ஊர்ப்புதினம்

யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!

3 months 1 week ago

Published By: Vishnu

21 Oct, 2025 | 07:48 PM

image

யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. 

கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VID-20251021-WA0085_1_.jpg

VID-20251021-WA0085.jpg

VID-20251021-WA0086.jpg

https://www.virakesari.lk/article/228328

LGBTQI சட்டத் திருத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்

3 months 1 week ago

Simrith   / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 02:36 - 0     - 24

messenger sharing button

facebook sharing button

digg sharing button

email sharing button

தேசிய மக்கள் சக்தி (NPP) கொள்கைப் பிரகடனத்தில் LGBTQI சமூகத்தை குறிவைக்கும் சட்டங்களைத் திருத்துவதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயிக்கவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

"இயற்கைக்கு மாறான குற்றங்கள்" மற்றும் "நபர்களுக்கு இடையேயான மொத்த அநாகரீக செயல்கள்" என்ற தலைப்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 365 மற்றும் 365A ஆகியவை வரலாற்று ரீதியாக LGBTQI சமூகத்தை குறிவைத்து துன்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

NPP தேர்தல் அறிக்கையில், ஒருமித்த ஒரே பாலின நடத்தையைத் தண்டிக்கும் பிரிவு 365A ஐ ரத்து செய்வதற்கான உறுதிமொழியும் அடங்கும். பெண்கள், குழந்தைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களை ஒடுக்குவதாக ஆர்வலர்கள் கூறும் பிரிவுகள் 365 மற்றும் 365A உள்ளிட்ட பிற பாகுபாடான சட்டங்களைத் திருத்துவதற்கும் இது உறுதியளிக்கிறது.

2023 ஆம் ஆண்டில், இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரேம்நாத் சி. டோலவத்தே, தண்டனைச் சட்டத்தின் இந்தப் பிரிவுகளை குற்றமற்றதாக்குவதற்காக ஒரு தனிநபர் உறுப்பினர் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தினார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாணயக்காரவிடம், இந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்று கேட்கப்பட்டது.

"இந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலினம் காரணமாக ஒரு நபர் ஓரங்கட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்பாததால், அது எங்கள் அறிக்கையில் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எங்கள் கொள்கை அப்படியே உள்ளது, ஆனால் இது எப்போது கொண்டு வரப்படும் என்பதற்கான காலக்கெடுவை நாங்கள் வகுக்கவில்லை," என்று அவர் கூறினார்.

கொள்கை தெளிவாக இருந்தாலும், சட்டமன்ற மாற்றங்களை இயற்றுவதற்கு முன் பொதுமக்களின் எதிர்வினையை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நாணயக்கார மேலும் கூறினார்.

"LGBT சமூகத்தினர் என்னுடன் பேசியுள்ளனர், இலங்கை மனித உரிமைகள் ஆணையரும் அப்படித்தான். எங்கள் கொள்கை மாறாமல் உள்ளது என்பதே எனது பதிலாக இருந்தது. இருப்பினும், எந்தவொரு சட்டத்தையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, இந்த விவகாரம் குறித்து நன்கு அறியப்பட்ட மற்றும் உண்மை நிறைந்த பொது விவாதம் நடத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

அரசியலில் நேரம் மிக முக்கியமானது என்றும், இது தொடர்பான எந்தவொரு முடிவும் இறுதியில் அமைச்சரவையிடமிருந்து வரும் என்றும் அவர் கூறினார்.

"அமைச்சரவையே இதற்கான நேரத்தை முடிவு செய்யும். எனவே, அடுத்த 6 மாதங்களுக்குள் இது கொண்டு வரப்படும் என்று நான் மட்டும் ஒரு அறிக்கையை வெளியிட முடியாது," என்று நாணயக்கார கூறினார். 

Tamilmirror Online || LGBTQI சட்டத் திருத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை சேவைகள் விரிவாக்கம்! - பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி

3 months 1 week ago

21 Oct, 2025 | 12:02 PM

image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நீரிழிவு சிகிச்சை மையத்தை வெளிநோயாளர் கட்டடத் தொகுதியின் முதலாம் மாடியில் திறந்துவைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த பிரிவின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது இது வெளிநோயாளர் மற்றும் விபத்து சிகிச்சை கட்டடத் தொகுதிகளுக்கு இடையிலான பகுதியில் இரத்தப் பரிசோதனை மாதிரிகளை வழங்கும் பகுதி இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைக்கப்படுவதுடன், பரிசோதனைகளுக்காக இரத்த மாதிரிகளை வழங்கும் நபர்கள் இலகுவாக இப்பகுதியில் சேவைகளை பெற முடியும்.

தினசரி 200க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இலகுவாகவும் முறையாகவும் சேவைகளை பெறக் கூடிய சூழல் இங்கு உருவாகியுள்ளது.

எனவே, இரு இடங்களில் சேவைகள் வழங்கப்படுகிறது.

மேற்படி நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் இதுவரை 40,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக பதிவாகும் நோயாளர் ஒருவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

பின்னர், வருடந்தோறும் நடைபெறும் பரிசோதனையின் மூலம் வளர்ச்சி நிலை மதிப்பீடு செய்யப்படுகின்றது. தேவைப்பட்டால் சிகிச்சை முறையிலும் மாற்றங்கள் செய்யப்படும்.

கடந்த 15 வருடங்களாக, இந்த சிகிச்சை மையத்திற்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் தொடர்ந்து மேலதிக அனுசரணைகளும் ஆதரவுகளும் வழங்கி வருகின்றது.

இவ்வாறு நீடித்த பங்களிப்புகள், இந்நிலையின் வளர்ச்சிக்கும் நோயாளர்களுக்கான தரமான சேவைகளுக்கும் பெரும் பங்களிப்பாக உள்ளதாக வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

1__1_.jpg

1__5_.jpg

1__3_.jpg


யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை சேவைகள் விரிவாக்கம்! - பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி | Virakesari.lk

இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

3 months 1 week ago

21 Oct, 2025 | 03:16 PM

image

இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ இது தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெயரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.

இஷாரா செவ்வந்தி குறித்த பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வுருகின்றன. 

இதன் மத்தியில் கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பயன்படுத்திய தேர்தல் சுவரொட்டிகளில் இஷாரா செவ்வந்தியின் படத்தை பயன்படுத்தி இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன.

குற்றச் செயல்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான போலி தகவல்களை பரப்பும் சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு! | Virakesari.lk

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம்

3 months 1 week ago

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை - வைத்தியசாலைக்கு முன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு 

21 Oct, 2025 | 03:31 PM

image

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியசாலையில் கடமையாற்றிய 21 பணியாளர்கள் உட்பட 68 பேரை சுட்டுப் படுகொலை செய்ததோடு, இந்த தாக்குதலில் பலரும் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது. 

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. 

VID-20251021-WA0037.jpg

VID-20251021-WA0037_2_.jpg

VID-20251021-WA0035.jpg

VID-20251021-WA0039.jpg

https://www.virakesari.lk/article/228274

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

3 months 1 week ago

Picsart_25-10-21_11-21-08-175-780x899.jpg

பாறுக் ஷிஹான்

தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

1990 ஆண்டு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.இந்த காலகட்டத்தில் தான் விடுதலைப் புலிகள் தங்களது செயற்பாடுகளை உற்சாகமாக மேற்கொண்டு சென்ற காலம்.அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்த காலம்.1987 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலம்.அதே நேரம் தங்களை மேலும் எவ்வாறு வளப்படுத்தலாம் என்று யோசனை செய்கின்றார்கள்.அவ்வாறு யோசிக்கின்ற போது தற்போது உள்ளது போன்று 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்ள காலப்பகுதியில் தங்கத்திற்காக விலை அதிகமாக இருந்தது.

எனவே தங்கத்தின் ஊடாக தங்களது அமைப்பினை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எவ்வாறு தங்கத்தை மீட்டெடுத்தல் என்ற எண்ணத்தில் ஈடுபட்டார்கள்.வட மாகாண முஸ்லீம்கள் விடுதலைப் புலிகளால் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்று பல ஆய்வுகள் நடைபெறுகின்றன.அதில் ஒன்று அன்று இருந்த தங்கத்தின் விலை காரணமாக தங்கத்தை சர்வதேசத்தின் ஊடாக கொண்டு சென்று அதனூடாக பணத்தை திரட்டி அதனூடாக ஆயுத கொள்வனவில் ஈடுபடலாம் என்ற ஒரு ஆய்வும் அவர்கள் மத்தியில் இருந்துள்ளது.

அந்த ஆய்வின் ஊடாக தான் வட மாகாண முஸ்லீம்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.வடக்கில் யாழ்ப்பாணம் மன்னார் பகுதியில் காத்தான்குடி பிரதேசம் போன்று அதிகளவானவர்கள் வியாபாரிகள்.அதாவது இவ்வாறான வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அந்த தங்கங்களை எடுத்தால் ஆயுத கொள்வனவிற்காக பணம் திரட்டி கொள்ளலாம் என்று தான் அந்த வெளியேற்றம் நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என பலரும் இன்றும் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இருக்கின்ற போது வருகின்ற ஒவ்வொரு அரசாங்கத்திடமும் வடக்கு மாகாண முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் ஓர் ஆணைக்குழுவினை நியமித்து முக்கியமாக இவர்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது தொடர்பான அறிக்கையினை செய்து தருமாறு கோரியிருந்தோம்.ஆனால் இதுவரை அந்த ஆணைக்குழுவானது நியமிக்கப்படவில்லை.அவ்வாறான ஆய்வும் மேற்கொள்ளப்படவும் இல்லை.உண்மையில் அது வேதனைக்குரிய விடயம்.நான் இன்றும் கூட மகஜர் ஒன்றினை எழுதி கொண்டு வந்திருக்கின்றேன்.இந்த மகஜர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பதற்காக ஆளுநர் ஊடாக அனுப்புவதற்கு எழுதப்பட்டுள்ளது.இந்த மகஜரில் அதே விடயத்தை மீண்டும் போட்டிருக்கின்றேன்.சுமார் 35 வருடங்களுக்கு பிறகும் ஒரு விடயத்தை நாங்கள் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டு வருகின்றோம்.

எனவே அந்த அடிப்படையில் வட மாகாண முஸ்லீம்கள் தங்கத்திற்காக அல்லது தங்கத்தை கொள்ளையடிப்பதற்காக வேண்டி வெளியேற்றப்பட்டார்கள்.என்ற மிகவும் வேதனையான நிகழ்வு ஒன்று இருக்கின்றது.அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் என்பது அந்த பிரதேசத்தில் வியாபாரிகள் மீனவர்கள் விவசாயிகள் என சுமார் 75 ஆயிரம் முதல் 1 இலட்சம் பேர் வரை வெளியெற்றப்பட்டார்கள் என தெரிவித்தார்.

Madawala News
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை வ...
பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனைய
Madawala News
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை வ...
பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனைய

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

3 months 2 weeks ago

images-7.jpg?resize=340%2C148&ssl=1

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக மூன்று ;மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் பலத்த மழைக் காரணமாக 144 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோட்டை தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கண்டி, மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரையிலான 04 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

https://athavannews.com/2025/1450782

கணேமுல்ல சஞ்சீவ கொலை: Dead Cat Theoryயை கடைபிடித்த தெற்கின் அரசியல் கட்சி!

3 months 2 weeks ago

மீகஸ்ஆரே கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகள், கணேமுல்ல சஞ்ஜீவ ஆகியோரின் கொலைகள் Dead Cat Theory என்ற அரசியல் கோட்பாட்டின் வெளிப்பாடுகள் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகளின் கொலையில் ஜே.சி.பி சமன் அல்லது பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தில் பெரும் குழப்பங்கள், சந்தேகங்கள் வலுவடைந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை

கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வது நீண்ட நாள் திட்டம் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை: Dead Cat Theoryயை கடைபிடித்த தெற்கின் அரசியல் கட்சி! | Popular Political Party In South Dead Cat Theory

கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்கான சந்தர்ப்பம் வரும் வரை கெஹெல்பத்தர பத்மே காத்திருந்தார்.

கார் ஒன்றை ஜே.சி.பி சமனுக்கு வாடகைக்கு வழங்கி அதில் பொருத்தப்பட்டிருந்த GPS தொடர்பிலேயே முறுகல் ஏற்பட்டதாக கஜ்ஜாவின் மகன் அண்மையில் நேர்காணலொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்வாண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்ற வளாகத்திலுள்ள இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் கொலை செய்யப்படுகிறார்.

அதற்கு முன்தினம் அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி இரவு தனது இரு பிள்ளைகளுடன் கஜ்ஜா கொலை செய்யப்படுகிறார்.

துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரம்

குறித்த இரு கொலைகளும் துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரம் தலையோங்கி காணப்பட்ட போது நடத்தப்பட்ட நிலையில், கஜ்ஜாவின் கொலை சாதாரண கொலைச் சம்பவமாகவும், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை பெரும் பரபரப்பையும் உண்டாக்கியது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை: Dead Cat Theoryயை கடைபிடித்த தெற்கின் அரசியல் கட்சி! | Popular Political Party In South Dead Cat Theory

இவ்வாறான பின்னணியில், கஜ்ஜா ஒரு யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தான் கொலை செய்யப்பட்டால் அதற்கு ராஜபக்சர்களே பொறுப்பாளிகள் எனவும் தெரிவித்திருந்தார்.

கஜ்ஜா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கணேமுல்ல சஞ்சீவ கொலை இடம்பெற்றதால் கஜ்ஜா, தனது மரணத்திற்கு யார் காரணம் என தெரிவித்த கருத்து வலுவிழக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டது.

எந்தவொரு ஊடகத்திலும் அது பேசு பொருளாக்கப்படவில்லை. இங்கு தான் இந்த Dead Cat Theory என்ற அரசியல் கோட்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

Dead Cat Theory

Dead Cat Theory (டெட் கேட் தியரி) என்பது அரசியல் மற்றும் ஊடகங்களில் சாதகமற்ற செய்திகள் அல்லது சூழ்நிலைகளிலிருந்து திசை திருப்பப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரமாகும்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை: Dead Cat Theoryயை கடைபிடித்த தெற்கின் அரசியல் கட்சி! | Popular Political Party In South Dead Cat Theory

இதனை, அரசியல்வாதியொருவர் ஒரு வாதத்தில் தோல்வியடையும் போது அல்லது எதிர்மறையான ஆய்வுக்கு உள்ளாகும் போது, அதிர்ச்சியூட்டும் அல்லது பொருத்தமற்ற தகவலை வௌியிட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை அசல் பிரச்சினையிலிருந்து திசைதிருப்பக்கூடிய செயற்பாடு என அவுஸ்திரேலிய அரசியல் மூலோபாய நிபுணர் லிண்டன் கிராஸ்பி விளக்கியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மித்தெனியவில் இரு பிள்ளைகளுடன் கஜ்ஜா கொலை செய்யப்படுகிறார். அதற்கு அடுத்த நாளான பெப்ரவரி 19 ஆம் திகதி காலை கணேமுல்ல சஞ்ஜீவ நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி காலை, கஜ்ஜாவின் கொலை தொடர்பில் அவர் முன்கூட்டியே ஊடகங்களில் கூறிய விடயங்கள் ஆழமாக அலசப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், அந்த கொலையும் அதற்கான பிரதான காரணங்கள் மறைக்கப்பட்டு கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பரபரப்பான செய்தியாக்கப்பட்டது.

தற்போது இவ்விரு கொலைகள் தொடர்பிலும் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றின் அடிப்படையில், இவ்விரு கொலைகளுக்கும் உதவியவர் சம்பத் மனம்பேரி. அவர் மொட்டுக் கட்சியில் அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளார்.

ஆக, இந்த விடயங்களில் தெற்கின் பிரதானமான ஒரு கட்சி Dead Cat Theory யின் அடிப்படையில் செயற்பட்டுள்ளதை இவ்விடயங்களால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/popular-political-party-in-south-dead-cat-theory-1760879786

இலங்கை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

3 months 2 weeks ago

Published By: Digital Desk 1

20 Oct, 2025 | 02:26 PM

image

இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் 'Orionid' விண்கல் மழையை கண்டுமகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்றிரவு (20) தெரியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை பார்வையிட முடியும் என்றும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/228215

தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்த முடியும்!

3 months 2 weeks ago

images-6.jpg?resize=275%2C183&ssl=1

தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்த முடியும்!

தென் மாகாணத்தில் ஆரம்பம் தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியும் என்று பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ்ஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1450775

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

3 months 2 weeks ago

Published By: Digital Desk 1

20 Oct, 2025 | 09:36 AM

image

போதைப்பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவேண்டும். சிறுவர்களை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். சிறுவர்கள் மீதான முதலீடு என்பது சிறப்பான எதிர்கால நாட்டுக்கான அடித்தளமாகும் என  வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். சிறுவர்களுக்கு தீங்கான எதையும் நாம் முன்னெடுக்கக் கூடாது. 

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் இருந்தார்கள். இன்றும் விபத்துக்களால் பெற்றோர்களை இழந்து அநாதரவான நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்படுகின்றார்கள். 

எந்தவொரு சிறுவர்களுக்கும் ஆதரவில்லாத நிலைமை வரக்கூடாது. அவர்களி;ன் எதிர்காலம் பாதிக்க அனுமதிக்க முடியாது. மாகாணத் திணைக்களம் சிறுவர் இல்லங்களைக் கண்காணித்து சகல சிறுவர்களையும் அரவணைத்து அவர்களை இந்த நாட்டுக்குத் தேவையான நற்பிரஜையாக உருவாக்கவேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/228179

நிமலராஜன் நினைவேந்தல்!

3 months 2 weeks ago

நிமலராஜன் நினைவேந்தல்!

adminOctober 19, 2025

Nimalarajan.jpeg?fit=1170%2C780&ssl=1

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . ஊடக அமையத்தில் , அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிமலராஜனின் திருவுரு படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர் , தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

அந்நிலையில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர்.

அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர்.

இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் , இதுவரையில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/221734/

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

3 months 2 weeks ago

anura-2.jpg?resize=750%2C375&ssl=1

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வாழ்த்து செய்தியில்,
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று (20) கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தை தோற்கடித்து அநீதியை வென்றது போன்று, அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையை தாங்கி அவர்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த கொண்டாட்டம் தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கிறது.
தற்போது நம்முன்பாக உள்ள பாரிய சவாலைப் போன்றே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் போதைப்பொருள் மற்றும் மறைந்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .

அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும்.

அதேபோல், நமது பிரஜைகள் மட்டுமன்றி இந்த நாட்டில் வசிக்கும் மற்றும் வருகை தரும் அனைத்து மக்களின் உடல், மன, பௌதீக மற்றும் உணர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பிற்காக அரசாங்கமென்ற வகையில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

அனைத்து மதவாத மற்றும் இனவாத சக்திகளையும் தோற்கடித்து சமூக நீதியை நிலைநாட்டவும், அனைவரும் தங்கள் அனைத்து சிவில், அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய, அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்பதை இதன் மூலம் வலியுறுத்துகிறேன்.

தீபாவளி உண்மையிலேயே ஒரு ஒளிப் பண்டிகை. தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்யும் விளக்குகளுடன், ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ தொடர்பிலான இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நமது ஒன்றிணைந்து செல்லும் பாதை இன்னும் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று பிரார்த்தித்து இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்து பக்தர்களுக்கும் அவர்களின் இதயங்களை பிரகாசமாக்கும் மகிழ்ச்சிகரமான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1450755

தையிட்டி விகாரை தேவதம்பிய தீசன் காலத்தானாம்

3 months 2 weeks ago

தையிட்டி விகாரை தேவதம்பிய தீசன் காலத்தானாம்

written by admin October 19, 2025

Thaiyiddi-Viharai.jpg?fit=840%2C560&ssl=

 

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலம் அதனை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து தர வேண்டும் என கோரி இலங்கை பௌத்த காங்கிரஸ் , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக எமது பகுதி இருந்த வேளை எமது உறுதி காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அதனுள் விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் , விகாரையை சுற்றியுள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும் , அந்த காணிகளை எம்மிடம் மீள கையளிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை விகாரை கட்டுவதற்கான அனுமதிகள் எவையும் பெறப்படாது , அவ்விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வரும் காலங்களில் எவ்விதமான புதிய கட்டட வேலைகளை  அனுமதியின்றி முன்னெடுக்க கூடாது என பிரதேச சபையினால் விகாராதிபதிக்கு அறிவுறுத்தலுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அவ்வாறான நிலையிலையே இலங்கை பௌத்த காங்கிரஸ் , தவிசாளருக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

குறித்த கடிதத்தில்,

தையிட்டி திஸ்ஸ விகாரை தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலத்தில் நிறுவப்பட்ட புராதன விகாரை ஆகும். அது பிற்காலத்தில் அழிவடைந்த நிலையில் 1950ஆம் ஆண்டு கால பகுதியில் , மீளவும் புனரமைக்கப்பட்டு  , 1959ஆம் ஆண்டு வரையில் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதற்கான சான்று ஆதாரங்கள் உண்டு.

1958ஆம் ஆண்டு நிலஅளவை திணைக்களத்தின் வரை படத்தின் பிரகாரம் 20 ஏக்கர் காணி விகாரைக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. அப்பகுதியில் குளம் ஒன்றும் காணப்பட்டுள்ளது.  1971ஆம் ஆண்டு கால பகுதியில் நகர அபிவிருத்தி திட்டத்தில் கூட இந்த இடம் விகாரை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் உள்நாட்டு போர் காரணமாக விகாரையை சுற்றியுள்ள அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அப்பகுதியில் சுமார் 6ஆயிரம் ஏக்கர் காணி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்பகுதிகள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, 2018ஆம் ஆண்டு கால பகுதியில் விகாரை இருந்த இடம் அடையாளப்படுத்தப்பட்டு , விகாரை அமைக்கும் பணிகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.  2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையில் விகாரையின் விரிவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

2024ஆம் ஆண்டு விகாரைக்குரிய காணியை அடையாளப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட நில அளவையின் 14 ஏக்கர் 5.97 பேர்ச் காணியே காணப்பட்டது. 1959ஆம் ஆண்டு விகாரைக்கு இருந்த காணியை விட சுமார் 6 ஏக்கர் காணி குறைவாக காணப்பட்டது அதனால் எஞ்சிய காணிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் முதலாவது தமிழ் பௌத்த பாடசாலை திஸ்ஸ விகாரையை அடிப்படையாக கொண்டே அமைக்கப்பட்டது. என்பதையும் கூறி வைக்கிறோம்.

தற்போது திஸ்ஸ விகாரைக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழிபாட்டுக்கு வந்து செல்கின்றனர். அதனால் அவர்களின் நலன் கருத்தி விகாரையில் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள இருப்பதனால் , அப்பணிகளுக்கு பிரதேச சபையினால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் , ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விகாரையை பாதுகாத்து தர வேண்டும் எனவும் கோருகிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

https://globaltamilnews.net/2025/221709/

இலங்கையில் கட்சி அரசியல் மறைகிறது - ரணில் விக்கிரமசிங்க

3 months 2 weeks ago

Published By: Digital Desk 1

19 Oct, 2025 | 02:56 PM

image

இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் சூழல் மையங்கொள்வதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகிலும் இந்த மாற்றம் நிகழ்வதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் போக்கு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான வருண ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையடல் ஒன்றின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில், ஜனநாயக நாட்டிற்கு எதிர்க்கட்சியின் செயல்திறன் மிகவும் முக்கியமானது. ஆனால் எதிர்காலத்தில் கட்சி அரசியல் தோல்வியடைந்து, தனிநபர்களைச் சுற்றியே அரசியல் தீர்மானிக்கப்படும். இருப்பினும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும். ஆனால் இன்று எதிர்க்கட்சி பலவீனமாகவே உள்ளது. எதிர்க்கட்சியாக பரந்துபட்டுச் செயல்படாமல், சில நபர்கள் மட்டுமே எதிர்க்கட்சியாகச் செயல்படுகின்றனர். உதாரணமாக சாமர சம்பத், தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் உள்ளனர்.

உத்தேச பொதுக் கூட்டணியின் தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. இதற்கு நான் இணங்கமாட்டேன் என்று கருதுகின்றனர். அவ்வாறில்லை. ஆவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டால், கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டம் என்ன என்ற கேள்வி உள்ளது. பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகள் மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளும் அரசியல் நிலப்பரப்பில் மறைந்து போகலாம். இலங்கையில் மட்டுமல்ல, முழு உலகிலும் 'தனிநபரை சார்ந்த அரசியல் உருவாகி வருகிறது. உலகெங்கிலும் கட்சிக் கட்டமைப்புகளை விட, தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் ஒரு காலகட்டம் வரும் என்றார்.

https://www.virakesari.lk/article/228143

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியம்

3 months 2 weeks ago

Published By: Digital Desk 3

19 Oct, 2025 | 01:46 PM

image

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

"வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் உள்ளன.

தற்போது குமரிக் கடலுக்கு அண்மித்ததாக நிலவுகின்ற காற்றுச் சுழற்சியின் விளைவாக நாட்டின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியான மழை கிடைத்து வருகின்றது.

அத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

தற்போதைய மாதிரிக் கணிப்புக்களின் அடிப்படையில் இந்த தாழமுக்கமானது ஒரு புயலாக வலுப்பெற்று அல்லது ஒரு வலுக்குறைந்த புயலாக மாற்றம்பெற்று இந்தியாவின் ஆந்திராவில் நெல்லூருக்கு அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தாழமுக்கத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நேரடிப் பாதிப்புகள் எவையும் இல்லை. ஆனால், மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன.

தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்குக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

ஆதலால், கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

அத்துடன் நவம்பர் மாதத்தின் முதலாவது வாரத்திலும் தாழமுக்கம் ஏற்படுவதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன" என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/228137

திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து!

3 months 2 weeks ago

திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து!

written by admin October 19, 2025

MU1.jpg?fit=1170%2C878&ssl=1

 

மூன்றாவது கண் உள்@ர் அறிவுத்திறன் செயற்பாட்டு நண்பர்கள் குழுவின் ஓர் அங்கமாகிய முரசம் பேரிசை கலைகள் கற்கைகள் மன்றத்தினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழா ஆனது இவ் வருடமும் 11.10.2025ஆம் திகதி முன்னர் பெரியதுறை என அழைக்கப்பட்ட திருப்பெருந்துறையில் நடத்தப்பட்டது.

இவ் விழாவில் முரசம் (பறை) மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களது கலைச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களுடன் அவர்களது ஆற்றுகைகளும் நிகழ்த்தப்படுகின்றமை வழமையாகும். அந்தவகையில் கடந்த வருடம் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வெகு விமரிசையாக கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு நுண்கலைத்துறை மாணவன் செல்வன் டானியல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25.ற்கும் மேற்பட்ட பரம்பரை மற்றும் தொழில்முறை பறை மற்றும் சொர்ணாலி இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து முன்றாவது கண் நண்பர்களால் இவ் விழா முன்னெடுக்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவியான செல்வி லாவண்யா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முரசம்  பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவானது கடந்த சனிக்கிழமை 11.10.2025ம் திகதி காலை 10.00 மணியளவில்  மிகச்சிறப்பாக ஆரம்பமானது.

இவ்விழாவிற்கு களுதாவளையைச் சேர்ந்த ச. திவ்யபுத்திரன், ச. விஜயபுத்திரன் எனும் இளங்கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் பாரம்பரிய மற்றும் தொழில்முறை கலைஞர்களாவார்கள். இவர்களோடு பாரம்பரிய கலைகளிலும், பாரம்பரிய வைத்திய முறையிலும் தேர்ச்சி பெற்ற தேனூரான் என்னும் சிறப்புப் பெயருடைய தருமரெத்தினம் அவர்களும் கலந்துகொண்டார். இவ் விழாவிற்கு அழைக்கப்பட்ட கலைஞர்கள் மாலையிட்டு, எமது பண்பாட்டின் மற்றோர் அம்சமான கைத்தறி சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும் கலைஞர்களது பரம்பரைக் கலைகள் தொடர்பான கருத்துகளும் ஆற்றுகைகளும் பரிமாறப்பட்டதோடு அங்கு வருகை தந்திருந்த எம் பாரம்பரிய கலைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முரசம் மற்றும் சொர்ணாலி இசையின் இசைப்பு முறைகளும் பயிற்றுவிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் எமது பாரம்பரிய கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் முகமாக சி. ஜெயசங்கர் எழுதிய “எங்களின் அறிவில் எங்களின் திறனில் தங்கி நிற்போம் நாங்கள்” எனும் பாடல் பாடப்பட்டு, தமிழர்களின் தொன்மையான வாத்தியமான பறை வாத்தியம் எங்களது வாழ்வியலோடு எவ்வாறு இணைந்திருந்தது என்றும் அது இன்று பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு இன்று பறை, சொர்ணாலி வாத்தியங்களை எப்படி வாசிக்கிறார்கள் என்றும் அந்த வாத்திய வாசிப்புகளுக்கான தாளக்கட்டுகளுக்கான பயிற்சியும் அழைக்கப்பட்ட இரு கலைஞர்களால் வழங்கப்பட்டது.

மேலும் முரசம் மற்றும் சொர்ணாலி இசைக்கலைஞர்கள் தங்கள் கருத்துகளில், இன்று தங்கள் சமூகத்தில் இளம் தலைமுறையினர் பறை இசைப்பதில் பெரிதும் நாட்டம் கொள்ளாத நிலையிலும் தங்கள் கலையை தாங்கள் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம் என்றும், தங்களுக்கு போதுமான வருமானத்தை தரக்கூடிய கலை வடிவம் இது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

MU2.jpg?resize=800%2C712&ssl=1

இறுதியாக இந் நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு கலைகளுடனும் கலைச் செயற்பாடுகளுடனும் தொடர்புள்ள இளம் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் இன்று தென்னிந்திய சினிமாப் பாடல்களையும் மேற்கத்தேய வாத்தியங்களையும், இசைகளையும் பழகுவதிலும், நிகழ்த்துவதிலும் பெருமைகொள்ளும் நாங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு தகவலை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் முதன்மையான முரசம் என்கின்ற பறை இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞர்களை இன்னும் பழைய நிலையிலே தான்  பார்க்கிறோம். அதாவது உதாரணத்திற்கு, அவர்கள் கதிரையில் இருந்தால் கூட “ஏன் நீங்கள் இப்போ கதிரையிலும் இருக்க ஆரம்பித்துவிட்டீங்களா?” என கேட்கின்ற நிலையில் தான் எம் சமூகத்தின் மனநிலை அமைந்திருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. இப்படி பல்வேறு வகையில் அவர்களைத் துன்புறுத்தி வைத்திருப்பதாகவே நம் சமூகக் கட்டமைப்பு காணப்படுகின்றது.

ஆனால் இன்று பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத பலரும் பறை மற்றும் சொர்ணாலி வாத்தியங்களை இசைக்கின்றனர். அவர்கள் இக் கலைகளை பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களிடமிருந்தே கற்றுக்கொண்டு தற்போது தொழில்முறைக் கலைஞர்களாக உருவெடுத்துள்ளனர். இதற்கு காரணமாக அமைந்தது யாதெனில், இக் கலைகளை இசைத்த பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களுக்கும் அவர்களது சமூகத்திற்கும் சுற்றியுள்ள மற்றைய சமூகங்களால் இழைக்கப்பட்ட அநீதிகளும், அவ் அநீதிகளின் நிமித்தம் கலைஞர்கள் அடைந்த அவமானத்தினால் இக் கலையை கைவிட்டுவிட்டு ஒதுங்கி இருந்தமையே ஆகும். மேலும் பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத தொழில்முறைக் கலைஞர்கள் கோவில்களில் மாத்திரம் இக்கருவிகளை வாசிக்கின்றனரே தவிர இறந்த வீடுகளில் வாசிப்பதில்லை. இது ஏன் என எண்ணுகையில் தொழில்முறைக் கலைஞர்கள் இக் கருவிகளை இறந்த வீடுகளில் வாசிக்க விரும்புவதில்லை அல்லது இறந்த வீட்டில் வாசிப்பதை அவர்கள் இழிவாக நினைக்கிறார்கள் என்பதே புலனாகுகின்றது.

இக் கலையோடு தொடர்புபட்ட ஒரு சம்பவமாக, களுதாவளை கோவிலில் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கும் பரம்பரைக் கலைஞர்களை ஆலயத்திற்குள் இருந்து வெளியேற்றிய சம்பவமும் உண்டு ஆனால் இன்றும் கொக்கட்டிச்சோலை கோவிலின் உள்ளே தொங்கவிடப்பட்டிருக்கும் பறையை கோவிலிற்கு வரும் பக்தர்கள் யாரேனும் வாசிக்கலாம் எனும் வழக்கமும் உண்டு.

எதுவாயினும் இது தான் எழுதப்பட்ட விதி என்றோ, அது தான் வகுக்கப்பட்ட கோட்பாடு என்றோ கருத இயலாத அளவிற்கு இயற்கையும் காலமும் அதன் தன்மையை மாற்றி நிற்கும் இவ் நவீன தொழில்நுட்ப யுகத்தில் வாழும் மனிதர்கள் மட்டும் படிப்பறிவால் பகுத்தறிவு பெற்றோம் என பெருமைப்பட முடியாத படி வகுப்பு வாத பிரிவினைகளால் பிளவுண்டு, அருகில் வாழும் சக மனிதரை அதிகாரம் கொண்டு அடக்கி ஆள துடிக்கின்றோம். இத்தகைய எண்ணம் மேலோங்காமல், மனிதர்களாகிய நாம் வர்க்க பாகுபாடுகளை நீக்கி சமத்துவமாக வாழ்வதற்கும், எம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கும், பரம்பரைக் கலைஞர்களை வாழ வைப்பதற்கும் நாம் இணைந்திருக்கும் இயற்கையும் யுகமும் மாறி நிற்பது ஒரு பொருட்டல்ல, மாறாக எம் மனித மனம் மாறவேண்டும். அந்தவகையில் எம் கலைகளை வளர்ப்பதற்கும் அதனை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பதற்கும் மனப்பாங்கு மாற்றமே இங்கு அடிப்படைத் தேவையாக அமைகின்றது.

 

வி. சிந்து 

https://globaltamilnews.net/2025/221730/

முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்!

3 months 2 weeks ago

Sri-Lankan-Parliament-Complex.jpg?resize

முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்!

முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில், உணவுக்காக.... மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட முழுமையான கணக்காய்வின் அறிக்கை, பதில் கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவினால் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த விசேட கணக்காய்வு விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கணக்காய்வு அறிக்கையில் நாடாளுமன்றத்தின் பல்வேறு துறைகளிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்த தகவல்கள் விரிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த முழுமையான கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1450730

யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு - விசேட தபால் தலை வெளியீடு

3 months 2 weeks ago

யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு - விசேட தபால் தலை வெளியீடு

adminOctober 18, 2025

02.jpg

  அந்நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராசா , சி.சிறிதரன் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் , வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் மற்றும், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது.

பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு “யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை” என்ற புதிய பெயர் வழங்கப்பட்டு, அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு, இது “யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை” என மாற்றப்பட்டது.

1980ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலை “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை” (Jaffna Teaching Hospital) என பெயர் மாற்றம் பெற்று, அன்றிலிருந்து அதே பெயரில் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், எதிர்காலத்தில் “தேசிய வைத்தியசாலை” (National Hospital) என்ற அடிப்படையில் இந்த வைத்தியசாலை உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் வைத்தியசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/221685/

Checked
Wed, 02/04/2026 - 07:31
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr