சம்பூர் என்கிற விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊரில் நான் நிற்கின்றேன். எனக்கு முன் ஒரு கப்பல் சிவப்பு மஞ்சல் நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அருகில் சென்று பார்க்கலாம் என சென்றேன்.
என்னையறியாமல் ஒரு கரும்புலியின் படத்திற்கு முன்னால் நின்றுகொண்டேன். கரும்புலி திருமாறன் என எழுதப்பட்டிருந்தது. எந்த ஊர், விபரங்கள் என எதையுமே வாசிக்காமல் அடுத்த படத்தின் பக்கம் பார்வையை திருப்பினேன். பத்தொடு பதினென்றாக அதையும் பார்த்துவிட்டு சென்றாலும் திருமாறன் என்ற அந்த பெயர் மனதில் பதிந்துவிட்டது.
ஏதாவது குறும்புகள் செய்துவிட்டு கோபக்கார தந்தையிடம் மாட்டிக்கொள்ளாமல் எதிர் வீட்டு வேலிகளை பிய்த்துகொண்டு ஓடி , அந்த வீட்டின் முன் நின்று, துரத்திய தந்தை வேலி தாண்டும் போது "வீட்டுக்காரர் யாரோ உங்கட வேலியை பிய்க்கினம்" என்று அப்பாவையே மாட்டிவிட்ட குறும்புக்காரன்.
"நிசாந்தன் இயக்கத்துக்குப் போய்ட்டானாம்" என்று அம்மா சொன்ன போது "ம்ம்ம்" என்று சொல்லிவிட்டு எனது வேலையை பார்க்கச்சென்றுவிட்டேன். பின்னொரு நாளில் "நிசாந்தன் கரும்புலியா வீரச்சாவடைந்திட்டான்" என்று அம்மா சொன்னபோதும் அதே "ம்ம்ம்" தான் பதிலாக இருந்தது.
நானும் அவனும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக திரிந்த ஒரு சில ஞாபகங்களை தவிர வேறெதுவும் எனக்கு நினைவில் இல்லை. என்னை விட இரண்டு வயது பெரியவன் என்பதால் சேர்ந்து செய்த சேட்டைகளிறகெல்லாம் அவன் தான் அடிவாங்கினான். இப்படியான சிறுதுளி நினைவுகள் மட்டுமே என்னிடம் எஞ்சியுள்ளன.
வெளிநாட்டிற்கு ஓடி வந்த பின்னர் எனக்கும் அவனுக்குமான உறவு அறுந்தே போய்விட்டது. கழட்டிவிடப்பட்ட ரயில் பெட்டிகள் போல் அவனது நினைவுகளும் எங்கோ தொலைந்து போயின.
15 வருடங்களிற்கு பின்னர் சமாதான காலத்தில் தமிழீழம் திரும்பியிருந்தேன். நான் வெளியேறும் போது இருந்த எனது ஊர் தான் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.
வேறு வேலையாக சென்றிருந்ததால் லீவு கிடைக்கும்போது எனது ஊரையும் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தேன்.
ஒரு வார இறுதியில் அங்கே செல்வதென முடிவு செய்தேன்.
பஸ்சில் ஏறி இருந்த பின்னர் "தம்பி எங்க போக வேணும்" என்று ஒரு குரல்.
திரும்பி பார்த்தால் பஸ்சின் முன் பக்கத்திலிருந்து ஒருவர் விரல்களுக்கிடையில் பணத்தை மடித்து வைத்துக்கொண்டு எனது பதிலிற்காக காத்திருந்தார்.
"ஆவரங்கால்" என்றேன்.
"ஆவரங்கால்ல எங்க?" என்றார்.
இறங்க வேண்டிய இடத்தை கேட்க மறந்துவிட்டதை அப்பொழு தான் உணர்ந்தேன். எனது திருட்டு முழியை பார்த்தே அவரிற்கு புரிந்திருக்க வேண்டும் நான் வெளிநாடு என்று.
அவரும் ஒவ்வொரு தரிப்பிடமாக சொல்லிக்கொண்டு வந்தார்.
"ஆவரங்கால் சந்தி...." என்று அவர் உச்சரிக்க "ஓம் அங்கை தான்" என்றேன்.
என்னை இறக்கிவிட்டு பேரூந்து புகை கக்கிக்கொண்டு ஓடி மறைந்தது. ஒரு நிமிடம் அசையாமல்
அப்படியே நின்று கண்களை சுற்றவிட்டேன். அந்த சாலையோரத்தில் இருந்த ஒரு மாட்டுக் கொட்டிலை மட்டும் காணவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டேன்.
நான் வந்தவுடன் பக்கத்து கடையில் காத்திருக்கவும், தான் வந்து என்னை அழைத்துச்செல்வதாக பெரியப்பாவின் மகன் சொல்லியிருந்தான்.
"என்னை தெரியுமோ?" என்று கடைக்காரர் கேட்டார். அது எனது 50 வயது மதிக்கத்தக்க சொந்தக்காரர் ஒருவரின் கடை என்று முன்னர் அறிந்து வைத்திருந்தேன். நானும் உடனே அந்த சொந்தக்காரரின் பெயரை சொல்லி நீங்கள் தானே அவர் என்றேன்.
"என்னை பாக்க அப்படி வயசான ஆள் மாதிரி இருக்கா? நான் முந்தி உங்களோட படிச்சனான். இந்த கடையில தான் வேலை செய்யிறேன்" என்று ஒரு சிரிப்பு சிரித்தார்.
எனது பெரியப்பாவின் வீடு அதனை சுற்றியிருந்தவை என அனைத்துமே தெரியாத ஒரு ஊரிற்கு வந்தது போல் இருந்தது. எதுவும் நினைவில் வர மறுத்துவிட்டது.
நான் திருகோணமலையில் தங்கியுள்ளேன் என்பதை அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூறினேன்.
"அங்க தான் நிசாந்தியும் மாவீரன் ஆனவன். ஒரு கப்பல் மூழ்கடிப்பில கருப்புலியானவன்".
நிசாந்தன் ஆரவங்காலில் பிறந்து பின்னர் வன்னிக்கு தனது குடும்பத்துடன் அகதியாக சென்றவன். பின்னர் அங்கேயே தன்னை புலிகளுடன் இணைத்துக்கொண்டான். கரும்புலியாக வேண்டும் என்ற அவனது ஆசையையும் நிறைவேற்றிக்கொண்டான்.
பின்னர் அவனது குடும்பம் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திரும்பியது. அவன் மட்டும் வன்னியில் புலிகளுடன் நின்றுவிட்டான்.
"அவையின்ர நினைவா ஒரு கப்பல் மாதிரி கட்டி அங்க வச்சிருக்கினம்". என்றபடி பத்திரிகையில் வந்த அவனின் படத்தை எடுத்து காட்டினார்கள்.
அது நிசாந்தன் என்கிற கரும்புலி திருமாறன்! நான் பார்த்த அதே கப்பல் வடிவம்.
நான் ஏற்கனவே பார்த்தவிட்டேன். யார் என்று தெரியவில்லை என்று எப்படி அவர்களிடம் சொல்வது? அங்கிருந்த ஒவ்வொரு நாளும் இந்த குற்ற உணர்ச்சி என்னை கொன்றுகொண்டே இருந்தது.
நான் அவனின் படத்திற்கு முன்னால் நின்றதை தற்செயலாக நடந்தது என்று இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒரு கரும்புலி வீரனின் ஆத்மாவின் வலிமையே அது. அவனின் உடலை மட்டுமே மண் தின்றது! தின்னமுடிந்தது.
இந்த மாவீரர்களின் தாயகக்கனவு எம்முடன் தொடரட்டும், எம் உடலையும் மண் தின்னும் வரை.