Jump to content

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1085
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "விடியலைத் தேடி" கிளிநொச்சி இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். எனினும் கிளிநொச்சியில் கிராஞ்சி, வலைப்பாடு, பள்ளிக்குடா, இரணைமாதா நகர் மற்றும் நாச்சிகுடா கிராமம் போன்றவை மீன்பிடிக் கிராமமும் ஆகும். இந்த நிலவளம், நீர்வளம் நிரம்பிய கிளிநொச்சி பிரதேசம், வன்னி நிலத்தின் முக்கிய பகுதியாக, வடமுனையில் இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலே, இந்த வன்னிப் பகுதியில், குறிப்பாக கிளிநொச்சிப் பிரதேசத்தில், ஆங்ஆங்கே சில குடியிருப்புகளே இருந்தன. அதைத் தவிர்த்து அநேக இடங்கள், அடர்ந்த காடுகளான வனப் பகுதியாகவே காணப்பட்டது. அந்தக் காலத்தில் பிற இடங்களில் இருந்து இந்த அடர்ந்த வனம் தேடி, வெறும் மனிதர்களாக வந்தவர்கள், தமது உழைப்பால் காடழித்து, குடியிருப்புகளாகவும் வயல் நிலங்களாகவும் மாற்றி வாழத் தொடங்கினார்கள். மிருகங்களுக்கும் நுளம்புகளுக்கும் பாம்புகளுக்கும் ஈடுகொடுத்து, பெரும் அச்சத்துடனும் வாழ்ந்தார்கள். எனினும் மண்ணின் மீதான தீராத தாகம், அவர்களை அங்கு வாழவைத்தது. அவர்கள் கனவிலும் தங்கள் நிலம் பறிபோகும் என்றோ, தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் ஆவார்கள் என்றோ நினைக்கவில்லை. இவர்களின் வழிவந்த சந்ததியில் ஒருவன் தான் கார்மேகம். அங்கே, கிளிநொச்சியின் பரந்த நெற்பயிர்கள் மற்றும் வறண்ட வயல்களில் இருண்ட சாம்பல் நிறத்தை வீசிய வானம் புயல் மேகங்களால் கனமாகத் தொங்கியது. கார்மேகம் தனது காளை வண்டியின் கடிவாளத்தை இழுத்து, நகர சந்தைக்கு செல்லும் சேற்றுப் பாதையில் அதைச் செலுத்தினான். அவனுக்கு அருகில், அவனின் உழைப்பின் பலன்கள், அவனது தேய்ந்து போன வறண்ட மண்ணில் என்ன விளைவிக்க முடிந்ததோ அத்தனையும் இருந்தன: கிழங்கு, கத்தரிக்காய், ஒரு கூடை சுண்டைக்காய் என இருந்தன. எனினும் அது விற்பதால், அவனது செலவுகளை முழுதாக ஈடுசெய்ய முடியாது என்பதே உண்மை! "மைபடு மாமலை பனுவலின் பொங்கி கை தோய்வு அன்ன கார்மழைத் தொழுதி தூஉயன்ன துவலை தூற்றலின் தேஎம் தேறாக் கடும்பரிக் கடும்பொடு காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல் கூவல் அன்ன விடரகம் புகுமின்" கரிய நிறமுடைய பெரிய மலையில் பஞ்சிபோல் பொங்கி, கை தொடுவது போல் தன்மை ஒத்த அணுகுதலையுடைய கார்கால முகில் கூட்டங்கள், தூவல் போல மழை நீரைத் தூவுவதால், திசைகள் அறியாத விரைந்து செல்லும் உங்கள் சுற்றத்துடன், தோளில் காவிக் கொண்ட உங்களுடைய இசைக்கருவிகள் நனையாதபடி, கிணறுகள் போன்ற குகைக்குள் நுழையுங்கள் என்று அன்று ஒரு கவிஞன் பாடினான். அது அவனுக்கு ஞாபகம் வந்ததோ என்னவோ, தூரத்தில் ஒரு பெண் தனிய, கிட்டத்தட்ட தன்னைப் போலவே பெரிய மீன் கூடையுடன், அவைகள் நனையாதபடி, சந்தைக்குப்போக, அந்தக் கடும் மழையில் தெளிவாகத் திசைகள் தெரியாமல் போராடுவதைக் கண்டான். அவளை அவனது வண்டியின் கூரைக்குள் நுழைய அழைக்க விரும்பிய கார்மேகம், “ஏய்! பெண்ணே, உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா?" என்றான். அப்போது மாரிகாலமாயினும், அன்று காலை வானம் ஓரளவு வெளிப்பாகவும் காற்று வெப்பமாகவும் இருந்த காரணத்தினால், அவள் மெல்லிய பருத்தி உடைகள் அணிந்து கொண்டே, மீனவனின் மகள் ஆழினி, மீன்கூடையுடன் சந்தைக்குப் போனாள். ஆனால், வெளியில் வந்து சில நேரத்தால் வானத்தைப் பார்த்தாள். கருமுகில்கள் கூடி எங்கும் இருண்டு போயிருந்தது. மழை வருமுன்னர் சந்தை போய்ச் சேர்ந்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டு, விரைவாக நடந்தாள். சிறிது தூரம் போனதும் மழை தூறலாகத் தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் சோனாவாரியாகப் பெய்யத் தொடங்கி விட்டது. அத்துடன் கடும் காற்றும் பக்க வாட்டாக அடித்தது. அணிந்திருந்த உடுப்பும் நன்றாக நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டது. இனியென்ன செய்வது? சந்தை மட்டும் இப்படியே போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டு நடக்கும் பொழுது தான், கார்மேகம் அவளைக் கூப்பிட்டான். அவளால் மேற் கொண்டு நடக்க முடியவில்லை. என்றாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ஈரச் சேலையையும் கையில் சேர்த்துப் பிடித்தபடி, தன் முகத்தில் இருந்து மழைத் துளிகளை துடைத்துக் கொண்டு ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். குளிர் ஒரு பக்கம், உடம்பை நடுங்கவைத்தது. தனிய நிற்பதில் பயம் ஒரு பக்கம், அத்துடன் பின்னேர மழை இருட்டு வேறு. அவள் தயங்கினாள், என்றாலும் பின்னர் தலையசைத்தாள், தயக்கத்துடன் ஆனால் நன்றியுள்ள புன்னகையுடன் மாட்டு வண்டியை நெருங்கினாள். “நன்றி. இந்த மழை ... ஓயாமல் இருக்கிறது, ” என்று அவள் அவனது வண்டியின் கூரையின் கீழ் ஒதுங்கினாள் . "நான் ஆழினி." “நன்றாக நனைந்து விட்டீர்களோ?, நான் கார்மேகம்," அவன் பதிலளித்துக் கொண்டு, காளைகளை முன்னோக்கி நகர்த்தினான். "சந்தைக்கு போறீங்களா?, நல்ல மழையில் அகப்பட்டு விட்டீர்கள் போலிருக்கிறது. நல்ல குளிர். இப்படியே இன்னும் கொஞ்சநேரம் நின்றால் தடுமல் காய்ச்சல் வந்துவிடும்" என்று கதையை வளர்த்தான். ஆழினி தலையசைத்தாள், அவளது கைகள் அவளது மீன் கூடையை இறுகப் பற்றின. “இவை கெட்டுப் போவதற்குள் விற்க வேண்டும். இந்த நாட்களில் கடல் கூட கோபமாக இருக்கிறது. அலைகள் கடுமையாக கரையைத் தொடுகின்றன. மீன் பிடிப்பதும் கடுமையாகிறது" என்றாள். பாதி இருட்டில் கார்மேகத்தின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. அப்போது ஏற்பட்ட மின்னல் கீற்று வெளிச்சத்தில் அவனுடைய முகத்தை அப்பத்தான் அவள் முழுதாகக் காணக்கூடியதாக இருந்தது. அவனுக்கும் இவளின் முகத்தையும் கோலத்தையும் முழுமையாக பார்க்க கூடியதாக இருந்தது. "இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ - மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே" நிலவு போன்றவளோ, இவள் அழகே வடிவானவளோ, தேவலோகத்தில் வாழும் ரம்பையோ, அல்லது மனதை மயக்கும் மோகினியோ, [அவளைக்கண்டு] மனம் முதலில் போனதா ?, விழி முதலில் போனதா ?, [துவாலை எடுத்துக் கொண்டு] கரம் முதலில் போனதா ? என்று அவன் தனக்குள்ளே குழம்பிக் கொண்டு, "இந்தாருங்கள் இந்த துவாலையால் போர்த்திக் கொள்ளுங்கள்”; என்று அவளிடம் நீட்டினான் கார்மேகம். அவளுக்கு வெட்கம், கூச்சம், பயம் எல்லாம் ஒருங்கே சேர்ந்து அவளைப் வாய் பேசவிடாது அடைத்துவிட்டன. ஒரு ஆணுடன் தனித்து, அந்த நேரத்தில், ஆளரவம் இல்லாத இடத்தில் நிற்கிறேனே என்று மனத்தில் ஒரு கிலி பிடித்தது போலிருந்தது. என்றாலும், அந்தக் கடுங் குளிர் தாங்க முடியாமல் இருந்ததனால், அவன் அன்புடன் நீட்டிய துவாலையை கை நீட்டி வாங்க, அவளுக்கு மறுக்க முடியவில்லை. மழையும் குளிர் காற்றும் அவளின் மூஞ்சையில் அடித்தன. மறு யோசனை யில்லாமல் உடனே கையை நீட்டி அதை வாங்கித் தன்னை மூடிப் போர்த்துக் கொண்டாள். நன்றி சொல்ல முயன்றாள், முடியவில்லை. குளிர் நடுக்கம் வேறு. "கடலினைக் கயலைக் கணையைமென் பிணையைக் காவியைக் கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாளைவேன் றறவுநீண் டகன்று கொடுவினை குடிகொண் டிருபுறம் தாவிக் குமிழையும் குழையையும் சீறி விடமெனக் கறுப்புற் றரிபரந் துன்கை வேலினும் கூரிய விழியாள்." என்றாலும் ஆழினியின் மௌனத்திலும் அவளின் விழியழகு கார்மேகத்தை நிறைய வருத்தியது. அவன் அவளை வியந்து பார்த்தான். அவன் அரிச்சந்திரனாக அவளை சந்திரமதியாக, எனோ அந்தத் தருணம் மனதில் கருதினான். அவளின் கண்கள் எல்லா உவமைகளையும் விட அழகு வாய்ந்தவையாக அவனுக்குத் தெரிந்தது. ஒப்புமையில் கடலினையும், மீனையும், அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவளாக ஆழினி அவனுக்கு இருந்தாள். கற்பனையில் மிதந்த அவன் தன்னுக்குள் சிரித்துக்கொண்டு, "இன்று நில வளம் சிறப்பாக இல்லை. வெள்ளம் இல்லையென்றால் வறட்சி தலை காட்டும். பின்னர் யானைகள் இன்னும் ஒரு தொல்லை ... ஒவ்வொரு இரவும், தோட்டம் மற்றும் வயல்களுக்குள் புகுந்து அழித்து கீழே தள்ளி மிதித்து விடுகின்றன." என்றான். அவள் லேசாகச் சிரித்தாள், அது, நீர்த்துளிகள் நிலத்தில் வீழ்ந்து துள்ளும், பறை இசை போன்ற சத்தத்தை மீறி, வெளியே வராமல், அவள் போல் வெட்கத்துடன் மறைந்து விட்டது. "நாங்கள் இருவரும் தோல்வியுற்ற போரில் போராடுவது போல் தெரிகிறது." என்றாள். அடுத்தடுத்த வாரங்களில் அவர்களின் நட்பு வளர்ந்து, ஒவ்வொரு முறையும் கார்மேகம் சந்தைக்குச் செல்லும் போது, ஆழினியின் பழக்கப் பட்ட அழகு வடிவத்தை வீதியிலும் சந்தைக் கடைகளிலும் தானாக கண்கள் தேடுவதைக் கண்டான். அவர்கள் இருவரும் தாம் கடுமையாகப் பெற்ற விளைச்சல்களை, பிடித்த மீன்களை வர்த்தகம் செய்து, போராலும் இழப்புகளாலும் பாதிக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில் தங்கள் வாழ்வில் ஏற்படும் இடையூறுகளையும் குறுக்கீடுகளையும் பகிர்ந்து கொண்டு அரட்டை அடிப்பது வழக்கமாகியது . மூடுபனிக்குள் சூரியன் அரிதாகவே தெரியும் ஒரு நாள் காலை, சாலையோரம் ஆழினி காத்திருப்பதைக் கண்டான் கார்மேகம், அவள் அவனைக் கைகாட்டிக் கூப்பிட்டாள். அவள் முகம் சோர்ந்து காணப்பட்டது, அவளது வழக்கமான புன்னகைக்கு பதிலாக ஒரு கவலையான முகம் தான் அங்கு தெரிந்தது. "கார்மேகம்," என அழைத்து அவள் கொஞ்சம் தயங்க ஆரம்பித்தாள், "உனக்கு எப்போதாவது தோன்றுகிறதா ... நாங்கள் எதோ பிழைத்துக் கொண்டிருக்கிறோம் தவிர உண்மையாக வாழவே இல்லை? " என்றாள். கார்மேகம் பெருமூச்சு விட்டான், வீதியின் இரு புறமும் முடிவில்லாமல் நீண்டு கிடக்கும் வயல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். "நான் ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி யோசிக்கிறேன். இந்த வயல்கள் தலைமுறை தலைமுறையாக என் குடும்பத்திற்கு சொந்தமானவை, ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் விளைச்சல் குறைந்து கொண்டு போவது போல் உணர்கிறேன். மேலும் போருக்கு முன்பு இருந்த நல்ல நெல் விதைகளை அது இன்னும் தரவில்லை. நாங்கள் இழந்ததை மீட்டெடுக்க பல ஆண்டுகள் ஆகும் என்று நான் நம்புகிறேன். "ஒருவேளை நாம் தெற்கே செல்லலாம் போல் எனக்குத் தோன்றுகிறது " ஆழினி சொன்னாள், "அதிக வாய்ப்புகளுடன் எங்காவது ... " என்று இழுத்தாள். கார்மேகம் தலையை ஆட்டினான். "நான் அதைப் பற்றி யோசித்தேன், ஆனால் இது எங்கள் பரம்பரை நிலம், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இது என் பூட்டன், தாத்தா, அப்பா உழைத்த நிலம். அதை விட்டு விடுவது அவர்களை விட்டு விட்டு மறந்து போகும் செயலாகும் என்றான். குளிர் காலத்திலும் வெயில் சிந்தும் இனிய நண்பகல் நேரம், எப்பொழுதும் போல, சந்தையால் வீடு திரும்பும் பொழுது, அன்றும் மரங்கள் பல சூழ நாயகமாய் இருக்கும் வழமையான குளக்கரையில் அருகருகே, ஆனால் அவள் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தாள். இந்த குளக்கரை தான் தன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் போதி மரம் என்ற எண்ணம் சில நாட்களாக அவளுக்குள் இருந்தது. திடீர் திடீரென தமிழ் பிரதேசங்களில் முளைக்கும் புத்தர் சிலைகளை பார்த்ததால் அப்படியான, புத்தரின் ஒரு எண்ணம் அவளில் தோன்றி இருக்கலாம்? முன்பு எல்லாம் இங்கு அமர்ந்து காதல் கண் கொண்டு ஆழினி நோக்கும் போதெல்லாம் , அந்த வானம் அவளின் கண்களில் வண்ணம் பல தூவி வானவில்லைக் காட்டியது. அது ஒரு அழகிய மழைக் காலம். ஆனால் இன்று மேகம் இல்லா இளநீல வானம், கதிரவனின் இளவெயிலில் மஞ்சள் நிறம் மட்டும் பூசி நிற்கிறது. அன்று அவள் விழியில் விழுந்த வானவில்லின் மற்ற நிறங்கள் எங்கே ? அது காதல் அரும்பிய காலம். இப்ப அவளுக்கு, காதலுக்கு ஒரு நிரந்தர முடிச்சு தேவைப்படுகிறது. அன்று அவனைக் கண்டதும் சுற்றும் காட்சிகள் மறந்து மனம் மயங்க அவனைக் கட்டி அனைத்து இமை மூடி அவன் இதழ் முத்தம் பருகினாள். இன்றும் அதே விருப்பம் தான், ஆனால் மனதில் அவன் உண்மையில் காதலிக்கிறானா என்ற ஒரு கேள்வி, அது தான் அவர்கள் குளத்தின் அருகே அமர்ந்திருந்த போது, ஒரு பலவீனமான அமைதி அவளிடம் காணப்பட்டது. ஆழினியின் தலை அங்கிருந்த ஒரு மரத்தில் சாய்ந்து, கார்மேகத்தை பார்த்துக் கொண்டு இருந்தது. அவள் தயக்கத்துடன், தன் மனதைக் குழப்பிய கேள்வியை தந்திரமாக, "கார்மேகம், நாங்கள் எப்போதாவது திருமணம் செய்து கொள்வோம், ஒன்றாக, உண்மையான வாழ்வு ஒன்றை உருவாக்குவோம் என்று, நினைக்கிறீர்களா?" என்று கேட்டாள். அவளின் எண்ணம் எல்லாம் அந்த வானவில்லே ! அவர்களின் உறவின் நிஜமே!! கார்மேகனின் கை அவளது கையை வருடி, அவர்களின் விரல்கள் ஒன்றோடொன்று இணைந்தன. "ஒரு நாள், மிக விரைவில் கட்டாயம் நடக்கும்" அவன் உறுதியான குரலுடன் கூறினான். "நான் எங்களுக்கு ஒரு வீட்டைக் கட்டுவேன், அதை சிரிப்பு மற்றும் அன்பால் நிரப்புவோம்." என்று அவளை இழுத்து கட்டி அணைத்தபடி கூறினான். அவள் காதலுக்கு ஒரு 'விடியலைத் தேடி' திருமணத்தில் அதை நிஜமாக்கவும், அதேநேரம் தமது பொருளாதாரத்துக்கும் 'விடியலைத் தேடி' தன் திருமண வாழ்வை மகிழ்வாக்கவும் விரும்பினாள். அதனால்த்தான் அவள் தன் கவலையை முழுதாக விட்டுவிடவில்லை “நான் மீன் சுமந்து விற்கிறேன், நீ விவசாயம் செய்து, அதைச் சுமந்து விற்கிறாய். ஆனால் அது இன்றைய சூழலில் போதுமானதாக இல்லாவிட்டால் என்ன செய்வது? அவள் மீண்டும் தன் கேள்வியைத் தொடர்ந்தாள். "காதல் முதிராத எம் வாழ்க்கையிலே இருமனம் இணைந்த மணம் இல்லையேல் விடியாத காலை சேவல் கூவியென்ன கதிரவன் தன் விடியலைத் தந்தென்ன?" "கரு மேகங்கள் சூழ்ந்த வாழ்க்கையிலே நிஜங்கள் மறைந்து நிழல் ஆனாலென்ன பொருளாதாரம் குறைந்து உடைந்தால் என்ன விடியல் தேடலும் உடைந்து விழுமே?" "சிதைக்கப் பட்ட எம் நிலமும் சிதறிப் போன உழைப்பு வசதியும் பறிக்கப் பட்ட எம் வளமும் மீண்டும் கிடைக்க விடியலைத் தேடு!" "காதல் என்பதை புனிதம் ஆக்கி கைகள் இரண்டும் அன்பில் இணைத்து வாழ்வு ஒன்றை மகிழ்வாக நடத்த உண்மை அர்ப்பணிப்புடன் விடியலைத் தேடு!" அப்பொழுது மென்மையான தங்கம் மற்றும் இளஞ் சிவப்பு நிறங்களில் கதிரவன் நிலத்தை குளிப்பாடிக் கொண்டு இருந்தான். அவன் உடனடியாக பதிலளிக்கவில்லை, ஆனால், அந்த கதிரவன் அடிவானத்தில் மூழ்குவதைப் பார்த்துக்கொண்டு இருந்தான். “நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம், ஆழினி. அது எம் விடியலைத்தேடும் முயற்சி ஆகட்டும். கட்டாயம் எம் நீர் மற்றும் நிலத்தின் விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இன்று எனக்கு உண்டு, அது எம் பொருளாதாரத்துக்கும் எம் வாழ்வுக்கும் விடிவைத் தேடித் தரும்." என்றான். ஒரு குளிர்ந்த விடியற் காலையில், கார்மேகம் சந்தைக்குப் புறப்படத் தயாரான போது, ஆழினியும் அவனுடன் இணைந்து கொண்டாள். அவள் தோள்களில் ஒரு சால்வை [துப்பட்டா] இறுக்கமாகச் சுற்றியிருந்தது. அவள் அவனது வயல்களை வெளியே நின்றபடி பார்த்தாள், அங்கு பயிர்கள் இன்னும் சரியான விளைச்சல்கள் கொடுக்க போராடுவதைக் கண்டாள். " விரைவில் இந்த நிலைமை மாறும், இது ஒரு பழைய நினைவாக மாறட்டும்" என்று முணுமுணுத்தபடி அவன் கையைப் பிடித்தாள். அவள் வார்த்தைகளின் கனத்தை உணர்ந்த கார்மேகம் அவளை அருகில் இழுத்தான். "கட்டாயம் நம்மால் முடியும் ஆழினி, சரியான வழியில், சரியான திட்டத்தில், நம்பிக்கை கொண்ட உழைப்பில், அது சாத்தியமாகும், அது வரை ஓயாமல் நாம் "விடியலைத் தேடி" க்கொண்டே இருப்போம்." என்றான். அவள் சிரித்தாள், மேகங்களை உடைத்து வரும் விடியலின் மங்கலான ஒளியில், அவள் முகம் மலர்ந்தது. "உன்னுடன், கார்மேகம் ... என்னால் முடியும் என்று நினைக்கிறேன்." என்றாள். “இவ்வளவு பிழைத்துவிட்டோம்” என்று கார்மேகம் முணுமுணுத்தான், "நாங்கள் போரின் அவலத்தில் இருந்து தப்பிப்பிழைக்க முடிந்தால், இங்கும் நாம் தப்பிக்க முடியும்." என்றான். ஆழினி தலையசைத்தாள், அவள் குரல் உறுதியாய் இருந்தது. “ஒரு நாள், நமக்குச் சொந்தமான விடியலைக் காண்போம். அதுவரை நாங்கள் தொடர்ந்து செல்வோம்" என்றாள். எனவே, கைகளை பின்னிப்பிணைத்து, உறுதியான இதயங்களுடன், அவர்கள் நிச்சயமற்ற அடிவானத்தை எதிர்கொண்டு ஒன்றாக நின்றனர். விடியல் அவர்களுக்கு முன்னால் நீண்டது - ஒரு பதிலாக அல்ல, மாறாக அவர்களின் உறுதிக்கு ஒரு சான்றாக, ஒளி தொலைவில் இருந்தாலும், அதை அடைய அவர்கள் எடுத்த ஒவ்வொரு அடியும் மதிப்புக்குரியது என்பதை நினைவூட்டியது நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. "கனவு மெய்ப்படும்" / பாரதியாரின் நினைவாக, அவர் விரும்பிய தலையங்கத்தில் ஒரு சிறுகதை [நினைவிடத்தில் உள்ள கல் பலகை மற்றும் அவரது இறப்புச் சான்றிதழில் உள்ள தகவல்களின்படி, தமிழ்க் கவிஞர் செப்டம்பர் 12 ஆம் தேதி காலமானார். ஆனால், மாநில அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியை 'மகாகவி தினமாக' அறிவித்தது.] "மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;" [பாரதியார்] கனவுகளின் அடித்தளம் விருப்பத்தின் விளைவு என்பது உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் பிராய்டு [Sigmund Freud] என்பாரின் கருத்து ஆகும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் கனவு காண்கின்றனர். அதை நனவாக மாற்றும் அவர்களின் பெரும் முயற்சியில் சில வெற்றி பெறும், சில கருத்துக்களாக மட்டுமே இருந்து விடும், சில மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்தும், சில பாதிப்பதே தெரியாமல் சூழலை சிதைத்துக் கொண்டே வரும். எப்படியிருப்பினும், கற்பனைகள், கனவுகள் உருவம் பெறுகையில் எழும் உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்கி விடாது. அப்படியான ஒன்றில் தான் நான் இன்று மகிழ்வாக, நான் கனவு கண்டவளை, நாம் இருவரும் கனவு கண்ட புத்தக கடைக்கு முன், கைபிடித்து நிற்கிறேன். யாழ்ப்பாண மாவடடத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நான் அன்று என் பெற்றோர்கள், சகோதரர்களுடன் வசித்து வந்தேன். எங்கள் பக்கத்து வீட்டில் மாயா என்ற குறும்புக்கார அழகிய பெண் இருந்தாள். அவர்களின் குடும்பம் ஒரு சிறிய குடும்பம். அவளுக்கு ஒரு தங்கை மட்டுமே இருந்தாள், தந்தை யாழ்ப்பாண கச்சரியில் ஒரு அதிகாரியாக இருந்தார். மாயாவும் நானும் ஒரே பாடசாலையில் கல்வி கற்றதாலும் பக்கத்து வீடு என்பதாலும் எண்ணற்ற நினைவுகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொண்டு குழந்தைப் பருவம் தொடக்கம் [பால்ய] நண்பர்களாக வளர்ந்தோம். வாலிப பருவம் அடைந்து உயர் கல்வி தொடருகையில், அவளின் தனித்துவமான அழகும் அவள் என்னுடன் சுதந்திரமாக பழகும் நட்பும் எனக்கு என்னை அறியாமலே அவள் மேல் ஒரு ஆசையை வளர்த்துக் கொண்டே வந்தது. "பக்கத்து வீட்டு பைங்கிளி கோடியில் நிற்குது வெக்கத்தை விட்டு அது ஆடிப் பாடுது தூக்கத்தை கலைத்து எனக்கு துடிப்பை தருகுது ஏக்கத்தை கூட்டி மனதை நொடியில் வாட்டுது" "வயல் வெளியில் பைங்கிளி துள்ளி திரியுது கயல் விழியில் கவர்ச்சியை அள்ளி எறியுது மயக்கம் கொடுத்து நெஞ்சை கிள்ளி இழுக்குது தயக்கம் கொண்டு கொஞ்சம் தள்ளி போகுது" என்னுடைய அந்தக் கனவில் ஒரு பகிரப்பட்ட ஆசை அவளிடமும் இருந்தது பின் ஒரு நாள் எனக்கு தெரியவந்தது. ஒரு நாள் நான் பல்கலைக் கழகத்துக்கு போகும் பொழுது, தனக்கு உயர் வகுப்புக்கு பிந்திவிட்டது என்று, தன்னை என் மோட்டார் சைக்கிளில் இறக்கி விடும்படி கூறினாள். ஆனால் ஏறியதும் இன்று தனக்கு விடுதலை என்றும் ஏதேதோ கதைக்கத் தொடங்கி தன் கனவையும் எனக்கு, என்னை இறுக்க பிடித்துக்கொண்டு சொன்னாள், அந்த இறுக்கம், அந்த தழுவல் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. மாயா ஒரு திறமையான கலைஞர். நன்றாக படம் வரைவதிலும் சிறு சிறு கதைகள் எழுதுவதிலும் வல்லவர். எனவே ஒரு வசதியான சிறிய புத்தகக் கடையை, படிப்பின் பின் தான் முதலில் என்னுடன் ஒன்றாகத் திறக்க வேண்டும் என்றும், அதன் பின் என்னுடன் வாழவேண்டும் என்றும் தன் அவாவை கெஞ்சலாக, ஆனால் உறுதியாக கூறினாள். "நெருங்கி வந்து இருந்தாள் நெஞ்சம் குளிர கதைத்தாள் குறும்பாய் சில செய்தாள் மறுத்தால் முறைச்சு பார்த்தாள்" "மனம் திறந்து பேசுவாள் கள்ளம் கபடம் இல்லை வித்தகம் கண்ணில் காட்டுவாள் கவனம் தன்னில் இருக்கும்" "சந்திக்க பதுங்கி வருவாள் பாடம் புரியலை என்பாள் புத்தகம் கையில் இருக்கும் கவனம் எங்கோ இருக்கும்" "பதறி ஓடி வருவாள் பிந்தி விட்டது என்பாள் துள்ளி ஏறி இருப்பாள் மெல்ல போ என்பாள்" வருடங்கள் செல்ல செல்ல நானும் மாயாவும் தனித்த தனி பாதையில் சென்று விட்டோம். நான் வணிகத்தில் ஒரு தொழிலைத் தொடங்கி, இலங்கையின் தலைநகர் கொழும்பு போய்விட்டேன், மாயா ஒரு திறமையான கலைஞராக யாழ்ப்பாணத்திலேயே பிஸியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். என்றாலும் நாம் ஒருபோதும் தொடர்பை இழக்கவில்லை. நாம் அடிக்கடி மின்னஞ்சல் கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை பரிமாறிக்கொண்டோம். ஒரு நாள், எதிர்பாராத அழைப்பு எனக்கு வந்தது. மாயா தனது கலையை யாழ்ப்பாண கலை காட்சி கூடம் ஒன்றில் காட்சிப்படுத்த இருக்கிறார் என்றும், அதன் தொடக்க இரவுக்கு என்னை வரும்படியும் அழைத்திருந்தார். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு நான் அவளுடன் மீண்டும் இணைந்தபோது உற்சாகமும், ஆர்வமும் பெருமையும் என்னுள் நிறைந்தன. மாயாவின் கலை திகைப்பூட்டக் கூடியதாக அத்தனை அழகாக இருந்தது, ஒவ்வொரு பகுதியும் வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் மூலம், இலங்கை தமிழ் மக்களின் வரலாறையும் பெருமையையும் தனித்துவமான பாணியில் சொல்லிக்கொண்டு இருந்தன. "அறுவடை சரியாய் நடைபெறுகிறது. விதைத்தது தானே விளையும் தமிழர் வம்சத்தை அடியோடு அழிக்க நினைத்து முழு நாட்டையுமே அழித்து நிற்கும் “மகாவம்ச” சிந்தனை!" கலை காட்சி கூடம் வாசலில் இருந்த அந்த வார்த்தை, அவளின் அர்ப்பணிப்பு என் சிந்தனையை தூண்டியது. கூட்டத்தின் மத்தியில், நானும் மாயாவும் மீண்டும் எம் பழைய வாழ்வை கனவு கண்டோம். எங்கள் இன்றைய வாழ்வை, அனுபவங்களை பேசினோம். எமது படிப்புக் காலத்தில் பற்றவைத்த தீப்பொறி மீண்டும் எரியத் தொடங்கியது. இரவு நெருங்க நெருங்க, மாயா ஆழ்ந்த மூச்சை இழுத்து என்னிடம் ஒரு புத்தகக் கடையைத் திறக்கும் கனவு இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அந்த கனவை அவள் ஒருபோதும் கைவிடவில்லை என்றும் தன் கல்யாணத்தைப் பற்றியும் நினைவூட்டினாள். நான் அவளை மனைவியாக்கும் என் கனவும் அவளின் கனவுடன் பின்னிப் பிணைந்திருப்பதை உணர்ந்து எனக்குள் மகிழ்ந்தேன். நான் இன்று வணிகத்தில் ஓரளவு வசதியாகவும் செல்வாக்குடனும் இருப்பதால், அவளின் கனவை விரைவில் நிறைவேற்றி, என் கனவையும் மெய்ப்படுத்த புத்தகக் கடையை திறக்கும் நோக்கத்துடன் கொழும்பு பயணமானேன். நாம் இருவரும் சரியான இடத்தில் முறையான புத்தகக் கடையை உருவாக்க இரவு பகலாக திட்டம் போட்டு, ஒரு புது கட்டிடத்தை கட்டி, சுவர்களை வர்ணம் பூசி, அலமாரிகள் மற்றும் அலமாரிகளை நிரப்ப கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் மூலம் ஒரு ஒழுங்கு வரிசையில் நிரப்பி அந்த கடையை திறந்து, "கனவு காண்பவரின் சொர்க்கம்" என்று அதற்கு பொருத்தமாக பெயரிட்டு, வசதியான சூழல், புதிய புத்தகங்களின் வாசனை மற்றும் சுவரில் தொங்கும் துடிப்பான கலைப் படைப்புக்கள் மூலம் ஒரு மாயாஜால சூழலை உருவாக்கி, யாழ் நகரத்தைச் சுற்றியுள்ள மக்களை ஈர்த்து, இந்த கனவு சொர்க்கம் விரைவில் சமூகத்தில் ஒரு பிரியமான இடமாக மாறும் என்ற நம்பிக்கையுடன் புத்தகக் கடையில் அருகருகே நின்று, அவள் கையை என் கையுடன் கோர்த்து, வாடிக்கையாளர்கள் தாங்கள் கவனமாகக் கண்டுபிடித்த கதைகளில் மூழ்குவதைப் பார்த்து, நான் மாயாவிடம், "எங்கள் கனவு நனவாகிவிட்டது" என்றேன். மாயா சிரித்தாள், அவள் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பி, "ஆம், நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக கடையும் நீங்களும் இருக்கிறீர்கள்" என்று பதிலளித்தாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. "நீயின்றி நானில்லை" "நீயின்றி நானில்லை எதோ புலம்புகிறான் நீலவானின் கீழ் உணர்ச்சியில் உளறுகிறான் நீங்காத காதலென்று அவளுக்கு உறுதிகொடுத்து நீதியாய் நடப்பேனென்று சபதமும் செய்கிறான்!" "நீரின்றி உலகில்லை அவளின்றி அன்பில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நாடகம் ஆடுகிறான் நீலகண்டன் நானென்று நஞ்சு கக்குகிறான் நீச்சல் அடிக்கிறான் ஆசை முடியுமட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. "காதல் ஈன்ற இன்பம் மகிழ்ச்சியே!" "புரிந்துணர்வில் புதிய பரிமாணம் கண்டு புத்தம்புது வாழ்வைக் கூடி அமைத்து புதுமை படைக்கும் எண்ணம் கொண்ட புதுமணத் தம்பதிகள் இல்லம் சொர்க்கமே!" "காரணம் தெரிந்து சொற்களை அளந்து காலம் அறிந்து மனம் ஒன்றி காமம் கலந்த பாசம் தரும் காதல் ஈன்ற இன்பம் மகிழ்ச்சியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. "நிலவில் முகம் பார்த்து" "மஞ்சள் நிலவில் முகம் பார்த்து கொஞ்சும் மொழியில் இனிமை கண்டு நெஞ்சம் நிறைந்த காதல் கொண்டு மஞ்சம் காண மணம் முடித்து தஞ்சம் அடைந்தேன் அவள் மடியில்!" "மதியின் அழகு மனதைக் கவர விதியின் பயனில் அவளும் சேர புதிய மலராய் மகிழ்ச்சி மலர பதியாய் என்னை உவந்து ஏற்க கைதி ஆனேன் பாசக் கூண்டில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. "பார்வைத் தீண்டலில் பாவையும் மலர்ந்தேன்" "பார்வைத் தீண்டலில் பாவையும் மலர்ந்தேன் ஆர்வம் கொண்டு ஆவலாய் பார்த்தேன் கர்வம் தொலைத்த கருணை கண்டேன் மார்பில் என் மாயவனை ஏற்றினேன்!" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களின் பேச்சில் கன்னியும் கலங்கினாள் மண்ணின் வாசனையில் மலர்ந்த அவனை பண்பின் மகள் பல்லாண்டு வாழ்கவென்றாள்!" "விழிகளின் நடனத்தில் வித்தைகள் கண்டு மொழியின் அழகில் மொத்தத்தையும் கேட்டு ஆழியின் அலையாய் ஆடி ஓய்ந்து எழில் கொழிக்கும் என்னவனுடன் சேர்ந்தேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. "வரன்" உப்பு கலந்த கடல்காற்றில் செந்நிற பூமியின் வாசனை கலந்த யாழ்ப்பாணத்தின் இதயத்தில், மேல் தட்டு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கதிரழகி, நட்சத்திரங்களுக்குப் போட்டியான அழகு கொண்ட பெண்ணாகக் காணப்பட்டாள். அவள் தன் வீட்டின் நீண்ட பொது அறையில் இருந்த சாளரத்தை ஒட்டி நின்று கொண்டு இருந்தாள். சாளரத்தின் ஊடாக தெரிந்த மேகம் மழை வருவதற்கு அறிகுறியாக சற்று மூட்டமாகக் காணப்பட்டது. அவள் மனதைக் கவர்ந்த அந்த காட்சியை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்த அவளின் மனம், பின்னோக்கி நகர்ந்தது. கதிரழகி, மூத்த மகளாக, கணனி கற்கையில் இளநிலை பட்டம் பெற்றிருந்தாள். அடுத்து முதுகலை பட்டம், வெளிநாட்டில் ஒன்றில் பெறவேண்டும் என்பது அவளின் ஆசையாக இருந்தது. ஆனால் பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் செய்ய விரும்பி, "வரன்" தேட ஆரம்பித்தனர். " உனக்கு இரண்டு தங்கைகள் உண்டு, மற்றும் அப்பாவும் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறார். நீ முதலிலே திருமணம் செய்தால்த்தான், பின் தங்கைகளுக்கும் "வரன்" தேடலாம். அதை மனதில் வைத்துக்கொள். உன் அழகுக்கும் பண்புக்கும் படிப்புக்கும் வரன் கட்டாயம் தேடியே வரும். என்றாலும் நாம் கட்டாயப்படுத்த மாட்டோம். நாம் தெரிந்து எடுத்தவர்களில், உனக்கு பேசி, கொஞ்சம் பழகிப் பிடித்தவரை ஏற்கலாம்." என்று மகளிடம் கூறினாள். தன் கடமையைச் செய்யும் தாய்க்கு அவள் மறுப்புக் கூறமுடியாது. என்றாலும் தன் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதால், பொருத்தமான வெளிநாட்டு வரனுக்குச் சம்மதித்தாள். அவளுடைய குடும்பம் அவளுடைய அழகை மட்டும் வரன் பார்ப்பதில் முதலீடாக வைக்கவில்லை. அவளின் குணம், மற்றவர்களுடன் பழகும் நேர்த்தியான பண்பாடு, தங்கள் குடும்ப அந்தஸ்து இவைகளையும் கருதி அதற்கு நிகரான வரன்களைத் தேடத் தொடங்கினர். "அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய், அரம்போழ் அவ்வளைக் குறுமகள் நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!" அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கடற்கரையில், அங்கே கிடைக்கும் முத்துகளைப் போன்றவை அவளின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்தது போன்ற அழகான வளையல்களை அணிந்து யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற இனிய சொற்களைப் பேசுபவள் தான் அவள். அதனால்த் தான் தாய் வரன் தேடுவதில் பெரிதாகக் கவலைப்படவில்லை. புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே மகளுக்கு பொருத்தமான வரனை காண அவளது குடும்பம் எதிர்பார்த்தது, ஒருவேளை வெளிநாட்டில் வளர்க்கப்பட்ட பொருத்தமான வரன், அவளது திறந்த மனப்பான்மையையும் பாரம்பரியத்திற்கான மரியாதையையும் பகிர்ந்து கொள்வார்கள் என்று கட்டாயமாக நம்பினர். ஆனால் தொலைதூர உறவினர்கள், நண்பர்களிடம் இருந்தும் மற்றும் தரகர்களிடம் இருந்தும் வரன்கள் எனத் தேடத்தொடங்கிய பொழுதுதான், அது நினைத்ததை விட மிகவும் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் தெரிந்தது. வரன் தேடி அலுத்துப்போய், தாய் ஒருநாள் மனம் ஓடிந்தவளாக, இயற்கை அழகை வெறுத்து பார்த்துக்கொண்டு நின்றாள். மூங்கிலாகிய தோள்களையுடைய பெரிய நிலமகளின் நீலமணிகளையுடைய மலையாகிய அழகிய மார்பில், தொலைவிலிருந்து, இரு பக்கங்களிலிருந்தும் வந்து, அசையும் முத்து மாலையைப் போல அசைந்துக் கூடி, கரையில் இருக்கும் மரங்களை மட்டும் அல்ல, இவளையும் இன்று வருத்தி ஓடுகின்றன காட்டு ஆறுகள். "மணி மலைப் பணைத்தோள் மாநில மடந்தை அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல, செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று." தன் மகளின் அழகில், மனம் பறிகொடுத்து வர பல இளைஞர்கள் இருந்தாலும், மேற்படிப்பு படிக்கவேண்டும் என்ற அவளின் ஆசையையும், யாழ்ப்பாண பண்பாடு தொடரவேண்டும் என்ற தன் விருப்பத்தையும் ஒருங்கே நிறைவேற்றக்கூடிய வரன் இழுபட்டுக்கொண்டே இருந்தது. "அம்பும் அனலும் நுழையாக் கன அந்தகாரத்து உம்பர் மழை கொண்டு, அயல் ஒப்பு அரிது ஆய துப்பின் கொம்பர், குரும்பைக் குலம் கொண்டது, திங்கள் தாங்கி, வெம்பும் தமியேன் முன், விளக்கு எனத் தோன்றும் அன்றே. மருள் ஊடு வந்த மயக்கோ!" பவளக் கொடி ஒன்று கார்மேகமான கூந்தலை சுமந்து, குரும்பைகள் போன்ற மார்பகத்தை ஏந்தி, திங்களைப் போன்ற முகம் சுமந்து விளக்குப் போல் மென்மையாய் ஒளிரும் உருவமாய் என் முன் இங்கே தனியாக எரிகிறது என்று மகளின் எழிலில் எதிர்பார்த்த வரன்கள் இலகுவாக விழுவார்கள் என்று யோசித்தவளுக்கு இது ஒரு தோல்விதான்! புலம்பெயர்ந்த தமிழ் மணமகன் தமது முக்கிய மூன்று எதிர்பார்ப்புகளையும் சிறந்ததாக கொண்டு வருவான் என்று நம்பிய கதிரழகியின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் வெளிநாடுகளைத் தேடினர். அவர்கள் ஒரு படித்த தமிழ் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள, மகளின் மேற்படிப்பிற்கு தடையில்லாத வரனில் முதலில் கவனம் செலுத்தினர். தந்தை சிவகுமாரும் எண்ணற்ற ஓய்வு நேரங்களை தொலைத்தூர உறவினர்களுடன், நண்பர்களுடன் அழைப்புகளில் செலவழித்து, பொருத்தமான ஒருவரைத் தேடினார். அவர்களின் முதல் சாத்தியமான ஒருவனாக டொராண்டோவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான அனுஷ் அறிமுகமானான். அனுஷ் நல்ல கல்வியுடனும் மற்றும் நிரந்தர வேலையுடனும், பொருத்தமானவராகவும் தோற்றமளித்தான். ஆனாலும், அவர்களின் முதல் உரையாடலின் போது, அனுஷ் பொருத்தமற்றவன் போல் உணர்ந்தனர். அனுஷ் உணர்ச்சிப்பூர்வமாக தன்னை அந்த உரையாடல்களில் ஈடுபடாமலும் அல்லது அதில் இருந்து விடுபட்டவனாகவும் இருந்தான். மேலும் தமிழ் கலாச்சாரத்துடனான அவனது தொடர்பைக் பட்டும் படாமலும் கேட்ட போது, அவன் அதை தவிர்த்து விட்டான். சிவக்குமார்: “அனுஷ், யாழ்ப்பாணத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் நீங்கள் எப்படி எங்கள் பாரம்பரியங்களுடன் இணைந்திருக்கிறீர்கள்?” குமார்: “சரி, எனக்கு முதலில் நேரமில்லை. தவிர, இரண்டாவதாக இந்த மரபுகள் திருவிழாக்களுக்கு நல்லவையாக இருக்கலாம்? ஆனால் அவை உண்மையில் மூன்றாவதாக டொராண்டோவில் என் வாழ்க்கையில் இது முழுமையாக பொருந்தாது என்று கருதுகிறேன். இந்த அலட்சிய மனப்பான்மை சிவகுமாருக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. அனுஷின் நற்சான்றிதழ்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவனது பாரம்பரியத்தின் மீதான மரியாதையின்மை கவலைக்குரியது என்பதை அவர் உணர்ந்தார். கதிரழகி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய வேர்கள் மீதான தனது அன்பைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு துணையைத் தான் அவள் விரும்பினாள், அவைகளை கண்டும் கொள்ளாவிட்டாலும் அதை, நிராகரிக்கும் ஒருவனை அல்ல. தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைத் தான் அவள் நினைத்தாள். அது திருத்தப்பட்டு, மேம்படுத்தப் படுவதை அவள் எதிர்க்கவில்லை, பண்பாடு என்பது, தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே என்பது அவளுக்கு நன்றாக புரியும். அங்கு ஒரு தொடர்ச்சி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து இன்றுவரை தொடர்கிறது. அதை முற்றாக எறிவது அல்ல என்பதே அவளின் வாதம். லண்டனைச் சேர்ந்த மருத்துவர் அகவழகன் மற்றொரு வரனாகும். அவன் மரியாதைக்குரியவன் மற்றும் கவர்ச்சியானவன், ஆனால் அவனது குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் தான் சவாலானவையாக இருந்தன. இரு குடும்பங்களும் சந்தித்து போது, அகவழகனின் தாயார் கணிசமான வரதட்சணைக்கான தனது விருப்பத்தை நுட்பமாக மறைமுகமாக கூறினார், அந்த நடைமுறையை சிவகுமார் மட்டும் அல்ல கதிரழகியும் வெறுத்தாள். "உங்க பையனோடு குடும்பம் நடத்தத் தானே பெண் கேட்கிறீங்க? உங்க மகனும் நல்ல உத்தியோகம், நானும் படித்தவள், பகுதி நேர வேலை செய்துகொண்டு முதுகலை பட்டத்துக்கும் படிக்கப்போகிறேன், எனவே உங்க மகனுக்கு சமனான சம்பளம் கட்டாயம் நான் உழைப்பேன். நீங்களும் வசதியானவர்கள். அப்படி என்றால், ஏன் இந்த வரதட்சணை?" என வெடுக்கென கேட்டுவிட்டாள். அகவழகனின் தாயார்: “நாங்கள் பாரம்பரியத்தை மதிக்கிறோம், திருமண ஏற்பாடுகளில் சில விடயங்கள் இயல்பாக வரும். அது தான் வரதட்சணை ... என்று இழுத்தாள் சிவக்குமாரின் குரல் கடினமாகியது. “மேடம், கதிரழகியின் மதிப்பு அவளுடைய குணத்தில் இருக்கிறது, பொருள் செல்வத்தில் இல்லை. நாங்கள் பேரம் பேசவில்லை; நாங்கள் குடும்பத்தைத் தேடுகிறோம்." என உறுதியாகக் கூறினார். பல வாரங்கள் தோல்வியடைந்த சந்திப்புகளுக்குப் பிறகு, சிவகுமாரும் அவரது மனைவியும் ஒரு அமைதியான தருணத்தைப் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். சிவக்குமார்: “ஒருவேளை நாம் தவறான இடங்களில் தேடியிருக்கலாம். வெளிநாடுகளில் உள்ள நம் மக்கள் மாறிவிட்டனர். அவர்களின் மரபுகள், மதிப்புகள் மாறிவிட்டன. தேடலை வீட்டிற்கு கொண்டு வருவதற்கான நேரம் இதுவாக இருக்கலாம்." என மனைவியிடம் கூறினார். அதன் பிறகு, பல மாத அலுப்பான முயற்சிகளுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் தாயகத்தின் பகிரப்பட்ட வரலாறு, மதிப்புகள் மற்றும் கலாச்சார வேர்களுடன் கதிரழகிக்கு தகுதியான ஒருவரைக் கண்டு பிடிக்க உதவும் என்ற நம்பிக்கையில், யாழ்ப்பாணத்திற்கே தங்கள் தேடலைத் திருப்ப முடிவு செய்தனர். ஆனால் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில், யாழ்ப்பாணமும் மாறிவிட்டது. மக்கள் அமைதியான வடுக்களை சுமந்தனர் மற்றும் இழப்பு, பின்னடைவு மற்றும் கஷ்டங்களை எதிர்கொண்டு முன்னேற்றத்திற்கான உந்துதல் ஆகியவற்றால் எப்போதும் மறுவடிவமைக்கப்பட்டனர். பகிரப்பட்ட வரலாறும் நெகிழ்ச்சியும் உள்ள இந்த மண்ணில் கதிரழகியின் கனவுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவனை கண்டுபிடிக்க மாட்டோமா என்ற தாயின் வேண்டுதல் ஒன்று இரண்டு அல்ல. யாழ்ப்பாணம் உள்நாட்டுப் போரின் முடிவில் இருந்து, நகரம் மெதுவாக உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மீண்டும் கட்டமைக்கத் தொடங்கியது. கட்டிடங்களில் இன்னும் அழிவின் தடயங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை கதிரழகியின் குடும்பம் நன்றாக அறியும். யாழ்ப்பாண மக்கள் பல வருடங்களாக கஷ்டங்களை அனுபவித்தனர், இன்றும் அவர்கள் அன்றாட சவால்களை எதிர்கொண்டனர் - வரையறுக்கப்பட்ட வளங்கள், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் மாறிவரும் சமூகமாக இருக்கிறது. முதல் தகுதியுடையவராக, இமையன் என்ற ஒரு பள்ளி ஆசிரியரை கருத்தில் கொண்டனர். இவர் பணிவானவராகவும், மிகுந்த இரக்கமுள்ளவராகவும். மரியாதைக்குரியவராகவும் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஆர்வம் கொண்டவன். அறிவே சிறந்த எதிர்காலத்திற்கான பாதை என்பது அவனின் வாதம். இமையன்: "இங்குள்ள எங்கள் இளைஞர்களின் மனதை வளர்ப்பதில் நான் நம்புகிறேன். யாழ்ப்பாணத்திற்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தைப் பார்க்கவும், தங்கள் வாழ்வை மீளக் கட்டியெழுப்பவும், அதனால் ஒரு மாற்றத்தைக் தங்களுக்கு கொண்டுவரவும் அவர்கள் தகுதியானவர்கள் என்பதே என் கருத்து" என்றான். கதிரழகி அவனது அர்ப்பணிப்பைப் போற்றினாள், ஆனால் அவன் தனது ஊருக்கு அப்பாற்பட்ட வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கும் அவளது ஆர்வத்தை புரிந்துகொள்வானா என்று யோசித்தாள். அவள் அவனது கருணையால் ஈர்க்கப்பட்டாலும், அவனது கனவுகள் யாழ்ப்பாணத்தில் உறுதியாக வேரூன்றி இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதே நேரத்தில் அவளது கனவுகளும் அவளுக்கு முக்கியமாக இருந்தது. அவன் அதைப்பற்றி ஒன்றும் கூறாதது அவளுக்குள் ஐயப்பாடுகளை ஏற்படுத்தியது. சில நாட்களுக்குப் பிறகு, வெளிநாட்டில் மேற்படிப்பு படித்து, அங்கேயே நிரந்தர விரிவுரையாளர் பதவி பெற்ற கமலன் என்ற இளைஞனிடமிருந்து அவளது குடும்பத்திற்கு ஒரு முன்மொழிவு கிடைத்தது, அவன் பொங்கல் விழாவுக்கு, தனது அயலவரின் விவசாயத் தொழிலுக்கு தன்னால் இயன்ற உதவி செய்யவும், ஊரில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவும் வருவதாக அவனின் விவசாய தந்தை அவர்களுக்கு அறிவித்து, அப்பொழுது நேரடியாக மேற் கொண்டு கதைப்போம் என்று கூறினார். கமலன் வெளிநாட்டில் இன்று வாழ்ந்தாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் என்ற ஆழமான உணர்வோடு இரண்டு பண்பாடையும் சமப்படுத்தினான். அவன் முன்னோக்கிச் சிந்திக்கும் மனதைக் கொண்டிருந்ததுடன் அவன் செய்த எல்லாவற்றிலும் அவனது அடிப்படை பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் அவனது வேர்களை நெருக்கமாக வைத்திருந்தான். "பண்டே உலகு ஏழினும் உள்ள படைக் கணாரைக் கண்டேன்; இது போல்வது ஒர் பெண் உருக் கண்டிலேனால்; உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே." முன்னமே பல நாடுகளிலும் இருக்கும் மகளிரைப் நான் பார்த்துள்ளேன்: இவள் போல் ஓர் பெண் அழகை நான் என்றும் கண்டதில்லை. என் தங்கை மெல்ல என் காதில் கூறிய சாதாரண பெண்களிலிருந்து மாறுபட்ட இந்த எழில் வடிவத்தை கொண்ட, வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய, அந்த இளநங்கை இவளெயென அவன் மனதில் கருதினான். அவன் வெளிநாட்டில் படித்ததைப் பற்றியும், தனக்குக் கிடைத்த நண்பர்களைப் பற்றியும், அங்கே தனது வாழ்க்கை பற்றியும் கூறியதுடன், தான் படிப்பிக்கும் பல்கலைக்கழகத்திலேயே மேற்படிப்பிற்கு ஒழுங்கு செய்வதாகவும் கதிரழகி இடம் கூறினான். கமலன்: “எனக்கு இங்கிலாந்தில் நிரந்தர வதிவிட வாய்ப்புகள் கிடைத்தாலும் நான் இருக்கும் இடம் யாழ்ப்பாணம் என்று தான் எண்ணுகிறேன், நாம் இழந்ததை, நாம் எங்கு இருந்தாலும், மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எமக்கு இங்கு வேலை இருக்கிறது. எமது எதிர்காலத்தை நான் இங்கே பார்க்கிறேன்!" என்று கூறினான். கதிரழகியின் உள்ளம் நம்பிக்கையால் துடித்தது. கமலனில், அவள் தேடும் சமநிலையை அவள் உணர்ந்தாள் - பாரம்பரியத்தை மதிக்கும் ஆனால் மாறுவதற்கான திறந்த மனப்பான்மை கொண்ட ஒருவனை, வேர்களுக்கும் இறக்கைகளுக்கும் இடையிலான நுட்பமான நடனத்தைப் புரிந்துகொண்ட ஒருவனை, அதாவது கடந்த காலத்திற்குக் கட்டுப்படாமல், ஆனால் அதற்கு மரியாதை செலுத்தும் ஒருவனை, புதிய தொடக்கங்களுக்குத் மனம் திறந்திருந்தாலும் பழைய நினைவுகளைப் போற்றும் ஒருவனை அவள் கண்டாள். அது மட்டுமா கண்டாள் ? "இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும், சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும், சுந்தர மணி வரைத் தோளுமே அல முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!" ’என்னை வருத்துவது எது? இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? நிலவைப் போன்ற முகமா? நீண்ட கைகளா? அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’ ‘இவை எதுவுமே இல்லை, எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’ என்று எண்ணினாள். அவர்கள் தொடர்ந்து பேச பேச, தொடர்ந்து சந்திக்க சந்திக்க அவர்களின் தொடர்பு ஆழமானது. கமலனின் மென்மையான இயல்பும் திறந்த மனப்பான்மையும் அவளைக் கவர்ந்தன, அவளுடைய குடும்பமும் அவ்வாறே உணர்ந்ததை அவள் அறிந்தாள். ஓர் சில நாட்களின் பின், இரு குடும்பங்களும் மீண்டும் ஒருமுறை சந்தித்தனர், கமலனின் பெற்றோர் முறைப்படி கதிரழகியை மணமகளாக கேட்டனர். இரு குடும்பங்களும் தங்களுக்குள் அர்த்தமுள்ள பரிசுகளை பரிமாறினார். "மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து இன் துணை அன்னமும் எய்தி இருந்தார் ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்." நறுமணப் பொருள்களின் நல்வாசத்தோடு வந்து, திருமணத்துக்குரிய ஆசனங்களில் ஏறி, பெருமைக் குணங்களை உடைய வெற்றிவீரனான கமலனும், அவன்மீது பேரன்பு கொண்டவளாய், அவனுக்கு இனிய துணையாக ஆகவுள்ள அன்னம் போன்ற கதிரழகியும் நெருக்கமாக வீற்றிருந்தார்கள். ஒன்றோடு ஒன்று இணைந்த பேரின்ப வாழ்வு போலவும் ஒருங்கிணைந்த வாழ்க்கை நெறி போலவும் இருந்தார்கள். அதைக்கண்டு மகிழ்ச்சியடைந்த கதிரழகியின் தந்தை, தான் தேடிய "வரன்" மணக் கோலத்தில் மகளுக்கு அருகில் இருப்பதைக் கண்டு, தானே இயற்றிய பாடல் வரியை வாசித்தார், அவரது குரல் உணர்ச்சியால் திணறியாது. "நம்பிக்கையும் அன்பும் ஒன்று சேர இதயங்கள் இரண்டும் கலந்து கொள்ள விடியலை உடைக்கும் ஒளிக் கதிர்களாய் புயல் காலங்களிலும் மலரும் தாமரையாய் அண்ணலும் நோக்க அவளும் நோக்க ஒன்றாக நீங்கள் நடந்து செல்வீர்களே!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. "தமிழ்மொழிப் பற்று" [அந்தாதிக் கவிதை] "தமிழ்மொழிப் பற்று ஓங்கட்டும் வளரட்டும் வளரும் குழந்தைகள் தமிழில் கதைக்கட்டும் கதைக்கும் ஒவ்வொன்றும் உண்மையைப் பேசட்டும் பேசும் போது நிதானம் இருக்கட்டும்!" "இருக்கும் நிலையை ஆராய்ந்து செயல்படட்டும் செயல்படும் அத்தனையும் நன்மை கொடுக்கட்டும் கொடுக்கும் இதயம் எவருக்கும் வேண்டும் வேண்டும் பொழுது எல்லோரையும் நினைக்கட்டும்!" "நினைக்கும் எதுவும் உண்மையைச் சொல்லட்டும் சொல்லும் செயலும் ஒன்றாய் மலரட்டும் மலரும் ஒற்றுமை இணைக்கட்டும் எல்லோரையும் எல்லோருக்கும் ஓங்கட்டும் தமிழ்மொழிப் பற்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. "குடையின் கீழ் தாயும் மகனும்" [படக் கவிதை] "குடையின் கீழ் தாயும் மகனும் எடுபிடி வேலையில் சிறு ஓய்வு! குட்டிச் சிறுவன் பசி தீர்க்கிறான் நனைந்த ஆடை வலியைக் காட்டுது வருடித் தாய் கருணை பொழிகிறாள்!" "செங்கல்லும் சுத்தியலும் அருகில் கிடக்குது அங்கங்கள் படும் பாட்டைக் குறிக்குது! தங்கமான மனசு வேதனைப் படுகுது குங்குமப் பொட்டு அழிந்து போயிட்டு மங்கலான வாழ்வை ஒளியேற்றத் துடிக்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. எல்லோருக்கும் நன்றிகள்
  11. "நீயில்லா நானும் நீலமில்லா வானம்" "நீயில்லா நானும் நீலமில்லா வானம் நீரில்லா ஆறு மீனில்லா ஓடை வேரில்லா மரம் பட்டு விழும் ஊரில்லா இடம் காடாய் மாறுமே!" "காதல் கொண்ட என் பெண்ணே மோதல் தவிர்த்து அருகில் வந்திடு சாதல் கூட இன்பம் தருமே கூதல் காய மடியைத் தந்தால்!" "ஊடல் ஒன்றும் புதுமை இல்லை கூடல் உன்னுடன் வரும் என்றால் தேடல் கொண்டு மனம் வாடுது விடலைப் பருவம் உன்னை நாடுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. "விவசாயி" இலங்கையில் உடவலவ நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசமாக இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இங்கு விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக இந்த நீர்த்தேக்கம் உள்ளது. கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தான் இரத்தினபுரி ஆகும். இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை இன்று அங்கு குறைந்து வருகிறது. ஐந்துக்கு மேற்பட்ட தமிழ் பாடசாலைகளையும் பிரசித்திபெற்ற சிவன் கோவில், மற்றும் ஜும்மா மசூதி அங்கு காணப்படுகிறது. இங்கு விவசாய குடும்பத்தில் பிறந்த ரமேஷ் என்ற இளைஞன் வாழ்ந்துவந்தான். உயர் வகுப்புவரை இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றாலும், அதன் பின் உயர் கல்வியை தொடராமல், தந்தையின் விவசாயத்தில் முழுநேரம் கவனம் செலுத்தினான். அவன் எளிய விவசாயியாக தொடக்கத்தில் இருந்தாலும், தனது நிலத்திற்கான அர்ப்பணிப்பிற்காகவும், தனது பயிர்களின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் அவன் வாழ்ந்த கிராமம் முழுவதும் நன்கு அறியப்பட்டான். என்றாலும் அவனுக்குள் ஒரு குறை. தனது பாடசாலையில் படித்த சக மாணவியும் அந்த கிராமத்து குயவனின் மகள் மீரா, அவன் பாடசாலையில் படிக்கும் மட்டும் மிக அன்னியோன்னியமாக அவனுடன் நெருங்கி பழகியவள், உயர்வகுப்புக்கு பின்பு பல்கலைக்கழகம் புகுந்ததும், ரமேஷ் பல்கலைக்கழகத்தை நிராகரித்து, தந்தையின் பரம்பரை விவசாயத்துக்கு போனதும் மெல்ல மெல்ல விலகியது அவனுக்கு மிக கவலையை கொடுத்தது. உலகத்து உயிர்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற இயற்கை உணர்வு தான் காதல். அதில் ஈடு கொண்ட ஒரு மனம் தனது துணையைப் பற்றி காணும் கனவுகளும், கற்பனைகளும் எத்தனை எத்தனை? என்றாலும் அவனுக்கு இன்று வெறுப்பு வெறுப்பாக உள்ளது. நன்றாக சிவந்துபோன நாக்கு, அணிசேர்ந்ததுபோல அழகான சிறிய பற்கள், குறைவான பேச்சு உள்ள அந்த மீராவை, அவள் இன்று தூர விலகி போனாலும், அவனால் மறக்கமுடியவில்லை. பொதுவாக காதல் தோல்வி அடைந்தாலோ அல்லது காதலி இடையில் விலகிப் போனாலோ நாம் அழுது வடிப்போம், மன அழுத்தத்தில் மௌனமாவோம், குடி உள்ளிட்ட போதைகளில் ஈடுபடுவோம் ... இப்படி எத்தனை எத்தனையோ, ஆனால் ரமேஷ் இவைகளில் இருந்து வேறுபட்டவன். ஒரு பெண்ணுடன் நீங்கள் ரசித்து உரையாடி உங்களை மறக்க அவளின் அழகு தான் பணப்பை விட முதலில் நிற்கிறது என்பதே உண்மை. அழகு என்பது ஒவ்வொரு பெண்ணும் அணியும் முகமூடி. அழகு என்பது காதலுக்கும் நமக்கும் இடையில் தோன்றும் மூடுபனி என்பதை உணர்ந்த அவன், எப்படி அவன் மீராவிடம் முழுக்கவனம் கொண்டு காதலித்தானோ, அதைவிட பலமடங்குடன் சூரியன் தினம் தினம் முத்தமிடும் வயல்களைத் காதலிக்கத் தொடங்கினான். சில ஆண்டுகள் கழிய, ரமேஷ் விவசாயத்தில் பெரும் முன்னேற்றம் கண்டு, இன்று அந்த கிராமத்தில் இளம் தலைவர்களில் ஒரு பெரும்புள்ளியாக பண்பிலும் செல்வத்திலும் உயர்ந்து, சில விவசாயத்துடன் தொர்புடைய தொழிற்சாலைகளின் அதிபதியாகவும் இருந்தான். என்றாலும் அவன் தன்னை விவசாயி என்று சொல்வதிலேயே பெருமையடைந்தான். ஒரு நாள், பருவமழை இயற்கையை பச்சை நிறத்தில் வர்ணம் பூசும்போது, தன்னிடம் கார் இப்ப இருந்த பொழுதிலும், எந்தவித பெருமையும் இல்லாமல், மாட்டுவண்டி ஒன்றில் ரமேஷ் தனது வயலுக்கு கிராமத்து குயவனின் மகள் மீராவின் வீட்டை கடந்து போனான். அவன் மனதில் இன்றும் மீரா ஒரு மூலையில் இருந்துகொண்டுதான் இருந்தாள். ஒவ்வொரு காதல் நினைவும் விசேடமானதுதான் ... அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும், அந்த உணர்வை காதலியிடம் அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி, பதட்டம், உணர்ச்சிப் பெருக்கு .. மறக்க முடியாத பசுமையான நினைவுகளே! கிராமத்துப் பாதைகளை அலங்கரித்த மணம் கமழும் மலர்களைப் போல அவளது கதிரியக்கச் சிரிப்பு வசீகரமாக அன்று அவனுக்கு இருந்தாலும், இன்றும் அவன் அந்த முதல் காதலை மறக்க முடியாவிட்டாலும், அவளின் பிரிவுதான், அது கொடுத்த வைராக்கியம் தான் இன்று தன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்ததை அவன் எப்படி மறப்பான்? "உன் முதல் பார்வையே என்னை முட்டாள் ஆக்கியதை இன்றுவரை உணர்கிறேன் ..., உன்னை நினைத்து சிரிக்கிறேன் உன் கடைசி பேச்சு என் மூளையில் நீங்காத அழிக்க முடியாத கல்வெட்டு வாசகம் ... அதுதான் நான் யார் என்று எனக்கு உணர்த்திய வாசகம்!" அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். "அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்" அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய காட்டுமல்லிகைச் செடியையும், பசியமரலையையும் களைந்தெறிவைத்து போல மீராவை ஏறிய ரமேஷ் ஆசைப்பட்டாலும், அவனால் முழுமையாக ஏறிய முடியவில்லை. அவன் அவளின் வீட்டை கடக்கும் பொழுது, அவனது கண் அவனை அறியாமலே அவளது வீட்டை நோட்டமிட்டது. அவள் அங்கு முற்றத்தில் தந்தையுடன் எதோ கதைத்துக்கொண்டு நின்றாள். "வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப, கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, " மூங்கீலென திரண்ட தோளினையும். மணத்தால் வெறியூட்டும், வளர்ந்த, ஐம்பால் ஒப்பனை செய்யப்பட்ட கூந்தலையும், மான் பார்வையை வென்ற மருண்ட பார்வையையும். மயில் போன்ற சாயலையும் ,அழகிய சிலம்பில் உள்ளிருக்கும் மணிகளால் ஆன கலங்களை உடைய, நடக்கும்போது ஒளி வீசி இமைக்கும் அணிகலன்களையும் . கொடியா, மின்னலா, அணங்கா என்று எண்ணும்படித் கண நேரத்தில் யாதென்றே தெரியாத அந்த மெல்லிய இடையை அவன் கண்கள் எந்த வெட்கமும் இன்றி நாடிச் சென்றன. 'ஐயா கொஞ்சம் நில்லுங்கள். என்று மீராவின் அப்பா கூப்பிட்டுக் கொண்டு படலைக்கு வெளியே வருவதைக் கண்டான். 'மீரா பட்டம் பெற்றுவிட்டாள், வேலை தான் கிடைக்கவில்லை. உங்க தொழிற்சாலையில் பயிற்சி முகாமையாளர் பதவி வெற்றிடம் என்று அறிந்தேன். அதை ... ' என முடிக்கமுடியாமல் முடித்தார். கொஞ்சம் தூர முற்றத்தில் நின்ற மீராவை, ரமேஷ் வேலிக்கூடாக பார்த்தான். அவள் தலை குனிந்தபடி, கால் விரலால் எதோ மண்ணில் எழுதிக்கொண்டு இருந்தாள். கொஞ்சம் உற்றுப்பார்த்தான். ஆங்கிலத்தில் வெரி சாரி என்று அது இருந்தது. ரமேஷ் கொஞ்சம் உரத்து, மீராவின் காதில் விழக்கூடியதாக, 'என் தொழிற்சாலைகள் விவசாய உற்பத்தியையும், விவசாயத்துக்கு தேவையானவற்றையும் அடிப்படையாக கொண்டவை. உங்கள் மகள் பட்டதாரி, இதற்கு உடன்படுவாரா ?' என்று கேட்டுக்கொண்டு 'அவர் சரி என்றாள், வரும் திங்கட் கிழமை காலை பொது முகாமையாளரை விண்ணப்ப பத்திரத்துடன் அலுவலகத்தில், நேர்முகப்பரீட்சைக்கு சந்திக்கலாம்' என்று கூறிவிட்டு, மீராவின் அப்பா அதற்கு பதில் சொல்லமுன்பு ரமேஷ் புறப்பட்டுவிட்டான். மீரா தன்னை மிகவும் அழகாக அலங்கரித்துக் கொண்டு, கொஞ்சம் முந்தியே ரமேஷின் தொழிற்சாலைக்கு போனாள். அங்கு ரமேஷ் இல்லை. பொது முகாமையாளர் அவளின் விண்ணப்பத்தை பெற்றுவிட்டு, கொஞ்சம் காத்திருப்பு அறையில் இருக்கும்படி கூறினார். கடும் வரட்சி காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து, உடவளவ நீர்த்தேக்கத்தின் கீழ் அறுவடை செய்யப்பட்ட 65,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டதால், ரமேஷ் விவசாயிகளுக்கு தலைமை வகுத்து, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு இரண்டு தவணை நீருக்காக சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து 27 மில்லியன் கனமீற்றர் நீரை 10 நாட்களுக்கு பெற்றுக்கொள்ள ஒரு ஏற்பாடு செய்யும் முகமாக பேச்சுவார்த்தை ஒன்றுக்கு போய் இருந்தான். என்றாலும், தற்போது 87 மில்லியன் கனமீற்றராக உள்ள சமனலேவாவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 60 மில்லியன் கனமீட்டராகக் குறைவடைந்தால், இலங்கை மின்சார சபையானது தென் மாகாணத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என்று கொடுக்க மறுத்து, அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. இதனால் கடும் கோபத்துடன் மதியம் அளவில் அலுவலகம் திரும்பினான். ரமேஷ் கொஞ்சம் அவசரமாகவும் கோபத்துடனும் தனது அலுவலகத்துக்குள் நுழைவதை கண்ட மீரா, கொஞ்சம் பதற்றத்துடன் எழும்பி நின்று கவனித்தாள். அவன் அவளை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. அவளின் அலங்காரம், அழகு அவனுக்கு இப்ப ஒரு பொருட்டு அல்ல. அவன் எண்ணம் எல்லாம் நீர் பற்றாக்குறையினால் அழிந்து வரும் நெற் கதிர்களே! இன்னும் காத்து இருப்பதா, இல்லை பேசாமல் போவதா என்று மீராவுக்கு புரியவில்லை. அவள் எழும்பிய படியே நின்றுவிட்டாள். திரும்பி மீண்டும் இருக்கவில்லை. ஒரு பத்து நிமிடத்தின் பின், அவள் இனி பிரயோசனம் இல்லை என்று மனதில் நினைத்தபடி, வீட்டிற்கு திரும்பி போக ஓர் இரு அடி எடுத்து வைத்தாள். அப்பொழுது பொது முகாமையாளரிடம் இருந்து 'மீரா, நீங்க உள்ளே வரலாம்' என்ற சத்தம் கேட்டது. அவள் உள்ளே வந்ததும், பொது முகாமையாளர், 'உங்களுக்கு தேவையான தகுதி இருக்கிறது, எமது முதலாளியும் சம்மதித்துவிட்டார். நாளையில் இருந்து ஒரு ஆண்டுக்கு பயிற்சி, அது வெற்றிகரமாக முடித்தால், பணி நிரந்தரமாகும். சம்பளமும் மேலும் அதிகரிக்கும். உங்களுக்கு தேவையான பயிற்சியை பெரும்பாலும் எம் முதலாளி ரமேஷ் தருவார்' என்று சொல்லி, உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று விடைகொடுத்தார். ரமேஸுக்கு தனது நன்றியை கூற மீரா விரும்பினாலும், ரமேஷ் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வரவே இல்லை. ஆனால் அவன் ஒரு விவசாயியாக, ஓரளவு நீரை வழங்கி, அழியும் பயிர்களை கொஞ்சமாவது காப்பாற்ற, மொனராகலை மாவட்டத்தில் உள்ள 11 குளங்களில் இருந்து ஒரு பகுதி வெலி ஓயா அணையின் ஊடாக உடவலவை நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்ல, மொனராகலை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தான். அடுத்த நாள், மீரா தனது பயிற்சியை தொடங்க அலுவலகம் வந்தாள் ரமேஷ் அவளுக்கு அடிப்படை பயிற்சிக்கான விளக்கத்தை கொடுத்ததுடன், நேரடியாக விவசாயம், மற்றும் அதனுடன் தொடர்புடையனவற்றை செய்முறையில் அறிவது அவசியம் என்பதை கோடிட்டு காட்டி, வயலில் அவளை கொஞ்ச மாதத்துக்கு பயிற்சி எடுக்க அனுப்பினான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தைப்பற்றி அறியத் தொடங்க, அவர்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடத் தொடங்கினர், அவர்கள் தங்கள் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் பரந்த பரப்பிற்கு கீழே விவாதித்தனர். அதுமட்டும் அல்ல, அவர்களின் பிணைப்பு ஆழமான நிலையில், மீரா நிலத்தின் மீதான தனது அன்பைப் பகிர்ந்து கொண்டதை ரமேஷ் கண்டுபிடித்தார். அவள் அடிக்கடி அவனுடன் வயல்களுக்குச் சென்றாள், அவளுடைய வேகமான விரல்கள் பழுத்த காய்கறிகளைப் பறிக்கவும், செடிகளை மென்மையாகப் பராமரிக்கவும் உதவின. வயல்வெளிகளுக்கும் மண்ணின் நறுமணத்துக்கும் நடுவே அவர்களது காதல் மீண்டும் மலர்ந்து, கிராமத்துச் சுவர்களில் ஏறிச் செல்லும் கொடிகள் போல இதயத்தைப் பின்னிப் பிணைந்தது. நல்ல உள்ளம் காதலின் பூஞ்சோலை; அன்பின் வளமான வயல்வெளி. இவைதாம் இதயத்தின் அழகு. இவை இல்லாத இதயம் வறண்ட பாலை நிலம்தான் என்பதை அவள் உணர்ந்து, தான் முன்பு விட்ட தவறுக்கு ரமேஷ் இடம் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்! "சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு" "தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி அல்ல பாடம்படி பவளக்கொடி உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. "வானுயர்ந்த கற்பனைகள்" "வானுயர்ந்த கற்பனைகள் மனதில் ஓங்கட்டும் மண்ணுயிர் எங்கும் கருணை பொழியட்டும் வாட்டமற்ற செயல்கள் உலகைத் தழுவட்டும் கூட்டம்போடும் ஆடம்பரம் ஒழிந்து போகட்டும் விண்ணில் தோன்றும் வானவில் போல் கண்ணில் காணும் கனவு ஒளிரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. “பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி..” “பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி இளந்தாரி வயலைக் கிளற ஆடிப்பட்டம் தேடி விதைக்க காணி ஏங்கும் பயிர்கள் முளைக்க கூடிக் குலாவி மகிழ்வாக இருக்க பூத்து குலுங்கும் வாழ்வு தந்தானே!" "பத்தாது காணாது இனி இல்லையே மெய்யாச் சொல்லுகிறேன் கேளடா கதிரையில் காய்பவன் நாமல்ல கடுதாசியில் திட்டம்போடும் சோம்பேறி வேண்டாம் பெட்டை பெடியன் வெளிக்கிட்டு வெள்ளாமைசெய்ய கெதியாய் பூக்கும் வன்னி மண்ணே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. "இடையது கொடியாய் இளமையது பொங்க" "இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தந்தவளே!" "அழகில் மயிலாய் அன்பில் தாயாய் ஆனந்தத் தேனாய் ஆசைக்கு நாயகியாய் வானின் தேவதையாய் வாழ்க்கைக்கு துணையாய் தன்னையே தந்து தந்திரமாய் பறித்தவளே!" "பணிந்து உன்னை பலவாறு காட்டி பண்பின் திறனை பலவாறு விளக்கி பருவ எழிலை பலவாறு வீசி பந்தத்தை ஏற்படுத்தி பத்தினியாய் வந்தவளே!" "என்னை அறிந்து எல்லாம் தந்து இன்பம் அளித்து இடர்கள் அகற்றி சிந்தை தெளிவாக்கி சிற்றறிவை பேரறிவாக்கி துன்பம் களைய துணை கொடுத்தவளே!" "ஏகாந்தம் இனிதென ஏற்று வாழ்ந்தவனை வலிந்து அணைத்து வலிகள் தணித்து காதோடு சொல்லி காமம் தெளித்து குமிழி வாழ்க்கையை குதூகலம் ஆக்கியவளே!" "வாழ்வின் அர்த்தத்தை வாழ்த்தி எடுத்துரைத்து வசந்தத்தை ஏற்படுத்தி வருத்தம் நீக்கி களைப்பும் சோர்வும் கலந்த மனதை சிரிப்பு பூக்களால் சிந்தையை மயக்கியவளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
  16. "புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 08 [முடிவுரை] சங்க கால தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் ஆட்சி புரிந்தனர். இலக்கிய குறிப்புகளிலிருந்து இந்த மரபுகளின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ளலாம். தற்காலத்திய கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறை முகங்கள் தொண்டி மற்றும் முசிறி. பனம்பூ மாலையை அவர்கள் அணிந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த, புகழூர் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு [புகலூர்க் கல்வெட்டு] சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப் பத்தும் கூறுகிறது. பெரும்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த மாவீர அரசர்களாவர். இங்கு சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனது இளம் சகோதரரான இளங்கோ அடிகள் தான் சிலப்பதிகாரத்தை இயற்றியவர் ஆவார். செய்குட்டுவனின் படையெடுப்புகளில் அவன் மேற் கொண்ட இமாலயப் படை யெடுப்பு குறிப்பிடத் தக்கதாகும். மற்றும் பல்வேறு வட இந்திய ஆட்சியாளர்களை அவன் முறியடித்தான் என்பது குறிப்பிடத் தக்கது. தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப் பட்டது. சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகால சோழன் ஆகும். அவனது இளமைக் காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. அவனது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. மேலும் பல ஏரிகளையும் அவன் வெட்டுவித்தான். தற்காலத்திய தெற்குத் தமிழ் நாட்டில் சங்க காலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலை நகரம் மதுரை. நெடியோன், பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னவர்களாவர். மற்றும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவலன் கொல்லப்படவும், கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். தற்கால தஞ்சை மாவட்டத்திலிருந்த தலையாலங்கானம் என்ற இடத்தில் நடை பெற்ற போரில் எதிரிகளை வீழ்தியதால் அவருக்கு இப் பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக, நெடுஞ்செழியன் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசன். களப்பிரர்கள் படையெடுப்பின் விளைவாக சங்க காலப்பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. சங்க காலத்தில் குறுநில மன்னர்களும் முக்கிய பங்காற்றினர். சேர, சோழ, பாண்டி ஆட்சியாளர்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தவர்கள் என்ற போதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் மாவீரர்களாகத் திகழ்ந்தனர். போர்முறைகளும் விதிகளும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே வருகின்றன. வாளையும் ஈட்டியையும் கொண்டு போரிட்ட சங்க காலத்துப் போர் முறைகள் ஒருவிதம். துப்பாக்கியையும் பீரங்கியையும் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு போரிட்ட முறைகள் இன்னொரு விதம். இப்போதோ அணுகுண்டு, ஹைடிரஜன் குண்டு போன்ற அணு ஆயுதங்கள், வேதியியல் நச்சுகள், உயிரியல் அழிப்புப் போர்முறைகள் இன்னொரு விதமாக இருக்கின்றன. சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டவை. அக்காலத்தில் நிகழ்ந்த பல போர்ச் சம்பவங்களைப் புறநானூறும் பதிற்றுப்பத்தும் விளக்குகின்றன. தொல்காப்பியத்தில் புறத் திணையியலும் போர்ச் சம்பவங்களைப் பற்றியே எடுத்துரைக்கிறது. போர்க்களத்தில் பயன்படுத்த வேண்டிய நியமங்கள் என்ன என்பனவற்றை எல்லாம் நேரடியாக அறிய வழியில்லை. கிடைக்கும் சில சில இலக்கியக் குறிப்புகளை வைத்து ஊகிக்க வேண்டிய நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இந்த இலக்கிய குறிப்புக்கள், சங்க கால பாடல்கள், புலவர்கள் தமக்கு பரிசுகள் வேண்டி, அதற்காக புகழ்ந்து பாடியவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன. மேலும் போருக்கு இலக்கணம் கூறும் புறநானூற்றுப பாக்களிலும் பார்ப்பனர்களுக்கு ஆதரவான கூற்றுகளே இடம் பெறுகின்றன. உதாரணமாக, பசுக்களைக் கொல்லக் கூடாது, பசுப்போன்ற பார்ப்பனரைக் கொல்லக் கூடாது [?], புதல்வரைப் பெறாதவர்களைக் கொல்லக் கூடாது போன்ற விதிகள் சொல்லப் பட்டுள்ளன. ஆனால், புதல்வரைப் பெறாதவரைக் கொல்லக்கூடாது என்ற விதி இருப்பதைப்போல புதல்வியை (மகளை)ப் பெறாதவர்களைக் கொல்லக் கூடாது என்ற விதி அங்கு காணப் படவில்லை. இவ்வாறு பார்ப்பன ஒழுக்கங்களே புறநானூற்றில் விதிகளாகச் சொல்லப்படுகின்றன. பெண்களைக் கொன்று விட்டால் சந்ததி அற்று அல்லது குறைந்து போய்விடும், பிறகு போரிடுவதற்கு போதுமானவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் பெண்கள் போரில் விதிவிலக்குப் பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன். பழங்காலத்தில் நேருக்கு நேர் வாள், வில், ஈட்டி முதலியன கொண்டு போரிடும் முறையே இருந்தது. எந்தச் சமூகத்திலும் சண்டை செய்வதற்கு என சில விதிகள் இருக்கவே செய்யும். உதாரணமாக, நேருக்கு நேர் ஆட்கள் போரிடும் பழங்கால முறையில், எந்த நாட்டிலும் முதுகில் தாக்குவது ஏற்றுக் கொள்ளப் பட்டதில்லை. புறமுதுகிட்டு ஓடும் எதிரியையும் ஆடைகழன்ற நிலையில் நின்றோரையும் மேய்ச்சல் நிலத்தில் வீழ்ந்தோரையும் நீரில் பாய்ந்தோரையும் படைக்கலமின்றி நிர்க் கதியாய் நிற்போரையும் தாக்குதல் கூடாது என்பவை பொதுவான அக்கால விதிகள் என்று கூறலாம். “ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை” [புறநானூறு 76] போரில் பிறரை அழிப்பவர்களுக்கு மிகச் சாதகமான பாட்டு இது ஆகும். ஏனெனில் உயிரோடு இருப்பவரிடம் இருந்து தான் பரிசு பெறமுடியும். இறந்தவன் பெருமை பாடுவதால் புலவனின் வயிறு நிறையாது. வட புலத்துப் பண்புகளைக் கொண்ட பெரும்பாலான இப் புலவர்கள், வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும், புராணங்களிலும் வருணிக்கப் பட்ட கடவுளர்களுடன் தமிழகத்து மன்னர்களை ஒப்பிட்டனர். ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்ட தலைவன் ஒருவனின் சார்பாகப் பாடியதாக தோன்றவில்லை. அப்படி பாடி இருந்தால், ‘கொல்லாமையே இவ்வுலகத்து இயற்கை’ என்று பாடியிருந்தாலும் ஆச்சரியம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கும் , தோல்வியுற்றவர்களுக்கும் எந்த புலவரும் ஆதரவு இல்லை என்பது தான் உண்மை. சங்க கால அரசர்கள், பொதுவாக போரினால் பெற்ற வெற்றிகளைத் தங்கள் பெயருடன் இணைத்துள்ளனர். மேலும் போருக்குப் புறப்படும் அரசர்களும் வீரர்களும் வஞ்சினம் உரைப்பதையும் அங்கு காண்கிறோம். இவற்றை வீரயுகத்திற்குரிய மதிப்புகள் என்று இன்று கணித்து, இவை போன்றவை இன்று முதன்மை பெற்றுக் காணப்படுவதை காண்கிறோம். சங்க இலக்கியத்தில் சில புறநானூற்றுப் பாக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி. யு. போப் அவற்றிற்கு தமிழ் வீர கவிதை [Tamil Heroic Poems] என்ற பெயர் தந்தார். இதற்கு ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்குப் பின்னால் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்த, முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் கைலாசபதியும் தமிழ் வீர கவிதை [Tamil Heroic Poems] என்னும் தலைப்பில் தான், தனது இலக்கிய வரலாற்று ஆய்வை செய்தார். அதன்பின் மிகச் சிறப்பான முறையில் சங்க இலக்கியத்தை மொழி பெயர்த்த ஏ.கே. இராமானுஜன் அதற்குக் கொடுத்த பெயர் காதல் மற்றும் போர் கவிதைகள் [Poems of Love and War]. இவையெல்லாம் சங்க இலக்கியப் புறப்பாக்களில் காணப்படும் வீரத் தன்மையை மட்டும் வலியுறுத்துவனவாக உள்ளன. நாட்டிற்காகப் போரிட்டு இறப்பது உயரிய பண்பு எனக் கருதப்பட்டது. இதனை இன்று வரை நமது கவிதைகள் முதற் கொண்டு திரைப்படம் வரை வலியுறுத்தி வருகின்றன. போரில் புறமுதுகிடுவதும் முதுகில் புண்படுவதும் இழுக்கு எனக் கருதப் பட்டது. போரில் இறந்து பட்ட வீரர்களின் பெயரால் அவர்தம் உறவினர்களுக்கு ஊர்கள் பரிசளிக்கப்பட்டன. போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நடுவது வழக்கம். அக்கல்லில் அவ்வீரனைப் பற்றிய குறிப்புகள் பொறிக்கப்பட்டன. உலகமுழுவதும் இன்று சிறுவர்கள் ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். பலசமயங்களில் அவர்கள் கடத்தப் பட்டும் கட்டாயமாகப் படைகளில் சேர்க்கப்படுகின்றனர். பழங் காலத்தில் சிறார்கள் இப்படி கடத்தப் பட்டுப் படைகளில் சேர்க்கப் பட்டதற்கான குறிப்புகள் ஒன்றும் அதிகமாக இல்லை. என்றாலும், சிறுவர்களும் போரில் ஊக்கத்துடன் அக்காலச் சமூகத்தினால் ஈடுபடுத்தப் பட்டதை இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. உதாரணமாக வீரத்தாய் வரலாற்றில் அதை காண்கிறோம். எது எப்படி இருந்தாலும், இன்றைய இளைஞர் யுவதிகளுக்கு ஒரு உற்சாகம் கொடுக்கும் பாடல்களாக சங்க கால மாவீரர்களின் கதைகள் இருப்பது என்னவோ உண்மைதான் ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது
  17. "சிறு துளிகள்" ஒரு காலத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஏங்கும் பச்சைபசேலென இயற்கை அன்னையின் கொடையை அதிகமாகவே பெற்றும், சலசலுக்கும் அருவியின் ஓசையும், ஓயாமல் கூவிக்கொண்டு இருக்கும் குயிலின் ஓசையும் அபூர்வமான தூய காற்றையும் வெட்கத்தால் தலை குனிந்து நிற்கும் நெற்கதிரையும் பெற்று, காண காண திகட்டாத மண்ணுலக சொர்க்கமாக திகழ்ந்த அவளின் கிராமத்தின் அழகை காணும் போதெல்லாம் அன்று தன் இதயத்தில் தோன்றும் வலியை மறந்துவிடும் அருள்விழி, தன் குடும்பத்தின் நெற்பயிர்களுக்கு அன்று உயிர் கொடுத்த அந்த மண், இன்று விரிசல் அடைந்தும் காய்ந்தும் கிடப்பதை தனது வயலின் ஓரத்தில் நின்று பார்த்தாள். ஆனால் இன்று, அந்த முன்னைய பசுமையான நிலப்பரப்பு, இராணுவத்தால் தடை செய்யப்பட்ட பாதுகாப்பு வலயமாக வலுக்கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது. அவளுடைய கண்கள், சோகம் மற்றும் கருணையின் ஆழமான கிணறுகளாக, சொல்லொணா இழப்பின் கனத்தை சுமந்தன. இலங்கையின் வடக்கு மாகாணத்தை சீரழித்த போரில் அவளது கணவரும் அவளது இரண்டு குழந்தைகளும் பலியாகினர். குண்டுவெடிப்புகள் உயிர்களைக் கொன்றது மட்டுமல்லாமல் அவர்களின் வீட்டையும் அழித்துவிட்டன, அருள்விழி தனது இரண்டு இளம் குழந்தைகளான [டீன் ஏஜ்] கனிமொழியன் மற்றும் ஒயிலழகியுடன் உயிர்வாழப் போராடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் அத்தனையும் இழந்த போதிலும், அருள்விழி தன்னிடம் இருந்து எந்த போரும் எடுக்க முடியாத ஒரு விடயத்தை வைத்திருந்தாள், அது தான் அவளின் உறுதியான நம்பிக்கை!. அருள்விழி ஒவ்வொரு சிறு துளிகளையும் ஒவ்வொரு சிறு செயல்களின் சக்தியையும் நம்பினாள், "சிறிய துளிகள்" இறுதியில் ஒரு பெரிய கடலாக மாறும் என்பதில் அவளுக்கு ஐயம் இருக்கவில்லை. மாற்றத்தின் வெள்ளம் அவர்களின் வாழ்க்கையைத் தழுவும் வரை, ஒவ்வொரு சிறிய அடியும், தரிசு மண்ணில் பெய்யும் மழையைப் போல, மெல்ல மெல்ல வலுசேர்க்கும் என்பதால், தன் குழந்தைகளுக்கும் தனக்கும் எதிர்காலத்தை மீட்டெடுப்பதில் உறுதியாக, ஒரு நேரத்தில் ஒரு சிறிய படியாக, ஒரு சிறு துளியாக, திட்டங்களைச் செய்யத் தொடங்கினாள். "சிறுசிறு துளியாய் மழைத் துளி சிறு தரையில் விழுந்து சிதறியதே! சிறு துளிகள் ஒன்றாய்க் கூடிக்கூடி சிறுதூறல் மழை ஒன்று சாரலானதே!" "அடைமழை ஆகி அழகாய் விழ அனைவரின் தேகமும் மகிழ்வில் நனைந்ததே! அன்றைய எம்பூமியும் துளிர்கள் விட அழகிய சிறுதுளி பெருவெள்ளம் ஆகியதே! ஒரு காலத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தத்தாலும், அன்றாட வாழ்க்கையின் ஓசையாலும் துடிப்பான கிராமமான அது இன்று மிகவும் அழகிழந்து அமைதி சிதைந்து நலிந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் விவசாயிகள் விடியற்காலையில் இருந்து மாலை வரை உழைத்த சலசலப்பான நெற்பயிர்கள், இப்போது இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு, அருள்விழியின் குடும்பத்தையும் அவளைப் போன்ற மற்றவர்களையும் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அவர்களை ஒரு விளிம்பிற்குத் தள்ளி உள்ளது. நினைவுகளால் அவளின் இதயம் கனத்தது அருள்விழி பெருமூச்சு விட்டாள். "இது என்ன வாழ்கை?" என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். பல வருட கடின உழைப்பால் கரடுமுரடான அவளது கைகளால், அவள் அணிந்திருந்த புடவையின் விளிம்பை சற்று சுற்றி இறுக்கி, அவள் எதிர்காலத்தை நினைத்தாள். அருள்விழியின் மகன் கனிமொழியன் அவள் அருகில் நின்றான், அவன் கண்கள் அதே தரிசு வயல்களை மேய்ந்துகொண்டு இருந்தது. பதினெட்டு வயதில், அவன் வீட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டான், என்றாலும் அவனது இளம் வாழ்க்கையின் மீது போர் நிழல் படர்ந்தது இருந்ததால், ஒரு காலத்தில் அவனது கவலையற்ற விளையாட்டுத்தனமும் கம்பீரம் நிரம்பிய பள்ளிப்பருவமும் அன்பான பேச்சும் இன்று கோபத்துடனும் விரக்தியுடனும் கூர்மையாக வளர்ந்து இருந்தது, இல்லை ஆக்கப்பட்டு விட்டது. "அம்மா, இங்க இருந்து நமக்கு இனி எதுவும் கிடைக்காது", என்று உறுதியுடன் குரல் கொடுத்து, "எனக்கு நகரத்தில், அதிகமாக கொழும்பில் வேலை கிடைக்க வேண்டும், அப்படி என்றால் என்னால் சம்பாதிக்க முடியும் அம்மா, நாங்கள் கட்டாயம் பிழைப்போம்." என்று தாயின் கையை இறுகப் பிடித்தான். அருள்விழி மகனை திரும்பி உற்றுப்பார்த்தாள், தன் மகனைப் பார்த்ததும் அவளுக்கு கவலையுடன் இதயமும் வலித்தது. அத்தகைய சுமையைச் சுமக்க மிகவும் இளையவனாக இருந்தாலும், குழந்தைப் பருவம் இன்னும் முழுமையாக மாறாத இந்த நிலையிலும் அவனின் உறுதி, நம்பிக்கை அவளுக்கு ஒரு தெம்பு கொடுத்தது. "ஆனா ஒயிலழகி என்னாச்சு? அவளை என்னுடன் இங்க விட்டுட்டு போறீங்களா? இந்த இடத்துல தனிய வாழும் பெண்களிடம் உலகம் கருணை காட்டாது தெரியுமா" என்று கூறிக்கொண்டு அருள்விழி, குரல் நடுங்க தன் மகளைக் இருகக் கட்டிப்பிடித்தாள். ஒயிலழகி, அவள் கொஞ்சம் நெட்டையாக இருந்தாள். முழங்காலுக்கு கீழ் நீளமான மஞ்சள் பாவாடை அணிந்திருந்தாள். நல்ல நிறம். அழகான வட்ட வடிவிலான சாந்தமான முகம். பதினாறும் நிறையாத பருவ மங்கையாகத் தோன்றினாள். சிதைந்த வீட்டின் எஞ்சிய பகுதி ஒன்றுக்கு அருகில் அமர்ந்து, தரையை வெறித்துப் பார்த்தாள். அவள் எப்போதும் தனது கருணை மற்றும் அமைதியான வலிமைக்காக அறியப்பட்டவள், கிராம மக்களிடமிருந்து அவளுக்கு "ஸ்டைல் பியூட்டி" என்ற புனைப்பெயர் கூட உண்டு. ஆனால் அவள் தனது வெளித்தோற்றத்துக்கு அப்பால், உண்மையில் அவளும் தங்கள் துயரத்தின் பங்கைச் சுமந்தாள். “அண்ணா [கனிமொழியன்] சொல்வது சரிதான் அம்மா” என்று ஒயிலழகி மெதுவாகச் சொல்லிவிட்டு அவர்களை நோக்கி நடந்தாள். "வீடு இல்லாமல், நிலம் இல்லாமல் நாங்கள் இப்படி தொடர்ந்து வாழ முடியாது. நாங்கள் எங்கள் எண்ணத்தை, நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்தவேண்டும்." என்று கூறி, பின் கொஞ்சம் இடைநிறுத்தி, "நான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறேன், அண்ணாவுடன் நானும் சென்றால், அங்கே நான் உயர்வகுப்பு படிக்க முடியும்." என்று, பதினாறும் நிறையாத பருவ மங்கை, அன்பு பசி ஊட்டி வசமாக்கும் கனிமொழியன் தங்கை, குதித்தாடி மருந்தோடும் கலை மானே, இளம் குமரிகளும் மயங்கும் சிலை தானோ என்று இருந்தவள், தாயின் முந்தானையை விரலால் சுருட்டிக்கொண்டு, மேகத்தில் மறைந்த நிலா போல், தாயின் சேலையால் முகத்தை மூடி நின்றாள். அருள்விழியின் இதயம் துடித்தது. அவள் எப்படி இருவரையும் வெளியூர் அனுப்புவாள் ? ஒரு காலத்தில் அவர்களின் வாழ்க்கையாக இருந்த இந்த சிறிய கிராமத்துடன் ஒப்பிடும்போது நகரம் ஒரு வித்தியாசமான பெரிய, அறிமுகம் இல்லாத பலர் வாழும் அவசர உலகமாக இருக்கும், அதுமட்டும் அல்ல, அது அன்னியமானதும் கூட. ஆனால் அவளால் அவர்களை என்றென்றும் தன்னுடன் வைத்திருக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும். போர் ஏற்கனவே நிறைய அவர்களிடம் இருந்து திருடிவிட்டது. அப்படி என்றால் மேலும் பிள்ளைகளின் எதிர்காலத்தை திருட அவள் யார்? அவள் மௌனமாக சிந்தித்தாள். என்றாலும் அருள்விழி பிள்ளைகளை நோக்கி, "இங்கே உயிர் இல்லை, வாழ்வு இல்லை என்பது போல் நீங்கள் இருவரும் பேசுகிறீர்கள்," அவள் மெதுவாக சொன்னாள். "ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இங்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியமும் முக்கியமானது. 'சிறு துளி பெரு வெள்ளம்' அது தான் ஒரு பெரிய கடலையே உருவாக்கிறது என்பதை மறக்கவேண்டாம். நம் நிலத்தை, நம் மக்களை எங்களால் என்றும் கைவிட முடியாது. நாம் அனைவரும் வெளியேறினால் என்ன நடக்கும்? கொஞ்சம் சிந்தியுங்கள் பிள்ளைகளே?" என்று இருவரையும் கட்டிப் பிடித்தாள். கனிமொழியன் முகம் சுளித்தான், அவனுடைய இளமை அமைதியற்று இருந்தது. "அம்மா, சில சமயங்களில் சிறு துளிகளை கடல் விழுங்குகிறது, அவை அங்கே அவை தம்மை இழந்து மறைந்துவிடுகின்றன. அது தான், இந்த, இன்றைய சூழலில், இந்த இடத்தை விட பெரிதாக நினைத்தேன். நம்பிக்கையில் மட்டும் நாம் தொடர்ந்து இப்படியே வாழ முடியாது." என்றான். வெறுமையான வயலை பார்த்தபடி தாயும் பிள்ளைகளும் அங்கு கதைத்துக் கொண்டு நின்ற போது, அவர்களுக்கிடையில் ஒரு கணம் அமைதி நிலவியது. அப்போது, அருகில் யாரோ வரும் காலடிச் சத்தம் அவர்களின் அமைதியைக் குலைத்தது. அது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தூயவன் என்ற இளைஞன். அவனது குடும்பமும் போரினால் எல்லாம் இழந்தது, ஆனால் தூயவன் பல்கலைக்கழகத்தில் படித்து தற்சமயம் கொழும்பு நகரத்தில் வேலை செய்கிறான். அவன் உயரமாகவும் ஒல்லியாகவும் இருந்தான். அவன் அதிகமாக ஒவ்வொரு மாதமும் கிராமத்திற்குத் திரும்பி வருவான், வரும் பொழுது தன்னால் இயன்ற உதவிகளை கிராம மக்களுக்கு உதவுவான். சில குடும்பங்களுக்கு தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பவும் உதவினான். "அருள்விழி மாமி " என்று வாழ்த்தி, அவன் கண்கள் ஒயிலழகியின் மீதும் ஒரு கணம் நீடித்தது. "உன் நிலையைப் பற்றிக் இப்ப சற்றுமுன் காதில் விழுந்தது. கனிமொழியன் போனால், வீட்டைப் பழுதுபார்ப்பதில் நீ அம்மாவுடன் இங்கேயே இருந்து ஏதாவது உதவி செய்யலாமே. அத்துடன் இங்கு உயர் கல்வி படிப்பதற்கு ஏற்ற ஒழுங்கை நான் கட்டாயம் செய்து தருவேன், மற்றும் உங்க அம்மாவை தனிய விட்டு எங்கும் போகக் கூடாது" என்று கூறி மீண்டும் ஒயிலழகியைப் பார்த்தான். ஆனால் ஒயிலழகி தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள், ஆனால் அவளுடைய இதயம் நிச்சயமற்று இருந்தது. என்றாலும் நாட்கள் போக, ஒரு சொல்லப்படாத தொடர்பை உணர்ந்த அருள்விழி, ஒரு நாள் தூயவனை கண்டு மெலிதாக சிரித்தாள். "தூயவன், உங்கள் உதவி ஒரு வரமாக இருக்கும். என்றாலும் எங்கள் அண்ணா கட்டாயம் எங்களை கைவிடமாட்டார் " என்றாள். தூயவனின் கண்களை முதன்முதலாக நேருக்கு நேர் அன்றுதான் சந்தித்தாள், அவள் முடிவில், தாங்களாக தங்கள் காலில் எழுந்து நிற்க வேண்டும் என்ற அவளின் முடிவு தெளிவாகத் தெரிந்தது. தூயவனின் முகத்தில் ஒரு வித ஏமாற்றம் மிளிர்ந்தாலும், தலையசைத்தான். இதற்கிடையில் அருள்விழி தன் நிலத்தை எப்படியும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தாள். இராணுவம் அதன் பெரும் பகுதியைக் கைப்பற்றியிருந்தாலும், அவளும் மற்ற இடம் பெயர்ந்த கிராம மக்களும் உள்ளூர் அதிகாரிகளிடமும் மனிதாபிமான அமைப்புகளிடமும் நிலத்தின் முழுவதையும் அல்லது முதற் கட்டமாக சில பகுதிகளையாவது பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திருப்பி கொடுக்க அரசை, ராணுவத்தை கட்டளையிட்டு வற்புறுத்த வேண்டும் என்று கோரினர். இது ஒரு மெதுவான, அதிகாரத்துவ செயல்முறை, எனவே விடாமுயற்சி முக்கியம் என்பதை அருள்விழி அறிந்திருந்தாள். இந்த விடா முயற்சியுடன், அவள் அருகிலுள்ள நகரங்களில் ஏதாவது கிடைத்த வேலைகளைச் செய்யத் தொடங்கினாள், வீடுகளைச் சுத்தம் செய்தல் மற்றும் தினசரி பிழைப்புக்காக பணம் சம்பாதிக்க கூடைகளை நெசவு செய்வது இப்படி தனக்குத் தெரிந்த வேலைகளை தொடர்ந்து செய்தாள். என்றாலும் அதனால் அவளுக்கு அதிகம் பணம் மிகுதியாக சேமிக்க கிடைக்கா விட்டாலும் ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு சிறு துளியும் எண்ணப்படும் என்பது அவளுக்குத் தெரியும். அவள் வாய் அவளை அறியாமலே "கடல் கொண்ட நீரை கவர வந்த கள்வன் கரு கொண்ட மேகம், பெரு மேகம் தங்கள் பேதைமை மறந்து இணைந்து பெய்வது தான் பெரு மழை, மேகத்துடன் மேகம் இணைந்து மேலான ஒற்றுமை கொண்டதால் மேதினி பெறுவது தான் மழை, சிறு சிறு துளிகள் எல்லாம் சிதறாமல் சேர்வது தான் சினம் கொண்ட பெரு வெள்ளம்" முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. அப்படி சிதறாமல் ஒவ்வொரு குடிமகனும் ஒன்று சேர்ந்தால், சினம் கொண்டு பெருவெள்ளமாக திரண்டால், .... கட்டாயம் விரைவில் திரும்பி பெறலாம், ஆனால்..? அவள் அதற்கு மேல் சிந்திக்க விரும்பவில்லை? அவளது பிள்ளைகளான கனிமொழியன், ஒயிலழகி இருவரும் தாயுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தாங்களாகவே சிறு அடி எடுத்து வைத்தனர். தனது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கனிமொழியன், தூயவன் உதவியும் தொடக்கத்தில் கிடைக்க வேலை தேடி கொழும்பு சென்றான். அவனுக்கு ஒரு சிறிய நிறுவனத்தில் விநியோக பையன் [டெலிவரி பாய்] வேலை கிடைத்தது, அவன் விரைவில் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டான் மற்றும் வீட்டிற்கு அனுப்பக்கூடிய சிறு துளியாக இருந்தாலும் சேமித்துக் கொண்டான். ஒயிலழகி, ஆரம்பத்தில் கொழும்பில் உயர் கல்வி கற்க விரும்பினாலும், பின், தங்கள் கிராமத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்படும் தற்காலிகப் பள்ளியில் சேர்ந்து, தனது உயர் கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். “மீண்டும் நாம் கட்டி எழும்புவோம் அம்மா” என்று கொழும்பில் இருந்து தனது முதல் தொலைபேசி அழைப்பில் உறுதியளித்தான். "இது ஆரம்பம் தான்." என்று கூறி முடித்தான் “ஆமாம் மகனே” என்று அருள்விழியும் பதிலளித்தாள். "நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு சிறிய துளியும் கணக்கிடப்படுகிறது." என்றாள். வாரங்கள் மாதங்களாக மாற, அருள்விழியின் முயற்சியின் சிறு துளிகள் ஒன்றின் மேல் ஒன்றாக குவியத் தொடங்கின. போரிலிருந்து தப்பியவர்களுக்காக வாதிடும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் [NGOs] ஆதரவும் அவளுக்கு கிடைத்தது. நில உரிமைக்கான அருள்விழியின் மனு, அதிகாரத்தால் மூடிய பெட்டியில் இருந்து தூசு தட்டி இழுத்து எடுக்கப்பட்டது. மெதுவாக, அவர்களது சொந்த நெல் வயலின் ஒரு சிறிய பகுதி உட்பட, நிலத்தின் சில சில பகுதிகள் கிராம மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டன. கண்ணி வெடிகள் மற்றும் இராணுவப் பிரசன்னம் காரணமாக பெரிய அளவிலான விவசாயத்திற்கு இன்னும் அந்த நிலம் ஒரு ஆபத்தானது என்றாலும், இது ஒரு சிறிய வெற்றியாகும் - அவர்களின் முயற்சிகள் பலனளித்ததற்கான முதல் அறிகுறி, இந்த முதல் "சிறு துளிகளே"! கூரையை விட்டு அழகாய் அத்துமீறும் ஆர்பரிக்கும் மழைச்சாரல் வடிந்து ஓடும் பொழுது சிதறிய துளிகளில் உடல் எங்கும் கூசும். அதில் ஒரு இன்ப உணர்வு பூரித்து அந்த துளிகளை உற்று நோக்கும். அப்படித்தான் நிதானம் கொண்டு, விடுபட்ட வயல் காணியை இமைக்காது பார்த்தாள். இதற்கிடையில் கனிமொழியன் கொழும்பில் திறமையான, நேரம் தவறாத, டெலிவரி பாய் ஆகிவிட்டார். பல மாதங்கள் அர்ப்பணிப்புக்குப் பிறகு, அவன் ஒரு சிறிய குழுவை நிர்வகிக்கும் பதவி உயர்வும் பெற்றான். அவனது இயல்பான தலைமைத்துவமும், அன்பான பேச்சு முறையும், அவனது பெயருக்கு ஒரு உண்மையான புகழையும், நகரத்தில் அதனால் முக்கியமான தொடர்புகளை உருவாக்கவும் உதவியது. இந்த இணைப்புகள் இறுதியில் அவன் தனது சொந்த சிறிய விநியோக சேவையைத் தொடங்க வழிவகுத்தது, அது செழிக்கத் தொடங்கியது. இதன்பின் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அவன் வீட்டிற்கு பணத்தை கூடுதலாக அனுப்பினான், அதுமட்டும் அல்ல, அவன் அருள்விழியையும் ஒயிலழகியையும் வீட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனுமதித்தான். அதற்கு தூயவன் கூட உடல் உதவி செய்ய முன்வந்தான். கிராமத்தில் தாயுடன் தங்கி இருந்த ஒயிலழகி தனது படிப்பைத் திறமையாகத் தொடர்ந்தாள், கஷ்டங்களையும் மீறி தனது வகுப்பில் சிறந்து விளங்கினாள். தன்னைப் போலவே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு உதவ அவள் ஒரு ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டாள். அவளது கல்வி வெற்றியடையும் அதே தருணத்தில், அவளது வாழ்க்கையின் தனிப்பட்ட மற்றொரு அம்சமும் அமைதியாக மலர்ந்தது - அது தூயவன் என்ற இளைஞனுடன் அவளது உறவு நெருக்கமாகியது. "நீங்கள் அற்புதமான, சொற்களால் வர்ணிக்க முடியாத அழகையும் நல்ல விடயங்களையும் கையாளுகிறார்கள், ஒயில்," என்று அவளின் கையைக் தன் கையுடன் கோர்த்துக் கொண்டு தூயவனும் ஒயிலழகியும் ஆற்றங்கரையில் அமர்ந்து சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்ததனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான். காதல் மனிதனுக்கு மட்டுமே சொந்தம் என்றால் அது தவறு. அது கருங்கல்லுக்கும் உண்டு, செம்மனிற்கும் உண்டு, நீல வானத்திற்கும் உண்டு, அதில் நீந்துகின்ற விண்மீனுக்கும் உண்டு, அதை பிரதிபலிக்கும் நீலக்கடலில் நீந்துகின்ற நீலத்திமிங்கிலத்திற்கும் உண்டு, வாசமில்லா மலருக்கும் உண்டு, அதில் தேனை தேடும் வண்டுக்கும் உண்டு, ஏழு வண்ண வானவில்லுக்கும் உண்டு, நொடிக்கு நொடி நிறம் மாறும் அழகான (ரீங்காரம் செய்யும்] ஹம்மிங் பட்சிக்கும் உண்டு, அதில் ஒயிலழகியும் தூயவனும் விதிவிலக்கல்ல! அவனது வார்த்தைகளின் அரவணைப்பையும், அவை தனக்குள் துளிர்விட்ட நம்பிக்கையையும் உணர்ந்த ஒயிலழகி, அவனைப் பார்த்து ஒரு சின்ன புன்னகை செய்தாள். அவள் தன் கல்வியில் கூடிய கவனம் செலுத்தி, திறமையாக தன் பட்டப் படிப்பை முடித்தாள். தங்கள் கிராமத்தை மீண்டும் கட்டியெழுப்ப அது கட்டாயம் உதவும் என்று நம்பினாள். மிகவும் கடினமான, போருக்கு பின்னான காலங்களில் கூட, கடினமான நிலத்தில் விரிசல்களின் வழியே அன்பும் ஆதரவும் காட்டுப் பூக்கள் போல அவர்களிடம் வளர்ந்தன. என்றாலும் "ஒரு நாள், நான் விரும்பியதை அடைந்துவிட்டால், ஒருவேளை நம் எதிர்காலத்தைப் பற்றி அந்த நேரம் பேசலாம்," என்று நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் மென்மையாக ஆனால் உறுதியாக இருந்தது. தூயவன் அவள் உறுதியை மதித்து தலையசைத்தான். ஒயிலழகி தனது சொந்த பாதையில் செல்ல நேரம் தேவை என்பதை அவன் அறிந்திருந்தான், மேலும் அவன் அவளை மிகவும் ஆழமாக காதலிப்பதற்கும் ரசிப்பதற்கும் காரணங்களில் அதுவும் ஒன்று. எதுஎன்ன என்றாலும், தன்னை சுற்றிய சூழல் மறந்து இரண்டு விழிகளுக்கும் ஒற்றைத் தேடல் ஏற்பட்டது. இத்தனை பெண்களுக்குள் அவள் மட்டும் எப்படி தனியாகிறாள். எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை. எப்பொழுதாவது திரும்புகிறது அவள் பார்வை அதற்காகவே தவமிருக்கிறது விழிகள். அவள் என்னை தாண்டும் சமயம் இதயம் எகிறி குதித்தோடும் அவள் பின்னால். பெறுபவர் இல்லாது வீசி எறிந்த கடிதங்கள் ஆயிரம். ஒற்றை எழுத்தோடு தவம் இருந்த கடிதங்கள் எத்தனை? நிலை கொண்ட பயத்தால் ஒரு பக்க கதையானது காதல். அவள் வீட்டு சாலைகளுக்கு தெரியும் எனது கால்களின் இடைவிடாது உழைப்பு. காதல் கண் சிமிட்ட காத்திருக்கும் இமைப்பறவை. ஆண்டுகள் கடந்தும் ஆர்பாரிக்கும் பேரலை அவள். நான் எழுதி கொண்டு இருக்கும் வரையில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாள் என்னவள். ஒரிரு வார்த்தைகள் தான் பேசி இருப்பாள் அத்தனை வருடத்தில் அதையே இன்று வரை அடைகாக்கிறேன். கட்டாயம் அவளின் உறுதி அன்பு இரண்டும் அதை பெரு மழையாக்கி காதல் மழையில் என்னை நனைக்கும் என்று தனக்குள் தானே பேசி பேசி தூயவன் காத்திருந்தான். மேலும் சில வருடங்கள் கடக்க, அருள்விழியும் அவளது மகனும் கஷ்டப்பட்டு சேகரித்த "சிறு துளிகள்" ஏதோ பெரியதாக, பெரும் வெள்ளமாக, கடலாக ஒன்று சேர ஆரம்பித்தன. கனிமொழியனின் வணிகம் விரிவடைந்து, நாடு முழுவதும் விநியோக சேவை செய்யும் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக மாறியது. அவன் தனது சேமிப்பைக் கொண்டு, அவர்களது கிராமத்திற்கு அருகில் ஒரு சிறிய நிலத்தை வாங்கினான், அங்கு அவன் விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் மூலம் பொருளாதார சுதந்திரத்தை மீட்டெடுக்க, போரினால் பாதிக்கப்பட்ட மற்ற குடும்பங்களுக்கு உதவ ஒரு கூட்டுறவு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டான். இதற்கிடையில் ஒயிலழகியும் தனது கல்வியை முடித்துவிட்டு ஆசிரியையானாள். அவள் தன் கிராமத்தில் குழந்தைகளுக்காக ஒரு மாலை நேர பள்ளியை நிறுவினாள், பாரம்பரிய பாடசாலையில் கற்பிக்கப்படும் பாடங்களில் மட்டும் மேலதிக உதவியும் கவனமும் செலுத்தாமல், கடினமான அல்லது மோசமான போர் காலத்தின் பின், அதனால் பாதிக்கப்பட்ட இளம் பிள்ளைகளுக்கு அதில் இருந்து மீண்டும் மகிழ்ச்சியாக, வெற்றிகரமாக மீண்டெடுக்க அவர்களுக்கு மீள்திறனை வழங்கும் கட்டமைப்பிலும் கவனம் செலுத்தினாள். அடுத்த தலைமுறையினரை, போரினால் சிதைந்த சமூகங்களை, மீண்டும் கட்டியெழுப்புவதே அவளின் முதல் நோக்கமாக இருந்தது. அருள்விழியைப் பொறுத்தவரை, அவர்களின் நிலத்தை மீட்டெடுக்கவும், அவர்களின் வீட்டை மீட்டெடுக்கவும் அவள் எடுத்த முயற்சிகள் பலனளித்தன. நிலம், துண்டு துண்டாகத் திரும்பப் பெற்று, கனிமொழியனின் கூட்டுறவின் உதவியுடன், மீண்டும் நெல் பயிரிட முடிந்தது. கிராமமும் மெல்ல மெல்ல உயிர்பெற்றுக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் ஒரு போர் மண்டலத்தின் பேய் எச்சமாக இருந்த அது, அதன் மக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், ஒரு செழிப்பான சமூகமாக மாறியது. எப்போதும் பொறுமையாகவும் ஆதரவாகவும் இருந்த தூயவன், ஒயிலழகி தனது இலக்குகளை அடைந்த பிறகு அவளிடம் தன் திருமண ஆசையை முன்மொழிந்தான். அவளும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டாள், இப்போது, தனது சொந்த கனவுகள் நிறைவேறிய நிலையில், அவள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தழுவத் தயாராக இருப்பதாக உணர்ந்தாள். ஒன்றாக, அவர்கள் ஒரு குடும்பத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்கினர், அன்பு மற்றும் பரஸ்பர மரியாதையில் அடித்தளமாக இருந்தனர், என்றாலும் தமது போராட்டம் மற்றும் தமது கிராமத்தின் மீளெடுப்பு போன்றவற்றில் இருந்து என்றும் விலகவில்லை. ஒரு மாலையில், அருள்விழி புதிதாகக் கட்டப்பட்ட தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, தன் பேரக்குழந்தைகள் வயல்வெளியில் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவர்களை இங்கு அழைத்து வந்த நீண்ட பயணத்தை நினைத்துப் பார்த்தாள். சிரிப்பின் சத்தம் காற்றை நிரப்பியது - போரின் அமைதியிலிருந்து அது வேறுபட்டது. கருணையும் வலிமையும் நிரம்பிய அவள் கண்கள் நன்றியுணர்வுடன் நிரம்பி வழிந்தன. இப்போது ஒரு வெற்றிகரமான தொழிலதிபரான கனிமொழியனும் அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தான். "நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம், அம்மா," அவன் மெதுவாக அம்மாவின் காதில் கூறினான். "ஆமாம்," அருள்விழி பதிலளித்தாள், அவளுடைய குரல் உறுதியாக ஒரே நிலையில் தழும்பாமல், ஆனால் உணர்ச்சியால் நிறைந்தது. "சிறு துளிகள்" ஒவ்வொன்றாக இந்தக் கடலை உருவாக்கின என்றாள். அருள்விழியும் அவனது குடும்பத்தினரும் எடுத்துக் கொண்ட சிறிய படிகள், "சிறு துளிகள்", தங்கள் நிலத்தைப் பாதுகாத்தல், கல்வியைத் தொடர்தல், ஒரு தொழிலைத் தொடங்குதல், உறவுகளை உருவாக்குதல் ஆகியன எல்லா மிகப் பெரிய விடயத்திற்கும் அடித்தளமாக அமைந்தது. உரிமையுடன் அதிகாரத்துடன் உயிர்வாழ என அருள்விழி குடும்பம் ஆரம்பித்தது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வெற்றியாக மாறியது. ஒவ்வொரு "சிறு துளி" முயற்சியும் கனிமொழியன் உழைத்த நீண்ட மணிநேரமும், ஒயிலழகி தன் மாணவர்களிடம் காட்டிய அர்ப்பணிப்பும், அருள்விழி எடுத்த கோரிக்கைகள் மற்றும் வேலைகளும், ஒவ்வொரு சிறு துளிகளும் பெரும் மாற்றத்தின் பெருங்கடலை உருவாக்கியது. ஒரு காலத்தில் போரினால் சிதைந்து போன அவர்களின் வாழ்க்கை, இப்போது நெகிழ்ச்சி, அன்பு மற்றும் இழந்ததை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பெருமை பெற்றது. இறுதியில், அவர்கள் செய்த சிறிய, வெளித்தோற்றத்தில் அற்பமான செயல்கள், "சிறு துளிகள்", அவர்கள் ஒருமுறை மட்டுமே கனவு கண்ட எதிர்காலத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்லும் வலிமையான பெரும் கடலாக மாறியது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. "நட்பதிகாரம்" "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு." இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றான கண்டி நகரத்தை அண்டிய ஒரு சிறிய கிராமத்தில், உருளும் மலைகளுக்கும் மின்னும் நதிக்கும் இடையில் இரண்டு பிரிக்க முடியாத நண்பிகளாக, ஒளவை மற்றும் வள்ளி வாழ்ந்தனர். அவர்களின் பந்தம் அந்த கிராமத்தின் ஆற்றங் கரையில் உயர்ந்து பத்தையாக ஒன்றாக நிற்கும் மூங்கில் மரங்களைப் போல நீடித்தது. அது கருங்கூந்தலை வாரிச் செல்லும் மென் காற்றைப் போலவும் குளிர்ந்த மாலையில் ஒரு சூடான அடுப்பு போலவும் அவர்களுக்கு ஆறுதலளித்தன. ஒரு இதமான சூரிய ஒளிமிக்க மதியம், மென்மையான காற்று தேயிலைச் செடிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தது. அந்த கிராமத்தில், ஆண்டு ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பெரிய திருவிழா அறிவிக்கப்பட்டது. இது ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டமாக அனைத்து கிராம மக்களையும் ஒருங்கிணைத்து எல்லோருக்கும் உற்சாகம் தரக்கூடியதாக பலவிதமான போட்டிகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதிலும் முக்கியமானது கிராமங்களுடனும் தேயிலைத் தோட்டத்து வாழ்க்கையுடனும் நேரடியாக தொடர்பு உடைய போட்டிகளாகும். ஆனால் வள்ளி இம்முறை பின்வாங்கியதுடன் அவளது பிரகாசமான புன்னகை மங்கிப்போய், அவளுடைய தோழிக்கு கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. "கோனக்கோன மலையேறி தேயிலைக்கு கொழுந்து பறிக்கையிலே பொல்லாத காற்று வர குளவிக்கூடு உடைந்து சிதறவே வள்ளியின் அம்மா தடுக்கிவிழ முட்டி மோதி குளவி கொட்டியதே!" அது தான் காரணமோ ? முல்லை கொஞ்சம் சிந்தித்தாள். இவ்வாறான குளவிக் கொட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக பெருந்தோட்டங்களில் இடம் பெற்று வந்தாலும், பெருந்தோட்ட நிர்வாகிகள் அதை பெரிதாக பொருட்படுத்தாமலும் இது தொடர்பில் தீர்வொன்றை இன்னும் வழங்காமலும் இருப்பது அவளுக்கு ஒரு கவலையாக இன்னும் இருக்கலாம் என்று யோசித்தாள். அடுத்த நாள் மாலை நேரத்தில், சூரியன் அடிவானத்திற்குக் கீழே மூழ்கி, கிராமத்தின் மீது ஒரு தங்க நிறத்தை வீசியது, வள்ளி ஆற்றங்கரையில் தனியாக உட்கார்ந்து, கனத்த இதயத்துடன் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் முல்லை கவனித்தாள். பொதுவாக தன்னையும் கூடிக்கொண்டு ஆற்றங் கரையில் இருந்து இயற்கை அழகை ரசித்து பாடிப் பேசி மகிழும் வள்ளி ஏன் இப்படியென தன் தோழியின் மீது அக்கறை கொண்ட முல்லை, புல்வெளிகள் வழியாகச் துள்ளிச் செல்லும் மான் போல, வேகத்துடன் அவளை அணுகினாள். "ஆற்றோரம் அங்கே வீற்றிருக்கும் வள்ளியே உற்சாகம் இழந்த கோபம் எனோ? கற்பாறையில் கலங்கி அழும் தோழியே சுற்றத்தார் மகிழ கொண்டாட வேண்டாமோ? ஆற்றல்மிக்க என் பிரிய நண்பியே கற்ற வித்தையை போட்டியில் காட்டாயோ?" "அன்புள்ள வள்ளி, உன் இதயத்தில் என்ன பாரம்?" முல்லை அவள் அருகில் அமர்ந்து, அவள் கருங்கூந்தலை வருடி வருடி மெதுவாகக் கேட்டாள். வள்ளி தயங்கினாள், என்றாலும் ஆறுதலுக்கான ஏக்கம் அவளுடைய தயக்கத்தை விட அதிகமாக இருந்தது. அவள் தான் சுமந்து கொண்டிருந்த பாரத்தை வெளிப்படுத்தி முல்லையிடம் தன் இதயத்தைத் முழுதாகத் திறந்தாள் - திருவிழா கொண்டாட்டத்தில் நடக்கவிருக்கும் நெசவுப் போட்டியில் சிறந்து விளங்காமல் தன் குடும்பத்தின் பாரம்பரியத்தை வீழ்த்திவிடுமோ என்ற பயம் தான் அவளை வருத்தியது. நெசவு என்பது தலைமுறை தலைமுறையாக அவளது குடும்பத்தின் கைவினைப்பொருளாக இருந்து வந்தது, வள்ளியின் தாய்தான் குடும்பத்தின் சார்பாக முன்னின்று கலந்து கொள்வார். ஆனால் இம்முறை குளவிக் கொட்டு சம்பவத்தால், வள்ளி தான் அந்த பொறுப்பை எடுக்க வேண்டும். அதுதான் தன் குடும்பத்தின் மரியாதையை நிலைநிறுத்துவதற்கு தனது திறமைகள் போதுமானதாக இல்லை என்று அவள் பயந்தாள். "சின்னச்சின்ன இழை பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி – இடையைச் சுற்றி அழகைக்கொட்டி தோளில் தொங்குமடி மக்கள் மகிழும் பொன்னாடை தரும் தன்மானம் காக்கும் புடவையடி - அது உங்கள் கலையம்சம் நிறைந்த பட்டாடையடி!" முல்லை கவனமாகக் கேட்டாள், அவளுடைய கண்கள் பச்சாதாபத்தால் நிறைந்தன. முல்லை ஓடிவந்ததால், தன் மெல்லிய இடையில் இருந்து கொஞ்சம் நழுவிக்கொண்டிருக்கும் தனது ஆடையை சரிப்படுத்தி, அதை கையால் பிடித்தபடி தனது மற்ற கையை நீட்டி வள்ளியின் கையைப் பற்றிக்கொண்டாள். "அன்பு நண்பியே, உங்கள் குடும்பத்தின் மதிப்பு பாராட்டுக்களால் அல்லது போட்டி வெற்றிகளால் மட்டும் அளவிடப்படவில்லை. உங்கள் குடும்பத்தின் பாரம்பரியம் நெசவுத் திறமையால் மட்டும் வரையறுக்கப்படவில்லை, ஆனால் உங்கள் பரம்பரை தலைமுறைகளாகக் கடந்து வந்த அன்பு மற்றும் இரக்கத்தால் வரையறுக்கப்படுகிறது என்பதை மறக்க வேண்டாம் நீங்கள் திறமையானவர், மற்றும் நான் என் முழு மனதுடன் உன்னை நம்புகிறேன்." அவளுடைய வார்த்தைகள் வள்ளியின் கலங்கிய உள்ளத்தில் ஒரு இனிமையான தைலமாக இருந்தது, என்றாலும் வள்ளியின் கண்களில் கண்ணீர் பெருகியது. முல்லை தன் தோழியை சமாதானப்படுத்தினாள், அவள் அந்த போட்டியின் பொழுது முழுநேரமும் வள்ளியின் பக்கத்தில் நிற்பதாக உறுதியளித்தாள், விளைவு எதுவாக இருந்தாலும் போட்டியில் ஈடுபடுவது முக்கியம் என்று கூறி அவளை உற்சாகப்படுத்தினாள். நாட்கள் உருண்டோடியது, முல்லை வள்ளியின் வலிமையின் தூணாக மாறினாள், அதுமட்டும் அல்ல, தாய் இன்னும் நலமாகவில்லை என்றாலும், படுத்த படுக்கையிலும் தன் மகள் வள்ளிக்கு நெசவுகளின் நுணுக்கங்ககளை விளங்கப்படுத்தி வழிநடத்தியதுடன், முல்லையின் நட்பும் இருப்பும் ஒவ்வொரு அடியிலும் அவளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும் முல்லை, வள்ளியின் திறமைகளைப் பயிற்சி செய்தும், பரிபூரணப்படுத்தியும் பல மணிநேரம் ஒன்றாகச் செலவழித்ததால் அவர்களது நட்பு மேலும் வலுவடைந்தது. அவர்கள் ஒன்றாக சிரித்தனர், ஒன்றாக அழுதனர், ஒவ்வொரு சிறிய வெற்றியையும் ஒரு பெரிய வெற்றியாகக் கொண்டாடினர். இறுதியாக, திருவிழா கொண்டாட்ட நாள் வந்தது, கிராம சதுக்கம் உற்சாகத்தில் சலசலத்தது. வள்ளியின்யின் இதயம் ஒரு குதிரையின் குளம்புகளைப் போல துடித்தது, அவள் தறிக்கு முன்னால் நின்றாள், அவளுடைய செயல்திறனை காண பல ஆர்வமுள்ள கிராம மக்கள் வள்ளியை சூழ்ந்து நின்றனர். வள்ளி அவர்களைப் பார்த்து பதற்றம் அடையவில்லை. முல்லை தன் அருகில் நிற்பதாலும், தாயின் அறிவுரைகளும் அவளுக்கு ஆறுதல் கொடுத்துக்கொண்டு இருந்தன. இரண்டு கொடிகள் ஒன்றாக வளர்ந்தது போல வள்ளியும் முல்லையும் மகிழ்வாக எல்லோரையும் வரவேற்றனர். போட்டி தொடங்கியதும், வள்ளி துல்லியமாகவும் ஆர்வத்துடனும் நெசவு செய்ய தொடங்கினாள். கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தியால் வழிநடத்தப்பட்டதைப் போல அவளது விரல்கள் தறியின் மீது ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் விளையாடிக்கொண்டு இருந்தன. சிக்கலான அழகான வண்ண வண்ண வடிவங்கள் வெளிப்பட்டன, அவளுடைய திறமையை மட்டுமல்ல, அவளுடைய அன்பான தோழி அவள் மீது பொழிந்த அன்பையும் ஊக்கத்தையும் அது பிரதிபலித்துக்கொண்டு வெளியே வந்து கொண்டு இருந்தன. "கட்டுகளில் இருந்து நூல் அவிழ பயத்தில் இருந்து துணிவு பிறந்ததே! நூல் இழையை நுணுக்கமாக பின்ன கைகள் தட்டி உற்சாகம் மலர்ந்ததே! புத்தம்புது ஆடை வண்ணமாக ஒளிர வெற்றி பிறந்து மரியாதை நிலைத்ததே!" கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்ய, நெசவு போட்டியில் வள்ளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவள் பரிசைப் பெற முன்னோக்கிச் சென்றபோது, பெருமையுடன் பிரகாசித்த முல்லையை பார்த்தாள், ஏனெனில் அது வள்ளியின் வெற்றி மட்டுமல்ல, அவர்களின் நட்பின் வலிமைக்கான சான்றாகவும் இருந்தது. "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  19. "புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 07] [கரிகால சோழன்] முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் கரிகால சோழர். இவர் மௌரியப் பேரரசின் விரிவாக்களை தென் இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர் இளஞ்செட்சென்னியின் மகன் ஆவார். மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பெயர்களும் உண்டு. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை கொண்ட பேரரசாக மாற்றிய பெருமை மன்னர் கரிகாலனையே சேரும். சங்ககால இலக்கியங்களில் மற்றும் கல்வட்டுக்கள் வாயிலாக மன்னர் கரிகால சோழன் பற்றிய பல்வேறு தகவல்களை நாம் பெற முடிந்தாலும், அவருடைய ஆட்சி காலம் குறித்த சரியான தகவல்கள் ஏதுவும் இது வரையில் ஆதாரப் பூர்வமாக கிடைக்க வில்லை. கி.மூ 270ல் இருந்து கிபி 180க்கு இடைப் பட்ட காலத்தில இவர் ஆட்சி செய்து இருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். கரிகாலன் என்ற பெயர் ஒரு காரணப் பெயர் ஆகும். இந்த காரண பெயர் குறித்து இரு வேறு கருத்துகள் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இடையில் நிலவுகிறது. கரிகால சோழனுடைய சிறுவயதிலேயே அவருடைய தந்தை இளம்சேட்சென்னி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கரிகால சோழன் பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறினார். சரியான மன்னர் இல்லாது இருந்த சோழ நாடு பெரும் அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தது. சோழர் பரம்பரைக்கு ஆதரவாக இருந்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கருவூரில் இருந்த சோழ இளவல் கரிகால சோழனை நாட்டை ஆளக் கூட்டி வந்தனர். ஆனால் கரிகால சோழனுடைய அரசியல் எதிரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரிகால சோழன் சிறையில் அடைக்கப் பட்டு இருந்தாலும் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவருடைய செல்வாக்கு ஏறிக் கொண்டே இருந்தது. இதனால் கரிகால சோழனை கொல்ல நினைத்த அவருடைய அரசியல் எதிரிகள் கரிகால சோழன் அடைக்கப் பட்டு இருந்த சிறைச் சாலைக்கு தீ வைத்தனர். அந்தத் தீயில் இருந்து தப்பிச் செல்லும் பொழுது கரிகால சோழனுடைய கால்கள் கருகின. இதன் காரணம் கொண்டு பின்னர் இவர் கரிகாலப் பெருவளன்தான் என்று அழைக்கப்பட்டார். பின்னர் அதுவே மருவி கரிகால சோழனாக நிலைத்தது. சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கரிகால சோழன் அவருடைய மாமன் இருபிடர்தலையன் உதவியுடன் பெரும் படையை திரட்டி எதிரிகளை தோற்கடித்து சோழ அரியசானத்தில் [சிம்மாசனத்தில்] மன்னராக அமர்ந்தார். சில ஆராச்சியாளர்கள் கரிகாலன் என்ற பெயருக்கு வேறு காரணம் கருதுகிறார்கள். கரி என்றால் யானை காலன் என்றால் எமன், அதாவது யானைகளை கொன்றவன் என்கின்ற அர்த்தத்தில் வந்த பெயர்தான் கரிகாலன் என்று கருதுகிறார்கள்? கரிகால சோழன் சோழ சிம்மாசனத்தில் மன்னராக அமர்ந்து அவரது ஆட்சியை நன்றாக வேரூன்ற செய்வதற்கு முன்பே, கரிகால சோழனை தோற்கடித்து சோழ நாட்டை வெற்றி பெறும் நோக்கத்துடன் பாண்டிய மன்னரும் சேர மன்னரும் மற்றும் 11 குறுநில மன்னர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாக பெரும் படை கொண்டு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தார்கள். சங்ககால போர்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. அதிக படை பலம் கொண்டு கரிகால சோழனை எளிதாக போரில் வெற்றி கொள்ளலாம் என்று கருதி போர் தொடுத்து வந்த அத்தனை மன்னர்களையும் அவர்களின் பெரும் படைகளையும் கரிகால சோழன் நிர்முலமாக்கி போரில் வெற்றிவாகை கொண்டான். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே ஆகும். ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்து விட்டான். இப் போரில் கரிகால சோழன் எய்த அம்பினால் மார்பிலிருந்து பின் முதுகு வரை துளைக்கப் பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், இது தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானம் எனக் கருதி வடக்கிருந்து உயிர் துறந்தார் என வரலாறு கூறுகிறது. இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானூற்றுப்புலவர் புறநானூற்றுப் பாடல் 65 மூலம் விளக்குகிறார். “மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப, சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப, புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன்…..” (புறநானூறு 65) வெண்ணி ஊரில் பிறந்த குயவர் தொழில் மரபில் வந்த பெண் புலவர் ஒருவர் கரிகால சோழனை புகழ்ந்து புறநானூறு 66 இல்: “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக! களி இயல் யானைக் கரிகால் வளவ! சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே, கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலக மெய்திப் புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே” (புறநானூறு 66) காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ? என்று கேட்க்கிறார். இவற்றைவிட, அகநானூறு 55, மற்றும் சிலப்பதிகாரம் போன்ற வற்றிலும் இவனைப் பற்றிய குறிப்புக்கள் உண்டு. இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார். இவன் தாய் வயிற்றில் இருக்கும் போதே தந்தை இறந்து விட்டார். எனவே, பிறக்கும் முன்பே அரசுரிமையை பெற்றவன் இவன் என்பதை ‘‘உருவப் பஃறேர்; இளையோன் சிறுவன் முருகன் சீற்றத்து உருகெழு குரிசில் தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி’’ (128 - 130) என்று பெருநராற்றுப்படை கூறும். இவனுக்குப் பல குழந்தைகள் இருந்தனர் என்பதை "……………………….. தன் ஒளி மழுங்கி விசி பிணி முழவின் வேந்தர் சூடிய பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால், பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்," (292 - 295) என்ற பட்டினப்பாலை வரிகளால் அறியலாம். அதாவது தங்களின் மறம் குறைந்த, வார் இறுக்கமாகக் கட்டிய முழவினையுடைய வேந்தர்களின் பச்சை மணியையுடைய முடி, பருத்த அழகிய வீரக் கழலினைக் கட்டிய கரிகாலனின் கால்களைத் தொட, பொன்னால் செய்த தொடிகளை [வளையல்களை] அணிந்த அவனது புதல்வர்கள் ஓடி ஆடி விளையாடவும் என்கிறது. கரிகாலன் இமயம் நோக்கி படை எடுத்தார் என்று சிலப்பதிகாரம் மட்டுமே கூறுகிறது. மற்றும் படி வேறு ஆதாரங்கள் ஒன்றும் இல்லை. அதேபோல இலங்கை மீது படையெடுத்தார் என்றும் கல்லணை காட்டினார் என்றும் செய்திகள் உண்டு. அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன. முதலாம் பராந்தகச் சோழனின், கி பி 932 ஆண்டை சேர்ந்த வேலஞ்சேரி செப்பேடு ஒன்று திருத்தணிக்கு [Thiruttani] அருகில் உள்ள வேலஞ்சேரியில் [Velanjeri] 6-10-1977 அன்று கண்டு பிடிக்கப்பட்டது. இதில் கரிகாலனை பற்றிய குறிப்பில்: "அவனுடைய [கரிகாலனின்] ஆணையாலே காவேரியின் இரு மருங்கும் கரை எழுப்பியது . காஞ்சி நகரத்தில் மேகம் தழுவும் மாளிகைகள் நிறைந்தன" [He raised embankments on either side of river Kaveri and controlled its flood and he made Kanchi a city of palaces] என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது காவேரி பெருக்கெடுப்பதை தவிர்க்க இரு கரையும் ஆணை எழுப்பப்பட்டது தெரியவருகிறது. ஆனால் நீரோட்டத்தைத் தடுத்து சேமித்து வைக்கவில்லை போல் தோன்றுகிறது. மேலும் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப் பாலையில் கல்லணை பற்றி ஒன்றுமே கூறப்படவில்லை. ஆகவே கரிகாலன் உண்மையில் கல்லணை கட்டினானா என்ற ஒரு கேள்வி எழுகிறது? எனினும் "காடுகொன்று நாடாக்கி குளந்தொட்டு வளம்பெருக்கி" என்ற பட்டினப்பாலை 283 - 284 அடிகள், அவன் காடுகளை அழித்து விளை நிலங்களாக மாற்றினான், மழை நீர் தேங்கும் குளங்கள் அமைத்து நீர் வளத்தை பெருக்கினான் என்கிறது. ஆகவே காவிரி ஆற்றின் கிளை ஆறான, கொள்ளிடம் ஆற்றின் (Coleroon) ஊடாக கடலில் தண்ணீரை சேர்ப்பதிலும் பார்க்க, அதிக தண்ணீரை காவிரி ஆற்றிற்க்குள் திருப்பி விட்டு வெள்ளத்தை கட்டுப்படுத்த வில்லை என்றால், காவிரியின் இரு பக்கமும் கரைகளை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது? அது மட்டும் அல்ல, வயல்களுக்கு பாசனம் செய்ய அதிக தண்ணீர் சேமித்து வைக்கவில்லை என்றால், எதற்க்காக அவன் காடுகளை அழிக்க வேண்டும்? இவைகளையும் கவனத்தில் எடுத்து, கரிகாலன் கட்டினானா இல்லையா என்பதை நாம் அலசவேண்டும் என்று கருதுகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 08 - "முடிவுரை" தொடரும்.
  20. “முதுமையின் அரவணைப்பு” “முதுமையின் அரவணைப்பு தனிமையைப் போக்கும் பதுமையுடன் விளையாடும் மழலைப் போலவே! பெதுமை பருவத்தில் மகிழ்ச்சி காணும் புதுமை செய்யும் குழந்தை போன்றே!" "பாளையாம் செத்தும் பாலனாம் செத்தும் காளையாம் செத்தும் இளமை செத்தும் மூப்பும் ஆகியும் மூலையில் ஒதுக்கியும் தனித்து விட்ட கொடூரம் எனோ?" "பொன்னேர் மேனி அழகு இழந்து நன்னெடுங் கூந்தல் நரை விழுந்தாலும் மாறாத அன்பு நிலைத்து நிற்க வயதான மக்களைத் தழுவ வேண்டும்!" "இளமை நீங்கி உடலும் மெலிய தளர்ச்சி பெற்று கோலிற் சாய களைப்பு கொண்ட உள்ளம் ஆற பாசம் கொடுக்கும் கைகள் தேவை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. "கடவுளைக் கண்டுபிடித்தது யார்?" கடவுளைக் கண்டுபிடித்தது யார்? தன்னுடைய வாழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனிதனின் மறுப்பே கடவுளா? தனக்குள்ளே இருப்பதைப் பார்க்க மற்றவர் அஞ்சுவது போலவே பூசாரிகளும்தானே அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்.? "பயம்தான் கடவுளைக் கற்பித்தது." பூசாரிகளும் அந்தப் பயத்திற்கு எல்லோரையும் போல இரையாகிப் போனவர்தான். ஆனால் பூசாரிகள் மற்றவர்களை விடத் தந்திரசாலிகள். மனிதன் இருட்டைக்கண்டு பயந்த போது,நோயைக் கண்டு பயந்த போது,முதுமையைக் கண்டு பயந்த போது,இறப்பைக் கண்டு பயந்த போது அவனைப் பாதுகாக்க ஒருவர் தேவை என்றாகி விட்டது. எங்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.அப்படி ஆகிவிடும் போது ஏதாவது ஒரு பாதுகாப்பை ஓர் ஆறுதலுக்காவது கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. எனவே நமது பயம்,கிலி,சாவு இவைதான் கடவுளைக் கற்பித்து விட்டன. எல்லோரும் பயந்திருப்பதையும் ஏதாவது பாதுகாப்பையும் எதிர் நோக்கியிருப்பதையும் பூசாரி பார்த்தான். மக்களை ஏய்க்க பூசாரிகளுக்கு வழிகிடைத்து விட்டது.அவர்கள் தரகர்களாகி விட்டார்கள். உன்னாலோ கடவுளைப் பார்க்க முடியாது.அதனால் கடவுள் இருக்கிறார்தான் என்று சொல்லி தத்துவங்களையும் சாத்திரங்களையும் கோவில்களையும் விக்கிரகங்களையும் சடங்குகளையும் பிரார்த்தனைகளையும் உருவாக்கி நாடகமாட பூசாரி வந்து சேர்ந்தான். கடவுளுக்கும் உனக்கும் இடையே நின்றுகொண்டு "நான் கடவுளோடு நேராகப் பேசுவேன் என்னிடம் என்னவென்று சொல் உன்னுடைய பாவங்களெல்லாம் சொல்லிவிடு கடவுளிடம் சொல்லி உன்னை மன்னித்து விடச் சொல்கிறேன்."என்கிறான். கடவுளை உன்னால் பார்க்க முடியாது.யாரோ ஒருவருக்குத் தெரியும் என்பதும் கடவுளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ள யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதும் உனக்கு ஒரு பெரிய ஆறுதலாகிப் போகிறது. "உன்னைவிட நன்றாகவே இந்தப் பூசாரிகளுக்குக் கடவுள் இல்லையென்பது தெரியும்." ஆனால் பூசாரிகளின் தொழில்தான் உலகத்தின் மிக மோசமான தொழிலாயிற்றே.விபச்சாரத்தைவிட அசிங்கமான தொழில். "விபச்சாரமே பூசாரிகள் ஆரம்பித்து வைத்த தொழில்தான்." அது இரண்டாவது தொழில்.முதல் தொழில் பூசாரியுடையது.பூசாரிக்கு அப்புறம் விபச்சாரியும் அதற்கு அப்புறம்தான் பிற நோய்களும் இருக்கின்றன. பல மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பூசாரிகள் இருக்கிறார்கள்.ஒவ்வொரு நாட்டிலும் பலதரப்பட்ட பூசாரிகள் இருக்கிறார்கள்.ஆனால் எல்லோருமே ஆறுதல் வார்த்தை சொல்லி மக்களை ஏய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடவுள் இல்லையென்பது பூசாரிக்கு நன்றாகவே தெரியும்.அவருக்குத்தான் மிக நன்றாகத் தெரியும். கடவுள் அவருடைய வியாபரம்.வியாபாரம் என்கிற போதே பிழைப்புஎன்றாகிப் போகிறது. நன்றி
  22. "புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 06 ["மாவீரன் சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி"] இவன் தித்தன் என்பவனின் மகன். இவனுக்கும் இவன் தந்தைக்கும் இருந்த பகையின் காரணத்தால் இவன் தன் தந்தையோடு வாழாமல் வேறொரு ஊரில் [ஆமூரில்] வாழ்ந்து வந்தான். அங்கு இவன் ஆமூரை ஆண்ட மன்னனுக்குத் தானைத் தலைவனாகப் [படைத் தலைவனாகப்] பணிபுரிந்தான். பண்டைக் காலத்தில், போர் வீரர்கள் மற்போர் பயிலும் பயிற்சிக் கூடங்கள் இருந்தன. அவற்றிற்கு போரவை [அல்லது முரண்களரி:- மறவர்கள் தமது வலிமையைக் காட்டும் போர்ப் பயிற்சிக் களம்] என்று பெயர். கோப்பெரு நற்கிள்ளி மற்போரில் மிக்க ஆற்றலுடையவன். இவன் ஓரு போரவையையை நடத்தி வந்ததால் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான். இப்படியான போர்ப்பயிற்சிக் களகம் அல்லது விளையாட்டுக் களகம் ஒன்றைப்பற்றி பட்டினப்பாலை மிக தெளிவாக அழகாக கிழே உள்ளவாறு கூறுகிறது. "முது மரத்த முரண் களரி வரி மணல் அகன் திட்டை இருங் கிளை இனன் ஒக்கல் கருந் தொழில் கலிமாக்கள் ........................................ கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி பெருஞ் சினத்தான் புறங் கொடாது இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர் எல் எறியும் கவண் வெரீஇப் புள் இரியும் புகர்ப் போந்தை" பட்டினப்பாலை(59-74) வரி வரியாக மணல் பரந்த அகன்ற மேட்டுப் பகுதியில் உள்ள பழைமையான மரத்தின் நிழலில், மறவர்கள் தம் வலிமையைக் காட்டும் போர்ப் பயிற்சிக் களம் இருந்தது. அவ்விடத்து மறவர்களின் பெரிய உறவினர்களும், இனச் சுற்றத்தினரும் கூடியிருந்தனர். வலிமையான போர்த் தொழிலில் வல்ல போர் மறவர்கள், ....................................... .............................. கையினாலும், படைக்கலத்தினாலும் ஒருவருக்கொருவர் பின் வாங்காது, போட்டிப் போட்டுக் கொண்டு தம் மிகுந்த போர் வலிமையைக் காட்டினர். மேலும் வலிமையைக் காட்ட எண்ணி, கவணில் [catapult] கல்லை ஏற்றி எறிந்தனர். இவர்கள் எறிகின்ற கல்லிற்கு அஞ்சி பறவைகள், சொரசொரப்பான பனைமரங்களை விட்டு வேற்றிடத்திற்குச் சென்றன. பண்டைய காலத்தில், ஒரு நாட்டிற்கு எதிராக படையெடுத்துத் தாக்குதல் செய்வ தென்றால், முதல் ஒரு எச்சரிக்கையாக அந்த நாட்டின் பசுக்களை வெட்சி பூ [ஒருவகைக் காட்டுப்பூ] சூடி, அங்கு போய் கவருவார்கள். இப்படியான வழக்கம் மகாபாரத காலத்திலும் இருந்தது என்றாலும், அங்கு பூ சூடுவதில்லை. இப்படி தமிழர் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பூ சூடுவது போல் உலகில் எங்கும் இல்லை. எதிர் அணி பசுக்களை வெற்றிகரமாக மீட்க போரிடும். அப்பொழுது அவர்கள் கரந்தை பூ சூடி போரிடுவார்கள். வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல் கூறுகிறது. அப்படியான ஒரு வெட்சி கி மு 500 ஆண்டளவில் ஆமூரில் நடைபெற்றது. அதை மீட்கும் பொறுப்பு ஆமூர் அரசனின் படைத் தலைவன் கோப்பெரு நற்கிள்ளிக்கு உரியதாயிற்று.அவன் தன் வீரர்களுடன் கரந்தைப் போருக்குச் சென்ற பொழுது [பகைவரின் பசுக்களைக் கவர்தல் வெட்சிப் போரும். பசுக்களை வெட்சி வீரர்கள் கவராதவாறு தடுக்கும் அல்லது அப்படி கவர்ந்த பசுக்களை மீட்கும் போர், கரந்தைப் போர் ஆகும்], வீரர்களை அசைவும் அச்சமும் தோன்றாதவாறு நீண் மொழி [நீண்மொழி என்பது ஓருவீரன் போர்க்களத்தில் கூறிய சூளுரையைக் கூறுவது / Theme describing the vow taken by a warrior] பேசி அவர்களை ஊக்குவிப் பதற்கா, அவன் துடி கொட்டுவோனையும், முரசறைவோனையும் வருவித்து மறவர் பலரும் அறியும்படி தானுரைக்கும் நீண்மொழியைத் தெரிவிக்குமாறு புலவர் சாத்தந்தையாருக்கு பணித்தான்.இதோ அந்த பாடல்: "துடி எறியும் புலைய! எறிகோல் கொள்ளும் இழிசின! கால மாரியின் அம்பு தைப்பினும் வயல் கெண்டையின் வேல் பிறழினும் 5 பொலம்புனை ஓடை அண்ணல் யானை இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும் ஓடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும் 10 தண்ணடை பெறுதல் யாவது? படினே, மாசில் மகளிர் மன்றல் நன்றும் உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால் வம்ப வேந்தன் தானை இம்பர் நின்றும் காண்டிரோ வரவே." [புறநானூறு 287] துடிப் பறையை அடிக்கும் பறையனே! குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே! மாரிக் காலத்து நீர்த்தாரை போல அம்பு உடம்பில் தைத்தாலும், வயலில் கெண்டைமீன் பிறழ்வது போல உடம்பில் வேல் புரண்டாலும், பொன்னாலான நெற்றி பட்டம் கொண்ட மாபெரும் யானை தன் தந்தக் கூர்மையால் குத்தினாலும், அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடாத பெருமை பொருந்திய வீரன் அவன். அந்தப் பெருமையைப் பாராட்டி அவனுக்கு வேந்தன் தண்ணடை (நன்செய்-நிலம் / Arable land / agricultural lands) வழங்குவான். பொய்கையில் வாழும் வாளைமீன் பிறழும்போது நெல் சேமிமித்து வைத்திருக்கும் குதிர் என்னும் கூட்டில் மோதித் திரும்பும் அளவுக்கு நீர்வளம் மிக்க தண்ணடை-வயல் அது [தண்ணடை என்னும் மருத நிலங்களை போரில் சிறந்த வெற்றிச் செயல்களைச் செய்த வீரர்களுக்கு பழங்காலத்தில் கொடுப்பது வழக்கமாய் இருந்தது]. அதனைக் கொடுத்தாலும் போரில் இறந்துபடுவானேயாயின், அவனுக்கு வழங்கப்பட்ட நிலத்தால் என்ன பயன்? அவனுக்குக் கிடைப்பதெல்லாம் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரைத் தழுவும் இன்ப வாழ்வுதான். அதாவது போர் வீரர்களை வானுலக மகளிர் தழுவுவர் என இது கூறுகிறது. அதனால், குறும்பு செய்யும் [வம்புப் பிடித்த] பகை வேந்தனுடைய படை வருவதை இங்கிருந்தே காண்பீராக என்று உற்சாகப்படுத்தினான். சோழன்‌ போரவைக்‌ கோப்‌ பெருநற்கிள்ளி, உடல் வலிமை மிக்க ஆமூர் அரசன் மல்லன் என்பவனுடன் எவ்வாறு திறமையாக போரிடுகிறான் என்பதை மிக அழகாக புறநானூறு 80 எடுத்து இயம்புகிறது. இங்கு இனிய கள்‌ மிகுதியாக உள்ள ஊர்‌ ஆமூர்‌ ஆகும். சோழன்‌ போரவைக்‌ கோப்‌ பெருநற்கிள்ளி தந்து ஒரு காலை மண்டியிட்டு மல்லன் மார்பில்‌ மிதித்துக்‌ கொண்டு மற்றொரு காலால்‌ மல்லனை மடக்கப்‌ போட்டு வளைத்து அவனோடு மற்போர்‌ செய்கிறான்‌ என இந்த பாடல் மூலம் நாம் காண்கிறோம். இது, பசித்து அதனால்‌ மூங்கிலை வளைத்து முறிக்கும்‌ யானையைப்‌ போல்‌ அவன்‌ தலையையும்‌ காலையும்‌ பிடித்து வளைத்துத்‌ தாக்குவது போல இருந்ததாம் என சாத்தந்தையார்‌ என்ற புலவர் பாடுகிறார். "இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம பசித்துப் பணை முயலும் யானை போல, இரு தலை ஒசிய எற்றி, களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே." [புறநானூறு 80] ஒரு பெண் புலவர் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், இவன் இளவரசனாக இருந்த போது, இவன் மேல் ஒரு தலைக் காதல் [கைக்கிளைக் காதல்] கொண்டிருந்தாள் என்று புறநானுறு 83,84 & 85 மற்றும் சங்க பாடலில் இருந்தும் நாம் அறிகிறோம். பெருங்கோழி’ (கோழியூர்) என்பது உறையூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. ‘நாய்கன்’ என்னும் சொல் நீர்வணிகனைக் குறிக்கும். ஆகவே உறையூர்க் காவிரியாற்றுப் படகுத்துறை வணிகனாக இவள் தந்தை இருக்க வேண்டும். அந்த காதலுக்கு என்ன நடந்தது என்றோ, இவன் எப்படி சோழ அரசன் ஆகினான் என்றோ தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 07 - " கரிகால் சோழன்" தொடரும்.
  23. "இடிமுழக்கம்" [அந்தாதிக் கவிதை] "இடிமுழக்கம் வானில் பெரிதாய் கேட்கும் கேட்கும் சத்தமோ மின்னலின் எதிரொலி! எதிரொலியின் பின்னே எதோ இருக்கும் இருக்கும் அதுவோ நல்லதாய் அமையட்டும்! அமையும் எதுவும் குழப்பத்தில் முடிந்தால் முடியும் அதுவோ ஒரு இடிமுழக்கம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.