Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. இறுவட்டு அட்டைகள் இந்த மண் எங்களின் சொந்த மண் இது தான் தமிழீழத்திலிருந்து வெளியான முதலாவது இறுவட்டாகும். கீழுள்ளது தான் இவ்விறுவட்டின் மூல அட்டையாகும். மூலம்: ஈழநாதம் திகதி: 1990.10.23 திறனாய்வு: பாபு பக்கம்: 2 இன்பத்தேன் செவிகளில் பாயச் செய்யும் "இந்த மண் எங்களின் சொந்த மண்" - மதிப்பீடு - ஈழத்துக் கலைஞர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒலிநாடா "இந்த மண் எங்களின் சொந்த மண்" என்ற முத்திரையுடன் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் கலை, கலாசாரப் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒலிநாடா நேயர்களின் மனத்தில் எழுப்பும் உணர்வலைகளின் ஒரு பிரதிபலிப்பு இங்கே தரப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை கலாசாரப் பிரிவினால் வெளியிடப்பட்ட "இந்த மண் எங்களின் சொந்த மண்" எனும் தமிழ் ஈழ எழுச்சிப் பாடல்கள் கொண்ட ஒலிப்பதிவு நாடாத்தொகுப்பு கேட்டேன். இன்றைய ஈழ மண்ணின் நிகழ்வுகளையும் அதன் கோலங்களையும் உள்ளடக்கி, வீர உணர்வுகளை வெளிக்கொணர்ந்தும், ஈழத்தின் துயரங்களை எடுத்து இயம்புகின்றதுமான முத்தான பத்துப் பாடல்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பாடலும் ஈழ மண்ணின் அவலங்களையும், விடுதலைப்புலிகளின் வீர தத்துவங்களையும் வெளிக்காட்டுகின்றது. பாடல்களை ஆக்கிய புரட்சிக் கவிஞர்கள் மிக இலகுவான சொற்பதங்களை உபயோகித்து, தத்ரூபமாக பாடல்களை இயற்றியுள்ளார்கள். கேட்கும்போது எம்மையறியாமலே ஈழ மக்களின் உணர்வுகள் மனதில் கோலம் போடுகின்றன. "உயிரிலும் மேலான தாய் நாடு - இன்று உடலங்கள் எரிகின்ற பேய்வீடு" என்று தொடங்கும் உணர்ச்சிப் பாடல் ஒன்றில் தொடர்ந்து வரும் வரிகளான, "பயமின்றி நாம் வாழ்ந்த சிறு கூடு - இன்று பாதகரால் சிதைந்த மண்மேடு" என்று ஈழ நிலையை உணர்த்தியும் அதற்கேற்றாற் போல அதற்குரிய பரிகார வழியாக, தொடர்ந்துவரும் வரிகளான, "துணிவோடு நீவந்து படைசேரு - புலி துளியேனும் நிலை மாறிப் போகாது! அணியாகிப் புலியாகிப் போராடு!! நீ அழிவாகிப் போனாலும் வரலாறு!!!" என்று மிக அழகாக அழுத்திக் கூறும் கவிஞரின் வரிகள் மிகவும் முக்கியமானவையாகத் தெரிகின்றன. அதேபோல, "இந்த மண் எங்களின் சொந்த மண் - இதன் எல்லையை மீறியார் வந்தவன்" என்று தொடங்கும் இனிமையான பாடலில் தொடரிந்து வரும் வரிகளான, "நீர்வளம் உண்டு! நிலவளம் உண்டு! நிம்மதி ஒன்று தானில்லை" என்ற வரியும், "பூமலர்ந்தது கொடியினில் - ஒரு புலி பிறந்தது மடியினில்" என்ற ஜோடிப்பாடலில் தொடர்ந்து வரும் வரிகளான, "அடிபணிந்திடலாகுமோ - தமிழ் அரசிழந்திடக் கூடுமோ! புலி இருந்திடும் குகையினில் - இனிப் புயலெழுந்திடக் கூடுமோ" என்ற வரிகளும் மிகவும் ஆழமாக உணர்ந்து கொள்ள வேண்டிய வரிகளாகும். இது போல ஒவ்வொரு பாடலிலும் கவிஞர்கள் தமதும், விடுதலைப் புலிகளினதும் எழுச்சியையும் வேகத்தினையும் எடுத்துக் காட்டியுள்ளார்கள். இசையமைப்பைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பாடலின் இசையமைப்பும் மிகவும் பிரமாதமாக இருக்கிறது. ஈழத்து இசைக்கலைஞர்களின் அதிவேக வளர்ச்சி பாராட்டப்பட வேண்டியதே! மேலும் பாடல்களைப் பாடிய பாடகர்கள் மிக இனிமையாக, உணர்வோடு பாடியிருக்கின்றார்கள். "இந்த மண் எங்களின் சொந்த மண்" பாடலைப் பாடியவர் மிக அழகாக ஏற்ற இறக்கத்துடன் தனது இனிமையான குரலில் பாடியிருக்கின்றார். அவரது குரலில் இன்னும் பாடல்கள் கேட்க வேண்டும் போலத் தோன்றுகிறது. மிக உறுதியோடும் வீரத்துடனும் ஆரம்பிக்கும் இப்பாடலில் சட்டென்று ஈழத்தின் நிலையை உணர்த்தி அடுத்த வரிகளான, "நீர் வளம் உண்டு! நில வளம் உண்டு! நிம்மதி ஒன்றுதானில்லை!" என்று அவர் பாடும் போது அவரது குரலில் கவலையும் ஏக்கங்களும் தெரிகின்றன. அப்படியாக உணர்வோடு ஒன்றிப்போய் பாடியிருக்கின்றார். அதே குரலுக்குரியவர்தான் அடுத்த பாடலான, "எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகின்றோம் - தமிழ் ஈழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகின்றோம்" என்ற பாடலையும் பாடியிருக்கின்றார் போலத் தெரிகின்றது. அந்தப் பாடலுக்கு இன்னுமொருபடி மேலான பாராட்டுகளைத் தெரிவிக்கவேண்டும். மிக இனிமை. இதேபோல தொட்டிலில் தூங்கும் ஈழத்தின் முத்து ஒன்றை தட்டியெழுப்பும் ஒரு தாயின் கீதமாக வரும், "தூக்கமா கண்மணி பள்ளியெழு - இந்த தொட்டிலை விட்டு நீ துள்ளியெழு" என்ற பாடலுக்குரிய பெண்குரலும், "பூபாளம் பாடும் நேரம் - தமிழன் புலியாகிப் போராடும் காலமோ" என்ற பாடலுக்குரிய ஆண்குரலும் இனிமையாக புரட்சிகர இசை பாடுகின்றன. அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். "பாதைகள் வளையாது - எங்கள் பயணங்கள் முடியாது போகுமிடத்தில் சேரும் வரைக்கும்" என்ற பாடலுக்குரிய குரலும் மிகவும் ஆணித்தரமான கொள்கையினை வெளிக்காட்டியது. அதே போல, "செவ்வானம் சிவந்தது ஏன் – அது செங்கொடியை நினைப்பதற்கே" என்ற பாடல் மிக இனிமையாக இருந்தது. அந்தப் பாடலுக்குரிய குரல் ஒரு சிறுவனின் குரல் போலத் தெரிகிறது. உண்மையில் சிறுவனின் குரலா அல்லது சிறுவனின் குரல் போலப் பாடப்பட்டதா என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பாராட்டப்பட வேண்டிய குரல் அந்தக்குரல். அது வளர வேண்டும் என வாழ்த்துகின்றேன். மொத்தத்தில் "இந்த மண் எங்களின் சொந்த மண்" தொகுப்பிலுள்ள பத்துப் பாடல்களும் முத்தானவை. ஈழ மக்கள் எல்லோருடைய மனதிலும் பதிந்திருக்க வேண்டிய பாடல்கள். நிச்சயமாக விரைவில் எல்லோருடைய வாய்களிலிருந்து இப்பாடல்கள் வெளிவரும் என்பதில் ஐயமில்லை. இந்தப் பாடல் தொகுப்பில் பங்குபற்றிய ஈழத்துக் கலைஞர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களை பாராட்டுவதுடன் தொடர்ந்தும் பல எழுச்சி கீதங்களையும், விடுதலைக் கீதங்களையும் வெளியிட வேண்டும், வளர வேண்டும் என வாழ்த்துகின்றேன். மலர்க தமிழீழம்.
  2. இறுவட்டு அட்டைகள் இசையருவி பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே, தீயினில் எரியாத தீபங்களே, என்னினமே என் சனமே, தூக்கமா கண்மணி பள்ளியெழு, கரும்புலிகள் என நாங்கள் பாடும் பறவைகள் வாருங்கள் உட்பட்ட 10 எழுச்சிப் பாடல்கள் வாத்திய இசை வடிவத்தில் இருந்தன. இன்று இவ்விறுவட்டும் ஊழியால் அழிந்துபட்ட இறுவட்டுகளின் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. மூலம்: ஈழதாதம் திகதி: 1991.11.06 பக்கம்: 5-6 "ஒரு மொழியின் கலை பண்பாட்டு விழுமியங்கள் இனத்தின் பெருமைக்குச் சான்று" - பிரான்ஸிஸ் ஜோசப் அடிகளார் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற 'இசையருவி' ஒலிப்பதிவு நாடா வெளியீட்டு விழா வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வண. பிதா பிரான்ஸிஸ் ஜோசப் அடிகளார் ஆற்றிய உரை இங்கே தரப்படுகிறது. இன்று எமது கலை, பண்பாட்டு வளர்ச்சியிலே ஒரு புது அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த வகையில் இன்றைய 'இசையருவி' நாதஸ்வர இசை ஒலிப்பதிவு நாடா வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொள்ள எனக்குக் கிடைத்த இச்சந்தர்ப்பத்தையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஒரு மொழியின் வளர்ச்சியும் அதன் கலை பண்பாட்டு விழுமியங்களும் அம்மொழியைப் மேசும் இனத்தின் பெருமையைப் பறைசாற்ற வல்லன. மானிட வாழ்க்கைப் பாங்குகளின் கூட்டுத்திரட்சியே பண்பாடாகும். மரபுகள், கலைகள், உடைகள் மொழி யாவும் இப்பண்பாட்டின் சில கூறுகள். ஒரு சமூக அமைப்பின் இயல்பினைப் பண்பாடு வெளிப்படுத்த வல்லது. பண்பாட்டு வளர்ச்சியும், மொழி வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தன. ஓர் இனத்தின் பண்பாட்டு வறட்சிக்கு வளர்ச்சியடையாத அதன் மொழியும் கலையுமே காரணம் என மானிடவியலாளர் கூறுவர். எனவே ஒரு நாட்டின் - ஓர் இனத்தின் பண்பாட்டு வளர்ச்சியிலே, மொழியினதும் கலையினதும் செல்வாக்கே அதிகம். வளர்ந்த ஒரு மொழியிலே தான் முதிர்ந்த பண்பாட்டு விழுமியங்களைக் கண்டுணரலாம். சிறந்த இலக்கியத்தோடும் கலைகளோடும் இணையும் போதுதான் ஒரு மொழி வளர்கின்றது; ஓர் இனம் மிளிர்கின்றது. வளர்ச்சி பெற்ற எந்த இனமும் கலை வளமும் இலக்கிய வளமும் பொருந்தியதாகவே விளங்கும். மொசபத்தேமியா, எகிப்து, கிரேக்கம்,றோம் ஆகிய நாடுகளின் உன்னத பண்பாட்டிற்கு அந்நாடுகளின் சமூகங்களிடையே ஆக்கம் பெற்ற பேரிலக்கியங்களே காரணம் என அறிஞர் கொள்வர். எமது தமிழ்மொழியும் பழைமை வாய்ந்த கலை பண்பாட்டுக்குப் பாரம்பரியங்களை உடையதென்பதை எமது மொழியிலுள்ள பழம்பெரும் இலக்கியங்களாலும் வேறு கலை அம்சங்களாலும் உணர்ந்து கொள்ளலாம். எமது வாழ்க்கை முறையிலும் பண்பாட்டு வளர்ச்சியிலும் அவற்றின் எல்லா நிலைகளிலும் / நுண்கலையில் முதன்மை வாய்ந்ததான இசை இணைந்து வந்துள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி ஈறாக, எமது வாழ்க்கை நிகழ்வுகளுடன் இணைந்து எமது வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சமாக இசை இருந்து வந்துள்ளது; இருந்து வருகின்றது. இசைக்கு ஓர் அதீத சக்தி உண்டு. இச்சக்தியின் மூலம் எதையும் சாதிக்கலாம். இசைப் பாடல்களால் இறைவனை ஏற்றி வழிபடும் போது அந்த இசையால் இறைவனைப் போற்றி இறையருளைப் பெறலாம், அந்த இறைவனை அணுகலாம் என்ற நம்பிக்கைகள் எம்மிடையே வளர்ந்து வந்துள்ளன. இசைக்குத் தலைவணங்கிய மாமன்னர்களையும் கூட எமக்கு வரவாறு காட்டுகின்றது. நாயன்மார்களும் சமய போதகர்களும் இசையை கருவியாக கொண்டே சமயத்தை வளர்த்தனர். சமய வழிபாடுகளில் இசைப் பாடல்களே அனைவரையும் ஒருமுகப்படுத்தி ஒருவழிப்படுத்தின. எனவே தான் இசையானது தெய்வீக நிலையில் வைத்துப் பூஜிக்கப்படுகின்றது. எமது இசைமரபு பல்வேறு நாட்டவராலும் வியந்து புகழப்படும் தன்மை வாய்ந்தது. இந்த இசை மரபைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உரியது. இச்சந்தர்ப்பத்தில், உலகம் முழுவதையுமே ஆட்டம் காணச் செய்யும் வகையில், சிறந்த படையெடுப்புக்களை நடாத்தி வெற்றிவாகை சூடிப் புகழ் பெற்ற மாவீரன் நெப்போலியன் ஆட்சியாளரின் பொறுப்புக் குறித்து ஓரிடத்தில் கூறியதை கவனத்தில் கொண்டுவர விரும்புகிறேன். கலைகள் யாவற்றுள்ளும் எமது உள்ளத்து உணர்வுகளை ஈர்ப்பதில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துவதாக இசைக்கலையே இருக்கின்றது; அதேவேளை ஆட்சியாளர்கள் இந்த இசைக்கலைக்கு அதிக ஊக்குவிப்புக் கொடுக்க வேண்டியவர்களாக விளங்க வேண்டும் என்கிறார். எமது இசை மரபு பேணப்பட வேண்டும், என்று சொல்லும் போது அம்மரபின் அத்திவாரம் தகர்க்கப்படாது பார்த்துக் கொள்வதோடு அம்மரபின் பழைமையின் உண்மைகள் புறக்கணிக்கப்படாதும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த அடிப்படையே ஏற்றுக்கொண்டு காலத்திற்கேற்ற புதுமையை அங்கீகரித்து கலைமரபை வளர்க்கவும் முயற்சிக்க வேண்டும். வளரும் கலை நெகிழ்ச்சிக்கு இடமளித்தே வளர வேண்டும். மாற்றம் இன்றேல், வளர்ச்சி இல்லை. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்பது நன்னூல் சூத்திரம். "கடிசொல் இல்லை காலத்துப்படினே" என்பது தொல்காப்பியர் வாக்கு. எமது இசை மரபிலே ஏற்படும் மாற்றங்கள் எமது பண்பாட்டைச் சிதைக்காது உலக அரங்கின் கவனத்திற்குரியதாக இருப்பின் அவை சிறப்புக்குரியனவே. இந்த வகையில் இன்றைய இசையருவி நாதஸ்வர இசை ஒலிப்பதிவு நாடாவிலே தவில், மிருதங்கம், தபேலா ஆகிய இசைக்கருவிகளுடன் வயலின் உட்பட மேற்கத்தைய இசைக்கருவிகளையும் இணைத்துள்ளமை விசேட கவனம் பெறுகின்றது. இதன் மூலம் எமது இசைக்கலை வளர்ச்சி நிரூபணமாகின்றது. பிறநாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்ற புதுமைக்கவி பாரதியின் அறைகூவல் இங்கே ஒரு வகையில் நிறைவேற்றப்படுகின்றது. இதனால் எமது கலை மரபை பிறநாட்டவரும் ரசிக்கக்கூடிய வாய்ப்பும் ஏற்படுகின்றது. இத் துறையில் நாம் மேலும் வளர்ச்சியும் விருத்தியும் எய்த வேண்டும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதற்கேற்ப இந்த இசையருவி நாடாவை யாவரும் கேட்டு மகிழக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த இசைநாடாவின் மற்றுமொரு சிறப்பம்சத்தையும் இங்கே நான் குறிப்பிட வேண்டும். சாஸ்திரிய முறையில் இசைக்கலை பயின்றவர்களிடையே தம் கலைகளே ஏனையவற்றை விட உயர்ந்தவை என்ற மனப்பாங்கும் ஏனைய மேற்கத்தைய இசைக்கருவிகள் எமது இசைக்கருவிகளுடன் இணைய முடியாதன என்ற கருத்தும் நிலவிவந்த முறைமையை மாற்றி இசைக் கலைஞர்கள் பலரையும் இணைத்து அக்கலைஞர்களிடையே கூட்டுறவை வளர்த்து ஓர் ஒத்திசைவை வழங்க முடியுமென்ற மனப்பாங்கு மாற்றத்தையும் இசையருவி நாடா வெளியீடு சாதித்துள்ளது. இசையருவி ஒலிப்பதிவு நாடாவிலே தாயக விடுதலைப் பாடல்கள் பத்து இசைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான உதிரியான பாடல்களை தமது இசைக்கருவிகளில் வாசிப்பது தமக்கு ஓர் இழுக்கென சாஸ்திரிய இசை விற்பன்னர்கள் நினைத்த காலம் போய், இன்றைய காலத்தின் தேவையை உணர்ந்து இத் தாயகப்பாடல்களை தமது இசைக்கருவிகளில் இசைக்க முன்வந்துள்ளமை நல்லதொரு மாற்றமாகும். எந்தவொரு கலைப்படைப்பும் சமகாலத் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற அடிநாதத்துக்கு இசையும் விதிவிலக்கானதல்ல என்பதையே இது காட்டுகின்றது. பழைமை என்ற வட்டத்துள் எமது கலையை முடக்கினால் கலை வளர வழியில்லாமல் போகும் என்ற தன்மையை உணர்ந்தவர்களாய் விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினர் ஆரம்பித்து வைக்கும் இன்றைய அத்தியாயம் நன்கு வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கை இன்று உள்ளது. முதலில் இசைப்பாடல் நாடாவாக வழங்கி, மக்கள் நாவில் அக்கீதங்களை ஒலிக்கச் செய்து மனப்பதிவை ஏற்படுத்தியபின், நாதஸ்வர இசையில் இந்தப் பாடல்களை வழங்கும்போது இவ்விசையைக் கேட்கும் மக்கள் யாவரும் அப்பாடல்களை தம்மனதால் இசைப்பர். இதனால் எமது தாயகம் பற்றிய செய்திகளும் கருத்துக்களும் என்றும் எம் மக்கள் மனங்களில் நிலவும். எனவே 'இசையருவி' மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஊடுருவிச் செல்லும் ஓர் உன்னத கருவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகு பெருமைகளோடு, கலைஞர்களைக் கௌரவித்தல் என்னும் பெருமையையும் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகத்தினர் தமக்குரியதாக்கியுள்ளனர் என்றும் கூறுவதில் மகிழ்ச்சியடைவதோடு கலை, பண்பாட்டு வளர்ச்சி முயற்சிகள் யாவும் நல்ல முறையில் நிறைவேற வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன். ******* மூலம்: வெளிச்சம் திகதி: கார்த்திகை-மார்கழி 1991 திறனாய்வு: கலாபரணி பக்கம்: 30 "இசையருவி" பற்றிய மதிப்பீடு தமிழ் ஈழப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டுள்ள ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களாலும், களத்தில் நிற்கும் போராளிகளாலும் இயற்றப்பட்டுத் தேர்ச்சி பெற்ற கலைஞர்களது கைவண்ணத்தில் பொதுமக்கள் மத்தியில் போராட்டத்தை ஜனரஞ்சகப்படுத்திய இசைப்பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்) முதல் தடவையாக வாத்தியக் கருவிகளால் ஒலிவடிவில் வார்க்கப்பட்டு ஒலிப்பதிவு நாடாவாக விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இதுவரை காலமும் வார்த்தை வடிவில் நம் செவிகளில் ஒலித்த கானங்களை இப்போது வாத்தியக் கருவிகளூடாக சப்தரூபமாகக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த ஒலிப்பதிவு நாடாவில் இன்னொரு புதுமை தமிழர்களின் பாரம்பரிய இசையான நாதஸ்வரமும் தவிலும் மேலைத்தேய வாத்தியங்களான ஓகன், வயலின் முதலான இசைக்கருவிகளோடு சங்கமித்து சுவைஞர்களுக்கு ஏக ராக மேள தாளமாக ஒலிப்பதாகும். நாதஸ்வரத்திற்கு இணைவாத்தியம் தவில் தான். இரண்டும் இராஜ வாத்தியங்கள். தமிழகத்தில் சில பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொனிகூடிய தோல் வாத்தியமான தவிலை ஏனைய மென்மையான வாத்தியங்களுக்கு இணை வாத்தியமாக வாசிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் இசையறிஞர்கள் சிலர் ஈடுபட்டார்கள். இதன் விளைவாக ரி. ஆர். மகாலிங்கத்தின் புல்லாங்குழலுக்கு வலங்கைமான் சண்முகசுந்தரம் தவில் வாசித்தார். குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் கச்சேரிக்கு வலையப்பட்டி சுப்பிரமணியம் தவில் வாசித்தார். இவ்வாறு புல்லாங்குழல் போன்ற மென்மையான காற்று வாத்தியங்களுக்கும் வயலின் போன்ற மென்மையான நரம்பு வாத்தியங்களுக்கும் பக்கவாத்தியமாகத் தவில் பயன்படுத்தப்பட்டது. இவை சாகித்தியங்களுக்கும் கீர்த்தனைகளுக்கும் பொருத்தமாக அமைந்தன. ஆனால் தமிழ் இசை உலகின் வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக பாரம்பரிய தமிழ் இசையும் மேலைத்தேய இசையும் எழுச்சிப் பாடல்களுக்கு நாதோதேசம் செய்யப் பயன்படுத்தப்பட்டு அதில் பெரும் வெற்றியும் பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் "இசையருவி" ஒலிப்பதிவு நாடாவுக்கு நாதஸ்வரம் வழங்கிய நாதஸ்வர கானவாரிதி வீ. கே. பஞ்சமூர்த்தியும் தவில் வாசித்த தவில் நாதமணி பி. கணேசனும் தமிழிசை வரலாற்றில் புதியதோர் பரிமாணத்தை உருவாக்கியுள்ளனர். விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக்கழகத்தின் இந்தப் பாரிய முயற்சிக்கு வயலின், ஓகன், தபேலா, மிருதங்கம் முதலான வாத்தியக் கருவிகளை இசைத்த கலைஞர்கள் பூரண ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். எல்லா இசைக்கலைஞர்களையும் நெறிப்படுத்திய இசையமைப்பாளர் கண்ணன் அவர்கள் இந்த ஒலிப்பதிவு நாடா உருவாக்கத்தில் ஒரு இசையாகத்தையே நடாத்தியுள்ளார். இவற்றையெல்லாம் தொழில்நுட்பத்தோடு பதிவு இசையாக்கியுள்ளார் ஒலிப்பதிவாளர் நித்தி அவர்கள். சுருக்கமாகச் சொன்னால் ஈழத்து இசை வளர்ச்சியில் இந்த முயற்சி ஒரு மைல்கல் எனலாம். ****** மூலம்: முரசொலி திகதி: 1991.11.09 பக். 03, 04 & 1991.11.10 பக். 03 திறனாய்வு: - 'எங்கள் குழலிலிருந்து வீரம்! உங்கள் குழலிலிருந்து நாதம்!' விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் உருவாக்கிய, நாதஸ்வர கானவாரிதி வீ.கே.பஞ்சமூர்த்தியின் நாதஸ்வர 'இசை அருவி' ஒலிப்பதிவு நாடா அண்மையில் வெளியிடப்பட்டது. வெளியீட்டு வீழா நிகழ்ச்சிகளை இங்கு தொகுத்துத் தருகிறோம். வெளியீட்டு விழா யாழ். இந்து மகளிர் கல்லூரி அரங்கில் 2-11-91 இல் நிகழ்ந்தபோது போர்க்காலச் சூழ்நிலையில் தாம் அனுபவிக்கும் கஷ்டங்களையெல்லாம் மறந்து மக்கள் திரண்டு வந்து பங்குபற்றியது இசைமேல் அவர்களுக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியது. யாழ். தளபதி செந்தோழன் அவர்களும், விடுதலைப் புலிகள் மக்கள் நிர்வாகச் செயலாளர் மாறன் அவர்களும் குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். விழாவுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத் தலைவர், கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் "கலைஞர்களால் நாடு வளம் பெறும், நாடு சுகம் பெறும். அதனால் இசை நாடாக்கள் தொடர்ந்து வெளிவரும்" என்றார். "முன்னர் மலேசியா முதலிய இடங்களிலிருந்து இங்கு வந்தன. இன்று நாங்களே வெளியிடுகின்றோம். மக்கள் உள்ளங்களில் உணர்ச்சியூட்ட வல்லது இசை. நாட்டை வென்றெடுக்கவும், பின் அந்த நாட்டை வளப்படுத்தவும் வல்ல பல திட்டங்கள் எம்மிடம் உண்டு. நீங்கள் எல்லோரும் அப்பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்." "இத்தகைய ஓர் ஆக்கப்பணிக்கு இசைந்து நாதஸ்வர கானமிசைத்த பஞ்சமூர்த்தி அவர்களையும், அவர் அப்பணியில் ஈடுபட அனுமதியளித்த அவருடைய தமையனார் கானமூர்த்தி அவர்களையும் எமது கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்" என்றார். விடுதலைப் புலிகள் மூத்த உறுப்பினர் தேவர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமது வெளியீட்டுரையில், 15 ஆண்டுகளுக்கு முன் எகிப்திய வீடுதலை முன்னணி லண்டனில் எடுத்த ஒரு இசைவிழா பற்றிக் குறிப்பிட்டார். "அவர்களது போராட்ட விவரணப் படத்தில் போராட்டத்தின் சகல அம்சங்களிலும் இசையே சம்பந்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அதன் பொறுப்பாளருடன் அது பற்றிக் கேட்டபோது தமது போராட்ட எழுச்சி தீவிரமடைந்ததற்கு அது கலைகளுடன் முக்கியமாக இசையுடன் இணைந்தமையே காரணம் என்று அவர் தெரிவித்தார்" என்றார். "விடுதலை என்பது மண்ணை மீட்க, அரசமைக்க மாத்திரமன்று நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து மனித சமூகம் விடுதலைக்காகப் போராடி வருகின்றது. ஆன்மீகத்தின் தேடுதல் முயற்சியும் வீடுதலையே, புரட்சிகர இயக்கம் புகட்டும் விழிப்புணர்வும் விடுதலையே. இயற்கையில் பிரபஞ்சத்தில் ஒரு ஒத்திசைவு இருக்கிறது. அதைப் 'பிரபஞ்ச கானம்' எனலாம். ஆன்மாவின் உள்ளுணர்வும் இசை மயமானது கலை விடுதலையோடு சம்பந்தப்பட்டது. எமது போராட்டம் ஆழமான, காத்திரமான பரிமாணங்களைக் கொண்டது" என்றார். அடுத்துப் பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. பங்கேற்ற கலைஞர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. யாழ். மாவட்டச் சிறப்புத் தளபதி தமிழ்ச்செல்வன் (தினேஷ்) பரிசிகளை வழங்கினார். விடுதலைப் புலிகள் மகளிர் முன்னணிப் பொறுப்பாளர் ஜெயா அவர்கள் தமது உரையில் "இந்த இசையருவி வெளியீடு தேசத்தின் உணர்ச்சிக் குவியலின் வெளியீடாகும். மக்களைத் தட்டி எழுப்ப வல்லது இசை. தொட்டிலில், வயலில், கடலில் எங்கும் இசையே ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கின்றோம். நாடி, நரம்புகளைத் தட்டிக் கொடுத்து நெறிப்படுத்தக் கூடிய ஆற்றல் இசைக்குண்டு. இன்று நோயைக் குணப்படுத்தவும் ஏன் தாவரங்களின் வளர்ச்சிக்குங் கூட இசையைப் பயன்படுத்த முயல்வதைப் பார்க்கின்றோம். இதனாலேயே ஏனைய கலைஞர்களுக்கில்லாத தனிமதிப்பை இசைக் கலைஞர்கள் பெறுகின்றார்கள். நாங்கள் எமது வரலாற்றை எழுதப் புறப்பட்டு விட்டோம். இரத்தத்தால் எழுதுகின்றோம். இது தொடர வேண்டும். அதற்காகவே 'பொங்குங் கடற்கரை' எனத் தொடங்கும் அருவி 'தொட்டிலை விட்டுத் துள்ளியெழு' என்று இசைத்துச் செல்கிறது" என்றார். செயலதிபர் யோகரத்தினம் யோகி அவர்கள் தமது வாழ்த்துரையில் "எம்மைச் சுற்றி இராணுவம் நிற்கிறது. மக்கள் கடையைச் சுற்றிக் கியூவில் நிற்கிறார்கள். நாங்கள் பதுக்கி வைத்து இப்பொழுது பொருள்களை வெளியில் விடுவதாகவும் பழி கூறுகிறார்கள். பசியோ, பட்டினியோ எங்களை எதுவும் செய்யாது. கஷ்டங்களை ஏற்கப் பயிலுவது தான் எமது போராட்டத்தின் முதற்கட்டப் பயிற்சி. கஷ்டங்களின் மத்தியிலேதான் நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும்" என்றார். "நாதஸ்வரம் 12 வருடப் பயிற்சி பஞ்சமூர்த்தி அவர்களது தாத்தா பெரிய கலைஞர். அவரே பெரிய குருவாகவும் அமைந்தது பாக்கியம். அவ்வாறு பயிற்சியளிக்கும் நாதஸ்வரக் கலைக் கல்லூரியும், தவில் கலைக் கல்லூரியும் கீரிமலையில் அல்லது மாவிட்டபுரத்தில் நிறுவப்பட வேண்டும். எங்கள் சூழலிலிருந்து வீரமும், உங்கள் குழலிலிருந்து நாதமும் புறப்படட்டும் இரண்டும் விடுதலைப் போரில் ஒன்றாக இணையட்டும்" என்றார். நாதஸ்வர மேதை பத்மநாதன் வாழ்த்தும்போது "கலைஞர்களின் உள்ளம் மென்மையானது. இன்றைய சூழ்நிலைகள் அவர்களின் ஆத்மாவையே பாதித்து விடும். சாஸ்திரீய சங்கீதத்தை மெல்லிசையோடு கலந்து பஞ்சமூர்த்தி வாசித்துள்ளார். அது அரிய சாதனை. ஒலிப்பதிவு செய்யும்போது பக்க வாத்தியம், கால அளவு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை வென்று பல இடங்களில் உச்சநிலைக்கும் அவர் சென்றுள்ளார். ஆதலின் கலைஞர் மாத்திரமல்ல அவரது இசையை ஒலிப்பதிவு நாடாவிற் கொண்டு வந்த புதுவை அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே" என்றார். சங்கீதபூஷணம் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் தமது வாழ்த்துரையில் "போர்க்களத்தில் போராளிகள் படும் கஷ்டத்திற்குச் சமமான கஷ்டத்தை ஒலிப்பதிவுக் களத்தில் கலைஞர்கள் படுகிறார்கள். பாலமுரளிகிருஷ்ணா, இந்தியாவிலும் பார்க்க ஈழத்திலேயே தலைசிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்" என்று பாராட்டினார். "மேற்கத்திய இசைப் பின்னணியைக் கர்நாடக இசையுடன் கலந்து நாதஸ்வர கானமாகத் தந்த ஈழத்து முதற் கலைஞர் பஞ்சமூர்த்தியே" என்று பாராட்டினார். நவாலியூர்ச் சச்சிதானந்தன் அவர்கள் "திராவிடர் அளித்த வரப்பிரசாதம் நாதஸ்வரமும், வீணையும். மேற்கத்திய சங்கீதம் கடதாசியில் அச்சிட்டு வைத்து விட்டு வாசிப்பது ஆனால் கீழைத்தேய இசையை மனோதர்ம சங்கீதம் எனலாம். கற்பனா சுரத்தைப் புகுத்திக் கலைஞர்கள் விரும்பியவாறெல்லாம் தமது ஆற்றலைக் காட்ட அது இடமளிப்பது" என்றார். "விடுதலைக் கீதங்களைக் கலைஞர்கள் பாடியவாறே குழந்தைகளும் இன்று பாடுகிறார்கள். மூன்று வயதுப் பாலகன் பாடியதைக் கேட்டு வியந்து நின்றேன். குழந்தைகளின் குரலில் அப்பாடல்களை இசைநாடாவில் கொண்டுவரக் கலை பண்பாட்டுக் கழகத்தினர் முயல வேண்டும்" என வேண்டுகோளும் விடுத்தார். "நாதஸ்வரத்தில் 'தூக்கமா கண்மணி' என்ற பாடல் இசைத்தபோது ஜலதரங்கம் வாசித்தது போன்றேயிருந்தது. 'பாடும் பறவைகள்' என்ற பாடலில் ஸ்தாயி ஏற்றம் அருமையாக அமைந்தது. நாதஸ்வரத்தில் வைத்து ஊதும் சீவாளி நறுக்கு இன்றிப் பெரிய கலைஞர்களே கஷ்டமடைகின்றனர். அந்த நறுக்கைப் பெற்றுக் கொடுக்கவும் முயற்சி எடுக்க வேண்டும்" என்றார். வண. பிரான்சில் யோசேப் அடிகள்: “கலை பண்பாட்டுக் கழகத்தின் புதிய அத்தியாயம் இவ் இசையருவி வெளியீடு. மொழியும், கலையும் வளராவிட்டால் பண்பாடு வளரமாட்டாது. வளர்ந்த மொழியிலேயே சிறந்த பண்பாட்டு விழுமியங்களைக் காணமுடியும். நுண்கலைகளுள் முதன்மையிடம் பெறுவது இசை. தாலாட்டு முதல் ஒப்பாரி வரை வாழ்வில் இணைந்து நிற்பது இசை. இறைவனிடமும் உள்ளத்தை இசைய வைப்பது இசை. "உள்ளத்தை ஈர்த்து எழுச்சியூட்ட வல்லது இசை. ஆதலால் ஆட்சியாளர்கள் இசைக்கு ஆதரவு காட்ட வேண்டும்." என்று கூறுகின்றான் நெப்போலியன். கலையில் புதுமையும் பேணப்பட வேண்டும். நெகிழ்ச்சியும் வேண்டும், 'யாவரும் கேளீர்' என்றான் புறநானூற்றுப் புலவன். சமகாலத் தேவையை நிறைவு செய்யும் இசையருவியை 'யாவரும் கேளீர்'" என்று வாழ்த்தினார். இயல் இசை வாரிதி வீரமணி ஐயர் "தெய்வத்துக்குரிய இசையை மக்களுக்காக்கி உள்ளார் கலைஞர் பஞ்சமூர்த்தி. பாடல்களை அனுபவித்து வாசித்துள்ளார். ஆறடி நிலமும் கேட்கமாட்டோம் எனக் கேட்கும் போராளியோடு ஒன்றிவிட்டார். பாடல்களைத் தொடங்குமுன் அவர் இசைப்பதிலேயே இன்ன பாடல் வரப்போகின்றது என அநுமானிக்க வைத்து விடுகின்றார்" என்றார். "போராளிகள் அநுபவிப்பதிலும் பார்க்கக் கூடிய உடல் வருத்தத்தை ஊதும் போது நாதஸ்வரக் கலைஞர்கள் அநுபவிக்கின்றார்கள்" எனவும் எடுத்துரைத்தார். கம்பன் கழக அமைப்பாளர் ஜெயராஜ் வாழ்த்துக் கூறும் போது: "முதலாவது இசை நாடா வெளியீட்டில் மேடையில் முக்கால் பங்கை விடுதலைப்புலிகள் எடுத்துக் கொண்டார்கள். காற்பங்கிலேயே கலைஞர்கள் இருந்தார்கள். இன்று மேடையில் கலைஞர்கள் முக்கால்பங்கைப் பிடித்து விட்டார்கள். இந்த வளர்ச்சி பாராட்டப்பட வேண்டியதே. பாரதியார் முயிற்பாட்டில் நான்முகன் படைத்தவை எல்லாவற்றையும் எடுத்துரைத்து 'சால மிகப் பெரிய சாதனை காண் ஈதெல்லாம்' என்று வியந்து, 'ஆனாலும் நின்தன் அதிசயங்கள் யாவினுமே, கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா' என்றும், 'ஆசை தருங்கோடி அதிசயங்கள் கண்டதிலே ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ' என்றும் பாடியவற்றை முழுப்பாடலாகவே கூறி இசையின் ஈடில்லாப் பெருமையை உணர்த்தினார்." ஈற்றில் சட்டத்தரணி பூலோகசிங்கம் அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிது நிறைவேறியது. இந்த வெளியீட்டு விழா பஞ்சமூர்த்தி அவர்களுக்கும் ஒரு பாராட்டு விழா போல அமைந்ததைக் காணமுடிந்தது. ஒரு கலைஞனை இன்னொரு கலைஞன் வாழ்த்திப் பாராட்டும்போது எல்லோர் மனமும் நிறைவு கொள்கிறது; ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகிறது. இரு வாரங்களுக்கு முன்புதான் மாபெரும் இசைக் கலைஞனான நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதனுக்கு மணிவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த 'இசையருவி' வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக ஒழுங்கு செய்து இந்த நாடாவை முற்றிலும் புதிய முறையில் உருவாக்கிய விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் போற்றிப் பாராட்டுதற்குரியது. ******
  3. இறுவெட்டு அட்டைகள் ஆனையிறவு "ஆனையிறவு" இசைத்தட்டு - மதிப்பீட்டுரை திறனாய்வு: - மூலம்: களத்தில் (14.12.2000) பக்கம்: 7 "ஆனந்தப் பூங்காற்று காதினிலே, ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா! ஆனையிறவிலே ஏறிடும் போதிலே.. ஆகாயம் கைகளில் ஆடுதம்மா!" ஆகாயம் மட்டுமா ஆடியது? அன்று இம்மண்ணில் பிறந்த எல்லாமுமே ஆடின. கால் நடக்க இயலாப் பூட்டன்கூட அன்று தான் நாலு காலிற் பாய்ந்து துள்ளிக் குதித்தார். ஒவ்வொரு தமிழனும் அந்நேரம் இறக்கை கட்டிப் பறந்து விண்ணில் மிதந்தான். யானையைக் காலால் தட்டி விழுத்திய புளுகம் எமக்கு. ஆனையிறவை நாங்களே அடித்துப் பிடித்த நினைப்பு. உச்சரிக்கவே பயந்த ஆனையிறவை பெயர்த்தெறிந்து எம் பிள்ளைகள் வென்றார்கள் என்ற செய்தி அனைவரையுமே உச்சத்திற்கே அழைத்துச் சென்றது. எங்களாலும் எதுவும் முடியும் என்ற அகங்காரம் தலைக்கேற ஆனையிறவில் ஏறி நடந்தோம். பல நூற்றாண்டுகளாக ஆதிக்கவாதிகளின் பிடியிலிருந்து எமது வீரர்களால் உயிரும் உதிரமும் அர்ச்சித்துப் பெற்ற பூர்வீகப் பூமியை பார்த்தபோது எமக்கேற்பட்ட ஆனந்தக் களிப்பு எங்களையே மீறி எமக்குள் பீறிட்டெழுந்த சந்தோச அலைகள், ஈடிணையற்ற இந்த வெற்றியை என்னென்று சொல்லி எப்படி மகிழ்வதென்று அறியாது நின்று நாம் பட்ட தத்தளிப்பு, ஒவ்வொரு உயிர்களையும் உப்புத் தரையில் விலை கொடுத்தபோது எமக்கிருந்த உளக் குமுறல், இந்தக் கோட்டையை விழுத்த முடியவில்லையே என்ற ஏக்கம் ஆனையிறவிலும் புலிக்கொடி பறக்காமலா போகும் என்று நீண்டகாலமாய் எமக்குள்ளிருந்த ஆதங்கம்... அத்தனைக்கும் தீர்ப்பெழுதி ஆனையிறவின் கன்னத்தில் முத்தமிடுகிறது எம் மூச்சுக்காற்று. இவற்றையே அடிநாதமாய் ஆதார சுருதியாய்த் தாங்கி வெளிவந்திருக்கின்றது ஆனையிறவுப் பாடல் இசைத்தட்டு. இசைப் பாடல்களை கேட்கும்போது நாம் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் அடைகின்றோம். எங்களுடைய புலன்களை கூர்மையடையச் செய்து நாம் நேரில் காணாதவற்றையும் கற்பனையின் மூலம் காணுகின்றோம். இவற்றுக்கும் மேலாக இசைப்பாடல்கள் கேட்பவர் மனங்களை ஆட்கொண்டு அவர்களைச் சிந்திக்கவும் உணரவும் செய்கின்றன. வெறுமடனே ஆகா! ஓகோ! என்று வந்து சன்னதமாடி, கேட்பவர் மனங்களில் பெரும் போதையையே தூவிவிட்டு நிகழ்காலத்திலேயே நிழலற்றுப் போகும் இன்றைய தென்னிந்தியச் சினிமாப் பாடல்களுக்குச் சவாலாக ஈழமண்ணில் பிறப்பெடுக்கும் தாயகப் பாடல்கள் கேட்பவர் மனங்களை மட்டுமன்றி காலத்தையும் வென்று நிலைத்து விடுகின்றன. குறிப்பாக, 80களிலேயே தாயகப் பாடல்களின் வருகை ஆரம்பமாகியது. இற்றைவரை பல நூற்றுக்கணக்கான பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. விடுதலைக்கு மக்கள் மனங்களில் உயிர்ப்பூட்டுவனவாக சுதந்திரப்போரின் உந்துசக்தியாக, காலப்பதிவாக, மன உணர்வுகளின் வெளிப்பாடாக இசைப்பாடல்களின் வருகை காலத்திற்குக் காலம் உச்சத்தைத் தொட்டே வந்திருக்கின்றது. தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றுப் பதிவான நிகழ்வுகளைக் கலைப்பதிவாக்குவதில் இசைப்பாடல்களும் இடம்பிடித்துள்ளன. இசைப்பாடல்களின் பிரசவம் என்பது புத்துணர்வுடன்கூடிய ஒரு கூட்டுமுயற்சியாகும். பாடலாசிரியன் சொல்ல வந்த கருத்தை, அதன் உணர்வைச் சிதைக்காத மெட்டுக்களும், பாடகரின் உச்சரிப்பும் மிகவும் கச்சிதமாக பாடல்களை மெருகேற்றி விடுகின்றன. பாடல் அடிகளில் இசையின் செழுமையுடன் கவித்திறமும் ஈடுசோடாக ஓசை வீசுவதைக் காண்கிறோம். ஆனையிறவு இசைத்தட்டிலே வரும் ஒன்பது பாடல்களின் கவிதை வரிகளுக்கும் சொந்தக்காரர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களே. ஓசை பிறழாது சொல்லைக் கையாளும் விதம் ஒவ்வொரு பாடல்களிலும் பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது. கேட்பவர் மனங்களைச் சுண்டியிழுக்கும் வார்த்தைகளால் இனிய இசையில் குழைந்து அதற்கு இசைந்த குரல்களில் வெளிவந்துள்ள இப்பாடல்கள் கேட்கும்போது எம்நெஞ்சைத் தொடுகின்றன. தமிழீழத்தின் மூத்த இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணன் அவர்கள் இந்த ஆனையிறவு ஒலிப்பேழைக்கு இசைக்கலவை வழங்கி கனிவூட்டியுள்ளார். இயல்பாகவே தன் நுணுக்கமான மெட்டுக்களால் பாடல்களைக் கேட்பவர் மனங்களில் இலாவகமாகத் தொற்ற வைத்துவிடும் திறமை கைவரப் பெற்ற இசைவாணர் கண்ணன் அவர்கள் ஆனையிறவிலும் தன் கைவண்ணத்தைக் காட்டத் தவறவில்லை. ஆற்றின் ஓட்டம் போல் எந்தத் தடங்கலும் இன்றி இப்பாடல்கள் வந்து குவிகின்றன. இந்த ஒலிப்பேழையில் உள்ள பாடல்களைப் பாடிய பாடகர்களும் தத்தம் குரல் இனிமையை, திறமையை நிலைநிறுத்தியே உள்ளனர். இவர்களுடன் இளைய ஒலிப்பதிவாளர் மலையவனும் திறம்படச் செயற்பட்டுள்ளார். எல்லாப் பாடல்களும் என்று மிகைப்படுத்திக் கூறமுடியாவிட்டாலும், ஓரிரு பாடல்களைத் தவிர ஏனையபாடல்கள் உச்சத்தைத் தொட்டே நிற்கின்றன. இவ்வொலிப் பேழையில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய பாடலாக மாவீரர் பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடல் தன்னுடன் எம்மையும் தென்னை மரத்தோப்பிற்குள் அழைத்துச் செல்கிறது. பாடலில் பொதிந்துள்ள கவிதை வரிகள், பாடலுக்கு வழங்கப்பட்டுள்ள இசை, பாடலைப் பாடியுள்ள விதம் எல்லாமே ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்றன. மாவீரர்களின் முகங்களை நெஞ்சக் கண்முன் நிழலாட வைக்கும் அளவிற்கு உணர்வுப் பிழிவாக அமைந்துள்ள அப்பாடல் மனதின் அடிவேர் வரை சென்று, அது சொல்ல வந்த கருத்தை, உணர்வை மற்றவர்களிடத்தில் தொற்ற வைப்பதில் வெற்றி கண்டுள்ளது. "தென்னை மரத்தோப்பு உம்மை எதிர்பார்த்து ஒரு கண்ணழுதவாறு காத்திருக்கும்" என்ற பாடல் நிச்சயமாக கேட்பவர்கள் மனங்களை இளக வைக்கும். இவ்வாறே பாடகர் சாந்தனின் வெண்கலக் குரலில் அமைந்த பாடல். "இனி வரும் இனி வரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள்" என்ற பாடல் மற்றும் பாடகர் சுகுமாரின் கம்பீரமான குரலில் அமைந்த, "நித்திரையா தமிழா" என்ற பாடல், திருமலைச்சந்திரன், நிரோஜன் ஆகியோர் பாடிய "சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில் செந்தூரப் பூ மழை தூவியது சென்றார்கள் வென்றார்கள் என்றார்கள் அந்நேரம் தேகமெல்லாம் மின்னல் ஓடியது." போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. இத்தனைக்கும் மேலாக ஒரு வித்தியாசமான, "ஈடு வைத்து ஈடு வைத்து நந்தலாலா-தமிழ் ஈழம் தரப் போகிறாவே நந்தலாலா!" என்ற பாடல் எடுத்த எடுப்பிலேயே பலரது மனங்களையும் ஈர்த்துவிட்டது. இந்தப்பாடலைப் பலரின் வாய்கள் முணுமுணுக்கக் காணலாம். பாடல்கள் ஒவ்வொன்றுமே உணர்வுப் பிழிவாக அமைந்திருக்கின்றன. பாடகர்கள் அனைவரும் பாடல்களின் வரிகள் சுட்டி நிற்கும் கருத்தை, அதன் உணர்வை ஆழமாக உள்வாங்கி நன்றாகப் பாடியிருக்கின்றார்கள். தமிழீழத்தில் பல வெற்றிப் பாடல்களைப் பரிசளித்த மூத்த இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணன் அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் தன் அயராத உழைப்பால் ஆனையிறவை கானச்சரங்களாக்கிக் கையளித்துள்ளார். பாடல்கள் யாவும் போராளிகளின் வீர உணர்வையும் போரிடத்துடிக்கும் குன்றாத ஆர்வத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. மனங்களில் மறப்பண்பை ஊட்டுகின்றன. குறித்த இலக்கு மீது பாய்வதற்கு சந்தர்ப்பமளித்து விழித்திருக்கும் நிலப்புலி போன்ற செயல் புரிந்த வீரரின் வியத்தகு திறமைகளை இப்பாடல்கள் சாற்றுகின்றன. ஞாயிறு எழுமாயின் ஓடாது நிற்கும் இருளும் உளதோ? புலி உறுமினால் எதிரே நிற்கும் வேறு விலங்கினம் உளதோ? இல்லையே! அவைபோல, ஆள்பலமும், தேசபக்தியும், விடுதலை உணர்வும் வீரமும் உடை வீரருக்குத் தலைவனே! நீ களம் புகுந்தால் எவர்தான் நின்னை எதிர்க்க வல்லார்? புறநானூறை விஞ்சிப் புது நானூறு படைத்து நிற்கும் நின்பலத்திற்கு ஆனையிறவே சான்று பகரும். "தாயின் கொடி வானில் பறந்தது ஆனையிறவினிலே.. வாசல் திறந்திடக் கால்கள் நடந்தன மான உணர்வினிலே.. உப்பு விளைந்திடும் பூமியெடா இப் பிறப்பாயினும்- எப் பிறப்பாயினும் அது எங்களின் பூமியெடா" உலகில் ஒலி உள்ளவரை, காற்று அற்றுப்போகும் வரை இப்பாடல்களும் வாழும். தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள "ஆனையிறவு" இசைத்தட்டினை மீள்வெளியீடாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகம் வெளியிட்டுள்ளது. *****
  4. இறுவட்டு அட்டைகள் அனுராதபுரம் தேடி 2009இற்கு முன்னர் வெளியான இவ்விறுவட்டிலுள்ள மூன்று பாடல்களும் 2009இற்குப் பின்னர் ஒன்றாக்கப்பட்டு ஒரு இறுவட்டாக வெளியிடப்பட்டது. இந்த அட்டையும் 2009இற்கு பின்னர் தான் வெளியிடப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.