ஊர்ப்புதினம்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொது பட்டமளிப்பு விழா

3 months 2 weeks ago

கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா ; 1883 பட்டதாரிகளுக்கு பட்டங்கள், 155 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள்

16 Oct, 2025 | 02:07 PM

image

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொது பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை (15) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) மற்றும் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோர் வரவேற்றனர்.

அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பு கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த மொத்தம் 1883 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் மற்றும் முதுகலை டிப்ளோமாக்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், இறுதி அமர்வில், 155 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், விசேட திறமை எய்திய மாணவர்களுக்கு பிரதி அமைச்சரால் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு), பட்டதாரிகளின் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார்.

தேசத்திற்கான சேவையில் தங்கள் அறிவை பொறுப்புடன் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டதுடன் கல்வி, புத்தாக்கம் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு இடையிலான முக்கிய தொடர்பை அவர் வலியுறுத்தினார். 'அறிவு ஒரு சக்தி, ஆனால் அறிவு மனிதகுலத்திற்கும் தேசிய முன்னேற்றத்திற்கும் சேவை செய்யப் பயன்படுத்தப்படும்போது மட்டுமே சக்தி வாய்ந்ததாக மாறும்' என்றும் கூறினார்

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்த பிரதி அமைச்சர், இலங்கையை அறிவு சார்ந்த பொருளாதாரமாக மாற்ற வடிவமைக்கப்பட்ட வரவிருக்கும் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையின் மூலம் கல்வி முடிவுகளை தேசிய முன்னுரிமைகளுடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

பட்டதாரிகள் நேர்மை, தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்கத்துடன் பணியாற்றுவதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்க வேண்டும் என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மை தேசிய பாதுகாப்பின் அடித்தளம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டி அவர் அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்வில் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், இராஜதந்திரிகள், முன்னாள் வேந்தர்கள் மற்றும் உபவேந்தர்கள், முனுருவின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/227881

யாழிற்கு வருகை தந்த வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள்

3 months 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். 

வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் நேற்று (13) மாலை இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். சுமார் 30 பேர் வரை வருகை தந்துள்ளதோடு இன்று (14) குடாநாட்டின் பல இடங்களிற்கும் பயணிக்கின்றனர். 

குடாநாட்டின் கரையோரக் கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளை (15) நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmgq4g68g0101o29noeyxhu2f

இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை!

3 months 2 weeks ago

இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை!

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா பயணமானது  120 நாட்களில் பின்னர் நேற்றையதினம் மீண்டும் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் நிறைவடைந்துள்ளது. குறித்த இளைஞர்கள் வான் ஒன்றினை வீடாக மாற்றி அதில் சகல வசதிகளையும் உள்ளடக்கி, 25 மாவட்டங்களுக்கும் அந்த வானிலேயே சென்று, அந்த வானிலேயே தங்கி அன்றாட செயல்பாடுகளை முன்னெடுத்தனர்.

இவர்கள் நால்வரும் 25 மாவட்டங்களுக்கும் சென்று, அந்த 25 மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலாத்தலங்களை அடையாளப்படுத்தி அந்த இடங்களுக்கு அனைவரும் சென்று வரலாம் என்று எண்ணப்பாட்டினை இலங்கை மக்கள் மத்தியில் அல்லாமல் குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற மக்களின் மனதிலும் ஏற்படுத்தி சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு வலுச்சேர்த்துள்ளனர்.

இலங்கையின் அதிகளவான வருமானம் சுற்றுலா துறையின் மூலமே ஈட்டப்படுகின்றது. அந்தவகையில் சுற்றுலாத் துறை வருமானத்தை அதிகரிப்பதற்காக இளைஞர்கள் எடுத்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை!

மக்கள் 2019 இலும் 2024 இலும் ஏமாந்தனர் - அதனால் 2028 இல் கடனை செலுத்த முடியாது!

3 months 2 weeks ago

மக்கள் 2019 இலும் 2024 இலும் ஏமாந்தனர் - அதனால் 2028 இல் கடனை செலுத்த முடியாது!

மக்களின் துயரங்கள், கண்ணீர், வலிகள் மற்றும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் பலமானதொரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ வேண்டும். அண்மையில் நடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாட்டின் 220 இலட்சம் மக்களும் ஏமாந்தனர். 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நாடு வங்குரோந்தடைந்தது. 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது சமூகமயப்படுத்தப்பட்ட பொய்கள் மற்றும் ஏமாற்று பேச்சுக்களால் நாட்டு மக்கள் ஏமாறும் நிலைக்கு இன்று வந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று (15) மாத்தளை நகரில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, முன்னாள் பாராளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார உள்ளிட்ட மாவட்ட மட்ட பல அரசியல் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2028 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளப் போகும் சவால்கள் தொடர்பில் நல்ல புரிதலை கொண்டிருக்க வேண்டும். 2028 ஆம் ஆண்டளவில், ஆண்டுதோறும் 5 பில்லியன் டொலர் கடனை நாம் திருப்பிச் செலுத்த வேண்டி காணப்படுகின்றன. கடனைத் திருப்பிச் செலுத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வேகப்படுத்த வேண்டும். தொழிற்துறை, விவசாயம், சுற்றுலா மற்றும் சேவைத்துறைகள் உட்பட சகல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.

பொருளாதார முன்னேற்றத்தை வேகப்படுத்தினால் மாத்திரமே 2028 முதல் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். பெற வேண்டிய வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெறப்பட்டு வருகின்றன. பொருளாதாரம் வளர்ச்சி வேகம் முன்னேற்றம் காணாதவிடத்து, எம்மால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் அபாயம் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

IMF ஒப்பந்தம் குறித்து முந்தைய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய பொருளாதார ஆலோசகர்களின் கருத்துப்படி, இவ்வாறு போகும் போக்கில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என்று கூறுகின்றனர். இன்று இவ்வாறு கூறும் இதே பொருளாதார ஆலோசகர்களே 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் வேண்டியிருந்த சமயத்தில், இல்லை 2028 ஆம் ஆண்டு முதலே கடனைத் திருப்பிச் செலுத்துகிறோம் எனக் கூறி முடிவை எடுத்தனர். எமது நாட்டின் பொருளாதார நிதியல் தொடர்பான பரந்த ஆய்வை மேற்கொண்டு, எமது நாட்டின் நிதியியல் இயலுமையைக் கருத்திற் கொண்டே 2033 ஆம் ஆண்டில் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்தது. இந்த இணக்கத்தை மாற்றி, 2028 ஆம் ஆண்டு முதலே கடனைத் திருப்பிச் செலுத்த முடிவை எடுத்த பொருளாதார ஆலோசகர்களே இன்று இவ்வாறு வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால் நாடும் நாட்டு மக்களுக்குமே பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கம் பயணித்தது போலவே பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி பதவியையும், 159 பெரும்பான்மையையும், உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையையும் கொண்ட இந்த அரசாங்கம், முந்தைய அரசாங்கத்தின் அதே இணக்கப்பாட்டையே இன்னும் பின்பற்றி வருகின்றது. இதனை மாற்றியமைத்து, எமது நிதியியல் இயலுமைகளுக்கு ஏற்ப திருத்தங்களை மேற்கொள்ளுமாறே நாம் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறோம். எம்மால் மீண்டுமொரு வங்குரோத்து நிலையை சந்திக்க முடியாது. முகம் கொடுக்கவும் முடியாது. நேர்மையாகவே நாம் இந்த கருத்துக்களை முன்வைத்து வருகிறோம். அரசாங்கம் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். முந்தைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டாம் என்றே சொல்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், வங்குரோத்தடைந்த நாடு எனும் நாமமே நாட்டுக்கு கிட்டும். 2033 ஆம் ஆண்டு முதல் கடனைத் திருப்பிச் செலுத்தினால் போதும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், 2028 ஆம் ஆண்டு கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நாமாகவே இணக்கம் தெரிவித்துள்ளோம். எனவே, வரும் மூன்று ஆண்டுகளில் நாம் விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். அந்நிய செலாவணி கையிருப்பைப் பேணி வர வேண்டும். என்றாலும், இந்த அரசாங்கம் ஏமாற்று மற்றும் பொய்களையே சொல்லி வருகின்றது. ஏமாற்று நடவடிக்கைகளால் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள முடியாது. நடைமுறை ரீதியான பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல் வேறு, நாட்டு விவகாரம் என்பது வேறு. நாட்டை கருத்திற் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்யான பேச்சுக்களை வைத்து அரசியல் அதிகாரத்தை தக்க வைக்க முயற்சித்தால் அது தற்காலிகமானது என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmgt2zlo0011no29nwh3caklb

மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் - இராமலிங்கம் சந்திரசேகர்

3 months 2 weeks ago

16 Oct, 2025 | 12:20 PM

image

நாடாளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.  எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கொழும்பில் அமைச்சில் (15) அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு, 

' மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்டு எத்தனை வருடங்கள்? இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள் என ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாரம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்கின்றேன். இவ்வளவு நாளும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தீர்களா? அவர்களுக்கான வீடுகள் தற்போதுதான் கட்டப்பட்டு கையளிக்கப்படக்கூடிய சூழ்நிலை வந்துள்ளது. 

வெத்து காகிதம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. வழங்கப்பட்டது காகிதமாக இருந்தாலும் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும்.

எனவே, கேடு கெட்ட அரசியலை நிறுத்துங்கள். எமது மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காமல், அவர்களை அடிமை வாழ்வு வாழ வைத்ததால்தான் கடந்த தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்தார்கள். கொழும்பில் இருந்த மக்களும் மனோவின் நாடக நடிப்பு அரசியலை நிராகரித்து, அவரை ஒதுக்கி வைத்துள்ளனர். 

மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்குரிய ஆதரவு அதிகரித்துவருவதால்தான் இவர்கள் கத்துவதற்கு ஆரம்பித்துள்ளனர். தம்பி ஜீவன் அரசியலை நல்ல முறையில் கத்துக்கொள்ளுங்கள்.

கூவித்திரிவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.  கடந்த காலங்களில் நீங்கள் எத்தனை வீடுகளை கட்டினீர்கள்? கட்டிய சில வீடகள்கூட எந்த நிலையில் உள்ளது? எனவே, முடியுமாக இருந்தால் உதவி செய்யுங்கள், தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள் என திகா, மனோ, ராதா, ஜீவனிடம் கேட்டுக்கொள்கின்றேன். நாங்கள் கதைக்கபோனால் உங்களின் முகத்திரைகளை கிழிக்க நேரிடும்." - என்றார்.

மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk

 

இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம்

3 months 2 weeks ago

( இணையத்தள செய்திப் பிரிவு )

இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை கூறினார். 

நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில், 

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.

இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்தது. அப்படியானால் மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துக்கு எங்கே நேரம் இருந்தது. இப்போது இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டுள்ளார். மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துக்கு நேரம் உள்ளது.

பாதாள உலக கும்பல் மற்றும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கத்திடம் பல வசதிகள் உள்ளன.

எனவே பாதாள உலக கும்பல் மற்றும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவையில்லை.

ஆனால் அரசாங்கம் தவறு செய்தால், அதனை சுட்டிக்காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். 

அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.

இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம் | Virakesari.lk

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ; குப்பையில் கொட்டப்படும் நிலை

3 months 2 weeks ago

16 Oct, 2025 | 12:31 PM

image

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது.

நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விற்பனை குறைந்துள்ளது எனவும் தேங்கி அழுகும் மரக்கறிகளை குப்பையில் கொட்டப்படுகிறது.

இதில் தக்காளி, லீக்ஸ், கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய்  கரட், போஞ்சி, ஆகியவற்றின் விலை அதிகளவு குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறி விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத அழுகிய நிலையில் மரக்கறிகளை வர்த்தக நிலையங்களுக்கு முன் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை அப்புறப்படுத்த முடியாது, நகரசபையின் ஊழியர்கள் உள்ளடங்கலாகப் பலரும் பாரிய திண்டாட்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.   

இவற்றை காலை நேரங்களில் மட்டக்குதிரை உள்ளிட்ட சில கால்நடைகள் தீவனமாக உண்ணும் நிலை அதிகரித்துள்ளது.

image00002.jpeg

நாட்டில் அதிகளவில் மரக்கறி உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டங்களில் நுவரெலியாவும் ஒன்றாகும். எனினும் தற்போது நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல இடங்களில் விவசாய செய்கைகள் கைவிடப்பட்ட நிலையில் இன்று காட்சியளிக்கின்றன. மரக்கறி வகைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வீழ்ச்சியால் இந்த நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், பாரிய முதலீட்டுடனேயே, மரக்கறிச் செய்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், மரக்கறிகளின் சந்தைப் பெறுமதி குறைவடைந்துள்ளதால், தாம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

image00008.jpeg


மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ; குப்பையில் கொட்டப்படும் நிலை | Virakesari.lk

பழைய முறையிலோ, புதிய முறையிலோ அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல்கள் - அமைச்சர் லால் காந்த உறுதி

3 months 2 weeks ago

Published By: Vishnu

16 Oct, 2025 | 04:17 AM

image

மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத்தேர்தல்கள் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக அரசாங்கத்தினால் பழைய முறைமையிலேயே தேர்தல்களை நடாத்தமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'எமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. எனவே பழைய முறைமையில் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதற்கான சட்டத்திருத்தத்தை எம்மால் நிறைவேற்றமுடியும்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று எதிர்வரும் மாகாணசபைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அக்கூட்டணி தமக்கு எவ்வகையிலும் சவாலாகவோ அல்லது பிரச்சினையாகவோ அமையாது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

'எம்மிடம் சுமுகமான முறையில் பயணிக்கும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், உரியவாறு இயக்கும் 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறித்தும், எம்மால் நிர்வகிக்கப்படும் உள்ளுராட்சிமன்றங்கள் குறித்தும் மக்களுக்கு சிறந்த புரிதல் உண்டு. ஆகையினால் எதிர்வரும் தேர்தல்களில் எமக்கு எவ்வித சவாலும் இல்லை' என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/227845

“கெப்பெட்டிபொல பூதயா”வுடன் 18 பேர் கைது!

3 months 2 weeks ago

16 Oct, 2025 | 04:28 PM

image

பதுளை - கெப்பெட்டிபொல  பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட “கெப்பெட்டிபொல பூதயா” என்பவருடன் மேலும் 18 பேர் கெப்பெட்டிபொல  பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய கெப்பெட்டிபொல  பொலிஸாரால் நீண்ட நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளழனட அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஊவபரனகம மெதவெல பிரதேசத்தில் வசிக்கும் “கெப்பெட்டிபொல பூதயா” என்பவர் இரத்தினபுரியில் இருந்து ஹேரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டு வந்து ஈசி கேஸ் மூலம் பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“கெப்பெட்டிபொல பூதயா” என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய ஏனைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் கெப்பெட்டிபொல, ஹக்கல, பொரகஸ், நுவரெலியா, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 

சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்  இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியானது என  பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கெப்பெட்டிபொல பூதயா”வுடன் 18 பேர் கைது! | Virakesari.lk

யாழ். பருத்தித்துறை வாள் வெட்டுத் தாக்குதல் ; பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை கோரல்

3 months 2 weeks ago

16 Oct, 2025 | 04:55 PM

image

போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவின‌ரால், அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரௌடிகள் தொடர்பாக மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு வர அச்சப்படும் சூழ் நிலை காணப்படுகிறது. பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் குற்றவாளிகளுக்கு உடனேயே கடத்தப்படுகிறது என்ற விடயம் தொடர்பாக விளக்கம் கோரினேன்.

பருத்தித்துறையில் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரினேன். இந்த விடயங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து விடயங்களை தெரிவிக்க உள்ளேன்.

பல விடயங்களில் பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் என மக்கள் எனக்கு தந்த முறைப்பாடுகளையும் தெரிவித்தேன் என தெரிவித்தார்.

யாழ். பருத்தித்துறை வாள் வெட்டுத் தாக்குதல் ; பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை கோரல் | Virakesari.lk

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது

3 months 2 weeks ago

16 Oct, 2025 | 05:05 PM

image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவதினமான இன்றையதினம் அதிகாலை சிறுமி வீட்டின் அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். சிறுமியை தேடிய பெற்றோர் வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன், குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது | Virakesari.lk

தாமும் பாதிக்கப்பட்டதாகக் கூறும் ஜனாதிபதி நாம் நிராகரித்த பொறிமுறையையே பலப்படுத்துகிறார்; வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா அதிகாரிகளிடம் கடும் அதிருப்தி

3 months 2 weeks ago

15 Oct, 2025 | 03:07 PM

image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்படல்களால் தாமும் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்ற போதிலும், அவர் ஆட்சிபீடமேறியதன் பின்னர் எம்மை சந்தித்து எமது நிலைப்பாட்டைக் கேட்டறியவில்லை. மாறாக நாம் நிராகரித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே அவர் முன்னெடுக்கிறார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரி மற்றும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக ஐ.நாவின் கிளை அமைப்புக்களில் ஒன்றான வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செப்டெம்பர் 26 - 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி மற்றும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் சர்வதேச மன்னிப்புச்சபையினாலும், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிங்களப்பெண்கள் இருவர் மற்றும் தமிழ் பெண்கள் இருவர் என மொத்தமாக நால்வர் சுவிஸ்லாந்து தூதரகத்தினாலும் ஜெனிவாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அதன்படி மேற்கூறப்பட்டவாறு இலங்கை விவகாரம் ஆராயப்படுவதற்கு முன்னைய தினம் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையில் இருந்து சென்ற பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது மறுநாள் இலங்கை அரசாங்கத்திடம் கேட்கப்படவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கருதும் கேள்விகள் தொடர்பில் ஐ.நா அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டனர்.

அவ்வதிகாரிகளிடம் தம்மால் முன்வைக்கப்பட்ட பல கேள்விகள் மறுநாள் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான குழுவினரிடம் வினவப்பட்டதாக சுட்டிக்காட்டிய லீலாதேவி, இருப்பினும் இறுதிக்கட்டப்போரின்போது படையினரிடம் சரணடைந்தோரின் பெயர்ப்பட்டியல் மற்றும் குறிப்பாக பலர் சரணடைந்த 4 இடங்களுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தல் என்பன தொடர்பில் தாம் முன்மொழிந்த கேள்வி அரசாங்கத்திடம் கேட்கப்படாமை தமக்கு மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

அதேவேளை மேற்குறிப்பிட்ட கூட்டத்துக்கு அப்பால், பாதிக்கப்பட்ட தரப்பினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலக அதிகாரியையும், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் என்ற ரீதியில் தமது கோரிக்கைகள், உள்ளகப்பொறிமுறை மீதான நம்பிக்கை இழப்பு மற்றும் தற்போதைய அரசாங்கம் இவ்விவகாரத்தைக் கையாளும் விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.

அதுமாத்திரமன்றி தாமும் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்ற போதிலும், அவர் ஆட்சிபீடமேறியதன் பின்னர் தம்மை சந்தித்து தமது நிலைப்பாட்டைக் கேட்டறியவில்லை எனவும், மாறாக தாம் நிராகரித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே அவர் முன்னெடுக்கிறார் எனவும் அவ்வதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட தரப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

https://www.virakesari.lk/article/227800

நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

3 months 2 weeks ago

நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

October 16, 2025

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் செயற்திறனற்ற வரிக்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கான போதிய நிதி ஒதுக்கீடு இன்மை என்பன தொடர்பில் 101 பக்க விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் 2022ஆம் ஆண்டு உருவான தீவிர பொருளாதார நெருக்கடியில் நாட்டின் வரிக்கொள்கை மிக முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்ததுடன் கல்வி மற்றும் ஏனைய பொதுச்சேவைகளுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிகோலியது. இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கை பல தசாப்தகாலமாக வருமானத்துக்காகக் காத்திருக்கவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய பொருளாதாரக்கொள்கைகளின் பணயக்கைதியாக இருந்துவந்திருக்கிறது. அதனையடுத்து கல்வித்துறைக்கான செலவினங்களில் ஏற்பட்ட கணிசமானளவு வீழ்ச்சி, உலகளாவிய அரங்கில் இலங்கையின் கல்வி நிலைவரத்தைப் பின்னடையச்செய்தது.

இதுகுறித்து ஆராய்வதற்காக இலங்கையின் பொருளாதார நிலைவரம் மற்றும் அரச கல்விக் கட்டமைப்பின் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக 70க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல்கள் நடாத்தப்பட்டன. அத்தோடு இலங்கையின் வரிக்கொள்கைகள் மற்றும் கல்வித்துறைக்கான செலவினங்கள் தொடர்பில் தரவு அடிப்படையிலான பரந்துபட்ட ஆய்வொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கொள்கைசார் தோல்விகள் சிறுவர்களின் கல்விக்கான உரிமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட நாடுகளில் கல்வித்துறையில் பெரிதும் முன்னேற்றமடைந்திருந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கையில் சுதந்திரத்தின் பின்னரான இரு தசாப்தங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 – 5 சதவீதமாகக் காணப்பட்ட கல்வித்துறைக்கான செலவினங்கள், கடந்த 2022ஆம் ஆண்டு 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேபோன்று 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் நாடு கடன்களை மீளச்செலுத்தமுடியாத வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படுவதற்கு குறைந்தளவு வரி வருமானமும் மிகமுக்கிய காரணமாக அமைந்தது. அதன்விளைவாக உருவான பொருளாதார நெருக்கடியை அடுத்து வேலை இழப்பு மற்றும் வருமான வீழ்ச்சி என்பன தீவிரமடைந்ததுடன் மனித உரிமைகளில் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் வாழ்க்கைச்செலவு வெகுவாக அதிகரித்தது.

மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி மாத்திரம் போதுமானதன்று என்பதை இலங்கையின் பொருளாதார நிலைவரம் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்நிலையில் செயற்திறன்மிக்க வரிக்கட்டமைப்பு ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்துவதுடன் அவ்வருமானத்தை சகல இலங்கையர்களும் பயனடையக்கூடியவகையில் கல்வி மற்றும் ஏனைய அரசசேவை வழங்கலுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

www.ilakku.org
No image previewநியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் - மனித...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

3 months 2 weeks ago

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

16 October 2025

1760582563_1355590_hirunews.jpg

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில், தமிழ் கட்சிகளின் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. 

சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கருத்துரைத்தார். 

இதன்போது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்தார்.

https://hirunews.lk/tm/425595/discussion-on-tamil-parties-joining-forces-in-the-jaffna-provincial-council-elections

முறையான அனுமதி இல்லாமல் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்குத் தடை

3 months 2 weeks ago

முறையான அனுமதி இல்லாமல் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்குத் தடை;

214131681.jpg

முறையாக ஒழுங்குபடுத்தவும் திட்டம் வேலணை பிரதேசசபை உடும்புப்பிடி!

வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிதி நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்கவும் சபை தீர்மானித்துள்ளது.

வேலணைப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும், வறிய மக்களை ஏப்பமிடும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தால் முன்மொழிவொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

‘வறிய மக்களை இலக்கு வைத்து, அதிக வட்டி வீதங்களுடன் பல நுண்நிதி நிறு வனங்கள் கடன்களை வழங்குகின்றன. கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்துக்குள் உள்நுழைந்து மக்களை ஏமாற்றி தமது பொறிக்குள் வீழ்த்துகின்றனர். பெண் தலைமைக் குடும்பங்கள் இத்தகைய நுண்நிதி நிறுவனங்களால் பெரும் சுமைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்கின்றனர். சிலர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் நிலையும் காணப்படுகிறது' என்று உறுப்பினர் அனுசியா ஜெயகாந் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த முன்மொழிவின் அவசியம் கருதி, அதை உறுப்பினர் சு.பிரகலாதன் வழி மொழிந்தார். 'தற்போதுவரை நாற்பதுக்கும் அதிகமான நுண்நிதி நிறுவனங்கள் வேலணை பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் பதிவுகள் அற்றவையாகக் காணப்படுகின்றன' என்று அவர் சுட்டிக்காட்டினார். சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பிரேரணைக்குத் தமது ஆதரவை வழங்கினார்கள். இதையடுத்து, வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்நிதி நிறுவனங்கள் செயற்பட வேண்டுமாயின் முறையான அனுமதி பெறப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்தவும் திட்டம் அத்துடன், வேலணை பிரதேசத்துக்குள் செயற்படும் நுண்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து எதிர்வரும் வாரமளவில் கலந்துரையாடல்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1. மீளச்செலுத்தக்கூடிய நிலைமையை அறிந்து கடன் வழங்குதல்,

2. அளவுக்கு அதிகமான வட்டி வீதங்களைப் பேணாது இருந்தல்,

3. பெண் தலைமைக் குடும்பங்களுக்கான கடனுதவிகளில் கூடுதலான சகிப்புத்தன்மையைப் பேணுதல்,

4. கடன்களை வசூலிக்கும் நேரகாலங்களைப் பேணுதல்

ஆகிய விடயங்களில் நுணிநிதி நிறுவனங்களை முறையான ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இந்தக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

https://newuthayan.com/article/முறையான_அனுமதி_இல்லாமல்_நுண்நிதி_நிறுவனங்கள்_செயற்படுவதற்குத்_தடை;

வேலன் சுவாமியை சந்தித்த கஜேந்திரகுமார்

3 months 2 weeks ago

வேலன் சுவாமியை சந்தித்த கஜேந்திரகுமார்

adminOctober 15, 2025

1-2-1.jpg?fit=1170%2C658&ssl=1

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.

நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமிகளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து , சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.  சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

1-1-2.jpg?resize=800%2C450&ssl=11-3-1.jpg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2025/221567/

குருந்தூர் மலையை மகாவம்சந்துடன் தொடர்புபடுத்தி காட்சிப்படுத்தப்பட்ட போலி வரலாற்றுப் புனைவு; தொல்லியல் திணைக்களத்தை வன்மையாகக் கண்டிக்கும் - ரவிகரன் எம்.பி

3 months 2 weeks ago

Published By: Vishnu

15 Oct, 2025 | 09:08 PM

image

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை பௌத்தவரலாற்றுடனும், பௌத்தவரலாற்றுநூலான மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான வரலாற்றுத் தகவல்கள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் குருந்தூர்மலைப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுதொடர்பில் அறிந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குருந்தூர்மலைப்பகுதிக்கு 15.10.2025இன்று நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டிற்குத் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலையில் சில விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் கிடைக்கப்பெற்றது அதற்கமையவே இப்பகுதிக்கு வருகைதந்தேன்.

ஏற்கனவேயும் தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையை பௌத்த இடமென விவரிக்கும் வகையில் காட்சிப்பலகைகள் குருந்தூர்மலை அடிவாரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் 14.10.2025அன்று புதிதாக "குருண்டி தொல்லியல் தளம்" எனத் தலைப்பிடப்பட்டு போலியான பௌத்த வரலாறுகள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் தொல்லியல் திணைக்களத்தினால் குருந்தூரமலையின் அடிவாரம், குருந்தூர்மலையின் மேற்பகுதி மற்றும் குருந்தூர்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமாக மொத்தம் நான்கு இடங்களிவ் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறான போலியான வரலாற்று புனைவுகளை இங்கு நிறுவுவதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

குறிப்பாக எமது தமிழ் மக்கள் இந்தக் குருந்தூர்மலையை அண்டியுள்ள  தண்ணிமுறிப்பு பகுதியில்  பூர்வீகமாக வாழ்ந்துவந்ததுடன், இந்த குருந்தூர்மலையில் அமைந்திருந்த ஆதிசிவன் ஐயானாரை வழிபட்டுவந்துள்ளனர். இதுவே தண்ணிமுறிப்பினதும் குருந்தூர் மலையினதும் வரலாறாக இருக்கின்றது. இந்நிலையில் இந்த தண்ணிமுறிப்புப் பகுதியில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த எமது தமிழ் மக்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

இத்தகையசூழலில் தமிழர்களுடைய பூர்வீக வாழிடமான தண்ணிமுறிப்பையும், குருந்தூர்மலையையும் மகாவம்சத்துடனும், பௌத்த வரலாறுகளுடனும் தொடர்புபடுத்தி தொல்லியல் திணைக்களத்தினால் போலியானதொரு வரலாறு புனையப்பட்டு காட்சிப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறாக போலியான வரலாறுகளைப் புனைந்து காட்சிப்பலகைகளை காட்சிப்படுத்துவது தொல்லியல் திணைக்களத்தினுடைய பணியில்லை. தொல்லியல் திணைக்களமென்றால் இந்தநாட்டில் சிங்களமக்கள், தமிழ்மக்களென்ற வேறுபாடின்றி வரலாறுகளை ஆராய்ந்து உண்மையான வரலாறுகளை பதிவுசெய்யவேண்டும்.

ஆனால் இலங்கையிலுள்ள தொல்லியல் திணைக்களம் பௌத்தர்களுக்கு சார்பாக போலியான வரலாற்றுபுனைகதைகளை உருவாக்குவது மற்றும் காட்சிப்படுத்துகின்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கின்றனர். இவ்வாறாக எம்மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய சகல இடங்களும் எமது தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்களாகும்.

தற்போதும் தொல்லியல் திணைக்களத்தால் அடாவடியாக ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களிலெல்லாம் தமிழ் மக்களே பயிர்ச்செய்கை மேற்கொண்டுவருகின்றனர்.

குறிப்பாக குருந்தூர்மலையைச்சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 300ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ளன. இவ்வாறு தொல்லியல் திணைக்களம் பாரிய அளவில் எமது தமிழ் மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்காணிகளையும் அபகரித்து வைத்திருப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. எனவே அந்தக் காணிகளும் விடுவித்து எமது தமிழ் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும். எமது தமிழ் மக்கள் தண்ணிமுறிப்பில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்றே நாம் தொடர்சியாக கோரிவருகின்றோம்.

எமது பூர்வீக தாயகத்தில் நாம் எமது வரலாறு, பண்பாடு, கலாச்சாரம்,வாழ்வியல் வழிபாட்டு அம்சங்களுடன் நிறைவாக வாழ்வதையே விரும்புகின்றோம்.  ஆனால் எமது கட்டமைப்புக்களைச் சீர்குலைக்கின்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொல்லியல் திணைக்களம் தொடர்ச்சியாகச் செயற்பட்டுவருகின்றது.

தொல்லியல் திணைக்களம் போலியாக வரலாறுகளைப் புனைந்துள்ள மகாவம்சக் காலத்திற்கு முன்பிருந்தே எமது தமிழர்கள் ஆண்ட இடங்களாக இந்த இடங்கள் காணப்படுகின்றன.

இந்த நாடு பெரும்பான்மை பௌத்தர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றதென்பதற்காக, பெரும்பான்மை பௌத்தர்களுக்கு ஏற்றவர்களுக்கு போலியான வரலாறுகளைப் புனைந்து தமிழர்களின் பூர்வீக வரலாற்றிடங்களைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்புச் செய்வதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மேலும் இந்த குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைகளையும் மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு பொறுப்பாகவுள்ள தேரரரும் இவ்வாறான அபகரிப்பு மற்றும் பௌத்த வரலாற்று புனைவுச்  செயற்பாடுகளுக்கு முழு ஆதரவுடன் செயற்படுவதாக அறிகின்றோம். இவ்வாறாக பௌத்த துறவியாக இருப்பதற்கு அடிப்படைத் தகுதியே இல்லாத ஒருவரையே இங்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. அவருடைய அத்துமீறல்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் இத்தகைய வரலாற்றுப் புனைவுகளூடாக மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிவ் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், இத்தகைய செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் எம்மாலான சகலநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/227838

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் மீது பலாத்கார முயற்சி

3 months 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (14) நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். 

எனினும் அவரிடம் இருந்து அந்த பெண் தப்பிச் சென்று தமது உறவினர்களுக்கு அறியப்படுத்திய நிலையில், பெண்ணின் உறவினர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததுடன் அவரை தேடி பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையிலேயே சந்தேகநபர் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 

இதனை அடுத்து சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmgrviros0117o29nfawimp1u

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தின் முதல் கொடி ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது

3 months 2 weeks ago

15 Oct, 2025 | 04:09 PM

image

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதல் கொடி, அடையாள ரீதியாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது.

இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் தலைவி நில்மினி சமரவீர, கொடியை ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவித்தார்.

பின்னர், வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வெள்ளைப் பிரம்புகளை வழங்கி வைத்தார்.

கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பார்வையற்றோர் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று சம்மேளனத்தின் தலைவி தெரிவித்தார்.

இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதியின் செயலாளர்  கலந்துரையாடியதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் சமீர புபுது குமார உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-10-15_at_16.01.13.jp

WhatsApp_Image_2025-10-15_at_16.01.14.jp

WhatsApp_Image_2025-10-15_at_16.01.13__2

WhatsApp_Image_2025-10-15_at_16.01.13__1

WhatsApp_Image_2025-10-15_at_16.01.12.jp

https://www.virakesari.lk/article/227815

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

3 months 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் தனது விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmgro6se10113o29nihpjx5ac

Checked
Wed, 02/04/2026 - 07:31
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr