Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் 'உயிர்க்கூறு (DNA)' பாசிசமா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

தாயன் ஜயதிலகாவின் மறுவருகை

thayan%20jeyathilaka_CI.jpg

பிரெஞ்சு நாட்டுக்கான இலங்கைத் தூதர் தாயன் ஜயதிலகா அவர்கள் தமிழ் விவாதச் சூழலில் (ஆங்கிலத்தின் வழி) பிரவேசித்திருக்கிறார். தமிழ்ச் சூழலில் செயல்பட்டுவரும் இரு ஆளுமைகளின் மேற்கோளுடன் அவர் விடுதலைப் புலிகளின் 'உயிர்க்கூறு (DNA)' பாசிசம்தான் என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார்.

‘இனியொரு’ இணைய இதழில் கணேஷ் ஐயர் அவர்கள் எழுதி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்ற ஆண்டுகள் தொடரிலிருந்து ஒரு மேற்கோள், அகிலன் கதிர்காமருக்கு ராகவன் அவர்கள் கொடுத்த நேர்காணலில் இருந்து ஒரு மேற்கோள் என இரு மேற்கோள்களில் இருந்து இதனை அவர் நிறுவிக் காட்டுகிறார்.

ஐயரின் மேற்கோள் எதனைச் சொல்கிறது?

சுபாஷ் சந்திர போஸ், வாஞ்சிநாதன், இட்லர் ஆகியோரின் கலவை பிரபாகரன் என்கிறார் ஐயர். ஹிட்ரின் ராணுவக் கட்டமைப்பையும், வணக்க முறைமையையும் (salute) பிரபாகரன் ஒழுக்கக் கோட்பாடாக ஆக்குகிறார். ஐயர் இந்த மேற்கோளின் அறுதியில் சொல்கிற ஒரு விடயத்தை 'மார்க்சிய' அறிஞரான தாயன் ஜயதிலகா மிகச் சாதுர்யமாகக் கடந்து போய்விடுகிறார்.

பிரபாகரனின் இந்தக் கண்ணோட்டம் முழுக்க முழுக்க ராணுவரீதியிலானது எனும் ஐயர், இது ‘அரசியல் பண்பு கொண்டது அல்ல’ என்கிறார்.

தாயன் ஜயதிலகாவை குறைந்தபட்சம் அறிவு நேர்மை கொண்ட ஒரு கல்வித்துறைசார் ஆய்வாளராக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்போது அதனை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். குறைந்தபட்ச அறிவுநேர்மை கூட இல்லாத ஒரு இலங்கை அரசு ஊழியர் அல்லது தந்திரோபாயம் மிக்க ராஜதந்திரி என்பதற்கு மேலாக அவருக்கு இனி எந்த மதிப்பும் இல்லை.

ஐயா, தாயன் ஜயதிலகா, பாசிசம் என்பது ஒரு கருத்தியல், அது ஒரு இனக்கொலை அரசியல். ஐயர் தனது மேற்கோளில் தெளிவாகச் சொல்கிறார், பிரபாகரனின் பார்வை ஒரு கட்டிறுக்கமான ராணுவக் கட்டமைப்பை உருவாக்குவது என்பதுதான். அந்த நோக்கிலிருந்தே அவர் சுபாஷ்சந்திரபோஸ், வாஞ்சிநாதன், ஹிட்லர் என மூவரையும் ஆதர்ஷமாகக் கொள்கிறார்.

ஹிட்லரை முன்வைத்துப் பிரபாகரனைப் பாசிஸ்ட்டாக முன்னிறுத்துகிற தாயன் ஜயதிலகா, ஏன் பிரபாகரனது பிற இரு ஆதர்ஷ ஆளுமைகள் பற்றிப் பேசவில்லை?

பார்ப்பனர் என்பதால் வாஞ்சிநாதனை இன்று பிராமண இந்துத்துவவாதியாகக் கட்டமைக்க முடியும். பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க ஆயுதப் படையைக் கட்டிய சுபாஷ் சந்திரபோஷ் பாசிஸ்ட்டான ஹி ட்லரிடம் உதவி கேட்டு அவரைச் சந்திக்கப் போனதால் அவரைப் பாசிஸ்ட் எனவும் கட்டமைக்க முடியும்.

துரதிருஷ்டவசமாக சபாஷ் சந்திரபோஸை பாசிஸ்ட் 'உயிர்க் கூறு' கொண்டவர் என தாயன் ஜயதிலகாவினால் கட்டமைக்க முடியாது.

சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய வரலாற்று நூல்களைத் தேடிப் படிப்பது கடினமாக இருந்தால், தாயன் ஜயதிலகா ஸியாம் பெனிகலின் சுபாஷ்சந்திர போஸ் குறித்த முழுநீளத் திரைப்படத்தைப் பார்ப்பது நல்லது. ஹிட்லரைத் தேடிப்போன போஸ்தான் கம்யூனிஸ்ட்டுகளைத் தோழர்களாகக் கொண்டிருந்தார். ஹிட்லரை அவர் தேடிப் போகக் காரணம் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் எனும் இந்திய தேசபக்தி மட்டும்தானேயொழிய அவர் கருத்தியல் ரீதியில் பாசிஸ்ட் இல்லை.

பிரபாகரனையும் இப்படித்தான் மதிப்பிட வேண்டும்.

இப்படிச் சொல்வதால் பிரபாகரனது ராணுவவாதத்தினை ஏற்பது என அர்த்தப்படுத்திக் கொண்டால், அது துயரம்.

ஸ்டாலின் கூடத் தனது நாட்டைக் காக்க ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஸ்டாலினை பாசிஸ்ட் என்று சொல்கிறவனை வரலாறு அறியாத மூடன் என்றுதான் நாம் சொல்ல முடியும்.

அகிலன் கதிர்காமருக்கு ராகவன் கொடுத்த நேர்காணலில் பிரபாகரன் குறித்த ஒரு உளலியல் பிம்பத்தைக் கட்டமைக்க அவர் முயல்கிறார் :

தங்கதுரை அமெரிக்க ஆதரவாளர், இஸ்ரேல் ஆதரவாளர். பிரபாகரனதும் இதே மனக்கட்டமைப்புத்தான். விநோதமான முறையில் அவர் ஹிட்லரினால் ஆதர்ஷம் பெற்றிருந்தார். அவரிடம் மெயின் காம்ப் நூலின் ஒரு பிரதி இருந்தது. பகத்சிங், சுபாஷ் சந்திரபோஷ் போன்றோரினாலும் இவர் ஆதர்ஷம் பெற்றிருந்தார். இது ஒரு விநோதமான கலவை. நான் நினைக்கிறேன், ஓரு பக்கம் யூதஅடையாளம் எனும் கருத்தை அவர் ஏற்றிருந்தார். யூததேசம், இஸ்ரேல் அமைப்பு என்பதனையும் ஏற்றிருந்தார். இன்னொரு பக்கம், ‘மற்றவற்றை’ அழிப்பது எனும் கருத்து அவருக்கு ஹிட்லரிடம் இருந்து வருகிறது. அவரது மன அமைவில் இவையனைத்திற்கும் ஒரு இணைவு இருந்தது…..

தங்கதுரை இங்கு எமது கருத்தாடலுக்கு உட்பட்டவர் அல்ல என்பதால், பிரபாகரன் குறித்த ராகவனின் இரு கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்ள விழைகிறேன்.

முதலாவதாக, சுபாஷ்சந்திரபோஸ், பகத்சிங், ஹிட்லர் மூவரினாலும் ஆதர்ஷம் பெற்றவராக பிரபாகரன் இருந்தார். அவரிடம் ஹிட்லரின் சுயசரிதையான மெயின் காம்ப் பிரதியும் இருந்தது. இந்த ஆதாரங்களால் கருத்தியல் ரீதியில் பிரபாகரன் ஒரு பாசிஸ்ட் என நிறுவ முடியாது.

பகத்சிங் நாத்திகன் அதனோடு இடதுசாரி மரபாளன். சுபாஷ் சந்திரபோஸ் பற்றி மறுபடியும் பேசவது கூறியது கூறல். மெயின் காம்ப் பிரதியை வைத்திருந்ததும் வாசித்ததும், அதிலிருந்த யூதவெறுப்பை பிரபாகரன் கற்றுக் கொண்டார் என்பதற்கான ஆதாரம் இல்லை.

காரணங்கள் இரண்டு-

முதலாவதாக, பிரபாகரன் ஹிட்லரை அவனது ராணுவ அமைப்புக்காகவே ஏற்றார் என்கிறார் ஐயர். ராகவன், போஸ் தவிர மேலதிகமாக இங்கு குறிப்பிடுகிற பகத்சிங் அவரது ராணுவவாதத்திற்காகவே இந்திய வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார்.

இரண்டாவது காரணம், ஹிட்லரது பாசிசக் கருத்தியலின் மையமான யூத இனப்படுகொலை என்பதனை மறுத்து, பிரபாகரன் யூத இனத்தின்பாலும், அவர்களது நாடு எனும் அமைப்பின்பாலும் ஈர்க்கப்படுகிறார்.

பிரபாகரனிடம் செயல்பட்டது பாசிசக் கருத்தியல் என்று சொல்வதற்கு ராகவனாலும் ஆதாரம் தரமுடியவில்லை. ஏனெனில், பாசித்தின் ஆதாரமான குணமே (யூத) இனக்கொலைதான்.

ராகவனது மேற்கோளின் முக்கியமான பகுதி பிரபாகரனின் மனஅமைவாக அவர் ‘நினைக்கும்‘ பகுதி. பொதுவாக ஒருவர் பிறரைப் பற்றி ‘நினைப்பது’ என்பதும் ‘கருதுவது’ என்பதுவும் அவரவரது மனஅமைவும் அகவயமான பார்வையும் சார்ந்தாகும். இதற்குப் புறநிலை மதிப்பு எதுவும் இல்லை.

விவாதங்களில் இவற்றை எவரும் ஆதாரமாக ஏற்பதும் இல்லை.

‘மற்றவற்றை’ அழிப்பது என்றால், எவ்வாறு ராகவன் அதனைப் பொருள் கொள்கிறார் என்பதனை அவரே விளக்கினால் அல்லாது எவரும் அதனை முழுமையாகப் பொருள்கொண்டு விவாதிக்க முடியாது. வேண்டுமானால் நாம் விவாத ‘சௌகரியத்திற்காக’ முஸ்லீம்களின் யாழ்ப்பாண வெளியேற்றத்தையும், எல்லையோர சிங்களக் கிராமங்களில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டதனையும் இந்த விவாதக் கட்டமைப்புக்குள் கொண்டுவரலாம்.

ஹிட்லரிய, பாசிச அர்த்தத்தில் இதனைப் பாவிக்க முடியுமா என்பது பிரச்சினைக்கு உரியது.

இப்பிரச்சினையை அடிப்படையில் நாம் இப்படி அணுக முடியாது.

குர்திஸ் பிரதேசங்களில் துருக்கிய அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களை குர்திஸ் விடுதலை இயக்கத்தினர் அழிப்பதையும், அயர்லாந்தில் பிரித்தானிய அரசு பிராடஸ்தாந்துக் குடியேற்றங்களைத் திட்டமிட்டு அமைத்ததனை அயர்லாந்து விடுதலை இயக்கத்தினர் அழித்ததையும் இவ்வாறான அடிப்படையில் பார்க்க முடியாது. இதனை அரசியல் அடிப்படையில் மட்டுமே நாம் பார்க்க முடியும்.

அரை நூற்றாண்டாக இலங்கை அரசும் சிங்கள பௌத்தக் கருத்தியலும் ‘மற்றவற்றை’த் திட்டமிட்டு அழிப்பதை இனக்கொலையாக, பாசிசமாக வரையறுத்து விட்டுத்தான் இப்பிரச்சினையை நாம் விவாதிக்க முடியும்.

இந்த விஷயம் குறித்து எதுவும் பேசாது, இதை நிகழ்த்தி முடித்த ராணுவத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிற தாயன் ஜயதிலகா, பிரபாகரனைப் பாசிஸ்ட் என்று சொல்வதற்கான ஆதாரம் இது என்று சொல்வது நகைப்பிற்கிடமானது.

முஸ்லீம்கள் பற்றிய பிரச்சினையை ‘மற்றவற்றை’ அழிப்பது எனும் கண் கொண்டு பார்க்க முடியாது.

இட்லர் யூதர்களை முற்றிலும் அழிப்பதை கொள்கையாகக் கொண்டிருந்தான். எரித்து முடித்தான். இலட்சக் கணக்கில் கொன்றொழித்தான். ஓரு போதும் அவனது கொலைகளை அவன் தவறென ஒப்புக் கொண்டது இல்லை. முஸ்லீம்களின் யாழ்ப்பாண வெளியேற்றத்தை ஹிட்லரது பாசிச் கருத்தியலுடன் ஒப்பிடுவது அதீதமான வரையறையாகவே இருக்கும்.

விடுதலைப் புலிகள் முஸ்லீம்களின் யாழ்ப்பாண வெளியேற்றத்தை நியாயப்படுத்தவில்லை. அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலையிலேயே அவர்கள் இருந்தார்கள். அந்த நிகழ்வுக்குப் பிற்பாடு கூட முஸ்லீம் அரசியல் தலைமைகளுடன் விடுதலைப் புலிகள் உரையாடல்களை மேற்கொண்டே இருந்தார்கள். ‘மற்றவற்றை’ அழித்தொழிப்பது எனும் கருத்தாக்கம் இங்கு முற்றிலும் பொறுத்தம் இல்லாதது.

இந்த இரண்டு மேற்கோள்களையும் வைத்துக் கொண்டுதான் தாயன் ஜயதிலகா விடுதலைப் புலிகளின் உயிர்க்கூற்றிலேயே பாசிசம் இருந்தது என்று முழுங்குகிறார். பாசிசம் வெறுமனே ஒரு ராணுவக் கட்டமைப்பு அல்ல, அது இனக்கொலை அரசியல்-கருத்தியல் என்கிற அறிவுகூட இல்லாமல் தாயன் ஜயதிலகா ஆர்ப்பரிப்பது அபத்தமாக இருக்கிறது.

இப்படி ஆர்ப்பரிக்கும் தாயன் ஜயதிலகா மகிந்த ராஜபக்ச பதவிக்கு வருவதற்கு முன்பாகவே தான் சிவராமுக்கு கொடுத்த ஒரு நேர்முகத்தையும் சுட்டிக்காட்டுகிறார் :

விடுதலைப்புலிகளின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது என்பது அவர்களை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவது என்பதாக இருக்கக் கூடாது, மாறாக அவர்களது உயிரூக்கமுள்ள சக்தியை ‘அழித்தொழிப்பதாக இருக்க வேண்டும்’ எனத் தான் குறிப்பிட்டதாகக் குறிப்பிடுகிறார்.

விடுதலைப் புலிகளின் 'தோற்ற ஆதாரத்தை, உயிர்க்கூற்றை' அழிப்பதாக இருக்க வேண்டும் என அவர் சொல்கிறார்.

தாயன் ஜயதிலகாவின் வெறிக்கூச்சலை மறுக்கும் சுரேந்திர அஜித் ரூபசிங்க என்பவர், தாயன் ஜயன்திலகா குறிப்பிடும் பாசிச உயிர்க்கூறு இப்போது அரசுடன் இணைந்து செயல்படும் அமைச்சர்களான திருவாளர்கள். கருணா, பிள்ளையான், பத்மநாதன்(KP) போன்ற வர்களுக்கும் இருக்கிறதா என்பதனை ஜயதிலகா ஆராய வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

இப்படியான ‘பாசிச’ உயிர்க்கூற்றுச் சோதனைச் சாலையில் ராஜபக்ச சகோதரர்களையும், ராணுவத்தீர்வை ஆதரித்து முன்மொழிந்த ஜயதிலகாவின் உயிர்க்கூற்றையும் ஆராய வேண்டும் எனவும் கோருகிறார் அஜித் ரூபசிங்க.

விடுதலைப் புலிகளின் அரசியலை விமர்சிப்பதும் ஆய்வு செய்வதும் வேறு. விடுதலைப் போரட்டத்தின் இலக்கையும் திசை வழியையும் விடுதலை நோக்கில் விமர்சிப்பது வேறு. ஓரு ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்பதனைத் தோற்றக் காரணங்களாக வைத்து உருவான ஒரு வரலாற்றுப் போக்கினை பாசிசத்தின் உயிர்க்கூற்று விசாரணையாக மாற்றுவதும், பல்லாயிரம் வெகுமக்கள் கொல்லப்பட்ட, காணாமல் போன, பல்லாயிரம் கணவர்களை இழந்தவர்கள் உருவாக்கின, நூற்றுக் கணக்கிலான பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தின இலங்கை ராணுவ வெற்றியை தேசியவிடுதலை வெற்றியாக மாற்றுவதும், அதனைப் பாசிசத்தின் மீதான வெற்றியாகக் கோருவதும் ஒரு நோய்க்கூறான மனநிலை.

தத்துவத்தின் பெயரில் இதனை முன்வைக்கிற தாயன் ஜயதிலகாவின் மூச்சுக்காற்றில் பிணவாடையும் இரத்தக் கவிச்சியும் மிதந்து வருகிறது…

***

தாயன் ஜயதிலகாவிற்கு ஒரு சின்னப் பரிந்துரை : பிரெஞ்சுத் தத்துவவாதிகளான ஸார்த்தர், பூக்கோ மற்றுத் தெரிதா என இவர்களுக்கு ஆதர்ஷமாக இருந்த தத்துவாதியான நீட்ஷேவையும் கூட அவரது சகோதரி இட்லருடன் சம்பந்தப்படுத்தி விட்டுத்தான் செத்துப்போனார். நீட்ஷேவும் பாசிஸ்ட்தான் என்று ஐரோப்பாவில் எங்கேனும் எழுதிவிடாதீர்கள். அது நகைப்புக்கு இடமாக ஆகிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.