Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் வீரம்.

Featured Replies

எமது வாழ்வியலில் அம்மை அப்பனே வாழ்வின் முழு முதல் ஆரம்பம். ஆகவே தமிழ்த் தாய் ஒருவரின் வீரத்தினை எடுத்து இயம்பி நிற்கும் புற நானூற்றுப் பாடலைக் கொண்டு தமிழர் வீரத்தை நாமும் அறிந்து போற்றுவோமாக.

 

"மீனுண் கொக்கின் தூவியன்ன,

வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்,

களிறெறிந்து பட்டனன் எனும் உவகை,

ஈன்ற ஞான்றினும் பெரிதே"

 

மூலம்: புற நானூறு

பாடியவர்: பூங்கண் உத்தரையார்

 

தூவி - இறகு, வால் - வெண்மை (நிறம்)

களிறு - ஆண்யானை

படுதல் - மாய்தல் (போரில் வீரமரணம்)

உவகை - மகிழ்ச்சி

 

சங்கத் தமிழ்த் தாயானவள், போர்க்களத்திலே தன் மகன் யானையைக் கொன்று இறந்தான் என்று மற்றோர் சொல்லக் கேட்ட செய்தியால், தான் அவனைப் (ஆண் மகவு) பெற்றெடுத்த கணத்தில் மகிழ்ந்திருந்ததை விட பன்மடங்கு அதிகமாக மகிழ்ச்சி அடைகிறாள்.

 

மீனுண் கொக்கின் தூவியன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் - நீரில் வாழும் மீன்களை உண்டு உயிர் வாழும் கொக்கின் இறகுகளின் நிறத்தை ஒத்த நிறத்தைக் கொண்ட கூந்தலை உடைய முதிய அன்னையின் மகன் (சிறுவன்). களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை - போரிலே ஆண்யானைகளுடன் (யானை மீது இருந்து போர் புரியும் வீரர்களுடன்) - இரத கஜ துரக பாததிகள் என நால்வகைப் படைகள் ஓர் அரசனின் மரபுவழிப் போர்க்களத்தில் காணப்படும் படைகளாகும் - கடும் போர் புரிந்து ஈற்றில் யானை ஒன்றைக் கொன்ற பின்னரே உயிரிழந்தான் என்ற செய்தி கேட்டு அடையும் மன மகிழ்வானது. ஈன்ற ஞான்றினும் பெரிதே - அவனை தான் பெற்றெடுத்த கணத்தில் அடைந்த மகிழ்ச்சியை விஞ்சியது எனலாம்.

 

இந்தப் பாடலில் பல மறை கருத்துக்கள் உள்ளன. முதியவள் என்றால் என்ன தலை முழுவதும்  நரைத்த கிழவியா? அப்படி என்றாள் எப்படி அவள் சிறுவனுக்குத் தாயாக இருந்திருக்க முடியும் என்ற கேள்வி எழ இடமுண்டு, அத்துடன் சிறுவன் என்றால் மிக மிக இளம் பிராயத்தினன் என்றுதானே பொருள் படுகிறது. ஆக இது எந்த வகையில் பொருத்தம் என கவியை ஐயுற வாய்ப்புண்டு. ஆனால் கவி கூறும் தாய் எந்தப் பிராயத்தினள் என்றால், அதை கவிஞர் மிக அழகாக எடுத்த எடுப்பிலேயே சொல்லிய பின் தான் தொடர்கிறார்மீனுண் கொக்கின் தூவியன்ன வால் நரைக் கூந்தல்- கொக்குகளில் மீன்களை உண்டு வாழும் கொக்கு வகையில், இந்தக் கொக்குகளின் இறகுகள் முற்றிலுமாக வெண்மையாக இருக்காது சிறிது பளுப்பு நிறம் இளையோடிய வெண்மையே தோன்றும், காரணம் இவை வாழும் சூழலினால் அவற்றின் நிறம் (வெண் கொக்கு என்று கூறாமல் மீனுண் கொக்கு என் வருணிக்கிறார்) சிறிதே மாற்றமடைந்தே காணப்படும்(சூழலிற்கு ஏற்ப இயைபாக்கம் அடைதல்). ஆக இப்படிப்பட்ட வெண்மை நிறமுடைய கூந்தலைக் கொண்ட பெண். முதியோள் - இங்கு நாம் முதிய பிராயம்( மிக வயதடைந்த பிராயம்) எனக் கொள்ளாமல் மேற்கூறிய அடை மொழியுடன் சேர்துப் பார்த்தால், அதாவது நாற்பதுகளின் இறுதிப் பிராயமே உள்ளவள், கூந்தல் சிறிதாக வெளிறத் தொடங்கும், நரை மற்றும் திரை கன்னங்களில் எட்டிப் பார்க்கும், இப்படியான பிராயத்தவள் இந்த முதிய அன்னை.

 

சிறுவன் - இங்கு அவன் உண்மையில் வயதில் இளையவன் எனக் கருதாமல் மேற்கண்ட தாயின் கடைசி மகன் (அவள் பிள்ளைகளில் மிகவும் இளையவன்) எனக் கொள்ளல் வேண்டும். அந்தளவு வயதான தாய்க்கு கடைசி மகன் எப்படியும் போர்க்களம் செல்லும் (அக்காலங்களில் பன்னிரண்டாம் பிராயங்களிலேயே ஆண்பிள்ளைகள் போர்க்களம் செல்லும் முறைமை இருந்து வந்துள்ளது) வயதிலேயே இருந்திருப்ப்பான், ஆகையால் அவன் வயதில் சிறுவன் அல்லன், தன் உடன் பிறப்புகளில் கடைசியானவன் என்பதால்ச் சிறுவன். சரி இவன் எதற்காகப் போர்களம் சென்றான்? அவனுடைய அப்பன் மற்றும் அனைத்துத் தமயன்மாரும் ஏலவே செருக்களம் புகுந்து வீர மரணம் எய்திய நிலையில் கடைசி மகனான இவன், பெற்ற  தாய்க்குக் கொள்ளி போடும் (ஈமக் கிரியைகள் கடன், தந்தைக்கு மூத்த மகன் தாய்க்கு இறுதி மகன் என்பது பழந்தமிழ் வழக்கு) பொறுப்பையும் புறந்தள்ளி (பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்ற யாவின நனி சிறந்தனவே) நாடுகாக்க போர் முகம் செல்கிறான், இவன் தாயே இவனை செருக்களம் நோக்கி வழியனுப்பி வைத்துக் காத்திருக்கிறாள். தந்தையும் தமையன்மாரும் மாமனும் களத்தினில் இவன் பால் விட்டுச் சென்ற பொறுப்பைக் குறித்து தாயவள் ஆசியுடன் தாயகம் (தாய் அகம்) காக்க கருவி கையேந்திக் களமுனை விரைகிறான். வழியனுப்பிய தாயோ தன் மகன் போரில் மிக்க தீரத்துடன் போரிட வேண்டும் என எண்ணியபடி வெற்றிச் செய்திக்காக காத்திருக்கிறாள்,

 

அவளது மனக்கலக்கத்துக்குக் காரணம், அவன் வீட்டில் கடைசிப் பிள்ளை, செல்லப் பிள்ளை, என்னதான் வீர வித்தைகள் பயின்று இருந்தாலும் இதுவரை போர்க்கள அனுபவம் இல்லாதவன்( அவனது தந்தை மற்றும் தமையன்மார் இதுவரை வெற்றி வாகை அணிந்தே வீடு திரும்புயிருக்கின்றனர், இவனுக்கோ போர் முனை செல்லும் அவசியம் இதுவரை எழவிலை, (சான்றாக இன்னொரு புற நானூறுப் பாடல் கூறுகிறது, கல் நின்றான் நின் மாமன் மா களப்பட்டான் உந்தை முன் நின்று மொய் அவிந்தான் உன் ஐயன்... என அவன் முன்னவர் வீரமும் வீரமரணமும் கூறி நிற்கிறது) இப்பொழுது போர்முனை செல்லும் இவனும் அவர்களைப் போன்று தாய் நாட்டுக்காக தீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்றுக்கொடுக்க வேண்டுமே என அவள் சிறிது மனச்சஞ்சலத்துடன் காத்து நிற்கிறாள். சில திங்கள் கடந்து போர்க்களம் சென்ற வீர மறவர்கள் வெற்றியுடன் நாடு திரும்புவதை அறிந்து அவளும் எல்லோரையும் வரவேற்க எல்லையில் சென்று வாஞ்சையுடன் தன் மகன் வரவை நோக்கிக் கிடக்கிறாள். களம் வென்று திரும்பிய சேனையில் தன் மகனைக்காணாமல் தவிக்கிறாள், படைத்தலைவன் அத்தாயை அணுகித் "தாயே உன் மகன் மிகத் தீரதுடனும் புயலையும் விஞ்சிய வேகத்துடனும் மகா வீரதுடனும் போரிட்டான், பகைவர்க்கு கூற்றெனத் (இயமனே போல) திகழ்ந்தனன், அத்துடன் தான் இறக்கும் தறுவாயில் போரில் மிகப் பெரிய யானை ஒன்றையும் கொன்று நாட்டுக்காக வீரச் சாவைத் தழுவிக் கொண்டான்" எனக் கூறினான், இதைக் கேளிவியுற்ற அத்தாய் அவனைப் பெற்றெடுத்த கணத்தில் ஏற்பட்ட சந்தோசத்தை விட பன்மடங்கு மகிழ்வுற்றாள் அந்த மறத் தமிழ் அன்னை எனக் கூறித் தமிழ் வீரம் எடுத்து உரைக்கின்றது பாடல்.

 

தன் குடும்பத்தில் அத்தனை ஆண்களையும்  நாட்டுக்காக அர்ப்பணித்த அந்த வீர மாது தன் கடைசி அருமை மகனது வீரச் சாவுச் செய்தி கேட்டதும் பேரானந்தப் படுகிறாள் என்றால், அவள் தன் நாட்டையும் மானத்தையும் வீரத்தையும் எவ்வளவு  நேசித்துப் போற்றி இருக்க வேண்டும் என் சிந்தித்துப் பாருங்கள். இதுவல்லவோ தன்மானத் தமிழ் வீரம். இச் சம்பவம் சங்க காலத்தில் நிகழ்ந்ததாக கூறப் பட்டு இருப்பினும் (கவிஞரின் கற்பனையாவும் இருக்கலாம்) இன்றும் தமிழரிடையே இப்படிப்பட வீரம் விளைந்து கொண்டுதானிருக்கிறது என்பது தமிழர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.

 

நன்றி.

கலாமாறன்.

 

வீரம் விளையும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.