ஊர்ப்புதினம்

“இந்தியா- இலங்கை பாலம் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும்” – மல்வத்து பீடாதிபதி எச்சரிக்கை

3 months 1 week ago

“இந்தியா- இலங்கை பாலம் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் – மல்வத்து பீடாதிபதி எச்சரிக்கை”

October 23, 2025

palk-strait-bridge-jpg.webp

இந்தியா மற்றும் இலங்கைக்கு  இடையிலானா  பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக மல்வத்து விஹாரையின் பீடாதிபதி திபட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் வழியாக போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விமானப்படைத் தளபதிகாளான  ஏர் மார்ஷல், பந்து எதிரிசிங்க, மல்வத்தை மகா விஹாரைக்கு நேற்று சென்றிருந்தபோது பீடாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  நாட்டில் தற்போது அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், இவை ஏதேனும் காரணத்திற்காக சமூகத்திற்குள் நுழைந்தால், பெரும் பேரழிவுக்கு  வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படும் அதேநேரம், அவற்றை இலங்கைக்குக் கொண்டுவருவதைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என மல்வத்து விஹாரையின் பீடாதிபதி மேலும்  வலியுறுத்தியுள்ளார்.

https://www.ilakku.org/india-sri-lanka-bridge-will-lead-to-illegal-activities/

வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு !

3 months 1 week ago

வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு !

By SRI

25-68c8e6da58bfd.jpg

2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், இராணுவப் பயன்பாட்டில் இருந்த 586 ஏக்கர் காணிகளும் அடங்குவதாக அவர் கூறினார்.

குறித்த காணிகள் தொடர்பான தகவல்கள், பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறினார்.

https://www.battinews.com/2025/10/500.html

யாழ். குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்

3 months 1 week ago

யாழ். குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்

sachinthaOctober 23, 2025

23-2.jpg

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து படகுச் சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதுடன், சமூக ரீதியாக, சமய ரீதியாக மற்றும் நிர்வாக ரீதியாக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தற்போது காணப்படுகின்ற இறங்குதுறையானது நீண்டகாலமாக பாரியளவிலான புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால், பாரியளவிலான கட்டமைப்பு ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது. போக்குவரத்து, யாத்திரிகர் பயணங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் இறங்கு துறையின் முக்கியத்துவத்தை அடையாளங் கண்டு இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.thinakaran.lk/2025/10/23/breaking-news/159976/யாழ்-குறிகட்டுவான்-இறங்/

காங்கேசன்துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் நிபந்தனைகள் ஆராய்வு

3 months 1 week ago

காங்கேசன்துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் நிபந்தனைகள் ஆராய்வு

1743931966.jpg

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசு வழங்கும் 62 மில்லியன் டொலர் மானியத்தை அரசாங்கம் இன்னும் இறுதி செய்யவில்லை. கடனிலிருந்து மானியமாக மாற்ற இந்திய அரசு முன்வைத்த நிபந்தனைகள் குறித்து இன்னும் பேச்சுகள் நடந்து வருவதாக துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு இதுதொடர்பில் தெரிவிக் கையில்.
வடக்கு துறைமுகத்தின் மேம்பாட்டுக் காக இந்தியா 62 மில்லியன் டொல ருக்குமேல் வழங்கியிருந்தாலும், அந்தத்தொகை தற்போது கடனாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடனை மானியமாக வழங்க இந்திய அரசு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அந்த நிபந்தனைகள் இன்னும் கலந் துரையாடப்பட்டுவருகின்றன.


இந்தத் திட்டத்தைத் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்க வில்லை. ஒரு துறைமுகம் நிறுவப்படும்போது, அதன் சமூகப்பொருளாதார தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டும்.
அது உறுதி செய்யப்பட்டவுடன், தேவையான பேச்சுகளைத் தொடங்கி அதற்கேற்ப முன்னேறுவோம் - என்றார்.

https://newuthayan.com/article/காங்கேசன்துறைமுக_அபிவிருத்தியில்_இந்தியாவின்_நிபந்தனைகள்_ஆராய்வு#google_vignette

நாடாளுமன்றத்தில் விசேட சோதனை!

3 months 1 week ago

Parliament-1.jpg?resize=750%2C375&ssl=1

நாடாளுமன்றத்தில் விசேட சோதனை!

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை சபாநாயகர் இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் நாடாளுமன்றத்தில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் ஆடை அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டிடமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கிடையில், நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்.

அன்றையதினம் பொது மக்கள் பார்வையிடும் பகுதி விருந்தினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படுவதுடன், விசேட பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்கும் அன்றையதினம் (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதிகளுடன் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அன்று நாடாளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு அனுப்பப்படும் என்றும் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இதேவேளை, அன்றைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1450953

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பாதணிகள்

3 months 1 week ago

22 Oct, 2025 | 05:22 PM

image

(எம்.மனோசித்ரா)

2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் சிட்டைகளை 2025 பாடசாலை தவணை முடிவடையும் போது பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வவுச்சர்சிட்டைகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால் நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பரிசு வழங்கும் கைத்தொலைபேசி மென்பொருள் மூலம் ஸ்கான் செய்வதற்கு இயலுமாகும் வகையில் ஞசு குறியீட்டுடன் பாதுகாப்பாக அச்சிட்டு பயன்பெறுகின்ற மாணவர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கீழ்வரும் வகையில் மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் மாணவர்களின் எண்ணிக்கை 250 இனை விடவும் குறைவான பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் 644,000 பேர், 251-500 இடைப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட தோட்டப் பாடசாலை மாணவர்கள் 53,093 பேர், விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்ற 30 பாடசாலைகளில் மாணவர்கள் 2,300 பேர், பிரிவெனாக்களில் தெரிவு செய்யப்பட்ட துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் 30,000 பேர் என இதற்காக மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

https://www.virakesari.lk/article/228397

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன்

3 months 1 week ago

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன்

adminOctober 22, 2025

IMG_0683.jpeg?fit=1170%2C658&ssl=1

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து இன்றைய தினம் புதன்கிழமை சூரன் என்ற  இளைஞன் யாழ்ப்பணத்தை சென்றடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து மேலும் தெரிவிக்கையில் –

“நான் பாரிஸில் இருந்து கடந்த செப்டம்பர் 01ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல நாடுகள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் பயணித்து இன்று எனது பூர்வீக இடமான நல்லூரை வந்தடைத்தேன்.

யாழ்ப்பாணம் தனது பெற்றோரின் சொந்த ஊர் என்பதால் எனது பயணத்தின் இறுதி இலக்காக யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலைத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

அத்துடன் இலங்கை ஒரு நாடு மட்டுமல்ல, என் பூர்வீகத்துடன் தொடர்புபட்ட உன்னத உணர்வு. எனது நோக்கம் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவது மட்டுமல்லாமல்ல யாழ்ப்பாணத்தின் கலாசார முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதும் ஆகும்.

மேலும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்துடன் வலுவான உணர்வு மற்றும் கலாசார உறவுகளைப் பேணுகின்ற உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை உருவாக்குவதுமாகும்.

நான் பாகிஸ்தானுக்கும் சென்று வர முயற்சித்தேன். ஆனால் அந்நாடு அனுமதி மறுத்திருந்தது. அதன்பின் இந்தியா சென்று நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறையை வந்தடைந்து  எனது இறுதி நல்லூரை வந்தடைந்துள்ளேன்

இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கப்பெற்றது. அத்துடன் நான் இந்த பயணத்தில் கரடுமுரடன சவால்களை எதிர்கொண்டாலும் அந்த நாடுகளின் அரசுகளும் மக்களும் எனக்கு மிகுந்த வரவேற்பையும் ஒத்துழைப்புகளையும்  தந்திருந்தனர். அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறுகின்றேன் என தெரிவித்திருந்தார்.

அதேநேரம் சுமார் 40 வருடங்களுகு முன்னர் பெற்றோர் பிரான்சில் குடியேறிய நிலையில் சூரன் சரளமாக தமிழில் தனது உணர்வுகளை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

IMG_0682.jpeg?resize=800%2C450&ssl=1IMG_0686.jpeg?resize=800%2C450&ssl=1IMG_0681.jpeg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2025/221853/

தவிசாளர்கள் - செயலாளர்கள் முரண்பாடு பெரும் தலையிடி ; அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - வடக்கு ஆளுநர்

3 months 1 week ago

Published By: Digital Desk 1

22 Oct, 2025 | 03:53 PM

image

தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை  தீர்ப்பது பெரும் தலையிடியாக உள்ளதென தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் எல்லோரும் ஒன்றிணைந்தாலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (22) வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். எங்கள் சேவைகளை விரிவாக்குவதுடன் அவற்றையும் நாம் விரைவுபடுத்தவும் வேண்டும். 

தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் சிலர் துணிவுடன் நடவடிக்கைகள் எடுக்கின்றீர்கள். அதைப் பாராட்டுகின்றேன். ஏனையோரும் அவ்வாறு செயற்படவேண்டும். தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்படவேண்டும். இருவரும் முரண்பட்டால் அதைத் தீர்ப்பதே எங்களுக்குப் பெரும் தலையிடியாக மாறிவிடும். தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டால் பாதிக்கப்படப்போவது அந்தப் பகுதி மக்களே. அந்த மக்களுக்கு சேவை செய்வதற்கே எல்லோருக்கும் இருக்கின்றார்கள். அதை மனதிலிருத்தினாலே போதும். மக்களை அவர்களது சேவைகளை நிறைவேற்றுவதற்கு அலைக்கழிக்காதீர்கள். 

இதேநேரம், யாழ். மாநகரசபை எல்லைக்குள் உள்ள பெரு வணிக நிறுவனங்கள் குடிபுகு சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளாமல் இயங்குகின்றன. இதனால் அவர்கள் மாநகர சபைக்குச் செலுத்தும் வரியானது, பிரதேச சபையொன்றிலுள்ள குடியிருப்பாளர் செலுத்தும் வரியைவிடக் குறைவானது. இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றார் .

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணியும் பயிற்சியும் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/228385

பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் - வலுசக்தி அமைச்சர்

3 months 1 week ago

22 Oct, 2025 | 04:49 PM

image

(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)

வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள  இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு, புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என வலுசக்தி அமைச்சர்  குமார ஜயகொடி  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்  ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி,  எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  பதிலளித்ததாவது,

வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள  இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.

2025 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க  (திருத்த) மின்சார சபைச் சட்டத்தின்  பிரகாரம் , 2024 ஆம் ஆண்டின்  36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை  சட்டத்தின்  முதலாவது உப பிரிவின் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிக்கு அமைய,  17 ஆவது  உறுப்புரைக்கமைய,  இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும்.

புதிய மறுசீரமைப்பைத் தொடர்ந்து நேஷனல்  சிஸ்டம் ஒபரேட் (பிரைவெட்) லிமிடெட், நேஷனல் ட்ரான்ஸ்மிஷன்  நெட்வொர்க் சர்விஸ் (பிரைவெட்) லிமிடெட்,  எலெக்ட்ரிசிட்டி  ஜெனரேசன்  (பிரைவெட்) லிமிடெட்,   எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபூசன்  (பிரைவெட்) லிமிடெட்,

எனெர்ஜி  வென்டேர்ஸ்   லங்கா (பிரைவெட்) லிமிடெட்,  சி.இ.பி எம்ப்லோயீஸ் (பிரைவெட்) லிமிடெட்,  என்ற அடிப்படையில் புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/228394

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

3 months 1 week ago

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

சீரற்ற காலநிலை காரணமாக நாகை காங்கேசன்துறை மற்றும் நாகபட்டினத்துக்கிடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் நிறுத்தப்படும் எனவும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழமை போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் என்றும் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சுபம் கப்பல் நிறுவனம் நாகை துறைமுகம் இலங்கையின் காங்கேசன்துறைக்கிடையே சிவகங்கை பயணிகள் கப்பலை இயக்கி வருகிறது. இந்தக் கப்பலில் கடந்த ஓராண்டில் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.

நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிற நிலையில் புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்காக புதிய கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளது எனவும் அந்தக் கப்பல் நவம்பர் மாதம் இறுதிக்குள் நாகை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை சில நாள்களில் தொடங்கவுள்ளதால், பருவநிலை மாற்றம் ஏற்படுவதுடன் இதனால், கடல் சீற்றம் மற்றும் சூரைக்காற்று காரணமாக கப்பல் இயக்குவதில் சிக்கல் உள்ளது எனவே நவம்பர் மாதம் முழுவதும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படாது என அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 30 ஆண்டுகளின் காலநிலையினை அடிப்படையாகக் கொண்டு, நிகழாண்டு நவம்பர் மாதத்தை தவிர்த்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம் போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!

3 months 1 week ago

21 Oct, 2025 | 07:48 PM

image

யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. 

கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VID-20251021-WA0085_1_.jpg

VID-20251021-WA0085.jpg


யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்! | Virakesari.lk

ஒக்டோபரில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்!

3 months 1 week ago

22 Oct, 2025 | 12:13 PM

image

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 28 ஆயிரத்து 985 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 404,752 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 170,422 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 127,613 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 113,293 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 109,653 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 91,694 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 82,328 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 54,437 சுற்றுலாப் பயணிகளும்  , அமெரிக்காவிலிருந்து 50,737 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வாண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 103,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ஒக்டோபரில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 29,460 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

ஒக்டோபரில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்! | Virakesari.lk

தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை - ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு

3 months 1 week ago

22 Oct, 2025 | 04:35 PM

image

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22) ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீட்டிற்கு கடந்த 18ஆம் திகதி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர், முகநூலில் கட்சியின் தலைவர், விடுதலைப் புலிகளின் தலைவர் ஆகிய இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதாகவும் அது தொடர்பான விசாரணைக்கு கொழும்புக்கு வருமாறும் கடிதத்தை வழங்கினர்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணியகத்துக்கு இன்று காலை சென்ற அவரிடம் சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை இடம்பெற்றதாகவும் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை 3 மணியளவில் வெளியேறியுள்ளதாக தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை - ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு | Virakesari.lk

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

3 months 1 week ago

New-Project-226.jpg?resize=750%2C375&ssl

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர உயிரிழந்தார்.

வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தவிசாளரிடம் கையொப்பம் பெற வந்ததாகக் கூறி, பிரதேச சபை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது.

பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர் உடனடியாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

https://athavannews.com/2025/1450861

கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்!

3 months 1 week ago

download-1-11.jpg?resize=274%2C184&ssl=1

கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு தலைவரான ‘கெஹெல்பத்தர பத்மே’ வின் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினரால் இன்று(22) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கெஹெல்பத்தர பத்மேவிற்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்ட சொத்துக்களான
மடெல்கமுவ, படபொத்த, உடுகம்பொல என்ற முகவரியில் உள்ள விடுதிக்குப் பின்னால் அமைந்துள்ள 20 பரப்பு காணி, அதே முகவரியில் உள்ள அதே விடுதி வளாகத்தில் அமைந்துள்ள ஆறு அறைகளைக் கொண்ட பகுதியளவு முடிக்கப்பட்ட கட்டிடம் என்பனவே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சொத்துக்கள் தொடர்பான தொடர்புடைய உண்மைகள் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய சொத்துக்கள் இன்று (22) அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்யப்பட்டன.

அண்மையில், இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகயில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலக குழுவின் செயல்பாட்டாளர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய, பல்வேறு நடவடிக்கைகளை பொலிஸாரும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1450875

போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்? – விசாரணை சி.ஐ.டி.யிடம்!

3 months 1 week ago

New-Project-235.jpg?resize=750%2C375&ssl

போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்? – விசாரணை சி.ஐ.டி.யிடம்!

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது.

வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபரும், தகுதி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.

கடல் வழியாக அதிக அளவில் மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் ஹாஷிஷ் கடத்தப்படுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.

முன்னாள் சிரேஷ்ட போதைப்பொருள் அதிகாரிகள் இந்த சட்டவிரோத பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவியதாக ஒரு நபர் குற்றம் சாட்டியதாக சமூக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

https://athavannews.com/2025/1450897

கிண்ணியாவில் நிலத் தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டு!

3 months 1 week ago

Screenshot-2025-10-22-112729.jpg?resize=

கிண்ணியாவில் நிலத் தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டு!

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக,
30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிண்ணியா குரங்குபாஞ்சான் இரட்டைக்குளம் பகுதியில் வைத்து நேற்று காலை(21) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையிலான நில மீட்புப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

சுமார் 2876 ஹெக்டேயர் நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பானது, கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றிப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த கிண்ணியா கால்நடை விவசாயிகளுக்கு வாழ்வில் விடிவை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

எனினும், இத்தீர்ப்பைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், தங்களுக்குரிய விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கித் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு கோரி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பகுதிக்குள் விவசாயிகளை வேளாண்மை செய்ய அனுமதிக்க வேண்டாம் என கமநல சேவை திணைக்களங்களுக்கு கிண்ணியா பிரதேச செயலாளரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடு ஏற்பட்டு வருகின்ற நிலையில்
இந்த பின்னணியில் நேற்றையதினம் 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன்படி, 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதுடன் 12 மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நான்கு மாடுகளைக் காணவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்கான மாடுகள், கால்நடைகள் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியிலும் பதற்ற நிலை நீடிப்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

இதேவேளை, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1450852

வன்முறையைத் தூண்டும் பிறந்த நாள் கொண்டாட்ட காணொளி பதிவேற்றம் - வீடு சுற்றிவளைப்பு

3 months 1 week ago

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியவரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு

Published By: Digital Desk 1

22 Oct, 2025 | 10:01 AM

image

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று (22) யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது.

அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பொலிஸ் நிலையத்தில்  தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/228345

யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு!

3 months 1 week ago

யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது.

இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய தினம் (20) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.

https://akkinikkunchu.com/?p=345520

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை…

3 months 1 week ago

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை…

October 22, 2025

முதலமைச்சர் வேட்பாளர் யார் என பிரதான கட்சிகள் தீவிர ஆலோசனை நடாத்தி வரும் நிலையில், வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பிலும் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன.

அந்த வகையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி, 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின் கீழ் களமிறங்கவுள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது பற்றி தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. உத்தேச முதலமைச்சர் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலனின் பெயர் முன்னணியில் இருப்பதாகத் தெரியவருகின்றது. ஏனைய சிலரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது இவர், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண முதலமைச்சரைத் தெரிவு செய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

https://www.ilakku.org/வட-மாகாண-முதலமைச்சர்-வேட-2/

Checked
Wed, 02/04/2026 - 13:32
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr