ஊர்ப்புதினம்

யாழ் வல்வெட்டித்துறை முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடை!

3 months 1 week ago
யாழ் வல்வெட்டித்துறை முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடை!
adminMarch 7, 2024
 

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும் இன்றியும் இதுவரை பதிவு செய்யாமலும் இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வல்வை முதியோர் இல்லம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் ‘அபயம்’ 24 மணித்தியால குறைகேள் வலையமைப்பிற்கு முறைப்பாடு கிடைத்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கள விஜய அறிக்கை ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது.

விடயங்களை ஆராய்ந்த வடக்கு மாகாண ஆளுநர் குறித்த முதியோர் இல்லம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
 

https://globaltamilnews.net/2024/200991/

 

யாழ் தையிட்டி விகாரை குறித்து மீண்டும் சர்ச்சை!

3 months 1 week ago
யாழ் தையிட்டி விகாரை குறித்து மீண்டும் சர்ச்சை!
adminMarch 7, 2024
Thaiyiddi-Viharai.jpg

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த விடயத்துக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தையிட்டி விகாரையுள்ள 8.04 ஏக்கர் காணியை சட்டப்படி வழங்குமாறு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவுக்கு இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள பகுதியில் 21 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது.

சிங்களவர்கள் வாழ்ந்த காணியில் தான் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறும் இராணுவம், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு சட்டப்படி காணி அனுமதியைக் கோரியுள்ளது.

தையிட்டி விகாரை தொடர்பில் அண்மையில் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக்குழுவில் ஆராயப்பட்டபோது கடும் எதிர்ப்பு காட்டப்பட்டநிலையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இரண்டு மணி நேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ , தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், காணி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், நில அளவை நாயகம், பௌத்த பிக்குகள், சட்டத்தரணிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தையிட்டி விகாரை அமைந்துள்ள பிரதேசமான 8 ஏக்கர் நிலமும் விகாரைக்குரிய பிரதேசம், அங்கே 1960 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்த 406 சிங்கள மக்களுக்கு அது சொந்தமானது, இருந்தபோதும் சில தமிழ் மக்களும் உரிமை கோரு கின்றனர், விகாரை உள்ள 8 ஏக்கர் நிலத்தையும் சிங்கள மக்களோ அல்லது தமிழ் மக்களோ உரிமை கோர முடியாது, அது முழுமையாக விகாரைக்குரியது, அங்கே நிலம் இழக் கப்பட்டதாக எவராவது நிரூபணம் செய்தால் அதற்கு மாற்றுக் காணி வழங்கலாம் என பௌத்த சாசன அமைச்சு சார்பில் கலந்துகொண்டவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், தையிட்டியில் விகாரை அமைத்துள்ள விகாரையின் பௌத்த பிக்கு 2017 ஆம் ஆண்டு தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு எழுத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தனது 20 பரப்பு நிலத்தை அடையாளம் காட்டுமாறு கோரியிருந்தார்.

அதாவது 1956ஆம் ஆண்டு விகாரையின் பெயரில் ஒருவர் அனபளிப்பாக வழங்கிய உறுதி பௌத்த பிக்குவிடம் உள்ளது. அது அவர்களிற்கு உரித்தான நிலம் என நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.

இதே நேரம் 2022 ஆம் ஆண்டு அப் பகுதி இராணுவ அதிகாரி விகாரை அமைந்துள்ள 8 ஏக்கர் நிலத்தையும் விகாரையின் பெயரில் ஆவணத்தை கோரி மீண்டும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திறகு விண்ணப்பித்துள்ளார்.

அவ்வாறானால் இதற்கான அளவீடு யாரால், யாரினுடைய அனுமதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப் பட்டது? தையிட்டியில் விகாரைக்குரிய 1.45 ஏக்கர் நிலம் மட்டுமே. 1956 ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம் மட்டுமே விகாரைக்குரியது.

இருந்தபோதும் அங்கே எந்தக் காலத்திலும் விகாரை இருந்த ஆவணங்களும் கிடையாது. இவை தவிர 13 தமிழ் குடும்பங்களிற்கு உரித்தான 6.54 ஏக்கர் நிலத்தையும் அபகரித்தே தற்போது 8 ஏக்கரில் விகாரை உள்ளது.

அந்த 6.54 ஏக்கர் நிலத்தை நீங்கள் எவ்வாறு சுவீகரிக்க முடியும்? அது முழுமையான சட்ட மீறல் .அந்த 6.54 ஏக்கர் நிலமும் நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட இராணுவ அதிகாரி, அந்த நிலம் இராணுவ நில அளவையாளர்களால் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் வழங்கப்பட்டது எனப் பதிலளித்தபோது பெரும் சர்ச்சை ஏறபட்டது.

மக்களிற்குச் சொந்தமான நிலத்தை இராணுவம் மூலம் அடாத்தாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அந்த நிலத்தை இராணுவமே அளவீடு செய்து, சுவீகரித்துத் தருமாறு கோருவது எந்தச் சட்ட ஏற்பாட்டில் உள்ளது? மக்களின் நிலத்தை அளவீடு செய்ய இராணுவத்திற்கு உரிமை கிடையாது.

இவர்கள் யார் அதனை அளப்பதற்கு? – என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வேள்விகளை எழுப்பினார்.

அவ்வாறானால் அதனை நில அளவைத் திணைக்களம் அளவீடு செய்து சமர்ப்பியுங்கள் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்தார்.

மக்களின் நிலத்தை அவர்களின் சம்மதம் அல்லது பகிரங்க அறிவித்தல் இன்றி அளவீடு செய்ய முடியாது என நில அளவைத் திணைக்கள நாயகத்தால் பதிலளிக்கப்பட்டது.

இவற்றை ஆராய்ந்த குழு எழுத்தில் பதிலளிப்பதாக தெரிவித்து முடிவுகள் இன்றி கூட்டத்தை ஒத்திவைத்தது.
 

 

https://globaltamilnews.net/2024/200984/

ஹவ்தி தாக்குதலுக்குள்ளான கப்பலில் சொறீலங்கா கூலிப்படை.

3 months 1 week ago

மத்திய கிழக்கி ஏமன்.. ஏடன் முனைக்கு அருகில் இன்று நடந்த கடல்வழி ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான பாபேடோஸ் நாட்டுக்கொடியுடைய  True Confidence கப்பலில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கப்பலில் தீப்பிடித்துள்ளது.

அதில் 20 கப்பல் சிற்பந்திகளும் 3 ஆயுதம் தாங்கிய காவலர்களும் இருந்துள்ளனர்.

அதில் 3 ஆயுதம் தாங்கிய காவலர்களில் இருவர் இலங்கையை சேர்ந்திருக்கிறார்கள். மற்றவர் நோபாளம்.

கப்பல் சிற்பந்திகளில் 1 இந்தியர், 4 வியட்நாமியர்கள் மற்றும் 15 பிலிப்பினோ காரர்கள் இருந்துள்ளனர். 

தாக்குதலுக்குள்ளான கப்பலில் தொடர் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அருகிருந்த கப்பல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கப்பலுக்கு அமெரிக்க கடற்படை தற்போது உதவிவருவதாகச் சொல்லப்பட்டாலும்

கப்பல் நிர்வகிக்கும் நிறுவன முகாமைத்துவம்.. இந்தக் கப்பல் மற்றும் கப்பல் பணியாளர்களின் நிலை காவலுக்கு போனவர்கள் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளது.

அமெரிக்காவும் பிரிட்டனும் Houthi நிலைகள் மீது விமானத் தாக்குதலை ஆரம்பித்த பின் மிக மோசமான தாக்குதல்களை ஹவ்தி நடத்தி வருகிறது. இது பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அநியாயத்தை எதிர்த்தே இத்தாக்குதல்களை நடத்துவதாக உரிமை கோரி வருகிறது.

 

Two crew members have been killed in a Houthi missile strike on a cargo ship off southern Yemen, US officials say - the first deaths the group's attacks on merchant vessels have caused.

The Barbados-flagged True Confidence had been abandoned and was drifting with a fire on board, managers said.

It was hit in the Gulf of Aden at about 09:30 GMT, they added.

The Houthis say their attacks are to support the Palestinians in the war between Israel and Hamas in Gaza.

The vessel had a crew of 20, comprising one Indian, four Vietnamese and 15 Filipino nationals. Three armed guards - two from Sri Lanka and one from Nepal - were also on board.

https://www.bbc.co.uk/news/world-middle-east-68490695

வடமாகாணத்தில் சூரிய மின்கல திட்டம்: சீனா - இந்தியாவுக்கு அனுமதி வழங்கவில்லை - மின்சாரத்துறை அமைச்சர்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   06 MAR, 2024 | 09:58 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தி அபிவிருத்தியால் அனலைத் தீவு, நெடுந்தீவு மற்றும் நயினாத்தீவு பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கல திட்டத்துக்கு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது  பாராளுமன்ற உறுப்பினர்  அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

வடக்கு மாகாணத்தில் சீன நிறுவனத்துக்கு  சூரிய மின்கல திட்டம் வழங்கப்படவுமில்லை, சீன நிறுவனம் அவ்வாறான கோரிக்கைகள் எதனையும் விடுக்கவில்லை. அதேபோல் வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கல திட்டத்தை முன்னெடுக்க அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

வடக்கில் சூரிய மின்கல திட்ட அபிவிருத்தியில் அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின்னலகுக்கு 50 ரூபா கிடைக்கப்பெறும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிடுகிறார். ஊடகங்கள் ஏதும் இவ்வாறு பொய்யான செய்தியை வெளியிடவில்லை. பாராளுமன்ற  உறுப்பினர் விமல் வீரவன்சவே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதானி  நிறுவனம் அவரிடம் தனிப்பட்ட முறையில் இவ்வாறு யோசனைகளை முன்வைத்ததா? என்பதை நாங்கள் அறியவில்லை.

 வடக்கு மாகாணத்தில் மின்னுற்பத்தி திட்டத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதற்கு 10 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் வடக்கு மாகாணத்தில்  மின்னுற்பத்தி திட்டத்தை மேம்படுத்த 11 மில்லியன் டொலர் நிவாரணத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விலைமனுகோரல் விடுக்கப்பட்டுள்ளது.

 இந்திய நிவாரணத்தினால் வடக்கு மாகாணத்தில் அனலை தீவு, நெடுந்தீவு மற்றும் நயினைத்தீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்துக்கு அரசாங்கம் ஒரு சதம் கூட செலவழிக்க தேவையில்லை. அத்துடன் எதிர்காலத்திலும் செலவழிக்க தேவையில்லை.இவ்வாறான நிலையில் இந்த திட்டத்தை ஏன்  எதிர்க்க வேண்டும்.

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்  என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். சுற்றுச்சூழல் மாசுப்படுவதாக இருந்தால் காற்றாலை திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்கினாலும் பாதிப்பு ஏற்படும் தேசிய நிறுவனங்களுக்கு வழங்கினாலும் பாதிப்பு ஏற்படும்.

காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமாயின் காற்றாலை மின்னுற்பத்தி வலயத்தில் இருந்து மன்னார் பகுதியை நீக்க வேண்டும். ஒரு தரப்பினர் குறைகளை மாத்திரம் முன்னிலைப்படுத்தி அபிவிருத்தி  செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்துகிறார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/178081

ஜனாதிபதி நெருப்பில் குதிக்கவில்லை: திருடர்கள் கூட்டத்திற்குள் குதித்துள்ளார் - எதிர்க்கட்சித் தலைவர்

3 months 1 week ago
06 MAR, 2024 | 05:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வீழ்ச்சியடைந்த நாட்டை பாதுகாக்க யாரும் முன்வராத நிலையில் தான் அந்த நெருப்பு பிழம்பில் குதித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் அவர் நெருப்பு பிழம்பில் குதிக்கவில்லை மாறாக திருடர்கள் குழுவில் குதித்துள்ளார். அவர் நாட்டை வீழ்ச்சியடையச் செய்தவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி சபையில் ஆற்றிய உரையில் புத்தரின் உன்னத வார்த்தைகளை பிரயோகித்து அவரது தொலைநோக்கு பயணத்தை நனவாக்க பெரும் முயற்சியை மேற்கொண்டார். தொங்கு பாலம் குறித்து பேசிய ஜனாதிபதி வங்குரோத்து நிலையை ஏற்படுத்தியவர்களை பாதுகாத்து வருகிறார்.

நாட்டில் வங்குரோத்து நிலையை ஏற்படுத்திய பேரழிவை உருவாக்கியவர்களிடமிருந்து நாட்டு மக்களுக்கு நட்டஈடு பெறுவதற்கான வசதிகளைக்கூட தற்போதைய ஜனாதிபதியே நிறுத்தியுள்ளார்.

பேரழிவை உருவாக்கிய தலைவர்கள் திருடிய சொத்துக்களையும் இந்த ஜனாதிபதியே பாதுகாத்து வருகிறார். நாட்டை சீரழித்த ராஜபக்‌ஷக்கள் அந்த தொங்குபாலத்தில் மேலே வர உதவுபவரும் ஜனாதிபதியாகும். அதனால் ஜனாதிபதியின் செயற்பாடுகளால் 220 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

அத்துடன் நாட்டை பாதுகாக்க பாரிய தீ பிழம்புக்குள் பாய்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் அவர் உண்மையில் பாய்ந்தது தீ பிழம்புக்குள் அல்ல. திருடர்கள் கூட்டத்திற்குள் ஆகும். ஒருபோதும் தனக்கு வாக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியாததை திருடர்கள் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார். நிகழ்நிலைக் காப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் மூலம் ஒடுக்குமுறைகளை செய்ய முயற்சிக்கிறார்.

அத்துடன் ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவையை நிறைவேற்றுத்துறையின் பொம்மையாக மாற்ற முயற்சிக்கிறார். சபாநாயகருடன் இணைந்து அரசியலமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்த கருத்தும் இப்போது கூறுவதில்லை. தொங்கு பாலத்தில் ஏறி மேலே வந்தவர்கள் நாட்டை சீர்குலைத்த ராஜபக்‌ஷ குழுக்களே ஆகும்.

எவ்வாறாயினும் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்துள்ளது. பொருளாதார முன்னேற்றம் தொடர்பான வேலைத்திட்டத்தையே எதிர்பார்த்துள்ளோம். அனைவரையும் இணைத்துக்கொண்ட தேசிய அபிவிருத்தி திட்டத்தை எமது அரசாங்கத்தில் நாங்கள் ஏற்படுத்துவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/178086

வவுனியா பல்கலையில் ஆய்வு மாநாடு நாளை ஆரம்பம்

3 months 1 week ago
06 MAR, 2024 | 10:02 PM
image

'சமாதானம், ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம்' எனும் தலைப்பில் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாடு நாளை (07) ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (06) இடம்பெற்றது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ரி.மங்களேஸ்வரன்,

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் ஆசிய பசுபிக் சமாதான ஆராய்ச்சி அமைப்பும் இணைந்து “சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம்” என்ற தலைப்பில் இம்முறை ஆய்வு மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இதில் 250க்கும் மேற்பட்ட கல்வியியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும், நல்லிணக்கத்துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களும், ஊடக மற்றும் தொழில்நுட்ப புலமையாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். 

இங்கு சர்வதேச நாடுகளை சேர்ந்த புலமையாளர்களின் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், கலாசாரம் மற்றும் சமாதானத்துக்கான மருத்துவ ரீதியான போக்கு, சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம், சமாதானத்துக்கான கல்வியும் அதன் சவால்களும் என்ற தலைப்பில் குழுக் கலந்துரையாடல்களும் இடம்பெறும். 

இந்த மாநாடானது நாளைய தினம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறும். இம்மாநாட்டில் நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேச புலமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம்  ஒரு நாட்டில் எவ்வாறு சமாதானம் மற்றும் நல்லுறவை ஏற்படுத்த முடியும் என்ற அவர்களது அனுபவங்களையும் பகிரவுள்ளனர்.

எனவே, இந்த மாநாட்டின் ஊடாக அது தொடர்பான தெளிவினை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் அக்கறை உடையவர்களை மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178105

வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு

3 months 1 week ago
06 MAR, 2024 | 10:03 PM
image

வட மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது.

இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் இன்று (06) முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் முக்கிய அங்கமாக, வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த 20 மாணவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் மாணவர்களை ஏற்றிய உலங்கு வானூர்தி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளை சுற்றி வட்டமிட்டதுடன் மீண்டும் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது.

IMG-20240306-WA0012.jpg

IMG-20240306-WA0014.jpg

IMG-20240306-WA0017.jpg

IMG-20240306-WA0015.jpg

https://www.virakesari.lk/article/178106

முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்யுங்கள் - இந்திய மற்றும் இலங்கை அரசிடம் சிறிதரன் எம்.பி. வேண்டுகோள்

3 months 1 week ago

Published By: VISHNU   06 MAR, 2024 | 08:11 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து   அவர்களுடைய  குடும்பத்தோடு சேர நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர்,  இந்தியப்பிரதமர் மற்றும் இலங்கை அரசிடம் கேட்கிறோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்றைய நாள் 16 வருடங்களுக்கு முன்னர் எங்களுடைய மண்ணிலே மாமனிதர் கிட்டினன் சிவனேசன் இலங்கையினுடைய படையினரால் ஆழ ஊடுருவும் படை என்ற பெயரில் மிக மறைமுகமாக கொலை செய்யப்பட்டிருந்தார் இந்த பாராளுமன்றத்தினுடைய  உறுப்பினராக இருந்த சிவனேசன் அநியாயமாக கொல்லப்பட்டார்.

அதேவேளை இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டு  பின்னர் விடுதலை ஆகியும் கூட வீடு வர முடியாமல் சில நாட்களுக்கு முன்னர் மரணத்தை தழுவிக் கொண்ட   சாந்தன்னுக்கும் நான் இந்த இடத்திலே எங்களுடைய அஞ்சலிகளை செய்து கொள்கிறேன்  

தன்னுடைய தாயைப் பார்க்க, உறவினர்களை பார்க்க தன்னுடைய ஊரை பார்க்க துடியாய் துடித்த  20 வயதில்  புறப்பட்ட இளைஞன் 53 வயதைக்   கடந்து சடலமாக வரவேண்டிய மிகப்பெரிய நெருக்கடியும் ஒரு மன உளைச்சலும் இந்த மண்ணிலே ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய ஆதங்கம்.

இது தொடர்பாக நான்  மனோகணேசன் எம்.யுடன் சென்று இலங்கையினுடைய வெளியுறவுத் துறை அமைச்சர் அலிசப்ரி  மற்றும் நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம்   பேசி இருந்தேன்  அதேபோல இந்தியாவிலே இருக்கிற இலங்கை தூதரகத்தினுடைய தூதரக அதிகாரியையும் கூட தொடர்பு கொண்டு சாந்தனின்  வருகைக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அந்த முயற்சிகள்  தோல்வி கண்டிருந்தது. உயிருடன் வீட்டுக்கு வர ஆசைப்பட்ட  சாந்தனின் உயிரற்ற உடல் மட்டும்தான் இங்கு வந்தது என்பது  மக்கள் மனங்களிலே  மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தற்போது இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன் ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து   அவர்களுடைய  குடும்பத்தோடு அவர்கள் சேர வேண்டும் அதற்கு உயர்ந்த சபையின் ஊடாக தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரையும் பாரதத்தினுடைய பிரதமரையும்  இலங்கையினுடைய அதிகாரிகளையும் அவர்களை இந்த மண்ணிலே தங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து வாழக்கூடிய வகையிலே ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/178116

இலங்கையில் 12 “நீலக்கொடி கடற்கரைகள்” அடையாளம்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

06 MAR, 2024 | 11:33 AM
image
 

“நீலக்கொடி கடற்கரை” யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையில் தற்போது 12 முக்கிய கடற்கரைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நீலக்கொடி கடற்கரை (Blue Flag Beach) என்பது கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்காகவும் நாட்டின் முயற்சிகளை பாராட்டும் நோக்கில்  வழங்கப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரம் ஆகும்.

அதன்படி, நாட்டில்  4 கடற்கரைகளை செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக் குழு "நீலக் கொடி கடற்கரை" என்ற விடயம் தொடர்பில் கலந்துரையாடிய போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் துறைசார் மேற்பார்வைக் குழு ஒன்று கூடியது. இதன் போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நாட்டின் கரையோரங்களைத் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்ட “நீலக் கொடி கடற்கரை” என்ற கருத்துருவில் கலந்துரையாடல் நடைபெற்றது.இலங்கையில் 12 “நீலக்கொடி கடற்கரைகள்” அடையாளம் | Virakesari.lk

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் எமிரேட்ஸ் நிறுவனம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை - அருந்திக பெர்னாண்டோ

3 months 1 week ago
06 MAR, 2024 | 05:31 PM
image
 

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம்  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை வழங்கும் போது அரசாங்கம் தேசிய சொத்துக்களை விற்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. கொழும்பு - ஹில்டன் ஹோட்டலில் முதலீடு செய்வதற்கு 4 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் அரசாங்கம் எதிர்பார்க்கும் முதலீடு அமையாவிட்டால் ஹில்டன் ஹோட்டலை விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

நாட்டின் கடன் சுமைகளைக் குறைத்து திறைசேரிக்கு பலமாக அமையும் வகையில் இவற்றை விற்பதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அதனைவிடுத்து யாருக்காவது விற்று இலாபமீட்டுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பல்ல.

கடந்த அமைச்சரவை கூட்டத்தில்  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் கடன்களை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளது. 

எனவே  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான காலம் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசாங்கம் இந்நிறுவனத்தின் கடன்களைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதால் முதலீட்டாளர்களுக்கு கடன் சுமை இருக்காது.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை மறுசீரமைப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கடனை செலுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. எமிரேட்ஸ் விமான சேவை மீண்டும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.  

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் எமிரேட்ஸ் நிறுவனம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை - அருந்திக பெர்னாண்டோ | Virakesari.lk

இளநீர் கன்றுகளை நட விசேட திட்டம்

3 months 1 week ago
86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நட விசேட திட்டம்

நமது நாட்டில் இளநீர் செய்கையை விரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க தெங்கு செய்கை சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி நாட்டில் இளநீர் செய்கைக்கு ஏற்ற 86 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உற்பத்திக்கான காரணங்களை ஆராய்ந்து மேற்படி கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

எமது நாட்டு இளநீருக்கு சர்வதேச சந்தையில் பாரிய தேவை உருவாக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச சந்தையில் இளநீர் மீதான ஏகபோக உரிமையை இலங்கை கொண்டுள்ளது. இதற்குக் காரணம், நம் நாட்டில் இளநீர்களின் சுவையும், தரமும் மிக அதிகம்.

மேலும், பல நாடுகள் இளநீர் செய்கைக்கு முயற்சித்த போதிலும், இலங்கை இளநீரின் தரத்தை பெற முடியவில்லை. எனவே, நம் நாட்டில் இளநீருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இளநீர் செய்கையை ஒரு பயிராக பிரபலப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (05) விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. தென்னை பயிர்ச்செய்கை சபை, தென்னை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

king-coconut-300x200.jpg

அதன்படி, 86 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டது. கிராமங்களாக தெரிவு செய்யப்பட்டாலும் ஒரு கிராமத்தில் அதிக ஏக்கர் பரப்பளவில் இளநீரை யாராவது பயிரிட விரும்பினால், அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய இளநீர் நாற்றுகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.

இதன்படி மொனராகலையில் 03 கிராமங்கள், மாத்தறையில் 01 கிராமம், குருநாகலில் 08 கிராமங்கள், குளியாப்பிட்டியவில் 09, கேகாலையில் 08, கம்பஹாவில் 09, களுத்துறையில் 10, மாரவில 09, இரத்தினபுரி 04, ஹம்பாந்தோட்டையில் 08, அனுராதபுரம், அனுராதபுரம் 02, இந்திராதபுரம், பொலன்னறுவையில் 02, அம்பாறையில் 02, மாத்தளையில் 04, காலியில் 08, மட்டக்களப்பில் 02, யாழ்ப்பாணத்தில் 03, கண்டியில் 04 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்போது கருத்து தெரிவித்த விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் .மகிந்த அமரவீர, இந்த நாட்களில் நிலவும் வரட்சியான காலநிலையினால் எமது நாட்டில் இளநீருக்கான தேவையும் அதிகரித்துள்ளதோடு விலையும் அதிகரித்துள்ளது.

ஆனால், ஏற்றுமதியை அடைந்து, இந்தப் பயிர்களைத் தொடங்குவதன் மூலம், விவசாயிகள் அதிக வருமானம் பெற முடியும் என்பதுடன், இளநீர் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருளாக சந்தையில் அறிமுகப்படுத்த புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/294724

திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வுகள்

3 months 1 week ago
கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு வருகை!

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும்  திருக்கோணேஸ்வரம் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையானதாகும்.இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது பதிகங்கள்  பாடியுள்ளார்.

இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்தில்  இடம்பெற்று வருகின்ற சிவராத்திரி நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
 
நேற்றைய தினம் சிவராத்திரி நிகழ்வில் தமிநாடு திருநெல்வேலி பெருங்குளம் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம்,103வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ  சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சார்ய  சுவாமிகள்  விசேட அழைப்பாளராக  கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார்.
 
பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
 
1709709035466-300x200.jpg 1709709035476-300x200.jpg 1709709035487-300x200.jpg1709709035456-1-300x200.jpg 1709709035496-1-300x200.jpg

ஏறக்குறைய 5% இலங்கையர்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

3 months 1 week ago

இலங்கையின் சனத்தொகையில் ஏறக்குறைய 5% ஆனவர்கள் தற்போது குளுக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

உலகில் குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று குளுக்கோமா.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மாத்திரமன்றி உலகெங்கிலும்  குளுக்கோமா நோயாளர்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பில் காணப்படுகின்றனர்.

“உலகத்தை எடுத்துக் கொண்டால், 3.54% குளுக்கோமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இலங்கையை எடுத்துக் கொண்டால், அது கிட்டத்தட்ட 5% ஆகும். இது நமது அதிகரித்த முதியோர் சனத்தொகை காரணமாகவும் இருக்கலாம்” என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கண் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், கண் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக நாட்டின் சுகாதார அமைப்பில் உள்ள திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வைத்தியர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

https://thinakkural.lk/article/294708

என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய

3 months 1 week ago

Published By: RAJEEBAN   06 MAR, 2024 | 02:46 PM

image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி குறித்து  நூல் ஒன்றை வெளியிடவுள்ளார்.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

gota_books.jpg

ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகள் என்ற நூலை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது என தெரிவித்துள்ள அவர் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் முதல் 60 வருடங்களில் இந்த நிலை காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

என்னை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கை அரசியலில் புதிய அம்சத்தை கொண்டுவந்தது எனவும் குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஆட்சிமாற்றங்கள் அமைதியான முறையிலேயே இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2022 இல் இடம்பெற்ற சம்பவங்களால் நாட்டின் எதிர்காலத்திற்கு கடும் பாதிப்பு என தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிமாற்றத்திற்கான நடவடிக்கைகளின் நேரடி அனுபவங்களை தனது நூல் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178075

யாழில் காலாவதியான குளிர்பானங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு 28 ஆயிரம் தண்டம்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3    06 MAR, 2024 | 11:19 AM

image

யாழ்ப்பாணத்தில் காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

சாவகச்சேரி நகர் பகுதி மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன்போது , காலாவதியான குளிர்பான வகைகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த இரண்டு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, இருவரையும் கடுமையாக எச்சரித்த மன்று, ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும், மற்றைய நபருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது. 

அத்துடன் கைப்பற்றப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/178045

பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: குவைத் அழைப்பு

3 months 1 week ago

றிப்தி அலி)
பலஸ்தீன் தனி நாட்டை உரு­வாக்க அரபு நாடு­களின் கூட்­ட­மைப்­பினால் மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­க­ளுக்கு இலங்கை ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என குவைத் அழைப்பு விடுத்­துள்­ளது.

சவூதி அரே­பி­யாவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள இந்த முயற்­சிக்கு குவைத் தொடர்ச்­சி­யாக ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றது என இலங்­கைக்­கான குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். புதைர் தெரி­வித்தார். இலங்­கையும் இந்த முயற்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என தூதுவர் தெரி­வித்தார்.

குவைத்தின் 63ஆவது தேசிய தினம் மற்றும் 33ஆவது விடு­தலை தினம் ஆகி­ய­வற்றின் நிகழ்­வுகள் கடந்த கடந்த திங்­கட்­கி­ழமை (26) கொழும்பில் இடம்­பெற்­றது.

இந்த நிகழ்வில் உரை­யாற்றும் போதே இலங்­கைக்­கான குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். புதைர் இந்த அழைப்­பினை விடுத்தார்.
இதே­வேளை, ஐந்து வரு­டங்­க­ளுக்குள் பலஸ்­தீன அர­சாங்­கத்தை அமைக்க வேண்­டி­யது அவ­சியம் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க வலி­யு­றுத்தி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த நிகழ்வில் தொழில் மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாண­யக்­கார பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டார். இங்கு அவர் நிகழ்த்­திய உரையின் போது இலங்­கைக்கும் குவைத்­திற்கும் இடையில் நீண்ட கால­மாக காணப்­படும் உற­வினை சுட்­டிக்­காட்­டி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த நிகழ்வில், சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­ய­வர்த்­தன, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி உட்­பட அமைச்­சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/16566

பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி

3 months 1 week ago
udaya_gammanpila-750x375.jpg பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி.

“பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி” என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்துள்ளார்.

பசில் ராஜபக்சவின் வருகை  இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  எனினும் பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்துஅமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப்  பயணியாக உள்ளார்.

இலங்கையில் பணம் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளையே  நாங்கள் விரும்புகிறோம். இலங்கையின் ஹம்பகராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அமெரிக்காவில் பணம் செலவழிக்க விரும்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1372389

அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் அறிக்கை கோரல்

3 months 1 week ago
sri-lanka-government-300x200.jpg

அரசியல்வாதிகள், அரச தரத்திலான அதிகாரிகள் உள்ளிட்ட 150,000இற்கும் அதிகமானோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை கையளிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வரை அவற்றை கையளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இம்முறை முதல் தடவையாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

அதற்கமைய, புதிய அதிகாரிகள் மற்றும் தனிநபர் பிரிவினர், புதிய சட்டத்தின் கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை வழங்க வேண்டியுள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை வழங்குவதற்கான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் www.ciaboc.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/294583

45 போலி நோட்டுகளுடன் ஒருவர் கைது; பொத்துஹரவில் சம்பவம்!

3 months 1 week ago
06 MAR, 2024 | 10:28 AM
image

பொத்துஹர பிரதேசத்தில் 5000 ரூபா பெறுமதியான  45 போலி நோட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய  ஒருவரை சோதனையிட்டபோதே  அவரிடமிருந்து இந்த போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொல்பிதிகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.

இவர் ஏற்கனமே பணம் அச்சடிக்கும் இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

https://www.virakesari.lk/article/178035

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத கடற்தொழில் முறை நிறுத்தப்பட்டது போல் வடக்கிலும் நிறுத்தப்பட வேண்டும் - முன்னாள் தலைவர் அன்னராச

3 months 1 week ago

Published By: VISHNU   06 MAR, 2024 | 02:44 AM

image

கிழக்கு மாகாண ஆளுநர் எவ்வாறு  சட்டவிரோத தொழில் முறையை கிழக்கு மாகாணத்தில் நிறுத்தினாரோ அவ்வாறு வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத தொழில் முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் சமாசத்தின் முன்னாள் தலைவர் அன்னராச வேண்டுகோள் விடுத்தார்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் களை நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தினால் முன்னேடுக்கப்பட்ட  போராட்டத்தில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு எதிராக மீனவர்கள் போராடிய போது அவர்களை அழைத்து சட்டவிரோத தொழில் முறைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்த்துடன் உடனடியாகவே சட்டவிரோத தொழில் முறைகளை நிறுத்தியுள்ளார் .அதேபோல் தான் வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத தொழில் முறைகள்,முறையற்ற தொழில் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களை  அழைத்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/178023

Checked
Sun, 06/16/2024 - 04:00
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr