Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை - சுபன் இணைப்பாளர் தலைமைச் செயலகம்

Featured Replies

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

29/06/2010

அன்பான தமிழ் பேசும் மக்களே!

இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்ற அதேவேளை எம் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

எம் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இயக்கத்தினை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள அரசின் நோக்கம் எடுபடவில்லை.

இத்தகைய சூழலில் இலங்கை அரசு பல்வேறு நரித்தனம் கொண்ட தந்திரத் திட்டங்களை வகுத்து நகர்த்தி வருகின்றதை எம்மக்கள் நன்கு அறிவர்.

சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்களைத் தணிப்பது, சர்வதேச உதவிகளை தமிழர்களின் பேரால் பெற்று சிங்களக் குடியேற்றங்களைப் பெருக்குவது, இன நல்லிணக்கம் என்ற பேரிலும், அபிவிருத்தி என்ற பேரிலும் எம் உரிமைக்கான போராட்டத்தினை அடியோடு இல்லாமல் செய்வது ஆகிய நீண்டகால திட்டங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்தகைய சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் பெரும் தடையாக இருப்பதனை இலங்கை அரசாங்கம் நன்கு கணித்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இருந்த விரக்தி, குழப்பங்கள், கருத்து முரண்பாடுகளைக் களைந்து ஆரோக்கியமான முறையில் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கிய புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் தலையிடியாக அமைந்து வருகின்றன.

இதன்காரணத்தால் புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இலங்கை அரசாங்கம். அதன் ஒருபகுதியாக, சிறையிலுள்ள போராளிகள் சிலரைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சில திட்டங்களைச் செயற்படுத்தி புலம்பெயர் மக்களின் ஒருதொகுதியைத் தம் வசப்படுத்தி, வளங்களை உள்வாங்க முனைகிறது. இதன்மூலம் குழப்பங்களை ஏற்படுத்தி எமது ஒற்றுமையைச் சிதைத்து, தமிழரின் உரிமைக்கான போராட்டத்தினையும் புலம்பெயர் தேசங்களில் நசுக்க எண்ணியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே இலங்கை அரசாங்கத்தால் சில நகர்வுகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போராளிகளை விடுவிப்பதற்கும், தாயக மக்களின் துயரங்களைப் போக்குவதற்கும் எமது இயக்கமும், புலம்பெயர் மக்களும் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்ற நல்ல நோக்கினை இலங்கை அரசாங்கம் கபடத்தனமாகப் பயன்படுத்த முனைகிறது. அதற்காக தமிழ்மக்களின் எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி, தம்வசப்படுத்தும் உளவியற்போரை இலங்கை அரசு கையாளத் தொடங்கியுள்ளது.

தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப் போவதாகக் கூறும் சிங்கள அரசாங்கம் செய்தவை, செய்து கொண்டிருப்பவை என்ன?

யுத்தத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் எமது மக்களைக் கொன்று குவித்தது. சரணடைந்தவர்களைக் கொடூரமாகக் கொலை செய்தது. ஊடகங்களைச் சுயாதீனமாகச் செயற்படவிடாமல் தடுத்தது. சரணடைந்தவர்கள் குறித்த முழுமையான விபரங்களை இன்றுவரை வெளிப்படுத்தாமலுள்ளது. நாளாந்தம் பாலியல் வல்லுறவு, சித்திரவதை, கொலை என்று தடுப்புக் காவலிலுள்ளவர்களைப் பலியாக்கிக் கொண்டிருக்கிறது. தொண்டு நிறுவனங்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடாது தடுப்பது மட்டுமன்றி போர்க்குற்றவியல் விசாரணை தொடர்பான பன்னாட்டு முயற்சிகளை முற்றாக உதறித்தள்ளிக் கொண்டிருக்கிறது இந்த இலங்கை அரசாங்கம்.

இதே அரசாங்கம் தடுப்புக் காவலிலுள்ள போராளிகள் சிலரை விடுவிப்பது, மக்களின் புனர்வாழ்வு, அபிவிருத்தி என்ற திட்டங்களைக் கபட நோக்குடன் பயன்படுத்தி எமது மக்களை வசியப்படுத்த முயல்கிறது. தடுப்புக் காவலிலுள்ளவர்களை விடுவிப்பது என்பது முற்றுமுழுதாக இலங்கை அரசின் கையிலுள்ள விடயம். அதற்கு எந்தத் தடையுமே இல்லை. அது குறித்துப் பேசுவதானாற்கூட தாயகத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்த தமிழ் அரசியற்கட்சிகளுடன் பேசாமல் புலம்பெயர் தேசத்திலிருந்து தனிநபர்கள் சிலரை அழைத்துப் பேசவேண்டிய தேவையில்லை. இதுவொரு தமிழ்மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியாகவும், தம்மீதான அழுத்தங்களைத் தணிக்க இலங்கை அரசு ஆடும் ஒரு நாடகமாகவுமே பார்க்கப்பட வேண்டும்.

தமிழ்மக்கள் மேல் அக்கறையும் அவர்களின் துயரங்களைப் போக்க வேண்டுமென்ற விருப்பும் உண்மையாகவே இலங்கை அரசாங்கத்துக்கு இருக்குமானால்,

* இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தினையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினையும் நீக்கவேண்டும்.

* தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.

* ஐயத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களையும் மனிதாபிமானப் பணியாளர்களையும் விடுவிக்க வேண்டும்.

* இன்னமும் மீளக் குடியமர்த்தப்படாமல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களனைவரையும் அவரவரின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டும்.

* பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களையும் உள்ளூர்த் தொண்டு நிறுவனங்களையும் தமிழர் தாயகத்தில் சுதந்திரமாக அபிவிருத்திப் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

இவ் அனைத்துச் செயற்பாடுகளும் வெளிப்படையாக இடம்பெறவேண்டும். அத்தோடு தாயகத்திலுள்ள தமிழர் பிரதிநிதிகளுடன் இணைந்து இவற்றைச் செய்யவேண்டும். புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செய்யப்பட வேண்டிய பணிகளுக்கென அணுகப்பட வேண்டியவர்கள் அதற்கெனவுள்ள மக்கள் கட்டமைப்புக்களேயன்றி, தனிநபர்களல்லர். இவ்வாறான செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் செய்யும்போது உலகத் தமிழர்களும் அதற்கு முன்னின்று உழைப்பார்கள்.

ஆனால் இலங்கை அரசாங்கமோ மிகமிக இரகசியமாக, சிறையில் கைதிகளாகவுள்ள எமது இயக்கத்தைச் சேர்ந்த சிலருடனும், வெளிநாட்டில் இருந்து அண்மையிற் சென்ற தனிநபர்கள் சிலருடனும் சேர்ந்து திரை மறைவில் சில செயற்பாடுகளை முன்னெடுப்பது உள்நோக்கம் கொண்டவை. ஆகவே இந்தக் கபடநோக்கம் கொண்ட இலங்கை அரசின் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடனும் கூட்டுப்பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு, மக்கள் பிரிதிநிதிகளைப் புறந்தள்ளி தனிநபர்களைக் கொண்டு காரியமாற்றும் இலங்கை அரசின் இந்தக் கபட முயற்சியினை பன்னாட்டு அமைப்புக்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் சரியாக விளங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை, இலங்கை அரசின் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகி, நல்லெண்ண அடிப்படையில் சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும், வழங்க முன்வந்திருக்கும் புலம்பெயர்ந்த தனிநபர்கள், இலங்கை அரசின் கபடத்தனத்தை விளங்கிக் கொண்டு விழிப்புணர்வோடு செயற்பட்டு அரசின் சதிக்குப் பலியாகாமல் இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிலருக்குப் பொதுமன்னிப்பளித்து அவர்களைக் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டும், அபிவிருத்தியென்ற பெயரில் சலுகைகளை வழங்கியும் அரசியல் இலாபம் தேடமுனையும் இலங்கை அரசாங்கத்தின் வஞ்சகச் சூழ்ச்சியைத் தமிழ்மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். அத்தோடு, சலுகைகளுக்காக எமது இனத்தின் அரசியல் அபிலாசைகளை விலைபேசும் சக்திகளைத் தமிழ்மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்துச் சொல்லவும், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தி அதற்கான நீதியை உலகமட்டத்தில் பெற்றுக்கொடுக்கவும் பணியாற்றும் வலுவுடனிருக்கும் எமது புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரண்டு செயற்படுவதன் மூலம் எமது விடுதலையை வென்றெடுக்கப் பாடுபட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்,

இணைப்பாளர்,

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

  • தொடங்கியவர்

புலிகளின் கோரிக்கைகளை விட்டாலும் , ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகொளையவது செய்யட்டும் பார்ப்பம்.

சிங்கள பேரினவாதம் எமக்கு ஒருபோதும் ஒன்றும் செய்யாது. பேராயுத பலம் உள்ளபோதே பேச்சுவார்த்தைக்கு வந்து எம்மக்களுக்கு ஒன்றும் செய்யாத சிங்களம் எமக்கு உதவபோகுதம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு ஊறுபாடாக அமையும் இலங்கையின் செயற்பாடுகள் குறைக்கப்பட வேண்டும்;

இலங்கைச் சமுதாயத்தில் இருக்கின்ற சகல அரசியல் கட்சிகள், இன, மதக் குழுக்கள் மற்றும் சிறுபான்மையினங்களின் நலன்களைப் போதுமான அளவில் பிரதிபலிக்கக் கூடியதாக அரசியலமைப்புப் பேரவையை நிறுவி அதனூடாக அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் முக்கிய நோக்கம் நிறைவேறுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது முக்கிய அரச பதவிகளுக்குச் சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான நியமனங்கள் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்;

2005 அவசரகால ஒழுங்கு விதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள எஞ்சிய பகுதிகளையும் இரத்துச் செய்ய வேண்டும். குறிப்பாக, விசாரணையின்றித் தடுத்து வைத்தல், நடமாடும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பிலான ஒழுங்கு விதிகளை இல்லாமற் செய்ய வேண்டும். 2006 அவசரகால ஒழுங்கு விதிகளையும் இரத்துச் செய்யவேண்டும்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கை மற்றும் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனம் ஆகியவற்றுக்கு ஒத்திசைவான குறிப்பிட்ட சில ஏற்பாடுகளை, அதாவது ஆயுதங்களை வைத்திருத்தல் போன்றவை தொடர்பிலான ஏற்பாடுகளைத் தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்க வேண்டுமென்று இலங்கை அரசாங்கம் கருதினால் அந்த ஏற்பாடுகள் குற்றவியல் கோவைக்கு மாற்றப்பட வேண்டும்;

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு ஒத்திசைவாக அமையாத (குறிப்பாக 9, 10, 11, 14, 15, 16 மற்றும் 26 பிரிவுகள்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பகுதிகள் இரத்துச் செய்யப்பட வேண்டும். அல்லது அந்த உடன்படிக்கைக்கு ஒத்திசைவான முறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்;

பொதுப் பாதுகாப்பு ஒழுங்கு விதிகளின் கீழ் வருகின்ற 8 ஆம் பிரிவில் உள்ள உடமை கைப்பற்றல் மற்றும் விடுபாட்டு உரிமை தொடர்பிலான ஏற்பாடுகளை இரத்துச் செய்ய வேண்டும் அல்லது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கைக்கு இசைவான முறையில் அதில் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்;

சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாகச் சட்டத்தரணி ஒருவரைப் பார்ப்பதற்கான உரிமையை வழங்குவதற்கு வகைசெய்யும் உத்தேச திருத்தங்களை நிறைவேற்றவேண்டும்;

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கை சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனம் ஆகியவற்றின் கீழ் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தனிநபர்களை ஐ.நா. மனித உரிமைகள் குழுவுக்கு முறைப்பாடு செய்ய அனுமதிப்பதற்கு அவசியமான சட்ட ரீதியான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்;

தனிப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரங்களில் ஐ.நா. மனித உரிமைகள் குழு தெரிவித்திருக்கக் கூடிய அபிப்பிராயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்;

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் ஐ.நா. விசேட அறிக்கையாளர்களுக்கு (ஆட்கள், காணாமல் போதல் தொடர்பான ஐ.நா.செயற்குழு, சித்திரவதைக்கு எதிரான ஐ.நா.விசேட அறிக்கையாளர், கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா.விசேட அறிக்கையாளர்) அமைப்பை விடுக்க வேண்டும்.

பலவந்தமான சூழ்நிலைகளில் காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா.செயற்குழு முன்னிலையில் உள்ள தனிப்பட்டவர்களின் விசாரணைகள் தொடர்பில் பதில் தரவேண்டும்.

2008 விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை முழுமையாகப் பிரசுரம் செய்ய வேண்டும்.

அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களினதும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளினதும் பெயர்ப்பட்டியலை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடக்கூடியதாக பிரசுரம் செய்ய வேண்டும்; அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்வதன் மூலம் அல்லது அவர்களை நீதிவிசாரணைக்கு உட்படுத்துவதன் மூலமாக தடுப்புக்காவலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்;

ஆட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகல இடங்களுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழு போன்ற சுயாதீனமான மனிதாபிமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சென்று நிலைவரத்தை கண்காணிக்கக் கூடியதாக வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

தேசிய மனித உரிமைகள் செயல்திட்டமொன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும். ஊடகவியலாளர்கள் எந்தவிதமான தொந்தரவும் இன்றி தங்களது கடமைகளைச் செய்யக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.