ஊர்ப்புதினம்

அமெரிக்காவிலிருந்து இலங்கை விமானப்படைக்கு 640 மில்லியன் ரூபா பெறுமதியான முக்கிய உபகரணங்கள்!

1 week ago

அமெரிக்காவிலிருந்து இலங்கை விமானப்படைக்கு 640 மில்லியன் ரூபா பெறுமதியான முக்கிய உபகரணங்கள்!

11 Dec, 2025 | 10:40 AM

image

கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அவசர உயிர்காக்கும் உதவிகளுக்கு மேலதிகமாக, அமெரிக்க போர்த் திணைக்களம் இலங்கை விமானப்படைக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 640 மில்லியன் ரூபாய்) பெறுமதியான முக்கியமான ஆகாய போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த உபகரணங்களில் எரிபொருள் ட்ரக் வண்டிகள், ஃபோர்க்லிஃப்ட்கள் (Forklifts), பேரொளி விளக்குகள் (Flood Lights), மின் இயந்திரங்கள் (Ground Power Units), மற்றும் சரக்குகளை ஏற்றும் காவிச்செல்லக்கூடிய தளங்கள் (Portable Cargo-Loading Platforms) ஆகியவை அடங்குகின்றன. இவை அனைத்தும் தற்போது செயல்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த உபகரணங்கள் C-130J மனிதாபிமான நிவாரணப் நடவடிக்கைகளுக்கு நேரடியாக உதவியளிக்கின்றன. நிவாரணப் பொருட்களை பெறுதல், எரிபொருள் நிரப்புதல், மின்சாரம் வழங்குதல், ஏற்றுதல் மற்றும் நகர்த்துதல் போன்ற பணிகளை இலங்கை மற்றும் அமெரிக்க விமானப்படைகள் விரைவாக மேற்கொள்ளக்கூடிய வகையில் இவை உதவுகின்றன.

இதன் மூலம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிக வேகமாகவும் அதிக அளவிலும் நிவாரண உதவிகள் சென்றடைய அமெரிக்காவின் ஆதரவு பெரிதும் பயனுள்ளதாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-12-11_at_10.26.23.jp

WhatsApp_Image_2025-12-11_at_10.26.18.jp

WhatsApp_Image_2025-12-11_at_10.26.06.jp

https://www.virakesari.lk/article/233044

வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கும் யாழ். அரச அதிபருக்குமிடையே விசேட கலந்துரையாடல்!

1 week ago

வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கும் யாழ். அரச அதிபருக்குமிடையே விசேட கலந்துரையாடல்!

11 Dec, 2025 | 09:47 AM

image

வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் பி. லியனஹமகேவின் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை (10) காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் திரு. குரூஸ், பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, கடல்வழியால் மேற்கொள்ளப்படும் கடத்தல், காணி விடுவிப்பு, வட தாரகை கப்பல் திருத்தம், எழுதாரகை கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், கடற்கரை தூய்மைப்படுத்தல், திண்மக்கழிவு பொறிமுறை, கடற்கரை வீதி புனரமைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் :

  1. இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுவருவதாகவும், கடற்படை தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும், அத்துமீறலை கட்டுப்படுத்த பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் வடபிராந்திய கடற்படைத் தளபதி தெரிவித்ததுடன், கடல்வழியாக கடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

  2. கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

  3. குறிகட்டுவான் இறங்கு துறையின் மூலம் இலகுவான போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்ற மாவட்டச் செயலகம், கடற்படை, பிரதேச செயலகம் பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன ஒன்றிணைந்து செயற்படுவது எனவும் பொருத்தமாகவிருக்கும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

  4. நயினாதீவு உள்ளிட்ட தீவுப்பகுதிக்கான செல்லும் படகுகளின் தரச்சான்றிதழ் இல்லை என அரசாங்க அதிபரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ள பெரும் நிதி செலவு படகுகளின் உரிமையாளர்களுக்கு செலுத்த முடியாத நிலையிருப்பதால் பாதிகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கடிதம் எழுதி ஒழுங்கான முறைக்கு கொண்டுவர அமைச்சின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

  5. கடல் பயணத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்ட போது இன்றைய தினம் நெடுந்தீவில் துரதிஷ்டமாக ஏற்பட்ட இறப்பு தொடர்பாக கருத்து பரிமாறப்பட்டு கவலை தெரிவிக்கப்பட்டது.

  6. மயிலிட்டி இறங்குதுறையிலிருக்கும் அத்துமீறிய இந்திய மீனவர்களின் படகுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

  7. எழுதாரகை படகை திருத்தி கொடுக்கப்படும் பட்சத்தில் அதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பேடுக்க கூடியதாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்ட போது அதனைத் திருத்த பாரிய நிதி செலவு ஏற்படும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

IMG-20251211-WA0013.jpg

IMG-20251211-WA0012.jpg

IMG-20251211-WA0018.jpg

IMG-20251211-WA0003.jpg

IMG-20251211-WA0015.jpg

https://www.virakesari.lk/article/233036

அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின் ஊடாகவே உறுதிப்படுத்தப்படவேண்டும்; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்குக் கடிதம்

1 week ago

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின் ஊடாகவே உறுதிப்படுத்தப்படவேண்டும்; வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்குக் கடிதம்

Published By: Vishnu

11 Dec, 2025 | 01:27 AM

image

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றம் குறித்து ஒரு சமரச அணுகுமுறையைப் பரிசீலித்துவரும் நாடுகளுக்கு நாம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். இந்த அரசாங்கம் ஏற்கனவே ஒரு வருடமாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

ஏற்கனவே சரிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் தற்போதைய அனர்த்தத்தினால் மேலும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எமது விவகாரத்தை விட அக்கறைக்குரிய பல விடயங்கள் உள்ளன. எனவே எமக்கு இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை ஊடாகவே உறுதிசெய்யப்படவேண்டும். அதுவும் காலதாமதமின்றி நிகழவேண்டும் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியினால் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை (10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோரும், அன்புக்குரியவர்களுமான நாம், எமது குடும்ப உறுப்பினர்களைத்தேடி 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவருகிறோம். எமது போராட்டம் பதில்களோ அல்லது நீதியோ இல்லாமல் தொடர்கிறது.

இந்த 'சர்வதேச மனித உரிமைகள் தினம்' 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இலங்கையில் தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு, இனவழிப்பினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இனவழிப்பின் மிகக்கொடூரமான வடிவமொன்று 2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டது. சரணடைந்தவர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் எனப் பொய்யான வாக்குறுதி அளித்து, அதனை நம்பி தாமாகவே சரணடைந்த 29 குழந்தைகள் உட்பட குடும்பமாகச் சரணடைந்தவர்களும், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்களும் இலங்கை அரசாங்கத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள். அந்த நாள் முதல் எமது வலியும், போராட்டமும் நின்றபாடில்லை.

சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடும் எம்மைப் பொறுத்தமட்டில், இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருளாக இந்தக் குற்றங்களுக்கான பொறுப்பேற்பே உள்ளது. அதிகாரத்துக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நீதியை வழங்குவோம் எனக்கூறி சர்வதேச சமூகத்துக்கு முன்பு தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்துகிறது. ஆயினும், ஒவ்வொரு முறையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கோப்பை மூடுவதற்கும், முன்னேற்றம் எட்டப்பட்டிருக்கிறது என்ற மாயையைக் கட்டமைப்பதற்கும் செயற்திறனற்ற பொறிமுறைகள் அல்லது குறுக்குவழிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சர்வதேசத்தின் ஆதரவுடன் நாம் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களைத் தேடிய சுமார் 500 பெற்றோர்களும், உறவினர்களும் எவ்வித பதிலோ, நீதியோ கிட்டாமல் மரணித்துவிட்டார்கள். இந்த எண்ணிக்கை சமீபத்திய 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நெருக்கமானது. ஆயினும் எமத இறப்புகளுக்கு எந்த நாடும் துக்கப்படவோ, அக்கறைப்படவோ இல்லை. எந்த நாடும் உதவிக்கு வரவில்லை. இந்தத் தொடர்ச்சியான சோகத்தை சர்வதேச சமூகம் ஏன் கருத்திற்கொள்ளத் தவறிவிட்டது?

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றம் குறித்து ஒரு சமரச அணுகுமுறையைப் பரிசீலித்துவரும் நாடுகளுக்கு நாம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். இந்த அரசாங்கம் ஏற்கனவே ஒரு வருடமாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏற்கனவே சரிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் தற்போதைய அனர்த்தத்தினால் மேலும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எமது விவகாரத்தை விட அக்கறைக்குரிய பல விடயங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இனத்துவேசத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் இலங்கையில் இருக்கும் வரை, எந்தக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியாக இருந்தாலும், எமக்கான நீதியை வழங்குவதற்குத் தயாராகவோ அல்லது எதிர்ப்புக்களை மீறி அதனைச் செய்யக்கூடிய திறனுடையவராகவோ இருக்கமாட்டார். எனவே எமக்கு இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை ஊடாகவே உறுதிசெய்யப்படவேண்டும். அதுவும் காலதாமதமின்றி நிகழவேண்டும்.

எனவே நாம் நீண்டகாலமாக முன்வைத்துவரும் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறோம். இனப்படுகொலை, சர்வதேசக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/233026

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

1 week 1 day ago

11 Dec, 2025 | 01:30 AM

image

(எம்.மனோசித்ரா)

வடகீழ் பருவ பெயர்ச்சி காலநிலை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு,மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேனைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறையிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

களுத்துறையிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொத்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தித்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக நேற்று மாலை வரை 639 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு, 193 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 524 678 குடும்பங்களைச் சேர்ந்த 1 814 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 26 841 குடும்பங்களைச் சேர்ந்த 85 351 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 5346 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 86 245 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தோடு பதுளை, கம்பஹா, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டள்ள இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு | Virakesari.lk

பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி

1 week 1 day ago

பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி

10 Dec, 2025 | 05:39 PM

image

(செ.சுபதர்ஷனி)

தித்வா புயலால் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளின் புரணர்நிர்மாணப் பணிகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் சுமார் 53 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமை காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து விசாரிப்பதுடன், அவற்றுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்குடன் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க செவ்வாய்க்கிழமை (09) நுவரேலியா வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது அனர்த்த நிலைமை காரணமாக நுவரெலியா புதிய வைத்தியசாலையின் பிரதான கட்டடத் தொகுதிக்கு ஏற்பட்டுள்ள சேதம், பழைய  வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு, புற்றுநோய் பிரிவு உள்ளிட்ட  பிரிவுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலும்,  அபாயம் தொடர்பிலும் கண்காணித்திருந்தார். 

அத்தோடு 4 மாடிகளைக்   கொண்ட  இரண்டு கட்டிடத்தொகுதியில் உள்ள 8 தாதியர் விடுதிகள் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் பார்வையிட்டிருந்தார்.

ஆய்வின் பின்னர்  வைத்தியசாலை நிர்வாகம், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கட்டமைப்பு பொறியியலாளர்கள், வைத்தியர்கள், தாதியர் உள்ளிட்ட வைத்திய ஊழியர்களுடன்  வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது சுகாதார அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,  நாட்டில் ஏற்பட்ட  திடீர் அனர்த்த நிலமையால்  3 பிரதான வைத்தியசாலைகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. நீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் தொலைபேசி வசதிகள்  என்பன சுமார் 4 நாட்களாக தடைப்பட்டிருந்தன. எனினும் நுவரெலியா வைத்தியசாலையில் இருந்த நோயாளிகளின் உயிர்களை பாதுகாத்து, இந்த அனர்த்தத்தின் போது மாற்று வழிமுறைகளை பின்பற்றி சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.

இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய ஊழியர்களுக்கு இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனர்த்தத்தால்  வைத்தியர்கள் தங்கியிருந்த விடுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும்.  அதேநேரம் விடுதிகளில் தங்கியிருந்த  ஒரு சில குழுவினர் வைத்தியசாலையில் தங்கியிருந்து கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சவாலான காலகட்டத்தில் வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை புனரமைக்கும் விதம் குறித்தும், எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்தற்கு வைத்தியசாலைகளை பலப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி சுகாதார அமைச்சு உரிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

வைத்தியசாலைக்குத் தேவையான அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் வைத்தியசாலைகளின் மறுசீரமைப்பு பணிகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்த வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்த வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் சுகாதார அமைச்சின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலையின் தற்போதைய நிலமை தொடர்பில் பரிசோதித்து வருகின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/232980

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்

1 week 1 day ago

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்

Dec 10, 2025 - 01:16 PM

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 1.8 மில்லியன் யூரோ அவசர மனிதாபிமான உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது. 

இந்த உதவியானது "திட்வா" (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்க உதவும் என ஐரோப்பிய ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது. 

தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை (Red Crescent) குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ளன என்றும், அந்த அமைப்புகள் ஊடாக வழங்கப்படும் 5 இலட்சம் யூரோக்களும் இந்த மனிதாபிமான உதவித் தொகையில் உள்ளடங்குவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இதில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmizphl5j02lfo29nbu2c92bv

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

1 week 1 day ago

Editorial   / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 12:03 - 0     - 56

messenger sharing button

facebook sharing button

print sharing button

email sharing button

image_dcc0767252.jpg

மு.தமிழ்ச்செல்வன்


கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக   செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த
ரிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் வயது 35 என்பவரே பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி  தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து  மணலுடன் வந்த ரிப்பர் உந்துருளியை நோக்கி நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி உந்துருளியிலிருந்து வேகமாக இறங்கி வீதியின் மறுபுறம் ஓடியுள்ளார்.

அந்த சமயத்தில் ரிப்பர் குறித்த நபரின் மீது மோதியத்தில்  அவர் ரிப்பரின் பின்பக்க சில்லுக்குள் சிக்குண்டதோடு மணலும் அவரின் மீது கொட்டியத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காட்சிகளிலும் மேலே குறிப்பிட்டவாறே  பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் போது ரிப்பர் சட்டவிரோத மணலுடன் காணப்பட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

திருவையாறு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று  வருகின்ற  சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவத்தில் இறந்தவர் தகவல் தெரிவித்து வருபவர் என்பதுடன் 119 க்கும்   தகவல் வழங்கியவர் எனவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே இச் சம்பவம் விபத்தாக இருக்க முடியாது என்றும் இது திட்டமிடப்பட்ட
கொலையாகவே  காணப்படுகிறது என்று உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tamilmirror Online || சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்

1 week 1 day ago

Janu   / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:10 - 0     - 40email sharing button

பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள்  இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து  வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சுமனசிறி குணதிலக்க

image_04c59eef84.jpg

image_e5feb497da.jpg

 

 

Tamilmirror Online || வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்

கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

1 week 1 day ago

image_0a4ce9e13c.jpg

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார்.

மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தர்.

 இருவரும்2011 டிசம்பர் 10 ஆம் திகதியன்கடத்தப்பட்டதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (10)  ஆஜரான முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்தார்.

Tamilmirror Online || கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப்

1 week 1 day ago

10 Dec, 2025 | 01:30 PM

image

நாட்டின் சுமார் 12,000 கிலோமீட்டர் நீளமுள்ள வீதி வலையமைப்பு தொடர்பான தகவல்களை கூகுள் மெப் புதுப்பித்திருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, A மற்றும் B தரத்திலான பிரதான வீதிகள் தொடர்பான தகவல்களை இணைத்து Google Map அதன் பாதை வரைபடங்களை புதுப்பித்துள்ளது.

வீதி மூடல்கள், பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் போன்ற 6 குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை தகவல்களுடன் இந்த புதிய பாதை வரைபட அம்சம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இது, பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மீதப்படுத்தவும், எதிர்பாராத போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும் மிகப் பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த கூகுள் மெப் நடைமுறைக்கான முன்னோட்டம் இடம்பெறும் என்றும் Google Map செயலியை பார்த்து பாதுகாப்பாக பயணித்தை தொடர முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப்  | Virakesari.lk

களப் பணியாற்றியபோது உயிரிழந்த விமானப்படை, கடற்படை வீரர்களுக்கு யாழில் அஞ்சலி

1 week 1 day ago

10 Dec, 2025 | 06:09 PM

image

நாட்டில் ஏற்பட்ட பேரிடரின்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் மரணமான விமானிக்கும், சுண்டிக்குளம் பகுதியில் முகத்துவாரம் வெட்டச் சென்ற நிலையில் உயிரிழந்த 5 கடற்படையினருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் பதாதை கட்டப்பட்டுள்ளது. 

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது கடந்த 30ஆம் திகதி ஹெலிகொப்டர் ஒன்று கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது.

அதன்போது, விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய (வயது 41) என்பவர் உயிரிழந்தார். 

அதேவேளை சுண்டிக்குளம் பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி களப்பு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் கடமையில் ஈடுபட்டிருந்தபோது 5 கடற்படையினர் உயிரிழந்தனர்.

களப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ஆறு வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய ஸ்ரான்லி வீதியில் பதாகை கட்டப்பட்டுள்ளது.

களப் பணியாற்றியபோது உயிரிழந்த விமானப்படை, கடற்படை வீரர்களுக்கு யாழில் அஞ்சலி | Virakesari.lk

கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

1 week 1 day ago

கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

Dec 10, 2025 - 02:36 PM

கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

'நெடுந்தாரகை' பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் இன்று (10) காலை 6.10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் 'நெடுந்தாரகை' பயணிகள் படகில் ஏறுவதற்கு பரராசசிங்கம் பிறேமகுமார் என்பவர் முயற்சித்துள்ளார். இதன்போது அவர் படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்துள்ளார். அவரை மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சியை மேற்கொண்டபோதும் அவரை உயிருடன் மீட்க முடியமல் போயுள்ளது. உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15 ஆம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmizsc9xb02ljo29n6cxw2gch

தரம் 6 இற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிப்பு

1 week 1 day ago

தரம் 6 இற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிப்பு

Dec 10, 2025 - 12:40 PM

தரம் 6 இற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிப்பு

05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழி (Online) முறைமை ஊடாக சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 

இணையவழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வசதி டிசம்பர் 05 ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு அந்தத் திகதி டிசம்பர் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இதேவேளை, 2025 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 6 ஆம் தரத்திற்கு அனுமதி பெறுவதற்கான முதலாவது மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் பொய்யான பிரச்சாரங்கள் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

2026 ஆம் ஆண்டு 06 ஆம் தரத்திற்காக முதலாம் சுற்றில் பாடசாலைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நிலவும் வெற்றிடங்களுக்காக இணையவழி ஊடாக மேன்முறையீட்டு விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmizo6l7n02ldo29nqte47sxr

வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்க போகின்றீர்களா?; து.ரவிகரன் எம்பி!

1 week 1 day ago

வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்க போகின்றீர்களா?; து.ரவிகரன் எம்பி!

ravikaran-mp.jpg

பூர்வீக மக்களை வெளியேற்றி விட்டு வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்கவா போகின்றீர்கள். எம்மை சுட்டாலும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கில் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த சிலரால் இயந்திரங்களின் மூலம் பெரிய மரங்கள் அறுக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றது. திரிவைச்ச குளம் பகுதியில் நான் நேரடியாக இதனை அவதானித்தேன்.

இதனை ஏன் இந்த திணைக்களங்களால் தடுக்க முடியவில்லை. ஒரு மண்வெட்டி பிடியை கூட நாங்கள் வெட்ட முடியாது. அதற்கு வழக்குப்போடும் இவர்களால் இதனை தடுக்க முடியாதா? வெட்டப்பட்ட மரங்களுக்கு என்ன நடந்தது. ஊழலை ஒழிக்க வந்த அரசாங்கத்திடம் கேட்கிறேன் இது ஊழல் இல்லையா? இது தொடர்பாக நீங்கள் கூடிய கவனம் எடுக்கவேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக கேட்டபோது மகாவலி அதிகாரசபை சொல்கிறது நீங்களும் பெயர்ப்பட்டியலை தாருங்கள் உங்களுக்கும் அங்கு காணி வழங்குவோம் என்று கூறினார்கள். யாருடைய காணியை இவர்கள் யாருக்கு வழங்கப் போகின்றார்கள்.

வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிபிள் ஓயாத்திட்டத்தில் பயனடையும் தமிழ் மக்கள் ஒருவரின் பெயர் உள்ளதா. நிமல் சிறிபாலடி சில்வாவின் சகோதரிக்கு மகாவலித்திட்டத்தின் கீழ்25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் நான் கூறவில்லை.அதன்படி 30 பேருக்கு 25ஏக்கர் படி அங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது.

அப்படியானால் தமிழ் மக்களை கடலுக்குள் தள்ளவா போகின்றீர்கள். இது தமிழ்மக்களால் பயன்படுத்தப்பட்ட பூர்விக காணிகள். வவுனியா வடக்கை அத்திப்பட்டி போல காணாமல் ஆக்கப் போகிறீர்களா. அதற்கு நான் விடமாட்டேன்.

இப்பிடியான அநீதியான வேலைகளை முதலில் நிறுத்துங்கள். இல்லாவிடில் ஆயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி கடும் எதிர்ப்பை வெளியிடுவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம். எங்களை சுட்டாலும் எமது எதிர்ப்பை காட்டியே தீருவோம் என அவரட மேலும் தெரிவித்தார்.

https://akkinikkunchu.com/?p=351875

யாழ்., பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு; பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

1 week 1 day ago

யாழ்., பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு; பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தர் தெரிவில் உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி முன்னிலை வகித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்கு உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்ததிரகுமாரன், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், விஞ்ஞான பீடப் பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், விவசாய பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், விஞ்ஞானபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஜெ.பிறின்ஸ் ஜெயதேவன் ஆகிய ஆறுபேர் போட்டியிடுகின்றனர்.

மேற்குறிப்பிடப்பட்ட ஆறு பேரில் மூவரைத் தெரிவு செய்வதற்கான விசேட பேரவைக் கூட்டம் இன்று இடம்பெற்றது.

இந்த நிலையில் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

விவசாய பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாவது நிலையையும், மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்ததிரகுமாரன் மூன்றாவது நிலையையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் சுற்றறிக்கையின் படி, பேரவையால் தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று விண்ணப்பதாரர்களின் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினுடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனடிப்படையில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் பேரவையால் முன்மொழியப்பட்ட மூவரிலிருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து, துணைவேந்தராக நியமனம் செய்வார்.

https://akkinikkunchu.com/?p=351871

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் வெள்ளியன்று மாபெரும் போராட்டமும் கண்டனப் பேரணியும்

1 week 1 day ago

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் வெள்ளியன்று மாபெரும் போராட்டமும் கண்டனப் பேரணியும்

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள நீரியல்வளத் திணைக்களத்துக்கு முன்பாகக் கண்டனப் போராட்டம் ஆரம்பமாகி யாழ் மாவட்டச் செயலகம் வரை பேரணியாகச் சென்று யாழ். மாவட்டச் செயலக வாயிலை மூடிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு முதல் நெடுந்தீவு வரையான மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கிருஸ்ணன் அகிலனை நேரில் சந்தித்து இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

https://akkinikkunchu.com/?p=351890

யாழ். பல்கலையில் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை

1 week 1 day ago

யாழ். பல்கலையில் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை

10 Dec, 2025 | 11:26 AM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தவறின் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளது. 

இதுதொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. 

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 355 போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இவ் ஆளணி வெற்றிடங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைவானவை ஆகும். 

நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் போதனைசாராப் பணியாளர் ஆட்சேர்ப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன், அந்தப் பல்கலைக்கழகங்கள் ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைவாக ஆட்சேர்ப்பு  நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. 

எனினும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட தாபன வழிகாட்டல்களை மீறி வேலைகள் உதவியாளர் மற்றும் வேறு சில வெற்றிடங்களைத் தனியார் நிறுவனம் ஊடாக நிரப்புவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதை நாம் அவதானிக்கிறோம்.  

இந்த நிலமை அப் பல்கலைக்கழகப் பணியாளர்களிடையே திருப்தியின்மையை ஏற்படுத்தியிருப்பதுடன், அதற்கெதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் அவர்கள் தயாராகவுள்ளனர். 

எனவே இது விடயத்தில் உடனடியாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு உரிய தீர்வை வழங்கத் தவறினால் நாம் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்று உள்ளது. https://www.virakesari.lk/article/232951#google_vignette

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலதா மாளிகையில் மத நிகழ்வு!

1 week 1 day ago

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலதா மாளிகையில் மத நிகழ்வு!

10 Dec, 2025 | 10:28 AM

image

இலங்கை கடற்படையின் பெருமைமிகு 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக பல்வேறு சர்வ மத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கான கிலன்பச புத்த பூஜை  திங்கட்கிழமை (08) அன்று நடைபெற்றது.

மேலும் தலதா தாதுக்கான அன்னதானம் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது.

அதன்படி, மேற்படி மத நிகழ்ச்சிகளின் கீழ், கடற்படைத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவினால், மல்வத்த மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெற்ற பிறகு, திங்கட்கிழமை (08) மாலை பௌத்த சடங்குகளின்படி கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா தாதுவிக்கு கிலான்பச புத்த பூஜை வழங்கப்பட்டது.

தலதா மாளிகையின் மகா சங்கத்தினரின் 25 உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (09) காலை பக்தியுடன் நடைபெற்றது.

அங்கு, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த கடற்படை வீரர்களை வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர் நினைவு கூர்ந்தனர்.

மேலும், அனைத்து கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், போர்வீரர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்து, 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் ஆசீர்வாதங்களைத் தெரிவித்தனர்.

11.jpg

10.jpg

7.jpg

6.jpg

5.jpg

3.jpg

1.jpg

https://www.virakesari.lk/article/232945

மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி,முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!

1 week 1 day ago

மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!

25-6938fc1b5e76d.webp

மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

10.12.2025 புதன்கிழமை காலை 7.00 மணிக்கு சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் கடந்த 18 மணித்தியாலங்களுக்கு மேலாக மழை கிடைத்து வருகின்றது. தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குளங்கள் பலவும் வான் பாய்கின்றன. ஆறுகளும் அவற்றின் கொள்ளளவை எட்டியுள்ளன.

ஆகவே மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் நகரை அண்மித்த தாழநிலப்பகுதி மக்கள், மற்றும் ஏனைய தாழ் நிலப்பகுதிகளில் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது சிறந்தது.

வெள்ள நிலைமைகளை அவதானித்து முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது. மன்னார் மாவட்டத்திற்கு நீர் கொண்டு வரும் பாலியாறு, பறங்கியாறு போன்றவற்றின் நீரேந்துப் பிரதேசங்களில் மழை கிடைத்து வருகின்றது.

இப்பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது அவசியம். கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் இன்றும் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளதோடு நாளை மறு தினம் வரை இந்த மழை தொடரும். மத்திய, தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே இப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.samakalam.com/மன்னார்-யாழ்ப்பாணம்-கிள/

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்!

1 week 1 day ago

GOOGLE-MAPS.jpg?resize=750%2C375&ssl=1

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்!

இலங்கையின் பிரதான வீதி வலையமைப்பு இப்போது கூகுள் வரைபடத்தில் நிகழ்நேர நிலை எச்சரிக்கைகளால் ஆதரிக்கப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்தப் புதுப்பிப்பு 12,000 கிலோமீட்டர் பிரதான வீதிகளை உள்ளடக்கியது.

மேலும், வீதி மூடல்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் உட்பட ஆறு வகையான எச்சரிக்கைகளை வழங்குகிறது.

பயணிகள் பாதைகளை மிகவும் திறமையாக திட்டமிடவும், எதிர்பாராத தாமதங்களைத் தவிர்க்கவும், வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த முன்னோடித் திட்டம் உதவும் என்று அமைச்சர் கூறினார்.

இது குறித்து எக்ஸில் பதிவிட்ட அமைச்சர்.

“உங்கள் பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், எதிர்பாராத போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இது ஒரு பெரிய உதவியாக இருக்கும்” என்று கூறினார்.

அதேநேரம், பயணிகள் பயணங்களை தொடங்குவதற்கு முன் புதுப்பிப்புகளுக்கு வரைபட செயலியைப் பார்க்குமாறு அவர் ஊக்குவித்தார்.

இந்த முன்னோடித் திட்டம் டிசம்பர் 31 வரை இயங்கும். 

அண்மைய சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் வீதி வலையமைப்புகளில் ஏற்பட்ட பெரும் சேதத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

https://athavannews.com/2025/1455795

Checked
Thu, 12/18/2025 - 20:15
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr