பல போரியல் வெற்றிகளை பெற்றுத் தந்த மூத்த தளபதி கேணல் ராயு..!
Saturday, August 25, 2012, 4:34தமிழீழம்
விடுதலைப் போரில் சுமைகளைச் சுமந்ததொரு போரியல் ஆற்றலாளனை நாங்கள் இழந்து விட்டோம். எங்கள்
தலைவனின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த மூத்த தளபதி கேணல் ராயு 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக வித்தாகிப் போனார்.
மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ்வாழ்வு அனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத் தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச் சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே.
எமது விடுதலைப் போராட்டப் பாதையில் எத்தனையோ எமது போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர்.
மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தம்மை தேசவிடிவுக்காக அர்பணித்துள்ளனர். இவ்வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத் தடத்தை பதித்து நிற்கிறது.
எமது இனம் பெரும் அடக்கு முறைக்குள்ளான 1983 காலப்பகுதியில் கேணல் ராயு அவர்கள் தன்னை இவ்விடுதலைப் போரில் இணைத்துக்கொண்டார். அர்ப்பணிப்பும் ஆழமான விடுதலை வேட்கையும் கொண்ட கேணல் ராயு அவர்கள் போராட்டம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களிலெல்லாம் எமது தலைவருடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர்.
விடுதலைப்; படையில் வளர்ச்சியின் அம்சமாக மரபுரீதியான போர்ப் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் எமது இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கியவர்.
கேணல் ராயு எமது இயக்கத்தின் இராணுவ அறிவியல் ரீதியான வளர்ச்சிக்காக தன்னை முழமையாக அர்ப்பணித்து உழைத்தவர். இயல்பாகவே இலத்திரனியல் பொறியியல் துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டவர். விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றி படையியல் ரீதியான பல புதிய உருவாக்கங்களின் உந்துசக்தியாகத் திகழ்ந்தவர்.
மூன்றாம் கட்ட ஈழப் போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்த அதன் செயற்திறனையும் சாத்தியமாக்கிய போரியல் ஆற்றலாளன்.
போர்களங்களில் வெளிப்பட்ட அவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் எமக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளன.
மனித இனத்தின் கொடிய எதிரியான புற்றுநோய் தனது வேர்களை இவருள் பரப்பிய நேரத்திலும் சோர்வின்றி உடல் தளராது எமதியக்கத்தின் இராணுவ அறிவியற்துறையின் வளர்ச்சிக்காக தன்னை வருத்தி உழைத்;தார். இறுதி வரை எமதினத்தின் விடிவையும் தேசத்தையும் சிந்தித்தார். அதற்காகவே தன்னை முழுமையாக அர்பணித்தார்.
ஒரு தந்தைக்கே உரிய உரிமையுடனும் பாசத்துடனும் போராளிகளை வழிநடத்திய ஒரு போரியல் அறிவாளன். ராயு அண்ணா! எனப் போராளிகளால் அன்பு செய்யப்பட்டதொரு பொறுப்பாளன். தலைவருடன் அருகிருந்து பல போரியல் வெற்றிகளை தேசம் அடைய உழைத்த எங்கள் மூத்த தளபதி 25.08.2002 அன்று சுகவீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்டார். விடுதலையை உச்சரித்தபடி விதையாகிப்போன எங்கள் தளபதிக்கு எங்கள் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.tamilthai...ewsite/?p=13729