Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "கிராமியக் கலைஞன்" ஆழமான வேரூன்றிய பாரம்பரியங்களுக்கும் துடிப்பான நாட்டுப்புறக் கலைகளுக்கும் பெயர் பெற்ற, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட இலங்கையின் வடமாகாணத்தில், தமிழ்செல்வன் அச்சுவேலி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தான். அவன் சிறு வயதிலிருந்தே, ‘அரிச்சந்திரா” கூத்து என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வரும், காங்கேசன்துறையைச் சேர்ந்த நடிகமணி வி.வி.வைரமுத்துவின் [பெப்ரவரி 11, 771924 - ஜூலை 8, 1989] 'மயானகாண்டம்' நாடகதின் மேலும் பாசையூர் அண்ணாவியார் கலாபூஷணம் முடியப்பு அருள்பிரகாத்தின் 'சங்கிலியன்' நாட்டுக்கூத்து மேலும் கொண்ட பற்றினால், பாரம்பரிய இசையின் தாளங்களாலும், கரகாட்டம், கோலாட்டம், கூத்து போன்ற நாட்டுப்புற நடனங்களின் துடிப்பான அசைவுகளாலும் கவரப்பட்டு, அவன் தனது இளமை பருவத்திலேயே அச்சுவேலி கிராமத்தில் ஒரு திறமையான நாட்டுப்புற நடனக் கலைஞர் மற்றும் பாடகராக பெயர் பெற்று, கோவில் திருவிழாக்கள் மற்றும் உள்ளூர் விழாக்களில் கூத்து நிகழ்ச்சிகளை நடத்தி, ஆதரவும் அங்கீகாரமும் பெற்றான். அச்சுவேலியில் அவன் சுமாரான வாழ்க்கை வாழ்ந்தாலும், தமிழ்செல்வன் திறமையாக பாடி, நடனமாடியதும் அவரது சமூகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அச்சுவேலி நாட்டுப்புறக் கலையில் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது. மேலும் அதன் மிகவும் பிரபலமான நாட்டுப்புற நடனக் கலைஞர்களில் ஒருவரிடம் தமிழ்செல்வன் நேரடியாக கரகாட்டம் மற்றும் கூத்து ஆகியவற்றில் இளம்வயதிலேயே தேர்ச்சி பெற்றவர் ஆவார். பழங்கால பாணியையும் மொழியையும் மற்றும் நவீன கதைசொல்லலையும் இணைத்து புதுமையான நடன அமைப்பிற்கு பெயர் பெற்ற அந்த குருவிடம், பயிற்சிகளை முறையாக பெற்றதால், தமிழ் கலாச்சாரத்தில் நடனம் மற்றும் இசையின் அழகையும் முக்கியத்துவத்தையும் பறைசாற்றிய சங்க இலக்கியங்களில் இருந்து சமூக ஒற்றுமை, ஆன்மீக பக்தி மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றை இணைத்து கிராமிய கலையின் பங்கை மேம்படுத்துவதில் தமிழ்செல்வன் தன் கவனத்தை பெரும்பாலும் செலுத்தினான். அதேவேளை, ஒரு ஏழை விவசாயியின் மகளான முத்துச்செல்வி பக்கத்து கிராமத்தில் வாழ்ந்து வந்ததுடன், அவள் தன் பெற்றோருடன் வயல்களில் வேலை செய்து, அன்றாட வாழ்க்கைக்கும் உதவினாள். அவர்களின் வாழ்க்கை கடினமாக இருந்தது மட்டும் அல்ல, அவர்களின் கனவுகள் கூட ஒரு எல்லைக்குள் முடங்கிவிட்டது. ஆனாலும், முத்துச்செல்வி தனது கிராமத்தின் இயற்க்கை அழகிலும் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளின் துடிப்பான கலை ஆற்றலிலும் ஓரளவு ஆறுதல் கண்டாள். அத்துடன் தமிழ்செல்வன் மற்றும் கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் அவள் முடிந்த அளவு கலந்து கொண்டாள். ஒரு நாள் அருகிலுள்ள கோவில் திருவிழாவின் போது தமிழ்செல்வன், வீரம் மற்றும் காதல் கதையை அடிப்டையாக வைத்து, ஒரு கூத்து நடத்திக் கொண்டிருந்தான். அவனது வீரம் நிறைந்த குரலும், இனிமை நிறைந்த காதல் குரலும் கூட்டத்தில் எதிரொலித்தது. அவனது நடன அசைவுகள் வசீகரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. பார்வையாளர்கள் நடுவே, கூத்தை ரசித்துக்கொண்டு நின்றிருந்த முத்துச்செல்வியால் தன் கண்களை அவனிடம் இருந்து விலக்க முடியவில்லை. தற்செயலாக தமிழ்ச்செல்வனும் அவளைக் கவனித்தான். ஆனால் அவனின் கவனம் தன் கூத்திலேயே முழுமையாக இருந்தது. என்றாலும், நாடகம் முடிந்தபின், அவர்களின் கண்கள் சந்தித்தபோது, அவளுக்குள் அவனுக்குள் ஏதோ, சொல்லமுடியாத ஒரு புது உணர்வு கிளர்ந்தெழுந்தது. "கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று." கூத்துப் பார்க்கக் கூடும் கூட்டம் போலவே நிறையும் செல்வம் அது களைவது போலவே கலைந்தும் போகும் என்று திருவள்ளுவர் கூறிச் சென்றார். அப்படித்தான், அவளின் அந்தப் பார்வையும் பின் கலைந்து போகுமோ என்று அவன் தன்னுக்குள் கேட்டுக்கொண்டான். என்றாலும், காலப்போக்கில், அவர்களின் சந்திப்புகள் அடிக்கடி நடந்தன. முத்துச்செல்வி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தமிழ்ச்செல்வனிடம் சில நேரமாவது நெருங்கிப் பழகவேண்டும் பேச வேண்டும் என்ற அவாவில், மேடையை சுத்தம் செய்ய அல்லது தயார் செய்ய தானாகவே முன்வந்தாள். அவ்வேளையில் அவர்களின் உரையாடல்கள் சாதாரணமானவையாக பொதுவாக இருந்தாலும் ஆழமானவையாகவும் இருந்தன. தமிழ்ச்செல்வன் அவளுடைய நெகிழ்ச்சியையும் கருணையையும் பாராட்டினான், அதே நேரத்தில் முத்துச்செல்வியும் தனது கலையின் மீதான ஆர்வத்தாலும் அர்ப்பணிப்பாலும் ஈர்க்கப்பட்டாள். அதேவேளை, அவர்களின் நட்பில் ஒருவருக்கொருவர் ஆறுதல் கண்டு மகிழ்ந்தனர். "நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே." இறைவா, உன் அடியார் போல நானும் நடிக்கிறேன். உன் அடியார்கள் மத்தியில் நானும் ஒரு அடியவன் போல புகுந்து , உன் திருவடிகளை அடைய விரைந்து வருகிறேன். அரசன் வேடம் போட்டவன் அரசாங்கம் கேட்டது போல. என் மனதில் அன்பு இல்லை. நான் என்ன செய்வேன். உள்ளம் உருகும்படி உன்மேல் எப்போதும் செலுத்த என் மனதில் அன்பைத் தருவாய் என்று உருகுகிறார் மணிவாசகர். அப்படித்தான் அவளும் தொடக்கத்தில், கூட்டத்தோடு கூட்டமாக, ஒரு ரசிகன் போல் எந்த நோக்கமும் இல்லாமல், அவனின் நாடகத்தை பார்த்து இன்பம் அடைய விரைந்து வந்தவள், இப்ப உள்ளம் உருகும்படி உன்மேல் எப்போதும் காதல் செலுத்த என் மனதில் அன்பைத் தருவாயா என்று கேட்க ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் காலப்போக்கில் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். ஒரு நாள், அவர்கள் இருவரும் கடற்கரை ஒன்றில், மாலைப்பொழுது சந்தித்தார்கள். அப்பொழுது எப்போதும் இல்லாத அளவுக்குக் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. அலைகள் ஒவ்வொன்றும் கரைசேரும்போது அவை மணலைத்தொட்டு முத்தமிட்ட பின் கடலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. கடலுக்குச் சற்று தூரத்தில் சோளங்களைத் தீயில் வாட்டிக்கொண்டிருந்தார் வியாபாரி ஒருவர். தீச்சுவாலைகளில் சுடுபடும் பரவுகிற தீப்பொறிகள், ஆயிரம் மின்மினிகள் கூட்டமாகப் பறப்பது போன்று காட்சியளித்தன. தமிழ்ச்செல்வன் இருவருக்கும் இரண்டு சோளங்கள் வாங்கி, கடற்கரை மண்ணில், முத்துச்செல்வி அவன் அருகே நெருங்கி இருந்தவாறு, சூடான சோளத்தைக் கையில் பிடித்து ஊதி ஊதிக்கொண்டு சாப்பிடும் அழகை, கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் தமிழ்ச்செல்வன். "ஹாய் சாப்பிடாம இங்க என்னடா, என்னையே பார்த்துட்டு இருக்க?'' - தன் அகன்ற கண்களை விரித்து அவள் கேட்டாள். " ம்ம் முத்துசெல்வியின் முத்தில் அப்படி ஒரு ஆசையடா." அவன் அவளை இழுத்து அணைத்தபடி கூறினான். அப்பொழுது நாலு கண்களும் ஒருகணம் இமைக்காமல் நின்றன. "கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன. ஆமாம் அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள். என்றாலும் காலில் ஒரு பெரும் அலை மோதி, அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவந்தது. இருப்பினும், முத்துச்செல்வியின் குடும்பம் அவர்களின் பிணைப்பு வளர்ந்து வருவதை அறிந்ததும், அவர்கள் கோபமடைந்தனர். அவர்களைப் பொறுத்தவரை, தமிழ்ச்செல்வனின் நாட்டுப்புறக் கலைஞர் வாழ்க்கை நிலையற்றதாகவும் நம்பகத்தன்மையற்றதாகவும் இருந்தது. தங்களுடைய மகளுக்கு நிலையான வருமானம் உள்ள ஒருவரை, பொருளாதார பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒருவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். குறிப்பாக அவளது தந்தை, தமிழ்செல்வனுடனான வாழ்க்கை, ஒரு போராட்டமாக இருக்கும் என்று எச்சரித்து விடாப்பிடியாக இருந்தார். எதிர்ப்பால் மனம் தளராத தமிழ்செல்வன், முத்துச்செல்வியின் குடும்பத்தினரை அணுகி தனது அன்பையும் விருப்பத்தையும் தெரிவித்தான். நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், அவளை கவனித்துக் கொள்வதாகவும், ஒன்றாக ஒரு வாழ்க்கையை உருவாக்குவதாகவும் அவன் உறுதியளித்தான். அவனது இதயப்பூர்வமான வார்த்தைகளும் நேர்மையும் இறுதியில் அவளது தாயின் நிலைப்பாட்டை மென்மையாக்கியது, ஆனால் அவளது தந்தை நம்பவில்லை. பல மாத விடாமுயற்சி மற்றும் கிராமத்தில் மரியாதைக்குரிய பெரியவரின் தலையீட்டிற்குப் பிறகுதான் அவர்கள் இறுதியாக திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். என்றாலும் அவர்களது திருமண வாழ்க்கை, ஓரிரு ஆண்டுகளுக்குப் பின், குடும்பம் பெரிதாக, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது. தமிழ்செல்வன் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதிப்பது சொற்பமாக மாறியது. அவர்கள் சாப்பிடுவதற்கு ஓரளவு சமாளித்தாலும் குழந்தைகளின் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை. முத்துச்செல்வி அவர்களின் வருமானத்தைப் பூர்த்தி செய்வதற்காக சிலவேளை கூலிவேலைகளைச் செய்தாள். ஆனால் அவர்களின் குழந்தைகளை வறுமையில் வளர்க்கும் சுமை அவளைப் பெரிதும் பாரப்படுத்தியது. விவசாயத் தொழிலாளியாகவோ அல்லது மீனவனாகவோ ஒரு நிலையான வேலையைத் தேடுமாறு தமிழ்செல்வனை அவள் அடிக்கடி வற்புறுத்தினாள், ஆனால் அவனுடைய இதயம் அவனது கலையில் நிலைத்திருந்தது. "நான் சிறுவயதிலிருந்தே நாட்டுப்புற கூத்தடி, பாடகர்" என்று அவன் கூறுவான். “யுத்தத்தின் போது கூட, நாங்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தபோதும், எனது பாடல்கள் எங்கள் மனதை வாழவைத்தன. இது எனக்கு ஒரு வேலை மட்டும் இல்லை; அது என் அடையாளம், என் ஆன்மா. எங்கள் நல்வாழ்வு இன்றைய நவீன உலகில் புறக்கணிக்கப்படுகிறது, அது எனக்குத் தெரியும். ஆனால் இந்த பாரம்பரியத்தை என்னால் கைவிட முடியாது. சிவனை தில்லைக்கூத்தன் என்று கொண்டாடும் இந்த தமிழர் இன்று, எம் பாரம்பரிய கூத்தை எனோ கைவிடுகிறார்கள். அது தான் எனக்கு புரியவில்லை" என்றான். என்றாலும், "ஒரு வாய் பிட்டுக்கு, கூத்தாடி சிவன் மண் சுமக்கவில்லையா?" என்ற முத்துச்செல்வியின் கண்ணீருடன் இணைந்த கேள்வியால், இறுதியில், வாழ்க்கையின் அழுத்தங்களை உணர்ந்த தமிழ்செல்வனை, ஒரு விவசாயக் கூலியாக ஒரு நிரந்தர வேலையைச் செய்யத் தள்ளியது. அவன் வயல்களில் நீண்ட நேரம் வேலை செய்தான், அவன் தனது குடும்பத்திற்கு போதுமான அளவு சம்பாதித்தான். ஆனால் அவன் தனது ஆர்வத்தை ஒருபோதும் கைவிடவில்லை. மாலை வேளைகளில் தனது குழந்தைகளுக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் நாட்டுப்புற நடனம் மற்றும் இசைக் கலைகளைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினான். முத்துசெல்வியும் அவனுக்குத் துணையாக ஒத்தாசை செய்வாள். அவன் தன் ஊரில் நடக்கும் திருவிழாக்கள் மற்றும் திருமணங்களில் தவறாமல் கூத்து நாடகத்தை அரங்கேற்றுவான், ஆனால் இப்ப பணத்திற்காக அல்ல, ஆனால் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையால் மட்டுமே. முத்துச்செல்வி, ஆரம்பத்தில் நாட்டுப்புறக் கலை, தமது வாழ்வுக்கு போதிய வருமானத்தை தரவில்லை என்று தற்காலிகமாக வெறுப்படைந்தாலும், இன்று அதன் மதிப்பைக் காணத் தொடங்கினாள். இது சமூகத்தை எவ்வாறு ஒன்றிணைத்தது, அவர்களின் குழந்தைகளுக்கு, பெருமை மற்றும் அடையாள உணர்வை எவ்வாறு விதைத்தது, என்பதை அவள் கவனிக்கத் தவறவில்லை. மெதுவாக, அவள் அவனது மிகப்பெரிய ஆதரவாளராக, முன்போல மீண்டும் ஆனார், அவள் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க உதவியதுடன் அவர்களின் குழந்தைகளையும் கிராமியக் கலை கற்க ஊக்குவித்தாள். ஆண்டுகள் கடந்தன, தமிழ்செல்வனின் விடாமுயற்சி பலனளிக்கத் தொடங்கியது. இளைய தலைமுறையினருக்கு கற்பிப்பதற்கான அவனது முயற்சிகள், முன்னோர்களின் நாட்டுப்புற மரபுகள் மறைந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்தது. கலையின் மதிப்பை வலியுறுத்தும் பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து அவன் அடிக்கடி மேற்கோள் எடுத்து, சமூகத்திற்கு காட்டினான். நாளடைவில் தமிழ்செல்வனின் கதை அச்சுவேலியில் மட்டும் அல்ல, தமிழர் வாழும் எல்லா பகுதிகளிலும் ஒரு உத்வேகமாக மாறியது. அவ்வேளையில் தான், 2025 தைப்பொங்கல் தினத்தை ஒட்டி, யாழ் நகரில், முற்றவெளியில் நாட்டுப்புற இசை மற்றும் நடனம் [கூத்து] நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் முதன்மை கலைஞராக தமிழ்ச்செல்வன் தலைமைவகுத்தான். அவன் தனது தலைமை உரையில்: "இன்று மக்கள் நாட்டுப்புற இசை அல்லது நடனத்தைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. நல்ல சம்பளம் கிடைக்காததால் நாட்டுப்புறக் கலையை தங்கள் தொழிலாக எடுத்துக் கொள்ள இளைய தலைமுறையினர் விரும்புவதும் இல்லை. பாடசாலைகளிலும் அதைப்பற்றி எந்த அறிவும் போதிப்பதும் இல்லை". என்று கூறிவிட்டு கொஞ்சம் அமைதியாக பெருமூச்சு விட்டான். பின், பார்வையாளர்களைப் பார்த்து, "யுத்தம் மற்றும் இடம்பெயர்வு காரணமாக, பல தலைமுறைகளுக்கு முன்னர் எமது நாட்டுப்புறக் கலைஞர்கள் அணிந்திருந்த பாரம்பரிய உடைகள், நகைகள் மற்றும் கிரீடங்கள் போன்ற பல சாதாரண அலங்கார பொருட்களையும் மற்றும் திறமைகளையும் நாம் இன்று இழந்துள்ளோம். உதாரணமாக, வன்னியில் எமது பாரம்பரிய கலை வடிவங்கள் “கிட்டத்தட்ட அழிந்துவிட்டன” என்பது மிகவும் துரதிஷ்டவசமானது. "கோவலன் கூத்து" மற்றும் "மகுடி ஆட்டம்" ஆகியவை மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் வன்னியில் மிகவும் பிரபலமானவை, மேலும் கோவில் திருவிழாக்களின் போது இரவு முழுவதும் 15 மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்தப்பட்டன." என்று கூறியவன், மேடையில் அமர்ந்திருந்த ஏற்பாட்டாளர்களை நோக்கி, "இந்த யாழ்ப்பாண பொங்கல் இசை விழா 2025, கடந்த காலங்களின் தனித்துவ கலை வடிவத்தை மீட்டெடுக்கவும், புத்துயிர் பெறவும், உயிர்த்தெழுப்பவும் மற்றும் பாதுகாக்கவும் கட்டாயம் உதவும்" என்று பெரும் கைத்தட்டலுக்கு மத்தியில் தன் ஆரம்ப பேச்சை முடித்தான். அந்த நேரம் அங்கு ஒலிபெருக்கியில்: "காவடி கரகங்களோடு காத்தான் கூத்தும் மாவிலை தோரணங்களோடு நாட்டுக் கூத்தும் பாவெடுத்துப் பாடியாடி பூவெடுத்துத் தூவிக்கூடி நாவெடுத்துப் பேருஞ்சூடி மாவெடுத்துக் கோலங்காட்டி சீனடி சிலப்படியொடு சிறந்த நல்ல சித்திர சிற்பக்கலைகளும் விளங்கும் தேசமே! சுந்தர தமிழில் வரலாறு செப்பி ஆடும் கிராமிய கலைஞனே வாழ்கவாழ்கவே!!" என்று ஒலித்தது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. "வாழ்ந்து காட்டுவோம்" & "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” "வாழ்ந்து காட்டுவோம்" "மாழ்ந்த நாகரிகங்களை பாடமாய் படித்து ஆழ்ந்த சிந்தனையில் இலக்கியம் படைத்து தாழ்ந்த சமூகத்துக்கு அறிவுரை வழங்கி வீழ்ந்த உறவுக்கு கைகள் கொடுத்து சூழ்ந்த பகையை அறுத்து எறிந்து வாழ்ந்து காட்டுவோம் நாம் யாரென்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே உயர்வை நோக்கி கனவு அமையட்டும்! அயர்வை அகற்றி உழைத்து துயர்வைப் போக்குங்கள்!" " பயிர்கள் செழிக்கப் பசளையிட்டு உயிர்கள் தழைக்க விளைச்சலைப் பெருக்குவீர் தயிரைக் கடைந்து வெண்ணை கொடுப்பீர் வயிறார உணவளித்தே மானுடத்தார்க்கு வாழ்வளிப்பீர்!" "ஆடிப்பட்டம் தேடி விதைத்து ஆலமர நிழலில் ஓய்வு காணும் உழவனே ஆக்கம் தரும் தொழிலின் தலைவனே ஆண்டவனின மறுவுருவம் நீரன்றோ?" "ஏரெடுத்து பாடுபடும் மேன்மக்களே! ஏழை எளியவர்களுக்கு புத்தாடை பொங்கல் பகிர்வீர் ஏமாற்றம் தரா உழைப்பாளி நீர்தானே ஏதும் சுழலாது உழவனெனும் அச்சாணி இல்லையேல்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. பேரன் 'இசை'யின் இரண்டாம் பிறந்த நாள்! / It's Grandson's ISAI's second birthday! [13 / 03 / 2025] "பேரனின் இரண்டாம் பிறந்த நாள் பேரொலி முழங்க 'இசை'யுடன் கொண்டாடுவோம்! பேசாமல் ஆடாமல் இருக்க முடியாது பேரறிவுடன் 'இசை' என்றும் வாழட்டும்!" "காலம் ஓடியதை நம்பவே முடியல காற்றாய் வேகமாய் அது பறந்திட்டு? காளன் மாதிரி குட்டையாய் இருந்தாய் கார்த்திகை மீனாய் உயர்ந்து ஒளிர்கிறாய்!" "உடம்பு பிரண்டு எழுந்து உட்கார்ந்து உறுதி கொண்டு விரைந்து தவழ்ந்து உயர்ந்து நின்று பாதத்தால் நடந்து உற்சாகம் கொண்டு வென்று விட்டாய்!" "முழுஆண்டு இரண்டு முடிந்து விட்டது மும்முரமாக கதைகத் தொடங்கி விட்டாய் ! முக்கனி சுவை முழுதாய் கொண்ட முந்திரிகை கேக்கை சுற்றி கூடுவோம்!" "பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாடுவோம் பிரியத்துடன் 'இசை'க்காக வேண்டுகோள் செய்வோம்! பிரமாண்டமான ஒரே ஒரு ஊதலில் பிரகாச மெழுகுவர்த்தியை 'இசை' அணைக்கட்டும்!" "ஆரவாரத்துடன் மூன்றாம் ஆண்டு கால்வைக்க ஆசையுடன் பலகாரங்கள் பல சுவைக்க ஆளுக்கு ஆள் வாழ்த்துக்கள் கூற ஆடிப்பாடி குட்டி 'இசை'யுடன் மகிழ்வோம்!" [தாத்தா, கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Happy 2nd Birthday, Isai! It’s Grandson’s second birthday, A moment of joy and cheer. We can’t help but sing and dance, And send our wishes near! It’s hard to believe, How fast time has flown. You started out so tiny, But oh, how much you’ve grown! From rolling to sitting, To a quick little crawl, Then those wobbly first steps— You have conquered it all! Two big years have passed, Now you chatter endlessly. So let’s all gather ‘round, To celebrate happily! Let’s sing "Happy Birthday," And help you make a wish, Then blow out that candle— One big puff from Isai, so swift! Now begins your third year, Filled with laughter and delight. As we cheer and dance with you, Our hearts shine oh so bright! With love, Granddad: Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna
  4. "தைமகளே வருக" [அந்தாதிக் கவிதை] "தைமகளே வருக பொங்கலோ பொங்கல் பொங்கல் தமிழர் புத்தாண்டு ஆகட்டும் ஆகும் எல்லாம் பெருமை பேசட்டும் பேசும் பேச்சில் பண்பாடு தெரியட்டுமே! தெரியும் உண்மைகள் தையை வாழ்த்தட்டும் வாழ்த்தும் திருநாளே பொங்கல் விழாவாகட்டும் விழாவெடுத்து மங்கையர் கொண்டாடும் தையே தைத்திங்கள் பிறந்தால் வழி பிறக்குமே! பிறக்கும் தையில் திருமணம் வேண்டி வேண்டிய வரத்திற்கு முன்பனி நீராடி நீராடி தவம் முடித்து வணங்கினாளே வணங்கி அழைத்தாள், தைமகளே வருக!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. "பணம் படுத்தும் பாடு", "தைப்பொங்கல்” [ஹைக்கூ கவிதை] & "மரியாதை" [அந்தாதிக் கவிதை] "பணம் படுத்தும் பாடு" "பகட்டு வாழ்வில் பற்றுக் கொண்டு படித்த அறிவை மூடி வைத்து பண்பு மறந்த செயல்கள் மூலம் பணம் படுத்தும் பாடு தெரியுமா?" "நாணயம் கொடுத்தாலே ஆண்டவனுக்கும் பூசை நாணும் கோதையும் பாய் விரிப்பாள்! நாக்கு கூட பொய் உரைக்கும் நாடகமும் ஆடும் பதவிகள் சேர்க்கவே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. ஹைக்கூ கவிதை / "தைப்பொங்கல்” "தைத்திங்கள் பிறந்தால் எமக்கு வழி காட்டும் பொங்கலே புத்தாண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................. "மரியாதை" [அந்தாதிக் கவிதை] "மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு வாங்கும் புகழ் நிலைத்து நிற்கட்டும் நிற்கும் நிலையில் உறுதி மலரட்டும் மலரும் நட்பில் துலங்கட்டும் மரியாதை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. "மூன்றும் உடையது", குறள் 1085 & "பனிப்பொழிவு" "மூன்றும் உடையது", குறள் 1085 தாய், மனைவி, மகள் என தான் கொள்ளும் மூன்று நிலையில் தனயனை வருத்துவது இளம் பெண்ணே! வஞ்சனிக் கண்கள் கூற்றவன் வலையோ வனிதை விழிகள் காதல் பேசுமோ வஞ்சிப் பார்வை பெண்மான் மருட்சியோ வதைக்குது என்னை, மீட்சி தாராயோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................................. "பனிப்பொழிவு" "பனிப்பொழிவு பெய்கிறது பாலாய்ப் படர்கிறது பகலோன் வெப்பம் குளிரால் மூடுகிறது பச்சை மரமோ வெண்ணிற ஆடையில் பசும்புல் தரையோ வழுக்கி வீழ்த்துகிறது!" "பருவப் பெண் கனவு காண்கிறாள் படுக்கையை விட்டு எழும்ப மறுக்கிறாள் பஞ்சு பஞ்சாய் குளிர்த்துளி விழுகிறது பரந்த வெளிகளோ பளிங்காய்த் தெரிகிறது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. "நீயில்லை நிழலில்லை" சுட்டெரிக்கும் கதிரவன் யாழ்ப்பாணத்தின் மேல் உயர்ந்து, வறண்ட பூமியில் கூர்மையான நிழல்களைப் போட்டது. ஒரு காலத்தில் செழித்தோங்கிய நகரம் பல ஆண்டுகளாக மோதலை சகித்துக் கொண்டு, அதன் தெருக்களை சண்டைகள் மற்றும் உயிர்வாழ்வின் நினைவுகளால் பொறித்தது. இந்த நகரத்தின் மையத்தில் ஒரு பழமையான ஆலமரம் நின்றது, அதன் பரந்த கிளைகள் நிழல் தேடுபவர்களுக்கு ஓய்வு அளித்தன. நெகிழ்ச்சியின் சின்னமான அந்த மரம் யாழ்ப்பாணத்தின் மாறிவரும் அலைகளுக்கு மௌன சாட்சியாகவும் இருந்தது. அதன் நிழலில் ராகவன் என்ற முதியவர் அமர்ந்திருந்தார், அவருடைய இருப்பு மரத்தைப் போலவே உறுதியானது. ஒவ்வொரு நாளும், அவர் அங்கும் இங்கும் கிழிந்த, ஒரு பழைய நாட்குறிப்பு மற்றும் ஒரு பேனாவைக் கொண்டு வருவார். அவருக்கு மிகவும் கனமானதாகத் தோன்றிய நினைவுகளை அதில் எழுதுவார். அவர் பக்கத்தில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தார், அவரது மகள் கவிதா, அவரது பாசம் மற்றும் அவரது சோகம் இரண்டின் நிழலிலும் வளர்ந்தவள். குழந்தைகள் பெரும்பாலும் ஆர்வமுள்ள கண்களுடன் அவளை அணுகினர், ஆனால் கவிதா மெல்லிய புன்னகையுடன் அவர்களை தவிர்த்துக்கொள்வாள். யாழ்ப்பாண மக்களுக்கு, ராகவனும் கவிதாவும் அமைதியான சகிப்புத்தன்மையின் அடையாளமாக இருந்தனர். ஈரமான ஒரு மதியம், மீரா என்ற இளம் பத்திரிகையாளர் ராகவனையும் கவிதாவையும் அணுகினார். மீரா அவர்களின் கதையின் வதந்திகளைக் கேட்டு - போரினால் சிதைந்த குடும்பம், முரண்பாடுகள் இருந்தபோதிலும் நம்பிக்கையுடன் இருந்த தந்தையும் மகளும் - அவள் தயக்கத்துடன் அவர்களை நெருங்கினாள். “தாத்தா” என்று ஆரம்பித்தாள் - ஒரு பெரியவரைப் பற்றிய அன்பான தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தினாள் - "நான் உங்களுடன் உட்காரலாமா?" ராகவனின் கண்கள், மேகமூட்டமாக இருந்தாலும் கூர்மையாக, அவளைச் சந்தித்தன. அவர் மெதுவாகத் தலையசைத்து, தனக்கு அருகில் உள்ள இடத்தைக் காட்டினார். கவிதாவும் மீராவிடம் ஒரு மெல்லிய புன்னகை வீசினாள். அவள், தந்தை பேசத் தொடங்கும் போது தானும் உற்றுக்கேட்டுக்கொண்டு இருந்தாள். "நீங்கள் தினமும் எழுதுகிறீர்கள், தாத்தா," மீரா அவரிடம் நேரடியாக உரையாற்றினார். "என்ன எழுதுகிறீர்கள்?" என்று தன் முதல் கேள்வியை ஆரம்பித்தாள். ராகவன் பெருமூச்சு விட்டான், அவனது குரல் ஒரு கிசுகிசு போல மிக மிக மென்மையாக இருந்தது. "நினைவுகள் - இந்த நகரம் வித்தியாசமாக இருந்த காலத்தின் நிழல்கள் - அவையைத் தான் எழுதுகிறேன்" என்றார். மீரா, ராகவன் முன் குனிந்தாள். அவரின் வார்த்தைகள் அவளுக்கு பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. மீரா ஒரு பாசத்துடன் ராகவன் தாத்தாவை பார்த்தாள். "அவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்வீர்களா?", பணிவுடன் கேட்டாள். ராகவன் தயங்கினாலும் தன் நாட்குறிப்பை திறந்தான். அவனது நடுங்கும் விரல்கள், அதன் பக்கங்களில் மங்கிப்போன மை தடங்களில் பதித்தன. கவிதா தனது தந்தையின் தோளில் உறுதியாகக் கையை வைத்து, மௌனமாக தந்தையைக் ஊக்கப்படுத்தினாள். "இந்த நகரம் ... இது அப்போது இப்படி இருக்காது," என்று அவர் தொடங்கினார். “அன்று ஒருமுறை, இந்தத் தெருக்களில் சிரிப்பு வந்தது. நானும் என் மனைவி அஞ்சலியும் இந்த மரத்தடியில்தான் அமர்ந்திருந்தோம். எங்கள் மகள் கவிதா, அப்பொழுது குழந்தை, எம் அருகில் விளையாடினாள். அவளுடைய சிரிப்பு காற்றில் எதிரொலித்தது. அது தான் அந்தச் சிரிப்பு, மகிழ்ச்சி தாண்டவமாடியது. இது எங்களுக்கு மட்டும் அல்ல. அப்படித்தான் எல்லோரும் மகிழ்ச்சிக் கடலில் அன்று நீந்தினார்கள். ஆனால் ... " ராகவன் பேசும்போது கவிதாவின் கண்கள் கண்ணீரால் நனைந்தது. அவள் எண்ணற்ற முறை கதைகளைக் கேட்டிருந்தாள், ஆனால் அவை அவள் இதயத்தை என்றும் அசைக்கத் தவறவில்லை. "அப்புறம் போர் வந்தது" ராகவன் தொடர்ந்தான். "மற்றும் அதனுடன், அதன் நிழல்கள். கலவரத்தின் போது நானும் அஞ்சலியும் பிரிந்தோம். கவிதா என்னுடன் இருந்தாள், ஆனால் அவள் அம்மாவைப் பற்றி கேட்காத ஒரு நாள் கூட, இன்றுவரை கடக்கவில்லை. மீராவின் ஆர்வம் பெருகியது. "ம் ம் , சொல்லுங்கள் தாத்தா" என்றாள் ஆனால், ராகவன் அந்த பறந்து விரிந்த ஆலமரத்தையும் அது கொடுத்துக்கொண்டு இருக்கும் நிழலையும் மௌனமாக உற்றுப்பார்த்தார். பின் சில வினாடிகளால் " மீரா, இந்த நிழலைப்பற்றி என்ன நினைக்கிறாய்?," என்று கேட்டார். மீராவும் கவிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். என்றாலும் ஒரு பதிலும் வரவில்லை. மீண்டும் ராகவன் , "நீயில்லை நிழலில்லை" இதையாவது அறிந்திருக்கிறாயா மீரா என்றார். சில வினாடிகளால் ராகவன் இருவரையும் பார்த்து, " “நீ இல்லாமல் நிழலில்லை” என்ற வாசகம் உறவுகளில், ஒன்றோடொன்று சார்ந்திருப்பதை நினைவூட்டுகிறது. அன்பாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும், குடும்ப உறவுகளாக இருந்தாலும், சிலர் எரியும் வெயிலில் மரத்தின் நிழலைப் போல நம் வாழ்வில் இணையற்ற ஆறுதலையும் பாதுகாப்பையும் தருகிறார்கள். அவர்கள் இல்லாதது நம்மை அம்பலப்படுத்துகிறது, அவர்களின் இருப்பின் மதிப்பை நமக்குக் கற்பிக்கிறது." என்று விளங்கப்படுத்திவிட்டு, தன் மகள் கவிதாவை அணைத்துக்கொண்டு ஒரு சில கண்ணீர் துளிகளுடன் ஒரு பெருமூச்சு விட்டார். "அந்த பெருமைக்குரியவர் தான் என் அஞ்சலி, கவிதாவின் அம்மா !" என்றார். ராகவன் மீண்டும் தொடர முன்பு, கொஞ்சம் இடைநிறுத்தி, தனது நாடக்குறிப்பில் இருந்து ஒரு குறும் கவிதையை வாசித்தார். "கதிரவனை மேகங்கள் இடை மறைத்தாலும் கலங்காது அதன்வெப்பம் பூமியை அணைக்குமே கலவரங்களின் அலைகளால் அஞ்சலி பிரிந்தாலும் கட்டாயம் நிழலாக நெஞ்சில் இருப்பாளே! "நீயில்லை நிழலில்லை யார் சொன்னது நீதியின் தடுமாற்றம் உன்னை மறைத்தாலும் நீங்காத நினைவு உன்னுடைய நிழலாகுமே நீடித்து நின்று எம்மை வழிகாட்டுமே!" என்று அது இருந்தது. ராகவனின் கண்களில் கண்ணீர் சிந்தியது. அதைக் கேட்ட மீராவின் இதயமும் வலித்தது, அவனுடைய சோகத்தின் கனத்தை உணர்ந்தாள். அவள் வாய் தானாக, "நீயில்லை நிழலில்லை" என்று முணுமுணுத்தது. "அவற்றை ஏன் நிழல்கள் என்று அழைக்கிறீர்கள்?" மெதுவாகக் கேட்டாள் மீரா. ராகவன் தன் கண்ணீரைப் பொருட்படுத்தாமல், குரல் உறுதியுடன் ஆலமரத்தைப் பார்த்தான். "ஏனெனில் அவை நினைவூட்டல்கள். ஒளி இருக்கும்போதுதான் நிழல்கள் இருக்கும். விரக்தியின் ஒவ்வொரு கணத்திலும், நம்பிக்கையின் பிரகாசம் இருந்தது. அஞ்சலிதான் எனக்கு வெளிச்சம். அவள் இல்லாத நேரத்திலும், அவள் என் வாழ்க்கையில் ஒரு நிழலைப் போட்டு, என்னை வழிநடத்தினாள்!" மீராவின் மூச்சு தொண்டையில் அடைத்தது. ராகவன் வெறும் நினைவுகளை மட்டும் நினைவுபடுத்தவில்லை என்பதை அவள் உணர்ந்தாள்; அவர் தனது வார்த்தைகள், நினைவுகள் மூலம் அஞ்சலியை தொடர்ந்து வாழவைத்தார். நாட்கள் வாரங்களாக மாறியது, மீரா ஆலமரத்தடியில் வழக்கமான பார்வையாளராக மாறினாள். அவர் ராகவனின் கதைகளை ஆவணப்படுத்தினார், யாழ்ப்பாணத்தின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒரு நாடாவாகப் பின்னினார். ஆனால் அவள் அவனது நினைவுகளை ஒன்றாக இணைக்கும்போது, ஒரு நீடித்த கேள்வி அவளை உறுத்தியதை உணர்ந்தாள். ஒரு மாலை, அவள் கேட்டாள், "தாத்தா, அஞ்சலி பாட்டி இன்னும் எங்கேயாவது, படையினரால் விடுபட்டு, வாழ்வதாக நினைக்கிறீர்களா?" ராகவனின் பார்வை ஆகாயத்தை பார்த்தது. “ஒருவேளை. அல்லது என்னையும் கவிதாவையும் காக்கும் நிழலாக அவள் மாறியிருக்கலாம்.?" உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று தீர்மானித்த மீரா விசாரணையைத் தொடங்கினார். அவள் பழைய பதிவுகளை ஆராய்ந்து, உயிர் பிழைத்தவர்களை நேர்காணல் செய்தாள், மேலும் ஒவ்வொரு வழியையும் பின்பற்றினாள். கைவிடப்பட்ட அகதிகள் முகாம்களுக்கும் இடிந்து விழும் கட்டிடங்களுக்கும் பயணம் செய்தாள். கடைசியாக, அஞ்சலியை தனக்குத் தெரியும் என்று கூறிய சரஸ்வதி என்ற வயதான பெண்ணிடம் அவள் ஆறுதலடைந்தாள். "அஞ்சலி?" சரஸ்வதியின் குரல் பலவீனமாக இருந்தாலும் தெளிவாக இருந்தது. “ஆம், நான் அவளை அறிந்தேன். அவள் போரின் போது தெற்கு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்." மீராவின் இதயம் துடித்தது. அது உண்மையாக இருக்க முடியுமா? மேலும் தகவலுக்காக சரஸ்வதியை அழுத்தி, அஞ்சலியின் விளக்கத்துடன் பொருந்திய ஒரு கடற்கரை கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்ணைப் பற்றி அறிந்தாள். புது நம்பிக்கையுடன், மீரா கிராமத்திற்குப் பயணித்தாள். அங்கு, ஒரு வயதான பெண் ஒரு சிறிய தோட்டத்தை பராமரிப்பதைக் கண்டார். அவளுடைய பலவீனமான உடலும் கனிவான கண்களும், அஞ்சலியை ராகவன் வரைந்த படத்தை பிரதிபலித்தது. மீரா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ராகவனையும் கவிதாவையும் குறிப்பிட்டபோது, அந்தப் பெண்ணின் கண்கள் மகிழ்வால் விரிந்தன. “ராகவனா? கவிதாவா ?” அவள் இன்பத்தில் தடுமாறினாள், அவள் முகத்தில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. "அவர்கள் போய்விட்டார்கள் என்று நான் நினைத்தேன் ..." மீராவின் இதயம் மகிழ்ச்சியில் துடித்தது. மீரா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அஞ்சலியை மீண்டும் ஆலமரத்திற்கு அழைத்து வந்தாள். அவர்கள் நெருங்கியதும், ராகவன் நிமிர்ந்து பார்த்தான், அவன் கண்கள் நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் விரிந்தன. "அஞ்சலி?" ராகவன் ஓடிவந்து கட்டிப்பிடித்தார். அஞ்சலி தலையசைத்தாள், அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. "ராகவன், கவிதா... நான் இங்கே இருக்கிறேன்." ஒரு கணம் நேரம் அப்படியே உலகம் நின்றது. ஆலமரம் மூவரையும் மீண்டும் அணைத்துக்கொள்ள, அவர்களின் நிழல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தது போல மூச்சை அடக்கியது. ராகவனின் நடுங்கும் குரல் மௌனத்தைக் கலைத்தது. “நீ எல்லா நேரத்திலும் வெளிச்சமாக இருந்தாய். நீ இல்லாமல் நிழல் இல்லை” [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. கம்பனும் கண்ணதாசனும் கவிதைக்கு ஒரு அதிர்ச்சியும் இன்பமும் கொடுப்பான் , ஆனால் அவன் வம்பன் இல்லை, அவனின் எதிரொலி, சமூகத்தில் நடப்பாவையின் பதிவு, இதை உணர்ந்து, அறிந்து திருந்தானா என்ற ஒரு ஏக்கம், அவ்வளவுதான்!
  9. "பாலியல் வன்கொடுமை" பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு வஞ்சகமே பாவச் செயல்களின் பிறப்பிடமும் அதுவே! பாவை பிருந்தாவின் பாலியல் வல்லுறவுத் தெரியுமா பாதக நடத்தையை திருவிளையாடல் என்கிறதே! விண்ணில் இருப்பவன் உதாரணம் தரவேண்டாமா மண்ணில் இருப்பவன் அதைத் தொடர! எண்ணத்தில் அதை நன்கு பதித்தவன் கண்ணை மூடி வல்லுறவு செய்கிறானே! காமம் கூத்தாடும் கதைகளைத் தவிர்த்து காதல் பேசும் புராணம் பரவட்டும்! காலம் அறிந்து பழையதை எறியுங்கள் காந்தையை மதித்து அவளை வாழவிடுங்கள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா" "மன்னிப்பாயா என்னை" மன்னிப்பாயா என்னை அழகு சுந்தரியே அன்பைப் புரியாத பாவி நானே இன்பம் ஒன்றுக்கே பெண்ணென நினைத்தேனே துன்பம் தந்து கண்ணீரை வரவழைத்தேனே! பெண்ணில் பிறந்தவன் அவளையே தேடுகிறான் கண்ணை நம்பி எங்கேயோ அலைகிறான் மண்ணில் மனிதம் காக்கத் தவறி கண்ணியம் தாண்டியவனைப் பொறுத்தால் என்ன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. தாய்மை [கைக்கூ] தாய்மை என்பது தாயாக இருக்கும் நிலையோ தாலியின் பாக்கியமோ கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. "தாத்தா" [தன்முனைக் கவிதை] தாராள பாசத்துடன் தன்னையே கொடுக்கும் தாத்தா! கண்ணைப் போலவே பேரனைக் காக்கும் பாட்டன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  11. "எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] & "மாங்கல்ய கனவுடன்" "எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] "எது தான் சரி புரிகிறதா புரிந்து தான் என்ன பயன்? பயன் அற்ற உலக வாழ்வில் வாழ்வது ஒரு கேடு இல்லையா? இல்லாத ஒன்றுக்கு தேடி அலையும் அலை மோதும் நெஞ்சு உனக்கா? உனக்காக முதலில் வாழப் பழகி பழகிய உறவை அலசிப் பார்ப்பாயா? பார்க்கும் பார்வையில் எதைக் கண்டாய் கண்டத்தில் எது தான் சரி?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. "மாங்கல்ய கனவுடன்" "மாங்கல்ய கனவுடன் தையை எதிர்பார்த்தேன் பொங்கலோ பொங்கல் கடிமணம் தராதோ? அங்கங்கள் எல்லாம் பூரித்து மகிழ்கிறதே தங்கத் தாலியை கழுத்து ஏற்காதோ? ஏங்காத எவரும் வெற்றி கண்டதில்லை நீங்காத ஆசை மனதை வாட்டுதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" & "என்றுமே முதலாளி" "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" "பனியில் நனையலாமா? படியிறங்கி வாராயா இனிய காதலை இன்பமாக கழிப்போமா? தனிமை வாட்டும் தணியாத வெப்பத்தை கனியும் அன்பால் கடந்து போவோமா?" "மின்னும் இடையை தொட்டுப் பார்க்கவா சின்ன இதழை கொஞ்ச விடுவாயா? மன்னன் இவனை கட்டி அணைத்து அன்ன நடையில் இன்பம் கொட்டுவாயா?" "கண்ணில் நுழைந்த அழகு வனிதையே விண்ணில் வாழும் தேவதை நீயா? மண்டியிட்டு மலர் ஏந்தி வேண்டுகிறேன் வண்ண மயிலே நிலவிலே காயலாமா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... "என்றுமே முதலாளி" "என்றுமே முதலாளி உழுதுண்டு வாழ்பவரே எல்லோர் நலமும் இவர்களின் கையிலேயே எண்ணிப் பாருங்கள் பெருமை தெரியுமே எருதுகளை ஏர்பூட்டி ஆழமாக உழுபவரே எழுச்சி கொண்ட உலகின் இறைவனே!" "உழவர் மகிழ்ச்சியால் ஆக்கும் ஓசையும் உடைத்துப் பாய்கின்ற ஆர்ப்பரிக்கும் சத்தமும் உன்னைக் காட்டும் பார் போற்றும் உயிரின் பெருமை அங்கு புரியும் உவகை பொங்கும் தலைவன் நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. “ஏனடி இந்த வேதனை..?” மாலைக் கதிரவன் பனை மரங்களுக்குப் பின்னால் தன் கதிர்களை இழுத்து மூடிக்கொண்டு, நீலக்கடலில் குளிக்கும் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள மகிழ்மதியின் வீட்டிலும் நீண்ட நிழல்களை வீசியது. மகிழ்மதி இடைகழியில் [முன்னறையில்] அப்பொழுது அமர்ந்திருந்தாள். அவளது மெல்லிய விரல்கள் தூசி நிறைந்த அறையின் தரையில் எதோ வடிவங்களைத் தேடிக்கொண்டிருந்தது. கண்ணீரால் கனத்த அவள் கண்கள், வெளியே உற்றுப் பார்த்தன. அங்கு அடிவானம், அடைய முடியாத வாக்குறுதிகளால், அவளைக் கேலி செய்வதாகத் அவளுக்குத் தோன்றியது. அவளது குழந்தைப் பருவத்தோழிசங்கவி, அவ்வேளை அங்கே வந்தாள். மகிழ்மதியின் முகத்தில் படிந்திருந்த வாட்டத்தைக் கண்டு, அவளின் மகிழ்ச்சியான வருகை தடுமாறியது. மகிழ்மதியும் சங்கவியும் ஒன்றாகப் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை பிரிக்க முடியாத நண்பர்களாக இருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தாழ்வாரங்கள் வழியாக உலாவும்போது கனவுகளையும் மறைவடக்கங்ளையும் [இரகசியங்கள்] பகிர்ந்து கொண்டனர். ஆனால் வாழ்க்கை அவர்களை மிகவும் வேறுபட்ட பாதையில் அழைத்துச் சென்றது. “ஏனடி இந்த வேதனை..?” அவள் அருகில் அமர்ந்து தோளில் மெதுவாகக் கையை வைத்துக் கொண்டு கேட்டாள் சங்கவி. மகிழ்மதி நடுங்கும் ஒரு பெருமூச்சு விட்டாள். "இது ஒரு வலி அல்ல, சங்கவி, என்னால் உனக்கு எளிதாக அதை விளக்க முடியும்," என்றாள். "ம்ம்," சங்கவி ஊக்கப்படுத்தினாள். பேசும்போது மகிழ்மதியின் குரல் கொஞ்சம் நடுங்கியது. “அகவழகனுடன் நான் திருமணமான போது, எவ்வளவு மகிழ்வாக இருந்தேன்னு ஞாபகம் இருக்கா? அவர், நான் கனவு கண்ட எல்லாமே கொண்டவர் - கனிவானவர் மற்றும் குறிக்கோள், நம்பிக்கை நிறைந்தவர். கனவுகள் மற்றும் வாக்குறுதிகள் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாங்கள் ஒன்றாகத் திட்டமிட்டோம். ஆனால் எங்கள் கடிமணத்திற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர் எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடுவதற்காகத் ஆஸ்திரேலியா சென்றார். அவர் அங்கு தன்னை உறுதிப்படுத்தியவுடன், என்னையும் விரைவில் பிறக்கவிருக்கும் எங்கள் மகளையும் அவருடன் ஒன்று சேர அழைப்பதாகக் கூறினார். சங்கவி தலையசைத்தாள், தோழிக்காக மனம் கனத்தது. “அது மூணு ஆண்டுகளுக்கு முன்னாடி சங்கவி. மூன்று நீண்ட ஆண்டுகள். எங்கள் மகள் குயிலி இப்போது நடந்து ஓடி விளையாடுகிறாள். அவள் என்னை ‘அம்மா’ என்று அழைக்க ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் தாண்டிவிட்டது. ஆனாலும், நாங்கள் இன்னும் என் பெற்றோர் வீட்டில்தான், அவர்களுக்குப் பாரமாக இருக்கின்றோம். கணவன் இல்லாத பெண்ணாக, திசை தெரியாத மகளாக உணர்கிறேன். இது என்ன கல்யாண வாழ்க்கை சங்கவி?” தன் கதையைச் சொல்ல ஆரம்பித்ததும் மகிழ்மதியின் குரல் தணிந்தது. “எங்கள் திருமணத்திற்குப் பிறகு நாட்கள் அழகாக இருந்தன சங்கவி. அகவழகனும் நானும் இன்பம், அன்பு மற்றும் அமைதியான எதிர்கால நம்பிக்கைகள் ஆகியவற்றால் மிகவும் மகிழ்வாக இருந்தோம். அரசாங்கப் பொறியியலாளர் அகவழகனுக்கு ஒரு நிலையான வேலை இருந்தது, யாழ்ப்பாணத்தின் பனை மரங்களுக்கு நடுவே அமைந்திருந்த எங்களின் சுமாரான வீடு அரவணைப்பும் சிரிப்பும் நிறைந்த இடமாக இருந்தது." "தினமும் காலையில் அகவழகன் சீக்கிரமாக எழுந்து தேநீர் போடுவார், இரண்டு சுவையான தேநீர் கோப்பைகளை முன்னறைக்கு கொண்டுவந்து, அங்கு எனக்கு பக்கத்தில் அமருவார். எனது புடவை காற்றில் மெதுவாக படபடக்கும் அழகை அனுபவித்தபடி ஏதேதோ பேசுவார். அன்றைய பொதுவான நிகழ்வுகள், எம் குடும்பத்தைத் தொடங்குவதற்கான கனவுகள் மற்றும் முற்றத்தில் ஒரு சிறிய தோட்டம் கட்டுவதற்கான திட்டங்கள், இப்படிப் பல பல." சங்கவி தலையசைத்து, அவளைத் தொடர ஊக்கப்படுத்தினாள். "அந்த ஒரு இனிமையான இரவில்," மகிழ்மதி சொன்னாள், அவள் கண்கள் அப்பொழுது ஒளிர்ந்தன. "நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம். திங்கள் மிகவும் ஒளிமயமாக இருந்தது, அலைகள் மிகவும் அமைதியாக இருந்தன. அப்பொழுது, வாழ்க்கை எப்போதுமே இப்படி அழகாக இருக்குமா என்று நான் அவரிடம் கேட்டேன், அவர் எனக்கு உறுதியளித்தார். ‘உலகம் சிதைந்தாலும், உன்னைப் பாதுகாப்பாக வைத்திருக்க நான் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன்’ என்று. நான் அவரை நம்பினேன், சங்கவி. நான் உண்மையில் மகிழ்ந்தேன், ஆகாயத்தில் மிதந்தேன்! " அவனுடைய அந்த வார்த்தைகள் அவள் இதயத்தில் ஒரு வாக்குறுதியாக அன்று மாறி இருந்தாலும் அவள் முகம் இன்று இருண்டு காணப்படுவதைக் சங்கவி கவனித்தாள். "ஆறு மாதங்களுக்குப் பிறகு, எல்லாம் மாறிவிட்டது, சங்கவி" அவள் தொடர்ந்து பேசும்போது மகிழ்மதியின் குரல் நடுங்கியது. “யாழ்ப்பாணத்தில் இராணுவம் அடிக்கடி வரத் தொடங்கியது. அரசியல் அமைதியின்மை எங்கும் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் இருப்பு தீவிரமடைந்தது, மேலும் அகவழகன், ஒரு தமிழ் தொழில் வல்லுநராக இருந்ததாலும் இளமையாக இருந்ததாலும், இராணுவத்தின் ஒரு கண் அவர் மேலும் எப்பவும் இருந்தது. ஒரு நாள் மாலை, அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர் மிகவும் வெளிரிய முகத்துடன் பதட்டமாக இருந்தார். நான் அவரை இதற்கு முன்பு அப்படி என்றும் பார்த்ததில்லை.” "என்ன சொன்னான்?" சங்கவி மெதுவாகக் கேட்டாள். “அன்று இராணுவம் தனது பணிமனைக்கு வந்ததாக அவர் என்னிடம் கூறினார். அவருடைய வேலை, அவரது அரசியல் நம்பிக்கைகள், அவருடைய குடும்பம் பற்றி அவரிடம் வினாவினார்கள். அது இனி பாதுகாப்பானது அல்ல என்றார். அன்று இரவே தான் ஆஸ்திரேலியா செல்லப் போவதாகவும், அங்கு தனக்கு வேலை தேட உதவக்கூடிய ஒரு நண்பர் இருப்பதாகவும், அவர் அங்கு தன்னை உறுதிப்படுத்தியதும், என்னையும் எங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையையும் தன்னிடம் அழைப்பதாகவும் கூறினார்." "அன்று இரவு முழுவதும் நான் விழித்திருந்தேன். என்னுடைய இதயம் பயத்தாலும் நிச்சயமற்ற தன்மையாலும் கனத்தது. அகவழகனின் அந்த முடிவு அன்பாலும், எங்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் பிறந்தது என்பதை நான் அறிந்தாலும், அவரைப் பிரிந்து சில காலம் வாழவேண்டும் என்ற எண்ணம் தாங்க முடியாததாக எனக்கு இருந்தது." சங்கவி ஆமோதித்தாள், மகிழ்மதியைத் தன்னுடன் அணைத்துக்கொண்டாள். "இரு வாரம் கடந்து அகவழகன் வெளியேறினார். நானும் எனது பெற்றோரின் வீட்டிற்கு திரும்பினேன். அங்கு நாட்கள் வாரங்களாகவும் பின்னர் மாதங்களாகவும் நீண்டன. நான் இணையத்தள கடிதங்களிலும் தொலைபேசி அழைப்புகளிலும் ஓரளவு ஆறுதல் கண்டாலும், அவை ஒவ்வொன்றும் என்னுடைய நம்பிக்கையை உயிர்ப்பிக்கும் உயிர்நாடியாக மட்டுமே இருந்தன. அவ்வளவுதான் சங்கவி!" "என்றாலும் என் கருத்தரித்த வயிற்றில் குழந்தை சுமக்கும் நிலை, மகிழ்ச்சியின் ஆதாரமாகவும் என்னுடைய தனிமையைப் போக்குவதாகவும் ஓரளவு இருந்தது. பின் குயிலி பிறந்தாள். ஆனால் வேறு ஒன்றும் நிறைவேறவில்லை. ஆண்டுகள் தான் கடந்தது, சங்கவி" "சங்கவி, என் நிலையைக் கேளடி? உனக்குத் தெரியுமா, நான் அடிக்கடி அடிவானத்தைப் பார்த்தது? - அகவழகனை திரும்பக் கொண்டுவரும் ஒரு விமானத்தின் பார்வைக்காக - நான் அவருடன் இணையப் போகும் விமானப் பார்வைக்காக, ஆனால் எல்லாம் மாயை தோற்றமாகி விட்டது" மகிழ்மதி தனது நாட்குறிப்பை எடுத்து சங்கவிக்கு வாசிக்க கொடுத்தாள். அதில்: "சிறகுகள் வெட்டப்பட்ட பறவையைப் போல, நான் கூட்டில் அமர்ந்திருக்கிறேன், வானத்தைப் பார்த்து என்னால் எட்ட முடியவில்லை. அவருக்கு வலி தெரியுமா? ஒரு இதயம் மெல்லியதாக நீண்டுள்ளது காதலுக்கும் காத்திருப்புக்கும் இடையில்?” என்று எழுதியிருந்தது. சங்கவியும் கொஞ்சம் கலங்கினாள். சங்கவியின் புருவமும் சுருங்கியது. "ஆனால் நீங்கள் ஏன் அவருடன் முதலில் செல்லவில்லை?" "இது சாத்தியம் என்று நாங்கள் அந்தநேரம் நினைக்கவில்லை," என்று மகிழ்மதி பதிலளித்தாள். "நிலைமை நிலையற்றது, நான் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தேன். அவர் எங்களை அழைக்கும் வரை நான் என் பெற்றோருடன் இருப்பது பாதுகாப்பானது என்று அவர் நினைத்தார்." "பின்னர்?" சங்கவி அழுத்தினாள். மகிழ்மதியின் குரல் கனத்தது. “அகவழகன் போன பிறகு வாழ்க்கை தனிமையும் காத்திருப்புமாக மாறியது. நான் என் பெற்றோரின் வீட்டில் இருந்தாலும், மனதளவில் தனிமையே என்னிடம் குடிகொண்டது. அவரின் பதில்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தன - 'விரைவில், மகிழ்மதி. விரைவில்.’’ அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்து, கூறுவதைக் கொஞ்சம் இடைநிறுத்தினாள். “குயிலி என் உலகமாக மாறினாள், என் மகிழ்ச்சியின் ஒரே ஆதாரம். ஆனால் இன்று, நாள் போகப் போக, நம்பிக்கை இழக்க ஆரம்பித்தேன். அக்கம்பக்கத்தினர் வெட்டிப் பேச்சு பேசினார்கள். உறவினர்கள் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ‘இது என்ன திருமண வாழ்க்கை?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்." மகிழ்மதி குரல் உடைந்தது: "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது பசலை உணீஇயர் வேண்டும் திதலை அல்குல் என் மாமைக் கவினே" "நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலைப் படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும், என் கணவருக்கும் பயன்படாமல் வீணாகிறது சங்கவி" என்றாள். சங்கவி ஒரு கணம் மௌனமாக இருந்தாள், மகிழ்மதியின் வார்த்தைகளின் ஆழம் அவளை வருத்தியது. அவள் தன் இரு கைகளையும் நீட்டி தன் தோழியின் கைகளைப் பற்றினாள். “மகிழ்மதி, உன் வலி நியாயமானது. ஆனால் அகவழகனின் பயணம் எளிதான ஒன்றல்ல. நீயும் குயிலியும் உள்ளடங்கிய எதிர்காலத்துக்காக அவனும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான், யாரும் அறியாத ஒரு தேசத்தில்." மகிழ்மதி பெருமூச்சு விட்டாள். "ஆனால் மகிழ்மதி, உன் தேவைகளையும் வலியையும் வெளிப்படுத்த உனக்கு உரிமை உண்டு. இந்தக் காத்திருப்பு எவ்வளவு நாளுக்கு என்று அகவழகனிடம் கேள்" என்றாள். "ஆனால் அவருக்குப் புரியவில்லை என்றால் என்ன செய்வது? நான் சுயநலவாதி என்று அவர் நினைத்தால் என்ன செய்வது?" "அப்படியானால், அன்பு என்பது வாக்குறுதிகள் மட்டுமல்ல என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டும். இது இருப்பைப் பற்றியது, பகிரப்பட்ட சுமைகளைப் பற்றியது. அவர் உங்களை உண்மையிலேயே நேசித்தால், உங்கள் இருவரையும் விரைவில் அவரிடம் கொண்டு வருவதற்கான வழியைக் கண்டுபிடிப்பார்." சங்கவியின் வார்த்தைகள் மகிழ்மதியின் இதயத்தில் உறுதியை விதைத்தது. அன்று மாலை, தன் மனதைக் கொட்டிக் கொண்டே அகவழகனுக்கு ஒரு மின் கடிதம் எழுதினாள். ஒரு சில வாரங்கள் கழித்து பதில் வந்தது. ஆனால், இது ஒரு தெளிவற்ற வாக்குறுதி அல்ல, ஒரு தெளிவான திட்டம். அகவழகன் தான் எதிர்கொண்ட தடைகள் மற்றும் தனது குடும்பத்தை மீண்டும் இணைக்கும் புதிய உறுதியை விளக்கினார். இந்த முறை, மகிழ்மதி மற்றும் குயிலிக்கு ஆஸ்திரேலியாவில் அவருடன் இணைய விமான பற்றுச் சீட்டும் மற்றும் நுழைவுரிமைக்கான சான்றுப் பத்திரமும் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு ஒளிமயமான காலை, மகிழ்மதி, குயிலியின் சிறிய கையைப் பிடித்து, ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் ஏறினாள். அங்கு விமான நிலையத்தில் அகவழகன் காத்திருந்தான். அவன் முகத்தில் நிம்மதியும் அன்பும் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் இருவரையும் அரவணைத்து, மன்னிப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான உறுதிமொழிகளை வழங்கினார். மகிழ்மதியின் இதயம், குணமடையத் தொடங்கியது. வாழ்க்கையைப் போலவே, அன்பும் பெரும்பாலும் குழப்பமானதாகவும், பூரணமாகாததாகவும் சிலவேளை தோன்றும் என்பதை உணர்ந்தாள். அவள் கணவன் மற்றும் மகளுக்கு அருகில் நின்றபோது - சிந்திய பால் இன்னும் ஒரு புதிய தொடக்கத்தை வளர்க்கும் என்ற நம்பிக்கையின் ஒளியை உணர்ந்தாள். பின்னர் சங்கவியைத் தொடர்பு கொண்டு சொன்னாள்: "விமானத்திலிருந்து இறங்கி அவர் கைகளில் நான் நின்றதும், அந்த பழைய ஆண்டுகளின் கனம் கரைந்தது போல் உணர்ந்தேன்," அவள் குரலில் உணர்ச்சிகள் நிறைந்திருந்தது. "நாங்கள் இப்போது எங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புகிறோம், சங்கவி. இது எளிதானது அல்ல, ஆனால் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், அதுதான் முக்கியம்." அவள் பின் மெதுவாகச் சொன்னாள்: "வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரம் புதிய மண்ணைத் தேடுகிறது, அதன் வேர்கள் மீண்டும் உயிர் பெறுகின்றன. அதுபோலவே காதலும் புயலால் அசைந்தாலும் கதிரவனை நோக்கித் திரும்பும்." சங்கவி சிரித்தாள், அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. “மகிழ்மதி, உனக்குத் தெரிந்ததை விட நீ வலிமையானவள். அகவழகன் உன்னைப் பெற்றதற்கு நற்பேறு பெற்றவர்." மகிழ்மதி தன் தோழியை நன்றியுடன் பார்த்தாள். சங்கவியும் , “ஏனடி இந்த [இன்ப] வேதனை..?” என்ற ஒரு கேள்வியுடன் ஒரு குறும் கவிதை அனுப்பி மௌனமாக விடைபெற்றாள். "ஈரக் கண்ணை மூடிக்கொண்டு வாடி நின்ற பெண் கொக்கே! தூரம் இல்லை இனி உனக்கு கோடி இன்பம் தழுவிப் பூக்குமே!" "காலை முதல் காலை வரை காதல் சொல்லும் ராகம் கேட்குமே! சோலைக் கிளிகள் ஆடிப் பாட உந்தன் சோக மனமும் தேறுமே!" "தேகம் எங்கும் தேனைச் சிந்தும் தோகை மயில் பெண்ணே! தேசம் விட்டு தேசம் போயும் பாசம் மறவா நட்புக் கண்ணே!" "கண்ணுக்கு உள்ளே உன்னை வைத்து காலம் எல்லாம் அருகில் இருப்பானே! அகவழகன் அகமகிழ்ந்து உன்னை அணைத்து கோலம் போடுவான் உந்தன் இதழிலே!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. "தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே" வண்ணக் கோலத்தில் அழகு சொல்லி கண்கள் இரண்டாலும் காதல் பேசி மண்ணின் வாசனையை ஆடையில் காட்டி ஆண்மையை இயக்கும் பெண்மையை வாழ்த்துகிறேன்! மாலைக் கதிரவன் அடிவானம் தொட சேலை ஒப்பனையில் அடிமனதைக் கிளறி சோலை வனப்பில் ஆசை தெளித்து அலையாய் என்னை முட்டி மோதுகிறாயே! கன்னத்தில் கைவைத்து சோர்ந்து இருந்தவனுக்கு புன்னகை பொழிந்து அருகில் நெருங்கியிருந்து அன்பான வார்த்தைகளால் ஊக்கம் கொடுத்து என் தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. "நீயில்லா வாழ்வு" நீயில்லா வாழ்வு பாலைவனம் ஆகுமே நீரற்ற உலகு வெறிச்சோடி இருக்குமே நீதியிழந்த நாடு சமாதானம் காணாதே நீலக் கருங்குயிலே என்னைத் தழுவாயோ? காதல் இல்லையேல் குடும்பம் அழியுமே காமம் ஒழிந்தால் பரம்பரை மறையுமே காதணி அணிந்த அழகு வஞ்சியே காலம் தாழ்த்தாமல் அருகில் வருவாயோ? உன்னைக் காணாத கண்ணும் விழியல்ல உள்ளம் சேராத இல்லமும் வீடல்ல உவகை கொண்டு உயிர்கள் நிலைக்க உண்மை உணர்ந்து அன்பு பொழியாயோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. சின்னண்ணா, கந்தையா இராசலிங்கத்தின் பிறந்தநாளில், அன்பான நினைவாக / In Loving Memory of our second elder brother, Kandiah Rasalingam [26 / 02/ 2025] அந்த நாள் ஞாபகம் உள்ளத்தில் ஏந்தி அன்பான ஆத்மாவுக்கு பிரார்த்தனை செய்கிறோம் அழகான மண்ணில் அத்தியடியில் பிறந்தவரே அருகில் இல்லாமல் தொலைவில் போனதேனோ? இடைக்காடு தோட்டத்தின் மெல்லிய தென்றலில் ரொறன்ரோ குளிரின் பனி மழையில் உறுதியான கைகளுடனும் புத்திசாலித்தனமான மனதுடனும் மரியாதை உண்மை அன்புடனும் சேவை செய்தவரே! பிறந்தநாளில் நாங்கள் நினைவில் நிறுத்தி சகோதர அன்பை தெளிவாக உணர்கிறோம் தொலைவில் இருந்தாலும் நிம்மதி தழுவட்டும் எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்! In Loving Memory of our second elder brother, Kandiah Rasalingam On this day, we pause and pray, For a soul so kind, now far away. Born in Athiady, in Jaffna's land, A life well lived, so wise, so grand. Through Idaikkadu’s gentle breeze, And Toronto’s cold, you found your peace. With steady hands and a brilliant mind, You served with honor, true and kind. A brother dear, forever near, Though gone, your love is crystal clear. On your birthday, we remember still, Your warmth, your strength, your steadfast will. Rest in peace, though far apart, You live forever in our heart. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  17. ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" & "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே ஈரத்தாவணியிலே இடுப்புக் காட்டி வதைப்பவளே பரந்த பண்பொழுகும் செம்பவள திருமேனியே! எந்தை பூவையே தேன்சிந்தும் வஞ்சியே தீந்தை விழியால் மயக்கும் சுந்தரியே சிந்தை சிவக்க மகிழ்கிறேன் உன்னழகில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................... "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "வாசிப்பு உங்கள் அறிவை வளர்க்கட்டும் வளர்க்கும் அறிவு பண்பு கொடுக்கட்டும் கொடுக்கும் பண்பு மனிதம் நேசிக்கட்டும் நேசிக்கும் மனிதர்கள் தர்மம் காக்கட்டும் காக்கும் தலைவர்கள் நீதி நாட்டட்டும் நாட்டும் நீதிகள் உண்மையை பேணட்டும் பேணும் நேர்மை எதிலும் ஒலிக்கட்டும் ஒலிக்கும் குரலில் பாசம் ஓங்கட்டும் ஓங்கும் ஞானம் குடிகொள்ளட்டும் மனதில் மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. "யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] & "நடை பயிற்சி" "யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] "யாரொடு நோக என்னையே கேட்கிறேன் கேட்கிறேன் தினம் வானத்தைப் பார்த்து பார்த்து பார்த்து கண்ணும் கலங்கியது கலங்கிய மனதில் குண்டுகள் வெடிக்குது! வெடித்து சிதறிய உடல்களைக் காண்கிறேன் காண்கிறேன் என்றும் அவைகளின் கண்ணீரை கண்ணீரால் கழுவிய இரத்த உடல்களை உடல்களைத் தாண்டி ஓடும் மனிதர்களை! மனிதர்களை மதியா குண்டு விமானங்களை விமானங்கள் சத்தத்தில் பதுங்கும் குழந்தைகளை குழந்தைகள் பட்டினியில் படும் வேதனைகளை வேதணையிலும் தளராத மண்ணின் மைந்தர்களை! மைந்தர்கள் போற்றிய நீதி தேவதையை தேவதைகள் வாழ்ந்த எங்கள் மண்ணை மண்ணோடு மண்ணாய் மடிவதைப் பார்த்து பார்த்து கலங்குகிறேன் யாரொடு நோக!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .......................................................................... "நடை பயிற்சி" "நடை பயிற்சி படிப்படியாக விரிவடைய உடல் அசைகிறது மனம் விடுதலையாகிறது இயற்கையோடு ஒன்றி நல்லிணக்கம் மலர்ந்தனவே! பாதைகள் ஒழுங்கைகள் புத்துணர்வு கொடுக்க ஆரோக்கியம் புதுப்பித்து எண்ணங்கள் சீராகுது அமைதி தோன்றி தொல்லைகள் கலைந்தனவே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  19. குறள்மொழி இன்பம் / "குறள் 1265" [நீங்குமென் மென்றோள் பசப்பு] "அரிவை என்னுடன் இன்பம் பொழியாமல் பிரிந்து போகும் அன்புக் காதலனே புரிதல் உனக்கு சொற்பமும் இல்லையோ?" "தெரிவை இவளின் வளையல் கழலுதே வரிகளாய் தோலில் பசப்பு வாட்டுதே கரிய உள்ளம் படைத்தவன் நீயோ?" "ஆதவனைக் கண்டு மலர் மலரும் நாதனைப் பார்த்தால் பெண் பூரிக்கும் இதனையும் நான் சொல்ல வேண்டுமோ?" "மதியைக் கண்டால் மனம் குளிரும் மங்கை எனக்கோ நீயே திங்கள் மனையாளனே காதல் ஒளி வீசாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  20. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 21 "மற்றவைகளும் முடிவுரையும்" (மூட நம்பிக்கையின் வெவ்வேறு அம்சத்தை [கூறுபாடுகளை] காட்டக்கூடியதாக நான் படித்த, கேட்ட இரு கதைகளை, இந்த நீண்ட கட்டுரையின் முடிவுரையாக சுருக்கமாக தருகிறேன். உங்களின் இந்த கட்டுரை பற்றிய கருத்து, ஆக்கபூர்வமான திறனாய்வு [விமர்சனம்], எண்ணம், மதிப்பீடு வரவேற்க தக்கது.) ஒருவருக்கு அடிக்கடி வருத்தம் வந்து கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி இருந்தது. அவரும், அவரது மனவியும் இப்படி நெடுகவும் உடல்நிலை குன்றிப் போவதற்கு என்ன காரணம் என யோசித்தார்கள். இறுதியாக ஒரு 'மை' போட்டுப் பார்ப்பவரிடம் போவோம் என முடிவு எடுத்தார்கள். இவரின் குடும்பத்துக்கு என சிறு வைரவர் கோவில் உள்ளது. அந்த மை போட்டுப் பார்ப்பவர் இவர்களிடம் சொன்னார்: "உங்களுடைய கோவிலில் இருக்கும் வைரவரை உங்கள் எதிரி ஒருவர் கட்டி வைத்திருக்கிறார். அதனால் தான் உங்களுக்கு இப்படி அடிக்கடி உடல் நலமற்றுப் போகின்றது. இதை சரி செய்ய, அந்த கட்டி வைத்திருப்பவர் செய்திருக்கும் செய்வினையை கண்டு பிடித்து அகற்ற வேண்டும்" என அறிவுரை கூறினார். அதன் படி, அந்த மை போட்டுப் பார்ப்பவர் அவர்கள் வீட்டுக்கு வந்து, அந்த காணி முழுவதும் சுற்றித் திரிந்து, செய்வினை புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்ததாக கூறி, அந்த இடத்தை தோண்டச் சொல்லி, அங்கிருந்து ஏதோ சில பொருட்களை அகற்றினார். அதன் பின் தட்சனையாக பணமும் வேறு சில பொருட்களும் வாங்கிச் சென்றார். அவருக்கு அதற்குப் பின்னர் எந்த உடல் நலக் குறைவும் வரவில்லையாம். அது மட்டும் அல்ல அவரால் இப்ப துவிச்சக்கர வண்டி கூட ஓட்டிக் கொண்டு செல்ல முடிகிறதாம் என ஆனந்தமாக கூறுகின்றார். அதாவது அவருக்கு, அந்த மை போடுபவர் சொன்னதில் இருந்த முழுமையான நம்பிக்கை, அவரை சுகமானவராக்கி வைத்திருக்கின்றது. அது தற்காலிகமானதாக இருந்தாலும், அவர் கொஞ்ச நாளைக்கு, சந்தோஷமாகவும், உடல்நலத்துடனும் இருக்கப் போகின்றார் என்பது உண்மை. இனி நாம் இரண்டாவது கதைக்கு போவோம் . முன்னொரு காலத்தில் ராமாபுரி என்ற ஒரு நாடு இருந்தது. அதை ராஜகம்சன் என்ற அரசன் ஆண்டுவந்தான். மாதம் மும்மாரி பொழிய எல்லாவளமும் பெற்று செழிப்பாக இருந்தது அந்தப் பூமி. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தனர். கொலை, கொள்ளை என எந்தக் குற்றமும் நடப்பதில்லை. ஏனெனில், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து வந்தது. மக்களை நேசிக்கக் கூடிய ராணுவத்தைக் கொண்ட நாடு அது. ராமாபுரிக்கு அண்டை நாடு தாணடவராயன் ஆளும் விஜயபுரி. அவன் தந்திரமானவன், அதே சமயம் பேராசைக்காரனும் கூட. அவனும் சிறப்பாகத்தான் ஆட்சி புரிந்து வந்தான். மக்களை எந்தக் குறையும் இல்லாமல் ஆண்டான். அவனுக்கு ராமாபுரியின் மீது எப்பொழுதும் ஒரு கண் இருந்து வந்தது. எப்பாடுபட்டாவது அந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென துடியாய் துடித்துக் கொண்டிருந்தான். ஆனால், அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையையும், ராணுவத்தின் வீரத்தையும் கண்டு அவன் மிகவும் யோசித்தான். அந்த நாட்டின் பலமே பொருளாதாரத்தில் தான் இருக்கிறது. அதைக் குலைத்தால், அங்கே மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு ... அதையே நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, நாம் படையெடுத்து விடலாம் என மந்திரி கூறியதை பல முறை சிந்தித்துப் பார்த்தான். அப்போதுதான் திடீரென்று அவனுடைய மனதுக்குள் ஒரு யோசனைப் பிறந்தது. ராமாபுரி மக்கள் வலிமையானவர்களாக இருந்தாலும், மூடநம்பிக்கைச் சேற்றில் மிகவும் ஊறியவர்கள். ஏன் இந்த ஒரு காரணத்தை வைத்து ஏதாவது செய்ய முடியாதா என்று யோசித்தான் தாண்டவராயன். உடனே மந்திரிகளை அழைத்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். ராமாபுரிக்கு சாமியார் ஒருவர் வந்தார். ஒரு கோயில் மண்டபத்தில் அவர் தங்கிக் கொண்டார். புதிதாக சாமியார் வந்திருக்கும் விஷயம் கேள்விப்பட்டதும், அந்நாட்டு மக்கள் அலை அலையாய் வந்து அந்தச் சாமியாரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். வெகு விரைவிலேயே அந்தச் சாமியாரின் புகழ் பரவியது. சாமியாரின் வருகையை அறிந்த ராமாபுரி மன்னன் ராஜகம்சன். அவரை தன்னுடைய அரண் மனைக்கு அழைத்துவர உத்தரவிட்டான். “சிறிது காலத்திற்கு நீங்கள் அரண்மனையில் தங்கி இந்த இடத்தைப் புனிதப்படுத்த வேண்டும்” என்று மன்னன் கேட்டுக் கொண்டான். துறவியும் உடனே சம்மதித்தார். ஒரு வாரம் சென்றது. துறவிக்கு ராஜ உபசாரம்தான். அவர் தானாக எதையும் கேட்கவில்லை. அதே சமயம் கொடுப்பதையும் மறுக்கவில்லை. அன்று ஒரு நாள் மன்னன் ராஜகம்சன் துறவியின் அறைக்கு வந்தான். அங்கு துறவி சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட மன்னன் “என்ன காரணம்?” என்று பணிவாகக் கேட்டான். முதலில் வாய் திறக்காத அந்தத் துறவி, மன்னன் சிறிது வலியுறுத்திக் கேட்ட பின்னர் பேச ஆரம்பித்தார். “மன்னா! உங்கள் நாட்டை கேடு சூழ்ந்துள்ளது” என்றார். இதைக் கேட்ட மன்னன் திகைப்படைந்தான். “என்ன சொல்லுகிறீர்கள்?” “ஆம் மன்னா! இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆபத்து காத்திருக்கிறது. அவர்களின் உயிர் அவர்களின் கையில் இல்லை” என்றார் துறவி. இதைக் கேட்டதும் மன்னன் அதிர்ச்சியடைந்தான். “நீங்கள் கூறுவது வியப்பாகவும், அதிர்ச்சியாவும் உள்ளதே!” என்றான் மன்னன். “உன்மை மன்னா! நான் கூறுவது உண்மை.உயிரைப் பறிக்கும் தீய சக்தியின் தற்போதைய இருப்பு எங்குள்ளது என்பதை சக்தியின் அருளால் நாம் கண்டு கொண்டோம். இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பச்சை மரத்திலும் அந்த தீயசக்தி குடிகொண்டுள்ளது. வரும் அமாவாசை அன்று அது உயிர் பெற்று வெளியே வரும். மக்கள், படைவீரர்கள் ஆகியோர் அதன் இலக்கு!” “நம்பவே முடியவில்லையே.” “நம்பித்தான் ஆக வேண்டும். நான் சொல்வதை சொல்லிவிட்டேன். தடுக்க வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததாகும்.” “எவ்வாறு தடுப்பது?” “அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. அதற்குள் தீய சக்தி குடியிருக்கும் மரங்களை வெட்டி அழிக்க வேண்டும். “அப்படிப்பட்ட மரங்களை எவ்வாறு அடையாளம் காண்பது? “அடையாளம் காண வேண்டிய அவசியமே கிடையாது. இருக்கும் ஒவ்வொரு மரத்திலும் தீய சக்தியின் இருப்பு உள்ளது.” “அய்யய்யோ! அப்படி என்றால் ஒவ்வொரு மரத்தையும் வெட்டி ஆக வேண்டுமா?” “நிச்சயமாக வேறு மார்க்கமே இல்லை. மரம் கூட வேறொன்று நட்டுவிடலாம். ஆனால் மனிதரை ...” “உண்மைதான்! இப்போதே ஆணையிடுகிறேன்.” படை வீரர்களுக்குத் தகவல் அனுப்பட்டது. அவர்கள் துரிதரீதியில் செயல்பட்டு அனைத்து மரங்களையும் வெட்டினர். மன்னன் துறவிக்கு நன்றி தெரிவித்தான்.பரிசு கொடுக்கவும் முனைந்தான். ஆனால் துறவி எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாந்தமாக புறப்பட்டுப் போனார். மக்களின் உயிரைக் காப்பாற்ற வந்த அந்தத் துறவியை எல்லோரும் மனதில் நினைத்து வழிபட்டனர். அமாவாசை கழிந்தது.எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.அவர்கள் விடுகிற அசுத்தக் காற்றை எடுத்துக் கொண்டு தூயக் காற்றை கொடுக்க இப்போது ஒரு மரமும் அந்த நாட்டில் இல்லை.மக்களும் சரி, மன்னனும் சரி இதையெல்லாம் உணரவேயில்லை. இரண்டு, மூன்று நாளாக ஓய்வு இல்லாமல் வேலை செய்த களைப்பு காரணமாக மக்களும்,வீரர்களும் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது தான் அது நடந்தது. வெளியே போர் முரசு ஒலிக்கும் சத்தம் கேட்டது. அரண்மனைக்கு வெளியே வந்து பார்த்தான் மன்னன் ராஜகம்சன். விஜயபுரி நாட்டு கொடி பறக்க ஒரு பெரும்படை திரண்டு வந்திருந்தது. “முன் அறிவிப்பு இன்றியே போர் தொடுக்க தாண்டவராயன் வந்து விட்டானே ... அவன் புத்தியே இதுதான்” என நினைத்த மன்னன், அவசரமாக படைகளுக்கு ஆனணயிட்டான். ஆனால், உடல் களைப்பு காரணமாக யாருமே செயல்பட முடியவில்லை. சிறிது நேரத்தில்... எது நட்க்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்தது.ராமாபுரியைக் கைப்பற்றினான் தான்டவராயன்.மன்னன்,மந்திரிகள்,படைவீரர்கள்,மக்கள் எல்லோருமே அவன் பிடியில்.கை விலங்கு பூட்டப்பட்ட ராஜகம்சனைப் பார்த்து தாண்டவராயன் பேசினான். “என்ன ராஜகம்சா! நான் அனுப்பிய துறவி நன்றாகத் தான் வேலை செய்திருக்கிறார். வலிமையுள்ள மக்களும், படையும் கொண்ட நாடு ராமாபுரி. ஆனால், மூட நம்பிக்கைச் சேற்றில் சிக்கியிருந்தீர்கள். உங்களை அடிமைப்படுத்த அதையே நான் வாய்ப்பாகக் கொண்டேன்”. துறவி இங்கே வந்து நடந்து கொண்டதெல்லாம் நான் வகுத்த திட்டப்படியே. முட்டாள்களே! மரத்தில் தீய சக்தியாவது, அது மக்களை அழிப்பதாவது. இக்கணம் முதற்கொண்டு நீங்கள் எனது அடிமைகள். நான் உத்தரவிடுவதை தட்டாமல் நீங்கள் நிறைவேற்ற வேண்டும். “ஏற்கெனவே வெட்டப்பட்ட மரங்களை உடனடியாக சீன நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அடுத்து, எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டதோ அதே அளவுக்கு புதிய மரங்கள் நடப்பட வேண்டும்”. என்னுடைய இந்த முதல் உத்தரவை நிறைவேற்றி விட்டு வாருங்கள் என்று அட்டகாசமாய் சிரித்தவாரே கூறினான் தாண்டவராயன். ராஜகம்சன் ஏதும் பேசாது திரும்பி நடந்தான். மக்களும் அவனைப் பின் தொடர்ந்து தலைக்குனிந்து சென்றனர். முடிவுற்றது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. "செருக்கு” [தன்முனைக் கவிதை] "செருக்கு அற்றவர் வாழ்வு என்றும் பெருமிதமே! கர்வம் கொண்டவர் இருப்பு ஒரு கேள்விக்குறியே!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  22. "பிள்ளை நிலா" ஒரு முன்னிரவு அன்று, வெள்ளி நிலவின் ஒளியின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், சுந்தர் மற்றும் மீனாட்சி இருவரினதும் திருமணம், அவர்களது குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டது. அவர்களின் திருமணம் ஆராவாரத்துடன் கொண்டாடப்பட்டாலும், மணமக்கள் இருவரிடமும் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. பொறியியலாளரான சுந்தர், விருப்பு வெறுப்பற்ற, அமைதியான இயல்புடன், சிந்தனைகள் அல்லது ஆசைகளை விட, உண்மையான உலக நடைமுறைகளில் அதிக அக்கறை கொண்டவரும் எதையும் துல்லியமாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டவருமாவார். அதே வேளை, உணர்ச்சிமிக்க கலைஞரான மீனாட்சி, உணர்ச்சிகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டவள். அவர்களது கருத்து வேறுபாடுகள் அடிக்கடி, அவர்களுக்கிடையில் உராய்வுக்கு வழிவகுத்தன. அவர்களது வீட்டில் சிரிப்பை விட கருத்து வேறுபாடுகள் தான் பெரிதாக எதிரொலித்தன. மீனாட்சியின் ஓவிய வண்ணங்கள் மற்றும் கவிதைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ள சுந்தரால் முடியவில்லை. அவன் அதை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் வேண்டா வெறுப்புடன் இருந்தான். மீனாட்சி, அதேவேளை, அவனது கடுமையான நேரம் தவறாத திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் மற்றும் வேலை ஒழுக்கங்களில் கண்டிப்பான கடைப்பிடிப்பு அவளை மூச்சுத் திணற வைத்தது. ஒவ்வொருவரும் தங்களிடம் இல்லாதவற்றை மற்றவரில் பார்ப்பது, அவர்களுக்குள், முரண்பாட்டை அதிகரித்துக்கொண்டே இருந்தது. மேலும் மனக்கசப்புகள் களைகளைப்போல அவர்களின் வாழ்க்கை என்ற தோட்டத்தில் வளர்ந்தன. அவர்களின் இதயங்கள் தவறான புரிதலால் தடுமாறின, தாக்கப்பட்டன. அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களுக்கிடையில் ஒரு உடன்பாடு அல்லது நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்காக ஒரு நடுவராக இருந்து இணக்குவிக்க முயன்று, ஆலோசனைகளையும் ஆறுதலையும் வழங்கினர். ஆனால் தம்பதியரின் வேறுபாடுகள் தீர்க்க முடியாததாகத் தோன்றியது. சுந்தர் தன் வேலையில் முழுதாகத் தன்னைப் புதைத்துக்கொண்டான். மீனாட்சி மணிக்கணக்கில் ஓவியம் வரைந்தாள். புயல் நிறைந்த வானம் மற்றும் கொந்தளிப்பான கடல்கள் நிறைந்த ஓவியங்கள் மீது தனது எண்ணக்குலைவுகளை அல்லது விரக்திகளை ஊற்றினாள். "பிள்ளை நிலா என்றும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே" என்றாலும் சில ஆண்டுகள், வாழ்க்கை குழப்பத்தில் கழிந்த பின், விதி வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது போல, மீனாட்சிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் இருவரும் அந்த மழலைக்கு நிலவன் என்று ஒற்றுமையாகப் பெயரிட்டனர், அதாவது "நிலாவைப் போன்ற அழகும் ஒளிரும் கொண்டவன்" என்று! அவன் புதிதாகப் பிறந்த குழந்தையாக இருந்தாலும் அவன் அமைதியான இயல்புடையவனாக, ஒரு புத்திசாலிப் பிள்ளையாக இருந்தான். அதுமட்டும் அல்ல, நிலவனின் வருகை, முதன்முறையாக சுந்தரையும் மீனாட்சியையும் தங்கள் தங்களின் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைக்க வழிவகுத்துக், குழந்தை மீதான கவர்ச்சியாலும் அன்பாலும் ஒன்றுபட வைத்தது. நிலவன் வளர வளர அவனுடைய வசீகரம் எல்லோருக்கும் தெரிந்தது. அவனது தந்தையின் கூர்மையான கண்களும், தாயின் வெளிப்படையான புன்னகையும் அவனிடம் இருந்தது. அவனது சிரிப்பு இதயங்களை மென்மையாக்கும் ஒரு மெல்லிசையாக இருந்தது. மேலும் அவனது விளையாட்டுத்தனமான குறும்புச் செயல்கள் ஒரு காலத்தில் அமைதியாக இருந்த அவர்களின் வீட்டை மகிழ்ச்சியின் புகலிடமாக மாற்றியது. அவன் ஒரு குழந்தை மட்டுமல்ல, இரண்டு இதயங்களுக்கும் இடையே ஒரு பாலமாகவும் இருந்தான். அவன் உண்மையில் ஒரு 'பிள்ளை நிலா'. அவர்கள் இருவரின் இருண்ட காலத்திற்குப் பிறகு, பிள்ளை நிலாவாகப் பிறந்து, வாழ்க்கைக்கு ஒளியேற்றி, அதன் ஒளிர்வைத் தன் வளர்ச்சியுடன் அதிகரிக்கத் தொடங்கி, அதனால் தன் பெற்றோர் இருவரினதும் இதயத்தில் காதல் தீபத்தை ஏற்றி வைத்தான். நிலவனின் குரலாலும் உடல் மொழியாலும் துடுக்குத்தனத்தையும் குறும்புத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பார்த்த சுந்தர் தன் மகனின் கண்களால் உலகைப் பார்க்க ஆரம்பித்தான். மீனாட்சியின் ஓவியங்களில் இப்போது அவன் மகிழ்ச்சியைக் கண்டான் அவளின் ஓவியமும் இப்போது பெரும்பாலும் ஒரு ஒளிரும் நிலவு அல்லது விளையாட்டுத்தனமான குழந்தையைச் சித்தரிக்கத் தொடங்கியது, மேலும் மேலும் சுந்தரை அதன் பக்கம் இழுத்தது. மீனாட்சி, சுந்தரின் அர்ப்பணிப்பையும், அவர்களது குடும்பத்திற்கு அவன் அளிக்கும் அளவுகடந்த பாதுகாப்பையும் ஆதரவையும் பாராட்டிடத் தொடங்கினாள். நிலவனின் இருப்பு அவர்களின் வேறுபாடுகளிலும் ஒரு அழகை ஒளிரச்செய்தது. பெற்றோர் இருவரும் தங்கள் மகிழ்வையும் சவால்களையும் கடந்து செல்லும்போது அவர்களது பிணைப்பு மேலும் மேலும் ஆழமடைந்தது. இரவு நேர உணவுகள் பகிரப்பட்ட புன்னகையின் தருணங்களாக மாறியது. மேலும் அவர்களின் உரையாடல்கள் நிலவனின் எதிர்காலத்திற்கான கனவுகளாக மாறியது. அவர்களுக்கிடையில் முன்பு குடிகொண்டிருந்த, ஒருவரின் மேல் ஒருவர் பழி தூற்றுதல் அற்றுப்போய், அவர்கள் ஒருவரையொருவர் காதலர்களாக நெருங்கி வரத் தொடங்கினர். சுந்தர், மீனாட்சியைக் கடற்கரை உலா மற்றும் நிலவொளி இரவு உணவென வியப்படையச் செய்தான். அதே நேரத்தில் அவளும் அவர்களின் சிறிய குடும்பத்தின் உருவப்படத்தை வரைந்தாள். சிறிய குடும்பத்தின் உருவப்படத்தை வரைந்து அதில்; "மழலையின் மொழி கேட்டு நாம் பேசும் மொழி மறந்தோம் மழலையின் மொழி பேசி நாமும் காதல் குழந்தையானோம்!" "மழலையின் குறும்பு கண்டு வேறுபாடு ஓடி மறைந்தன மழலையின் புன்னகை பார்த்து இருவரும் இணைந்து மகிழ்ந்தோம்!" "குழவி தளர்நடை கண்டு நாமும் குதூகலித்து கட்டிஅணைத்தோம் குழவியின் கொஞ்சிக் குலாவுதலில் நாமும் இன்பத்தின் உச்சியடைந்தோம்!" என்ற கவிதை ஒன்றையும் எழுதிச் சுந்தருக்குக் காட்டி மகிழ்ந்தாள். நிபந்தனையற்ற மழலை அன்பிற்கு அப்படம் சான்றாக வீட்டுச் சுவரை அலங்கரித்தது. ஆண்டுகள் கடந்தன, நிலவன், அவர்களின் பிள்ளை நிலாவாக, அவர்களின் மகிழ்ச்சியின் இதயமாகத் தொடர்ந்தான். அவனது குறும்புகளும் எல்லையற்ற ஆர்வமும் அவர்களையும் நெருக்கமாக்கியது. அவர்களின் வீட்டை அன்பின் சரணாலயமாக மாற்றியது. சுந்தரும் மீனாட்சியும் பிரிக்க முடியாதவர்களானார்கள். அவர்களின் காதல் கதை, அவர்களை முதலில் ஒன்றாகக் கொண்டுவந்த சிறு கைகளால், மீண்டும் எழுதப்பட்டது. அக்கம்பக்கத்தினர் அடிக்கடி அவர்களின் மாற்றத்தைக் கண்டு வியந்தனர். ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்ட சுந்தர், இப்போது விண்மீன்களின் கீழ் மீனாட்சிக்கு கவிதைகள் வாசித்தான். முன்பு ஒருமுறை கோபத்தால் தீப்பிடித்த மீனாட்சி, சுந்தரின் நிலையான அன்பினில் ஆறுதல் கண்டாள். தங்களுடைய ஆரம்பப் போராட்டத்தின் இருளைப் போக்கிய நிலாவைப் போன்ற தங்கள் குழந்தை நிலவனே, தங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம். அவனே தங்களை ஒன்றாக ஒட்டி வைத்திருக்கும் பசையாக இருந்திருக்கிறான் என்பதை உணர்ந்து, சுந்தரும் மீனாட்சியும் உள்ளமுருகினர். அவர்களின் பொழுதுபோக்குகளாக, யாழ்ப்பாணத்து கடற்கரைகளிலும் பூந்தோட்டங்களிலும் நிலவின் கீழ், நிலவனுடன் அடிக்கடி அமர்ந்து, தங்கள் நிலவு போன்ற குழந்தை, தங்கள் உலகத்தை ஒளி மற்றும் மகிழ்ச்சியின் புகலிடமாக மாற்றிய கதையை, மீண்டும் மீண்டும் மீட்டு மகிழ்ந்தார்கள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.