• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அபிராம்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  173
 • Joined

 • Last visited

 • Days Won

  8

அபிராம் last won the day on December 26 2010

அபிராம் had the most liked content!

Community Reputation

44 Neutral

2 Followers

About அபிராம்

 • Rank
  உறுப்பினர்
 • Birthday May 24

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

1,621 profile views
 1. இந்த கவிதையூடு மேமாதம் பதினைந்தாம் திகதி நந்திக்கடல் ஊடுருவலுக்காக முன்னணி காவலரண்களை பார்க்க சென்றவேளை வீரச்சாவை தழுவிக்கொண்ட, பல விசேட வேவுப் போராளிகளை உருவாக்கிய சசிக்குமார் மாஸ்டர் (மித்திரன் - மானிப்பாய் ) அவர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். அன்பான நண்பர், பாசமான அண்ணன், எனக்கு கவலைகள் வரும்போது எல்லாம் சந்திக்கும் ஆறுதலுக்கான தளபதி, ஆசான். வட்டக்கச்சி உருத்திரனில், பானு அண்ணாவுடன் கூழ் குடிச்ச ஞாபகங்களும், வட்டத்தொப்பியுடன் பீல்ட் பைக்கில் வரும் நினைவுகள் என்னை விட்டு அகல மறுக்கின்றன. கிளிநொச்சியை இராணுவம் சுத்தி வளைச்சு இருந்த வேளையிலும், ஆமி தொப்பி அணிச்சபடி, A9 வீதியில் பரந்தன் சந்திக்கு அருகில் என்னை கட்டி அணைச்சு குஞ்சு பரந்தன் நிலைகளை பலப்படுத்த சொன்ன ஞாபகங்கள் என்னை விட்டு அகலவில்லை. நீங்கள் சென்ற கடைசி நாளில் கூட, பழ டின் ஒன்றை உடைத்து நானும் நீங்களும் அன்னாசி பழ துண்டுகளை பகிர்ந்து சாப்பிட்டதை மறக்க முடியவில்லை மாஸ்டர். உங்கள் மகள் காயப்பட்ட வேளையிலும் கொஞ்சம் கூட கலங்காமல் இப்போ வரேண்டா என்று சென்ற சசிக்குமார் மாஸ்டர் திரும்ப வரவே இல்லை. வீர வணக்கங்கள் சசிக்குமார் மாஸ்டர்/அண்ணா. நன்றிகள் அஞ்சரன் பதிவிற்கு.
 2. கருத்துகளை இட்ட இசை மற்றும் கண்மணி அக்காவுக்கு நன்றிகள். விருப்பளித்த நந்தனுக்கும் நன்றிகள். தொடரை வாசிக்கும் உறவுகளுக்கும் நன்றிகள்.
 3. அவள் தண்ணீர் கொ(மெ)ண்டுவந்து தந்த பித்தளை செம்பை வாங்கும் போது, அவளின் வெண்டைக்காய் விரல்கள் என்னை உரசியது, அதன் அதிர்வுகள் செம்பிலே இருந்த தண்ணீரில் இலகுவாய் தெரிந்தன. அதை எங்கள் இருவரின் கண்களும் பார்க்க தவறியதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். அவளின் கைகள் தான் செம்பை என் நோக்கி நீட்டின, கண்கள் தரையிலே புற்களை எண்ணி கொண்டிருந்தன. உங்களின் பெயரை தெரிந்து கொள்ளலாமா.? பெயரை தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்..? இந்த கேள்வியை எதிர்பார்த்து இருந்தவள் போல பதில் வந்தது. அது நேற்று நாங்கள் உயிலங்குளத்தை கடக்கும்போது காவலரணில் இருந்த இராணுவ வீரனின் தானியங்கி துப்பாக்கி ரவையின் வேகத்தை விட அதிகமாக இருந்தது. இல்லை... அடுத்த முறை ...வாசலிலே இருந்து கூப்பிட்டு... உள்ளே வரலாமே என்று தான். அம்மானுக்கு பிறகு இப்போ தான் பதில் சொல்லும் போது நாக்குழறுகிறது. எதுக்கு வரணும்..? பெண் உருவில் ஒரு அம்மான். பதில் சொல்ல முழிக்கும் போது தான் கஷ்டமான கேள்விகளை கேட்கிறாள். மைதிலி... தலையை கூட துவட்டாமல் ஈரத்துணியோட யாரோடையடி பேசி கொண்டு இருக்கிறாய்.. அவளின் தாயின் அதட்டல் தான் அவளுக்கு சூழ்நிலையை புரியவைத்தது. நுனி நாக்கை நான்கு பற்களால் கடித்து கொண்டு தனக்கு தானே தலையில் அடித்து கொண்டு செம்பை கூட வாங்காமல் தாயை நோக்கி ஓட்டமெடுத்தாள். அவளின் பின்னழகு அசைந்தாட அவள் ஓடிய ஓட்டம், நாங்கள் பாரீட்சார்த்தமாக அடிச்சு பார்த்த எறிகணையின் அசைவுகளை எனக்கு ஞாபகபடுத்தியத்தில் தவறேதும் இல்லை. (பிற்காலத்தில் அதுக்கு பெயர் "சமாதானம்") செம்பை கிணத்து கட்டிலே வைத்துவிட்டு, படலையை சாத்திவிட்டு அவளின் வீட்டை திரும்பி பார்த்தேன். சாளரத்தின் வழியிலே அவளின் கண்கள் மின்னல் வெட்டியதை காண தவறவில்லை. ஆனால் நடந்த எல்லாவற்றையும் நானாட்டான்-வங்காலை சந்தியில் இருந்த குறிசூட்டு காவலரணில் இருந்தபடி இராணுவ வீரனின் இரு கண்கள் அவதானித்து கொண்டிருந்தன என்று அன்றைக்கு எனக்கு தெரியவில்லை. (தொடரும்) என்னை தேடிய உறவுகளுக்கும், கருத்திட்ட விருப்புகளை வழங்கிய உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
 4. விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார். மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் 12.10.1986 அன்று அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 28 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர். அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை. யாழ். மண்ணில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித பயமுமின்றி தமது இதயத்துள் இருக்கும் விடுதலை வீரனுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியபடி இருந்தனர். இரவு பகலாக அந்த ஊர்தி யாழ். மண்ணின் அனைத்து இடங்களுக்கூடாகவும் நகர்ந்தது. எமது மண்ணில் இருந்து சிங்கள இராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட வேண்டும். எமது மக்கள் அச்சமின்றிய வாழ்வு ஒன்று வாழவேண்டும் என்ற கனவு கண்ட அந்த வீரன் அந்த பேழைக்குள் இருந்தபடியே அவற்றை பார்த்து உண்மையில் மனம் நிறைந்திருப்பான். யாழ். மண் விடுதலைப் போராளிகளின் கைகளுக்குள் வருவதற்காக ஓய்வற்ற உழைப்பும் திறனும் காட்டிய அந்த வீரன் லெப்.கேணல் விக்ரரின் இறுதி ஊர்வலம்தான் அது. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி கால் நூற்றாண்டுகள் கடந்து போய்விட்டன. விக்ரர், இவனை எப்படி அடையாளப்படுத்துவது. அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் என்றா? பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் என்றா? களங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி என்றா?…எப்படியும் அவனை அடையாளப்படுத்தலாம். அத்தனை ஆளுமைகளும் அவனிடத்தில் இருந்தன. எந்த விடுதலைப் போராட்டம் என்றாலும் புரட்சி அமைப்பு என்றாலும் அதில் இணைபவர்கள் இரண்டு வழிகளில் இணைவார்கள். அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் மெல்லியதாக முளைவிடும் பொழுதிலேயே அதனை நிராகரித்து அதனில் இருந்து விடுதலைபெற என்று ஆரம்பித்திலேயே அமைப்பில் இணையும் வழி ஒன்று. அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் உச்சமாகி கொடிய கொலைவெறியாட்டத்தினூடாக உணர்வுபெற்று விடுதலை அமைப்பில் இணையும் வழி அடுத்தது.1983 கறுப்பு யூலை இனப்படுகொலைகளுக்கு பின்னர் விடுதலை அமைப்புகள் வீச்சுப் பெறவும்,வீக்கம் பெறவும் ஆரம்பிக்க முன்னரே 1983 க்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தவன் விக்ரர். 1981ன் இறுதிப் பகுதியில் விக்ரரின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்ரரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயிற்சிகளை ஆரம்பிக்கிறார். பயிற்சி முகாமின் உணவுப்பிரிவில் மூத்த உறுப்பினர்களான கிட்டுவும், ரஞ்சன்லாலாவும் இருக்கின்றனர். உடற்பயிற்சியாளராக செல்லக்கிளி அம்மான் இருக்கிறார். இந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த அதிகமானவர்கள் உறுதியிலும், விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய தெளிவிலும் தமது இறுதிக்கணம் வரைக்கும் மலையை நிகர்த்த உருக்கு உறுதியுடன் நின்றதற்கு காரணம் தலைவரின் நேரடி பயிற்சி, பயிற்சியின் பின்னான மாலைப் பொழுதுகளில் அமைப்பின் மூத்த உறுப்பினர்களான செல்லக்கிளி அண்ணா, சீலன், கிட்டு, ரஞ்சன், புலேந்திரன் ஆகியோர் உட்பட மற்றும் சிலரும் இணைந்த அனுபவ பங்கீடுகள். இவைகளேதான் விக்ரரையும் ஒரு உன்னதமான போராளியாக, மிகப்பெரும் வீரனாக வரித்தெடுத்த காரணிகளாகும்.சக போராளிகள் அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும் காட்டும் ஒரு பெரிய குழந்தையாக அவன் இருந்தான். அதிலும் பயிற்சிக்கு முன்னரும் பயிற்சிக்கு பின்னரும் அவன் இருந்த இளவாலைப் பகுதியில் அமைந்திருந்த வீட்டில் அவனுடன் இருந்தோர் இன்றும்கூட அவனின் நினைவுகளையும் செயல்களையும் ஒருவகையான பெருமிதத்துடனும் ஈர்ப்புடனும் கண்களில் ஒளிபொங்க நினைவு கூருவதை பார்க்கலாம். விக்ரரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும் அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983 யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும். மிகவும் செறிவான வாகனப் போக்குவரத்தும், சிங்கள காவல்துறை, சிங்கள இராணுவ நடமாட்டம் என்பன அடிக்கடி நிகழும் திருநெல்வேலி வீதியில் இரவில் வீதியை குழிதோண்டி அதில் சக்கையை வைத்து எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்ரர். விக்ரர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்ரரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும்.மன்னார் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் விக்ரருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும்கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக கையாண்டவன் விக்ரர். வெறும் தாக்குதல்களை மட்டும் நடாத்திக் கொண்டிருக்காமல் சிங்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னார் பிரதேசத்தின் பகுதிகளில் மக்கள் அமைப்புகளை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் விடுதலைப் போராட்டம் பற்றி தெளிவையும், அரசியல் அறிவையும் ஊட்டுவதிலும் விக்டரின் செயற்பாடுகள் மிகவும் ஆழமாக அமைந்திருந்தன.அவன் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்டதற்கு பின்னால் மக்களுடனான அவனின் ஆத்மார்த்தமான தொடர்பே காரணமாகும். விடுவிக்கப்பட்ட மன்னார் நிலப்பகுதியில் விக்ரர் பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை தாய் மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன். விக்ரர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காட்டிய உறுதியும், தலைமைப் பண்பும், வீரமும் மிகவிரைவாகவே அவனை விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் என்ற அதியுச்ச நிர்வாக மையத்துக்குள் உள்வாங்கி கொண்டது. சிங்கள தேசத்தின் இராணுவத்தினரை தமிழீழ மண்ணில் இருந்து துரத்தும் நடவடிக்கை தினமும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடப்பதும், சிலவேளைகளில் முகாம்களை விட்டு சிறிய தொகையாக வெளிவரும் இராணுவத்தினரை உடனடியாக அந்த பகுதிக்கு விரையும் விடுதலைப்புலிப் போராளிகள் விரட்டியடிப்பதும் அன்றாட நிகழ்வுகள் அப்போது. அப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன்நகருக்குள் இராணுவம் நுழைந்துவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து கருக்காய்க்குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும், நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்ரரின் தலைமையில் நுழைந்து விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குலில் சிங்கள இராணுவத்துக்கு துணையாக ஹெலிக்கொப்படரும் வந்து தாக்குதலை ஆகாயத்தில் இருந்து நடாத்தியபோதும் வீரமுடன் போரிட்ட அந்த தளபதி எதிரியின் சன்னம் ஒன்று நெஞ்சுக்குள்ளாக புகுந்து சென்றுவிட வீரமரணமடைகிறான். ஒருமாமலையின் சரிவாக விக்ரரின் மரணம் அமைப்பை உலுக்கியது அந்த பொழுதில். தலைமை கொடுக்கும் பணியை செயற்படுத்தும் திறனும், அதனை செயற்படுத்தியே தீரவேண்டும் என்ற இலட்சிய உணர்வும் உடைய ஒரு பெருவீரன் அவன்.விக்ரர் மரணித்த அந்த சண்டையில்தான் முதன்முதலாக பெண்கள் அணி தாக்குதலில் நேரடியாக இறக்கப்பட்டனர். நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் விக்ரரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த சண்டையில்தான் முதன்முதலாக சிங்கள இராணுவத்தை செர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்படுகிறார்கள். 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோரே பிடிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினர். விக்ரர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில்கூட அவன் இன்னொரு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும் இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான். சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர். சிங்கள தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும், சிங்கள தேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலி சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப்புலிகளான அருணாவையும், காமினியையும் விடுவித்தனர். அதற்கு பரிமாற்றமாக அடம்பன் சண்டையில் பிடிக்கப்பட்டவர்களை கிட்டு விடுவித்தார். இப்போது பார்த்தால் இது சிறிய சம்பவமாக தெரியும். ஆனால் அன்றைய பொழுதில் இது ஏற்படுத்திய எழுச்சியும் மன உறுதி ஏற்றமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. இப்போது இருபத்தைந்து வருடங்களாகி விட்டது. விக்ரர் என்ற என்ற அற்புதமான வீரனின் நினைவுகளும், மாசுமறுவற்ற அவனின் உன்னதமான இலட்சிய பற்றும் என்றென்றும் எமது மக்களால் இதயத்தின் ஆழத்திலிருந்து நினைவு கொள்ளப்படும். என்றாவது ஒருநாள் விடுதலைப்புலிகள் தலைமை விக்ரரின் இதுவரை பதியப்படாத பக்கங்களையும்,அவற்றில் தலைமையின் கட்டளையை ஏற்று அவன் செய்ய வீரத்தையும் பதிவு செய்யும் போது நிச்சயமாக ஒரு உன்னதத்திலும் உன்னதமான வீரனாக அவன் இன்னும் உயர்ந்து தெரிவான். https://www.youtube.com/watch?v=V1grfr4bODc http://kathiravan.com/மன்னார்-மாவட்ட-சிறப்புத-2123/
 5. தம்பி, ஒரு சில காலம் உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கையை இந்த கணத்திலே நினைத்து பார்க்கிறேன். உன்னை தோளில் தூக்கிய நாட்களில் இருந்து மிடுக்காக நடந்துவரும் காலம் வரை நினைத்து பார்க்கிறேன். துடிப்பான உனது குழப்படிகளை உன் அம்மா என்னிடம் சொல்லும்போது உன் முகத்தை பார்க்கிறேன். எந்த உணர்வுகளுமே காட்டாத உன் முகத்தில் உன் தந்தையை மிஞ்ச உன்னால் மட்டும் தான் முடியும். உன் அக்காவை சீண்டும் குழப்படிகளை உன் அக்கா அடுக்கி செல்லும்போது இல்லை என்ற ஒற்றை வரி மறுப்பு மட்டுமே உன்னிடம் இருந்து வருகிறது. படிக்கும் நேரத்தில் விளையாட கூடாது என்று உன் அம்மா சொன்ன காரணத்தினால் விடியற்காலை 4 மணிக்கு எழும்பி, கணனியில் சுட்டு விளையாட என்னை எழுப்பியதை இன்றும் கனவாகவே பார்க்கிறேன். சாப்பாட்டை கொண்டுவந்து தந்துவிட்டு சாப்பிடும் வரை என் முகத்தை பார்க்கும் உன் கருணை உள்ளத்தை பார்க்கிறேன். உந்து உருளியில் இரணைமடு குளக்கரையில் நாங்கள் பயணித்த நாட்களை மகிழ்வாக காண்கிறேன். அணி நடையில் சக தோழனின் தொப்பியை சரி செய்த வருங்கால தளபதியை உன்னில் கண்டேன். கையில் வைத்திருந்த சுடு கருவியின் சுடு குழல் மேல் நோக்கி இல்லாமல், இன்னொருவரை நோக்கி இருக்கிறது என்று சரி செய்த ஒரு வீரனை உன்னில் கண்டேன். .......... .......... .......... இறுதி நேரத்திலும் கலங்காத உன் விழிகள் இப்பொது என்னை கலங்க வைக்கிறது. கடைசி வரை உன் கூட வராமைக்காக இன்றும் வருந்துகிறேன். உனக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன்னை கொன்றவர்களுக்கான முடிவு காலம் தொலை தூரத்தில் இல்லை அன்பு தம்பியே.
 6. படத்துக்கு நன்றி ஈசன். உங்கள் அனுமதியுடன் கதை முகப்பில் போடலாமா...??
 7. மன்னார் தீவை மாந்தையுடன் இணைக்கும் பாலம் தான் மன்னார் நகரப்பகுதிகான ஒரே தரைவழி தொடர்பு. தொண்ணூறுகளின் கடைசி காலங்களில் மன்னார் நகரபகுதியை சென்றடைய வேண்டுமானால் ஏழு இராணுவ தடை முகாம்களின் சோதனைகளை தாண்டித்தான் செல்ல வேண்டும். அதில் செட்டிக்குளம் சோதனை முகாமும், மாந்தை முகாமும் கடுமையானவை. இவற்றை தாண்டி உள்ளே சென்றாலும், நகர பேரூந்து தரிப்பிடத்தில் விசேட அதிரடிப்படையினர் புகைப்படங்கள் எடுத்து தான் மன்னாரினுள்ளே நுழைய அனுமதிப்பர். நானும் அறிவும் மன்னாருக்குள்ளே வந்து ஏழு நாட்கள் தான் ஆகி இருந்தன. படையினருடன் சேர்ந்து இயங்கும் "காக்கை வன்னியனை" அழித்தொழிக்கும் நடவடிக்கை. மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் அதன் சுற்றுப்புறத்துக்கு உள்ள அழகும் பசுமையும் நகரப்பகுதிக்கு இல்லை. கழுதைகளும் புழுதியும் தான் நகரத்தை நிறைத்து இருக்கும். பெரும்பாலான வியாபார நிறுவனங்களை இஸ்லாமிய சகோதரர்கள் வைத்திருந்தார்கள். நகரப்பகுதி எப்பவுமே சனமும் சத்தமுமாக இருக்கும். சின்னக்கடையில் வைத்து ஒரு முறையும், வைத்தியசாலை சந்தியில் வைத்து ஒரு முறையும் "காக்கை வன்னியனை" படையினருடன் சந்தித்த போதும் அது சமருக்கான சூழலாக அமையவில்லை. இரண்டு மைகிரோ ரக கைத்துப்பாக்களும், இரண்டு கைஎறி குண்டுகளும் மட்டுமே இருக்கும் நாங்கள் ஏகே எல்எம்ஜி உடன் அலையும் அதிரடிபடையை எதிர்கொள்வதற்கு சரியான இடம் அமையவேண்டும். தாக்குதலுக்கு பின்னர் ராணுவத்தினர் வகுக்கும் "சக்கர வியுகத்தை" உடைக்க வேண்டும். எங்களில் யாருக்காவது காயம்பட்டால் வியுகம் உடைப்பது கூட ஒரு தனி ஆளால் செய்ய வேண்டும். இதனால் இரண்டு மூன்று தடவை தாக்குதல் பிற்போடப்பட்டது. பகல் வேளைகளில் சந்தேகத்தை தவிர்க்க, இஸ்லாமிய இன சகோதர வியாபரிகளிடம் சாரங்களை வாங்கி வீடு வீடாக கூவி கூவி விற்போம், கிடைக்கும் வருவாயில் இனிய மாலை பொழுதுகளில் குளிர்களி வாங்கி சாப்பிடுவோம், வைத்திய சாலைக்கு முன்னால் இருக்கும், இயலாத பிச்சைகாரர்களுக்கு மதிய உணவு வாங்கி கொடுப்போம். இரவு வேளைகளில் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் இல்லாமையால், ஒரு போத்தல் சாராயம் வாங்கி கொடுத்து, தொலைத்தொடர்பு கோபுர காவலாளியை மடக்கி, நானும் அறிவும் தொலைத்தொடர்பு கோபுரத்திலேயே கயிற்றினால் எம்மை இணைத்து நகரத்துக்கு 100 மீற்றர் உயரத்தில் தூங்குவோம். ஆனந்தமான இரவுக் காற்றும், நிலவும், குசு குசு இரகசிய பேச்சுக்களும் எங்களின் நிம்மதியான தூக்கத்துக்கு துணை போயின. இரவும் பகலும் இப்படியே கழிந்தாலும், இலக்கை நெருங்க முடியாமை எங்களை வதைத்து கொண்டு தான் இருந்தது. ஒன்பதாம் நாள் மதியம் என்னை சைக்கிளின் முன் பாரில் இருத்தியபடி அறிவு சைக்கிளை மிதித்து வந்தான். நானும் அவனுக்கு துணைக்கு "பெடல் போட்டேன்". மதிய உணவு பொதிகளும் விற்காத மிச்ச சரங்களும் சைக்கிளில் தொங்கிய படி இருக்க, நாங்கள் இருவருமே சரம் தான் அணிந்து இருந்தோம். தாழ்வுபாடு போகும் பேரூந்து எங்களை கடந்து வைத்தியசாலை சந்தியில் திரும்பியது. பேரூந்து புழுதிக்கு நடுவே "காக்கை வன்னியன்" சந்தியில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தான். அதிரடிப்படை கொஞ்சம் தாண்டி போயிருந்தது. இருவருமே ஒரே நேரத்தில் இயங்கினோம். சைக்கிளை ஊண்டி மிதிச்சவாறே எங்கள் மைக்கிரோக்கள் முழங்கின ஏழு குண்டுகள், எப்படியும் ஐந்து இலக்கை தவறாமல் தாக்கி இருக்கும். மண்ணிலே குருதி கொப்பளிக்க விழுந்து கிடந்தான். அதிரப்படை கண்டபாட்டுக்கு சுட்டுக்கொண்டு அந்த இடத்துக்கு வரும்போது, நாங்கள் தாழ்வுபாடு பேரூந்தில் ஏறி இருந்தோம். இந்த தாக்குதலின் வெற்றியை தொடர்ந்து தான்,இரண்டு மாதங்கள் கழித்து என்னை கையிலே ஒரு வரைபடமும் கொடுத்து உயிலங்குளம் ஊடாக நானாட்டானுக்கு அனுப்பி இருந்தார் பொறுப்பாளர். தொடரும். (கருத்துகளை ஊக்கங்களையும் அளித்த உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.)
 8. உலர்த்திய மஞ்சள் சுடிதாரை காற்றிலே உதறிவிட்டு கயிற்றிலே தொங்கவிட்டு அது காற்றிலே அலையாமல் இருக்க இறுக்கியை அழுத்திவிட்டு, அடுத்த உடைக்காக கொஞ்சம் ஒதுக்கியபோது தான் அவள் முகம் எனக்கு தெரிந்தது. பெண்மைக்கு ஏற்ற உடல், குளித்த பின்னர் வடிவாக துவட்டாமல் அணிந்திருந்த ஆடைகள் சில இடங்களில் ஈரம் மிச்சம் இருந்ததை காட்டின எங்கள் மனசை போல. நீண்ட கரிய முடி, கொடியிலே கதிரை வைக்காமல் எட்டி துணிகளை காயவைக்க கூடிய அளவான உயரம். பிரம்மன் மற்றவர்களிடம் கொடுத்து படைக்காமல், தானே சிரத்தை எடுத்து படைத்த ஒரு அழகுப்பதுமை. கோயில் கோபுரத்திலே இருந்த சிலை உடைந்து கீழே விழுந்து விட்டதோ என்று அண்ணாந்து பார்க்க வைக்கும் ஒரு அழகு தேவதை. நான் வந்த நோக்கம், இலக்கு, கடமை, ஒழுக்கம் எல்லாவற்றையும் மீறிய ஒரு உணர்ச்சி என்னை அவளை நோக்கி பார்க்க வைத்தது.அவளும் பார்த்தாள் . அந்த பார்வையை இன்றும் மறக்க ஆயிரம் கண்களை தேடி அலைகிறேன், தருமன் வீட்டில் யாகத்துக்கு வைத்த மாவில் புரண்ட எலியை போல. மைதிலி, இந்த பெயரை அவளின் தோப்பனார் அவளுக்கு ஏன் வைத்தார் என்று தெரியவில்லை இருந்தாலும், அந்த பெயர் அவளை தவிர வேறு யாருக்கும் அவ்வளவு பொருந்தாது. திடீர் என்று அவளின் முற்றத்தில், கோயில் வளாகத்தில் தோன்றிய வேற்று ஆளை பார்த்த பயம் கொஞ்சம் கூட அவளின் கண்களில் தெரியவில்லை. உங்களைத்தான் எத்தனை தரம் கேட்கிறது, யார் நீங்கள் எதுக்கு கோயிலுக்குள்ளே வந்திருக்கிறீர்கள் என்ன வேணும் உங்களுக்கு.? என்னையா கேட்கிறீங்கள்.? திடுக்கிட்டு சுதாரித்த எனக்கு அவள் எட்டாம் தரம் கேட்ட கேள்வி காதிலே ஏறியது. பதில் சொல்ல மூளை அவ்வளவு நேரம் எடுத்து நான் என்றைக்குமே பார்த்ததில்லை. கொஞ்சம் குடிக்க தண்ணீர் கிடைக்குமா.? ஊரிலே வேற இடம் கிடைக்காமல் இங்கே வந்து தான் தண்ணி கேட்கணுமா .? இல்லை கோயில் கிணத்திலே குடிப்பம் என்று தான் வந்தேன். வாளியை காணவில்லை. அது தான் ... இழுத்த என்னை.. அவள் தான் உடுப்புடன் வாளியை கொண்டு வந்த குற்ற உணர்வு தாக்க, கீழ் சொண்டை பல்லால் கடித்த படி, உடுப்பிலே இருந்து சொட்டிய நீரில் கோலம் போட்டாள். அது எனக்கு பொறுப்பாளர் ஆறுமாதமாக வேவு எடுத்து அளவு பார்த்து கீறி தந்த மன்னார் வரைபடைத்தை ஒத்திருந்தது. தொடரும்.
 9. வலிகளை வாழ்க்கையாக்கியவர்களுக்கு விடிவு தான் ஒரே வழி. கருத்துகளை பதிந்த இசை,புத்தன், வல்வை சகாரா, விசுகு மற்றும் வழிகாட்டி அவர்களுக்கு நன்றி.
 10. அந்த நாள் ஏன் விடிந்தது என்று இருந்தது ராணியம்மாவுக்கு... அதிகாலையிலேயே யுத்த தாங்கிகளின் ஓசையும் அந்த இடமெல்லாம் சுடுகாடாக்கும் வண்ணம் விழுந்த எறிகணைகளும் தான் ராணியம்மாவை துயில் எழுப்பின. ஐயோ ..ஆமி சுட்டு கொண்டு வாறான்..பதுங்கு குழிகளுக்குள் கைக்குண்டுகள் வீசி கொண்டு வாறான் என்ற செய்தி காற்றுடன் மக்களோடு கலந்தது.. மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்... ஆமி வரும் வரை ..பதுங்கு குழிக்குள் இருப்பம் என்ற கனவும் மண்ணாகி போனது அவர்களுக்கு... உண்டியல் சந்தியை அண்மித்த வடக்கு பக்கத்தில் இன்னும் புலிகள் தீரமுடன் போரிடும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது... கடற்கரை பக்கமாக வடக்கு ஆமியும் தெற்கு ஆமியும் இணைந்து மேற்கு பக்கமாக முன்னேறி வருவதையும் தடுத்தி நிறுத்தி புலிகள் போரிட்டு கொண்டிருந்தார்கள்.. இதுக்கெல்லாம் எவ்வளவு ஆன்ம பலம் வேண்டும்.. நான்கு பக்கமும் ராணுவத்தால் சூழப்பட்ட நிலையிலும்.. ஒரு இஞ்சி இடம் விடாமல் கொத்து குண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகளும் எறிகணைகளும் ராணுவம் மிச்சம் விடாமல் தாக்கி கொண்டிருந்த நிலையிலும் ... கைகளில் இருக்கும் துப்பாக்கியையும் ஒரு கொஞ்ச ரவைகளையும் வைத்து கொண்டு இரண்டு சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் சாகத்தான் போகிறோம் என்று தெரிந்து கொண்டு .. மக்களையும் தலைவரையும் ராணுவம் அணுக விடாமல் சண்டை போடுவது என்பது சாதாரண காரியமா உறவுகளே.. எரிந்து கொண்டிருக்கும் ஆயுத லொறிகளுக்கு மத்தியிலும், பிணங்களுக்கு மத்தியிலும் , தலைவரை காப்பாற்றி விட்டால் போதும் நிச்சயமாக எங்களுக்கு ஈழம் கிடைத்து விடும் என்ற மன நிலை தான் அங்கெ இருந்த பெரும்பாலான போராளிகளுக்கு.. ராணுவம் வட்டுவாகலில் இருந்து பாரிய படை நகர்வை தொடங்கி இருந்தது. அதே வேளை கடற்கரை பக்கம் இருந்தும் நந்தி கடல் நோக்கி ஒரு நகர்வை தொடங்கி இருந்தது.. மக்கள் கூட்டம் கூட்டமாக முன்னேறி வரும் ராணுவத்தை நோக்கி நகர தொடங்கினார்கள். வீதியோரத்தில் இருந்த காயமடைந்த போராளிகளை ராணுவம் சுட்டு கொண்டு வருகிறது என்று கேள்வி பட்ட ஏனைய போராளிகள் மக்களை பார்த்து கெஞ்ச தொடங்கினார்கள்.. குறிப்பாக காயமடைந்த பெண் போராளிகள் ..எங்களை உங்களுடன் தூக்கி செல்லுங்கள் இல்லை என்றால் இங்கேயே கொன்று விட்டு போங்கள் என்று மக்களிடம் இறைஞ்சினார்கள்.. சிலர் சில போராளிகளை காவி சென்றார்கள்.. பெரும்பாலானவர்கள் இவர்களை பார்த்தும் பாராமலும் போய் கொண்டிருந்தார்கள்.. மக்களுக்காக தங்கள் அவையவங்களை இழந்து, மக்களின் காலை பிடித்து கெஞ்சும் அந்த பெண் போராளிகளின் நிலை உலகில் எந்த விடுதலை போராளிகளுக்கும் வர கூடாது.. எல்லாரையும் பார்த்து கெஞ்சினார்கள்... கடுமையாக காயபட்ட போராளிகளுக்கு சயனைட் கொடுப்பதில்லை. வலி தாங்காமல் கடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில்.. அத்துடன் செஞ்சிலுவை சங்கம் பொறுப்பேற்கும் போது சொன்ன நிபந்தனைகளில் காயமடைந்த போராளிகள் எந்த விதமான இராணுவ அடையாளங்களையும் வைத்திருக்க கூடாது என்பதும் அடங்கி இருந்தது. சாக கூட வழியில்லாமல் அந்த பெண் போராளிகள் மக்களை பார்த்து கெஞ்சினதை பார்த்த எவனுமே சாவின் வலியை ஆயிரம் தடவை உணர்ந்திருப்பான். நேற்று சென்ற மக்கள் கூட்டத்துடன் கலந்து சென்ற போராளிகள் கழட்டி வீசி விட்டு சென்ற சயனைட் குப்பிகளும் கழுத்து தகடுகளும் அந்த வீதி எங்கும் கிடந்தன... அம்மா ...அக்கா ...அண்ணா ....தம்பி ..அந்த குப்பியையாவது பொறுக்கி தந்துவிட்டு போங்கள் ..கெஞ்சினார்கள் உங்களுக்காக போராடிய அந்த வீர பெண் புலிகள்.. சொல்லுங்கள் உறவுகளே... உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள் .. உங்கள் ஆன்மாவை உலுக்கவில்லையா ... தங்கள் குடும்ப உறவுகளை விலகி உங்களுக்காக போராடி, தங்கள் அவையவங்களை உங்களுக்காக கொடுத்து விட்டு இன்று எதிரியிடம் கையகலாமல் கொல்லபடுவதை தடுக்க உங்களால் முடியவில்லை என்று நினைக்கும் போது உங்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது ... சாவோம் என்று தெரிந்து தான் போராட்டத்திற்கு வந்தார்கள்.. அவர்கள் இன்று சாவுக்காக பயப்படவில்லை ..எதிரியின் காம பசிக்கு இரையாகாமல் மானத்தோடு சாகத்தான் அவர்கள் கெஞ்சினார்கள்.. ஒரு சின்ன பையன் தன்னால் ஆனமட்டும் குப்பிகளை பொறுக்கி ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு போனான்.. அந்த பையனின் முகம் வாழ் நாளுக்கும் மறக்க முடியாது.. அவன் அந்த பெண் போராளிகளுக்கு ஆற்றிய உதவி ..ஆயிரம் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டமைக்கு சமன். அந்த சிறுவன் அந்த பெண்புலிகளின் மானத்தை மட்டுமல்ல உங்களின் எங்களின்..ஏன் இந்த உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களின் மானத்தை காத்தவன்... எங்கிருந்தோ வந்த ஒரு எறிகணை ராணியம்மாவின் கணவனின் காலை பதம் பார்த்தது... ஒரு சீலையை எடுத்து வழியும் குருதியை சுத்தி கட்டினார். அம்மா ..இனி இங்கே இருந்து அண்ணாவை தேடினால் ..அப்பாவையும் இழக்க வேண்டி வரும்..என்று நா தழுவி தழுக்க சுபா கூறினாள்.. இன்னும் கொஞ்ச நேரம் ...என்று ராணியம்மா இழுக்க .. இல்லை அம்மா ..அப்பாவுக்கு இரத்தம் ஓடுது ..வைச்சிருந்தால் இங்கேயே இழக்க வேண்டி வரும் என்று குண்டை தூக்கி போட்டாள் மற்றவள் மதி .. என்ன செய்வது என்றே புரியவில்லை ராணியம்மாவுக்கு ...மகனும் மண்ணுமா இல்லை கணவனும் மற்றைய பிள்ளைகளுமா .. சரி ஆமியிடம் போவோம் .. அரை மனசோடு சொன்னாள் ராணியம்மா .. ராணுவம் முன்னேறும் திசை நோக்கி தந்தையை காவியபடி நடந்தார்கள் தாயும் பிள்ளைகளும் .. அந்த வேளையில் .. எங்கள் வீர குல பெண்களின் உயிரை விட மானமே பெரிது என்று வாழ் நாள் முழுவதும் நினைக்கும் ஒரு சம்பவம் நடந்தது .. ஈர குலையே கருகியது.. குப்பி கிடைக்காத பெண்புலிகள் சிலர் ..எங்கள் தமிழ் மானத்தை காப்பாற்ற ..எங்கள் புலிகளின் கொள்கைக்காக ..அத்தனை மக்கள் கண் முன்னாலேயே ..எரிந்து கொண்டிருந்த ஒரு வெடி குண்டு வாகனத்தினுள் ஒன்றன் பின் ஒன்றாக பாய்ந்தார்கள் .. கருகி மடிந்தார்கள் .. என் இனிய பெண் உறவுகளே ... நீங்கள் இவர்கள் பிறந்த இனத்தில் தான் பிறந்தீர்கள் என்று மற்றவர்களிடம் சொல்லி பெருமை பட்டு கொள்ளுங்கள்.. மானத்துக்காக ..கொள்கைக்காக உயிரையும் கொடுக்கும் பெண்கள் எங்கள் சகோதரங்கள் என்று வாழ் நாள் முழுவதும் மனசிலே நிறுத்துங்கள்.. எதுக்காகவும் மானத்தையும் கொள்கையையும் விட்டு கொடுக்காதீர்கள் .. இது தான் அந்த வீர பெண்களுக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை... இந்த காட்சியை நேரில் பார்த்த ராணியம்மாவுக்கு இதயமே உறைந்தது ..கண்ணீர் வரவில்லை ..மனசு மட்டுமல்ல உடம்பே கல்லானது.. சாலையோரத்திலே வாயிலே குப்பியுடன் மேலும் பல பெண் போராளிகளின் உயிரற்ற வெற்று உடல்கள்.. மக்களுக்காகவும் மானத்துக்காவும் மரணித்த அந்த வேங்கைகளின் கண்கள் இராணுவத்திடம் போய் கொண்டிருந்த மக்களை வெறித்து பார்த்தபடி இருந்தன.. இந்த நாள் இன்று விடிந்திருக்க கூடாதோ ..?? குறிப்பு : முன்னர் எழுதிய தொடர்கதையின் இந்த நாளுக்கு உரிய ஒரு பகுதியை மட்டும் இணைத்து உள்ளேன். எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த நாட்களை தாண்டுவது இன்னும் கஷ்டமாக தான் இருக்கிறது.
 11. நன்றிகள் சாந்தி மற்றும் உடையார். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
 12. கருத்திட்ட கோமகன் மற்றும் கந்தப்புவுக்கு நன்றிகள். காலங்கள் உணர்வுகளை மழுங்கடிக்க கூடிய வல்லமை படைத்தவை அல்ல. மாறாக உணர்வுடன் கூடிய நினைவுகள் காலத்தை கடத்த வல்லன.
 13. கருத்திட்ட இசைக்கலைஞன், சாந்தி, அகஸ்தியன், விவசாயி விக், பெருமாள், பாஞ், புன்கையூரான், சுமேரியர், புத்தன் ,சுவி, நிலாமதி அவர்களுக்கும் விருப்பமளித்த கவிதை அவர்களுக்கும் இந்த கதையை தொடரும் கோமகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
 14. கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. வானத்திலே வெடித்து ஒளியை பாச்சிய பரா வெளிச்ச குண்டுகள் மங்கலாக தெரிய தொடங்கியது. சிங்கள குரல்கள் கிட்டவாக கேட்கிறது. இன்னும் ஒரு நிமிடத்துக்காவது எனது உடலில் பலத்தை கொடு என்று நான் என்றைக்குமே கும்பிடாத இறைவனிடம் கேட்கிறேன். அதிகாலை இரண்டுமணிக்கு அண்ணளவாக தொடங்கிய சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழரின் விடிவுக்கான வாழ்வா சாவா நந்திக்கடலின் சேற்றுப் பகுதியில் ஈச்சமுட்களுக்கு நடுவிலே தீர்மானிக்கபட போகிறது என்று யாருமே கணித்திருக்க முடியாது. தலைவனை பாதுகாப்பாக வெளியேற்றினால் மட்டுமே இனி தமிழரின் எதிர்காலம் என்ற தலையாய இலக்கு. ஒரு படகில் கட்டப்பட்ட மிதவைகளுடன் அந்த நந்திகடலை தாண்டும்போதே எதிரிக்கு திகைப்பு ஏற்பட எந்த சந்தர்பமும் இல்லை. எங்கள் வருகைக்காக அவர்கள் காத்திருந்தார்கள். நடுக்கடலிலேயே பரா வெளிச்ச குண்டுகளுக்கு மத்தியில் சண்டை தொடங்கிவிட்டது, மிதவை கவிழ்ந்து போக முதுகிலே முப்பது கிலோ பொருட்களுடன் இரண்டுகைகளிலும் துப்பாக்கிகளுடன் அந்த கடலின் கரையை அடையவே அரைமணித்தியாலம் போய்விட்டது. சேற்றினுள் வைத்த வெறும் காலை கூட வெளியே எடுக்கமுடியாத முதுகுபாரம். கடுமையாக மோதினோம். எந்த பின்புல ஆதரவும் இல்லாமல், எந்த உணர்வுகளுமே இல்லாமல், சாவை மட்டுமே எதிர் கொண்டு கடுமையாக மோதினோம். என் தோழர்கள் ஒவ்வொன்றாக வீழும்போதும் எங்கள் சூட்டின் வேகம் தணியவில்லை. இதோ எனது ஆயுத வெடிபொருட்கள் எல்லாம் முடிந்து , நேற்று இரவு கடித்த அந்த பிஞ்சு மாங்காய் இற்கான பலம் எல்லாம் முடிந்து அந்த சேற்று மண்ணில் வீழ்ந்து கிடக்கிறேன். எனக்கும் மரணத்துக்கும் இன்னும் சில நிமிட தூரங்களே இருக்கின்றன. கடந்த மாவீர தினத்துக்கு தான் அவசரமாக அளவெடுத்து தைத்த சீருடையின் பைக்குள்ளே இருந்த சண்டை வரைபடத்தையும் குறியீட்டு தாளையும் எடுத்து வாயிலே சப்புகிறேன். அது தந்த கொஞ்ச தெம்பில் , என் மரணத்தை பற்றி கொஞ்சம் சிந்திக்க நேரம் கிடைத்தது. நான் சாகப்போகிறேன். இதை யாருக்காவது சொல்ல வேண்டும் போல இருந்தது. என் நெஞ்சிலே செருகி இருந்த செய்மதி தொலைபேசியில் புலம்பெயர் நாட்டில் இருந்த அண்ணாவுக்கு அடித்தேன். எங்கோ ஒரு வீதியை மறித்து போராடி கொண்டிருந்த அண்ணாவுக்கு, சண்டை வெடி சத்தங்களுக்கு நடுவே நான் சொல்லுவது தெளிவாக கேட்கவில்லை. இருந்தாலும் நான் சொல்ல வேண்டியதை சொன்ன ஒரு திருப்தி எனக்கு கிடைத்தது. அம்மாவையும் தங்கச்சியையும் கவனமாக பார்த்து கொள், அம்மாவுக்கு நான் இல்லை என்று சொல்லிவிடாதே, அவவின் காலம் முழுக்க நான் இருப்பேன் என்று தேடட்டும். அது தான் நான் அவவுக்கு கடைசியாக கொடுக்க கூடிய ஒரே சந்தோசம். நன்றி. வணக்கம். அதன் சிம் காட்டையும் வாயிலே சப்பி விழுங்கினேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தான் மரணத்துக்கு. நிமிர்ந்து படுத்தபடி வானத்தை பார்க்கிறேன், என் வாழ்விலே நடந்த சந்தோசங்கள், கவலைகள், வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், நண்பர்கள், எதிரிகள், ஆசிரியர்கள், உறவினர்கள், அம்மா, அப்பா, சகோதரங்கள், வீடு, விளையாடிய வீதிகள், ஏறிய மரங்கள், காதலி,வாகனம், துப்பாக்கி, தலைவர், தளபதிகள், தோழர்கள் இன்னும் பல ஒரு சில செக்கன்களில் கண்ணுக்கு முன்னே படங்களாக காட்சிகளாக ஒரு விரைவு Rewind ஓடியது போல ஓடி முடிந்துவிட்டது. அது உணர்வு எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. செத்தால் மாட்டுமே புரியும் என்று நினைக்கிறேன். சிங்கள குரல்கள் எனக்கு மிக அருகில் கேட்க தொடங்கிவிட்டது. எனக்கு இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது சாக. குப்பியா, வெடிமருந்து சக்கை உடையா என்றபோது வெடிமருந்து சக்கை உடையை தெரிந்து எடுத்தவன். சாவுக்கு என்றுமே அஞ்சியதில்லை என்றாலும் செத்து அனுபவமில்லை. இப்போ முதன்முதலாக சாகப்போகிறேன். சரி சாவதுக்கு முதலில் ஆசையை பூச்சியம் ஆக்கவேண்டும் என்று நினைத்து கொண்டேன். எல்லா ஆசைகளையும் இனிமேலே என் வாழ்வில் நிறைவேறுவதற்கான வழி எதுவுமே இல்லை என்ற ஒற்றை நினைப்பை மூளையுள் திணித்து நடுநிலையாக்கினேன். சில ஆசைகள் மறைய மறுத்தன. வலிந்து எண்ணங்களை திணித்து பூச்சியம் ஆக்கினேன். இப்போ நான் தயார். மிக அருகில் வரட்டும் என்று காத்திருந்தேன். சக்கையை வெடிக்க வைப்பதற்கான இழுவையை இறுகப்பற்றினேன். சேறு நிரம்பிய சப்பாத்தால் என்னை அவன் பிரட்டியபோது, எனது விரல்கள் தங்களின் முழுப்பலத்தையும் கொண்டு வெடிமருந்து சக்கை அங்கியின் இழுவையை இழுத்துவிட்டன.
 15. என்னை தேடிய நுணாவிலானுக்கு நன்றி. நான் இங்கே உங்களுடன் தான் என்றும் இருப்பேன். நன்றி கரன். இது கதை அல்ல நிஜம் என்பதற்கு சாட்சியாக நீங்கள் என்றும் இருக்க வேண்டும். நிச்சயம் ஒரு நாள் வெல்வோம்.