உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி
தெம்பா பவுமாவும் ரிசர்வேசனும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க ஆடவர் அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்றெடுத்துள்ளது. அதிலும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக டெஸ்ட் சாம்பியன் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது. வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றிக் கோப்பையை தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி கேப்டன் டெம்பா பவுமா பெறும் போது உள்ளபடி நம்மில் பலரும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருப்போம். காரணம் தென் ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் - கேப்டனாக இருந்து கோப்பையை வெல்வார் என்று சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு அங்கு மாத்திரம் இல்லை உலகில் யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். தென் ஆப்ரிக்காவின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்து அது அடைந்து வந்துள்ள மாற்றங்களை உள்ளடக்கி நோக்கினால் இன்று நிச்சயம் அதன் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் வடிக்கப்பட வேண்டிய நாள் என்றால் அது மிகையாகாது. எப்படி பன்னெடுங்காலம் கிரிக்கெட் பேட்டையே தொடக்கூடாது என்று தீண்டாமை செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட இனத்தில் இருந்து தலைவன் தோன்றி இன்று கோப்பையை கைப்பற்றினான் என்பது திரைப்படமாக எடுக்க வேண்டிய கதை. ஆம்... தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் ரிசர்வேசன் எனும் கோட்டா முறை உண்டு. ஒரு சீசன் கிரிக்கெட் விளையாட அறிவிக்கப்படும் 15 பேர் கொண்ட அணியில் ஐந்து பேர் - வெள்ளையரும் மீதமுள்ள ஆறு பேர் - PEOPLE OF COLOUR( கலப்பு இனத்தவரும்) , BLACKS (கருப்பு நிறத்தவர்களுக்கும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பேரில் இரு இடங்கள் கருப்பு நிறத்தவர்களுக்கு என்று பிரத்யேகமான இடங்களாகும். பொதுவாக மேற்கூறிய செய்தியைப் படிக்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது??? என்னங்க இது விளையாட்டுல எதுக்குங்க இது மாதிரி கோட்டா/ரிசர்வேசன் சிஸ்டம்... நல்லா திறமையா விளையாடுறவங்கள வச்சு டீம் உருவாக்கி ஜெயிக்கிறது தானங்க முக்கியம்... இப்படித்தானே தோன்றுகிறது நண்பர்களே... தங்களுக்கு தோன்றும் எண்ணம் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கிருந்த எண்ணமும்... அப்போது நான் மூன்று பதங்கள் குறித்து அறிந்திராதப் பேதையாக இருந்தேன் முதல் பதம் சமூக நீதி (SOCIAL EQUITY) இரண்டாவது பதம் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ( INCLUSIVENESS) மூன்றாவது பதம் முறையான/சமமான/ சரியான பிரதிநிதித்துவம் ( EQUAL REPRESENTATION) தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியில் ஏன் கோட்டா சிஸ்டம் இருக்கிறது? என்பதை அறிய அந்த நாட்டில் நிலவிய கருப்பர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் எதிரான அடக்குமுறை ஒடுக்குமுறை நிறைந்த அபார்தைடு ( APARTHEID) முறை குறித்து அறிய வேண்டும். கல்வி பொருளாதாரம் கலை / இலக்கியம்/ விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் கருப்பு நிறத்தவர்கள் வெள்ளையர்களால் அடக்குமுறைக்கு உள்ளாகி நெடுங்காலம் அவதிக்குள்ளாகினர். இதனால் அவர்களுக்கு முறையான வாய்ப்பு வழங்கப்படவில்லை.. பயிற்சி கிடைக்கவில்லை.. பொருளாதார பின்புலம் இல்லை. கல்வி இல்லை. இதையும் மீறியும் அதீத திறமை கொண்டு வெளியே வந்தாலும் அணியில் இடம்பெற்றாலும் அங்கும் தீண்டாமை / இன வெறுப்பு / வாய்ப்பு வழங்காமை / இருட்டடிப்பு ஆகியவற்றை சந்தித்தனர் இதற்கு மகாயா நிட்டினியின் பேட்டியே சாட்சியங்கள். மேற்கூறிய நிறவெறிக் கொள்கைகளை தென் ஆப்ரிக்க வெள்ளையரால் நிர்வகிக்கப்பட்ட அரசாங்கம் தனது அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக நிறைவேற்றி அபார்த்தைடு என்று கடைபிடித்து வந்தது. இதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்தது. ஐநாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா 1974 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டது. மீண்டும் தென் ஆப்ரிக்காவில் திரு நெல்சன் மண்டேலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக ஜனநாயகம் மலர்ந்ததும் 1994 ஆம் ஆண்டு மீண்டும் ஐநாவில் இணைக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றை அறிந்தால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் ஏன் ரிசர்வேசன் இருக்கிறது என்பதும் புலப்படும். அதன் நியாயங்களும் விளங்கும். அந்த அணியின் முன்னாள் கோச் ராபர்ட் அவர்களிடம் இந்த நிற பேதம் குறித்துப் பேட்டி காண்கையில் "வெற்றி தான் முக்கியம்... பல்வேறு இனங்களில் திறமையான வீரர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது" என்றார். என்னைப் பொருத்தவரை மனிதன் ஒரு சமூக விலங்கு சமூகத்துடன் இணைந்து பழகி அதன் மூலம் இன்பத்தைத் துய்க்கப் பழகி அதன் மூலம் நாகரீகம் அடைந்தவன். இதில் சா*தி மத இன மொழி நிற ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதையும் தீண்டாமை எண்ணங்கள் இருப்பதையும் நாம் ஏற்கிறோம். மேற்கூறிய விசயங்களால் வாய்ப்புகள் கிடைப்பதிலும் வாய்ப்புகளை ஒடுக்குவதிலும் பன்னெடுங்காலம் கழிந்திருப்பதையும் அறிய முடிகிறது. சமூகத்தில் நிலவும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை இயன்ற அளவு செப்பனிட்டு அவரவர்க்குரிய வாய்ப்புகளையும் பிரிதிநிதித்துவத்தையும் வழங்கும் முயற்சியே "ரிசர்வேசன்" இங்கு நம் ஒவ்வொருவரின் மனங்களிலும் மிருகங்களின் எச்சங்கள் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை வெளியில் மறைத்தாலும் உள்ளே இருப்பது அவ்வப்போது வெளி வரத்தான் செய்யும். இது இயற்கை. உலகின் பெரும் புரட்சிகளும் போர்களும் அடுத்தவனுடைய வாய்ப்பையும் பிரிதிநிதித்துவத்தையும் நீண்ட காலம் தொடர்ந்து பறித்து வந்ததாலேயே/பறித்து வருவதாலேயே நடந்திருக்கிறது. எனவே என்னைப் பொருத்தவரை சமூகமாக அதில் பங்கு வகிக்கும் அனைத்து மக்களின் பிரிதிநிதிகள் அனைத்து துறைகளிலும் இருப்பதே முழுமையான வெற்றி.. மாறாக வெறுமனே வெற்றி பெறுவதில் எனக்கு தற்போது அதிக நாட்டம் இருப்பதில்லை. தென் ஆப்ரிக்காவில் பெரும்பான்மை கருப்பு நிறத்தவரும் கலப்பு நிறத்தவரும் என்றால் அவர்களின் பிரதிநிதிகள் அந்த அணியில் இருந்தால் தான் அது என்னைப் பொருத்தவரை சரியான அணி. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ரிசர்வேசன் முறை தென் ஆப்ரிக்காவில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த பல்லாண்டுகளாக தென் ஆப்ரிக்காவால் ஒரு உலகக்கோப்பை கூட பெற இயலவில்லை. அதற்குக் காரணம் கருப்பு நிற வீரர்கள் அல்லர் அவர்களை வெளிக்கொணராத அல்லது அவர்களிடம் தீண்டாமை செய்து சகிப்புத்தன்மையின்றி பேதம் பார்க்கும் வெள்ளையர்களின் குணமே ஆகும். இன்று டெம்பா பவுமா எனும் கருப்பினத்தவர் கேப்டனாக இருந்து இறுதி வரை போராடி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து டெஸ்ட் கோப்பையை வென்றுள்ளார் என்றால் நிச்சயம் ரிசர்வேசனால் குவாலிட்டி எனும் தரம் குறையாது என்பதற்கு இதைவிட வேறு சான்றில்லை. இதை உணர்ந்தால் நமக்கு நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் ரிசர்வேசன் முறை குறித்தும் அறிவு தெளிவு ஞானம் கிடைக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அவரவர்க்குரிய வாய்ப்பும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டு அனைவரின் உழைப்பும் சேர்ந்து கிடைப்பதே மெய்யான வெற்றி மெய்யான வெற்றியே தூய்மையான மகிழ்ச்சி அதுவே பன்முகம் கொண்ட நாட்டின் வளர்ச்சி தென் ஆப்ரிக்காவின் பன்முகத்தன்மையினாலும் பிரிதிநிதித்துவ நடைமுறைகளாலும் கிடைத்த இந்த கோப்பை உண்மையில் மிகவும் வலிமையானது. இந்த வெற்றியில் நாமும் பங்கு பெறுவோம்... தனது பேட்டியில் தனது பாட்டி டெம்பா என்று பெயர் வைத்ததாக கூறினார் அந்த அணி கேப்டன். டெம்பா என்றால் ஹோப்/ நம்பிக்கை என்று ஆப்ரிக்க மொழியில் அர்த்தமாம். ஏலேய் மக்கா எங்கூர்ல கூட நம்பிக்கை இல்லாம இருக்கவன் கிட்ட நாங்க இப்டி தான் சொல்லுவோம் "டேய் கவலைப்படாத டா. தெம்பா இரு. நாங்க இருக்கோம்.. " இங்க தெம்பா என்றால் வலிமை / strength மற்றும் நம்பிக்கை இரண்டையும் குறிக்கிறது . ஆப்பிரிக்க மொழியில் உள்ள பல கூறுகளும் தமிழ் மொழிக் கூறுகளும் ஒன்றாக இருப்பது விசித்திரமில்லை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார் அதையே நானும் வழிமொழிகிறேன்.. நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா E-mail