தோழனே... உன்னை மறப்போமா? -இதயச்சந்திரன்
ஊடகச் சமராடி, தோழர். 'தராகி சிவராம்' மறைந்து 7 ஆண்டுகளாகி விட்டன.
அவர், தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை, ஆழமான சர்வதேசப் பார்வை ஊடாக தெளிவாக முன்வைத்த ஒரே ஊடகவியலாளன் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
இந்தியாதான் எமது உலகம் என்று குறுகிக் கிடந்தவர்களின் சிந்தனைத் தளத்தினை விரித்துவிட்டவரே நண்பன் சிவராம்.
கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவு நிலை சீர்குலைந்து போனதிற்கான அடிப்படைக் காரணியை, தான் கற்றுக்கொண்ட மாக்சிய இயங்கியல் தத்துவத்தின் ஊடாக புரியவைத்தவரும் அவர்தான்.
மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக , கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களின் நீர்,நிலவளங்களை அபகரித்த சிங்களத்தின் செயற்பாடு, அவர்களிடையே எவ்வாறு முரண்நிலையைத் தோற்றுவித்தது என்பதனை ஒரு நேர்காணலில் விளக்கமாகக் கூறியிருந்தார் சிவராம்.
தராக்கி மறைந்த ஏழு ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள். சீனாவின் எழுச்சி, மேற்குலகின் வீழ்ச்சி, 'பிரிக்ஸ்' இன் தோற்றம், ஆசியாவில் அமெரிக்காவின் 'புதிய பார்வை' என்று ஏகப்பட்ட திருப்பங்கள்.
அதுமட்டுமல்லாது, யுத்தம் முடிவடைந்ததும், இலங்கை ஊடகத்துறையில் புதிய பரிமாணங்களை உள்வாங்கும் வகையில், நிதியியல் ஊடகவியலின் [Financial Journalism ] காத்திரமான பங்கு முக்கியத்துவம் பெறுவதை அவதானிக்கலாம்.
தென்னிலங்கை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் நிதியியல், வர்த்தகம் குறித்த பத்தி எழுத்துக்கள் அதிகமாகக் காணப்பட்டாலும், தமிழ் பரப்பில் இதன் வகிபாகம் போதுமானதாக இல்லை என்பதையும் இந்நாளில் குறிப்பிட்டாக வேண்டும்.
இருப்பினும் அரசியல், இராணுவம், பொருளாதாரம் என்கிற விடயங்களை தனது எழுத்துக்களில் ஆய்வுக்குட்படுத்திய , பேசுபொருளாக்கிய, மாமனிதர் சிவராமின் பங்கினை இந்நாளில் நினைவுகூருவது பொருத்தமானது.
துப்பாக்கிச்சன்னங்கள் அறிவியலாளனின் இயக்கத்தை நிறுத்தலாம். ஆனால் அவன் மக்களிடம் விதைத்த புதிய சிந்தனை முறைமைகளை அழிக்கமுடியாது .
நடேசன்,நிமலராஜன், சுகிர்தராஜன், சத்தியமூர்த்தி போன்ற எண்ணற்ற தமிழ்தேசிய ஊடக எழுத்துச் சமராடிகளை நாம் இழந்தாலும், அவர்கள் அக்காலத்தில் ஆற்றிய பெரும்பணி முடிவுறாமல் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்தின் ஊடக வீச்செல்லை விரிந்து கொண்டு செல்கிறது.
அவர்களின் ஆளுமை, எமது ஒவ்வொரு எழுத்திலும் ஆழமாகப் புதைந்து கிடக்கிறது.
போராட்ட வடிவங்கள் மாறினாலும், விடுதலைக்காக எழுதிக் குவிக்கும் எழுத்தாளனின் இலக்கு மாறாது.