ஊர்ப்புதினம்

தமிழ் மக்கள் என் பக்கமே; ரணிலின் நம்பிக்கை

3 months 2 weeks ago

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040 காலப்பகுதியில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடவுச் சீட்டு பெறுவதில் உள்ள நெரிசலை விரைவில் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தாம் விரும்பிய அமைச்சரவையை நியமிக்காது, நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாகவும், இதற்காக மக்கள் தமக்கு விருப்பமானவர்களை புதிய பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள போது, இந்நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/308958

ஒக்டோபர் முதல் நவீன கடவுச்சீட்டு – மக்களிடம் நெருக்கடி நிலைக்கு மன்னிப்பு கோரிய ஜனாதிபதி

3 months 2 weeks ago
DIGITAL-PASSPORT.jpg?resize=750,375 ஒக்டோபர் முதல் நவீன கடவுச்சீட்டு – மக்களிடம் நெருக்கடி நிலைக்கு மன்னிப்பு கோரிய ஜனாதிபதி.

கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடவுச்சீட்டு தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு விரைவில் நாம் மாறாவிட்டால், 2035 முதல் 2040 வரையான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மீண்டும் ஒரு நெருக்கடி நிலை ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இனம், சாதி, மதம் அன்றி நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில், தாம் மகிழ்ச்சியடைவதாக சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒக்டோபர் மாதம் முதல் நவீன கடவுச்சீட்டை குறைந்த கட்டணத்தில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1398069

யாழில் சர்வதேச விளையாட்டு மைதானம் – சஜித் வாக்குறுதி

3 months 2 weeks ago
eeee.jpg?resize=650,369 யாழில் சர்வதேச விளையாட்டு மைதானம் – சஜித் வாக்குறுதி.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மைதானத்துடன் யாழ்ப்பாண இளைஞர்களுக்கான விளையாட்டு மேம்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தின் போது கிரிக்கெட் மைதானம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த உரையாடல் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான யோசனைக்கு வழிவகுத்ததாக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் ஆய்வு செய்ததாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் பாரிய காணி கையாளப்படுவதை அறிந்ததாக தெரிவித்த அவர், காணி ஒதுக்கப்பட்ட போதிலும், கிரிக்கெட் மைதானமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

 

குறித்த காணி சர்வதேச கிரிக்கட் மைதானமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், விளையாட்டுப் பயிற்சி வசதிகளும் அப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1398084

ரணிலையும், சஜித்தையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன!

3 months 2 weeks ago
anura-2.jpg?resize=750,375&ssl=1 ரணிலையும், சஜித்தையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் மக்கள் கூட்டம் இன்று காலி, எல்பிட்டிய நகரில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு தொடர்பாக சிந்தித்திருந்தால் எவ்வளவோ வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்க முடியும்.ஆனால் அவர் அப்போது அதனை செய்யவில்லை.

இன்று அவர் தேர்தல் தோல்விக்கு அஞ்சி வாக்குறுதிகளை வழங்கிவருகின்றார். மக்கள் பெரும்பான்மை தமக்கு இல்லை என்பதை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நன்கு அறிவார்.
ரணிலும் சஜித்தும் இன்று வெவ்வேறாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

இருவரும் தனித்து போட்டியிடுவதனால் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் வெற்றிபெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர்கள் அறிவார்கள். எனவே தற்போது ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

ஒன்றிணைவது தொடர்பாக ரணிலும் சஜித்தும் இதுவரை கலந்துரையாடவில்லை. ஆனால் இரண்டாம் நிலையில் உள்ளவர்கள் அது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். நாட்டு மக்களின் ஆணை தேசிய மக்கள் சக்திக்கே உள்ளது.

நாட்டில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவே நாம் மக்கள் ஆணையை கோருகின்றோம். நாடு தொடர்பாகவும் மக்கள் தொடர்பாகவும் சிந்திக்காதவர்களுக்கு மக்கள் ஒருபோது வாக்களிக்க மாட்டார்கள்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1398027

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம் - சஜித் பிரேமதாச!

3 months 2 weeks ago
03 SEP, 2024 | 06:48 PM
image
 

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 31 ஆவது மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும்  சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இங்கு மேலும் உரையாற்றிய சஜித் பிரேமதாச, 

எமது நாட்டின் அரச கொள்கைகளை செயல்படுத்துவது அரச ஊழியர்கள் ஆகும்.  

தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற சந்தர்ப்பத்தில், அரச ஊழியர்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், திடீர் திடீரென்று சம்பளத்தை அதிகரிப்போம் என்று பொய் வாக்குறுதிகளை வழங்குகின்ற இந்த நிலையில், ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை 24% ஆல் அதிகரிப்பதோடு, வாழ்க்கைச் செலவு கொடுப்பணவை 17800 ரூபாயிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரித்து, அடிப்படைச் சம்பளத்தை 57 500 ரூபா வரை அதிகரிப்போம். 

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம். 

6 - 36% ஆக காணப்படுகின்ற வரிச்சூத்திரத்தை 1-24%  வரை குறைத்து, அரச ஊழியர்களையும் நடுத்தர வகுப்பினர்களையும் வலுப்படுத்துவோம்.  

சுமார் 7 இலட்சம் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்திக்கு உங்களுடைய வாக்கை அளிக்குமாறு கோருகின்றோம்.  

அத்தோடு அரச ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களுக்கான சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். 

முகாமைத்துவ, அபிவிருத்தி துறை, கிராம உத்தியோகத்தர், விவசாய துறை, கல்வித்துறை, மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரச ஊழியர்களும் இந்நாட்டின் வளங்களாகும்.  

அரச ஊழியர்கள் இந்நாட்டின் சுமை என்று இந்த அரசாங்கம் கருதியது. அரச சேவை துறை இந்த நாட்டை பாதிக்கின்றது என்று மாற்று அரசியல் சக்திகள் கூறியது. 

 அரச சேவையை பாதுகாத்து, புதிய பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி, திறமைகளையும் ஆளுமைகளையும் தொழில்நுட்பத்தின் ஊடாக விருத்தி செய்து அதனை முன்னெடுத்துச் செல்வது ஐக்கிய மக்கள் சக்தியே. 

பொலிஸாருக்கு வழங்கிய மூன்று மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதோடு, பதவி உயர்வுகளையும் மீள பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.  

முப்படைகளில் வன் ரேங்க் ஒன் பே திட்டத்தை செயல்படுத்துவதோடு, சிவில் பாதுகாப்பு அதிகாரிகளையும் பாதுகாத்து எமது நாட்டின் அரச சேவையை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அத்தோடு அரச சேவையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பயிற்சிகளும் வழங்கப்படும். 

அத்தோடு கோட்டாபயவின் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து, கம்உதாவ யுகத்தை உருவாக்குவோம். 

 அன்று மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கியிருந்தால் இன்று அந்த வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.  

கோட்டாபயவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான மூலோபாயத்தின் சூத்திரதாரி ரணில் விக்ரமசிங்க ஆகும். அவர் கோட்டாபயவை வெற்றி பெறச் செய்வதற்கான தந்திரங்களையும் மேற்கொண்டார். 

வறுமையை போக்குவதற்கான புதிய வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நுகர்வு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து துறைகளை மையமாகக் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.  

மாதம் ஒன்றுக்கு 20,000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்கி, வறுமையை ஒழிக்கும் சிறந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கடந்த ஜனாதிபதிகளாலும் தற்போதைய ஜனாதிபதிக்கும் கூட கூட்ட முடியாமல் போயிருக்கின்றது.  

அவர்களின் இயலாமை மற்றும் இனவாத கொள்கை என்பனவற்றினாலே இந்த மாநாட்டை கூட்டமுடியாதுள்ளனர்.  

எனவே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இரண்டு மாகாணங்களையும் மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டி, அதனுடாக முழு நாட்டுக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்றார்.  

WhatsApp_Image_2024-09-03_at_16.14.57.jp

WhatsApp_Image_2024-09-03_at_16.14.39.jp

WhatsApp_Image_2024-09-03_at_16.14.38.jp

WhatsApp_Image_2024-09-03_at_16.14.55__1

WhatsApp_Image_2024-09-03_at_16.14.40.jp

https://www.virakesari.lk/article/192767

முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை

3 months 2 weeks ago

தமிழ் பொது வேட்பாளருக்கு முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் கூறியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் யாழ்.வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ் பொது வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கியுள்ளது என்பது தொடர்பாக வருகைதந்தவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

அதற்கு பதில் வழங்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீங்கள் விரும்பியது போன்று தமிழ் பொது வேட்பாளருக்கு உங்களுடைய முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துங்கள் என்று கூறியதாக இ.ஜெயசேகரம் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன, பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

https://thinakkural.lk/article/308937

சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு பதவி உயர்வு!

3 months 2 weeks ago
03 SEP, 2024 | 11:49 AM
image
 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.  

கலைப்பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. 

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி, சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.  

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. ஶ்ரீகணேசனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் அன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 

அவற்றின்ஆடிப்படையில், ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. ஶ்ரீகணேசன் ஆங்கில மொழி கற்பித்தலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/192715

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணை வெளியானது

3 months 2 weeks ago

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் நடைபெறும்.

அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதலாவது வினாத்தாள் நடைபெறும்.

பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டுமானால், இன்று 02 ஆம் திகதி முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை ஒன்லைனில் திருத்தம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள் – 0112 784 208/ 278 4537 / 2784537 / 2786616 /2785413, அவசர இலக்கம் – 1911, தொலைநகல் – 0112 784422

https://thinakkural.lk/article/308871

கருத்துக் கணிப்புக்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு!

3 months 2 weeks ago
sri-lanka.webp?resize=640,360 கருத்துக் கணிப்புக்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவ்வாறானவர்களை இனங்கண்டு கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1397921

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் – திகதி அறிவிப்பு

3 months 2 weeks ago
candidate-debate.jpg?resize=750,375&ssl= ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் –  திகதி அறிவிப்பு.

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்திற்காக அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான்கு ஜனாதிபதி வேட்பாளர்களின் பங்கேற்புடன் இந்த விவாதத்தின் முதல் சுற்று எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறும் என்றும், இந்த விவாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் சுமார் 12 வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் மார்ச் 12 இயக்கம் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதல் நாள் விவாதத்தில் சஜித் பிரேமதாச, நாமல் ரஜக்ஷ, திலித் ஜயவீர, பாக்கிய செல்வம் அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்கவுள்ளதை  மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2024/1397971

தனக்குத்தானே வேட்டு வைத்த தமிழரசுக்கட்சி – சிறிகாந்தா!

3 months 2 weeks ago
srikantha.jpg?resize=746,375 தனக்குத்தானே வேட்டு வைத்த தமிழரசுக்கட்சி – சிறிகாந்தா!

ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமையானது தனது அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

தமிழினத்தின் சுதந்திரத்தையும், சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் தேசிய கட்டமைப்பாக நாம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரனை களமிறக்கியுள்ளோம்.

தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திஸநாயக்க மற்றும் நாமல் ராஜபக்சே ஆகிய நால்வரும் ஒற்றையாட்சி சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பவர்கள்.

சஜித் பிரேமதாச ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று தீர்வு காணுவதாக மூச்சு கூட விடவில்லை. 13ஆம் திருத்தத்தை பற்றி பேசி இருக்கிறார். புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்தும் வரையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் இணைப்பாட்சி பற்றியோ ஒற்றையாட்சி பற்றியோ எங்கேயும் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில் தான் தமிழரசு கட்சியினர் அவசரமாகக் கூடி சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.

இதன் மூலம் தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கு எதனை சொல்லுகிறார்கள் என்பதனை தான் நாங்கள் கேட்கிறோம்.

இதுவரை காலமும் ஒற்றையாட்சிக்குள் இருந்து எம்மை விடுவிக்க வேண்டும் என நாம் தொடர்ந்து அரசியல் ரீதியாக போராடி வரும் நிலையில், ஒற்றையாட்சியின் வழி நடக்கும் சஜித் பிரேமதசாவை ஆதரித்துள்ளார்கள். இவர்களின் நோக்கம் என்ன ?

ஆகவே மக்கள் தமிழரசு கட்சியின் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்” என என். சிறிகாந்தா மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1397950

தொழு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு அதிகரிப்பது அவசியமாகும்; சுப்ரமணிய சர்மா குருக்கள்!

3 months 2 weeks ago
03 SEP, 2024 | 09:39 AM
image

தொழுநோய் என்பது ஒரு தொற்று நோய் இது எளிதில் சுவாசம் மூலம் பரவக்கூடியது. ஆனால் அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இந்த சிகிச்சை மேற்கொண்டால் முழுமையாக குணமடைய கூடியது. இலங்கையில் தொழு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு அதிகரிப்பது அவசியமாகும் என  வவுனியா இந்து குருக்கள் ஒன்றியத்தின் தலைவர் - சுப்ரமணிய சர்மா குருக்கள்  தெரிவித்துள்ளார். 

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தொழுநோய் முகாமைத்துவம், மற்றும் தொழுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாடு எனும் தொனிப்பொருளில் வவுனியா பிரதேச செயகலம், காவேரி கலா மன்றம் மற்றும் மாற்று மக்கள் சபை ஆகியன இணைந்து நடாத்திய மாநாட்டில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.  

இந்த விடயம்  தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,   

தொழு நோயின் முக்கிய அறிகுறிகளாக தோலின் மேற்பரப்பில் கட்டிகள் மற்றும் வெளிறிய நிறத்தில் தேமல் காணப்படும். அவை உணர்ச்சியற்றவையாக ரோமங்கள் அற்றவையாக காணப்படும்.

சில சந்தர்ப்பங்களில் நரம்புகள் மரத்துப் போகின்ற கை கால் உணர்ச்சியற்ற நிலை ஏற்படுகின்ற நிலையும் ஏற்படலாம் இவை அறிகுறிகளாக காணப்படும். 

இவ்வாறான அறிகுறிகள்  காணப்படுமாயின்  உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் இலங்கையில் இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன எனவே பயப்படாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யவும். 

நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படும் நிலையை தவிர்க்க அனைவரும் தொழுநோய் தொடர்பாக அறிந்து மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பது இன்றியமையாதது. தொழு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று நம் சமூகத்தை காப்போம் என்றார்.  

https://www.virakesari.lk/article/192695

Leprosy (தொழு நோய்)

தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.

 

 

தொழுநோய் என்றால் என்ன?

மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே (Mycobacterium Leprae) என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்றுநோயே தொழுநோய். இந்த பாக்டீரியா மிக மெதுவாக பெருகுவதால் நோய்த் தொற்று ஏற்பட்டு குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே நோயின் அறிகுறிகள் தோன்றும். இந்த நோய், தோல், நரம்பு, மேல் மூச்சு மண்டலத்தை பாதிக்கும்.

இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால், இது ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது

தொழுநோய் எப்படி உண்டாகிறது? 

மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்பது வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் பாக்டீரியம்தான். இதுவே தொழுநோயை உண்டாக்குகிறது. அளவிலும் வடிவிலும் இது காசநோயை (TB) உண்டாக்கும் நுண்ணுயிரி (மைக்கோபாக்டீரியம் தியூபர்குளோசிசு) போன்றதே.

ஒளி நுண்ணோக்கி வழியே கண்டால் இந்த பாக்டீரியா உருண்டை உருண்டையாகவோ பக்கம் பக்கமாகக் குச்சிகளாகவோ, ஏறத்தாழ 1 முதல் 8 மைக்ரோமீட்டர் நீளமும், 0.2 – 0.5 மைக்ரோமீட்டர் குறுக்களவும் கொண்ட குச்சிகளாகக் காணப்படுகின்றன.

இந்த நுண்ணுயிரியை நார்வே மருத்துவர் கெரார்டு ஆர்மவுர் ஃகான்சன் (Gerhard Armauer Hansen) 1873ம் ஆண்டு கண்டுபிடித்தார். அவர் அப்பொழுது தொழுநோய் உற்றவர்களின் தோல் கொப்புளங்களில் குறிப்பாகத் மனிதர்களில் தேடிக்கொண்டிருந்தார். தொழுநோயை உண்டாக்கும் நுண்ணுயிரியாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நுண்ணுயிரி இதுதான். இந்த நுண்ணுயிரியை சோதனைச்சாலையில் வளர்க்க இயலாமல் இருப்பதற்குக் காரணம் இந்த நுண்ணுயிரிகளின் உயிர்வாழ்வுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள் (மரபணுக்கள் சில) பிற உயிர்களில் இருந்துதான் கிடைக்கின்றன. மைக்கோபாக்டீரிய வகையைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரியின் உயிரணுவைச் சூழ்ந்திருக்கும் படலத்தின் தனித்தன்மையாலும் மிக மிக மெதுவாகவே எண்ணிக்கைப் பெருக்கம் செய்வதாலும், இவற்றை அழிப்பது கடினமாக உள்ளது.

நோய் எவ்வாறு பரவும்? 

சிகிச்சை பெறாத நோயாளியே நோய் பரவலுக்கு காரணம்.

தொழு நோயாளியின் உடலில் இருந்து நோய் கிருமி பரவும் முக்கிய வழி சுவாச மண்டலம்.

சிகிச்சை பெறாத தொழுநோயாளிகளிடம் தொடர்ந்து தொடர்பு இருக்கும்போது நோய் உண்டாகும்.

இந்த பாக்டீரியா மூக்கு/வாய் வழியாக சுவாச மண்டலத்துக்குள் நுழைகிறது. பின்பு அவை நரம்புகள் மற்றும் தோலை அடைகின்றன.

நோய் அறிகுறிகள் என்னென்ன? 

* வெளியேறிய தோல் திட்டுக்கள்

* தோல் திட்டுகளில் உணர்வு குறைவு/இழப்பு

* கை அல்லது காலில் உணர்வின்மை

* கால், கைகளில் காயம் அல்லது தீப்புண்(உணர்வின்மை காரணமாக சூடு அறியாமை)

* முகம் அல்லது காது மடலில் வீக்கம்

அறிகுறிகள் தென்பட்டால்..? 

தொழுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள தோல் மருத்துவரை அணுக வேண்டும். தொழுநோய்க்கு மருந்து உண்டு.

பன்மருந்து சிகிச்சையின் (MDT) முக்கியத்துவம் என்ன? 

தொழுநோயை ஒரு தனி மருந்தால் குணப்படுத்த முடியாது. பல மருந்துகளின் கூட்டு சிகிச்சை அதாவது எம்.டி.டி (MDT) தொழுநோய் பன்மருந்து சிகிச்சையால் (Antibiotics) குணப்படுத்த முடியும். தொடர்ந்து பன்மருந்து சிகிச்சை மேற்கொள்ளும் போது நோய் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டு ஊனங்கள் தவிர்க்கப்பட்டு, நோய் பரவலும் தடுக்கப்படுகிறது.

நோய் பரவும் முறை 

இந்நோய் காற்றின் மூலமே அதிகம் பரவும். நோயுற்றவருடன் ஏற்படும் நேரடித்தொடர்பின் மூலமும் நோயுயிரி சுவாசக் குழாய் வழியாக உட்செல்வதின் மூலமும் இது பரவுகிறது. நோய்த்தொற்று உள்ள நபர் தும்மும்போதும் இருமும்போதும் கோடிக்கணக்கான தொழுநோய் நுண்ணுயிர்கள் காற்றில் பரவுகின்றன. இது நாசி வழியாக உள்சென்று நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவரைத் தாக்குகிறது. மேலும் இது நோயுற்றவரின் உடலில் வழியும் சீழ்களில் தொடர்பு ஏற்படுவதாலும் பரவுகிறது.

பாதிப்புகள் 

முகம்: மூக்கு சப்பையாகுதல், கண் இமைகள் மூட முடியாத நிலை.

கை: விரல்கள் மடங்கிப்போதல், விரல்கள் குறைந்த அளவில் காணப்படுதல், மணிக்கட்டு துவண்டுவிடுதல்.

கால்: விரல்கள் மடங்கி போதல், விரல்கள் மழுங்கி விடுதல், பாதம் துவண்டு விடுதல், பாதத்தில் உணர்ச்சி போய் குழிப்புண்கள் ஏற்படுதல். தாக்கம் அதிகமாயின் உயிரும் இழக்க நேரிடும்.

உலக தொழு நோய் தினம் ஏன்? எப்போது? 

உலக தொழுநோய் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி இறுதி ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது. ஊனமாக்கும் தொழுநோயை விரைவில் ஒழிக்க தீவிர முயற்சிகளையும் புதிய உறுதியையும் மேற்கொள்ள இந்த தினம் உதவுகிறது.

இந்தத் தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது?  

தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த… அதன் நோய் அறிகுறிகளை பற்றி மக்கள் அறிய தொழுநோய் குணப்படுத்த முடியும் தகுந்த சிகிச்சை எடுத்து கொண்டால் என்பதை அறியப்படுத்த…

தொழுநோய் பற்றிய மோசமான, தவறான எண்ணங்களை (STIGMA) விலக்க…

Dr. ஏ .எஸ். நிறைமதி MBBS,MD,DNB
சரும மருத்துவர்
காவேரி மருத்துவமனை, திருச்சி, தென்னூர்

https://kauveryhospital.com/blog/tamil-articles/a-disease-that-continues-for-ages/

சுன்னாகம் பொலிஸாரினால் குடும்பஸ்தர் சித்திரவதை; விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3  03 SEP, 2024 | 09:13 AM

image
 

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி  தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு வேளை எமது வீட்டின் மதில் ஏறி பாய்ந்து, வீட்டின் முன் பக்க கதவினை கால்களால் உதைத்து உடைத்து வீட்டினுள் அத்துமீறி நுழைந்த சுன்னாக பொலிஸார் எனது கணவரை தாக்கி கைது செய்தனர். 

கணவரை எதற்காக கைது செய்கிறீர்கள் என கேட்டவேளை ,அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. கணவரின் கைதினை தடுக்க நிறைமாத கர்ப்பிணியான நானும் , கணவரின் அண்ணாவின் பெண் பிள்ளைகள் உள்ளிட்ட நாம் முயன்ற வேளை எம்மையும் தாக்க முற்பட்டனர். 

கணவரின் அண்ணாவின் மகள் கைத்தொலைபேசியை கையில் வைத்திருந்த வேளை , வீடியோ எடுக்கிறீயா என போனை பறித்து உடைக்க முயன்றனர். 

நாம் கணவரை பொலிஸார் காரணமின்றி கைது செய்து அழைத்து செல்வதனை தடுக்க முயன்ற போதிலும் எம்மை தாக்குவது போன்று அச்சுறுத்தி , கணவனை வீட்டில் இருந்து இழுத்து சென்று , வெளியில் நின்ற முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்றனர். 

கணவனை அழைத்து செல்லும் போதே . கண்களை கட்டியுள்ளனர். பின்னர் யாருடனோ தொலைபேசியில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் , கணவனின் பெயரை கூறி , அவரை கைது செய்து விட்டோம் என கூறியுள்ளார். 

நாம் நள்ளிரவே சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்ற போது , கணவனை அடித்து துன்புறுத்தி இருந்தனர். அது தொடர்பில் கேட்ட போது , சந்தேகத்தில் கைது செய்துள்ளோம் என கூறி எம்மை அங்கிருந்து அனுப்பி விட்டனர். 

மறுநாள் 29ஆம் திகதி நாம் யாழ் . மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் சென்று முறையிட்டோம். அவர் அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் விசாரித்தார். அவர்கள் ஏதோ கூற எம்மை அனுப்பி வைத்தார். 

நாங்கள் மீண்டும் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்ற வேளை , கணவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரான உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்டோர் பைப் , வயர்களால் மிக மோசமாக தாக்கி சித்தரவதை புரிந்துள்ளனர் 

கணவனை நிலத்தில் முழங்காலில் இருந்தி தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர் சத்தி எடுத்துள்ளார். 

கணவரை கைது செய்த பொலிஸார் 24 மணி நேரம் கடந்தும் நீதிமன்றில் முற்படுத்தாது , சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மிக மோசமான முறையில் சித்தரவதைக்கு உள்ளாகியுள்ளனர். 

பின்னர் அவரை விடுவித்துள்ள நிலையில் நாம் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். தற்போது எனது கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவித்தார். 

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது எனவும் , பாதிக்கப்பட்ட நபரை திங்கட்கிழமை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேரில் பார்வையிட்டு , அவரது வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும்,அதன் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192692

அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு அவசியம் ; பல வருடங்களாக வலியுறுத்துகிறோம் - பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

3 months 2 weeks ago

Published By: VISHNU   02 SEP, 2024 | 11:27 PM

image

ரொபட் அன்டனி

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட  எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்தார்.

பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது என்றும் சுட்டிக்காட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளமையையும் எடுத்துக் கூறினார்.

பாத்பைன்டர் நிறுவனம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார். 

பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்தின் வெளியுறவு அணுகுமுறை, தெற்காசியாவில் பிரித்தானியாவின் பிரசன்னம், பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு தொடர்பான விடயங்கள் அவர் கருத்துக்களை முன்வைத்தார்.

‘‘பிரித்தானியாவுக்கு தெற்காசிய பிராந்தியம் முக்கியத்துவமிக்கது. எதிர்காலம் இங்கு முக்கியத்துவமிக்கதாக உள்ளது. இலங்கையின் இரண்டாவது ஏற்றுமதி வர்த்தக பங்காளராக தொடர்ந்தும் இருந்து வருகிறது’’ என்று உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறையிலும் இலங்கையில் இரண்டாவது இடத்தை பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் பெறுவதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மேலும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்காததன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவும் நோக்கில், ‘‘அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம்’’ என்ற செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவு முக்கியத்துவமிக்கது. பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கையிலிருந்து அதிக இறக்குமதிகளை செய்கிறது. இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பிரித்தானியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. சுற்றுலாத்துறை இலங்கையில் மிக முக்கியமான ஆற்றலை கொண்டிருக்கிறது. அதிலும் பிரித்தானிய இலங்கைக்கு சிறந்த பங்களிப்பை வழங்குகிறது.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ருவாண்டாவுக்கு அனுப்புகின்ற திட்டம் புதிய பிரித்தானிய அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டுக்கும் இது தொடர்பான பிரச்சினை சவாலாகவே இருக்கும். அதிகமான மக்கள் 20ஆயிரம் டொலர்களுக்கும் அதிக பணத்தை கடத்தல் காரர்களுக்கு கொடுத்து பிரித்தானியாவுக்கு வர முயற்சிக்கின்றனர்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய அமர்வு நடைபெறவுள்ளது. இதில் இணை அனுசரணை நாடுகள் குழு எவ்வாறான முடிவை எடுத்துள்ளது என்று தற்போது கூற முடியாது. ஆனால், இப்போது இலங்கையில் தேர்தல் காலம் என்பதால் தேர்தலின் பின்னர் இந்த விடயத்தில் செயற்படுவதற்கு புதிய கதவுகள் திறக்கப்படும் என்று நம்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டு வரப்படுமா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர் அதற்கு அமர்வு தொடங்கும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் என்று பதிலளித்தார்.

இது இவ்வாறிருக்க அரசியல் தீர்வு தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் தலைவர்கள் எவ்வாறான விடயங்களை உங்களிடம் தெரிவித்தார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், இந்த விடயம் தொடர்பில் நான் மிகக் கவனமாக பேச வேண்டியிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட  எதிர்பார்க்கின்றோம்.

பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது. பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளனர் என்றார்.

https://www.virakesari.lk/article/192685

சென்னை - யாழ்ப்பாணம் இன்டிகோ விமானசேவை ஆரம்பம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   02 SEP, 2024 | 05:27 PM

image
 

சென்னை - யாழ்ப்பாணத்திற்கிடையில் புதிய விமான சேவையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை  (01) காலை ஆரம்பமானது.

இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை  (01) மாலை  3.05 மணிக்கு சென்னையிலிருந்து 52 பயணிகளுடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

இதன்போது இசை மற்றும் நடனத்துடன் பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கி பயணத்தை குறித்த விமானம் ஆரம்பித்தது. பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன.

பலாலியில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதால், கொழும்பிற்கு செல்லாமல் மிகவும் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்ள கூடியவாறு உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்து கொண்டனர்.

458163581_526225570076698_84599121197117

458086539_526225826743339_79159624703494

458221245_526226416743280_69832976167272

457807056_526246540074601_58382615703753

457406836_526247116741210_38947762153499

457519688_526247606741161_22685530083897

457407508_526246836741238_65888395138619

https://www.virakesari.lk/article/192646

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
1723098589-ariyanenthiran-2.jpg?resize=6 தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

தழிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை என்றும், ஆனாலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் எனவும் அவா் தொிவித்தாா்.

https://athavannews.com/2024/1397827

@Kapithan 

எங்களை அழிப்பதற்கு சிங்களவர்கள் தேவையில்லை; எங்களது தலைவர்களே போதும் - அன்னராசா சீற்றம்!

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

02 SEP, 2024 | 02:36 PM
image
 

தமிழரசு கட்சியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)  கூடி வவுனியாவில் முடிவு எடுத்ததன் அடிப்படையில், தமிழரசு கட்சியானது ஒற்றுமை இல்லாமல் தமிழர்களை பிரிவுக்கும் அல்லது தமிழர் இந்த நிலைக்கு போவதற்கும் காரணமாக இருக்கின்றது என வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வவுனியாவில் நிறைவேற்றப்பட்ட தமிழரசு கட்சியின் தீர்மானம் குறித்து, சமூகமட்ட பொது அமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் அவரிடம் இதுகுறித்து கருத்து வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு இன்று வரைக்கும் தமிழரசுக் கட்சி தமிழருடைய உரிமைகளை மீட்பதற்கு உளரீதியாக செயல்படவில்லை. வாய் ரீதியாக மக்களுக்கு ஒன்றை சொல்வதும் அரசாங்கத்திற்கு ஒன்றை சொல்வதுமாக இருக்கின்றது.

ஒட்டுமொத்த கட்சியாக இந்த முடிவை எடுத்திருந்தால் நாங்கள் வரவேற்றிருப்போம். ஆனால் கட்சியின் தலைவர் ஒன்றினை கூறுகின்றார், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஒன்றினை கூறுகின்றார், பல உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குலைப்பதற்கான அடித்தளமாகத் தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம்.

தமிழரசு கட்சியை எடுத்து பார்ப்போமேயானால் சிவஞானம் சிறீதரன், குகதாசன் ஆகியோர் உட்பட்ட கிளிநொச்சி மற்றும் திருகோணமலை கிளைகளினால் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் அதனை எதிர்க்கின்றனர். இவ்வாறு இருந்தால் தமிழர்களுடைய நிலை என்ன?

தமிழர்களை கூறு போட்டு, தமிழர்களுடைய இருப்புகளை அழிப்பதற்கு ரணிலோ, சஜித்தோ, அனுரவோ அல்லது நாமல் ராஜபக்சவோ தேவையில்லை, எமது கட்சித் தலைவர்களே போதும்.

தமிழ் சிவில் சமூகமாக நாங்கள் எடுத்த பொது வேட்பாளர் என்ற முயற்சியை ஆதரித்து, எதிர்காலத்தில் இவ்வாறான புல்லுருவிகளையும், முண்டு கொடுப்பவர்களையும் நிராகரிப்பதற்கு நாங்கள் தமிழர் சமூகமாக ஒன்றுபட வேண்டும்.

வாக்குப் போடுவது மக்களாகிய நாங்கள். ஆனால் இவர்கள் எப்போது மக்களை சந்தித்து, மக்களது கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுத்தார்கள்? ஆகவே இவர்கள் மக்களது பிரதிநிதிகள் என்று கூறி எவ்வாறு சர்வதேச சமூகங்களிடம் பேசப் போகின்றார்கள்?

வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டமானது பிரிவினையை காட்டுகின்றது. எனவே மக்களே நீங்கள் இந்த தமிழரசுக் கட்சியை நம்பாதீர்கள். நாங்கள் சுயமாக சிந்தித்து, எங்களுக்கு இருக்கின்ற வாக்குரிமை பலத்தினால் ஒன்றிணைந்து செயற்படுவோம். எமது கட்டமைப்புக்குள் வருமாறு நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியையும் அழைக்கின்றோம்.

தங்களுடைய சுயலாபத்துக்காகவும், தங்களது மதுபான நிலைய அனுமதிப் பத்திரத்துக்காகவும், தாங்கள் கோடிகளை சம்பாதிப்பதற்காகவும் தமிழ்மக்களை எதிர்காலத்தில் விற்றுப் பிழைப்பது சாத்தியமற்றது. 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அது வெளிச்சத்துக்கு வரும். அப்பொழுது இந்த அரசியல் காட்சிகளும், பேரம் பேசுபவர்களும் புரிந்து கொள்வார்கள்.

எனவேதான் நாங்கள் கூறுகின்றோம். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சங்கு சின்னத்திற்கு வாக்களிப்போம், எமது ஒற்றுமை நிலைநாட்டுவோம் அதுவே எமக்கான தீர்வு என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/192636

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் தீர்வு பெற்றுக்கொடுப்பேன்; கிளிநொச்சியில் சஜித் வாக்குறுதி

3 months 2 weeks ago

நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பேன் என எதிர்கட்சித் தலைவர் சஜித்  பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற, ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சமத்துவக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை ஆரோக்கியமாக உள்ளது. வடக்கில் அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டிள்ளது. இதனால் பல எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும்.

அவ்வாறு பல திட்டங்களை செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம். மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்.

வாழ்வாதரம் உள்ளிட்ட பல திட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அதற்காக சிறப்பு அலுவலகங்கள் 5 மாவட்டங்களிலும் நிறுவ உள்ளோம்.

அதேபோன்று ஒவ்வொறு பிரதேச செயலக பிரிவுகளிலும் அபிவிருத்தி நிலையங்கள் நிறுவப்படும்.

இங்கு உள்ள மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம். அத்துடன், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொபோம். அதற்காகவே இந்த அலுவலகங்களை, மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் நிறுவ உள்ளோம்.

நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எனக்கு உள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளது. அந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.

அதே போன்று நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு IT நிறுவனங்கள் நிறுவப்படும். அதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கப்படும்.

கிளிநொச்சியில் பாரிய அபிவிருத்திகளை செய்ய முடியும் என நம்புகிறேன். இதனால் இங்குள்ள மக்களிற்கு தீர்வுகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/308851

சுமந்திரன் கூட்டமைப்புக்கு தெரியாமல் எப்படி வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார்

3 months 2 weeks ago

விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது.

விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். 2010 ஆம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் என தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/308854

ரணில் சஜித்தை இணைக்க முயற்சி - ஹோமாஹமவில் அனுரகுமார

3 months 2 weeks ago
02 SEP, 2024 | 03:20 PM
image
 

ஜனாதிபதியினதும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரினதும்  இரண்டாம் நிலை  தலைவர்கள் இருவரையும் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள சாதகமான  நிலையை மாற்றியமைப்பதற்காக ஜனாதிபதியினதும் எதிர்கட்சி தலைவரினதும் பிரச்சார பிரிவில் இரண்டாம் நிலையில் உள்ள  தலைவர்கள் இருவரையும இணைந்து செயற்பட செய்வது தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர் என அனுரகுமாரதிசநாயக்க  ஹோமகவில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித்பிரேமதாசவிற்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்ற அதேவேளை இரண்டு தரப்பினதும் இரண்டாம் நிலையை  சேர்ந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்க முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் நிலையில்தலைவர்கள் மத்தியில்  பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன,நாம் பிரிந்திருப்பது விவேகமானதா இல்லையா? நாம் ஒன்று கூடி தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை மாற்றியமைக்க ஏதாவது செய்ய முடியாத என அவர்கள் பேசிக்கொள்கின்றார்கள் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192643

Checked
Sun, 12/22/2024 - 12:59
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr