Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"இடிமுழக்கம்" [அந்தாதிக் கவிதை]
"இடிமுழக்கம்" [அந்தாதிக் கவிதை] "இடிமுழக்கம் வானில் பெரிதாய் கேட்கும் கேட்கும் சத்தமோ மின்னலின் எதிரொலி! எதிரொலியின் பின்னே எதோ இருக்கும் இருக்கும் அதுவோ நல்லதாய் அமையட்டும்! அமையும் எதுவும் குழப்பத்தில் முடிந்தால் முடியும் அதுவோ ஒரு இடிமுழக்கம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"காதல் கோட்டை"
"காதல் கோட்டை" இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாழ் நகரின் ஒரு சிறு பகுதியான அத்தியடியில் அப்பன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று கொழும்பு, பொரளையில் அவனின் உறவினர் ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி முகாமையாளராக தன் முதல் உத்தியோகத்தை ஆரம்பித்தான். அகவை இருபத்தி மூன்று, இருபத்தி நாலு இருக்கும். ஒரு வாலிபனுக்கான ஆசைகள், கனவுகள் நிறைந்தவனாக, ஒரு உண்மையான அன்பை பெற்று வாழ்வை பூரணமாக்க வேண்டும் என்பதில் அவனுக்கு ஒரு விருப்பம், அவா இருந்ததில் வியப்பு இல்லை. நாளாக ஆக, தன்னுடைய தனிமையை அதிகமாய் உணரத் தொடங்கினான். முன்பு அத்தியடியில், பேராதனையில் இருந்த காலத்தில் எந்த நேரமும் நண்பர்கள் அல்லது பெற்றோர்கள் சகோதரங்கள் சூழ்ந்து இருப்பார்கள். ஆனால் அவனுக்கு கொழும்பு புது அனுபவம். இன்னும் பெயர் கொள்ளக்கூடியதாக பெரிதாக ஒரு நண்பரும் இல்லை. எவ்வளவோ ஜனக்கூட்டத்துக்கு நடுவில் இருந்தும் தான் நண்பர்கள் இன்றித் தனித்திருப்பதைக் அவன் கண்டான். வெற்றியும், புகழும், செல்வாக்கும், திரளான மக்களின் போற்றுதலும் இருந்தும் அவனுடைய இதயத்தில் நிறைவு ஏற்படவில்லை. அதில் ஒரு மூலை சூன்யமாக இருந்தது. அந்தச் சூன்ய மூலையானது நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டு வந்தது. ஒரு வாரஇறுதி அன்று, அவன் இருக்கும் வீட்டுக்காரர்கள் காலிமுக திடலுக்கு போகும் பொழுது, 'தம்பி, நீயும் வந்தால் என்ன?' என்று கேட்க, அவனும் சம்மதித்து, தன் தனிமைக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி மாதிரி, அவர்களுடன் புறப்பட்டான். அரும்பு மீசை, உயரத்துக்கு ஏற்ற பருமன், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் காந்தக் கண்கள், கற்பனையில் கவிஞர்கள் கவிதையில் வார்க்கும் அழகை, வாலிப முறுக்குடன் நிஜத்திலேயே கொண்டு இருந்தான். காலி முக திடலில், அமைதியான நீலக் கடலில் அழகிய அன்னப் பறவை போல் ஒரு சிறிய படகு ஒன்று போய்க் கொண்டிருந்தது. சூரியன் மறையும் நேரம் அது. கீழ்வான முகட்டில் இயற்கைத் தேவி வர்ணக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தாள். அவன் அந்த இயற்கையின் அழகில் மிதந்து கொண்டு இருக்கையில், வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பவள் போல் ஒருவள் திடீரென அங்கு வந்து, ஹாய் டீச்சர் என்றாள். அவன் திரும்பி யார் என்று பார்த்தான். வீட்டு அம்மா, இவள் என்னுடைய பழைய உயர் வகுப்பு மாணவி, இப்ப கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள் என்று சிறு அறிமுகம் செய்தார். பலரை பார்க்கின்றோம், பலருடன் பழகுகின்றோம். எல்லோருடைய அழகும் எல்லோரையும் கவருவதில்லை. சிலருடைய அழகு சிலரை கவர்ந்து இழுக்கும். சிலருடைய அழகு பலரையும் கவர்ந்து இழுக்கும். இவள் இரண்டாவது வகை. அப்படி ஒரு அழகு. "பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியளாகி அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்" மயிலின் சாயலும், அன்ன நடையும் வஞ்சிக்கொடி போன்ற இடையும் கொண்டு விளங்கும் இவள் அவனைக் கவர்ந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவளும் இவனைப்பார்த்து ஹலோ என்றாள். அந்த ஹலோ வுக்கு பின்னால் "வஞ்சி என நஞ்சம் என வஞ்சமகள் வந்தாள்" என்ற கம்பனின் இறுதி வரியை அவன் கவனிக்கவில்லை. அவன் அதை ஜோசிக்கும் நிலையில் அப்ப இருக்கவில்லை. 'நீண்ட நயனங்களையுடைய அந்தப் பெண் மட்டும் இங்கே என் அருகில் தினம் இருந்தால்?' - என்ற எண்ணம் அவனை அறியாமல் அவனுக்கு உண்டாயிற்று. அது அவனுக்கு அளவிலாத ஒரு கனவை ஏற்படுத்தியது. தன்னை அறியாமல் அவன் ஒரு பெருமூச்சு விட்டான். நீங்க கதையுங்கோ, நாம் பிள்ளைகளுடன் கொஞ்ச நேரம் கடலில் இறங்கி விளையாடி விட்டு வருகிறோம் என்று இவனுக்கும் அவளுக்கும் கூறிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். அவள் கொஞ்சம் அருகில் வந்து கதைக்கத் தொடங்கினாள். அவன் இவளை பார்த்தது முதல், விவரிக்க முடியாத ஒரு தொடர்பை உணர்ந்தான், மேலும் அவன் இவள் தனக்குப் பொருத்தமானவள் என்று தனக்குள் உறுதியாக நம்பினான். அங்கு சில்லென்று குளிர் காற்று வீசி, என்னைத் தடை செய்யாதே என்று இருவர் முகத்திலும் அடித்தது. அவர்கள் இருவரும் இப்ப பக்கத்தில் இருந்த வாங்கில் அமர்ந்தபடி பேசத் தொடங்கினார்கள். ஒருவரை ஒருவர் யார் எவர் என்று அறிய அவர்களுக்கு இடையில் இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. அவளின் பெயர் சுகி, அவன் தன் வாழ்வின் அந்த அற்புதமான சந்திப்பை சுகித்தபடி அவளின் அழகான உதட்டினால் தவழும் கொஞ்சல் பேச்சை கேட்டுக்கொண்டு சொக்குப்பொடி போட்டதுபோல் அதில் தன்னை அறியாமலே கட்டுண்டு விட்டான். அதற்கிடையில், வீட்டுக்காரர்கள் திருப்பி வந்து வீட்டினம். என்றாலும் இருவரும் அதற்கு முதல் தமது தொலைபேசி, முகநூல் விபரங்களை பகிர்ந்துவிட்டனர். அவள் எல்லோருக்கும் பொதுவாக, ஆனால் அவனை மட்டுமே பார்த்தபடி போய்விட்டு வாறன் என்று சொல்லிவிட்டு நகர்ந்துபோனாள். வீட்டுக்கார அம்மா , எதோ அவனுக்கு சொல்ல வாய்திறந்தார், ஆனால், குட்டி மகளின் அழுகை, அவரின் கவனத்தை திசை திருப்பிவிட்டது. அன்று இரவு, அவனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெண்ணின் முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றி , அவனுடைய இதயம் விரிந்து பொங்கி மேல் நோக்கி எழுந்து நெஞ்சை அடைத்து விடுவதுபோல் ஒரு புது உணர்ச்சியை முதல் முதல் கண்டான். அவளின் யதார்த்தமான சந்திப்பு . . . ஒரு சில நிமிடங்களில் பரிமாறி கொண்ட பார்வைகள் நாட்கள் நகர்ந்தும் மறந்து போகாத அந்த நிமிடங்கள் . . . திரும்பவும் அவளின் ஓர பார்வைக்காக, அவன் இதயம் துடித்து, ஏங்கியது. அப்பன் அடுத்த வார இறுதியில் தனியாக காலிமுக திடலுக்கு, தன்னை கொஞ்சம் கூடுதலாக அலங்கரித்துக்கொண்டு சென்றான். சுகி அங்கு வருவதாக கூறி இருந்தாள். ஆனால் அவளை இன்னும் அங்கு காணவில்லை. அங்கு ஆணும் பெண்ணுமாக அமர்ந்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அடிக்கடி சிரிப்பு. அப்பன் ஊமைப் படம் போல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி ஓயாமல் என்ன பேசுவார்கள்? காதல் என்று ஒன்று வந்து விட்டால் அர்த்தமற்றுச் சிரிக்கத் தோன்றுமோ? அபத்தமாகப் பேசுவதைக் கூட ரசித்துச் சிரிக்கத் தோன்றுமோ? அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான். திரும்பினான். தலையில் சொத்தென்று எதோ பறவை ஒன்றின் எச்சம் வீழ்ந்தது. திடீரென நம் மீது காக்கை எச்சம் இடுவது, தலையில் தட்டுவது, கொத்தி விட்டு போவது போன்ற விஷயங்கள் நமக்கு நன்மை செய்யவே காக்கை அவ்வாறு செய்கிறது என எப்போதோ பஞ்சாங்கத்தில் படித்தது. ஆனால் அப்பனுக்கு இதுகளில் எந்த நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவளின் நினைவு, அது உண்மையாகட்டும் என்று ஏங்கியவாறு அலையைப் பார்த்து ரசித்தான். அவன் ரசித்துக் கொண்டிருந்த ஒரு அலை பெண்ணாகி அவனைப் பின்தொடருவது போல கற்பனை ஒன்று மனதில் எழ, திரும்பி பார்த்தான், சுகி ஹெலோ என்று அழைத்தவாறு அருகில் வந்துகொண்டு இருந்தாள். சுகி நாணமும் மகிழ்ச்சியும் அழகும் வடிவெடுத்து வந்ததுபோல அவனுக்கு எதிரில் தோன்றி உலகை மயக்கவந்த மோகினிதேவி போலப் புன்முறுவல் செய்து நின்றாள். அவள் வழக்கத்திற்கு அதிகமாக மகா ஆடம்பரபமாகவும் வசீகரமாகவும் அலங்கரித்துக்கொண்டு வந்திருந்ததைக் காணவே அப்பனின் கண்கள் அவளைப் பார்த்தபடியே அசையாமல் நின்றுவிட்டது. அதுவுமன்றி, அவளது நண்பிகள் இல்லாமல், அவள் மாத்திரம் தனியாக வந்திருந்தது, அவளும் தன்னை விரும்புகிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. சுகி வந்ததும் வராததுமாக, அப்பனின் கையை பிடித்தப்பிடி, நாணிக்கோணித் தனது புருவம், கண்கள், உதடு, மார்பு, கைகள் முதலிய வில்களால் ஆயிரக்கணக்கான மன்மத பாணங்களைத் தொடுத்துக் குலுக்கிப் பிலுக்கிக் கிள்ளை போல அழகாகத் தனது வாயைத் திறந்து, 'அப்பன், என்ன கன நேரமாக நிக்கிறீங்களா?' என செல்லமாக அவளின் கார் குழலின் வாசம் காற்றோடு மூக்கை துளைக்க நேருக்கு நேர் நெருங்கி நின்றாள். ஒரு கணம் அசைவற்று நின்றவன், அவளை அணைத்தபடி கடல் அலையில் இருவருமாக இறங்கினர். அமைதி தவழும் முகம், திருத்தமான உடை, அலட்டல் இல்லாத இயல்பான புன்னகை இழைந்தோடும் பார்வையுடன், சுடிதார் நனைவதையும் பொருட்படுத்தாமல் அலைகளுடன் அவனையும் இழுத்து இழுத்து இன்பமாக மாலைப்பொழுதை கழித்தாள். காலப்போக்கில் சுகி மீதான அப்பனின் உணர்வுகள் மிகவும் வலுவானவையாக மாறின. அவன் தனது இதயத்தில் ஒரு உருவகமான "காதல் கோட்டை" கட்டினான். அங்கு அவன் தனது நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் பாசம் அனைத்தையும் வைத்தான். அவள் எப்பொழுதும் அவனிடம் அன்பாகவும் நட்பாகவும், நெருக்கமாகவும், வெளிப்படையாகவும் இருந்ததால் அவனுடைய உணர்வுகளை அவள் பிரதிபலிப்பதாக அவன் நம்பினான். ஓய்வு நேரங்களில் தொலைபேசி மூலமும், கடற்கரை மற்றும் பூந்தோட்டத்திலும் அவர்கள் ஒன்றாகச் சிரித்து, கதைகளைப் பகிர்ந்துகொண்டு நேரத்தைக் கழித்தார்கள், ஒவ்வொரு நாளும் அவர்களது தொடர்பு வலுவடைவதை அப்பனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால், சுகி, அப்பனுடன் சேர்ந்து காதலியாக இருந்தாலும், அவளின் உள்மனதில் தனது கண்களை வேறு பாதையிலும் வைத்திருந்தாள் . அன்பு, படிப்பு, பண்பாடு, மதிக்கத்தக்க உத்தியோகம் போன்றவற்றை விட, செல்வமும் ஆடம்பரமும் நிறைந்த வாழ்க்கையின் கனவுகளை அவள் கொண்டிருந்தாள், அதை அடைவதற்கு ஒரு பணக்காரனை திருமணம் செய்துகொள்வதே முக்கியம் என்பது அவளின் நம்பிக்கை. அந்த தேடலில் அப்பனை அவளின் காதலனாக இன்று அவள் ஏற்றுக்கொண்டு இருப்பது, துரதிர்ஷ்டவசமாக அவனுக்கு தெரியாது. ஒரு நாள், சுகி திடீரென தான் இனி சந்திக்க முடியாது. பெற்றோர் தனக்கு வெளிநாட்டு மாப்பிளை பார்த்துள்ளார்கள் என்று கூறிவிட்டு, எந்த கவலையும் இன்றி சர்வசாதாரணமாக விலகிப்போனாள். அன்பின் ஆழத்தில் புரிதல் என்பது உள்ளவரை பிரிதல் என்பது இருந்திட முடியாது என்பதில் மிகவும் நம்பிக்கையானவன் அவன். அவளின் செயல் அவனை தூக்கிவாரிப்போட்டது. அவனது இதயம் நொறுங்கியது. அப்பன் பேரழிவிற்கு ஆளானான், ஆனால் அவன் தனது காதல் கோட்டையை கைவிட மறுத்துவிட்டான். சுகி ஒருவேளை குழப்பமடைந்திருக்க வேண்டும் அல்லது பயந்திருக்க வேண்டும் என்றும், இறுதியில் அவள் மீண்டும் வருவாள் என்றும் அவன் தன்னைத்தானே நம்பிக் கொண்டான். இதற்கிடையில், சுகியின் பெற்றோர் அந்த வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். அவன் பெரிதாக படிக்கவில்லை என்றாலும், வெளிநாடு சென்று அங்கு ஒரு வியாபாரத்தில் ஈடுபட்டு ஒரு பெரிய செல்வத்துடன் ஒரு தொழிலதிபராக இருந்தான். பெரிய நல்ல பழக்கவழக்கம் எதுவும் அவனிடம் காணப்படவில்லை. அழகும் பெரிதாக இல்லை. ஆனால் நிறைய பணம் , மாளிகை மாதிரி வீடு, மற்றும் வசதிகள் தாராளமாக இருந்தன. என்றாலும் சுகி எப்போதும் கனவு கண்ட வாழ்க்கையை வாழ ஒரு வாய்ப்பாக அவள் எடுத்துக்கொண்டாள், மேலும் அவளது இதயம் உண்மையில் உறவில் முதலீடு செய்யவில்லை என்பதால், அப்பனை கைவிட்டு அவரை திருமணம் செய்து கொள்ள சுகி ஒப்புக்கொண்டாள். சுகியின் திருமணம் விரைவில் நடக்கவிருக்கும் செய்தி வீட்டு கார அம்மா மூலம் அப்பனுக்கு தெரியவந்தது. ஆனால் சுகியின் காதல் இன்னும் அவனது இதயத்தில் ஆழமாகப் புதைந்து இருந்தது. தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அவன் உணர்ந்தான். சுகியின் திருமண நாள் வந்தது, முழு நகரமும் பெரும் விழாவில் கலந்துகொண்டது. அப்பன், மனம் உடைந்தாலும், தன்னைக் கிழிக்க முடியாமல், தூரத்திலிருந்து பார்த்தான். சுகியின் கழுத்தில் தாலி ஏறியது. அப்பனின் காதல் கோட்டை நொறுங்கத் தொடங்கி, அவனது இதயத்தில் வலி தீவிரமடைந்தது. என்றாலும் அவள் மேல் கொண்டிருந்த அன்பை அவனால் மறக்கவே முடியவில்லை. அவனது காதல் கோட்டை மாயைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்டது என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அது அவனது உண்மையான உணர்ச்சிகளின் வலிமையையும் அவனது ஆன்மாவின் நெகிழ்ச்சியையும் அவனுக்கு கற்பித்தது. காதலை காணாமல், அனுபவிக்காமல் எவருமே பொதுவாக வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது, ஆனால் அந்த காதல் அவர்கள் வாழும் சூழ்நிலையை பொறுத்து வெவ்வேறாக இருக்கலாம் , ஆனால் காதலும் அது கொடுக்கும் உணர்வும் என்றுமே மாற்றமடையாத ஒன்று! காதலில் வெற்றி பெற்றால் மட்டும் தான் இன்பம் அல்ல, அவரவர் காதலை நினைத்துப் பார்த்தாலே ஒரு பெரும் மகிழ்வுதான்! பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே, கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு, அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து, சதையை தாண்டி விதியை காண்பது காதல் - அப்படி காதல் கொண்ட கனிந்த காதலிக்காக ஷாஜகான், மும்தாஜ் மஹால் இறந்த பின் ..... கண்களை கலந்து, இதயங்களை ஒன்றாக்கி, மௌனத்தை மொழியாக்கி, சிந்தனையை சீராக்கி, வாழ்வை வசந்தமாக்கி, இன்பத்தை இரட்டிப்பாக்கி கொடுத்து வாழ்ந்த அவள் நினைவாக தாஜ்மகாலை கட்டி அவள் நினைப்பில் வாழ்ந்தான்! ஆனால் இவன் மனதில் கட்டிய காதல் கோட்டையை பிரித்து பிரித்து இடித்துக்கொண்டு இருந்தான், ஆனால் அந்த வேளையிலும், அப்பன் சுகியை திட்டவில்லை. உன்னை ஒரு பார்வை கேட்டேன், கண்கள் பேசும் சில வார்த்தை கேட்டேன். கன்னத்தில் வந்த ஈரமும் இதயத்தில் நொந்த காயமும்தான் எனக்காக நீ கொடுத்தது! இந்த முறிந்த காதலியை இனி நினைக்க முடியாது! என் என்றால் அவள் எங்கோ யாருடனோ இப்ப மாடி வீட்டில் வெளிநாட்டில் பணக்காரியாக வாழ்கிறாள்!! தன் சிறு பருவத்திலிருந்தே லைலா என்னும் தன் தோழியின்மீது ஆழமான அன்பு கொண்டு வளர்கிறான் 'கைஸ்' ["மஜ்னூன்"] . அன்பு முற்றிக் காதலாகிறது. காதலின் சக்திக்குத் தன்னை முழுவதுமாகக் கொடுத்து காதல் கோட்டையும் கட்டினான். மஜ்னூன் என்றால் பித்தன் என்று பொருள். அவள் வேறு ஒரு பெரும் செல்வனை திருமணம் செய்து கொள்கிறாள். ஒரு முறை, லைலாவின் தெருவில் அலைந்து கொண்டிருந்த மஜ்னூன், அவள் வீட்டின் சுவர்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்களின் காதுகளில் விழுமாறு ஒரு கவிதை படிக்கிறான்: "லைலாவின் தெருவில் அவள் வீட்டின் சுவர்களை முத்தமிடுகிறேன் நான். இந்தச் சுவற்றின் மீதோ அல்லது அந்தச் சுவற்றின் மீதோ காதல் கொண்டவனல்ல நான். என் மனதில் பொங்கி வழிவது அந்த வீட்டுக்குள் இருப்பவளின் காதலே!" என்கிறான். "ரோஜா காதலின் சின்னம் என்பது சரிதான். காலையில் இருக்கிறது அவளைப் போல். மாலையில் ஆகிறது என்னைப் போல்." என அப்பன் தன் வேதனையை, அவளின் ஏமாற்றலை முணுமுணுத்தவாறு மனதில் கட்டிய அந்த கோட்டையை நிரந்தரமாக தூக்கி எறிந்தான்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"புறநானூற்று மாவீரர்கள்"
"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 05 ['மாவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி'] அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை (தருமபுரி) ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்க காலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப் பொருட்களாக உள்ளன. திண்மையான உடல் வலி பொருந்தியவன் என்றும்; சேரன், சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். நாம், பாடசாலை பாடங்களில் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன் அதியமான் என்று படித்திருப்போம். அதியமான் என்பது பரம்பரைப் பெயர். அதியமான் நெடுமான் அஞ்சிதான் ஔவைக்கு கனி கொடுத்தவன். ஒரு முறை வேட்டையாடச் சேலத்தை அடுத்த கஞ்ச மலைக்குச் சென்றான். அங்கு உயர்ந்த பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லி மரத்தில் கனி ஒன்றிருக்க அதைப் பறித்து வந்தான். அதை உண்பவர்கள் நீண்ட ஆயுளும், உறுதியான உடல் வலிமையையும் பெறுவார்கள் என்று அறிந்த அதியமான், அக் கனியைத் தான் உண்ணாது, தன் அமைச்சரவையில் அவைப் புலவராக இருந்த ஔவைக்கு, அக்கனியைக் கொண்டு வந்து கொடுத்து உண்ணச் செய்தான். ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய தன்னலமற்ற அரசன் அஞ்சி! ஒரு சமயம் நடை பெற்ற போரில், அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான். வெற்றி பெற்றாலும், அவன் போரில் பகைவர்களின் படைக் கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான். போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெரு மகிழ்ச்சி அடைந்தார். உன்னால் போரில் தோற்கடிக்கப் பட்டவர்கள் சிதறியோடினார்கள். அந்த பெருந் தன்மையற்ற அரசர்கள் அங்கு இறந்தார்கள் .அவர்கள் அவ்வாறு இறந்ததால், விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். மற்றும், பகைவர்கள் ஓடியதால், இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை; ஆகவே, இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்?” என்று அவ்வையார் அதியமானை பார்த்து கேட்டார். இதோ அந்த பாடல்: "திண்பிணி முரசம் இழுமென முழங்கச் சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர் தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து அண்ணல் யானை அடுகளத் தொழிய அருஞ்சமம் ததைய நூறிநீ பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே." [புறநானூறு - 93] பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர். அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்), நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி, அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து, அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க் களத்தில் நெருங்கி அழித்து விழுப்புண் பட்டதால், இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்” [ஓர் ஒலிக் குறிப்பு / denoting sound, as that of a drum] என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி? பகைவர்கள் ஓடியதால் இனி, போர்கள் நிகழ வாய்ப்பில்லை; அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள். புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவரைப் பற்றிய தகவல்கள் உள்ளன. அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவருடன் போரிட்டு அவரது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தார். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும்,இப்போரில் தோற்று இறந்தார். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு [படம் - 05] என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது. இந்த ஜம்பைக் கல் வெட்டு, 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மாணவர் ஒருவரால் கண்டு பிடிக்கப் பட்டது. அதில்: "ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை)" என பதியப் பட்டுள்ளது. அதாவது, அதியமான் நெடுமானஞ்சி ஒரு குகை வாழிடத்தைத் தனக்கு தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது. அத்துடன், அதியமான் இக் கல்வெட்டில் "சதிய புத்தோ" என்னும் அடை மொழியுடன் குறிப்பிடப்பட்டுள்ளான். இதன்மூலம் அசோகனின் கல்வெட்டொன்றில், [The Edicts of King Asoka - 2, Everywhere within Beloved-of-the-Gods, King Piyadasi's domain, and among the people beyond the borders, the Cholas, the Pandyas, the Satiyaputras, the Keralaputras [Cera dynasty], as far as Tamraparni and where the Greek king Antiochos rules, and among the kings who are neighbors of Antiochos,..] சேர, சோழ, பாண்டியர்களுடன் "சதிய புத்தோ" எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசகுலம் எது என்பது குறித்து நிலவிய விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்ததும் இதன் இன்னொரு சிறப்பு ஆகும். "ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின், நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன் துன்னருங் கடாஅம் போல இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே." [புறநானூறு - 94] பெரும! நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன் மீது ஊர்ந்து வந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம் போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் [Musth / மதநீர் = மதம் + நீர், ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் நீர். இது இவைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது என்றும், இது ஆண்களின் பாலுணர்வினைச் சார்ந்ததென்றும் கூறுவர். இவ்வாறாக மதநீர் வழியும் காலத்தில் யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறுவர். பெண் யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது.] போலக் கொடுமையானவன் என அவ்வையார் இவனை புகழ்ந்து பாடுகிறார். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 06 - "மாவீரன் சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி" தொடரும்.
-
"கற்றதை ஏற்றுக் கடமையை ஆற்று....!"
"கற்றதை ஏற்றுக் கடமையை ஆற்று....!" "கற்றதை ஏற்றுக் கடமையை ஆற்று ஏற்றதை எடுத்து மக்களுக்கு வழங்கு மற்றதை தவிர்த்து தூக்கி எறிந்து சுற்றத்தை மதித்து நட்பை வளர்த்து குற்றத்தைக் கண்டால் நீதி நிறுத்தி மாற்றத்தை வேண்டி நடந்து செல்!" அறிவு கொண்ட கொள்கை வழியில் அலசி ஆராந்து முடிவு எடுத்து அன்பு பாயும் மக்களையும் சேர்த்து அச்சம் இல்லா சமூகம் அமைத்து அடிமை ஒழித்த வரலாற்றை தனதாக்கி அக்கினிப் பிழம்பாய் எழுந்தால் என்ன?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
27/11/2024: "திருமண நாளில் ஒரு நினைவுகூரல்" [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம்]
எல்லோருக்கும் நன்றிகள்
-
27/11/2024: "திருமண நாளில் ஒரு நினைவுகூரல்" [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம்]
27/11/2024: "திருமண நாளில் ஒரு நினைவுகூரல்" [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம்] "எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து எடுப்பாய் குடும்பத்தில் இரண்டறக் கலந்து எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!" "மனதைக் கவர்ந்து அன்புமழையில் நனைத்து மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து மகரிகை தொங்க வலதுகால் வைத்த மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!" "வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து வயிறு நிறைய உபசாரம் செய்து வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!" "கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து கருணையுடன் எல்லோரையும் வழி நடத்தி கண்டவர்கள் மனம் நிறைந்த அலைமகளே!" "மீதி வாழ்வை பாதியில் விட்டுவிட்டு மீளாதுயரில் எம்மை ஆழ்த்தியது எனோ? மீட்சி உண்டோ விடிவுஉண்டோ எமக்கு ? மீண்டும்நீ எம்மிடம் வரும் வரை?" "சொல்லாமல் கொள்ளாமல் நீ பிரிந்ததை சொல்லியழ எமக்கு வார்த்தை இல்லை சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் சொந்தமாய் அதில்நீ என்றும் இருப்பாய்!" இயற்கையின் அழைப்பை ஏற்றதனால் - நீர் இசைந்து எம்மை விட்டு விரைந்தீரோ ? இளகிய இதயம் கொண்டதனாலா - அவன் இயமன் வலையில் நீர் விழுந்தீரோ?" "உறவாய் உற்றவளாய் உடன் பிறப்பாய் உத்தமியாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர்? உயிராய் உன்கொள்கைகளை நாம் போற்றி உன்நினைவுகளில் என்றும் நாம் வாழ்ந்திடுவோம்!". [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அன்பால் ஆள்வோம்” [27/11/2024]
எல்லோருக்கும் நன்றிகள்
-
"புறநானூற்று மாவீரர்கள்"
"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 04 [மாவீரன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்] சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப் போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அவர்களது போர் முறை நேர்மையாக இருந்தது. காலை சூரிய உதயத்தின் போது முரசறைந்து போர் தொடங்குவர். சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடை பெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். சங்க காலத்து தமிழர்களின் தரைப் படைகள் ஐந்து படையணிகளாக பகுக்கப் பட்டிருந்தன: அவை யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை,காலாட் படை, தூசிப் படை ஆகும் இதில் நவீனயுக கொமாண்டோப் படையணிகளுக்கு நிகராக இயங்கியதே தூசிப் படையாகும். அதாவது முதலாவதாக வந்து [படையின் முதற்பகுதியாக] சண்டையிடும் படை தான் தூசிப் படை அல்லது தார் ஆகும். ["தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து."/குறள் எண்: 767] இனி, அப்படியான எதிர்த்து வரும் தூசிப் படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? என ஆறாத் துயரம் எய்தி, கேள்வி கேட்கிறார் கழாத்தலையார் என்ற கி.மு மூன்றாம் / இரண்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த, சங்க புலவன். இவனை இப்படி கேட்க வைத்தது சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக் கைப் பெருவிறற் கிள்ளி ஆகிய இருவரினதும் வீரச் சாவு தான். பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் போர் வன்மையும் கொடைச் சிறப்பும் மிகுந்தவன். இவனுக்கும் சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் இடையே திருப்போர்ப்புறம் [திருப்போர்ப்புறம் என்பது இப்போது தஞ்சை மாவட்டத்தில் கோவிலடியென வழங்குகிறது] என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிட வேண்டாம் என்று நிறுத்தி விட்டு, இவ்விருவர் மட்டுமே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இவ்வாறு போரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ [அறம்:- ஒழுக்கம், மண்டு:- தாக்கு] என்று பெயர். போர்க்களத்தில், சேரமான் உயிர் நீங்கும் தறுவாயில் இருப்பதைக் கண்ட கழாத்தலையார் அவனைப் புகழ்ந்து பாடினார். சேரன் தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி கழாத்தலையாருக்கு அணிவித்துப் பின்னர் இறந்தான். மன்னர்கள் இருவரும் இந்தப் போரில் விழுப்புண்பட்டு போர்க்களத்திலேயே இறப்பதைக் கண்ட புலவர் கழாத்தலையார் மிகுந்த வருத்த முற்றார். அவர்களுடைய வெற்றியை அறை கூவும் முரசு ஓய்ந்தது. மன்னர்களின் மனைவியர் கைம்மை நோன்பை மேற்கொள்வதை விரும்பாது தம் கணவரைத் தழுவி உயிர் துறந்தனர். விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் இந்த இரு மன்னர்களையும் விருந்தினராகப் பெற்றனர் என்று இந்த காட்சியை பார்த்து விட்டு தான் இப்படி பாடினான். "வருதார் தாங்கி அமர் மிகல் யாவது பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டுக் குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் எடுத்து எறி அனந்தர் பறைச் சீர் தூங்கப் பருந்து அருந்துற்ற தானையொடு செரு முனிந்து அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாம் மாய்ந்தனரே குடை துளங்கினவே உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே பன் நூறு அடுக்கிய வேறு படு பைஞ்ஞிலம் இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறைக் களம் கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும் பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவினோரும் ஆற்ற அரும் பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால் பொலிக நும் புகழே!" [புறநானூறு 62] இனி, எதிர்த்து வரும் தூசிப்படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? அப் போர்க் களத்தில் சண்டையிட்டு அங்கே புண் பட்ட வீரர்களின் புண்ணைத் தோண்டிக், குருதி தோய்ந்த சிவந்த கையால் தமது தலை மயிரைக் கோதிய, ஓளிமிக்க உருவத்தையுடைய பேய்ப் பெண்கள், மேன் மேலும் கொட்டு கின்ற மந்தமான தாளத்திற்க் கேற்ப ஆடுகின்றனர். இறந்த படை வீரர்களின் உடலைப் பருந்துகள் உண்ணுகின்றன. அத்தகைய படை யோடு, சினந்து அறவழியில் போர் புரிந்த வீரமுடைய மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவரது குடைகள் தளர்ந்தன. அவர்களுடைய புகழ் மிகுந்த சிறப்புடைய முரசுகள் வீழ்ந்தன. நூற்றுக் கணக்கான படை வீரர்கள் அடங்கிய பல வகைப் படைகளும் இருக்க இடமில்லாத படி நெருங்கி இருக்கும் அகன்ற பாசறைகளில், போர்க் களத்தைத் தம்முடையதாக்கிக் கொள்வோர் இல்லாமல், காண்போர்க்கு அச்சம் தரும் வகையில் போர் உடனே முடிந்தது. மன்னர்களின் மனைவியர் பசுமையான கீரைக் கறியை உண்டு, குளிர்ந்த நீரில் மூழ்கும் கைம்மை நோன்பை விரும்பாதவராய் தம் கணவரைத் தழுவி உடன் கிடந்தனர். வாடாத பூக்களையும், இமைகளைச் சிமிட்டாத பார்வையையும், நறுமணமுள்ள அவியாகிய உணவையும் உடைய தேவர்கள் பெறுதற்கரிய விருந்து பெற்றனர். உங்கள் புகழ் விளங்குவதாக, என அந்த புலவன் இருவரையும் வாழ்த்தினான். போர் என்னும் ஊரைப் போர்வை என்றும்,போஒர் என்றும் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. போர் என்றவுடன் சண்டை நினைவுக்கு வந்துவிடும். இதிலிருந்து வேறுபடுத்துக் காட்ட ஊர்ப்பெயரைப் போஒர் என்றனர். இவ்வூர் போர்களமாகவும் மாறியது. அப்போது திருப்போர்ப்புறம் எனப்பட்டது. இங்குப் பாடிவீடு அமைக்கப்பட்ட இடம் கட்டூர் எனப்பட்டது. இந்தத் திருப்போர்ப் புறம் தஞ்சை மாவட்டத்திலுள்ள ’கோவிலடி’ என்ற ஊர் என்றும், இவ்வூர்க் கல்வெட்டுக்களில் ‘திருப்பேர்த் திருப்புறம்’என்று குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர் வன்மையும் கொடைச் சிறப்பும் மிக உடையவன். இவனுக்குப் பிறகு சேர நாட்டை ஆட்சி செய்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாவான். வரலாற்று ஆசிரியர்கள் உதியஞ் சேரலாதன் என்ற சேர மன்னனின் மகனாகிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் என்னும் சேரமன்னனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் இருவரும் இறந்ததாகக் கூறுகின்றனர். ஆகவே, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனும் ஒருவனே எனப்படுகிறது. கரிகால் வளவனுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக் கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கரிகால் வளவன் இறந்த பிறகு, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். மணக்கிள்ளி என்பவனின் மகள் நற்சோனை என்பவளை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மணம் புரிந்தான். கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்த மகன்கள் என்று கூறப்படுகிறது. கிட்டத் தட்ட இப்படியான ஒரு போர் தான் எல்லாளனுக்கும் [அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன்] துட்டகாமினிக்கும் [இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது. தென் இலங்கையை ஆண்ட மன்னன்] இடையில் இலங்கையில் இரண்டாயிரத்தி நூறு வருடங்களுக்கு முன் நடைபெற்றது. துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த்தந்திரமையை வெற்றி கொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன. அதனால் "நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்" என்றான் கெமுனு என்னும் துஷ்டகாமினி. போர் நடந்த போது எல்லாளனுக்கு வயது 74.துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, தமிழ் மன்னன் எல்லாளன் ஏற்றுக் கொண்டான். அவன் அறப்போர் மரபு வழி வந்தவன் அல்லவா? இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அது உடன் சேர்ந்து எல்லாளனும் விழுந்தான் அப்பொழுது, யுத்த தருமத்திற்கு மாறாக துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது. அதன் பின் அவன் திட்டங்கள் முற்றாக நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து அவனும் பின் இறந்து போனான். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 05 - "மாவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி" தொடரும்.
-
"அன்பால் ஆள்வோம்” [27/11/2024]
"அன்பால் ஆள்வோம்” [27/11/2024] "அன்பால் ஆள்வோம் அனைவரையும் இணைப்போம் பண்பால் கூடி மனிதம் வளர்ப்போம்! இன்பம் துன்பம் சமமாக மதித்து கண்ணியம் கட்டுப்பாடு காத்து வாழ்வோமே!" "உரிமை உள்ள மனிதனாக பெருமை கொள்ளும் இனமாக வறுமை அற்ற குடியாக சிறுமை போக்கி நகருவோமே!" "ஆராய்ந்து எடுக்கும் நீதிவானும் ஆக்கம் கொண்ட சமூகமும் ஈவிரக்கம் காட்டும் அரசும் தரமான உலகைத் தருமே!" "பாசம் உலாவும் கண்களாய் மோசம் செய்யா இதயமாய் எங்களை நாங்கள் ஆக்கினால் தேசம் ஓங்கிச் சிறக்குமே!" "எங்களுக்காக உயிர்க்கொடுத்த தியாகிகளையும் தன்னலமற்று தாய்நாட்டுக்காக வாழ்ந்தவர்களையும் மனத்திலேற்றி தீபமேற்றி வணங்குவோமே ஒருகனமாவது அவர்களைச் சிந்திப்போமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"குமிழி"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?"
"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?" / பகுதி: 04 பொது வாக, சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில் திராவிடர்கள் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் ஊடாக இந்தியா விற்கு வந்தவர்கள் என நம்பப் படுகிறது. ஸ்பென்சர் வெல்ஸ் [Spencer Wells] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்" [Indian marker] என அழைக்கப்படும் M 20, திராவிடர்களின் மூதாதையர் வழி L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி, 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறிய முடிகிறது. இவர்கள் மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் [Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக விந்திய மலை த்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு, தென் இந்தியாவிற்கு வந்தார்கள் என்பது அறிய முடிகிறது. இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு, தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 50,000 ஆண்டு களுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது . இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் [pre-dravidian] என அழைக்கலாம். இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம், முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்து, இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு [அல்லது தமிழர் வரலாறு] பிறந்தது என்பர் அறிஞர்கள். ஆகவே சைவ மதத்தின் சாயல் சுமேரியாவிலும் இருக்க சந்தர்ப்பம் உண்டு. இதை நிரூபிக்கும் ஒரு சான்றாக, ஏறக்குறைய கி.மு. 2200 வாக்கில் சார்கோன் (Sargon) எனும் பேரசனின் புதல்வியாக விளங்கிய "ஏண் உடு அன்னா"[[Enheduanna] ] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய, ஈனன்னாவை போற்றி துதி பாடும், ஈனன்னை சீர்பியம் [ஈனன்னா B][exaltation of Inana (Inana B)] பாடல்கள் அமைகின்றன. பாடல் ஒன்றில் பல வரிகளில் "ME " மெய் பற்றி கூறப்பட்டுள்ளது. "அனைத்து சக்தி அன்னை [nin-me-sar-ra / நின் மெய் சர்வ], தெள்ளிய ஒளி வடிவினள் [u-dalla-e-a /உள் தெள்ளிய] மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது; [mi-zi me-lam gur-ru /மை-சீ மேளம் கூறு ] விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப் படுகின்றவள் [ki-aga-an-uras-a /காங்க வான் ஊரஸ்ய]. ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் பெரும் பெரும் அணிகளை சூட்டியவள். மெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள். ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்; [மெய்: சக்தி)] என் அன்னையே,பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான் அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்: மெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய்" இது தான் அந்த குறிப்பிட்ட முழுப் பாடலாகும். இவள், அன்னையாகிய நின்னா, சர்வ மெய்களின் தலைவி என்பதொடு தெள்ளிய ஒளியினாள் என்றும். சீர் மிகு பெண் என்பதொடு தூய வெள்ளொளியையே அணிந்திருப்பவள் என்றும் பூவுலகாலும் வானுலகாலும் விரும்பப்படுகின்றவள் என்றும் வாசிக்கும் போதே சைவத்திற்கும் சுமேரியன் சமயத்திற்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன். சர்வ மெய்களின் நின்னா’ என்பதை இன்று ‘தத்துவ நாயகி” என்றும் ‘தெள்ளிய ஒளி’ என்பதை ‘பரஞ்சுடர்’ என்றும் ‘பராபரை” [The Divine Energy of Siva] அல்லது சிவசக்தி என்றெல்லாம் கூறலாம். சீர் மிகு மங்கையாகிய இவள் தூய வெள்ளொளியையே ஆடையாக அணிகின்றாள் என்று கூறும் போது, அவள் ஒளிப்பிரகாசமாய் அன்றே கண்களுக்கு காட்சி தந்துள்ளது என்பது மெய்யாகிறது. இதுவே நின்னாவை அழகு மிக்கவளாக, ஆகவே உலகிலும் விண்ணிலும் உள்ள அனைவராலும் விரும்பப்படுகின்ற வளாகவும் ஆக்குகின்றது. எல்லா தத்வங்களின் நாயகியாக விளங்கும் அம்மை பரஞ்சுடராக தூய வெள்ளொளியில் தெள்ளிய ஒளியில் சுடரும் அவளை எல்லோரும் விரும்பு கின்றார்கள் என்றால் என்ன பொருள்? இந்த ஞான தரிசனத்தைப் பெற்று உய்ய வேண்டும் என்ற வேட்கை எல்லா உயிர்களிடமும் இருக்கின்றது என்பதே இங்கு அம்மையார் விளம்பும் மெய்ஞானக் கருத்து ஆகும் என்கிறார் முனைவர் கி.லோகநாதன். இதனையே சிவன் மேல் ஏற்றிக் கூறுகின்றார் ஏறக்குறைய 2800 ஆண்டுகளுக்குப் பிறகு திருமூலர் நான்காம் தந்திரத்தில், பாடல் 889 இல். மேலும் இங்கு கொற்றவையே 'ஈனன்னா' [Inanna] எனப்படுகி ன்றார் என முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார். கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும், பின்னர் சிவாவுடன் இணைந்தார் /விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள். அத்துடன், அஸ்கோ பர்போலா [Asco Parpola.] என்ற அறிஞர் தமது புத்தாகத்தில் துர்காவிற்கும் [காளிக்கும்] ஈனன்னாவிற்கும் தொடர்பு இருப்பதை எடுத்து காட்டியுள்ளார். தமிழரின் சைவ சமயத்தில் சிவனை தத்துவன் எனவும் அழைக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பொருள் எல்லா சக்திகளினதும் தலைவர் என்பது [Siva, as lord of all powers] ஆகும். "தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும் தானே அகர் உகரமாய் நிற்கும் தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலம் தானே" சிவன் என்றாலும் பரஞ்சுடர் என்றுதான் பொருள்படும் . ‘உள் (ஒள்) தெள்ளிய” என்பதும் அதுதானே. ‘சர்வ மெய்களின் அன்னை’ என்றாலும் ‘தானே தத்துவமாய் நிற்கும்’ என்பதும் ஒன்றுதானே? அவளே எல்லா தத்துவங்களின் தலைவி எனும் போது, தானே மண்ணிலும் விண்ணிலும் நடக்கும் எல்லா தத்துவக் கூத்துகட்கும் தராதலமாக அமைகின்றாள் [தராதலம் - தாங்குகின்ற இடம். தத்து வக் கூத்து - தத்துவங்களை ஆக்குகின்ற கூத்து] என்பது பொருளாகும். ஆகவே சுமேரியாவின் ஈனன்னா, சிந்து வெளியின் தாய் தெய்வம், சங்கத் தமிழரின் கொற்றவை சைவசித்தாந்தத்திலும், சக்தியாக, சிவனுடைய சக்தியாக உருமாறியது என்று கொள்ளலாம்,மேலும்,சிந்து வெளி முத்திரைகள் இந்தியாவிற்கு வெளியே, உம்மா மற்றும் ஊர் [Umma and Ur] போன்ற மெசொப்பொதாமியா நகரங்களிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அது மட்டும் அல்ல, சில இரண்டு நாகரிக முத்திரைகளிளும் நெருங்கிய ஒற்றுமையையும் காண முடிகிறது. இவை, இரு நாகரிக மதங்க ளுக்கும் பண்பாட்டிற்கும் இடையில் ஒரு தொடர்பை காட்டுகிறது. உதாரணமாக இரு பக்கமும் சீறி எழுகிற, மூர்க்கமான புலிகளை கெட்டியாகப் பிடித்து நிற்கும் வீரனை காட்டும் மொகஞ்சதாரோ முத்திரையும் கில்கமெஷ் தனது இருகைகளாலும் இரு சிங்கங்களை பிடித்து நிற்கும் முத்திரையும் ஒரே மையக் கருத்தாக உள்ளது குறிப்பிடத் தக்கது. பல தமிழ் இலக்கியங்கள் முருகனை தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன. "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"என்றும் பாடுகின்றது. சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப் படும் பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம். எனினும் ஆரியரின் கலப்பிற்கு பின்,இன்று நாம் பெரும்பாலும் தந்தை வழி சமுதாயமாக மாறி நிற்கிறோம். தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படா விட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. இவ்வாறு சுமேரியா, சிந்து சம வெளி, சங்க காலம் போன்றவற்றில் சக்தி, சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, நான்கு வேதங்கள், சமஸ்கிருத புராணங்கள், மற்றும் காவியங்கள் [the Vedas,Sanskrit puranas and epics] போன்றவை தமிழர்களுக்கு அவர்களின் மதமாக இவர்களால் வழங்கப் படடன. இது ஒரு அழிவுண்டாக்குகிற செயலாகும். இதனால், பக்தி நெறி காலத்தில் காணப்ப ட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று எம்மிடம் காணப்படவில்லை. வேதத்தை அடிப்படையாக கொண்ட, இன்றைய ஈரானில் இருந்து இந்திய வந்த ஆரியரின் மதம், படிப்படியாக கி மு ஆறாம் நூற்ராண்டிற்கும் இரண்டாம் நூற்ராண்டிற்கும் இடையில் இன்றைய இந்து மதமாக மாற்றம் அடைந்தது. அவர்களின் நூல்கள் கூட் டாக இந்து மதத்தின் புனித நூல் ஆகின. மேலும் இதன் சில தாக்கங்களை தொல்காப்பியம்,புறநானுறு மற்றும் கி மு 700 ஆண்டு தொடக்கம் கி பி 300 ஆண்டுகளுக்கு உட்ப ட்ட, மற்றைய சங்க இலக்கியங்களிலும் காணலாம். "அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்" - என தொல்காப்பியம் 2.16 உம், "தந்தை தோழன் இவர் என் மகளிர் அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே" - என புறநானுறு 201 உம் கூறுகின்றன. இவை இந்த தாக்கங்களின் சில உதாரணம் ஆகும். வர்ணாசிரமம் இதுவாகும். வேதியர், சத்திரியர், வணிகர் மற்றும் சூத்திரர் எனும் நால்வகை வர்ணத்தினரை ஒரு படி முறையில் வழங்குகிறது. இதற்கும் சைவ மதத்திற்கும் எந்த தொடர்ப்புமே இல்லை. சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று.சாதிப் பாகு பாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று.`குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும். எனவே தெட்டத் தெளிவாக தமிழரின் சைவ மதம், ஆரியர்களின் பிரா மணிய இந்து [ஹிந்து] மதத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்டது. இதை என்று நாம் உணருகிறோமோ அன்று தான் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்பதை நீ உணர்வாய் ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது
-
"புறநானூற்று மாவீரர்கள்"
"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 03 ["மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்"] வீரயுக காலம் என கலாநிதி கைலாசபதியால் கருதப் பட்ட , சங்க கால தமிழ் பெண்களின் / தாயின் வீரம் செறிந்த பண்பினை முன்பு பார்த்தோம். மானமா? உயிரா? என்று கேட்டால், மானமே பெரிது என்று வாழ்ந்த வாழ்க்கை தான் புறநானூறு வாழ்க்கை. "மயிர் நீப்பின் உயர் வாழாக் கவரி மான்" தான் அந்த வீரர்கள். இதைத் தான் வள்ளுவரும் தனது குறள் 969 இல் "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்." என்று கூறுகிறார். அதாவது நாணி நிற்கும் சூழல் நேரா வண்ணம் நம்முடைய செயல்கள் ,குணங்கள் இருக்க வேண்டும் என்கிறார். அப்படித்தான் அன்று வீர மரணம் அடையும் போக்கு சங்க கால வீரனிடம் இருந்தது. இந்த வலிமையை வீரத்தை சேர்ப்பது தாய் முலைப் பாலடா என்கிறார் பாரதியார். "கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை.. களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள்பிள்ளை! " ["அச்சம் என்பது மடமையடா" / மன்னாதி மன்னன் (1960)] என்கிறான் கண்ணதாசன். தாயின் கருவில் உண்டாகும் போதே ஒரு மனிதனின் பண்புகள் உருவாகின்றன என்கிறது விஞ்ஞானம். இந்த வீரத் தமிழ் தாய் அத்துடன் நிற்கவில்லை. தமது பிள்ளைகளின் மார்பில் ஐம்படைத் தாலி அணிவித்து இன்புற்றனர் என்கிறது சங்க பாடல்கள். அதுமட்டும் அல்ல, கம்பராமாயணம் / பால காண்டம் / நாட்டுப் படலத்தில் [58] கூட : "தாலி ஐம்படை தழுவு மார்பிடை மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப் பாலின் ஊட்டுவார் செங் கை ... " என்று கூறுகிறது. அதாவது ஐம்படைத் தாலி அணி செய்யும் மார்பிலே சொள்ளு நீர் வழியும் [saliva - உமிழ்நீர்; எச்சில்] தம் குழந்தைகளுக்குத் பாலமுதைப் புகட்டும் தாய்மார்களின் அழகிய கைகள் என்று கூறுகிறது. அது என்ன ஐம்படைத் தாலி? வேல் [அல்லது சங்கு], சக்கரம், தண்டாயுதம், வாள், வில் ஆகிய ஐந்து கருவிகளின் உருவங்களால் அமைந்த தாலியை பிறந்து ஐந்தாம் நாள் அணிவித்து மகிழ்கிறார்கள். அதன் பின் சிறிது வளர, அவர்களின் விளையாட்டு காலங்களில் சேவற்கோழி, ஆட்டுக்கடா, எருது போன்ற வற்றை ஒன்றோடு ஒன்று மோத விட்டு பார்த்து மகிழ விடுகிறார்கள். இப்படி வீரத்தை ஊட்டியவர்கள் இந்த வீர பெண்கள் / தாய்கள். அதாவது வீரத்தையே பாலாக ஊட்டி வளர்த்த பண்பினை காண்கிறோம். "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானங் காப்போர் சரித்திரந்தனிலே நிற்கின்றார் “ இப்படி கண்ணதாசன், அதே பாடலின் இறுதியில் கூறுகிறான். அப்படி மக்கள் மனதிலும் சரித்திரத்திலும் நிற்கின்ற, அவர்கள் வளர்த்த சில மாவீரர்களை இனி பார்ப்போம். மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற சங்ககாலப் பாண்டிய நாட்டினை கி.பி. 205 முதல் 215 வரை ஆட்சி செய்த ஒரு மன்னன். இவரின் தந்தை இளமையிலேயே இறந்ததும், இவனது தாயும் அந்த கால மரபுப்படி உடன்கட்டை ஏறியதாலும் [கணவனை இழந்த மனைவி அவரின் சடலம் தீமூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. இந்த சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் 1829 ம் ஆண்டு சட்டத்துக் எதிரானதாக ஆக்கப்பட்டது], சிறு வயதிலேயே முடிசூட்டப் பட்டவன் இவன். புறநானூறு 77 இவனை, இந்த பாலகனை, "கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு, ...................................................................... ......................................... தார் பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு அயினியும் இன்று அயின்றனனே; " என்று பாடுகிறது. அதாவது சலங்கை கழற்றப் பட்ட கால்களில் ஒளி பொருந்திய கழல்கள் அணிந்திருக்கிறான் [கழல் என்பது காலில் அணியும் ஒருவகை அணி. காலில் கழல் அணிவது அவர்களுடைய வீரத்தை எடுத்துக் காட்டுவதற்காக. அதற்குப் பெயரே 'வீரக்கழல்'. ஆண்கள் அணிவது இந்த வீரக் கழலைத் தான்.] ......... ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்) ஐம்படைத் தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்று தான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! என்று கூறுகிறது. நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். இதை அறிந்த இவன்: “இந்தப் பாண்டியன் நெடுஞ் செழியனுடைய நாட்டையும் சிறுவனாகிய இவன் அரசாள்வதையும் தங்கள் அறியாமையால் சிலர் இகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிரித்து இகழத்தக்கவர்கள். அவர்கள், என்னை அறியாப் பருவத்தினன் என்று கூறித் தங்கள் யானைப் படைகளையும் தேர்ப் படைகளையும் குதிரைப் படைகளையும் காலாட் படைகளையும் செருக்கோடு திரட்டிக் கொண்டு வந்திருக் கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே தேவைக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருப்பவர்கள் என்னையும் என் அரசையும் துணிவாக இழித்துப் பேசியவர்கள் ஆவார்கள். அவர்களை வேரோடு அழிந்து சிதைந்து போகும் படியாகத் தாக்கி முரசத்தையும் குடையையும் கைப் பற்றிக் கொண்டு வெறுங்கையர்களாகத் துரத்த வில்லையானால் என் பெயர் பாண்டியன் நெடுஞ்செழியனில்லை. என் வெண்கொற்றக் குடையின் நிழற் கீழே வாழும் குடிமக்கள் என் ஆட்சியில் அறம் காணாமல் ‘இந்த அரசன் கொடியவன்’ என்று பழி தூற்றப் படுவேனாக! மிக்க சிறப்பையும் உயர்ந்த அறிவையும் உடைய மாங்குடி மருதனைத் தலைவராகக் கொண்ட பாண்டிய நாட்டுப் புலவர்கள் என்னை விரும்பிப் பாடா தொழியட்டும். ஆளப்படும் மக்களெல்லாம் அழுது புலம்பிட, ‘இல்லை யென்று கேட்ட இரவலர்க்கு இட்டு மகிழாத பாவம் என்னை வந்து சேரட்டும். இது என் சபதம்...” எனக் தனது புறநானூறு பாடல் 72 மூலம் வஞ்சினம் கொட்டி, உடனே படைகளோடு போருக்குப் புறப் பட்டான். அத்தனை அரசர்களையும் எதிர்த்துப் போரிட்ட இந்த, நெடுஞ்செழியன் அனைவரையும் தோற் கடித்தான் என்பது வரலாறு. இவனது இந்த பெருமையை புலவர் மாங்குடி கிழாராகிய மருதனார் இப்படி கூறுகிறார்: மிக ஆழமான பெருங்கடலில் காற்றால் உந்தப்பட்டு / தள்ளப்பட்டு ஓடும் மரக்கலம் நீரைக் கிழித்துக் கொண்டு செல்வது போல, உன் யானைகள் சென்று போர்க் களத்தில் வீரர்களை விலக்கி இடம் அகலச் செய்து ஊடுருவ, அவ்வாறு களம் அகலச் செய்த பரந்த இடத்தில், அதாவது அந்த யானை சென்ற அகன்ற பாதையில், ஒளிவிடும் வேல்களை ஏந்தி உன்னை எதிர்த்த அரசர்களை அழித்து போர்க் களத்தைக் கலக்கி, அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ கைப்பற்றினாய். அவ்வரசர்களின் முடி [கிரீடம்] யணிந்த தலைகளை அடுப்பாகவும்,அவர்களின் குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு துழாவிச் சமைக்கப்பட்ட உணவால் போர் வேள்வி செய்த செழிய! நிலை பெற்ற புகழுடைய வேள்விகளைச் செய்து முடித்த வேந்தே! நீ அவ் வேள்விகளைச் செய்த பொழுது, நிறைந்த கேள்வி, ஐம்புலன்களை அடக்கிய மனவலிமை, நான்கு வேதங்களையும் கற்றதால் பெற்ற அறிவு, ஆகியவற்றையுடைய அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருந்தார்கள்; பகை மன்னர்கள் உனக்கு ஏவல் செய்தார்கள். உன்னோடு மாறு பட்டு உன்னை எதிர்த்த பகைவர்களும் ஒருவகையில் நோன்பு செய்தவர்கள் தான். அவர்கள் போரில் வீரமரணம் அடைந்ததால், அவர்களும் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள். அதாவது போரில் வீரமரணம் அடைந்தவர்கள் எல்லோரும் எந்த வேறுபாடும் இன்றி சொர்க்கம் போவார்கள் என்று உரைக்கப்படுகிறது. இனி அந்த பாடலை பார்ப்போம். "நளிகட லிருங்குட்டத்து வளிபுடைத்த கலம்போலக் களிறுசென்று களனகற்றவும் களனகற்றிய வியலாங்கண் ஒளிறிலைய வெஃகேந்தி அரைசுபட வமருழக்கி உரைசெல முரசுவௌவி முடித்தலை யடுப்பாகப் புனற்குருதி யுலைக்கொளீஇத் தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்ற மாக மன்ன ரேவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு மாற்றா ரென்னும் பெயர்பெற் றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே." [புறநானூறு பாடல் 26] மேலும், புறநானூறு 19, & 25, அகநானூறு 36, 175 & 209, நற்றிணை 387, மதுரைக்காஞ்சி 55, 127 பாடல்களில் இந்த தலையானங்கானத்து போரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அப்படி பெருமை பெற்ற, சிறப்பு பெற்ற இவனின் தந்தை, வெற்றிவேற் செழியன் ஆகும். இவன், கண்ணகியின் கணவன் கோவலனைக் கள்வன் என்று பழி சுமத்திக் கொலை செய்த, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனின் தம்பி ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 04 - "மாவீரன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்" தொடரும்.
-
"விழியற்ற தராசு"
"விழியற்ற தராசு" "விழியற்ற தராசு நீதி தராது அழிவுற்ற சமூகத்துக்கு விடை கொடுக்காது! வலியற்ற வாழ்க்கை உண்மை அறியாது நலிவுற்ற மக்கள் கவலை புரியாது!" "உறவற்ற குடும்பம் நிம்மதி அடையாது இரவற்ற உலகம் தூக்கம் கொள்ளாது! திறனற்ற செயல் வெற்றி சூட்டாது உரமற்ற பயிர் பலன் தராது!" "ஈரமற்ற உள்ளம் கருணை காட்டாது தரமற்ற செயல் நன்மை ஈட்டாது! நிறைவற்ற நட்பு அன்பைக் கொட்டாது சிறகற்ற பறவை காற்றில் பறக்காது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"குமிழி"
"குமிழி" "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வைக் கனவு கண்டான்!" "நீர்க்கோல வாழ்வை நச்சி அவன் நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென பொய் சொன்னான்!" "பிறந்தவர் சாதல் நிச்சியம் என்றாலும் பிணம் என்றே இறுதியில் அழைத்தாலும் பித்தனாக உலக நீதிகளை மதிக்காமல் பிதற்றித் திரிகிறான் அதட்டி வாழ்கிறான்!" "கருப்பையில் பிறந்து மண்ணோடு சேர்பவன் கடுகு அளவும் இரக்கம் இன்றி கண்ணியமான வாழ்வு வாழ மறுத்து கற்ற கல்வியை வியாபாரம் செய்கிறான்!" "நுட்பம் பல நிறைந்த மனிதன் நுணுக்கம் ஆக வாழ்வை அலசாமல் நுரைகள் பொங்கி வெடிக்கும் வரை நுகர்ந்து அறியாமல், துள்ளிக் குதிக்கிறான்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"புறநானூற்று மாவீரர்கள்"
"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 02 [வீரத் தாய்] சங்க காலச் சமூகம் ஒரு போர்ச் சமூகம்; அதன் ஒட்டு மொத்த இயக்கமும் போரை மையப் படுத்தியே இருந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிறுவியுள்ளன. உதாரணமாக புறநானூறு 76 "ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; .............................................. பசும்பூட் செழியன் 10 பீடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!" என்று அடித்து சொல்கிறது. அதாவது 'ஒருவனை ஒருவன் தாக்கிப் போரிடுவதும், அப்போது ஒருவனோ அல்லது இருவருமோ மாண்டு போவதும் இயல்பு தான். .... என்றாலும் பசும் பொன்னாலான அணி கலன்களை அணிந்த நெடுஞ் செழியனின் செல்வம் பொருந்திய நாட்டையும் அவனுடைய பெருமையையும் அறியாமல், கூடிப் போர் செய்வோம் என்று தன்னிடத்தில் வந்த கழலணிந்த எழுவரின் நல்ல வலிமை அடங்குமாறு தான் ஒருவனாக நின்று போர்க் களத்தில் அவர்களை அழித்ததை முன்பு கண்டதில்லை' என்று தலையாலங்கானப் போரில் பாண்டியன் ஏழு அரசர்களை எதிர்த்துப் போரிட்டதைக் கண்ட புலவர் பாடுகிறார். இப்படி பல சான்றுகள் புறக் கவிதைகளில் மேலே கூறியவாறு ஏராளமாக உள்ளன, என்றாலும் கவி பொன்முடியின் ஒரு கவிதை முதன்மையான ஆதாரம் எனச் சொல்லும் விதமாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க இயலாது. "வாளைக் கையில் ஏந்தி போர்க்களத்தில் இருந்து வெற்றியுடன் மீள்வது ஆண்மகனின் கடமை" என்கிறது! சங்கப் பாடல்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கை 473 பேர். அவற்றில் பெண் புலவர்களின் எண்ணிக்கை 41 ஆகும். 16 புறநூனூற்றுப் புலவர்கள். அவர்கள் 59 பாடல்களைப் பாடியுள்ளனர். அதில் ஒரு புலவர் தான் இந்த பொன்முடியார். இவர் ஒரு தாய். "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என முடியும் (புறநானூறு 312) புகழ் பெற்ற அந்தக் கவிதை ஆகும். ஆண் மகனைப் பெறுவதில் சங்க காலச் சமூகத்துக் கிருந்த மகிழ்ச்சியையும் அதை விட அவனை சான்றோன் ஆக்குதலில் இருந்த இரட்டிப்பு மகிழ்ச்சியையும் நாம் இங்கு காண்கிறோம். சங்க காலத்தில் சான்றோன் என்பதற்கு வீரன் என்ற பொருளே பொதுவாக இருந்தது. ஒரு நாள், மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்த பெண்பாற் புலவராகிய காவற் பெண்டு அல்லது காதற்பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் அவரின் சிறிய வீட்டின் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார். அதற்கு, காவற் பெண்டு “உன் மகன் எங்கே உள்ளான்” என்று நீ என்னை கேட்கிறாய். இதோ என் வயிற்றைப் பார், என தன் வயிற்றைக் காட்டி, அவனைப் பெற்ற வயிறு இது. புலி இருந்து சென்ற குகை இது. என் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. என் மகன், அந்த புலி, இப்ப குகையை விட்டு வெளியே போய் விட்டது. அவன் இப்ப தன் நாட்டுக்காக போர்க் களத்தில் இருப்பான். அங்கு போய்ப் பார் என்று கூறுகிறார். இதோ அந்த வீரத் தாயின் பாடல்: "சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும் புலி சேர்ந்து போகிய கல்அளை போல, ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே" [புறநானூறு 86] பழந்தமிழ் மறத்தி ஒருத்தி நாட்டைக் காக்கத் தந்தையைப் போர்க் களத்திற்கு அனுப்பினாள். அவன் வீரச் சாவடைந்தான். நேற்றுக் கணவனைக் களத்திற்கு அனுப்பினாள். அவனும் களம் பட்டான். ஆனாலும் அவள் கலங்கவில்லை.இன்றும் போர்ப் பறை கேட்டுத் தன் மகனை - ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என ஓக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் மறத்தி ஒருத்தியின் மாண்பினைப் [சிறப்பை, பெருமையை] படம் பிடித்துக் காட்டுகிறார். "கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகுமே மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்க என விடுமே." [புறநானூறு 279] களத்தில் உன் மகன் புறமுதுகிட்டான் என்று சிலர் சொல்லக் கேட்ட பழந் தமிழ் மறக்குடி முதியவள் ஒருத்தி, செவியில் விழுந்த சொல்லால் சீற்றம் கொண்டாள். “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள். கையில் வாளெடுத்தாள். களம் நோக்கிக் கடுகினாள். வடுப்பட்டு வீழ்ந்து கிடந்த பிணங்களை வாளாற் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்: மகனைப் பிணமாகக் கண்டாள்: அழுகை பொங்கியது. ஆயினும் சிலர் சொன்னது போல் அல்லாமல் மகன் மார்பில் விழுப்புண் பட்டு [போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்] மாண்டான் என்பது கண்டு உவகை [மகிழ்ச்சி] கொண்டாள் .அவனை ஈன்ற ஞான்றினும் [நாள்] பெரிது உவந்தனள். இப்படிப் பழந் தமிழ் முதியவள் ஒருத்தியின் மறப் பண்பைக் [வீரத்தை] காக்கைப் பாடினியார் எடுத்துக் காட்டுகிறார். "நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படை அழிந்து மாறினன் என்று பலர் கூற மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக் கொண்ட வாள் அடு படு பிணம் பெயராச் செங்களம் துழவு வோள் சிதைந்து வேறாகிய படு மகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே." [புறநானூறு 278] ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய மகாகவி காளிதாசன், தனது குமார சம்பவத்தில் (7-87) " நீ வீரர்களின் தாயாக விளங்க வேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி)" என்று வாழ்த்துவதாகக் கூறுவதையும், தனது மற்றும் ஒரு நாட்டிய நாடகமான சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் - வீரர்களின் தாயாக [வீரப்ரசவினீ பவ] விளங்குவாயாக என்று சகுந்தலையை வாழ்த்துவதையும் கவனிக்க. அப்படிபட்ட வீரர்களின் நடு கல்லை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். பொதுவாக இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப் படலாமாயினும், வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெரு மதிப்புக் கொடுக்கப் பட்டு வந்தது. சங்க இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்ட கற்களைப் பற்றிய தாகவே உள்ளதும் குறிப்பிடத் தக்கது. நெடுங்காலம் பிள்ளையில்லா ஒரு குடும்ப பெண், தனது முதுமை பருவத்தில் ஒரு ஆண் பிள்ளையை பெற்றாள். மலடி பெற்ற மகன் என்று ஊரார் மறைவாகப் பேசினர். அவன் காளை பருவம் அடைந்த பொழுது நாட்டில் போர் மூண்டது. தன் முதுமையையும் கருதாது, அந்த தாய், தன் ஒரே மகனை, வாழ்த்து கூறி போருக்கு அனுப்பி வைத்தாள். போரில் அவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான். இதை கேள்வியுற்ற அந்த தாய், பிறவி பயனைப் பெற்றவள் போல், பேரின்பம் உற்றாளாம் என்கிறது இன்னும் ஒரு பாடல். "மீன்உண் கொக்கின் தூவி அன்ன வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர், நோன்கழை துயல்வரும் வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே" [புறநானூறு 277] மீன் உண்ணும் கொக்கின் இறகு போன்ற வெண்மையான, நரைத்த கூந்தலையுடைய முதிய தாய், தன் சிறுவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் தன் மகனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகம். மகிழ்ச்சியால் அவள் வடித்த கண்ணீர்த் துளிகள், மூங்கிற் புதரில் உள்ள மூங்கிலில் தங்கியிருந்து கொட்டும் மழைத் துளிகளை விட அதிகமானவை என்று அந்த வீரத் தாயை பூங்கண் உத்திரையார் என்ற பெண்பாற் புலவர், அவளின் இந்த வியக்கத்தகு செயல்களைக் கண்டு பாடுகிறார். “ஈன்ற பொழுதிற் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்டத்தாய்” (குறள்:69) என்கிற திருக்குறளை மேலே நாம் சுட்டிக் காட்டிய புறநானூற்றுப் பாடல்களோடு ஒப்பிட்டு பார்க்கலாம். ஒரு தாய் தன் மகன் இறந்தாலும் அவன் சான்றோனாகவும், வீரனாகவும் தான் இறக்க வேண்டும் என்றும், இது அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை விட உண்மையில் பெரியதாகும் என திருவள்ளுவர், சங்கத் தமிழரின் வாழ்க்கை நெறி முறையை உணர்ந்தே இங்கு வீரத்தாயின் உணர்வினை படம் பிடித்துக் காட்டுகிறார் என்று நம்புகிறேன். மேலும் சங்க காலத்தில் பெண்கள் வீரமானவர்களாகவும் , வீர மகன்களை பெற்ற வீர அன்னையாகவும் இருந்துள்ளனர் என்பதையும் ஆண் குழந்தைகள் வீரத்தின் அடையாளமாக, குறிப்பாக எண்ணப்பட்டது போல, அவர்களுக்கான வீரமும், வீரமரணமும் முக்கியமெனவும் பதிவு செய்யப் பட்டுள்ளதையும் காண்கிறோம். புறநானூற்றில் வீரமகனைப் பெற்றெடுத்த தாயின் உணர்வுகள் மிக மிகத் தெளிவாக, சில பாடல்களில் தரப் பட்டுள்ளதும் எம் கவனத்தை இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் தன்பால் ஈர்ப்பதும் அதன் பெருமையே ஆகும் !. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 03 - "மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்" தொடரும்.
-
"நூல் அறுந்த பட்டம்"
"நூல் அறுந்த பட்டம்" நிழலவன் யாழ்ப்பாணத்தின் மணல் கரையில் அமர்ந்தான், தூரத்தில் படபடக்கும் பட்டங்களை ரசித்தபடி அவன் கண்கள் பின்தொடர்ந்தன. அவற்றின் பிரகாசமான வண்ணங்கள் வானத்தில் வரைந்தன, ஒவ்வொன்றும் தனித்துவமாக வெவ்வேறு வடிவில், நிறத்தில், அளவில் இருந்தன. அவன் எண்ணங்கள் கி முன் 9500 ஆண்டுக்கு பறந்து சென்றன. பட்டம் ஆசியாவில் தோன்றினாலும், அதன் துல்லியமான தோற்றம் இதுவென எண்ணமுடிய விட்டாலும், இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலவேசியில் உள்ள மூனா தீவில் [Muna island, southeast Sulawesi, Indonesia] கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 9500-9000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியத்தில் பட்டத்தின் பழமையான படம் காணப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. எனினும் மற்ற சான்றுகள் கி மு 450 அளவில் சீனாவில் பட்டம் உருவாக்கப்பட்டன என்று கூறுகின்றன. அது இன்னும் யாழ்ப்பாண மணல் வெளியில் பறப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். என்றாலும் அங்கு கண்ட சில காட்சிகள் அவன் மனதைக் கனக்கச் செய்து கொண்டு இருந்தது. இந்த பட்டங்களை வைத்திருந்த சில நூல்கள் ஒவ்வொன்றாக அறுந்து ஒடிந்து, துடிப்பான பட்டம் சில காற்றினால் இழுக்கப்பட்டு, இறுதியில் பூமியை நோக்கி இறங்கிக் கொண்டு இருந்தது தான் அவன் மனதில், இன்றைய அவனது சொந்த வாழ்க்கையுடன் - இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் - ஒரு தொடர்வை வரையாமல் இருக்க அவனால் முடியவில்லை. பட்டம் நூல் அறுந்த போது கீழ் நோக்கி விழுவதும், வால் அறுந்த போது பறப்பதை தொலைக்க தொடங்குவதும் அவனின் சிந்தனையை தூண்டின. அவர்களின் இன்றைய தலைவர்கள் அந்த உடைந்த நூல்களைப் போல இருப்பதால், பட்டத்தின் நூல் பலமற்று இருப்பது போல, தங்களுக்குள் முரண்பட்டு, தமிழ் சமூகத்தை ஓங்கி உலக வானில் பறக்க முடியாமல் செய்து விட்டார்கள். பட்டத்தின் வால் கொடுக்கும் சமநிலையைக் கூட மறந்து, மக்களை இலக்கின்றி, திசையில்லாத பட்டங்கள் போல நகர்த்தி விட்டார்கள். "நூல் அறுந்த பட்டம் இதுவோ பாழ் அடைந்த சமூகம் இதுவோ மேல் இருந்து கீழே விழுகுதே கால் இருந்தும் நொண்டி மனிதனாய்!" "வால் அறுந்த போதே நடுங்குதே ஊழ் வினை அதைச் சூழுதோ கோள் சொல்லி ஒற்றுமை நடுங்குதே நாள் நெருங்கி இனமே முறியுதே!" அவனுக்குப் பக்கத்தில், மணல் தரையில், இருண்ட கூந்தல் மேகம் சுற்றிச் சுருண்டு இருக்கும் நீர்ச்சுழியில் பார்த்தவர் நெஞ்சைச் சூறையாடும் விழியாகிய கெண்டைமீனைக் கொண்டும், முருக்கம்பூ அரும்பு போன்றிருக்கும் சிவந்த இதழுடனும், வளைந்த வில்லைப் போலவும், பிறையைப் போலவும் இருக்கும் நெற்றியுடனும் அமைதியாக அமர்ந்திருந்தாள் நன்விழி. அவளின் கூந்தல் காற்றில் சலசலக்கும் சத்தம் மட்டுமே அவனுக்கு கேட்டது. இவள் புருவத்தைப் பார்த்து வானவில்லும் ஆசையாகப் பேசும் என்றாலும் இவளது மங்கைப் பருவத்தில் பிறர் அறிவை மயக்கும் ஒரு கர்வமும் இருந்தது. அது தான் கொஞ்சி பேசுவதை விட்டுவிட்டு பட்டம் ரசிக்கிறானோ?, இல்லை இல்லை அவளும் பட்டத்தைப் பார்த்துக்கொண்டும் அவற்றினதும் அவர்களினதும் எதிர்காலத்தைப் பற்றி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பல மாதங்களாக, அவர்கள் தங்கள் மக்களின் நிலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர், ஒரு காலத்தில் துன்பங்களாலும் நோக்கத்தாலும் ஒன்றுபட்ட பெருமைக்குரிய தமிழ்ச் சமூகம், ஒரு காலத்தில் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வழிவகுத்த தலைவர்களிடையே, இன்று உள்ள உள் மோதல்களால் பிளவுபட்டுள்ளது. "நூல் அறுந்த பட்டம்" அது ! "அதைப் பார்த்தாயா?" நிழலவன், நூல் அறுந்த பட்டத்தை நோக்கிக் கேட்டான். "இது சிறிது நேரம் மிதக்கிறது, ஆனால் இது இனி எங்கு செல்கிறது என்பதைக் கட்டுப்படுத்த முடியாது. எங்களைப் பற்றி நான் அப்படித்தான் உணர்கிறேன். எங்கள் நூல் உடைந்து விட்டது, நாங்கள் அலைந்து கொண்டிருக்கிறோம்." என்றான். நன்விழி தலையசைத்தாலும் ஒரு கணம் அமைதியாக இருந்தாள். "இது நாம் மட்டுமல்ல, நிழலவன். நாம் அனைவருமே ?. நம் தலைவர்கள் ஒரு நூலைப் போல - வலிமையானவர்களாக, காற்றில் நம்மை வழிநடத்தி, நம்மை உயர்த்தி வைத்திருந்தார்கள். ஆனால் இப்போது ... அவர்கள் நான் தலைவர், நீ தலைவரென ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், அதையும் எங்களுக்காக என்று ஒரு போடும் போடுகிறார்கள்! " என்றாள். அவர்களின் வாழ்க்கை, அவர்களின் அன்பு, அவர்களின் மக்களின் எதிர்காலத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருந்தது. வடக்கில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நிழலவன் ஒரு லட்சிய இளைஞன். உள்நாட்டுப் போரின் போது அழிக்கப்பட்ட வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவ வேண்டும், ஒரு பொறியியலாளராக வேண்டும் என்று அவன் எப்போதும் கனவு கண்டான். அதே நேரம் கிழக்கைச் சேர்ந்த நன்விழி, ஒரு வழக்கறிஞராக விரும்பினாள், நீதிக்காக வாதிடவும், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் விரும்பினாள். இருவரும் தங்கள் படிப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தனர். அவர்களின் பீடம் வெவ்வேறு இடத்தில் அமைந்து இருந்தாலும், அவள், அவனின் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள விடுதியில் தங்கியிருப்பதால், இருவருக்கும் இடையில் ஒரு உறவு மலர்ந்து, அது ஓய்வு நேரங்களில் சந்திப்பாகவும் தொடர்ந்தது. என்றாலும் அரசியல் ஸ்திரமின்மை, தலைமைத்துவத்தின் துண்டாடுதல் மற்றும் தமிழ் சமூகத்தின் அதிகரித்து வரும் ஓரங்கட்டல் ஆகியவை அவர்களின் எதிர்காலத்தின் மீது நீண்ட நிழலைப் போட்டன. “நேற்று ராத்திரி அப்பாகிட்ட பேசிட்டேன்” என்று மௌனத்தைக் கலைத்து ஆரம்பித்தாள் நன்விழி. "எங்கள் குடும்பம் பல தலைமுறைகளாக வைத்திருக்கும் நிலம் பறிக்கப்படுகிறது. ஏதேதோ காரணம் கூறி அரசு அதை வலிந்து எடுக்கிறது. என் தந்தை சட்ட உதவி பெற முயன்றார், ஆனால் கிழக்கில் உள்ள உள்ளூர் தலைவர்கள் - அவர்கள் போராட முடியாத அளவுக்கு - பலவீனமாக உள்ளனர்." என்று அவனின் கையை தன் கையால் பற்றிக் கொண்டு வேதனையுடன் சொன்னாள். நிழலவன் தன் விரல்களை தன் உள்ளங்கையில் இறுக்கமாக அழுத்தியபடி, கொஞ்சம் கோபத்துடன் "வடக்கிலும் அப்படித்தான். நீயும் இப்ப வடக்கில் தானே, உனக்கு நன்றாகத் தெரியும் தானே, பள்ளிக்கூடங்களில், பாடசாலைகளில் குழப்பம். சில மாதங்களுக்கு ஒருமுறை புதிய புதிய போராட்டம் அல்லது வேலை நிறுத்தம் நடக்கிறது, வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அரசாங்கம் எங்களைப் பற்றி கவலைப்படவில்லை, எங்கள் தலைவர்களும் கூட. ஒருவரையொருவர் கொஞ்சம் பிரிந்து பிரிந்து அவர்களின் செயல்களால் நாங்கள் இன்று பின்தங்கிவிட்டோம். நமது கல்வி கூட உடைந்திருக்கும் போது நாம் எப்படி முன்னேறமுடியும்?" நன்விழி பெருமூச்சு விட்டாள். "அது வெறும் கல்வி மட்டுமல்ல, அந்த வாழ்வின் எல்லாமே!. வேலைகள் மறைந்துவிட்டன. எனது கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான வாலிபர்கள் வெளியேறிவிட்டனர். அவர்கள் மத்திய கிழக்கில் கூலி வேலை செய்கிறார்கள். அவர்கள் புத்திசாலிகள், ஆனால் இங்கே சரியான வாய்ப்புகள் இல்லாததால், அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை" "பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு; தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு; வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூறையமுதே! நன்விழியே!" நீயோ பாயும் வெளிச்சம் என்றால் நானோ அதை பார்க்கும் கண்களாவேன் ; நீயோ அணைக்கும் தேன் என்றால் நானோ அதை உண்ணும் வண்டு ஆவேன் ;உன்னுடைய மேன்மை எல்லாம் வாயினால் சொல்ல வார்த்தை இல்லையடி ; தூய்மையான வெளிச்சம் தரும் நிலவே கொள்ளை அழகே, நன்விழியே என்று அவளை அணைத்தபடி நெருங்கி இருந்தான். ஆனால் அவர்கள் மீண்டும் மௌனமாக, ஆனால் மற்றொரு பட்டம் வானத்தில் உயரப் பறப்பதைப் பார்த்தார்கள். அதன் நூல் இன்னும் அப்படியே இருந்தது, அது காற்றிற்கு எதிராக நம்பிக்கையுடன் நடனமாடியது. "நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா?" நிழலவன் பட்டத்தைக் காட்டினான். "நாங்கள் முன்பு அப்படித்தான் இருந்தோம். நாங்கள் காற்றை எதிர்கொண்டோம் - எதிர்ப்பு, போராட்டம் - ஆனால் எங்களை நிலைநிறுத்த, எங்கள் நூலை வலுவாக வைத்திருக்கும் தலைவர்கள் அன்று எங்களிடம் இருந்தனர். இப்போது ... எங்களை இணைக்க யாரும் இல்லை. ஆனால் பிரித்து பிரித்து சிதறடிக்கிறார்கள் " என்று பட்டத்தை மீண்டும் காட்டினான். நிழலவனின் தோளில் அவள் தலை சாய்த்தாள். "நூல் இல்லாத பட்டம் ஒரு துண்டு மட்டுமே என்று என் அம்மா எப்போதும் சொல்வார். துண்டு அழகாக இருக்கலாம் ஆனால் திசை இல்லை எனறால், எதுவும் பயனற்றது. நம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டால், எவ்வளவு காலம், நாம் நன்றாக இருப்போம் என்று, எனக்குத் தெரியாது." நிழலவனின் மனம் அந்த வார தொடக்கத்தில் அவனது பெற்றோருடன் உரையாடியது. அவனது தந்தை, ஒரு காலத்தில் தமிழர் உரிமைகளுக்காக ஆர்வத்துடன் செயல்பட்டவர், ஏமாற்றமடைந்தவர். "இப்போது அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக, ஒற்றுமை தவிர்த்து வேற்றுமையில் இருக்கிறார்கள்," என்று அவனது தந்தை அவனிடம் கூறினார். "இந்தத் தலைவர்கள் முன்பு ... எங்களுக்காகப் போராடினார்கள், ஆனால் இப்போது? பதவிக்காக, பணத்திற்காகப் போராடுகிறார்கள். மக்களைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, நாங்கள் "நூல் அறுந்த பட்டம்" போல இருக்கிறோம், மகனே, யாரும் நூல் கட்ட வரப் போவதில்லை. நாமே நம்மை திருத்தி, பலமான நூலால் கட்டி, சூறாவளி காற்றாக எம்மை தாக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுகண்டு நாம் மேலே எழவேண்டும், தொடர்ந்து பறக்க வேண்டும்." என்று ஆலோசனை கூறினார். "அது சரியப்பா, ஆனால் இப்ப நாம் புதியவர், நாம் இளம் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு புற்றில் இருந்து வெளிவரும் ஈசல் போல் பறக்கத் தொடங்கி விட்டார்கள். அங்கு அதே ஒற்றுமை இல்லை, அங்கு அதே ஒருவரை ஒருவர் குறைகூறுதல் பெருகிவிட்டது. இது ஜனாதிபதி தேர்தலிலும் அதைத்தொடர்ந்து பாராளமன்ற தேர்தலிலும் அதிர்ச்சியைத் தருகிறது. யாழ்மாவட்ட தேர்தல் தொகுதியில் நாற்பதுக்கு மேற்பட்ட காட்சிகள் அல்லது சுயேச்சைகள் போட்டியிடுகின்றன? இது எதைக் காட்டுகிறது? ஏன் நம்மால் ஒரு குடையின் கீழ், எதுவும் செய்ய முடியவில்லையா?" நிழலவன் கேட்டேன். "இந்த ஒன்றுபடா இளம் தலைவர்களைப் பற்றி என்ன? அவர்களால் எப்படி விடயங்களை மாற்ற முடியும்?" அவன் தந்தை தலையை ஆட்டியபடி பெருமூச்சு விட்டார். "உண்மையான இளம் தலைவர்கள் இன்று மிகக் குறைவு, அவர்களுக்கு செல்வாக்கு இல்லை. அவர்களை எம் மூத்த தலைவர்கள் சரியாக வளர விடவில்லை. பலர் தாமும் தம்பாடும் என்ற அளவில், அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளால் நிறுத்திவிட்டார்கள். இன்றைய தலைவர்களிடம் வலுவான, ஒற்றுமையான, தெளிவான குரல் இல்லை. நீங்கள் பலரைப் போலவே இந்த நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி யோசிப்பீர்கள்?" என்று கேட்டார். நிழலவன் பதிலளிக்கவில்லை, ஆனால் அந்த வார்த்தைகள் அவனிடமே இருந்தன. அவனது தந்தை ஒரு பெருமை மிக்க தமிழர், தனது மக்களுக்காக கடந்த காலத்தில் அனைத்தையும் தியாகம் செய்தவர். இப்போது அவரும் நம்பிக்கை இழந்து விட்டார். நன்விழியும் தன் பெற்றோரிடம் இதே போன்ற வார்த்தைகளைக் கேட்டிருந்தாள். காணி உரிமை மறுக்கப்பட்டவை, தொடர்ச்சியான இராணுவப் பிரசன்னம், கலாசாரச் சிதைவு - இவையனைத்தும் அவர்களைப் பெரிதும் பாதித்தன. அவளது தந்தை ஒரு காலத்தில் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர், ஆனால் இப்போது அவரும் கைவிடப்பட்டதாக உணர்கிறார் என்றாள். "நன்விழி," அவள் அம்மா ஒரு நாள் மாலை தேநீர் அருந்தியபடி கூப்பிட்டாள், "உனக்காக நான் விரும்பிய வாழ்க்கை இதுவல்ல. நீ நாம் யார் என்பதில் பெருமை கொள்ள வேண்டும், வளர்ந்து வெற்றிபெற வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன். ஆனால் இப்போது எங்களைப் பாருங்கள். நாங்கள். எங்கள் நிலத்தைக் கூட வைத்திருக்க முடியாது, நாங்கள் உங்களுக்கு எப்படி எதிர்காலத்தை தருவோம்? இது தான் என் கவலை" என்றாள். அன்று மாலை நன்விழி தன் அறையில் மௌனமாக அழுது கொண்டிருந்தாள், வக்கீல் ஆக வேண்டும், தன் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தன் கனவுகள் எப்போதாவது நிறைவேறுமா? என்று யோசித்தாள். உடைந்த தலைமைத்துவம், பிளவுபட்ட தமிழ் அரசியல் காட்சிகள், அவளை ஆற்றலற்றதாக உணரவைத்தது. உப்பு கலந்து அள்ளி வீசும் கடல் காற்று, அவர்களின் உதடுகளை தொட்டிச் செல்ல, அவளின் காந்த விழி, ஒளியிழந்து பரிதாபமாக அவனை ஏறிட்டுப் பார்க்க, கரையை முத்தமிடும் ஒவ்வொரு அலைகளும் அவர்களின் காலை தொட்டுச் செல்ல, மணல் தோண்டும் நண்டுகளும் வழி விலத்திப் போக, அவள் தலை நிமிர்ந்து, வெட்டி வெட்டி மறையும் மின்னலாய் ஒரு புன்னகையை வீசி, அங்கே சிறு குழந்தைகள் பட்டத்தை காற்றில் பறக்க வைக்க போராடுவதை, நிழலவனுக்கு காட்டினாள். அவர்களின் நூல் சிக்கி இருந்தது. குழந்தைகள் அதை எவ்வளவு இழுத்து இழுத்தாலும், பட்டம் உயர மறுத்தது. "அதை எப்படி நீ உணருகிறாய் ?" நன்விழி அவனில் சாய்ந்து காதுக்குள் கிசுகிசுத்தாள். "நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நூல் சிக்கலாக இருப்பது போல, எம்மை வழிகாட்டும் தலைவர்கள் ஏதேதோ வெவ்வேறு கொள்கையில் சிக்கி விளக்கம் இல்லாமல் பிரிந்து பிரிந்து இருந்தால், எங்களால் வாழ்க்கையில் மேலே பறக்க முடியாது." என்று ஆணித்தரமாக பதில் அளித்தான். நிழலவன் அவள் கையை மெதுவாக அழுத்தி பிடித்தான். "நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடிப்போம். நாங்கள் அதை விரைவில் செய்ய வேண்டும்." ஆனால் அவன் வார்த்தைகளைச் சொன்ன போதும், சந்தேகம் அவனைப் பற்றிக் கொண்டது. அப்படி உடைந்ததை அவர்களால் சரி செய்ய முடியுமா? இரண்டு இளைஞர்களான அவர்களால் பல ஆண்டுகளாக தங்கள் சமூகத்தை முடக்கிய பிளவுகளை சமாளிக்க முடியுமா? காதலில் இருவரும் ஒருவரை ஒருவர் அணுகினர். இரண்டு துருவங்கள் - வடக்கும் கிழக்கும் - முட்டிக் கொண்டன. ஒரே மொழி பண்பாட்டு இனம் என்றாலும் , நிலத்தோடு கூடிய மண்வாசனை பாரம்பரிய பின்னணிகள் மோதிக்கொண்டன. எனினும் மண் மேல் மனித இனம் கொள்ளும் உறவுகளிலேயே மிகக் கூர்மையானதும், மிக மிக மிருதுவானதும், முடிவில்லாத காதல், கவர்ச்சி கொண்டதும் காதலுறவே. அதில் தான் இன்று இருவரும் வெளிப்படையாக இணைந்து இருந்தனர். ஆனால் இது, சமூகத்தை பிளக்கும் நூலை அறுக்கும் செயலை தடுப்பது, இருவராலும் மட்டும் முடியாது என்றாலும், ஒரு ஆரம்பமாக முயற்சிக்கலாம் என அவன் தனக்கே ஒரு நம்பிக்கை கொடுத்தான். அன்று மாலை, இருவரும் நிழலவனின் பெற்றோரை சந்தித்தனர். அவரது தாயார் நன்விழியை அன்புடன் வரவேற்றாள், அவர்கள் சிறிய, அடக்கமான தாழ்வாரத்தில் காற்று வாங்கிக் கொண்டு ஒன்றாக அமர்ந்த போது, தாயார் எல்லோருக்கும் சிற்றுண்டிகள் மற்றும் தேநீர் வழங்கினாள். "கிழக்கில் எப்படி இருக்கிறது நன்விழி?" நிழலவனின் அம்மா மெதுவாகக் கேட்டாள். "நல்லா இல்லை," நன்விழி ஒப்புக்கொண்டாள், அவள் குரலில் சோகம். "எங்கள் நிலம் எடுக்கப்படுகிறது. அங்குள்ள தலைவர்கள் ... அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை." நிழலவனின் அம்மா பெருமூச்சு விட்டாள். "இங்கேயும் அப்படித்தான். முன்பு எங்களிடம் அக்கறையுள்ள, நமக்காகப் போராடும் தலைவர்கள் இருந்தார்கள். இப்போது அவர்கள் தங்களுக்காகப் போராடுகிறார்கள். நாங்கள் கஷ்டப்படுகிறோம். அது தான் நாம் கண்ட முன்னேற்றம், வேடிக்கையாக இல்லையா, மற்றது வடக்கு கிழக்கு பிரதேச வாதம்? " அவள் சொன்னாள். "ஆனால் நாம் என்ன செய்ய முடியும்?" நிழலவனின் தந்தை கேட்டார், அவரது குரல் விரக்தியுடன். "தலைவர்கள் பிளவுபட்டுள்ளனர், ஒற்றுமை இல்லாமல் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். எங்கள் குழந்தைகள் ... - " நிழலவனையும் நன்விழியையும் நோக்கி சைகை செய்தார், பின் "-அவர்கள் அதற்கான விலை கொடுப்பார்கள்." என்றார். நன்விழி தலையசைத்தாள், இதயம் கனத்தது. அமைதியாக, யோசனையில் ஆழ்ந்திருந்த நிழலவனைப் பார்த்தாள். அவன் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி, அவர்கள் ஒன்றாக வாழ்க்கையைக் கட்டியெழுப்புவது, தங்கள் மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது பற்றி, அவர்கள் பகிர்ந்து கொண்ட கனவுகளைப் பற்றி, அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். . அன்று இரவு, நன்விழி வீட்டிலிருந்து திரும்பிச் செல்லும் போது, நிழலவன் அவளை கொஞ்சம் தடுத்தான். "நன்விழி, நீ நினைக்கிறாயா... 'நூல் அறுந்த பட்டம்' ஆகிய நாம் மீண்டும் எப்போதாவது பறக்க முடியுமா என்று ?" நன்விழி கொஞ்சம் சிந்தித்தாள், இருண்ட வானத்தை நிமிர்ந்து பார்த்தாள், அந்த நாளின் கடைசி பட்டம் இன்னும் பறந்து கொண்டிருந்தது, அதன் நூல் வலுவாகவும் இறுக்கமாகவும் இருந்தது. உறுதியும் சந்தேகமும் இரண்டுமே கண்களில் நிறைந்திருக்க, நிழலவன் பக்கம் திரும்பினாள். "எனக்குத் தெரியாது," என்று அவள் நேர்மையாக கூறினாள். "ஆனால் நாம் முயற்சி செய்ய வேண்டும். நூலை அறுக்க அனுமதித்தால், ஏதாவது செய்யாவிட்டால் ... அனைத்தையும் இழந்துவிடுவோம். நமது நிலம், நமது உரிமைகள், நமது கலாச்சாரம். நம் அன்பும் கூட." நிழலவனின் கண்கள் மென்மையாகின. "நான் உன்னுடன் இருக்கிறேன் நன்விழி. என்ன நடந்தாலும் பரவாயில்லை. இந்த அறுந்த நூலை சரி செய்ய முயற்சிப்போம். ஒன்றாக." என்றான். " பெண்கள் இலங்கையில் 52% பெண்கள் இருந்தாலும் பெண்ணின் தலைமை மிக மிக குறைவே. ஆக 5.3% வீதமே பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அது மட்டும் அல்ல, 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு மொத்த மக்கள் தொகையில் 33.6% மட்டுமே, ஆகவே பெண்கள் விழித்தாள் எதுவுமே நடக்கும் " என்றான். அந்த தெளிவுடன், அவர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தில் நடந்தார்கள், எது தேவை ? எது தேவையில்லை ? என்பதை மனது அலசிக் கொண்டு இருந்தது. வானத்தில் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்க போராடும் பட்டத்தைப் போல - எல்லாவற்றையும் மீறி, மீண்டும் உயரும் என்று நம்பினார்கள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கணவனை இன்னும் தேடுகிறாள்"
"கணவனை இன்னும் தேடுகிறாள்" இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதே மிகக் கூடுதலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் அது யுத்தம் மௌனித்த பின்பும் இன்னும் தொடருவது தான் ஆச்சரியமான விடயம். மேலும் உலக அளவில் இலங்கையில்தான் அதிகமானோர் காணாமல் போவதாக `மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோடு, இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இம்முறை, 30 ஆகஸ்ட் 2020, அனிதா என்ற பெண்மணி வவுனியாவில் இதற்கு தலைமை தாங்கினார். இலங்கையின், வவுனியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அனிதா வாழ்ந்து வந்தார். அவளும் அவளது கணவன் அர்ஜுனும் அமைதியான வாழ்க்கையை அங்கு நடத்தி வந்தனர், அவர்கள் தங்களை சூழ்ந்து உள்ள சமூகத்தின் பிரச்சனைகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்ததுடன் நேரடியாக பங்கும் பற்றினார்கள். அர்ஜுன் ஒரு ஆசிரியராக இருந்தார், மேலும் அனிதா உள்ளூர் பெண்கள் குழுவின் முன்னேற்றத்திற்கும், அரச இயந்திரங்களாலும் இராணுவத்தாலும் அடிக்கடி எதிர்நோக்கும் இனவாத அடக்குமுறை செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கும் மற்ற பெண்களுடன் முன் நின்று அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். மேலும் பெண்களின் கல்வி மற்றும் அவர்களுக்கான தேவையான அதிகாரம் ஆகியவற்றிற்காக தன்னுடைய வாதத் திறமையை அங்கு வெளிக்காட்டினார். வெளியில் சென்ற நம் குடும்பத்தினர், சரியான நேரத்தில் வீடு திரும்பாவிட்டால் நம் மனம் எவ்வளவு பதறிப்போகும். நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட காலத்தில், அவற்றின் மூலம் தொடர்புகொள்ள முயல்வோம். அப்படியும் தொடர்புகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் வீட்டுக்கு வந்து சேரும்வரை அதைப் பற்றியே நம் மனம் யோசித்துக்கொண்டிருக்கும். சரி ... அந்தக் காத்திருப்பு நேரம், நிமிடங்களாக, மணிகளாக, பல மணி நேரங்களாக இருந்தால் பரவாயில்லை. பல ஆண்டுகளென்றால் அப்படிக் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவருக்குப் பிரியமானவர்கள் எவ்வளவு துயரத்தில் உழல்வார்கள் ... அப்படிக் காணமல் போனவர்களும், மற்றவர்களால் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு மனவேதனைக்கு ஆளாவார்கள். அதை அனிதா பல சந்தர்ப்பங்களில் நேரடியாக பார்த்தவள். ஆனால் அது தனக்கும் வரும் என்று என்றுமே சிந்திக்கவில்லை. பழந்தமிழரின் வாழ்வில் திருமணத்திற்கு முந்தைய காதல், வாழ்வியல் நெறிமுறையாகவே இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய ‘காதல் வாழ்வை’, களவொழுக்கம் என்றும், திருமணத்திற்கு பிறகு ‘அவர்களின் இல்லற வாழ்வு’, கற்பொழுக்கமாகவும் போற்றப்பட்டுள்ளது. இவை இரண்டையும் கண்டவள் தான் அனிதா. அவளின் முதல் சந்திப்பே ஒரு ஆச்சரியமான நிகழ்வு தான். அர்ஜுன் படிப்பித்தல் முடிந்து தன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தான். திடீரென கடும் மழை வந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாதவன், அங்கே பக்கத்தில் இருந்த, குண்டுகளால் சேதமாக்கப்பட்ட கட்டிடத்துக்குள் நுழைந்தான். என்ன ஆச்சரியம் அழகே உருவான ஒரு இளம் பெண் அங்கே பதுங்கி இருப்பதைக் கண்டான். அவளின் கண்கள் பயத்தைக் காட்டின, அவன் என்ன எது என்று விசாரிக்க அருகில் சென்றான். "எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!" அர்ஜுனும் அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன. அவள் தான் அனிதா. திடீரென இராணுவம் அங்கு சுற்றிவளைப்பதை அறிந்த அவள், அதில் இருந்து தப்ப அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அர்ஜுன் அவளுக்கு ஆறுதல் கூறி, இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி அறிமுகம் செய்தனர். ஒருவரை ஒருவர் அறிய அறிய, ஒன்றாகிவிட்ட அவர்களின் உணர்வுகளுக்கு வெட்கமும் இல்லாமல் போய்விட்டது. தங்களை அறியாமலே இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து சிறிது நேரம் கண்களையும் மூடிவிட்டார்கள். "தாழ் இருள் துமிய, மின்னித் தண் என வீழ் உறை இனிய சிதறி ஊழின் கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப் பெய்து இனி வாழியோ பெரு வான், யாமே, செய் வினை முடித்த செம்மல் உள்ளமோடு, 5 இவளின் மேவினம் ஆகிக் குவளைக் குறுந்தாள் நாள் மலர் நாறும் நறு மென் கூந்தல் மெல் அணையேமே." தங்கிய இருள் அழியும்படி மின்னி, மின்னல் வெட்டி, குளிர்ந்த நீர்த்துளிகளைச் சிதறி, மரபிற்கு ஏற்ப, சிறு குச்சிகளைக் கொண்டு அடிக்கும் முரசினைப் போல முழங்கி, இடித்து இடித்து, அதாவது தொடர் இடிமின்னலுடன், இப்பொழுது பொழிந்து ,நீ வாழ்வாயாக, பெரிய மேகங்களே! நான், செய்ய வேண்டியப் [ஆசிரியப்] பணியை முடித்து நிறைவுடன், இவளுடன் இருப்பதற்கு [இப்ப] விரும்பி வந்துவிட்ட நான், சிறிய காம்பினை உடைய புதிதாக மலர்ந்த குவளை மலரின் நறுமணம் வீசும் மென்மையான கூந்தலை மெலிதாக அணைத்துக் கொண்டுஇருக்கிறேன் என்று மேகத்திடம் சொல்வதுபோல தனக்குள் முணுமுணுத்தான். இது தான் அனிதாவின் முதல் சந்திப்பு. அவர்கள் இருவரும் இணைபிரியா காதலர்களாக, கணவன் மனைவியாக அன்றில் இருந்து இன்றுவரைக் காணப்பட்டனர். ஒரு நாள், தேசிய பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளை நடத்துவதாகக் கூறி, அவர்களது கிராமத்தில் அரசுப் படைகள் இறங்கியபோது, அவர்களது வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. அர்ஜுன், கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்களுடன், விசாரணைக்காக வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார். தங்கள் அன்புக்குரியவர்களின் கதி என்ன என்று கிராமத்துப் பெண்கள் பதற்றமும் பயமும் கொண்டு பின் தொடர முற்பட்டார்கள். என்றாலும் அரசு தற்காலிக ஊரடங்கு சட்டம் போட்டு அதை நிறுத்திவிட்டனர். நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியது, ஆனால் பிடித்துக்கொண்டு போனவர்கள் திரும்பி வருவதற்கான அறிகுறி இன்னும் காணப்பட வில்லை. அனிதா, அர்ஜுன் மீதான அன்பாலும், நீதியின் ஆழமான உணர்வாலும் தூண்டப்பட்டு, கண்ணகி போல நீதிக்கு குரல்கொடுக்க, குரலற்றவர்களின் குரலாக மாறினாள். அவள் மற்றும் சிலரின் துணைகளுடனும் ஆதரவுடனும் அயராது பிடித்துக்கொண்டு போனவர்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களைத் தேடி, அவர்களின் விடுதலைக்காக வாதிட்டார். வெளியே சென்று வீடு திரும்பாதவர்கள், ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதவர்கள், கடத்திச் செல்லப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என காணாமல்போன இவர்களது உறவினர்கள் நம்பிக்கை இழக்காமல் தங்கள் உறவுகளைத் இன்னும் தேடிவருகின்றனர். அவர்களுடன் அனிதா போராட்டங்களில் கலந்து கொள்ளவும், மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும், அதே நேரம் நாளாந்த வாழ்வில் தனது சமூகம் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு எதிராக பேசவும் தொடங்கினார். அது மட்டும் அல்ல, அப்படியான மற்ற குடும்பங்களுக்கு வலிமை மற்றும் துன்பங்களைத் தாங்கும் திறன் மற்றும் கடினமான வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து மீள்வது போன்றவற்றுக்கு அவள் ஒரு அடையாளமாக மாறினாள். மேலும் மற்றவர்களுடன் ஒன்றாக, அவர்கள் ஒரு ஆதரவு வலைப்பின்னலை [நெட்வொர்க்கை] உருவாக்கி, தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டதுடன் அவர்களின் கூட்டுக் குரலாக அதை பெருக்கினர் அல்லது மாற்றினார். காணமல் போனோர் குறித்து விசாரிப்பதற்காக கடந்த 2017ல் சாலிய பீரிஸ் தலைமையில் காணமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் 2019லிருந்து யாழ்ப்பாணத்திலும் செயல்பட்டு வருகிறது. ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களைப் பொறுத்தவரை இந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை அவர்கள் ஏற்கவில்லை. அதனை மரணச் சான்றிதழ் வழங்கும் அலுவலகம் என குற்றம் சாட்டுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, முழுமையான விசாரணை நடந்து, உண்மை கண்டுபிடிக்கப் பட்டு, நீதி வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் அனிதா முதன்மை படுத்தி தன்னை அதில் இணைத்துக் கொண்டாள். எவ்வாறாயினும், அரசாங்கம் இவர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காமல், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கூற்றுக்களை நிராகரித்தது. என்றாலும் அனிதா, மனம் தளராமல், நீதிக்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்தாள், வழக்கறிஞர்கள், ஆர்வலர்களைச் சந்தித்தாள், மேலும் சர்வதேச அமைப்புகளை அணுகினாள். ஆரம்பத்தில் ஆதரவளித்த சமூகம், அதிகாரிகளின் அழுத்தத்தை உணரத் தொடங்கியது. சில கிராம மக்கள், பின்விளைவுகளுக்கு பயந்து, அனிதாவிடமிருந்தும் போராட்டத்தில் பங்கு பற்றுவதில் இருந்தும் தங்களைத் தூர விலக்கினர். இதனால் அனிதா தனிப்பட்ட சவால்களையும் எதிர்கொண்டாள். ஆனாலும், அவள் விடா முயற்சியுடன், தன் கணவன் மீதான அன்பாலும், உண்மை வெல்ல வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையாலும் தனது போராட்டத்தை விடாமல் தொடர்ந்தாள். வருடங்கள் செல்ல செல்ல அனிதாவின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் நீதிக்கான அழைப்பில் இணைந்தனர். அரசாங்கத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தது, எனவே இதை எப்படியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என இறுதியாக அரசும் தீர்மானத்தித்தது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், அரசு தலைவர்கள் மாறினார்கள். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. என்றாலும் அனிதாவின் பயணம் அநீதியை எதிர்கொள்வதில் ஒரு தனி நபரின் தைரியத்தின் சக்திக்கு சான்றாக அமைந்தது, மற்றவர்கள் தங்கள் உரிமைகளுக்காக நிற்கவும், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலைத் தேடவும் அது தூண்டியது. ஆனால் அனிதா ? அவளுக்கு என்ன நடந்தது? ஒரு மர்மமாக தொடர்கிறது. அனிதா இப்ப தன் சுய நினைவை இழந்துவிட்டாள் அல்லது இழக்கச் செய்யப்பட்டு விட்டாள்? அவள் அர்ஜுனை முதல் முதல் சந்தித்த அந்த பாழடைந்த கட்டிடத்துக்குள் பைத்தியக்கார பெண்ணாக வாழத் தொடங்கிவிட்டாள். "கனவு எல்லாம் எரிந்து சாம்பலாகிப்போன நாள் ஒன்றில் தெருவில் தனித்து நின்றாள் சிரித்துக் கொண்டு அர்ஜுன் அர்ஜுன் என்றாள்! கடந்து போனவர்கள் பைத்தியம் என்றார்கள் தூரத்தில் போய்நின்று வேடிக்கை பார்த்தார்கள் கூட்டமாய் நின்று அவள் வரலாறு கூறினர் ஏளனமாய் பார்த்து மௌனமாகவும் போனார்கள்! விதி சதி செய்து வீதிக்கு வந்தாள் கதி இதுவே என வாழ்வு அழைக்க பாழடைந்த கட்டிடத்துக்கு உள்ளே புகுந்தாள் அன்பே அன்பே என்று எங்கும் தேடினாள்" அனிதா அர்ஜுனை தேடி பேதுற்றுப் புலம்பிக் அந்த பாழடைந்த கட்டிடத்துக்குள் அங்கும் இங்கும் ஓடினாள். தன் காதல் கணவனை கண்டீரோ என்று சத்தம் போட்டு கேட்டுக் கொண்டு அலைந்தாள். இராணுவத்தின் பிடியில் வலாற்காரமாக இழுத்து செல்லப்பட்ட , “மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள். "கச்சினன் கழலினன் தேம்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் சுரியலம் பொருநனைக் கண்டிரோ" என" ஒரு சங்கப் பாடலை முழங்கினாள். உலகில் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பைத்தியம் பிடித்தவர்களாகவே இருக்கிறோம். இவளோ கணவனை அடைய, மீட்டு எடுக்கும் முயற்சியில் , சிலரின் வஞ்சகத்தால், பாவம் உண்மையாகவே பாதிக்கப்பட்டு, என்ன செய்கிறோம் என்று அறியாமல், கணவனை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"புறநானூற்று மாவீரர்கள்"
"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 01 உலகில் எந்த ஒரு பெண்ணும் அல்லது தாயும் ஒரு கோழையைப் பெற ஒரு போதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள். உதாரணமாக, கி.மு 1700 க்கும் கி.மு 1100 க்கும் இடைப் பட்ட காலத்தில் தொகுக்கப் பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம் - மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 [Holy Rig Veda: Book 10, hymn 85, verse 44] இல் "Not evil-eyed, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentlehearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds." இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்: “வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு” ["சத்ரபதி சிவாஜி" / பாரதியார்] என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார். அப்படி பட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மாவீரர்களையும் புறநானூறு கவிதையில் விரிவாக 2000 / 2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்கத் தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன், அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப் பட்டிருப்பது, அவர்கள், சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன் படுகிறது. இதைத் தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்: "O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight." "குந்தியின் மகனே! கொல்லப் பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு!" (கீதை 2-37) மேலும் இந்த போரில் மடிந்த, பெரும் வீரர்களை புதைத்த இடத்தில், அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப் பட்டன எனவும், போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வது ஒரு வழமையாக இருந்துள்ளதும் சங்க பாடல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி எதிரி படையை கலங்கடித்து இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மாவீரனை தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள் எம் மூதாதையர்கள். அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது. எனினும் அறம் சார்ந்த வீரமே பெருமை உடையதாய் கருதப் பட்டது. அந்த நிலை இன்று அருகிப் போயிற்று. இதை நாம் கண்டு, கேட்டு, இலங்கையில் இந்த நூற்றாண்டு அனுபவித்தும் உள்ளோம். சங்க காலம் என்பது கி.மு.700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும். இக் காலத்தில் தோன்றியது தான் புறநானூறு. அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றாதாரங்கள் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் இல்லை. அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன. சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார். இதனால், புறநானூற்றில் இனக்குழுத்தலைவர்கள், குறுநில மன்னர்கள், பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் காணக் கிடைக்கின்றன. அதில் அரசர்களின் வீர செயல்கள், தன் நாட்டிற்காக, தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு, அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு, அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை, இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம். இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று. இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை. போர் விதி முறைக்கு அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயல் படுகிறார்கள். குழந்தைகள், வயது போனவர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக அழிக்கப் படுகிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை, பாதுகாப்பு இல்லங்கள் அல்லது இடங்கள் என அறிவிக்கப் பட்ட இடங்கள் கூட தாக்கப் படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப் படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப் படுகிறார்கள். இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடை பெறுகின்றன. குறிப்பாக இலங்கை, பர்மா போன்ற ஆசிய நாடுகளில் தமிழர்கள் நேரடியாக பார்த்துள்ளார்கள், அநுபவித்துள்ளார்கள். ஆனால் முறைப் படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தது என்பதை புறநானூறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி, இப் பாடல் பாடப் பெற்றுள்ளது. அது தான் அந்த முக்கிய தகவல். அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப் பட்டவை என்றும், தர்ம யுத்தம் என்றும் இதனால் அறிகிறோம். இதில் போர் தொடுக்கப் போகிறேன். ஆனிரை [பசுக் கூட்டம்], ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள் [பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர், மக்கட் செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுங்கள் என முன் கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இதே போல கி.மு 2150 - 1400 ஆண்டில் எழுதிய சுமேரிய காவியமான கில்கமெஷிலும் (Epic of Gilgamesh) மற்றும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலும் போர் சாற்றுதல் குறிப்பிடப் பட்டுள்ளது. [Brien Hallett, The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக் கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப் பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இன்று போர்ப் பிரகடனம் அல்லது போர் சாற்றுதல் (Declaration of war) என்பது ஒரு நாடு முறைப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவிக்கும் செய்கையாகும். இந்த போர் சாற்றுதலுக்கான சர்வதேச நெறிமுறை 1907ம் ஆண்டு கையெழுத்தான ஹாக் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இனி புறநானூறு - 09 பாடலை விரிவாக பார்ப்போம் "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங் கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!" [புறநானூறு - 9] பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னை யொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்" / "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக் கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி விட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறு தான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப் பட்ட போரின் அடையாள மாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பல காலம் வாழ்வானாக” என மேலும் அவனை வாழ்த்துகிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும் போது பஃறுளி என அமையும். அதே போல, சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், வஞ்சின மாலையில் "பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு, தீத் திறத்தார் பக்கமே சேர்க’ என்று, காய்த்திய பொன்-தொடி ஏவ, புகை அழல் மண்டிற்றே- நல் தேரான் கூடல் நகர்." அதாவது பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழந்தை ஆகியவர்களை விட்டு விட்டுத் தீய செயல் புரிபவர் பக்கம் சென்று எரிப்பாயாக - என்று கண்ணகி கூறினாள். அவ்வாறே மதுரை மாநகரம் எரிந்தது என பாடப் பட்டது இதை மீண்டும் மெய்ப்பிக்கிறது. போர்க் களத்தில் சென்று வீரம் விளை வித்து பகைவரது வாளாலும், வில்லாலும், அம்பினாலும் விழுப்புண் படும் நாளே பயனுடைய நாள்கள், மற்ற நாள்களெல்லாம் பயனற்ற வீண் நாள்கள் என்ற உணர்வோடு வாழ்ந்துள்ளனர் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவள்ளுவரும், "விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து." என்ற தனது 776 வது குறளில் கூறுகிறார் என்பதையும் கவனிக்க. இனி அடுத்து வரும் பகுதிகளில் சில புறநானூற்று வீரர்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 - "வீரத் தாய்" தொடரும்.
-
"நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை"
"நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை" "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நீலவானின் கீழே! நீங்காத காதலென்று அவளும் நம்பி நீதியாய் நடப்பானென்று மகிழ்வில் மிதந்தாள்!" "அன்பு பேச்சில் மனத்தைத் தொலைத்து அச்சம் மடம் நாணம் மறந்து அன்னை ஈன்ற உடல் முழுவதையும் அழகு கொட்டிட அவனுக்கு கொடுத்தாள்!" "அமைதியான ஓடத்தில் ஆசைகளும் தீர அம்புலி தன்னை மேகத்தால் மறைக்க அந்தரத்தில் விட்டுவிட்டு எங்கோ போனான் அணங்கு அவளோ நீருடன் சங்கமித்தாள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கார்த்திகை தீபம்"
"கார்த்திகை தீபம்" இன்று கார்த்திகை தீபம், 2023. மிளிரன் ஒரு இளம் பொறியியலாளர். தன் பணியை முடித்துவிட்டு, தான் தங்கி இருக்கும் ஊழியர்கள் குடியிருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்தான். அவனது எண்ணம் எல்லாம் தன் அம்மா, அப்பா, மூத்த அக்கா, அண்ணா மட்டுமே! "கார்த்திகை தீபம் எங்கும் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லட்டும்! காரிருள் ஆக்கிய எமது வாழ்வு விழிப்பு பெற்று தீபமாய் ஒளிரட்டும்!!" அன்று கார்த்திகை மாதம் 2008, மிளிரன் பத்து அகவை, தன் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர்களுடன், குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் பதுங்கு குழிக்குள் பாதுகாப்புக்காக இருந்தான். கொஞ்சம் சத்தம் அமைதியாகியதும், ஹெலிஹாப்டர், போர் விமானங்களின் இரைச்சல்கள் ஓய்ந்ததும், முதல் பெற்றோர்கள் வெளியே வந்து வானத்தைப் பார்த்தனர். இன்னும் குண்டுகள் வெடித்த புகைகள் வானத்தில் காற்றுடன் அங்கும் இங்குமாக அலைந்தவண்ணம் இருந்தன. அவர்கள் தமிழர் பாரம்பரிய குடும்பம் என்பதால், ஆயத்தமாக முன்பே தயார் நிலையில் இருந்த சில கார்த்திகை விளக்குகளை தம் வீட்டின் முன் கொளுத்தி வைத்தனர். அவர்களுக்கு அதில் ஒரு திருப்தி. "வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு இலையில மலர்ந்த முகையில் இலவம் கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி” பதுங்கு குழியில் இருந்து மிளிரனின் இரு மூத்த சகோதரர்களும் மெல்ல வெளியே கார்த்திகை தீபத்தின் வண்ண அழகை எட்டிப்பார்த்தனர். வானத்தில் ஊர்ந்து செல்லும் ஒளிவட்டமான சூரியன், நெருப்பாகச் சிவந்து வெப்பத்தைக் கக்குகிறது. அவ்வெப்பத்தால் காய்ந்தது அழகிய காடு. அதனால் இலையற்றுப் போன இலவமரத்தில் ஒரு மொட்டும் விடாமல் எல்லா மொட்டும் மலர்ந்திருந்தன. அக்காட்சி அவ்வழியே சென்ற ஔவையாருக்கு, மங்கையர் கூட்டம் ஒன்றாகச்சேர்ந்து ஆரவாரத்தோடு ஏற்றிய அழகிய தீபங்களின் சுடர் கொடியாகப் படர்ந்து நீண்டு செல்வது போல் தோன்றியதாம். ஆனால் இவர்களுக்கு, குண்டுகள் ஷெல்களின் தாக்கத்தால், எரிந்து காய்ந்த இலையற்றுப் போன மரத்தில் பூத்த பூக்களாகவே அவை தெரிந்தன. அந்தக்கணம், மீண்டும் ஒரு ஹெலியின் பெரும் இரைச்சல், அவர்கள் பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக திரும்பவும் உட்புகு முன் அந்த கொடூர சத்தம், அது தான் மிளிரனுக்கு கேட்டது. அதன் பின் அவன் தனித்துவிட்டான். சொந்த இடத்திலேயே அகதியானான். அது தான் அவன் அவர்களுக்கு, அஞ்சலி செலுத்த, நினைவுகூர சில சிவப்பு மஞ்சள் துணிகளுடன் விடுதிக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறான். மிளிரன் தன் விடுதிக்கு கடைசியாக திரும்பும் மூலையில், அந்த மூலை வீட்டில், கார்த்திகா என்ற இளம் பெண் சிவத்த மேல் சட்டையுடனும், மஞ்சள் கீழ் சட்டையுடனும் "உண்பது நாழி உடுப்பவை இரண்டே" என்று, தன் வீட்டின் முன்றலில் கார்த்திகை தீபம் ஏற்றிக்கொண்டு இருந்தாள். "விளக்கொளி யாகிய மின்கொடி யாளை விளக்கொளி யாக விளங்கிடு நீயே." அனைத்தையும் விளக்கு கின்ற ஒளியாக விளங்கும் மின்கொடி போன்ற இறைவியை, அந்த பேரொளியாகவே நான் தெரிந்து கொண்டேன் என்று திருமூலர் அன்று கூறினார். ஆனால் இன்றோ, மிளிரன் உள்ளத்தில் சுடர்விட்டு எரியும், அனைத்தையும் அவனுக்கு மகிழ்வாக அள்ளித்தரும் விளக்கொளியாக அவளை ஒருகணம் அப்படியே அசையாமல் நின்று பார்த்தான். “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம் , நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி . தரளம் மிடைந்து - ஒளி தவழக் குடைந்து - இரு பவழம் பதித்த இதழ் முகிலைப் பிடித்துச் சிறு நெளியைக் கடைந்து - இரு செவியில் திரிந்த குழல் அமுதம் கடைந்து - சுவை அளவிற் கலந்து - மதன் நுகரப் படைத்த எழில்” நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து சிறிய புன்னகையை பதித்த முகம். அவள் நினைவுகளை அவனில் பதித்து, அவன் மனதில் அவள் அலைகளை நிறைத்து, நளினத்தைத் தெளிக்கின்ற விழிகள். முத்துகளைக் கோத்து அவற்றின் ஒளி தெரியாதவாறு குடைந்து உள்வைத்து வெளியே சிவந்த இரண்டு பவழத்தைப் பதித்த இதழ்கள். மேகத்தைப் பிடித்து அதைக் கடைந்து காதுகளின் இரு மருங்கிலும் அது உலவுமாறு விடப்பட்ட கூந்தல். மொத்தத்தில் பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதினையே மீண்டும் கடைந்து வந்தத் தெளிவுடன், இன்னும் இன்சுவையைக் கலந்து, மிளிரன் நுகரப் படைத்த அழகு அவள்! அவள் தான் கார்த்திகா, கார்த்திகை தீபத்தில் ஒளிர்ந்துகொண்டு இருந்தாள்! அவன் அதில் அழகாய் மிளிருபவனோ, அது தான் அவன் பெயரும் மிளிரனோ!!, இப்படித்தான் அவன் மனம் அவனைக் அந்தக்கணம் கேட்டது. அவளும் சட்டென அவனைப் பார்த்தாள். காதல் என்ற ஒன்று உள்ளத்தில் புகுந்து விட்டாலே அது பொத்தி வைக்கும் வகையறியாது என்பதை அவள் கண்கள் வெட்கம் அற்று அவனுக்கு சொல்லிக் கொண்டு இருந்தன. இன்பத்தின் உச்சம் என்பது வெறுமைதானோ? சும்மாயிருப்பதே சுகம் என்கிறார்கள் சித்தர்கள். இதுவும், அவளின் பார்வையால் அவன் மனம் இன்பம் அடைந்தாலும், அவன் அதைக் வெளிப்படையாக காட்டாமல் சும்மா கொஞ்ச நேரம் அங்கே நின்றான். இந்த ‘சும்மா’வும், சித்தர்கள் சொன்ன அந்த சும்மாவும் ஒன்றுதானோ? தன்னை மறந்த நிலை என்கிறார்களே அதுவாக இருக்குமோ இது? அவன் கொஞ்சம் குழம்பித்தான் இருந்தான். கார்த்திகை தீபத்தின் மென்மையான பிரகாசத்தைப் போல அவள் அவனுக்கு தோன்றினாள். அன்பின் சுடர் மினுமினுப்பு கொண்டு இருவரின் உள்ளங்களிலும் நடனமாடியது. கண்டதும் காதல் ……. கூடியதும் பிரிவு … என்ற இந்த காலகட்டத்தில், அவையைத் தாண்டி, மிளிரன், கார்த்திகாவின் உள்ளங்களில் தீபம் ஒன்று இந்த நன்னாளில் பற்ற வைக்கப்பட்டு விட்டது! அந்த நேரத்தில் காற்றில் தூபத்தின் வாசனை மற்றும் எண்ணற்ற எண்ணெய் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வானம் அவர்களின் காதல் ஆரம்பத்துக்கு மெருகேற்றின. சிவப்பு, மஞ்சள் துணிகள் காற்றில் அசைந்து வாழ்த்துக்கூறின. இருவரும் தம்மை இழந்து ஒருவரை ஒருவர் நோக்கி கொஞ்சம் அசைந்தனர். அது காதலின் சம்மதத்தை சொல்லாமல் சொன்னது. அவர்களின் எண்ணங்களைப் பின்னிப் பிணைந்து, தீபத்தின் வான ஒளியின் கீழ் அவர்களை ஒன்றாக இழுத்தது. மினுமினுக்கும் தீப்பிழம்புகள் மற்றும் காற்றில் எதிரொலிக்கும் மெல்லிசைக் கோஷங்களின் பின்னணியில் அவர்களின் காதல் அங்கு மலர்ந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களில் ஆறுதல் கண்டனர், அவர்கள் இருவரின் இதயங்கள் கொண்டாட்டங்களின் தாளத்துடன் ஒன்றிணைந்து, இணக்கமாக அதற்கு ஏற்றவாறு துடித்தன. பகல் இரவுகளாக மாறியதும், கார்த்திகை தீபத்தின் இரவு முழுவதும் எரியும் சுடர் போல, அவர்களின் பிணைப்பு மௌனத்தில் வலுவடைந்தது. கார்த்திகா, தனது பிரகாசமான புன்னகையுடனும், விளக்குகளின் தீப்பிழம்புகளைப் போல பிரகாசிக்கும் கண்களுடனும், வீட்டுக்கு வெளியே, படலைக்கு அருகில் வந்து, 'உங்களுக்கும் என் குடும்பத்தின் சார்பில் கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!' என்று கூறியபடி, மிளிரனுக்கு ஒரு தீப விளக்கை கொடுத்தாள். அவனது கண்கள், அதை வாங்கும் பொழுது கண்ணீரால் நனைவதைக் கண்டு திடுக்கிட்டாள். அவன் தன் சோக கதையை அவளுக்கு சுருக்கமாக சொல்லிவிட்டு, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டான். 'நான் கார்த்திகா, நீங்க ?' நட்சத்திரங்கள் பிரகாசித்த வானத்தின் கீழ், அவள் மெல்லிய குரலில் கேட்டாள். அவன் திரும்பி பார்த்து, 'நான் அகதி, நான் மிளிரன், புதிதாக இங்கு பதவிபெற்ற பொறியியலாளன்' என்று கூறிக்கொண்டு புறப்பட்டான். 'இல்லை இல்லை, இனி நீங்க அகதி இல்லை' என அவள் தனக்குள் கிசுகிசுத்துக் கொண்டாள். அவள் கொடுத்த கார்த்திகை தீபத்தின் புனிதச் சுடரைப் அணையாமல் விடுதிக்கு எடுத்துச் சென்ற அவன், அதை மற்ற சுடர்களுடன் ஒன்றாக தனது பெற்றோர் சகோதரர்களின் படத்தின் முன், சிவப்பு மஞ்சள் துணிகள் தோரணம் போல அசைய, ஈகைச் சுடரின் முன் தன் அகவணக்கத்தை செலுத்தினான். அன்றில் இருந்து இருவரும் சந்திப்பது, கதைப்பது, ஒன்றாக பொழுதுபோக்குவது என அவர்களின் உறவு மலர்ந்தது. இருப்பினும், காதல் பற்றிய கதையைப் போலவே, சவால்கள் வெளிப்பட்டன. மரபுகளில் வேரூன்றிய அவளது குடும்பம், அவர்களது உறவின் ஆழத்தை கேள்விக்குள்ளாக்கினர், அவர்களது இணைப்பை ஏற்கத் தயங்கினர். ஆனாலும், இருவரும் உறுதியுடன் இருந்தனர், அவர்களின் உறுதியும் அசையாத அர்ப்பணிப்பும் தீபத்தின் சகிப்புத்தன்மையை பிரதிபலித்தது, அவளின் பெற்றோரின் எதிர்ப்பினால் ஏற்பட்ட துன்பத்தின் காற்றையும் மீறி பிரகாசமாக அந்த தீபம் ஒளிரத் தொடங்கியது. என்றாலும் நாளடைவில், மிளிரனின் குடும்ப விபரங்களை அறிய அறிய அவளின் பெற்றோர்களின் எதிர்ப்பு முற்றாக நின்றுவிட்டது. இறுதியாக, மற்றொரு மங்களகரமான கார்த்திகை தீபத்தில், கார்த்திகை 2024 இல், எண்ணற்ற தீபங்களின் பிரகாசம் மற்றும் புனித நெருப்பின் நடுவில், கார்த்திகாவின் குடும்பத்தினரின் ஆசீர்வாதங்களைப் பெற்றபடி, இருவரும் கைகளை பின்னிப்பிணைத்து ஒன்றாக நின்றனர். அவர்களின் காதல், அவர்களை ஒன்றிணைத்த சுடர் போன்று, பிரகாசமாக எரிந்து, அவர்களின் முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்தது. கார்த்திகை தீபத்தின் எல்லையற்ற பிரகாசத்தின் மத்தியில், சிவப்பு மஞ்சள் உடையில் இருவரும் இணைந்தனர்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?"
"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?" / பகுதி: 03 இந்தியாவின் பழங் குடியினரின்[மக்களின்] நாகரிகம் முதலாவதாக, சிந்து சம வெளியில் கி மு 3300 க்கும் - கி மு 2600 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கி, கி மு 2600 - 1900 ஆண்டுகளில் ஹரப்பாவில் உச்ச நிலையில் இருந்து, பின் சடுதியாக அழிந்து போய்விட்டது. புறநானுறு 202 இல், "கோடிபல அடுக்கிய பொருள்நு மக்கு உதவிய நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி" என்ற வரியில் கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன் முன்னோர்களுக்கு உதவி, உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன் என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள். அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார். இந்த பழங் குடியினர் மிக பழைய காலத்தில், ஆப்ரிகாவில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. ஆகவே, ஆப்ரிகாவில் நிலவிய பண்பாடு போல, பண்டைய இந்தியாவும் பெரும்பாலும் தாய்வழி சமூகமாகவே இருந்தது. எனவே, அப்போதைய இந்த மக்கள் பெண்ணை மையப்படுத்தி வாழ்ந்தார்கள். இவர்கள் பிறப்பின் அதிசயத்தை, கால மாற்றத்தை, நிலவின் தேய்தல் வளர்தலை, மறுபிறப்பை, தெய்விகத்தை அல்லது ஈடற்ற நிலையை [mysteries of birth,the seasons and lunar cycles, rebirth and transcendence] கொண்டாடினார்கள். கருவளம், ஆண்மை மற்றும் மறுமை [fertility,virility and the after-life] போன்றவற்றுடன் தொடர்புடைய ஆன்மீக சக்திகளையும் வழிபட்டார்கள். பொதுவாக, இம் மக்கள் தந்திர முறை பண்பாட்டையே கொண்டிருந்தார்கள். இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறுபட்டது. இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறை ஆகும். ஆகவே ஆரியர்களின் அகநிலை உணர்வுக்குப் புறம்பான, வெளிப்புற சடங்கில் இருந்து மாறு பட்டது. சிந்து - சரஸ்வதி நாகரிகத்தின் சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்களில் ஒன்று பசுபதி வடிவம். இந்த பசுபதி முத்திரையை சிவனின் முன்னைய வடிவமாக அல்லது சிவனின் தொடக்கக் கருத்துருவாக [முற்காலத்திய சிவனாக] சர் ஜான் மார்ஷல் அடையாளப் படுத்துகிறார். அது மட்டும் அல்ல, சிந்து வெளி இடிபாடுகளுக் கிடையில், படைப்பாற்றல் சின்னங்களான, சிவ பக்தர்களால் இன்றும் பாவிக்கப்படும் வடிவம் ஒத்த , லிங்கம் மற்றும் யோனி வடிவ பெருங்கல்கள் கிடைத்த துள்ளன. விவசாய மற்றும் பழங்குடி மக்களுக்கிடையில் காணப்பட்ட, படைப்பா ற்றல் சின்னங்களின் வழிபாடை ஒத்த வழிபாடு இங்கும் தொடர்வதை இது எமக்கு எடுத்துரைக்கிறது. இந்த தொடக்க நிலை சைவ சமயத்தின் அத்திவாரத்தில் இருந்தே இன்றைய சைவ சமயம் வளர்ந்தது எனலாம். இது மேலும் ஆரியர்க ளின் வருகைக்கு முன்பே, சிவனை வழிபடும் வழக்கம் இந்தியாவில் இருந்துள்ளது என்பது இதனால் அறியப் படுகிறது. எனினும், இந்த நாகரிகம் இந்தியாவிற்குள் புகுந்த ஆரியரின் தாக்குதலாலும் மேலும் வறட்சியாலும் கி மு 1700 ஆண்டு அளவில் முற்றாக அழிவுற்றது. எப்படியாயினும், சிவாவை மையப்படுத்திய சிந்து வெளி வழிபாடு, திராவிட இந்தியாவில், குறிப்பாக தமிழர் மத்தியில் இன்றும், இன்னும் போற்றிப் பேணப்படுகிறது. சிவ வழிபாடு திராவிட மக்களுடையது என்பதை ஆரியர்களின் மனப் போக்கில் இருந்து நாம் தெளிவாக அறியலாம். வட வேதங்களில் லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில் தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படை யில் சிவ லிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழி வாக வட மொழியான கி மு 1500-1100 ஆண்டு அளவில் தொகுக்கப்பட்ட ரிக் வேதம் [இருக்கு வேதம்] கூறுகிறது. இதில், 7.21.5 பாடலில் "Let our true God subdue the hostile rabble:let not the lewd [Shishan Deva] approach our holy worship." என்று கூறுகிறது. அதாவது "எங்கள் உண்மையான கடவுள், இந்திரன், எமது எதிரியான ஒழுங்கீனமான கும்பலை அடக்கட்டும்: ஓழுக்கங்கெட்ட ஆண் குறியை வணங்கும் கும்பல், எமது புனித இடத்தை ஊடுருவதை தடுக்கட்டும்" என்கிறது. எது எப்படி யாயினும் பிந்திய வடவேதங்களில் சிவா அதிகரித்த முக்கியத்துவம் பெறுகிறார். இது அவர்கள் காலப்போக்கில் சைவத்தையும் உள்வாங்கியதை எடுத்துக் காட்டுகிறது. மேலும் பிற்பட்ட தொல்லியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகள், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள், ஆரியரல்லாத திராவிட இன மக்கள் என பெரும்பாலும் அடையாளப் படுத்து கிறது. சர் ஜான் மார்ஷலின் அகழ்வு ஆய்வு, சைவ சமயத்தின் வரலாற்றை கிறிஸ்துக்கு முன் 3000 ஆண்டுகளுக்கு கொண்டு செல்கிறது. சர் ஜான் மார்ஷல் ஏழு மண் அடுக்கு வரை தோண்டி ஆய்வு செய்தார். ஒரு மண் அடுக்கு ஏறத்தாள 500 வருடங்களை குறிக்கும். பிரபல தத்துவவாதியும் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான, டாக்டர் சர்வபள்ளி இராதா கிருஷ்ணன் தான் எழுதிய இந்து சமய வரலாறு [History of Hinduism] என்ற நூலில் சைவ சமயத்தின் ஆரம்பம், நாம் இது வரை ஏற்றுக் கொண்டதை விட மேலும் சில நூற்றாண்டுகள் கூடுதலாக இருக்கலாம். ஏனென்றால் இன்னும் முதலாவது மண் அடுக்கு அடையாள படுத்தப் பட வில்லை. ஆகவே சரியாக தீர்மானிக்க முடியாது என்கிறார். இவை எல்லாம் எமக்கு காட்டுவது,இந்தியாவிற்கு ஆரியர் வருகைக்கு முன்னமே அங்கு சைவ சமயம் தழைத்தோங்கி இருந்தது என்பதாகும்.இந்த வரலாற்று உண்மைகள் எல்லாம் இந்தியர் அல்லாதவர்களால் சரிபார்க்கப்பட்டது. இது சைவ சமயத்தை உலகின் மிகப் பழமையான மதமாக்கிறது! சாதாரண பொது மக்களும் இலகுவாக அன்பு செலுத்த, மனத்தால் உணர, புரிந்து கொள்ள திராவிடர்களின் வழி பாட்டு முறை உருவ வழிபாடாக இருந்தது. அங்கே அவர்கள் பருப் பொருளாலான மத சின்னத் திற்கு பூசை செய்தார்கள். திராவிடர்கள் ஆண்டவனை நீர், இலைகள், மலர்கள் கொண்டு வழிபட்டார்கள். ஆரியர்களின் வழிபாடு வேள்வி [ஹோமம், ஓமம்] ஆகும். இது ஒரு உருவம் அற்ற வழிபாடாகும். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை, விலங்குகளை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறை இது வாகும். ஆண்டவனுக்கு தமது செய்திகளை காவிச் செல்லும் ஒரு தூதராக நெருப்பு தொழிற் படுவதாக அவர்கள் கருதுகிறார்கள். வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள், ஆரியர்கள் மத்தியில் வழக்கில் இருந்து வருகிறது. ஆண்டவனின் ஆதரவை பெற, அவரை மகிழ்விக்கும் அல்லது திருப்தி படுத்தும் முறையாக இதை ஆரியர்கள் பின்பற்று கிறார்கள். மத்திய ஆசியாவில் இருந்து நாடோடியாக வந்த ஆரியர்கள், திராவிடர்களை வென்ற பின்பு, பண்டைய திராவிடர்களின் சமயத்திலும் மாற்றம் மெல்ல மெல்ல எற்பட்டது . பண்டைய கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக் கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன [முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)] . அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனுடன் சேர்த்துவிட்டார்கள். உதாரணமாக, தமிழரின் சிறப்புக் கடவுள்கள், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன் → ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்! சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்ய னாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள் வாங்கப் பட்டது. அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்தி ற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கி னார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன. தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் [சைவர்களும்] உணர்வ தில்லை. தொடக்கத்தில் வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்க்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்த படியாலும், நால்வகைச் சாதிப்பாகுபாடுடையதாய்ப் பிராமணர் மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கையுடைய தாயிருந்த படியாலும், இவற்றிற்கு மேலாக, பிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தைப் படிக்கக் கூடாது என்று தடுத்து வந்த படியாலும், இவ்விதக் குறுகிய கோட்பாட்டினை யுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. என்றாலும் கி. பி. நாலாவது, அல்லது ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர், வைதீக மதம் தனது அடிப்படையான கொள்கைகள் சிலவற்றில் மாறுதல் செய்துகொண்டு புத்துயிர் பெற்றது. அதாவது, யாகங்களில் உயிர்க் கொலை செய்வதை நிறுத்திக் கொண்டதோடு, திராவிட தெய்வங்களைத் தன் மதக் கடவுளராக ஏற்றுக் கொண்டு புதிய உருவம் பெற்று விட்டது. உலக வரலாறு நெடுகிலும் , ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் தந்திரம் இது. உறவுமுறைகளை வலிமைப் படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது. இன்றைக்கும், பிராமணர்களின் வர்ண சாஸ்திரத்தால் தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது கிராமபுர மக்கள் மத்தியில் "முருகன்", "வள்ளி" போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர் அல்லது சம்ஸ்கிருத மோகம் கொண்ட மக்கள் மத்தியில், அதற்கு மாறாக, "ஸ்கந்தன்", "சுப்பிரமணியன்" என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. திராவிட தெய்வங்கள் வைதீகத்தில் கலந்து உரு மாறின. முருகனுக்கு தமிழில் வள்ளி என்ற மனைவி இருந்தார். ஆரியத்தோடு சேர்ந்து இந்திரனின் மகளான தெய்வானையும் மனைவியாகச் சேர்ந்து கொண்டார். இதன் மூலமே, தேவேந்திரனுடன் சொந்த மாகின்றார்! இதில் முதலாவது களவொழுக்கத்தையும் இரண்டாவது கற்பொழுக்கத்தையும் காட்டுகிறது. மணச் சடங்கினைப் பற்றி தொல் காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத் தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிகிறோம். எனினும் காலப்போக்கில், பெற்றோர் நடத்தி வைக்கும் 'கற்பு நெறி' மணவாழ்க்கை அறிமுகப் படுத்தப் பட்டது. இதன் பின்னராக சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக அண்ணன், தம்பி, தங்கை, அக்கா , மச்சினன் என தெய்வங்களுக்கிடையே உறவுமுறை உருவாக்கப்பட்டன . முருகனும், பிள்யைாரும் சிவனுக்குக் குழந்தைகள். திருமால் மைத்துனர் ....... தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர். கொற்றவை சங்க கால பழந்தமிழ் மக்களின் வெற்றித் தெய்வம். சிந்துவெளிப் பெண் தெய்வத்திற்கும் கொற்றவைக்குமுள்ள உண்மை யான தொடர்பினை இன்றைய ஆராய்ச்சி நிலையில் தெளிவாகக் கூறுவதற்கில்லை. எனினும் தொடர்பு நெருங்கியதாக இருக்கலாம் என ஊகிக்க இட முண்டு. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:04 தொடரும்.
-
அந்தாதிக் கவிதை / "நல்லதே நடக்கும்"
அந்தாதிக் கவிதை / "நல்லதே நடக்கும்" "நல்லதே நடக்கும் நன்மை செய்வோம் செய்வது எதுவும் பெருமை கூட்டட்டும் கூட்டுவதும் கழிப்பதும் இயற்கையின் விளையாட்டு விளையாடல் இல்லையேல் வாழ்வு இனிக்காது இனிப்பது எதிலும் கவனம் எடுத்திடு!" "எடுத்த அடியை பின்னோக்கி வைக்காதே வைக்காதா தீர்வால் நேரத்தை வீணாக்காதே வீணாக்கும் எதுவுமே திரும்பி வராதே வராததை மறந்து செய்திடு நல்லது நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"விழிகள் மீனோ மொழிகள் தேனோ"
"விழிகள் மீனோ மொழிகள் தேனோ" "விழிகள் மீனோ மொழிகள் தேனோ பற்கள் முத்தோ இமைகள் சிப்பியோ கழுத்து சங்கோ மார்பு குடமோ முகம் நிலவோ நெற்றி பிறையோ யான் அறியேன் அழகு மங்கையே உன்னைக் காண இதயம் துடிக்குதே உலகம் கூட எனக்கு வெறுக்குதே கண்ணே கரும்பே அருகில் வருவாயோ?" "புருவம் வில்லோ நடை அன்னமோ கூந்தல் அறலோ இடை உடுக்கையோ சாயல் மயிலோ மூக்கு குமிழாம்பூவோ தோள் மூங்கிலோ விரல் காந்தள்மலரோ வாலிப்பதை தூண்டி வலையில் வீழ்த்திட்டாயே ஆழ்ந்த ஆசையில் விண்ணில் பறக்கிறேனே இனிய இசையும் இடியாய் கேட்குதே மானே மடமகளே நெருங்கி அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"நல்லிணக்கக் தணல்"
"நல்லிணக்கக் தணல்" இலங்கை யாழ் நகரில், புகையிரத நிலையத்துக்கும் நாவலர் மணடபத்துக்கும் அருகில் உள்ள அத்தியடி என்ற ஒரு இடத்தில் தில்லை என்ற ஒரு நபரும் அவரது மனைவி ஜெயாவும் வாழ்ந்து வந்தார்கள். ஜெயா ஒரு பாரம்பரிய மனிதராக இருந்ததுடன் கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளில் ஆழமாகவும் வேரூன்றி இருந்தார், அதே நேரத்தில் தில்லையோ மிகவும் நவீனமாகவும் திறந்த மனதுடனும், மாற்றங்களை தேடுபவனாகவும், மூட நம்பிக்கைகள் மற்றும் சமயங்கள் வியாபாரமாக செய்யும் செயல்களை எதிர்ப்பவனாகவும் இருந்தார். இருவருக்கும் இடையில் சில பல கருத்து வேறுபாடுகள் இருந்ததால், ஒருவரையொருவர் நேசிப்பது, அல்லது நல்லிணக்கம் ஒரு தீப்பிழம்பு போல இருந்தது. அது எரிந்து ஒளி கொடுக்கவும் இல்லை, அணைந்து இருள் கொடுக்கவும் இல்லை. அது தணலாக முடங்கி கிடந்தது. ஜெயா அத்தியடி பிள்ளையார் கோவிலின் தீவிர பக்தராக இருந்தார், அங்கு அவர் பெரும்பாலான ஓய்வு கிடைக்கும் வேளையில் பிரார்த்தனை செய்வதிலும், தெய்வங்களின் வழிகாட்டுதலைப் பெறுவதிலும் செலவிட்டார். அவர் பாரம்பரியத்தின் சக்தியை நம்பினார் மற்றும் புராணங்கள் அவதாரங்கள் போன்றவற்றில் கூறியவற்றை அப்படியே எந்த கேள்வியும் இன்றி ஏற்று அதில் எப்போதும் திருப்தி அடைந்தார். மறுபுறம், தில்லை ஒரு இலட்சியம் கொண்ட குடும்பத் தலைவனாக, கணவனாக இருந்தார். அறிவையும் உண்மையையும் தேடி என்றும் வாசிப்பதிலும், மற்றவர்களுடன் அலசுவதிலும் ஓய்வு நேரத்தை செலவழித்தார். ஒரு மாலை நேரத்தில், சூரியன் அடிவானத்திற்குப் பின்னால் சாய்ந்தபோது, தில்லை மற்றும் ஜெயா இருவரும் அவர்களின் சாதாரண சுண்ணாம்புக் கல் வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்தனர். மெல்லிய தென்றல் காற்று பிள்ளையார் கோவிலின் தூபத்தின் நறுமணத்தை எடுத்து வந்து அங்கு வீசியது. "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே, யாழ் தேவி ரெயில் ஏறுவோம், எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்ற பாடல் வானொலியில் பாடிக்கொண்டு இருந்தது. மேலும் யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்களின் "நிழல் படம்" [நிழல்வடிவம்], சூரியன் மேற்கு திசையில் மறைவதை பறைசாற்றிக் கொண்டு இருந்தது. இத்தனை அழகு சூழலில் காதலர்கள் , இளம் தம்பதிகள் மனம் என்ன பாடுபடும் என்று தெரியாவார்கள் உலகில் இருக்க மாட்டார்கள்? ஆனால் ஜெயா அப்படி இல்லை. அவளுக்கு கோவிலின் தூபத்தின் நறுமணம், கணவனை தனிய விட்டுவிட்டு, எந்த வருத்தமும் தெரிவிக்காமல், பூசைக்கு போய்விட்டாள். கணவனும், மனைவியும் எவ்வாறு விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதை அவள் பொருட்படுத்தவில்லை. "சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப் பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன் கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல ருள்ளம் படர்ந்த நெறி. " பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும், பெண்மானும் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான், தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண்மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. ஆனால், அவள் தன் நம்பிக்கை, தன் வழக்கமான செயல்களில் தான் முக்கிய கவனம் செலுத்தினாள். நல்லவேளை நல்லிணக்கம், தில்லையின் விட்டுக்கொடுப்புகளால் இன்னும் அணையாமல் தணலாகவே இருந்துவிட்டது. அவள் தன் பூசைகளை முடித்துவிட்டு, ஒருவேளை தன் பிழைகளை உணர்ந்தாலோ இல்லை சமாளிக்கவோ, தில்லையின் அருகில் வந்து "என் அன்பே, எங்கள் முன்னோர்கள் இந்த ஊரிலும் கோயிலிலும் திருப்தி அடைந்தார்கள், நானும் அப்படித்தான்," ஜெயா புன்னகையுடன் கூறிக்கொண்டு "தெய்வங்கள் இந்த அமைதியான வாழ்க்கையை நமக்கு ஆசீர்வதித்துள்ளன, நாங்கள் ஏன் இன்னும் அதிகமாக விரும்புகிறோம்?" என்று மீண்டும் அருகில் இருந்தாள். தில்லை ஒரு விரக்தியை உணர்ந்து பெருமூச்சு விட்டான். அவன் ஜெயாவின் பக்தியை ரசித்தான். என்றாலும் அவளுக்கு கொஞ்சம் பொதுப்படையான விடயங்கள், நாட்டின் நடப்புகள் பற்றி அறியக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தப் படவேண்டும் என்று ஜோசித்தான். அதற்கு அவள் ஏதாவது உயர் கல்வி பெற்று, பலர் வேலை செய்யும் ஒரு இடத்தில் வேலை செய்வது நன்று என்று எண்ணினான். அப்பத்தான் நல்லிணக்கக் தணல் அணையாமல் நிரந்தரமாக எரிந்து ஒளி விடும். “அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த வார்த்து இலக்கு வை எயிற்றுச் சில் மொழி அரிவையைப் பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில், நல்லோள் கணவன் இவன் எனப் பல்லோர் கூற, யா அம் நாணுகம் சிறிதே” நன்றாக சிவந்துபோன நாக்கு, அணிசேர்ந்ததுபோல அழகான சிறிய பற்கள், குறைவான பேச்சு உள்ள இந்தப் பெண்ணை, ஜெயாவை அடைந்தபோது, அந்த ஊரே இந்த “நல்லவன்தான்” தில்லை, இவளின் கணவன் என்று சொல்லும்போது கொஞ்சம் வெட்கப்பட்டேன். ஆனால் இப்ப என் நிலையைப் பார்த்து முழுதாக வெட்கி தலை குனிகிறேன் என்று தனக்குள் முணுமுணுத்தவாறு அங்கிருந்து எழும்பி, அவளுக்கு பொருத்தமான உயர் கல்வி எது, அது அருகில் இருக்கிறதா என்பதைப்பற்றி இணையத்தில் தேட முற்பட்டான். நாட்கள் வாரங்களாக மாதங்களாக மாற, ஜெயா உயர்கல்வியில் நன்கு தேர்ச்சி பெற்று, ஒரு நிறுவனத்தில் வரவேற்பாளராக பணி புரியத் தொடங்கினாள். அதே சமயம் தில்லை அமைதியாக தனது கனவுகளை இதயத்தில் வளர்த்துக் கொண்டார். ஒருமுறை அந்த நிறுவனத்துக்கு வந்த ஒரு பெரியாரை சந்தித்தார். அவளது ஏக்கத்தை உணர்ந்த அவர், "வாழ்வின் அதிசயங்களைத் , நல்லிணக்கத்தைக் திறக்கும் திறவுகோல் உங்கள் இதயத்தில் உள்ளது. உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள், நீங்கள் அவற்றைக் கண்டுபிடிப்பீர்கள்" என்று பதிலளித்தார். ஜெயாவால் அந்த வார்த்தைகளை மறக்க முடியவில்லை, ஒவ்வொரு நாளும் செல்ல, உலகத்தை, தன்னை ஆராயும் ஆசை வலுப்பெற்றது. கடைசியாக தன் அபிலாஷைகளை தன் கணவன் தில்லையிடம் தைரியமாக பகிர்ந்து, தன் முன்னைய தவறான புரிந்துணர்வு அற்ற செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாள். "தில்லை, என் அன்பே, நான் இப்ப உலகை, என்னை அறிகிறேன். எங்கள் ஊரை, கோயிலை தாண்டி உலகத்தை, குடும்பத்தை அனுபவிக்க விரும்புகிறேன். நான் உன்னை புரிந்து, உன்னுடன் நல்லிணக்கமாக வாழ, காதலிக்க விரும்புகிறேன். அதேநேரம் எங்கள் பாரம்பரியங்களை நிராகரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. நான் கற்றுக்கொண்டு வளர விரும்புகிறேன்," ஜெயா தீவிரமாக விளக்கினார். தில்லை முதலில் அதை நம்பவில்லை, ஆனால் ஜெயாவின் கண்களில் உறுதியைப் பார்த்தான். கண்கள் மட்டுமே இப்ப பேசின. "எங்கள் பாதைகள் வேறுபட்டாலும், விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு மூலம் ஒரு நல்லிணக்கம் வளர்த்து, நாங்கள் எப்போதும் இணைந்திருப்போம். நல்லிணக்கக் தணல் முழுமையாக எரிந்து தன் ஒளியை வீசட்டும்" என்று தில்லை ஜெயாவை அணைத்துக்கொண்டான். மெதுவாக, அவர்களின் மாறுபட்ட முன்னைய நம்பிக்கைகள் ஒன்றிணையத் தொடங்கின, மேலும் ஒருவருக்கொருவர் தனித்துவத்தைப் பற்றிய பகிரப்பட்ட புரிதலுடன் அவர்களின் காதல் ஆழமாக வளர்ந்தது. அவர்கள் ஒன்றாக உலக அதிசயங்களை அனுபவித்தனர். மாறுபட்ட மனப்பான்மை மற்றும் நம்பிக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளை அன்பினால் குறைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டி, அவர்களது நல்லிணக்கத்தின் தீக்குச்சிகள் பிரகாசமாக எரிந்தது. இறுதியில், கணவன் - மனைவி பாரம்பரியத்தால் மட்டுமல்ல, அவர்களின் பாதைகள் எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் மரியாதையின் வலிமையால் பிணைக்கப்படலாம் என்பதை அவர்கள் இருவரும் நிரூபித்து வாழ்ந்தார்கள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?"
"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?" / பகுதி:02 சைவ மதம் உலகின் ஒழுங்கு படுத்தப்பட்ட, பதியப்பட்ட சமய நெறியில் மிகவும் பழமை வாய்ந்ததாக அதன் வேர், 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சம வெளியில் சிவன் [பசுபதி] வழிபாட்டிலும் மற்றும் தாய் தெய்வ வழிபாட்டி லும், மேலும் அதன் சம காலத்தில் அல்லது அதற்கும் முந்திய காலத்தில், உலகின் முதல் நாகரிகமாக கருதப் படும் சுமேரிய நாகரிகத்தில் ஈனன்ன வடிவில் தாய் தெய்வ [அல்லது காளி] வழிபாட்டி லும் காணப் படு கிறது. அதே போல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தென் இந்தியா சங்க இலக்கியத்திலும் சிவா / சிவன் குறிக்கப் பட்டுள்ளது. இந்த மத நெறி திராவிடரினதும் மற்றும் ஆரியருக்கும் பிராமண வேதத்திற்கும் முற்பட்டதாகும். ”சிவன்” என்பது ”சிவ் + அன்” ஆகும். அதாவது, ”சிவ்” தன்மை யானவன் ”சிவன்.” ”சிவ்” என்பது ”ச் + இ + உ” ஆகும். இது ”மேன்மை (ச்) நிறைவு (இ) உயிர்ப்பு (உ) தன்மை” யாகும். மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை” யை நாம்: அன்பு, அருள், அறிவு, அறம், செம்மை, ஒளி, இன்பம், தூய்மை, அழகு, இன்பம், இனிமை, .... எனப் பலவற்றில் அடையாளப்படுத்த முடியும். ஆகவே, ”சிவன்” என்பது, அன்புமயமானவன், அருள் மயமானவன், அறிவன், அறமயமானவன், செம்மையானவன், ஒளிமயமானவன், இன்பமய மானவன், புனிதன், தூயவன், அழகன், இனியவன், .... என வெல்லாம் வரும். எனவே இவைகள் யாவும் ”சிவன்” என்பதன் ”பொருள்கள்” ஆகும். இறைவன் ஒருவனே, அவன் எல்லா வாழ்வுயிரிலும் மேம் பட்டவன், எங்கும் வியாபித்து உள்ளவன். அவர் இரக்கமானவர், அன்பானவர்.அவரது கருணை, எல்லா பாதிக்கப்பட்ட ஆன்மா மீதும் அவரது கிருபையால் பொழிகிறது. அவர் தூய அன்பு மற்றும் இரக்கம் உடையவர். எங்கும் நிலவியுள்ளார். மனிதனின் தூய்மையிலும் ஆன்மிக செயல்களிலும் மகிழ்ப்பவன் அவன். எனவே அப்படியான சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும், இயல்பாகவே, பரந்த நோக்குடையவர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள். "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று சைவ மதம் எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முது மொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. கணியன் பூங்குன்றனார் எனும் கவிஞன் புறநானூறு -192 இல் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்று அறைகூவல் ஒன்றை விடு கிறான். நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தைத் திறந்துகாட்டி விரிகடல்சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும், விழியும் ஒளியும் போல் மக்கள் எல்லாம் நம் உறவே என்றும் - புதிய வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்தான் அந்த கவிஞன்! "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆறாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே." மேலும் சைவ சித்தாந்தம் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்"என்று எம்மை வழி காட்டுகின்றது. எமது திருக்குறள், மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்ப முடனும் இசை வுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) எம்மை அறிவுறுத்துகிறது. என்றாலும் அவர், வாழ்வில் நிறைவு அடைதல் பற்றி ஒன்றும் கூறவில்லை. முப்பாலையும் கடந்தவன் தானாகவே தனது வாழ்வில் நிறைவு காண்பான் என்பதால் அதை சொல்லாமலே விட்டு இருக்கலாம்? இப்படி நாலு வாழ்க்கை நிலையைத்தான் சைவம் எமக்கு போதிக்கி றது. இங்கு கருத்து அற்ற சடங்குக ளுக்கும் கண்மூடித்தன மான நம்பிக்கைகளுக்கும் இடம் இல்லை. "வையத்து வாழ்வாங்கு" வாழவேண்டியதன் தேவையை வலியுறுத்து கிறது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது.. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று திரு மூலர் தனது திருமந்திரம் 2104 இல் கூறுகிறார். படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் ஒரே தன்மையை உடையன என்றும் இவை அனைத்து க்கும் ஒருவனே இறைவன் என்றும் சமரசம் காணுகிறார். இது சைவ சித்தாந்தத்தின் மையக் கருத்தாக அமைகின்றது. அது மட்டும் அல்ல, சைவ சித்தாந்த நெறியின் தாரக மந்திரமாகச் திருமந்திரம் 2962 "ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது" என்று கூறுகிறது. அதாவது உலக இயக்கத்துக்கு பேரொளிப் பிழம்பான ஒரு தெய்வம் உண்டு என்பதை அறிந்தீர். அந்த ஆண்டவன் உலகத்தை உயிர் போன்று இருந்து இயக்கு வதையும் அறிந்தீர் என்கிறது.வேறு எந்த சமயத்திலும் இப்படி பொதுவாக சமரசமாக கூறியது உண்டா?. இதனால் சைவம் எந்த வேறுபாடும் காட்டாமல் மக்களை இணைத்தது. இதை, இந்த தத்துவத்தை எந்த முற்போக்கு சிந்தனையாளனும் / பகுத்தறிவாளனும் எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்வான். மேலும் அன்பே கடவுள் என திருமந்திரம் போதிக்கிறது. “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயின் (Lev Nikolayevich Tolstoy) பிரபலமான வாசகம். நம்மாலான உதவியை அன்புடன் செய்திடும் பொழுது அவர்கள் உள்ளம் நிறையும், அப்போது நன்றிப் பெருக்கினால் அவர்களின் முகத்தில் சிரிப்பு தெரியும். அந்த வகையில் அன்பின் பெருமையை உலகுக்குச் சொன்ன வாசகம் இது. அந்த அன்பின் மகத்துவத்தினை திருமூலர் ’’அன்பு சிவம் இரெண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தொரு மறிகிலார்’’ என்று எவரும் இலகுவாக விளங்கக் கூடியதாக கூறு கிறார். அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவே இல்லாதவர்கள் என்றும் அன்பும்,சிவமாகிய இறை நிலையம் பிரிக்கவே முடியாதது என்றும், அன்புதான் சிவம் என ஆணித்தர மாக கூறுகிறார் திருமூலர். ஆகவே "அன்பே சிவம்", அதாவது அன்பு தான் கடவுள் என்பது, திருமூலர் விவரித்தவாறு, சைவ சமயத்தின் மையக்கருவாக உள்ளது. மறுபுறம், இந்து சமயம், ஆரியர்களின் இந்தியா வருகை யுடன் ஆரம்பிக்கப் பட்டது. அங்கு முக்கிய கடவுள்கள், உதாரணமாக இந்திரன் என்ற முதன்மைக் கடவுளும் , மற்றும் வருணன், அக்கினி, வாயு, மித்திரன், பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் போன்ற மற்ற கடவுள்களும் ஆணாக இருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இவர்களுடன் வேள்வியை அடிப்படையாகக் கொண்ட வழிபாடும், பிறப்பு அடிப்படையில் நால்வருண அடிப்படையில் ஏற்றத் தாழ்வுள்ள சமுதாயம் கொண்ட அமைப்பு முறை முன்னுக்கு வந்தது. வேள்விகளில் பசு, குதிரைகளைப் பலியிட்டு அவற்றையே உணவாக உண்டனர். சோம பானம் குடித்தனர். கி மு 1500 ஆண்டு அளவில் நான்கு வருண முறைகளில் வெற்றியாளர்களான ஆரியர் அல்லது பிராமணர் பிறப்பால் உயர்வானவராகவும், தோற்கடிக்கப் பட்ட திராவிடர், சூத்திர ராக அடிமைகளாகவும் ஆக்கப்பட்டனர். ஆகவே, இந்த ஆரிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் அதுவும் ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் எனவும் கட்டுப் படுத்தப் பட்டது. இதனால், பின்னர் பிராமணீயம் இந்தியாவில் மேலோங்கி வளர்ந்தது. ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று இவர்களால் அழைக்கப்பட்டார்கள். உதாரணமாக ‘தாசர்’ என்ற சொல்லுக்கு ‘ஊழியன் அல்லது அடிமை’ என்று அர்த்தமாகும். மனு ஸ்மிருதியில் (viii, 413) பிராமணர்களுக்கு சேவை (தாசியா) புரிவதற்காக சூத்திரர்கள் கடவுளால் உருவாக்கப்பட்ட வர்கள் என்று சொல்லப்படுகிறது. எனினும் தொடக்கத்தில் அவர்களின் சமூக படிநிலை வேலையின் அடிப்படையில் அமைந்தது போல் தெரிகிறது. ஆகவே வேலை மாறும் போது அவர்களின் சமூக படிநிலையும் மாறக் கூடியன வாக இருந்தன. என்றாலும் காலப் போக்கில், அவை பிறப்புடன் இணைக்கப் பட்டதால், அவை நிரந்தரம் ஆகிவிட்டன. இந்த ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கால் நடைகளுடன் கைபர் போலன் கணவாய் வழியாக குதிரைகளில் கைகளில் இரும்பு ஆயுதங்க ளுடன் இந்தியாவிற்குள் வந்தவர்கள். அப்போது இங்கு பெரிய நாகரிகம் ஒன்று இருந்தது. அது தான் திராவிடர்களின் நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் ஆகும். அவர்களை தமது பலத்தால் வென்ற ஆரியர்கள், கி மு 1500–1000 அளவில், எங்களுக்கு செல்வத்தைத் தா, எங்கள் விரோதிகளிடமிருந்து எம்மை காப்பாற்று போன்ற கெஞ்சும் பாடல்களும், மேலும் சடங்குகளைப் பற்றியும், அப்போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்களும் மற்றும் பல்வேறு கடவுள்களைப் புகழ்ந்தும் அவர்களின் புரோகிதர்கள் பாடினார்கள். இவைதாம் ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் போன்றவை ஆகும். அதன் பின் அவர்கள் கி மு 700–500 ஆண்ட ளவில் உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) தொகுக்கப் பட்டன. இந்த ஆரியர்கள் தம்முடன் ஒரு புதிய மொழியையும் , தந்தை வழி சமுதாய அமைப்பையும் கொண்டு வந்தனர். இதனால் ஆண் குழந்தை பிறப்பு ஒரு தனி வரவேற்பையும் பெற்றது. இவர்களின் சமயம் மற்றும் வர்ணாசிரமத்தில் இருந்து ஒரு புதிய சமூக ஒழுங்கு உருவாக்கப் பட்டது. இவை அனைத்தும் அடிப்படையாக அமைத்தே இந்து சமயம் முதலில் ஆரியர்களால் கட் டமைக்கப் பட்டன. எப்படியாயினும் பின்னர் சில திராவிடர் நம்பிக்கையையும் உள் வாங்கி,திராவிட நாட் டார் தெய்வங்களையும் ஆரிய மயமாக்கி இந்து சமயம் இன்றைய நிலையை அடைந்தது எனலாம்? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:03 தொடரும்.