Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "பொய் சாட்சி" ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக் கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/2009 பின் மக்களின் போராட்டம் தீவீரம் அடைந்தது. ஆனால், இலங்கையில் நீடித்த மற்றும் அழிவுகரமான உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளத்தை ஏற்படுத்தி, பல தசாப்தங்களாக நீடித்த யுத்தம், தேசத்தின் மீது ஏற்படுத்திய வடுக்களை கலைவதற்குப் பதிலாக அது நீடிப்பதைத் தான் காண முடிந்தது. உதாரணமாக போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் கூட வலுக்கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருந்தன இந்த சூழலில் தான் சர்வதேச அழுத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கம், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தான் விசாரணைகளை ஆரம்பிப்பதாக ஆரம்பித்தது. எனவே, திருமண வாழ்க்கைக்குள் பிரவேசிக்காது, தனிமையில் வாழ்ந்து 11 வருடங்களாக தனது தாயை தேடும் போராட்டத்தை முன்னெடுத்து வரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த, தமிழ்செல்வி, இறுதி யுத்தத்தில் தனது தாய் தெய்வானையை இராணுவம் விசாரணைக்கு என கூட்டிச் சென்றதாகவும், அதன் பின் இன்றுவரை திரும்பி வரவில்லை என்றும், அதற்கான பதிலை இராணுவம் அல்லது அரசு தராமல் காலம் கடத்தி வருவதாகவும், இன்று தன் தாய் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடங்கி விட்டதாகவும், எனவே தனக்கு வெளிப்படையான மறுமொழியுடன், நீதி வழங்கப்பட வேண்டும் என்று, 2020 ஆண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30-ஆம் தேதி நீதி மன்றத்தில் முறையிட்டார். முதல் நாள் வழக்கில் தமிழ்செல்வி, நீதிமன்றத்தில் எழும்பி "கனம் தங்கிய நீதிபதி அவர்களே என் அம்மா காணாமல் போகவில்லை! காணாமல் ஆக்கப்பட்டார்" என்று தனது முறையீட்டை கூறத்தொடங்கினார். விவிலியம், தொடக்க நூல் 4: 9 ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து "ஆண்டவர், காயினிடம், 'உன் சகோதரன் ஆபேல் எங்கே?' என்று கேட்டார். அதற்கு அவன் 'எனக்குத் தெரியாது. நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' என்றான். காயினின் மறுமொழியை ஆண்டவர் ஏற்கவில்லை. ஆபேலின் ரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து கதறிக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். காயின் ஆபேலைக் கொன்று புதைத்துவிட்டான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ஆதாமும் ஏவாளும்தான் உலகின் ஆதி மாந்தர்கள் என்பதை நம்புகிறவர்களுக்கு, காணாமற் போன முதல் மாந்தன் ஆபேல் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் அவன் காணாமல் போகவில்லை, காணாமலாக்கப் பட்டான். தொலைந்து போகவில்லை, தொலைத்துக் கட்டப்பட்டான். ஆபேலின் மறைவுக்குப் பொறுப்புக் கூறும்படி ஆண்டவர், காயினைக் கேட்டார். நாமறிந்த முதல் ‘பொறுப்புக் கூறல்’ (ACCOUNTABILITY) கோரிக்கை இதுவே கனம் நீதிபதி அவர்களே" என்று தன் வாதத்தை தொடங்கினார். "இப்போது ... நம் காலத்தில் … இலங்கைத் தீவுநாட்டில் “என் கணவர் எங்கே?” என்று ஒரு மனைவி கேட்கிறார். “என் மகன் எங்கே?” என்று ஒரு தாய் கேட்கிறார். எங்கள் தலைவர்களும் தளபதிகளும் அரசியல் அறிஞர்களும் கலைஞர்களும் வீரர்களும் எங்கே .. எங்கே.. என்று ஈழத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு முடிவே இல்லை போலும். இவற்றில் ஒரே ஒரு கேள்விக்குக்கூட “ஓ, அவரா, இதோ இங்கே இருக்கிறார்” என்று விடை கிடைக்கவில்லை. ஆக அவர்களின் சாத்வீக போராட்டம் தொடர்ந்து தினமும் நடைபெறுகிறது கனம் நீதிபதி அவர்களே. அந்த வரிசையில் தான், எங்கள் வீடு வந்து, என் அம்மாவை கூடிச் சென்ற இராணுவம் இன்னும் என் கேள்விக்கு முடிவு தராமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது. சிலோனாக இருந்த இலங்கைத் தீவு 1972இல் சிறிலங்கா குடியரசான பிறகுதான் காணாமல் ஆக்கும் நடைமுறைகள் இங்கு பரவலாயின. அதில் என் அம்மாவும் இப்ப ஒருவர், கனம் தங்கிய நீதிபதி அவர்களே" தமிழ் செல்வியால் தொடர்ந்து வாதாட முடியாமல் கண்ணீர் இரு கன்னங்களாலும் கீழே ஒழுகி அவள் மார்பையும் நனைத்தது. கொஞ்ச நேரம் அவள் அமைதியாக இருந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு கண்ணகியின் ஞாபகம் வந்தது. "வாயிலோயே வாயிலோயே அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே" என்ற கண்ணகியின் வழக்குரை பாணியை நினைத்தால், உடனே எழும்பி "காணாமல் ஆக்கப்பட்டவர்களது குருதியின் குரல் – ஆபேல் சிந்திய குருதியின் குரலைப் போலவே, கனம் தங்கிய நீதிபதி அவர்களே - மண்ணிலிருந்து கதறிக் கொண்டே இருக்கும். உலகத்தின் உளச்சான்றுக்குச் செவி இருந்தால் அந்தக் குரல் கேட்கும். நீதி கிடைக்கும்!, உங்களை நம்புகிறேன்!!" அவள் சுருக்கமாக தன் முதல் வாதத்தை நீதிமன்றத்துக்கு முன் வைத்தாள். ஆனால் அரசு மற்றும் இராணுவத்தின் சார்பில் இந்த காணாமல் போகும் போது, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்தவர் தனது சாட்சியை முன் வைத்தார். "போரின் போது சரணடைந்தர்கள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் உரிய முறையில் செயலாக்கப்பட்டதாக" அவர் கூறி, மேலும் "யுத்தத்தின் இறுதியிலும் அதன் பின்னும் கூட , நாங்கள் ஒரு நல்ல அமைப்பைக் கொண்டிருந்தோம், அங்கு நாங்கள் அழகான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தோம். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கவில்லை என்று நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அல்லது விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்ட மக்கள் திரும்பி வருவதில்லை - அது நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்ட கதை,” என்று அவர் ஒரு கேலி புன்னகையுடன் கூறினார். அதன் பின், காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சாட்சி அளித்த ஒரு உயர் அதிகாரி, அங்கு தடயவியல் நிபுணர்கள், சாட்சிகளைப் பாதுகாக்கும் பிரிவுகள் மற்றும் விசாரணை அதிகாரங்களைக் கொண்டு இருந்தாலும் அதற்கு குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அதிகாரம் இல்லை என்றும் அலுவலகம் சந்தேக நபர்களை வழக்கறிஞரிடம் மட்டுமே அனுப்ப முடியும் என்றும் கூறினார். அதை தொடர்ந்து தமிழ்செல்வி மீண்டும் சாட்சி கூண்டில் ஏறினாள். அவள் கையில் கண்ணகி வைத்திருந்த அந்த உடையாத மற்ற சலங்கை இருக்கவில்லை, ஆனால், அவள் நடுங்கும் கைகளில் நான்கு மங்கலான புகைப்படங்கள் இருந்தன. அவள் கண்ணீர் இன்னும் ஒழுகிக்கொண்டே இருந்தது. "2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர், வீட்டிற்கு வந்த இராணுவ புலன் விசாரணை குழு ஒன்று தான் என் அம்மாவை, வலுக்கட்டாயமாக பேருந்து ஒன்றில் மற்றும் பலருடன் ஏற்றினர். நான் எனது அம்மாவுடன் பேருந்தில் செல்ல அனுமதிக்குமாறு கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டார்கள்” என்று கூறி அதற்கு சான்றாக அந்த நாலு படங்களையும் நீதிபதியிடம் கொடுத்தார். இதை எதிர்பாராத அரச சாட்சிகள் கொஞ்சம் தடுமாறினார்கள். "நான் உங்களிடம் பணிவாக கேட்பது என் அம்மா கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு? அதை விட்டு நட்டஈடு அல்ல" அவள் உறுதியாக கூறினாள். இதைத்தொடர்ந்து, மேலும் சர்வதேச அழுத்தத்தின் கீழும், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் விசாரணைகளை நீதிமன்றம் ஆரம்பித்தது. இருப்பினும், உண்மையைத் தேடுவதற்கான உண்மையான முயற்சிகளுக்கு மத்தியில், ஒரு மோசமான சதி வெளிப்பட்டது. அங்கே ஒரு பிரிவு, மறைமுக நோக்கங்களால் உந்தப்பட்டு, பழியை மாற்றுவதற்கும், ஏதேனும் சாத்தியமான தவறுகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கும் ஆதாரங்களை உருவாக்க முடிவு செய்தது. போலியான சாட்சியங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்ற வடிவங்களை சோடித்தது. அதற்கு வடக்கு, கிழக்கு சில தமிழ் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் கூட விலை கொடுத்து வாங்கியது. இந்த மோசடி மற்றும் பொய் சாட்சிகள், அதிகாரத்தின் துணையுடன் தாண்டவம் ஆடியது. "விரி காஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும், பிரிவஞ்சாது அவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும் கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, எரி பொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன் செய்கோ?" காஞ்சிப் பூ மலர்ந்தது. குயில்கள் கூவுகின்றன. இந்தக் காலத்தில் பிரிந்திருக்கலாமா? நானும் மறைக்கத்தான் பார்க்கிறேன் முடிய வில்லையே! 'பொய் சாட்சி' சொன்னவன் வந்து கீழே நின்ற மரம் பட்டுப் போனது போல இருக்கிறதே என் நிலை ! என்கிறாள் ஒரு சங்க தமிழிச்சி! அப்படித்தான் இந்த 'பொய் சாட்சி'கள் அவள் மனதில் ஓரளவாவது துளிர்த்து இருந்த நம்பிக்கையை பட்டுப் போக செய்துவிட்டது. ‘ஒரு சமுதாயத்தில் நீதி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை யொட்டியே அச்சமூக நிறுவனங்களின் தன்மையும் பண்பும் அறியப்படுகின்றன. நீதியே எல்லா நலன்களுக்கும் முதன்மையானது" என்ற பிளேட்டோ வின் வசனம் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்ப நீதி மன்றத்தை நாடுவதை அவள் நிறுத்திவிட்டாள். அதிகாரத்தில் இருக்கும் பொய் சாட்சிக்கு முன் அவள் எங்கே ? நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. "உலக அமைதி" "யாதும் ஊரே யாவரும் கேளிர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்" [உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே.! அது போன்று உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக நம் உலகிற்கு எடுத்துக்காட்டிவிட்டு சென்றுள்ளார் கணியன் பூங்குன்றனார்.] இன்றைய என் அனுபவத்தில், உலக சமாதானம் என்று எடுத்தவுடன் அதைப்பற்றி மட்டும் கதைப்பதில் எந்த பயனும் இல்லை. அமைதிக்கான நோபல் பரிசு 1901 மற்றும் 2022 க்கு இடையில் 140 நோபல் பரிசு பெற்றவர்களுக்கு, 110 தனிநபர்கள் மற்றும் 30 அமைப்புகளுக்கு 103 முறை வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான அவரது முயற்சிகளுக்காகவும், குறிப்பாக அண்டை நாடான எரித்திரியாவுடனான எல்லை மோதலைத் தீர்ப்பதற்கான அவரது தீர்க்கமான முயற்சிக்காகவும் எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு 2019 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது. அதேபோல, அமைதிக்கான நோபல் பரிசு 2014 பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசித்த ஒரு மாணவியான மலாலா யூசுப்சாய் என்பவருக்கு பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடைக்கு எதிராக "குழந்தைகள் மற்றும் இளைஞர்களை ஒடுக்குவதற்கு எதிராகவும், அனைத்து குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் போராடியதற்காக" வழங்கப்பட்டது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசு 2000 கிம் டே-ஜங் "தென் கொரியா மற்றும் பொதுவாக கிழக்கு ஆசியாவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காகவும், குறிப்பாக வட கொரியாவுடன் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காகவும்" கொடுக்கப்பட்டது. அந்த வரிசையில், அமைதிக்கான நோபல் பரிசு 1994 யாசர் அராபத், ஷிமோன் பெரஸ் மற்றும் யிட்சாக் ராபின் ஆகியோர் "மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்குவதற்கான அவர்களின் முயற்சிகளுக்காக" வழங்கப்பட்டது இவை ஒரு சில எடுத்துக்காட்டே . ஆனால் என் கேள்வி எத்தியோப்பிய - எரித்திரியா எல்லைப்பிரச்சனை உண்மையில் தீர்ந்து உள்ளதா?, பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடைக்கு என்னவாச்சுது இப்ப ? [ஆப்கானிஸ்தான்], தென் கொரியா - வட கொரியாவில் அமைதி நிலவுகிறதா?, அதே போல மத்திய கிழக்கில் இன்னும் என்ன நடக்கிறது?. இவை ஒரு சில கேள்விகளே! நான் பிறந்து வளர்ந்த இலங்கையில் அமைதிப்படை ஒன்றை இந்தியா 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி அனுப்பியது. அது, அந்த ஒப்பந்தம், இன்னும் இன்றும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தொல்லியல், கல்வெட்டு, வரலாறு, அறிவியல் மற்றும் பண்டைய பயணிகளின் குறிப்புக்களை தவிர்த்து மகாவம்சம் என்ற கற்பனை புராணத்தை சிங்களவர் தமது வரலாறாக, சிங்கள மக்களைத் தவறாக நம்பவைத்து, புத்தர் போதிக்காத, விரும்பாதவற்றை கையில் தூக்கி வைத்திருப்பதே ஆகும். அப்படித்தான் இந்தியாவில் ராமாயணம் என்ற புராணக்கத்தையும் இருக்கிறது என்பது வெள்ளிட மலையே! போரே இல்லாத சமுதாயம்தான் மிகவும் மேம்பட்ட சமுதாயம் ஆகும், மனிதன் பண்பட்டவன் என்பதைக் காட்டுவதும் ஆகும். போரினால் ஏற்படும் அழிவு ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் இராணுவத்திற்கெனச் செலவிடும் தொகையினை ஆக்கபூர்வச் செயல்களுக்கெனச் செலவிட்டால் உலகில் எங்கும் வறுமையும் கல்வியறிவின்மையும் வேலையின்மையும் போன்ற கொடுமைகளே இருக்கமாட்டா என்பதனை எத்தனையோ சான்றோர்கள் எத்தனையோ விதங்களில் அறிவுறுத்தியுள்ளனர். உதாரணமாக இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தி, ஏற்றத்தாழ்வு இல்லா சம உரிமை கொடுக்காததால் தான் அங்கு போரே உண்டாக்கியது. முக்கியமாக மொழி உரிமை, தரப்படுத்தல் என்ற பல்கலைக்கழகம் புகும் தகமை, சிங்களமயமாக்கல், குடியேற்றம், போன்றவற்றைக் கூறலாம். அதுமட்டும் அல்ல போர்விதிகள், ஒழுங்குமுறைகள் அங்கு நடைபெறவில்லை என்பதும் அதற்கான முறையான விசாரணையோ அல்லது நீதியோ இன்னும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. புறநானுறு ஐந்து, குழந்தையைக் காக்கும் தாய் போல உன் நாட்டை நீ காப்பாற்றுக. அது கிடைத்தற்கு அரிய பேறு ஆகும். நாடுகள் அமைதியைப் பேணி, நல்லுறவோடு வாழ வேண்டும் என்றால் மற்ற நாடுகளின் [இன்றைய சூழலில்: மற்ற இனத்தவரின்] உள் ஆட்சிப்போக்கில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்கிறது. “நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்; அருளும் அன்பும் நீங்கி, நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல், குழவி கொள்பவரின், ஓம்புமதி ! அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே“ தகடூர் யாத்திரை என்னும் நூல் அதியமானின் மீது நடத்தப்பட்ட போர் குறித்த ஒரு நூலாகும். முழுதும் கிடைக்காத ஒரு அரிய நூல். இதில் ஒரு மறக்குடி மறவனுக்கும் ஒரு மன்னனுக்கும் நடக்கும் உரையாடல் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய படைபலத்தைக் கொண்டு எதிரியை வெற்றி பெற முடியாது என்று ஒரு மன்னன் உணர்கிறான். உடனே, படைத்தளபதியாக விளங்கும் மறக்குடி தலைவனை அழைத்து இரவில் எதிரிப்படையைத் தாக்குமாறு அறிவுறுத்துகிறான், ஆணையிடுகிறான். இதைத்தான் இலங்கை, முள்ளிவாய்க்காலில் கண்டோம். உதாரணமாக வெள்ளைக்கொடி விடயம், கொத்துக்குண்டு, மற்றும் பாதுகாப்பு வளைய தாக்குதல் போன்றவற்றைக் கூறலாம். “பரவை வேல் தானைப் பகலஞ்சு வேனா இரவே எறியென்றாய் என்னை – விரைவிரைந்து வேந்தே நீ ஆயினாய் அன்றிப் புகுவதோ போந் தென்னைச் சொல்லிய நா” (தகடூர் யாத்திரை – பா – 14) எனவே உண்மையில் அமைதியை நிரந்தரமாக பேணவேண்டுமாயின் குறைந்தது மூன்று நிலைகள் முக்கியம் . முதலாவது உள் அமைதி - மனது. இரண்டாவது நமது உடனடி சூழல், நமது குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தில் அமைதி. மூன்றாவது உலகில், நாடுகளுக்கு இடையேயான அமைதி. சமூகங்கள் மற்றும் குடும்பங்களில் அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், உள் அமைதியே அடித்தளம். மற்றும் மனிதகுலத்தின் மேலான நன்மைக்காக செயல்பட தேவையான தைரியம் மற்றும் நம்பிக்கைக்கு அமைதியான மனநிலையும் அவசியம். இன்று உலகில் நடைபெறும் பல பிரச்சனைகள், அமைதியைப் பற்றி சாதாரணமாக கவலைப்படாதவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் அதைத் தேடத் தொடங்குகிறார்கள். உதாரணமாக உக்ரைன் போர் நிலவரத்தை பாருங்கள். உலக பொருளாதாரம் எவ்வளவு பாதிக்கப் பட்டுள்ளதை கவனியுங்கள். அது மட்டும் அல்ல உலகின் வல்லரசு எனப்படும் அமெரிக்க கொத்துக்குண்டை கூட அண்மையில் கொடுத்து உள்ளது. இது அமைதியை ஏற்படுத்துமா ? சற்று சிந்தியுங்கள்! ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, யேமன் மற்றும் இலங்கை உட்பட உலகின் பிற பகுதிகளில் மனிதாபிமான நெருக்கடிகள் அல்லது சிறுபான்மை மொழி / சமய மக்களுக்கு எதிரான வன்முறைகள், இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் பல பரிமாண சவால்களின் சிக்கலான தன்மையை மேலும் மோசமாக்கியுள்ளன. அறியாமை, தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவது காலத்தின் தேவை. இந்த நச்சு கலவையானது மனித நாகரிகத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்தி வருகிறது. உள் அமைதி இல்லாமல், உலக அமைதி, நிலையான வளர்ச்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் வெளிப்புற இலக்குகள் கட்டாயம் மாயமாகவே இருக்கும். அமைதி என்பது சந்தையில் வாங்கக்கூடிய ஒன்றல்ல. அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் வளர்க்கப்பட வேண்டும். உள் அமைதியைக் கண்டறிவதில் முதன்மையான தடையாக இருப்பது மன அழுத்தமே. இன்று, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முன் எப்போதும் இல்லாத அளவில் மன அழுத்தம், தனிமை மற்றும் கவலையை அனுபவித்து வருகின்றனர். மனச்சோர்வு மற்றும் மன ஆரோக்கியம் உலகளாவிய கவலையாக மாறியுள்ளது. அது மட்டும் அல்ல புராணங்கள், பொய் தகவல்கள் அவர்களுக்கு சமயம் என்ற போர்வையில் அவையுடன் கலந்து ஊட்டப்படுகின்றன. "எம் மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒன்றே இறைவன்" எத்தனை பேர் இதை பின்பற்றுகிறார்கள், இலங்கை விடயம் உங்களுக்கு தெரியும், அதை விட, மக்கள் ஆட்சியின் பெரிய அண்ணனாக இருக்கும் இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற மணிப்பூர் பிரச்சனை, பாபர் மசூதி, இப்படி பல கூறலாம். உங்களுக்கு தெரியும். நான் சொல்லத் தேவையில்லை. துரதிர்ஷ்டவசமாக, வீட்டிலோ அல்லது பள்ளியிலோ நம் எதிர்மறை உணர்ச்சிகளை எவ்வாறு நிர்வகிப்பது, மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது மற்றும் வாழ்க்கையின் கடினமான கட்டங்களைத் தாங்குவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதும் இல்லை. கற்றுக் கொடுப்பதும் இல்லை. மன அழுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உணவளிக்கிறார்கள், இதனால் வன்முறை சுழற்சியை உருவாக்குகிறது. மறுபுறம், உள் அமைதியிலிருந்து வரும் வலிமை ஒரு ஆக்கபூர்வமான மனநிலையுடன் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. ஒன்றைக் கவனத்தில் கொள்ளுங்கள் உயர்மட்டக் கொள்கைகளை இயற்றுவதால், அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதால், அமைதியைப்பற்றி பேசுவதால் மட்டும் உலக அமைதி ஏற்பட முடியாது. அது செயல்பட வேண்டும். அமைதியான மனிதர்கள்தான் அமைதியான உலகத்தை உருவாக்க முடியும். உள் அமைதி கொண்ட ஒரு நபர், தங்கள் தொடர்பில் வருபவர்களை சாதகமாக மாற்ற முடியும், இதனால் அவர்களின் சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பது என் சிறிய கருத்து இதுபோன்ற சமயங்களில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். எல்லா நாடுகளுக்கும், அதில் வசிக்கும் மக்களுக்கும் இடையே உள்ள அனைத்து வேறுபாடுகளுடன், பூமியில் ஒருபோதும் அமைதி இருக்காது என்பது என் கருத்து. இருப்பினும், சமூக, தனிப்பட்ட, பொருளாதார, மற்றும் அரசியல் அமைதி மூலம் அதை அடைய முடியும் என்று நம்புகிறேன். உலகம் வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது, அதைத் தடுக்க மனித இனம் ஒன்றுபட வேண்டும். இருப்பினும், மனிதர்கள் சுயநலம் மற்றும் கருணை இரண்டையும் கொண்டுள்ளனர், இதன் பொருள் எப்போதும் சில வேறுபாடுகள் இருக்கும். ஒரு மனிதனாகிய நாம் உலகத்தை மேம்படுத்த உதவக்கூடிய பல விடயங்கள் உள்ளன, வன்முறை என்பது எப்போதும் நிற்காத ஒரு பெரிய மோதல். பல ஆண்டுகளாக வன்முறைகள் போர்களைத் தொடங்கி, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று, குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிக்கின்றன. வன்முறை மட்டுமல்ல, உலகம் நடத்தப்படும் விதமும் கவலைக்குரியது. இப்போது எங்களிடம் கார்கள், செல்போன்கள், இணையம், நம் வாழ்க்கையை எளிதாக்கும் அன்றாட உபயோகப் பொருட்கள் உள்ளன. என்றாலும் யுத்தம் மற்றும் கொலைகள் தொடர்கின்றன. அது எப்போதாவது முடிவுக்கு வருமா என்பது உண்மையில் அது ஒரு கேள்வியே இன்னும்? மனித இனம் ஒன்று சேராமல் உலகம் நிம்மதியாக இருக்க முடியாது, ஏனென்றால் அதைத் துண்டாடியவர்கள் நாம்தான். ஆனால் அதைத் தடுக்க அவர்கள் எங்கும் நெருங்கவில்லை. பூமியில் அமைதியை ஏற்படுத்த, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை கொண்டு வர வேண்டும். ஆதிகாலம் முதல் பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்தவில்லை. இந்த நேரத்தில், உலகளாவிய மக்களாகிய நாம் பாலின சமத்துவத்தை சமப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பாலின சமத்துவம் என்பது ஒரு உரிமை மட்டுமல்ல, மிகவும் அமைதியான உலகத்தை நோக்கி சரியான திசையில் செல்வதற்கான ஒரு வழியாகும். உலக அமைதியின் இலக்கை அடைவதன் மூலம், நாடுகளுக்கு இடையேயான அமைதி செயல்முறை நடைமுறையில் இருக்க வேண்டும். கி மு 2,700 இலிருந்து பல்வேறு நம்பிக்கைகளுக்கு இடையே ஒரு போர் இருந்து உள்ளது, இது பெரும்பாலும் மத மோதல்கள், பழிவாங்குதல், பிரதேச தகராறுகள் அல்லது அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து நிகழ்கிறது. மக்கள் எப்பொழுதும் தங்களுக்கும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள் , எனவே இன்றைய உலகில் மக்கள் ஒருவரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும், மேலும் உடன்படாமல் அல்லது மோதலை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒரு கருத்துக்கு உரிமையாளராக இருப்பது, ஒரு கருத்தை வன்முறையில் வெளிப்படுத்துவதில் இருந்து வேறுபட்டது. ஒருவரைக் கொல்வதாலோ, பாகுபடுத்திப் பார்ப்பதாலோ அல்லது புண்படுத்துவதாலோ எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் உணர வேண்டும். கதை அல்லது கருத்தின் இரு பக்கங்களையும் பார்ப்பது மற்றும் மக்கள் அனைவரும் வெவ்வேறு விடயங்களை நம்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் மிகவும் அவசியம். சமாதானத்தை அடைய நாம் எடுக்கக்கூடிய மற்றொரு படி சமமான செல்வம். உலக வங்கியின் கணக்கெடுப்பின்படி, கிளர்ச்சி குழுக்களில் சேருபவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார வாய்ப்புகள் இல்லாததால் அவ்வாறு செய்கிறார்கள் என்கிறது. அதுமட்டும் அல்ல, இன்றைய ஊழல், உறவினர்கள், நண்பர்கள் அல்லது கூட்டாளிகளுக்கு ஆதரவாக செயல்படுதல் போன்றவற்றால், பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த நாட்டு அரசாங்கத்தை நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களால் காவல்துறையை நம்ப முடியாத அல்லது நீதிக்கான அணுகலைப் பெற முடியாத இடங்களில் மோதல்கள் நடக்கும் என்பது என் நம்பிக்கை. அதேபோல ஒரு சமயத்தை வளர்ப்பதற்காக மற்ற சமயத்தை தாக்குதல் அல்லது பணங்கள், வசதிகள் கொடுத்து மாற்றுதல் இவைகளையும் கூறலாம். நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் தமிழர்கள், முதலில் கிருஸ்துவத்துக்கு மாற்றப்பட்டு, பின் அவர்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்ட வரலாறு கதையல்ல, உண்மை நிகழ்வு! ஒருசாராருக்கான ஒதுக்கீட்டை நிறுத்துதல், ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்மையான சமத்துவத்தைக் கொண்டு வருதல், சமமான செல்வத்தைப் பகிர்தல், காலநிலை மாற்றத்தை சமாளித்தல், ஆயுத விற்பனையைக் கட்டுப்படுத்துதல், அரசியல் இடைவெளிகளை [ political space] ஏற்றுக்கொள்வது போன்றவற்றின் மூலம் உலக அமைதியை கட்டாயம் அடைய முடியும், ஆனால் ஒருவரால் மட்டும் உலகை மாற்ற முடியாது என்பதை மக்கள் உணர வேண்டும். ஒரு மாற்றத்தை உருவாக்க பூமியில் வாழும் மக்கள் அனைவரும் இணைய வேண்டும். ஆம், மக்கள் ஒருவரையொருவர் சமாதான கருத்துக்கள் மூலம் அணைக்கவேண்டும். தங்களுக்குள் செயல் படுத்தவேண்டும். எனவே, ஒருவரையொருவர் கருத்துக்களைக் கேட்டு ஒருவரையொருவர் சிக்கலைத் தீர்ப்பதன் மூலம், உங்கள் சமாதானத்துக்கான பங்கை ஆரம்பியுங்கள்! அது அறியாமை என்னும் ஒரு முனைக்கும், அறிந்துகொள்ளல் என்னும் இன்னொரு முனைக்கும் இடையில் அப்பாவி மக்களின் இரத்தத்தையும், வெறுப்பையும் கொண்டிராததும், மாறுபட்ட நுண்ணுர்வுகளை மிக நுட்பமாக எடுத்துரைக்கும் கலை என்னும் எரிபொருளை கொண்டு வேகமாக ஓடும் ஒரு வாகனம் போல உலக சமாதான பாதையில் நீங்கள் புறப்படுவீர்களாக !! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. "ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 01 "நீரின்றி அமையாது உலகு " -- வள்ளுவர் வாக்கு (குறள் -20 ) முன்னைய நாகரிகங்களான டைகரிஸ், யூப்ரடிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட - மெசொப்பொத்தேமியா, நைல் நதியின் ஓரத்தில் அமைந்த - எகிப்பது, சரஸ்வதி, சிந்து நதிகளுக்கு இடைப் பட்ட - சிந்து சம வெளி, மஞ்சள் ஆறு, யாங்சி ஆறு பகுதிகளில் அமைந்த - சீனா போன்றவை எல்லாம் ஆறுகளின் ஓரமாக அல்லது பெரிய ஆறுகளின் வெள்ளச் சமவெளியில் [rivers/ flood plains] அமைந்து இருந்தன. மேலும் அந்த இடங்கள் எல்லாம் நன்னீரின் தோற்று வாயாக அமைந்து இருந்தன. அது மட்டும் அல்ல, நாம் அறிவது என்னவென்றால், இந்த நாகரிகங்கள் எல்லாம் நீர்பாசனத்தை முழுமையாக அங்கீகரித்ததுடன் அதற்கு உச்ச முக்கியத்தையும் கொடுத்துள்ளது என்பதாகும். இது "நீரின்றி அமையாது உலகு " என்ற வள்ளுவரின் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாக்கை மேலும் உறுதிபடுத்துகிறது. கற்காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் வண்டல் சமவெளியில் மக்கள் முதல் குடியேறிய பொழுது, அவர்களின் உடனடியான முக்கிய அக்கறை நம்பகமான நன்னீர் கிடைக்கும் ஒரு இடத்தை கண்டு பிடிப்பதாகும். இது பயிர்களுக்கு தண்ணீர் விடவும் மிருகங்களும் தாமும் நன்னீர் குடிப்பதற்காகவும் ஆகும். முதலாவதாக அவர்களுக்கு டைகரிஸ், யூப்ரடிஸ் ஆறுகளும் அவைகளின் கிளையாறுகளும் [Upper and Lower Zab] அவர்களின் அந்த தேவைகளை வழங்கின. இதனால் தான் முன்னைய சுமேரியர்களினதும் அவர்களுக்கு முன் அங்கு கி மு 5000-4000 ஆண்டளவில் வாழ்ந்த உபைடியனினதும் [Ubaidian] கிராமமும் நகரமும் ஆறுகளை அண்டியும் அல்லது அவைகளுக்கு அருகிலும் கட்டப்பட்டன. அவை உயிருக்கு அத்திய அவசியமான தண்ணீரை கொடுத்தாலும் அந்த ஆறுகள், குறிப்பாக டைகரிஸ் ஆறு, முன்னறிந்து அதன் நிலையை கூறமுடியாததாகவும் சில வேளைகளில் அழிக்கக் கூடிய கொடிய வெள்ளத்தையும் உண்டாக்கின. ஆற்றின் வெள்ளத்தை கட்டுப்படுத்த காலம் காலமாக அங்கு அணை கரையையும் அணையும் [levees and dams] கட்ட முயற்சித் தார்கள். ஆனால் தெற்கு மெசொப்பொத்தேமியாவின் மிக மென்மையான மண்ணால் கட்டப்பட்ட இந்த தடைகள் இலகுவாக ஆற்று வெள்ளத்தால் அரிக்கப்பட்டு படிப்படியாக விரைவாக சிதைக்கப் பட்டன. மேலும் நாளடைவில் மக்கள் தொகை கூட சிலர் ஆற்றங்கரையில் இருந்து கிட்ட அல்லது தூர இடங்களில் குடியேற விரும்பினார்கள். அதனால் இந்து புதிய குடியிருப்புகளுக்கு நீர் வழங்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்தது. முன்னைய மெசொப்பொத்தேமியா குடியிருப்பாளர்கள் ஆற்றில் இருந்து நேரடியாக நீர் எடுப்பதற்கு பதிலாக, வேறு நீர் வளங்களையும் விநியோகத்தையும் ஏற்படுத்தி மேற்கூறிய சாவால்களை சமாளிக்க கற்றுக்கொண்டார்கள். அவை செயற்கை கால் வாய்கள், கிணறுகள், வாய்க்கால்கள் போன்றவையாகும். தொல்பொருள் ஆய்வுகள் கி மு 6000 ஆண்டு களுக்கு முற்பட்ட இந்த நீர்ப்பாசனங்களுக்கான சான்றுகளை ௮டையாளம் காட்டுகின்றன. பார்லி [வாற்கோதுமை] பயிர் வளர்ச்சிக்கு போதுமான இயற்கை மழை வீழ்ச்சி அற்ற அங்கு அப் பயிர் செய்யப்பட்டு உள்ளது இதை மேலும் உறுதிபடுத்துகிறது. ஜூலை தொடங்கி டிசம்பர் வரை உண்டாகும் வெள்ள நீரை 40 தொடக்கம் 60 நாட்களுக்கு திசை திருப்பி வயலுக்கு விடுகிறார்கள். பின் தக்க தருணத்தில் நீரை திரும்பவும் ஆற்றுக்கு வழி திருப்பி விடுகிறார்கள். "உன்னுடைய வாய்க் கால் குப்பை , இடிபாடுகளால் அடைபடட்டும்" என்ற பல முறை திருப்ப திருப்ப சபிக்கும் மெசொப்பொத்தேமியா சாபம் இதன் முக்கியத்தை காட்டுகிறது. ஆகையால் அதற்கு முதன்மை கொடுத்து மன்னர்களும் ஆட்சியாளர்களும் வாய்க்கால்களை தோண்டி பராமரித்தார்கள். அங்கு இருக்கும் வாய்க்கால்களை புறக்கணிக்கும் மன்னர்கள் பொதுமக்களால் வெறுக்கப் படுவதுடன் அரசுக்கு எதிரான எதிர்ப்புகளையும் கொந்தளிப்புகளையும் எதிர்நோக்க நேரிட்டது. கால்வாய்கள் அமைப்பது ஒரு பெரிய வேலை என்பதால், ஹம்முராபி போன்ற மன்னர்கள் தமது பெருவாரியான குடி மக்களை [பிரஜைகளை] அதில் ஈடுபடுத்தினார்கள். கால்வாய் தோண்டியதும் அந்த செயற்கை கால்வாயிற்கூடாக ஓடும் நீரின் அளவை கட்டுப்படுத்த ஆற்றம் கரையில் ஒரு மடைவாய் / மதகு கதவு [sluice gate] அங்கு கட்டப்பட்டது. தேவை கருதி அந்த கதவை திறந்தோ அல்லது மூடியோ நீர் ஓட்டத்தின் அளவை கூட்டி அல்லது குறைக்கப் பட்டது. பயிர் வளரும் காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் குறிக்கப் பட்ட அளவு நீரே கொடுக்கப்பட்டது. ஒரு விவசாயி தனது வயலுக்கு நீர் இறைக்கும் முறை வரும் போது, மதகு அதற்கு தக்கவாறு திறந்து, மூடி சரிப்படுத்தப்பட்டு அந்த விவசாயினது வயல் பக்கமாக அமைந்த நீர்பாசன குழியில் [irrigation ditch] நீர் விடப்பட்டது. பபிலோனியன் மன்னன் ஹம்முராபி தான் முதன் முதல் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒரு நீர் சம்பந்தமான ஒழுங்குவிதிகளை ஏற்படுத்தினார். அந்த முன்னைய விதி முறைகள் பின்வருவனவற்றை அடங்கி இருந்தது. அ] நீர் விநியோகம் வயலின் பரப்பு அளவின் வீதப்படி வழங்குதல் ஆ] வயலின் பக்கமாக அமைந்த வாய்க்காலை பராமரிப்பது அந்த வயல் உரிமையாளரை சார்ந்தது. இ] கால் வாயை எல்லா பாவனையாளர்களும் அடங்கிய ஒரு கூட்டு நிர்வாகத்துக்குள் அமைத்தல் ஆகும். ஆற்றில் நீர் மட்டம் இயல்பாக [சாதாரணமாக] இருக்கும் போது தான் மேலே கூறிய மதகு கதவு திறமையாக இயங்குகிறது. என்றாலும் நீர் மட்டம் கதவிற்கு கீழ் வரும்போது, கால் வாயிற்கான நீர் ஓட்டம் நின்றுவிடுகிறது. அப்படியான வேளையில் இந்த சிக்கலை தீர்க்க பெயர் தெரியாத சுமேரியனோ அல்லது அதற்கு முதல் அங்கு வாழ்ந்த உபைடியனோ ஒரு கருவி / பொறிக்கான யோசனையை பெற்றிருக்க வேண்டும். இதை பின் அரேபிய மக்கள் "shaduf" / துலா என அழைத்தனர். இது, ஒரு நீளமானதும், நேரானதுமான ஒரு மரத் தண்டு ஆகும். இதன் ஒரு முனையில் நீளமான கயிறு ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். அதன் மறு முனையில் பாரமான கல் அல்லது ஒரு பாரம் கட்டப்படும். இம் மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத் தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடிய வாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். இதன் அளவை பொறுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டோர் இதை மேலும் கீழும் இயக்குவர். நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டு வருவர். பின் நீரை கால்வாயில் விடுவர். இந்த முறை ஆற்றில் வெள்ளம் இல்லாத நேரத்திலும் நீர்பாசனம் செய்ய உதவியது. அதுமட்டும் அல்ல உயரமான இடத்திற்கும் நீர்பாசனம் செய்யக்கூடியதாக இருந்தது. இதனால் அப்படியான உயரமான இடங்களிலும் விவசாயம் செய்யக் கூடியதாக இருந்தது. மேலும் இந்த துலாவால் ஒரு கால்வாயில் இருந்து மற்ற கால்வாயிற்கு அல்லது வாய்காலிற்கு நீரை மாற்றி விடக்கூடியதாகவும் இருந்தது. இந்த துலா முறை கி மு 1700 ஆண்டு அளவில் பாவனையில் இருந்துள்ளது. இந்த பொறியை பபிலோனி யாவில் கி மு 500 ஆண்டளவில் கண்ட கிரேக்க வரலாற் றாசிரியரான ஹெராடோடஸ், "மழை பெய்கிறது....சிறிய அளவாக" என குறிப்பிடுகிறார். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும்
  4. "அன்பே ஆரமுதே" "அன்பே ஆரமுதே கரும்பே தேனே இன்பம் பொழியும் அழகு தேவதையே துன்பம் போக்கும் கருணை மாதே இன்னும் ஏன் தயக்கம் உனக்கு?" "மாசறு பொன்னே வலம்புரி முத்தே பாசம் கொட்டும் பெருங்குடி மகளே வாசம் வீசும் கூந்தல் அழகியே நேசம் கொண்டு அருகில் வருவாயோ?" "காதல் என்பது காமம் அல்ல மோதல் பிறக்கும் இடமும் அன்று சாதல் எம்மை அணுகும் வரை இதயம் சேரும் ஒற்றுமை நட்பே!" "உணர்வு ஒன்றி இருவரும் கலந்து உள்ளம் நாடும் இனிய உறவில் உணர்ச்சி தவிர்த்து நிலை அறிந்து உண்மை வாழும் இருவரின் பற்றே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 06 கிரகணம்: கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு என்பது பொருளாகும், எக்லிப்ஸ் (Eclipse) என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள், வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்! கரத்தல் = மறைத்தல்!. தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதை கூறும்! கிரகணம் என்பது சந்திரன், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ஏற்படுவது. ஆனால் பழங்காலத்தில், கிரகணம் என்பது, ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். அதுமட்டும் அல்ல சூரியனை ராகு, கேது, பாம்புகள் விழுங்குவதால் உண்டாவதாகவும் கருதினர். இந்த கருத்தை சிலப்பதிகாரத்தில் காணலாம். புகார்க் காண்டம் 5. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை “வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்” கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து-ஆங்கு, இரு கருங் கயலொடு இடைக் குமிழ் எழுதி, அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி, திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்! கருங்கூந்தல் என்னும் மேகத்தைச் சுமந்துகொண்டு நிலாவில் இருக்கும் குட்டி முயல் நிழலை நீக்கிவிட்டு மூக்கு என்னும் குமிழம்பூவை எழுதிக்கொண்டு வானத்தில் இருந்தால் ராகு-கேது நிழல் பாம்புகள் விழுங்கும் என்று ஆஞ்சி மண்ணுக்கு வந்து திங்கள் இங்குத் திரிகின்றதோ? என்று இந்த பாடல் கூறுகிறது. அதாவது, ஒரு பெரிய முகிலைத் / மேகத்தைச் [கூந்தலை] தன்னுச்சியிலே சுமந்து சிறிய முயலை [குறிய களங்கத்தை / கறையை] யொழித்து. அவ்விடத்தே இருமருங்கினும் இரண்டு கயல் மீனையும் [கண்ணையும்] அவற்றிடையே ஒரு குமிழ மலரையும் [மூக்கையும்] எழுதி, இவ்வாறு தன்னைப் பிறர் அறியா வண்ணம் உள்வரிக் கோலம் கொண்டு; இந் நகரமறுகிலே, அகன்ற அழகிய வானில், இராகு கேது பாம்புகளுக்கு அஞ்சி, திங்கள் [அந்த சந்திரனே] தானும் வந்து திரிகின்றதோ என வர்ணிக்கிறது. நற்றிணை 377, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சி திணை- தலைவன் சொன்னது "அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல" அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் [பாம்பினால்] சிறிது விழுங்கிக் குறை படுத்தப்பட்ட பசிய [பசுமை] கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என இங்கு கூறப்படுகிறது. அதாவது இந்தப் பாடலிலும் ராகு கேதுவைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் சூரிய கிரகணம் தோன்றுவது நாட்டில் போரும், மோசமான சம்பவங்கள் ஏற்படுவதற்கான அறிவிப்பாக கருதப்பட்டது. சூரிய கிரகணம் ஏற்பட்டால் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். காரணம் சூரிய கிரகணத்தால் உணவுப் பொருட்கள் கெட்டு விடும் என்ற நம்பிக்கையும் நமது நாட்டு மக்களிடம் இருந்தது. சூரிய கிரகண நம்பிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் தான். அதாவது சூரிய கிரகணத்தின் போது கர்பிணிப் பொண்கள் வெளியே சென்றால் பிறக்கப் போகும் குழந்தை குருடாக பிறக்கும் அல்லது கிழிந்த உதடுடன் பிறக்கும் என நம்பப்பட்டது. மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ள மாட்டார்கள். சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும் கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது என கருதியதால் ஆகும். சூரிய கிரகணம் பற்றிய மூட நம்பிக்கை நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சூரிய கதிர்கள் சந்திரனால் மறைக்கப்படும் போது வளிமண்டலம் மாசுபடுத்தப்படுவதாக நம்புகிறார்கள். இதனால் ஒரு முழு காலை நேரமும், அதாவது 12 மணித்தியாலம் அளவிற்கு, எந்த வித உணவையும் இந்த மாசுபட்ட சூழலில் சாப்பிடாமல் மக்கள் விரதம் கடைபிடிக்கிறார்கள். தம்மை எந்த வித தீய செயலிலும் ஈடுபடாமல் தடுப்பதற்காக வழிபாட்டிலும் ஈடுபடுகிறார்கள். சந்திர கிரகணம் போதும் அப்படியே செய்கிறார்கள், ஆனால் விரதம் இருக்கும் நேரம் 9 மணித்தியாலம் ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 07 "வீடும் சமையல் அறையும்" தொடரும்.
  6. "நிலவுக்குள் நீயடி..!" "நிலவுக்குள் நீயடி நினைவில் நிறைந்தவளே நிம்மதி தேடி உன்னைத் தேடுகிறேன் முழுமதியே வருவாயோ அருகில்?" "கண்ணுக்குள் புதைந்த சித்திரமே மண்ணில் வாழும் இவனுக்கு பண்பு சொல்லாயோ காதல் பொழியாயோ?" "திங்கள் முகத்தில் திலகம் பதிக்க வரவா நான் தித்திக்கும் இளமை காதல் தேடுது கண்ணே மார்பைத் தழுவவா?" "நெஞ்சம் மகிழுதடி மஞ்சம் அழைக்குதடி வஞ்சகம் வேண்டாம் பெண்ணே கொஞ்சம் கருணை என்னிடம் காட்டினால் என்னடி?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. 15/01/2025: "83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother" 83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா! கலாநிதி கந்தையா சுந்தரலிங்கமே! ஒளிரும் விண்மீனே! எங்கள் நேசத்துக்குரிய அத்தியடியின் வாரிசே புகழ் சூழ பெருமையுடன் வாழ்ந்தவரே! யாழ் மத்திய கல்லூரியில் வேர்கள் நாட்டப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வளர்ந்து மலர்ந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஞானப் பழமாகி அறிஞன் வாழ்க்கை ஒளிர்ந்து வீசியதே! இயற்பியல் விரிவுரையாளராக கனிந்த பழமாகி சரியான இடத்திற்கு மாணவர்களை வழிநடத்தி மெல்போர்னில் பெருமையுடன் ஓய்வு பெற்றவரே ஞானம் நிறைந்த வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதே! உங்கள் இரக்கமும் நகைச்சுவையும் ஆறுதல் தர எங்கள் இதயங்களில் பிரகாசமாக இருப்பவரே எண்பத்து மூன்று ஆண்டு அன்பும் மகிழ்ச்சியும் நேர்மையான ஆன்மாவின் நலமான வாழ்வே! உவகை மலர மகிழ்வு பெறுக கொண்டாடுகிறோம் ஒரு சகோதரர், ஒரு வழிகாட்டி, ஒரு கலங்கரை விளக்கை! ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் என்றென்றும் இருக்கட்டும் அன்புள்ள அண்ணா அகவை திருநாள் வாழ்த்துக்கள்! அன்புடன் தம்பி 'கந்தையா தில்லைவிநாயகலிங்கம்' Happy 83rd Birthday, dear brother of mine, Dr. Kandiah Sundarlingam, a star that shines. Born in Athiady, our cherished hometown, Your journey through life brings you renown. From Jaffna Central, your roots were laid, At Colombo’s halls, your brilliance displayed. Durham’s towers saw your wisdom grow, A scholar’s path, a radiant glow. A Physics lecturer of honor and grace, Guiding students to a brighter place. In Melbourne now, your well-earned rest, A life of wisdom, truly blessed. Your kindness and humor, a comforting light, In our family’s hearts, forever bright. Eighty-three years of love and cheer, A life well-lived, a soul sincere. So today we celebrate, with joy and delight, A brother, a mentor, a guiding light. May health and happiness forever stay, Happy Birthday, dear Anna, on this special day! With love and admiration, Thampi 'Kandiah Thillaivinayagalingam'
  8. 'தைப்பொங்கல் 2025' 'புதிய கதிரவன் காலையில் உதிக்க அன்பும் அமைதியும் நெஞ்சில் மலர நெல் விளைந்து செழிப்புத் தர நாடும் நலமும் மகிழ்ந்து கொண்டாட குடும்பம் ஒன்றுகூடி உவகை அடைய தமிழர் திருநாள் பொங்கி இனிக்கட்டும்! 'May this Pongal bring joy anew, Golden harvests and skies so blue. Rice and milk in the pot overflow, Prosperity and love in your life grow. Happy Thaipongal to you and your kin, Let peace and happiness begin!' [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. "இளமொட்டு மனது" யாழ்ப்பாண அரசு காலத்தில் தென்மராட்சியின் நிலப்பரப்பு மிகப் பெரியதாக இருந்தது. அப்பொழுது 'கச்சாய்த் துறைமுகம்' முக்கிய இடத்தை பெற்றிருந்தது. அப்படியான யாழ்ப்பாணத்தின் பசுமையான வயல்களின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கச்சாய் என்ற பண்டைய கிராமத்தில், கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகில் முத்துச்செல்வி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அன்பின் உருவகமாக இருந்ததுடன் அவளுடைய ஒளிரும் கண்கள் ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தை பிரதிபலித்தும், அதை உறுதிப்படுத்துவது போல அவளுடைய புன்னகையும் நடத்தையும் கூட நிறைந்திருந்தது. ஆயினும்கூட, அவளுடைய கண்கொள்ளா வெளிப்புற அழகுக்குக் கீழே ஒரு துளிர்விட்ட பூவைப் போல, இளமைப் பருவத்தின் சிக்கல்களால் கறைபடாத ஒரு மனமும் அவளுக்குள் இருந்தது. பொதுவாக கிராமங்களில் உள்ள பெண்களுக்கு வெளியே செல்லவோ, நான்கு பேரிடம் நான்கு விடயங்களைப் பற்றிப் பேசவோ, பகிர்ந்துகொள்ளவோ சூழல் குறைவு. இளமைக்காலத்தில், கூடுதலாக கிராமபாடசாலையில் படிப்பு, கிராமத்துக்கென இன்னும் மிஞ்சி இருக்கும் விளையாட்டில், பொழுதுபோக்கில் ஈடுபடுதல், பின் வளர்ந்ததும் வீட்டு வேலை, குடும்ப தொழிலுக்கு உதவியாக இருத்தல், அதிகபட்சம் பக்கத்து வீட்டுப் பெண்களுடன் பேசுவது மற்றும் விசேஷங்களுக்குச் வெளியே செல்வது தாண்டி, உரையாடல் வாய்ப்புகள் அவர்களுக்கு, நகர்ப்புற பெண்களுடன் ஒப்பிடும் பொழுது, மிகக் குறைவு என்றே கூறலாம். அதனால் அவர்களிடம் ஒரு அப்பாவித்தனம் குடிகொண்டு இருப்பதுடன், மக்களை எளிதில் நம்ப வைக்கிறது. "இளமொட்டு மனது, இதழ் விரிக்காத கனி, உலகம் அறியாதது, காற்றின் மென்மையிது; உறவுகள் எல்லாம், சின்னஞ்சிறு புன்னகை, அனுபவம் இல்லாமல், நம்பிக்கைதான் சொல்லும்!" முத்துச்செல்வி, கடின உழைப்பாளியும் பணிவு மற்றும் விடாமுயற்சியின் விழுமியங்களை தன்னகத்தே கொண்ட, தனது விதவைத் தாயின் பாதுகாப்புச் சிறகுகளின் கீழ் வளர்ந்தாள். அவளின் குடிசை கடல்நீரேரிக்கு அருகே இருந்தது. கச்சாய் இறங்குதுறையும், அது சார்ந்த‌ பிரதேசத்தையும் தான் “கடல்நீரேரி ” என்கிறார்கள். உள்முகமாக நீண்டிருந்த கடல் நீரேரியில் வரிசையாக மீன்பிடிப் படகுகள் பொதுவாக நிறுத்தப்பட்டிருக்கும். அங்கே நள்ளிரவுக்கு அப்பால் மீன் பிடிக்கச் சென்றவர்கள், அதிகாலையில் கரை வந்து வலைகளில் இருந்து மீன்களை அகற்றுவார்கள். அந்த இறங்குதுறையில் அரைச்சுவர் கொண்ட மீன் ஏலம் விடும் விற்பனைத்தளமும் அமைந்திருக்கும். முத்துச்செல்வி அங்கு பாடசாலைக்கு போகுமுன் ஒன்று ஒன்றரை மணித்தியாலம், பலவேளைகளில் தாயுடன் சேர்ந்து உதவிசெய்வாள். இளமைப் பருவத்தில் முத்துச்செல்வி, மலராத, அனுபவம் அற்ற இளமொட்டு மனதைக் கொண்டு இருந்தபோதிலும், தனது படிப்பை தனித்துவத்துடன், யாழ் கச்சாய் தமிழ் கலவன் பாடசாலையில் முடித்து, அண்மையில் யாழ்ப்பாண நகர அலுவலகத்தில் உதவி அலுவலகக் காப்பாளராக முதல் வேலையைப் பெற்றாள். இது, அவளது தாய்க்கும் அவளுக்கும் பெருமை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. வீட்டின் வாசல் படியில் இருந்தபடி, அவள் அந்த வேலை நியமனக் கடிதத்தை திருப்ப திருப்ப வாசித்தாள். அதேநேரத்தில், அவளுக்குச் சென்ற படகுப் பொங்கல் தினம் ஞாபகம் வந்தது. அன்று தென்மராட்சி-கச்சாய் துறையூர் பகுதியில் கச்சாய் கடற்தொழில் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதில் கச்சாய் கலைமகள் சனசமூக நிலையத்திற்காக அவள் பங்களிப்பு செய்து வெற்றிக்கொடி நாட்டியதை அவள் இன்னும் மறக்கவில்லை. அதுதான் அதை விட்டுப் போவதை எண்ணி மீண்டும் மீண்டும் அந்தக் கடிதத்தை வாசித்தாள். "இதழ்களில் வழிந்தோடும் கனி ரசம் அதில் முத்துக்குளிக்கும் பல் வரிசை கண்டாங்கி சேலை தங்கும் இடை அதில் கரம்பட வாலிபர் வரிசை!" "மேகம் வரைந்த இரு விழிகள் அதில் கவர்ச்சி தரும் மின்னல்கள் தலையில் தொடுத்த மலர் மணம்வீசும் அதில் தேன்குடிக்க வண்டு வலம்வரும்!" அவள் மனதுக்குள் ஒரு போராட்டம், இனி இப்படியான அவளின் கிராம வாழ்க்கை முற்றுப்புள்ளி ஆகிவிடுமோ என்று! மரங்களும், காற்றும் மனதுக்கு இதமாக இருக்கும் கிராமத்தை விட்டுப் போவது சங்கடம் என்றாலும், வீட்டில் இருந்தே கோவிலின் கோபுரம் பார்க்கலாம் என்பதால், அந்த திசை நோக்கி விழுந்து கும்பிட்டுவிட்டு, தாயை கட்டி அணைத்து விடைபெற்று, பேரூந்து நிலையத்துக்கு, முதல் நாள் வேலைக்கு நடை கட்டினாள். பேருந்தின் சாளரமூடாக வெளியே பார்த்தபடி அவள் யாழ்ப்பாண நகரை நோக்கி சென்றாள். அவளின் கிராமத்திலே இருக்கிற கவர்ச்சியை அவளால் இங்கே, நகரத்திலே பார்க்கமுடியவில்லை. செடி கொடியிலே இருந்து, மாடு கன்றும் சரி, மக்களும் சரி, கிராமத்தில் ஒரு விதமான இயற்கை எழிலுடனும் வளத்துடனும் கண்டவளுக்கு, இங்கே ‘டவுனில்’ எல்லாம் பூச்சுத்தான் போல் இருந்தது. எதிலும் இயற்கை எழில் தங்கி இருப்பது போல் அவளுக்குத் தெரியவில்லை. அங்கே வீட்டின் கூடத்தில், கண்ணாடிப் பாத்திரத்தில், காகிதப் பூங்கொத்தைச் செருகி வைத்து அழகுபார்க்கிற காட்சிகளைப் பார்த்தாள். தனக்குள் சிரித்தபடி, அவள் பேருந்தால் இறங்கி யாழ்ப்பாண நகர அலுவலகத்துக்கு நடந்து போனாள். யாழ்ப்பாண நகர அலுவலகத்தில் முத்துச்செல்வியின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவளது அழகும், மென்மையான இயல்பும் அலுவலகத்தின் அன்றைய பேச்சாக இருந்தது. இளம் மணமாகாத ஆடவர்கள் தங்களுக்குள் ஏக்கத்துடன் கூடிய ஒருவித புன்னகையை பரிமாறிக் கொண்டனர், அதே நேரத்தில் திருமணமான ஆண்களின் கண்களும் அவளைக் களவாக மேய்ந்து அதில் ஒரு புத்துணர்ச்சியை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டனர். அவளின் வாழ்க்கை மற்றும் குணாதிசயத்தைப் பற்றி தாங்கள் தாங்களாகவே கற்பனைசெய்து அலுவலக காற்றை அந்த வதந்திகள் மூலம் நிரப்பினர். "மண்ம டந்தையர் தம்முளும் வாசவன் உறையும் விண்ம டந்தையர் தம்முளு நிகரிலா விறல்வேற் கண்ம டந்தைதன் கருங்குழல் அருத்ததிக் கறபிற் கெண்ம டங்குகற் புடையள்இந் திரையினும் எழிலாள்." பூவுலகப் பெண்களினும் வானுலகப் பெண்களினும், தனக்கு ஒப்பில்லாத வெற்றி பொருந்திய வேல் போன்ற கண்களையுடைய முத்துச்செல்வியானவள், குளிர்ந்த கருநிறக் கூந்தலையுடைய அருந்ததியின் கற்பினைக்காட்டிலும் எட்டுமடங்கு கற்பு உடையவள் திருமகளினும் அழகு வாய்ந்தவள் என்று, இப்படி எல்லாம் ஆளுக்கு ஒரு விதமாக கிசுகிசுத்தனர். ஆனால் முத்துச்செல்வி, தன்னைச் சுற்றியிருந்த கிசுகிசுக்களைக் கண்டுகொள்ளாமல், பொருட்படுத்தாமல் இருந்தாள். ஆனால், தன்னை, தன் திறமையை நிரூபிக்கும் ஆர்வத்தில் மட்டுமே ஒரு மாணவனைப் போல அக்கறையுடன் தன் கடமைகளை அங்கு நிறைவேற்ற அணுகினாள். கோப்புகளை ஒழுங்குபடுத்துவது, தேநீர் தயாரிப்பது அல்லது செய்திகளை வழங்குவது என எதுவாக இருந்தாலும், அவள் தனது ஆண் சக ஊழியர்களின் கடைக்கண் பார்வைகளை அலட்சியம் செய்தவாறு, தன் மனம் கலங்காமல் விடாமுயற்சியுடன் வேலை செய்தாள். ஆனால் அவளுடைய அமைதியான, அப்பாவித்தனமான நடத்தையால் தைரியமடைந்த சில இளைஞர்கள், முகத்துதி மற்றும் பரிசுகளால் அவளை வெல்ல முயன்றனர். அதேபோல திருமணமானவர்கள் மிகவும் விவேகமானவர்களாக, "நட்புடன் கூடிய ஆலோசனை" மற்றும் அவளுக்கு தேவையற்ற உதவிகளை, வழிய வழியச் சென்று வழங்குகினர். மூத்த குமாஸ்தாக்களில் ஒருவரான, மிஸ்டர் ராகவன் என்ற நடுத்தர வயது மனிதர், தன்னை "நம்பினால்" பதவி உயர்வுகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்று முத்துச்செல்விக்கு சூசகமாகச் சொல்லி தந்திரமாக அவளின் நட்பை பெற முயன்றான். "பூக்காத விதைகளுக்கு அழுத்தம் தெரியாது அவை பூக்கும் முன் மழையைத் தேடும் தன் இனிமையை மறைக்க முடியாமல் இளம் மொட்டின் இதழ்கள் கூச்சப்படும் சிதறிய கனவுகளுடன் அது காற்றை நம்பும் அதில் அழிவதும் உண்டு வளர்வதும் உண்டு!" ["Unbloomed seeds, unaware of pressure, Seek the rain before they flower; The young bud’s petals, Too shy to hide their sweetness, Trust the wind with scattered dreams; Some may fall, some may thrive!"] ஒருவர்மேல் எடுத்தவுடன் கொள்ளும் முத்துச்செல்வியின் நம்பிக்கையான குணம் அவளை அடிக்கடி சங்கடமான சூழ்நிலைகளில் தள்ளியது. ஒரு மதியம், ஒரு இளைய அதிகாரி, கிஷோர், அவளை மதிய உணவுக்கு வருமாறு அழைத்தான். இது ஒரு நட்பான சைகை என்று அவள் நினைத்து, சந்தேகம் ஒன்றும் இல்லாமல் ஒப்புக்கொண்டாள். ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக சாப்பிடும் பொழுது, அவன் உரையாடலை தனிப்பட்ட விடயங்களுக்கு மாற்ற எத்தனித்தான். அவளுடைய குடும்பம் மற்றும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய அவனது கேள்விகள் அவளைக் கவலையடையச் செய்தன, அவள் விரைவாக அவனிடம் இருந்து விடைபெற்று விலகிச் சென்றுவிட்டாள். நாட்கள் வாரங்களாக மாற, முத்துச்செல்வி அலுவலகத்தில் ஒருவித பதற்றம் நிலவுவதை கவனிக்க ஆரம்பித்தாள். பெண்கள் அவளைப் பற்றி கிசுகிசுத்தார்கள், அங்கு ஆண் அதிகாரிகள் அவள் மேல் கொண்ட தனிப்பட்ட கவனத்தைப் பார்த்து பொறாமை கொண்டனர், அதே நேரத்தில், ஆண்கள் அவளின் உலகம் அறியாத இளமொட்டு மனதைத் தாங்கள் எண்ணங்களுக்கு சாதகமாக்கும் முயற்சியில் தைரியமாக பலவழிகளில் ஈடுபட்டனர். அவளின் அழகு அவர்களின் கண்களிலும் இதயத்திலும் ஏதேதோ அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தது. "வஞ்சிக்கொடி போல இடை அஞ்சத்தகு மாறுளது நஞ்சுக்கிணையோ, அலது அம்புக்கிணையோ, உலவு கெண்டைக்கிணையோ கரிய வண்டுக்கிணையோ, விழிகள் மங்கைக்கிணை ஏதுலகில் அங்கைக்கிணையோ மலரும்?" 'இத்தனை மெல்லிய இடையா’ என்று அவர்களுக்குள் ஒரு அச்சம் வாட்டுவதை அவர்கள், அவளைப் பார்க்கும் விதத்தில் தெரிந்தது. அது மட்டுமா, கண்களுக்கு உவமையாக என்னவெல்லாம் கற்பனையில் வருமோ அத்தனையையும் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி ஒப்பிட்டுப் பார்த்தார்கள். பின்னர், உனக்கு இணையாக எதையும் சொல்ல முடியாது’ என்று களைத்துப்போய் அவளைப் பார்த்து முழித்தார்கள். அதனால் அவள், தனது அப்பாவித்தனத்திற்கும் உலகின் சிக்கல்கள் பற்றிய அவளது இன்றைய வளர்ந்து வரும் விழிப்புணர்விற்கும் இடையில் தடுமாறி, அலுவலகத்திற்கு புறம்பான விடயங்களில், மற்றவர்கள் மீது தனது ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டாள். என்றாலும் அவளது ஒரே ஆறுதலாக, நம்பிக்கை கொண்டவராக, அண்மையில் அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இளம் கம்பீரமான அதிகாரி திரு. அரவிந்த் இருந்தான். மற்றவர்களைப் போலல்லாமல் அரவிந்தன் அவளை மரியாதையுடனும், அவளின் தொழிலுக்கு ஏற்ற கண்ணியமான நடத்தையுடனும் நடத்தினான். அவனது கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் கனிவான நடத்தை, அவனை மற்றவர்களிடம் இருந்து அவளுக்கு வேறுபடுத்தியது. ஒரு நாள், வழக்கமான அலுவலக விடயங்கள் பற்றிய ஒரு சந்திப்பின் போது, முத்துச்செல்வி தன் சக ஊழியர்களுக்கு நடுவே நின்று கொண்டிருந்தபோது அவளின் அசௌகரியத்தை [அமைதியின்மையை ] அரவிந்தன் கவனித்தான். பின்னர், அவன் அவளைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மெதுவாக கேட்டான். அப்பொழுது, "பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல் தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம், கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்" தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியது போன்று, அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே ஓர் உருவமாக, அவள் தனக்கு முன் தோன்றினாள் போல அவனுக்கு இருந்தது. அவனுடைய உண்மையான அக்கறை அவளைத் தொட்டது, முதல் முறையாக, அவள் தான் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி அவனிடம் சொன்னாள். அரவிந்தன் அவள் சொல்லுவதை எல்லாம் கவனமாகக் கேட்டான். “உன் தகுதியினால் தான் நீ இங்கு வந்திருக்கிறாய், முத்துச்செல்வி,” என்றான். "உங்களை வேறுவிதமாக உணர எவரையும் அனுமதிக்காதீர்கள். யாராவது எல்லை மீறினால், உங்களுக்காக எழுந்து நிற்க உங்களுக்கு என்றும் முழு உரிமை உண்டு. நினைவில் கொள்ளுங்கள், மற்றும் நான் உங்களுக்கு ஆதரவாக என்றும் இருப்பேன்." என்றான். "மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ, ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான்." கண்ணுக்கு இடக்கூட்டிய மையோ; பச்சைநிற ஒளிக்கல்லாகிய மரகதமோ; கரையின்கண் அலைகளால் மறிக்கின்றகடலோ; பெய்யும் கார் மேகமோ; ஐயோ தன்உருவம் என்று சொல்லப்படுவதாகிய ஒப்பற்ற அழியாத அழகினை உடையன் இவன் என்றாள் தன் மனதுக்குள் முத்துச்செல்வி. அவனது ஆதரவால் உற்சாகமடைந்த முத்துச்செல்வி தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளத் தொடங்கினாள். தேவையற்ற அழைப்புகளை பணிவுடன் ஆனால் உறுதியாக நிராகரிக்கக் கற்றுக்கொண்டாள், தகாத கருத்துக்களைப் புறக்கணித்தாள், மேலும் புது உறுதியுடன் தனது பணியில் கவனம் செலுத்தினாள். காலப்போக்கில் முத்துச்செல்வியும் அரவிந்தனும் அன்பான நட்புறவை வளர்த்துக் கொண்டனர். அலுவலக சவால்கள் முதல் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம் மற்றும் மரபுகள் வரையிலான அவர்களது பகிரப்பட்ட உரையாடல்கள் அவர்களை மேலும் மேலும் நெருக்கமாக்கியது. அரவிந்தன் அவளது எளிமை மற்றும் நெகிழ்ச்சித்தன்மையைப் போற்றினான், அதே நேரத்தில் அவனுடைய நேர்மை மற்றும் அறிவால் அவள் ஈர்க்கப்பட்டாள். அவர்களின் வளர்ந்து வரும் இருவருக்கும் இடையிலான பிணைப்பு அலுவலக மற்ற ஊழியர்களால் கவனிக்கப்படாமல் போகவில்லை. வதந்திகள் பரவின, சிலர் அதை ஒரு காதல் உறவாக ஊகித்தார்கள். ஆனால் முத்துச்செல்வி அவை ஒன்றையும் பொருட்படுத்தவில்லை. அவள் இப்ப முன்புபோல இன்னும் இளமொட்டு மனத்தைக் கொண்டவள் அல்ல. அவள் பணியிடத்தின் சிக்கல்களை மட்டும் அல்ல, தன்னையும் வழிநடத்தும் வலிமையைக் கொண்ட மலர்ந்த மனதைக் கொண்டவளாக நிமிர்ந்து நின்றாள். "புயல்கள் வீசலாம் கடும்மழை பெய்யலாம் காற்றின் வஞ்சகம் வலிமையைக் கொடுக்கும்! மொட்டு எதிரித்து பூவாக மலரும் இதழ்கள் விரிந்து வாசனை வீசும்!" "வழிகாட்டும் கையில் வலிமையைக் கண்டு அனுபவம் முதிர்ந்து உலகை அறியும்! வெள்ளந்தியில் இருந்து முதிர்ச்சி அடையும் இளமொட்டு மனது முழுதாக மலரும்!" மாதங்கள் கடந்து செல்ல, முத்துச்செல்வி தன்னம்பிக்கையான இளம் பெண்ணாக மலர்ந்தாள், தன்னைச் சுற்றியிருந்த சவால்களுக்கு பயப்படாமல் துணிந்து நின்றாள். என்றாலும் அவளுடைய வாழ்க்கைப் பயணம் போராட்டங்கள் இல்லாமல் இல்லை, ஆனால் அவளுடைய "இளம் மொட்டு மனம்" வளர்ந்தது, வாழ்க்கை அவளுக்கு கற்பித்த பாடங்களால் அனுபவம் பெற்றது. அரவிந்தனுடனான அவளது உறவு ஒரு மரியாதையான அலுவலக தொழில் ரீதியான நட்பாகவே முதலில் இருந்தாலும் அது பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டு இருந்தாலும், அது நாளடைவில் காதல் பிணைப்பாக மாறி, அது ஒரு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக முத்துசெல்வியை வழிகாட்டி, அவளின் வாழ்வையும் மலரவைத்தது. "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 05 கண் வெட்டசைவு: மனித உடலுறுப்புகளின் அசைவினைக் கொண்ட நம்பிக்கைகலில் குறிப்பாக பெண்களின் இடது கண் துடிப்பது முக்கியமானது. பொதுவாகவே இந்தியாவில் இடக்கண் துடித்தால் நல்லதென்றும் வலதுகண் துடித்தால் துர்நிமித்தம் [அபசகுனம்] என்றும் கூறுவார்கள். இதே போலவே சீனா, ஹவாய், ஆப்ரிக்கா போன்ற இடங்களிலும் இதே போன்ற நம்பிக்கை நிலவுகிறது. "நுண்ணேர் புருவத்த கண்ணு மாடும் மயிர்வார் முன்கை வளையுஞ் 1செறூஉம் களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி எழுதரு மழையிற் குழுமும் பெருங்க னாடன் வருங்கொ லன்னாய்" [ஐங்குறுநூறு218.] நுண்ணிய அழகிய புருவத்தை யுடைய இடக்கண்ணை துடிக்கும் பெண்டிர்க்கு, இடக்கண் துடித்தல் நன்னிமித்தம் [Omens – நிமித்தங்கள்] என இங்கு கூறப்படுகிறது பெண்களின் வலது கண் துடிப்பதால் தீமை விளையும் என்பதனையும் இடது கண் துடிப்பதால் நன்மை விளையும் என்பதனையும் இளங்கோவடிகள் இந்திர விழாவின் போது கடலாடச் செல்லும் கோவலன், மாதவி இருவரும் பிரியப் போவதையும் கோவலன் கண்ணகியிடம் திரும்புகிறான் என்பதையும் மிக அழகான ஒரு முன் காட்சியால் உணர்த்துகின்றார். "கண்ணகி கருங்கணும், மாதவி செங்கணும் உள்நிறை கரந்து, அகத்து ஒளித்து, நீர் உகுத்தன எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன" (சிலம்பு.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை, 238-240) என்ற வரிகளில் பிரிந்திருந்த கண்ணகியின் கண்களும் கூடியிருந்த மாதவியின் கண்களும் கண்ணீர் சிந்தின. ஆனால் துடிக்கும் போது கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடித்தன என்று கூறுகின்றார். இக்கண் துடிப்புகள் முறையே நன்மை, தீமை நேரப் போகின்றன எனக் குறிக்கும் சகுனங்கள் என்பது நம்பிக்கை. கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதை, இவ்வாறு கூற வந்த கருத்தைக் குறிப்பினால் உணர்த்தியுள்ளார் இளங்கோவடிகள். கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்றது. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர். இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு இலக்கியத்திலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன. அசோகவனத்தில் சிறையிருந்த சீதை, தன்னிடம் அன்பு செலுத்தும் திரிசடையிடம், எனக்குக் கண்புருவம் முதலியன இடப்பக்கம் துடிக்கின்றன. இத்துடிப்பால் வருவது நன்மையா? தீமையா? எனக் கேட்டதாகக் குறிப்பிடுகின்றனர். இதனை, ”பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்முதல் வலந்துடிக் கின்றில வருவது ஓர்கிலேன்” என்ற பாடல் மூலம் அறியலாம். போர்க்களத்தில் தன் மகன் அபிமன்யூ இறந்த போது அருச்சுனன் கண்ணும் தோளும் இடப்பக்கம் துடித்தன. அதனால் அவன் அச்சமுற்றுக் கண்ணனைப் பார்த்தான். அவன் கண்களும் கலங்கியிருந்தன. இன்றைய போர்க்களத்தில் தன் தமையனோ, மகனோ இறந்திருக்கக் கூடும் என்பதை இடப்புறம் துடித்ததால் உணர்ந்து கொண்டவன் கண்ணனிடம் யார் இறந்திருப்பார்? எனக் கதறிக் கேட்கின்றான் என்பதை, ”என்கண்ணும் தோளும் மார்பும் இடனுறத் துடிக்கை மாறா நின்கணும் அருவி சோர நின்றனை இன்று போரில் புன்கண் உற்றவர்கள் மற்றென் துணைவரோ புதல்வர் தாமோ” இப்பாடலால் உணர முடிகிறது உள்ளங்கை அரிப்பு: சாப்பிடும்போது தும்மினால் யாரோ உங்களை நினைக்கிறார்கள் என்று நாம் சொல்வது போல, மூக்கு அரித்தால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்பது அமெரிக்கர்களின் வழக்கமாக இருக்கிறது. அதே போல உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று இந்தியர்கள் சொல்வது போல அமெரிக்கர்களும் சொல்கிறார்கள். உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று ஊரில் சொல்வார்கள். வலது கை அரித்தால் பணம் வரும் - இடது அரித்தால் செலவாகும். பெண்கள் விடயத்துல இதை தலைகீழாகும். ஒன்று மட்டும் உண்மை. உள்ளங்கை அரித்தால் கண்டிப்பாய் பணம் வரும் தோல் நிபுணருக்கு [ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்[skin specialist] டாக்டருக்கு]!" ஆனால் தமிழ் இலக்கியங்களில் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை இது "சாக்சன்கள்" ["Saxons"] அரிப்புக்கு உட்பட்ட தோலை வெள்ளியால் ["silver"] தேய்க்கும் போது குணமாகும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்ததாக இருக்கலாம்? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 06: "கிரகணம் [வானகோளங்களின் ஒளிமறைப்பு] & வீடும் சமையல் அறையும் தொடரும்
  11. "பொன்னந்தி மாலையிலே" "பொன்னந்தி மாலையிலே தனியே நிற்பவளே அன்ன நடையில் மனதைக் கவர்பவளே சின்ன இடையில் அழகு காட்டுபவளே அன்பு கொண்டேன் அருகில் வருவாயோ?" "முந்தானை காற்றில் மேலே பறக்குதே சிந்தனை தடுமாறி ஆசை தூண்டுதே எந்தன் இதயத்தை தொட்ட தேவதையே இந்திர மண்டலத்து ஊர்வசி நீயோ?" "வண்ணக் கோலத்தில் மயக்கம் தருபவளே மண்ணின் வாசனையை பண்பில் சொல்பவளே எண்ணம் எல்லாம் உன்னையே நாடுதே கண்ணே கண்மணியே பூச்சூட வரலாமா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils! / பகுதி / Part 04 [In English & Tamil] தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக சங்க காலத்தில் எழுதப் பட்ட எட்டுத் தொகை / பத்துப் பாட்டுகளை இனி பார்ப்போம். இங்கு பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன!ஆனால் அது தான் ஆண்டின் தொடக்கம் என எங்கும் குறிக்கப் படவில்லை. "மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன் இன்தீம் பால்பயங் கொண்மார் கன்றுவிட்டு .............................. தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோள் குறுமகள் அல்லது மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே" [நற்றிணை 80] தொழுவத்துள்ள அகன்ற தலையை யுடைய கரிய எருமையின் மிக இனிய பால் நிரம்பக் கறந்து கொள்ளும் பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்து நிறுத்தி விட்டு; .......... என்னைப் பெறுமாறு தான் எடுத்துக் கொண்ட நோன்பின் பயனாகத் தைத் திங்களிலே தண்ணிய நீரில் ஆடுகின்ற பெரிய தோளையுடைய அவ்விள மகளே யான் உற்ற நோயை நீக்கும் மருந்தாயமைந்துள்ளாள்.அவளல்லது பிறிதொரு மருந்து இல்லைகாண். "வேம்பின் பைங்காய் என்தோழி தரினே, தேம்பூங் கட்டி என்றனிர் ; இனியே, பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய ! அற்றால் அன்பின் பாலே !" (குறுந்தொகை - 196 ) தலைவனே! முன்பு (திருமணத்துக்கு முந்திய களவுக் காதலின் போது) என் தலைவி வேம்பின் காயை உனக்குத் தந்தாள். அதனை அழகிய இனிக்கும் வெல்லக் கட்டி என்று சொன்னாய். இப்போதோ தை மாதத்தில் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையில் உள்ள குளிர்ச் சுனையின் நீரை அவள் தருகிறாள். ‘அது வெம்மையாய் உள்ளது - உவர்ப்பாய் உள்ளது’ என்று கூறுகிறாய். நின் அன்பின் தன்மை இப்படிப் பட்டதாகி விட்டதே ! மந்தி ஒன்று தினைக் கதிரை கவர்ந்து சென்று தன் கடுவன் குரங்குடன் இருந்து உண்டது. அதைப் பார்த்த சங்கப் புலவருக்கு அக் காட்சி பனியால் நனைந்த முதுகோடு நோன்பு நோற்கும் பெண்கள் தைமாத விரத உணவை உண்ண இருந்தது போல் தோன்றியது. அதனை; “வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தைஊண் இருக்கையின்.........” - (நற்றிணை: 22: 6 - 7) என நற்றிணை வரியில் படம் பிடித்துள்ளார், பெண்கள் உலக நன்மைக்காக நோன்பிருந்து நீராடியது போல, நல்ல கணவன் தமக்குக் கிடைக்க வேண்டுமென தைத்திங்களில் நீராடி வீடு வீடாகச் சென்று பாடி தாம் பெற்றதை பலருக்கும் உவந்து கொடுத்தை “வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையில் நீராடி தவம் தலைப் படுவையோ” கலித்தொகை (59:12-13) எனவும் “பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடி நீ எய்திய பலர்க்கீந்த பயன் பயக்கிற்பதோ” கலித்தொகை (59;16-17) எனவும், கலித்தொகை சொல்லும். "செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள் கண்ணிற் காணின் எனா குவள்கொல் நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து உண்ணுநின் பரத்தை மார்பே." [ஐங்குறுநூறு 84] 'உன் மனைவி உன்மேல் சொல்லில் அடங்காத கோபத்திலிருக்கிறாள். ஏனென்றால், தைமாத நோன்பிருக்கும் பெண்கள் பலரும் ஒரே குளத்தி்ல் தோய்ந்து நீராடுவார்கள் அல்லவா?அப்படி உன்னுடைய மார்பு, பல பெண்கள் தோய்ந்து, துய்க்கும் கயமாக (குளமாக) இருக்கிறது என்பது உன் மனைவிக்குத் தெரிந்திருக்கிறது அல்லவா! "தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண! ........................................ தைஇத் திங்கள் தண்கயம் போல் கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர் ........................................ நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!" [புறநானூறு. 70:6-7] தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண! ...... கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது ..... பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்! ‘தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி’ என்கிறது பரிபாடல்-11:91-92. ஆகவே தமிழ் மரபில் & சங்க இலக்கியங்களில் ..... மிகச் சிறப்பாக / மிக அதிகமாகப் பேசப்படும் / போற்றப்படும் மாதம் = தை! அல்லது "தைஇத் திங்கள்". அது மட்டும் அல்ல தை-ன்னாலே .... மதம் கலவாமல் .... தமிழ் மட்டும் தனித்து தெரியும்! "அருவியில் தவம் முடித்து இருவராய் சேர்த்தது தையே! ஊருக்கு பொங்கல் படைத்து பெருவிழா தந்தது தையே! முருகிற்கு அழகு சேர்த்து ஒருபூசம் தந்தது தையே! பெருமை பற்பல படைத்து அருமை மாதம் தையே!" ஆம் தை மாதம்:ஒரு சிறப்பான மாதம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ----------முற்றிற்று---------- Thai is a special month for Tamils! / Part 04 Thousands of years ago, urbanisation and mercantile activity along the western and eastern coast of what is today Kerala and Tamil Nadu led to the development of four large Tamil political states (Chera, Chola, Pandya and Pallavas) and a number of smaller states warring amongst themselves for dominance. Between the 7th century BC and the 3rd century AD, Tamil people also produced native literature that came to be called Sangam literature. In many of this songs / poems, it says about the "month of Thai" as well as the bathing in the "month of Thai", many times. Some of these are given below : "There is no other medicine for this disease that distresses me, except the wide-shouldered young girl who bathes in a cold pond in the month of Thai, --Natrinai:80 "Before, if my friend gave you a bitter unripe neem fruit, you would say that it was a sweet sugar cube. Now, even if she gives you clear, cold water from Pari’s Parampu Mountain, chilled by Thai month’s cold, you will say that it is warm and brackish. Sir, such is the nature of your love. " -- Kurunthokai:196 "a female monkey, along with her crude mate steals huge clusters of mature millet spikes, crushes them with her palms, collects the grain and stuffs her cheeks, curving them along with her jaws, and, as rain pours down, they with their wet bodies appear like austere ritualists who eat food with their hands." --Natrinai:22 "wearing lots of jewels, you play with your sharp toothed girlfriends. Will your thai month ritual bath help you now?" -Kaliththokai 59;12-13 "Will you benefit from the playful rituals that you did, and the songs that you sang in strangers’ houses, and giving away charity gifts?" -Kaliththokai 59;16-17 "women with fragrant flowers and five-part braids, playing on your chest, and enjoying it like it were Thai month’s cool pool, where many women play." --Ainkurunuru 84 "Killi Valavan is the lord of a fine country with abundant rice and water. His huge city is filled with food and there is constant abundance like a Thai month pond whose level never goes down despite taking. " --Purananuru 70 "Are their penances, done with ritual fire, the reason for the young women to bathe with their mothers in the month of Thai? Tell me, O Vaiyai River!" --Paripadal 11:91-92. Paavi nonbu is an important tradition in the lives of Tamils from times of antiquity. The memory of it exists till today, thanks to AndaaL who immortalized that memory in her composition, Thiruppavai. The most detailed account of this nonbu and the nonbu done in the month of thai (known as thai- neeraadal) are found in paripadal & This help us in knowing the culture and tradition of Tamils who lived 2000 years ago.as below : "On the day of Full moon in Maargazhi [மார்கழி], young unmarried girls, wearing pretty bangles, accompanied by their mothers go to the Vaigai & they pray “May the wide land not become hot!” as they bathe with their mothers who know traditions, who show them how to perform the rituals. Accordingly, the girls take bath in the cold waters of the river which is brushed by a gentle breeze. The girls make merry in the waters in the month of Thai with "poi aadal" [பொய்யாடல் / innocent dance]. ie The moves done by the girls are very innocent, for which one can not attribute any idea of love or sexual desire in them. Probably the dances were on love themes but the moves by the girls seemed to suggest that they are not love-struck. That is why the dance was called "poi aadal". After the dances on the banks and in the waters as they take bath, The girls join their mothers and follow the instructions to do the prayer. when chilly winds blow along the sandy river shores, they dry their clothing in the ritual fire. That is "Month of Thai" is the only month which is mentioned so many times in the ancient Tamil literature & it is the most favourite month among the ancient Tamils.& further, it was the immediate month following the harvesting month of Maarkazhi, and as a matter of thanksgiving to the Sun for providing rich harvest to farmers it was celebrated as "Thamilar Thirunaal" or the Prosperity Day of the Tamils. As such Pongal is generally celebrated without any affinity to any religion as a secular festivals. Hence Month of Thai is a special month for Tamils!. Now I am giving below a short Tamil poem written by me regarding month of Thai: "அருவியில் தவம் முடித்து இருவராய் சேர்த்தது தையே! ஊருக்கு பொங்கல் படைத்து பெருவிழா தந்தது தையே! முருகிற்கு அழகு சேர்த்து ஒருபூசம் தந்தது தையே! பெருமை பற்பல படைத்து அருமை மாதம் தையே!" Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  13. "தேடும் விழிகளில்" [கசல் கவிதை] "தேடும் விழிகளில் கதைகள் இருக்கும் சொல்லப்படாத கனவுகள் ஆடும்!" "மௌன பிரார்த்தனையில் ஏக்கம் விரிந்து காதல் கலந்து மோதல் வெடித்து பின்னிப் பிணைந்து கண்களின் கண்ணீர் ஏதேதோ சொல்லும்!" "சோகத்தின் திரைகள் வழியாக மகிழ்ச்சியின் முகமூடி வழியாக மனம் பறந்து தேடும் கண்களில் நம்பிக்கை ஒளிர்விடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 04 ஒரு மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன என முகவுரையில் பார்த்தோம். அது மட்டும் அல்ல இந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுவதால் தங்கள் வாழ்வு வளமும், நலமும் பெறும் என்றும் மக்கள் நம்புகின்றனர். நம்பிக்கைகள் பொதுவாக அனைத்து மக்களிடையும் எல்லா வாழ்க்கை நிலைகளிலும் இருந்து வருகின்றன. நம்பு என்பதற்கு ‘விருப்பம், ஆவல், ஆசை’ என்று அகராதிகள் பொருள் தருகின்றன. மனித உடலுறுப்புகளின் அசைவினைக் கொண்டும் அல்லது அதில் ஏற்படும் நோய் குணங்களைக் கொண்டும் சில நம்பிக்கைகள் அக்கால மக்களிடையே இருந்து வந்துள்ளன. அவைகளில் சிலவற்றை இந்த பகுதியில் பார்ப்போம். தும்மல்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவள்ளுவர் காலத்திலேயே, " எவராவது நம்மை நினைத்தால் நாம் தும்முவோம்" என நம்பினார்கள். இப்படி தும்மலை சகுனமாக பார்ப்பது இன்னமும் இருந்து வருகிறது. யாராவது வீட்டில் தும்மினால் "ஆயுள் நூறு" என்று வீட்டில் சொல்வார்கள். அன்றைய நாளில் தும்முபவர்களை வாழ்த்துவது போலவே, இன்றும் மேலை நாடுகளில் எவராவது தும்மினால் அருகிலிருப்பவர் "bless you" என்று சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது. தும்மலின் போது "ஆயிசு நூறு" / "தீர்க்க ஆயிசு" எனக் கூறுவது ஏனெனில் நம் இதயமானது ஒரு மில்லி செகன்ட் நின்று துடிக்கிறதாம். [1] "தும்முகையில் வாழ்த்துதல்", [2] "தும்மலுக்குக் காரணம் பிறர் நம்மை நினைத்தல்" என்ற இரு செய்திகளையும் சில குறள் தெளிவாகத் தெரிவிக்கிறது: 1312 - "ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து." நான் அவரோடு ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்தி நான் அவரோடு பேசுவேன் என்று நினைத்து. 1317 - "வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று." நான் தும்மினேன்; அவள் வழக்கப்படி என்னை வாழ்த்தினாள். ஆனால் உடனே என்ன சந்தேகம் வந்ததோ அவளுக்கு, எவள் உம்மை நினத்தமையால் இப்ப தும்மினீர் எனக் கேட்டு அழத் தொடங்கிவிட்டாள். தும்மல் என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. மூக்கில் ஏதேனும் வெளிப்பொருட்கள் உள்ளே நுழைந்தால் தும்மல் வரும். ஒவ்வாமை [Allergy / அலர்ஜி] காரணமாகவும், தீநுண்மி அல்லது நுண்நஞ்சு அல்லது வைரஸ் (virus) போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டாலும், சைனஸ் [சைனஸ் என்பது நோயின் பெயர் அல்ல, அது முகத்தின் மேல்பகுதியில் நான்கு ஜோடி காற்று பைகள் இருக்கும். அதாவது மூக்கின் 2 பக்கவாட்டிலும், கண்களுக்கு மேலே 2 ஜோடியாகவும், ஆக மொத்தம் 4 ஜோடி காற்று பைகள் காணப்படும். அந்த பைகளின் பெயர் சைனஸ் (Sinu) என்று அழைக்கப்படுகின்றது. நம் எல்லாருக்கும் இந்த சைனஸ் என்ற காற்று பைகள் கட்டாயம் இருக்கும். சைனஸ் என்ற பகுதி இல்லை என்றால், கழுத்து வலி அதிகமாகிவிடும். ஏனெனில் கழுத்தின் பின்புறம் மெல்லிய எலும்பு, தலையின் முழு எடையையும், தாங்குவதால் கழுத்து வலி வராமல் தடுக்க, முகத்தில் உள்ள 4 காற்று பைகள் மிக முக்கிய காரணமாயிருக்கின்றது.] பிரச்சினையாலும் தும்மல் வரும். அவ்வளவுதான். தும்மல் போடும் போது நமது உடற்செயல்கள் அனைத்தும் நின்று விடுகின்றன. இதயம் கூட அந்த கணப்பொழுதில் நின்று விடுகிறதாம். அதனால் தான் "வாழ்க பல்லாண்டு!' அல்லது "நூறு வயது வாழ்க"' என்று கூறுவர் போலும். இப்படியான நம்பிக்கைகள் உலகம் முழுவதும் உண்டு. விக்கல் : விக்கல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள்? என்பார்கள். தும்மலை பற்றிய நம்பிக்கைகளை கூறிய திருக்குறள், விக்கலை பற்றிய எந்த நம்பிக்கைகளையும் கூறவில்லை. அதே போல கலித்தொகை சங்க பாடலிலும் அப்படி ஒன்றையும் கூறவில்லை. இரண்டிலும் விக்கலை அறிவு பூர்வமாக எடுத்து கூறியுள்ளார்கள். "நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்" (குறள் 335) உயர் பிரிவதற்கு முன்னால் கடைசி விக்கல் வருமாம். அந்த விக்கல் வருவதற்குள், செய்யவேண்டிய அறச்செயல்களையும், நன்றி செலுத்த வேண்டியவைகளையும் செய்து முடித்து விட வேண்டும், என்கிறது இக்குறள். கலித்தொகை - குறிஞ்சிக் கலி 51 ".. மேல் ஓர் நாள் அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே, உண்ணு நீர் வேட்டேன்’ என வந்தாற்கு, அன்னை ‘அடர் பொற் சிரகத்தாவாக்கி, சுடர் இழாய் உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள், என யானும் தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு ‘அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!’ என்றேனோ அன்னை அலறிப் படர்தர, தன்னை யான் உண்ணு நீர் விக்கினான் என்றேனோ, அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்." ஒருநாள் நானும் அம்மாவும் தனியாக இருக்கும்போது "தாகமாக இருக்கிறது.. .தாகம் தணிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்" என்றான். அம்மா ‘அழகான அணிகலன்களை அணிந்தவளே, தங்கத்தால் ஆன பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துப்போய்க் கொடு’ என்றாள். விவரம் புரியாமல் நானும் போனேன். அந்தப் பயல் தண்ணீரைப் பெறுவது போல சட்டென்று வளையல் அணிந்த என் முன் கையைப் பிடித்து இழுத்தான். அதிர்ச்சியடைந்த நான் "அம்மா! இங்க வந்து பாரும்மா.. இவன் செயலை" என்று அலறினேன். அம்மாவும் பதறிப்போய் ஓடி வந்தாள். "தண்ணீர் குடிக்கும்போது இவனுக்கு விக்கல் வந்துருச்சும்மா, அதான் உங்களைக் கூப்பிட்டேன்" என்று பொய் சொன்னேன். அம்மா நம்பிவிட்டாள். இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா? என்று கேட்டுக்கொண்டே விக்கல நீக்க, அவனின் தலையையும் முதுகையும் தடவி தட்டிக்கொடுத்தாள். அப்போது அந்தத் திருட்டுப்பயல் கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் பார்த்துப் ஒரு புன்னகை செய்தான்! அது என் மனதைக் கொள்ளையடித்தன.!! விக்கல், யாரோ தம்மை நினைப்பதால் வருகிறது என்று முதலில் நம் முன்னோர்கள் கூறியதை, இன்றும் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் விக்கலானது (hiccup அல்லது hiccough), ஓர் அனிச்சை செயல் [reflex action] ஆகும். இது ஒரு நிமிடத்தில் உதரவிதானம் (diaphragm / வயிற்றுக்கும் மார்புக்கும் இடையே உள்ள குறுக்குச் சவ்வு; நுரையீரல் சுருங்கி விரியக் காரணமாய் அமைந்து, மூச்சு இழுத்துவிட உதவும் தசை) பலமுறை சுருங்குவதால் உண்டாகிறது. மனிதர்களில் திடீரென நுரையீரலுக்குள் காற்று புகும் போது குரல் வளை மூடி (எபிகுளோடிஸ் / Epiglottis) மூடிக் கொள்வதால் “ஹக்“ என்ற சத்தம் உண்டாகிறது. இந்த ஒருவித விநோத ஒலி தான் விக்கல். இந்த விக்கல் வருவது இயல்பு. அவ்வளவுதான்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 05 "கண் வெட்டசைவு & உள்ளங்கை அரித்தல்" தொடரும்
  15. "ராசாத்தி மனசுல" காதல் !! ஏழை பணக்காரன் , சாதி மதம் , நிறம் குணம் இவை எதையும் பார்த்து வருவது அல்ல, சொல்லமுடியாத இன்பத்தையும் தாங்க முடியாத துன்பத்தையும் கொடுப்பது தான் காதல் !! என் மனதில் அவள் மேல் காதல் இன்னும் இருக்கிறது. ஆனால் அவள், ராசாத்தி மனசுல ? கீதையில் கிருஷ்ணன் चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ் ... (அத்யாயம் 4 - ஸ்லோகம் 13) குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது என்கிறார். கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்ற எண்ணம் ஆத்திக வாதிகளிடம் நிலைத்துவிட்டது. அது இன்று குறைந்து கொண்டு வந்தாலும், அது முற்றிலும் மாறியதாக இல்லை என்பதே உண்மை. يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏‏ 49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன் என்கிறது குரான் வசனம். குரான் வசனங்களில் இன அமைப்பைக் குறிப்பிடும் 'உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்' என்பதற்கும், பகவத் கீதைக் குறிப்பிடும் 'நான்கு வருணமாக அமைத்தோம்' என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. இனி நான் இதைப்பற்றி அலசுவதிலோ அல்லது தொல்காப்பியம் என்ன கூறுகிறது என்று பார்பதற்கோ இனி எனக்கு நேரம் இல்லை. நான் மரணத்தின் இறுதியில் இருக்கிறேன். அர்ச்சுனன் எய்த அம்புகள் கர்ணனுடைய இடையெங்கும் பாய்ந்து குருதியொழுகச் செய்து கொண்டிருந்தன. கர்ணனுடைய இதயமே அடங்கி ஒடுங்கி உயிர்ப் பிரிவுக்குத் தயாராகிவிட்டது. அப்பொழுது, கண்ணன் தேரிலிருந்து இறங்கி ஒரு வயதான கிழவனைப் போல் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டு கர்ணன் இருந்த இடத்திற்குச் சென்றான். "நீ எனக்குச் செய்ய முடிந்த உதவியை இப்போதே செய்தால் நல்லது!” என்று மாய வேதியனாகிய கண்ணன் நடிப்புக்காக வரவழைத்துக் கொண்ட கிழட்டுக் குரலில் கர்ணனை வேண்டிக் கொண்டான். ஒரு பாவமுமறியாத கர்ணன் அந்த வேதியனுக்காக மனம் இரங்கி "இதோ என்னுடைய புண்ணியம் முழுவதையும் பெற்றுக் கொள்ளும்” என்று கூறிக் கொண்டு கொடுக்க, அதை வாங்கி கர்ணனின் உயிரைப் பறித்தான். அந்த நிலையில் தான் நான் இப்ப. என்னைச் சுற்றி ஒரு கூட்டம் பொல்லுகளுடனும் கத்திகளுடனும் நிற்கிறது. அது ராசாத்தியின் தந்தை சுப்பிரமணியத்தின் ஆட்கள். நான் அவர்கள் ஏற்கனவே எழுதிவைத்த ' நான் உன்னை உண்மையில் விரும்பவில்லை, காதலை விட காமமே எனக்குள். நீ நல்லவள். உன்னை கெடுக்க நான் விரும்பவில்லை. என்னை மறந்து, நீ யாரையாவது திருமணம் செய்து மகிழ்வாக வாழு!" என்ற கடிதத்தில் கையொப்பம் வாங்க. ஆனால் நான் மறுத்ததால் தான், இன்னும் கொஞ்ச நேரத்தால் மரணிக்கப் போகிறேன்! ஆனால் ஒரு வேறுபாடு, கர்ணன் கொடை மேல் கொண்ட காதலால் இறந்தான், நான் ராசாத்தி கொண்ட காதலால் இறக்கப்போகிறேன். நான் நன்றாகப் படித்தவன், நல்ல உயர் பதவியில் இருக்கிறேன். உலகம், சமுதாயம் பற்றி ஆர்வம் உள்ளவன். ஆனால் நாலாவது வர்ணம் என்று சிலரால், பலரால் கூறப்படும் ஒரு கட்டமைப்புக்குள் பிறந்தவன். என் அப்பா ஒரு நேர்மையான கூலித்தொழிலாளி. என்றுமே சமுதாய நீதிக்கு எதிராக தன் வாழ்க்கையை அமைக்காதவர். அதைப் பார்த்து அதன் வழியில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பவன். நான் கொழும்பில் இலங்கை கடற்தொழில் அமைச்சின் கீழ், இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில், எந்திரவியல் விரிவுரையாளராக இருந்தேன். அப்பொழுது தான் ராசாத்தி அங்கே என்னுடைய ஸ்டெனோ தட்டச்சு செய்பவராக பதவியேற்றார். முதல் நாள் சந்திப்பை நான் இன்னும் மறக்க வில்லை. தந்தை சுப்பிரமணியத்துடன் ராசாத்தி முதல் நாள் பதவி ஏற்க வந்திருந்தாள். ஒரு தமிழ் அதிகாரிக்கு கிழே மகள் வேலை செய்யப்போகிறார் என்ற பெருமிதத்தில் புன்னகைத் தவழ, "சார் இது மகளின் முதல் வேலை, அனுபவம் இல்லை, அவளை கண்காணித்து வேலையை முறையாக கற்க உதவுங்கள்" காலில் விழாக் குறையாக கெஞ்சாமல் கெஞ்சினார். எங்கே போனது இந்த சாதி வெறி அன்று? ஐயா என்று கை எடுத்து கடவுளை வணங்குவது போல, இரு கை கூப்பி கெஞ்சி வரம் கேட்டாரே? ஐயோ இவர்கள் தான் சமுதாயத்தின் பெருங்குடி மக்கள்?? அது போகட்டும். அவள் தந்தையின் பக்கத்தில் ஒரு அழகிய பொம்மையாட்டம் மௌனமாக குறும் சிரிப்புடன் அந்த அவளின் விழி அழகு அப்படியே என்னைக் கவ்விக்கொண்டது. "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்" ஒப்புமையில் கடலினையும்,மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும் ,வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை நான் அவளிடம் கண்டேன். அதில் நான் என்னை பறிகொடுத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அந்த சாதி வெறியை [தந்தையின் அல்லது குடும்பத்தின்] ராசாத்தி மனதுக்குள் வைத்திருக்காமல் கூறியிருந்தால், நான் கட்டாயம் ஒதுங்கி இருப்பேன். அவளும் சொல்லவில்லை. பின் தான் தெரிந்தது அவளுக்கும் அதில் நம்பிக்கை இல்லை என்று. அவள் உவமை இல்லா அழகு என்றாலும், அந்த அழகுதான் என்னை முதலில் கவர்ந்தது என்றாலும் சமூக பார்வையில் நானும் ராசாத்தியும் ஒரே பார்வையில் இருந்ததும், இனிமையான அவளின் பேச்சும் நல்ல புரிந்துணர்வும் தான் கொஞ்சம் கொஞ்சமாக எம்மை நெருக்கமாக இணைத்தது. "சிலம்பரியர்ப்ப வவிரொளியிழையமைப்பை கொடிஎன்ன மின்னென வணங்க்கென்ன யாதொன்றுந்த் தெரிகல்லா விடையின் கண் கண் கவர் பொருங்கோட" அழகிய சிலம்பில் உள்ளிருக்கும் மணிகளால் ஆன கலங்களை உடைய , துடக்கதான் கொடியென கண நேரத்தில் யாதென்றே தெரியாத அந்த மெல்லிய இடையை கண்கள் அதனால் நாடிச் சென்றது என்னவோ உண்மைதான். ஒரு நாள் அழகான மாலை நேரம், வேலை முடிந்த பின் காலிமுகத்திடலுக்கு இருவரும் கொஞ்ச நேரம் தனியாக கதைப்போம் என்று போனோம். இது வரை, மனதுக்குள் என்ன தான் இருந்தாலும், வேலைத்தளத்தில் இரு ஊழியராக மட்டுமே பழகினோம். ஒரு சில தனிப்பட்ட வார்த்தைகள், அசைவுகள் தவிர. அவள் என்னை சார் என்று தான் கூப்பிடுவாள். என்றாலும் என் மேல் ஒரு காதல் இருப்பதை அவளால் சில சந்தர்ப்பங்களில் மறைக்க முடியவில்லை. நான் அதை தெரிந்தும் தெரியாததுமாக வரவேற்றதும் உண்டு. நாம் இருவரும் அங்கு இருந்த வாங்கு ஒன்றில் அருகருகே இருந்தோம் , என்றாலும் நான் கொஞ்சம் இடைவெளிவிட்டே இருந்தேன். ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவள் அதை விரும்பவில்லை, என்னுடன் கைகளை பிடித்து ஒட்டி இருக்க முனைந்தாள். நான் கொஞ்சம் விலகி "நீ என்னைக் காதலிப்பதை உன் குடும்பம் ஏற்குமா ? அல்லது ஏதாவது தடை இருக்கா?" அதை முதலில் சொல் என்றேன். எதோ ஒன்று அவளின் வாயை திறக்க விடாமல் கட்டிபோட்டுக்கொண்டு இருந்தது. கொஞ்ச நேரத்தால் அவள் நேரடியாக சொன்னாள் "என் குடும்பம் உயர் சாதி என்ற மாயைக்குள் வாழ்கிறது. ஆனால் நான் அதில் அக்கறை இல்லை. என் இன்றைய உலகில், எனக்கு நம்பிக்கையானவர் நீங்கள் ஒருவரே, நீங்கள் எனக்கு வேண்டும்!", நான் பதில் சொல்லமுன், என்னைக் கட்டிப்பிடித்து தோளில் சாய்ந்தாள். ஒரு ஆறு மாதத்தின் பின், முதல் முதல் விடுதலையில் யாழ்ப்பாணம் தான் போகப்போவதாக கூறி, இருவரும் ஒன்றாகப் போவோம் என்றாள். நானும் அவளின் ஆசைக்கு இணங்கி, ஒரு வெள்ளி இரவு கொழும்பு - யாழ்ப்பாணம் தபால் தொடர வண்டியில் ஒன்றாகப் போனோம். அது தான் என் கடைசி பயணம் என்று அப்போது தெரியாது. "சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச், சுட்டுவிரல் சேர்த்தி மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுகோல் வலந்தனள் அன்னை; அலைப்ப அலந்தனென்; வாழி தோழி! கானல் புதுமலர் தீண்டிய, பூநாறு குரூஉச் சுவல் கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉம்; இயல்தேர்க் கொண்கனொடு செலவு, அயர்ந் திசினால் யானே அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!" நாம் இருவரும் ஒன்றாக யாழ்ப்பாண தொடர்வண்டி நிலையத்தில் வந்து இறங்குவதைக் கண்ட சில பெண்கள், மூக்கின் மேல் விரல் வைத்துக்கொண்டு சிலரும் பலருமாகக் கூடிக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு சாடைமாடையாக அம்பல் பேசித் தூற்றத் தொடங்கினர். ராசாத்தியின் தாய் சிறிய கோலைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட ஓட அடித்தாள் . இதனால் அவள் நொந்து, அவளை பார்க்க அங்கு வந்த தோழியிடம் , இதைக் கேள். நள்ளிரவில் அவர் வருவார். அவருடன் நான் சென்றுவிடுவேன். இந்த ஊர் அலர் பேசிப் பேசி அழுது தொலையட்டும் என்றாள் என்பது, அவள் தோழி சொல்லித் எனக்கு தெரிய வந்தது. ஆனால் நள்ளிரவுக்கு முதல், நான் இங்கு மரணத்தின் விளிம்பில் படுத்து இருக்கிறேன். ஒன்று மட்டும் உண்மை 'ராசாத்தி மனசுல' இன்னும் நான் இருக்கிறேன்! அந்த நினைப்புடன் இந்த உலக வாழ்வை விட்டு இன்னும் ஒரு சில நிமிடத்தில் நிரந்தரமாக மகிழ்வாக போய்விடுவேன், ஆனால் என் மனசுல உள்ள கடைசி ஆசை அவள் வாழவேண்டும், இந்த மனித பிறப்பு வேறுபாடுகளுக்கு அவள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. "வாழ்ந்து பார்" வாழ்ந்து பார் நீங்க யாழில் தாழ்ந்து போன கதை புரியும்! ஆழ்ந்த சிந்தனை கொண்ட இவன் கீழ் மட்டம் தொட்டது தெரியும்! "வீழ்ந்த வரலாற்றை பாடமாகக் கற்று சூழ்ந்த வஞ்சகத்தை எடுத்து எறிந்து காழ்ப்பு களைந்து உண்மை அறிந்து மூழ்கிய ஒற்றுமையை மீட்டு எடுத்திடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils! / பகுதி / Part 03 [In English & Tamil] "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!''கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக "-புறநானூறு 172[ கி மு 500 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த புறநானுறு ] "உலையை ஏற்றுக; சோற்றை ஆக்குக; கள்ளையும் நிறைய உண்டாக்குக;அழகாக செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த,பாடுவதில் சிறந்த,விறலியர் மாலைகளைச் சூடுக; " அதாவது "உலையை ஏற்றுக;சோற்றை ஆக்குக"என்பது பொதுவாகக் கூறப்பட்ட பொங்கலிடும் முறையாகும். “புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' (சிலப். 5:68-69) எனும் இளங்கோவடிகளின் வாக்கால் அறிகிறோம்.-கி பி 100/200 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த சிலப்பதிகாரம் ஆனால் இடைக்காலத்தில் தமிழ்ப் புலவராகிய திருத்தக்க தேவர்,வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்த மகளிர் இடும் பாங்கினை படம் பிடித்துக் காட்டியுள்ளார். “மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்'' (சீவக. சிந். 1821)-கி பி 900 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த சீவக சிந்தாமணி இதனால், செந்தீ மூட்டிப் புதுப் பானையில் இனிய பாலொடு கலந்த சோற்றைப் பொங்கலாகப் பொங்கிடும் பாவையரின் பழக்கம் புலப்படுத்தப்படுகிறது.கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் நடைபெற்ற பொங்கல் இடும் முறையாக இதனை நாம் கருதலாம்? பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும்.இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது.இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு(உத்ராயணம்) என்றும் தென்செலவு(தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும்.அந்த வகையில்,கதிரவன் வட செலவைத்[பயணம்] தையில் தான் தொடங்குகிறது.மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள்.அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது. எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஜூனில் இருக்க வேண்டும் ,அல்லது ஜனவரி 14 இல் புத்தாண்டு வர வேண்டும் அல்லவா? இனி ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணப்பெறும் சான்றுகள் சில வற்றை பார்ப்போம். "மாயோன் மேய காடு உறை உலகமும், சேயோன் மேய மை வரை உலகமும், .... காரும் மாலையும் = முல்லை குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!" [தொல்காப்பியம்] ஆக, கார் காலம் தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்! * முதல் திணை = முல்லை! * முதற் காலம் = மழைக் காலம்![இங்கு, என்மனார் புலவர், என மொழிப என ஆசிரியர் கூறியிருப்பதால், இந்தக் காலப் பகுப்பு தொல்காப்பிய விதி அல்ல- தமிழர் மரபு என்பது புரியும்.] இதற்கு உரை எழுதிய உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாக, தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் என்கிறார். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 04 தொடரும் Thai is a special month for Tamils! / Part 03 The festival got many transition right from Sangam age to Pallavas to Cholas to British India to Dravidian movement. [Check Purananuru 172:"ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக" / :"Set the pot on the stove! Cook the rice! Do not stint on toddy! Let the viralis [female artists] with gleaming jewels who are skilled in singing, wear garlands! " [500BC], Silappathikaram 5;68-69:“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' / On the day on which the moon approached the cittirai star in the month of cittirai (i.e. on the full-moon day) the sacrifice of boiled grains, sweetened sesame balls, meat mixed with rice, flowers, incense, and toddy was offered [200AD], Seevaga Chinthamani 1821: “மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்'' [900AD]] But the sun worship and making pongal on that day has not got changed through years. All above convinced that the word pongal was in usage from Sangam era at least. And obviously harvest, eating rice was the practice in Sangam era also and the farmers might have had their own rituals. In the solar calendar, January 13/14 has astronomical significance. It is the day the sun after making a complete circle is seen going on its ’ northward journey’ Pongal or Thai Pongal is also called Makara Sankaranthi, since it is celebrated on the first day of Thai when the Sun enters the Makara Rasi (Capricornus). This signals the end of winter and the onset of spring throughout the northern hemisphere. For the next six months, the days are longer and warmer If the calendar is based on the solar movement, It should start from mid of June or mid of January as sun seems to start southward or northward journey accordingly. Let us examine the Sangam poems of over 2000 years old:- "மாயோன் மேய காடு உறை உலகமும், சேயோன் மேய மை வரை உலகமும், [The forest tract which Mayon tends, The hilly tract which Ceyon tends] .... காரும் மாலையும் = முல்லை குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்! [The rainy season & Evening are assigned to the forest tract, The learned find The cold season & mid night hour assigned to the hilly tract]" [தொல்காப்பியம் / Tholkappiyam] Tholkappiyam is the earliest extant work of Tamil literature. Hence we start from there. Even here nothing is mentioned about "New year". However it says Month of "Thai" is the first of all the seasons. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part 04 Will Follow
  18. "நிதானம்" "நிதானம் இழந்த அரசியல் தலைவர்களே நிம்மதி கொடுக்கா கொள்கை எதற்கு ? நித்தமும் உங்களுக்குள் பிளவு வேறு நியாமான ஒற்றுமை குலைந்தது எனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  19. "யுத்த வடுகளுக்கு மத்தியில் ஒரு காதல்" 25 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலை கட்டமைப்புகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதோடு அவை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவில்லை. அது மட்டும் அல்ல, 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் வன்னி பிரதேசத்தின் முழு உட்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்பட்டு இரண்டரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டதுடன் 40,000க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சூழலில் தான், போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரில், குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், ஆர்வமுள்ள கலைஞரான ராஜன் மற்றும் ஒரு பாசமிக்க செவிலியரான சாந்தி ஆகிய இரண்டு இளம் உள்ளங்கள் மிகவும் எதிர்பாராத சூழ்நிலையில் அங்கு சந்தித்தனர். மலை நாட்டை சேர்ந்தவர் சாந்தி. அவர் வவுனியாவில் யுத்தம் மௌனிக்கப் பட்டதை அடுத்து, காயமடைந்தவர்களைக் குணப்படுத்தவும், துக்கப்படுபவர்களுக்கு ஆறுதலளிக்கவும் தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர, அங்கு அரசு சாரா அமைப்பு ஒன்றினால் தற்காலிகமாக நிறுவப்பட்ட ஒரு மருத்துவமனையில் பணியாற்ற முதல் முதல் வவுனியாவுக்கு நுவரெலியாவில் இருந்து அன்று தான் வந்தார். தமிழ் மணம் வீசும் மண்ணுக்குள் நுழைகிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் குதூகலமாய் அவளுக்கு இருந்தாலும், அடிபட்டு துவண்டு கிடக்கும் பூமிக்கு நெருங்குவதை நினைக்கும் போது அவளின் மனது முழுதும் இறுக்கம் பிணைந்து கிடந்தது என்பதே உண்மை. நல்ல இருட்டு சூழ்ந்து கிடந்தது. வரவேற்று அழைத்துச் செல்ல அரசு சாரா அமைப்பின் சார்பில் ராஜன் என்ற இளைஞன் வந்திருந்தான். ராஜன் ஒரு ஆர்வமுள்ள கலைஞன் ஆவான். அவன் தன்னைச் சுற்றியுள்ள வலியையும் துன்பத்தையும் வெளிப்படுத்த தனது படம் வரையும் ஆற்றலையும் கவிதைகள் வடிக்கும் திறமையையும் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தினான். அவனது ஓவியங்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை சித்தரித்து, விரக்தி, நம்பிக்கை மற்றும் காதல் போன்ற உணர்ச்சிகளைக் எடுத்துக் காட்டியதுடன், அவ்வற்றுக்கு ஏற்ற கவிதை வரிகள் மேலும் பார்ப்பவர்களின் மனதைக் கவர்ந்தன. இடிபாடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களுக்கு மத்தியில், வவுனியா புகையிரத நிலையத்தில் இறங்கிய சாந்தியை ராஜன் வரவேற்றான். முதல் முதல் ராஜனின் பார்வை சாந்தியின் பார்வையை சந்தித்தது. "கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை. அது தான் அங்கு நடந்தது. இருவரும் ஒரு சில நிமிடம் பேச மறந்துவிட்டார்கள். பொதுவாக காதல் உச்சரிக்க, உணர சுகமானது தான், ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது. இவர்கள் எப்படியோ? வரவேற்று அழைத்துச் செல்ல ராஜன் தயாராக இருந்தான். ஒல்லியான உருவங்களில் நகர் முழுதும் இலங்கைப் போலீசார் அல்லது ஆர்மி நின்று கொண்டிருந்தனர். யுத்தம் முடிவுற்ற பின்பும், ஏராளமானோர் கொல்லப்பட்டும் சிறை பிடிக்கப்பட்ட பின்பும், குறிப்பிட்ட இடைவெளியில் சாலையில் செல்லும் வாகனங்களை ஏனோ நிறுத்தி நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர். காவலர்களின் கண்களில் துளியும் சிநேகம் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜனையும் சாந்தியையும் நிறுத்தி சிங்களத்திலும் அரைகுறை தமிழிலும் விசாரித்தனர். ராஜனின் அடையாளம் முன்பே தெரிந்தது போல இருந்தது. அதுதான், யார் சாந்தி, ஏன், எங்கே அழைத்து கொண்டு போறாய் போன்ற கேள்விகளைக் கேட்டு விசாரித்தனர். ராஜனும் வாக்குவாதம் செய்து, அங்கிருந்து புறப்பட அனுமதியும் பெற்றான். ஆனால் அவனுக்கு உள்ள பிரச்சனை, சாந்தியை சந்தித்தது முதல், எப்படி இனி அமைதியாக உறங்குவதே? "துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி, ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என் நெஞ்சு ஆறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன்," மழை பொழயும் காலத்தில் மின்னல் போல் ஒருத்தி தோன்றித் தன் ஒளி - உருவத்தை எனக்குக் காட்டி என் நெஞ்சு செல்லும் வழியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள். அது முதல் எனக்கு உறக்கம் வரவில்லை என்ற நிலை தான் அவனுக்கு! அதன் பின், ராஜனின் மோட்டார் சைக்கிள், சாந்தியை பின்பக்கம் ஏற்றிக் கொண்டு வவுனியாவுக் ஊடாக ஏ-9 வீதியில் விரையத் துவங்கியது. சாலைக்குப் பக்கவாட்டில் புகையிரதத் தடமும் சமாந்தரமாக உடன் பயணித்து கொண்டு இருந்தது. குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு பாதுகாப்பு குடில் என ஏ-9 வீதி மற்றும் புகையிரத தடம் ஓரம் இராணுவம் அமைத்து இருந்தது. இரண்டு பக்கமும் வயல் வெளிகள் வெறும் புற்கள் மூடி அகலமாகக் கிடந்தன. ஒவ்வொரு குடிலுக்குள்ளும் குறைந்தது இரண்டு இராணுவ வீரர்களாவது இருந்தனர். சாந்திக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. என்றாலும், குண்டுவீச்சுகளாலும் ஷெல்களாலும் உடைந்து பள்ளமும் குழியுமாக உள்ள வீதியால் மோட்டார் சைக்கிள் போகும் பொழுது ஏற்படும் குழுக்களும், அதனால் ராஜனின் முதுகுடன் நெருங்கி ஒட்டி உராஞ்சி போவதும் அவளுக்கு இன்னும் ஒரு புது உணர்வுகளையும் சொல்லிக் கொண்டே இருந்தது. அவனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவளோட கை ராஜனை வளைச்சு இறுக்கி இரண்டு பேருக்கும் இடையில் இடைவெளி இல்லாமல் போக, அந்த சுகத்தை, ஆனந்தத்தை அனுபவிச்சிகிட்டே அவனும் போனான். அவர்களுக்கு இடையே ஒரு சொல்லப்படாத தொடர்பு தானாக உருவாகத் தொடங்கியது. அவர்களைச் சுற்றி கொந்தளிப்பு இருந்த போதிலும், அன்பின் நுட்பமான தீப்பொறி பற்றவைக்கப்பட்டது. போரின் இருளால் கூட அணைக்க முடியாத சுடராக கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. போரால் சிதைந்த நிலப்பரப்பின் நிழலில் அவர்கள் ஒன்றாகக் கழித்தபோது, ராஜனும் சாந்தியும் தங்கள் சுற்றுப்புறத்தின் கடுமையான யதார்த்தங்களைக் கடந்து தங்களுக்குள் ஒரு நிலையான காதலைக் கண்டுபிடித்தனர். துப்பாக்கிச் சூடுகளின் எதிரொலிகள் மற்றும் காயமடைந்தவர்களின் அழுகைகளுக்குப் பதிலாக அமைதி வரும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைப் தங்கள் தங்கள் வழியில் , நோக்கில் பகிர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் அந்த தேடலில் ஒரு ஆறுதல் கண்டனர். போர் ஓய்வு அடைந்தாலும் இன்னும் கைதுகளும், காணாமல் போவதும், மக்களின் காணிகள் திருப்பி கொடுக்காமல் அரசு வைத்திருப்பதும், காணிகள் இன்னும் பல காரணங்களுக்கு பறித்தெடுப்பதும் தீவிரமடைந்து கொண்டு இருந்தது. இந்த கொந்தளிப்புக்கும் பதற்ற சூழ்நிலைக்கும் இடையிலும் அவர்களின் காதல் தொடர்ந்து கொண்டு இருந்தது. அங்கே அமைதி மற்றும் நீதிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் மௌன எதிர்ப்பின் வடிவமாக ராஜனின் ஓவியங்கள் அமைந்தன. ஒரு செவிலியராக தனது கடமைக்கும் ராஜன் மீதான காதலுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட சாந்தி, தன் வாழ்க்கையின் இரு அம்சங்களையும் எனினும் சமப்படுத்திக் கொண்டு இருந்தாள். அவர்களின் போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும், அவர்களின் அன்பின் நெகிழ்ச்சிக்கும் வவுனியா மௌன சாட்சியாக மாறியது. அவர்களின் காதல் கதை நம்பிக்கையின் அடையாளமாக மாறியது, கடினமான சூழ்நிலைகளில் கூட தாங்கும் அன்பின் சக்திக்கு அது ஒரு சான்றாக மாறியது. யுத்தம் இறுதியில் மே 2009 முடிவுக்கு வந்து இருந்தாலும் பல வடுகளை வவுனியாவில் விட்டுச்சென்றது என்பதை அவள் கடமை புரியும் மருத்துவமனையில் இருந்து சாந்திக்கு தெரியவந்தது. தங்கள் வாழ்க்கையையும் தங்கள் நகரத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மத்தியில், அவர்கள் அன்பு, அமைதி மற்றும் தங்கள் நிகழ் கால உறுதிமொழிகள் நிறைந்த எதிர்காலத்தின் படத்தை இதயத்தில் வரைந்தனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  20. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 03 "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!" [நவாலியூர் சோமசுந்தரப்புலவர்] தை மாதம் அறுவடைக்குப் பின்பான காலம். இம் மாதம் கல்யாண மாதம் எனவும் கருதப்படுகிறது. கல்யாணம் செய்ய ஏங்கும் மணமாகா ஆடவர் , விடலை இருவரும் திருப்ப திருப்ப சொல்லும் கூற்று "தை பிறந்தால் வழி பிறக்கும்" ஆகும். அதேவேளை ஆடி மாதம் கல்யாணம் தடை செயப்பட்ட மாதமாக கருதப்படுகிறது. தமிழ் இந்துக்களால் ஆடி மாதம் அமங்கலமான [an inauspicious month] மாதமாக கொள்ளப்படுகிறது. ஆனால் சக்தி வழிபாட்டிற்கு இது மங்கலமான ஒன்றும் ஆகும். ஆடி பிறப்பு என்பது ஆடி மாத பிறப்பை குறிக்கும் ஒரு பண்டிகை. சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும் கொழுக்கட்டையும், ஆடிக் கூழும் பகிர்ந்து கொண்டாடப்படுகிறது. மணமாகா இளம் பெண்கள், குறிப்பாக ஆடி செவ்வாய் தோறும் அம்மனை / சக்தியை விரதம் இருந்து வழிபட்டு தமக்கு நல்ல கணவர் / வாழ்க்கைத் துணைவர் அமைய அம்மனின் திருவருள் / பாக்கியம் வேண்டுகிறார்கள். 'சுப காரியங்கள் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது' களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது' 'ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்.' என்ற நம்பிக்கை! 'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைக்கும்' என்றும், 'ஆடியில பிறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது' என்றும் வேறு பழ மொழிகள் கூட சொல்லி வைத்துள்ளார்கள். ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே தான் இந்த மாதத்தில் சமயம் சம்பந்தமான பல பல விழாக்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றன [ஆடி பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், .. என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். ]. மற்றும் ஆடி மாதம் குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். அதாவது "ஆடிப் பட்டம் தேடி விதை" என்று முன்னோர்கள் கூறியதற்கேற்ப கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடைபெறும். இதனால்த்தான் மறைமுகமாக கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுவதை தவிர்க்கிறது [ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது. அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்!] . இதன் மூலம் அதி உச்சி கோடை மாதங்களான சித்திரை, வைகாசி ஆனி மாதங்களில் பிள்ளை பிறப்புகளை நிறுத்துகிறது / குறைக்கிறது . இது ஏன் என்றால் ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட. கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம் குழந்தை தாங்குமா? அதனால்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னனார்கள் போலும் . மற்றும்படி ஒன்றும் இல்லை. மற்றும்படி சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம் மூடநம்பிக்கை தான். நல்லதை சொன்னால் நாம கேட்க மாட்டோமே. அதனால்த்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்! . அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்களைச் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான். அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான் இதற்கு காரணம். இது பொதுவான மத நம்பிக்கை. மற்றபடி ஆடியில் கர்ப்பம் தரித்தால், சித்திரையில் பிள்ளை பிறக்கும், அதனால் கெட்டது நடக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. இதற்கும், அறிவியலுக்கும் தொடர்பே இல்லை. வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு என்பதையும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டிகள் போன்ற வசதிகள் இல்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும் நோய்களுக்கும் குறைவே இல்லை. மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலங்களில் உடல்நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம், இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும். இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்: ஆடிப்பட்டம் தேடிவிதை [உழவர்கள் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கலாம்.. காலம் அறிந்து பயிர்செய்ய. இப்பொழுது வைத்தால் தானே தை மாதம் அறுவடை செய்ய முடியும்!] ஆடிக்காற்றில் அம்மி(மை)யும் பறக்கும் பொருள்: வழக்கத்தில் உள்ளது - ஆடி மாதம் காற்று பலமாக வீசும். கடினமான பொருளான அம்மியும் பறந்து விடும். உண்மையான விளக்கம் - சித்திரை மாதம், வைகாசி மாதம் வெயில் காலம். அக்னி நட்சத்திரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் பலருக்கும் அம்மை நோய் ஏற்படும். அது ஒரு நோய்த்தொற்று. எனவே வீட்டில் ஒருவருக்கு வந்தால் கூட, பலருக்கும் வரும் அபாயம் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் தட்பவெப்பநிலை மாறிவிடும். அம்மை நோயும் ஏற்படாது. தொற்றும் இருக்காது என்பதால் ஆடிக் காற்றில் அம்மை பறந்து போய்விடும் என்று கூறி, நாளடைவில் திரிந்து இருக்கலாம்? அந்த காலத்தில், ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் , குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்றும், சித்திரை கோடை காலம் என்பதாலும், குழந்தைக்கு பல தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பெரியவர்கள் சொன்னார்கள். அது அன்று ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை . நம்மை எந்த அளவு வெப்ப நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரியும் , அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளும் இன்று உள்ளது. ஆனால் இன்றும் இதைக் காரணமாக கூறிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது. திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய ஆள்கள் அதிகமாக சென்று நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. ஆடி மாதத்தில். உதாரணமாக , புது வீடு செல்லக் கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ணக் கூடாது போன்றெல்லாம் சொல்லிக் கொண்டு இன்னும் நடை முறை படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும், ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதே சமயத்தில் அந்த நம்பிக்கைகள் எதனால் கடைபிடிக்க பட்டன என்பதன் ஆணி வேரை புரிந்து கொள்ளவும் வேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி / Part - 04:"தும்மல் / விக்கல் / கண் வெட்டசைவு / உள்ளங்கை அரித்தல் " தொடரும்
  21. "முற்றத்து மல்லிகையில் மூழ்கும் நினைவு" "முற்றத்து மல்லிகையில் மூழ்கும் நினைவு முட்டி மோதுது கொண்டையில் சூட்டியவனை! முல்லைக் கொடியாக கைகளில் ஏந்தினான் முத்துச்சரமாக நானும் புன்னகை சிந்தினேன்! "பட்டத்து ராணி நீயே என்றான் பகல் இரவாக காதல் தூவினான்! பகட்டு வார்த்தையில் என்னைக் கொடுத்து பருந்து வாயில் இரையாய் போனேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.