நன்மைகள் இருப்பின் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு அனுமதி - அரசாங்கம்
31 Aug, 2025 | 09:09 AM
![]()
(லியோ நிரோஷ தர்ஷன்)
நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய இனி அனுமதியளிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இதன் போது இந்தியாவா - சீனாவா அல்லது அமெரிக்காவா என்பது எமக்கு முக்கியமில்லை என்றும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது குறித்து தீர்மானிக்க வெளிவிவகார அமைச்சு விசேட குழு அமைத்து கலந்துரையாடி வருகிறது. இவ்வாறான ஆய்வுக்கப்பல்களின் வருகை குறித்து ஏனைய நாடுகள் முன்னெடுக்கும் பொறிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து பொதுவானவொரு திட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சீனா மாத்திரம் அல்ல வேறு எந்தவொரு நாட்டினதும் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதாயின், நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மறுபுறம் இவ்வாறான ஆய்வுக்கப்பல்கள் வரும் போது உலகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதனையும் ஆராய வேண்டும். ஏனெனில் வல்லரசு நாடுகளுக்கு இடையில் போர் சூழலும் போட்டித்தன்மையும் காணப்படுகின்றமை இரகசியமான விடயமல்ல.
எனவே ஏவுகணை தாக்குதல்கள், புவிசார் அரசியல் நலன்கள், ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் கலாசார விஜயங்கள் என பல கோணங்களில் ஆய்வுக்கப்பல்களின் வருகையை கவனத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. எனவே தான் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் வருகையை விசேட கண்ணோட்டத்தில் நோக்குகிறோம்.
இந்த விடயத்தில சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா என வேறுப்படுத்தி பார்க்க விரும்ப வில்லை. இறுதியில் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே ஆய்வுக்கப்பலை அனுமதிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படும்.
இலங்கை போன்ற சிறிய நாடுகள் எவ்வாறு உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களை அனுமதிக்கிறது என்ற உலக படிப்பினையுடனான திட்ட வரைபை வெளிவிவகார அமைச்சின் சிறப்பு குழு விரைவில் அமைச்சரவைக்கு சமர்பிக்கும். இதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.





