Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"என் இறுதி சடங்கில்"
"என் இறுதி சடங்கில்" "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதையில் தவழ்ந்து முட்டாளாய் வாழாதே மரணத்தை நினைத்து அஞ்சியும் சாகாதே" "நான் தீயில் சங்கமிக்கும் பொழுது நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது நான் என்னை சற்று பார்த்தேன் நாமம் அற்ற சடலமாக கண்டேன்" "உறவினர் நண்பர்கள் முகங்களைப் பார்த்தேன் உவகை இழந்த சிலரை கண்டேன் உறக்கம் துறந்த பிள்ளைகளை கண்டேன் உரிமை காட்டிட வந்தோரையும் கண்டேன்" "உடம்பு கெட்டால் உயிருக்கு மரியாதையில்லை உயிர் பிரிந்தால் உடம்புக்கு மரியாதையில்லை உலகத்தை விட்டு நான் போகும்தருவாயில் உண்மையை நான் இன்று அறிகிறேன்" "காமம் தெளித்த உடலும் படுத்திட்டு காதல் தந்த மனதும் உறங்கிற்று காதற்ற ஊசியும் வர மறுக்குது காலனின் வருகையால் எல்லாம் தொலைந்திட்டு" "என் பிள்ளைகளிடம் ஒன்று கேட்கிறேன் என் பெயரை மறக்க வேண்டாம் என் பெயர் எம் அடையாளம் எங்கள் இருப்பு இனத்தின் வாழ்வு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"என் பிறந்த நாளுக்கு மனதில் உதித்தது"
"என் பிறந்த நாளுக்கு மனதில் உதித்தது" "அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது அதிகாரம் செலுத்திய காலமும் உண்டு அறிவு கொண்டு உணர்ந்ததும் உண்டு!" "ஆரம்பித்த எதுவும் முடிவு காணுமே ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்குமே ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்!" "இன்பம் துன்பம் நீயே தேடியது இருப்பதைக் கொண்டு வழியை அமை இதயம் திறந்து வரவேற்க பழகு இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைத் தவிர்!" "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே ஈகை என்பது வறியவர்க்கு கொடுப்பதே ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!" "உயர்ந்த நோக்கம் மனதில் எழுக உரிமை கெடாமல் ஒப்பந்தம் செய்க உயிர் பிரிந்தால் திரும்ப பிறக்காது உண்மை நேர்மை உன்னில் இருக்கட்டும்!" "ஊக்கம் இல்லையேல் தோல்வி நிச்சயம் ஊடல் இல்லையேல் கூடல் சுவைக்காது ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் ஊமை வாழ்வு பிணத்துக்கு சமமே!" "எய்யாமை எவருக்கும் கேடு தரும் எதிரொலித்து உன் பலவீனத்தை காட்டிவிடும் எழுச்சி கொண்ட வாழ்வை அமை எரிவனம் போவது எவருக்கும் திண்ணம்!" "ஏழை பணக்காரன் தற்காலிக நிலையே ஏற்றம் இறக்கம் வாழ்வில் பொதுவே ஏமாற்றம் தடுமாற்றம் நிறைந்த வாழ்வில் ஏணை பழக்கம் சுடுகாடு வரைக்குமே!" "ஐதீகம் என்றாலும் திருப்பிக் கேள் ஐயம் தவிர்த்து துணிந்து நில் ஐம்புலனை அடக்கினால் மதி கெடும் ஐயனே நெறிப்படுத்தி அறிவை வளர்த்திடு!" "ஒடுங்கி அடங்கி வாழ்வது வாழ்வல்ல ஒல்லார் நாண உன்னை உயர்த்து ஒளியார் முன் ஒள்ளியர் ஆகு ஒற்றுமை கொண்ட இனமாய் வாழு!" "ஓதுபவன் சொல்வதை அறிந்து கேளு ஓந்தி போல நிறம் மாறாதே ஓசையுடன் அன்று அழுது பிறந்தாய் ஓரமாய் இன்று ஒதுங்கிப் போறாய்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"என்னைப் பற்றி மனதில் பட்டவை"
"என்னைப் பற்றி மனதில் பட்டவை" "என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது அவளை நினைத்தேன் அழுகை வருகுது வாழ்வை நினைத்தேன் ஆத்திரம் வருகுது மரணத்தை நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது!" "குழந்தை பருவம் சுமாராய் போச்சு வாலிப பருவம் முரடாய் போச்சு படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு பழக்க வழக்கம் கரடாய் போச்சு!" "உண்மை தேடி உலகம் சுற்றினேன் வேஷம் போட்ட மனிதர் கண்டேன் மாற்றி அமைத்த வரலாறு பார்த்தேன் காசுக்கு மாறும் காதல் கண்டேன்!" "ஒற்றுமை கொண்ட தமிழர் தேடினேன் மரண வீட்டிலும் வேற்றுமை கண்டேன் பதவி ஆசை பிரித்து விளையாடுது பணம் தேடி வியாபாரம் செய்யுது!" "ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் பிரிந்து கிடப்பவன் மரித்து போவான் மதம் கடந்து பிரதேசம் கடந்து ஒன்றாய் சேரு உய்யும் தமிழினம்!" "ஆலம் விழுதின் அற்புதம் பார் தாங்கி நிற்கும் உறுதியைப் பார் இடர் பல எமக்கு வந்தாலும் இணை பிரியா ஒற்றுமை காண்!" "நானாய் வாழ முடிவு எடுத்தேன் சாதி சமயம் இரண்டும் தவிர்த்தேன் அண்ணாவும் தம்பியும் கனவில் வந்தினம் பெற்ற அனுபவத்தை எனக்கு தந்தினம்!" "ராமனை வெறுத்து பூமியுள் குதித்தாள் யுத்தத்தை வெறுத்து புத்தன் ஆனான் அன்பை போதித்து சமயம் பிறந்தது வெறுப்பை வளர்த்து கொலை செய்யுது!" "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை சிதைந்து போராடி வெற்றியும் இல்லை புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!" "கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம் நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம் நீதி வேண்டி சிலம்பை உடைத்தாள் நியாயம் வேண்டி உலகை கேட்கிறோம்!" "விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும் தட்டிக் கேட்டும் பெற வேண்டும் நன்னெறி என்றும் நிலைக்க வேண்டும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!" "ஒன்றாய் கூடு உண்மையை உரை நியாயம் நிறுத்து விசாரணை எடு கவலை மறக்க தீர்வைத் தா கேள்வி கேட்டு நடுகல் முழங்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]