ஊர்ப்புதினம்

ஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு!

1 week 3 days ago
ஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு!

In இலங்கை     June 14, 2019 8:35 am GMT     0 Comments     1305     by : Benitlas

ஆளுநர்-சுரேன்-ராகவன்.jpg

ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு தேவைப்படின், எந்தவொரு சந்தர்ப்பத்தில், எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தித்து கலந்துரையாட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் சுரேன் ராகவன், பல்வேறு அதிரடியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

இந்தநிலையிலேயே யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தி வரும் வாள்வெட்டு குழுவான ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

 

http://athavannews.com/ஆவா-குழுவிற்கு-சுரேன்-ரா/

கிளிநொச்சியில் ஆவண வரி அறவிடும் நடவடிக்கை ஆரம்பம்!

1 week 3 days ago
கிளிநொச்சியில் ஆவண வரி அறவிடும் நடவடிக்கை ஆரம்பம்!

In இலங்கை     June 14, 2019 7:56 am GMT     0 Comments     1178     by : Litharsan

Kilinochchi-Karaichi-Pradeshya-Sabha-Event-7.jpg

கரைச்சி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து ஆவண வரியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை கரைச்சி பிரதேச சபையினால் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த ஆவண வரியை பெற்றுக்கொள்வதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, ஆவண வரியை அறவிடுவதற்கான ஆரம்ப நிகழ்வு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, வை.தவநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வரி அறவீட்டிற்கான விண்ணப்பப் படிவங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் குறிப்பிடுகையில், “வரி வருமானத்தின் ஊடாக எமது பிரதேச சபையின் எல்லையில் உள்ள பல பகுதிகளையும் முன்னேற்றத்திற்கு கொண்டு வரமுடியும் எனத்தெரிவித்த அவர் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளால் வரி அறவிடப்பட்ட விடயம் குறித்து இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், பிரதேச சபைகளினால் அறவிடப்பட்டும் வரியானது திறைசேரிக்கு செல்லாது. அவை இங்கேயே மக்களின் நலனிற்காக செலவு செய்யப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, இதுகுறித்து த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கையில், “எமது மக்கள் அரச சட்ட திட்டங்களுக்கு இணங்க பழகிக்கொண்டவர்கள். வரி வருமானங்களை மக்கள் அந்தந்த காலப் பகுதிகளில் செலுத்தினால் பிரதேச சபை யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. இப்பகுதி அபிவிருத்தி அடையும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து வை.தவநாதன் கருத்து தெரிவிக்கையில், “கரைச்சி பிரதேச சபையினால் இவ்வாறான வரித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது, அவை மக்களுக்கு உரிய முறையைில் செலவு செய்யப்படுகின்றதா என்பதை அவதானிக்க வேண்டும். சில பகுதிகளில் கழிவகற்றல்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆகையால் இவ்வாறு மக்களிடமிருந்து பெறப்படும் வரிகளின் ஊடாக மக்களுக்கு பிரதேச சபையினால் அர்ப்பணிப்புடனான சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/கிளிநொச்சியில்-ஆவண-வரி-அ/

மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடல் – தொல்லியல் திணைக்களமும் உள்ளீர்ப்பு

1 week 3 days ago
மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடல் – தொல்லியல் திணைக்களமும் உள்ளீர்ப்பு

In இலங்கை     June 14, 2019 8:24 am GMT     0 Comments     1139     by : Litharsan

Mannar-Sadosha-Mannar-Court.jpg

மன்னார், மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தொல்லியல் திணைக்களத்தையும் உள்ளீர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வகையில், இம்மாதம் 27 திகதி விசேட கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார், மனிதப் புதைகுழி தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) மன்னார் பொலிஸார் நகர்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் இது குறித்து இடம்பெற்ற விவாதத்தின்போது மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் ‘சதொச’ வளாகத்தில் இடம்பெற்ற கட்டுமானப் பணியின் ஆரம்ப அகழ்வு பணிகளின் போது அகழப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த ‘சதொச’ வளாகத்தில் பணிகள் இடைநிறுத்தப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எலும்புக்கூட்டு அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

குறித்த அகழ்வு பணிகளின் போது சுமார் 318இற்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில், குறித்த மனித எலும்புக்கூடுகள் எந்த காலப்பகுதிக்கு உரியவை என கண்டறிவதற்காக மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆய்வு முடிவு அறிக்கையின் அடிப்படையில் குறித்த எழும்புகள் 500 வருடங்களுக்கு மேற்பட்டவை என குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவுகள் சம்மந்தமாக பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் கடந்த மார்ச் 22ஆம் திகதி இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் குறித்த புதைகுழி அகழ்வுப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதுடன் குறித்த மனித புதைகுழி பகுதியில் காணப்படும் மண் படைகள் மற்றும் ஏனைய சாதக பாதக தன்மைகள் தடையப் பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு களனிப் பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோமதேவவிடம் கோரப்பட்டிருந்தது.

அத்துடன், நேற்று மன்னார் பொலிஸார் குறித்த புதைகுழி தொடர்பாக நகர்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதன்மூலம் மன்னார் மனித புதை குழியானது 500 வருடங்களுக்கு மேற்பட்டதாக காணப்படுவதாக அறிக்கை கிடைக்கப் பெற்றமையினால் அகழ்வு பணிகள் தொடர்பாக இலங்கை தொல்லியல் திணைக்களத்தை உள்ளீர்ப்பது தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறித்த வழக்கு விசாரணைகளின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதனியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக சட்டதரணி டினேசனும் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த வழக்கானது, விசேட கூட்ட நாளான வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/மனிதப்-புதைகுழி-தொடர்பாக/

 

தமிழர்களின் பூர்வீக நிலத்துக்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்துவைத்தது மாபெரும் துரோகம்!

1 week 3 days ago
தமிழர்களின் பூர்வீக நிலத்துக்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்துவைத்தது மாபெரும் துரோகம்!

In இலங்கை     June 14, 2019 8:40 am GMT     0 Comments     1110     by : Litharsan

T.Ravikaran.jpg

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்திற்கு சிங்கள பெயரிட்டு திறந்து வைத்தமையானது தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி செய்த பெரும் துரோகம் என முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 8ஆம் திகதி தமிழர்களின் தொன்மையான நிலப்பகுதியில் உள்ள குளத்தை ஜனாதிபதி,  ‘கிரி இப்பன் வெவ’ என்ற பெயரோடு திறந்து வைத்ததுடன், சிங்கள மக்களிடம் கையளித்திருந்தார். ஜனாதிபதியின் இத்தகைய செயலால் அப்பகுதியில் உள்ள காணிகளுக்கு உரித்துடைய தமிழ் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தனர்.

இதுகுறித்து முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், “அரசாங்கத்தினுடைய காணிக் கொள்கையானது இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைப்பதாக அமையக்கூடாது என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய அறிக்கையில்கூட அது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரசாங்க கொள்கைகளில் ஒன்று, காணிக் கட்டளைச் சட்டத்தின்படி ஒருகாணிக்கு இரண்டு ஆவணங்கள் இருந்தால் காலத்தால் எது முந்தைய ஆவணமோ அந்த ஆவணத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுமென, அரசாங்கத்தினுடைய காணிக் கட்டளைச் சட்டத்தின்படி உள்ளது.

ஆனால் இவற்றைப் புறந்தள்ளி தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்துச் சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றி, வெலி ஓயா என்ற பெயரில் எமது மணலாற்றுப் பூமியை பெயர்மாற்றம் செய்து ஒரு பிரதேச பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக எங்களுடைய பூர்வீக நிலங்களில் ஒரு பகுதியான ஆமையன் குளம் என்ற அதனோடு சேர்ந்திருந்த நிலங்கள் இன்று அபகரிக்கப்பட்டுள்ளன. அதில் 360 ஏக்கர் நிலத்திற்குரிய பயனாளிகளுடைய பெயர்கள், பயனாளிகளுடைய உறவினர்களுடைய பெயர்கள் உட்பட என்னிடம் இங்கே ஆவணங்கள் உள்ளன.

மாவட்ட செயலக புள்ளி விபரங்களின் படி 625 பயனாளிகளுக்குரிய 2919 ஏக்கர் காணிகள் இந்த அபகரிப்புக்குள் உள்ளடங்குகின்றன என்ற அறிக்கை தரப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கையும் என்னிடம் இருக்கின்றது.

இந்நிலையில், ஆமையன் குளம் பகுதிக்குச் சென்று கிரி இப்பன் வெவ என்ற பெயரோடு ஏற்கனவே தமிழ் மக்களால் காலங்காலமாக பாவிக்கப்பட்டுவந்த அந்தக் குளத்தோடு சேர்ந்த காணிகள் அனைத்துக்குமான அந்தக் குளம், மறுசீரமைக்கப்பட்டு இப்போது குடியேற்றவாசிகளாக இருக்கின்ற சிங்கள மக்களுக்காக குளத்தினைத் திறந்து வைத்துள்ளார் அரச தலைவர்.

சிறுபான்மை இன மக்களுடைய வாக்குகளில் ஜனாதிபதியாக தான் தெரிவுசெய்யப்பட்டிருப்பதைப் பல தடவைகள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் எங்களுடைய மக்களுக்குச் செய்யும் பாரிய துரோகம் இதுவென்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றேன்.

எங்களுடைய மக்கள் இந்தப் பிரச்சினைகளை தங்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையிலே எங்களுக்குத் தெரிவித்துக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது, தாங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கு நாதியற்றவர்களாக காணப்படுகிறார்கள் என்பதை இதனூடாக தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

 

http://athavannews.com/தமிழர்களின்-பூர்வீக-நிலத/

மாவனெல்ல புத்தர் சிலைகள் தகர்ப்பு – சஹ்ரானின் உத்தரவின் கீழ் இடம்பெற்றது..

1 week 3 days ago
மாவனெல்ல புத்தர் சிலைகள் தகர்ப்பு – சஹ்ரானின் உத்தரவின் கீழ் இடம்பெற்றது..

June 14, 2019

 

mavanalla-Buddha-statues.jpg?resize=671%

 

மாவனல்ல நகரை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்கள், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் உத்தரவுக்கு அமைய இடம்பெற்றவை என சி.ஐ.டி. மாவனல்ல நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று முற்பகல் மாவனல்ல நீதிவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி காவற்துறைப் பரிசோதகர் மாரசிங்க இதனை நீதிவானுக்கு அறிவித்தார்.

இதன்போது இந்த சிலை உடைப்பு விவகாரத்தை பூரணமாக நெறிப்படுத்தியுள்ள சஹ்ரான், அதனை முன்னெடுத்த சந்தேக நபர்களுக்கு ‘நீங்கள் போய் சிலைகளை உடைத்துவிட்டு என்னிடம் வாருங்கள்’ என கூறியுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகள் நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே விளக்கமறியலில் உள்ள 14 சந்தேக நபர்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியின் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் சி.ஐ.டி.யின் பிடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 சந்தேக நபர்களும் நேற்று விஷேட பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிவானின் மேற்பார்வைக்காக முன்னிலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இதுவரை 34 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். #மாவனல்ல #சிஐடி #சஹ்ரான்ஹாஷிம் #உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள்

 

http://globaltamilnews.net/2019/124266/

அமைதியான முறையில் நினைவு கூரப்படவுள்ள தியாகிகள் தின நினைவு

1 week 3 days ago
அமைதியான முறையில் நினைவு கூரப்படவுள்ள தியாகிகள் தின நினைவு

ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்ம நாபா அவர்களின் 29 ஆண்டு தியாகிகள் தினம் இம்மாதம் 19 ஆம் திகதி புதன் கிழமை வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொருளாளரும்,மன்னார் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

-இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

etb.jpg

ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்ம நாபா அவர்களின் 29 ஆண்டு தியாகிகள் தினம் இம்மாதம் 19 ஆம் திகதி புதன் கிழமை வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூறப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு-கிழக்கும் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் தியாகிகள் தினம் நினைவு கூறப்படுகின்றமை வழமை.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினை கருத்தில் கொண்டு தியாகிகள் தினமானது வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் தோரும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சியின் அலுவலகங்களில் தோழர்கள், ஆதரவாளர்களை ஒன்றிணைத்து தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

DSC_0005.jpg

மாவட்ட பொறுப்பாளர்களின் தலைமையில் ஒவ்வெரு மாவட்டங்களிலும் தியாகிகள் தினம் நினைவு கூறப்படவுள்ளது.

குறித்த தியாகிகள் தின நினைவு நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வவுனியாவில் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் , கிளிநொச்சியில் கட்சியின் உப செயலாளரும், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சருமான சர்வேஸ்வரன், மட்டக்களப்பில் கட்சியின் உப தலைவர் துரைரெட்ணம், மன்னாரில் கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகிய நானும் கலந்து கொள்ளவுள்ளோம்.

S.R.jpg

மாவட்டங்களின் சூழ்நிலைக்கு அமைவாக மாவட்ட அலுவலகங்களில் இடம் பெறும் தியாகிகள் தின நிகழ்வில் கட்சியின் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கின்றோம்.

உரிமைக்காக அரசியலை முன் நிறுத்தி தமிழ் தேசிய உரிமைகளை வெண்றெடுப்போம் என கோரி அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொருளாளரும்,மன்னார் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் மேலும் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/58217

இல்மனைட் தொழிற்சாலையின் நுழைவாயிலை சேதப்படுத்திய 4 பேர் கைது

1 week 3 days ago
இல்மனைட் தொழிற்சாலையின் நுழைவாயிலை சேதப்படுத்திய 4 பேர் கைது

மட்டக்களப்பு வாகரை   கதிரவெளி இல்மனைட் தொழிற்சாலை அலுவலக நுழைவாயிலை சேதப்படுத்தியதுடன் உள்ளே சென்று கலகத்தில்  ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 4 சந்தேக நபர்களை வாகரை பொலிசார் கைது செய்து இன்று வியாழக்கிழமை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்கள்.

vv4.jpg

சந்தேக நபர்களுக்கெதிராக மேற்படி தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் ஊழியர்கள் செய்த முறைப்பாட்டினையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்களுக்கெதிரான சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பஷில் சந்தேக நபர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்.

இவ் வழக்கு  எதிர்வரும் 11.09.2019 ஆம் திகதி மன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும்.

மேற்படி சம்பவம் தொடர்பாக  இவர்களது கைதினை கண்டித்தும் சந்தேக நபர்களை விvv3.jpgடுதலை செய்யுமாறு  வலியுறித்தி பிரதேச மக்கள் வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கூடி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் போராட்டம் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இடம்பெற்றது. சந்தேக நபர்களின் விடுதலையினையடுத்தே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேற்படி சம்பவத்தினை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

 குறித்த இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன் கிழமையன்று பிரதேச மக்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

vv1.jpg

நான்கு தடவையாக இவ் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.ஆனால் அவர்களுக்கு எது விதமான தீர்வும் கிடைக்கப்பெறவில்லையென கோஷமிட்டனர். இதன்போது ஆத்திரமுற்ற போராட்டக்காரர்கள் குறித்த இல்மனைட் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திற்கு சென்று அலுவலகம் அமைந்துள்ள நுழைவாயில் கதவினை உடைத்து சேதப்படுத்தி உள்ளே சென்று கலகத்தில் ஈடுபட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

https://www.virakesari.lk/article/58210

 

படையினர் பாடசாலை வாசலில் நிற்பது பாதுகாப்பை உறுதிப்படுத்தாது ; செல்வம் எம்பி

1 week 3 days ago
படையினர் பாடசாலை வாசலில் நிற்பது பாதுகாப்பை உறுதிப்படுத்தாது ; செல்வம் எம்பி

பாதுகாப்பை நாங்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும். பொலிஸோ, இராணுவமோ பாடசாலை வாசலில் நிற்பது  பாதுகாப்பை உர்ஜிதப்படுத்தாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

DSC_0544_1.JPG

வவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா நிகழ்வில் இன்று கலந்து கொண்டதன் பின்னர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து மேலும் கருத்துரைக்கையில்,

நாங்கள் எத்தனையோ போராட்டங்களை பார்த்தவர்கள். எங்களுடைய போராட்டம் என்பது இனரீதியான போராட்டமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று போராட்டம் என்ற ரீதியிலே மிகவும் பயங்கரமான ஒரு பயங்கர வாத நிகழ்வு கூடுதலாக எங்களுடைய மக்கள் யார் இருந்தாலும், எந்த சமூகம் இருந்தாலும், மக்கள் தொகை மரிக்கின்ற எண்ணிக்கையை வைத்து கொண்டு ஒரு முஸ்லீம் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று கூறி தங்களுடைய நாடு.

இந்த உலகம் முழுதும் தங்களுக்கு வர வேண்டும். தங்களுடைய நாடாக மாற வேண்டும் என்ற சிந்தனையிலே செயற்படுகின்ற ஒரு நிகழ்வாக நாங்கள் அயல் நாடுகளிலே பார்த்திருக்கின்றோம். இப்பொழுது எங்களுடைய நாட்டிலே அது உருவெடுத்திருக்கிறது. 

ஆகவே மக்களுடைய எண்ணிக்கை அதுவும் கூடுதலாக இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது தமிழர்கள் தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஆகவே எண்ணிக்கை என்பது மக்களுடைய பிணங்களை எண்ணி  கணக்குப் பார்த்து சந்தோசப்படுகின்றது தான் இந்த தீவிரவாதத்தின் எண்ணம். ஆகவே நாங்கள் எங்களுடைய பாதுகாப்பை நாங்கள் தான் பார்க்க வேண்டும். அந்த விடயத்திலே நாங்கள் எல்லோரும் கவனமாக போகும் வழிகளில் பிள்ளைகளை, எல்லோரையும் கவனமாக நாங்கள் தான் பார்க்க வேண்டும். 

இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்ற நாங்கள் இவ்வளவு இழப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நாங்கள் இந்த வாழ்க்கையை நடத்துகிறோம் என்றால் எங்கள் கடவுள் ஏதோ ஒரு வகையில் எங்களை விட்டிருக்கிறார் என்று சொன்னால் நாங்கள் நல்லதை செய்ய வேண்டும் என்பதற்காகவே.

எங்களுடைய இலட்சிய போராட்டம் என்பது, அதற்கான எல்லைகள் என்பது அல்லது கவனம் என்பது இன்றைக்கு பார்த்தவர்கள் இருந்தால் எவ்வளவு பிரச்சனை. ஆகவே சமூக ஒற்றுமை என்பது கட்டாயம் தேவை. எங்களுடைய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். 

ஆகவே பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே அது பொலிஸ் பார்த்துக்கொள்ளும், இராணுவம் பார்த்துக்கொள்ளும் எங்களை சோதனை செய்யும்போது அது ஒரு விருப்பம் இல்லாமல் இருக்கின்ற ஒரு சூழல். ஆனால் எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்கின்ற ஒரு கட்டாய நிலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.

ஆகவே எங்களுடைய தேசத்திலே இன்றைக்கு பல பிரச்சனைகளை எங்களுடைய தமிழ் சமூகம் சந்தித்திருக்கிறது. இவ்வாறானவைகளிலிருந்து மீண்டு நாங்கள் எங்களுடைய செயற்பாட்டை  செய்ய வேண்டும்  என மேலும் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/58202

இலவச ரயில் சேவை ஆரம்பம்!

1 week 3 days ago
train.jpg இலவச ரயில் சேவை ஆரம்பம்!

இலவச ரயில் சேவையை வழங்குவதற்குப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

மிஹிந்தலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் நலனினைக் கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கும், மிஹிந்தலையிலிருந்து அநுராதபுரத்துக்குமான ரயில் சேவை எந்த கட்டணங்களுமின்றி இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இலவச-ரயில்-சேவை-ஆரம்பம்/

சஹாரானின் தளபதியோடு குழுவினரை மடக்கியது டுபாய்: பறந்து சென்ற சி.ஐ.டி. கொழும்புக்கு கொண்டு வந்தது!

1 week 3 days ago
%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D.jpeg சஹாரானின் தளபதியோடு குழுவினரை மடக்கியது டுபாய்: பறந்து சென்ற சி.ஐ.டி. கொழும்புக்கு கொண்டு வந்தது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு(வியாழக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹாரானுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர் எனக் கருதப்படும் மொஹமட் மில்ஹான், இலங்கையிலிருந்து தப்பித்து டுபாய் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் மொஹமட் மில்ஹான் உட்பட ஐந்து இலங்கையர்கள் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து இலங்கையிலிருந்து சென்ற சி.ஐ.டி. விசேட குழுவினர் குறித்த ஐவரையும் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு  இலங்கை பாதுகாப்பு தரப்பினரின் கவனக்குறைவும்  காரணம் என்ற விமர்சனங்கள் பலமாக இருக்கின்றபோதும், தாக்குதலின் பின்னரான பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கவையாக அமைந்து வருகின்றது. இதன்காரணமாக இலங்கையில் ஐ.எஸ். அமைப்பின் வலைப்பின்னல் தற்போதைக்கு ஏறக்குறைய நொருக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு விமர்சகர்கள் தெரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பயங்கரவாதி-மொஹமட்-மில்ஹா/

5 மாணவர்கள் கடத்தல் : லசந்த, தாஜூதீன் படுகொலைகள் - சட்டமா அதிபரின் அதிரடி உத்தரவு

1 week 3 days ago

எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இருந்து கடற்படைக் கப்பக் குழுவினரால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டுள்ள 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் விவகாரம், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை மற்றும் மூதூர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் 17 பேரின் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, அதனை நிறைவு செய்து உடன் தமக்கு விசாரணை அறிக்கையை கையளிக்குமாறு சட்ட மா அதிபர் ஜனதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார். 

judge.jpg

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு  சட்ட மா அதிபர் அனுப்பி வைத்துள்ள ஆலோசனை கடிதத்திலேயே இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

குறித்த நான்கு சம்பவங்கள்  தொடர்பிலான விசாரணைகளில் கால தாமதம் அவதனிக்கப்பட்டுள்ளதாலும் அந்த சம்பவங்கள் தொடர்பில்  பொது மக்கள் அவதானம் உயர் நிலையில் இருப்பதாலும்,  அச் சம்பவம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பயங்கர சந்தர்ப்ப  நிலைமைகளைக் கருத்தில் கொண்டும் சட்ட மா அதிபர்  ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா இந்த சிறப்பு ஆலோசனைகளுடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்ததாக,  சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்ப்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/58198

தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிக்காக குரல்கொடுக்க வேண்டும் - எச்.எம்.எம்.ஹரீஸ்

1 week 4 days ago

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் குறைகளை மாத்திரம் விமர்சித்துக்கொண்டிருக்காமல் முஸ்லிம்களுக்கு  எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்காகவும் குரல்கொடுக்க முன்வரவேண்டும். 

Hrish.jpg

இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரதத்தை கட்டியெழுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் முஸ்லிம்கள் தொடர்பாக கடைப்பிடித்துவரும் நடவடிக்கைதொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் பேச்சுக்கள் முஸ்லிம் மக்களுக்கு அறிவுரை செய்வதிலும் அவர்களின் கலாசாரம் மற்றும் ஆடைகள் தொடர்பாக விமர்சிப்பதிலுமே இருக்கின்றன. 

ஆனால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் கெடுபிடிகள் தொடர்பாக குரல்கொடுப்பதை மிகவும் குறைவாகவே பார்க்கின்றோம். அது மிகவும் துர்ப்பாக்கியமான நிலையாகும்.

ஏப்பரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஞானசார தேரர் போன்றவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து குரல்கொடுக்கும் தலைமைகள் தெற்கில் இருந்தனர். 

பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை தட்டிப்பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது இவர்களும் முஸ்லிம்களின் செயற்பாடுகள் நடை உடைகளில் குறைகாண்பதிலே இருக்கின்றனர்.

 இது முஸ்லிம் சமூகத்துக்கு ஒருவகையில மன அழுத்தத்தை கொடுக்கும் வகையிலே இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/58196

’சஹ்ரான் எனக்கு உதவவில்லை-நானும் அவருக்கு உதவவில்லை’ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

1 week 4 days ago

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான், தன்னை ஒருமுறை சந்தித்ததாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னாள், இன்று சாட்சியமளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர், அவருடைய அலுவலகத்துக்கு வருமாறு, சஹ்ரான் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் அரசியல் ரீதியில், மேலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து, அப்போது அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறினார்.

அப்போது சஹ்ரான், தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பை மாத்திரமே உருவாக்கியிருந்தார் என்றும் அப்போது அவர், பயங்கரவாதியாக இருக்கவில்லை என்றும் தெரிவித்த ஹிஸ்புல்லாஹ், பிரதேசத்தின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவருடைய நிபந்தனைகளுக்கு தான் இயங்கியதாகவும் பின்னர் அந்த நிபந்தனைகளை மீறியதால், தன்மீது சஹ்ரான், கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறினார்.

கூட்டங்களின் போது பாடல்களை இயற்ற முடியாது, ஆண்களும் பெண்களும் இணைந்து, கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது போன்ற நிபந்தனைகளை, சஹ்ரான் விதித்திருந்ததாகவும் அவற்றைத் தான் விரும்பாத காரணத்தால், 2000 ஆயிரம் வாக்குகளால், தன்னை சஹ்ரான் தோற்கடித்ததாகவும், ஹிஸ்புல்லாஹ் கூறினார்.

இதேவேளை, சாய்ந்தமருது பிரதேசத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த நியாஸ் ஷெரீப் என்பவரும், சஹ்ரானின் சகாவென்றும் கூறிய முன்னாள் ஆளுநர், அந்நபர், தனக்கு எதிராக, பேஸ்புக் ஊடாக, பலவாரான பிரிவினைவாதக் கருத்துகளைப் பதிவிட்டிருந்ததாகவும் கூறினார்.

எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டுக்கு பின்னர், அந்நபரையும் தான் காணவில்லை என்றும் சஹ்ரான், ஒருபோதும் தனக்கு உதவவில்லை என்றும் தானும், ஒருபோதும் சஹ்ரானுக்கு உதவவில்லை என்றும், தன்னை அழிப்பதற்கே சஹ்ரான் முயற்சித்ததாகவும், ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சஹ்ரான்-எனக்கு-உதவவில்லை-நானும்-அவருக்கு-உதவவில்லை/150-234139

ஆவா – தனுரொக் முரண்பாடு கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீது தாக்குதல்

1 week 4 days ago
 
June 13, 2019

AAVA-VS-Thanurock1.jpg?zoom=1.1024999499
கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது கும்பல் ஒன்று நேற்று புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டித் திருத்தகத்தில் பொறுப்பதிகாரி நின்ற வேளை . அங்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல், அவரைத் தாக்கியுள்ளது. தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

ஆவா குழுவைச் சேர்ந்த சிலர் பொழுதைக் கழிப்பதற்காக கொக்குவில் புகையிரத நிலைய பகுதிக்கு செல்வதாகவும் , அவர்களுக்கு இடம் கொடுத்து நட்பு வைத்திருந்தமையாலேயே பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்கியவர்கள் தனுரொக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

http://globaltamilnews.net/2019/124211/

மன்னாருக்கு முதற்தடவையாக இருதய வைத்திய நிபுணர்

1 week 4 days ago
மன்னாருக்கு முதற்தடவையாக இருதய வைத்திய நிபுணர்

மன்னார் மாவட்டத்திற்கு முதற் தடவையாக இருதய வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இருதய வைத்திய நிபுணர் பானு தில்லையம்பலம் முதன்முறையாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் MBBS பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் MD இனை முடித்து வெளிநாட்டில் மேலதிக பயிற்சியை முடித்து இரண்டு வாரங்களின்முன் நாடு திரும்பி இருந்தார். இந்த நிலையிலேயே இவர் மன்னார் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வைத்தியசாலை பணிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

http://globaltamilnews.net/2019/124206/

ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது

1 week 4 days ago

பயங்கரவாதம் மற்றும் மிலேசத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.  இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்று துறையின் நிறைவேற்று பணிப்பாளருமான மிச்சேல் கொனிங்ஸின் இலங்கைக்கான பயணத்தின் போது 2019 யூன் 7-8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சர்வதேச விழுமியங்கள் மற்றும் நடைமுறைகள் பிரகாரம் உறுதியான நடவடிக்கைகளை பின்பற்றி ஐ.நா பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குதல் பற்றிய விடயம் முதன்மை வகித்தது. இந்தக் கலந்துரையாடலில் உள்ளடக்கப்பட்ட விடயங்களாவன பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் மற்றும் சொத்துக்களை முடக்குதல், வெளிநாட்டு பயங்கரவாத போறாளிகளை கையாள்தல், பயங்கரவாத முறியடிப்பு சட்டவாக்கம், அடிப்படைவாதம் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடித்தல், பயங்கரவாதிகளின் போக்குவரத்திற்கு எதிராக பயனுறுதியான எல்லை முகாமைத்துவம் மற்றும் தீவிரவாத சித்தாந்தம் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதம் பற்றிய செய்திகளை இணையம் மற்றும் சமூக ஊடகங்களினூடாக பரப்பி அச்சுறுத்தல் விடுத்தல் போன்றவை ஆகும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தால் விடுக்கப்பட்டுள்ள புதிய அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு உதவுமாறு ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டர்ஸ்க்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபனவின் வேண்டுகோளுக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏப்ரல் 24 ஆம் திகதி விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் கொனிங்ஸ் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்ததுடன் ஏனைய அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்தார்.

பாதுகாப்பு செயலாளர் சான்த கோத்தாகொட மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோரின் இணை தலைமையில் பாதுகாப்பு அமைச்சில், இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலில், தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய விரிவான விளக்கம் அளிக்கப்பட்டதுடன் பயங்கரவாதம் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிப்பதற்கு அவசியமான “ஒட்டுமொத்த அரசாங்க” அணுகுமுறையொன்றின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்ட அமுலாக்கம் மற்றும் புலணாய்வு முகவராண்மைகள், சட்டத்துறை தலைமை அதிபதியின் திணைக்களம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் நிதி புலணாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சமீபத்திய தாக்குதலின் பின்னர், வெளிநாட்டு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன தற்கொலை குண்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட மூன்று குழுக்களான தேசிய தௌஹீத் ஜமாத்,(NTJ) ஜமாஅதே மில்லதே இப்ராஹிம் (JMI) மற்றும் விலாயத் அஸ் ஸைலானி(WAS) ஆகியவற்றை இலங்கையின் உள்நாட்டு சட்டவாக்கத்தின் கீழ் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1373(2001) இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் சொத்து முடக்குதல் அம்சங்களுக்கு வழியமைத்ததாக அவற்றை “பயங்கரவாத அமைப்புகளாக” வரையறுப்பதில் ஒத்துழைத்தன என்று சுட்டிக்காட்டப்பட்டது.

சம்பந்தப்பட்ட பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு அமைவாக, குறிப்பாக வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளின் வளர்ச்சியை தடுத்தல் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதத்தை முறியடித்தல் மற்றும் எல்லை பாதுகாப்பின் முக்கியத்தவம் பற்றிய தீர்மானங்களின் 2178(2014) மற்றும் 2396(2017) கீழ் சர்வதேச பயங்கரவாத முறியடிப்பு கடப்பாடுகளுக்கு இசைவாக இலங்கையால் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா உதவி செயலாளரின் விஜயத்தின் போது ஆய்வுசெய்யப்பட்டன.
விஜயத்தின் முடிவில் இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்தில் வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரபன ஐ.நா உதவி செயலாளர் நாயகத்திடம் இருந்து ஒரு மதிப்பீட்டையும் பெற்றுக்கொண்டதுடன் அரசாங்கத்துடனான எதிர்கால ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான ஐ.நா ஒருங்கிணைப்பாளர் ஹெனா சிங்கர், தொழிநுட்ப பொருளாதார அபிவிருத்தி நிலைய(CTED) உத்தியோகத்தர்கள் மறறும் ஐ.நா நாட்டுக்குழு ஆகியோரும் உதவிச் செயலாளர் நாயகத்துடன் இணைந்திருந்தனர்.

இலங்கையின் நியூ யோர்கிற்கான நிரந்தர தூதரகமானது தொழிநுட்ப பொருளாதார அபிவிருத்தி நிலையம் (CTED) உடன் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு வருகின்றதுடன் விஜயத்தின் பின்னரான பின்தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
தொழிநுட்ப பொருளாதார அபிவிருத்தி நிலையமானது ஐ.நா பா

துகாப்பு சபையின் பயங்கரவாத முறியடிப்பு குழுவிற்கு(CTC) உதவியளிக்க தாபிக்கப்பட்டதுடன் பயங்கரவாத முறியடிப்பு குழுவின் கொள்கை தீர்மானங்கள் முன்னெடுத்தல், உறுப்பு நாடுகளின் நிபுணத்துவ மதிப்பீடுகளை மேற்கொள்ளல் மற்றும் நாடுகளில் பயங்கரவாத முறியடிப்பு தொழில்நுட்ப உதவிகளுக்கு அனுசரணை வழங்கள் ஆகிய கடப்பாடுகளை கொண்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

http://globaltamilnews.net/2019/124196/

முன்னாள் இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சிறப்பு நேர்காணல்

1 week 4 days ago

என்ன நடக்கிறது இலங்கையில்? | முன்னாள் இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சிறப்பு நேர்காணல்

பிரபாகரன் குறித்து @6:30

தீவிரவாத முறியடிப்புக்கு ஜப்பானும் உதவுவதாக வாக்குறுதி

1 week 4 days ago
தீவிரவாத முறியடிப்புக்கு ஜப்பானும் உதவுவதாக வாக்குறுதி

ranil-japanese-dfm-300x200.jpgசிறிலங்காவுக்கு தீவிரவாத முறியடிப்புக்கான கருவிகள் மற்றும் பயிற்சி உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜப்பானின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ரொஷிகோ அபே, நேற்று அலரி மாளிகையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போது, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே, ஜப்பான் இந்த உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கிடையிலான ஒத்துழைப்புக் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ranil-japanese-dfm.jpghttp://www.puthinappalakai.net/2019/06/13/news/38528

ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை!

1 week 4 days ago
Maithiri-Ranil-720x450.jpg அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார்.

நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்குச் சென்றையடுத்து இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் டுஷான்பே நகரில் இடம்பெறவுள்ள ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவே ஜனாதிபதி  இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் பங்குபற்றவுள்ளனர்.

3 நாட்கள் தஜிகிஸ்தானில் தங்கவுள்ள ஜனாதிபதி, நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். அதனையடுத்து, மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய தலைவர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சிங்கபூருக்கு பயணமாகியிருந்தார். அவர் நாளை நாடு திரும்புவாரென கூறப்படுகிறது.

பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பாத இலங்கை, அதன் பின்னர் இடம்பெற்ற அரசியல் மாற்றங்கள் காரணமாக ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் ஒரேநேரத்தில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜனாதிபதி-மற்றும்-பிரதமர்/

மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் கோத்தா – பலப்பரீட்சைக்குத் தயார்

1 week 4 days ago
மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் கோத்தா – பலப்பரீட்சைக்குத் தயார்

 

gotabaya-rajapaksa-300x199.jpgசிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாத இறுதியில் மருத்துவ சோதனைக்காக நீதிமன்ற அனுமதியுடன் கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.

அறுவைச் சிகிச்சை

சிங்கப்பூரின் புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச, அவசர சிகிச்சைப் பிரிவின் அனுமதிக்கப்பட்டு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நான்கு வார ஓய்வு

இதையடுத்து, அவரது உடல் நிலை சீரடைந்து, தற்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறி, சிங்கப்பூரில் உள்ள தங்குமிடம் ஒன்றில் கோத்தாபய ராஜபக்ச ஓய்வெடுத்து வருகிறார்.

நான்கு வாரங்கள் அவர் படுக்கையில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மீண்டும் உயிர்த்த முகநூல்

கோத்தாபய ராஜபக்சவின் முகநூலில், நேற்று இடுகை செய்யப்பட்டுள்ள பதிவு ஒன்றில், “தொழில்வல்லுனர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கருத்துக்களை நிராகரிக்கும் நேரம் இது. மாறாக, தேசத்தை கட்டி எழுப்புவதில் அவர்களின் நிபுணத்துவத்தை பெறுவது அவசியம்.” என குறிப்பிட்டுள்ளார்.

பசிலும் பச்சைக்கொடி

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடந்த கட்சிகளின் செயலாளர்களுடனான கூட்டத்துக்குப் பின்னர், கருத்து வெளியிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனரான பசில் ராஜபக்ச, தமது கட்சியின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் அவரை விரும்புகின்றனர், மக்களின் விருப்பத்தை பொதுஜன பெரமுன கருத்தில் கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கை கோர்க்கத் தயாராகும் ஹக்கீம்

கோத்தாபய ராஜபக்ச அதிபர் வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டை தாங்கள் எடுக்கவில்லை என, அண்மையில் பதவி விலகிய அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

“ஒரு சிறந்த, பலமான தலைவரையே முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  அந்த பலம் கோத்தாபய ராஜபக்சவிடம் இருக்கிறது.

ஆனால், முஸ்லிம் மக்களிடத்தில் அவர் குறித்து விமர்சனங்கள் இருக்கிறது. அந்த விமர்சனங்களை இல்லாமல் செய்வது அவரது பொறுப்பாகும். அந்த விமர்சனம் தொடர்ந்தும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கும் என கருத முடியாது.

எதிர்காலத்தில் நாம் கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுட வேண்டிய நிலை ஏற்பட்டால் அது ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல. ” என்றும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/06/12/news/38512

Checked
Mon, 06/24/2019 - 17:20
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr