் நிக்கி சியாம்பாகோ எச்சரித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தீவிர கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அதேவேளை அவ்வரைவு தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை அனுப்பிவைப்பதற்கு நீதியமைச்சினால் வழங்கப்பட்டிருந்த பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் இவ்விடயத்தில் தாம் முன்னெடுக்கவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் அறிவிக்காத நிலையில், நெதர்லாந்தை தளமாகக்கொண்டு இயங்கிவரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆய்வுக்கட்டமைப்பான டி.எம்.சி அஸேர் நிலையத்தின் ஆய்வாளர் நிக்கி சியாம்பாகோ இப்புதிய வரைவு தொடர்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக அனைத்து ஒடுக்குமுறைச்சட்டங்களையும் நீக்குவதாகவும், நாட்டின் சகல பகுதிகளிலும் வாழும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் உறுதியளித்தது. இருப்பினும் அரசாங்கம் அவ்வாக்குறுதியைத் தற்போதுவரை நிறைவேற்றவில்லை. இலங்கையில் 1979 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டமானது சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகத் தவறாகப் பிரயோகிக்கப்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கிறது. 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் செயற்திறன்மிக்கதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறத்தக்கதுமான புலனாய்வு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் தேவைப்பாட்டை உணர்த்தின. இத்தகைய பின்னணியில் முன்னைய அரசாங்கங்களினால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கான திருத்தங்களும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவுகளும் முன்மொழியப்பட்ட போதிலும், அவை எவற்றாலும் இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புக்கட்டமைப்பை சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் கொண்டுவரமுடியவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் 2024 இல் தேர்தல்களின் பின்னர் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம் குறித்து ஆராய்வதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவை முன்மொழிவதற்குமென ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு' கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. போருக்குப் பின்னரான சவால்கள், பயங்கரவாதத்தடைச்சட்டம் மீதான நீண்டகால விமர்சனங்கள், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்துவதற்கான இலங்கையின் அரசியல் கடப்பாடு ஆகியவற்றின் பின்னணியில் வெளியிடப்பட்டிருக்கும் இச்சட்டவரைவு பெரும்பாலும் முன்னைய அரசாங்கங்களின் முன்மொழிவுகளையே பிரதிபலிக்கிறது. அத்தோடு சர்வதேச சட்டத்துக்கு இணங்குவதற்குரிய ஐந்து அத்தியாவசிய முன்நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கும் அது தவறியிருக்கிறது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் பயங்கரவாத செயல்களுக்கு மிகப்பரந்துபட்ட வரையறை வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் செய்யப்படும் பட்சத்தில் எனக் குறிப்பிட்டு, தாக்குதல், சொத்துச்சேதம், கொள்கை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் மத அல்லது கலாசார இடங்களை சேதப்படுத்தல் போன்ற சாதாரண குற்றங்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. இந்த விரிவான வரையறை மற்றும் குற்றவியல் நோக்கத்தின் பரந்துபட்ட தன்மை என்பன அரசியல் எதிரிகளையும் சிவில் சமூகத்தையும் குறிவைப்பதற்குத் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோன்று இப்புதிய சட்ட வரைவு படையினருக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்குகிறது. 'நியாயமான சந்தேகம்' என்ற அடிப்படையில் நபர்களை நிறுத்தவும், தேடவும், விசாரணை செய்யவும், வளாகங்களுக்குள் நுழைந்து சோதனையிடவும் சட்டத்தின்கீழ் ஒரு குற்றத்துடன் தொடர்புடைய அல்லது தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொருட்களைக் கைப்பற்றவும் இது இடமளிக்கிறது. இந்தப் பரந்துபட்ட அதிகாரங்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல் வரலாறு என்பவற்றைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இவ்வதிகாரங்கள் தன்னிச்சையான தடுத்துவைப்புகள் மற்றும் சித்திரவதைகளுக்கு வழிகோலும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன. இவையும், இச்சட்ட வரைவில் உள்வாங்கப்பட்டுள்ள ஏனைய பல சரத்துக்களும் மனித உரிமைகளை மட்டுபடுத்துவதற்கோ அல்லது இல்ஙகையின் போருக்குப் பின்னரான விரிவான இடைக்கால நீதிச்செயன்முறையை சீர்குலைப்பதற்கோ வழிவகுக்கக்கூடும். இச்சட்டத்தை நிறைவேற்றுவது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் சார்ந்து இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளை சமரசம் செய்யும் வகையில் அமையும். குறிப்பாக இலங்கை தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினால் பயனடைந்து வருவதுடன், அச்சலுகைக்கு மீண்டும் விண்ணபிப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் அதற்கு ஈடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைத்தல் எனும் கடப்பாட்டை இலங்கை நிறைவேற்றவேண்டும். இல்லாவிடின் 2010 ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப்போல, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் இடைநிறுத்தப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படாமல் போகலாம். இது இலங்கையின் பொருளாதாரத்தில் மோசமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது நீண்டகாலமாக பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சட்டங்களை அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைப்பதற்குப் புதிய நிர்வாகத்துக்கு இருக்கும் தயக்கத்தைக் காண்பிக்கிறது. இந்த அணுகுமுறை சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கிறது. அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது. அதுமாத்திரமன்றி இந்தப் போக்கு இலங்கைக்கு நீண்டகால அடிப்படையிலான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242438

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்

4 days 20 hours ago
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது Mar 31, 2026 - 11:42 PM 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளடங்கலாக மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களினூடாகத் தமது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், 01.04.2026 (இன்று) முதல் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு http://onlineexams.gov.lk/eic எனும் இணையத்தளத்தினூடாக பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிபர்கள் மற்றும் வலய/மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இதே இணையத்தளத்தினூடாக தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி முடிவுகளைத் தரவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், http://onlineexams.gov.lk/onlineapps எனும் இணையத்தளத்தினூடாக 06.04.2026 தொடக்கம் 22.04.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் (Online) மாத்திரம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் அச்சிடப்பட்ட பரீட்சைப் பெறுபேற்று அட்டவணைகள், மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியான பின்னரே அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்கு: நேரடி அழைப்பு எண்: 1911 தொலைபேசி எண்கள்: 0112784208, 0112786616, 0112784537, 0112785413 தொலைநகல் (Fax): 0112784422 மின்னஞ்சல்: gcealexam@gmail.com பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், http://onlineexams.gov.lk/onlineapps எனும் இணையத்தளத்தினூடாக 06.04.2026 தொடக்கம் 22.04.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் (Online) மாத்திரம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் அச்சிடப்பட்ட பரீட்சைப் பெறுபேற்று அட்டவணைகள், மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியான பின்னரே அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலதிக விசாரணைகளுக்கு: நேரடி அழைப்பு எண்: 1911 தொலைபேசி எண்கள்: 0112784208, 0112786616, 0112784537, 0112785413 தொலைநகல் (Fax): 0112784422 மின்னஞ்சல்: gcealexam@gmail.com https://adaderanatamil.lk/news/cmnexm8iu000i356pqi8ofsit

மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டோமென உத்தரவாதம் அளித்தால் போரை நிறுத்தத் தயார் - ஈரான் ஜனாதிபதி

4 days 20 hours ago
மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டோமென உத்தரவாதம் அளித்தால் போரை நிறுத்தத் தயார் ர் - ஈரான் ஜனாதிபதி Published By: Digital Desk 3 01 Apr, 2026 | 09:17 AM ஈரான் மீதான போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தயார் எனவும், ஆனால் மீண்டும் இத்தகைய தாக்குதல்கள் நடக்காது என்பதற்கான உறுதியான உத்தரவாதங்கள் அவசியம் எனவும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அந்தோனியோ கோஸ்டாவுடன் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போரை நிறுத்த ஈரானிடம் "தேவையான விருப்பம்" உள்ளது. ஆனால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தாது என்பதற்கான பொறிமுறை அவசியமென பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா முன்வைத்த 15 அம்சத் திட்டத்திற்குப் பதிலடியாக, ஈரான் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதில் ஆக்கிரமிப்பை நிறுத்துவது பிரதான நிபந்தனையாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றங்கள் தொடர்பில் ஐரோப்பா மௌனம் காப்பது அதன் மனித உரிமை கோரிக்கைகளுக்கு முரணானது என அவர் சாடியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் போர் ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் ஈரான் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 249 பெண்கள் மற்றும் 216 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 5 வயதுக்கும் குறைந்த 17 குழந்தைகளும் அடங்குவர். சுமார் 113,000 பொது இடங்கள் (வீடுகள், பாடசாலைகள், வணிக வளாகங்கள்) சேதமடைந்துள்ளன. தலைநகர் தெஹ்ரானில் மட்டும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஈரானிய செம்பிறை சங்கத்தின் 18 வசதிகள் மற்றும் 3 நிவாரண ஹெலிகொப்டர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களை ஐரோப்பா ஆதரிக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அந்தோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார். போரினால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து கவலை வெளியிட்ட அவர், இராஜதந்திர ரீதியில் தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/242457

போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில்’ முடிவடையும் என டிரம்ப் தெரிவித்தார்.

4 days 20 hours ago
'2 அல்லது 3 வாரங்களில் இரானை விட்டு அமெரிக்கா வெளியேறும்' - டிரம்ப் திடீர் அறிவிப்பு பட மூலாதாரம்,EPA/Shutterstock படக்குறிப்பு,ஓவல் அலுவலகத்தில் ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோதல் முடிவுக்கு வந்ததற்கான சில அறிகுறிகளை வெளிப்படுத்தினார். 52 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரானை விட்டு 'இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்' அமெரிக்கா வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் இரான் அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது என்பது மட்டுமே தனது "ஒரே குறிக்கோள்" என்றும், அந்த இலக்கு "இப்போது எட்டப்பட்டுவிட்டது" என்றும் அவர் கூறினார். "இரானில் எங்களது பணிகளை நாங்கள் இறுதி செய்து வருகிறோம்," என்று கூறிய அவர், அமெரிக்கா "அநேகமாக இரண்டு வாரங்களுக்குள் அல்லது பணிகளை முடிக்க இன்னும் சில நாட்கள் கூடுதலாக எடுத்துக்கொண்டு" இரானை விட்டு வெளியேறும் என்றும் கூறினார். மேலும், "அவர்களிடம் உள்ள அனைத்தையும் நாங்கள் முற்றிலும் ஒழிக்க விரும்புகிறோம், இருப்பினும் அதற்கு முன்பே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்புள்ளது," என்று டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாகவும், ஆனால் இரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலும் "அதனால் எந்த வித்தியாசமும் ஏற்படப்போவதில்லை" என்றும் அவர் கூறினார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிவாயு விலைகள் மற்றும் அவற்றைக் குறைப்பதற்கான அவரது திட்டம் குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார். அதுகுறித்து பேசிய அதிபர் டிரம்ப், "நான் செய்ய வேண்டியதெல்லாம் இரானில் இருந்து வெளியேறுவதுதான், அதை நாங்கள் மிக விரைவில் செய்யப்போகிறோம். நாங்கள் அங்கிருந்து மிக விரைவில் வெளியேறுவோம்" என்றார். 'இரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது' இரானில் "ஆட்சி மாற்றம்" ஏற்பட்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, இரானின் புதிய தலைவர்கள் முந்தைய தலைவர்களை விட "மிகக் குறைந்த தீவிரப்போக்குடையவர்கள்" மற்றும் "அதிக பகுத்தறிவுள்ளவர்கள்". பிரான்ஸுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ எண்ணெய் தேவைப்பட்டால், அவர்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்று அதைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்லலாம் என்றும், இதற்கும் அமெரிக்காவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இரானில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், அமெரிக்கா 'எந்த தடையும் இன்றி' செயல்படுவதாகவும், 'அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன' என்றும் கூறினார். இரானிய ஆட்சியிடம் இப்போது எந்த விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "அவர்கள் போரிடவில்லை. அவர்கள் எங்கள் மீது துப்பாக்கிச்சூடு கூட நடத்தவில்லை" என்று கூறிய டிரம்ப், இதற்குக் காரணம், "அவர்களின் ராணுவத் தளவாடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன" என்றும், அவர்களிடம் "பயன்படுத்த எதுவுமே மிஞ்சவில்லை" என்றும் விளக்கமளித்தார். இரானிடம் இனி கடற்படை அல்லது பயனுள்ள ராணுவ சக்தி இல்லை என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தி கூறினார். "அவர்கள் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் தோற்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் ஒரு சமரசத்திற்காகக் கெஞ்சுகிறார்கள்" என்று டிரம்ப் கூறினார். இரான் நிபந்தனை பட மூலாதாரம்,Fatemeh Bahrami/Anadolu via Getty Images படக்குறிப்பு,தெஹ்ரானில் இஸ்லாமியக் குடியரசு தினத்தைக் கொண்டாடிய மக்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர் (படம்: மார்ச் 31, 2026) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இரானுக்கு "தேவையான மனவலிமை"உள்ளது. ஆனால் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே அது சாத்தியம் என, முன்னதாக இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறினார். இரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ- வின் படி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில் பெசெஷ்கியன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். பெசெஷ்கியனின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் இரான் மீது எந்தவிதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் இரானுக்கு வேண்டும். "நாங்கள் ஒருபோதும் பதற்றத்தை அதிகரிக்கவோ அல்லது போருக்குச் செல்லவோ முயன்றதில்லை," என்று கூறிய அவர், "சூழ்நிலையை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கான தீர்வு, எங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்துவதே ஆகும்" என்றும் குறிப்பிட்டார். அமெரிக்க நிறுவனங்களுக்கு மிரட்டல் பட மூலாதாரம்,EPA/Shutterstock படக்குறிப்பு,மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது (மாதிரி புகைப்படம்). இதற்கிடையில், மத்திய கிழக்கில் இயங்கி வரும் 18 நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அவை குறிவைக்கப்படும் என்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது. புரட்சிகர காவல்படையின் கூற்றுப்படி, அவர்களது எச்சரிக்கை புதன்கிழமை தெஹ்ரான் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு அமலுக்கு வந்தது. இந்தத் தகவல் பல சர்வதேச ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. இந்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு உதவுவதாகவும், இலக்குகளைக் கண்காணிக்க உதவுவதாகவும் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கூகுள், மெட்டா, டெஸ்லா மற்றும் என்விடியா போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது தவிர, சிஸ்கோ, இன்டெல், ஆரக்கிள், ஐபிஎம், ஜெனரல் எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. புரட்சிகர காவல்படை தனது அறிக்கையில், "ஊழியர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள உடனடியாக அலுவலகங்களை காலி செய்யுமாறு அறிவுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கின் அனைத்து நாடுகளிலும் உள்ள இந்த 'பயங்கரவாத அமைப்புகளுக்கு' அருகில் வசிக்கும் மக்கள், ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு அப்பால் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அது எச்சரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yw2kpdrrko

வளைகுடாவில் எண்ணெயை விட அதிமுக்கிய வளத்திற்கு குறியா? இரான் போரில் எச்சரிக்கை சமிக்ஞை

4 days 20 hours ago
வளைகுடாவில் எண்ணெயை விட அதிமுக்கிய வளத்திற்கு குறியா? இரான் போரில் எச்சரிக்கை சமிக்ஞை பட மூலாதாரம்,BBC and Getty Images கட்டுரை தகவல் நிக் எரிக்சன் பதவி,பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் குறைந்து வரும் இயற்கை வளங்களின் பின்னணியில் நடக்கும் மோதல்களைச் சித்தரிக்கும் ஏராளமான கற்பனை நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் காட்சிகள், குறிப்பாக அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் எதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இல்லை. எதிர்பார்த்தபடியே, இந்தப் போர் ஓரளவு எண்ணெயைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது; இது இப்பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டுடன் நீண்டகாலமாகத் தொடர்புடைய ஒரு வளமாகும். ஆனால், இந்தப் போர் விரிவடைந்து வளைகுடா நாடுகளையும் உள்ளிழுக்கும்போது, மற்றொரு பாதிக்கப்படக்கூடிய வளமான 'நீர்' ஒரு சாத்தியமான மோதல் காரணியாக மாறியுள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகளாவிய புதுப்பிக்கத்தக்க நன்னீர் வளத்தில் வளைகுடா நாடுகள் வெறும் 2% மட்டுமே கொண்டுள்ளன என்பதால் கடல்நீரை நன்னீராக்கும் முறையையே பெரிதும் நம்பியுள்ளன. குறிப்பாக 1950-களில் இருந்து எண்ணெய் தொழிலின் வளர்ச்சி இப்பிராந்தியத்திற்குக் கொடுத்த அழுத்தங்கள் மற்றும் அதன் வரையறுக்கப்பட்ட நீர் விநியோகத்தில் இது ஏற்படுத்திய தாக்கங்கள் இதற்கு முக்கியக் காரணமாகும். சர்வதேச உறவுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தின்படி (French Institute of International Relations), குவைத்தின் 90% நீர் கடல்நீரை நன்னீராக்குவதன் மூலம் கிடைக்கிறது; அதோடு ஓமனில் 86%, செளதி அரேபியாவில் 70% மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் 42% நீர் இவ்வாறே கிடைக்கிறது. "கடந்த 2021ஆம் ஆண்டில், வளைகுடாவில் நீரை எடுக்கும் கடல்நீர் நன்னீராக்கும் ஆலைகளின் மொத்த உற்பத்தி அளவு ஒரு நாளைக்கு 20 மில்லியன் கன மீட்டருக்கும் அதிகமாக இருந்தது - இது ஒரு நாளைக்கு 8,000 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்புவதற்குச் சமம்" என்று ஓமனில் உள்ள கடல் அறிவியல், மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு மையத்தைச் சேர்ந்த வில் லெ குவெஸ்னே, பிபிசி உலக சேவையின் 'நியூஸ்டே' நிகழ்ச்சியில் கூறினார். பட மூலாதாரம்,Fadel Senna / AFP via Getty Images படக்குறிப்பு,வளைகுடாவில் நன்னீர் விநியோகம் மிகக் குறைவு, எனவே எந்தவொரு நேரடி அல்லது மறைமுகத் தாக்குதல்களின் தாக்கமும் மிக முக்கியமானதாக இருக்கும். வழக்கமாக பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீர் இருப்பு இப்பிராந்தியம் முழுவதும் கடுமையாகக் குறைந்துவிட்டதால், விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியும் வளைகுடாவில் நன்னீராக்கப்பட்ட நீரையே சார்ந்துள்ளன. இந்தச் சார்புத்தன்மை, நீர் உள்கட்டமைப்பை உத்தி ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய ஒன்றாக மாற்றுகிறது; இதை அமெரிக்கா, இரான் ஆகிய இரு நாடுகளுமே பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இரானின் அணுகுமுறையை ஆய்வாளர்கள் "கிடைமட்ட விரிவாக்கம்" என்று விவரிக்கிறார்கள்; அதாவது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை நேரடியாக எதிர்கொள்வதைவிட மோதலின் எல்லையை விரிவுபடுத்துவது. நீர் உள்கட்டமைப்பை இலக்கு வைப்பது பழிவாங்கல் என்றே கட்டமைக்கப்பட்டாலும்கூட இரானின் வியூகத்தின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது. "வளைகுடா அரசுகள் தங்கள் நீர் உள்கட்டமைப்பு தாக்குதலுக்கு உள்ளாவதாக நம்பினால், அவர்கள் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது" என்று கத்தாரில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் ஓவன் ஜோன்ஸ் கூறுகிறார். இரானின் தாக்குதல்கள் "பீதியை உருவாக்குவதை" நோக்கமாகக் கொண்டுள்ளன, இது "தங்குவதா அல்லது வெளியேறுவதா" என பொதுமக்களைத் தீர்மானிக்க வைக்கிறது. பட மூலாதாரம்,Fadel Senna / AFP via Getty Images படக்குறிப்பு,வளைகுடாவை நோக்கி இரான் ஏவிய ஏவுகணைகள் முன்னெப்போதும் இல்லாதவை, இருப்பினும் இந்தக் கட்டத்தில் முக்கியமான நீர் உள்கட்டமைப்பை அது வேண்டுமென்றே இலக்கு வைப்பது வரையறுக்கப்பட்டதாகவே தெரிகிறது. கடல்நீரை நன்னீராக்கும் ஆலை மீது இரான் நேரடியாகத் தாக்குதல் நடத்தியதாக பஹ்ரைன் குற்றம் சாட்டியுள்ளது; அதே நேரத்தில் ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவில் உள்ள நீர் வசதியை முன்னதாக அமெரிக்கா நடத்திய தாக்குதல் சேதப்படுத்தியதாக இரான் கூறுகிறது. துபையின் ஜபெல் அலி துறைமுகம் மீதான இரானிய தாக்குதல்கள் உலகின் மிகப்பெரிய நன்னீராக்கும் ஆலைகளில் ஒன்றுக்கு மிக அருகில் விழுந்ததாகக் கருதப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா எஃப்1 சுதந்திர நீர் மற்றும் மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் ஒரு சந்தேகத்திற்கிடமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது - இது இன்னும் செயல்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். குவைத்தின் தோஹா மேற்கு ஆலையும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் இது அருகில் உள்ள துறைமுகத் தாக்குதல்கள் அல்லது டிரோன் தாக்குதல்களில் இருந்து விழுந்த சிதைவுகள் மூலம் மறைமுகமாக நடந்துள்ளது. "[இரானை பொறுத்தவரை] இது ஒரு சமிக்ஞை விளையாட்டு" என்று ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழக நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிறுவனத்தின் தலைவரான பேராசிரியர் காவே மதனி பிபிசி உலக சேவையிடம் கூறினார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... இரான் எந்தவொரு செயலையும் தனக்கு எதிரான தாக்குதல்களுக்கு "நியாயமான" பதில் என்று கட்டமைத்துள்ளது - குறிப்பாக கெஷ்ம் தீவு மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பழிவாங்கலாகவே பஹ்ரைன் தாக்குதல்களை அது முன்வைக்கிறது. முக்கியமான நீர் உள்கட்டமைப்பின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரானின் திறனையும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாக அது எவ்வளவு தூரம் செல்லத் தயாராக உள்ளது என்பதையும் காட்டுகிறது. ஆனால், வளைகுடாவின் விலைமதிப்பற்ற நீர் விநியோகத்தின் மீது இன்னும் தொடர்ச்சியான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்துவோம் என்ற அச்சுறுத்தலிலேயே அதன் வலிமை உள்ளது; இது இரான் எதிர்காலத்தில் நிச்சயமாக என்ன செய்யும் என்பதற்கான அறிகுறி அல்ல என்று மதனி குறிப்பிடுகிறார். "நீர் [வரலாற்று ரீதியாக] எப்போதும் அச்சுறுத்துவதற்கான ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,EPA வளைகுடாவில் உள்ள நன்னீராக்கும் ஆலைகள் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதல்களைத் தொடுப்பதில் தெஹ்ரான் காட்டும் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டிற்கும், தனது சொந்தத் தாக்குதல்களைப் பழிவாங்கல் என்று வேண்டுமென்றே கட்டமைப்பதற்கும் ஜெனீவா உடன்படிக்கையின் 45வது பிரிவு ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என்று மதனி சுட்டிக்காட்டுகிறார். "பொதுமக்கள் உள்கட்டமைப்பைத் தாக்க கூடாது என்று சட்டம் கூறுகிறது - ஆனால் [இரான்] அதைத் தொடங்கவில்லை. அதுதான் அப்பாஸ் அராக்சியின் [சமூக ஊடகப் பதிவில்] இருந்தது" என்று இரானிய வெளியுறவு அமைச்சரின் கருத்துகளை மதனி மேற்கோள் காட்டுகிறார். கெஷ்ம் தீவு மீதான தாக்குதலை "கடுமையான விளைவுகளைக் கொண்ட ஓர் ஆபத்தான நடவடிக்கை... பல கிராமங்களுக்கான நீர் விநியோகத்தைக் குறைத்திருக்கும் ஓர் அப்பட்டமான வெறிகொண்ட குற்றம்" என்று அராக்சி அழைத்தார். இது தொடர்ச்சியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தச் சம்பவங்கள் நீர் பாதுகாப்பைப் பொறுத்தவரை அமெரிக்காவுடன் அணி சேர்ந்துள்ள நாடுகளின் பலவீனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இரானும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது, இருப்பினும் அதன் நீர் விநியோகம் அதன் வளைகுடா நாடுகளைவிடப் பன்முகத்தன்மை கொண்டது, எனவே கடல்நீர் நன்னீராக்கலை அது குறைவாகவே சார்ந்துள்ளது என்று மதனி குறிப்பிடுகிறார். இருப்பினும், வளைகுடாவின் முக்கியமான நீர் உள்கட்டமைப்பின் மீது இரான் நடத்தும் எந்தவொரு தாக்குதலும் அதன் சொந்த நீர் உள்கட்டமைப்பின் மீது பழிவாங்கும் தாக்குதல்களை விளைவிக்கக்கூடும் என்று மற்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரான் சில காலமாகவே "முழுமையான நீர் பற்றாக்குறை" நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குறைந்த மழைப்பொழிவு, "தலைநகரின் நூற்றாண்டு கால நீர் உள்கட்டமைப்பில் ஏற்படும் நீர் கசிவுகள்" மற்றும் கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போர் ஆகிய அனைத்தும் பற்றாக்குறைக்குக் காரணமாக அமைந்தன என்று எரிசக்தி அமைச்சர் அப்பாஸ் அலியாபாடி தெரிவித்தார். நாட்டின் தேசிய காலநிலை மற்றும் வறட்சி நெருக்கடி மேலாண்மை மையத்தின் அஹ்மத் வசிஃபெஹ் கருத்துப்படி, நாடு முழுவதும் உள்ள அணைகள் ஏற்கெனவே "கவலைக்குரிய நிலையில்" உள்ளன. முக்கிய நிலத்தடி நீர் அடுக்குகள் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்டுள்ளன, சாயந்தே ரூட் போன்ற ஆறுகளில் நீர் வரத்து குறைந்துவிட்டன மற்றும் உருமியா ஏரி பெரிதும் சுருங்கிவிட்டது. பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான தற்போதைய போருக்கு முன்பே இரான் கடுமையான வறட்சியை எதிர்கொண்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர் ஃப்ரெட் பியர்ஸ் கூற்றுப்படி, பல தசாப்த கால அணை கட்டுதல், நீர்-தேவைப்படும் விவசாயம், தவறான மேலாண்மை ஆகியவை நிலைமையை மோசமாக்கியுள்ளன. சில பகுதிகளில், நிலத்தடி நீர் பிரித்தெடுத்தல் கடுமையான நிலச்சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் நகரம் ஒரு நாள் நீர் பங்கீடு அல்லது பகுதியளவு வெளியேற்றத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது ஒரு சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்; இது இரானின் உள் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீள்திறனைப் பாதிக்கிறது - இவை அனைத்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான வாரக்கணக்கான தீவிர மோதலால் மோசமடைந்துள்ளன. போருக்கு முன்னரே, நீர் பற்றாக்குறை இரானில் உள்நாட்டு அமைதியின்மைக்குக் காரணமாக இருந்தது; குசெஸ்தான், இஸ்ஃபஹான் மற்றும் பிற இடங்களில் நடந்த போராட்டங்கள், விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் சூழல் குறித்த பரந்த குறைகளுடன் இணைந்தன. படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் இரானின் நீர் சவால்கள் பிராந்திய பதற்றங்களுடனும் குறுக்கிடுகின்றன. ஹெல்மண்ட் நதி தொடர்பாக ஆப்கானிஸ்தானுடனும், டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளில் கட்டப்பட்டுள்ள அணைகள் தொடர்பாக துருக்கியுடனும் மற்றும் பகிரப்பட்ட நீர்வழிகள் தொடர்பாக இராக்குடனும் அது நீண்டகாலப் பிணக்குகளைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கின் நீர் அமைப்புகள் எவ்வளவு பலவீனமடைந்துள்ளன என்பதையும், அவை மோதலின் திசையையும் காலத்தையும் எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும் இந்தப் போர் எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு போன்ற காரணிகளுடன் சுற்றுச்சூழல் அழுத்தங்களும் இப்போது மோதல் தீவிரமடைவதற்கான அபாயங்களை அதிகரிக்கின்றன. இப்பகுதியில் எதிர்கால மோதல்கள் குழாய்கள் மற்றும் டேங்கர்களால் மட்டுமல்லாமல், ஆறுகள், நிலத்தடி நீர் அடுக்குகள் மற்றும் கடல்நீரை நன்னீராக்கும் ஆலைகளாலும் தீர்மானிக்கப்படலாம். இந்தப் போரிலும் அதற்கு அப்பாலும், நீர் உண்மையில் எண்ணெயைவிட முக்கியமானது என நிரூபிக்கப்படலாம். கூடுதல் தகவல்கள் - பிபிசி பாரசீக சேவை - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8w52nd51qo

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

4 days 21 hours ago
நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்! நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை நாளையில் இருந்து மாற்றம் அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். https://athavannews.com/2026/1470573

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்

4 days 21 hours ago
2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி! 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு A/L தேர்வு முடிவுகள் நேற்று (31) இணையத்தில் வெளியிடப்பட்டன. பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான (www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk) ஆகியவற்றில் உள்நுழைந்த பிறகு, சரியான சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம். 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை தேர்வில் மொத்தம் 221,413 பாடசாலை பரீட்சார்த்திகளும், 60,397 தனியார் பரீட்சார்த்திகளும் பங்கேற்றனர். 146,405 பாடசாலை பரீட்சார்த்திகளும் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்றும், அதே நேரத்தில் 30,122 தனியார் பரீட்சார்த்திகளும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதமான, அதாவது 1,76,527 பரீட்சார்த்திகளில் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதற்கிடையில், பரீட்சையை எதிர்கொண்ட 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1470577

ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!

5 days ago
சுண்டக்காய் ஈரானோடு படுறபாடு போதாதா ? ஒருக்கா குட்டித் தான் பார்க்கிறது? பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைக் கறுப்பையே காணலையாம். தேடுறாங்கள்.
Checked
Mon, 04/06/2026 - 00:58
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed