தேசங்களின் குரல்கள் ---------------------------------- இலங்கையிலும், மும்பையிலும் இப்பொழுது ஒரே நேரம் தானே என்று அவர் கேட்கும் போது, ஆமாம் என்று தாமதிக்காமல் சொல்லிய பின் தான் அவரது கேள்வி ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் அப்படிக் கேட்டது மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் மும்பையிலிருக்கின்றார் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு மும்பையில் ஒரு கிளை இருக்கின்றது. இப்பொழுது அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்து வேலை செய்வதை முடிந்த வரை குறைக்கும் அல்லது முற்றாகவே தவிர்க்கும் முயற்சிகளை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்கள். மும்பையில் அவர்களில் சிலர் தினமும் மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வேலைக்காக பயணம் செய்கின்றோம் என்று மிகவும் அலுப்புடன் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அவர்கள களைத்து வீடு போய்ச் சேரும் நேரத்தில் அமெரிக்க மேற்கு கரையில் விடிந்து நாங்கள் வேலைகளை ஆரம்பிப்போம். மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்பது போல அவர்கள் மீண்டும் எங்களுடன் சேர்ந்தும் ஆரம்பிக்கவேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றன, ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் இந்தியாவில் சமீபத்தில் உள்ளூர் விமான சேவை முற்றாக நிலைகுலைந்தது போலவே நிலவரம் ஆகக்கூடும். இலங்கை என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டேன். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்று அவர்களாக அடையாளம் கண்டு கொண்டது இதுவரை கிடையாது என்றே நினைக்கின்றேன். நீங்கள் இந்தியாவா என்றே வழமையாகக் கேட்பார்கள். ஒவ்வொரு பிரதேசங்களிலும் எங்களுக்குள் நாங்களே கண்டு கொள்ளும் சிறிய, பெரிய வித்தியாசங்கள் தோற்றங்களில், தொனிகளில் இருக்கின்றன, ஆனால் அவை பிறருக்கு தெரிவதில்லை போல. 140 கோடி இந்தியர்களும் ஒரே மாதிரியே இருக்கின்றீர்களே என்று ஆச்சரியப்படும் ஜப்பானியர்கள் இருக்கின்றார்கள். ஷாருக்கான், சல்மான்கான், கமல், அஜித், நாங்கள் இப்படி எல்லோரும் ஒன்றாக அவர்களுக்குத் தெரிவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. 140 கோடி சீன மக்களும் எங்களுக்கு ஒன்றாகவே தெரிகின்றார்கள். ஆனால் அவர்களோ தெற்கு சீனர், வடக்கு சீனர், மங்கோலிய சீனர் என்று தங்களுக்குள்ளே மிக இலகுவாக அடையாளப்படுத்தி கண்டு கொள்கின்றனர். தன்னுடைய மனைவி ஒரு மங்கோலிய சீனர், ஆகவே நான் தன்னுடைய வீட்டுக்கு வருவது அவ்வளவு உசிதமான ஒரு செயல் அல்ல என்று சிரித்துக் கொண்டே ஒரு தென் சீன நண்பன் ஒரு தடவை சொல்லியிருக்கின்றான். ஜெங்கிஸ்கான் மீது இன்னமும் அவர்களுக்கு ஒரு பயம் இருக்கின்றது போல. ஆட்களை அடித்து குழம்பு வைத்து விடுவார்கள் என்று ஒரு வரலாற்றை அவர்களே சொல்லிக் கொள்ளுகின்றார்கள். நான் அமெரிக்கா வந்த முதல் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேசம் என்று அந்தப் பிரதேசத்தில் இருக்கும் நாடுகளில் இருந்து சிலரும் அந்தப் பல்கலைக்கு வந்திருந்தார்கள். பங்களாதேசத்தை சேர்ந்தவர் ஆங்கிலத்தில் மேற்படிப்பு படிப்பதற்காக இங்கே வந்திருந்தார். ஆங்கில மேற்படிப்பு என்ற விசயமே அவரைப் பற்றிய பெரிய ஆச்சரியமாக இருக்கையில், அவர் இந்தியா மீது கொண்டிருந்த கடும் ஒவ்வாமை இன்னும் ஆச்சரியப்படுத்தியது. அவருக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்த அந்த வெறுப்புணர்வு மிகவும் அதிகமாக இருந்தது. முதல் வருடம் பனிக்காலம் ஆரம்பித்த பின் ஒரு நாள் நடந்த ஒரு விடயம். அந்தப் பிரதேசத்தில் பனி மலை மலையாகக் கொட்டும். காலை கண் விழித்துப் பார்த்தால் புது வெள்ளை மலை ஒன்று வீட்டின் முன் நிற்கும். ஐந்து ஆறு மாதங்களுக்கு அந்த மலைகள் அவைகளின் இடத்தில் உறுதியாக நிற்கும். ஏற்கனவே பிடரி அடிபட ஒரு தடவை பனியில் வழுக்கி விழுந்திருந்தேன். பிடரி பலமாக அடிபட்டாலும், எதுவும் ஆகவில்லை, தலை குழம்பவில்லை என்று தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கின்றேன். அன்று காலை வகுப்புக்கு மெது மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். தூரத்தில், வீதியின் ஓரங்களில் அள்ளிக் குவித்துப் போடப்பட்டிருந்த பனிமலைகளின் நடுவிற்குள் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் மிகவும் சத்தமாக கோபத்துடன் நின்று கொண்டிருந்தார், மற்றவர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அருகில் போன பின் ஆங்கிலத்தில் சத்தம் போட்டவர் ஆங்கில மேற்படிப்பிற்காக வந்தவர் என்று தெரிந்தது. அமைதியாக நின்றவர் ஒரு ஆசிய நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாடுகளில் அவர் ஏதோ ஒரு நாடு. அந்த ஆசிய நாட்டவர் நீங்கள் இந்தியாவா என்று பங்களாதேசத்தை சேர்ந்தவரிடம் கேட்டிருக்கின்றார். அங்கே இந்தியா தான் ஒரே ஒரு நாடா, இந்தியர்கள் மட்டும் தான் இங்கே வருவார்களா என்று ஆரம்பித்து விறைக்கும் பனிக் குளிரிலும் அங்கே அனல் பறந்து கொண்டிருந்தது. நான் எப்படி அவரை நீங்கள் இந்தியாவா என்று அவரைச் சந்தித்த முதல் நாள் கேட்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. இப்படி ஒரு பிரச்சனை கொட்டிக் குவிந்து கிடக்கும் பனிக்குள் ஒரு நாள் வரும் என்று காந்தி தாத்தா அன்று நினைத்திருக்கவேமாட்டார். தான் மிகவும் சமீபத்தில் இலங்கைக்கு விடுமுறைக்காக வந்திருந்தேன் என்றார் மும்பைக்காரர். இலங்கையின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு அவர் போய் வந்ததாகச் சொன்னார். நான் பேசும் ஆங்கிலத்தில் அவர் இலங்கையில் கேட்ட சிங்கள மொழியின் தொனியும், சாயலும் இருப்பதாகச் சொன்னார். அதனாலேயே நான் இலங்கையில் இருக்கின்றேன் என்று கண்டு பிடித்ததாகச் சொன்னார். ஆனால் என்னுடைய முழுப் பெயர் கேரளாவில் இருக்கும் பெயர்கள் போன்றும் இருப்பதால் ஒரு சந்தேகம் இருந்தது என்றார். இவ்வளவு விவரமும், நுண்ணுணர்வும் உள்ளவர்களை தொழில்நுட்பத் துறையில் காண்பது அரிது. கணினிக்கு எழுதப்படும் நிரல்கள் அல்லது புரோகிராம் போல சில குறிப்பிட்ட செயல்களை மட்டுமே திரும்ப திரும்ப பெரும்பாலும் செய்து கொண்டிருப்பவர்கள் நாங்கள். அக்கம் பக்கம் அவ்வளவாகப் பார்ப்பதில்லை. தான் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றார். ஹரியானாவில் யாரையாவது தெரியுமா என்று கேட்டார். கபில் தேவை மிகவும் பிடிக்கும் என்றேன். அவரை எப்படித் தெரியும் என்று ஆச்சரியம் காட்டினார். இருவருக்குமிடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது தெரிந்தது. கபிலுக்கு விளையாடும் நாட்களில் ஆங்கிலம் அவ்வளவாக வராது என்று சொல்வார்கள். அத்துடன் அந்த நாட்களில் இந்திய கிரிக்கெட் அணியில் பம்பாயைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். கவாஸ்கர், வெங்சர்க்கார் இன்னும் சிலர். கபிலிடம் மிகவும் அதிக திறமையும், அவருக்கு மாற்றீடாக அன்று வேறு ஒருவரும் இல்லாததாலும் அவரால் இந்திய அணியில் நிலைத்து நிற்க முடிந்தது. ஆனாலும் இவர்கள் எல்லோரும், கபில் உட்பட, ஒரே குரலில், ஒரே தொனியில் பேசினார்கள் என்றே எனக்கு ஞாபகம். கிழக்கு ஐரோப்பியர்கள் மற்றும் ரஷ்யர்களின் ஆங்கில உச்சரிப்பும் தனித்துவமானது. இவர்களில் நான் சந்தித்தவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஆனால் அதற்கும் மேலே போய், தங்களை பெரிய விஞ்ஞானிகளாகவே அவர்களில் பலரும் தங்களை நினைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே மற்றவர்களை ஒன்றுமே தெரியாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இது இரட்டை வரி விதிப்பு போல. இதனால் வேலை இடங்களில் அவர்களுடன் முரண்படுபவர்களை நிறையவே பார்த்திருக்கின்றேன். ஆனால் வாக்குவாதத்தில் பேசப்படும் மொழியின் தொனி போலந்தா, ஹங்கேரியா, ருமேனியாவா, அந்த நாடுகளில் எந்த நாடு என்று தெரிவதில்லை. ருமேனியாவில் இருந்து வந்த ஒருவர் என்னுடன் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் தான் ஹங்கேரியன் என்றே சொல்லிக்கொண்டார். அங்கேயும் ஒரு இனப் பிரச்சனை இருந்தது. ஒரு தடவை இன்று பயன்பாட்டில் இருக்கும் மொழிகளில் தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என்று இவரிடம் ஏதோ கதையோடு கதையாக சொல்லி மாட்டுப்பட்டேன். அவர் பின்னர் சொன்னதை, விவாதித்ததை வைத்துப் பார்த்தால், இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னரே அவருடைய ஹங்கேரி மொழி தோன்றியிருக்க வேண்டும். எங்களைப் போலவே நிறைய ஆட்கள் இந்தப் பூமியில் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள மொழியின் தொனி என்னிடம் இருப்பதாக மும்பைக்காரர் சொன்னது வியப்பாக இருந்தது. சிங்கள மக்கள் ஆங்கிலம் பேசும் போது அவர்களின் தாய் மொழி சிங்களம் என்று அறியக் கூடியதாக இருந்தது. அவர்களுக்கு என்று ஒரு தனியியல்பு இருக்கின்றது என்பதை அனுபவத்தில் நான் கண்டு கொண்டிருக்கின்றேன். ஆனால் கூட்டுக்குள் வாழும் ஒரு கோழி போல இருபது வருடங்கள் ஊரிலேயே தனித் தமிழுடன் வாழ்ந்த எனக்கும் அதே இயல்பு இருக்கின்றது என்பதை நம்புவது கஷ்டமாக இருந்தது. ஆனால் முமபைக்காரர் என்னை முன்னே பின்னே பார்த்ததில்லை, ஆகவே அவர் சொல்வது சரியாகவே இருக்கவேண்டும். இங்கு ஆட்டிறைச்சி வாங்குவதற்கு மெக்சிகோ அல்லது தென் அமெரிக்க மக்கள் நடத்தும் கடைகளுக்கே நாங்கள் போவோம். அங்கு பல பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களில் அநேகமாக ஒருவருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரிந்திருக்கும். இன்னும் ஓரிருவருக்கு சில சொற்கள் - ஆடு, கால், சிறிய துண்டுகள் போன்றன - ஆங்கிலத்தில் தெரிந்திருக்கும். நடிகர் சிவாஜியைப் பார்த்து வளர்ந்த படியால், எதையும் நடித்துக் காட்டுவதும் எங்களுக்கு ஓரளவுக்கு இலகுவாக வருவதால், அன்று அங்கு ஆங்கிலம் பேசுபவர் இல்லையென்றாலும் சமாளித்துவிடலாம். இவர்களில் ஆங்கிலம் தெரிந்தவர் பேசும் போது சரியாக உற்றுக் கவனிக்கா விட்டால், தென் அமெரிக்க ஸ்பானிஷ் போன்றே இருக்கும். தென் அமெரிக்க ஸ்பானிஷ் மொழிக்கும், ஐரோப்பிய ஸ்பானிஷ் மொழிக்கும் இடைவெளி இருக்கின்றது என்கின்றார்கள். இந்தியத் தமிழுக்கும், இலங்கைத் தமிழுக்கும் இடையே இடைவெளி இருக்கின்றது தானே. மத்திய மற்றும் தென் அமெரிக்க மக்களில் எவரின் குரலும் ஒன்று போலவே காதில் விழுகின்றது. அவர்கள் பேசும் ஸ்பானிஷ் மொழியும், அவர்களின் ஆங்கிலமும் அவித்த மரவள்ளிக் கிழங்குகளை பிசைந்தது போல ஒன்றுடன் ஒன்று நன்றாக முயங்கி இருக்கின்றன. இன்றும் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்த வேலை இரவு பத்து மணியாகியும் இன்னமும் முடியவில்லை, உங்களுடனான இந்தக் கலந்தாய்வை முடிவெடுத்து விட்டால், மிகுதியை நாளை பார்த்துக் கொள்ளலாம், நாளை மீண்டும் ஆறு மணிக்கு சந்திப்புகள் இருக்கின்ற என்றார் மும்பைக்காரர். உங்களையும் இந்த இரவு வேளையில் சிரமப்படுத்துவதற்கு மன்னிக்கவும் என்றார். 'இல்லை................ அப்படி ஒரு சிரமமும் இல்லை.......... அத்துடன் எனக்கு இப்பொழுது காலை..............' 'என்ன........... காலையா........... நீங்கள் இலங்கையில் இல்லையா.............' 'நான் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கின்றேன்....................' 'ஓ................. பணி நிமித்தமாக அங்கு தற்காலிகமாக சென்றிருக்கிறீர்களா.................' இல்லை 30 வருடங்களுக்கும் மேலாக இங்கே அமெரிக்காவில் தான் இருக்கின்றேன் என்றேன். அப்படியே ஒரு கணம் அமைதியானவர், பின்னர் சுதாகரித்துக் கொண்டே உங்களின் தாய்மொழியின் தாக்கம் உங்களில் அப்படியே இன்னமும் இருக்கின்றது என்றார். ஏற்கனவே மிகவும் களைத்துப் போயிருந்த அவரை இன்னும் காக்க வைப்பது சரியல்ல என்று அதை அப்படியே விட்டுவிட்டேன்.