ஊர்ப்புதினம்

தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்பாடு நாளை!

2 months 1 week ago
21 JUL, 2024 | 10:26 AM
image

ஆர்.ராம்

தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்பாடு நாளை திங்கட்கிழமை (22) கைச்சாத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களின் ஒன்றிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையும் கூட்டிணைந்து தமிழ்த் தேசிய பேரவை என்ற பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கு இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் கடந்த 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் மறைவினையொட்டி இந்த புரிந்துணர்வு உடன்பாட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இந்த கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டபோதும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கு நேரமின்மை காரணமாக பிற்போடப்பட்டது.

அதனையடுத்து சிவில் அமைப்பின் பிரமுகர்களுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் உரையாடல்கள் இடம்பெற்ற நிலையில் நாளைய தினம் கைச்சாத்திடும் நிகழ்வை முன்னெடுப்பதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிரகாரம், தந்தை செல்வா கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/188977

மாகாண சபை முறைமை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது - யாழ். வணிகர் கழகத்துடனான சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி

2 months 1 week ago

Published By: DIGITAL DESK 7   21 JUL, 2024 | 11:47 AM

image

(ஆர்.ராம்)

அரசியலமைப்பில் காணப்படுகின்ற மாகாண சபை முறைமையை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஆட்சிப்பொறுப்பையேற்று சொற்பகாலத்துக்குள் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அம்முறைமை உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

யாழ்.வணிகர் கழகத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோதே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாவதுரூபவ் யாழ்.வணிகர் கழகத்துடனான சந்தப்பின்போது, நாம் எமது பொருளாதாரக் கொள்கைகளை வெளிப்படுத்தினோம்.

விசேடமாக நாட்டின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தல் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்தல், அனைவரையும் பொருளாதார மீள்கட்டியெழும்பும் செயற்றிட்டத்தில் பங்காளிகளாக்குதல் உள்ளிட்டவற்றை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தினோம்.அதனையடுத்து தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான உரையாடல்கள் நடைபெற்றன. தேசிய இனப்பிரச்சினை தொடர்பான எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினோம்.

குறிப்பாக, அரசியலமைப்பில் உள்ள மாகாண சபை முறைமையை நாம் ஆட்சிப்பொறுப்பேற்று சொற்பகாலத்துக்குள் வினைத்திறனுடன் மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்பதை தெரிவித்தோம்.

அத்துடன் மாகாண சபைகள் முறைமை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டினேம். எவ்வாறாயினும் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது.

அந்த அரசியலமைப்பானது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். அதன்மூலமாகவே மீண்டும் இனரீதியான குழப்பநிலைமைகள் உருவெடுக்காது என்பதோடு சமத்துவமும் உறுதியாகும் என்ற விடயத்தினை அவர்களிடத்தில் குறிப்பிட்டோம்.

இதனையடுத்து 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு நடவடிக்ககைளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வணிகர் கழகத்தால் எம்மிடத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானத்தினை எடுப்போம் என்று பதிலளித்துள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/188975

ரணில் பதவியேற்று இன்றுடன் ஈராண்டு நிறைவு - ஜனாதிபதி வேட்பாளராவதை அறிவிக்கவும் தீர்மானம்

2 months 1 week ago

Published By: DIGITAL DESK 7   21 JUL, 2024 | 11:43 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்) 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்று (21) ஞாயிற்றுக்கிழமையுடன் ஈராண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளமையை  இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். பல  கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கூட்டணியில் பொதுவான சின்னத்தில், பொது வேட்பாளராக 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கை வரலாறு காணாத அரசியல் மற்றும் பொருளாதார பெரும் நெருக்கடிக்களை எதிர்கொண்டது. இந்த நெருக்கடிகள் அதிகாரபூர்வமற்ற ஆட்சி மாற்றத்துக்கும் காரணமாகியது என்பது மறுக்க இயலாது. மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட அப்போதைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, வன்முறை மிக்க மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாது நாட்டை விட்டு தப்பித்துச் சென்றார். 

இந்த அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் நாடு பெரும் அச்சுறுத்தல்களை எதிர்க்கொண்ட போது, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க ஆளும்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்தது. 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற  பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தேசிய ஆசனத்தைமாத்திரம் பெற்று ஐக்கிய தேசிய கட்சி படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது.  

நீண்ட நாட்கள் காத்திருப்புகளுக்கு பின்னர் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய ஆசனத்தில் பாராளுமன்ற உறுப்பினராகரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமானம் செய்துக்கொண்டார். 'அரகலய' அரச எதிர்ப்பு போராட்டங்கள் தளிர்விட்ட நாட்களாகவே அந்த காலப்பகுதி அமைந்தது.  நாளுக்கு நாள் நாட்டின் நிலைமை மோசமடைந்து இலங்கை முழுவதிலும் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, இறுதியில் தலைநகர் கொழும்பு அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களின் களமாகியது.

நிலைமையை சீர்ப்படுத்த அரசாங்கம் பல வழிகளில் முயற்சித்த போதிலும் வெற்றியளிக்க வில்லை. மாறாக ஆட்சியாளர்களை பதவி விலகுமாறு மக்கள் வலுவாக கூறி நின்றனர். அப்போதைய பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ முதலில் பதவி விலகி, அந்த பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்தார்.  

இதனை தனிப்பட்ட தீர்மானம் என்பதை விட ஒட்டுமொத்த ராஜபக்ஷர்களின் தீர்மானத்தையும் தாண்டி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின முழுமையான அழுத்தமாகவும் இது அமைந்தது. ஏனெனில் இறுதி தருணத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் ஆளும் கட்சியை நெருக்கடியான நிலைமைக்கு கொண்டு சென்றது.

இந்த நிலைமை அடுத்த நிலைக்கு செல்லாது தடுக்கப்பட வேண்டுமாயின், ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவர் என்பதை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ தீர்மானித்திருந்தனர். அதே போன்று ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது மக்கள் விடுதலை முன்னணிக்கோ சென்றுவிடக்கூடாது என்பதில் ராஜபக்ஷர்கள் இருந்தனர். 

ராஜபக்ஷர்களுக்கு ஏற்பட்ட இந்த சூழலே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கதிரையில் அமரவைத்தது. '69 இலட்சம் மக்கள் ஆதரவை பெற்றவருக்கு நாட்டில் இடமில்லை, ஒரே ஒரு ஆசனத்தில் பாராளுமன்றம் சென்றவருக்கு நாடே சொந்தமானது' என்று சிங்கள நாளேடுகள் அன்று செய்திகளை பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/188973

IMFஇன் தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!

2 months 1 week ago
imf-300x198.jpg

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அதற்கான வழிவகைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த தூதுக்குழு இலங்கை வரவுள்ளது.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த தூதுக்குழு நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பில் மதிப்பாய்வை மேற்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/306563

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 வருடங்களாக மாற்றியமைக்கும் நடவடிக்கை முறையாக இடம்பெற்றது - மைத்திரி

2 months 1 week ago
21 JUL, 2024 | 02:57 PM
image

(எம்.ஆர்.ஆர்.வசீம்)

அரசியலமைப்பின் 18ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்துவந்த வரையறையற்ற அதிகாரங்களை சாதாரண ஜனநாயக முறைக்கு மாற்றும் வகையிலேயே 19ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்கும் நடவடிக்கை முறையாக இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் நேற்று சனிக்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

அரசியலமைப்பின் 19ஆம் திருத்தம் தொடர்பில் நானே மிகவும் அறிந்தவன். ஏனெனில், நாங்கள் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில் அரசியலமைப்பின் 18ஆம் திருத்தத்தில் உள்ள ஜனாதிபதியின் வரையறையற்ற அதிகாரங்களை குறைத்து, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடமாக குறைக்கவேண்டும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 19ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என முறையாக திருத்தி அமைக்கப்பட்டது.

அத்துடன் இன்று அதிகமானவர்கள் 18ஆம் திருத்தத்தை மறந்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தனக்கு தேவையான வகையில் அதிகாரங்களை குவித்துக்கொள்ளவே 18ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நான் பொது வேட்பாளராக வந்து, 18ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்த பாரியளவிலான அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். இதன்போது மைத்திரிபால சிறிசேனவின் 6 வருட ஜனாதிபதி பதவிக்காலத்தை 5ஆக குறைக்கவில்லை. மாறாக, ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருங்களில் இருந்து 5 வருடமாக குறைக்கப்பட வேண்டும் என்றே பாராளுமன்றத்தில் 19ஆம் திருத்தம் அனுமதிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றில் எனது சட்டத்தரணியாக ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்திருந்தார்.

அதன் பிரகாரமே உயர் நீதிமன்றம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும்போது 6 வருடத்தை 5ஆக குறைக்க முடியும். அதற்கு மேல் குறைப்பதாக இருந்தால், அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்போதுதான் அதிகமான சட்டத்தரணிகள் 6 வருட காலத்தை 7 வருடமாக அதிகரிப்பதாக இருந்தால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டு்ம் எனவும் ஆனால் 6 வருடத்தை 5ஆக குறைக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தேவையில்லை என தெரிவித்தனர்.

எனவே, ஜனாபதியின் பதவிக்காலம் தொடர்பி்ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 19ஆவது திருத்தமும் ஜனாதிபதியின் 6 வருட பதவிக்காலத்தை 5 வருடமாக குறைக்க வேண்டும் என்பதாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/189008

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

2 months 1 week ago
IMG_9151-scaled.jpg?resize=750,375 தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

தந்தை செல்வா கலையரங்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தேசிய மாநாடு இடம்பெற்றது

 

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர்.கணேசலிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சர்வேஸ்வரன் , யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் உள்ளிட்டவர்களுடன் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2024/1393039

பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள் – தீ மூட்டிக்கொண்ட தாய் பலி

2 months 1 week ago
dead-body-girl-1.webp?resize=750,375 பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள் –  தீ மூட்டிக்கொண்ட தாய் பலி.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார்.

 

இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றது. பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

அதன் பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

https://athavannews.com/2024/1392976

 

அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேற வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

2 months 1 week ago
190121_FOD_protest_Mullaitivu_NG_7.jpg?r அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேற வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

சுமந்திரன், ஸ்ரீதரன், மாவை, குகதாசன், டெலோ, புளொட் போன்ற பிரமுகர்கள் மற்றும் அமைப்புக்கள் தமிழ் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் குறிப்பிடுகையில்,

 

சம்பந்தனின் தமிழர் விரோத நிலைப்பாடும் கொள்கைகளும் அவரது மறைவுடன் இல்லாமல் போய்விட்டது. காணாமல் ஆக்கப்படட குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள் இந்த மாற்றங்களையும் புதிய தலைமையையும் வரவேற்கிறோம்.

சம்பந்தனின் கீழ் பணியாற்றிய நபர்களை தமிழர்கள் ஆதரிக்கவில்லை. சம்பந்தனின் தமிழர் விரோதக் கொள்கைகளை விமர்சிக்காத எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்று தாய்மார்கள் கோருகின்றனர்.

சம்பந்தனின் இறுதிப் பயணத்தின் போது மரியாதை இல்லாதது அவரது கொள்கைகளை தமிழர் நிராகரிப்பதையே காட்டுகிறது.

அரசியல் சலுகைகளைப் பெறுவதற்கான பயனற்ற முயற்சிகள், சிங்கள அரசாங்கங்களுடனான ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை இல்லாமை, போர்க்குற்றப் பொறுப்புக்கூறலுக்குப் போதிய வாதங்கள் இல்லாமை மற்றும் இடம்பெயர்ந்த தமிழர்கள் புறக்கணிப்பு ஆகியவற்றால் அவரது பதவிக்காலம் குறிக்கப்பட்டது.

சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்ற கொழும்பு தமிழ் அரசியல்வாதிகளை தமிழீழத்தில் இறக்குமதி செய்தமை மற்றும் எதிர்க்கட்சித் தலைமைக்கு சிங்கள அரசாங்கத்தை ஆதரித்தமை, சம்பந்தனுக்கு சிங்கள மாளிகை எடுப்பதற்கு தொடர்பான சுமந்திரன் சம்பந்தன் நாடாளுமன்ற விவாதம் ஆகியன தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தியது என தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

https://athavannews.com/2024/1392938

பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

2 months 1 week ago
sign-contracts-e1561620965475.jpg?resize பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.

தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்ப்பாணத்தில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளது

 

கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கும் வாக்களித்தும் எந்தவித பயனும் இல்லை என்று தமிழ்க் கட்சியினரும் சிவில் சமூகத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இதனால் தமிழ் மக்களின் நிலைமையையும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை வெளிப்படுத்தும் வகையிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் சிவில் சமூகத்தினராலும் அரசியல் கட்சிகளாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் இதற்குப் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் இதன் அடுத்த கட்டமாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், சிவில் சமூகத்தினருக்கும் இடையில் முதலாவதாக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

அதன்படி, இரு தரப்பினர்களுக்கும் இடையிலும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

https://athavannews.com/2024/1392917

பிரச்சினையில் இருந்து தப்பியோடத் தொிந்தவா்கள் தமிழ் அரசியல்வாதிகள் – வியாழேந்திரன்!

2 months 1 week ago
viyalendheren.jpg?resize=720,375&ssl=1 பிரச்சினையில் இருந்து தப்பியோடத் தொிந்தவா்கள் தமிழ் அரசியல்வாதிகள் – வியாழேந்திரன்!

நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பிரச்சினை வந்தால் எவ்வாறு தப்பியோடுவது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தமிழ் அரசியல்வாதிகள்தான் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மிக உயரமான வெளிச்ச வீடுகளில் ஒன்றாகவுள்ள மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன் மடு வெளிச்சவீடு  சுமார் 30 வருடங்கள் பின் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சருக்கு விடுக்கப்பட்ட  வேண்டுகோளுக்கு இணங்க, கடற்தொழில் அமைச்சு  மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாநகர சபையினால்  புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டது.

 

1913 ஆண்டு கட்டப்பட்ட 111வருடங்கள் பழமையான இந்த வெளிச்சவீடானது மீனவர்களின் கடல்கரை விளக்காகவும், வெளிநாட்டவர்களின் சுற்றுலா பிரதேச தளமாகவும் காணப்பட்டது.

சுமார் 7.5 மில்லியன் ரூபா  நிதியொதுக்கீட்டில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. மாநகர ஆணையாளர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற வெளிச்ச வீடு கையளிக்கும்  நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிவானந்தராஜா உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மீனவ சங்க  அமைப்புகளின்  பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2024/1392944

மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள்

2 months 1 week ago
மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள்

உலக வரலாற்றில் அரசியல், இராணுவத் தலைவர்கள் உயிரோடு இருக்கும் பொழுதோ அல்லது அவர்களின் மரணத்தின் பின்னரோ அவர்களுடைய பட்டங்கள், பதவிகள், கேடயங்கள், பரிசு பொருட்கள் என்பவை தண்டனையாக பறிக்கப்படுவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறன.

இத்தகைய தண்டனை என்பது மக்களின் விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்டு வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. எனினும் பெரும்பாலும் மக்களின் விருப்புக்கு உட்பட்டதாகவே இத்தகைய தண்டனைகள் நிகழ்ந்ததை வரலாறு எங்கிலும் காணமுடியும்.

அத்தகைய ஒரு தண்டனையாகவே தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாய் இருந்த இரா. சம்பந்தனின் மரணக்கிரியை மக்கள் புறக்கணித்ததை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உலக வரலாற்றில் மரணத்தின் பின் தண்டனையாக பதவி, பட்டங்கள் பறிக்கப்பட்டமைக்கு உதாரணமாக இங்கிலாந்தின் ஒலிவர் குரோம்வெல் , இத்தாலியின் முசோலினி போன்றவர்களை முதன்மை உதாரணங்களாக குறிப்பிடலாம். அவ்வாறே  இலங்கையில் பீல் மாஷல் சரத் பொன்சேக்காவுக்கு பதவி, பட்டங்கள் பறிக்கப்பட்டமையும் அதன் பின்னர் பதவி பட்டங்கள் மீள கொடுக்கப்பட்டு மேலும் பட்டங்கள் கொடுக்கப்பட்டமையும் இங்கே கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

இங்கிலாந்துக்கு வெற்றி

ஒலிவர் குரொம்வெல் (Oliver Cromwell 25 ஏப்ரல் 1599 – 3 செப்டம்பர் 1658) இங்கிலாந்தின பெருந்திறமை வாய்ந்த எழுச்சியூட்டும் வீரம்மிகு முன்னணி இராணுவத் தலைவராக விளங்கியவர்.

இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்த செயல் வீரர். அத்தகையவர் பின்னாளில் முதலாம் சால்ஸ் மன்னனின் கொலையுடன் (30 ஜனவரி 1649) முடியாட்சியை வீழ்த்தி குடியாட்சியின் பெயரால் 19 மே 1649ல் ஆட்சியை கைப்பற்றினார்.

மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள் | Tamil People Not Ready Forgive Even After Death

பின்னர் அவர் தன்னை மன்னனாக்கிப் புரட்சிக்குத் துரோகம் இழைத்தார். 1658 ல் அவர் இறந்ததன் பின்னர் மீண்டும் மன்னன் சால்ஸின் மகன் இரண்டாம் சால்ஸ் 1661இல் தம் வம்ச ஆட்சியை மீட்டெடுத்த பின்னர் 1662ல் குரோம்வெல் மீதான குற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் போது அவருடைய புதைக்கப்பட்ட உடல் தோண்டப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, டைபர்னில் உள்ள புகழ்பெற்ற தூக்கு மேடையில் அவருடைய எலும்புக்கூடு தூக்கிலிடப்பட்டது.

அத்தோடு நின்றுவிடாமல் அந்த எலும்புக்கூட்டின் தலை வெட்டப்பட்டது. மன்னரின் அதிகாரத்தைப் பற்றிய செய்தியை வெளியிடுவதற்கு , குரோம்வெல்லின் தலை வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தின் கூரையில் முப்பது ஆண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இங்கே மரணத்தின் பின்னும் ஒலிவர் குரொம்வெல்க்கு தண்டனை அளிக்கப்பட்டது மாத்திரமல்ல அவருடைய பட்டங்கள் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்ட ஒரு வரலாற்றை காணமுடிகிறது. 

உலக வரலாற்றில் இத்தாலியின் பசிஸ்ட் முசோலினி என்று அழைக்கப்படும் பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 – ஏப்ரல் 28, 1945) இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி நாட்டுக்கு (1922–1943) தலைமை வகித்தவர்.

ஏதேச்சதிகார ஆட்சி

இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏதேச்சதிகார ஆட்சியை நடத்தியவர். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், அறிஞர்களையும் திறமையானவர்களையும், தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். 

ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர்.

மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள் | Tamil People Not Ready Forgive Even After Death

இவரது உடலை மிலானுக்கு எடுத்துச் சென்ற இத்தாலிய மக்கள் அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் அவரது உடல் கயிற்றினால் பிணைக்கப்பட்டு மிகவும் அவமானகரமான முறையில் தலைகீழாகக் தொங்கவிடப்பட்டு பார்வைக்காக விட்டிருந்தார்கள்.

இங்கே ஒரு மக்கள் தலைவனுக்கு மக்கள் அளித்த தண்டனை மிகக் கொடூரமானது என்பதை இங்கு கவனத்திற் கொள்ளவேண்டும். 

அவ்வாறே இலங்கையின் இனப் பிரச்சனையின் உச்ச காலகட்டத்தில் பணியாற்றி தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எதிராக இறுதிப் போரில் இலங்கைப் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேக்கா பின்னாளில் ராஜபக்சக்களுக்கு எதிராக செயற்பட்டார்.

அரசதுரோகம் செய்தார் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளால் அவருடைய பட்டங்கள், பதவிகள், கேடயங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கட்டை காற்சட்டையுடன் உணவுக்காக வரிசையில் உணவு தட்டை ஏந்தி நின்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தமையும் தெரிந்ததே. 

ஆனால் அதே பொன்சேக்காவிற்கு பின்னாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வெற்றி பெற்று நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த ரணில் விக்ரமசிங்காவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், பௌத்த மகா சங்கமும் இணைந்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியதோடு, நாட்டை ஒன்றுபடுத்திய பெரும் யுத்தத்தில் படைகளுக்கு தலைமை தாங்கி  இலங்கை அரசை பாதுகாத்தார் என்ற அடிப்படையில் அவருக்கு பீல் மாஷல் பட்டத்தையும் வழங்கியது.

இங்கே உலகளாவிய வரலாற்றில் ஒரு ராணுவ தளபதிக்கு பீல் மாஷல் பட்டம் வழங்குவது என்பது பெரும் தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

உலக நியதி

அவ்வாறு வழங்கப்படுகின்ற போது அந்த இராணுவ தளபதி பல நாடுகளின் கூட்டுப்படைகளுக்கு தலைமை தாங்கினாலோ அல்லது எதிரி நாடு ஒன்றின் மீது படையெடுத்து வெற்றி பெற்றமைக்காகத்தான் வழங்கப்படும். இதுவே பொதுவான உலக இராணுவ நியதியாக இருந்து வந்துள்ளது.

ஆனால்  இலங்கையில் தனது சொந்த நாட்டின் ஓர் இனத்தின் ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்து பெறப்பட்ட வெற்றிக்காக சரத் பொன்சேக்காவுக்கு பில் மாஷல் பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒரு நாட்டினுடைய ராணுவ தளபதிக்கு பீல் மாஷல் பட்டம் வழங்குவது என்பது அந்த நாட்டினுடைய தேசிய கௌரவமாகவும், கீர்த்தியாகவும் கருதப்படும்.

மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள் | Tamil People Not Ready Forgive Even After Death

அவ்வாறு வழங்குகின்ற பட்டத்துக்கு அந்த நாட்டினுடைய நாடாளுமன்றத்தின் அனைவரும் ஒப்புதல் அளிக்கின்ற அல்லது ஆதரவளிக்கின்ற பட்சத்திலேயே வழங்கப்படுவதுதான் உலக நியதியாகவும் இருந்திருக்கிறது.

இந்த அடிப்படையில்  இலங்கையில் பீல்மாஷல் பட்டம் சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்படுகின்றபோது இலங்கையின் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா சம்பந்தன் அவர்களே இருந்தார். சம்பந்தன் தலைமையில் இயங்கிய அதுவும் எதிர்க் கட்சி தலைமை என்ற அந்தஸ்தில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பீல் மாஷல் பட்டம் வழங்குவதற்கு எதிராக எதையும் செய்யாமல் பெரிதும் ஆதரவாகச் சசெயற்பட்டது.

குறைந்தபட்ச எதிர்ப்பையாவது காட்டி நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறவில்லை என்பதன் மூலம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை பற்றி அவர்கள் எந்த கரிசனையும் இன்றி இருந்திருக்கிறார்கள்.

அது மாத்திரமல்ல தங்கள் சொந்த மக்களின் அழிவைப் பற்றி அவர்கள் எந்த கவலையும் அற்று  இலங்கை இனவழிப்பு அரசாங்கத்துக்கு அனுசரணையாகவும், ஆதரவாகவும்; கூட்டுப் பங்காளிகளாகவும் இருந்தார்கள் என்றுதான் தமிழ் மக்களால் பார்க்கப்பட்டது.

தீர்வு தரப்போவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை வளங்கி அரசாங்கத்தை அமைக்கு காரணமான சம்பந்தன் தீர்வைப் பெறாதது மட்டுமல்ல அதற்கப்பால் இனப்படுகொலைத் தளபதிக்கு பீல்ட் மாஷல் பட்டம் வளங்க உறுதுணையாய் நின்றார். தமிழ் மக்களின் கடந்த நூறு ஆண்டு அரசியல் வரலாற்றில் ராமநாதன், பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் இந்த அரசியல் தலைவர்களின் வரிசையில் கடந்த 20 ஆண்டுகள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய மிதவாத தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு என்றொரு பங்கும், பாத்திரமும், பொறுப்பும், வரலாற்று கடமையும் இருந்தது.

உரிய பொறுப்பு

ஆனால் தனது மக்களுக்கு உரிய பொறுப்பையும் கடமையையும் செய்யத் தவறிய தலைவராகவே சம்பந்தன் இறக்கும்போது தமிழ் மக்களால் கருதப்பட்டார்.

அது மாத்திரமல்ல தான் தலைமை தாங்கி நிர்வாகித்த கட்சியின் சிதைவையும் உடைவையும் அவருடைய அந்திமக் காலத்தில் தன் கண்களால் பார்த்த வாறே அவர் மரணத்தையும் தழுவினார் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும். இரா சம்பந்தன் அவர்களுடைய தலைமைத்துவம் என்பது தமிழ் மக்களுக்கு எந்த ஒரு வெற்றியையும் பெற்றுத் தரவில்லை.

மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள் | Tamil People Not Ready Forgive Even After Death

அவர் வாழும்போதும் தோல்வியடைந்த தலைவராக அனைத்து சிங்களத் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்ட தலைவராக அனைத்து சிங்கள தலைவர்களிடமும் ஏமாந்த தலைவராக தமிழ் மக்களால் பார்க்கப்பட்டார் . இந்த நிலையில் அவர் தலைமை தாங்கிய கட்சி இரண்டாக உடைந்து சண்டையிடும் நிலைக்கு இவரே பொறுப்பானவர் என்ற கருத்தும் தமிழ் மக்களிடம் உண்டு.

இந்த நிலையிற்தான் அவருடைய மரணம் நிகழ்ந்தது. அவருடைய மரணம் நிகழ்ந்து பின்னர் இந்திய அரசியல் தரப்பினர் இரங்கல் செய்தி வெளியிடுகின்ற போது தமிழ் தேசிய மக்களின் தலைவர் என்று குறிப்பிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தனர். 

ஆனால் இவருடைய தமிழரசு கட்சியின் பேச்சாளர் தன்னுடைய குறிப்பில் தமிழ் சிறுபான்மை மக்களின் தலைவர் என்று குறிப்பிட்டதிலிருந்தே இவருடைய நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டிருந்தனர். அதேநேரத்தில் சம்பந்தன் அவருடைய மரணத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் இருந்துமடிக்கணினி அவருக்கு எதிரான காட்டமான கருத்துக்களே வெளிவந்தன.

பொதுவாக தமிழர் பண்பாட்டில் ஒருவர் மரணம் அடைந்தால் அவருடைய மரணத்தின் பின்னர் அவருடைய நல்ல விடயங்களை மாத்திரமே பேசுகின்ற நினைவுபடுத்துகின்ற ஒரு பண்பு தமிழ் மக்களிடம் உண்டு.

ஒருவருடைய மரணத்தின் பின்னர் அவருடைய தவறான அல்லது பாதகமான எந்த ஒரு பண்பையும் தமிழ் மக்கள் பேசுவதில்லை.

மரணத்தின் பின் இறைவனடி சேர்ந்தார் காலமானார் என இழிவுபடுத்தாமல் மேன்மைப்படுத்துகின்ற பண்பையே கொண்டிருக்கின்றனர். 

இதுவே தமிழ் மக்களின் உயரிய விழுமியமாக இருந்து வருகின்றது. ஆனாலும் "உரைசார் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுதலும், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்ற சிலப்பதிகாரத்தின் சொல்லோவியத்தில் வருகின்ற அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுவது மாத்திரமல்ல அரசியல் பிழைத்தோர்க்கு மரணமே தண்டனை மாத்திரமல்ல உயிரற்ற உடலுக்கும் தண்டனை வழங்கப்படும் என்பதை சம்பந்தரின் மரண ஊர்வலம் வழிகாட்டி நிற்கிறது.

இங்கே மரணம் அடைந்த சம்பந்தன் அவர்களை இகழ்வதோ தூற்றுவதோ இப்பந்தியின் நோக்கம் அல்ல. ஆனால் தமிழ் சமூகத்தின் நிலை என்ன என்பதை வெளிக்காட்டுவதே இப்பந்தியின் நோக்கமாகிறது. தமிழ் தலைவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதே இதன் கருவாகிறது. மக்களின் மனங்களை வெல்லாதவர்கள் மக்கள் தலைவர்களாக முடியாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைகிறது.

சம்பந்தனுடைய உடல் அஞ்சலி

இந்த நிலையிற்தான் சம்பந்தனுடைய உடல் இறுதி அஞ்சலிக்காக கொழும்பிலிருந்து வவுவுனியா, யாழ்ப்பாணம், திருவோணமலை வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது அஞ்சலி செலுத்திய ஒட்டுமொத்த மக்களின் தொகை 3500-ஐ தாண்டவில்லை என்பதிலிருந்து மக்கள் இவருக்கு கொடுத்த கௌரவத்தையும் அல்லது முக்கியத்துவத்தை உணர முடிகிறது.

யாழ்ப்பாணத்திற்கு அவர் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது காண்பிக்கப்பட்ட புகைப்படங்கள் ராணுவத்தினரால் காவி செல்லப்படும் காட்சி மக்களுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மைதான். அதனால்த்தான் என்னவோ அரசு தரப்பில் இருந்து சம்பந்தனுடைய இறுதிக்கிரியை அரச மரியாதையுடன் செய்வதற்கு அரசு தரப்பு கேட்டிருந்தும் சம்பந்தனுடைய குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டனர் போலும்.

மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள் | Tamil People Not Ready Forgive Even After Death

எனினும் இறுதி திரைகளின் போது திருகோணமலைக்கான போக்குவரத்திற்கு மாகாண ஆளுநர் விசேட போக்குவரத்து ஒழுங்கினை செய்திருந்தார் என்பதும் இங்கே முக்கியமானது.

அஞ்சலிக்காக உடல் யாழ் நகரத்த கூடாக செல்வநாயகம் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது யாழ் நகரத்துக்குள் விளம்பர சேவையில் "மன்மதராசா மன்மத ராசா" என்ற குத்தாட்டப் பாடல் ஒளிபரப்பாகியது தற்செயலானதா? அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதும் கேள்விக்குரியாது.

அதே நேரத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்ட மண்டபத்தின் அதிலிருந்து பாடசாலைகளின் இரைச்சலானது மண்டபத்தில் இருந்தோருக்கு பெரும் கவனக் கலைப்பானாகவும் இருந்ததை பார்க்க முடிந்தது.

மேலும் அஞ்சலிக்காக வந்தவர்களில் பெரும்பான்மையினர்  இலங்கை அரசாங்க இயந்திரத்தின் ஊழியர்களாக அதாவது அரச இயந்திரத்தின் உதிரிப் பாகங்களாக இருந்ததையே அவதானிக்க முடிந்துள்ளது.

அதுமட்டுமல்ல யாழ் நகரத்தில் இரண்டு இடங்களில் மாத்திரமே நினைவஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும் ஆனால் ஐந்து மாதங்களுக்கு முன்னர் மரணம் அடைந்த சாந்தனின் உடல் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டி எங்கும் நினைவஞ்சலி பதாகைகள் ஆயிரத்துக்கு மேல் கட்டப்பட்டதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இங்கே சாந்தனுக்கு அவ்வளவு தூரம் திரண்டு மக்கள் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். உலகின் பார்வையில் சாந்தன் ஒரு கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்ற மனிதர். ஆனால் சம்பந்தன் உலகின் பார்வையில் இலங்கைத் தமிழ் ராஜதந்திரி.

ஆனால் தமிழர் தேசத்தில் இந்த இருவரிலும் சாந்தனுக்கு கிடைத்த மிகப்பெரிய அனுதாபமும் அஞ்சலியில் ஒரு பத்து விகிதம்தானும் தமிழரசு கட்சியினுடைய மூத்த தலைவர் சம்பந்தனுக்கு கிடைக்கவில்லை என்றால் இங்கு ஏதோ தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக சம்பந்தன் நடந்து கொண்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழரசு கட்சி

தமிழ் மக்கள் தமிழரசு கட்சியின் செயற்பாடுகளை வெறுப்புடனையே பார்த்திருக்கிறார்கள் என்பதும், அதற்கு அவர்கள் எதிராக பேசாவிட்டாலும் தமது கோபத்தை பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விதத்தில் வெளிப்படுத்த தவற மாட்டார்கள்.

தமிழ் மக்களிடத்தில் நாட்டுவழக்கு கூற்று ஒன்று உண்டு அதை "வைச்சுச் செய்வது அல்லது வைச்சுச் சாதிப்பது" என்பார்கள். அதுதான் மரணத்தின் பின்னும் தமிழ் மக்கள் மன்னிக்க தயார் இல்லை என்ற செய்தி. 

நேற்று நிகழ்ந்த சம்பந்தன் அவர்களுக்கான தமிழ் மக்களின் "வைச்சு செய்தல்" என்பது எஞ்சி இருக்கும் மிதவாத தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்பதிற் சந்தேகமில்லை.

 
 

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 20 July, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. 

பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் - ஜனாதிபதி

2 months 1 week ago
பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும்; பல்கலை கட்டமைப்புக்குள் அச்சுறுத்தும் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும்! - ஜனாதிபதி
20 JUL, 2024 | 06:24 PM
image
 

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு புனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை இன்று (20) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

WhatsApp_Image_2024-07-20_at_5.36.15_PM_

பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து பல்கலைக்கழகத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

இதன்போது, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இலங்கையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மேலும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வையொட்டி நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.

WhatsApp_Image_2024-07-20_at_5.36.11_PM.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

''1985இல் ஹிஸ்புல்லாஹ்வை நான் முதன் முதலில் இளைஞர் சேவை மன்றத்தில் சந்தித்தேன். அவர் இன்று இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பித்துள்ளார். இந்த பல்கலைக்கழகம் நமது பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான அறிவைக்கொண்ட மக்களே நமது நாட்டிற்கு அவசியமாகும். அதனால் தான் இந்தப் பல்கலைக்கழகம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது.

நமது நாட்டின் பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிகவும் நன்றி. இப்பல்கலைக்கழகத்துடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் அல்ல. இந்நிறுவனத்திற்கும் கிடைக்கும் நிதி சேமிக்கப்பட்டு, குறித்த நிதி இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகில் இலாபம் ஈட்டாத தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன.

ஹார்வர்ட், ஒக்ஸ்போட், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களை இலாப நோக்கமற்ற பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கலாம். கொத்தலாவல பல்கலைக்கழகம், NSBM பசுமைப் பல்கலைக்கழகம், SLIIT நிறுவனம் போன்றவையும் இலாப நோக்கமற்றவை.

சிலர் இவற்றை பட்டங்களை விற்பனை செய்யும் கடைகள் என்று கூறினர். அப்படியானால், கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட், ஒக்ஸ்போட் பல்கலைகழகங்களும் பட்டங்களை விற்கும் கடைகளா? அந்த மனப்பான்மையால்தான் இந்நாட்டின் அரச பல்கலைக்கழகங்கள் வீழ்ச்சியுற்று வருகின்றன. எனினும், இவற்றை நாம் மேலும் மேம்படுத்த வேண்டும். 

அன்று இருந்தது போன்று இன்று பல்கலைக்கழகங்கள் இல்லை. இன்று பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள் ஒரு சர்வாதிகாரத்தைப் போல மாணவர்களைக் கையாளுகின்றன. இத்தகைய சூழலில் கற்பிக்கும் விரிவுரையாளர்களைப் பாராட்டுகிறேன்.

பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை பட்டங்களை விற்கும் கடைகள் என்ற கேவலமான பேச்சுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது. பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி கற்கும் வகையில் இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும். நாளை முதல் சமூக வலைதளங்களில் இதனைச் சொல்லி என்னைக் குறை கூறலாம். பல்கலைக்கழகத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் இருந்து அச்சுறுத்தும் அரசியலை அகற்ற வேண்டும். பல்கலைக்கழகத்திற்குள் தங்களுக்கு விருப்பமான கற்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சீர்குலையாமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற வேண்டும்.

இப்பல்கலைக்கழகம் அபிவிருத்தியடைந்தால் ஏனைய பல்கலைக்கழக கட்டமைப்புகளும் அபிவிருத்தியடையும் என்று எதிர்பார்க்கின்றேன். மேலும் இது போன்ற பல பல்கலைக்கழகங்கள் இன்னும் உருவாகும் என்று எதிர்பார்க்கின்றேன்.

இந்நாட்டில் உயர்கல்விக்காக விசேட பணியை ஆற்றிய லலித் அத்துலத்முதலி பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உட்பட நான்கு கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மட்டக்களப்பு சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

''இந்த பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க வந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதனை நிர்மாணிக்க பல இடங்களை தேடினோம். இறுதியில் குறைந்த வருமானம் ஈட்டுவோர் அதிகளவில் வாழும் ஊவா, வட மத்திய, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க தீர்மானித்தோம். இந்த பல்கலைக்கழகம் மூன்று மாகாணங்களினதும் மக்களுக்கு பயனளிக்கும் என்று கருதுகிறேன்.

பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் 1,200 மாணவர்கள் தற்போதும் இங்கு கல்வி பயில்கின்றனர். இது ஒரு இனத்திற்காகவோ மதத்துக்காகவோ தனியாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்ல. அனைத்து இன, மத மாணவர்களுக்கும் இங்கு இடமுண்டு.

நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அன்று எமது நாடு நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பியதால் நாம் இலங்கையர் என்று உலகத்திற்கு பெருமிதமாக சொல்லிக்கொள்ள முடிகிறது.'' என்று தெரிவித்தார்.

சர்வமதத் தலைவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ், இராஜாங்க அமைச்சர்களான பிரமித்த பண்டார தென்னகோன், சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியூதீன், ரவூப் ஹக்கீம், அலி சாஹிர் மவூலானா, பைசால் காசிம், ஜகத் சமரவிக்ரம, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் லால் ரத்னசேகர, பிரதி உபவேந்தர் பேராசிரியர் கே.முபாரக், பதிவாளர் பீ.டீ.ஏ.ஹசன், விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹிராஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களுடன் சவூதி இராஜதந்திரிகளும், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெருந்திரளான பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 

WhatsApp_Image_2024-07-20_at_5.36.14_PM.

WhatsApp_Image_2024-07-20_at_5.36.16_PM.

WhatsApp_Image_2024-07-20_at_5.36.15_PM.

WhatsApp_Image_2024-07-20_at_5.36.13_PM.

WhatsApp_Image_2024-07-20_at_5.36.09_PM.

 

WhatsApp_Image_2024-07-20_at_5.36.17_PM.WhatsApp_Image_2024-07-20_at_5.36.10_PM.

WhatsApp_Image_2024-07-20_at_5.36.09_PM.

https://www.virakesari.lk/article/188965

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நகைகள், பணம் திருட்டு!

2 months 1 week ago
20 JUL, 2024 | 05:48 PM
image
 

யாழ்ப்பாணம் மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  

வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் கடமை நேரத்தில், அவர்களின் உடமைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக அறையொன்றினுள் 09 பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன.  

வழமை போன்று நேற்றைய தினமும் (19) பணியாளர்கள் தமது உடமைகள் மற்றும் நகைகளை பெட்டகத்தினுள் வைத்து பூட்டிவிட்டு, கடமைகளுக்கு சென்றிருந்தனர்.  

பணியாளர்கள் கடமை முடிந்து வந்து பார்த்தபோது, பெட்டகங்கள் உடைக்கப்பட்டு, பணியாளர்களின் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.  

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பணியாளர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/188961

நாளை தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு

2 months 1 week ago
எமது கட்சியை இளையோரிடம் கையளிக்கவுள்ளேன்; சி.வி விக்னேஸ்வரன்!
20 JUL, 2024 | 07:23 PM
image
 

எமது கட்சி இளையோரின் கட்சி. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு ஒரு செவிலி தாய் எவ்வாறு பார்த்து கொள்வாரோ அதே போல் இந்த கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று  சனிக்கிழமை (20)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  

மேலும் தெரிவிக்கையில், 

எமது கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் மாலை 03 மணிக்கு நடைபெறவுள்ளது.  

தமிழ் தேசியத்தில் எம்முடன் இணைந்து செயற்பட கூடியவறான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். அவருடன் சிறப்பு விருந்தினராக அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரி கணேசலிங்கமும் கலந்து கொள்ளவுள்ளார்.  

எமது மாநாட்டிற்கு அனைத்து தரப்பினரும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம். 

எங்களுடைய கட்சி இதுவரை பல கஷ்டங்களை எதிர் கொண்டுஇ தற்போது நல்லதொரு நிலைக்கு வந்துள்ளது. எமது கட்சியை பதிவு செய்ய விட கூடாது என்று கூட பலர் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.அது கூட எமக்கு சில காலங்களுக்கு முன்னரே தெரிய வந்துள்ளது.  

இன்று எமது கட்சி இன்று பதிவு செய்யப்பட்ட பல இளைர்களை தன்னகத்தே கொண்ட கட்சியாக காணப்படுகிறது.  

நாங்கள் இதுவரையில் என்ன செய்தோம் என கேட்க கூடும். பல நாடுகளின் உயர்ஸ்தானிகர் இ தூதுவர்கள் என பல்வேறு பட்ட தரப்பினர்களுடன்  எமது பிரச்சனைகள் தொடர்பில் பேசி இருக்கிறோம். எமது கருத்துக்களை அவர்கள் உன்னிப்பாக செவிமடுத்து சிலதை செய்துள்ளார்கள்.  

இன்று உலக நாடுகள் மத்தியில் இலங்கைக்கான ஆதரவு குறைந்துள்ளது. பல நாடுகள் இலங்கைக்கான தமது ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகியுளள்னர்  

தமிழர்களின் நிலங்களை திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பில் பல தரப்பிடமும் எடுத்து கூறி வெளிக்கொணர்ந்து உள்ளோம். 

அது மட்டுமின்றி எங்களுடைய பிரச்சனைகளை பற்றி சிங்களத்தில் பல விடயங்களை கூறி வருகின்றோம். சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து சிங்கள மொழியில் எடுத்து கூறியுள்ளோம். இன்னமும் கூறி வருகிறோம்.  

அதேவேளை எமது மக்களின் வாழ்வாதரத்தையும் மேம்படுத்தி வருகிறோம். அதற்கான உதவிகளையும் செய்து வருகின்றோம்.   

எமது கட்சி இளையோரின் கட்சியாகும். அப்ப நீங்கள் ஏன்  தலைவாராக இருக்கிறீர்கள் என கேட்கலாம். குழந்தையை தாயொருவர் பிரசவிப்பதற்கு முன்னர் அந்த குழந்தை ஆரோக்கியமான பிறக்க வேண்டும் என்பதற்காக செவிலி தாயொருவர் கூட இருந்து அந்த தாயை பார்த்துக்கொள்வார்.  

அதேபோலவே இந்த கட்சியை நல்ல நிலையில் வளர்த்து இளையோரிடம் கையளித்து விட்டு சம்பந்தன் போல போய் சேர்ந்து விடுவேன் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/188963

சாவகர் சேரியில் உலகத்தர சித்திரகூடம்

2 months 1 week ago
Yogamani-Gallery-5-1400x600.jpeg
 
சாவகர் சேரியில் உலகத்தர சித்திரகூடம்
 
 
வலையில் பிடித்தது
ஜெகன் அருளையா

யாழ்ப்பாணத்தில் வதியும் நண்பர் ஜெகன் அருளையாவின் ஆங்கில முகநூற் பதிவொன்றின் தமிழாக்கம் இது. (நன்றி ஜெகன்)

வடக்கிற்கு வரும் உல்லாசப் பயணிகள் வெறுமனே கோட்டை, நல்லூர், ஐஸ் கிரீம் இத்தியாதிகளுடன் திரும்பி விடுவது சங்கடமாக இருக்கிறது. சிரமப்பட்டுத் தேடினால் இன்னும் பல விருந்துகள் புலன்களை அடையக் காத்துக்கொண்டிருக்கின்றன.

 

சாவகச்சேரியில் ஒரு சித்திரகூடம் இருக்கிறது. இதற்கு நான் முன்னரும் சென்றிருக்கிறேன். ரி.பி. ஹண்ட் ஆர்ட் கலரி (Tp Hunt Artgallery) என்ற பெயரில் இயங்கும் இச்சித்திரகூடத்தின் ஸ்தாபகரை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன். யோகமணி என்ற நடுப்பெயரில் அழைக்கப்ப்டும் இவாஞ்செலீன் அலகரட்ணம் அமெரிக்காவில் வாழ்பவர் எனினும் வருடத்தின் கணிசமான காலத்தை இங்குதான் செலவழிக்கிறார். அவருடைய பூட்டனார் அருட்தந்தை தோமஸ் பீற்றர் ஹண்ட் அவர்களுடைய நினைவாக இச்சித்திரகூடத்தை சாவகச்சேரியில் நிறுவியிருக்கிறார். இங்கு சித்திரகூடம் (gallery), வரையகம் (studio), ஓவியப் பள்ளி ( art school) ஆகியன இயங்குகின்றன.

யோகமணி தனது முயற்சியால் கணிசமான ஓவியங்களைச் சேகரித்து காட்சிப்படுத்தி வருகிறார். இந்நிலையம் செயற்படுவதற்கான செலவிலும் பங்கேற்கிறார். நாடெங்குமுள்ள ஓவியர்கள் தமது ஓவியங்களை இக்கூடத்தில் காட்சிப்படுத்தி வருகிறார்கள். திறமையுள்ளவர்களும் திறமையற்றவர்களும், இளையவர்களும், முதியவர்களும் இங்கு வந்து சில் மணித்தியாலங்களை மகிழ்ச்சியுடன் கழிக்கிறார்கள்.

இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சித்திரங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. டொலரிலும் பவுண்டிலும் செலவு செய்யும் புலம் பெயர் தமிழருக்கு இவ்வோவியங்கள் நியாயமான விலையுள்ளதாகவே தெரிகிறது. கூடத்தின் பராமரிப்புக்கென அறவிடப்படும் 5% த்தைத் தவிர எஞ்சியது ஓவியர்களுக்கே போகிறது. நான் அதிகம் பேசவில்லை, மீதியை ஓவியங்களே பேசட்டும். இவற்றை நீங்கள் இனிமேல் அங்கு பார்க்க முடியாது. அது என்வீட்டுச் சுவர்களை இப்போது அலங்கரிக்கின்றன.

Yogamani-Gallery-1-141x250.jpeg Yogamani-Gallery-2-141x250.jpeg Yogamani-Gallery-3-141x250.jpeg Yogamani-Gallery-4-141x250.jpeg Yogamani-Gallery-5-444x250.jpeg Yogamani-Gallery-6-444x250.jpeg Yogamani-Gallery-7-141x250.jpeg Yogamani-Gallery-8-444x250.jpeg Yogamani-Gallery-9-444x250.jpeg

 

இச்சித்திரகூடத்தைத் தரிசிக்க விரும்புபவர்கள் நிலையத்துடன் தொடர்புகொண்டு முற்கூட்டியே பதிவுசெய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இருக்குமிடம் கூகிள் இடம் காட்டி: https://maps.app.goo.gl/k2reXaUCm9pRbmnDA

விலாசம்: No 27, Church Road, Chavakachcheri.

தொ.பே.::+94 74 313 6077 / +94 77 335 0281

மின்னஞ்சல்: huntartgallery18@gmail.com

https://marumoli.com/சாவகர்-சேரியில்-உலகத்தர/#google_vignette

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் நாட்டுக்கு கிடைக்கும் நிதி கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வழங்கப்படும்

2 months 1 week ago
ranil-1-300x200.jpg

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நிதியைக் கொண்டு எதிர்காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிக நிதியை வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

காலி – வலஹன்துவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் புதிய சுகாதார விஞ்ஞான பீடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று(19) கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்கா போன்ற பெரிய பல்கலைக்கழகங்கள் 24 மணி நேரமும் இத்தகைய கட்டிடங்களால் பயனடைகின்றன. அரசுப் பணம் கல்விக்காகப் பயன்படுத்தப்படும்போது, அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகுப்புகள் சீர்குலைந்தால் உங்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் அந்த கூட்டுதாபனத்துக்காக 700 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக இங்கு குறிப்பிடப்பட்டது. ஆனால் அந்த 700 பில்லியன் ரூபாவை பத்து மடங்காக பெருக்கிப் பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய தொகையை செலவழித்ததன் விளைவாக மூன்று அரசாங்கங்களின் கீழ் இதனை ஈடுசெய்ய கடன் பெற நேரிட்டது. இதனால், நாட்டின் கடன் தொகை அதிகரித்தது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, முதலில் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது கடினமான பணியாகும். ஆனாலும் அதனை செய்ய வேண்டியிருந்தது. அதற்குப் பதிலாக, புதிய முறையில் பணத்தை தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்பட்டது. ஒவ்வொரு அரசாங்க நிறுவனமும் தங்களது சொந்த செலவுக்கான நிதியை ஈட்டிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினோம்.

இந்த நிலை அனைத்து துறைகளையும் பாதித்தது. என்னை திட்டித் தீர்த்தனர். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய அனுமதிப்பதா அல்லது அவதூறுகளை ஏற்றுக்கொள்வதா என்பதை நான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்தப் பொறுப்பில் இருந்து விலக முடியாத நிலைமை இருந்தது. அந்த செயற்பாடுகளுக்கு அனைத்து அமைச்சர்களும் ஆதரவு வழங்கினர்.

அப்போது, அரச நிறுவன மறுசீரமைப்பு திட்டத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று நாட்டின் மின் மற்றும் எரிபொருள் கட்டணங்கள் உலக சந்தையின் விலைக்கு அமைவாக உள்ளன. மேலும், ஏனைய கூட்டுத்தாபனங்களுக்கும் பணம் வழங்குவதை நிறுத்தினர். நாங்கள் தற்போது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், அந்த கட்டண நடவடிக்கைகளில் இருந்து விடுபட அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதனால் எஞ்சும் தொகையை நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக பயன்படுத்த முடியும்.

இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தும் போது பல விமர்சனங்கள் எழுந்தன. அப்போது, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை நமது தேசிய சொத்தாக கருதுவதா அல்லது இளைஞர்களை தேசிய சொத்தாக கருதுவதா என்ற கேள்வி எழுந்தது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களைப் பாதுகாப்பதா அல்லது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பணம் கொடுப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த புதிய வேலைத் திட்டங்கள் மூலம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்றுபடுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/306496

யாழில் குழந்தையை கைவிட்டு காதலனுடன் சென்ற குடும்ப பெண்; பெண்ணும் காதலனும் விளக்கமறியலில்

2 months 1 week ago
யாழில் குழந்தையை கைவிட்டு காதலுடன் சென்ற குடும்ப பெண்; பெண்ணும் காதலனும் விளக்கமறியலில்

Published By: DIGITAL DESK 3    20 JUL, 2024 | 12:39 PM

image
 

தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு சென்று இருந்தார். 

இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும், அவரது காதலனான இளைஞனையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற விசாரணைகளை அடுத்து இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/188931

 

Checked
Sat, 09/28/2024 - 14:18
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr