ஊர்ப்புதினம்

தமிழ் மக்களுக்கான பொன்னான வாய்ப்பை ரணிலும் தமிழரசுக் கட்சியும் இல்லாமல் செய்துள்ளது - நாமல்

3 months 2 weeks ago
05 Sep, 2024 | 04:38 PM
image
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாக குற்றஞ்சாட்டிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு பொன்னான வாய்ப்பு காணப்பட்டபோதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினரும் தங்களின் சொந்த அரசியல் காரணங்களுக்காகத் அதனைத் தவறவிட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதுடன் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் இலங்கை தமிழரசுக் கட்சி பிளவடைந்துள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு பொன்னான வாய்ப்பு காணப்பட்டபோதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினரும் தங்களின் சொந்த அரசியல் காரணங்களுக்காகத் அதனைத் தவறவிட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக்கட்சி பல்வேறு தருணங்களில் மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றியும் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்து பற்றியும் அதிகமாகப் பேசுகின்றது, ஆனால் செயற்பாட்டில் வேறுபட்ட நிகழ்ச்சி நிரலை அக்கட்சியினர் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் வெளிப்படுத்தப்படுகின்றது.

இந்த உண்மையை நான் சொன்னால், எனக்கு தமிழ் சினிமாத் திரைப்படங்களில் வரும் 'வில்லன்' போன்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால், தமிழ் மக்களின் உண்மையான வில்லன்கள் யார் என்பதை தமிழ் மக்கள் தற்போது புரிந்து கொண்டிருப்பார்கள்.

ரணிலுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். நான் தமிழ் மக்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை நம்பவைப்பதற்காக பொய்சொல்கிறார்.

மாகாண சபை முறைமைகள் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மீண்டும் தனது மக்களை தோல்வியடைய செய்துள்ளது. ரணில் மீண்டும் தமிழ் மக்களை முட்டாளாக்கியுள்ளார்.

இதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் நீண்டகாலமான தலைமைக்கட்சி என்ற பாத்திரத்தினை இனி வகிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது.

அந்தக் கட்சியினர் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளதான் காரணமாக உட்கட்சிப் பிளவு வலுவாகியுள்ளது. தமிழ் மக்களுக்கான ஏகோபித்த தலைமையை அந்தக் கட்சியினால் வழங்க முடியாத பரிதாமான நிலைமையை அடைந்துள்ளது என்று மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான பொன்னான வாய்ப்பை ரணிலும் தமிழரசுக் கட்சியும் இல்லாமல் செய்துள்ளது - நாமல் | Virakesari.lk

சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? - தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி

3 months 2 weeks ago

(நா.தனுஜா)

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யார் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்குகின்றாரோ, அவரையே ஆதரிப்பது என ஏற்கனவே நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட நிலையில், தற்போது தமிழரசுக்கட்சி ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருக்கும் சஜித் பிரேமதாஸ சமஷ்டி தீர்வு குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித்தை ஆதரிப்பதென கட்சி பிழையான முடிவை எடுத்து அதன்வழி செயற்படுமேயானால், தானும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தில் எவ்வித மாற்றமுமின்றி அதன்வழி பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் தாம் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை எனவும், மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்கக்கூடிய ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஒருவரையே ஆதரிப்போம் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார்.

ஆனால் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து கட்சி ரீதியாகத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாகவே கடந்த மாத இறுதி வாரத்தில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அவருக்குத் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அத்தீர்மானம் குறித்து கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அதற்கு மறுதினம் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தார்.

இது இவ்வாறிருக்க கடந்த மாதம் 29 ஆம் திகதி லண்டன் பயணமான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்ற தினத்தன்று நாட்டில் இல்லாததன் காரணமாக அதில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியதன் பின்னர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வாரா? அல்லது கட்சியின் தீர்மானத்துக்குப் புறம்பாக தொடர்ந்து தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவாரா? என வினவியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அவர், கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறும் திகதி தொடர்பில் 7 நாட்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டதாகவும், அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது பற்றி உரியவாறு கலந்துரையாடித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை கட்சியின் கடந்த மத்திய குழுக்கூட்டங்களில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யார் தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்குகின்றாரோ, அவரையே ஆதரிப்பது எனக் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்ட சிறிதரன், அவ்வாறிருக்கையில் சமஷ்டி தீர்வு குறித்து சஜித் பிரேமதாஸ வழங்கியிருக்கும் உத்தரவாதம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

எனவே இவை பற்றிய எந்தவொரு தெளிவுபடுத்தல்களும் இல்லாத நிலையில், தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்துத் தான் மேற்கொண்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிறிதரன் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென தமிழரசுக்கட்சி பிழையான முடிவை எடுத்துச் செயற்படும் பின்னணியில், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தின் வழியில் பயணிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? - தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி | Virakesari.lk

இந்தியாவின் "தரங் சக்தி" பயிற்சியில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்கேற்பு

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 7   05 SEP, 2024 | 12:53 PM

image

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பீச்கிராஃப்ட் விமானம் இந்திய விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட "தரங் சக்தி" வான் போர் பயிற்சியில் இணைந்தது.  மேலும் இந்த பயிற்சியில்  11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 விமானங்கள் பங்கேற்றன.

"தரங் சக்தி "விமானப் போர் பயிற்சியின் முதல் கட்டம் 2024 ஆகஸ்ட் 06 முதல் 14 ம் திகதி வரை இந்தியாவின் தமிழ்நாடு, சூலூர் விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன்.

இரண்டாவது மற்றும் இறுதி கட்ட பயிற்சிகள் 14 செப்டம்பர் 2024 அன்று ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் விமானப்படை தளத்தில் நடைபெறவுள்ளது.

இந்த விமான போர் பயிற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்களிப்பை வழங்கியுள்ளது.

பூகோள பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்தியாவினால் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய சர்வதேச விமானப் பயிற்சியான "தரங் சக்தி" பயிற்சியில் இலங்கை விமானப்படை பங்குபற்றுவதன் மூலம்  இலங்கை விமானப்படைக்கு சர்வதேச இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அமைகின்றது .

மேலும், இலங்கை விமானப்படையின் விமானிகள், விமானப் பணியாளர்களுக்கு இதனூடாக புதிய அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும்  கிடைக்கப்பெற்றது.

https://www.virakesari.lk/article/192902

நேர்மை - பொறுப்புக்கூறல் - அமைப்பு முறை மாற்றம் கோரிய மக்கள் போராட்டத்தினை மறக்கவேண்டாம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வேண்டுகோள்

3 months 2 weeks ago
நேர்மை - பொறுப்புக்கூறல் - அமைப்பு முறை மாற்றத்தை கோரி இரண்டு வருடங்களிற்கு முன்னர் வெடித்த பாரிய மக்கள் போராட்டத்தினை மறக்கவேண்டாம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வேண்டுகோள்

Published By: RAJEEBAN   05 SEP, 2024 | 10:30 AM

image
 

2024 ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கரிசனை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள அவர் பல வேட்பாளர்கள் தனது ஆதரவை கோரியுள்ள போதிலும் நடுநிலைமை வகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை ஆதரிக்கப்போவதுமில்லை என  அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் நாட்டின் எதிர்காலம் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறான சவால்களையும் நிச்சயமற்றதன்மையையும் எதிர்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி  அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும்போது நாட்டின் நிலைமை குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தனிநபர்கள் குறித்து சிந்திக்ககூடாது, ஒவ்வொரு வேட்பாளரும் முன்வைத்துள்ள திட்டங்கள் குறித்து சிந்திக்கவேண்டும், அவர்கள் தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் இருக்ககூடியவர்கள் யார் என்பது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றதிகார முறை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் கல்வி விவசாயம் (குறிப்பாக சிறு விவசாயிகள்)சிறிய நடுத்தர தொழில்துறையினர், தோட்டதொழில்துறை, சுற்றுலாத்துறை, சர்வதேச வர்த்தகம் போன்ற துறைகளிற்கான கொள்கைகளிற்கும் முன்னுரிமை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடமிருந்து நேர்மை, பொறுப்புக்கூறல், அமைப்பு முறை மாற்றத்தை கோரி இரண்டு வருடங்களிற்கு முன்னர் முழு நாட்டிலும் வெடித்த பாரிய மக்கள் போராட்டத்தினை - இயக்கத்தினை நாங்கள் மறக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192887

பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் அதிகரிப்பு - டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல்

3 months 2 weeks ago
05 SEP, 2024 | 10:05 AM
image

தேர்தல் பிரச்சார காலத்தில் பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் கடும் கரிசனை வெளியிட்டுள்ளது.

பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் ஸ்ரீலங்காவின் நிறைவேற்று பணிப்பாளர் நதிசானி பெரேரா தெரிவித்துள்ளார்.

300 முறைப்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர், அரசியல் நோக்கங்களிற்காக பொதுச்சொத்துக்களை பயன்படுத்துபவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவது குறித்து மக்கள் ஆர்வமாக உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192886

மாதகல் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   05 SEP, 2024 | 12:53 PM

image

மாதகலில் இருந்து நேற்று புதன்கிழமை (05) அதிகாலை கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இரண்டு இளைஞர்கள் நேற்று அதிகாலை இவ்வாறு கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. 

இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றைய இளைஞர் காணாமல் போனார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று கரையொதுங்கியது.

மாதகல் பகுதியை சேர்ந்த நாகராஜா பகீரதன் என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/192911

வேட்பாளர்களுக்கான நேரடி விவாதம்; மார்ச் 12 இயக்கம் தயார்

3 months 2 weeks ago

வேட்பாளர்களுக்கான நேரடி விவாதம்; மார்ச் 12 இயக்கம் தயார் live.jpg

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேரடி விவாதம் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மார்ச் 12 இயக்கம் இந்த தொடர் விவாதங்களை நடத்தவுள்ளது.

முதல் நாள் விவாதத்தில் நான்கு வேட்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ச, சர்வஜன பலய கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர , சுயாதீன வேட்பாளர் பா. அரியநேத்திரன் ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாது என சுயாதீனமாக களமிறங்கியுள்ள வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த அமைப்புக்கு அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட உள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விவாதத்தில் 12 வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவாதங்கள் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

மார்ச் 12 பிரச்சாரம் மேலும் விவாதத்தின் போது வேட்பாளர்களுக்கு கேள்விகளை சமர்ப்பிக்க வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் கேட்கப்படும் கேள்விகளை ஒரு குழு தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

https://akkinikkunchu.com/?p=290435

விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் தமிழ் பொது வேட்பாளர் பின்னணியில் - சாணக்கியன்

3 months 2 weeks ago

விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் தமிழ் பொது வேட்பாளர் பின்னணியில் SANKEYAN.jpeg

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களே இன்று தமிழ் பொது வேட்பாளருக்கு பின்னால் இருக்கின்றனர். பொது வேட்பாளரை எதிர்ப்பதனால் எமக்கு அச்சறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த அச்சுறுத்தல்களுக்கு பயந்து விட மாட்டோம், அடிபணிய மாட்டோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

1948ஆம் ஆண்டில் இருந்து தமிழ் தலைவர்களையும் , தமிழ் மக்களையும் சிங்கள அரசியல் தலைவர்கள் ஏமாற்றியதன் காரணமாகவே ஆயுத போராட்டம் தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் போராட்டத்திற்கான காரணம் சிங்களவர்களில் பெருமளவானோருக்கு தெரியாது. நாங்கள் பூர்விகமாக வாழ்ந்த மக்களே. எங்களுக்கான உரிமைகளை மறுத்த காரணத்தினாலேயே நாங்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழ முடியாது என்ற கோசங்கள் எழுந்தன.

ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிங்களத் தலைவர் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதியாவார். ஆனால் ஒரு சில தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளர் என்ற ஒருவரை களமிறக்கியுள்ளனர். இந்த மனநிலை அவர்களிடையே ஏற்பட சிங்களத் தலைவர்களே காரணம். யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னரும் பொது வேட்பாளர் என்ற கோஷம் தமிழ் மக்களிடையே வந்துள்ளது என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் பெரும்பான்மை சமூகத்தின் தலைவர்கள் ஏற்க வேண்டும்.

பொறுப்புள்ள அரசியல் கட்சியாக 75 வருடங்களாக தமிழ் மக்களை வழிநடத்திய கட்சியாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுத்துள்ளது. பொது வேட்பாளர் என்ற விடயத்தை தமிழரசுக் கட்சி ஏற்கவில்லை. நாங்கள் மீண்டும் ஒருமுறை நாட்டின் எதிர்காலத்திற்காக தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக பெரும்பான்மை சமூகத்திற்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம்.

இந்த சந்தர்ப்பத்திலும் இந்த தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிப்பார்களாக இருந்தால் அதன்பின்னர் தமிழ் மக்கள் எந்தப் பாதையில் செல்வார்கள் என்பதனை எங்களால் கூற முடியாது. ஆனால் பொறுப்புள்ள கட்சியாக வெற்றிப்பெறக்கூடிய பிரதான வேட்பாளருக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம்.பொதுவேட்பாளருக்கு பின்னால் இருக்கும் ஒருசில அரசியல்வாதிகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளேன். ஆனால் இந்த பொதுவேட்பாளர் விடயத்தை ஆதரிக்கும் புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒரு சிலரையும், சிவில் மக்கள் பிரதிநிகளையும் விமர்சிப்பதில்லை.

ஒருசில அரசியல்வாதிகள் இன்னுமொரு வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய எடுத்த விடயத்தை தாங்கள் எடுத்த மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை மறைப்பதற்காகவும் சலுகைகளை பெற்றதை மறைப்பதற்கும் ஒருசிலர் தமிழ் மக்களை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். தனிப்பட்ட நன்மைக்காக எங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஒருசில வேட்பாளர்கள் அறிவிக்கும் போது அதனை மறுக்க முடியாமலே பொதுவேட்பாளரின் பின்னல் இருக்கின்றனர். திரைமறையில் அவர்கள் பிரதான வேட்பாளருடன் வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.

ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதான வேட்பாளரை சந்தித்து எவ்வாறு மறைமுகமாக உங்களுடன் வேலைசெய்வது என்று கலந்துரையாடியுள்ளனர். ஆனால் நாங்கள் தமிழரசுக் கட்சி என்ற வகையில் அவ்வாறு மக்களுக்கு துரோகம் செய்யப் போவதில்லை. கடந்த விடுதலைப் போராட்டம் நடந்த போது இராணுவத்துடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் மீண்டுமொருமுறை பொதுவேட்பாளருக்கு பின்னால் இருந்துகொண்டு எமது தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். இதுவே உண்மை.

பொதுவேட்பாளரை எதிர்ப்பதனால் பல அச்சுறுத்தல்கள் எமக்கு விடுக்கப்படுகின்றன. தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் உங்கள் அரசியலை அழித்துவிடுவோம் என்றும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகாமல் பார்த்துக்கொள்வோம் என்றும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த அச்சுறுத்தல்களுக்கு பயந்து தமிழ் மக்களுக்கு தேவையான விடயத்தை கூறாமல் இருக்கப் போவதில்லை.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவார். பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை எமக்குள்ளது என்றார்.
 

https://akkinikkunchu.com/?p=290485

மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம்: உண்மையை ஒப்புக் கொண்டார் அங்கஜன்

3 months 2 weeks ago
angajan-1.jpg?resize=750,375 மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம்: உண்மையை ஒப்புக் கொண்டார் அங்கஜன்.

”மதுபான சாலைகளுக்கான அனுமதியினை தனது தந்தை புதிதாக பெறவில்லை எனவும், இருந்த அனுமதியினை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கும் முகமாக வழங்கிய ஆவணங்களே அவை எனவும் ” நாடளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எனது அப்பா ஒரு தொழிலதிபர். நான் அரசியலுக்கு வர முன்னரே தொழிலதிபராக இருக்கிறார். 70 ஆண்டுகளில் இருந்து அவர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கொழும்பில் 92ஆம் ஆண்டு காலங்களில் மதுபான சாலை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவரிடம் சில மதுபான சாலைகளின் அனுமதிகள் இருந்தன. அவற்றினை புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டார். புதிதாக அனுமதி பெறவில்லை.

எங்களுக்கு புதிதாக யாரும் தர வேண்டிய தேவை இல்லை. எனது அப்பாவிடம் அனுமதிகள் ஏற்கனவே இருந்தன. அப்பா மீது குற்றம் சாட்டிய நபருக்கும் தெரியும் எனது அப்பாவிடம் மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் இருக்கின்றன என்ற விடயம். தெரிந்தே அவர் குற்றம் சாட்டியுள்ளார் ”இவ்வாறு அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1398280

மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை

3 months 2 weeks ago

மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை அதிகரித்துள்ள பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவையை தொடங்கியுள்ள நிலையில்,இந்த விமான சேவை வரவேற்பை பெற்றுள்ளதால், மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://thinakkural.lk/article/308998

கோட்டாவை கொண்டு வந்த வியத்மக இன்று சஜித் பக்கம்; ஐ.ம.ச. உருவாக்கியவர்கள் புறக்கணிப்பு - சுசில் பிரேமஜயந்த

3 months 2 weeks ago

Published By: VISHNU   05 SEP, 2024 | 06:22 AM

image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை  ஹஷான்)

வியத்மக என்று குறிப்பிட்டுக் கொண்டு கோட்டபய ராஜபக்ஷவை தலைவராக்கி அவரை விரட்டியடித்து, நாட்டை வீழ்த்தியவர்கள் இன்று எதிர்க்கட்சித் தலைவருடன் ஒன்றிணைந்துள்ளார்கள். அவருக்கும் கயிறு கொடுக்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியை  உருவாக்கியவர்கள் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.  போலியான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். தபால்மூல வாக்களிப்பில் ஜனாதிபதி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் மீதான  விவாதத்தில்  உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறந்த பௌத்தர். இதனால் தான் அவர் தலதா மாளிகையின் முன்னிலையில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளார். அவரிடமே சிறந்த அணி உள்ளது. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும். முன்னேற்றகரமான நாடுகளில் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் தேர்தலில் தாம் தோல்வியடைவதை அறிந்தால் போட்டியில் இருந்து விலகிவிடுவார்கள். தோல்வியடைவது தெரிந்தும் ஜனாதிபதி போட்டியிடுகிறார் என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,  ஒருசிலர் பாராளுமன்றத்தை தேர்தல் பிரச்சார மேடையாக மாற்றிவிட்டார்கள். இவர் யார் (நாலக கொடஹேவாவை நோக்கி)   இவர் எங்கிருந்து அரசியலுக்கு வந்தார். விளையாட்டு கழகத்துக்கு 50 இலட்சம் நிதி வழங்கிய வழக்கு உள்ளது.  ராஜபக்ஷர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் வகையில் இந்த வழக்கு  வாபஸ் பெறப்பட்டது. வரலாற்றை நாங்கள் அறிவோம்.

நாட்டின் கடற்பரப்பில் தீப்பற்றி எறிந்த நியூ டைமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட விளைவுகளுக்கு நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் நெருக்கடியை இவர்கள் தான் உருவாக்கினார்கள். பேலியகொட வியாபார கட்டிடத் தொகுதியில் கடை வழங்கியது யார்,  அப்போது நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்தது யார்  இவர்கள். தற்போது இங்கு வந்து கருத்து கணிப்பு பற்றி பேசுகிறார்கள்.

பாராளுமன்றத்தில் இவரது இறுதி நாளாக புதன்கிழமை (4) இருக்கும். இவர்கள் பல்கலைக்கழகத்துக்கு சென்ற காலத்தில் நாங்கள் பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்தோம். ஐக்கிய மக்கள் சக்தியை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இன்று இவர்தான் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார ஆலோசகர்.

கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இவர்கள் தான் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டாம்  என்று குறிப்பிட்டுக் கொண்டு  மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர்  அஜித் நிவார்ட் கப்ராலுடன் ஒன்றிணைந்து குறிப்பு எழுதினார். கோட்டபய ராஜபக்ஷ பதவி துறக்கும் சூழலை இவர்கள் தான் துரிதப்படுத்தினார்கள்.

கோட்டபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்தி நாட்டை வீழ்த்தினார்கள். எதிர்க்கட்சித் தலைவருக்கும் கயிறு கொடுப்பார்களோ என்று கவலையடைகிறேன். தற்போது கயிறு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதற்கு இவர் யார்?

கோட்டபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்திய இவருக்கும்,  கோட்டபய ராஜபக்ஷவுக்கும் அரசியல் அனுபவம் கிடையாது. அனுபவம் உள்ளவர்களையும் கவனத்திற் கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்ஷவிடமும் கேட்கவில்லை. வியத்மக என்று குறிப்பிட்டுக் கொண்டு 69 இலட்ச மக்களாணையை இல்லாதொழித்தார்கள். பலவீனமான இவர் இன்று ஜனாதிபதியை விமர்சித்து சேறு பூசுகிறார்.

தபால் மூல வாக்களிப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவார் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன். போலியான கருத்துக்கணிப்புக்களை மக்கள் மயப்படுத்த வேண்டாம். இவரது பொருளாதார ஆலோசனைகளை பெற்றால் மீண்டும் நாடு வங்குரோத்து நிலையடைய நேரிடும்.

ராஜபக்ஷர்களின் புகைப்படத்தை கொண்டு கம்பஹா மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகி கோட்டபய ராஜபக்ஷவை விரட்டியடித்த  இவர்கள் இன்று எதிர்ப்பக்கம் சென்றுள்ளார்கள். அதிகாரத்தில் இருக்கும் போது நான் அரசாங்கத்தில் இருக்கவில்லை. வங்குரோத்து நிலையடைந்த பின்னரே எம்மை  அழைத்தார்கள். ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து சவால்களை பொறுப்பேற்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/192876

வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து வன்முறை குழு அட்டகாசம்; பாலூட்டிக் கொண்டிருந்த தாய் உட்பட ஐவர் மீது தாக்குதல்

3 months 2 weeks ago

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் நேற்றிரவு வீடு புகுந்த வன்முறை கும்பல் ஒன்று சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,

அறுவர் கொண்ட கும்பல் வன்முறைக்காக வந்து, இருவர் வெளியே நின்ற நிலையில் நால்வர் கொண்ட கும்பல் உள்ளே வந்து எனது 5 வயது மகளின் வயிற்றில் தாக்கினர். எனது சகோதரி பிள்ளைக்கு பாலூட்டிக் கொண்டு இருந்தவேளை அவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அத்துடன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாதிக்கப்பட்ட எனது சகோதரன் மீதும் தாக்குதல் நடத்தினர். எனது மகனான சிறுவனது தொண்டையை பிடித்து திருகினர்.

இவ்வாறு அட்டகாசம் செய்ததுடன் வேலியின் தகரம் மற்றும் கதிரை என்பவற்றை உடைத்தனர். எமது மோட்டார் சைக்கிளையும் கீழே தள்ளி விழுத்தினர். பிள்ளைக்கு பால் கொடுக்கும் போது தாக்குதலுக்கு உள்ளான எனது சகோதரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எமக்கு இந்த அநீதி இழைத்தவர்களை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் எமக்கான நீதிக்கு மேல் அதிகாரிகளை நாட வேண்டி ஏற்படும் என்றார்.

https://thinakkural.lk/article/309005

தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ

3 months 2 weeks ago

Published By: VISHNU   02 SEP, 2024 | 03:20 AM

image

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி

கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர். சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன். ரணில் எமது கொள்கைகளுடன் இணங்கவில்லை தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கத்தை சிறந்த நகர்வாக பார்க்கிறேன். நான் சஜித்தை சந்தித்து பேசவில்லை. பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. பொய் வாக்குறுதிகளை நான் வழங்கமாட்டேன். ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். செனட் சபை குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். வடக்கு இளைஞர் யுவதிகளுடனான எனது உறவு தனித்துவமானது. காணாமல் போனோர் விவகாரத்துக்கு பதில் அளிப்பேன். முஸ்லிம்களின் உடல் தகன விவகாரத்தில் மன்னிப்பு கோருகிறோம். இந்தியா, சீனாவுடன் நட்பு ரீதியான உறவை பேணுவேன். மோடியுடன் எனக்கு சிறந்த உறவுள்ளது. அப்பா என்னை அடித்ததில்லை, ஆனால் தவறு செய்தால் திட்டுவார்

சகல  இன மக்களினதும் கலாச்சாரங்களை பாதுகாப்பேன். சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள்.  ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர்.  சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர்.  ஆனால் நான் சகல மக்களினதும் கலாச்சாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர் இவற்றை குறிப்பிட்டார்.  செவ்வியின் விபரம் வருமாறு  

கேள்வி: ஜனாதிபதி தேர்தல் களம் தற்போது எப்படி இருக்கிறது?

பதில்: எமது பிரச்சார செயல்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.  நாம் மிக முக்கியமாக கிராமத்துக்குள்ளேயே   தேர்தல் பிரச்சாரத்தை மையப்படுத்தி இருக்கிறோம். அனுராதபுரத்தில் பாரிய பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினோம். அதன் பின்னர் நாம் அதிகளவு கிராம மட்டத்தில் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்கிறோம்.  எமது பலம் அங்கேதான் இருக்கிறது. இம்முறை தேர்தலில் செலவுகளுக்கான ஒரு வரையறையும் காணப்படுகிறது. அடுத்த வாரத்திலிருந்து வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம்.

கேள்வி: அரசியல் தேர்தல்   களத்தில் எவ்வாறான நிலைமையை உணருகிறீர்கள்?

பதில்: மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர்.  எமக்கு வாக்களிக்க விரும்புகின்றனர். சிலர் நேரடியாக ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் வேறு வழிகளில் ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் மெளனமாக இருக்கின்றனர். 

கேள்வி: மக்கள் உங்களை சந்திக்கும்போது என்ன உங்களிடம் கேட்கின்றனர் ?

பதில்: நாட்டின் இன்றைய பொருளாதார பிரச்சனை மக்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கிறது. வரிசை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது,  மின்வெட்டு இல்லை என்று கூறப்பட்ட போதிலும் மக்கள் உள்ளக ரீதியில் நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.  பொருட்களின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே வரிசையுகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. 

மக்களின் நுகர்வு குறைவடைந்து இருக்கிறது. மக்களிடம் பணம் இல்லை. அன்றாடம் தொழில் செய்கின்றவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களே சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி மாத சம்பளம் பெறுகின்றவர்களுக்கு   வரியை செலுத்த வேண்டி இருக்கிறது.

எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும். கிராமிய வங்கிகளுடாக அவர்களை பலப்படுத்துவது அவசியம்.  அங்கிருந்து சந்தையை உருவாக்க வேண்டும்.  அடுத்ததாக முதலீட்டாளர்களை ஊக்குவித்து தொழில்களை உருவாக்குவது அவசியம்.

கேள்வி: இந்த தேர்தலில் பொருளாதாரம் தான் முக்கியமான பேசு பொருளாக இருக்கிறதா ?

பதில்: எந்த தேர்தலிலும் பொருளாதாரம் தான் மிக முக்கியமான பேசு பொருளாக இருக்கும். பொருளாதாரத்தை பலப்படுத்துவது மட்டுமின்றி பொருளாதாரத்தை சுயாதீனமாக்க வேண்டும். இன்னொரு நாட்டிடம் நாம் பொருளாதாரத்திற்கு தங்கி இருந்தால் அங்கு சுயாதீனம் இல்லை. அதற்கு நாம் தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். 

கேள்வி: உங்கள் பார்வையில் கோட்டா ராஜபக்சவுக்கு என்ன நடந்தது?

பதில்: கோட்டாபய அரசாங்கத்தில் பல நல்ல விடயங்கள் நடைபெற்றன. ஆனால் கோட்டா அரசாங்கம் தவறு இழைத்தது எங்கு என்று பார்க்க வேண்டும்.  எரிபொருள் வரிசை மற்றும் மின்வெட்டு ஆகிய இரண்டு விடயங்களில் தான் கோட்டா நெருக்கடியை சந்தித்தார். மின்வெட்டுக்கு காரணம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவாமையாகும்.

மேலும் கொரோனா நெருக்கடியும் வந்தது. ஆனால் இந்த இவ்வாறான எந்த பிரச்சனையும் இல்லாத பங்களாதேஷுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதே? எனவே கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர் என்பது நன்றாக தெரிகிறது.  

கேள்வி: 38 வயதில் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா?

பதில்: அரசியல் பயணம் தொடர்கிறது.  ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று நான் எண்ணி இருக்கவில்லை.  பொறுப்பு கிடைக்கும்போது அதனை ஏற்க வேண்டும்.  அரசியல்வாதிக்கு அந்த பண்பு இருப்பது அவசியம்.  நான் சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன்.  நெருக்கடி நேரத்தில் களமிறங்க வேண்டும். 

நாடு நன்றாக இருக்கும் போது நான் அரசியல் ரீதியாக நன்றாக பிரபலமடைந்திருக்கும் போது பொறுப்பை ஏற்பதில் பயனில்லை.  இவ்வாறான நெருக்கடி நேரத்தில் எம்மை போன்ற இளைஞர்கள் நவீன சிந்தனைகளை கொண்டவர்கள் களத்துக்கு வருவது அவசியம்.  அந்த வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நான் மரபுரீதியிலிருந்து வெளியே செல்வேன்.

என்னுடைய நோக்கம் மிகத் தெளிவானது. இந்த நாட்டின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன்.  சகல  இன மக்களினதும் கலாச்சாரங்களை பாதுகாப்பேன்.   சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள்.  ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர்.  சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர்.  ஆனால் நான் சகல மக்களினதும் கலாச்சாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன். 

கேள்வி: ரணில் விக்ரமசிங்கவை நெருக்கடி நேரத்தில் ஜனாதிபதியாக கொண்டு வந்தீர்கள். இரண்டு வருடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்கு நீங்கள் ஆதரவு அளித்திருக்கலாமே?

பதில்: இங்கு நீண்டகால விடயத்தையா அல்லது குறுகிய கால விடயத்தையா பார்க்க வேண்டும் என்பதே கேள்வியாகும்.  தற்போது எமக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. தற்போது சஜித் அநுர ரணில் ஆகிய மூன்று வேட்பாளர்களின் விஞ்ஞாபனத்தை பார்க்கும்போது அங்கு வளர்ச்சிக்கான இடமில்லை.  2029 ஆம் ஆண்டில் கடன் செலுத்த ஆரம்பிக்கும்போது மீண்டும் பிரச்சனை  ஏற்படும். எனவே அவற்றை ஆராய்ந்துவிட்டே போட்டியிட தீர்மானித்தோம்.

கேள்வி:  மஹிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் ரணிலை ஆதரிக்கலாம் என்று கூறியபோதும் நாமல் ராஜபக்ஷ அதனை எதிர்த்தபதாக கூறப்படுகிறது. அது உண்மையா?

பதில்: அது ஒரு பொய்யான தகவல். நாங்கள் ஆரம்பத்தில் அனைவரும் ரணிலுக்கு ஆதரவு வழங்கினோம்.  நிபந்தனையற்ற வகையில் நாம் ஆதரவு வழங்கினோம்.  அவர் கொண்டு வந்த சில சட்டங்களை எமது கொள்கைகளுக்கு முரணானவை.    எமது கொள்கைகளுக்கு இணங்குகின்ற ஒரு வேட்பாளருக்கே ஆதரவு வழங்க வேண்டும்.   நாம் தற்போதைய ஜனாதிபதிக்கு   முதலீடுகளை ஊக்குவிக்குமாறும்   தொழில் வாய்ப்புகளை உருவாக்குமாறும் கூறினோம். கலாச்சாரத்துக்கு பொருந்தாத சட்டங்களை கொண்டு வர வேண்டாம் என்று கூறினோம். ஆனால் அவற்றுக்கு அவர் செவிமடுக்கவில்லை. 

கேள்வி: கலாச்சாரத்துக்கு எதிரான வகையில் கொண்டு வந்த சட்டம் என்ன?

பதில்: ஓரின சேர்க்கை சட்டமூலத்தை குறிப்பிடலாம். கலாச்சாரத்துக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் கொண்டுவரக் கூடாது.  அவ்வாறு  செய்தால் அந்த தரப்பினர் கலாச்சாரத்தில் இருந்து ஒதுக்கப்படுவார்கள்.  அவர்களுக்கு சட்டத்தில் உரிமை கிடைத்தாலும் நாட்டின் கலாச்சாரத்தில் அவர்களுக்கு உரிமை கிடைக்காமல் போய்விடும். 

கேள்வி: நீங்கள் களமிறங்க எடுத்த முடிவுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கின்ற ஆதரவு குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா?

பதில்: இல்லை அப்படி இல்லை. எனது வாக்குகள் ரணிலுக்கு செல்லவில்லை. சென்றால் தானே பிரச்சினை வரும். அதனால் நான் போட்டியிடுவதால் ரணிலுக்கு எந்தபிரச்சினையும் இல்லை. 

கேள்வி: தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார்.  அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?

பதில்: ஒரு பக்கத்தில் அதனை நான் சிறந்த ஒரு விடயமாக பார்க்கிறேன்.  காரணம் இந்த நாட்டில் எவரும் எந்தவொரு இனத்தவரும் ஜனாதிபதியாகலாம் என்ற ஒரு சூழல் உருவாகிறது.  அரசியலமைப்பில் உள்ள விடயம் பிரயோகப்படுத்தப்படுகிறது.  சிறந்த ஆரம்பமாக இதனை நான் பார்க்கிறேன்.  எனது கட்சியிலும் தமிழ் தலைவர்கள் உருவாகுவார்கள். எனது கட்சியிலும் தமிழர்கள் தலைமைத்துவ பதவிக்கும் வருவார்கள் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

 

கேள்வி: எதிர்க்கட்சி தலைவர் சஜித்தை  சந்தித்து நீங்கள் பேசியதாக கூறப்படுவது?

பதில்: அது ஒரு பொய்யான தகவல். நான் அவரை சந்தித்து பேசவில்லை.

கேள்வி: அப்படியானால் இந்த வதந்தி எங்கிருந்து உருவாகின்றது?

பதில்: ராஜபக்ஷமார் எல்லோருடனும் நல்ல உறவை பேணுகின்றனர். மேலும்  தேர்தல் காரணமாக இந்த கதை உருவாகி இருக்கலாம்.

கேள்வி: உங்களை தவிர்த்து பிரதான மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன ?

பதில்: இந்த மூவருக்கும் ஒரே கொள்கையே காணப்படுகிறது.  அனுராவின் விஞ்ஞாபகனம் ரணிலின் விஞ்ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது.

கேள்வி: உங்களுடன் இளம்  அமைச்சர்கள் அதிகளவு இருந்தார்கள். அவர்களுக்கு உங்கள் அரசாங்கத்தில் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இன்று உங்களுடன் இல்லை. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இதுதான் அரசியல். சந்தர்ப்பம் கிடைத்ததும் அதனை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அங்கு இருக்கின்றனர் என்பதற்காக அங்கே தான் இருக்கின்றார்களா என்று யாருக்கும் தெரியாது. 

கேள்வி: அவர்களுடன் உங்களுக்கு எதிர்கால பயணம்  இருக்குமா?

பதில்: கொள்கை பதில் கொள்கை அடிப்படையில் பிரச்சனை இல்லாவிடில் பயணம் இருக்கும். 

கேள்வி: 13-வது திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் நீங்கள் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக  கூறுகின்றீர்கள். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கவே முடியாது என்று கூறுகின்றீர்கள். ஏனைய வேட்பாளர்கள் அது தொடர்பாக எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் பாராளுமன்றத்தில் ஆராயலாம் என்று கூறுகின்றனர்.  ஆனால் நீங்கள் ஏன்  இவ்வாறு கடினமான ஒரு போக்கை இந்த விடயத்தில் கையாளுகின்றீர்கள்?

பதில்: இந்த நாட்டில் பதவிக்கு வந்த  எட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமார்களும்  இந்த பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்கவில்லை. இரண்டு ஜனாதிபதிகள் அதனை வழங்குவதாக கூறிறே அதிகாரத்துக்கு வந்தனர். ஆனால் வழங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் அதனை வழங்கவில்லை.

எனவே இதனை அடுத்த வருடத்தில் வழங்க முடியும் என்று தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எவ்வாறு கூற முடியும்? பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு நாட்டில் ஒரு பகுதி மக்கள் எதிரிக்கின்றனர். அதனை வழங்கினால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படும் என்ற நிலைமையுள்ளது.  இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.  வர்த்தகங்களில் ஈடுபடுகின்றனர்.  நான் உண்மையை மட்டுமே கூறுவேன். வழங்க முடியாது என்றால் முடியாது என்பதனை  தெளிவாக  திட்டவட்டமாக உண்மையை கூறுகிறேன்.

தமிழ் இளைஞர்களும் நான் இவ்வாறு உண்மையை கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள். காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்று கூறுகின்ற நான் எனது முதலாவது தேர்தல் அலுவலகத்தை முல்லைத்தீவில் அமைத்தேன். 

கேள்வி: வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் பிரச்சனை இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: அரசியல்வாதிகளுக்கு தான் இந்த அரசியல் பிரச்சனை இருக்கின்றது.  மக்களின் பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகள் பேசுவதில்லை. பொலிஸ் அதிகாரத்தை வழங்கி விட்டதும் மக்களின் வயிறு நிறைந்து விடுமா?

கேள்வி: அப்படி என்றால் நீங்கள் ஜனாதிபதியானால் மாகாண சபை முறை இருக்காதா?

பதில்: மாகாண சபை முறை இருக்கும். நான் ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் உடனடியாக நடத்துவேன். வரலாற்றில் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்று கூறிய எவரும் உரிய நேரத்தில் தேர்தலை நடத்தவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ச முதல் முதலாக வடக்கில் தேர்தலை நடத்தினார். வடக்கில் இளைஞர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான் தெற்கிலும் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர்.

எனவே நாம் இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒரே கோணத்தில் ஆராய வேண்டும். இவற்றுக்கு இரண்டு தீர்வுகள் இல்லை. ஒரே தீர்வு தான் இருக்கிறது. தெற்கில் இளைஞர்களுக்கு கிடைக்கின்ற சகல உரிமைகளும் சந்தர்ப்பங்களும் வடக்கில் கிழக்கில் இருக்கின்ற இளைஞர்களுக்கும் கிடைக்கும் என்பதை  உறுதிப்படுத்துகிறேன். பொய் வாக்குறுதிகளை வழங்க முடியாது. புதிய தலைவரான என்னிடம் புதிய விடயங்களை மக்கள் எதிர்பார்க்கலாம்.

கேள்வி: வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் சமஷடி கோரிக்கையை முன்வைக்கின்றனவே?

பதில்:  இது ஒரு அரசியல் தீர்மானமாக இருக்கிறது. அதற்காகத்தான் மைத்திராபாலவை  ஆட்சிக்கு கொண்டுவந்தனர். அப்போது கூட இதனை பெற முடியாமல் போய்விட்டது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதெனில் அது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். அது ஜனாதிபதியின் பொறுப்பல்ல.  நிறைவேற்று அதிகாரம் முறை மற்றும் தேர்தல் முறையை ஒன்றாகவே மாற்றவேண்டும். ஜனாதிபதி தேர்தல் மேடையில் அது தொடர்பாக வாக்குறுதி வழங்குவதில் அர்த்தமில்லை.  

கேள்வி:  செனட் சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? 

பதில்: இந்த விடயங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தலாம். அதற்கு எமது கதவுகள் திறந்து இருக்கின்றன. அதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷ தீர்மானிக்க முடியாது. இதனை ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானிக்க முடியாது.

கேள்வி:  வடக்கில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இளைஞர் யுதிகளுடன் உங்களுக்கு கடந்த காலங்களில் சிறந்த தொடர்பு இருந்தது. அந்த தொடர்பு இன்னும் இருக்கிறதா?

பதில்: இன்னும் சிறப்பாக இருக்கின்றது.  கடந்த சில வருடங்களில் அங்கு எனது பிரசன்னம்   குறைவாக இருந்தது. ஆனால்  அவர்களுடனான எனது உறவு சிறப்பாகவே தொடர்கிறத.  அவர்களது நிகழ்வுகள் பிறந்த நாள் நிகழ்வுகள் வீட்டு நிகழ்வுகளுக்கு நான் அடிக்கடி சென்று வருவேன்.  தற்போது தேர்தல் காலத்தில் நிச்சயமாக நான் அங்கு செல்வேன். அங்கு கூட்டங்களை நடத்துவேன்.  அங்குள்ள இளைஞர்களுடன்  எனது உறவு அரசியல் ரீதியானதல்ல. அது தனிப்பட்ட உறவாகவே காணப்படுகிறது.  அதிகமானோருக்கு இது தெரியாது.  

கேள்வி: 2009 இல் யுத்தம் நிறைவடைந்தது. ஆனால் இன்னும் காணாமல் போனோர் பிரச்சனை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.  இதனை நீங்கள் எப்படி கையாள்வீர்கள்?  

பதில்: காணாமல் போனோர் பிரச்சினைக்கு நிச்சயமாக ஒரு பதில் வழங்கியாக வேண்டும். தொடர்ந்து காணாமல் போனோர் குறித்த  ஆணைக்குழுக்களை நியமித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.  ஒரு பதில் வழங்க வேண்டும். அந்த பதிலை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.  நான் ஜனாதிபதியாகியதும் அரசியல் கைதிகளை  விடுதலை செய்துவிடுவேன். 

கேள்வி: கொரோனா காத்தில் முஸ்லிம் மக்களின் சடலங்ளை தகனம் செய்த விடயம் ஒரு மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்தது.  அந்த நேரத்தில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

பதில்: அது தனிப்பட்ட ரீதியில் எடுத்த முடிவல்ல. நிபுணத்துவ குழு வழங்கிய ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு.  ஆனால் நிபுணத்துவ குழு கோட்டாவை தவறாக வழிநடத்தியது.

கேள்வி: நீங்கள் அப்போதே அவ்வாறு கருதுனீர்களா?

பதில்: எந்த நேரத்தில் அவ்வாறு நான் சிந்திக்கவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் நாட்டு மக்களை பாதுகாப்பதே பிரதான தேவையாக இருந்தது. நிபுணத்துவ ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்பதே சகலரதும் கருத்தாக இருந்தது. ஆனால் சிறிது காலம் செல்லும்போது இந்த நிபுணத்துவ குழு கோட்டாவை தவறாக வழி நடத்துகிறது என்பதை புரிந்துகொண்டோம்.

போராட்டக் களத்தில் முஸ்லிம் மக்கள் கோட்டாவுக்கு எதிராக உடல் தகன விவகாரத்தில் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தபோது   அருகில் அதற்கு ஆலோசனை வழங்கிய நிபுணத்துவகுழு உறுப்பினர்களும்  பதாதைகளை பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போதுதான் இது உபாய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.  

கேள்வி: இந்த நேர்காணல் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு நீங்கள் இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: இது நாங்கள் தனிப்பட்ட ரீதியாக எடுத்த முடிவல்ல. நிபுணத்துவ ஆலோசனை பேரில் செய்யப்பட்ட விடயம். மக்களின் பாதுகாப்புக்காக இது செய்யப்பட்டது.  ஆனால் இந்த முடிவு காரணமாக மக்கள் காயப்பட்டிருந்தால் அதற்காக நாம் மன்னிப்பு  கோருகிறோம்.  உடல் தகன  விவகாரம் மற்றும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட கடினமான முடிவுகள் காரணமாக யாராவது காயப்பட்டிருந்தால் கவலை அடைந்திருந்தால் அதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம்.  

கேள்வி: இந்தியா சீனாவுடனான உங்கள் வெளிவிவகார கொள்கை எப்படி இருக்கும்?

பதில்: நான் இரண்டு நாடுகளுடனும் நட்பு ரீதியான ஒரு கொள்கையை முன்னெடுப்பேன். நட்புரீ மற்றும் அருகாமை நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற  மற்றும் அணிசேரா கொள்கையை நான் பின்பற்றுவேன். எமது அபிவிருத்திக்கு முதலீடுகளுக்கு மற்றும் சுற்றுலாத்துறைக்கு இந்த இரண்டு நாடுகளும் மிக முக்கியத்துவமானவையாகும். ஆனால் இன்னும் ஒரு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு எமது நாட்டை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன். 

கேள்வி: இந்தியா இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை கொள்வதாக கூறப்படுகிறதே? 

பதில்: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் நாம் கரிசனை கொள்வோம். 

கேள்வி:  ஜனாதிபதி வேட்பாளர் என்று ரீதியில் தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் ? 

பதில்: தமிழ் பேசும் மக்களின் கலாசாரங்களை விழுமியங்களை பாரம்பரியங்களை நான் காப்பாற்றுவேன்.   மதங்களை காப்பாற்றுவேன். யுத்த காலத்திலும் கொரோனா  காலத்திலும் கூட நாங்கள் நல்லூர் திருவிழாவை சிறப்பாக நடத்தினோம். பொய் வாக்குறுதிகளை வழங்கமாட்டேன். 

பொய் வாக்குறுதிகளை வழங்குபவர்களிடம் சிக்க வேண்டாம் என்று நான் கூறுகிறேன்.  30 - 40 வருடங்கள் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாற்றமடைந்து விட்டீர்கள். எனது தந்தையும் 13 பிளஸ் என்ற விடயத்தை முயற்சி செய்தார். அது நடக்கவில்லை. அவற்றில் பாடங்களைக் கற்றுத்தான் நான் இந்த நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறேன்.  வரலாற்று ரீதியான பாடங்கள் நிகழ்வுகளில் இருந்து பாடங்களை கற்று  நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறேன். 

கேள்வி: மஹிந்த ராஜபக்சவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான உறவு எவ்வாறானது?

பதில்: அது மிகவும் நெருக்கமான உறவு. தந்தை என்ற ரீதியில் அவர் என்னை வழி நடத்துகிறார். எனது பிரச்சாரத்தில் முன்னணியில் அவர் தான் இருக்கிறார்.  தவறு செய்தால் திட்டுவார். ஆனால் ஒருபோதும் என்னை அடித்ததில்லை. ஆலோசனை வழங்குவார்.  ஆனால் முழுமையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறார். 

கேள்வி: நீங்கள் ஜனாதிபதி தேர்தல் தேர்தலில் களமிறங்குவதற்கு தந்தை ஆரம்பத்தில் விரும்பினாரா?

பதில்: கட்சியும் தந்தையும் பசிலும் எடுத்து ஒரு முடிவே இதுவாகும். கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நான் போட்டியிடவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். 

கேள்வி:  நீங்கள் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் உங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் உங்களுடன் மீண்டும் பேசினார்களா ?

பதில்: அவர்கள் இன்னும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். அங்கிருந்தும் சிலர் எனக்கு உதவி செய்கின்றனர். சிலர் வருவார்கள். சிலர் அங்கிருந்து எனக்கு உதவி செய்வார்கள். 

கேள்வி: இந்திய பிரதமர் மோடியுடனான உங்கள் எத்தகையது?

பதில்: அது கொள்கை ரீதியாக ஏற்பட்ட பிணைப்பினால் ஏற்பட்ட உறவு. இந்திய பிரதமர் மோடியும் மதங்களை கலாசாரங்களை மதிப்பவர்.  அவர் அசைவம் உண்ண மாட்டார். இந்து மற்றும் பௌத்த கலாச்சாரங்களை மதிப்பவர். அந்த  வழியிலேயே நானும் பயணிக்கிறேன்.  இந்து மற்றும் பௌத்த கலாச்சாரங்களை  ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.  நாம் இருவரும் சந்திக்கும் போது பரஸ்பரம் அக்கறை உள்ள விடயங்கள் தொடர்பாக பேசுவோம்.    

கேள்வி: இந்திய பிரதமர் மோடி உங்களை சந்திக்கும்போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை தீர்த்து விடுங்கள், அதனை ஏன் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறாரா?

பதில்: இந்திய பிரதமர் மற்றும் இந்திய அரசாங்கம் ஒருபோதும் ஏனைய நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதில்லை. அவர்கள் தங்களது பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவே கவனம் செலுத்துவார்கள்.   

கேள்வி: பிரசார காலத்தில் உங்கள் பிள்ளைகளுடன் இருக்கின்ற சந்தர்ப்பங்களை இழக்கின்றீர்களா?

பதில்: நான் எங்கிருந்தாலும் அவர்களுடன் வீடியோ தொடர்பை ஏற்படுத்தி பேசி விடுவேன். வீட்டில் இருக்கும்போது அவர்களுடன் நெருக்கமாக இருப்பேன். 

https://www.virakesari.lk/article/192602

விமான நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் வரிசை நிலைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் : ரவூப் ஹக்கீம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 7   04 SEP, 2024 | 05:42 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர். விசா விநியோகம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவை மீறி செயற்படுவதே இதற்கு காரணமாகும். அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பத்தரமுல்லையில் கடவுச்சீட்டுக்கு வரிசையில் மக்கள் இருக்கும் நிலையில் விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர்.

எமது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு இருந்து வரும் தடைகள் தொடர்பில் சுற்றுலா பயணிகள் தங்களின் முகப்புத்தகங்கள் ஊடாக தகவல் வெளியிட்டு வருகின்றனர். இது எமது நாட்டின் கெளரவத்துக்கு பாதிப்பாகும்.

விசா விநியோகத்தில் இடம்பெற்றுவரும் பாரிய மோசடி தொடர்பில் உயர் நீதிமன்றில் நாங்கள் தொடுத்த வழக்கு காரணமாக, நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு தடை உத்தரவொன்றை வழங்கி இருக்கிறது. என்றாலும் நீதிமன்ற உத்தரவையும் கண்டுகொள்ளாது இன்னும் அந்த முறைப்படியே விசா விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. 

அதேநேரம் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் செயற்படாமல் இருப்பதற்கான நியாயத்தை சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் விடயத்துக்கு பொறுப்பானவர்கள் தாங்கள் ஆரம்பித்த இந்த விடயத்தை எப்படியாவு தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்படுகின்றனர்.

நீதிமன்ற உத்தரவரை உதாசீனம்  செய்து செயற்படுவதனாலே இந்த பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாகும். அதனால் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். எனவே விசா விநியாேகம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் செயற்பட  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/192850

மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் யாழில் கைது!

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

04 SEP, 2024 | 01:31 PM
image
 

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

அந்தவகையில் இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/192821

வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றத்தில் கைதானவர் விளக்கமறியலில்

3 months 2 weeks ago
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றத்தில் கைதானவர் விளக்கமறியலில்

Published By: DIGITAL DESK 3   04 SEP, 2024 | 11:19 AM

image

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தொலைபேசி மற்றும் முகநூல் என்பன நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு திடீரென செயலிழந்திருந்ததுடன், வைத்தியசாலை விடுதிக்கு முன்னால் அவரது கார் தரித்து நின்றமையாலும் பல்வேறு விதமான சந்தேகங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக எழுப்பட்டிருந்தது. 

வைத்தியரை காணவில்லை எனவும் சாவகச்சேரி பொலிஸாருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டன. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் பொலிஸார் வைத்தியசாலைக்கு வந்திருந்தனர். 

அந்நிலையில் யூடியூபர் இருவர் உள்ளிட்ட மூவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து காணொளிகளை எடுத்ததுடன், சமூக வலைத்தளங்களில் நேரலையில், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை தெரிவித்ததுடன், தவறான தகவல்களையும் பரப்ப முற்பட்ட நிலையில் மூவரையும் பொலிஸார் கைது செய்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று இருந்தனர்.

அதேவேளை, விடுதிக்குள் வைத்தியர் இருந்த நிலையில் பொலிஸார், கதவை தட்டி வைத்தியரை வெளியே அழைத்த வேளை, வைத்தியர் பதில் எதுவும் கூறாததால், கதவினை உடைக்க முயற்சித்த வேளை, வெளியே வந்த வைத்தியர், எதற்காக விடுதிக்குள் வந்தீர்கள் என பொலிஸாருடன் தர்க்கப்பட்டு கொண்டார். அதனால் பொலிஸார் அவ்விடத்தில் இருந்து வெளியேறி இருந்தனர். 

அந்நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய வேளை யூடியூபர்ஸ் இருவரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, மற்றைய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர், கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்த போது சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுக்கப்பட்டிருந்த நிலையிலையே, தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/192811

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் இனவாதி : தமிழ் மக்களை பழிவாங்கியுள்ளார் - சுமந்திரன் கடும் சாடல்

3 months 2 weeks ago

Published By: VISHNU   04 SEP, 2024 | 04:18 AM

image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் மிக மோசமான இனவாதியாக ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க  செயற்படுகின்றார். இதனை தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ராஜபக்‌ஷக்களுடன் கூட்டு சேர்ந்து மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று ஜனாதிபதி தடுக்கும் இனவாத செயற்பாடாகவே இதனை நாங்கள் பார்க்க வேண்டும். ரணில் - ராஜபக்ஷ என்று குறிப்பிடுவதை ஜனாதிபதி நிரூபித்து விட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அமர்வின் போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்டமூல தனிநபர் பிரேரணை ஒன்றை நான் முன்வைத்திருந்தேன். இந்த பிரேரணையின் இரண்டாம் வாசிப்பு விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. தனிநபர் பிரேரணை தொடர்பான நிலையியல் கட்டளை பிரிவுக்கு சட்ட மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் குழுவில் செப்டம்பர் 3ஆம் திகதி மூன்றாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இணங்கிய போதும்,  அது இன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. ஆனால் இதில் அரசியல் தலையீடு இருந்த காரணத்தினாலா இது தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்று கேட்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதற்கு காரணமா? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த வேறு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கவே இலங்கை தமிழரசுக் கட்சித் தீர்மானித்துள்ளது. இவ்வாறான நிலைமையில் நிலையியல் கட்டளையை மீறியும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் தீர்மானத்தை மீறியும் இதனை தாமதப்படுத்தியுள்ளனர். இது தமிழ் மக்கள் மீதான பழிவாங்கல் செயற்படாகும்.

ஜனாதிபதியுடன் நான் இந்த சட்டமூலம் தொடர்பில் கதைத்த போது இதில் பிரச்சினையில்லை. மூன்றாம் வாசிப்புக்காக எடுக்கலாம்  என்றும் இது தொடர்பில் சபை முதல்வருக்கு அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் மூன்றாம் வசிப்புக்காக நிகழ்ச்சி நிரலில் சட்டமூலம்  உள்ளடக்கப்படவில்லை.

ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க   பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவியேற்ற போது ரணில் -ராஜபக்‌ஷ என்றே அவரை கூறினர். ஆனால் அவரே அதனை நிரூபித்துள்ளார். அவருக்குள்ள அதிகாரத்துக்கமைய இந்த சட்டமூலத்தை தாமதப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி  நிறைவேற்று அதிகார  மற்றும் அமைச்சரவையின் பிரதானியே. இதன்படி அவரால் இது தொடர்பில் அறிவிக்க முடியும். ஆனால் இறுதி நேரத்தில் ஏன் அவர் இவ்வாறு செய்ய வேண்டும். இது தமிழ் மக்களை பழிவாங்கும் செயற்பாடே ஆகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் முன்னாலும் நாட்டு மக்கள் முன்னாலும் இனவாதியாக காட்டப்படுவார். தமிழ் மக்களுக்கு எதிராக அவர் செய்யும் இந்த விடயம், தான் செய்வதாக வழங்கிய வாக்குறுதி எதனையும் அவர் செய்ததில்லை. அவர் இப்படியாக கடைசி நேரத்தில் தடுத்துள்ளார். நான் செய்ய இருந்த விடயம் என்றும் அதற்கு அனுமதி வழங்குவதாகவும் கூறிவிட்டு கடைசி நேரத்தில் எங்கள் மீது காட்டும் வெறுப்பாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம்.

நாட்டில் மிக மோசமான இனவாதியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பதற்கான வெளிப்பாடே இது. தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ராஜபக்‌ஷக்களுடன் கூட்டு சேர்ந்து மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று ஜனாதிபதி தடுக்கும் இனவாத செயற்பாடாகவே இதனை  பார்க்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/192789

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜனாதிபதி - வே. இராதாகிருஷ்ணன்

3 months 2 weeks ago

Published By: VISHNU   04 SEP, 2024 | 04:09 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முதலைக்கண்ணீர் வடித்த ஜனாதிபதி தற்போது அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். அரசாங்கம் தெரிவித்துள்ள சம்பள அதிகரிப்பு எதிர்வரும் மாதமும் கிடைக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்ததபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீது இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தாெழிலாளர்களின் சம்பள பிரச்சினை இன்று பூதாகரமான பிரச்சினையாக இருந்து வருகிறது. தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபா என சொல்லப்பட்டது. பின்னர் அது 1300 ரூபா என்றார்கள். ஆனால் இன்னும் ஒரு முடிவில்லாமல் இருக்கிறது. அதேநேரம் இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பாக எஸ்.பி. திஸாநாயக்கவும் வடிவேல் சுரேஷ் இராஜாங்க அமைச்சரும் கதைக்கொண்ட விடயம் தற்போது பரவலாகி வருகிறது. இதன்போது சம்பள அதிகரிப்பு வழங்காத முதலாளிமார்களின் வீடுகளுக்கு தீ வைக்கவேண்டும் என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது பயங்கரமான வார்த்தையாகும்.

அதேநேரம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக முதலைக்கண்ணீர் வடித்து வந்த ஜனாதிபதி, தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். எதிர்வரும் மாதமும் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. எதிர்காலத்திலாவது அவர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு இடம்பெறாவிட்டாலும் பெருந்தோட்டங்களில் புதிதாக மதுபானசாலைகள் திறக்கப்படுகின்றன. அண்மையில் திறக்கப்பட இருந்த மதுபானசாலையை நாங்கள் தடுத்து நிறுத்தினோம்.

மேலும் இந்த தேர்தலில் ஜனாதிபதி வெற்றிபெறாவிட்டாலும் இன்னும் 6மாதங்களில் ரணில் விக்ரமசிங்கவே நாட்டை பொறுப்பேற்கவேண்டிவரும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை. ஜனாதிபதிக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டடு, அவரால் முடியாவிட்டால், வெளிநாட்டில் இருந்து ஜனாதிபதி ஒருவரை கொண்டுவருவதா அல்லது நாட்டை வெளிநாட்டுக்கு விற்பனை செய்துவிடுவதா என கேட்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/192787

வடக்கு கிழக்கை மையப்படுத்தி சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு; சஜித் அறிவிப்பு!

3 months 2 weeks ago

Published By: VISHNU   04 SEP, 2024 | 12:25 AM

image

போர் நிறைவுற்று நீண்டகாலம் ஆகியும் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு ஒன்றை இந்த ஆட்சியாளர்களால் நடாத்தமுடியாமல் உள்ளது. இதுபற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. எதிர்காலத்தில் வடகிழக்கு மாகாணங்களை அடிப்படையாகவைத்து சர்வதேச கொடையாளர் மாநாடு ஒன்றை நடாத்தி இந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்வேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள யங்ஸ்டார் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்;

அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். எனது ஆட்சியில் அவர்களுக்கு  25 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 25ஆயிரமாக அதிகரிக்கப்படும். குறைந்தபட்ச ஊதியமாக 57500 ரூபா  மாற்றப்படும்.

அரச ஊழியர்கள் இந்த நாட்டின் சொத்து. அரச சேவையின் தரம் விருத்தி செய்யப்படவேண்டும். 

உங்களுடைய ஒத்துழைப்பை எங்களுக்குத் தாருங்கள். எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து உங்களின் சகல பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம். 

அத்துடன் இந்த வவுனியா பிரதேசத்தில் வாழ்கின்ற கிராமபுறமக்களின் வாழ்வாதாரத்தினை எனது அரசு மேம்படுத்தும். பல்துறைகளிலும் அபிவிருத்தியடைந்த இடமாக இதனை மாற்றுவதற்கான நடவடிக்கையினை நிச்சயமாக எடுப்பேன். 

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் அரசியல் சதி செய்து என்னைத் தோற்கடித்தார்கள். என்னால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அனைத்தும்  கோட்டா அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டது. எனவே எனது ஆட்சியில்  நிறுத்தப்பட்ட அனைத்து வீட்டு வேலைத்திட்டங்களும் நிச்சயமாக முழுமையாக வழங்கப்படும்.  

அத்தோடு நாட்டின் வறுமை நிலையினை குறைக்கவேண்டும். சேமிப்பு, முதலீடு, நுகர்வு, உற்பத்தி ஏற்றுமதி இவற்றினை மையப்படுத்தி வறுமை நிலையில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களிற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் சுயபொருளாதாரத்தினை வளர்ச்சியடை செய்யவேண்டும். இந்த நிலையான வேலைத்திட்டத்தினை  நடைமுறைப்படுத்துவேன். 

கல்வித்துறை, சுகாதாரத்துறை, விவசாயத்துறை ஆகியன எனது ஆட்சியில் மேம்படுத்தப்படும். மகாவலி எ வலயம் அபிவிருத்தி செய்யப்படும். விவசாயக்கடன்கள் அனைத்தும் நீக்கப்படும். புதிய உபகரணங்கள் விவசாயிகளிற்கு வழங்கப்பட்டு விவசாயத்தில் புதிய முறைமை ஒன்று உருவாக்கப்படும்.

வவுனியாவில் இளைஞர்களின் தொழில் வாய்ப்பினை கருத்தில்கொண்டு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு பிரச்சனைகள் தீர்க்கப்படும். இந்த அரசாங்கத்தினால் ஒரு கடவுச்சீட்டைக் கூட சீராக வழங்க முடியாதிருக்கின்றது.

இந்த நிலைமையில் அவர்களால் எவ்வாறு தொழிற்சாலைகளை வழங்கமுடியும். தொழிற்சாலைகளை எரித்து அழித்தவர்கள் எவ்வாறு அதனை நிறுவித்தருவார்கள்.

எனவே நீங்கள் நன்றாகச் சிந்தியுங்கள்.

ஜக்கியமக்கள் கூட்டமைப்பு சிறப்பான அணியினை கொண்டது, நாட்டை சிறப்பாக வழிநடத்தக்கூடிய சிறந்த அணி எம்மிடம் உள்ளது. போர் நிறைவுற்ற பின்னர் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு ஒன்றை இந்த ஆட்சியாளர்களால் நடாத்தமுடியாமல் உள்ளது. இதுபற்றி அவர்கள் சிந்தித்தார்களா? எதிர்காலத்தில் வடகிழக்கு மாகாணங்களை அடிப்படையாகவைத்து சர்வதேச கொடையாளர் மாநாடு ஒன்றை நடாத்தி இந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்ய முயற்சிகளை எடுப்பேன். எனவே எதிர்வரும் காலத்தில் அபிவிருத்தி புரட்சியோடு நாம் உங்களைச் சந்திப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/192786

பதில் அதிபர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையை எதிர்பார்க்கிறோம் : கல்வி அமைச்சர்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 7   03 SEP, 2024 | 06:39 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் இருக்கும் பதில் அதிபர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இது தொடர்பாக வழக்கு விசாரணையும் இடம்பெறுவதால், இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03)  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹினி குமாரி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ரோஹினி எம்.பி. தெரிவிக்கையில், நாடு பூராகவும் 18ஆயிரம் பதில் அதிபர்கள் கடமையில் இருந்து வருகின்றனர். அவர்களை அதிபர்களாக அவ்வாறே நியமிப்பதா அல்லது அவர்களுக்கு எடுக்க இருக்கும் நடவடிக்கை என்ன? அதேபோன்று அபிவிருத்தி அதிகாரிகளாக பாடசாலைகளில் ஆசிரியர்களாக சேவை செய்துவரும் 16ஆயிரம் ஆசிரியர்கள் தொடர்பில் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறேன் என்றார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்ந்து பதிலளிக்கையில்,

பதில் அதிபர்களாக கடமை செய்துவரும் 18ஆயிரம் அதிபர்கள் கஷ்டப்பிரதேச பாடசாலைகளிலேயே சேவையாற்றுகின்றனர். அதனால் அவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, அது அரச சேவை ஆணைக்குழுவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அரச சேவை ஆணைக்குழுவின் கொள்கைக்கமைய அந்த விடயம் மிகவும் கஷ்டமான நிலைக்கு சென்றது. என்றாலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

அதனால் வழக்கு விசாரணையை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் நாங்கள் அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையை எதிர்பார்த்து இருக்கிறோம்.

அத்துடன் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. என்றாலும் தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் இடையில் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கை ஆரம்பத்தில் இடம்பெற்று வந்தது. என்றாலும் தற்போது அரச சேவை ஆணைக்குழுவின் புதிய சட்டத்தின் பிரகாரம் தேசிய பாடசாலை,  மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடமாற்றம் செய்ய முடியாது. 

அதனால் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மாகாண ஆளுநர்களின் ஒப்புதலை எடுத்துக்கொண்டு, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்

மேலும், பாடசாலைகளில் தற்போது அபிவிருத்தி அதிகாரிகளாக இருக்கும் 16ஆயிரம் ஆசிரியர்களை அந்த பாடசாலைகளில் தொடர்ந்து ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள இருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வழியாென்றை ஒரு வாரத்துக்குள் பரிந்துரைக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்திருக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/192779

Checked
Sun, 12/22/2024 - 16:01
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr