-
புறநானூற்றுத்தாயின் இன்னுமொரு பரிமாணம் நீ.
புறநானூற்றுத்தாயின் இன்னுமொரு பரிமாணம் நீ. என் அன்பான பர்வதகுமாரியே! இன்று நீ எங்கே? இன்று நீ இருந்திருந்தால்.. பர்வதகுமாரியே என்று விளித்த என்னை நன்றாகவே ஏசியிருப்பாய் இதற்குள் தான் உன் பெயர் உள்ளதே. அதனால் இப்படி விளித்தேன்? உனது ஆரம்ப காலக்கவிதை ஒன்றில் உலவிய பிருதுவிராஜனும் சம்யுக்தாவும் என் நினைவில் நிழலாடினார்கள். அதனால்த்தான் என் அன்பான தோழியே! இப்படி விளித்தேன். இப்போது என்னை மன்னிப்பாய் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் உன்னை எனக்கு தெரியும். வயதில் இளையவளென்றாலும் எனக்கு தாயாகவும் நீ இருந்திருக்கின்றாய். நோயாளியாக ஆன அந்த நாட்களில் பெற்ற பிள்ளையை அன்னை கவனிப்பது போல் நீயும் பூமணியும் என்னைத் தாங்கியதை எப்படி மறப்பேன்? உனது இலக்கிpய ஆற்றலின் வெளிப்பாட்டின் சிறு துளிதான் அந்த ஆரம்பகால பிருதுவிராஜனும் சம்யுக்தாவும் அதன் பின் உன் படைப்பாற்றலின் பல்மடங்கு வளர்ச்சியைப் பார்த்து எத்துணை மகிழ்ச்சி அடைந்தோம். களத்தில் நின்று நீ படைத்த போரிலக்கியப் படைப்புக்கள் புறநானூற்றில் இணைக்கப்படவேண்டியவை. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவள் நீ. சோகங்களை உனக்குள் இறுக்கமாகப் பூட்டிவைத்து உன்னைச் சுற்றியிருந்தவர்களை கலகலப்பாக சிரிக்க வைத்தவள் நீ. இன்று எல்லோரையும் அழவைத்துவிட்டு எங்கே சென்றுவிட்டாய்? உன் நேசத்துக்குரியவனின் இழப்பை உனக்குள் சுமந்து கொண்டு இழப்புக்காக அழக்கூட தருணமின்றி இறுதிவரை போராடினாய். உங்கள் வீரமகள் தீரமுடன் வாழவேண்டும் என்பதற்காக உன் அன்னையிடம் அந்த நிலவை ஒப்படைத்துவிட்டு சென்றாயே. உன் வீரத்தை ஈகத்தை எப்படிச் சொல்வது? புறநானூற்றுத்தாயின் இன்னுமொரு பரிமாணம் நீ. தமிழினத்து வரலாற்றில் உன் பெயரும் அழிக்கப்படமுடியாதது. மந்தாகினி
-
maathine started following புறநானூற்றுத்தாயின் இன்னுமொரு பரிமாணம் நீ.
-
என்னை விட்டு விடுங்கள்.
என்னை விட்டு விடுங்கள். நான் சொன்னது என்ன? இவர்கள் செய்வதுதான் என்னவோ? இன்பம் துன்பம் கடந்த நிலையில் எனது போதனைகள் இருந்தன. கடவுளாக என்னை ஏற்கச் சொல்லவில்லையே? எனது பெயரால் ஏனிந்தக் கொடுமைகள்? அன்பைப் போதித்த என்னை இப்படி அவமதிப்பது சரிதானா? மனதை பக்குவப்படுத்தச் சொன்னேன். என்னை வைத்து இனவாதக் கொடுமைகளா? தமிழர் நிலங்களைக் கைப்பற்ற எனது பெயரில் சிலை வைப்பா? நானோ ஆசைகளைத் துறந்தேன் ஆனால் என்னை சொல்லி சொல்லியே தமிழினத்தை அழிக்க நினைக்கிறார்களே மனங்களை பண்படுத்தச் சொன்னேன் தமிழரின் உரிமைகளை பறிக்க என்னை பயன்படுத்துகிறார்களே. இவர்களா என்னைப் பின்பற்றுகிறார்கள்? உயிர்களிடத்தில் அன்பு காட்டத்தானே சொன்னேன். என் போதனைகள் வழி நடப்பதாகச் சொல்பவர்கள் அடாவடித்தனமாக தமிழர் நிலங்களை பறிக்கிறார்களே/ காலம் காலமாமாக எனது பெயரால் தானே தமிழினப் படுகொலைகளைத் தொடர்கிறார்கள். இனி எனது பெயரால் உங்கள் இனவாதக் கொடுமைகளைத் தொடர்ந்திட வேண்டாம் என்னை விட்டு விடுங்கள். மந்தாகினி
-
மனிதநேயம் எங்கே
ஓம். நன்றி நன்றி. நன்றி. உண்மைதான். மிருகவதைக்கு கூப்பாடு போடும் குரல்கள் எங்கே? நன்றி. நன்றி. நன்றி. அதிகார ஆட்டங்களால் உயிர்கள் பலியாகிக்கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ளமுடியவில்லையே
-
மனிதநேயம் எங்கே
மனிதநேயம் எங்கே அதிகாரப் போட்டிகளின் உக்கிர ஆட்டத்தில் அல்லாடி அலைந்து உயிர்கள் வதைக்கப்பட, சதிகாரக் கூட்டமோ சமர் என்ற பெயரில் எறிகருவிகளால் ஆட்டம் போடும் கொடுமை இன்னும் எத்தனை காலமோ? துடித்துத் துடித்து மக்கள் சாவோடு போராட எடுத்து எடுத்து எறிகணைகளை வீசி வீசி கோரமான விளையாட்டை தொடர்கின்ற கொடுங்கோலர்களின் ஆக்கிரமிப்பு ஆசைகள் அடங்கி ஒடுங்கும் நல்ல நாள் வருமா? சின்னச்சின்ன குருத்துகளெல்லாம் சிதைக்கப்படுவது எவர் கண்களிலும் ஈரத்தை கொண்டு வரவில்லையே போர்க்கருவிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக்கு போட்டி போட்டு அழித்தலைத் தொடரும் ஈவிரக்கமில்லா நாடுகளிடம் மனித நேயமா? மனிதப் படுகொலைகள் ஒரு பக்கம் தொடர பச்சிளங்குழந்தைகள் கொடிய பசியால் துடிக்க “எமக்கு வேண்டியது ஆளுகை அதிகாரம்தான்” என்றே சொல்லி போரிடும் நாடுகளைக் கேட்க ஆருமின்றியே அவலங்கள் தொடர்கின்றன மந்தாகினி
-
நம்பிக்கை துளிர்க்கிறது
நம்பிக்கை துளிர்க்கிறது வீணையின் தந்தியை மீட்டினால் இனிய இசை பிறக்கும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால்-எம் இனத்தின் வலி தெரியும். இனத்தின் வலி உணராமல் இளந்தலைமுறை சென்றால் எம்மின அடையாளம் எங்கோ தொலைந்து போகும் இதற்காகவா எம் அன்பு உறவுகள் இளம் பருவத்து கனவுகளை உள்ளுக்குள் பூட்டி வைத்து உறுதியுடன் போராடி தம் இன்னுயிரைக் கொடுத்து மண்ணுக்கு உரமாகினார்கள்? எண்ணத்தில் ஏக்கமும் கவலையும் இணைந்து வருத்திய வேளையில் ‘இல்லை நாம் மறக்க மாட்டோம்’ என இளையோர் செயலில் காட்டுகிறார்கள் நம்பிக்கை துளிர்க்கிறது கொத்துக் கொத்தாக எம் மக்கள் கொன்றழிக்கப்பட்டதை நினைக்க மறந்து எப்படி எம்மால் வாழ முடிகிறது காலங்காலமாக எம்மினம் வதைக்கப்பட்டதும் துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்டதும் அறிந்து கொள்ளாமலே எங்கள் இளையோர் நகரப்போகிறார்களா? என்ற தவிப்பு வேண்டாமே என உறுதிப்படுத்துகிறார்கள் இளையோர். இன அடையாளம் தெரியாத வெறுமையான மனிதர்களாக எங்கள் எதிர்கால தலைமுறையை தனித்து தவிக்க விட்டுச் செல்லப்போகின்றோமா? என்ற வேதனைக்கு விடைசொல்கிறார்கள் மீட்டப்பட வேண்டியது எம்மினத்தின் வலிகள் சொல்லும் வரலாற்றின் பக்கங்கள். ஊட்டப்பட வேண்டியது உயிர்ப்புடன் இனம் எழவேண்டும் என்ற உண்மைகள் தமிழின வரலாற்றுத் தந்திகள் மீட்டப்படுகின்றன இனத்தின் உயிர்ப்பு உறுதியாக்கப்படும் என்ற நம்பிக்கை விதைகள் மெல்ல மெல்ல முளைவிடுகின்றன. மந்தாகினி