Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. பாகம் - 06 இப்பாகத்தில் விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்பட்ட செந்தரப்படுத்தப்பட்ட வித்துடல் விதைப்பு முறைமை தொடர்பாகக் காணலாம். முதன் முதலில் புகழுடல் புதைப்பு: வயிரவமான இந்தியப்படையின் காலத்திற்குப் பின்னரும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமயப்படியான உடல்களின் தகனம்/புதைப்பு என்பது கப்டன் சோலையின் புகழுடல் புதைக்கப்பட்டதோடு முடிவுறத் தொடங்கியது எனலாம் (மாவீரர் நாள் கட்டுரை, நேரு குணரத்தினம், 2005). 1991ம் ஆண்டு சூலை மாதம் 14ம் திகதி மகளிர் மாவீரர் கப்டன் சோலையின் புகழுடல் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் புதைக்கப்பட்டது. இம்மாவீரரின் புகழுடலே முதன் முதலாக எந்தவொரு சமய முறைப்படியான சடங்குகளும் இல்லாமல் புதைக்கப்பட்ட புகழுடலாகும். இவரது உடல் புதைக்கப்பட்ட காலத்தில் வீரமரணமடைந்த போராளியின் உடலைக் குறிக்க "உடல்" என்ற சொல்லின் பாவனை நிறுத்தப்பட்டு "புகழுடல்" என்ற சொல் பாவிக்கப்பட்டது (ஐப்பசி – கார்த்திகை, விடுதலைப்புலிகள்). "வித்துடல்" என்ற சொல் இக்காலத்தில் உருவாக்கப்படவில்லை. எனினும் இவரிற்குப் பிறகும் வீரமரணமடைந்த போராளிகளினது புகழுடல்களில் சில எரியூட்டப்பட்டன அ புதைக்கப்பட்டன. எடுத்துக்காட்டிற்கு, ஆனையிறவு மீதான ஆ.க.வெ. நடவடிக்கையின் போது தடைமுகாம் மீதான 2வது வலிதாக்குதலில் 27.07.1991 அன்று வீரமரணமடைந்த எனது தூரத்து உறவினரான 2ம் லெப். மதனாவின் உடலானது எரியூட்டப்பட்டது. எனது உறவுக்காரர்களின் (அக்காலத்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்) நினைவின் படி, இவரே இறுதியாக, ஆகக்குறைந்தது யாழ்ப்பாணத்தில், எரியூட்டப்பட்ட மாவீரர் ஆவார். இவரிற்குப் பின்னர் வேறெங்கேனும் யாரெவரினதும் புகழுடல்கள் எரியூட்டவோ இல்லை கிறிஸ்தவ சமயப்படி புதைக்கப்பட்டார்களோ என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. இவ்விடத்தில் நான் இன்னொரு விடயத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். 2ம் லெப். மதனாவின் தாயின் பெற்றோர், அறியப்பட்ட காலத்திலிருந்து, தலைமுறை தலைமுறையாக சைவ சமயத்தவர்களாவர். ஆயினும் மதனாவின் தாய் தன் கணவனின் இறப்பிற்குப் பின்னர் கிறிஸ்தவ மதத்தின் "எக்காளத்தொனி" என்னும் பிரிவிற்கு மதம் மாறினார். 2ம் லெப். மதனா வீரச்சாவடைந்த போது அன்னாரின் புகழுடலை எரிக்க புலிகள் முடிவெடுத்தனர். அப்போது தாயார் தன் தற்போதைய சமயத்தின் படி பிள்ளையின் புகழுடல் புதைக்க வேண்டும் என்று கடும் போர்க்கொடி தூக்கினார். எனினும் அறியப்பட முடியா காரணத்தால் 2ம் லெப். மதனாவின் புகழுடல் எரிக்கப்பட்டது. நடைமுறைப்படுத்தப்பட்ட செந்தரப்பட்ட மரபு: கப்டன் சோலையின் புகழுடல் புதைப்போடு மாவீரர்களின் புகழுடல்கள் சமய முறைப்படியின்றி பண்டைய தமிழர்களின் உடல் புதைப்பு முறைமைப்படி புதைக்கப்படத் தொடங்கின. தமிழீழத்தின் தேசிய நினைவுச் சின்னங்களாக போற்றப்பட்டு நெடிய காலத்திற்கும் எமது போராட்ட வரலாற்றை சொல்லிக்கொண்டிருக்கத் தக்கனயாகவே இம்மாவீரர்களிற்கான கல்லறைகளும் நினைவுக்கற்களும் எழுப்பப்பட்டன (ஐப்பசி-கார்த்திகை 1991, விடுதலைப்புலிகள்). மேலும் இவர்களின் நினைவு வரும் போதெல்லாம் இவர்களின் உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் மாவீரர் பீடங்களுக்குச் சென்று மலர்வணக்கம் செய்து அழலாம். வீரவணக்கம் செலுத்தலாம். அதற்காகத் தான் இவர்கள் புதைக்கப்பட்டனர், அதற்காகத்தான் இவர்களிற்கு நினைவுக்கற்கள் நாட்டப்பட்டன! இக்காலகட்டத்தில் "வீரச்சாவு, வித்துடல், விதைகுழி, விதைப்பு, தூண்டி/தியாகசீலம்" ஆகிய சொற்கள் புலிகளால் உருவாக்கப்பட்டு மக்களிடையே புழக்கத்திற்கு விடப்பட்டன. இவை உருவாக்கப்பட்டு முதன் முதலில் பாவனைக்கு வந்த காலம் தெரியவில்லை என்றாலும் இவை மாவீரரின் வித்துடலொன்றின் முதல் விதைப்பிற்குப் பின்னர் தான் எழுந்தது எனலாம். எனினும் ஆகக்குறைந்தது 1992/10/07 வரையாவது இவை பாவனைக்கு வரவில்லை. மேற்குறிப்பிட்ட சொற்களின் உருவாக்கத்தால் புதைத்தல், உடல், புகழுடல், பொடி போன்ற சொற்கள் பின்னாளில் கைவிடப்பட்டு மாவீரர் சார் இச்சொற்களே மாவீரர் வீரவணக்க நிகழ்வுகளிலும் அவை தொடர்பான நிகழ்வுகளிலும் பாவிக்கப்பட்டன. பேச்சு வழக்கிலும் 2009 முடிவுறும் வரை மக்கள் நடுவணில் பரவலறியாக பாவனையில் இருந்தன. இன்றளவும் சிலரின் வாய்ப்பேச்சில் இவை உச்சரிக்கப்படுகின்றன. இன்றுவரை கூட சில பொதுமக்களிடத்தில் மாவீரரின் வித்துடலை "பொடி/BODY" என்ற சொல்லால் குறிப்பிடுவது ஒரு இழுக்கான செயலாகவே பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். புலிகளின் இந்த மாவீரர் வித்துடல் விதைப்பு என்பது பின்னாளில் ஒரு செந்தரப்படுத்தப்பட்ட மரபாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதற்கு மக்கள் நடுவணில் எந்தவொரு எதிர்ப்பும் உருவாகவில்லை. மக்களின் முழு மனச் சம்மதத்துடனே தான் இது புலிகளால் மரபாக பரிணமிக்கப்பட்டது. தூண்டி முதல் துயிலுமில்லம் வரை: தூண்டியில் நடப்பவை: ஒரு போராளி களத்தில் வீரச்சாவடைந்து விட்டாலோ அல்லது விழுப்புண்ணேந்தி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு காயச்சாவடைந்துவிட்டாலோ அம்மாவீரரின் வித்துடலானது முதன் முதலில் கொண்டு செல்லப்படுவது "தூண்டி" என்றழைக்கப்பட்ட புலிகளின் பாசறை ஒன்றிற்குத்தான். பின்னாளில் இது "தியாகசீலம்" என்றழைக்கப்பட்டது (தியாகசீலம், வி.இ.கவிமகன்). இவ்வாறு வீரச்சாவடைந்தவரை புலிகளின் விடுதலை உணர்வுமிக்க மொழிநடையில் "விதையாகி வீழ்ந்துவிட்டார்" என்பர். இந்தத் தியாகசீலம் என்ற சொல்லானது மறைமுகக்கரும்புலிகள் உள்ளிட்ட புலனாய்வுத்துறை மாவீரர்களின் அடைமொழி என்பதுகூட நினைவூட்டத்தக்கது ஆகும். இவ்விடத்திற்குக் கொண்டுவரப்படும் மாவீரரின் வித்துடலில் அம்மாவீரருக்கென்று வழங்கப்பட்ட மூன்று தகடுகளில் (கழுத்துத் தகடு, இடுப்புத் தகடு, மணிக்கட்டுத் தகடு) ஏதேனும் ஒன்று வித்துடலில் இருந்தாலும் அதில் உள்ள தகட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு தலைமைச்செயலகத்தால் வித்துடலிற்கு உரியவர் இன்னார் தானென்று உறுதிசெய்யப்பட்டு தூண்டி/தியாகசீலத்திலுள்ள தொடர்பாளருக்கு அறிவிக்கப்படும். அதனைக் கொண்டு ஏனைய ஒழுங்குமுறைகளை தூண்டிக்காரர் செய்வர் (தியாகசீலம், வி.இ.கவிமகன்). சில வேளைகளில் மாவீரர்களின் வித்துடல்கள் சிங்களப் படையினரால் கைப்பற்றப்படுவதுண்டு. அவ்வாறான வேளைகளில் அவை சிங்களப் படையினரால் சிதைக்கப்பட்ட பின்னரே செஞ்சிலுவைச் சங்கத்தினர் ஊடாக புலிகளிடம் ஒப்படைக்கப்படும்; ஆண்குறிகள், பெண்குறிகள், முலைகள் போன்ற பாலியல் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருக்கும், உடல்களின் சில பாகங்கள் கொத்தப்பட்டிருக்கும், முகமெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கும். இது போன்ற ஈனச்செயல்கள் புலிகள் மீதான ஒரு உளவியல் செயற்பாடாக சிங்களவரால் செய்யப்பட்டது (விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் தகவலின் படி). எனினும் நாளடைவில் புலிகள் இதற்கு இசைவாக்கமடைந்துவிட்டனர். அத்துடன், சிங்களப் படையினரால் கைப்பற்றப்படும் வித்துடல்களிலுள்ள குப்பி மற்றும் தகடுகள் என்பன அவர்தம் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக கழற்றியெடுக்கப்பட்டிருக்கும். மேலும், சில வேளைகளில் களமுனையில் சிதறிய/ சிதைந்து போன வித்துடல்களும் புலிகளால் மீட்கப்படும். இவ்விதமான சிதைந்த வித்துடல்களை அடையாளம் காண்பது மிகுந்த சிரமமான பணியாகும். இவற்றை அடையாளங்காண அற்றைய சமரில் காணாமல் போன போராளிகளின் பெயர்களைக்கொண்டும் களமுனையில் அன்னவர்களுடன் நின்றவர்கள் மூலமுமாகவும் கிடைத்த தகவல்களைக்கொண்டு வித்துடல்களை அடையாளம் காண முயல்வர். இதில் தோல்வி அடைந்தால், தலைமைச் செயலகத்தின் ஆளணி அறிக்கைப் பகுதியிடமுள்ள கடைசியாக எடுக்கப்பட்டிருந்த தனியாள் அறிக்கையிலுள்ள காய விரிப்புகளையும் அன்னவர்கள் ஏற்கனவே வழங்கியிருந்த அங்க அடையாளங்கள் மூலமும் அடையாளம் காண முயல்வர் (தியாகசீலம், வி.இ.கவிமகன்). இம்முயற்சிகள் அனைத்திலும் தோல்வியேற்படும் பொழுது அவ்வித்துடல்களிற்கு பொதுப்பெயராக “தியாகசீலம்” என்ற மதிப்புமிக்க பெயரை வழங்கி மாவீரர் துயிலுமில்லத்தில் முழுப் படைய மரியாதையுடன் புனித விதைகுழியில் விதைப்பர். அவை தமிழீழம் விடுதலை அடைகின்ற காலத்தில் மரபணு சோதனை மூலம் குடும்பத்தவரை அடையாளம் காணலாம் என்ற நம்பிக்கைகொண்டு புலிகளால் விதைக்கப்பட்டன (தியாகசீலம், வி.இ.கவிமகன்). இவர்களிற்கு எழுப்பப்படும் உரியவர் கல்லறைகளில் உடையவரின் குறிப்புகள் எதுவும் இடம்பெறாது. முழுமையாக புலிகளால் மீட்கப்பட்ட ஒரு வித்துடலோ இல்லை சிங்களப் படையினரால் ஒப்படைக்கப்பட்டவற்றில் நன்னிலையில் உள்ள வித்துடலோ அடையாளங் காணப்பட்டால் அதை பெற்றாரிடத்தில் ஒப்படைப்பதற்கு முன்னர் புலிகளால் சில ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படும். முதலில் வித்துடல் புனிதப்படுத்தப்படும்; தூய்மைப்படுத்தப்பட்டு/ குளிப்பாட்டப்பட்டு தேவையான வாசனைத் திரவியங்கள் பூசப்படும். பின்னர் தொற்றுநோய் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு ஓரிரு நாட்கள் வைத்துக்கொள்ளுவதற்கேற்ப பதனிடப்படும். அடுத்து அன்னாரின் படைத்துறை கிளையிற்கேற்ப புதிய வரிச்சீருடை அணிவிக்கப்படும். கால்களிற்கு வெள்ளை நிற காலுறையிடப்படும். சப்பாத்து அணிவிக்கார். அடுத்து ஒரு விதத் தோரணியான வெள்ளைத் துணி விரிக்கப்பட்ட சந்தனப் பேழையினுள் வித்துடல் வளர்த்தப்படும். பேந்து, அன்னாரிற்கு படையத் தரநிலை வழங்கப்படும். இச்சந்தனப் பேழையின் கால்மாட்டுப் பக்கத்தில் குறித்த மாவீரர் தொடர்பான தகவல்கள் ("வீரவணக்கம்", புலிகளின் இலச்சினை ஆகியவற்றுடன் மாவீரரின் வீரச்சாவுத் திகதி, தரநிலையுடனான இயக்கப்பெயர், முழுப்பெயர் , வதிவிட முகவரி மற்றும் வீரச்சாவின் காரணம் ஆகியன முறையே நிரப்பப்பட்டிருக்கும்.) கொண்ட படிவம் போன்ற சிறு துண்டொன்று ஒட்டப்படும். அது வித்துடல் விதைக்கும் போது சந்தனப் பெட்டியுடனேயே விதைகுழியினுள் செல்லும். இதுதான் அந்த படிவம். மேலுள்ள படிவமானது மேஜர் புகழ்மாறனின் சந்தனப் பேழையில் குத்தப்பட்டிருந்தது ஆகும். படிமப்புரவு: த.வி.பு. முற்றாக சிதைந்த வித்துடலொன்று அடையாளங் காணப்பட்டால் அதற்கு புலிகளின் வழமையான வித்துடல் ஒப்படைப்பிற்கான ஒழுங்குமுறைகள் (மேற்கூறப்பட்டவை) முடிக்கப்பட்டு, அதன் பின்னர் உரிய மரியாதைகளுடன் சந்தனப் பேழையிற்கு சோடினை செய்யப்பட்டு, திறக்க முடியாதபடியாக முத்திரையிட்டு, மூடப்பட்ட சந்தனப் பேழையில் தான் உரியவரின் பெற்றாரிடத்தில் வழங்கப்படும். தொற்று நோய் மற்றும் சிதைந்த உடலைக் காண்பதால் ஏற்படும் ஏந்தின்மைகள் போன்றவற்றை தடுக்கும் நன்னோக்கில் அதனை திறக்க பெற்றாரைப் புலிகள் அனுமதிப்பதில்லை. வீரச்சாவு செய்தி அறிவிக்குகை: அடுத்து, அன்னாரின் குடும்பத்தாரிற்கு அவரின் வீரச்சாவு தொடர்பான தகவலானது குறித்த மாவீரரின் முகவரிக்கான கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரிற்கு அறிவிக்கப்படும். பின்னர் அவர்கள் அரசியல்துறைப் போராளிகள் மூலம் அக்கிராமத்தின் போரெழுச்சிக்குழுத் தலைவரை அணுகுவர். அவர் இல்லாதவிடத்து கிராமசேவகர் பிரிவுத் தலைவரையோ அல்லது அங்குள்ள உணர்ச்சிமிக்க ஊரையறிந்த இளைஞர்களை அணுகுவர். அவர்களிடத்தில் குறித்த குடும்பத்தில் இவ்விழப்புச் செய்தியைக் கூறியவுடன் தாங்கும் உளவலிமை படைத்தவரை அடையாளம் காண்பர். பின்னர் அரசியல்துறைப் போராளிகள் குறித்த மாவீரரின் வீட்டிற்கு வந்து ஏற்கனவே அடையாளம் கண்டிருந்த அந்த உளவலிமை படைத்த குடும்ப உறுப்பினரை தனியாக அழைத்துச்சென்று அவரிடம் இச்செய்தியை மெதுவாகத் தெரிவிப்பர். தாங்கொணாத் துயரத்துடன் அவர் இத்தகவலை ஏனைய குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்வார். அவர்களும் இடிவிழுந்த சோகத்துடன் தமக்குரியவரின் “வீரச்சாவு வீடு” செய்வதற்கான ஒழுங்குகளை செய்யத் தொடங்குவர். இவர்கள் விம்மிவெடித்து அழும் ஓலத்தாலும் ஏற்கனவே போரேழுச்சிக்குழுத் தலைவருக்குத் தெரியப்படுத்தியிருந்ததாலும் அவ்வூர் மக்களும் இழப்புச் செய்தியை அறிவர். இதனால் ஊர் இளைஞர்கள் வந்து அவர்தம் வீரச்சாவு வீட்டிற்குத் தேவையான வேலைகளை செய்து தருவர்; பந்திலிடுதல், பூக்கள் கொணர்தல், அவர்தம் வீடுள்ள தெருவில் ஏலுமானவரை எழுச்சிக்கொடியினைக் கட்டுதல் (பெரும்பாலும் போரெழுச்சிக்குழுவால் வழங்கப்படும்), தெருவை துப்புரவாக்குதல் முதலியன. வீரச்சாவு வீட்டில் கட்டப்பட்டிருக்கும் எழுச்சிக்கொடியானது அவ்வீட்டில் வீரச்சாவு நடந்துள்ளதென்பதை அயலவரிற்கு தெரியப்படுத்தும். அயல்களில் அற்றைநாளில் மங்கள நிகழ்வுகள் செய்வதை கூடியவரை தவிர்த்துக்கொள்வர். இதுவே மாவீரரின் உரியவர்கள் சிங்களப்படையின் கட்டுப்பாட்டுப் பரப்பிற்குள் வாழ்ந்தால் அவர்களுக்கு கமுக்கமான முறையில் தகவல் அனுப்பிவைக்கப்படும். அவரின் உறவினர் யாரேனும் வித்துடல் உள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பரப்பிற்குள் வாழ்ந்தால் அவரிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் வீரச்சாவு வீடு நடத்துவர். ஒருவேளை யாரும் இல்லையெனில் மாவீரரின் வித்துடலிற்கு புலிகள் தாமே ஆளிட்டு அனைத்து மரபுவழிச் செய்கைகளையும் முடித்துவிட்டு முழுப் படைய மரியாதையுடன் புனித விதைகுழியினுள் விதைப்பர். தேசியத் தலைவரின் வீரவணக்கம்: கட்டளையாளர்கள் (கேணல் மற்றும் பிரிகேடியர் தரநிலையுடையோர்) மற்றும் பெரிய வெற்றித்தாக்குதல்களில் வீரச்சாவடைந்த தரைக்கரும்புலிகள் (பலாலி படைத்தளக் கரும்புலிகள், எல்லாளன் கரும்புலிகள் மற்றும் ஜோசெப் கூட்டுப்படைத்தளக் கரும்புலிகள்) போன்றோரின் வீரச்சாவின் பின் தலைவர் தானே நேரில் அவர்கட்கு வீரவணக்கம் செலுத்துவார். அப்போது அவருடன் கட்டளையாளர்களும் கூட நின்று மலர்வணக்கம் செய்வர். பிறகு, அனைவரும் ஒரே நேரத்தில் படைய மரியாதை செய்வர். பின்னர் அம்மாவீரர்களின் சந்தனப் பேழைகள் வீட்டாரிடம் அனுப்பி வைக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் மூத்த மற்றும் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலிற்கு மே 2008இல் தேசியத் தலைவர் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்துகிறார். படிமப்புரவு: த.வி.பு. கரும்புலிகளிற்கு கரும்புலிகளின் வீரவணக்கம்: வீரச்சாவடைந்த கரும்புலிகளிற்கு (அனைத்துப் பிரிவினருக்கும்) அவர்தம் திருவுருவப்படத்திற்கு முதலில் ஏனைய கரும்புலிகள் வீரவணக்கம் செலுத்திய பின்னரே அவர்தம் வீடுகளிற்கு திருவுருவப்படங்கள் அனுப்பிவைக்கப்படும். பாதுகாப்புக் காரணங்களால் ஏனைய கரும்புலிகள் பொதுவெளியில் தோன்றமுடியாததால் இவ்வாறு செய்யப்படுவதுண்டு. ஜோசப் படைத்தளத்தின் கதூவீ மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த 10 தரைக்கரும்புலிகளின் வித்துடல்களிற்குமான வீரவணக்க நிகழ்வின் போது கரும்புலிகளுடன் சேர்ந்து தலைவரும் வீரவணக்கம் செலுத்துகிறார். முன்னுக்கு பச்சை வரிப்புலியில் நிற்பவர் பிரிகேடியர் யாழினி எ விதுசா. படிமப்புரவு: த.வி.பு. சில வேளைகளில் தேசியத் தலைவர் வீரவணக்கம் செய்ய வந்தாரெனில் அவருடன் இணைந்து கூட்டாக வீரவணக்கம் செலுத்துவார்கள். வீரச்சாவு வீடு: அரசியல்துறை போராளிகள் வந்து தகவல் சொல்லி விட்டுச் சென்ற பின்னர், ஒரு ஊர்தியில் (காலத்திற்குக் காலம் எடுத்துவரப்படும் ஊர்திகள் மாறுபட்டன; தொடக்க காலத்தில் சிறுவகை பேருந்துகள், பின்னர் தட்டிவான்கள், பிக்கப்/ கன்டர் என்று மாறுபட்டன.) மாவீரரானவருடன் இறுதியாக களமுனையில் நின்ற போராளிகள் வித்துடலை உரியவரின் வீட்டிற்குக் கொண்டு வருவர் (வித்துடல் விதைப்பு எப்படி நடைபெறும், ஈழநாதம் செய்தியாளர் சுரேன் கார்த்திகேசு). உரியவரின் வீடு வந்ததும் அவரது வீட்டு வாசலிற்கு முன்னர் பிக்கப் நிப்பாட்டப்பட்டு அதிலிருந்து மாவீரரின் வித்துடல் இறக்கப்படும். ஆண் மாவீரர் ஒருவரின் சந்தனப் பேழையானது ஊர்தியிலிருந்து இறக்கப்படுகிறது. அம்மா நலமா திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட காட்சி. படிமப்புரவு: த.வி.பு. வித்துடலற்ற தமிழீழ புலனாய்வுத்துறை மகனார் மாவீரர் கப்டன் தமிழன்பனின் திருவுருவப்படம் தாங்கிய (சரியான பெயர் தெரியவில்லை) மகளிர் போராளிகள் இருவர் தூக்கி வருகின்றனர். படிமப்புரவு: த.வி.பு. பின்னர் அப்போராளிகளால் மனித வலுக்கொண்டு தூக்கிச் செல்லப்பட்டு அவரது வீட்டில் வீரச்சாவு செய்யவென அமைக்கப்பட்டுள்ள பந்தலிற்குள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வணக்கம் நடைபெறும். ஆண் போராளியெனில் ஆண் போராளிகளும் பெண் போராளியெனில் பெண் போராளியும் தூக்கி வருவர் (சில வேளைகளில் மாறிச்சாறி தூக்கிவருவதும் உண்டு). அச்சந்தனப் பேழையின் மேல் தேசியக்கொடி போர்த்தப்பட்டிருக்கும் (அம்மா நலமா திரைப்படம்). மாவீரர் பந்தலினுள் மாவீரரின் சந்தனப் பேழை போராளிகளால் வைக்கப்படுகிறது. அம்மா நலமா திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட காட்சி. படிமப்புரவு: த.வி.பு. அரிதிலும் அரிதாக, ஒரு பிள்ளையின் வீரச்சாவு வீடு நடந்துகொண்டிருக்க இன்னொரு பிள்ளையின் வீரச்சாவு செய்தி அவரின் பெற்றாரிற்கு தெரிவிக்கப்பட்ட நெஞ்சாங்குலை வெடிக்கும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன (அம்மா நலமா திரைப்படம்). வித்துடல் வைக்கப்பட்டுள்ள பந்தலில் - வித்துடல் ஒரு சிவப்பு அல்லது மஞ்சள் துணி விரிக்கப்பட்ட மேசையின் மேல் வைக்கப்படும். அதன் தலைமாட்டிற்குப் பின்னால் புலிகள் அமைப்பின் கொடி (தமிழீழத் தேசியக் கொடியன்று) கட்டப்பட்டிருக்கும். வித்துடலின் மருங்கில் அவரின் நண்பர்கள் அல்லது அவருடன் களமாடிய புலிவீரர்கள் ஒன்று அல்லது இரண்டு போராளிகள் துமுக்கிகள் ஏந்தியபடி நிற்பர் (இவர்களைக் காணும் போது குடும்பத்தினருக்கு சற்று ஆறுதலாக இருக்கும். இழப்பால் ஏற்பட்ட சோகத்தின் சீற்றத்தில் குடும்பத்தினர் இவர்களை தாக்கிய நிகழ்வுகளும் உண்டு. எனினும் அவற்றையெல்லாம் தாங்கியபடி அம்மாவீரரிற்காக நின்றிருப்பர். தேவைப்படின் முழுநாளும் கூட நின்றான்நிலையாக நின்றதுண்டு.) வித்துடலிற்கு குத்துவிளக்கு ஏற்றிவைத்திருப்பர். இனந்தெரியா போராளியின் வித்துடல் வீட்டின் கூடத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. பின்னால் தமிழீழத் தேசியக் கொடி கட்டப்பட்டுள்ளது. படிமப்புரவு: த.வி.பு. களப்படப்பிடிப்பாளர் மேஜர் ஈழம் எ வாணியின் வித்துடல் அவர்தம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பின்னால் தவிபு அமைப்பின் கொடி கட்டப்பட்டுள்ளது. படிமப்புரவு: த.வி.பு. மாவீரர் பந்தலினுள் மாவீரரின் சந்தனப் பேழை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அருகில் ஒரு போராளி படைக்கலன் ஏந்தியபடி நிற்கிறார். பின்னால் தவிபு அமைப்பின் கொடி கட்டப்பட்டுள்ளது. அம்மா நலமா திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட காட்சி (மெய்யான நிகழ்வுகளிலும் இதுபோலவே தான் நடக்கும்). படிமப்புரவு: த.வி.பு. வித்துடலற்ற மாவீரருக்கு வீரச்சாவுவீட்டில் வீட்டுவணக்கம் நடைபெறுகிறது. படிமப்புரவு: த.வி.பு. வழங்கப்பட்ட சந்தனப்பேழையிற்கு வீரச்சாவு வீடு நடத்தப்படும். இதில் அவரின் உற்றார், உறவினர், நண்பர்கள் என்போர் கலந்துகொள்வர். அப்போது சந்தனப் பேழையின் மூடி திறக்கப்பட்டிருக்கும். ஒரு பொதுமகன்/ பொதுமகள் வேப்பங்குழையுடன் தலைமாட்டில் நின்று நின்று இலையான் துரத்துவார். பல மாவீரர்களின் வித்துடல்கள் இருந்தால் சந்தனப் பேழையிற்கு ஒருவர்படி நின்று விசுக்குவர். சிதைந்த வித்துடல்கொண்ட முத்திரையிடப்பட்ட சந்தனப் பேழையைத் திறக்க குடும்பத்தினர் முயல்வர்; ஆனால் பாசத்தால் உந்தப்படும் பெற்றார் தம் பிள்ளையை இறுதியாகக் காண்பதற்காக கதறியழுவர். சில வேளைகளில் அன்னாரின் உற்றாரிற்கும் அவ்வித்துடலுடன் வரும் அரசியல்துறை போராளிகளுக்கும் பூசல்கள் கூட ஏற்பட்டதுண்டு. இவை தவிர்க்க முடியாதவையாகவும் கடந்து செல்வதற்கு மனக் கடினமாகவும் இருக்கும். மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்படும் வரை அச்சந்தனப் பேழை மூடப்பட்டேயிருக்கும். மேலும் இது போன்ற வித்துடல்களை ஒரே நாளிலேயே விதைத்துவிடுவர். தொலைவில் உள்ள அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் வந்து கலந்து கொள்ளவோ அல்லது தேவைக்கேற்பவோ வித்துடல் ஓரிரு நாட்கள் உறவினர்களிடத்திலிருக்கும். இவ்வாறு வீட்டில் நடைபெறும் "வீட்டுவணக்கத்தின்" போது சமயச் சார்பான எதுவும் செய்யப்பட மாட்டாது. இது புலிகளால் தவிர்க்கப்பட்டிருந்தது. புலிகள் இயக்கம் சமயச் சார்பானதில்லை என்பதால் அது மாவீரரின் வித்துடலிற்கும் பொருந்தும். எனினும் மக்கள் செய்யும் பொழுதில் புலிகள் அதனை தடுத்ததில்லை. சமயச் சடங்குகள் செய்யப்பட்ட மாவீரர் ஒருவரின் வித்துடல். | படிமப்புரவு: தவிபு மேலுள்ள படிமத்தில் மாவீரர் ஒருவரின் வித்துடலிற்கு திருநீற்றுக்குறி வைக்கப்பட்டு அதில் சந்தனம் மற்றும் குங்குமப் பொட்டுக்களும் இடப்பட்டுள்ளதை நோக்குக. மேலும் மூக்கிற்கு பஞ்சும் வாய்கரிசியும் வைக்கப்பட்டுள்ளதை காண்க. கழகததிற்கும் திருநீறு பூசப்பட்டுள்ளது. வீட்டுவணக்கம் முடிந்த பின்னர் வித்துடல் கொண்ட சந்தனப்பேழையின் மூடியை போராளிகள் கையால் மூடுவர். அப்போது உற்றார், உறவினர், நண்பர்கள் சந்தனப் பேழையிற்கு அருகில் வந்து வீரிட்டுக் கதறி அழுவர். இடமே சோகமாக காட்சி தரும். மாவீரரின் சந்தனப் பேழை மூடியால் மூடப்படுகிறது. அம்மா நலமா திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட காட்சி. படிமப்புரவு: த.வி.பு. மாவீரர் ஊர்தி: பின்னர் அச்சந்தனப் பேழை போராளிகளால் தூக்கிச்செல்லப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மாவீரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மாவீரர் மண்டபம் நோக்கிக் கொண்டுசெல்லப்படும். இம்மாவீரர் ஊர்தியை அக்கோட்ட அரசியல்துறையினரே வழங்குவர். கப்டன் தமிழன்பனின் திருவுருவப்படம் தாங்கிய 'இது' (பெயர் சரியாகத் தெரியவில்லை) மாவீரர் ஊர்தியில் வைத்து மாவீரர் மண்டபம் நோக்கி எடுத்துச் செல்ல ஆயத்தமாக்கப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு. ஊர்தி ஊர்வலமாக செல்லுகையில் அதில் சோக இசையை ஒலிபரப்பிவிடுவர். முன்னால் இன்னொரு ஊர்தியில் எழுச்சியாக வீரச்சாவு அறிவித்தல் ஒலிபரப்பப்படும். இவ்வூர்தியின் பின்னால் மாவீரரின் நெருங்கிய உறவினர், பெற்றார், இணை முதலியோரை ஏற்றிக்கொண்டு அரசியல்துறையால் கொண்டுவரப்பட்ட பேருந்தொன்று செல்லும். அதன் பின்னால் ஏனையோரின் ஊர்திகள் செல்லும். இந்த மாவீரர் ஊர்தியானது நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கும். மாவீரர் ஊர்தியை அலங்கரிக்கும் மரபு ஆகக்குறைந்தது லெப். கேணல் விக்ரர் அவர்களின் வீரச்சாவு நடைபெற்ற காலத்திலிருந்து தொடங்குகிறது என்பதை கிடைக்கப்பெற்ற நிகழ்படங்கள் மற்றும் படிமங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது (வித்துடல் அவர்களின் மாவீரர் ஊர்தியின் படிமம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது). ஆயினும் அவரின் மாவீரர் ஊர்தியில் தமிழரின் பண்பாடுகளில் ஒன்றான வாழைமரத்தால் ஊர்தியை அலங்கரிப்பது மற்றும் சிவப்பு மஞ்சள் நிறங்களால் அலங்கரித்தல் என்பன காணப்படவில்லை. அது தொடக்க காலம் என்பதாலும் வீரச்சாவு சடங்கு நடத்துதலிற்கென்ற, பிறகாலத்தையப் போன்ற, மரபு நடைமுறைக்கு வரவில்லை என்பதாலும் இவ்வாறான பண்பாடுகள் அன்றில்லை. மேலும் அன்றைய காலகட்டத்தில் வீரச்சாவு வீடுகளிலிருந்த சமயத் தாக்கமும் இதற்கொரு காரணம் எனலாம். மாவீரர் ஊர்திக்கான அலங்காரத்தில் கட்டளையாளர்களின் மாவீரர் ஊர்திக்கும் சாதாரண போராளிகளின் மாவீரர் ஊர்திக்கும் இடையில் வேறுபாடு காட்டப்பட்டிருக்கும். இவ்வேறுபாடானது மக்களுக்கும் அக்குறித்த கட்டளையாளர் போராளிக்குமான உறவின் வெளிப்பாடாகும். அவர் நீண்ட காலம் புலிகள் அமைப்பில் இருந்ததினால் பெரும்பாலான பொது மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவராக இருப்பார். இதனால் அவரின் ஊர்தி வழமைக்கு மாறாக மேலதிக சோடினைகள் (அவரின் பெயர், படங்கள் தாங்கிய பதாகை) மூலம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நடைபெறுவது கேணல் மற்றும் பிரிகேடியர் தரநிலை கொண்ட போராளிகளுக்காகும். சாதாரண போராளியின் ஊர்தியின் முகப்பில் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடி கட்டப்பட்டிருக்கும். ஓட்டுநர் அறையிற்கு வெளியே பெரும்பாலும் நான்கு வாழை மரங்கள் நான்மூலைகளுக்குமென கட்டப்பட்டிருக்கும் (பட விளக்கத்திற்கு இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனாவின் மாவீரர் ஊர்தியைக் காண்க). காற்றுத்தட்டியில் எழுச்சிக்கொடி கட்டப்பட்டிருக்கும். கண்டர்/பிக்கப்பின் பின்புறத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் துணி விரிக்கப்பட்டு அதன் மேல் அம்மாவீரரின் சந்தனப் பேழை கிடத்தப்பட்டிருக்கும். இப்பின்புறத்தின் நான்மூலைகளிலும் துமுக்கிகள் (வகை-56இன் விதங்கள். ஆயினும் பெரும்பாலும் வகை-56 தான்) ஏந்திய பச்சை/நீல கிடைமட்ட வரி அல்லது பச்சை நீட்டு வரி அணிந்த நான்கு போராளிகள் அமர்ந்திருப்பர், படைய மதிப்பாக. இவர்கள் அன்றி சில வேளைகளில் கூடுதல் போராளிகளும் ஏறி அமர்ந்திருப்பதுண்டு. ஆயினும் பெரும்பாலான வேளைகளில் நால்வரே அமர்ந்திருப்பர். இவ்வலங்காரமானது பெரிய கப்பல்களைத் தகர்த்த கடற்கரும்புலிகளிற்கு வேறுபாடாகயிருந்தது. அவர்களின் மாவீரர் ஊர்தியானது அக்கரும்புலிகளால் தகர்க்கப்பட்ட கப்பலைப் போன்று சோடிக்கப்பட்டிருக்கும். சந்தனப் பேழை: இவ்வாறாக சோடிக்கப்பட்ட ஊர்தியில் தான் மாவீரரின் சந்தனப் பேழை வைக்கப்பட்டிருக்கும். அச்சந்தனப் பேழை கூட புலிப்பண்பாட்டின் அடிப்படையில் சோடிக்கப்பட்டிருக்கும். அதாவது சந்தன மரத்தால் ஆன இப்பேழையினைச் சுற்றி சிவப்பு நிறத்திலும் மஞ்சள் நிறத்திலுமான நாடாக்கள் கட்டப்பட்டிருக்கும் (வெற்றிக்கொடியில் எவ்வாறு நிறங்கள் உள்ளதோ அதே அடுக்கமைவில்தான் இங்கும் அவை கட்டப்பட்டிருக்கும்). இந்நாடாக்களிற்கு நடுவில் தமிழீழ தேசியக் கொடி சந்தனப் பேழையைச் சுற்றிப் போர்த்தப்பட்டிருக்கும். இச்சந்தனப் பேழையானது கபிலம், கடுங்கபிலம் நிறத்திலும் (வண்ணம் பூசப்படாத சந்தனப்பேழை), பச்சை நிறத்திலும் காணப்பட்டது (வண்ணம் பூசப்பட்ட சந்தனப்பேழை). நானறிந்த வரை பிரிகேடியர் பால்ராஜ், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், கேணல் அருள்வேந்தன் எ சாள்ஸ் ஆகியோரின் வித்துடல்கள் கொண்ட சந்தனப் பேழையின் மூடியானது ஆடியால் (glass) செய்யப்பட்டிருந்தது, வித்துடலை மூடியிருப்பினும் திருவுடலை மக்கள் இறுதியாகக் காண வசதியாக. மாவீரர் மண்டபம்: மாவீரர் மண்டபமென்பது மாவீரராகிய போராளியின் சந்தனப் பேழையை வைத்து வீரவணக்கக் கூட்டம் செய்வதற்கென்று சிறப்பாக கட்டப்பட்ட ஒரு மண்டபமாகும். இங்கு தான் அக்குறித்த கோட்டத்தில் வீரச்சாவடையும் அனைத்து மாவீரர்களின் வித்துடலும் வைக்கப்பட்டிருக்கும். மாவீரர் மண்டபம் இல்லாத இடங்களில்/ காலங்களில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பொது மண்டபத்தில் அல்லது பாடசாலையில் வைத்து வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. எழுத்தப்பட்டுள்ள வாசகம்: இவர்கள் சிந்திய குருதி, தமிழீழம் மீட்பது உறுதி. படிமப்புரவு: Journeyman.tv கோவில்களின் கருவறைக்கு வெளியே துவாரபாலகர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதைப் போன்று - கட்டடத்தின் வாசலின் இரு பக்கத்திலும் ஒரு ஆண் போராளியும் ஒரு பெண் போராளியும் துமுக்கிகளை கீழ்நோக்கி பிடித்து ஒருவரையொருவர் பார்த்தபடி அகவணக்கம் செலுத்துவது போன்ற இரு ஓவியங்கள் வரையப்பட்டுளதைக் நோக்குக. வன்னியில் இருந்த மாவீரர் மண்டபங்களில் ஒன்று. படிமப்புரவு: Journeyman.tv மாவீரர் மண்டபமானது எழுச்சிக்கொடிகளால் (சிவப்பு மஞ்சள் நிற முக்கோண வடிவக் கொடி) சோடிக்கப்பட்டிருக்கும். நான்காம் ஈழப்போரில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் பால்ராஜ், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், கேணல் சாள்ஸ் எ அருள்வேந்தன் போன்றோரின் சந்தனப் பேழைகள் பெருமளவு மக்கள் கூடுவதற்கு வசதியாக கிளிநொச்சி பண்பாடு மண்டபத்தில் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடாத்தப்பட்டது. சில வேளைகளில் பெருமளவு மக்கள் கூடுவதற்கு வசதியான இடங்கள் இல்லையெனில் சந்தனப் பேழை பாடசாலைகளில் வைக்கப்படுவதுண்டு. மாவீரர் மண்டபத்தில் வீரவணக்கக் கூட்டம்: மாவீரர் ஊர்தியானது மாவீரர் மண்டபத்தின் வாசலில் கொண்டுவந்து நிறுத்தப்படும். அதிலிருந்து சந்தனப் பேழையை போராளிகள் மனித வலுக்கொண்டு தூக்கி வந்து மண்டபத்தின் முதன்மை வாயினுள்ளால் தான். மேடையில் வைப்பர். வித்துடலைக் கொண்டுவந்த பின்னர் தான் பொதுமக்கள் மண்டபத்தினுள் நுழைவர். லெப். கேணல் தவாவின் வித்துடல் மண்டப வளாகத்தினுள் கொண்டுவரப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு. லெப். கேணல் தவாவின் வித்துடல் இனந்தெரியாத மண்டபத்தினுள் (இது மாவீரர் மண்டபம் இல்லை) கொண்டுவரப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு. மேடையில் வைத்த பின்னர் அவருடன் ஊர்தியில் வந்த துமுக்கி ஏந்திய நான்கு போராளிகளும் சந்தனப்பேழையின் நான்மூலைகளிலும் கொஞ்சம் இடைவெளிவிட்டு துமுக்கிகளோடு "கவனநிலை" இல் நிற்பர். கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பால்ராஜ்-ன் சந்தனப் பேழையின் நான்மூலைகளிலும் துமுக்கி ஏந்திய போராளிகள் கவனநிலையில் நிற்கின்றனர். படிமப்புரவு: த.வி.பு. மாவீரர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கப்டன் தமிழன்பனின் திருவுருவப்படத்திற்கு கேணல் அருள்வேந்தன் மலர்மாலை அணிவிக்கிறார். அருகில் துமுக்கி ஏந்திய இரு போராளிகள் நிற்கின்றனர். படிமப்புரவு: த.வி.பு. பின்னர் மூடி திறக்கப்பட்டு வித்துடலின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதி கவராகும் விதமாக புலிகள் கால தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்படும். சில வேளைகளில் திறந்த பின்னர் வெண்ணிற வலை போன்ற ஒன்று முழுவுடலும் கவராகும் விதமாக போர்த்தப்படும். இது பாவிக்கப்படும் காரணம் எனக்கு தெரியவில்லை. அதன் மேல் தான் பூக்கள் போடப்படும். பெப்ரவரி 17, 2008 அன்று வீரச்சாவடைந்த நிதர்சனத்தின் முன்னணிக் களப்படப்பிடிப்பாளரும் கலைஞருமான லெப். கேணல் தவம் எ தவா மற்றும் மேஜர் புகழ்மாறன் ஆகியோரின் வித்துடல்கள் ஒரு மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் லெப். கேணல் தவாவின் வித்துடலின் மேல் வெண்ணிற வலை போர்த்தப்பட்டுளதைக் காண்க. படிமப்புரவு: த.வி.பு. 15/06/2006 அன்று மட்டு. கரடியனாற்றில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வின் போது மாவீரர் ஒருவரின் தாயார் தன் மகனின் வித்துடலைக் கண்டு கதறி அழும் காட்சி. படிமப்புரவு: த.வி.பு. சிதைந்திருப்பினும் அடையாளம் காணப்பட்ட வித்துடல்கள் கொண்ட சந்தனப் பேழைகள் மாவீரர் மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டாலும் அவை திறக்கப்படுவதில்லை. மூடப்பட்டே காணப்படும். அதன் பின்னர் வீரவணக்க நிகழ்வுகள் தொடங்கும். வீரவணக்க நிகழ்வின் தொடக்கத்தில் மாவீரரின் சந்தனப் பேழையின் தலைமாட்டில் உள்ள பெரிய குத்துவிளக்கை பெற்றாரோ அல்லது பெற்றார் இல்லாதவிடத்தில் உறவினரோ ஏற்றுவர். பின்னர் மேடைக்கு கீழே உள்ள மற்றொரு பெரிய குத்துவிளக்கை ஒரு பொறுப்பாளர்/கட்டளையாளர் (கள்) ஏற்றுவர். லெப். கேணல் தவம் மற்றும் மேஜர் புகழ்மாறன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வின் போது தலைமாட்டில் உள்ள குத்துவிளக்கை இரு மாவீரர்களில் ஒருவரின் தாயார் ஏற்றுகிறார். கீழே உள்ள குத்துவிளக்கை கேணல் வேலவன் ஏற்றுகிறார். படிமப்புரவு: த.வி.பு. அதனைத் தொடர்ந்து வித்துடலிற்கு மக்கள் முன்னிலையில் மலர்மாலை அணிவிக்கப்படும். அதில் பெற்றர்/ கணவன்/மனைவிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எத்தனை வித்துடல்கள் உள்ளனவோ அத்தனை வித்துடல்களின் உற்றார்களும் (வித்துடலிற்கு ஒருவர்) குத்துவிளக்கில் சுடர்களேற்ற அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து பொதுமக்கள் மேடைக்கு வரிசையில் வந்து அங்குள்ள சந்தனப் பேழைகளின் கால்மாட்டில் மலர்வணக்கம் செய்வர். அப்போது "சூரிய தேவனின் வேருகளே" என்ற பாடல் ஒலிக்கவிடப்படும். பொதுமக்கள் மேடையில் ஏற முன்னர் ஒருவர் (போராளி/ பொதுமகன்) பொதுமக்களின் கையில் மலர்களை வழங்குவார். மாலைகள் எனில் அருகிலுள்ள போராளிகளின் உதவியுடன் மலர் மாலைகளை வித்துடல் மேல் அணிவிப்பர். சிலர் மலர்வளையம் கூட கொண்டுவந்து வைத்துவிட்டுச் செல்வர். மலர் வணக்கத்தின் போது சிலர் தாங்கொணாப் பிரிவுத்துயரால் சந்தனப்பேழையின் மேல் விம்மிவெடித்து அழுவர். அப்போது அவர்களைத் தாங்குவதெற்கென்று சில போராளிகள் அருகிலிருந்து அவர்களைத் தாங்குவர். பின்னர் அகவணக்கம் இடம்பெறும். அப்போது மண்டபத்திலுள்ள அனைவரும் எழுந்துநின்று அகவணக்கம் செலுத்துவர். லெப். கேணல் தவா மற்றும் மேஜர் புகழ்மாறன் ஆகியோரின் வித்துடல்களிற்கு அகவணக்கம் நடைபெறுகிறது. படிமப்புரவு: த.வி.பு. இறுதியாக அம்மாவீரரின் பொறுப்பாளர் மற்றும் கூடநின்ற போராளிகள் ஒவ்வொருவராக அருகில் உள்ள ஒலிவாங்கி மேடைக்கு வந்து நினைவுரையாற்றுவர். அவ்வுரையில் அம்மாவீரரின் அருமை பெருமைகளை விளக்கிச் சொல்வர். மாவீரரானவர் கட்டளையாளரெனில் ஏனைய கட்டளையாளர்களும் எல்லாம் வந்து நினைவுரையாற்றுவர். தேசத்துரோகி கருணாவின் கைக்கூலிகளால் படுகொலைசெய்யப்பட்ட லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட மாவீரர்களுக்கு மட்டுவில் நடந்த வீரவணக்க கூட்டத்தில் முஸ்லிம் இனக்குழுவைச் சேந்த பெரியவர் ஒருவர் நினைவுரையாற்றுகிறார். படிமப்புரவு: த.வி.பு. கிளிநொச்சியில் நடந்த கேணல் சாள்ஸ் எ அருள்வேந்தனின் வீரவணக்க கூட்டத்தில் மாதவன் மாஸ்டர் (மாவீரர்) நினைவுரையாற்றுகிறார். அனைத்து நிகழ்வுகளும் முடிந்த பின்னர் சந்தனப்பேழை மூடப்பட்டு, நடாக்கள் கட்டப்பட்டு, அங்கிருந்து போராளிகளால் தாங்கிச்செல்லப்பட்டு மாவீரர் ஊர்தியில் ஏற்றப்படும். மாவீரர் ஊர்தியின் ஊர்வலம்: ஊர்தியில் ஏற்றப்பட்ட சந்தனப் பேழையானது மாவீரர் துயிலுமில்லம் நோக்கி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். கிளிநொச்சிக்கு கிட்டவாக நடந்த அமுக்கவெடித் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப். கேணல் சங்கீதன் என்ற மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகள் 11-07-2007 அன்று மாவீரர் ஊர்தியில் ஏற்றப்படுகின்றன. படிமப்புரவு: Associated Press ஊர்வலமாக எடுத்துச் செல்கையில் கட்டளையாளர்களுக்கு மட்டும் ஒரு வழக்கம் கூடுதலாக கடைப்பிடிக்கப்பட்டது. அவர்களின் மாவீரர் ஊர்தியிற்கு முன்னால் படைய அணிவகுப்பு புலிகளால் செய்யப்பட்டது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வீரவணக்கத்திற்காக வித்துடலை இடம்மாற்றுகையில். சில வேளைகளில் சில கட்டளையாளர்களும் கூடவே நடந்து செல்வார்கள். படைய அணிவகுப்பிற்கு முன்னால் பாடசாலை மாணவர்களின் வாய்த்திய அணியிசை அணிவகுத்துச் செல்லும். இடம் மாறமாற பாடசாலை மாணவர்களின் வாய்த்திய அணியிசை அணியினரும் மாற்றப்படுவர். படைய அணிவகுப்பும் வாய்த்திய அணியிசை வகுப்பும் சாதாரண போராளிகளெனில் துயிலுமில்லத்தின் ஒலிமுகத்திற்கு சற்று முன்னரிருந்துதான் தொடங்கப்படும். சில கட்டளையாளர்களின் சந்தனப் பேழை வன்னியில் பல இடங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது (பிரிகேடியர் பால்ராஜ்). சிலரின் வித்துடல் வட தமிழீழம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது ("தியாகதீபம்" லெப். கேணல் திலீபன்). தென் தமிழீழத்தில் கரந்தடிப்போர் தொடர்ந்தமையால் இது போன்ற நிகழ்வுகள் செய்வதற்கான காலம் அமையவில்லை. எனினும் சமாதான காலத்தில் போர்நிறுத்த விதிமுறை மீறப்பட்டு சிங்களத்தின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் றமணன் அவர்களின் வித்துடல் மட்டு மாவட்டத்தின் சில இடங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வீரவணக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும் பிரிகேடியர் பால்ராஜின் மாவீரர் ஊர்தியின் அலங்காரத்தைக் காண்க. படிமப்புரவு: த.வி.பு. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வீரவணக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும் பிரிகேடியர் பால்ராஜின் மாவீரர் ஊர்திக்கு முன்னால் அணிவகுப்புகள் செல்கின்றன. படிமப்புரவு: த.வி.பு. மாவீரர் ஊர்தியின் மேல் ஒலிபெருக்கி கட்டப்பட்டு அதில் சோக இசை ஒலிக்கவிடப்படும். இவ்வூர்தியின் பின்னால் உற்றார், உறவினர், நண்பர்களின் ஊர்திகள் இரு சக்கர ஊர்திகள் செல்லும். மாவீரர் ஊர்தியிற்கு முன்னால் மற்றொரு ஊர்தியில் அம்மாவீரரின் வீரச்சாவு அறிவித்தலை அறிவித்தப்படி செல்வர் (நான் கண்டதுகளில் பெரும்பாலும் முச்சக்கர வண்டி தான் அறிவித்தலிற்குப் பாவிக்கப்பட்டது). சில வேளைகளில் வித்துடல் தாங்கிய ஊர்தியிலேயே ஒலிபெருக்கி பூட்டி அறிவிப்பும் செய்தபடி செல்வர். இவ்வறிவித்தலை செவிமடுக்கும் பொதுமக்களில், விருப்பமுள்ளோர், வீதியிற்கு வந்து மாவீரர் ஊர்தியிற்கு மலர்வணக்கம் செய்வர். சிலர் ஊர்தியிற்கு முன்னால் குடத்தில் நீர்கொண்டுவந்து ஊற்றுவர். சிலர் தம் வீட்டு வாசலில் குத்துவிளக்கு ஏற்றி மரியாதை செய்வர். இவையெல்லாம் தமிழீழ நாட்டுப்பற்றின் நிமித்தமாக பொதுமக்கள் செய்தனர், யாரும் கட்டாயப்படுத்தியன்று! கிளிநொச்சிக்கு கிட்டவாக நடந்த அமுக்கவெடித் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப். கேணல் சங்கீதன் என்ற மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகள் 11-07-2007 அன்று கனகபுரம் துயிலுமில்லத்தை நோக்கிக் கொண்டுசெல்லப்படுகின்றன. படிமப்புரவு: த.வி.பு. இரண்டாம் ஈழப்போர் காலத்தில் யாழ்ப்பணத்தில் மாவீரர் ஊர்திக்கு முன்னால் தமிழீழக் குடிமகள் ஒருத்தி குடத்து நீரை ஊற்றி இறுதிவணக்கம் செலுத்துகிறார். படிமப்புரவு: த.வி.பு. அத்துடன் மாவீரர் ஊர்தி சாலையில் வரும் போது ஏனைய ஊர்திகள் அவற்றிற்கு வழிவிட்டுத் தரும். இவ்வாறாக செல்லும் ஊர்திகள் இரண்டும் மாவீரர் துயிலுமில்லம் வரை சோக இசையையும் அறிவித்தலையும் ஒலிபெருக்கியபடி செல்வர். துயிலுமில்லத்தை நெருங்கியதும் ஒலிகள் நிப்பாட்டப்படும். பொதுவாகவே துயிலுமில்லத்திற்கு முன்னால் ஊர்திகள் வேகம் தணித்து மெள்ளமாக செல்வதோடு வட்டொலியும் எழுப்பார். துயிலுமில்ல வளாகத்திற்கு முன்னால் உள்ள சாலை எப்பொழுதும் அமைதியாகவே காணப்படும். மேலும் வித்துடல் கொண்டுவரப்படும் நாட்களில் மாவீரர் துயிலுமில்லத்தினுள் தமிழீழத் தேசியக்கொடியான புலிக்கொடி அரைக்கம்பத்தில் தான் பறக்கவிடப்படும். வெற்றிக்கொடி முழுக்கம்பத்தில் பறக்கும். தேவையான இடங்களில் எழுச்சிக்கொடி கட்டப்பட்டிருக்கும். துயிலுமில்லத்தினுள்ளே சந்தனப் பேழை: துயிலுமில்லத்தை அண்டியதும் போராளிகள் மாவீரர் ஊர்தியின் பின்னே அணிவகுப்பில் செல்வர். மாவீரர் ஊர்தியுடன் வந்த பொதுமக்களும் (உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்) தம் ஊர்தியை நிறுத்திவிட்டு நடந்து வருவர். அப்போது மாவீரர் ஊர்தி மெள்ளமாக நகரும். துயிலுமில்ல ஒலிமுகத்திற்கு சில மீட்டர்கள் முன்னுக்கு மாவீரர் ஊர்தி நிறுத்தப்பட்டு அதிலிருந்து சந்தனப்பேழை இறக்கப்படும். பின்னர் அது ஒலிமுகத்திலுள்ள முதன்மை வாசலிற்குள்ளால் போராளிகளால் தோளில் காவிச்செல்லப்படும். கேணல் மற்றும் பிரிகேடியர் தரநிலை கொண்ட கட்டளையாளர்களின் வித்துடல் துயிலுமில்லத்திற்கு முன்னால் கொண்டுவரப்படுகையில் தமிழீழத்தின் முழுப் படைய மரியாதையும் வழங்கப்படும். பெரும் விழா போன்று அன்றிருக்கும். மட்டு. கண்டலடி மா. து.இ. ஒலிமுக வாசலில் மாவீரர் ஊர்தி நிறுத்தப்பட்டு அதிலிருந்து வித்துடல் இறக்கப்படப்போவதைக் காணலாம். படிமப்புரவு: த.வி.பு. சந்தனப் பேழை காவிச்செல்லுவோரிற்கு முன்னால் படைய அணிவகுப்பில் போராளிகள் செல்வர். இவர்களிற்கு முன்னே வாய்த்திய அணியிசை வகுப்பு முன்செல்லும். இந்த வாய்த்திய அணியிசை வகுப்பானது நேர வசதிக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பொறுத்து அமையும். குறிப்பாக தென் தமிழீழத்தில் இது சில வேளைகளில் நடைபெறுவதில்லை, அங்கு பெரும்பாலான காலங்களில் கரந்தடிப்படையாகப் புலிகள் இருந்தமையால். பின்னர் சந்தனப் பேழையானது துயிலுமில்லத்தினுள் இறுதிவணக்கத்திற்காக வைக்கப்படும். அதாவது ஒலிமுகத்தினுள் நுழைந்த பின்னர் சில மீட்டர்கள நடந்து வந்து அங்கு ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ள மேசையின் மேல் சந்தனப்பேழை வைக்கப்படும். கிளிநொச்சிக்கு கிட்டவாக நடந்த அமுக்கவெடித் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப். கேணல் சங்கீதன் என்ற மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகள் 11-07-2007 அன்று மாவீரர் துயிலுமில்லத்தினுள் எடுத்துச் செல்லப்படுகின்றன. படிமப்புரவு: த.வி.பு. 27/01/2006 அன்று மேஜர் கபிலனின் சந்தனப் பேழை போராளிகளால் மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்திற்குள் சுமந்துசெல்லப்படுகிறது. இரும்புத் தண்டுகளில் சந்தனப் பேழையைத் தாங்கிச் செல்லும் நிகழ்வு மிகவும் அரியது. இவ்வாறு தரவை துயிலுமில்லத்தில் மட்டுமே நடைபெற்றதாக என்னால் அறிய முடிகிறது, அதுவும் நான்காம் ஈழப்போரில் மட்டுமே. படிமப்புரவு: த.வி.பு. பின்னர் இறுதிவணக்கம் நடத்தப்படும். அப்போது மலர் வணக்கம் நடக்கும். இதில் வீரச்சாவு வீட்டிற்கோ வீரவணக்கக் கூட்டத்திற்கோ வர முடியாதவர்கள் வந்து இறுதிவணக்கம் செலுத்துவர். ஒரு இறுதிவணக்கத்தின் போது மலர்வணக்கம் நடைபெறுகிறது. படிமப்புரவு: த.வி.பு. லெப். கேணல் அர்ச்சுணன் அவர்களின் வித்துடலிற்கு போராளி ஒருவர் மலர்மாலை அணிவிக்கிறார். பின்னால் பிரிகேடியர் கடாபி, பிரிகேடியர் வேலவன், லெப். கேணல் ராஜேஸ் எனப் பலர் வரிசையில் காத்திருக்கின்றனர். தமிழீழக் காவல்துறைப் படையணிப் போராளி உட்பட பலர் சூழ்ந்து நிற்கின்றனர். படிமப்புரவு: Associated Press இறுதிவணக்கத்தின் போது ஒலிபரப்பப்படும் சோக இசையைத் தொடர்ந்து "சூரிய தேவனின் வேருகளே" என்ற இயக்கப்பாடல் ஒலிக்கவிடப்படும். இப்பாடலானது ஆகக்குறைந்தது மூன்றாம் ஈழப்போரின் 1997லிருந்து பாவிக்கப்படுகிறது. எனினும் சில பாடகர்களின் நினைவின் படி இது 1999 ம் ஆண்டு தான் பாடப்பட்டது எனப்படுகிறது. ஆகையால் இது பாவிக்கத்தொடங்கப்பட்ட ஆண்டு சரியாக தெரியவில்லை. எவ்வாறெயினும் மூன்றாம் ஈழப்போரிற்கு முன்னரான காலத்தில் எத்தகைய பாடல் பாவிக்கப்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை. ****** முழுப்பாடல்: பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரை பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், தியாகராஜா, மணிமொழி இசையமைப்பாளர்: இசைவாணர் கண்ணன் பதிவாக்கப்பட்டது: கிருபா, 1999ம் ஆண்டு (சிலரின் நினைவுகளின் படி 1997ம் ஆண்டு) பதிவாக்கப்பட்ட இடம்: நிதர்சனத்தின் தர்மேந்திராக் கலையகம், தண்ணிரூற்று, முல்லைத்தீவு. இதுவொரு தனிப்பாடலாகும். பல்லவி: சூரியதேவனின் வேருகளே, ஆயிரம் பூக்களைச் சூடுகிறோம் போரினில் ஆடிய வேருகளே - விட்டுப் போகின்ற நேரத்தில் பாடுகிறோம் சரணம்: மடியில் வளர்ந்த மகளே - எங்கள் குடியில் மலர்ந்த மகனே! விடியும் பொழுதின் கதிரே - புலிக்கொடியில் உலவும் உயிரே! கண்களில் நீர்வழிந்து ஓடிட ஓடிட கைகளினால் மலர் சூடுகின்றோம்! காலெடுத்தாடிய தாயக பூமியைக் காதலித்தீர் உம்மைப் பாடுகின்றோம்! மண்மடி மீதிலே தூங்கிடும் போதிலே மாலையிட்டோம் உங்கள் தோள்களிலே! மாதவம் செய்த நம் பிள்ளைகளே - நாங்கள் மண்டியிட்டோம் உங்கள் கால்களிலே! செங்கனி வாய்திறந்து ஓர்மொழி பேசியே சின்னச் சிரிப்பொன்றைச் சிந்துங்களே! தேச விடுதலையைத் தோளில் சுமந்த எங்கள் செல்வங்களே ஏதும் சொல்லுங்களே! வந்து நின்றாடிய சிங்களச் சேனையை வாசல்வரை சென்று வென்றவரே! வாழும் வரையும் உங்கள் பாதையிலே செல்லும் வல்லமை தாருங்கள் கன்றுகளே! ****** அதன் பின்னர் அங்குள்ள வித்துடல் மேடை நோக்கி சந்தனப் பேழை தூக்கிச் செல்லப்பட்டு அதன்மேல் வைக்கப்பட்டுள்ள மஞ்சள்-சிவப்பு நிறத் துணி விரிக்கப்பட்ட மேசையில் வைக்கப்படும். அம்மேசையானது பொதுச்சுடர் பீடத்திற்கு முன்னால் இருக்கும். இது நடைபெறுவதற்குள் "சூரிய தேவனின் வேருகளே" என்ற பாடல் ஒலித்து முடிவடைந்திருக்கும். அம்மேசையின் பின்னே புலிகளின் இலச்சினைப் பதாகை வைக்கப்பட்டிருக்கும். மேசையின் இருபக்கத்திலும் இரு போராளிகள் கவனநிலையில் நிற்பர். பின்னர் அருகில் மற்றொரு சின்ன மேசையில் குத்துவிளக்கு ஏற்றி சாம்பிராணியும் பற்ற வைப்பர். லெப். கேணல் அர்ச்சுணனின் வித்துடலானது வித்துடல் மேடையை நோக்கி படிக்கட்டில் தூக்கிச் செல்லப்படுகிறது. வித்துடல் மேடை தமிழீழத் தமிழரின் பண்பாட்டிற்கு ஏற்ப அலங்கரிக்கப்பட்டுள்ளது. படிமப்புரவு: Assosiated Press வேறொரு மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டுள்ளது. படிமப்புரவு: த.வி.பு. சில வேளைகளில் ஒரே நேரத்தில் பல சந்தனப் பேழைகள் பொதுச்சுடர் பீடத்தை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். அப்போதும் போராளிகள் இருமருங்கில் கவனநிலையில் நிற்பர். சின்ன மேசையில் குத்துவிளக்கு ஏற்றி சாம்பிராணியும் பற்ற வைப்பர். இதையே தான் நினைவுக்கல்லிற்கும் செய்வர். ஜெயசிக்குறு எதிர்ச்சமர் ஒன்றின் போது வீரச்சாவடைந்த பல மாவீரர்களின் அழகுற தேசியங்களால் சோடிக்கப்பட்ட சந்தனப் பேழைகள் ஓர் துயிலுமில்லத்தில் ஒரே நேரத்தில் பொதுச்சுடரைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளன. படிமப்புரவு: த.வி.பு. ஒரு பெண் போராளியின் வித்துடல் பொதுச்சுடரிற்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அதன் இரு பக்கத்திலும் துமுக்கி ஏந்திய இரு மகளிர் போராளிகள் கவனநிலையில் நிற்கின்றனர். படிமப்புரவு: த.வி.பு. பிறகு வித்துடல் மேடையில் வைக்கப்பட்டுள்ள 'ஒலிவாங்கி மேடை'யில் நின்றபடி பொறுப்பாளர் (அம்மாவீரர் துயிலுமில்லத்தின் பொறுப்பாளர் அ வேறொரு பொறுப்பாளர்) ஒருவர் மாவீரருக்காக உறுதியுரை வாசிப்பார். அதை அங்கு கூடியுள்ள பொதுமக்களும் போராளிகளும் செவிமடுக்கும் அதே நேரம், தலைகளைக் குனிந்து அகவணக்கம் செலுத்துவர். துமுக்கியுடன் கவனநிலையில் நின்ற போராளிகள் தலை குனிந்து தம் துமுக்கியை வலது கால் பாதத்தின் முன் பகுதியில் தலை கீழாக குத்திநிறுத்தி, சொண்டு பாதத்தை தொடுமாறு நிப்பாட்டி, அகவணக்கம் செலுத்துவர். இந்த உறுதியுரையை தேசியக் கவி புதுவை இரத்தினதுரை அவர்கள் யாழ் குடாநாட்டை புலிகள் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த இரண்டாம் ஈழப்போர்க் காலத்தில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் (மாவீரர் நாள் மரபாகி வந்த கதை, 2010>). இரவு நேரத்தில் நடைபெறும் இரு வித்துடல் விதைப்பு நிகழ்வின் போது 'ஒலிவாங்கி மேடை'யில் நின்றபடி பொறுப்பாளர் ஒருவர் உறுதியுரையாற்றும் போது வித்துடல்களின் பின்னால் துமுக்கி ஏந்திய இரு போராளிகள் அகவணக்கம் செலுத்துகின்றனர். அருகில் குத்துவிளக்கொன்று சுடர்விட்டு எரிவதைக் காணவும். படிமப்புரவு: த.வி.பு. ****** வித்துடல் விதைப்பின் போது வாசிக்கப்படும் உறுதியுரை: (ன்/ள் பால் வேறுபாடுகள் வாசிப்பில் காட்டப்படும்) "{(முழுத் திகதி) அன்று [(காரணம்) (சமர்க்களத்தில் எனில் "வீரச்சாவு" அ நோயெனில் "சாவு")] தழுவிக்கொண்ட - கட்டளையாளர் எனில் மட்டும் பதவிநிலை கூறப்படும். தொடர்ந்து தரநிலையுடனான இயக்கப்பெயரோடு அன்னாரது முழுப்பெயர், நிரந்தர வதிவிடம், தற்காலிக வதிவிடம் என்பன முறையே வாசிக்கப்படும்.} "இம்மாவீரருக்காக எமது தலைகளைக் குனிந்து வீரவணக்கம் செலுத்தும் இவ்வேளை, எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரிலே வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகள் வரிசையிலே இங்கே மீளாத்துயில்கொள்ளும் (தரநிலையுடன் இயக்கப்பெயர்)-உம் சேர்ந்துகொண்டான். "சாவு இவனது பேச்சையும் மூச்சையும் நிறுத்தியதே தவிர இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கியுள்ளது. "இவன் ஆணிவேர் அறுபடாத ஆலமரம். மீண்டும் வேர்விடுவான், விழுதெறிவான். புதிதாகப் பிறக்கும் புலிகளுக்குள்ளே இவன் புகுந்துகொள்வான். "நெஞ்சு கனக்கும் தாயக விடுதலைக் கனவோடு எமைப்பிரிந்து செல்லும் இவனின் கனவை நாங்கள் நனவாக்குவோமென்று இவனது விதைகுழியில் உறுதியெடுத்துக்கொள்வோம். "தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும் வழிகாட்டலையும் ஏற்று நின்றும் துணிந்து சென்றும் களமாடி வீரச்சாவடைந்த இந்த வீரனுக்கு நாங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தும் இவ்வேளையிலே எங்கள் தாயகப் போருக்கு மீண்டும் எங்களை தயார்படுத்திக்கொள்கின்றோம். "ஒரு கண நேரம் இந்த வீரனுக்காக குனிந்துகொண்ட தலைகளை மீண்டும் நிமிர்த்திக்கொண்டு புனிதப் போருக்குப் புறப்படுகின்றோம்." “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” கிட்டிப்பு: கேணல் ராஜு வீரவணக்க கூட்ட நிகழ்படத்திலிருந்து ****** துமுக்கி ஏந்திய ஒரு போராளி அகவணக்கம் செலுத்துகிறார். படிமப்புரவு: த.வி.பு. அகவணக்கம் முடிந்த அடுத்த கணமே வித்துடலைச் சுற்றி நான்கு மூலைகளில் நின்றிருக்கிற துமுக்கி ஏந்திய போராளிகளில் மூவர், வெற்றுச் சன்னங்களைக் கொண்டு மூன்று மரியாதை வேட்டுகளைத் தீர்ப்பர். அடுத்து துயிலுமில்லப் பாடலான ‘தாயகக் கனவுடன்’ ஒலிபரப்பப்படும் (இப்பாடலானது மாவீரர் நாள்களில் உறுதிமொழியுடன் சேர்த்து ஒலிக்கவிடப்படும்.) அப்போது அனைவரும் படைய மரியாதை செலுத்துவர். பின்னர், வித்தாகிய மாவீரரின் வித்துடல் கொண்ட சந்தனப் பேழையானது புனித விதைகுழியின் மேல் இரு தண்டுகள் போடப்பட்டு அதன் மேல் வைக்கப்படும். அடுத்து சந்தனப் பேழையின் மேல் போர்த்தப்பட்டுள்ள தமிழீழத் தேசியக் கொடி அதிலிருந்து எடுக்கப்படும். இறுதியாக மலர் தூவ மக்களை அழைப்பார்கள். அப்போது "சூரிய தேவனின் வேர்களே" என்ற பாடல் மீண்டும் ஒலிக்கவிடப்படும். இப்பாடல் கொண்டுவரப்பட்ட 1999ம் ஆண்டிற்கு முன்னர் வரை "மலர் தூவ வாருங்கள்" என்ற மலர்வணக்கப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. ***** முழுப்பாடல்: பாடலாசிரியர்: வீரமணி ஐயர் பாடியவர்: குலசிங்கம் இசை இறுவட்டு: திலீபனின் கீதாஞ்சலி பல்லவி மலர்தூவ வாருங்கள் - தமிழ் மரபோடு வழிபாடு செய்யும் நேரம் உளமார அனுபல்லவி இணையேதும் இல்லாத போராளி திலீபன் தன் நினைவாக தமிழீழ நாடெங்கும் இவ் வேளை சரணம் தமிழ்மக்கள் துயில் நீங்க பூபாளம் இசைத்தான் தார்மீக வெளிவேட முகத்திரைகள் கிழித்தான் நினைவுக்கும் எட்டாத உண்ணா நோன்பிருந்தான் நெஞ்சத்தில் எந்நாளும் இடமொன்று கண்டான் ஆன்மீக பலமென்பது என்னென்று சொன்னான் அசையாத மலையாக வானோக்கி நின்றான் தான் மாள நேர்ந்தாலும் தமிழீழம் ஒன்றே தன் தாகம் எனச் சொன்ன வேங்கை திலீபனுக்கு வீதி பெருக்குங்கள் விளக்கேற்றி வையுங்கள் வீரன் திலீபன் கதை எடுத்துச் சொல்லுங்கள் அவன் பாதம் நடந்த தடம் பார்த்துச் செல்லுங்கள் பாதிச்சுமை குறையும் பலிக்கும் தமிழீழம் ***** லெப். கேணல் சங்கீதன் என்ற மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகளில் ஒன்று புனித விதைகுழிக்கு மேல் வைக்கப்படுகிறது. சம நேரத்தில் ஒரு போராளி சந்தனப் பேழையின் மேல் போர்த்தியுள்ள கொடியை எடுக்கிறார். படிமப்புரவு: Associated Press பிறகு கயிறுகள் மூலம் புனித விதைகுழியினுள் இறக்கப்படும், அவரை நன்கறிந்த போராளிகளால். துயிலுமில்லத்தில் வித்துடல்கள் விதைக்கப்படும் போது வித்துடலின் கால் துயிலுமில்ல ஒலிமுகத்தை நோக்கியதாக இருக்கும்படியாகவே விதைப்பர். லெப். கேணல் தவாவுடன் வீரச்சாவடைந்த மேஜர் புகழ்மாறனின் வித்துடல் புனித விதைகுழியினுள் கயிறுகள் மூலம் இறக்கப்பட்டு விதைக்கப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு. விதைக்கப்பட்ட பின்னர் பொதுமக்களும் போராளிகளும் இறுதியாக வந்து இருகைகளாலும் மண்ணை அள்ளி விதைகுழியினுள் தூவிவிட்டுச் செல்வர். சில வேளைகளில் வெள்ளை மணல் கிடைக்குமாயின் வெள்ளை மணலே தூவப்படுவதுண்டு. மண் தூவப்படும் போது "எங்கள் தோழர்களின் புதைகுழியில்" என்ற இயக்கப்பாடல் ஒலிக்கவிடப்படும். ***** முழுப்பாடல்: பாடலாசிரியர்: "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் பாடியவர்கள்: "பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பா இசை இறுவட்டு: புயல்கால ராகங்கள் பல்லவி: எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம் இவர்கள் சிந்திய குருதி -தமிழ் ஈழம் மீட்பது உறுதி சரணம்: இளமை நாளின் கனவையெல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள் போர்க்களம் படைத்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள் வாழும் நாளில் எங்கள் தோழர் வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம் - எம் தோழர் நினைவில் மீண்டும் தோளில் துப்பாக்கிகளை அணைக்கின்றோம் தாவிப்பாயும் புலிகள் நாங்கள் சாவைக்கண்டு பறப்போமா? பூவாய்ப் பிஞ்சாய் உதிரும் புலிகள் போன வழியை மறப்போமா? ***** பெரும்பாலான இடங்களில் புனித விதைகுழியின் இருபக்கமும் இவ்வாறாக புலிவீரர் அகவணக்கமாக நிற்பர். படிமப்புரவு: த.வி.பு. போராளிகள் இவ்வாறுதான் வரிசையாக வந்து புனித விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர். படிமப்புரவு: த.வி.பு. பொதுமக்கள் இவ்வாறுதான் வரிசையாக வந்து புனித விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர். அவர்களது அரத்த உறவினர் யாரேனும் மண்தூவ வரும் போது அவர்களை பெண்/ ஆண் போராளிகள் தாங்கிப்பிடித்திருப்பர். ஏனெனில், அவர்கள் பிரிதுயரால் மயங்கி உள்ளே விழுந்துவிடாமல் இருப்பதற்கு. படிமப்புரவு: த.வி.பு. ஆட்கள் மண் போட்டுச் சென்றபின் எஞ்சியிருக்கும் மண்ணை இன்னும் நிரம்பிடாத குழியினுள் மண்வெட்டியின் துணையுடன் இட்டு நிரப்புவர். மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெறும் இவ்வித்துடல் விதைப்பில் பால் மற்றும் வயது வேறுபாடின்றி அனைவரும் (ஆண், பெண், சிறுவர்) கலந்துகொள்வர், ஒரு பிடி மண்ணும் தூவிச் செல்வர். பின்னர் அவரின் சந்தனப் பேழையின் மேல் போர்த்தியிருந்த தமிழீழ தேசியக் கொடி சீராக மடிக்கப்பட்டு புலிகளால் எடுத்துச்செல்லப்படும். அதன் பின்னர் விதையாகிய மாவீரரின் பெற்றார்/ இணையினை துயிலுமில்லத்திலுள்ள நினைவுக்கூடத்திற்கு அழைத்துச் சென்று அமரவைப்பர். பின்னர் அவர்கட்கு சிற்றுண்டிகள் அ குடிவகைகள் ஏதேனும் வழங்கப்படும். பிறகு மாவீரரின் மேல் போர்த்தியிருந்த கொடியும் அம்மாவீரரின் நினைவாக அவர் பாவித்து விட்டுச் சென்றிருந்த அவரின் உடைமைகளில் ஏதேனுமொன்று அவர்களிடத்தில் ஒப்படைக்கப்படும். நினைவுக்கல்லிற்கு வீரவணக்கம் செலுத்தப்படும் முறை: இதுவே வித்துடல் கிடைக்கப்பெறவில்லையெனில்/ வேறொரு இடத்தில் வித்துடல் விதைக்கப்பட்டு பெற்றாரின் வசிப்பிடத்து துயிலுமில்லத்தில் நினைவுக்கல்லெனில், குறித்த மாவீரரின் வீட்டாரிற்கு சந்தனப் பேழையிற்குப் பகரமாக அம்மாவீரர் வரிப்புலி அணிந்துள்ள சட்டம்போட்ட திருவுருவப்படம் மேற்கூறியுள்ள ஒழுங்குமுறைகளின் படி கொண்டுவந்து வழங்கப்படும். அதற்கும் ஒரு சந்தனப்பேழையிற்கு நடைபெறுவது போன்றே வீரச்சாவு வீடு செய்யப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடத்தப்பட்டு துயிலுமில்லத்திற்குள் கொண்டுசெல்லப்படும். திருவுருவப்படத்தினை காவடி போன்ற ஒன்றின் மேல் வைத்து தூக்கிச் செல்வர் (இதன் பெயர் எனக்குத் தெரியவில்லை). காவடியை (36 வகையான காவடிகள் உண்டு என்பது நினைவூட்டத்தக்கது) ஒருவர் தூக்கிச் செல்வர் , ஆனால் தற்காலத்திற்கு ஏற்பவும் படைத்துறைக்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்ட இதை இருவர் தூக்கிச் செல்வர். இதன் முன்பகுதியில் தான் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கும். 11/05/2006 அன்று தாழையடி கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா எ புவிச்செல்வியின் திருவுருவப்படம் 14/05/2006 அன்று முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் நோக்கி எடுத்துச்செல்லப்படுவதைக் காண்க. படிமப்புரவு: த.வி.பு. அதே சமரில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லெப் கேணல் கவியழகியின் திருவுருவப்படம் துயிலுமில்லத்தினுள் எடுத்துவரப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு. முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தினுள் கடற்கரும்புலி லெப் கேணல் சஞ்சனாவின் திருவுருவப்படம் எடுத்துச் செல்லப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு. கடற்கரும்புலி லெப் கேணல் கவியழகியின் நினைவுக்கல். படிமப்புரவு: த.வி.பு. தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கடற்கரும்புலி லெப் கேணல் கவியழகியின் நினைவுக்கல்லை திறந்து வைக்கிகிறார், அவரது தாயார். படிமப்புரவு: த.வி.பு. தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சோ. தங்கன் அவர்கள் கடற்கரும்புலி லெப் கேணல் கவியழகியின் நினைவுக்கல்லில் இறுதிவணக்கம் செலுத்துகிறார். படிமப்புரவு: த.வி.பு. துயிலுமில்லத்தில் அவரிற்கென்று ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள நினைவுக்கல்லிற்கு அருகிலுள்ள சிறு மேசை மேல் கொண்டுசென்று வைப்பர். அம்மேசையின் பின்புறத்தில் தமிழீழ தேசிய நிறங்களாலான பதாகை ஒன்று நிறுத்தப்பட்டிருக்கும்; நீள்சதுர வடிவில் மஞ்சள் நிறப் பின்னணி கொண்ட சிவப்பு நிற எல்லை கொண்ட சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்ட ஒரு பதாகை இதுவாகும். இதில் எழுதப்பட்டுள்ள வாசகங்களானவை: வீரவணக்கம் தேசத்தை நேசித்து தேகத்தை வித்தாக்கிய இம் மாவீரருக்கு எமது (தமிழீழ தேச வரைபடம் பின்னணியிலும் உறுதியின் உறைவிடம் முன்னணியிலும் இருக்கத்தக்கதான படம்) வீரவணக்கம் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் பிறகு உறுதியுரை வாசிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்படும். பின்னர் நான்மூலைகளிலிருந்தும் மூன்று வேட்டுக்கள் தீர்க்கப்படும். பின்னர் திரையால் மறைக்கப்பட்டுள்ள நினைவுக்கல்லின் கல்வெட்டிற்கு உரியவரின் பெற்றாரில் ஒருவர்/ கணவன்/ மனைவி என்போரில் ஒருவர் திரைநீக்கம் செய்வார். பிறகு, அதற்கு மலர்வணக்கம் செய்யப்படும். முதலில் மாவீரரின் உற்றாரிற்கு மலர் மாலை அணிவித்தலில் முன்னுரிமை வழங்கப்படும். பின்னர் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மற்றும் அம்மாவீரரின் பொறுப்பாளர் என்போர் மலர் மாலை அணிவிப்பர். அடுத்து மக்கள் மலர் வணக்கம் செய்வர். தொடர்ந்து நினைவுரை ஆற்றப்படும். இறுதியாக ஊர்வலமாக கொண்டுவந்த அன்னாரின் திருவுருவப்படும் அவரிற்கு உடையவர்களிடம் கையளிக்கப்படும். துயிலுமில்லத்திலிருந்து அகலுதல்: அனைத்தும் முடிந்த பின்னர் எல்லோரும் அவ்விடம் விட்டு நீங்கிச் செல்வர். சிலர் பிரிவுத்துயர் தாங்கேலாமல் அங்கிருந்து கொஞ்ச நேரம் அழுதுவிட்டுச் செல்வர். செல்லும் பொழுது அவர்களிற்கு கீழுள்ளவாறு ஒரு "மாவீரர் அட்டை" வழங்கப்படும். அதில் உரிய மாவீரர் தொடர்பான அனைத்து விரிப்புகள் இடம்பெற்றிருக்கும். இதைக் கொண்டு தமக்கான மேலதிக பதிவுகளை அவர்கள் செய்யலாம். இறுதியில்: சமநேரத்தில், வீரச்சாவு வீட்டிலிருந்து சந்தனப் பேழை/திருவுருவப்படம் எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், ஒரு சடலம் இழவு வீட்டில் இருந்து சென்ற பின்னர் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்யப்படும், உரியவரின் வீட்டாரால். இதற்கான செலவுக் கொடுப்பனவை புலிகள் அமைப்பே பொறுப்பெடுத்திருந்தது. அதை கமுக்கமான முறையில் அக்குடும்பத் தலைவர் அல்லது இணையிடம் வழங்கினர் புலிகள். இவையெல்லாம் முடிந்து ஏறத்தாழ இரு கிழமைகளுக்குள் குறித்த மாவீரரின் சட்டம்போட்ட திருவுருவப்படம் (அவர் வரியில் நிற்கும் அரைப்படம். இப்படத்தின் மேற்பகுதியில் "வீரவணக்கம்" என்றும் கீழ்ப்பகுதியில் அவர் தொடர்பான விரிப்பும் இடம்பெற்றிருக்கும்) குடும்பத்தினரிடம் வழங்கப்படும். நிரந்தரப்படையினைச் சேர்ந்த ஒரு மாவீரரின் வீரச்சாவிற்குப் பின்னரும் அவருடைய குடும்பத்தினருக்கு "போராளிகள் குடும்ப நலன் காப்பகம்" கொடுப்பனவு வழங்கி பராமரிக்கும். அவர்களுக்கென்று ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அட்டை மூலம் இது தொடரும். முன் பக்கம் - பின் பக்கம் நடுப்பக்கம் மக்கள்படையினைச் சேர்ந்த ஒரு மாவீரரின் வீரச்சாவிற்குப் பின்னர அவருடைய குடும்பத்தினருக்கு "கிராமிய அபிவிருத்தி வங்கி" மூலம் கணக்கொன்று திறக்கப்பட்டு அதன் சேமிப்புக் கணக்கு அட்டை மூலம் கொடுப்பனவு வழங்கி பராமரிக்கப்படுவர். முன் பக்கம் (தொடரும்) உசாத்துணை: எனது சில நேரடி அனுபவத்தோடு கேணல் ராஜு வீரவணக்க நிகழ்படம் பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்படம் 'அம்மா நலமா' திரைப்படம் கிடைக்கப்பெற்ற மாவீரர் படிமங்கள் வித்துடல் விதைப்பு எப்படி நடைபெறும் - ஈழநாதம் செய்தியாளர் சுரேன் கார்த்திகேசு தியாகசீலம் - வி.இ.கவிமகன் மாவீரர் நாள் கட்டுரை - நேரு குணரத்தினம், 2005 சேரன் ஈரூடக தாக்குதலணியைச் சேர்ந்த மாவீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு உதயன்: 10/07/1992 விடுதலைப்புலிகள்: ஐப்பசி-கார்த்திகை 1991 ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  2. இந்தியப் படையின் காலத்தில் பிரிகேடியர் பால்ராஜும் ஏனைய போராளிகளும் 10/1987-1989
  3. ஆண்டுகள் பல கடந்து எம் நினைவுக் கிடங்கில் புதைக்கப்பட்ட பல நூறு உண்மைகள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அவை எங்களின் சாவுகளாக இருக்கட்டும் வலிகளாக இருக்கட்டும் சந்தோசங் களாக இருக்கட்டும் அது எது என்ற வகையற்று நினைவற்று போவது காலக்கொடுமை. இந்த வகைக்குள் நேற்று நான் அனுபவித்தது தான் இந்த “தியாகசீலம்”. “தியாகசீலம்” என்ற சொல்லாடல் விடுதலைப் போராட்டத்தில் தினமும் பயன்பாட்டில் இருந்ததை அனைவரும் அறிவர். மாவீரர்களோடு பின்னி பிணைந்து விட்ட இச்சொல்லாடலை மூன்று சந்தர்ப்பங்களில் நாம் பயன் படுத்தி வந்தோம். 1 : வீரச்சாவடைந்த போராளின் உடலங் களை தூய்மைப்படுத்தி அவர்களின் உடலங்கள் கெட்டுப் போகாத அளவுக்கு தயார்படுத்தி ( அதாவது இன்போம் பண்ணுவது என்று மக்கள் கூறுவது) இராணுவ உடை அணிந்து சந்தனப் பேளையில் அவர்களை கிடத்தி உறவினர்களிடம் கையளிக்கும் வரை அத்தனையையும் செய்யும் இடமான “தூண்டி” என்று ஆரம்ப நாட்களில் அழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பாசறையை பின்னாட்களில் புனிதத்துவம் மிக்க பெயரான ” தியாகசீலம் ” என்று உணர்வுகளில் அணைத்துக் கொண்டோம். 2: முகம் மறைக்கப்பட்ட மறைமுக போராளிகளின் வித்துடல்களை விதைத்த போது அல்லது நடுகற்களை நட்ட போது அவற்றை தியாக சீலம் என்றே அணைத்துக் கொண்டோம். (பல இரகசிய காரணங்களுக்காகவே அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டதும், முகமறியா மறைமுகங்களாய் அவர்கள் தூங்கியதும் வெளிப்படையான உண்மை. தமிழீழ விடுதலைக்கு பின்பான காலம் அவர்களின் முகம் யார் என அடையாளப் படுத்தப் பட்டிருக்கலாம்.) 3: வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடலங்கள் வந்த போது பலவற்றில் அடையாளத்தகடுகள் இல்லாத நிலை இருந்தது. அது எதிரியிடம் பிடிபட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தி னூடாக வந்த போராளிகளின் உடலங்களாக இருக்கலாம் அல்லது சண்டைக்களங்களில் எம்மால் மீட்கப் பட்டாலும் கழுத்தில் இடுப்பில் கையில் என கட்டப்பட்டிருந்த மூன்று தகடுகளும் தவறி இருக்கலாம். அது எவ்வாறோ போராளிகளின் உடலங்களை எம்மால் அடையாளப்படுத்த முடியாத சந்தர்ப்ப ங்களில் படையணி அல்லது துறைசார் போராளி நண்பர்கள் அல்லது இறுதியாக எடுக்கப்பட்டிருந்த தனிநபர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த காயவிபரங்களை வைத்து அடையாளம் காண முயன்றும் அதிலும் தோல்வி களை சந்தித்து அடையாளம் காண முடியாத பல நூறு வித்துடல்களை விதைத்த போது அவர்களுக்கான பொதுப்பெயராக “தியாகசீலம்” என்ற உணர்வுமிக்க புனிதத்தை அணைத்துக் கொண்டோம். இவ்வாறு இவர்கள் விதைக்கப்பட்ட போது இவர்களை அடையாளம் காணும் சந்தர்ப்பம் ஓர்நாள் வரும் என்றே எம் தேசியத்தலைவர் நம்பிக்கை கொண்டிருந்தார். தமிழீழம் மலர்ந்த பின் தமிழீழ தேசத்தில் எம் மக்களின் DNA க்கள் பரிசோதிக்கப் படும் போது இந்த மாவீரர்களின் DNA எந்த உறவுகளோடு ஒத்துப் போகுதோ அதை வைத்து இந்த உடலம் யாருடை யது என்பதை இனங்காண முடியும் என்ற தூரநோக்க சிந்தனை அவரை ஆறுதல்படுத்தியது. அதனால் தான் இந்த தியாகசீலர்களை அவர் மாவீரர் துயிலும் இல்லங்களில் அடையாள ங்கள் அற்று விதைத்த போதும் தியாகசீலம் என்ற அடையாளத்தை கொடுத்து மனவேதனையை உள்ளுக்குள்ளே புதைத்துக் கொண்டார். இவ்வாறாக எங்கள் உணர்வுகளோடும் உதிரத்தோடும் ஒன்றிவிட்ட தமிழீழ தாயக மீட்பு போரில் வீரச்சாவடைந்த இந்த உன்னதமானவர்களை அடையாளப்படுத்தும் சொல்லாடலை ஒரு கட்டுரைக்காக நினைவு படுத்திய போது அதை மறந்து தவித்த மருத்துவ போராளி ஒருவர் என்னிடம் கேட்க நான் என் போராளி நண்பர்களுக்கு தகவல் அனுப்ப அவர்கள் வேறு போராளி நண்பர்களுக்கு தகவல் அனுப்ப என்று எம் நினைவுக்கிடங்கை கிளறி பார்த்து அதை உறுதிப்படுத்தி கொள்ள கிட்டத்தட்ட 25 பேருடைய நினைவகங்களை தேட வேண்டிய தேவை எழுந்தது. இது தமிழீழ தேசத்தை நேசித்த / நேசிக்கும் எமக்கு ஆரோக்கியமானதல்ல. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுத முனைகள் மௌனிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்த நிலையில் இந்த புனிதமான சொல்லாடல் கூட நினைவில் இருந்து மறைந்து போய்விட்டது என்றால் எதிர்காலத்தில் எமது விடுதலைப்போராட்டம் என்று ஒன்று நடந்தது என்பதையும் எம் வீரசெம்மல்களின் உயிர் தியாகங் களையும் எம் மக்களின் வலிகளையும் எதிரியின் இனவழிப்பையும் எம்மால் எவ்வாறு நினைவில் வைத்துக் கொள்ள முடியும்? எம் இளைய தலைமுறைக்கு அல்லது அடுத்த தலைமுறைக்கு எம் மீது திணிக்கப்பட்டு எம்மால் எதிர்கொள்ளப்பட்ட இந்த போரின் வடுக்களை எவ்வாறு கூறப்போகிறோம்? அவர்களுக்கு எங்கள் தியாகங்களை எவ்வாறு கூறப் போகிறோம்? என எழும் பல நூறு வினாக்களுக்கு விடையில்லை. அனைத்தையும் மீறி ஒரு பெரும் வினா எழுந்து நிற்கிறது. “நாம் அடுத்த தலை முறைக்கு எதை விட்டுச் செல்கிறோம்…?” இந்த இடத்தில் புலம்பெயர் அமைப்பு க்கள் மற்றும் ஈழப்படைப்பாளிகளுக்கு அன்பான வேண்டுகை ஒன்றையும் விட்டுச்செல்கிறேன். அன்பானவர்களே…! ஆண்டுதோறும் தங்களால் முன்னெடு க்கப்படும் “மாவீரர் நினைவேந்தல் ” நிகழ்வுகளில் தங்களால் காட்சிப் படுத்தப் படும் உணர்வுமிக்க கல்லறைகளாக இருக்கட்டும் திருவுருவப்படங்களாக இருக்கட்டும் பதாதைகளாக இருக்கட்டும் எந்த வடிவமாயினும் அந்த வடிவத்தில் “தியாகசீலம்” என்று ஒரே ஒரு பகுதியை உருவாக்கி மக்களுக்கு அது தொடர்பான தெளிவை கொடுங்கள். அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒன்று இருந்தது என்பதை வரலாறாக கொடுங்கள். படைப்பாளிகளே: உங்கள் படைப்புக்களை நினைவுகள் சுருங்க முதல் எழுத தொடங்குகள் வரலாறாகி விட்டவர்களின் தியாகங் களை வரலாறாக்குங்கள் அந்த தியாக சீலர்களும் என்றும் உயிர்ப்புடன் இருப்பார்கள். நன்றி – வி.இ. கவிமகன் https://www.uyirpu.com/?p=7211
  4. https://www.facebook.com/puratchi2100/?locale=fr_CA போர்க்காலப் பாடல்களில் 'தாலாட்டுப் பாடல்கள்' தேனிசை செல்லப்பா இசையில் சுவர்ணலதா பாடிய இப்பாடலே போர்க்கால தாலாட்டுப் பாடல்களில் முதற்பாடல் என வரையறுக்கக்கூடியது. தாலாட்டு பாடமாட்டேன் தாலாட்டு பாடமாட்டேன் தமிழ் பிள்ளை என்பிள்ளை அவன் தலைசாய்த்து தூங்க இது நேரம் இல்லை. புல்லாங்குழலிசை அள்ளிவரும் இப்பாடலை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிருந்தார் 'இது புலிகளின் காலம்' இசைநாடா. இப்பாடலின் சரணங்கள் எல்லாமே போர் கொடுத்த இழப்புகளையும், சம்பவ பதிவுகளையும் சொல்லி வைப்பதாக அமைகின்றது. இப்பதிவுகளில் முகநூல், சூழல் நிலைகருதி சில வரிகள் தவிர்க்கப்பட்டு இலக்கிய பதிவாகவும், மறக்கப்படாதபடி காலக்கண்ணாடியான இலக்கியம் ஆவணப்படுத்தப்படவும் பதிவாகின்றது. தொட்டில்கூட இல்லாத அவலம் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. எதிரியின் கொடிய குண்டுவீச்சிலே தொட்டில் எரிந்தது என் பிள்ளை விளையாடும் முற்றத்தில் நின்ற பந்தல் சரிந்தது. உறங்கக்கூடாது என் மகன் என்றொரு உண்மை புரிந்தது.(2) தாலாட்டு எனும் சொல் எப்படி ஆனது? தால் என்றால் நாக்கு ஆட்டு என்றால் நாவினை ஆட்டி அசைத்தல் என்பர். ஆக தாலாட்டு என்பது நாட்டுப்புற பாடலாக இயல்பிலேயே தோன்றியதெனலாம். இதனை சங்கீதமே கற்காதோரும் பாடினர். போர்க்காலத்தில் இதனை புதிய விதமாக எழுச்சிக்கும், பரப்புரைக்கும் பயன்படுத்தினர். பி.சுசீலா பாடிய போர்க்காலப் பாடல்களில் 'கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு' தாலாட்டுப்பாடல் ஒரு காலப்பதிவு எனலாம். இப்பாடல் இப்போது கேட்டாலும் ஒரு காலத்தை காண்பிக்கும் கண்ணாடியாகவே தெரியும். இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தையும் ஒரு சரணத்தில் கவிஞர் பதிவாக்குகிறார். ஒரு கொடூரமான போர்க்காலத்திலே அதில் சிக்கியிருக்கும் தாயொருத்தி வரலாற்றோடு வாழ்வையும் தாலாட்டிலே சொல்லிக் கொடுக்கிறாள். புதுவை இரத்தினதுரை எழுதி தேவேந்திரன் இசையில் 'களத்தில் கேட்கும் கானங்கள்' ஒலிநாடாவில் வெளியான பாடல். இப்பாடல் காலத்தில் ஒலிநாடாக்களே பாவனையில் இருந்தன. முதற்சரணம்: நாய்கள் குரைக்குது ராவினிலே - இந்தி ராணுவம் போகுது வீதியிலே. வாய்கள் திறக்கவும் கூடாதாம் - எங்கள் வாசலில் தென்றலும் வீசாதாம். தீயினில் தாயகம் வேகுது பார் - எட்டு திக்கிலும் ஓர்குரல் கேட்குது பார். பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே - நான் பாலுடன் ஊட்டுவேன் வாயினிலே. என்று தொடர்கின்றன. 'கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு, பொன்முடி சூடிய பூச்சரமே எந்தன் பூங்குயிலே நீயும் கண்ணுறங்கு' எனும் பல்லவி அக்காலத்தில் அதிக பிரபலம். புவனா இரத்தினசிங்கம் அவர்களின் குரலுக்கென யாருக்குமில்லா தனித்துவம் உண்டு. பார்வதி சிவபாதம் போலவே புவனா இரத்தினசிங்கம் அவர்களின் குரலையும் கேட்ட மாத்திரத்திலேயே பகுத்தறியலாம். 'தீயினில் எரியாத தீபங்களே' போன்ற பாடல்களைப் பாடியவர். இவர் பாடிய போர்க்கால தாலாட்டுப் பாடலொன்று. பஞ்சவர்ணத் தொட்டிலிலே பள்ளிகொள்ள வந்தவனே வஞ்சமற்ற உன்மனதில் வாழ்வதுதான் தெய்வமடா(2) ஆராரோ கண்ணே ஆரிரரோ ஆராரோ கண்ணே ஆரிரரோ. முல்லை செல்லக்குட்டி என்ற முல்லைச்செல்வன் போர்க்காலத்தில் மக்கள் மனதில் நின்றுநிலைக்கும் பாடல்களை வார்த்தவர். 'ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்' போன்ற பாடல்களின் சொந்தக்காரர். இவர் இரண்டு போர்க்காலத் தாலாட்டுப் பாடல்களையும் எழுதியுள்ளார். இப்பாடலும் போரில் தமிழ்த்தாய் பட்ட கொடூர வலியை சொல்லிற்று. முதலாவது சரணத்தில் புவனா இரத்தினசிங்கம் இப்படிப் பாடுகிறார். தாயகத்தில் அமைதியின்றி தாய்மனசு தவிக்கையிலே பூமியிலே நீ பிறந்தாய் பொன்மகனே கண்மணியே! நீதியென்ற பாதையிலே வீறுநடை போட்டிடடா நீ பிறந்த தாய்நாட்டின் வேதனையை நீக்கிடடா. ஆராரோ கண்ணே ஆரிராரோ. மேற்படி பாடலில் இனப்பற்றும், படை பலப்படுத்தல் பற்றி இரண்டாம் சரணத்தில் குறிப்பிடும் கவிஞர் மூன்றாவது சரணத்தில் நற்பழக்கத்தையும் சொல்லி வாழ்வியல் தத்துவத்தையும் வைத்தார். நெஞ்சமெனும் கோவிலிலே நஞ்சை வைத்து வாழுகின்ற நீசர்களின் பாதையிலே நீ மயங்கிப் போகாதே மஞ்சமொடு மாளிகையும் மடிந்தால் வருவதில்லை மானமது காத்திடவே ஆரமுதே வாழ்ந்திடடா ஆராரோ கண்ணே ஆரிரரோ இப்பாடல்கள் இரண்டும் இடம்பெற்ற யாகராகங்கள் இசைநாடாவிற்கு இசையமைப்பாளர் கண்ணன் இசை வழங்கியிருந்தார். முல்லை செல்லக்குட்டி அவர்களின் இன்னுமொரு தாலாட்டுப் பாடலை இந்திராணி பாடியிருக்கிறார். இதோ அப்பாடல். கண்ணே கண்ணே கதைகேளு அன்னை பெற்றாள் பெரும்பேறு கரும்புலி பிறந்த இந்நாட்டிலே கதிரவனே நீ பிறந்தாய் எந்தன் வீட்டிலே. என்பதே பல்லவி. காலனவன் கலங்கிட கண்டவர்கள் நடுங்கிட கடற்படை கலமிங்கு சிதறுதடா என்று தொடரும் முதற்சரணமும், பெற்றமண்ணை அந்நியர்க்கு விற்றுவிட எண்ணுகின்ற அத்தரின் தயவை என்றும் நாடாதே. சத்தியத்தை காத்திடவே நித்தம் களம் ஆடிவரும் உத்தம புலியைவிட்டு ஓடாதே. என இரண்டாம் சரணத்தோடு மூன்று சரணங்கள் கொண்டமைந்த பாடலிது. அகநானூற்றிலும் தாலாட்டுப் பாடல்கள் உள. கொற்றங்கொற்றனாரின் தாலாட்டுப்பாடலை தமிழுலகில் அறியப்பட்ட முதற்தாலாட்டு பாடலென்பர். முன்னேயும் இருந்திருக்கலாம். பாடகி சுனந்தா தமிழ்ச்சினிமாவில் நன்கு அறியப்பட்டவர். 'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குதே' போன்ற பாடல்களைப் பாடியவர். போர்க்கால 'புயல் அடித்த தேசம்' இறுவட்டில் காந்தன் இசையில் சுனந்தா பாடிய பாடலும் போர்க்காலப் பாடல்களில் அதிகம் ஒலித்த பாடல். குஞ்சுரம்மா அவர்களும் இணைந்து குரல் கொடுத்திருக்கிறார். பாடலின் பெரும்பகுதி சுனந்தா குரலே. செந்தமிழ் தூளியிலே சிரிக்கும் வெண்ணிலவே செவ்வள்ளி கண்சிமிட்டி துள்ளி குதிக்கும் பொன்மலரே! நான் நினைத்த தமிழீழம் வேண்டும் உனக்கு நீ அதனை அரசாள வீரம் இருக்கு. அன்னை நினைத்ததை முடித்துக்காட்டடா. காந்தன் அவர்கள் இப்பாடலில் புல்லாங்குழலினை பயன்படுத்தி இருந்தார். வாணி ஜெயராம் அவர்கள் பிள்ளைக்காக போர்க்காலத்தில் பாடிய 'தலைவாரி பூச்சூடினேன்' பாடலை பாடியிருந்தார். அப்பாடல் தாலாட்டுப் பாடல் என வகைப்படுத்த முடியாதது. போர்க்காலம் இலக்கியம் தமிழ் இலக்கியப்பரப்பில் தனித்துவமானது. அதன் வகைகளை ஆய்வாக்குதலின் தொடரே இப்பதிவாம். நன்றி யோ-புரட்சி-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.