புதிய பதிவுகள்2

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

1 day 21 hours ago
பலருக்கு பிரஜைகள் குழு என்றால் என்ன என்று இப்போது விளங்குமா என தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் பிரஜைகள் குழு 1986/7 ம் ஆண்டளவில் விடுதலை புலிகள் அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக உளவாளிகள் நடமாட்டம், கிராமங்களிற்கு வரும் வெளியார் பற்றிய தகவல் இவர்களினால் பெறப்பட்டு ஒரு விழிப்புணர்வு குழுவாக செயற்பட்டது. காலப்போக்கில் பிரஜைகள் குழுவின் செயற்பாடுகள் விஸ்தாரணம் பெற்றது என நினைக்கின்றேன். எனது தகவல் சிலவேளைகளில் தவறாகவும் அமையலாம் ஏன் என்றால் நான் நீண்ட காலத்தின் பின் பழைய நினைவுகளை கிரகிக்கின்றேன். பிரஜைகள் குழு பற்றிய விரிவான விளக்கம் தெரிந்தவர்கள்/ஏக காலத்தில் அப்போது ஊரில் வாழ்ந்தவர்கள் உங்கள் கருத்தை பகருங்கள். இந்திய அமைதிப்படை காலத்தில் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவது வழமையாக நடைபெற்றது. பிரஜைகள் குழு தலைவர்களும் முக்கியமாக குறி வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். வலிகாமம் பிரதேசத்து பிரஜைகள் குழு தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நினைவு சாதுவாக உள்ளது. அவர் பெயர் நினைவில்லை. பிரஜைகள் குழுவில் அங்கத்தவம் பெற்ற சிலர் பின்னர் இலங்கை தேர்தல்களிலும் நின்று வென்றார்கள் எனும் நினைவும் வருகின்றது. விடுதலை புலிகள் அமைப்பின் ஆதவாளர்கள் அல்லாத ஒருவர் பிரஜைகள் குழு உறுப்பினராகவோ தலைவராகவோ விளங்க முடியாது என நினைக்கின்றேன். இவை எனது பழைய நினைவு மீட்டல்கள் மட்டுமே. எனது தகவல் தவறாகவும் அமையக்கூடும்.

19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

2 days 3 hours ago
2004 இல் அகிலன் பீடில் என்ற ஈழத்து வம்சாவளி வீரர் ஒருவர் அவுஸ்திரேலியா 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடினார். பிற்காலத்தில் காயம் காரணமாக சில காலங்கள் அவரால் விளையாட முடியவில்லை.( கிட்னி ஒன்றை இழந்தார்).பிறகு அவுஸ்திரேலியா பிக்பாஸ் தொடரிலும் விளையாடினார். அவுஸ்திரேலியா அணியில் தெரிவு செய்யப்பட்ட 15 பேரில் 2 இந்தியா , ஒரு சீனா வம்சாவளியை சேர்ந்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

2 days 3 hours ago
இலங்கை அணியில் விக்கினேஸ்வரன் ஆகாஷ் என்ற ஹார்ட்லி கல்லூரி மாணவர் 4 ஓவருக்கு 15 ஓட்டங்கள் குடுத்து ஒரு விக்கேட் எடுத்தார். இந்த ஆசியக்கிண்ணப் போட்டியில் இலங்கையணி சார்பாக தெரிவு செய்யப்பட்ட 15 வீரர்களில் ஒருவர் பரியோவன் கல்லூரி மாணவர் குகதாஸ் மாதுளன்.

இரண்டு அமெரிக்க படையினரும் ஒரு மொழி பெயர்பாளரும் சிரியாவில் பலி.

2 days 3 hours ago
படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்.. கடும் சீற்றத்தில் ட்ரம்ப் நிர்வாகம். சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலில் மேலும் மூன்று படைவீரர்கள் காயமடைந்த நிலையில், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் வரை 24 மணி நேரம் மறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரக்கமின்றி கொல்வோம்.. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், "நீங்கள் அமெரிக்கர்களை குறிவைத்தால் - உலகில் எங்கும் அமெரிக்கா உங்களை வேட்டையாடும். உங்களைக் கண்டுபிடித்து, இரக்கமின்றி கொல்லும் என்பதை அறிந்து உங்கள் சுருக்கமான, பதட்டமான வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை நீங்கள் கழிப்பீர்கள்." என கடுமையாக எச்சரித்துள்ளார். இது சர்வதேச களத்தில் ஒரு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tamilwinபடுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்.. கடும் சீற்றத்தில்...சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிப...

இரண்டு அமெரிக்க படையினரும் ஒரு மொழி பெயர்பாளரும் சிரியாவில் பலி.

2 days 4 hours ago
சனிக்கிழமையன்று சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு சிவிலியன் மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க மத்திய கட்டளை மற்றும் பாதுகாப்புத் துறை சனிக்கிழமை அறிக்கைகளில் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்தனர். அந்த வீரர்களின் "பணி, அப்பகுதியில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் எதிர்ப்பு/பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக இருந்தது," என்று பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் வரை அவர்களின் பெயர்கள் வெளியிடப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர் கூட்டாளிப் படைகளால் கொல்லப்பட்டார் என்று பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸ்ஸெத் கூறினார். "நீங்கள் அமெரிக்கர்களை — உலகின் எந்த இடத்திலும் — குறிவைத்தால், அமெரிக்கா உங்களைத் தேடி, கண்டுபிடித்து, ஈவிரக்கமின்றி கொல்லும் என்பதை அறிந்தே உங்கள் குறுகிய, பதட்டமான வாழ்நாளின் மீதமுள்ள காலத்தை நீங்கள் கழிப்பீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்," என்று ஹெக்ஸ்ஸெத் எக்ஸ் தளத்தில் எழுதினார். https://www.cnn.com/2025/12/13/politics/two-us-army-soldiers-killed-in-syria

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

2 days 6 hours ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலன்னறுவை Lakbima Rice Mills (Pvt) Ltd நிதி நன்கொடை 13 Dec, 2025 | 03:25 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலன்னறுவை Lakbima Rice Mills (Pvt) Ltd இனால் 100 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை அரலிய வர்த்தகக் குழுமத்தின் தலைவர் டட்லி சிறிசேன, இன்று சனிக்கிழமை (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினார். https://www.virakesari.lk/article/233279 ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை 13 Dec, 2025 | 05:32 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஜனந்தி சந்தனிகா, தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கினார். அதற்கான காசோலையை அவர், இன்று சனிக்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். https://www.virakesari.lk/article/233287

உடுமலை சங்கர் கொலை: நீதிப் போராட்டத்தை திமுக அலட்சியப்படுத்துவதாக கௌசல்யா குற்றச்சாட்டு

2 days 6 hours ago
உடுமலை சங்கர் கொலை வழக்கை அரசு தாமதப்படுத்துகிறதா? கௌசல்யா குற்றச்சாட்டும் திமுக பதிலும் பட மூலாதாரம்,Facebook கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 13 டிசம்பர் 2025, 10:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நடக்கும் மேல் முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, தங்களுக்கு ஆதரவாக இருந்த ஸ்டாலின் முதல்வரான பிறகு இந்த வழக்கை நடத்துவதில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் கெளசல்யா. சட்டமன்றத் தேர்தல் வருவதால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்குகளைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்கை நடத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகக் கூறுகிறார் எவிடென்ஸ் அமைப்பின் கதிர். சங்கரின் குடும்பத்தினரும் இதே குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை தி.மு.க தரப்பு மறுத்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்புத் துறை தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கை தாமதப்படுத்தும் எந்த உள்நோக்கமும் தமிழக அரசுக்கு இல்லை என்றார். வழக்கின் பின்னணி பழனியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கெளசல்யா, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். உடன் படித்த பட்டியல் பிரிவைச் சேர்ந்த சங்கரை காதலித்த கெளசல்யா தனது வீட்டில் எழுந்த எதிர்ப்பை மீறி சங்கரை கரம் பிடித்தார். திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்த நிலையில், 2016 மார்ச் 16-ஆம் தேதி உடுமலையில் கடை வீதிக்குச் சென்றிருந்த போது, பேருந்து நிலையம் அருகில் இருவரையும் ஒரு கும்பல் தாக்கியது. இதில் காயமடைந்த சங்கர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். கெளசல்யா, சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். பட மூலாதாரம்,KOUSALWAY/ FACEBOOK உடுமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகள், வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்தன. கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தந்தை சின்னச்சாமி, தாய்மாமா பாண்டித்துரை ஆகியோர் உட்பட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவானது. வழக்கில் முதல் குற்றவாளியாக சின்னச்சாமியை காவல்துறை சேர்த்திருந்தது. திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டனர். கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றொரு மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடும் தண்டனை பெற்றவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். தமிழ்நாடு அரசு தரப்பிலும் 3 பேர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான தீர்ப்பு, 2020 ஜூன் 22 ல் வழங்கப்பட்டது. அதில் முதல் குற்றவாளி சின்னச்சாமி மீதான குற்றங்கள் சரிவரி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்திருந்த மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலையும் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்டீபன் தன்ராஜ் மற்றும் மணிகண்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனைகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம், கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேரை கீழமை நீதிமன்றம் விடுவித்தது செல்லும் என்றும் உறுதி செய்தது. அதிமுக ஆட்சியின் போதே இந்த வழக்கின் 2 தீர்ப்புகளும் வெளிவந்தன. அதன்பின் 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதுவும் அதிமுக ஆட்சியிலேயே நடந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தது. பட மூலாதாரம்,HANDOUT தமிழக அரசு மீது கெளசல்யா குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த வழக்கில் இதுவரை எந்தவொரு உத்தரவும் வழங்கப்படவில்லை. இந்த வழக்கை தமிழக அரசு திட்டமிட்டே தாமதப்படுத்துவதாக கெளசல்யா குற்றம்சாட்டியுள்ளார். வழக்கின் ஆவணங்களை மொழி பெயர்ப்பதற்கு மேலும் 6 மாதங்கள் வேண்டுமென்று தமிழக அரசு கோரியதன் பேரில், வழக்கு விசாரணையை 2026 நவம்பர் வரை உச்சநீதிமன்றம் தள்ளிப் போட்டிருப்பதாக பிபிசி தமிழிடம் கெளசல்யா தெரிவித்தார். வழக்கை விரைவுபடுத்த வேண்டிய தமிழக அரசே, பெரும் தடைக்கல்லாக மாறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ''ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது திமுக ஆட்சிக்கு வந்ததும் சங்கரின் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தருவோம் என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டாகியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.'' என்று கெளசல்யா குற்றம்சாட்டினார். குறிப்பிட்ட சமுதாய வாக்குகளுக்காக வழக்கு தாமதப்படுத்தப்படுகிறதா? உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தபின்பு, தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட போதே கெளசல்யா சார்பிலும் தனியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. சங்கர் குடும்பத்தின் சார்பில் அவருடைய தம்பி விக்னேஷ் பெயரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதவியுடன் தனியாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு நடப்பதால் அரசுதான் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக நடத்த வேண்டுமென்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாகி கதிர். பிபிசி தமிழிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், ''வழக்கமாக குற்றவாளிகள்தான் வழக்கை தள்ளிப்போட கால அவகாசம் கேட்பார்கள். ஆனால் ஆவணங்களை மொழி பெயர்க்க 6 மாத அவகாசம் கேட்டது மிகவும் அநீதியானது. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்குவங்கியைக் குறிவைத்தே, இந்த வழக்கை தள்ளிப் போடுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்கிறது'' என்று குற்றம்சாட்டினார். படக்குறிப்பு,எவிடென்ஸ் கதிர் தமிழக அரசு மீது சங்கர் தம்பி குற்றச்சாட்டு திமுக கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவே கெளசல்யா மற்றும் சங்கர் குடும்பத்தினர் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் பேசிய சங்கரின் தம்பி விக்னேஷ், ''எங்களைப் பொறுத்தவரை, விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் எப்போதுமே எங்களுக்கு ஆதரவாகவுள்ளனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து இந்த வழக்கை விரைவாக நடத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.'' என்றார். கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமியிடம் பிபிசி தமிழ் பேச முயன்ற போது, அவர் தரப்பில் யாரும் பேசுவதற்கு முன்வரவில்லை. பட மூலாதாரம்,NATHAN G கெளசல்யா குற்றச்சாட்டுக்கு திமுக பதில் திமுக தரப்பில் பிபிசி தமிழிடம் பேசிய அதன் செய்தித் தொடர்புத் துறை தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன், இந்த வழக்கை தாமதப்படுத்தும் உள்நோக்கம் எதுவும் திமுக அரசுக்கு இல்லை என்றார். இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. குற்றவாளிகளுக்கு எதிராகத்தான் தமிழக அரசு தரப்பில் அழுத்தமாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் வழக்கை விசாரணைக்கு எடுப்பதும், தள்ளி வைப்பதும் நீதிபதிகளின் முடிவு. அதில் அரசால் எதுவும் செய்யமுடியாது. வழக்கின் தன்மையைப் பொறுத்தே, அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.'' என்றார். தமிழக அரசு, இந்த வழக்கை தாமதப்படுத்துவதற்காகவே மொழி பெயர்ப்புக்கு காலஅவகாசம் கேட்டதாக கெளசல்யா முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டதற்கு, ''சட்டப்பூர்வ நடைமுறைகள் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. இதுபோன்ற வழக்குகள் பெரும்பாலும் உச்சநீதிமன்றத்தில் மிகவும் தாமதமாகவே எடுக்கப்படுகின்றன. இதில் வேண்டுமென்றே எந்த தாமதத்தையும் தமிழக அரசு செய்யவில்லை. குற்றவாளிகள் பலரும் சிறையில் இருப்பதாலேயே வழக்கை விசாரணைக்கு எடுக்க தாமதமாகியிருக்கலாம். ஆனால் நீதிமன்ற விவகாரங்களில் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.'' என்றார். சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்குகளை பெறுவதற்காகவே இந்த வழக்கை தமிழக அரசு தாமதப்படுத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, 'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை' என்று டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்தார். இதுகுறித்து கருத்து கேட்பதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனை தொடர்பு கொண்டபோது, அவர் உடல்நலக்குறைவுடன் இருப்பதாக அவரது உதவியாளர் தெரிவித்தார். பட மூலாதாரம்,TKS Elangovan / X படக்குறிப்பு,டிகேஎஸ் இளங்கோவன் கீழமை நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கூறுவது என்ன? இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரநாராயணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், வழக்கை தாமதப்படுத்துவதில் அரசுக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை என்றார். ''இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் ஓராண்டிற்குள் முக்கிய குற்றவாளிகள் 6 பேருக்கும் மரண தண்டனை பெற்றுத்தந்தோம். ஆனால் உயர் நீதிமன்றத்தில் சிலர் விடுதலையாகிவிட்டனர். உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, அங்கே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இத்தகைய வழக்குகள் வரிசைப்படிதான் எடுக்கப்படும். வழக்கு ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டாலும், அரசு நினைத்தால் வழக்கை முன் கூட்டியே எடுத்துக்கொள்ளுமாறு விண்ணப்பிக்கலாம் அல்லது குற்றவாளிகள் தரப்பில் இதே கோரிக்கையை வைக்கலாம்.'' என்றார் வழக்கறிஞர் சங்கரநாராயணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg11dgzdryo

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

2 days 7 hours ago
19இன் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்: சமீர் மின்ஹாஸ், அஹ்மத் ஹுசெய்ன் அபார சதங்கள், மலேசியாவை பந்தாடியது பாகிஸ்தான் 12 Dec, 2025 | 06:02 PM (நெவில் அன்தனி) துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஏ குழு போட்டியில் இணைப்பாட்டத்துக்கான ஆசிய இளையோர் சாதனையை நிலைநாட்டிய பாகிஸ்தான், 297 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 343 ஓட்டங்களைக் குவித்தது. முதல் பத்து ஓவர்களுக்குள் 2 விக்கெட்களை இழந்ததால் பாகிஸ்தான் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சமீர் மின்ஹாஸ், அஹ்மத் ஹுசெய்ன் ஆகிய இருவரும் சதங்கள் குவித்ததுடன் 293 ஓட்டங்களைப் பகிர்ந்து 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போடடியில் சகல விக்கெட்டுக்களுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டினர். சமிர் மின்ஹாஸ் 148 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட 177 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய அஹ்மத் ஹுசெய்ன் 114 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 132 ஓட்டங்களைப் பெற்றார். மிகவும் கடுமையான 344 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 43 ஓட்டங்களுக்கு சுருண்டது. மலேசிய இன்னிங்ஸில் ஒருவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை அணித் தலைவர் டியாஸ் பாட்ரோ, முஹம்மத் அக்ரம் ஆகிய இருவர் பெற்ற தலா 9 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது. பந்துவீச்சில் அலி ராஸா 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் சையாம் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தானியல் அலி கான் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சமீர் மின்ஹாஸ் https://www.virakesari.lk/article/233205

அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு

2 days 7 hours ago
அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு Dec 13, 2025 - 09:44 PM அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்காக இதுவரையில் மொத்தமாக 13 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். நிவாரண வேலைத்திட்டத்திற்கு உதவியாகக் கிடைத்த நிதியுதவி மற்றும் திறைசேரியிலிருந்து வழங்கப்பட்ட நிதி உள்ளிட்டதாகவே இந்த மொத்தத் தொகை நிவாரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இதனைத் தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும், வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் தேவையான உதவிகள், உபகரணங்கள் மற்றும் பண நன்கொடைகள் பலரிடம் இருந்தும் கிடைப்பதாகக் குறிப்பிட்ட செயலாளர், இந்த ஒத்துழைப்பை வழங்கும் அனைவருக்கும் தமது நன்றியையும் தெரிவித்தார். இந்த நிவாரண பொறிமுறை சிறப்பாகச் செயற்படுவதாகவும், அதன் காரணமாக பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் நிவாரணங்களை வெற்றிகரமாக வழங்க முடிந்துள்ளதாகவும் அவர் அங்கு வலியுறுத்தினார். அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான தொடர்பாடலைப் பேணுவதற்காக அமெரிக்காவின் ஸ்டார்லிங்க் நிறுவனம் 100 ஸ்டார்லிங்க் அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மேலும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmj4hxqon02pko29n8tr7bzlp

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

2 days 7 hours ago
வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி Dec 13, 2025 - 07:56 PM டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்நிலையில் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றிபெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக செத்மிக செனவிரட்ன தெரிவானார். இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை இளையோர் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmj4e2sqv02pio29nfkybudml

அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு யாழ் சிறைச்சாலையின் நிவாரண உதவி

2 days 7 hours ago
அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு யாழ் சிறையின் நிவாரண உதவி Dec 13, 2025 - 03:43 PM டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (13) கையளிக்கப்பட்டன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கி 180 பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அத்தியட்சகர் சீ.இந்திரகுமார், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த உதவிகளை கையளித்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmj45258202p8o29nr8beo4ne

அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாய்

2 days 7 hours ago
அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாய் Dec 13, 2025 - 07:05 PM 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக 1,809 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் ஊடாக 1,970 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களம் ஊடாக 192 பில்லியன் ரூபாவும் வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய வழிகளில் 62 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் தகவல்களின் படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 302 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் வாகன இறக்குமதி வரி வருமானம் 48 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்ததுடன், 2025 ஆம் ஆண்டில் 350 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் வரி வருமானத்திற்கு அதிகபட்ச பங்களிப்பு வற் (VAT) வரியின் ஊடாகக் கிடைத்துள்ளதுடன், அது 1,615 பில்லியன் ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக வருமான வரி மூலம் 1,167 பில்லியன் ரூபாவை 2025 ஜனவரி - ஒக்டோபர் காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmj4c9shv02pgo29nwy80r7y6

19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

2 days 7 hours ago
19இன் கீழ் உலகக் கிண்ணம்: இலங்கையை எதிர்த்தாடவுள்ள இலங்கை வம்சாவளி ஆஸி. Published By: Digital Desk 3 12 Dec, 2025 | 03:12 PM (நெவில் அன்தனி) நமீபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி வீரர்கள் இருவர் இலங்கையை எதிர்த்தாடவுள்ளனர். சிட்னி பெரும்பாகத்தில் அமைந்துள்ள பராமட்டா மாவட்ட கிரிக்கெட் கழகத்திற்காகவும் நியூ சௌத் வேல்ஸ் மாநில அணிக்காகவும் விளையாடிவரும் நிட்டேஷ் சமுவேல், நேடென் குறே ஆகிய இரண்டு வீரர்களே அவுஸ்திரேலிய இளையோர் அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி வீரர்களாவர். ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் ஒரே குழுவில் இடம்பெறுவதால் இந்த இரண்டு இலங்கை வம்சாவளி வீரர்களும் இலங்கையை எதிர்த்தாடுவார்கள் என பெரிதும் நம்பப்படுகிறது. பேர்த்தில் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் தேசிய சம்பின்ஷிப் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற நியூ சௌத் வேல்ஸ் மெட்ரே அணிக்காக விளையாடிய இவர்கள் இருவரும் மிகத் திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் பலனாக அவுஸ்திரேலிய இளையோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் தேசிய சுற்றுப் போட்டியில் நிட்டேஷ் சமுவேல் 129 ஓட்டங்கள் என்ற அதிகூடிய எண்ணிக்கையுடன் 91.00 என்ற அதிசயிக்கத்தக்க சராசரியைப் பதிவுசெய்து மொத்தமாக 364 ஓட்டங்களைப் பெற்று சுற்றுப் போட்டியின் நாயகன் விருதை வென்றெடுத்தார். இவரை விட வேறு எவரும் இந்த சுற்றுப் போட்டியில் 200 ஓட்டங்களை எட்டவில்லை. இதேவேளை பந்துவீச்சில் நிட்டேஷ் சமுவேலின் சக அணி வீரர் நேடென் குறே 17.82 என்ற சராசரியுடன் 11 விக்கெட்களைக் கைப்பற்றி இந்த சுற்றுப் போட்டியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் வரிசையில் 5ஆவது இடத்தைப் பெற்றார். அவரது அதிசிறந்த பந்துவீச்சு பெறுதி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களாகும். அவர்கள் இருவரும் சுற்றுப் போட்டியின் சிறப்பு அணியிலும் பெயரிடப்பட்டமை விசேட அம்சமாகும். ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி நமீபியாவின் தலைநகர் விண்ட்ஹோக்கில் அமைந்துள்ள விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் சிட்னி மாநகரை அண்மித்த பராமட்டா மாவட்டத்தில் தமிழ், சிங்களம் பேசக்கூடிய இலங்கையர்கள் வாழ்ந்துவருகின்றனர். https://www.virakesari.lk/article/233182

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து

2 days 7 hours ago
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து 12 Dec, 2025 | 02:05 PM (நெவில் அன்தனி) வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (12) நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை 9 விக்கெட்களால் மிக இலகுவாக நியூஸிலாந்து வெற்றிகொண்டது. 2025- 27 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். இந்த வருடம் தனது 31ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய பின்னர் நியூஸிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜேக்கப் டவி, இந்தத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து மேற்கிந்தியத் தீவுகளை இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களுக்கு சுருட்ட உதவினார். முதலாவது இன்னிங்ஸிலும் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இருக்கவில்லை. கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் முதலாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்து அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பிரகாசிக்கத் தவறி தோல்வியைத் தழுவியது. கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ப்ளயா டிக்னர், மைக்கல் ரே ஆகிய இருவரும் திறமையாகப் பந்துவீசி மேற்கிந்தியத் தீவுகளைக் கட்டுப்படுத்தினர். களத்தடுப்பின்போது உபாதைக்குள்ளான ப்ளயா டிக்னர் அதன் பின்னர் இந்தப் போட்டியில் பங்குபற்றவில்லை. ஷாய் ஹோப், ஜோன் கெம்பல், ப்றண்டன் கிங் ஆகிய மூவரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்று தனது முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. டெவன் கொன்வே, மிச்செல் ஹே ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது இன்னங்ஸில் ஜெக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சில் சின்னாபின்னமாகி 128 ஓட்டங்களுக்கு சுருண்டனது. மேற்கிந்தியத் தீவுகளின், இண்டாவது இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். தொடர்ந்து 56 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து ஒரு விக்கெட்டை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எண்ணிக்கை சுருக்கம் மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 205 (ஷாய் ஹோப் 47, ஜோன் கெம்பல் 44, ப்றண்டன் கிங் 33, ரொஸ்டன் சேஸ் 29, ப்ளயா டிக்னர் 32 - 4 விக்., மைக்கல் ரே 66 - 3 விக்.) நியூஸிலாந்து 1ஆவது இன்: 278 - 9 விக்;. டிக்ளயார்ட் (மிச்செல் ஹே 61, டெவன் கொன்வே 60, கேன் வில்லியம்சன் 37, அண்டர்சன் பிலிப் 70 - 3 விக்., கெமர் ரோச் 43 - 3 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 128 (கவெம் ஹொஜ் 35, ஜஸ்டின் க்றீவ்ஸ் 25, ப்றெண்டன் கிங் 22, ஜேக்கப் டவி 38 - 5 விக்., மைக்கல் ரே 45 - 3 விக்.) நியூஸிலாந்து - வெற்றி இலக்கு 56 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 57 - 1 விக். (டெவன் கொன்வே 26 ஆ.இ., கேன் வில்லியம்சன் 16 ஆ.இ.) ஆட்டநாயகன்: ஜேக்கப் டபி. https://www.virakesari.lk/article/233177

லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!

2 days 7 hours ago
இப்ப ஏன் சிங்களவன்களை ஏச வேண்டும்? எங்கோ ஒருவன் செய்த தவறிற்காக‌. ஊத்தைகள் எல்லா சமூகத்திலும் இருக்கின்றார்கள் தானே. பின்வரும் செய்தியை பாருங்கள் மூன்று வயதுப் பச்சிளம் குழந்தையின் காயத்தில் மிளகாய்த் தூள் பூசிக் கடும் சித்திரவதை: யாழ். பொன்னாலையில் கொடூரம்! மூன்று வயதுப் பச்சிளம் குழந்தையின் அடிகாயத்தில் மிளகாய்த் தூள் பூசிக் கடும் சித்திரவதை செய்த சம்பவமொன்று யாழ்.பொன்னாலைப் பகுதியில் பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தையின் தந்தை இரண்டு திருமணம் முடித்துள்ளார். அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்த மனைவியின் பிள்ளைக்கே இவ்வாறு சித்திரவதை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தையும், தாயும் இணைந்து அந்த குழந்தைக்குத் தொடர்ச்சியாகக் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வந்தனர். இதனால், குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்கள் மீது மிளகாய்த் தூள் இட்டதாகவும், பச்சை மிளகாயை உண்ணக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் சங்கானைப் பிரதேச செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றனர். கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகச் சிறுவர்கள் தொடர்பான உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டுக்குச் சென்ற நிலையில் கணவனும், மனைவியும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://vampan.net/76166/

புதுடெல்லியில் காற்று மாசு தீவிரம்

2 days 7 hours ago
புதுடெல்லியில் காற்று மாசு தீவிரம் 13 Dec, 2025 | 10:15 AM இந்தியத் தலைநகர் புதுடெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்றின் தரம் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுடெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 400–450 வரை பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனரக வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலை புகை, வீதிகளில் காணப்படும் தூசி, கட்டுமான பணிகளின் போது வெளியேறும் தூசி , நிலக்கரி எரித்தல் மற்றும் எரிபொருள்கள் போன்றிலிருந்து வெளியாகும் வாயுக்களால் புது டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனா, குறிப்பாக பெய்ஜிங், கடந்த இருபது ஆண்டுகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பல நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளன. இதன்படி நிலக்கரி எரிக்கும் கொதிகலன்களை மூடுதல், பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்தல், புதிய ஆற்றல் வாகனங்களை அறிமுகப்படுத்தல், தொழிற்சாலைகளில் தொழில்நுட்ப சீர்திருத்தம், புதுமை மற்றும் பசுமை ஆற்றலை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. https://www.virakesari.lk/article/233244

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 2313 பேர் பாதிப்பு!

2 days 8 hours ago
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 2313 பேர் பாதிப்பு! Published By: Digital Desk 1 13 Dec, 2025 | 11:23 AM கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை மற்றும் கடும்காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் கடுமையான காற்று காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 472 குடும்பங்களைச் சேர்ந்த 1577 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 2 குடும்பங்களைச் சேர்ந்த ஆறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 07 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 105 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 137 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 7 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவில் சூறாவளியால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/233253
Checked
Mon, 12/15/2025 - 22:48
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed