Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"உணவூட்டம் சமநிலை பெறுமா....!"
"உணவூட்டம் சமநிலை பெறுமா....!" "உணவூட்டம் சமநிலை பெறுமா இன்று உடல்நலம் தேர்ச்சி அடையுமா நாளை! உள்ளம் கேட்குதே கொஞ்சம் சொல்லாயோ உண்மை உரைத்து விளக்கம் தருவாயோ!" "ஆரோக்கியம் என்றும் ஒரு புதையல் ஆரவாரம் முழங்காத மனித நலமே! ஆற்றல் தரும் ஊட்டச் சத்து ஆக்கம் அளிக்கும் உணவு மருந்தே!" "பச்சையிலை பழங்கள் பருப்பு கலந்து பற்பல கொழுப்புக்கள் சீனி தவிர்த்து பதப்படுத்தா இயற்கை ஈன்ற சாப்பாடு பக்குவமாய் சுவை ஊட்டிய அமுதமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
ஆதியும் அந்தமும் கவிதை [துன்பம் / பிரிவில்லையே]
ஆதியும் அந்தமும் கவிதை [துன்பம் / பிரிவில்லையே] "துன்பம் ஒன்றும் புதிது எனக்கல்ல இன்பம் என்றும் நிலைத்ததும் அல்ல! விண்ணில் பறந்தது நிலத்துக்கு விழும் மண்ணில் முளைத்தது மேகம் நோக்கும்!" "காதல் கொண்டேன் அவளை நம்பி மோதல் தந்து பிரிந்து போனாள் சாதல் தேடி குதித்தும் பார்த்தேன் நோதல் தந்தும் உயிர் பிரிவில்லையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பொண்டாட்டி ராஜ்ஜியம்"
"பொண்டாட்டி ராஜ்ஜியம்" இலங்கையின் வடமாகாணத்தில் ஒரு அமைதியான புறநகர் பகுதியில், அகிலா மற்றும் துகிலன் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக மகிழ்ச்சியாக, அவர்களின் காதலின் அடையாளமாக ஒரு அழகிய பெண் குழந்தையும் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். என்றாலும் நாளடைவில் மூடிய கதவுகளுக்குப் பின்னால், ஒரு இருண்ட மற்றும் ஒரு 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' மெல்ல மெல்ல தலை தூக்க தொடங்கியது. அகிலம் எல்லாம் தன் கையில் என்ற ஒரு திமிர் அகிலாவிடம் வளர்ந்துவிட்டது. துகிலன் அவளின் காதலிலும் அழகிலும் தன்னை இழந்து, அதை கவனிக்காமல் தூங்கி விட்டான் போலும்! இதைத்தான் தலையணை மந்திரம் என்கிறீர்களா? அகிலா ஒரு வலுவான விருப்பமும் உறுதியும் கொண்ட பெண். அவள் தனது கவர்ச்சியான பேச்சு ஆற்றலாலும் மற்றும் கூரிய புத்தியாலும் கணவரான துகிலனை விட பதவி உயர்வு பெற்று அதிகமாக சம்பாதிக்க தொடங்கினாள். காலப்போக்கில், அவள் கணவன் துகிலனை ஒரு பொருட்டாக கருதாமல், அவனை மதிக்காமல் தான் நினைத்தபடி குடும்பத்தை ஆளத் தொடங்கினாள். பொண்டாட்டி ராஜ்ஜியம் முளைவிட ஆரம்பித்தது! துகிலனின் கருத்துகளையும் உணர்வுகளையும் கருத்தில் கொள்ளாமல் பெரிய மற்றும் சிறிய அனைத்து முடிவுகளையும், செயல்களையும் அவள் தன்பாட்டில் எடுக்க தொடங்கியதுடன், துகிலனை தன் விருப்பத்திற்கு இணங்கி நடக்க கட்டாயப் படுத்தினாள். மறுபுறம், துகிலன் ஒரு கனிவான மற்றும் மென்மையான ஆன்மாவாக இருந்தான். அதனால் அகிலா தன் ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவதில் அவளுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. துகிலன் அவளின் கொஞ்சலான பேச்சிலும் உடல் அழகிலும் முழுமையாக தன்னைப் பறிகொடுத்ததால், அவளின் மாற்றத்தை, போக்கை அவன் ஆரம்பத்தில் பெரிதுபடுத்தவில்லை. தன்னுடைய சம அதிகாரத்தை உறுதிப்படுத்துவதை விட இணக்கமான வீடு முக்கியமானது என்று நம்பினான். அதனால் வேலை முடிந்ததும் வீட்டிலேயே தங்கி அவர்களின் இளம் மகள் எழிலியை கவனித்துக்கொள்வதிலும், அவளுடன் விளையாடுவதிலும் கூடிய கவனம் செலுத்தினான். துகிலன் ஒரு கனிவான, அடக்கமான மற்றும் கடின உழைப்பாளியாக சாதாரண வாழ்வை விரும்புபவனாக இருந்தாலும் அகிலா அதற்கு மாறாக சிறந்த உணவுகள், மிகவும் ஆடம்பரமான ஆடைகள் மற்றும் ஆடம்பரமான நகைகளை விரும்புபவளாகவும், தொழில் நிலையத்தின் உயர் பதவியில் உள்ளவர்களுடன் நெருங்கி பழகுவதிலும் ஆர்வம் உள்ளவளாக தனது வாழ்வை அமைக்க தொடங்கினாள். அதனால் சிலவேளை நியாயமற்ற கோரிக்கைகளையும் துகிலனிடம் கட்டளையிடுவாள். தொடக்கத்தில் துகிலன் அதை கண்டும் காணாமல் இருந்தாலும், வருடங்கள் செல்ல செல்ல, அகிலாவின் கட்டுப்பாடு துகிலனை பாதிக்க ஆரம்பித்தது. அவன் தனது சொந்த குடும்பத்திலேயே ஒரு கீழ்ப்படிந்தவராக மாறுவதை உணர்ந்தான். அது மட்டும் அல்ல, அகிலா நேரத்துடன் வீட்டிற்கு வருவதும் குறையத் தொடங்கியது. தனக்கு ஒரு மகள் வீட்டில் இருக்கிறாள் என்பது கூட சிலவேளை மறந்தவள் போல் அவள் நடவடிக்கை இருந்தது. குடும்பத்தின் நிதி தேவைகள், குழந்தை வளர்ப்பு அல்லது வீட்டு விடயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டாள். அவளின் பொண்டாட்டி ராஜ்ஜியத்தில் கணவனுக்கு அது முழுவேலையாக மாறிவிட்டது. அதனால் எழிலியும் தன் தந்தையை சக்தியற்றவராக பார்க்கத் தொடங்கினாள், இது தான் துகிலனை தன் சம அதிகாரத்தை சவால் செய்ய வழிவகுத்தது. ஒரு ஞாயிறு மாலையில், துகிலனைக் கலந்தாலோசிக்காமல், துகிலன் மற்றும் எழிலியை அவர்களது பழக்கமான சூழல்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து வேரோடு பிடுங்கி, தனது தொழில் வாழ்க்கைக்காக, கொழும்புக்கு போக அகிலா முடிவு செய்தாள். துகிலன் தனது வேலை மற்றும் மகளின் நிலையை தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தபோது, அகிலா அவனது கவலைகளை ஒதுக்கித் தள்ளியதுடன், துகிலனை இனி வீட்டில் முழுநேரமாக இருந்து மகளையும் வீட்டையும் கவனிக்கும் படியும் இது குடும்பத்திற்கு சிறந்த நடவடிக்கை என்றும் வலியுறுத்தினாள். அவளது ராஜ்ஜியத்தில் தான் ஊமையாக இருந்ததின் பலனை கண்டு, அவனுக்கு தன் மேலேயே கோபம் கோபமாக வந்தது. துகிலன் இப்ப ஒரு முறிவுப் புள்ளியை அடைந்துவிட்டான். அகிலாவை அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்த தொடர்ந்து அனுமதித்தால், அவர்களது குடும்பம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்காது என்பதை அவன் உணர்ந்தான். எனவே, அவன் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு அகிலாவுடன் பேசத் தொடங்கினான். அவன் அமைதியாக தனது உணர்வுகளையும் கவலைகளையும் அவளுக்கு விளக்கினான், அதுமட்டும் அல்ல நாம் ஒரு குடும்பம் என்றால் முடிவுகளை கூட்டாக ஒன்றாக எடுக்க விரும்புவதாக அவளிடம் கூறினான். அப்படி இல்லை என்றால் நான் என் மகளுடன் உன்னை விட்டு பிரிவதே மேல். நீ தனியாக உனக்கு வேண்டிய ஆட்டத்தை ஆடலாம் அல்லது நீ உனக்கு, உன் எண்ணத்துக்கு ஏற்ற புது வாழ்வை தேடிக்கொள்ளலாம். நான் தடையாக இருக்கமாட்டேன். ஆனால் என் மகளை உன்னிடம் விடமாட்டேன். அவள் ஒரு பண்புள்ள மகளாக வளரவேண்டும். அவன் உறுதியாக கூறிவிட்டு மகளையும் தூக்கிக்கொண்டு சமையல் அறைக்கு போய்விட்டான். எப்படியாயினும், அகிலாவால் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்றாலும் துகிலனின் புதிய உறுதிப்பாட்டால் அவள் கொஞ்சம் அச்சம் அடைந்தாள். துகிலன் தவறாக தனது நடவடிக்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டினாள். அவர்களது காரசாரமான வாக்குவாதம் அதிகரித்தது, துகிலன் தனது விரக்தியில், தனது மனதை புண்படுத்தும் மற்றும் கொடூரமான விடயங்களைக் துணிந்து எடுத்துக் கூறினான், ஒரு தந்தை மற்றும் கணவராக அவன் தனது பங்கைக் சரியாகக் நேர்த்தியாகக் கையாண்டான். இறுதியில், ஒரு குடும்பத்தில் ஒரு தலைவனாக தலைவியாக இருப்பது என்பது அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பயன்படுத்துவதைக் குறிக்காது என்பதை அகிலா உணரத் தொடங்கினாள். உண்மையான தலைமைத்துவம் என்பது அனைவருக்கும் பயனளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கு கணவனும் மனைவியும் பிள்ளைகளுடன் சேர்ந்து செவிமடுப்பது, மதிப்பது மற்றும் வேலை செய்வதாகும் என்பது அவளுக்கு புரிந்தது. அவள் முதல் முறையாக அழுதுகொண்டு கணவனையும் மகளையும் கட்டி அணைத்தாள். பொண்டாட்டி ராஜ்ஜியம் இன்னும் ஒரு கோணத்தில், ஒரு தலைவனின் தலைவியின் அடக்குமுறை ஆட்சியின் கீழ் இல்லாமல், ஒரு அணியாக எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக, முன்னைய இருண்ட ராஜ்ஜியத்தில் இருந்து விடிவு பெற்றது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"விதை"
"விதை" "விதை விதைத்தவன் வினை அறுப்பான் விளைச்சல் தந்தால் பொருள் ஈட்டுவான் வித்து மடிந்தால் விம்மி அழுவான்!" "வாழ்வும் சாவும் மனித வயலில் தாழ்வும் உயர்வும் வளரும் பக்குவத்தில் விதைப்பு சரியாகட்டும் இதயம் செழிக்கட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
ஹைக்கூ கவிதைகள்: "துயிலுமில்லம்", "தமிழர் பாரம்பரியம்" & "காட்சிக்கேற்ற"
ஹைக்கூ கவிதைகள்: "துயிலுமில்லம்", "தமிழர் பாரம்பரியம்" & "காட்சிக்கேற்ற" "துயிலுமில்லம்" "கார்த்திகை திங்கள் தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் துயிலும் இல்லங்கள்" அல்லது "துயிலுமில்லம் ஆலயமே தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் இன்று கார்த்திகை " [எடுத்துக்காட்டு: மாவீரர்களின் நினைவுகள் கண்களைக் கலங்க வைக்கின்றன சிதைக்கப்பட்ட கல்லறைகள் - முல்லை நிரோயன்] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................... "தமிழர் பாரம்பரியம்" "பெருமை பேசும் பாரம்பரியம் மனதில் பதியட்டும் நாட்டில் வாழட்டும்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................ "காட்சிக்கேற்ற ஹைக்கூ கவிதை" "அலையைக் கிழித்து ஓடத்தில் நிற்கும் சமநிலை விளையாட்டின் திறமை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"காதல் பரிசு"
"காதல் பரிசு" இலங்கையின் பரபரப்பான நகரமான கொழும்பில், நெடுங்குழலி என்ற தமிழ் பெண்ணும் அஜந்தா என்ற சிங்கள வாலிபனும் பக்கத்து பக்கத்து வீட்டில் மட்டக்குழி என்ற இடத்தில் வாழ்ந்து வந்தனர். நெடுங்குழலி உயர் வகுப்பில் தமிழ் மொழியிலும், அஜந்தா சிங்கள மொழியிலும் கல்வி கற்றுக்கொண்டு இருந்தாலும், இருவரும் தாராளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர்களாகவும் இருந்ததால், அவர்களுக்கிடையில் ஒரு நட்பு இலகுவாக எற்பட்டது. தங்கள் பாடங்களைப்பற்றி ஒருவருக்கொருவர் அலசுவதுடன் நாட்டு நடப்புகள் பற்றியும் விவாதிக்க தவறுவதில்லை. அவர்களுக் கிடையில் மலர்ந்த புரிந்துணர்வுகள் அவர்களின் சமூகம் வெவ்வேறாக இருந்தாலும், அவ்வற்றைத் தாண்டி, நாம் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் பின்னிப்பிணைந்து வலுவடைந்தன. அஜந்தா இயற்கையாகவே கனவுகள் நிறைந்த இதயம் கொண்ட திறமையான இளம் கலைஞராகவும், அதேவேளை இரக்கமுள்ள ஒரு சமூக சேவகியாகவும் படிப்பில் திறமைசாலியாகவும் நெடுங்குழலி இருந்தாள். இருவரின் திறமைகள் வித்தியாசமான வாழ்க்கைப் பாதையை கொண்டு இருந்தாலும் அந்த வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை அவர்களிடம் காணப்பட்டது. இருவரும் தங்கள் பாதையை இன மத ஒற்றுமையை மையமாகக் கொண்டு செயல்பட்டதே ஆகும். ஆமாம் அவர்களின் உலகங்கள் தனித்தனியாக இருந்தன, ஆனால் விதி அவர்களுக்காக ஒரு அழகான திட்டத்தை வைத்திருந்தது. "அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய், அரம்போழ் அவ்வளைக் குறுமகள் நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!" அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கொற்கை நகரத்தின் கடற்கரை. அங்கே கிடைக்கும் முத்துகளைப் போன்றவை நெடுங்குழலியின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்ததுபோன்ற அழகான வளையல்களை அவள் அணிந்திருப்பாள். யாழ் நரம்பு ஒலிப்பதுபோன்ற இனிய சொற்களைப் பேசுவாள் இப்படித்தான் அஜந்தா தன் கலைத் திறன் களுக் கூடாக அவளைக் கண்டு தன் மனதை பறிகொடுத்தான். சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி, அதை அடிக்கடி கையால் 'ஸ்டைலாக' கோதிக்கொண்டு அஜந்தா ஆண்மை மிடுக்குடன் முறுக்கேறிய வல்லமைகொன்ட தசைகளும் நேர் கொண்ட கூரிய விழிகளும் சேர நடந்து போகும் அழகு, நெடுங்குழலியையும் கொள்ளை கொண்டதில் எந்த அதிசயமும் இல்லை. 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்', கதைதான் அவர்களை இணைத்த காதல் கதை! மெல்லிசைகளிலும் ஓவியங்கள் வரைவதிலும் இயற்கையாக கொண்ட ஆர்வத்தை அஜந்தா இன ஒற்றுமைக்காக அர்ப்பணித்து, சில சக மாணவர்களின் பங்குபற்றுதலுடனும், சில ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும் தனது பாடசாலையில் ஒரு கலைக் கண்காட்சி நடத்தினான். அது கலை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தடன், முக்கியமாக கொழும்பு வாழ் தமிழ் மக்கள், அஜந்தாவை கௌரவித்து செய்தியும் விட்டனர். அந்த நிகழ்வில், தமிழ் பாடசாலை மாணவ மாணவிகளின் சார்பாக நெடுங்குழலி ஒரு பேச்சும் வழங்கினார். மகாவம்சத்தின் காலத்திற்கு முன்பே, இலங்கை தென்னிந்தியாவைப் போன்ற ஒரு கலாச்சாரத்தை அனுபவித்தது மற்றும் அந்த பழங்காலத்தவர்கள் தற்போதைய சிங்கள மற்றும் தமிழர்களின் முன்னோடிகளாக இருந்தனர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. இந்தப் பழங்காலத்தவர்களுக்கு இன வேறுபாடுகள் இல்லையென்றாலும் கலாச்சார வேறுபாடுகள் மட்டுமே இருந்ததாக பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க கூறியுள்ளார் என்பதை அவள் எடுத்துக்காட்டியதுடன் இந்த வேறுபாடுகள் விஜயன் என்று மகாவம்சத்தில் அழைக்கப்படுபவர் இலங்கைத் தீவுக்குச் செல்வதற்கு முன்பே இருந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார். பண்டைய கற்கால மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைப் பழக்கங்களை ஆராய்ந்தால், அவர்கள் தங்கள் பெயர்களையோ அல்லது மண் பானைகள் மற்றும் பாத்திரங்களை வடிவமைத்தவர்களின் பெயர்களையோ பொறிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இந்தப் பழக்கம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் அன்றைய காலகட்டத்தில் இருந்ததாகக் காணப்படுகிறது. இந்தப் பழக்கம் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. தமிழ்நாட்டிலும் அனுராதபுரத்திலும் மண் பானைகளில் இந்த எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அநுராதபுர பானைகள் 2750 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தைச் சேர்ந்தவை. பானைகளில் உள்ள எழுத்துக்கள் தமிழ் மொழியில் தமிழ் எழுத்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தன் பேச்சை முடிக்கும் பொழுது, அஜந்தாவின் திறமையையும் போற்றி அவனுக்கு ஒரு பூக் கொத்தையும் வாழ்த்தி கொடுத்தார். இதுவரை கண்களும் கண்களும் சந்தித்த அவர்கள், பூக்கொத்து கொடுக்கும் பொழுது இருவரின் கைகளும் தெரிந்தோ தெரியாமல் சந்தித்தன. அப்பொழுது அவள் மனது கொஞ்சம் படபடத்தது, கண்கள் கூசி தரையை நோக்கினாள். 'நாமிருவர் பூப்போல் மணம் போல் இருள் மாற்றும் இன்ப நிலாப் போல் குளிர்போல் ஒருமித்தல் வேண்டும்' என்று தனக்குள் முணுமுணுத்தாள். அவன் கூடத்தில் உள்ளவர்களையே மறந்து அவளையே, கண் வெட்டாமல் ஒரு கணம் பார்த்தான். அவளின் எழிலைத் தன் மனதில் காணாக்கண்டான். "தேனைப் போல் மொழியுடையாள்; அன்றலர்ந்த செந்தாமரை போல் முகத்தாள் கெண்டை மீனைப் போல் விழியுடையாள் விட்டதிர்ந்த மின்னைப்போல் நுண்ணிடையாள்! கொண்ட வானைப் போல் உயர்வாழ்வு வாய்ந்தாள்" என்று உவமைகள் சேர்த்து அதில் இன்பம் கண்டான்! அடுத்தநாள் பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகளில் அவளின் பேச்சு முதன்மையாக இடம் பெற்றதுடன், சில செய்தி நிறுவனங்கள், மகாவம்ச புராணக் கதையை முதன்மை படுத்தி, நெடுங்குழலி கொழும்பில் இருந்து கொண்டு மகாவம்சத்தை அவமதிக்கிறாள் என்று திரித்து செய்திகளை பரப்பின. அவர்களின் உள்நோக்கத்துக்கு துணையாக சில மத தலைவர்கள், சில அரசியல்வாதிகள், சில குண்டர்கள் ஒன்று சேர்ந்து அவள் வீட்டை முற்றுகை யிட்டு, அவளுக்கு எதிராக முழக்கம் செய்தனர். நல்லவேளை அஜந்தா நேரத்துடன் அதை உணர்ந்து நடவடிக்கை எடுத்து, அவளையும் அவளின் குடும்பத்தையும் ஒரு பாதுகாப்பான இடத்தில், வீட்டின் பின்பக்கமூடாக கூட்டி சென்றுவிட்டான். என்றாலும் அவர்களின் வீடு தாக்கப்பட்டு உடைக்கப்பட்டன. அஜந்தாவினதும் நல்ல இதயம் கொண்ட அயலவர்களின் வேண்டுதலுக்கும் செவிசாய்த்து, கொஞ்ச நாள், ஆரவாரம் அடங்கும் மட்டும் யாழ்ப்பாணம் போக முடிவு செய்தனர். அது தான் இருவரும் சந்திக்கும் கடைசிநாள் என்று அப்பொழுது அவர்களுக்கு தெரியாது. அஜந்தா தன் நினைவாகவும் காதல் பரிசாகவும் ஒரு அழகிய கவர்ச்சிகரமான பொம்மை கரடியை அவளுக்கு அன்பளிப்பாக கொடுத்து, பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தான். நெடுங்குழலியும் அவளின் குடும்பத்தினரும் யாழ் நகரில் தற்காலிகமாக இருக்கும் அந்த தருணத்தில், தந்தைக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கவும், நெடுங்குழலி உயர் வகுப்பில் அதி கூடிய சிறப்பாக சித்தியடைந்த மறுமொழிவரவும், லண்டனில் உள்ள பழமையானதும், பெரியதுமான, 1826 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இங்கிலாந்திலேயே முதன்முறையாக சுதந்திரமாக செயல்பட்ட கல்வி நிறுவனமான இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி அவளுக்கு புலமைப்பரிசும் கொடுக்கவும், அஜந்தாவுக்கு கடிதம் மூலம் அந்த செய்தியை அனுப்பிவிட்டு, கொழும்புக்கு போய், மீண்டும் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, நேரடியாக விமான நிலையம் யாழில் இருந்து சென்றார்கள். அவர்களின் எண்ணம் எல்லாம் அஜந்தா விமான நிலையம் வருவான் என்றே! ஆனால் அவன் வரவே இல்லை, ஏன், என்ன நடந்தது ஒன்றும் அவர்களுக்குப் புரியவில்லை. விசாரிக்கவும் நேரம் பெரிதாக இருக்கவில்லை. அவளின் கையில், அவளின் கண்ணீர் மழையில் நனைந்தபடி, அவனின் 'காதல் பரிசு' பொம்மை கரடி இன்னும் இருக்கிறது. அவளுடன் சேர்ந்து அதுவும் லண்டன் பயணம் சென்றது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"திருக்குறள்" [அந்தாதிக் கவிதை] & "ஊடல்" [அந்தாதிக் கவிதை]
"திருக்குறள்" [அந்தாதிக் கவிதை] & "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "திருக்குறள் சொல்லாதது ஒன்றும் இல்லை இல்லை என்போருக்குப் 'பொருள்' கூறி கூறிய தொடர்ச்சியாக 'அறம்' உரைத்து உரைக்கும் தொனியில் 'இன்பம்' சேர்த்து சேர்த்து கோர்த்து 'ஈரடி'யாய் சிறப்பித்து சிறப்பித்து தமிழுக்குத் தந்தான் திருக்குறள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................................... "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "ஊடல் இருந்தால் வரும் கூடல் கூடல் வந்தால் சுரக்கும் இன்பம் இன்பம் எல்லை மீறினால் துன்பம் துன்பம் உனக்கு புகட்டுவது அறிவு!" "அறிவு கொண்டு சிறப்பித்தல் வாழ்வு வாழ்வு வாழ்வதில் பிறக்கட்டும் பெருமை பெருமை என்றும் சேர்க்கட்டும் புகழ் புகழ் வாழ்வுடன் நீங்கட்டும் உயிர்!" "உயிர் எடுத்த பிறவிகள் எல்லாம் எல்லாம் பகிரட்டும் சமதர்மம் ஓங்கட்டும் ஓங்கட்டும் அன்பு, தவிர்க்கட்டும் மோதல் மோதல் வந்தால் பிறக்குமே ஊடல்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தீர்ப்பு"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"தீர்ப்பு"
"தீர்ப்பு" இந்தியப் பெருங்கடலின் நீலமான அலைகள் மற்றும் இலங்கையின் செழிப்பான பசுமைக்கு மத்தியில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரமான காலியில், பிரகாசமான கண்களை தன்னகத்தே கொண்ட லோசனி என்ற இளம் பெண்ணும் மற்றும் இரக்கமும் அழகுமுடைய அன்பழகன் என்ற வாலிபனும் ஆழமாக ஒருவரை ஒருவர் காதலித்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆயினும், அவர்களின் காதல் குளிரான கடற்கரை காற்றில், நிலாவின் மங்கலான ஒளியில், பண்டைய காலி கோட்டையின் எதிரொலிக்கும் சுவர்களுக்குள் மலர்ந்தது. லோசனி ஒரு சிங்கள பெண், அவளது சிரிப்பு பாறைக் கரையில் மோதும் அலைகளைப் போல இனிமையாக இருக்கும். அதில் சிலைத்து சிதைந்து விழுந்தவன் தான் தமிழ் வாலிபன் அன்பழகன். அவளது மழலை பேச்சும், வெண்ணிற வானில் கருநிற நிலவாய் எட்டு திசையும் அசைந்து கவரும் அவளது மையிட்ட கண்களும், பட்டம்பூச்சியின் சிறகுகள் போல கண்ணிமைகள் படபடத்து அவனை அழைக்க, அவனது நெஞ்சம் தன்னை அவளிடம் பறிகொடுத்தது ஒன்றும் புதுமை இல்லை. அமைதியான அவனின் இதயத்தில் இதமான தேவதையாக அவள் குடியேறினாள். பல மாதங்களாக, அவர்களின் காதல் இன எல்லைகளைத் தாண்டி, வளமாக வளர்ந்து வந்தது. ஆனால், சூரியன் மேற்கில் மறைவது போல, நீண்ட நிழல்களை வீசுவது போல, அவர்களின் வாழ்க்கையின் மீது இருண்ட நிழலைப் போடும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் ஆழமான இன வெறியை கக்கும் பதட்டங்களைத் தூண்டியது. திடீரென்று, அவர்களின் காதல் கதை அரசியல் முரண்பாடு மற்றும் சமூக அமைதியின்மையின் சூறாவளியில் சிக்கியது. உண்மையில் பக்க சார்பு அற்று தீர்வைத் தருவது - தீர்ப்பு! பொதுவாக ஒரு பிரச்சினை, சிக்கல் முதலியவற்றை தீர்க்கும் வகையில் அதனை ஆராய்ந்து - முடிவு காணும் வகையில் அமையும் நீதியான வழிமுறை - தீர்ப்பு!! என்றாலும் "யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்" என்ற 1983 இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனாவின் தீர்ப்பு அதற்கு முரணாக ஏற்கனவே எரியும் நிலக்கரியில், இரும்பு காலணிகள் கொண்டு வரப்பட்டு, அவற்றை இடுக்கிகளால் பிடித்து, சிவப்பு-சூடான காலணிகளை தமிழருக்கு முன்னால் வைக்கப்பட்டது போல அது மாறி விட்டது. உயர் வல்லமையான ஜனாதிபதியின் இந்த தீர்ப்பு இப்படி இருக்கும் பட்சத்தில், மற்ற அரச இயந்திரங்களின் செயல்கள், தீர்ப்புக்கள் எப்படி இருந்து இருக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை. ஒரு காலத்தில் துடிப்பான நகரம் இப்போது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல பிரிக்கப்பட்டுள்ளது. சிங்களக் கலாச்சாரத்தில் வேரூன்றிய லோசனியின் குடும்பம், அன்பழகனுடனான தங்கள் மகளின் உறவைப் பற்றி எச்சரிக்கையாக இருந்தார்கள். அன்பழகனின் குடும்பமும் அதே போல தங்கள் மகனின் பாதுகாப்புக்கு பயந்து, லோசனியிடமிருந்து தூர விலக்குமாறு வற்புறுத்தினார்கள். கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், எந்த குழப்பமும் தங்கள் காதலை வரையறுக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். "சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப் பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன் கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல ருள்ளம் படர்ந்த நெறி. " பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும்,பெண்மானும் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான், தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண்மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. இப்படித்தான் அவர்களின் அன்பு இருந்தது. அங்கு நாம் மனிதர், நாம் இலங்கையர் என்ற ஒரு எண்ணமே ஓங்கி இருந்தது. ஆனால் இனங்களுக்கு இடையான பிரிவுகள் ஆழமாக வளர, கஷ்டங்களும் அதிகரித்தன. நண்பர்கள் எதிரிகளாகவும், சந்தைகள் போர்க் களங்களாகவும் மாறத் தொடங்கின. இதனால் அவர்களின் காதல் கூட இலக்காக மாறியது. இந்த சுழலில் சிக்கிய, லோசனியும் அன்பழகனும் ஒருவருக்கொருவர் என்ன செய்வது என்று, ஆளுக்கு ஆள் ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டாலும், அது அவர்களின் கையில் இருந்து விலகுவதை உணராமலும் இருக்கவில்லை. எனினும் தங்கள் காதல் பிளவுகளைக் குறைக்கக்கூடிய ஒரு எதிர்காலத்தை அவர்கள் கனவு கண்டார்கள், அங்கே தங்கள் குழந்தைகள் ஒரு ஐக்கிய நாட்டில் வளரும் என்று நம்பினார்கள். எது என்னவாகியினும் ஒரு இனவாத அரசியல் தலைவரின் தலைமையில் பொய் வதந்திகளால் உந்தப்பட்டு, அதனால் கோபத்தாலும் தப்பெண்ணத்தாலும் ஒரு கும்பல் அன்பழகனின் குடும்பத்தாரின் வீட்டைத் தாக்கிய ஒரு மோசமான நிகழ்வு ஒருநாள் வந்தது. அவர்களின் வீட்டைச் சூழ்ந்த தீப்பிழம்புகள் அவர்களின் கனவுகளை எரித்த நெருப்பாகியது. அன்பழகன் தன் உயிருடன், ஆனால் எரிகாயங்களுடன் தப்பித்துக்கொண்டான், லோசனி உடைந்து போனாள், அன்பழகனின் மீதான காதலுக்கும் அவள் குடும்பத்தின் மீதான பொறுப்புக்கும் இடையே அவளது இதயம் துண்டு துண்டாக கிழிந்தது. 1956 ஆம் ஆண்டில் சாலமன் பண்டாரநாயக்கா சிங்கள மொழியை நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக, அரசின் தீர்ப்பாக கொண்டுவந்து ஆரம்பித்த அரசியல் நாடகம், இன்று பல அரசியல் தீர்ப்புக்களை கடந்தும், உண்மையான இலங்கை மக்களுக்கு முடிவு இன்றி , தீர்ப்பு இன்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் சிரிப்பால் எதிரொலித்த தெருக்கள் இப்போது வலி மற்றும் அநீதியின் அழுகையால் எதிரொலிக்கின்றன. பிரிவினைகள் மிகவும் ஆழமாக வளர்கின்றன, மிக அழகான பிணைப்புகள் கூட இன்று உடைகின்றன. அதில் லோசனி, அன்பழகனின் காதல் படகு, காகித படகாக மாறும் நிலைக்கு புறசூழல்கள் அதிகரிக்கக் தொடங்கின. அழிவின் மத்தியில், லோசனியும் அன்பழகனும் ஒரு சந்தியில் எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் தவித்தனர். ஒரு காலத்தில் அவர்களின் பலமாக இருந்த காதல் இப்போது ஒரு இனம் சார்ந்த மாயையில் அகப்படுவதை கண்டனர். கனத்த இதயத்துடன், தங்களைச் சுற்றியுள்ள உலகம் இன்று மிகவும் மாறிவிட்டது என்பதை உணர்ந்தார்கள், பல இனவாத உயர் தலைமைகளால் தீர்ப்பு வழங்கி, இன்று உடைந்த ஐக்கியத்தை, அவர்களின் அன்பால் மட்டுமே சரிசெய்ய முடியாது என்னும் உண்மையை அறிந்து, அவர்கள் பிரிந்து செல்வதற்கான வேதனையான முடிவை எடுத்தார்கள். அது அவர்களின் காதல் பலவீனமடைந்ததால் அல்ல, மாறாக வெறுப்பு மற்றும் தப்பெண்ணத்தின் சக்திகள் வலுவாக பல பல அரசியல் உயர் தலைவர்களின் தீர்ப்புக்களால் வளர்ந்ததால்! அவர்கள் ஒருவரையொருவர் கடைசியாகப் பார்த்தபோது, இன்றைய வெறுப்பு அரசியலின் மீது காதல் வெற்றி பெறும் எதிர்காலம் விரைவில் வரும் என இருவரும் கிசுகிசுத்தனர். லோசனியும் அன்பழகனும் தங்கள் காதலின் நினைவுகளையும், கடந்த கால பாடங்களையும் சுமந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை காலியிலும் யாழ்ப்பாணத்திலும் இன்று நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர். தீர்ப்பின் நிழல்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு நீண்ட மற்றும் இருண்ட காலத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவர்கள் துன்பங்களை எதிர்கொள்வதில் அன்பின் சக்திக்கு ஒரு சான்றாக இருந்தனர். காலப்போக்கில், ஒரு புதிய தலைமுறை தோன்றும், தங்கள் தேசத்தின் கதையை மீண்டும் எழுதும், பிளவுகளை சரிசெய்யும் , கடந்த காலத்தின் கடுமையான தீர்ப்புகளால் காதல் இனி ஒருபோதும் கெட்டுவிடாது என்பதை உறுதிப்படுத்தும் என்பதில் இருவரும் இன்னும் மனம் தளரவில்லை, உறுதியாக இருக்கின்றனர். "நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு" இதில்தான் - லோசனியும் அன்பழகனும் தெற்கிலும் வடக்கிலும் இப்பொழுது இருந்தாலும் - இன்னும் உறுதியாக இருக்கிறார்கள். எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும். அதனால் அதற்கான சாதாரண மக்கள் மட்டத்தில் அதற்கான ஆரம்ப வேலைகளை தொடங்கிவிட்டார்கள். சொல்லின் நடை தெரிந்து ஒருவர் சொல்லவேண்டும் என்று திருக்குறள் தனது பாடல் 712 இல் ஒரு தீர்ப்பு கூறுகிறது "இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்" சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும் என்று வள்ளுவர் தீர்ப்பு கூறுகிறார். ஆனால், அவையை பொறுப்படுத்தாமல், கூறிய ஜனாதிபதியின் கூற்றுதான் கொந்தளிப்புக்கும் வன்முறைக்கும் முக்கிய காரணம் ஆயிற்று! வள்ளுவரின் தீர்ப்பை உணர்ந்து இருந்தால் இன்று இலங்கை ஒரு சிங்கப்பூர்! லோசனி- அன்பழகன் ஒரு குடும்பம்!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சிந்தை சிதறுதடி"
"சிந்தை சிதறுதடி" "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"நெஞ்சம் பாடும் வீரவணக்கம்"
"நெஞ்சம் பாடும் வீரவணக்கம்" "நெஞ்சம் பாடும் வீரவணக்கம் இன்றோ வஞ்சம் செய்து மாண்டவர்கள் இவர்களோ கொஞ்சும் மழலையின் தலையும் சிதறியது கெஞ்சும் மங்கையின் கற்பும் பறந்தது தஞ்சம் புகுந்த அப்பாவிகள் எங்கேயோ?" "மஞ்சம் தேடிய போராட்டம் இதுவல்ல குஞ்சும் குழந்தைகளின் எதிர்காலம் நோக்கி விஞ்சும் அடக்குமுறையைத் தட்டிக் கேட்க மிஞ்சும் அநீதி கண்டு கொதித்தெழுந்த நெஞ்சு நிமிர்த்திய தியாகிகள் தெய்வங்களே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"Jesus refulsit omnium" ("Jesus, light of all the nations" / "உலக நாடுகளின், அன்பு இரட்சகர்" [25/12/2024]
"Jesus refulsit omnium" ("Jesus, light of all the nations" / "உலக நாடுகளின், அன்பு இரட்சகர்" [25/12/2024] கி பி 340 இல் இருந்து நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப்பட்டாலும், உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றும், ஏறக்குறைய நான்காம் நூற்றாண்டை சேர்ந்த இந்த பாடல். பரவலாக பலரால் இன்றும் அறியப்படவில்லை என்பது வருத்தத்திற் குரியதே. இதன் மூல 'லத்தீன்' பாடலும், அதை தொடர்ந்து, கேவின் கவ்தொர்னின் [Kevin Hawthorne] ஆங்கில மொழிபெயர்ப்பும், என் தமிழ் மொழி பெயர்ப்பும் தரப்பட்டுள்ளது. Though, Christians have been celebrating Christmas since at least AD 340, that’s supposedly when the Church first recognised December 25 as Christmas Day, One of the earliest Latin hymns was "Jesus refulsit omnium" / "Jesus, light of all the nations" / "உலக நாடுகளின், அன்பு இரட்சகர்" , by Saint Hilary of Poitiers, around the 4th century (368), But it isn’t widely-known today. The original poem in Latin are below with English Translation by Kevin Hawthorne, and Tamil Translation by me. "Jesus refulsit omnium Pius redemptor gentium Totum genus fidelium Laudes celebret dramatum Quem stella natum fulgida Monstrat micans per authera Magosque duxit praevia Ipsius ad cunabula Illi cadentes parvulum Pannis adorant obsitum Verum fatentur ut Deum Munus ferendo mysticum." [by Saint Hilary of Poitiers] "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift" [Translation by Kevin Hawthorne, PhD] "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!" "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!" "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!" "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!" [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"என்னைத் தேடாதே"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"புத்தாண்டுப் பரிசு" [ 26, டிசம்பர் 2004 சுனாமியின் நினைவாக]
"புத்தாண்டுப் பரிசு" [ 26, டிசம்பர் 2004 சுனாமியின் நினைவாக] ஞாயிற்றுக் கிழமை 26, டிசம்பர் 2004 அன்று, நான் என் பெற்றோருடனும் சகோதரங்களுடனும் கொழும்பு கோட்டையில் இருந்து காலிக்கு காலை 6:50 மணிக்கு, குறைந்தது 1500 பயணிகளுடன் புறப்பட்ட புகையிரத வண்டியில் புத்தாண்டு பரிசுகளுடன் மாமா வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தோம். மாமா காலியில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்ப்பதுடன், தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் என பெருமை கொண்ட, 1850 ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட காலியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அதன் ஆலய பரிபாலன சபையின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியும் ஆனா 'செங் கே' [Chinese traveler Zheng He ,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே [சிங்களத்தில் ஏன் எழுதப்படவில்லை என்பது ஆய்வுக்குரிய ஒரு விடயம்?] எழுதப்பட்ட கற்றூண் [stone pillar] அல்லது கற்பலகை [Rosetta Stone] ஒன்று எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911 இல் காலியில் கண்டெடுத்தார் என்பதும், அதைத் தொடர்ந்து 1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் தமிழ் எழுத்துக்களால் பதியப் பட்ட, கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசக கல் ஒன்றும் கண்டு எடுக்கப் பட்டது, அன்று காலியில் குறிப்பிட்ட அளவு தமிழர் அல்லது தமிழ் மொழி வாழ்ந்ததை உறுதிப் படுத்துகிறது. 9:30 மணி அளவில், ஹிக்கடுவை பெரலிய என்ற இடத்தில் ஆழிப்பேரலை [சுனாமி] மாத்தறை கடுகதி புகையிரத்தை தாக்கி, அந்த கிராம மக்களையும் சேர்த்து 1700 அல்லது அதற்கும் மேற்பட்ட மக்களை காவு கொண்டது. நான் என் பெற்றோர், சகோதரங்கள் மற்றும் புத்தாண்டுப் பரிசு அத்தனையையும் அதில் இழந்தேன். அன்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 திகதி காலை நான் என் பெற்றோர்களின், சகோதரர்களின் நினைவாக மாத்தறை புகையிரத வண்டியில் புத்தாண்டுப் பரிசுகளுடன், ஹிக்கடுவை பெரலியவில் அஞ்சலி செலுத்தி, மாமா விடு போகத் தொடங்கினேன். தொடக்கத்தில் நான் சின்ன பிள்ளை என்பதால், அம்மம்மாவுடன் சென்றாலும், உயர் வகுப்புக்கு பின் நான் தனியாகவே போவது வழமையானது. இன்று டிசம்பர் 26, 2022, காலை நாலு மணிக்கே எழும்பிவிட்டேன். நான் கொட்டாஞ்சேனை, புதுச் செட்டி வீதியில் வாடகைக்கு இருந்து கொண்டு என் முதலாவது உத்தியோகமாக இலங்கை கடற்தொழில் அமைச்சு, காக்கை தீவு, கொழும்பு 15 இல் இந்த ஆண்டுதான், பொறியியல் பட்டம் பெற்று வேலைக்கு சேர்ந்தேன். ஆகவே தான் வரும் புத்தாண்டு ஒரு விசேட நாளாக எனக்கு பலவழிகளில் இருக்கிறது. நான் என் பணத்தில் மாமா வீட்டிற்கு புத்தாண்டு பரிசு வாங்கிக் கொண்டும் மற்றும் மாத்தறை வண்டியில் நினைவு தின அஞ்சலிக்கும் போகிறேன். மாமாவுக்கு மூன்று பெண் பிள்ளைகள், அதில் மூத்தவள் இப்ப முதலாம் ஆண்டு விஞ்ஞான பீட மாணவி. அவளைத்தான் நான் இன்னும் சில ஆண்டுகளில் கல்யாணம் கட்டப் போகிறேன். அவளின் பெயர் யாழினி. இது சின்ன வயதிலேயே அம்மம்மாவால் முன்மொழியப் பட்டாலும், உண்மையில் நாம் இருவரும் ஒரு வயதின் பின் விரும்பிய ஒன்றே! மற்றவர்கள் இன்னும் மேல் நிலைப் பள்ளி மாணவிகள். நான் முதல் நாளே மாமா மாமியுடன் கதைத்து, யாழினியையும் ஹிக்கடுவை பெரலிய கிராமத்துக்கு அஞ்சலிக்கு வரும் படி கூறி இருந்தேன். என் பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும், சுனாமி வந்த அந்த குறிப்பிட்ட நேரத்தில், அங்கே அவர்களின் படத்துக்கு, மற்றவர்கள் எல்லோருடனும் மலர்வளையம் சாத்தி மௌன அஞ்சலி செலுத்துவது வழமை. ஆனால் இம்முறை முதல் முதல் யாழினியுடன் சேர்ந்து அந்த அஞ்சலி செலுத்தப் போகிறேன். அது மட்டும் அல்ல புத்தாண்டு பரிசாக அவளுக்கு மோதிரமும், சங்கிலியும், அங்கே அவர்களின் படத்துக்கு முன் போடப்போகிறேன். ஆனால் அதை நான் எவருக்கும் சொல்லவில்லை. அது ஆச்சரியமாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். என்றாலும் அம்மம்மாவுக்கு நான் ஒன்றும் மறைப்பது இல்லை. அவரின் ஆசியுடன் தான் இதை யோசித்தேன்! ஐந்து மணி அளவில் நான் குளித்து வெளிக்கிட்டு விட்டேன். அஞ்சலி செலுத்தும் வரை நான் எதுவுமே சாப்பிடுவதில்லை. தண்ணி உட்பட. ஆகவே எதோ என் மனதில் பட்டவையை ஒரு அஞ்சல் கவிதையாக எழுதி, அவளின் பெயரையும் சேர்த்து பதிவு செய்துவிட்டு, புத்தாண்டு பரிசாக அவளுக்கும், மற்றவர்களுக்கும் வாங்கியதை ஒழுங்காக அடுக்கி, என் பெட்டியை எடுத்துக்கொண்டு கோட்டை புகையிரத நிலையத்துக்கு போனேன். ஆனால் இம்முறை உண்மையான புத்தாண்டு பரிசு இந்த பொருட்கள் அல்ல, என் பெற்றோருக்கு நான் கொடுக்கப் போகும் மருமகள் தான் என என் மனது சொல்லிக்கொண்டு இருந்தது. ஹிக்கடுவை பெரலிய சுனாமி நினைவு மண்டபத்துக்கு நான் நேரத்துடன் போய்விட்டேன். அங்கு பெரும் திரளான மூவின மக்களும் வந்திருந்தனர். ஒவ்வொருவரின் கதைகளும் ஒவ்வொரு கதை சொல்லிக்கொண்டு இருந்தன. நான் என் பெற்றோர்கள், சகோதரங்கள் படத்தை ஒரு ஒதுக்குப் புறமாக வைத்து, யாழினி வரும் வரை காத்துக்கொண்டு இருந்தேன். நேரம் மெல்ல மெல்ல ஒன்பது முப்பதை அண்மித்துக்கொண்டு இருந்தது, ஆனால் அவள் வரவில்லை. என்ன நடந்தது எனக்குப் புரியவில்லை. மாமாவுக்கும் யாழினிக்கும் மூன்று நான்கு தடவை அழைப்பு எடுத்து பார்த்துவிட்டேன். ஒரு பதிலும் இல்லை. என் அம்மா, அப்பாவின் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தேன். நான் ஆச்சரியப் படுத்த நினைத்தது ஒன்று, இப்ப என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துவது வேறு ஒன்று! நேரம் நெருங்கிவிட்டது, நான் பெற்றோருக்கான கடமையை முதல் செய்யவேண்டும். எனவே எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஆயிரக்கணக்கான மற்றவர்களுடன் சேர்ந்து மலர் சாத்தி மௌன அஞ்சலி செய்தேன். முப்பது மீட்டர் உயரம் கொண்ட ஞாபகார்த்த புத்தர் சிலை ஆழ்கடலை பார்த்துக்கொண்டு நின்றது. நான் புறம்பாக பத்திரமாக கொண்டு வந்த மோதிரம், சங்கிலி இரண்டையும் எடுத்து பார்த்தேன். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஆச்சரியமாக அவ்வற்றை அவளுக்கு போட்டு, என் பெற்றோரின், சகோதரர்களின் அஞ்சலியில் என்னுடன் ஒன்றாக முதல் முதல் ஈடுபடுத்த வேண்டும் என்ற என் கனா சுக்கு நூறாக உடைவது போல் இருந்தது. நான் மீண்டும் புத்தரின் கருணைக் கண்ணை உற்றுப் பார்த்தேன். அதில் ஒரு மாற்றமும் இல்லை! நான் மீண்டும் இம்முறை மாமிக்கும் சேர்த்து அழைப்பு எடுத்தேன். அதே நிலை தான். ஒரு பதிலும் இல்லை. அப்படி என்றால் அங்கு போய்த்தான் என்ன பிரயோசனம் ? எனோ எனக்கு கொஞ்சம் கோபமாகவும் இருந்தது, அதே நேரம் எதாவது நினைக்க முடியாதது நடந்து விட்டதா என்ற குழப்பமும் இருந்தது. எதுவாகினும் போய்த்தான் என்ன என்று பார்ப்பமே என தீர்மானித்து, அருகில் இருந்த புகையிரத நிலையம் போனேன். அங்கே நான் சீட்டுப் பெறுமிடத்திற்கு அருகில் செல்லும் பொழுது, யாரோ என் தோளில் கை போடுவதை உணர்ந்தேன். திரும்பி பார்த்தேன். அது வேறு யாரும் இல்லை. அவளின் மூத்த தங்கை. அழுதுகொண்டு நின்றாள். அக்காவை புகையிரதத்தில் ஏற்றிவிட தாம் எல்லோரும் போனதாகவும், ஒரு சந்தியில் அவர்களின் வண்டி ஒரு பார ஊர்த்தியுடன் மோதுண்டு விட்டதாகவும் அம்மா. அப்பா , அக்கா கடுமையாக அடிபட்டதால் இன்னும் வைத்திய சாலையிலேயே இருப்பதாகவும், கடைசி தங்கையை அங்கேயே விட்டுவிட்டு, தொலை பேசிகள் அந்த மோதலில் உடைந்து விட்டதால், வேறு வழி தெரியவில்லை, எனவே நேரடியாக வந்ததாகவும் சொன்னார். நான் உடனடியாக வாடகை வண்டி எடுத்துக்கொண்டு, அவளின் மூத்த தங்கையுடன் காலி வைத்திய சாலைக்கு போனேன். அவர்கள் மூவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருந்தார்கள். கடைசித் தங்கச்சி, வெளியே ஒரு வாங்கில். ஒரு மூலையில் அமர்ந்து இருந்தார். மாமாவுடன் வேலை செய்யும் சில சக ஊழியர்களும் அங்கு வந்து இருந்தனர். மூவரில் முன்னுக்கு இருந்த இருவரின் நிலைமையும் கவலைக்கு இடம்மென்றும், பின்னல் இருந்த மாமி பரவாயில்லை என்றும் அங்கு இருந்த மூத்த மருத்துவர் ஒருவர் எமக்கு கூறினார். நான் எவ்வளமோ கெஞ்சி கேட்டபின், யாழினி மற்றும் மாமாவை ஒரு சில நிமிடம் பார்கவிட்டனர். அது தான் நான் கடைசியாக உயிருடன் பார்த்தது. இன்று 2024 ஆம் ஆண்டு முதல் நாள். எல்லோரும் புத்தாண்டு பரவலாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். மாமா வீட்டிலும் அயலவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஒரு கூட்டமே கூடி இருக்கிறது. ஆனால் புத்தாண்டுக்கு அல்ல, புத்தாண்டு பரிசு தேடுவார் அற்று ஒரு மூலையில் இருக்கிறது. வாழை, தோரணம் கட்டப் படுகிறது. ஆனால் இங்கு தோரணம் மூன்று குருவிகளைக் கொண்டதாகக், குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கிறது. நிலத்தில் விழுகின்றன, மடிகின்றன என சொல்லாமல் சொல்கிறது. தந்தையும் மகளும் தமது கடைசி யாத்திரையை ஒன்றாக, அருகருகே பயணிக்கின்றன. என் அம்மாவின் தம்பியும் மருமகளும் அம்மாவிடம் செல்கின்றனர். நான் எதை அம்மா அப்பாவுக்கு புத்தாண்டு பரிசாக கொடுக்க நினைத்தேனோ, அது என் பெற்றோரை தேடி தானாகவே, என்னை விட்டுவிட்டு போகிறது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"என்னைத் தேடாதே"
"என்னைத் தேடாதே" மதியழகன் எப்போதும் எளிமையுடனும் எல்லோரிடமும் பாசமாக வாழ்ந்து வந்தான். அவனின் குடும்பம் வசதியான குடும்பம் என்றாலும், செல்வமும் புகழும் அவனது ஒரு முக்கிய காரணியாக என்றும் இருந்ததில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு, விசுவாசம் மற்றும் நேர்மை ஆகியவற்றை அவன் மதித்தான். அவன் ஒரு இளம் மருத்துவனாக அவனது நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடமை புரிந்தும் வந்தான். அவனது இதயம், இளநிலா என்ற ஒரு இளம் பெண்ணால் ஒருமுறை தற்செயலாக ஈர்க்கப்பட்டது. ஒருமுறை அவனது மருத்துவமனைக்கு இளநிலாவின் தாய் சளிக்காச்சலால் அவதிப் படுவதால், முறையான சிகிச்சை பெறுவதற்கு, அங்கு கூட்டி வந்தாள். அப்பொழுது தான் அவன் தற்செயலாக அவளைக் சந்தித்தான். அவளுடைய இளமை பூக்கும் அழகு அவனைக் கவர்ந்தது. "விண்ணில் உலாவும் மேகங்களின் அழகை ரசித்தேன், உன் வளைவுகளைக் கண்ட பின் தலை குனிந்தேன்!, பண் பாடும் குயிலின் பாடல்கள் இயற்கைக் கவிதை என்றேன், உன் குறும் புன்னகையின் ஓசை கேட்டு என்னையே மறந்தேன்!" என தனக்குள் முணுமுணுத்துக்கொண்டு தாய்க்கு சிகிச்சை அளிக்கும் பொழுது, தாய்க்கு உதவியாக அருகில் நின்ற அவளை நன்றாக பார்க்கக் கூடிய மற்றும் அவளின் குரலைக் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் அவனுக்கு மேலும் கிடைத்தது. "பயிர்கடீந் தனவும் பட்டமா மரமும் பண்டைநா ளுக்கவெள் ளென்பும் உயிர்பெறற் பொருட்டுப் பளிதமும் பாலும் ஒழுகிய தேனும் ஆரமுதும் குயிலினிற் குரலும் கிளியினின் மொழியும் குழலும்யா ழும்குழைத் திழைத்து மயிலியற் சாயல் வாள்நுதல் தனக்கு மலரயன் வகுத்ததென் மொழியாள்." குயிலின் குரல், கிளியின் மொழி, குழல், யாழ் அத்தனையும் ஒன்றுகூடிய அவளின் அந்த இனிய குரலைக் கேட்டால், கருகிய பயிர்களும் உயிர்பெற்ற பசிய பயிர்களாகுமே, பட்ட மரமும் தழைத்திடுமே, பலநாள் மண்ணில் புதைத்து கிடந்து மக்கிப்போன எலும்புகளும் கூட புத்துயிர் பெறுமே, அப்படி என்றால் மதியழகன் எம்மட்டு ? அவளது அங்கு நிற்கும் பாணியும் அழகும் அவன் இதுவரை உணராத விதங்களில் அவனது ஆன்மாவைத் தொடுவது போல் தோன்றியது. ஒரு தீப்பொறி இருவரின் கண்ணிலும் இதயத்திலும் ஆழமான, அனைத்தையும் உள்ளடக்கிய அன்பாக, காதலாக, அதற்கு மேலும் கணப்பொழுதில் மலர்ந்தது. மதியழகன் அவளை தன்னை மறந்து பார்த்தான். இளநிலாவும் அவனைப் பார்த்தாள். "மண்ம டந்தையர் தம்முளும் வாசவன் உறையும் விண்ம டந்தையர் தம்முளு நிகரிலா விறல்வேற் கண்ம டந்தைதன் கருங்குழல் அருத்ததிக் கறபிற் கெண்ம டங்குகற் புடையள்இந் திரையினும் எழிலாள்." மண்ணுலக பெண்களுள்ளும், விண்ணுல பெண்களுள்ளும் யாருக்கும் நிகரில்லாத அளவுக்கு அழகிய வேல் போன்ற கண்களையும். குளிர்ந்த கருங்கூந்தலை உடையவளுமான அவளுக்கு ஒப்பாக அருந்ததியையோ இல்லை திருமகளையோ ஒப்பிடமுடியாமல் அவன் தவித்தான். விரைவில், அவர்கள் பிரிக்க முடியாதவர்களாக, அவர்களின் நாட்கள் சந்திப்பிலும், கதைப்பதிலும், ஒன்றாக உலாவுவதிலும் சில காலம் சென்றன. மற்றும் அவர்களின் இரவுகள் ஒன்றாக எதிர்காலம் பற்றிய, கனவுகளுடன் காணப்பட்டன. குடும்பங்களுக்கிடையில் திருமணம் பற்றி ஏற்பட்ட அனைத்து முரண்பாடுகளும் சந்தேகங்களும் அவர்களின் உறுதியான காதலின் முன் உடைத்தெறியப்பட்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். ஏதோ ஒரு கதைப் புத்தகம் போல அவர்களது காதல் அழியாததாக, என்றும் நிலைத்திருப்பதாக உணர்ந்தனர். வேல் போன்ற விழிகளும், கரு நாகம் படம் எடுத்து விரிந்து கிடப்பது போன்ற கூந்தலும் பிறை போன்ற நெற்றியும் குளிர்ந்த உதடுகளும் ஒடுங்கிய வயிறும், சிறுத்த இடையும் கொண்ட இளநிலாவின் அழகை ரசித்தபடி, அவளை தன் மடியில் ஏந்தியவாறு மதியழகன் மொட்டை மாடியில் நிலாவின் ஒளியில் ஒரு முன்னிரவு இருந்தான். அப்பொழுது அவனின் பார்வையால் அவள் நாணினாள். என்றாலும் அந்த நாணத்திலும் அவனுக்கு கேட்கக்கூடியதாக மெல்லிய குரலில், “நான் உன்னோடிருப்பேன் என்றும் ” என்றாள். அது கேட்ட மதியழகன், இனிய பரபரப்புடன் சந்தோசமான வானில், அழகாய் பறந்தனன். அவளும் அவனின் மார்பில் சாய்ந்து, ஏக்கங்களும், தவிப்புகளும், கனவுகளும், காதலும், கற்பனையும் சேர்த்து, தங்கள் வாழ்வை அன்பால், பண்பால் மகிழ்வால் நிரப்ப, அன்பு காதலர்களாய், இளம் தம்பதிகளாய் ஒன்றாய் பவனி வந்தனர். காதல் என்பது அன்பின் ஒரு வடிவம். அதுதான் மனிதனைப் பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. அடுத்தவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு அது! அது உடல் இச்சையால் இருக்கலாம். மனத் திருப்திக்காக இருக்கலாம். பொருளாதார வசதிக்காக இருக்கலாம். ஆனால், இப்படி ஒரு தேவையின் பொருட்டுப் பிறப்பது உண்மையான காதல் ஆகாது என்பதை அவன் நன்றாக உணர்ந்தான். அவளும் அப்படித்தான் இருக்கிறாள் என்பது போல அவன் உணர்ந்தான். அவர்களின் ஆரம்ப திருமண வாழ்க்கையின் போது, மதியழகனும் இளநிலாவும் ஒரு அன்பான தொடர்பைப் பகிர்ந்து கொண்டனர், அது அவர்களுக்கு காலமற்றதாக, அழியாத ஒன்றாக உணர்ந்தனர், அவர்கள் சந்திப்பதற்கு முன்பே அவர்களின் ஆன்மா ஒன்றாக இணைக்கப்பட்டது போல் அவர்களுக்கு இருந்தது. அவர்களது திருமணத்தின் ஆரம்ப நாட்களில், அவர்கள் பல மணிநேரம் பேசுவார்கள், தங்கள் கனவுகளை ஒன்றாக நெசவு செய்து, நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் மீது கட்டப்பட்ட திருமண வாழ்க்கையை முன்னெடுத்தார்கள். சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, கோவலன் போன்ற தமிழ் இலக்கியத்தின் பழங்கால காதலர்களை நினைவு கூரும் வகையில் அவர்களின் காதல் தீவிரத்துடன் மலர்ந்தது. மதியழகன் அடிக்கடி கண்ணகியின் காதலைப் பற்றிப் பேசுவான், அவர்களும் அத்தகைய பிரிக்க முடியாத திருமணப் பிணைப்பைத் தொடரவேண்டும் என்று அவன் தன் கனவை அவளுடன் பகிர்ந்தான். மீண்டும் ஒரு நட்சத்திர ஒளி இரவில், அவன் அவளிடம் “"மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே! காசு அறு விரையே! கரும்பே! தேனே! அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே! இளநிலாவே! , கண்ணகியின் கதை உனக்குத் தெரியுமா? அவளுடைய காதல் ஆலமரத்தின் வேர்களைப் போல கடுமையானது, கட்டுப்படாதது. எல்லாத் தடைகளையும் மீறிய வலிமையுடன் கோவலனை நேசித்தாள். அதுதான் நான் எங்களுக்காக விரும்பும் காதல் - அது வானத்தில் உள்ள நட்சத்திரங்களை விட உண்மையானது." என்று கிசுகிசுத்தான் "நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த வேய் வனப்புற்ற தோளை நீயே, என்னுள் வருதியோ, நல் நடைக் கொடிச்சி முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல? நின் உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே," உன் தோள், என்னை அரவணைக்கும் மூங்கில் போன்ற தோள், என் காதல் நோய்க்கு அது மருந்து, நெஞ்சு நெகிழ்ந்து புண்ணாகிக் கிடந்த நிலையிலிருந்து என்னை விடுவிக்கும்.என் நெஞ்சிலிருக்கும் ஏக்க நோய் உனக்குத் தெரியுமா? நீ கொடிச்சி. என் மேல் படரவேண்டியவள். கற்பு என்னும் நன்னடத்தை கொண்டவள். முருக தெய்வத்தைப் புணர்ந்த வள்ளி போன்று என்னுடன் இணைவாயா?. உன் உருவ -அழகு என்னைத் தூக்கி வாரிப் போடுகிறது. நீ என்னை அப்படிப் பார்க்காதே. என்னால் தாங்கமுடியாது.நான் உதவியற்றவனாக உணர்கிறேன்! என்றான். பின் இளநிலா புன்சிரிப்புடன் அவன் கண்களைப் நேராகப் பார்த்து பதிலளித்தாள். “என் காவிய நாயகனே, என் வேதனை தீர்த்தவனே என் விழிகளில் நிறைந்தவனே!, நீ என் கோவலன். நான் உன் கண்ணகியாக இருப்பேன். நாம் ஒன்றாக இந்த உலகத்தை எதிர்கொள்வோம், எதுவும் நம்மை உடைக்காது." என்றாள். இந்த வார்த்தைகள் அந்த நேரத்தில் உண்மையாக அவன் உணர்ந்தன். தொடக்கத்தில், அவர்களது திருமணமும் அவர்களது காதல் உறவைப் போலவே மிகவும் மகிழ்ச்சியானதாகவும், அமைதியானதாகவும். அன்பானதாகவும் இருந்தது. ஆனால், மெல்ல மெல்ல, அவளது ஆர்வங்கள், அவர்களது பகிரப்பட்ட வாழ்க்கையிலிருந்தும், எளிமையான இன்பங்களிலிருந்தும் மாறத் தொடங்கியது. அதை மதியழகன் எதிர்பார்க்கவே இல்லை. அவர்களது திருமண வாழ்வு நகரத் தொடங்கி சில மாதங்களின் பின், நவநாகரிக மங்கையாக, இளநிலாவின் ஆடம்பர தாகம் மற்றும் அந்தஸ்து பார்க்கும் தன்மை, மேலோங்கியது. அவள் கவனக்குறைவாக செலவழித்தாள், ஆடம்பரமான விருந்துகளை நடத்தினாள், புதிதாகக் கிடைத்த நட்பு, மற்றும் சமூக அந்தஸ்தில் அவளைச் சுற்றிக்கொண்ட நண்பர்களுடன் மட்டுமே அவள் ஆர்வம் ஓங்கியது. நாட்கள் மெல்ல மெல்ல நகர, மதியழகன் மேல் உள்ள ஆர்வமும் நலம் விசாரிக்கும் அக்கறையும் கொஞ்சம் கொஞ்சமாய் இளநிலாவிற்கு அவளை அறியாமலே குறையத் தொடங்கியது. அவள் வேண்டும் என்று செய்யாவிட்டாலும், அவளின் ஆடம்பர வாழ்க்கை, புதிய தொடர்புகள் அதை சில நேரம் மறக்கச் செய்துவிட்டன. மதியழகன் வர தாமதம் ஆனாலும் தவியாய் தவித்து அவன் வருவதை எதிர்பார்த்து, தானும் சாப்பிடாமலும் கதவை பார்த்துக்கொண்டு இருக்கும் இளநிலா, அவன் விரும்பி எங்கேயாவது போக அழைத்தும், அதைத் எதாவது காரணம் கூறி தவர்த்து தன் புதிய தோழிகளுடன் மாதர் சங்கம், அது இதுவென ஏதாவது உயர் மட்ட கொண்டாட்டங்கள் மற்றும் விருந்துகள் என போய்விடுவாள். அப்போதுதான், தான் தவறான ஒருவளை காதலித்து விட்டமோ என்று குழம்பத் தொடங்கினான். மதியழகன் அவளுடன் பேச சில முறை முயன்றான், அவர்கள் ஒருமுறை பகிர்ந்து கொண்ட அரவணைப்பை மீண்டும் காண துடித்தான். ஆனாலும், ஒவ்வொரு உரையாடலும் ஏமாற்றத்தில் முடிந்தது. மேலும் அவன் தனது சொந்த வீட்டில் அந்நியராக உணரத் தொடங்கினான். ஒரு காலத்தில் அவன் நேசித்த பெண் தன்னை விட்டு நழுவிப் போவதைக் கண்டான். அவனுடைய அன்பை விட, அவனுடைய செல்வத்தில் மட்டுமே அவளுக்கு கூடுதலான கவனம் இருந்தது. காலப்போக்கில், இளநிலாவின் புறக்கணிப்பு இன்னும் அவனுக்கு வெளிப்படையாகி விட்டது. அவள் சூறாவளி சமூக வாழ்க்கையில் சிக்கி, அவனை அடிக்கடி தனியாக விட்டுவிடுவாள். ஒரு காலத்தில் பகிரப்பட்ட சிரிப்புடன் எதிரொலித்த வீடு இப்போது பிரிவின் வெறுமையால் நிரம்பிய வெப்பமாக உணரப்பட்டது. திருமணமாகி சில மாதங்கள் கடந்தபோது, இளநிலாவின் கவனம் மேலும் மேலும் பொருள் இன்பங்களை, அதாவது ஆடம்பர ஹோட்டல்களில் உண்ணுதல், மேல்மட்ட மக்கள் மத்தியில் தன்னை முன்னிலை படுத்த, தன்னை அலங்கார பாணியில் காட்சிப்படுத்துதல், அவர்களின் நட்பின் முதன்மையை தனதாக்கிக் கொள்ளுதல், மற்றும் இன்றைய நவீன சமூக இன்பங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை, நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதனால் கவலையடைந்த மதியழகன், அவளை மீண்டும் குடும்ப பாரம்பரிய எளிய மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகள் செய்தாலும், அது, செவிடன் காதில் விழுந்தது போல் அவனுக்குத் தோன்றியது. ஒரு நாள் மாலை, இளநிலா ஒரு ஆடம்பர விருந்துக்குப் பின், மதியழகனை வீட்டில் எதிர்கொண்டாள். "இளநிலா," அவன் தனது குரலை அமைதியாக வைத்துக்கொண்டு, "நட்சத்திரங்களுக்கு அடியில் நாங்கள் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் உனக்கு நினைவிருக்கிறதா? நீ மாறிவிட்டதாக உணர்கிறேன். இதெல்லாம் என்ன?…” என்று கேட்டான். அவன் கண்கள் அவளது விலையுயர்ந்த நவீன அலங்காரத்தையும், வெற்று ஒயின் [மது] கிண்ணத்தையும் பார்த்து, “இது நாங்கள் இல்லை.” என்றான். ஆனால், இளநகை ஏளனமாக தன் கையை அசைத்தாள். “ஓ, மதியழகன், நீ இப்படிப் பழங்காலக் கருத்துக்களில் ஒட்டிக் கொள்ள வேண்டுமா? நாங்கள் இன்று பழைய, மூடத்தனமான பழக்க வழக்கங்களில் ஒட்டிக்கொள்ளும் இளைஞர்கள் அல்ல, எமக்கு இன்றைய நவீன மற்றும் வசதியான பழக்கவழக்கங்களில், வாழ்க்கையை விரும்புவதில் தவறில்லை. தவிர, உங்கள் செல்வம் எங்களுக்கு இன்றைய வசதிக்கு ஏற்ப மகிழ்ச்சியைத் தர வேண்டுமே ஒழிய, வெறும் பொன் சங்கிலிகளை அல்ல." என்றாள். "தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!'' என, மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு" இந்த நேரத்தில், மதியழகன் அகநானூறு 151 இல் குறிப்பிட்ட பண்டைய ஞானத்தைக் அவளுக்கு எடுத்துக்காட்டி, நீ உன்னை அலங்காரிப்பதில் அல்லது விலை உயர்ந்த சாப்பாடு நீ சாப்பிடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் உன்னை விரும்பி வாழ்வோருக்கும், உன்னால் விரும்பப்படுவோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், நகைமுகம் காட்ட முடியாமல் வறுமையில் வாடுவோருக்கும் நல்கி அவர்களை வாழவைப்பதற்கு செல்வம் வேண்டும், இதனால் வரும் மகிழ்ச்சி ஒன்று, தாம் விரும்பும் சுற்றத்தாருடன் கூடிக் கலந்து இன்புறும் மகிழ்சி மற்றொன்று. இவ்விரண்டு மகிழ்ச்சிகளின் திறவுகோல் தான் செல்வம் என்கிறது என விளங்கப் படுத்தினான். "நீ இன்று ஆடம்பரத்துக்கும் நவீன கலாச்சாரம் என்று மேல்மாட்ட, செல்வந்த மக்களுடன் மட்டும் கூடிக்குலாவி பழகும் பழக்கங்களுக்கும் அல்ல என்பதை உணரவேண்டும் என்பதே என் வேண்டுகோள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என எல்லோரும் எம் உறவினரே என்பதை நான் நன்றாக அறிவேன், ஆகவே மேல்மாட்ட, செல்வந்த மக்களுடன் பழகுவதை நான் பிழை என்று சொல்லவில்லை, ஆனால் எல்லோரையும் அணைக்கவேண்டும், செல்வத்தை தேவை அறிந்து செலவழிக்க வேண்டும் மற்றது நீ எதாவது புதிய பழக்கத்தை நாடும் பொழுது, அதன் உண்மைத்தன்மை அறிந்து கைக்கொள்ள வேண்டும் என்பதே என் அன்பே, உன்னிடம் என் சிறிய வேண்டுகோள், அவ்வளவுதான் என் இளநிலாவே!" என்றான். "இளநிலா, செல்வம் அதை நோக்கத்துடன் பயன்படுத்தும்போது மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது, அதை வீண்விரயத்திற்காக வீணடிக்கப்படாது என்பது மட்டுமே" மீண்டும் வலியுறித்தினான். ஆனால் அவள் பேசாமல் அசையாமல் வேறுபக்கம் பார்த்துக் கொண்டு இருந்தாள், மதியழகன் ஆழமான வலியை உணர்ந்தான், ஒரு காலத்தில் அவற்றை ஒன்றாக இணைத்த மதிப்புகளை அவளால் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்தான். "வேலை கேட்டுப் பெண்ணொருத்தி வீதியிலே நடந்து வந்தால் சேலைதனை அவிழ்த்து விடும் உலகமடி பணக்கார வர்க்கமடி பாம்பினும் கொடியதடி" என்றான் கவிஞர் இன்குலாப். இதை அவள் எனோ அந்த நேரம் உணரவில்லை. நாளுக்கு நாள் இளநிலா - மதியழகன் இடைவெளி மேலும் மேலும் கூடியது. மதியழகன் தனது சொந்த வீட்டிலேயே அந்நியனாக மாறினான், ஆனால், அவனது மனைவியோ செல்வத்தையும் இன்பத்தையும் மட்டுமே மதிக்கும் நபர்களின் சகவாசத்தை நாடினாள். ஒரு காலத்தில் அவனை நங்கூரமிட்டு வைத்திருந்த காதல், அவனால் தாங்க முடியாத கனமாக இன்று மாறியது. அவன் தங்கள் திருமண உறவைக் காப்பாற்ற விரும்பினான், ஆனால் அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவள் தவறாக உணர்ந்து, தன் தனிப்பட்ட சுதந்திரம், தான் இன்று வாழும் வாழ்வே என்று எண்ணி, அதில் ஒருவரும் தலையிட முடியாது என்று நம்பி, அவள் மேலும் மேலும் விலகிப் போனாள். இன்றைய பெண்கள் சாமர்த்தியசாலிகள், இன்னும் விவரமானவர்கள், இன்னும் அதிகமான பொறுப்பானவர்கள், புத்திசாலிகள். படிப்பிலும் ஆண்களுக்கு முன்னால் நிற்பவர்கள். கால் வைக்காத துறையே இல்லை என்ற நல்ல நிலையே உள்ளது. தைரியம், தன்னம்பிக்கை, விவேகம், ஒழுங்கு அனைத்தும் ஒருங்கே பெற்ற பெண்கள்தான் இன்றைய பெண்கள். இருந்தும் ஒரு சில பெண்கள் நாகரீகம் என்ற பெயரிலும் புதுமை என்ற பெயரிலும் தங்கள் தோற்றத்தை மாற்றி மற்றவர்களின் கேள்விகுறி பார்வைகளை சந்திகிறார்கள். "நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?" என்பதை கருத்தில் வைத்து கொண்டு நடந்தால் 'பாரதி கண்ட புதுமை பெண்கள்' தான் இன்றைய பெண்கள் என்று அவன் அவளுக்கு விபரமாக எடுத்து விளக்கினான். அவன் மேலும் தனது இன்னும் ஒரு வாதகமாக, ஆண்,பெண் பேதம் இல்லாமல் நட்பு என்பதை மட்டுமே பார்க்கும் உறவு ஆரோக்கியமானதுதான். இருவரும் தங்கள் எல்லை என்ன என்பதை வரையறுத்து கொண்டு பழகுவது அவசியம். ஆனால் பலநேரம் இந்த உறவுகள் தான், எல்லை தாண்டி அவலத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது. இதனால் அதிகம் பாதிக்கபடுவது பெண்கள்தான். கண்மூடித்தனமாகவும், அலட்சியமாகவும் இந்த விடயத்தில் நடந்து கொள்கின்றனர் என்பதே உண்மை என்றான். மீண்டும் ஒரு நாள் இரவு, மற்றொரு வாக்குவாதம் அவர்களுக்கிடையில் நடந்த பிறகு, மதியழகன் அவர்கள் வீட்டில் தனியாக உட்கார்ந்து, என்ன தவறு என்று யோசித்தான். அவள் எப்படி ஆரம்ப காலங்களில் அரவணைப்புடனும் அன்புடனும் அவனைப் பார்த்தாள் என்பதை அவன் நினைவு கூர்ந்தான், இப்போது அந்த பார்வைகள் அவளுடைய ஆடம்பரமான வாழ்க்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களின் ஒரு காலத்தில் இனிமையான காதல் நினைவுகள் அவனை வாட்டி வதைத்தது, இனி இப்படியே தொடர்ந்து செல்ல முடியாது என்பதை உணர்ந்தான். அவன் அவளை சோகத்துடன் பார்த்தான். “ராதை மற்றும் கிருஷ்ணரின் கதைகளில், கிருஷ்ணன் இல்லாதபோதும், ராதாவின் காதல் உண்மையாக இருந்தது. ஒருவர் உண்மையிலேயே நேசிக்கும்போது, மற்றவர்கள் அந்த நபரை நேசிக்கிறார்கள், அவருடைய அந்தஸ்தையோ செல்வத்தையோ அல்ல. உங்களிடம் எதுவும் இல்லாவிட்டாலும் நான் உன்னை நேசிப்பேன். ஆனால் இப்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, இளநிலா, நீயும் அப்படி உணருவீர்களா?” என்று கேட்டான். தேவையில்லாத ஒழுக்கம் பற்றி மதியழகன் பேசுகிறான் என்று எரிச்சல் அடைந்த இளநிலா கண்களைச் சுழற்றினாள். “இந்தப் பழங்காலக் கதைகளை ஒவ்வொரு முறையும் கொண்டு வர வேண்டுமா மதியழகன்? நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம், கவிஞர்களின் கற்பனைகளில் அல்ல. அதற்காக என்னைத் தண்டிக்காமல், எங்களிடம் இப்ப எது காணப்படுகிறதோ அதை ஏற்று, அதை அனுபவிக்க வேண்டும்." என்றாள். ஒரு காலத்தில் தான் நேசித்த இளநிலா தன் கண் முன்னே மறைந்து கொண்டிருப்பதை அப்போது அறிந்துகொண்டான். அவளது வார்த்தைகளில் ஒரு வேதனை தரும் செய்தியை உணர்ந்தான். "மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை மகளீர் குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் ஆடவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் போல, அவள் நினைக்கும் , அவளின் சுதந்திர வாழ்க்கை போவதை அவன் உணர்ந்தான். அதற்குப் பின் அவர்களுக்கிடையிலான தூரம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மதியழகன் மனம் உடைந்தான். என்றாலும் அவநம்பிக்கையுடன், கடைசியாக அவளுக்கு நியாயப்படுத்த முயன்றான். “இளநிலா, என் அன்பே, நான் உன்னை விரும்பும் அந்தக் கோணத்தில், நீயும் உன்னால் பார்க்க முடிந்தால். நீ இன்று வாழும் வாழ்க்கை நாம் கனவு கண்ட வாழ்க்கை அல்ல என்பதை, நீ இலகுவாக உணர்வாய். தயவு செய்து என்னிடம் திரும்பி வாருங்கள். நம்பிக்கை மற்றும் அன்பின் மீது கட்டமைக்கப்பட்ட வாழ்க்கையை மீண்டும் நாம் வாழ்வோம் என்றான். இளநிலா ஏளனமாக சிரித்தாள், அவளுக்குள்ளே காலியாக இருக்கும் அந்த சத்தம் அவனது நம்பிக்கையை உடைத்தது. “மதியழகன், உங்களால் என்னை நான் இன்று இருக்கும் இந்த நிலையில், ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், ஒருவேளை, நான் நம்புகிறேன், உண்மையில் நீங்கள்தான் இன்று மாறியிருக்கலாம். உங்கள் இன்றைய இலட்சியத்தில் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு உயிரோட்டமான மற்றும் உற்சாகமான வாழ்க்கை தான் வேண்டும்." என்றாள். அந்த நொடியில் மதியழகன் தன்னை இழந்ததை அறிந்தான். அவன் ஒருமுறை நேசித்த காதல் இன்று நெருப்பாகவும் அடையாளம் காண முடியாததாகவும் மாறியது. எனவே அவர்களின் பிரிவை இனிமேலும் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்து, தனது இறுதி வார்த்தைகளை அவளுக்கு உறுதியாக தெரிவித்தான். மறுநாள் காலை, பொது அறையில், அவன் மேசையில் ஒரு குறிப்பை, " 'என்னைத் தேடாதே' இளநிலா, நீங்கள் தேடுவது இந்த உங்கள் ஆடம்பர, நவீன பாணி என்றால், நீங்கள் உங்கள் வழியில், என்னை மறந்து தேடுங்கள், வாழுங்கள், நான் இனிமேல் உன்னுடன் எந்த வாதமும் செய்யமாட்டேன், நான் விலகிப் போகிறேன். ஆனால் நீங்கள் எப்போதாவது உண்மையான அன்பைத் தேடினால், அது என்னுடன் முடிந்து விட்டது என அறிந்து கொள்ளுங்கள், என்று எழுதி வைத்துவிட்டு, சோகத்தால் கனத்த இதயத்துடன், அவர்கள் கட்டிய அனைத்தையும் விட்டுவிட்டு இளநிலாவின் வாழ்க்கையில் இருந்து முற்றாக விலகி, எங்கே போகிறேன் என்று சொல்லாமல் மறைந்தான். மதியழகன் அவர்கள் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தேங்கிக் கிடந்த வலிமிகுந்த நினைவுகளிலிருந்து விலகி, தொலைதூர நாடு ஒன்றுக்குச் சென்றான். "விரிசல் விரிவடைந்து உறவும் உடைந்தது சோகம் கொண்டு அவன் பிரிந்தான்! நட்பு முற்றி விவாகம் செய்தபின் நட்பு நிலை பெறாமல் போனதேனோ?" "நிவர்த்தி காண அறிவுரை வழங்கினான் கணவன் மனைவி உறவு தூய்மை இழந்தது அவளை அவள் வழியே விட்டுச்சென்றான் "என்னைத் தேடாதே" சொல்லிச் சென்றான்" "தொலைந்து போவேன் மறந்து போவேன் உன் நினைவிலிருந்து கடந்து போவேன் ஆடம்பரம், வைன், நட்புகள் தொடரட்டும் நீயாக தொலைத்த "என்னைத் தேடாதே" முதலில் இளநிலா அலட்சியமாக இருந்தாள். அவனது விலகல் அவள் வாழ்க்கையில் ஒரு அலையையும் உண்டாக்கவில்லை, அவள் தன் நண்பர்கள் மற்றும் செல்வங்களால் இன்னும் சூழ்ந்து இருந்தாள். ஆனால் மெதுவாக, வாரங்கள் மாதங்களாக மாற, விடயங்கள் மாறத் தொடங்கின. அவளது ஆடம்பர வாழ்க்கைக்கு நிதியளிக்க யாரும் வரவில்லை. அவளுடைய செல்வம் குறையத் தொடங்கியது. ஒரு காலத்தில் விருந்துகளுக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் அவள் பக்கம் குவிந்த நண்பர்கள் தங்களைத் தூர விலக்கத் தொடங்கினர். தன்னைச் சுற்றி அவள் கட்டியெழுப்பிய வாழ்க்கை துண்டு துண்டாக சிதைந்தது. தனித்து விடப்பட்ட அவள், தான் உருவாக்கிய வெறுமையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதல் முறையாக, அவள் துரோகத்தின் ஆழத்தை உணர்ந்தாள். அவளது செல்வம் குறையவே அவள் சேர்த்து வைத்திருந்த நண்பர்கள் மறையத் தொடங்கினர். அவளுடைய இதயம் அவளை உண்மையிலேயே கவனித்துக்கொண்ட, அந்த ஒரு நபருக்காக ஏங்கியது. தன் பேராசை மதியழகனைப் பிரித்ததற்கு முந்தைய நாட்களை அவள் நினைவு கூர்ந்தாள். தன் தனிமையின் அமைதியான நேரத்தில், கண்ணகியின் பக்தி, குறளின் ஞானம், ராதையின் நித்திய அன்பு பற்றி அவன் ஒருமுறை சொன்ன கதைகளை நினைத்துப் பார்த்தாள். முதன்முறையாக அவனுடைய வார்த்தைகளில் உண்மை தெரிந்தது, ஆனால் அது மிகவும் தாமதமானது என்று அவள் அறிந்தாள். அவள் இழந்த காதல் திரும்ப வராது, ஏனென்றால் மதியழகன் அவன் வார்த்தைக்கு உண்மையாக இருந்ததால் - அவன் போய்விட்டான், அவளுடைய விருப்பங்களின் எடையை அவளே சுமக்க விட்டு. இளநிலா அவனைக் கண்டுபிடிக்க முயன்றாள், பழைய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அணுகினாள், ஆனால் அவன் எங்கிருக்கிறான் என்று யாரும் சொல்லவில்லை. அவள் விலாசம் தெரியாவிட்டாலும் கடிதங்களை எழுதினாள், ஒவ்வொன்றும் அவளது வருத்தத்தையும் ஏக்கத்தையும் எதிரொலித்தது, அவன் தன்னை மன்னித்து திரும்பலாம் என்ற நம்பிக்கையில். ஆனால் அவளுடைய கடிதங்கள் அனுப்பாமலே இருந்தன. அவள் அமைதியாக அழுது கொண்டு இருந்தாள். அவன் தொலைந்து போனதால் அல்ல, அவனை விரட்டியதால் அவன் தன் வாழ்க்கையை விட்டுப் போய்விட்டான் என்பதை மெதுவாக உணர்ந்ததால் . காலப்போக்கில் இளநிலா மாறினாள். அவள் ஆழமற்ற நட்பை விட்டுவிட்டு, பொருள் செல்வத்திற்கான ஆசையை விட்டுவிட்டாள். உண்மையான அன்பின் மதிப்பையும் மேலோட்டமான ஆடம்பரங்களின் வெறுமையையும் அவள் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். இறுதியில், இளநிலா அவனது நினைவை அவளுடன் சுமந்து தனிமையில் வாழக் கற்றுக்கொண்டாள். ஆனால், அவள் என்றும் தன்னை நொந்துகொண்டே இருந்தாள். அவள் வாய் " என்னைத் தேடாதே" என்ற அவனின் இறுதி வார்த்தையை முணுமுணுத்தாலும், அவள் இன்னும் அவனைத் தேடிக்கொண்டே இருக்கிறாள்!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
முதிர்கன்னி [மலர்குழலி]
முதிர்கன்னி [மலர்குழலி] இன்றைய வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோகம் குறிப்பிடத்தக்க வயதில் திருமணமாகாமல் வாழ்க்கையைக் கழிப்பது. வேலை பார்ப்பதினாலோ அல்லது நிறையவே படிப்பதினாலோ அல்லது திருமணம் செய்து கொள்வதற்கான பொருளாதார மற்றும் சூழ்நிலை வசதியின்மையினாலோ பெண்களில் சிலர் முதிர்கன்னிகளாக வாழ்கின்றார்கள். அப்படியான ஒருவர்தான் மலர்குழலி. இவள் இலங்கை கிளிநொச்சி என்ற பகுதியில் பசுமையான வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். இவள் 40களின் முற் பகுதியில் ஒரு அழகான முதிர்கன்னி, கருணை நிறைந்த இதயம் மற்றும் அரவணைப்பை வெளிப்படுத்தும் ஒரு ஆன்மா. மலர்குழலி தனது வாழ்நாள் முழுவதையும் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இயற்கையின் அழகால் சூழப்பட்ட அந்த கிராமத்திலேயே கழித்தார். "அல்லிப்பூ தாமரைப்பூ ஆயிரம் பூப்பூத்தாலும் கல்யாணப் பூவெனக்குக் காலமெல்லாம் பூக்கலையே!" அப்படித்தான் வாழ்க்கை போய்விட்டது. பூத்துக் காய்க்காத வாழ்வு; தனியளாக வாழ்ந்து முதிர்ந்து போனாள். சிறு வயதிலிருந்தே, மலர்குழலி ஆர்வமுள்ள மனதையும், கற்றலில் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். படிப்பில் விடாமுயற்சியுடன் இருந்த அவளுக்கு ஆசிரியை ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. இருப்பினும், சூழ்நிலைகள் அவளது அபிலாஷைகளுடன் ஒத்துப்போகவில்லை, அவள் ஊனமுற்ற. கொஞ்சம் வயதான பெற்றோரை கவனித்துக்கொள்வதற்கும் குடும்பத்தின் பாரங்களாலும் படிப்பை மேல் தொடரமுடியாமல் போய்விட்டது. என்றாலும் வாழ்க்கை அளிக்கும் எளிய இன்பங்களில் ஆறுதலையும் மனநிறைவையும் கண்ட அவள், தனது பிரகாசமான புன்னகை, கனிவான இதயம் துணை கொடுக்க, தாயிடம் இருந்து இளமையில் பெற்ற விதிவிலக்கான சமையல் திறன் கைகொடுக்க, அதையே ஒரு தொழிலாக்கி கிராமத்தைச் சுற்றியுள்ள மக்களை தனது வீட்டு வாசலுக்கு இழுத்து, வீட்டில் இருந்தே தங்கள் தேவைக்கு உழைக்கத் தொடங்கினாள். வருடங்கள் செல்ல செல்ல, மலர்குழலியின் சுவையான உணவு வகைகளுக்கான நற்பெயர் வளர்ந்தது, மேலும் அவளது ருசியான உணவு மற்றும் ஆறுதலான கூட்டத்தை நாடும் கிராம மக்கள் கூடும் இடமாக அவளது வீடு மாறியது. அவள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் அவள் மனதிற்குள் சில வேளை, அவளுடைய உணர்வுகள் போராடுவதும் உண்டு, மலர்கள் அணிந்த கொண்டையை உடையவள் என்று பெற்றோர் இட்ட பெயர், பெயர் அளவிலேயே வாழ்ந்து, தனிமையான வாழ்க்கை அமைந்த போதிலும், அதை தனக்குள்ளேயே அடக்கி, அவள் வெளியே அதை காடடாமல் மகிழ்வு போல வாழ கற்றுக்கொண்டாள். வாழ்க்கை அவளை தன் வழியில் அழைத்துச் சென்றாலும், மலர்குழலி அறிவு மற்றும் சுய முன்னேற்றத்தின் மீதான தனது ஆர்வத்தை ஒருபோதும் இழக்கவில்லை. அவள் மிகவும் நேசித்த புத்தகங்களின் ஒரு சிறிய தொகுப்பை அவள் வைத்திருந்தாள், அவள் இரவுகளை அவற்றின் பக்கங்களில் மூழ்கடித்தாள். பலதரப்பட்ட தலைப்புகளில் உரையாடும் அவளது திறன், அவளின் உணவுக்கு வரும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடமிருந்து மரியாதையையும் பாராட்டையும் பெற்றது. மலர்குழலியின் இல்லமானது அறிவுரையை நாடுபவர்களுக்கு அல்லது வெறுமனே கேட்கும் காதுகளுக்கு ஆறுதல் மற்றும் ஞானம் தரும் இடமாகவும் மாறத் தொடங்கியது. வயிற்றுப் பசிக்கு உணவையும், அறிவு பசிக்கு நல்ல கருத்துக்களையும் கொடுத்தது. அதனால் அவர் கிராமத்தின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக ஆனார், சர்ச்சைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய உதவினார், ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்கினார், மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கும் கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அவளுடைய அமைதியான இருப்பும், எந்தச் சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு பொருத்தமான தீர்வு காணும் திறனும் அவளைப் பலருக்கு நங்கூரமாக மாற்றியது. ஒரு நாள், அகக்கடல் என்ற நபர் அந்த கிராமத்திற்கு தனது ஆசிரியர் வேலையில் மாற்றம் கிடைத்து வந்தார். அவர் ஒரு திறமையான இசைக்கலைஞரும் கூட. அவர் ஏற்கனவே ஒரு ஆசிரியை ஒருவளை திருமணம் செய்து இருந்தாலும், கொரோனா நோயினால் அவரை பறிகொடுத்தது மட்டும் அல்ல, பிள்ளைகளும் இல்லாததால், தனிக்கடடையாகவே அங்கு தனது புது ஆசிரியர் பணியை தொடங்கினார். மலர்குழலியின் சமையல் திறமை மற்றும் அவளது துடிப்பான இயல்புகளைப் பற்றிய கதைகளால் ஈர்க்கப்பட்ட அவர், அவளைச் சந்திக்க, மற்றும் தனது இரவு, வார விடுமுறை நாள் உணவுகளை அங்கு சாப்பிட முடிவு செய்தார். அவளுடைய அடக்கமான இல்லத்தில் அவன் அடியெடுத்து வைத்த கணம், மசாலா வாசனையும் சிரிப்பொலியும் அவனை வரவேற்றன. மலர்குழலிக்கும் அகக்கடலுக்கும் நாளாக ஆக ஒரு நல்ல புரிந்துணர்வு நட்பு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கை, கனவுகள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசினர். அகக்கடல் தனது கிட்டார் மீது தனது ஆத்மார்த்தமான சுருதிகளை வாசித்தார், மலர்குழலி தனது வயதை பெரிதாக பொருட்படுத்தாமல் அதற்கு ஏற்றவாறு அபிநயங்கள் பிடித்து மகிழ்வார். அவளும் அவனும் ஒத்த வயதில் இருப்பதாலும், தன்னை மாதிரியே ஒரு தனிமை அவனிடமும் இருப்பதாலும், அவள் வெளிப்படையாகவே அவனுடன் பழகுவதில் பிரச்சனை இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவர்களின் தொடர்பு ஆழமடைந்தது, மேலும் கிராமவாசிகள் அவர்களுக்கு இடையே உருவாகும் பிணைப்பை கவனிக்காமல் இருக்கவும் இல்லை. அகக்கடல் அந்த கிராமத்துக்கு வந்து, ஒரு ஆண்டால் மலர்குழலியின் பெற்றோர்கள் இருவரும் ஒரு விபத்தில் காலமானார்கள், இதுவரை பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற துணிவில் இருந்த அவளுக்கு, தனிமை மேலும் பெரிதாகியது. சிலர் அவளை இப்ப வெளிப்படையாக ஒரு முதிர்கன்னி, திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண்ணாக பார்க்க தொடங்கினர். அவளது வீடு இன்னும் உணவுக்கு திறந்திருந்தது, என்றாலும் இப்ப அங்கு வருபவர்களின், சிலரின் போக்கில் சில மாற்றம் காணப்பட்டது. அது அவளுக்கு தொடர்ந்து சமையல் செய்து உணவு பரிமாறுவது ஒரு இடைஞ்சலாக மாறிக்கொண்டு இருந்தது. அதைக்கவனித்த அகக்கடல், அங்கேயே அவளுக்கு துணையாக தங்க முடிவு செய்தான். நாட்கள் செல்ல செல்ல மலர்குழலி மற்றும் அகக்கடலின் நட்பு இன்னும் ஆழமான ஒன்றாக மலர்ந்தது. அவர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் கனவுகளையும் அச்சங்களையும் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் சகவாசம் அடைந்தனர். இளமை கடந்து இருந்தாலும், அவர்களின் இதயம் இளம் பருவத்தினர் போல, ஒரே அலைநீளத்தில் எதிரொலித்தது. மலர்குழலி தன் எல்லைக்கு அப்பாற்பட்டதாக நீண்ட காலமாக நம்பியிருந்த உணர்வுகளை, தான் இப்ப அனுபவிப்பதை உணர்ந்தாள். என்றாலும் சமூக அமைப்பையும் மதிக்க வேண்டும் என்பதும் அவனுக்கு தெரியும். எனவே ஊரறிய, அவர்களின் முன்னாலையே அவளின் கையை பிடிக்க வேண்டும் என்ற முடிவுடன், ஒரு மாலை நேரத்தில், சூரியன் வானத்தை ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களால் வரைந்தபோது, அகக்கடல் தனது கிட்டார் மெல்லிசை மூலம் மலர்குழலியிடம் தனது காதலையும் திருமணம் செய்யும் எண்ணத்தையும் ஒப்புக்கொண்டார். மலர்குழலியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அவள் ஒரு காலத்தில் இளமைக்காகவே காதல் ஒதுக்கப்பட்டது என்று எண்ணியவள், அது தவறு என்பதை உணர்ந்தாள். இவர்களது காதல் கதை கிராமத்தில் கிசுகிசுக்கப்பட்ட கதையாக மாறினாலும், காதலுக்கு வயது இல்லை என்பதற்கான அடையாளமாக அது அமைந்தது. ஒரு நாள், சிறு குழந்தைகள் சிலர் அவளது புத்தகங்களின் தொகுப்பைக் தற்செயலாக கண்டுபிடித்தனர். அந்த பக்கங்களில் உள்ள கதைகள் மற்றும் அறிவால் ஈர்க்கப்பட்ட அவர்கள், பாடசாலையால் வந்தபின் தங்கள் மாலை நேரத்தை அதில் செலவிடத் தொடங்கினர். ஆசிரியையாக வேண்டும் என்ற மலர்குழலியின் கனவு உண்மையில் இறக்கவில்லை; வேறு வடிவமாக பிள்ளைகளூடாக வெளிவரத் தொடங்கியது. குழந்தைகளின் உற்சாகம் மலர்குழலியில் ஒரு புதிய தீப்பொறியைப் பற்றவைத்தது. அவள், புது கணவர் அகக்கடலின் உதவியுடன் ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் முறைசாரா வகுப்புகளை நடத்தத் தொடங்கினாள். குழந்தைகளுக்கு வரலாறு, இலக்கியம், அறிவியல் மற்றும் கருணை மற்றும் பச்சாதாபத்தின் முக்கியத்துவம் பற்றி கற்பித்தாள். கிராமப் பெரியவர்கள் விரைவில் அவளது முயற்சிகளை அங்கீகரித்து, தங்களின் ஆதரவை வழங்கினர், ஒரு சிறிய சமூக நூலகம் மற்றும் கற்றல் மையத்தை நிறுவ உதவினார்கள். மலர்குழலியின் நூலகம் முழு கிராமத்திற்கும் அறிவு மற்றும் உத்வேகத்தின் மையமாக மாறியது. படிக்கவும், கற்றுக்கொள்ளவும், விவாதிக்கவும் எல்லா வயதினரும் அவளது தாழ்மையான இல்லத்திற்கு திரண்டனர். அவள் கற்பித்த குழந்தைகள் தாங்களாகவே மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் வளர்ந்தனர், அவர்களின் பாதைகள் மலர்குழலியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டன. வருடங்கள் செல்லச் செல்ல மலர்குழலியின் இருப்பு அவளைச் சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டே இருந்தது. அவளின் முதிர்கன்னி வாழ்க்கை முற்றுப்புள்ளிக்கு வந்தது மட்டும் அல்ல, அவளின் மற்றோரு ஆசையான ஆசிரியர் பணியும் ஒரு விதத்தில் நிறைவேறியதுடன், இரட்டைக் குழந்தைகளின் தாயாகவும் இன்று மகிழ்வாக வாழ்கிறாள். மலர்குழலியின் கதை அவளது கிராமத்திற்குள் மட்டுமல்ல, இலங்கையில் எங்கும் பரவி அவளுக்கு புகழ் சூடியது. என்றாலும் அவளின் வாழ்வு சவால்கள் இல்லாமல் இல்லை, ஏனென்றால் சமூகம் அதன் தப்பெண்ணங்களைக் கொண்டிருந்தது, ஆனால் மலர்குழலியும் அகக்கடலும் அவர்களை நெகிழ்ச்சியுடனும், விதிமுறைகளின்படியும், இணைந்து வாழும் உறுதியுடனும் எதிர்கொண்டனர். வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் காதல் மலரலாம், வயது என்பது வெறும் எண்தான் என்பதை கிராமவாசிகளுக்குக் கற்பித்த அவர்களின் கதை பலருக்கு உத்வேகமாக அமைந்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சிந்தை சிதறுதடி" [1]
"சிந்தை சிதறுதடி" [1] "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வாழாவெட்டி"
"வாழாவெட்டி" இலங்கையின் யாழ்பாணத்தில் ஒரு அமைதியான கிராமத்தில் நன்முகை என்ற ஒரு இளம் பெண் கனவுகள் நிறைந்த இதயத்துடன் உயர் வகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஆசிரியர் ஆகும் எண்ணத்துடன் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று வந்தார். நவம்பர் 28, 2022 அன்று யாழ்பாணத்தை ஆண்ட இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் குடும்பப்படம் தேசிய கல்வியியற் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது. சங்கிலிய மன்னனின் குடும்பப்படத்தை சித்திரத்துறை மாணவ ஆசிரியர்களின் மூலம் கல்லூரியின் சித்திரத்துறை விரிவுரையாளர் நெறிப்படுத்தியிருந்தார். அதேவேளை கல்லூரியின் நுழைவாயிலில் தனிக்கருங்கல்லால் ஆன 13.5 அடி சங்கிலியன் உருவச்சிலை இருப்பதும் குறிப்பிடத் தக்கது. அன்று மாலை கலை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது. அதில் நன்முகையின் பரதநாட்டியமும் இசை கச்சேரியும் இருந்தது. அவள் இப்ப இறுதியாண்டு மாணவி. அவள் மேடையில் ஏறுகையில் அவளுடைய திராட்சை விழிகள் நம்பிக்கையுடன் பிரகாசித்தன, அவளுடைய சிரிப்பு ஒரு மென்மையான மெல்லிசையாக எதிரொலித்தது. சதிராடும் அவளின் கண்களுக்கு முன்பு - வாழ்வில் சற்றும் சளைத்ததில்லை அவளின் இதழ்கள், மதியையும் மயக்கும் அளவில் - அவளின் சிவந்த உதட்டில் இருந்து வரும் பாடல் வரிகள் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டன. அப்படி ஒரு பாடலை தானே இயற்றி அங்கு பாடினாள். முன் வரிசையில் இளம் டாக்டர் இமையாளன் தலைமை விருந்தினராக அங்கு வீற்றிருந்தான். அவன் கண்கள் அவளையே பார்த்தபடி இருந்தது. “புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன் கயலே மணந்த கமலம் மலர்ந்து, பசும்பொற் கொடி நின்றது போல" அவனுக்கு அவள் தெரிந்தாள். ஆமாம் கூந்தலைச் சுமந்து, பிறை போன்ற நெற்றியை கொண்டு, போரிடும் வில் போன்ற புருவத்தை உடைய, கயல் மீன் போன்ற கண்ணுடன், தாமரை முகத்தாள் மலர்ந்து தூய பொன்னாலான கொடி நின்றது போல அவன் மனதில் அவள் நின்றாள். அவன் சற்று தன்னை இழந்து தடுமாறினான். அவன் வாய் "அஞ்சனம் தீட்டிய விழிகள், என்னை அடிமை ஆக்கிடும் வழிகள், தஞ்சம் அடையத் துடிக்கும் என்னை, வஞ்சம் தீர்க்க கொஞ்சும் இதழ்கள், மஞ்சத்தில் இல்லை சொர்க்கம், அவளின் மை தீட்டிய விழிகளில் ... " என தன்பாட்டில் முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. வசீகரத்தையும் கவர்ச்சியையும் வெளிப்படுத்திய இமையாளனை அவளின் கண்களும் கொஞ்சம் மேய்ந்தன. என்றாலும் அவள் அதற்குமேல் ஒரு கற்பனையும் செய்யவில்லை. பொதுவாக பெண்களின் அடி மனதில் ஒரு ஏக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும், ஆனால் அதை வெளியில் யாரும் பார்த்து விட கூடாது என்பதில் பெண்கள் சர்வ எச்சரிக்கையாக இருப்பார்கள். உண்மையில் ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்பதை காட்டிலும் பெண்கள் தான் ஆதிக அளவில் நோட்டம் போடுவதாக ஒரு உளவியல் சொல்கிறது. அதிகமாக அச்சம் மடம் நாணம் ஒருவேளை வெளிப்படையாக சிந்திக்க தடுத்து இருக்கலாம்? அல்லது நீ பெண் பெண் என்று வீட்டில் சொல்லி சொல்லி வளர்த்த கட்டுப்பாடாக இருக்கலாம்? அவளின் வீட்டைச் சுற்றியுள்ள பசுமையான நிலப்பரப்புகளைப் போலவே, பழக்கவழக்கங்களும் மரபுகளும் பாரம்பரிய குடும்பம் ஒன்றில் பிறந்த அவளிடம் ஒட்டியிருந்தன. ஒருகிழமைக்கு பின், நன்முகையின் வீட்டுக்கு இமையாளனின் பெற்றோர் பெண்கேட்டு வந்தனர். நன்முகையின் பெற்றோர் இப்படி ஒரு வரன் தங்கள் வீடு தேடிவரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அவர்கள் மிக மிக சந்தோசமாக ஏற்றுக்கொண்டனர். இமையாளன் ஒரு பிரசித்தி பெற்ற மருத்துவர் மட்டும் அல்ல, ஒரு விளையாட்டு வீரரும் கூட. அவனின் அப்பா ஒரு பெரும் செல்வாக்கு உள்ள செல்வந்த வர்த்தகர். "அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங், கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே, கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ, மானார் விழியார் மனம்" என பார்ப்பதற்கு அருமையான அத்தி மலரும், காக்கையின் வெள்ளை நிறமும், ஒலிக்கின்ற கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும், ஒருக்கால் பார்க்க இயன்றாலும், பெண்களின் மன நிலையை நம்மால் காண முடியாது என ஒரு நீதி வெண்பாப் பாடல் கூறினாலும், நன்முகை, மனம் திறந்து வெளிப்படையாகவே தன் மனநிலையை உறுதியாக தெரியப் படுத்தினாள். நன்முகை, இமையாளன் இருவருக்கும் பெற்றோர்கள் வாழ்த்த, ஊரார் போற்ற, நண்பர்கள் சூழ மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுடன் திருமணம் கொண்டாடப்பட்டு நன்முகையும் இமையாளனும் ஆழ்ந்த காதலில் வாழ்வை ஆரம்பித்தார்கள். அவர்களின் ஆரம்ப நாட்கள் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான கனவுகளை நெய்ததுடன், அவர்கள் புது வீட்டைக் கட்டி, தங்கள் அன்பின் வண்ணங்களால் வர்ணம் பூசி, எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களைப் அங்கு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றிப், பொன் எழில் பூத்து புது வானில் சிறகை அடித்து பறந்தனர். ஆனால் காலப்போக்கில், அவர்களின் திருமணத்தில் ஒரு விரிசல் தோன்றத் தொடங்கியது. கணவன், மனைவி இருவருமே ஒருவொருக்கு ஒருவர் மதிப்பளித்து, அன்போடும், அர்ப்பணிப்போடும் வாழ்ந்தால் இல்லறம், நல்லறமாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. என்றாலும் பெற்றோர்கள், உறவினர்களிடம் இருந்து தனிக்குடித்தனம் தூரப் போனபின், தாங்களே உடனுக்குடன் முடிவு எடுப்பதாலும் சிலவேளை விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் சிக்கல் ஏற்படுகின்றன என்பது உண்மைதான். அதுமட்டும் அல்ல, இன்று சமுதாயத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளில் தம்பதியினரின் கருத்துவேறுபாடும் ஒன்றாகும். வாழவும் முடியாமல், மீளவும் முடியாமல், போலி வாழ்வு வாழ்ந்து வாழ்வை வீணாக்குபவர்களை இன்று காணக்கூடியதாக உள்ளது. அதற்காக எல்லா நேரமும் சமாளித்து போகவேண்டும் என்று அர்த்தம் இல்லை. எமது சமுதாயத்தில் குடும்பம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பெண்ணுக்கு அவளது மரியாதை மனைவியாகும் போதும், தாய் ஆகும் போதும் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது சரியான கணவனை அடையும் பொழுது தான். இமையாளனின் வேலை அவரை நீண்ட நேரம் வேலை செய்ய வைத்தது, நன்முகையை வீட்டில் தனியாக விட்டுவிட்டார். ஆனால் அவள் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. இளம் தம்பதியராக, காதலராக இரண்டு மூன்று ஆண்டுகள் அனுபவித்தபின், தாயாகும் அவளின் ஆரம்ப எண்ணம் மேல் தான் கோபம் வந்தது. ஒரு குழந்தை இருந்து இருந்தால் அது அவளின் தனிமையை குறைப்பதாகவும் ஆறுதலாகவும் இருந்து இருக்கும். காலப்போக்கில் அவர்களுக்கிடையே உள்ள தூரம் வளர்ந்தது, விரைவில், தவறான புரிதல்கள் உறவில் ஊடுருவத் தொடங்கின. நீண்ட வேலை, நேரம் சென்று வீடுவருதல், களைப்பு போன்றவற்றால் இமையாளன் நன்முகையுடன் தனது துணைக்கென ஒரு நேரம் சரியாக ஒதுக்குவது இல்லை. அவன் நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல வசதி, சமூகத்தில் நல்ல அந்தஸ்து. அத்தனையும் அவளும் அனுபவிக்கக் கூடியதாக இருந்தது. என்றாலும் ஒரு தனிமை அவளை வாட்டிக்கொண்டே இருந்தது. அவர்கள் இருவரும் பரஸ்பரம் மனம் விட்டு பேசுவது குறைந்து கொண்டே போனது. இங்கு உணர்வுகளுக்கோ உணர்ச்சிகளுக்கோ உறவுகளுக்கோ முக்கியத்துவம் இன்றி போகத்தொடங்கியது. நன்முகை அவனுக்கு பிடித்தமான உணவைச் சமைத்து, தன்னை அலங்காரம் செய்து அவன் வேலையால் திரும்பி வரும் பொழுது ஆவலுடன் காத்திருந்து தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருக்க தன்னால் இயன்றவரை முயன்றாள். இருப்பினும், இமையாளன் தனது வேலையில் அதிக ஈடுபாடு கொண்டவராக சில பல வேளை, நன்முகையை புறக்கணித்து விடுவான். அதனால் நன்முகை விரக்தியின் விளும்புக்குப் போகப்போக அவளிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இப்ப அவள் அவனுக்காக காத்திருப்பது இல்லை. உணவை சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு நேரத்துடன் படுத்துவிடுவாள் அல்லது தன் நண்பிகளுடன் பொழுதுபோக்குவாள். அவன் அவளுடன் தன் நேரங்களைப் பொறுத்து கொஞ்சி குலாவி கதைக்க வந்தாலும் அவள் அவனை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க தொடங்கினாள். அவளின் கோபம் புரிகிறது. அது எங்கே போகும் என்பதை அவள் உணரவில்லை. அவள் நினைத்தது எல்லாம், இப்படி செய்தால், அவன் தன் பிழையை உணர்ந்து, வீட்டிலும் தன்னிலும் ஒரு குறிப்பிடட நேரமாவது செல்வழிப்பான் என்றே! ஆனால் அது தான் அவளின் வாழ்க்கையையே முற்றாக மாற்றி விட்டது. உடற்கூறு ரீதியாக இமையாளனின் இந்த இளம் வயதில், நன்முகையின் புறக்கணிப்பால், ஏற்படுகிற காம உணர்வு சமுதாயக் கட்டுப்பாடுகளை மீறத் தொடங்கியது. அவள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது. அவன் மது, மாது இரண்டுடனும் மெல்ல மெல்ல தொடர்பை ஏற்படுத்தி கொண்டான். நன்முகையை அவன் ஏறெடுத்து பார்ப்பதும் இல்லை. ஒரு மனைவி வீட்டில் இருக்கிறாள் என்பதை மறந்தே விட்டான். என்றாலும் வேலையில் அவன் கவனம் எள்ளளவும் குறையவில்லை. அவனின் மாற்றத்தை கண்ட சமுதாயம், அவனை திட்டவில்லை. மாறாக அவளையே திட்ட தொடங்கிவிட்டது. காலப்போக்கில், நன்முகையை வாழாவெட்டி என ஒதுக்க தொடங்கினார்கள். சிலர் பரிதாபத்தால் கிசுகிசுத்தனர், மற்றவர்கள் ஆர்வத்தால் கிசுகிசுத்தனர், ஆனால் நன்முகை கிசுகிசுக்களை பொருட்படுத்தவில்லை. கணவன் உண்மை நிலையை அறியாமல் வெறுத்து தள்ளினாலும் ஒரு பெண்ணால் வலுவாக நிற்க முடியும் என்று நம்பினாள். அவனின் அறியாமையை ஒரு காலம் நீக்க முடியும் என்றும் நம்பினாள். அவளுக்கு சமுதாய அமைப்பின் மேல் வெறுப்பு வெறுப்பாக வந்தது. ஏன் தன் மேலேயே ஒரு கோபம் வந்தது. ஆணாதிக்கச் சமூகம் பெண்ணை எப்படிப் பார்க்கிறதோ, அப்படியே அவர்களால் உருவாக்கப்பட்ட மொழியும் பெண்ணைப் பார்க்கிறது என்று உணர்ந்தாள். பெண், திருமணமாகி கணவனால் கைவிடப்பட்டால் அல்லது ஒதுக்கப்பட்டால் ‘வாழாவெட்டி’ என்று தூற்றப்படுகிறாள். மனைவியைப் பிரிந்து வாழும் ஆடவனுக்கு இந்த அவச் சொல் கிடையாது. அது ஏன் என்று தனக்குள் வாதாடினாள். குழந்தை பெற்றுத் தராதவள் ‘மலடி’ என்று பழிக்கப்படுகிறாள். ஆனால், ஆணின் மலட்டுத்தன்மை வெளியே சொல்லப்படுவதேயில்லை. ... இப்படி அவள் மனம் எதை எதையோ அலசிக்கொண்டே இருந்தது. பத்தினி என்றால் என்ன ? அவள் தனக்குத்தானே கேள்விகேட்டாள். தன் உடல் தேவைக்கு மட்டும் அவ்வப்போது பாவிக்க, அதை ஆமோதித்து, தாலியை முத்தம் செய்து கண்ணில் ஒற்றிக்கொள்ளும் பத்தினி வேஷம் போட நான் தயாராய் இல்லை என்று அவளும் ஒரு எல்லைக்கு போய்விட்டாள். தன் கணவர் மௌத்கல்ய முனிவரை, நளாயினி கூடையில் சுமந்துகொண்டு போய் கணவர் விரும்பும் பெண் வீட்டில் விட்டுவிட்டு வெளியே காவல் இருந்தாளாம். அவளை பதிவிரதையாம், பத்தினியாம் ? அவளுக்கு சிரிப்பு வந்தது. அவள் அவனை விட்டு தாய் வீடு போய் அல்லது ஒரு தனி வீட்டில் இருந்து, ஒரு ஆசிரியையாக தன் பழைய கனவை நிறைவேற்றுவது என்ற முடிவுக்கு வந்து, அவன் இப்ப ஒழுங்காக வீடு வாராததாலும், துப்பரவாக கதைப்பதில்லை என்பதாலும், அதை அவனிடம் நேரடியாக கூறாமல், ஒரு கடிதம் மூலம் தெரிய படுத்தினாள். திருமணத்தன்று யாவரும் கூடி எதிர்பார்ப்போடும் நம்பிக்கையுடனும் புதுவாழ்வு ஆரம்பமாகும். ஆனால், பிரிந்த அன்று வாழாவெட்டி என்ற பட்டத்துடன் புறக்கணிக்கபட்ட தனி வாழ்வு ஆரம்பமாகும். சமுதாயம் குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்துவிடும். நீ ஒழுங்காக அனுசரித்து போயிருந்தால் அவன் ஒழுங்காக இருந்திருப்பான் என்ற ஆயிரம் விமர்சனங்கள் கூறும். விசேட நாட்களுக்குரிய வரவேற்பு கூட அவளுக்கு மறுக்கப்படும். சிலவேளை உறவுகள் உறவு கொள்ளக் கூட மறுப்பினர். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவளாக நிரந்தரமாக போய்விடுவேன் என்பது அவளுக்கு தெரியும். எனவே தான் விவாகரத்து கோராமல் பிரிந்து போக நினைத்தாள். திறந்த தொடர்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட புரிதல் மூலம் கட்டாயம் மீண்டும் ஒரு நாள் இணையலாம் என்பது அவளின் முடிவு. காரணம் இமையாளன் அறிவு படைத்தவன். நல்ல குடும்பத்தில் பிறந்தவன். இது கோபம், வெறுப்புகளால் ஏற்பட்ட ஒரு தற்காலிக மாற்றமே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"மாற்ற மொன்றே மாறாதது"
"மாற்ற மொன்றே மாறாதது" "மலைகள் உயரும் சிகரம் கவிழும் விதைகள் முளைக்கும் பூக்கள் வாடும் இன்று இருந்தவன் நாளை இல்லை காலம் காட்டும் உண்மை இதுவே!" "மழை பெய்யுது மண்ணை அரிக்குது பனி பொழியுது உயிர்களை முடக்குது வெயில் அடிக்குது நிலத்தை உலர்த்துது பருவம் செதுக்கும் செயல் இவையே!" "ஆறுகள் பாயும் ஓட்டம் வேறுவேறே சிற்றலை மோதும் வடிவம் பலபலவே காற்று வானம் எல்லாம் மாறுமே மாற்ற மொன்றே மாறாதது என்றுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"Historical truth of New Year / புத்தாண்டு வரலாற்று உண்மை" [ஆங்கிலத்திலும் தமிழிலும்]
"Historical truth of New Year / புத்தாண்டு வரலாற்று உண்மை" [ஆங்கிலத்திலும் தமிழிலும்] One of the earliest recorded New Year celebrations dates back around 4,000 years ago in ancient Babylon, where the Babylonians celebrated the New Year during the spring equinox began with the new moon (mid-March). They held a festival called Akitu, which lasted 11 days and involved various religious rituals and ceremonies to ensure a prosperous new year and in Assyria with the new moon nearest the autumn equinox (mid-September). The practice of celebrating the New Year has evolved over time and varied among different cultures. The ancient Egyptians, for instance, celebrated the New Year in conjunction with the annual flooding of the Nile River, which marked the beginning of their agricultural season. The Romans celebrated the New Year in March, but in 46 B.C., Julius Caesar introduced the Julian calendar, which moved the beginning of the year to January 1st in honor of Janus, the Roman god of beginnings and transitions. This change marked the start of the year in alignment with the cycle of nature and the winter solstice. The Romans derived the name for the month of January from their god Janus, who had two faces, one looking backward and the other forward. The practice of making resolutions to rid oneself of bad habits and to adopt better ones also dates to ancient times. Throughout history, various societies have celebrated the New Year with feasts, religious observances, and customs specific to their cultures. Many traditions associated with New Year's celebrations, such as making resolutions, exchanging gifts, and holding festivities, have endured through time and have been adopted by different civilizations around the world. Today, the celebration of the New Year is a global event marked by diverse customs and traditions, reflecting a blend of ancient practices and modern influences. It symbolizes new beginnings, hope, and the opportunity for a fresh start as people welcome the coming year. மிகப் பழைய பதிவு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய பாபிலோனில் இருந்தது இன்று தெரிய வருகிறது, அங்கு பாபிலோனியர்கள் வசந்த உத்தராயணத்தின் போது புத்தாண்டைக் கொண்டாடினர். அவர்கள் அகிடு என்று அழைத்து இந்த திருவிழாவை நடத்தினர், இது 11 நாட்கள் நீடித்தது மற்றும் வளமான புத்தாண்டை உறுதி செய்வதற்காக பல்வேறு மத சடங்குகள் மற்றும் சடங்குகளை இது உள்ளடக்கியது. வசந்த உத்தராயணம் என்றால் என்ன? இரவும் பகலும், சமமாக இருப்பதால், மார்ச் மாதம் வசந்த காலம் என்று கூறப்படுகிறது. இது வசந்த காலம் அல்லது வடக்கு நோக்கிய உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் பூமத்திய ரேகை முழுவதும் கடந்து, வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கு அரைக்கோளத்தில் நீண்ட (அதனால் வெப்பமான) நாட்களையும், தெற்கு அரைக்கோளத்தில் குறுகிய (மற்றும் குளிரான) நாட்களையும் கொண்டு வரும் நிகழ்வைக் குறிக்கிறது. புத்தாண்டைக் கொண்டாடும் பழக்கம் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியடைந்து பல்வேறு கலாச்சாரங்களிடையே வெவ்வேறாக மாறுபட்டது. உதாரணமாக, பண்டைய எகிப்தியர்கள், நைல் நதியின் வருடாந்த வெள்ளப் பெருக்குடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடினர், இது அவர்களின் விவசாய பருவத்தின் தொடக்கத்தைக் குறித்தது. ரோமானியர்களும் மார்ச் மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடினர், ஆனால் கிமு 46 இல், ஜூலியஸ் சீசர் ஜூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார், இது ஆரம்பம் மற்றும் மாற்றங்களின் ரோமானிய கடவுளான ஜானஸின் நினைவாக ஆண்டின் தொடக்கத்தை ஜனவரி 1 ஆம் தேதிக்கு மாற்றியது. இந்த மாற்றம் இயற்கையின் சுழற்சி மற்றும் குளிர்கால சங்கிராந்தியுடன் இணைந்து ஆண்டின் தொடக்கத்தைக் குறித்தது. ரோமானியர்கள் ஜனவரி மாதத்திற்கான பெயரை தங்கள் கடவுளான ஜானஸிலிருந்து பெற்றனர், அவர் இரண்டு முகங்களைக் கொண்டிருந்தார், ஒன்று பின்னோக்கி மற்றொன்று முன்னோக்கிப் பார்க்கிறார். தீய பழக்கங்களில் இருந்து விடுபடவும், சிறந்த பழக்கங்களை கடைப்பிடிக்கவும் தீர்மானங்களை எடுக்கும் பழக்கமும் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்பது இதில் இருந்து புலப்படுகிறது குளிர்கால சங்கிராந்தி என்றால் என்ன? குளிர்கால சங்கிராந்தி என்பது பெரும்பாலும் "ஆண்டின் குறுகிய நாள்" என்று அழைக்கப்படுகிறது. இது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தின் முதல் நாளைக் குறிக்கிறது. இந்த குளிர்கால சங்கிராந்தி பொதுவாக ஆண்டுதோறும் டிசம்பர் 20 அல்லது 21 ல் நடைபெறுகிறது. மிகவும் அரிதான காலங்களில் டிசம்பர் 23 ல் நடைபெறுகிறது. வரலாறு முழுவதும், பல்வேறு சமூகங்கள் புத்தாண்டை விருந்துகள், மத அனுசரிப்புகள் மற்றும் தங்கள் கலாச்சாரங்களுக்கே உரிய குறிப்பிட்ட பழக்கவழக்கங்களுடன் கொண்டாடியுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய தீர்மானங்கள், பரிசுகளை பரிமாறிக் கொள்வது மற்றும் பண்டிகைகளை நடத்துவது போன்ற பல மரபுகள் காலப்போக்கில் நிலைத்தது மட்டும் அல்ல உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாகரிகங்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளன. இன்று, புத்தாண்டு கொண்டாட்டம் என்பது பல்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளால் குறிக்கப்பட்ட உலகளாவிய நிகழ்வாகும், இது பண்டைய நடைமுறைகள் மற்றும் நவீன தாக்கங்களின் கலவையாக இன்று பிரதிபலிக்கிறது. புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பாக வரவிருக்கும் ஆண்டு மனித வாழ்வின் புதிய தொடக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவற்றை ஏற்படுத்தும் என மகிழ்வாக அதை வரவேற்கின்றனர். (கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna)
-
"பெண்ணே புயலாகு”
"பெண்ணே புயலாகு” இலங்கைத் தீவானது, தொன்மை வாய்ந்த இரு நாகரீகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்கின என்பது வரலாற்று உண்மையாகும். என்றாலும் சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியதை அடுத்து, சிங்களப் புத்த பேரினவாதம் மேலாண்மை பெற்றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை குரூரமான வன்முறை வடிவமாக, கொஞ்சம் கொஞ்சமாக 1956, 1958, 1966, 1977, 1981, 1983, 1985, கலவரமாக மாறத் தொடங்கி, அது 2009 உச்சகட்டத்தை அடைந்தது வரலாறு ஆகும். வன்னி அடிப்படையில் நீர் மேலாண்மைக் குடியிருப்பு ஆகும். ஆறுகளும், கடல்களும், குளங்களும், நீரிணைகளும், வாய்க்கால்களும், ஓடைகளும், நீரேரிகளும் அதனை வடிவமைத்தன. நீராலேயே அதன் ஊர்கள் பலவும் பெயரிடப் பட்டன. அதைவிட அங்கு வயல்கள், தோட்டங்கள், சதுப்புக்கள், சிறுகுன்றுகள், பெருமரங்கள், காடுகள் என்பனவற்றுடன் பறவைகள், விலங்குகள் முதலான அப்பிராந்தியத்திற்கே சிறப்பாகவுள்ள மரபுரிமைச் சொத்துக்களைக் கொண்டுள்ளன. ஆனால் 2008 / 2009 ஆண்டில் அங்கு ஏற்பட்ட கொந்தளிப்பான சூழலில், போர் ஆழமான வடுக்களைச் செதுக்கி, அமைதி தொலைதூர கனவாக மாறிய அந்த தருணத்தில், 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கையில் 30 வருடங்கள் தொடர்ந்த ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட அந்த தருணத்தில், அன்னக்கொடி என்ற இளம் தாயும் அவளது மகள் மலர்மேனியும் முல்லைத்தீவில் வாழ்ந்து கொண்டு இருந்தனர். முல்லைத்தீவில் நடந்த மோதலில், இதயத்தை உலுக்கும் கடைசி நாட்களில், ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் தப்பிப் பிழைத்து உள்நாட்டு அகதிகளாக, தங்கள் வீட்டை மட்டும்மல்ல, தங்கள் குடும்பத்தின் தலைவன், அன்னக்கொடியின் கணவன் மற்றும் அவளது மகனையும் காணாமலாக்கப்பட்டதால், வன்முறை மற்றும் அவநம்பிக்கையின் எச்சங்கள் நிழல்கள் போல நீடித்திருக்கும் அந்த மண்ணில் இருந்து இருவரும், களப்பு வழியாக, சிறிய நீர்ப்பகுதி, சேற்றுப்பகுதி ஊருக்குள்ளாலும் காட்டு வழிகளினாலும் செத்தவர் போக மிஞ்சியவர்கள், காயப்பட்டவர்கள் என பல பேருடன் இடம் பெயர்ந்து தற்காலிக குடிகளில், வாழ அவர்களை விட்டுவிட்டது. இடம் பெயர்ந்த மக்களாக, வன்னியில் அவர்களது வாழ்க்கை கடுமையானதாக, அவர்களுக்கு நிலையான தங்குமிடம் இல்லாமலும் எந்த நிரந்தர வருமானம் இல்லாமலும் இருந்தது. உணவைத் தேடுவதற்கும் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கும் அவர்களின் வாழ்க்கை முடிவில்லாத போராட்டங்களாக இருந்தன. அவர்களின் தற்காலிக குடியிருப்புக்கு அருகிலுள்ள இராணுவ முகாம் அவளுக்கு போரையும் அதன் பின்விளைவுகளையும் நினைவூட்டிக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு இரவும், அன்னக்கொடி ஒழுங்காக நித்திரை கொள்ளவில்லை. எந்த சத்தமும் அவளுக்கு ஒரு பயத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. உடுத்த உடையைத் தவிர வேறு வேறெதுவும் எடுத்துச் செல்ல முடியாமல் வந்தவர்கள் இவர்கள். வெள்ளப் பாதிப்பினாலோ புயலின் தாக்கத்தினாலோ அகதியானவர்களல்ல. இரத்தம், தீ, காயம், வலி என்ற ஏராளமான வதைகளிலிருந்து, மரணப் பொறிகளிலிருந்து தப்பியவர்கள்; தப்ப முனைந்தவர்கள் தான் இவர்கள். யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது எதோ ஒரு வகையில் தொடர்வதாகவே இருந்தது. குண்டு வீச்சில்லை, துப்பாக்கி வேட்டுகள் இல்லை, மரணம் இல்லை, மற்றபடி அத்தனை துன்பங்களும் வலிகளும் துயரங்களும் அலைச்சல்களும் இன்னும் இருந்து கொண்டே அவர்களுக்கு இருந்தது. அதிலும், முல்லைத்தீவில் இத்தனை இடையூறுகளுக்கிடையிலும் அவர்கள் கண்டிராத கொடுமை இப்ப அவர்களுக்கு நேரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ நேரிடும் பாலியல் வன்கொடுமை தான்! அன்னக்கொடிக்கு ஒரு நாற்பது அகவை தான் இருக்கும். அவளின் கண்கொள்ளா அழகும் இனிமை நிறைந்த வார்த்தைகளும், அதற்கு ஈடான, ஆனால் இளம் பருவத்தின் பூரிப்பில் தவழும் வஞ்சிக்கொடி போன்று மெல்லிய இடையினையும் மலர் போன்ற மென்மையான வண்ண மேனியையும் கொண்ட பதினெட்டு அகவை மலர்மேனிக்கும், அவர்களின் நிறமும் தோற்றமும் தான் எதிரியாகியது அங்கே. அவர்கள் வறுமையிலும் துன்பத்திலும் படும் வேதனையை சாதகமாக்கி, தங்கள் காம பசிக்கு அவர்களை இரையாக்குவதிலேயே சிலரின் கண்கள் மேய்ந்து கொண்டு இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பாலியல் வன்முறைகள் என்பது வெறும் பாலியல் வன் புணர்வு அல்ல. அதற்கும் மேலாக, பாலியல் நோக்கத்துடன் கூடிய பேச்சுக்கள், சீண்டல்கள், பார்வைகள், அடக்குமுறைகள், மிரட்டல்கள் போன்ற எல்லாமே அடங்கும். எனவே எடுத்தவுடன் ஒருவனின் வெளிப்படையான நடவடிக்கைகளை வைத்து எடை போடுவது கடினம். அவளின் குடியிருப்புகளில் வாழும் பழக்கமான சில ஆண்கள், சில சமயங்களில், அவள் படும் கஷடங்களைப் பார்த்து கருணை என்ற போர்வையில் அவளை அணுகி உதவியும் செய்தார்கள். ஆனால், அதைச் சாட்டாக வைத்து நெருங்கிப் பழக முயன்றாலும், அன்னக்கொடி அதைச் சமாளித்து, தன்னைச் சுற்றியுள்ள கடுமையான யதார்த்தத்திலிருந்து பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வாழ்க்கையைச் நகர்த்தினாள். "பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும் மக்களைப் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும் கல்வியைப் பேணுதற்கே!" என்ற பாரதிதாசன் அடிகளை நன்கு உணர்ந்த மலர்மேனி, கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவளாக, தன் தாயின் கனவுகளையும் தன் கனவுகளையும் சுமந்து இடம்பெயர்ந்த குடியிருப்பின் வரம்புகளுக்கு அப்பால், ஒரு வாழ்க்கையை செதுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், அறிவியல் பாடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு உட்கார வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனால் அந்தக் குடியிருப்பில் தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிய வாழ்வது, இளம் பெண்ணான மலர்மேனிக்கு பெரும் சவாலாகவும் இருந்தது. "தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும், காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம் சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை, தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே," ஒரு நாள் மாலை, குடியிருப்பின் மீது சூரியன் நீண்ட நிழல்களைப் பரவிய போது, மலர்மேனி மாலை வகுப்புகளில் இருந்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தாள். அந்த குடியிருப்பை சேர்ந்த, ஆண்டில் முதிர்ந்த ஒருவன், அவளை ஒரு மூலையில் வழி மறித்தான். உச்சிக் குடுமி வைத்து மொட்டையடித்த தலையை உடையவன் அவன். தன் காதில் கடுக்கன் அணிந்திருந்தான். கிழிந்த கறை பட்ட ஆடை அணிந்திருந்தான். அவன் நம் தெருவை விட்டு எங்கும் செல்லாதவன். அவன் என்ன செய்தான் தெரியுமா? "பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி, யார், இவண் நின்றீர்?’ எனக் கூறி, பையென, வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது, ‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று, தன் பக்கு அழித்து, ‘கொண்டீ’ எனத் தரலும் யாது ஒன்றும்" அவன் அங்கே என்னைப் பார்த்தான். அவன் குள்ளன். பணிவில்லாமல் பேசினான். "பொழுதல்லாப் பொழுதில் இங்கே நிற்கிறாயே, நீ யார்" என்று கேட்டுக் கொண்டே மெதுவாக நெருங்கினான். வைக்கோலைக் கண்டு கிழட்டு எருது வருவது போல வந்தான். அங்குமிங்கும் ஒதுங்கவில்லை. "பெண்ணே! வெற்றிலைப் பாக்குப் போட்டுகொள்கிறாயா" என்று கேட்டான். (வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொள்கிறாயா என்றால் என்னுடன் கூடியிருக்க ஒப்புகிறாயா என்பது காமுகர் பேசும் பேச்சு) இருவருக்கும் இடையே இருக்கும் இடை வெளியைக் குறைத்துக் கொண்டு என் பக்கம் வந்து "வாங்கிக்கொள்" என்று வெற்றிலைப் பாக்கைக் கொடுத்தான். "வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி, ‘கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' ‘மற்று யான்" நான் வாய் திறந்து எதுவும் கூறவில்லை. சும்மா நின்று கொண்டிருந்தேன். சற்றே அகன்று நின்றான். "சிறுமியே, நீ என் கையில் அகப்பட்டுக் கொண்டாய்" என்றான். அவள் ஒருவாறு அங்கிருந்து தப்பி வீடு வந்தாள். அன்னக்கொடி தன் மகளின் கண்களில் இருந்த பயத்தைப் பார்த்தாள். அன்று இரவு, தாயும் மகளும் தங்கள் பயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினர். “காதலுக்கு நான்கு கண்கள் கள்வனுக்கு இரண்டு கண்கள் காமுகனின் உருவத்தில் கண்ணுமில்லை காதுமில்லை” அன்னக்கொடி முணுமுணுத்தாள். அவர்கள் போரில் தப்பிப்பிழைத்தாலும் தொந்தரவுகள் மட்டும் நின்றபாடில்லை. அவர்கள் இடம்பெயர்ந்தனர், வீடு மற்றும் குடும்பத்தை இழந்தனர், இந்த பலவீனமான இருப்பில், அன்னக்கொடி தனது மகளை அவர்களைச் சுற்றியுள்ள கடுமையான உலகத்திலிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று கடுமையாக அன்று இரவு முழுவதும் சிந்தித்தாள். காம வெறியர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம், அறம், மனித நேயம், கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு, நல்லொழுக்கம் முதலிய மனிதப் பண்புகளில் நாட்ட மில்லை. இவர்களின் நோக்க மெல்லாம் உடல் மற்றும் உள்ள இச்சைகளைத் தணிப்பதேயாகும். இவர்களுக்கு அறம் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அப்படி எனறால், "தீ என்னை வாட்டிடினும் கையைத் தொடாதேயடா - இந்த முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி மூச்சுப் பெரிதில்லை காண்" என்று வலிமையை நெஞ்சில் ஏற்றி "நான் ஒரு துர்கா.” என்று எழவேண்டும் என்று முடிவெடுத்து, அதை மகளிடம் தக்க தருணத்தில் சொல்ல முடிவெடுத்தாள். ஒரு நாள் மாலை, அன்னக்கொடி எண்ணெய் விளக்கின் மங்கலான ஒளியில் அமர்ந்து, மலர்மேனியின் ஒரே பள்ளி உடையில் கிழிந்த ஒரு பகுதியை தைத்துக் கொண்டு இருந்தாள். அவள் விரல்கள் கவனமாக நகர்ந்தன, ஆனாலும் அவளது அசைவுகளில் உறுதியான வலிமை இருந்தது. அருகில் வீட்டுப் பாடங்களை முடித்துக் கொண்டிருந்த மலர்மேனி, அம்மாவின் முகபாவத்தைக் கவனித்து அமைதியாகப் பேசினாள். "அம்மா, சில சமயங்களில் விட்டுக்கொடுக்கணும்னு தோணுது, இளைஞர்கள், நடுத்தர ஆண்கள் முறைத்துப் பார்க்கும் விதம் ... அவர்கள் சொல்லும் விடயங்கள் ... மற்றும் ராணுவ வீரர்கள்..." அவள் கொஞ்சம் நிறுத்தினாள், வலியால் அவள் கண்கள் இருண்டன. "நான் சிக்கிக் கொண்டது போல் உணர்கிறேன்." என்றாள். அன்னக்கொடி தைத்துக் கொண்டு இருந்த ஆடையைக் கீழே போட்டு விட்டு மகளின் கண்களை ஆழமாகப் பார்த்தாள். அவள் மலர்மேனியின் கையை இறுக்கிப் பிடித்தாள். "மலர்மேனி," தாயின் குரல் மென்மையாக ஆனால் உறுதியாக இருந்தது "புயல் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டாள். தாய் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் அவள் தலையை ஆட்டினாள். “என் மகளே, புயல் பயங்கரமானது, அது மலைகளை நகர்த்துகிறது, பூமியை அசைக்கிறது, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது. மக்கள் அதைக் கட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் முடியாது. நாமும் புயல்களாக இருக்க வேண்டும். நாம் அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுவதால் அல்ல, ஆனால் நம்மை அசைக்க முடியாது என்பதை உலகுக்கும் அவர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக." என்றாள். அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்துவிட்டு, "பெண்ணே புயலாகு” என்று மகளைக் தட்டிக்கொடுத்தாள். "வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு வானம் தண் துளி தலைஇ, ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று" போல் “இதை நினைவில் கொள் மலர்மேனி. எமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை இனிது என்று மகிழத் தேவையும் இல்லை அல்லது வெறுப்பில் ‘வாழ்க்கை துன்ப-மயம்’ என்றும் கூறத்தேவையும் இல்லை, நாங்கள் நதியைப் போன்றவர்களும் கூட , வானம் மின்னி மழை பொழிந்து கல்லை உருட்டிக்கொண்டு இரைச்சலுடன் பாயும் ஆறு போல், எந்தப் பாறையையும் அறுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தவர்கள். இந்த அவர்களின் அத்துமீறல்கள் ... நம்மைத் தடுக்க முயற்சி செய்யலாம், ஆனால் நாம் தொடர்ந்து பாய்ந்து கொண்டே இருப்போம். நாங்கள் பயப்படவோ அல்லது பதுங்கவோ இங்கு வரவில்லை. எங்கள் பாதையை செதுக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். இதை உணர் மலர்மேனி, என் அன்பு மகளே !, 'பெண்ணே புயலாகு', நீ துர்காவாக எழுந்து நில்!!, ஆறாக பாய் !!!" என்றாள். மறுநாள் காலை, மலர்மேனி பள்ளிக்குச் செல்லும்போது, அம்மாவின் வார்த்தைகளை கவசம் போல சுமந்தாள். இளைஞர்கள் மற்றும் நடுத்தர ஆண்கள் ஏளனம் செய்வார்கள், சிப்பாய்கள் ஏளனம் செய்வார்கள் என்று அவளுக்குத் தெரியும், ஆனால் அவள் இனி ஒரு புயல், அவள் ஒரு துர்கா! அவள் எதிர்பார்த்தது போலவே, உள்ளூர் கூட்டம் சாலையோரம் நின்றும் மதகில் குந்தி இருந்தும், அவள் அவர்களை கடந்து செல்லும் பொழுது அவளுக்கு பாலியல் சார்ந்த கேலி மற்றும் மிரட்டல்கள் செய்தார்கள். ஆனால் இந்த முறை அவள் பயந்து விரைவாக நடக்கவில்லை, முகத்தை மறைக்கவில்லை, ஆனால் "ஏன் என்னை முறைக்கிறாய்?" அவள் துணிந்து கேட்டாள், அவள் குரல் உறுதியாக, கடினமாக இருந்தது. அவளின் பார்வை, கண்ணகி போல, அவர்களை எரித்துவிடும் போல இருந்தது. அந்த ஆண் கூட்டம் அதிர்ச்சியடைந்தனர். அவள் அவர்களைத் தவிர்ப்பாள், தங்கள் பார்வையில் குறுகிவிடுவாள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களில் ஒருவன், தங்கள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றான், மீண்டும் கேலி செய்தான். "எங்களிடம் அப்படிப் பேசும் நீங்கள், நாம் யார் என்று நினைக்கிறீர்கள்?" என்று மிரட்டலாக கேட்டான். மலர்மேனி தலை நிமிர்ந்து நின்றாள். “நான் அன்னக்கொடியின் மகள் மலர்மேனி. நான் இங்கு படிக்க வந்திருக்கிறேன், எதுக்கும் தகுதியற்ற, தெரு நாய்களிலும் கேவலமான உன்னுடைய பேச்சைக் கேட்க அல்ல." ஆணித்தரமாகச் சொன்னாள். “மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்” "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உனக்கு வள்ளுவர் சொல்லியது . இதெல்லாம் உனக்கு எங்கே விளங்கப்போகுது?" என்றாள். அவளுடைய எதிர்ப்பானது அந்த கூட்டத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது, ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே, கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே," அவன் பயந்துவிட்டான். அதனை அறிந்து கொண்ட அவள், மேலும் ஒரு கை மண்ணை அள்ளி அவன் மேல் தூவினாள். அவன் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வேகமாக கத்த ஆரம்பித்தான். அவள் புயலாக நடந்து செல்லும் போது அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு அமைதியாகிவிட்டனர். மலர்மேனி தனக்குள் சிரித்துக் கொண்டாள். இது ஒரு சிறிய வெற்றிதான், ஆனால் அது அவளுடைய கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும். அன்று மாலை அன்னக்கொடி தங்களின் எளிய உணவை தயார் செய்த போது மலர்மேனி தன் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறினாள். அன்னக்கொடியின் கண்கள் பெருமிதத்தாலும் சோகத்தாலும் நிறைந்தன. மலர்மேனியின் பயணம் எளிதானது அல்ல என்பதை அவள் அறிந்திருந்தாள், ஆனால் அவள் மகளின் இந்த உள் வலிமையை ஒரு ஆரம்ப வெற்றியாகக் கண்டு மகிழ்ந்து, அவளை அணைத்து தட்டிக்கொடுத்தாள். "பெண்ணே புயலாகு” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "பெண்ணே புயலாகு” [சுருக்கம்] இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தருணத்தில், அன்னக்கொடி என்ற இளம் தாய், தனது கணவன், மகன் இருவரும் முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டதால், மகள் மலர்மேனியுடன் தப்பிப் பிழைத்து உள்நாட்டு அகதிகளாக, அவர்களது வாழ்க்கை கடுமையானதாக, எந்த நிரந்தர வருமானம் இல்லாமலும் இருந்தது. யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது எதோ ஒரு வகையில் தொடர்வதாகவே இருந்தது. அதிலும், முல்லைத்தீவில் இத்தனை இடையூறுகளுக்கிடையிலும் அவர்கள் கண்டிராத கொடுமை இப்ப அவர்களுக்கு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ நேரிடும் பாலியல் வன்கொடுமை தான்! அன்னக்கொடிக்கு ஒரு நாற்பது அகவை தான் இருக்கும். அவளின் கண்கொள்ளா அழகும் இனிமை நிறைந்த வார்த்தைகளும், அதற்கு ஈடான, ஆனால், இளம் பருவத்தின் பூரிப்பில் தவழும் வஞ்சிக்கொடி போன்று, மெல்லிய இடையினையும் மலர் போன்ற மென்மையான வண்ண மேனியையும் கொண்ட, பதினெட்டு அகவை மலர்மேனிக்கும், அவர்களின் நிறமும் தோற்றமும் தான் எதிரியாகியது அங்கே. அவளின் குடியிருப்புகளில் வாழும் பழக்கமான சில ஆண்கள், சில சமயங்களில், அவள் படும் துன்பங்களைப் பார்த்து, கருணை என்ற போர்வையில், அவளை அணுகி, உதவியும் செய்தார்கள். ஆனால், அதைச் சாட்டாக வைத்து நெருங்கிப் பழக முயன்றாலும், அன்னக்கொடி அதைச் சமாளித்து, வாழ்க்கையை நகர்த்தினாள். மலர்மேனி, கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவளாக, ஒரு வளமான வாழ்க்கையைச் செதுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், உறுதியாக இருந்தாள். ஆனால் அந்தக் குடியிருப்பில் தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிய வாழ்வது, பெரும் சவாலாகவும் இருந்தது. ஒரு நாள் மலர்மேனி மாலை வகுப்புகளில் இருந்து வீடு திரும்பி வந்துகொண்டிருந்தாள். ஆண்டில் முதிர்ந்த ஒருவன், "இருட்டில் போகிறேயே, துணைக்கு வரவா?" என்று கேட்டுக் கொண்டே மெதுவாக நெருங்கினான். "களைத்திருப்பாய், இதை வாங்கிக்கொள்" என்று எதோ ஒன்றைக் கொடுத்தான். என்றாலும், அவள் ஒருவாறு அங்கிருந்து தப்பி வீடு வந்தாள். அன்னக்கொடி தன் மகளின் கண்களில் இருந்த பயத்தைப் பார்த்தாள். அன்று இரவு, தாயும் மகளும் தங்கள் பயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினர். காம வெறியர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம், அறம், மனித நேயம், கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு, நல்லொழுக்கம் முதலிய மனிதப் பண்புகளில் நாட்ட மில்லை. இவர்களின் நோக்கமெல்லாம் உடல் மற்றும் இச்சைகளைத் தணிப்பதேயாகும். இவர்களுக்கு அறம் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. மகளே, வலிமையை நெஞ்சில் ஏற்றி "நான் துர்கா என எழுந்து, 'பெண்ணே புயலாகு' " என்றாள். "அம்மா, சில சமயங்களில் விட்டுக்கொடுக்கணும்னு தோணுது, இளைஞர்கள், நடுத்தர ஆண்கள் முறைத்துப் பார்க்கும் விதம் ... அவர்கள் சொல்லும் விடயங்கள் ... மற்றும் ராணுவ வீரர்கள்..." அவள் கொஞ்சம் நிறுத்தினாள், வலியால் அவள் கண்கள் இருண்டன. "நான் சிக்கிக்கொண்டது போல் உணர்கிறேன்." என்றாள். “என் மகளே, புயல் பயங்கரமானது, அது மலைகளை நகர்த்துகிறது, பூமியை அசைக்கிறது, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது. மக்கள் அதைக் கட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் முடியாது. நாமும் புயல்களாக இருக்க வேண்டும். நாம் அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுவதால் அல்ல, ஆனால் நம்மை அசைக்க முடியாது என்பதை உலகுக்கும் அவர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக." என்றாள். அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்துவிட்டு, "பெண்ணே புயலாகு” என்று மீண்டும் மகளைக் தட்டிக்கொடுத்தாள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள் [The Truth About Christmas!]"
"கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள் [The Truth About Christmas!]" நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் .. கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், தொலைவில் உள்ளது. கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் குறிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது ஜூன் மாதத்தில், திகதி சரியாக தெரியவில்லை. என்றாலும் கிறிஸ்மஸ் விழாவை டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால், அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை. மேலும் கிறிஸ்மஸ் மரத்தின் [Christmas tree] தோற்றம் பற்றி அல்லது கிருஸ்மஸ் தாத்தா [Santa Claus] பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? நீங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] உங்கள் காலுறைகளைத் [stockings] தொங்க விடுங்கள் என உங்க பெற்றோர்கள் உங்களிடம் கூறி இருக்கலாம்? அடுத்த நாள் நீங்க எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மட்டும் அல்ல நீங்கள் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தையும் பார்த்திருப்பீர்கள். அதன் கீழ் மேலும் பல வர்ண உறையால் சுற்றப்பட்ட பெரிய பரிசு பொருட்களை கண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் கிருஸ்மஸ் தாத்தா இரவில் புகைபோக்கி [chimney] வழியே கீழே வந்து பரிசு தந்தார் என கூறி இருப்பார்கள். நீங்கள் என்றாவது இதைப்பற்றி சிந்தித்து கேள்வி கேட்டீர்களா? நாங்கள் பொதுவாக பழக்கவழக்கங்கள் நிறைந்த உலகில் தான் பிறந்தோம், வாழ்கிறோம். நாங்கள் அவைகளை பொதுவாக சிறுவயதில் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நாம் வளர்ந்த பின்பும், உதாரணமாக மிகச் சிலரே, ஏன், எதற்காக பரம்பரையாக வந்த பழக்கவழக்கங்களை, நாம் பின்பற்றுகிறோம் என்பதை அல்லது ஏன் நம்புகிறோம் என்பதை அறிவுபூர்வமாக உண்மையில் அலசுகிறார்கள் அல்லது அறிய முற்படுகிறார்கள். இது எமது சமுதாயத்தின் குறைபாடு என்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக நான் பாடசாலையில் பயிலும் பொழுது, எமக்கு சூரிய கிரகணம் சந்திர கிரகணம் பற்றி விளங்கப்படுத்திய ஆசிரியை, அதே கிரகணத்துக்கு விரதம் இருப்பதை கண்டுள்ளேன்? ஏனென்றால், இயல்பாக, அது சரி அல்லது தவறாக இருந்தாலும், நாம், நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன் உண்மையில் கிறிஸ்மஸ் இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடுகிறதா ? அவர் டிசம்பர் 25 இல் பிறந்தாரா?, நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டிய கேள்வி இது. பைபிளின் வேதவசனங்கள் இயேசு பிறந்தார் என்ற உண்மையையும் மற்றும் அவருடைய பிறப்பு தீர்க்கதரிசனத்தையும் எவ்வாறு நிறைவேற்றியது என்பதையும் எடுத்து கூறுகிறது. ஆனால் அவர் பிறந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பது பற்றி ஒன்றுமே கூறவில்லை. அங்கு அது அமைதியாக உள்ளது. ரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் சத்துர்னாலியா [சடுர்நலியா / சதுர்னாலியா] எனும் பண்டிகை இத்தாலி முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு குளிர்கால கொண்டாட்டமாகும். இந்த பண்டிகையை [Bacchanalia or Saturnalia] ரோமனியர்கள், கிருஸ்துக்கு [இயேசுக்கு] முன் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே டிசம்பர் 17-25 க்கு இடையில் கொண்டாடினார்கள் என்பது வரலாறு. இந்த காலகட்டத்தில், ரோமானிய நீதிமன்றங்கள் மூடப்பட்டன, வார இறுதி கொண்டாட்டத்தின் போது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அல்லது மக்களை காயப்படுத்தியதற்காக யாரும் தண்டிக்கப் படக்கூடாது என்று ரோமானிய சட்டம் கட்டளையிட்டது. அப்பொழுது களியாட்டங்களும் கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டன. அப்போது பரிசுப் பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தன. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவர்களுக்கு பொம்மைகளும் வழங்குவது வழக்கமாகக் காணப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது வர்த்தக நடவடிக்கைகள் பின்தள்ளப் பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என அனுமதியளிக்கப் பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் அப்போது கொண்டாட்டத்தின் பகுதிகளாகக் காணப்பட்டன. 4 ஆம் நூற்றாண்டில், இந்த சதுர்னாலியா என்ற திருவிழாவை அங்கீகரித்து, சதுர்னாலியா பண்டிகையின் இறுதி நாளான டிசம்பர் 25ம் தேதியை இயேசுவின் பிறந்த நாள் என்று அறிவித்து, அதன் மூலம் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் வெற்றிபெற்றனர் என வரலாறு சான்றுபகிர்கிறது. இன்னும் ஒரு குளிர்காலக் கொண்டாட்டமான யூல் பண்டிகையை [Yule Feast] ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி தொடக்கம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இதனால் இங்கும் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் இலகுவாக இருந்தது. என்றாலும் வடக்கு ஐரோப்பா கடைசியாகத் தான் கிறிஸ்தவத்துக்கு மாறியது. ஸ்கென்டினேவிய மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற சொல் கி.பி. 900 முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் என்ற பொருள் உள்ள சொல்லாகவே பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்துவின் திருப்பலி (வழிபாடு) [Christ's mass] என்பதன் சுருக்கம் ஆகும். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் , கிறிஸ்துவர்களுக்கு உரியது என்றால், ஏன், மற்ற மதத்தவர்களும் அதை கொண்டாடுகிறார்கள்? உங்களுக்கு அதற்கு விடை தெரியுமா ? ஏன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் பொழுது, பரிசு பொருட்களை தமது குடும்பத்துடன், உறவினருடன் மற்றும் நண்பர்களுடன் பரிமாற்றுகிறார்கள் ? மூன்று ஞானிகளும் [wise men] குழந்தை இயேசுக்கு பரிசுகளை வழங்கினார்கள் என்பதாலா ? நாம் இவைகளைப்பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும். கிறிஸ்து [இயேசு], மாரி காலத்தில் கட்டாயம் பிறக்கவில்லை என்பதை மிக இலகுவாக நாம் பரிசுத்த வேதாகமம் லூக்கா அதிகாரம் 2 மூலம் அறிந்து கொள்ளலாம். [Luke 2 / The Birth of Jesus]. உதாரணமாக, அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர் 15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். மேலும் பைபிளும் தன் சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] மூலமும் மற்றும் எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] மூலமும் இதை உறுதிப் படுத்துகிறது. [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.] ஆகவே, இவ்வற்றில் இருந்து நாம் அறிவது, இயேசு பிறக்கும் பொழுது, மேய்ப்பர்கள் இன்னும் தங்கள் மந்தைகளை வீட்டிற்கு கொண்டு வரவில்லை, எனவே, நாம் அக்டோபர் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று இலகுவாக ஊகிக்கலாம். எனவே கட்டாயம் இயேசு டிசம்பர் 25 பிறக்கவில்லை. உங்களுக்கு இந்த உண்மை ஒருவேளை மனவருத்தத்தை தரலாம், என்றாலும் நாம் இதை ஏற்கத்தான் வேண்டும். ஆனால் டிசம்பர் 25 என்று தீர்மானித்தது ஐரோப்பாவில் இலகுவாக பரப்பவும், மற்றும் உலகரீதியாக எல்லோரும் கொண்டாடவும், ஏனென்றால், ஆண்டு முடிவிற்கு ஒரு கிழமைக்கு முன்னால் வருவதால், புது வருட கொண்டாட்டத்துடன் இது கலந்து விடுவதால், மத பேதம் இன்றி கொண்டாடும் ஒரு வாய்ப்பை தானாகவே அது ஏற்படுத்திக்கொண்டது எனலாம். கிறிஸ்மஸ் பண்டிகையின் முக்கிய அம்சமான 'கிறிஸ்மஸ் மரம்' [Christmas tree] ஒரு பிற்சேர்க்கையே. கிறிஸ்து [இயேசு] பிறப்பதற்கு பல நுறு ஆண்டுகளுக்கு முன்பே, பண்டிகை காலத்தில், இன்று பைன் [தேவதாருமரம்], தளிர் [ பார்வைக்கு நேர்த்தியாய் உள்ள, ஊசி இலை மர வகைகள்] மற்றும் ஃபிர் [கனங்குறைந்த உயர்தரக் கட்டைதரும் குளிர் மண்டல ஊசியிலை மரவகை] மரங்களால் [pine, spruce, and fir trees] அலங்கரிப்பது போல, அன்று பண்டைய கால மக்கள் பசுமையான மர கொப்புகளை [evergreen boughs] தமது கதவு மற்றும் ஜன்னல்களில் சூனியக்காரிகள், பேய்கள், தீய சக்திகள் மற்றும் நோய்களை விரட்ட [keep away witches, ghosts, evil spirits, and illness], குளிர் காலத்தில் தொங்கவிட்டார்கள். அவையின் தொடர்ச்சியாகவே பிற்காலத்தில் கிறிஸ்மஸ் மரம் ஆரம்பித்து இருக்கலாம் என நம்பப் படுகிறது. ஏசுநாதரின் உயிர்ப்பின் அடையாளமாக பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரத்தை பார்க்கப் பட்டதாகவும், பின் கிறிஸ்மஸ் மரத்தை 1500 ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து [இயேசு] பிறப்பு விழாவில் பயன்படுத்தினார் என்றும் அறிகிறோம். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள். கிறிஸ்மஸ் பண்டிகையின் மற்ற ஒரு முக்கிய அம்சம் சாண்டா கிளாஸ் என்ற கிருஸ்மஸ் தாத்தா ஆகும். இது ஒரு முழுக்க முழுக்க கற்பனை கதாப்பாத்திரமே. நம்ம ஊர் அம்புலி மாமா கதை போன்றது இதுவாகும். துருக்கியின் மீரா நகரில் பிறந்த நிக்கோலஸ் [Saint Nicholas of Myra] என்ற பாதிரியார் வாரி வழங்கும் குணம் படைத்தவர். ஏழைகளுக்கு உதவுவார். குழந்தைகளுக்கு ரகசியமாக பரிசு தருவார். பிற்காலத்தில், நிக்கோலஸ் என்பவரே சாண்டாகிளாஸ் [Santa Claus] என மாற்றப்பட்டார் என வரலாறு கூறுகிறது. கிறிஸ்மஸை கடைபிடியுங்கள் என்றோ அல்லது அப்படியான ஒன்றை ஏசுநாதரின் சீடர்கள் [apostles] கடைப்பிடித்தார்கள் என்றோ பைபிள் சொல்லாமல் அமைதியாக இருந்தாலும், கிறிஸ்மஸ் மரம் போன்ற ஒன்றைப்பற்றி சொல்லி இருப்பது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. உதாரணமாக எரேமியா 10:2-6 [Jeremiah 10:2-6,] இல், புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் என்று தொடங்கி .. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; கைவினைஞர் அதை தனது உளி கொண்டு வடிவமைக்கிறார். பின் வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். ... அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது என்று கூறி .. அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யாது, அதேநேரத்தில், , நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று முடிக்கிறது. ஆனால் சிலர் இதை பிழையாக வாசித்து, கிறிஸ்மஸ் மரம் அலங்காரமாக வைப்பதால் ஒரு தீங்கும் இல்லை என்று முடிவு எடுக்கிறார்கள், ஆனால் அப்படி இங்கு உண்மையில் சொல்லப்படவில்லை? இங்கு சொல்லப்பட்டது , முன்னைய பழக்க வழக்கமான மரத்தை அலங்கரித்து வீட்டில் வைப்பதால் ஒரு பயனும் இல்லை என்றே ஆகும் . இந்த வசனத்திற்கு அடுத்ததாக, அது " கர்த்தாவே, உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது" என்று முடிக்கிறது. இதுவே, நான் அறிந்த அளவில், கிறிஸ்மஸ் பற்றிய ஒரு உண்மை வரலாறு! எல்லோருக்கும் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள் !! "May you be like the sun. May you be like the moon surrounded by stars. May your fame spread. Enjoy the alcohol drinks that beautiful women give to you in gold cups. May you live the rest of your life with happiness." "முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பல்மீன் நடுவண் திங்கள் போலவும் இனிது விளங்கி பொய்யா நல் இசை நிறுத்த இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே" [Few lines from over 2000 years old "Pathuppattu – Mathuraikanchi" / "பத்துப்பாட்டு – மதுரைக்காஞ்சி"] நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"உயிர்களையும் நேசித்து நம்பியவர்களையும் நேசிப்போம்!"
"உயிர்களையும் நேசித்து நம்பியவர்களையும் நேசிப்போம்!" "உயிர்களையும் நேசித்து நம்பியவர்களையும் நேசிப்போம்! பயிர்களையும் வளர்த்து பட்டினியையும் ஒழிப்போம் துயரங்களையும் போக்கி எல்லோரையும் மகிழ்விப்போம் புயலும் மழையும் எம்மைத் தாக்கினாலும் அயலவர் அவலங்களை துடைத்து எறிவோம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வானம்"
"வானம்" "மேகங்கள் நகரும் வீதி கொண்டு மோகங்கள் தரும் வண்ணம் நீயே! தாகங்கள் தீர்க்கும் மழையைப் பொழிந்து சோகங்கள் துடைக்கும் கருணை வள்ளலே! போகங்கள் போக்கும் நிலவைத் தாங்கி தேகங்கள் வெப்பம் குறைக்கும் வானே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கனவுகள் ஊஞ்சலாடும் கார்த்திகைத் திங்களிது"
"கனவுகள் ஊஞ்சலாடும் கார்த்திகைத் திங்களிது" "கனவுகள் ஊஞ்சலாடும் கார்த்திகைத் திங்களிது மனதில் வலிதரும் நடுகல் பூசையிது! மானத்தை விலைபேசா வீரனின் நாளிது இனத்தின் விடுதலை ஒன்றின் நினைவிது!" "குணத்தில் குன்றான இளைஞர்கள் உறங்கும் உணர்வில் அலையாடும் கல்லறை இது! நாணம் கொண்ட மங்கையரும் துணையாக காணத் துடித்த விடுதலையின் மண்ணிது!" "வானத்தில் வாழும் தெய்வங்கள் தொழ கானம் பாடும் மக்களின் உள்ளமிது! சினம் கொண்ட உரிமை மறுத்த அனல் கக்கும் மனிதனின் களமிது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]