Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"அவளோடு என் நினைவுகள்…"
 
"உன் நினைவு மழையாய் பொழிய  
என் விழியோரம் கண்ணீர் நனைக்க 
மென்மை இதயம் அன்பால் துடிக்க 
அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "
 
"மனக் கடல் குழம்பி பொங்க
மவுனம் ஆகி நீயும் மறைய 
மண்ணை விட்டு நானும் விலக  
மங்கள அரிசியும் கை மாறியதே!"
 
நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.
 
நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன் 
 
முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது. 
 
செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும். 
 
அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.
 
உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன். 
 
என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது. 
 
தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.  
 
மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள். 
 
நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது. 
 
சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! 
 
அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.  
 
கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.    
 
"செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில் 
தென்றலும் தீண்டியதே 
தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில் 
சிந்தனை மாறியதே 
சிந்தனை மாறிய வேளையில் மன்மதன் 
அம்புகள் பாய்ந்தனவே 
மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர் 
வாழிய வாழியவே!"                  
 
எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.  
 
அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.  
 
"வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர 
கருங்கூந்தல் மேகம் போல் ஆட    
ஒட்டியிருந்த என் மனமும் உருக 
விழிகள் இரண்டும் அம்பு வீச  
மெல்லிய இடை கைகள் வருட  
கொஞ்சி பேசி இழுத்து அணைக்க  
கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம் 
தொட்டு என்னை வருத்தி சென்றது!" 
    
முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது. 
 
நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன். 
 
அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது. 
 
என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன் 
 
`செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க் குரை!’
 
`நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!   
 
நன்றி 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
No photo description available.No photo description available.
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.