புதிய பதிவுகள்2

சென்னை - யாழ்ப்பாணம் இன்டிகோ விமானசேவை ஆரம்பம்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 02 SEP, 2024 | 05:27 PM சென்னை - யாழ்ப்பாணத்திற்கிடையில் புதிய விமான சேவையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை ஆரம்பமானது. இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 3.05 மணிக்கு சென்னையிலிருந்து 52 பயணிகளுடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இதன்போது இசை மற்றும் நடனத்துடன் பயணிகள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கி பயணத்தை குறித்த விமானம் ஆரம்பித்தது. பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன. பலாலியில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதால், கொழும்பிற்கு செல்லாமல் மிகவும் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்ள கூடியவாறு உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/192646

இஸ்ரேல்: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் திரண்டு மக்கள் போராட்டம் - அவர்கள் கோருவது என்ன?

3 months 2 weeks ago
காசாவில் 6 பணயக் கைதிகள் கொலை எதிரொலி - எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை கோரி இஸ்ரேலில் போராட்டம் 02 SEP, 2024 | 05:11 PM டெல் அவிவ்: காசாவில் ஆறு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொலை செய்தனர். சுமார், 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பணயக்கைதிகளில் 6 பேரை ஹமாஸ் அமைப்பினர் கொன்றனர். அவர்களின் உடல்களை இஸ்ரேலிய ராணுவம் மீட்டது. இதையடுத்து, இஸ்ரேலிய அரசுக்கு எதிராக அந்நாட்டின் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் நேற்றும், இன்றும் (ஞாயிறு, திங்கள் கிழமைகள்) பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் பணயக் கைதிகள் உயிரோடு வந்திருப்பார்கள் என்றும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்பு என்றும் கூறி லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜெருசலேமில், போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்து பிரதமரின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். டெல் அவிவின் பிரதான நெடுஞ்சாலைகளில், கொல்லப்பட்ட பிணைக்கைதிகளின் படங்களுடன் கொடிகளை ஏந்தியவாறு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலிய தொழிற் சங்கங்களின் அழைப்பை ஏற்று இன்று (செப்.2) அந்நாட்டில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரும், இஸ்ரேலிய அரசு விரைவாக ஹமாஸ் அமைப்புடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்றும் எஞ்சிய பணயக்கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். பணயக்கைதிகளின் குடும்பங்களுக்கான அமைப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கடுமையாக கண்டித்துள்ளது. “பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் கடந்த 11 மாதங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த நிலையில் தற்போது கொல்லப்பட்டுள்ளனர். அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம்” என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக 40,738 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு போதிய தங்குமிட வசதிகள் இல்லாததாலும், உணவு போதிய அளவில் கிடைக்காததாலும் அவர்கள் கடும் நெருக்கடியுடன் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அது தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/192662

பாகிஸ்தான் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் செய்திகள்

3 months 2 weeks ago
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தொடரிலும் வெற்றியை அண்மித்துள்ள பங்களாதேஷ் Published By: VISHNU 02 SEP, 2024 | 07:01 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தொடரிலும் வெற்றிபெறுவதற்கு பங்களாதேஷுக்கு மேலும் 143 தேவைப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் 10 விக்கெட்களால் வெற்றியீட்டியிருந்தது, இந்தப் போட்டியில் 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஸக்கிர் ஹசன் 31 ஓட்டங்களுடனும் ஷத்மான் இஸ்லாம் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் பெற்ற 274 ஓட்டங்களே ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். போட்டியின் ஆரம்ப நாள் ஆட்டம் கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமானபோது பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்டது. மெஹிதி ஹசன் மிராஸ் 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றி பாகிஸ்தானை சிரமத்தில் ஆழ்த்தினர். இருப்பினும் சய்ம் அயூப் (58), அணித் தலைவர் ஷான் மசூத் (57), சலமான் அகா (54) ஆகியோர் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 274 ஓட்டங்களைப் பெற்றது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மூன்றாம் நாள் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்தது. ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் 26 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது. ஆனால் லிட்டன் தாஸ் தனி ஒருவராக 138 ஓட்டங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினார். 42ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் லிட்டன் தாஸ் குவித்த நான்காவது டெஸ்ட் சதம் இதுவாகும். முதல் டெஸ்டில் போன்றே இந்த டெஸ்டிலும் சகல துறைகளிலும் பிரகாசித்த மெஹிதி ஹசன் மிராஸ் 78 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 165 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். குரம் ஷாஹ்ஸாத் 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். பாகிஸ்தான் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. மொஹம்மத் ரிஸ்வான் (43), சல்மான் அகா (47 ஆ.இ.) ஆகிய இருவரே 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் ஹசன் மஹ்மூத் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நஹித் ரானா 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெறும். https://www.virakesari.lk/article/192681

சுமந்திரன் கூட்டமைப்புக்கு தெரியாமல் எப்படி வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார்

3 months 2 weeks ago
சுமந்திரனை துரத்தினால் தமிழ் தேசியத்தை காக்க யாரை திட்டுவது? பிறகு தமிழ் தேசியவாதிகளுக்கு போர் அடிக்காதா? 😂

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
தனித் தமிழீழம் பிரிச்சுத் தருவேன் என்றுகூட அவர் கூறலாம். ஏனென்றால் அவர்தான் வெல்லப்போவதில்லையே. மக்களை முட்டாளாக்குவதற்கு என்னவெல்லாமோ கூறுகிறார்கள். அவர் வாக்குகளைப் பிரிப்பதற்கு இந்தியாவால் களமிறக்கப்பட்டவர். இறுதியில் TNA கேட்டுக்கொண்டதற்கு இணங்க போட்டியிலிருந்து விலகுகிறேன் என்று அறிவிப்பார். இத்துடன் TNA தேங்காய்ச் சிதறல்களாக உடைந்து போகும். அதற்கான பலியாடாக சுமந்திரன் வேள்வியில் கழுத்து வெட்டப்படுவார். அனேகமாக சிங்களம் தேடியப் பட்டியலூடாக அவரை MP ஆக நியமிக்கும். ஆனால் போராட்டத்தைத் தூண்டிவிட்டு, கையில் ஆயுதமும் பயிற்சியிம் தந்து,?தனது இராணுவத்தை நாட்டினுள் இறக்கிது முதல் இறுதிப் போரில் தனது இராணுவத்தைக் கொண்டு எமது போராட்டத்தையும் மக்களையும் அழித்தொழித்தது வரையான சகல அழிவுகளுக்கும் மூலகாரணம் இந்தியா என்பதை நாம் இலகுவாக மறந்துவிடுவோம். திரும்பவும் இந்தியா புராணம் பாடுவோம். ஆனால் நாங்கள் இலங்கையரும் அல்ல இந்தியரும் அல்ல. 😁

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

3 months 2 weeks ago
இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில் அரசியல் ஜனநாயக வழி முறையிலான ரீதியில் ஒரு வழி முறையில் சமஷ்டி அரசியலமைப்பு உருவாக வேண்டுமென்றால் அந்த இரு இனங்களுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையும் ஒரளவாவது நல்லுறவு அவசியம். அது இல்லாமல் சமஷ்டி அரசியலமைப்பு உருவாகுவது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால் அதன் வழிமுறை என்ன? இன்றைய நிலையில் ஜனாதிபதியாக தேர்வு செய்யபடுபவர் நினைத்தாலும் சமஷடி அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்பது எனது கருத்து.

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

3 months 2 weeks ago
இந்த பதிவில் கூறப்பட்டதனை போல Break out trade எடுப்பத்துதான் எனது நோக்கம் அதில் AUDJPY ascending triangle breakout ஆகி விட்டது, அதன் 99.250 எல்லை ஆசிய சந்தை உயர் விலையும் ஒன்றே, தற்போது விலை 99.800 அளவில் உள்ளது, விலை மீண்டும் 99.250 வரும்போது எவ்வாறு செயற்படுகிறது என்பதனை பொறுத்து வர்த்தகம் செய்யவுள்ளேன்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

3 months 2 weeks ago
இல்லை சட்ட ரீதியான பாதுகாப்பினை! நான்நினைக்கிறேன் நீங்கள் தனிப்பட்ட ரீதியில் எனது கருத்தினை எடுத்துக்கொண்டுவிட்டீர்கள் என, உங்கள் கருத்தும் நல்ல கருத்துத்தான்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

3 months 2 weeks ago
நீங்கள் உங்களது வழமையான காணியான சுற்றிவளைத்து பேசும் முறையை கைவிட்டு நேரடியாக பேச வேண்டும் நேரடியாக பேசுவதே முறையானது. இப்போதுள்ள நிலையில் தூண்டிலை பெறுவது என்று நீங்கள் குறிப்பிட்டது தமிழீழத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்பதையே. அதை நீங்கள் வெளிப்படையாக கூறினால் நாங்கள் உங்களுடன் வாதாடாமல் எங்களுடைய வேலைகளை பார்கக போவமில்ல.

உறவுகள் தொடர்கதை - T. கோபிசங்கர்

3 months 2 weeks ago
உறவுகள் தொடர்கதை “அது உன்டை அப்பாவுக்கு முறைக்கு அக்காவும் அத்தானும் கீழ போய் ஆசீர்வாதம் வாங்கு” எண்டு மேடையில சொல்லி மாமி அனுப்ப சிவாவும் மேடையால கீழ இறங்கிப் போய் குனிய, சிவான்டை மனிசி குனியேலாமக் குனிய, “நல்லா இரு அப்பு, நல்லா இரு மோனை“ எண்டு ஆசீர்வதிச்சிட்டு, பொம்பிளையின்டை கையில envelope ஐ திணிச்சிட்டு, இனி எப்பிடி ஏறி சாப்பிடப் போறது எண்டு ரெண்டு பேரும் யோசிக்கத் தொடங்கிச்சினம். ஒரு காலம் இவை இல்லாம நல்லது கெட்டது ஒண்டும் நடக்காது ஆனா இப்ப அவை ரெண்டுபேரும் வேற ஆற்றையும் உதவி இல்லாம வீட்டை விட்டு வெளீல போய் வரக்கூட ஏலாது . “வாருமன் சாப்பிடுவம்” எண்டு அவர் சொல்ல, “கொஞ்சம் பொறுங்கோ என்ன இளந்தாரியே ஏறிப்போக” எண்டு சொல்லி அவ உதவிக்கு ஆரும் இருக்கினமா எண்டு பாக்கத்தொடங்கினா. வயசு போகப் போக அப்பாக்கள் அமைதியாவதும் அம்மாக்களின் புறுபுறுப்பது கூடுவதும் இயற்கை. ஒரு வயதுக்கு (முதிர்ச்சிக்கு) அப்பால் ஆண்களின் தேவைகள் குறைவடையத் தொடங்கி விடும் . அவன் ஞானத்திற்கு முன்னைய பற்றற்ற நிலைக்கு வந்து விடுவான். மனைவிக்கு இன்னும் கூடப் பணிந்து போவான், எங்கயாவது எருமைக் கடா வந்தால் எமனுடன் ஏறிப் போக யோசிக்க மாட்டான் . ஆனால் பெண்கள் அப்படி இல்லை. பெண்கள் சந்தர்ப்பம் பாத்து சாதிப்பதில் வல்லவர்கள் . அப்பாமார் அடங்கத் தொடங்க அம்மாமார் ஆட்சியை கைப்பற்றி அந்தாள் தனக்கு முந்தி செய்த பழி பாவங்களை மறக்காமல் இப்பிறப்பிலேயே தண்டனை வழங்குவார்கள் .அரசன் அன்றும் ,தெய்வம் நின்றும் , மனிசி இருந்தும் செய்வார்கள். “ அவருக்கு இப்ப மறதி வந்திட்டு , மருந்து போட்டது கூட ஞாபகம் இருக்காது“ எண்டுதான் ஆரும் வந்தால் அவரைப்பபத்தி அறிமுகம் தொடங்கும் . பிறந்த நாளில இருந்து அடக்கப்பட்டதன் தாக்கமும் , விரும்பினதை செய்ய முடியாமப் போன ஏக்கமும், வந்த இடத்தில இருக்கிற அடக்குமுறையும் சேந்து பொம்பிளைகளில அப்பப்ப வெளிப்படும். பொம்பிளைகளுக்கு அதிலேம் அம்மாக்களிற்கு அதிகாரம் செய்ய விருப்பம் . பெண்கள் நல்ல நிர்வாகிகள் ஆனால் என்ன தங்களுக்கு தேவையான எல்லாத்தையும் மட்டுமே ,அதுவும் , அதிகார நிர்வாகமே செய்வார்கள். இது எல்லாம் வீட்டுக்குள்ள தான், வெளீல வந்தால் அந்தாளை கவனமாக் கையை பிடிச்சி கூட்டிக்கொண்டு போவினம். என்ன அடிக்கடி தாங்கள் தான் சரி நீர் பிழை எண்ட நச்சரிப்பும் இருக்கும். கடைசிக் காலத்தில பெத்தவைக்கு பெரிய பிரச்சினை சொத்துப் பிரச்சினை. சரி வயசு போட்டுது பிள்ளைகளுக்கு இருக்கிறதை குடுப்பம் எண்டா, சொத்தைப் பிரிச்சுக்குடுக்கிறதுக்கு அம்மாமருக்கு விருப்பம் இருக்காது. கடைசிவரை அதைத் தாங்கள் தான் ஆளோணும் எண்ட ஆசை இருக்கும். அதோட சிலவேளை ஒரு வியாக்கியானம் வைச்சு ஏற்றத்தாழ்வோட பிரிச்சுக் குடுப்பினம், “ஏனப்பா எல்லாத்துக்கும் சமனா இப்பவே குடுமன்” எண்டு அப்பாமார் சொன்னாலும்,“உங்களுக்கு ஒண்டும் விளங்காது சும்மா இருங்கோ” எண்டு அதட்ட அவையும் அடங்கீடுவினம். இன்றி அமையாத எங்கடை கூட்டு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா இல்லாமல் போக, இப்ப என்னெண்டால் மகள் கலியாணம் கட்டி மாப்பிளையோட வீட்ட வந்து இருக்க , தனிக்குடித்ததனம் போக விரும்புவது அநேகம் பெற்றோர் ஆகத் தான் இருக்கும் . சீதனம் குடுத்திட்டம் எண்டதால , கொஞ்சம் உரிமையில்லாத் தன்மையை உணருவது தான் காரணமோ தெரியேல்லை . எங்கடை சனத்தில கட்டினாப் பிறகு வாற சண்டையில அடிக்கடி வாறது மகள் மாருக்கு அம்மாமாரோட வாற சண்டை தான். மாமி-மருமகள் இப்படித்தான் எண்டு முதலே முடிவெடுக்கிறதால அது பெரிய சண்டையா இருக்காது. அதோட எல்லாரும் வீட்டோட மாப்பிளை எண்டதால மாமியார்-மருமோள் நேரடிச் சண்டை இருக்காது. மாமியார் மருமோள் சண்டை நேர நடக்காட்டியும் நாசூக்கா சொல்லிற கதைகளில மாட்டுப்படிறது மனிசன்மார் தான். கண்டோன்ன ரெண்டு பேரும் கதைக்கிறதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனாலும் அடுத்த மாசம் கோல் ஒண்டு வரும்; “ என்ன மாதிரி அரிசி மா அனுப்பவே” “ வேணாம் மாமி” “ஏன் போன கிழமை ரெண்டு கிலோ தானே அனுப்பினான், எங்களுக்கு ரெண்டு பேருக்கே கிழமைக்கு 4 கிலோ வேணும்” “அதே அப்பிடியே கிடக்கு” ஆஆஆஆஆஆ….. “அவன் சரியா மெலிஞ்சு போனான் வடிவாச் சமைச்சுக்குடும்” எண்ட இழுவையோட கோல் முடியும். உடன மகனுக்கு கோல்; “என்னடா வடிவாச் சாப்பிடிறியோ, உடம்பு கவனம், கண்டபடி வெளீல சாப்பிடாத” எல்லாத்துக்கும் ஓமெண்டப் பழகின மகன் இதுக்கும் ஓம் எண்டு போனை வைக்க; மனிசீன்டை கோல்; “என்ன உங்கடை அம்மா உளவு பாக்கிறாவே, நான் எவ்வளவு சமைக்கிறன் எண்டு”, நான் ரெண்டையும் class க்கு ஏத்தி இறக்கவே நேரம் இல்லை இதுக்குள்ள அரிசி மா ஏன் முடியேல்லை, மிளகாய்த்தூள் எவ்வளவு இருக்கு எண்ட கேள்வி வேற, டொக்டர் உம்மை உடம்பைக் குறைக்கச் சொல்லிறார் ஆனா உம்மடை அம்மா என்னெண்டால் நான் சாப்பாடு தராம் நீர் மெலிஞ்சுட்டீராம்”எண்டு சொல்லீட்டு விடை எதிர்பார்க்காமலே கோல் cut ஆகீடும். இதை எல்லாம் கேட்டும் கேக்காத மாதிரி இருக்கிறது தான் அப்பாக்களின் சா(சோ)தனை. வீட்டை பொம்பிளை பிள்ளைகள் இருக்கும் வரை அப்பாக்கள் அதிகாரம் செய்வதே மகள் எண்ட ஐ.நா சபையை நம்பித்தான் . சண்டை வரேக்க அப்பாவின்டை பக்கம் கொஞ்சம் கூட support இருக்கும். மகள்மாரைக் கட்டிக்குடுத்த உடனயே அம்மா மார் மீண்டும் இழந்த ஆட்சியை பிடிச்சிடிவினம் . இதுவரை எல்லாம் தெரிந்திருந்த அப்பா இப்ப அம்மான்டை கணக்குப்படி ஒண்டும் தெரியாதவர். கட்ட முதல் பொம்பிளைப்பிள்ளைகள் அப்பாமாரோடேம் ஆம்பிளைப்பிள்ளைகள் அம்மாமாரோடேம் ஒட்டி இருந்தாலும். கட்டிப் போனாப்பிறகு அப்பாமாருக்கு மகனோட இருக்கிறது தான் comfortable. மகன் மார் கேக்காமலே பாத்துச் செய்வாங்கள், அதோட மருமோள்மாருக்கு மாமாமாரோட ஒத்துப் போகும். மனிசனிட்டைப் போய் ”உங்கடை அப்பா பாவம், அம்மா என்ன சொன்னாலும் பேசாமக் கேப்பார், அம்மா தான் அவரைப் போட்டு பாடுபடுத்திறா” எண்டு சொல்லித் தன்ரை புருசனுக்கு பாடம் எடுப்பினம். மகனோடயோ இல்லாட்டி மகளோடயோ இருக்கப் போகேக்கேம் சம்மந்திமார் இருக்கினமா எண்டு பாத்துத்தான் போறது. சம்மந்திமாரை சபைசந்தீல சந்திக்கேக்க சந்தோசமாக் கதைச்சாலும் ஆனால் ஓரே வீட்டை இருந்தால் சண்டை தான். வளக்கும் வரை மூத்த ஆம்பிளைப் பிள்ளையும் கட்டிக் குடுத்தாப்பிறகு “ அவன் பாவம்” எண்டு கடைசி ஆம்பிளைப்பிள்ளையிலேம் தான் அம்மாமாருக்கு விருப்பம். ஆனாலும் மனிசன் மார் இருக்கும் வரைதான் அம்மாமார் மகனுடன் இருப்பினம் அவருக்கு ஏதும்மெண்டால் அதுக்குப்பிறகு கூப்பிடாமலே மகளிட்டைப் போயிடுவினம். ஊர் தாண்டி, கடல் தாண்டிக் கட்டிக்குடுத்திட்டு “ அய்யோ நான் பிள்ளையோட போய் இருக்கப்போறன்” எண்டு அம்மா தொடங்கி அந்தாள் ஏதும் சொல்லமுதல் ஓடிப்போய் அங்க இருந்து பாத்திட்டு கடைசீல சுடலை ஞானம் வர “கோம்பையன்மணலில தான் வேகவேணும்” எண்டு ஊரோட வந்திடிவினம். பெத்ததெல்லாம் கட்டிப் போய் தாங்கள் பெத்ததைப் பாக்கத் தொடங்க, வீடு வெளிச்சிப் போய் தனிச்சு இருக்கிறாக்களுக்கு வரும் ஒரு பயம் ஏதும் ஆருக்கும் நடந்தா எண்டு. இப்பவும் புறுபுறுக்கிற அம்மா “ எனக்கு ஏதும் நடந்தால் இந்தாள் பாவம் தனிய இருக்காது, என்னை மாதிரி ஒருத்தரும் பாக்க மாட்டினம்” எண்டு கவலை வர திருப்பி ஒருக்காப் பிள்ளைகளிட்டைத் திருப்பிப் போவமோ எண்டு யோசிக்கத் தொடங்குவா ஆனாலும் போமாட்டினம். ஏனெண்டால் இவை இப்பதான் தங்களுக்கு எண்டு வாழுவினம், பிள்ளைகளோட போய் இருந்தா அது இருக்காது. அப்பாவும் அம்மாவும் சண்டை பிடிக்கிறது பெரிசா பிள்ளைகளுக்கு தெரியாது, தெரிஞ்சாலும் கணக்கெடுக்காதுகள். தனிய இருக்கேக்க சண்டைதான் பொழுதுபோக்கா மாறீடும்.ஆனால் அம்மாமாருக்கு மாத்திரம் அந்தக்காலத்தில இருந்து நடந்தது எல்லாம் பொருள், இடம், காலத்தோட ஞாபகம் இருக்கும் . தேவை வரேக்க deep memoryஐ கிண்டி எடுப்பினம். தேவேல்லாத ஒண்டுக்குச் சண்டை பிடிச்சு காகம் இருக்கத்தான் பனம்பழம் விழுந்ததெண்டு தொடங்கி, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டுக் கதைசொல்ல அந்தாள் அதுக்கு ஒண்டும் சொல்லாமல் இருக்கும். அதுக்கும் “ உங்கடை ஆக்கள் எண்டால் ஒண்டும் சொல்லாதேங்கோ” எண்டு பேசீட்டுக் கொஞ்சம் மூக்கைச் சிந்த , ஆனாலும் மாட்டிறது வீட்டுக்கு எப்போதாவது வாற ஒரு சொந்தம். வந்தவரை இருத்தி வைச்சு “கொஞ்சம் பொறு கோப்பி தாறன்” எண்டு சொல்லிப்போட்டு ,” எனக்கு பொன்னம்பலத்தார்டை மகனை பேசினது நான் தெரியாம இந்தாளைக்கட்டினது” எண்டு தொடங்குவா , இதுவரை சும்மா இருந்த அந்தாள் “நீதான் எண்டு தெரிஞ்சிருந்தா நானும் கட்டி இருக்க மாட்டன், லீவில வந்து நிக்கேக்க குஞ்சிஆச்சி சொன்னதுக்கு ஆரெண்டு பாக்காமல் நான் கட்டீட்டன்” எண்டு விட மாட்டார். வந்த ஆள் தான் பாவம் தலைப்பில்லா விவாதத்தை தனி ஆளா நிண்டு கேக்கவேணும். வந்த ஆள் ஏன் வந்தனான் எண்டதை மறந்து, கடைசீல தீர்ப்பில்லாச் சண்டையின்டை கதையைக்கேட்டுக் கொண்டிருந்திட்டு தாங்கேலாமல் ஒரு போன் கோல் வந்தமாதிரி எழும்பித் தப்பி ஓட வெளிக்கிட “இந்தா” எண்டு ஒரு வாழைப்பழச் சீப்பைக் குடுத்திட்டு, “ சரி போட்டு வா, அடுத்த முறை வரேக்க நாங்கள் இருப்பமோ தெரியாது” எண்டு ஒரு sentiment வசனமும் சொல்லி விடுவினம். அந்தாள் இருக்கேக்க ராங்கியா தனக்கெண்டு ஒண்டும் பிள்ளைகளின்டை இதுவரை கேக்காத அம்மா கடைசிக்காலங்களில “ எனக்கு ஏதும் நடந்தா அப்பாவைக் கவனமாப் பாக்கோணும்”எண்டதை மட்டும் சொல்லுவா. தான் இருக்கும் வரை தனக்கு மட்டும் தான் உரிமை எண்ட அகங்காரம், இல்லாத நேரத்தில தன்னை மாதிரி அவரைப் பாப்பினமோ, அவர் தனியச் சமாளிக்கமாட்டார் பாவம் எண்டு மனிசி கவலைப்படுறதெல்லாம் எல்லாருக்கும் விளங்கத் தொடங்கும். மனிசன்மாருக்கு தங்கடை மனிசிமார் வருத்தம் எண்டு சொன்னால் பயம் அதால வருத்தம் சொல்லாமலே, அடிக்கடி டொக்டிரட்டை கொண்டேக்காட்டுவினம். ரெண்டு பேருக்கும் பிறப்பால் வராமல் பிணைந்ததால் வாழ்க்கையில் வந்த இந்த உறவு தொடரும் கதையாக இருக்கவேண்டும் எண்டதுதான் எல்லாரின்டை ஆசையும். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

3 months 2 weeks ago
பெரும்பாலும் இந்த பெயரளவு சமஸ்டி என்பதால் இலங்கை அரசிற்கு பாதகத்தினை விட சாதகமே அதிகம் என நினைக்கிறேன், உதாரனமாக வட கிழக்கு சிறுபான்மை மக்களிடம் வித்க்கப்படும் வரியில் வரும் வருமானத்தினை அப்பகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசிடமே கையேந்த வேண்டியிருக்கும் (பொதுவாக) கிட்டதட்ட இப்போதுள்ள நிலமைதான் ஆனால் பெயரளவில் சமஸ்டி என்றிருக்கும். இங்கு இலங்கையிலுள்ள பிரச்சினை என்னவென்றால் என்னதான் அபிவிருத்தியினை பெரும்பான்மை பிபுலம் கொண்ட அரசின் மூலமாக பெற்றாலும் அதே அரசினால் ஒரே இரவில் நடுத்தெருவிற்கு வரவேண்டிய் நிலை ஏற்படும், உதாரணமாக 83 இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜே ஆரின் ஆசியுடன் தமிழர்கள் மேல் மேற்கொண்ட கலவரத்தில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் (மில்லியனா பில்லியனா என சரியாக நினைவில்லை) தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது, இவ்வாறு அரசினால் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு சட்ட ரீதியான பாதுகாப்பினை பெறமுடியாத நிலை காணப்படுகிறது. என்னைப்பொருத்தவரை இப்படி மீனை பெறுவதனை விட தூண்டிலை பெற அனைத்து பாதுகாப்பற்ற சிறுபான்மையின மக்களும் முயற்சிக்க வேண்டும், அத்துடன் உரிமைகளை (பாதுகாப்பும் சம உரிமையும்) மக்கள் இரந்து பெறும் நிலையில் ஒரு நாடு கீழிறங்குவது மிகவும் ஆபத்தான நிலைக்கு ஜனநாயகத்தினை தள்ளுகின்ற நிலையாகும்.

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

3 months 2 weeks ago
சிகப்பு பெட்டியினால் சுட்டிக்காட்டப்பட்ட பகுதி திங்கள் (வாரத்தின் முதல் நாள்) ஆசிய சந்தை வியாபார நேரம், இதன் நேரம் டோக்கியோ சந்தை நேரம் ஆகும், ஆனால் ஆசிய சந்தை சிட்னி சந்தை நேரத்தில் ஆரம்பிக்கும் அதிலிருந்து 2 மணி நேரத்தின் பின்னர் ஆரம்பிக்கும் GMT + 12 ஆக இருக்கும் என கருதுகிறேன். இந்த வாரத்தில் இந்த சிகப்பு பெட்டியில் விலைகள் Support & resistance போல் செயற்படும், AUDJPY இனை தவிர்த்து மற்ற இரு சந்தைகளும் இந்த சிகப்பு வலயத்திற்குள்ளேயே இருக்கின்றது, AUDJPY இந்த வலயத்தினை கடந்து மேலேறி உள்ளது, தங்கமும் AUDJPY வாங்கும் உத்தேசத்தில் இருந்தாலும் இந்த வார முதல் நாள் ஆசிய சந்தைநிலவரத்தினடிப்படையிலேயே வர்த்தகம் செய்வதுண்டு, இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்னர் இணைக்கிறேன்.

ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.

3 months 2 weeks ago
இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு என்ற தீர்மானம் என்பது ஏகமனதான தீர்மானம் இல்லை. - கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராசா. -

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

3 months 2 weeks ago
இலங்கை தமிழரசு கட்சி, சஜித்திற்கு ஆதரவு என்ற தீர்மானம் என்பது ஏகமனதான தீர்மானம் இல்லை. - கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராசா. -

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு! தழிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை என்றும், ஆனாலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் எனவும் அவா் தொிவித்தாா். https://athavannews.com/2024/1397827 @Kapithan

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

3 months 2 weeks ago
மட்டுப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை: நீண்ட வரிசையில் பொதுமக்கள்! கடவுச்சீட்டுவழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டினை பெறுவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் கடந்த பல நாட்களாக மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர் குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது இதனையடுத்து கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக இணையவழி ஊடாக முன்கூட்டிபதிவு செய்யும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்திருந்தார். இதனையடுத்து நாளாந்தம் 750 கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக மக்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக காத்திருந்து கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது அந்த வகையில் இன்றைய தினமும் மக்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்ததனை அவதானிக்க முடிந்தது. https://athavannews.com/2024/1397866
Checked
Sun, 12/22/2024 - 16:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed