Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"மனு தர்மம் / வினைப் பயன்கள்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்நன்றி அன்புடன் வரவேற்கிறேன்
-
"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" - ஒரு விளக்கம்
"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" - ஒரு விளக்கம் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்றும், நம் முன்னோர்கள் சொன்னார்கள் என குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப் பட்டுள்ளதை கவனித்தேன். அது தொடர்பாக நான் ஆராய்ந்த போது எனக்கு மேலும் கிடைத்த தகவலை / விளக்கத்தை கிழே தருகிறேன். போர்ச் சூழல் நிரம்பிய பழைய காலச் சங்க சமூகத்தில், தொல்காப்பியர், களவியலில், அதாவது திருமணத்துக்கு முன்னுள்ள காதல் கட்டத்தில், 96) "அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப." என்கிறார். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு என்றும் சொல்லலாம். அச்சம் என்றால் பயம். மடம் என்றால் முட்டால், நாணம் என்றால் வெட்கம், பயிர்ப்பு என்றால் அசுத்தம் - அருவருப்பு, அல்லது கூச்சம். இப்ப ஒரு "காதல் களவியலில்" காட்சி ஒன்றை பார்ப்போம். தலைவன் தலைவி [அல்லது கணவன், மனைவி] இரண்டு பேர் தனிமையில் இருக்கிறார்கள் என வைப்போம். "ஐயோ, இப்பவா! யாராயினும் வருங்கள் ... வேண்டாம்". அச்சம். இது ஒரு பொய் அச்சம். இது ஒரு வகை. அடுத்தது சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு போடு போடும் அதே தலைவி, இப்ப காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் "ஐயோ! கரப்பான்".. என அலறுவது -- பயப்படுவது -- ஒரு மழலை மாதிரி பிதற்றி கண்ணைப் பொத்திக் கொள்வது மற்றொரு வகை. இப்படி ஒரு காதல் களவியல் சம்பவத்தில்: "சரி போதும் -- அலட்ட வேண்டாம் -- இனி காணும் -- எனக்கும் எல்லாம் தெரியும்" என்று கூற மாட்டார்கள். தெரிந்திருந்தாலும் தெரியாதது போல பண்ணும் பாவனை. அது தான் இந்த பொய் மடம். இன்னும் கொஞ்சம் போக, "சீ போங்கோ .. கொஞ்சமாவது வெட்கம் இருக்கா பாரு ..". இது பொய் நாணம். "எனக்கு இது பிடித்துத் தான் இருக்கிறது" என்று சொல்லும் ஒரு நாணம். இந்த மூன்றும் பொதுவாக காதலுக்கு சுவை சேர்க்கின்றன. தன் தலைவன் அல்லாத வேறு ஒரு ஆடவன் / அந்நியன் கெட்ட எண்ணத்துடன் தொடும் போது உண்டாகும் இயல்பான அருவருப் புணர்ச்சி பயிர்ப்பு ஆகும். இந்த உணர்ச்சி பொதுவானது. அதாவது ஆணுக்கும் உண்டு என கொள்ளலாம். அதாவது இவையை கலவியல் கவர்ச்சி என்று கூட சொல்லலாம். அவ்வளவுதான்! இது தான் தொல்காப்பியம் களவியலில் சொல்வது! இது பொதுவாக சொல்லப் படவில்லை என்பதையும் காண்க. தமிழ் சொல்வது இதைத்தான் ! இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும்? இதை சரியாக புரிய வேண்டாமோ? இது சொல்லப் பட்ட "இடம் பொருள் காலம்" அறிய வேண்டும். அதை விட்டு பொருளைச் சிதைத்து, மாற்றி என்னென்னவோ பொருளெல்லாம் சொல்லி வைத்தனர். 'மண்ணுக் குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறினான்? பண்டைக் காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக் கூறுகின்ற நூல் கார் நாற்பது. அதில் ஒரு பாடல் இப்படி சொல்கிறது. "கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலி குட மலை ஆகத்துக் கொள் அப்பு இறைக்கும் இடம் என ஆங்கே குறி செய்தேம் பேதை மடமொழி எவ்வம் கெட" [நூல்: கார் நாற்பது (#33) / பாடியவர்: மதுரைக் கண்ணங்கூத்தனார்] பல நாள்களுக்கு முன்னால் நான் ஊரில் இருந்து கிளம்பிய நேரம், மடப்பத்தை உடைய வார்த்தைகளைப் பேசுகிற என் காதலி என்னைப் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவளுடைய வருத்தத்தைப் போக்குவதற்காக, ‘மேற்கு மலை மீது மழை பெய்யும் போது நான் திரும்பி விடுவேன்’ என்று வாக்குறுதி சொல்லி வந்தேன். இப்போது, அந்த நேரம் வந்து விட்டது. நாம் சீக்கிரமாக ஊர் திரும்ப வேண்டும். தேரை வேகமாக ஓட்டு! என்கிறான். அது என்ன "மடமொழி"? காதலியை ‘மடத்தனமாகப் பேசுகிறவள்’ என்கிறானா இந்தக் காதலன்? பெண்களுக்கான குணங்கள் "அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு" என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அந்த ‘மடம்' தான் இங்கேயும் வருகிறது. பொதுவாக ‘மடம்’ என்றால் பேதைமை, அழகு, மென்மை என பொருள் படும். அவற்றுள் இங்கே எந்தப் பொருள் பொருந்தும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! இதே மாதிரி அந்த சங்க காலத்தில் குறுந்தொகை 135: "வினையே ஆடவர்க் குயிரே" என்று கூறுகிறது. அதாவது ஆண் மக்களுக்குத் தொழில் தான் உயிர் என்பது இதன் பொருள். அதாவது "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" என்பது காதலின் போது மட்டுமே! வாழ்க்கை முழுக்க இல்லை என்பதை புரிய வேண்டும். இதே சங்க காலத்தில் காதல் களவியல் அற்ற சில சம்பவத்தை பார்ப்போம். ஒரு நாள், காவற் பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர், அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார். அதற்கு, காவற் பெண்டு "இதோ என் வயிற்றைப் பார், என தன் வயிற்றைக் காட்டி, அவனைப் பெற்ற வயிறு இது. புலி இருந்து சென்ற குகை இது". அவள் அச்சம் கொள்ளவில்லை? முட்டாளாக பேசவில்லை? நாணம் கூட பட வில்லை? வீரமாக முழங்கினாள்! இன்னும் ஒருத்தி போர்ப் பறை கேட்டுத் தன் மகனை - ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என அவளின் மாண்பினைப் படம் பிடித்துக் காட்டுகிறது. “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள் மற்றும் ஒருத்தி. இங்கு ஒரு வீரத் தாயை காண்கிறோம். ஆகவே எங்கு சொல்லப்பட்டது, எந்த சூழலில் சொல்லப் பட்டது, ஏன் சொல்லப் பட்டது என்பதை அறிந்து பொருள் கொள்வது மிகவும் சிறந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தாந்திரிகம் / தாந்திர வழிபாடு" / "Tantra"
"தாந்திரிகம் / தாந்திர வழிபாடு" / "Tantra" ஆரியர் அல்லாதவர்களின் [ஆஸ்ட்ராலாய்ட், மங்கோலியன், திராவிடர் / Austrics, Mongolians, and Dravidians] ஆன்மீக அணுகு முறை பொதுவாக தாந்திர முறையாகும். இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறுபட்டது. இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறை ஆகும். ஆகவே ஆரியர்களின் அகநிலை உணர்வுக்குப் புறம்பான, வெளிப்புற சடங்கில் இருந்து மாறு பட்டது. தாந்திர வழிபாட்டு முறையின் வேர்களை அறிய வேண்டு மெனில் நாம் சிந்து சமவெளியில் இருந்து தொடங்க வேண்டும். சிந்து சமவெளியில் கண்டெடுக்கப் பட்ட சிலைகளில் இரண்டு முக்கியமானவை. ஒன்று சிவன் தன் ஆண் குறி தெரியுமாறு அமர்ந்து இருக்க, அவரை சுற்றி மிருகங்கள் நிற்பது போல் வரையப் பட்டிருக்கும் சிற்பம். சிந்து வெளி மக்கள் யோகாவை அறிந்து இருந்தார்கள் என்பதற்கும் தாந்திரீக வழிபாட்டு முறைகளை பின்பற்றினார்கள் என்பதற்கும் இந்த முத்திரையை ஒரு சான்றாக எடுத்து காட்டுகிறார்கள். இரண்டாவது யோனி தெரியுமாறு அமர்ந்திருக்கும் ஒரு பெண் சிற்பம். மேலும் இந்த சிற்பம்,காணிக்கை, படையல் மூலம் புகை படிந்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்தது என வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. முன்னோர்களின் நினைவாக நடுகல் தமிழகத்தின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் [memorial stone / Hero Stones] வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள். லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண் குறியைக் குறிப்பதாகவும்,வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங் காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. தாந்திரீகம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முன்னவர்கள் பின் பற்றிய வழிமுறை எனவும் கூறலாம். தாந்திர முறை , தியானம் யோகா இவைகளின் ஒன்று சேர்த்தலை விட மேல் அதிகமானது. யோகா உடலையும் மனதையும் தனித்தனியே பிரிக்க முற் படுவது. தாந்திர முறையின் படி, போட்டி, போராட்டம் வாழ்வின் சாரம்.எல்லா விதமான தடைகளுக்கும் எதிராக போராடி குறை பாடான, நிறைவுறாததில் இருந்து பூரணமாக்க, முழு நிறைவாக்க முயலும் முயற்சி, பிரயத்தனமே தாந்திர முறையின் உண்மையான மெய்பொருள் ஆகும். ஏறத்தாழ 4,500-5,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் சிந்து சமவெளி மக்கள் நாகரிகத்தின் உச்சியில் இருந்தார்கள். அவர்கள் தாந்திர முறையை மனதையும் உடலையும் ஒருங்கிணைப் பதற்கு அப்போதே பாவித்தார்கள். தாந்திர முறையில் உடம்பு, மனது, உணர்வு மூன்றையும் கட்டுப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் சக்தியை ஆன்மீக பரவச நிலையை அடைய பயன்படுத்துவதாகும். காணாத கடவுளை நினைத்து தவமிருப்பதற்கு [penance] பதிலாக நம் கண் முன்னே இருக்கும் பிடித்தமான உறுப்புகளை பார்க்கும் பொழுது நமது கவனச்சிதறல் குறைக்கப் படுகிறது. அந்தக் கணங்களில் நம் உள்ளுணர்வு விழிப் பாகவும், கவனம் ஒரு புள்ளியில் குவிக்கப் படுகிறது. இதுதான் தாந்திர முறையின் தொடக்கம்.அதாவது மனதும் உடலும் ஒன்று பட்டு இயங்குவதே தாந்திர முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும் தனித் தனியே பிரிக்க முற்படுவது தான் மற்ற வழி பாட்டு முறைகள் ஆகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சம வெளியில் பிறந்த தாந்திரா முறை பற்றி அல்லது தாந்திரீகம் பற்றி இன்று பலர் தவறான கருத்து கொண்டு உள்ளார்கள். அவர்கள் அது எல்லாம் பாலியல் [sex] பற்றியது என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் தாய் வழிபாடு சமூக மரபிலிருந்து தொடங்கிய இந்த தாந்திரீகம் மற்றைய சமய வழிகள் போலல்லாது மனித வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் இயல்பாக ஏற்றுக் கொண்டு விழிப்புணர்வு அடையும் நிலையினை போதிப்பது. ஆகவே தாந்திரீகத்தில் காமமும் ஒரு பகுதி ஆனால் காமம் தான் தாந்திரீகம் இல்லை. நடை முறையில் சாதாரண பாலுறவைத் தாண்டி அதைவிட கூடுதலாக உள்ளது. நீங்கள் இதை காம சூத்திரத்துடன் குழப்ப வேண்டாம். அது [காமசூத்ரா / Kama Sutra] பாலியல் உறவு நிலைகள் பற்றிய ஒரு வழிகாட்டி மாத்திரமே. தாந்திரா உண்மையில் அதில் ஈடுபடும் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்கிறது. அதாவது தாந்திரீகத்தின் நோக்கம் [குறிக்கோள்] ஆத்மீக விழிப்புணர்வு நிலையினை [spiritual awakening] அல்லது சுய விடுதலையை அடைவதாகும். தாந்திரா மனித உடலில் ஏற்படக்கூடிய அடிப்படை உந்தலை, பாலியல் ஆற்றலை [sexual energy] பாவித்து ஆன்மீக விழிப்புணர்வு நிலையை மேம் படுத்துதல் ஆகும். தாந்திரா ஒரு மதம் அல்ல. ஆனால் பண்டைய ஆன்மீக நம்பிக்கைகளின் தொகுப்பு ஆகும். ஏனென்றால், தாந்திரா, அதன் இயற்கை தன்மையால், மதங்களை மாதிரி, கொள்கைகளை நம்பிக் கொண்டு நம்பிக்கை அடிப்படையில் கற்பனை செய்யும் ஒன்று அல்ல. மதங்கள் மாதிரி எந்த ஆண்டவன் கட்டளையையும் அல்லது கடுமையான விதி முறைகள் ஒன்றையும் [commandments or strict rules] தாந்திர பின்பற்ற வில்லை. மேலும் நீங்கள் இங்கு கடினமான வழிபாடு அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது ஒரு பணிகளில் ஈடுபடத்தேவை இல்லை. தாந்திராவில் ஒவ்வொருவரும் தனக்கு சரியென படும் ஒரு பாதையை தெரிந்து எடுக்கலாம். தாந்திரா குருவிடம் இருந்து மாணவனுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குருவும் தனக்கெனெ ஒரு தனித்தன்மை வாய்ந்த அணுகு முறையை [unique approach] வைத்திருக் கிறார்கள். மேலும் மதங்களுடன் ஒப்பிடும் போது இதில் முக்கிய வேறுபாடு பாலியலில் ஆகும். மத போதகர்களின் அறிவுறுத்தலின் படி பாலியல் ஒரு புனிதம் அற்ற ஒன்று ஆகும். ஆனால், தாந்திரா, இதற்கு மாறாக இதை புனிதமானது [sacred] என நம்புகிறது. அந்த அடிப்படையில் மனித உடலின் ஒரு அத்தியாவசிய தேவையான உடலுறவு மூலமும் இறைவனை அடையும் வழியினையும் காட்டுகிறது. தாந்திரீகத்தின் படி ஆணும் பெண்ணும் ஒரே வெளிப்பாட்டின் விம்பங்கள் போன்றவர்கள், பிரபஞ்ச ஆற்றலில் ஆண் தன்மையினை சிவம் என்றும் பெண்தன்மையினை சக்தி என்றும் அழைப்பர். இது ஒழுங்கமைக்கப் பட்ட மதங்கள் மாதிரி ஒரு ஒப்புயர்வற்ற ஒன்றை [supreme beings] அல்லது முழுமுதல் கடவுள் ஒருவரை வழிபடுவது அல்ல. மாறாக எம்முள் இருக்கும் இயற்கையான அடிப்படை உந்தலை மதிப்பளித்து, உயர்ந்த நோக்கத்தினை அடைவதற்கு அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்வது ஆகும். அதனுடன் சண்டை பிடிக்காமல் ஒத்துப்போய் அதனை வைத்தே அதை வெல்லும் சூட்சுமத்தினை சொல்லிக்கொடுக்கிறது. அதாவது, எமது தெய்வீக இயல்பை [divine qualities] எம்மில் வளர்ப்பதற்கு நாம் சிவ, சத்தியை வசதியான சின்னங்களாக இங்கு பாவித்து கொள்கிறோம். பக்குவமற்றவர்களுக்கு [To the crude] இது ஒரு ஆபாசம் [பாலின்பம்/pornographic], ஒருதலைச் சார்பு உடையவர்களுக்கு [to the bias] இது ஒரு கொச்சையான [அநாகரீக மான] முற்காலத்திய மக்களின் பழக்கவழக்கம் [vulgar habits] ஆகும். இந்து [சைவ,சாக்த] ஆலயங்களில் வெறுக்கத்தக்க, அருவருப்பான சிற்பங்களை [objectionable sculptures] கோபுரத்திலும் சுவரிலும் கண்டு நாம் அடிக்கடி இது ஏன் என அதிசயப்படுகிறோம். இது இந்த தாந்திரீக மரபினால் ஏற்பட்டவையாக இருக்கலாம்? மனிதனின் இயற்கையான ஆற்றலான காமத்தை அறிவதும் அறிவதன் மூலம் கடந்து செல்வதுமே மானுட உண்மையின் உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின் வழியாகக் கண்டன. அதன் பிரதிபலிப்பே இந்த கலவி [Mithuna / Maithuna / ‘(male/female) couple’] சிலைகள் போலும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "Tantra" The spiritual approach of the non-Aryans [the indigenous peoples - the Austrics, Mongolians, and Dravidians] was Tantra and it differed from the Vedic practices of the Aryans because it was fundamentally an introversive or introvertive process rather than an external ritual. In order to find the roots of the Tantra, we have to start from the Indus Valley. The two main statues found in the Indus Valley are prototype of Shiva seated on a throne in a version of the cross-legged lotus posture of Yoga with Yogi's penis is prominently visible. This seal is often cited as evidence that people of the Indus Valley culture knew Yoga and practiced Tantra. The second sculpture of a girl squats in birthing position lifting her dress to reveal her vagina, stained from offerings. The yoni is the creative power of nature and represents the goddess Shakti. The linga stone represents Shiva and hence it shows that vagina & lingam worshipping cults were existed there as per the opinion of historians. It also may be possible that the tradition of Nadu Kal [memorial stone / Hero Stones] by the ancient Tamils / Dravidians for men who died in battle may gave rise to the linga worship later. Tantra is more than just a collection of meditation or yoga techniques. There is a particular world-view associated with it. According to Tantra, struggle is the essence of life. The effort to struggle against all obstacles and move from the imperfect to the perfect is the true spirit of Tantra. Tantra is the original spiritual science found in Indus valley civilization more than 4,500 - 5,000 years ago. Tantra is the practice which elevates human beings in a process in which their minds are expanded. There is no meaning to undergo penance remembering a god which you have never seen, Instead if you see the body parts which you like very much, your focus will not be disturbed and mind & body will work together. This is the starting point of tantra. it is a fantastic tool for those on a primarily spiritual path. It adds the power of aliveness to the qualities of spirit and helps ground your spirituality into everyday life. In today world people may misconcept that Tantra which is Born in Indus valley civilization over 5,000 years ago, is all about sex ,but the practice of Tantra has to do with much more than sex. It should not be confused with Kama Sutra, a literal guide to sexual positions. Tantra, instead, is the practice of what feels good to the people involved. The purpose of Tantra (in its overtly sexual and non-sexual forms) is for spiritual awakening, enlightenment or freedom. Tantra uses sexual energy - the primal force of our very existence (after all, without sex and fertility, none of us would be here!) - to develop a spiritual consciousness. Tantra is not a religion at all, but an ancient set of spiritual beliefs. Tantra has never become an actual religion, and it was never intended to be one — partly because by its very nature it is not conducive to the set of structured guidelines and formats associated with most religions. With Tantra, there are no commandments or strict rules to follow. You are not required to maintain a rigid prayer schedule or attend services at designated times. Each Tantric practitioner dictates his or her own path based on what's right for that individual. Tantra was originally passed from guru to student, and each guru had his own unique approach to the Tantra beliefs. The most obvious way that Tantra differs from most religions involves sex. Most modern religions view sex as something to be shared between husband and wife, and even then usually for the purpose of procreation. In fact, many people get the impression from religious advisors that sex is something bad or dirty. By contrast, Tantrics believe sex is a sacred gift. Today Tantric revere Shiva as the pure embodiment of the masculine force culminating in cosmic consciousness, and Shakti as the feminine principle embodying pure creative energy. This isn't worship of supreme beings as in most organized religions. Rather, it is Tantra's way of honouring the forces of nature that exist within each of us. We simply use Shiva and Shakti as convenient symbols to focus the growth of our own divine qualities. To the crude they are pornographic. And to the bias they are the vulgar habits of a primitive peoples. Yet they are in fact, opaque symbolic portrayals of the state of 'union' with God. We often wonder why do Hindu Temples have objectionable sculptures on walls. From Tantric perspectives, such sexual images serve as a stimulant messenger to convey the idea of creation, transformation, unity and harmony to the viewers. Within the vast confines of Hinduism one encounters many approaches to demonstrating spiritual ideas. Mithuna ['the state of being a couple'] carvings are just one!. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
"மனு தர்மம் / வினைப் பயன்கள்"
"மனு தர்மம் / வினைப் பயன்கள்" மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதி என்பது இந்தியாவின் பண்டைய ஆரிய சமூக அமைப்பில் எழுதப்பட்ட அரசியல் சட்டம். ஆனால் அது ஸ்மிருதிதான். அது ஸ்ருதி அல்ல. ஸ்ருதி என்பது இயற்றப்படாதது, தொன்று தொட்டுப் பரம்பரை பரம்பரையாக காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்து பிறர்க்கு கூறப்பட்டது அல்லது எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. ஸ்மிருதி என்பது ஒரு காலத்துக்காக மனிதரால் எழுதப்பட்டது. மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என நம்பப்படுகிறது. அந்த காலத்தின் தேவையை பொறுத்து, அவர்களின் அறிவு, நம்பிக்கையைப் பொறுத்து எழுதப்பட்டது. அவ்வளவுதான். அத்துடன் பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்காகவும் வந்தது தான் இந்த ‘மனு தர்மம்’என்ற சூழ்ச்சி. அது மட்டும் அல்ல சிந்து வெளி பழங்குடிகள் எதோ பல காரணங்களால் வீழ்ச்சி அடைந்து தெற்கு நோக்கி போனபின்பும், சிலர் அங்கேயே தங்கி ஆரியருடன் இணைந்த பின்பும் எழுதப்பட்டது. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு ‘மனு தர்மம்’ கூறும் தத்துவம் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் அந்த தத்துவம். "தவறு விடும் பலர், சமுதாயத்தின் மத்தியில் வளர்ந்து கொண்டே செல்கின்றதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் ஆன்மீக வாதிகள் கூறுவது போன்று அவர்களுக்கு அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்று கூறுவது தான் நம்பத்தகுந்ததாக தெரியவில்லை" ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது. அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா? ஆகவே இதில் ஒரு சூழ்ச்சி உண்டு. மனுஸ்மிருதி அல்லது மனு தர்மம் என்ற பெயரில்? நான் என்ன நினைக்கிறேன் என்றால் .... துன்பப்படுபவர்களைப் பார்த்து, இவர்கள் தம் ஊழ்வினையால் இன்று துன்பம் அடைகிறார்கள், ஆகவே அவர்களே தேடிக்கொண்ட இந்த துன்பத்திற்கு நாமேன் உதவவேண்டும் என்று நினைப்பவர் எவரும், தம்மை அந்த துன்பப்படும் மனிதரின் இடத்தில் வைத்து பார்த்து ஒருவேளை அடுத்த பிறவியில் [ஒரு கதைக்காக] நான் இப்படி இருந்தால் எனக்கும் ஒருவரும் உதவ முன் வரமாட்டார்கள் என்று நினைத்தால், கட்டாயம் அவர்கள் எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் அவர்கள் உதவுவார்கள் என்பதுதான். இப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்து விட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை. இப்படித்தான் நான் நம்புகிறேன். நீங்கள் எப்படியோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வாழும் வரைப் போராடு"
"வாழும் வரைப் போராடு" நான் அன்று சாதாரண வகுப்பு ஏழை மாணவி. என் அப்பா அம்மா கூலி வேலை செய்கிறவர்கள். அவர்களின் உழைப்பில் நானும் தம்பியும் எதோ சமாளித்து இரண்டு மைல் தூரத்தில் இருந்த ஒரு கிராம பாடசாலையில் கல்வி கற்றோம். நடந்து தான் பாடசாலை போவது. பாடசாலை நேரத்தின் பின் தனியார் கல்வி, விளையாட்டு அப்படி இப்படி என்றும் ஒன்றும் எமக்கு இல்லை. என் வகுப்பு வாத்தியார் மிக அன்பாக என்னுடன் பழகுவார், நானும் ஒருவேளை என் நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு அப்படி பழகுகிறார் என்று அந்த அறியாத பருவத்தில் எடுத்துக்கொண்டேன். அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. அவர் இளம் கல்யாணம் ஆகாத ஆசிரியர். இது அவரின் முதல் நியமனம். அவர் பாடசாலைக்கு அருகில் வாடகை வீடு ஒன்றில் சக ஆசிரியர்களுடன் தற்காலிகமாக இருந்தார். சாதாரண வகுப்பு பரீடசை நெருங்கிவரும் நேரம் அது. நான் அவரிடம் சில விளங்காத பாடங்களை கேட்க தொடங்கினேன். அவரும் அதற்கு இணங்கினாலும் பாடசாலை நேரம் கஷடம் என்றும் பாடசாலையின் பின் வீட்டில் வந்து படிப்பிப்பதாக கூறினார். என் பெற்றோரும் சம்மதிக்க அவரும் வரத் தொடங்கினார். பெற்றோர்கள் இருவரும் கூலி வேலைக்கு போவதால், அதிகமாக நானும் தம்பியும் மட்டுமே அவ்வேளை வீட்டில் இருப்போம். வீடு ஒரு குடிசை என்பதால், பாடம் படிப்பிக்கும் பொழுது தம்பியும் வெளியே விளையாட போய்விடுவார், எம் குடிசையில் வசதி குறைவு என்பதால், மிக அருகில் தான் படிப்பிக்கும் பொழுது இருப்போம். கை கால்கள் மெல்ல தொட தொடங்கி, அது வயது வித்தியாசமும் பார்க்காமல், அவரின் உறுதியையும் நம்பி, அவரின் விருப்பத்துக்கு இணங்கி மிக நெருக்கமாக நானும் பழகினேன். இருசொல் இணைதல் புணர்ச்சி என்று இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி, இதுவரை நான் படிக்காத பாடம் எல்லாம் படிப்பித்தார். "இலக்கியம் சொல்லா ஆண்மை அழகில் இதயம் பறிகொடுத்து உறுதி வாங்கி இளமையும் வனப்பும் பொங்கும் உடலை இரண்டு கையாளும் தானம் செய்தேன்!" "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி இங்கிதமாய் படிப்பித்து அருகில் வந்து இதலை வருடி இடையை பற்றினான்!" "இமைகள் மூடி இலக்கிய நாயகியாக இசைந்து அவனுக்கு தலை ஆட்ட இன்று படிப்பித்தது காணும் என்று இதமாக கூறி என்னை இழுத்தான்!" "இச்சை எம்மை மயக்கி வாட்ட இறுக்கி தழுவி கட்டி அணைத்து இதழ்கள் பதித்து எதோ உளறி இரண்டு ஒன்றாய் இன்பம் சுவைத்தது!" அவரும் மாற்றம் பெற்று எனக்கு உறுதி வழங்கி போக, என் வயிறும் ஊத தொடங்கியது. அன்று இருந்த போர் சூழலில் அவரின் தொடர்பும் அற்று போக, நானும் ஒரு மகனுக்கு தாயானேன். அவரை விசாரிக்க சென்ற தந்தை திரும்பி வரவே இல்லை, என்ன நடந்தது என்று இது வரை தெரியாது? தம்பியும் குண்டு பட்டு இறந்து விட்டார். தனிமை வரத்தான் எனக்கும் துணிவு வந்தது. எப்படியும் அவரை கண்டு பிடிக்கவேண்டும். ஊரறிய இவள் என் மனைவி, இவன் என் மகன் என கூற வைக்கவேண்டும். அது தான் என் நோக்கம், அதற்கு என்ன விலையும் கொடுக்க நான் தயாரானேன். என் அழகும் அதற்கு உதவியது. அவர் திருமணம் செய்து வெளிநாடு போய்விட்டதாக அறிந்து நானும் தரகர் மூலம் மகனுடன் வெளிநாடு போனேன். துரதிர்ஷ்டவசமாக அவர் வாழும் நாட்டிற்கு பக்கத்து நாட்டிலேயே அடைக்கலம் கிடைத்தது. அவர் வாழும் நாட்டில் சில நண்பர்களை பெற்று, அவரின் விபரம் அறிந்தேன். எப்படி என்று கேட்க வேண்டாம். ஆனால், C N அண்ணாதுரை ஒரு முறை "நான் முற்றும் துறந்த முனிவரும் இல்லை, அவள் கற்பில் சிறந்த கண்ணகியும் இல்லை" என்று சொன்ன வாக்கியத்தை நினைவூட்டுகிறேன்! அவருடன் இன்று. கதைத்தேன். தான் யுத்த சூழ்நிலையால், சந்திக்க முடியாமல் போனதாகவும், பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து வெளிநாடு வந்ததாகவும் கூறியதுடன், தான் என்னையும் மகனையும் ஏற்பதாக உறுதி கூறினார். தன் பிழைக்கு மன்னிப்பும் கேட்டார். ஆனால் இது இன்னும் ஒரு நாடகமா எனக்கு தெரியாது. ஆனால் கட்டாயம் நான் இனி ஏமாற மாட்டேன். என் போராட்டம் தொடரும் ! 'ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை' என்று யாரோ சொன்னது என் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது !! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பாட்டி சொல்லைத் தட்டாதே"
"பாட்டி சொல்லைத் தட்டாதே" நான் இப்ப வளர்ந்துவிட்டேன். பொறியியலாளராக வேலை செய்கிறேன். ஊர் உலகம் எல்லாம் சுற்றி திரிகிறேன். எத்தனையோ விதம் விதமான மனிதர்களையும் பண்பாடுகளையும் சந்திக்கிறேன். என்றாலும் நான் கண்ட, அனுபவித்த பாட்டி - பேரன் தொடர்பை எனோ எங்கும் முழுமையாக காணவில்லை? நான் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறக்கும் பொழுது என் அம்மம்மாவோ அல்லது அப்பம்மாவோ இல்லை. என்றாலும் எங்கள் உறவினரான ஒரு பாட்டி, தன் மகன் மருமகளுடன் எம் அருகில் வாழ்ந்து வந்தார். அவருக்கு பேரனோ பேத்தியோ இல்லை, ஆகவே நாம் எல்லோரும் அவருக்கு பேரன் பேத்தியே!. நாம் அவரை அப்பாச்சி என்றே அன்பாக கூப்பிடுவோம். நான் சின்னவனாக இருக்கும் பொழுது, பெரிய குழப்படி இல்லை என்றாலும் கொஞ்சம் முரடு, கொஞ்சம் என் வழி. எனக்கு சரியாக படுவதை நான் மற்றவர்களின் புத்தியை அலட்சியம் செய்து என் வழியில் செல்வேன். "குழந்தை பருவம் சுமாராய் போச்சு வாலிப பருவம் முரடாய் போச்சு படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு பழக்க வழக்கம் கரடாய் போச்சு" மாரி காலம் வந்தாலே, எமக்கு ஒரே கொண்டாட்டம். அப்பொழுது எம் வீட்டுக்கும் அப்பாச்சி வீட்டுக்கும் இடையில் ஒரு வெறும் காணி மட்டுமே. நாம் எமது வேலியில் ஒரு பொட்டு வைத்து, அதன் வழியாகப் புகுந்து அப்பாச்சியிடம் போவோம். அப்ப அந்த வெற்றுக் காணியில் நாம் மழையில் நனைந்து துள்ளி குதிப்போம். அம்மா எம்மிடம் மழையில் விளையாடாதே, காச்சல் தடிமல் வரும், காரிருளில் பாம்பு பூச்சிகள் வாரதும் தெரியாது என்று அச்சுறுத்தல் பாணியில் சொல்லுவார். எனோ அப்படியான பாணியை நான் மதிப்பதில்லை, இவன் சொல்வழி கேளான் என எனக்கு ஒரே திட்டு தான்! ஒரு நாள் அம்மாவின் திட்டலை கேட்ட அப்பாச்சி, என்னோடு விடு நான் அவனை சரிபடுத்துகிறேன் என்று சொல்லி, அவர் தன் வீட்டு திண்ணைக்கு என்னை அழைத்து போனார். முதலில் நீ இதை சாப்பிடு என ஒரு கறுத்தக் கொழும்பு மாம்பழம் வெட்டி தந்துவிட்டு, திண்ணையில் சாய்ந்தபடி கதைக்க தொடங்கினார். 'கடவுள் எங்கே இருக்கிறார் ?' என்று என்னை பார்த்து கேட்டார். இப்ப கேட்டால், பதில் வேறு விதமாக இருந்து இருக்கும், அந்த சின்ன வயதில், அவர் ஆகாயத்தில் இருக்கிறார் என மேலே காட்டி ஒரு துள்ளு துள்ளினேன். 'சிறுநீர் கழிக்க போவதென்றால் என்ன செய்வாய்?' என தனது இரண்டாவது கேள்வியை கேட்டார். நான் அயோ, இதுவுமா பாட்டிக்கு தெரியாதென துள்ளி சிரித்தபடி, அதற்கு பதில் கூறினேன். அவர் விட்டபாடில்லை. 'கடவுள் சிறுநீர் கழிப்பது என்றால் என்ன செய்வார்?' என மீண்டும் கேள்வி கேட்டார். நானும் கோபமாக, எரிச்சலாக, ஆகாயத்தில் தான் கழிக்க வேண்டும் என்றேன். அவர் தனக்குள் சிரித்தபடி, வெற்றிலை சீவலை வாயிலிட்டு மென்று கொண்டு, என்னை கட்டி பிடித்துக் கொண்டு, அது தான் ஆகாயத்தில் இருந்து கீழே மழையாக பொழிகிறது என்றார். நான் திடுக்கிட்டு போனேன். அந்த சிறுநீரிலேயா நான் விளையாடினேன் . எனக்கு ஒரே அருவருப்பு! 'பாட்டி சொல்லைத் தட்டாதே' என சொல்வதை பலமுறை கேட்டிருந்தாலும், அதை பலமுறை பொருட்படுத்தாமல் இருந்து இருந்தாலும், இந்த அசுத்தம், அழுக்கு, அருவருப்பு போன்ற எண்ணங்கள் வர, நான் அப்படியே அப்பாச்சி சொல்லை கேட்டு, அன்றில் இருந்து மழையில் நனைந்து விளையாடுவதை நிறுத்திவிட்டேன். ஆமாம் பாட்டி எப்பவும் பேரன் பேத்தியின் நலத்திலேயே கூடுதலான அக்கறை உள்ளவர்கள். அவர்கள் பல நேரம் பொய் சொன்னாலும், அந்த பொய்கள் கட்டாயம் ஒரு நோக்கத்திற்காகவும் , பேரன் பேத்தியின் நன்மைக்காகவும் என்பதே உண்மை! "பாவம் பாட்டி தள்ளாடும் வயதிலும் பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார் பாதாளம் சொர்க்கம் புலுடா விடுவார் பாவம் புண்ணியம் புராணம் வாசிப்பார்!" "பாடி ஆடி விளையாட்டு காட்டுவார் பால் கொடுத்து கதை சொல்லுவார் பழக்க வழக்கங்களை திருத்தி எடுப்பார் பக்குவமாகப் பேசி நம்ப வைப்பார்!" "பாரிலே உன்னை பெருமை படுத்த பாதி பொய்யும் கலந்து கூறுவார் பாட்டி வாரார் பாட்டி வாரார் பாட்டி சொல்லை இனி தட்டாதே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"நினைவில் நின்றவள்"
"நினைவில் நின்றவள்" நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பரீடசை எழுதிவிட்டு, மறுமொழிக்காக காத்திருந்த காலம் அது. மறுமொழிக்கு பின்புதான் முறையாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.என்றாலும் அந்த இடைவெளி காலத்தை வீணாக்க விரும்பவில்லை. எனவே உயர் வகுப்பு கணித பயிற்சி வகுப்புக்கள் நடத்த தீர்மானித்தேன். அப்படி சேர்ந்தவர்களில் அவளும் ஒருவள். அவள் கொஞ்சம் நவீனமாக, அந்த கால பாணிக்கு ஏற்றவாறு, தன்னை அலங்கரித்தும் அதற்கு பொருத்தமான ஆடையும் அணிந்து வருவாள். கொஞ்சம் பணக்கார குடும்பமும் கூட. நாள் செல்ல செல்ல அவள், கொஞ்சம் கொஞ்சமாக தனிப்பட்ட முறையிலும் என்னுடன் பழக தொடங்கினாள். அந்த நட்பு ஒரு எல்லைக்குள் இருந்தாலும், அதில் ஒரு பிடிப்பு எம்மை அறியாமலே வளரத் தொடங்கியது. "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி முட்டாமல் விலகி நிற்பவளே! " இப்படித்தான் நான் அவளை வர்ணிக்க கூடியதாக இருந்தது எனலாம். காலம் போக, அது ஆசிரியன் - மாணவி என்ற நிலை மாறி, நண்பன - நண்பி என்ற நிலையாக வலுவடைய தொடங்கியது. அதற்குள் எனக்கு பரீடசை மறுமொழிவரவும், அதை தொடர்ந்து நிரந்தர உத்தியோகம் கிடைக்கவும், நான் தனியார் கல்வி போதிப்பதை நிறுத்தி, நான் படிப்பித்த மாணவர்களிடம், அவளையும் சேர்த்து பொதுப்படையாக மட்டும் சொல்லி விட்டு, என் முதல் உத்தியோகத்தை பொறுப் பேற்க வேறு ஒரு நகரத்திற்கு சென்று விட்டேன். அவளின் நட்பை ஒரு சாதாரண ஒன்றாகவே அன்று கருதியதால், அதை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஒரு மாதத்திற்கு பின்பு எனக்கு ஒரு கடிதம், நான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அவளின் பெயருடன் வந்தது. நான் அதில் என்ன எழுதி இருக்கு என்று அறிய ஆவலுடன் உடைத்து பார்த்தேன். திகைத்தே விட்டேன். அந்த முதல் வரியிலேயே! ஆமாம் அந்த முதல் வரி, 'அத்தான்' என்று தொடங்கியது. ஒரு நவீன நாகரிக பெண்ணாக சிரித்து குலுங்கி பகிடிவிட்டு கதைத்தவள், இப்படி எழுதுகிறாள் என்று , ஒரே ஆச்சரியமாக இருந்தது, அது மட்டும் அல்ல, என் அண்ணனிடம், தான் என் பெண் நண்பி என்று தொலைபேசியில் கூறி, விலாசம் பெற்றதாக வேறு கூறி இருந்தாள். அது மட்டும் அல்ல, அவள் என்னை காதலிக்கிறாள் என்று கூட எனக்கு தெரியாது. அப்படியான எண்ணம் என்னிடம் ஏற்படவும் இல்லை. உண்மையில் அவரின் நட்பை சாதாரணமாகவே நான் இதுவரை கருதி இருந்தேன். அதை என்றும் பெரிது படுத்தவில்லை. மற்றது என் தந்தை சாதாரணமான சுருட்டு தொழிலாளி, ஆனால் நாம் எல்லோரும் நன்றாக படித்து, நல்ல உத்தியோகம் பெற்றோம். அவள் அதற்கு எதிர்மாறு ! 'இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க புன்னகை சிந்தி சடையது அலைபாய கலந்து பழகுபவளே !" இப்படி ஒரு பருவ மங்கையாக எல்லோரிடமும் மகிழ்வாக கலந்து பழகுவாள் என்பது மட்டும் தெரியும். அப்படியே என்னுடனும் நட்பாக இருந்தாள் என்று தான் நான் கருதினேன். எது எப்படியாகினும், என்னை விரும்பி ஒருவர் கை நீட்டி இருப்பதால், அதை மதித்து, அடுத்தமுறை விடுதலையில் திரும்பும் பொழுது அவரை சந்தித்தேன். இருவரும் அமைதியான கடற்கரையில், குளிர் பணம் அருந்திக்கொண்டு கதைக்க தொடங்கினோம். அவளின் கதையில், எண்ணத்தில் தமிழர் பண்பாடு முழுமையாக வெளிப்படுவதை நன்றாக உணரக் கூடியதாக இருந்தது. அது மட்டும் அல்ல இன்றைய அரசியல் பிரச்சனைகளைப் பற்றியும் பேசினாள். அதில் தமிழர்கள் சிக்கி தவிப்பதை மிக மிக கருணையாக எடுத்துக் கூறினாள். அது அவளின் உடை மற்றும் தலை முடி அலங்காரத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு புரியாத ஒன்று!!. என்றாலும் என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு அது ஒத்துவராது என்பது தெரியும். ஆகவே அதில் இனிமேல் மாற்றம் செய்தால், நான் பெற்றோரிடம் அனுமதி பெறுவது இலகு என்று விளங்கப் படுத்தினேன். அது மட்டும் அல்ல, கல்யாணத்தின் பின், நீ மெல்ல மெல்ல முன்போல் உடை மற்றும் முடி அலங்காரத்தில் மாறலாம் என்றும் கூறினேன். அவள் என்னை தன் பெற்றோரிடம் முதலில் கதைக்க கூறினார். ஒரு ஞாயிற்று கிழமை நானும் அங்கு சென்றேன் . தாயும் தந்தையும் என்னை வரவேற்றனர். மகள் ஏற்கனவே எல்லாம் சொல்லி விட்டதாகவும், மகள் என்னை கல்யாணம் செய்வதில் எந்த தடையும் இல்லை என்றும், ஆனால் அவரின் கோலம், பாணி அப்படியே தான் இருக்கும் என்று ஆணித்தரமாக கூறினார். நானும் அவர் கேட்டதற்கு மற்றும் அவரின் கடிதத்துக்கு மதிப்பு கொடுத்தே சந்திக்க வந்ததாகவும், என் பெற்றோர் விரும்பும் ஒருவரையே என்னால் திருமணம் செய்யலாம் என்றும் அவர்களிடம் கூறிவிட்டு திரும்பினேன். அவள் எழுந்து கதவு வரை வந்து, நடந்த சம்பவங்களை மன்னித்து மறக்கும் படியும், பெற்றோரை மீறி தானும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், என்றாலும் தன் அன்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கொஞ்சம் கண்ணீருடன் விடை தந்தார். "கார் கூந்தல் சரிந்து விழுந்து காற்றோடு அது அலை பாய காதணி குலுங்கி இசை அமைத்து கார்த்திகை அதற்கு ஒளி வழங்க காசனம் செய்யும் விழிகள் திறந்து காதோரம் மெதுவாய் செய்தி கூறி காதல் ஆசையை இறுக்கி பூட்டி கால்கள் தள்ளாட விலகி போனாள்!" [காசனம் - Killing,slaying; கொலை] இப்படித்தான் அவளை கடைசியாக பார்த்த அந்த காட்சி என் மனதில் இன்றும் நிற்கிறது. அவளின் நடத்தையும் மற்றும் உள்தோற்றமும் எவ்வளவு அழகாகவும் பண்பாடாகவும் இருப்பதை கண்டு ஆச்சரியமும் மதிப்பும் தானாக என்னில் தோன்றி, என்றுமே நெஞ்சை விட்டு அகலாத, 'நினைவில் நின்றவள்' ஆக இன்னும் என்னுடன் வாழ்கிறாள் அவள்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"இது இனப் படுகொலை ..... !!!"
"இது இனப் படுகொலை ..... !!!" "மனதில் உறுதி கொண்ட மக்களை சினந்து குருதி கொள்ள நினைப்பதும் ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும் மானமாய் வாழ விடாது தடுப்பதும் தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும் வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும் ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும் இனப் படுகொலை! இனப் படுகொலை!" "விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை படுகொலை செய்து குழியில் புதைப்பதும் நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும் ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும் வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும் மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும் கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும் படுகொலை!அது இனப் படுகொலை!!" "கலை வளர்க்க தடை போட்டு அலை அலையாய் ஆமி போட்டு விலை பேசி சிலரை வாங்கி உலை வைக்கும் மந்தரை கெடுத்து சிலை சிலையாய் மக்களை மாற்றி இலை துளிராது வேரையே வெட்டி தலை நிமிரா நெருக்களை கொடுத்து கொலை செய்வது இனப் படுகொலை!!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்"
"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்" "நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள் தஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன் வஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினாள் கொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்!" "மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம் மஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம் அஞ்சா நெஞ்சத்தாள் எதோ உளறினாள் நஞ்சு கலந்து காதல் வீசினாள்!" "கொஞ்சி வஞ்சி இன்பத்தில் பூத்தாள் வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள் நெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னாள் வஞ்சிவீரி மஞ்ஞை வீராப்பு பேசினாள்!" "நஞ்சு தந்த போதை மயக்கத்திலும் காஞ்சி வீரனாய் அவளை தடுத்தேன் செஞ்ச தெல்லாம் செய்தது போதும் கொஞ்சம் தனியாய் விடு என்றேன்!" "துஞ்சிய கண்கள் அகல விரிந்தன பஞ்சாய் மிதந்து மறைந்து விடடாள் வஞ்சியென நஞ்சமென வந்த கள்ளியை எஞ்சிய நேரத்தில் கனவில் கூடுகிறேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே" / "In my heart"
"என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே" / "In my heart" [என் அம்மாவிற்கு / For my mother [05/10/1917-14/08/2009]] "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே .... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா - என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா" "என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா .... நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா - என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா" "என் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா ... உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பேயம்மா .... நான் மீண்டும் வேண்டுவது உன் கருவறையம்மா" "வேரோடி முளைத்தலும் விளாத்தி விளாத்தியினமே பாரோடி பறந்தாலும் நான் உன் சிறகே அம்மா - என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயம்மா" "தாயின் காலடியும் ஒரு ஆலயமே .... அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே - நான் கண்ட முதல் வைத்தியரும் நீயம்மா" "மண்ணும் பெண்ணும் என் சுவாசமே அம்மா .... தாய்மை பண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா - என் அழுகையில் பதறி, சிரிக்கையில் மகிழ்ந்தவளே" "நான் அம்மா என்று அழைப்பதும் .... உன் வரமே என்றும் நான் உன் மழலை அம்மா ....தெய்வம் உனக்கு தந்த குழந்தை அம்மா" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "In my heart, The god I pray is you Mother is only my prime god" "My Sincerity & honesty- is you The life, I am living- is yours You become flowered creeper with my pregnant" "Again I need one more time- your womb My work & advancement - is your dream your smelling flower- is my life" "Even shoot from roots- wood apple is wood apple Even child fly anywhere- it is your feather My light house for my life- is you " "Even scent from your foot step- is a temple which is a peace of mind for me You are my first doctor " "Earth & woman are breath for life Chastity is a cultured behaviour of you You felt fear on my cry & felt happy on my laugh" "I call you as "Amma" - is your blessing I am Always your - hailing toddler Your god gifted child - is me " [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
"பலன் தரும் பழக்கங்கள்"
ஈழ தமிழர் அவலங்கள் என்ற வகையிலே கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகின்ற அரசியல் நெருக்கடிகளே முக்கிய காரணங்கள் எனலாம். ஈழத்திலிருந்து கடந்த 35 ஆண்டுகளாக தமிழர் வெளியேற்றங்கள், இனக்கலவரங்கள், இராணுவ நெருக்கடிகள், கல்வித்தரப்படுத்தல்கள், போன்றன முக்கிய வரலாற்று அம்சமாக தமிழர் அவலங்களில் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன. அதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை இந்த அவலங்களுக்கு விதைத்த விதை சரியில்லையா? கட்டாயம் . பொன்னப்பாலம் ராமநாதன் காலத்தில், பிரித்தானியருக்கு கீழே இருந்த நேரம், முகம்மது அலி ஜின்னா மாதிரி ஒரு நல்ல வாய்ப்பு, தமிழ் தலைவர்கள் அதை உணரவில்லை. அவர்கள் விதைத்த விதை பிற்காலத்தில் சரியில்லாமல் போய்விட்டது. ஆமாம் சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றது கணாக்காலமாக பிற்காலத்தில் போய்விட்டது. நியூட்டனின் விதி கிட்டும் வரை காத்திருக்க வேண்டுமா? ஒருமுறை வந்து, இருந்ததும் மறைந்து / தொலைந்து விட்டது இனி வருமா வராதா நான் அறியேன் பராபரமே!!
-
"கண்ணீரில் நனையும் பூக்கள்"
"கண்ணீரில் நனையும் பூக்கள்" "கண்ணீரில் நனையும் பூக்கள் இவளோ ஊண் உறக்கம் மறந்த மங்கைதானோ அண்டத்தில் அழகாய் பிறந்த விதியோ கண்ட ஆண்களையும் நம்பிய கதியோ கொண்ட கோலம் உண்மையை மறைத்ததோ?" "உள்ளங்கள் இரண்டும் உண்மையில் இணைந்தால் உயிர்கள் கலந்து காதல் மலர்ந்தால் உலகம் என்றும் இன்பச் சோலையே! உணர்ச்சியை மட்டும் கொண்ட நட்பு உனக்கு ஈவது விழிநீர் மட்டுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பேசுவதற்கு முன்பே யோசிப்போம் . யோசித்தப்பின் பேசுவோம்."
"பேசுவதற்கு முன்பே யோசிப்போம் . யோசித்தப்பின் பேசுவோம்." வார்த்தைகளை சிந்துவது சுலபம். ஆனால்அவற்றினை திருப்பிப் பொறுக்கி எடுத்துவிட முடியாது. ஆகவே வார்த்தைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு அது மற்றவரை எப்படி காயப்படுத்தும் என்று நன்றாக யோசித்த பின்பு தான் நாம் பேச வேண்டும். நாம் கோபத்தில், எரிச்சலில், அவசரத்தில் அள்ளிக் கொட்டிய வார்த்தைகளை திரும்ப பெற முடியுமா? முடியாதில்லையா ? அப்படியென்றால் நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு எப்படி ஒரு சக்தி இருக்க வேண்டும் ? இதை நாம் உணர வேண்டும். தவறை உணர்ந்து நாம் கேட்கும் மன்னிப்பும் அதற்கு நாம் கூறும் காரணங்களும் ஏற்றுக் கொள்ளப்படுமே தவிர மறக்கப்பட மாட்டாது. அது மனதின் ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் அது மீண்டும் வெளி வரலாம் ? ஆகவே அது ஒரு முடிவு அல்ல. இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல, மன்னிப்பதும் கூட மன்னிப்பவர்களின் பெருந்தன்மைதானே யொழிய உண்மையாக காயத்தின் வலி குறைந்தமையால் அல்ல. காயத்தின் வலி தற்காலிகமாக மறைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை . ஆகையால்.... பேசுவதற்கு முன்பே யோசிப்போம் . யோசித்தப்பின் பேசுவோம். அத்துடன் வள்ளுவர் கூறுவது போல் "இடம் பொருள் ஏவல்" அறிந்து பேசுவோம். "சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்."-குறள் எண்: 98 அதாவது, சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக் கூடியதாகும். ஆகவே இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது."-குறள் எண்: 99 [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பலன் தரும் பழக்கங்கள்"
"பலன் தரும் பழக்கங்கள்" "நீ எதை விதைக்கிராயோ அதையே அறுவடை செய்வாய்" "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் " ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் நியுட்டன் விதி சொல்வது போல- "எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு" -நீ அதையே பெருவாய். "நம் செயல்களுக்கு நாமே காரணம்!" "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார். "ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்" என்கிறது யஜுர் வேதம். "எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை வீயாது, பின் சென்று, அடும்."- திருக்குறள் [ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.] இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்கு வைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த பிறவிக்கு "இருப்பு இவ்வளவு" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை. முற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது. அது அவரை இந்த பிறப்பிலேயே பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும் என்பதே அவர் கருத்து. அது மட்டும் அல்ல ஔவையார் கருதும் அதுவே. ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்துவதுடன் இப்ப பலன் தரும் இவைகளையும் செயுங்கள். -உனது வாக்கை காப்பாற்று -எல்லோருக்கும் மதிப்பு கொடு -நல்ல நண்பனாக இரு -ஒருவரிடம் இருக்கும் நல்லதை எதிர் பார் -மன்னிப்பை காட்டு -அன்பாய் இரு -நீ தவறு இழைக்கும் போது, மன்னிப்பு கேள் -அன்பு வேண்டியவர்களுக்கு அன்பு செலுத்து -பிள்ளைகளின் தேவையை முதல் செய் -உன்னுடன் ஒருவர் கதைக்கும் போது கவனம் செலுத்து -உன்னை தினம் காதலி -உணர்வை காட்டு -கொடும் சொல் பாவிக்காதே -உனது அறிவை மற்றவர்களுடன் பகிர் -உனக்கு தேவையற்றதை தானம் கொடு -சிரிப்பை கூட்டு முகச்சுளிப்பை குறை -நல்ல வழ்வை எதிர் பார் -எப்பவும் நல்லதையே செய் -உன் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர் -உனது பிழைகளில் இருந்து பாடம் படி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஆன்மீகம்"
"ஆன்மீகம்" நான் யார்? எங்கு இருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? எங்கே செல்வேன்? என்னை நகர்த்துவது எது? எனக்குள் உயிராய் இயங்கும் சக்தி எதனால் உருவானது? அது ஏன் உருவானது? எல்லோருக்குள்ளும் இப்படித்தான் இருக்குமா? என்னை அடித்தால் அழுகிறேன், வலிக்கிறது. நான் அடித்தால் இன்னொருவனுக்கும் வலிக்கும் தானே? அப்படி இருக்கையில் நான் அவனை அடிக்கலாமா? தேவையின் அடிப்படையில் இயங்கு என்கிறார்களே...? தேவை என்றால் என்ன? எனது தேவையா? அல்லது சுமூக வாழ்க்கை முறைக்கான ஒட்டு மொத்த மனிதர்களின் தேவையா? எனது தேவையை ஒட்டு மொத்த மானுட சுமூக இயங்கு நிலைக்கு ஏற்ற தேவையாய் மாற்றிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்...? என்றெல்லாம் தன்னுள் தானே கேட்டுக் கொள்ளும் உத்தம செயலுக்குப் பெயர்தான் ஆன்மீகம். இப்படியான தொடர்ச்சியான கேள்விகளின் விளைவால் ஏற்படும் மிகப்பெரிய புரிதலே ஆன்ம விழிப்பு. விவேகானந்தர் என்ன கூறினார் தெரியுமா ? "உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்." [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"காதலா ? காமமா ??"
"காதலா ? காமமா ??" வவுனியா காட்டின் ஒரு எல்லையில் அமைந்த ஒரு குக் கிராமம் அது. பொதுவாக அங்கு எல்லா வீடுகளும் மண் வீடாக இருக்கும் பொழுது ஒரு வீடு மட்டும் கல் வீடாக அங்கு தனித்து காணப்பட்டது. அந்த வீட்டின் இளவரசி தான் எம் கதாநாயகி. அழகிலும் அதே நேரத்தில் படிப்பிலும் சிறந்து விளங்கிய அவள், அருகில் உள்ள பாடசாலையில் உயர் வகுப்பில், விஞ்ஞான பிரிவில் கற்று வந்தாள். அவளின் அழகும் நளினமும் மற்றும் உடையும் கண்டு மயங்காத ஆண் மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லலாம். அதே பாடசாலையில் குழப்படி பையன் என பெயர்பெற்ற, ஆனால் கம்பீரமான மிடுக்கான ஒரு பையன் இருந்தான். அவன் ஏற்கனவே உயர்தர பரீட்சை எடுத்து இரு முறையும் கோட்டை விட்டவன். என்றாலும் பாடசாலை அருகில் இருக்கும் மதவில் தன் கூட்டாளிகளுடன் இருந்து மாணவிகளை கிண்டல் செய்வான். அவனின் கடைக்கண் இப்ப எம் இளவரசியின் மேல். தான் எப்படியும் அவளை மடக்க வேண்டும். அது தான் இப்ப அவனின் எண்ணம். அவன் வலையில் ஏற்கனவே சிக்கி சில மாணவிகள் பட்ட துயரம் வேறு. அது எம் இளவரசிக்கும் நன்றாகத் தெரியும். எனவே அவன் லீலைகள் ஒன்றும் அவளிடம் பலிக்கவில்லை. ஆனால் அவன் விடுவதாக இல்லை. அவன் அவளின் அன்றாட நடவடிக்கைகளை நோட்டமிட தொடங்கினான். எங்கேயாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று. அது அவளுக்கு தெரியாது? அவள் வழமைபோல, பாடசாலையின் பின், வீட்டிற்கு விறகு பொறுக்க அன்றும் தன் தங்கையுடன் சென்றாள். அவள் என்ன நினைத்தாளோ தெரியாது, தங்கையை ஒரு பக்கமும், தான் மறுபக்கமுமாக சென்று விறகு பொறுக்க தொடங்கினாள். அவளையே, அவளுக்கு தெரியாமல் கவனித்துக் கொண்டு வந்த அந்த வாலிபன், தன் துவிச்சக்கர வண்டியை ஒரு மரத்துடன் சாத்திவிட்டு, திடீரென பின்னல் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டான். எம் இளவரசி அப்படியே திகைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுவிட்டாள். தங்கை பக்கத்தில் தான் விறகு பொறுக்கிறாள். சத்தம் போட்டால் உடனே வந்திருப்பாள். ஆனால் அவள் செய்யவில்லை ? அவள், அவன் உண்டாக்கிய திடீர் மலைப்பில் அப்படியே சிலையாட்டம் நின்று விட்டாள். அவனுக்கு அது இலகுவாக போய் விட்டது. தடுக்கவும் இல்லை அணைக்கவும் இல்லை. எனக்கு அகலிகை - இந்திரன் கதை ஞாபகம் வருகிறது. பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடித்ததால் அகலிகையுடன் கௌதமர் உடல் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. கணவருக்கு பணிவிடை செய்வதிலேயே அகலிகை பொழுதை கழித்தாள். ஆனாலும் அவ்வப்போது காம உணர்ச்சி அகலிகைக்கு எழும். அகலிகை மேல் காமம் கொண்ட இந்திரன், ஒரு நாள் பின்னிரவில் சேவல் போல் கூவ, கௌதமரும் விடிந்து விட்டது என எண்ணி நீராட செல்ல, இந்திரன் கௌதமர் உருவில் அங்கு வந்து அவளுடன் உடல்சேர்க்கையில் ஈடுபட்டார். என்றாலும் பிற்பாடு அது இந்திரன் என்று அவள் உணர்ந்தாலும், அமைதியாய் இருந்ததாக ராமாயணத்தில் உண்டு. அப்படித்தான் எம் கதாநாயகியும் இருந்தார்? எம் கதாநாயகி அதை வன்முறை என்று எடுக்கவில்லை. அவள் மனதில் எதோ சந்தோசம். அதற்கு நியாயம் கற்பிப்பது போல "எனக்கு காதலும் வரவில்லை காமமும் வரவில்லை. ஆடவன் ஒருவன் என் உடலை தீண்டிவிட்டான் என்று விருப்பமோ விருப்பம் இல்லையோ இவன் என் கணவன் என்று பட்டிக்காடு நான் முடிவு எடுத்து அமைதியாக நின்றேன்" என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள். என் தந்தையார் கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர கதைப் புத்தகங்களை வாங்கித் தருவார் அவற்றை வாசித்து, நானும் என்னை அவர்களைப் போல் எண்ணிய பட்டிக்காடு என்பது அவரின் பிந்திய வாதம். எத்தனையோ போராட்டத்தின் பின், ஏறத்தாழ ஐந்து வருடத்தின் பின், அவன் அரேபியாவில் இருந்து நாடு வந்ததும், அவள் அவனையே திருமணம் செய்தாலும். அது தொடக்கத்தில் இருந்தே தடுமாறிக் கொண்டே இருந்தது. அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் முதல் இரவே அவளுக்கு அதிர்ச்சி கொடுத்த சம்பவம் தான். அரேபியாவில் அவனின் பெண் நண்பியான, யாரோ ஒரு யயந்தி பற்றியே அவனின் கதை முழுக்க முழுக்க இருந்தது. அவள் இத்தனைக்கும் இடையிலும், தன் கோபம், உணர்ச்சி எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக் கொண்டு, 'நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள்' என்று அவனை திசை திருப்ப சொல்லி பார்த்தாள். 'எல்லாம் யயந்தி வளர்த்து விட்டது' என்றவன் கூறி, குறட்டை விட்டுத் தூங்கியும் விட்டான்!. இப்படித்தான் அவளின் வாழ்க்கை ஆரம்பித்தது. பெற்றோர்கள் சூழ்ந்து இருந்ததால், எப்படியோ ஒருவாறு, பல இழுபாடுகளுக்கு இடையில், ஓரளவு சுமுகமாக குடும்ப வாழ்வு நகர்ந்தது. எனினும் அன்றைய நாட்டுப் பிரச்சனை காரணமாக இரண்டு குழந்தை பிள்ளைகளுடன் அவனையும் அவளையும் பெற்றோர்கள் வெளிநாடு அனுப்பி வைத்தனர். இது அவர்களின் பெற்றோர்கள் செய்த பெரும் தப்பு! அந்த கதாநாயகன், இப்ப மீண்டும் சுதந்திர பறவையாகி, வெளிநாட்டு கலாச்சாரமும் துணை புரிய, அவளை விட்டு விட்டு இப்ப ஆறாவது பெண்ணுடன் வாழ்கிறான்! எம் கதாநாயகி காதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் பிள்ளைகளுடன் போராடிக் கொண்டு உலகின் ஒரு மூலையில் அமைதியாக கண்ணீருடன், அவனின் புது மனைவியையும், அவள் யாருக்கோ பெற்ற பிள்ளைகளை சுமந்து செல்லும் தன் கணவனையும் பார்த்துக்கொண்டு, இன்னும் காத்து நிற்கிறாள்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"உள்ளம் கவர்ந்த கள்வன்"
"உள்ளம் கவர்ந்த கள்வன்" நான் உயர்தரம் முடித்து, அரசாங்கம் அறிமுகப் படுத்திய தரம் அற்ற, இனரீதியான தரப்படுத்தல் மூலம், பல்கலைக்கழக நுழைவை இழந்து, தனியார் நிலையம் ஒன்றில் தொழில் சார்ந்த கல்வி ஒன்றில் அன்று பயின்று கொண்டு இருந்தேன். பொழுது போக்காக சில பேனா நண்பர்களை உள்வாங்கி, எனது ஓய்வை பயன் படுத்திய காலம் அது. நாளடைவில், அதில் ஒரு பேனா நண்பன் முன்னிலை வகுக்க தொடங்கினார். அரசியல் தொடங்கி சமயம் வரை எமக்குள் கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இருவருக்கும் சில உடன்பாடுகளும் மாறுபட்ட கருத்துக்களும் இருந்தாலும் நட்பு வலுவாகிக் கொண்டே போனது. நம்பிக்கை வளர, இயல்பாகவே, எந்தவித தயக்கமும் இன்றி கடிதங்கள் பரிமாற தொடங்கினேன். அவனை பற்றிய தனி விபரங்களையும் அறிய என்னுள் ஒரு அவா வந்தது. எனினும் எப்படி கேட்பது என்று தெரியாமல் இருந்த அந்த நேரத்தில், அவனும் எனோ என் படத்தை கேட்டு ஒரு கடிதம் போட்டு இருந்தான். இது தான் சாட்டு என்று, 'நான் பெண், முதலில் நீ உன் படத்தையும், முன்பு தரப்படாத விபரங்களையும் தா' என்று கேட்டேன். அதன் பின் ஒரு சில கிழமை கடிதங்கள் வரவில்லை, ஆனால் பிறகு 'தான் பட்டம் பெற்று, அண்மையில் கொழும்பில் வேலை பெற்று, கல்வி அமைச்சில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக' பட்டமளிப்பு படம், வேலைத்தள படங்களுடன் கடிதம் வந்தது . அவன் படங்களை பார்த்தவுடனே, அவனின் முன்னைய கருத்தாடல்களும் ஒன்று சேர 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' போல என்னுள் 'உள்ளம் கவர்ந்த கள்வன்' ஆக குடிபோய் விட்டான்! ஆனால் நான் ஒன்றை மனதில் எடுக்க மறந்துவிட்டேன். நான் நோக்கியது வெறும் படமே என்று! நானும் எனோ அவசரம் அவசரமாக படம் எடுத்து, என்னை பற்றி கூடுதலாக எழுதி, அவனின் படத்துக்கும், வேலைக்கும் வாழ்த்து கூறி, பதில் போட்டேன். அவன் என்னை பற்றி என்ன சொல்லுவான் என்று வேறு கற்பனை கூட! அவனின் பதில் வந்தது, சாதாரணமாக நன்றி கூறியதுடன், தான் விடுதலையில் வீடு வருவதாகவும், நேரம் இருந்தால், நான் படிக்கும் தனியார் நிலையம் வந்து சந்திப்பதாகவும் எழுதி இருந்தான். மற்றும் படி என் படத்தை பற்றி ஒன்றுமே எழுதவில்லை, எனக்கு ஒரே கோபம், என்றாலும் அவனை திட்ட முடியவில்லை. "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து" என்பது போல, என் உள்ளத்தில் அந்த கள்ளன் குடிகொண்டு விட்டதால், என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, வாரான் என்கிறான், சிலவேளை வந்து சொல்லுவானோ ?, இப்படி என்னையே ஆறுதல் படுத்தினேன். வந்தான் சொன்னபடியே, என் கண்கள் அவனையே பார்த்தபடி இருந்தது. நான் என் தோழியுடன் அவனை சந்தித்து, அங்கே இருக்கும் சிற்றுண்டி சாலையில் மூவரும் மூன்று மணித்தியாலத்துக்கு மேல் கதைத்திருப்போம். அந்த கள்ளன் எந்த சந்தர்ப்பத்திலும் என்னிடம் எந்த விருப்பமும் வெளிக்காட்ட வில்லை. நான் அவனிடம் என் ஆசையை சொல்ல விரும்பினாலும், எனோ அதை சொல்ல முடியவில்லை? அதைத்தான் தொல்காப்பியர் "அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப" என்கிறாரோ யான் அறியேன்! அதன் பின் அவன் என்னை நேரடியாக என்றுமே சந்திக்கவில்லை, அந்த 'உள்ளம் கவர்ந்த கள்வன்' இன்று தன் திருமண பத்திரிக்கையை அனுப்பி உள்ளான். என் நெஞ்சம் இன்னும் அவனைமறக்கவில்லை? கைக்கூடிய காதல் உண்டு, கைக்கூடாத காதல் உண்டு, கைக்கூடி பிரிந்த காதல் உண்டு, கைக்கூடாமல் நினைவுகளோடே வாழும் காதல் உண்டு!. அதில் நான் கடைசி பிரிவு !! அவன் என்றும் என் 'உள்ளம் கவர்ந்த கள்வன்' !! ஆமாம் அவன் இன்று ஒருவளின் கணவன் தானே! அது தான் அவன் என்னுடன் கள்வனாகவே வாழ்கிறானோ ? நீங்களே சொல்லுங்கள் ?? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பாசம்"
"பாசம்" எம் திருமணத்தின் பரிசாக எம்கையில் தவழும் அவன்மேல் பாசம் அத்தனையும் கொட்டிவளர்த்தோம். அது தன்னலம் என்று என்றுமே எண்ணவில்லை. ஏன் - பாசத்தை உணரவும், கொடுக்கவும் பெறவும் திறன் பெரும்பாலும் உயிரியல் ரீதியானது என்றுகூட சிந்திக்கவில்லை. இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்றுயாராவதுகேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே பாசமும் ஆகும். அவனுக்கு எல்லா வசதியும் கொடுத்து, படிப்பில் ஒரு எல்லைக்கே கொண்டுபோனோம். நல்ல உயர்தர வேலையும் கிடைத்தது. அழகானபெண்ணும் காதலியாக வரவே, அவனின் விருப்பத்தின்படி, சிறப்பாக ஆடம்பரமாக திருமணமும் மகிழ்வாக நிறைவேறியது. பாசத்திற்கு நாம் நாளாந்தவாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒரு அளவிடக்கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "பாசத்தை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய பாசம்" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்பது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது. திருமணத்துக்கு முன் இருந்த அவனின் போக்கு இப்ப மாறத் தொடங்கி, நாம் இதுவரை புரியாததை ஒவ்வொன்றாக அளந்து காட்ட தொடங்கியது. பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் அவசியமாகிறது. அதுமாட்டு அல்ல, தன்னலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. பாசம்கூட அதற்கு விதிவிலக்கல்ல!! ஆனால், பெற்ற தாய் தந்தையரைகூட புறந்தள்ளும் அளவிற்கும் அதுபோகும் என்பது நாம் நினைக்கவே இல்லை. பணம், அந்தஸ்து எல்லாவற்றையும் மறைக்கும் என்பது உண்மைதான் ! தாயின் மறைவிற்கு கொள்ளிவைக்கவென வந்த பொழுது தான் நான் கடைசியாக அவனை பார்த்தேன். தமிழ் மூதாட்டி ஔவையாரின் ஒரு பாடல் எனக்கு ஞாபகம் வருகிறது "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு" இப்ப என்னை பாடையில் கிடத்திவிட்டார்கள். எனக்கு இன்று இறுதிச்சடங்காம். நான் தீயில் சங்கமிக்கும் பொழுது, நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது, மகனை ஒருமுறை பார்க்க தேடிப் பார்த்தேன். உறக்கம் துறந்த பாசங்களை கண்டேன். அவர்களுக்கிடையில் உரிமை காட்டிட வந்த மகனையும் கண்டேன்!! கடைசியாக என் மகனிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன், என் பெயரை மறக்க வேண்டாம், என் பெயர் எம் அடையாளம், எங்கள் இருப்பு, இனத்தின் வாழ்வு!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"முட்டி மோதி போகும் பெண்ணே!"
"முட்டி மோதி போகும் பெண்ணே!" "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி மோதி போகலாம் பெண்ணே! " "பட்டி தொட்டி எங்கும் சொல்லி கட்டி தங்கம் வெட்டி எடுத்து செட்டி செய்த மோதிரம் மாற்றி மெட்டி காலில் கண் சிமிட்ட தட்டி கேட்க துணை சேர ஒட்டி உரசி போகலாம் பெண்ணே!" "மூட்டி அடுப்பில் சமைக்க வேண்டும் கூட்டி பெருக்கி துடைக்க வேண்டும் ஊட்டி பிள்ளை வளர்க்க வேண்டும் லூட்டி அடித்து குழப்ப வேண்டும் போட்டி போட்டு கொஞ்ச வேண்டும் சீட்டி அடித்து சிரிக்லாம் பெண்ணே!" "நாட்டி வளர்த்த காதல் எல்லாம் ஈட்டி ஆக உன்னை துளைக்க பாட்டி சொன்ன கதை எல்லாம் கூட்டி குழைத்து உனக்கு தர ஆட்டி அலைய விடாதே பெண்ணே நொட்டி நொடிய விடாதே பெண்ணே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கடவுள் கேட்கிறார்"
"கடவுள் கேட்கிறார்" "பாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுகிறாய் காலை மாலை எனக்கு படைக்கிறாய் சாலை ஓரத்தில் என் மகன் மாலை வரை இருக்க தவிக்கிறான் !" "பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா? தட்டும் படையலும் எனக்கு எதற்கடா? கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும் சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!" "தடல் புடலாக என்னை பூசிக்கிறாய் கடல் கடந்து யாத்திரை போகிறாய் குடல் வற்றி அவன் சாகிறான் உடல் சிதறி அவன் வாடுகிறான்!" "எங்கும் என்னை தேடி அலையாதே இங்கு கொட்டும் கறந்த பாலை அங்கு வறியவன் வாயில் கொட்டு அங்கு அவன் சிரிப்பில் நானே !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"போலிச்சாமி வண்டியில் போகிறார்"
"போலிச்சாமி வண்டியில் போகிறார்" "திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் அள்ளித் தூவி திருநங்கை ஒன்றைத் தேடுறான்!" "குருவி சாஸ்திரம் கூறி குருட்டு நம்பிக்கை வளர்த்து குருவாய் தன்னை நினைத்து குருதி கொதிக்க குழைகிறான்!" "ஊரு பேரு தெரியாதவன் இருளும் பகலும் புரியாதவன் தருமம் பற்றி பேசுகிறான் செருக்கு பிடித்து அலைகிறான்!" "தெருவில் தனிய நின்றால் அருகில் வந்து போதிக்கிறான் புருஷன் இல்லை என்றால் புருவம் உயர்த்தி பார்க்கிறான்!" "அருள் வேண்டி பத்தினி அருகில் நெருங்கி வந்தால் அருமை பெருமை பேசி அருந்ததி காட்டி நிற்கிறான்!" "உருண்டு போகுது வண்டி உருவம் மெல்ல தெரியுது உருவந்து ஆடிய வேலன் உருக்குலைய அதில் இருக்கிறான்!" "சுருட்டு வாயில் கொதிக்க சுருக்கி ஆடை உடுத்து சுருதி விலகாது மீட்க சுருண்டு வேலன் படுக்கிறான்!" "கருமம் வாழ்வில் ஒழிய கருணை மழை வேண்டி கருப்புச் சாமி ஆடியவன் கருவிழி மார்பில் சாய்கிறான்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
கிரகணம் / Eclipse [ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை, 2024 முழு சூரிய கிரகணம் / Monday, April 8, the 2024 total solar eclipse]
கிரகணம் / Eclipse [ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை, 2024 ஆம் ஆண்டு முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவைக் கடந்து செல்லும் / On Monday, April 8, the 2024 total solar eclipse will sweep through the sky over North America.] கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு என்பது பொருளாகும். எக்லிப்ஸ் (Eclipse) என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள், வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்! கரத்தல் = மறைத்தல்!. தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதை கூறும்! கிரகணம் என்பது சந்திரன், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுவது. ஆனால் பழங்காலத்தில், கிரகணம் என்பது, ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். அதுமட்டும் அல்ல சூரியனை ராகு, கேது, பாம்புகள் விழுங்குவதால் உண்டாவதாகவும் கருதினர். இந்த கருத்தை சிலப்பதிகாரத்தில் காணலாம். புகார்க் காண்டம் 5. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை “வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்” "கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து -ஆங்கு, இரு கருங் கயலொடு இடைக் குமிழ் எழுதி, அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி, திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்!" ஒரு பெரிய முகிலைத் / மேகத்தைச் [கூந்தலை] தன்னுச்சியிலே சுமந்து சிறிய முயலை [குறிய களங்கத்தை / கறையை] யொழித்து. அவ்விடத்தே இருமருங்கினும் இரண்டு கயல் மீனையும் [கண்ணையும்] அவற்றிடையே ஒரு குமிழ மலரையும் [மூக்கையும்] எழுதி, இவ்வாறு தன்னைப் பிறர் அறியா வண்ணம் உள்வரிக் கோலம் கொண்டு; இந் நகரமறுகிலே, அகன்ற அழகிய வானில், இராகு கேது பாம்புகளுக்கு அஞ்சி, திங்கள் [அந்த சந்திரனே] தானும் வந்து திரிகின்றதோ என வர்ணிக்கிறது. நற்றிணை 377, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சி திணை- தலைவன் சொன்னது "அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல" அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் [பாம்பினால்] சிறிது விழுங்கிக் குறை படுத்தப்பட்ட பசிய [பசுமை] கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என இங்கு கூறப்படுகிறது. அதாவது இந்தப் பாடலிலும் ராகு கேதுவைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் சூரிய கிரகணம் தோன்றுவது நாட்டில் போரும், மோசமான சம்பவங்கள் ஏற்படுவதற்கான அறிவிப்பாக கருதப்பட்டது. சூரிய கிரகணம் ஏற்பட்டால் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். காரணம் சூரிய கிரகணத்தால் உணவுப் பொருட்கள் கெட்டு விடும் என்ற நம்பிக்கையும் நமது நாட்டு மக்களிடம் இருந்தது. சூரிய கிரகண நம்பிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் தான். அதாவது சூரிய கிரகணத்தின் போது கர்பிணிப் பொண்கள் வெளியே சென்றால் பிறக்கப் போகும் குழந்தை குருடாக பிறக்கும் அல்லது கிழிந்த உதடுடன் பிறக்கும் என நம்பப்பட்டது. மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ள மாட்டார்கள். சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும் கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது என கருதியதால் ஆகும். சூரிய கிரகணம் பற்றிய மூட நம்பிக்கை நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சூரிய கதிர்கள் சந்திரனால் மறைக்கப்படும் போது வளிமண்டலம் மாசுபடுத்தப்படுவதாக நம்புகிறார்கள். இதனால் ஒரு முழு காலை நேரமும், அதாவது 12 மணித்தியாலம் அளவிற்கு, எந்த வித உணவையும் இந்த மாசுபட்ட சூழலில் சாப்பிடாமல் மக்கள் விரதம் கடைபிடிக்கிறார்கள். தம்மை எந்த வித தீய செயலிலும் ஈடுபடாமல் தடுப்பதற்காக வழிபாட்டிலும் ஈடுபடுகிறார்கள். சந்திர கிரகணம் போதும் அப்படியே செய்கிறார்கள், ஆனால் விரதம் இருக்கும் நேரம் 9 மணித்தியாலம் ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Indra Vizha chapter from Puhar Kandam in Silapathikaram [Poet: Illango Adikal], under the heading "One of the young men thus celebrated his beloved lady"[“வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்”], mentioned about eclipse as below. “The Moon, in fear of Rahu, monster who devours her on the days of her eclipse, fled from the sky in search of shelter. framed in the dark clouds of you hair, she reappeared then as your pallid face. she chased away the hairs from your fair cheeks, painted two soot- black fish- shaped eyes, and in the middle placed kumil flower, that since then passes for your pretty nose.” A solar eclipse occurs when the moon passes between the Sun and the Earth so that the Sun is fully or partially covered but this celestial spectacle also brings along with it a string of superstitions all over the world. In India & Sri Lanka, people believe when the sun rays are covered by the moon, the atmosphere becomes polluted. Therefore, for the whole day -- about 12 hours of the day time -- people observe fast and do not eat any food in the polluted atmosphere. People pray during the eclipse period so that they did not indulge in any evil activity. The same is done during Lunar Eclipse but the period of fast is only nine hours. “There are several false beliefs prevalent in our society regarding solar eclipse. Some people even lock themselves up in their homes to avoid ‘the bad rays’ from the eclipse,” Many also take a dip in holy rivers to cleanse themselves after the eclipse and some avoid cooking and eating during the eclipse. There are others who believe that pregnant women should refrain from coming out during the eclipse as it can lead to deformities in the foetus. . There is no basis in truth for these superstitions, All these superstitions originate when human beings do not have the knowledge to explain away natural phenomena. The eclipse causes emission of UV rays and hence you should not watch it with naked eyes. This is one of the reasons; why it is not considered good. Later stories were built around it as above. Lastly as per "panchangam" [பஞ்சாங்கம் / Hindu astrological almanac] the presence of Rahu and Ketu makes it bad time for a birth or to conduct any good ceremony. Actually there is no truth in it; if you trust science. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
"மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?"
"மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?" "என்னை மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா பெண்ணே? விண்ணில் மறைந்த வெண்ணிலாப் போல கண்ணில் படாமல் ஒழித்தது எனோ?" "இரக்கம் அற்று பிரிந்து போனவளே உருக்கமாக உன்னைக் நான் கேட்கிறேன்? மயக்கும் நளினத்தால் கொள்ளை அடித்தவளே தயக்கம் இல்லையோ மற்றவன் கைப்பிடிக்க ?" "தேடி வந்தாய் தேனாய் கதைத்தாயே தேவை முடிந்தது தள்ளி விட்டாயே? தேவதையே ஒருதரம் திரும்பி பார்க்காயோ தேய்ந்து இவன் படும்பாட்டை காணாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை"
"அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை" ["சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா?"-"ஊரு விட்டு ஊரு வந்து" என்று கேட்ட வரிகள் தான் எனது இந்த கட்டுரையின் வேர்.] பழமை வாய்ந்த அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும் அதனுடன் அமைந்த வாசிக சாலையும் நம்ம அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு, முக்கிய அடையாளமாக இருந்தது. எனினும் இன்று அந்த வாசிகசாலை அங்கு இல்லை. அது ஒரு பெரும் குறையே? ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட[எவ்வகையான] கவலையும் தணியும். இதை நான் பெருமையாகவே சொல்வேன்.விடுதலை நாட்களில், ஓய்வு நேரங்களில் கூடும் இடம் அவை இரண்டும் தான். வாசிகசாலை ஊர் புதினம் அறிய ,கோவில் முற்றம் நண்பர்களை சந்தித்து அளவளாவ, பின் ஒன்று சேர்ந்து விளையாட. சித்திரைப் புதுவருட தினத்தில் யாழ் அத்தியடி பிள்ளையார் கோயில் வருடாந்த தேர் உற்சவம் நடைபெறும். கைவிசேசத்துடன் கொண்டாட்டமும் கலை கட்டும். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஔவையாரின் முது மொழி. "ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். எமக்கோ பெரியவர்கள் ஆனபின்பும், இன்று வெளிநாடுகளில் உள்ள மதுக் கடை அல்லது பொது விடுதி [pub] கள் நண்பர்களை சந்திக்க உதவுவது போல அது தொடர்ந்து இருந்தது. எம்மை பார்த்து கொண்டு யாழ் ரயில் நிலையம் ,எமது ஒரு பக்க எல்லையில் அமைந்துள்ளது ."நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே, யாழ் தேவி ரெயில் ஏறுவோம், எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய பாடல் வரிகளை இது நினைவூட்டும். ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே இல்லை . "ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும், தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு, இன்றைய நாவலர் மண்டபம், எமது வீட்டிற்கு பின்னால் உடனடியாக உள்ளது. நாம் சிறுவராக இருந்த போது அங்கு நாம் விளையாடுவது உண்டு. 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Dr Nagalingam Ethirveerasingam) அத்தியடியில் வசித்தவர் மட்டும் அல்ல, நான் படித்த அதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனும் கூட. நாவலர் கூட அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில்-இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் - பாடசாலை மாணவராகவும் ஆசிரியர் ஆகவும் இருந்தவரே! பொதுவாக யாழ்ப்பாண நகர்,யாழ் கோட்டை, சந்தை பகுதியையும் வைத்திய சாலை, பேருந்து, புகையிரத, நிலையத்தையும் முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை "downtown." எனவும் கூறலாம். இதன் எல்லையில் தான் அத்தியடி உள்ளது. யாழ் நகர் மக்கள் பொதுவாக தாம் யாழ்ப்பாணம் என்றே கூறுவார்கள். கொஞ்சம் யாழில் எங்கே என்று கேட்கும் போதுதான் அத்தியடி, ஆணைப்பந்தியடி, நல்லூர், கந்தர்மடம், .. இப்படி வட்டாரம், இடக்குறிப்பையும் சேர்த்து கூறுவார்கள். இது ஒரு நல்ல பண்பாடு. மேலும் யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்களை ஆங்ககாங்கே காணாலாம். பனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும் ,நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது .அது வளைவதை விட ,வளையாமல் உடைவதையே விரும்புவது.இன்னல், துன்பம் வரும் போது,யாழ்ப்பான மக்கள்,பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து ,தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம், துணிச்சலுடன் தளர்வுறாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக்குணம்/ பண்பை வளர்த்துள்ளார்கள் .இது பொதுவாக பெருமை படக்கூடிய ஒரு விசேஷ குணமாகும் . "யாழ்பாணம் போனேனடி பொன்னம்மா யாழ்பாணம் போனேனடி"என்ற அறு[60]வது எழு[70]பதில் எல்லாராலும் முணுமுணுக்கப்பட்ட அந்த பாடல் வரிகளும் எனக்கு இப்ப ஞாபகம் வருகிறது.அப்ப நான் பாடசாலை,பல்கலைக்கழக மாணவன். யாழ்பாணம் பொதுவாக சுவர்க்கம் என்று சொல்லும் அளவிற்கு நேசமான,நட்புணர்வுள்ள மக்களையும் உயர் பண்பாட்டையும் ஆரோக்கியமான காலநிலையையும் ,கண்ணைக் கவருகிற சுற்றுப்புறத்தையும் கொண்டது' 18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட "யாழ்ப்பாண வைபவமாலை" எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன்[யாழ்+பாணன்] ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றிடல் எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்ட தென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப் பிரதேசத் துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்று கூறுகிறது .போர்த்துகேயர் வருகைக்கு பின் காலப்போக்கில் மெல்ல மெல்ல திரிபு அடைந்து யாழ்ப்பாணம் [Yarlpaanam]- யாப்பாணம்- ஜப்பாணம்- ஜப்பணம் - ஜவ்வணம் [Jaffanam]- ஜவ்ண [Jaffna] இப்படி பிரித்தானியர் காலத்தில் முற்றுப் பெற்றிருக்கலாம்? என அறிகிறேன். யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன.வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்!மலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்"[நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்!!அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!! அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இருக்கும் மதகு, தெரு கம்பம் இவைதான் எங்களின் பாராளுமன்றம்! இதுவே எங்களின் வெள்ளை மாளிகை!! இறுதியாக, சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இயற்றிய ஒரு பாடலை முடிவுரையாக இங்கு தருகிறேன். "சித்திவரும் புத்திவருஞ் செல்வமொடு கல்விவரும் பத்திவருங் கீர்த்தி பரம்பிவரும்- அத்தி அடிவாழ் விநாயகனை யன்போடு நம்பிப் படிமேல் வணங்கு பவர்க்கு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி - ஆட்டனத்தி" / "Love story of Sangam lovers: Athimanthi- Attanathi [தமிழிலும் ஆங்கிலத்திலும்]
"சங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி - ஆட்டனத்தி" / "Love story of Sangam lovers: Athimanthi- Attanathi [தமிழிலும் ஆங்கிலத்திலும்] உலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ - ஜூலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க்ஆண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை, போன்றோர்களுக்கு சமமான காதல் கதை ஒன்று எமது இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட்டுள்ளது. இந்த காதலர்கள் ஆதிமந்தி - ஆட்டநத்தி என்ற ஆடுகளமகள் - ஆடுகளமகன் ஆகும். இது ஏனோ பலருக்கு இன்னும் தெரியாமல் இருப்பது ஒரு கேள்விக்குறியே? இந்த சோகக் காதல் கதையை குறுந்தொகை 31, அகநானுறு 45, 76, 135, 222, 236, 376, 396 மற்றும் சிலப்பதிகாரம் போன்றவற்றில் பாடியிருக்கிறார்கள். இது ஆட்டக்காரி [ஆடுகளமகள்] "ஆதிமந்தி" யின் காதல் கதை .. இவளை சோழன் கரிகாலனின் (கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.) மகள் எனவும், அது போல ஆட்டனத்தியை (ஆட்டன்+அத்தி) சேர நாட்டரசனாகவும் பலர் கருதுகின்றனர். எது எப்படியாயினும் இவர்களைப் பற்றி பரணர், வெண்வீதியார் [வெள்ளி வீதியார்]போன்ற புலவர்கள் போற்றி யுள்ளதுடன் சிலப்பதிகாரமும் இந் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறது. இனி இந்த சங்க கால காதலர்களின், கண்ணகியின் முன்னோடியாக கருதப்படும் ஆதிமந்தியின், காதல் கதையை மேல் கூறப்பட்ட சங்க பாடல்கள் மூலம் பார்ப்போம். மலை நேரம் காவேரி ஆறு இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது. சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு காவேரி ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பிய படி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது தோழியுடன் காவேரி ஆற்றங்கரையில் உலா வரும் ஆதிமந்தியை இன்று காண வில்லை. தோழி தான் முந்தி வந்து விட்டேனோ என்று ஒரு தரம் தடு மாறினாள். வாடைக்காற்று கொஞ்சம் குளிராக இன்று வீசுகின்றது. தன்னை மேல் அங்கியால் இறுக்கமாக போர்த்துக் கொண்டு அங்கும் இங்கும் தேடினாள். அதோ .. அந்த கற்பாறைகளுக்கிடையில் காவேரியை வெறுத்து பார்த்துக் கொண்டு ஆதிமந்தி இருப்பதை தோழி கண்டாள். அந்த காவேரியே அவள் கண்களில் இருந்து ஓடுவது போல அவள் அங்கு இருந்தாள். தோழிக்கு ஒன்றுமே புரியவில்லை. மெல்ல அவளின் பட்டு போன்ற நீண்ட கூந்தலை தடவிய படி, ஆதிமந்தியை என்ன நடந்தது என்று கேட்டாள். ஓ .. என்ன வென்று சொல்வேன் என தடு மாறினவள், கொஞ்ச அமைதியின் பின், தோழி தனக்கு நல்ல பதில் ஒன்று தருவாள் என்ற ஒரு அவாவில், தோழியின் முகத்தை பார்த்த படி சொல்ல தொடங்கினாள். "மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண்தக் கோனை யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே." [குறுந்தொகை 31] தம் மாண்தக்கோனை (தனக்கேற்றவனாக கருதிய தலைவனை), என் காதலனை, அந்த நீச்சல் - நடன விளையாட்டு வீரன் ஆட்டன் ஆத்தி என்பவனை, பலம் உடைய போர் வீரர்கள் [மள்ளர்] விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் தம்முள் பொழுது போக்காக தழுவி வட்டமாக நின்று கை கோத்துக் கொண்டு ஆடுகின்ற துணங்கை நடனம் ஆடும் இடங்களிலும் காண முடியவில்லை. நானும் ஓர் ஆடுகள மகள் [ஆட்டக்காரி]. அந்த ஆட்டக்கார [ஆடுகளக்] கூட்டத்துக்குக் தலைவனான (குரிசில்) அவனை நினைத்து என் சங்கு கைவளையல் நழுவுகிறது தோழி என நாணம் கடந்து வருந்தி முறையிட்டாள். தோழிக்கு சிரிப்பு தான் வந்தது. இதுக்கு ஏன் இந்த கவலை நாளை ஆட்டநத்தி எமது அரசன் முன்னிலையில் ஆடப் போகிறான். நீயும் நானும் முன் வரிசையில் இருந்து பார்க்கப் போகிறோம். பிறகு என்ன வேண்டும்? இன்று அவன் தனது சக ஆட்டக்காரி காவேரியுடன் ஒத்திகை பார்க்கிறானோ என்னவோ என சமாதானப் படுத்தினாள். சோழ நாட்டு மக்களுக்கு தாய், தெய்வம் எல்லாம் இந்த காவிரி தான். அவள் கருணையால் தான் சோழ நாட்டு ஆற்றுக் கரையில் முப்போகம் முழுசாக விளைகிறது. ஆமாம் புனலாய்ப் [வெள்ளமாய்] பெருகி, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்ப்பவள் அவள். அந்த தெய்வத்தின் தரிசனம் காண கரையெல்லாம் காவேரி அன்னைக்குப் பொங்கலிட்டு, நீரில் அகல்விளக்கு ஏற்றி விட்டு, ஆட்டனத்தி - காவேரியின் நீச்சல் நடன விழா காண மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது. ஆதிமந்தியும் தன காதலனின் நடனம் காண சீவி சிங்காரித்து பொன்மகளென, தன் தோழியுடன் புறப்பட்டு வந்திருந்தாள். இவளும் ஆடற்கலையில் தேர்ந்த வட்ட விழி அழகிதானே. நொப்பும் நுரையுமாய் துள்ளிக் குதித்து வரும் காவேரியை பார்த்து அவள் நெஞ்ச மெலாம் கூத்தாடுகிறது. அவனுடன் தான் ஆடுவது போல ஒரு கற்பனையில் மிதந்தாள். தன்னவன் நெஞ்சில் தலை சாய்த்து .. காதலன் கைபிடித்து .. நீரில் நனைந்து எழுந்து தலை கோதி .. அப்பப்பா அத்தனையையும் அனுபவித்து விடவேண்டு மென்று அவள் ஆசை ... நீண்டு கொண்டே போனது. தழைத்த கதிர்களையுடைய வயல்களை கொண்ட கழார் என்னும் ஊரிலுள்ள காவேரியாற்றுத் நீர்த்துறையில், ஆட்டனத்தி என்பவன், காவேரி என்ற ஆட்டக்காரியுடன் [நீச்சல் மகளுடன்] சேர்ந்து இன்று நீச்சல் நடனம் ஆடப்போகிறான். இந்த நீச்சல் நடனம் அதுவும் ஆரவாரம் பொருந்திய சுற்றத்தினருடன் சோழன் கரிகால்வளவன் கண்ணுற்று மகிழ அவன் முன்னிலையில் நடக்கப் போகிறது. அவ்வளவு பெருமை பொருந்திய அந்த நடனத்தை எல்லோரும் எதிர் பார்த்து இருக்க, சோழன் கரிகாலனை வணங்கி விட்டு அந்த ஆட்டனத்தி தனது சக ஆட்டக்காரி காவேரியுடன் நீரில் இறங்கினான் எங்கும் ஒரே அமைதி எல்லோர் கண்களும் அந்த ஆட்ட காரர்களிடமே! "ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, காவிரி கொண்டு ஒளித்தாங்கு" (அகநானுறு 376) நான்கு திசையும் இன்னிசை முழங்கிற்று. கரிய கச்சினைக் [அரைக்கச்சை] கட்டிய ஆட்டனத்தி தன் காலில் அணிந்திருந்த கழல் [சலங்கை] நீருக்கு வெளியே தெரியும்படி புரட்டி ஆடி காட்டினான். வயிற்றிலிருந்த பொலம்பாண்டில் [பொன்னாலான உருண்டையான] மணி ஒலிக்கும்படி தன் உடம்பையே நீளவாக்கில் உருட்டி ஆடி காட்டினான். அப்படி ஆடி மன்னரையும் மக்களையும் மகிழ்வித்து கொண்டிருக்கையில் அந்த ஆறே இவர்கள் நடனத்தை கண்டு பூரித்தது போல திடீர் என கொந்தளித்தது. இவனுடன் சேர்ந்து நீச்சல் நடனம் ஆடிய நீண்ட கரிய கூந்தலை யுடைய காவேரி இவனது அழகில் மயங்கி ஆற்று வெள்ளம் காவேரியை ஈர்த்த போது அவனை வௌவிக் கொண்டும் [பிடித்துக்கொண்டு ], தன் கூந்தலால் மறைத்து கொண்டும் அவனை ஆற்றோடு இழுத்துச் சென்றாள். என்றாலும் காவேரியை ஆறு அடித்துச் சென்றுவிட்டது. காவேரி ஆற்று வெள்ளத்தில் மாண்டு போனாள். ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான். அங்கே நீராடிய மீனவன் தலைவனின் மகள் மருதி என்பவள் அவனைக் காப்பாற்றி அவனுக்கு தேவையான வைத்தியம் செய்தாள். அவனும் மெல்ல மெல்ல தேறினான். மருதிக்கு அவன் மேல் ஒரு மோகம் ஒரு காதல் அரும்ப தொடங்கிற்று. அவனே தன தலைவன் என முடிவும் எடுத்து விட்டாள். அப்படி இருக்கும் தருவாயில் ......, ஆதிமந்தி ஆட்டனத்தியை தேடி பேதுற்றுப் புலம்பிக் கரை யோரமாக ஓடினாள். தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக் கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். நீரோட்டத்தின் வழியே கடற்கரையிலே பின் சென்று, “மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள். "கச்சினன் கழலினன் தேம்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் சுரியலம் பொருநனைக் கண்டிரோ" என ஆதிமந்தி பேதுற்று இனைய ....... [அகநானுறு 76:7-10] "கச்சினையும் [cloth tied around his body] கழலினையும் [war anklets] தேன் ஒழுகும் மாலையணிந்த மார்பினை உடையவனும், பலவகை மலர்களால் தொடுக்கப்பட்டு விளங்கிய அழகமைந்த மாலையை உடையவனும் ஆகிய சுருண்ட மயிரினையுடைய அழகிய கூத்தனாகிய (பொருநனாகிய) ஆட்டனத்தியைக் கண்டிரோ?" என்று கண்டவர்கள் எல்லோரிடமும் மயக்கமுற்று வருந்தி வினாவினாள். இதை மருதியும் கேட்டாள். ஆதிமந்தி கூறிய அடையாளங்கள், தான் காப்பற்றிய, தன் மனதை கவர்ந்த, தன் தலைவனாக முடிவெடுத்த இவனின் அடையாளங்களுடன் ஒத்து போவதை கண்டு திடுக்கிட்டாள். "முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண் கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும் ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதி மந்தி காதலர் காட்டிப் படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின் மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்" [அகநானூறு 222, பரணர், குறிஞ்சி திணை] அவனைப் பார்த்ததாக யாராவது சொல்ல மாட்டார்களா என்று ஆதிமந்தியின் நெஞ்சின் ஏக்கம் அவள் வினாவில் இருந்து நெடு மூச்சாய் வெளிப்படுகிறது .. அந்த நேரத்தில் உண்மை தெரிந்துகொண்ட மருதி ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்து "இதோ! .." என்று அவள் காட்ட, ஆட்டநந்தியைக் கண்டு சந்தோஷத்தில் அவள் கன்னம் மீண்டும் நனைகிறது; இந்த நனைதல் சூடாய் இல்லை; சுகமாய் இருக்கிறது. அந்த சுகத்தோடு வெட்கமும் சேர்ந்து அவள் கன்னம் சிவக்கின்றன. ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்து விட்ட மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள், அப்படி பட்ட சிறந்த சிறப்பினை உடையவள் இந்த கற்பரசி மருதியாகும் என சங்க பாடல் மேலும் கூறுகிறது ! இந்தக் கதையை பாவேந்தர் பாரதிதாசன் சேர தாண்டவம் என்று நாடகமாக எழுதினார். இதையே தழுவி எடுக்கப்பட்ட படம் மன்னாதி மன்னன். அதில் அஞ்சலிதேவி தண்ணீரோடு போன எம்.ஜி.ஆரைத் தேடி “காவேரித்தாயே காவேரித்தாயே” என்று பாடுவார். மேலும் அகநானுறு 45 "காதலர் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து ஆதிமந்தி போல பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ," - வெள்ளிவீதியார், 135 "பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, ஆதி மந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதல் அம் தோழி!" - பரணர், 236 "தோட்டு இருஞ் சுரியன் மணந்த பித்தை, ஆட்டன் அத்தியை காணீரோ?’ என நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித் தன்று எனக் கலுழ்ந்த கண்ணள், காதலர் கெடுத்த ஆதி மந்தி போல, ஏதம் சொல்லிப், பேது பெரிது உறலே." ,396 "மந்தி பனிவார் கண்ணள் பலபுலந்து உறைய அடுந்திறல் அத்தி ஆடுஅணி றனஇ நெடுநீர்க் காவேரி கொண்டு ஒளித்தாங்கு" - பரணர், ஆகியவற்றிலும் ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் குறிப்புகள் காணப்படுகின்றன அது மட்டும் அல்ல "-- உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று ‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்" என்று இளங்கோ ஆதிமந்தியின் காதல் வலிமையை சிலப்பதிகாரத்தில், வஞ்சின மாலை: 10 to 15 எடுத்துச் சொல்கிறார். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] "Love story of Sangam lovers: Athimanthi- Attanathi" Over two thousand years old Tamil Sangam poems had mentioned a true love story of "Athimanthi - Attanathi",which is immortal & parallel with the world most famous lovers such as Romeo and Juliet, Shakuntala & Dushyant, Layla and Majnun, Mumtaz Mahal & Shah Jahan, Cleopatra and Mark Antony, Ambikapathi Amaravathi, Devadas Parvathi & Udayana and Vasavadatta. This is the love story of two sangam period dancers "Athimanthi -Attanathi". However, surprised to note that most of us still doesn't know their love story, which is mentioned in Kurunthogai 31, Akananuru 45, 76, 135, 222, 236, 376, 396 as well as Silappathikaram of Ilango Adikal. There are two different school of thoughts or opinions among scholars. Some say that Athimanthi was the daughter of king Karikalan who also goes by the name Karikal - peru - valattan & called her as princes Athimanthi. Similarly they consider, Attanathi too as a chera king. Others say that both are just dancers as no Sangam poems ever mentioned that she was his daughter. What ever is true, the sangam poets Paranar & Velli Veethiyar had described their true, wonderful, inspiring & romantic love story. Further Silappathikaram too mentioned about the greatness of their love. She can also be seen as a forerunner of Kannaki. Let us now look about Athimanthi's - the great, heart-breaking and romantic love story based on those Sangam poems. Today the Cauvery river is flowing very slowly - clumsily and in awkwardly, Like some one had snatched her. Sun about to plunge into the water for his evening bath, Birds are singing and flying back to the tree branches. We can hear the gentle sound of bees buzzing from flower to flower. Moon just coming out of clouds as welcoming evening romantic lovers. But Athimanthi is not there for her daily routine walk with her friend. Friend confused whether she came to the walk early today. Today the north wind blowing little cold. She wrapped her tightly with upper cloth and searched Athimanthi at Cauvery river bank here & there. There ... Athimanthi Look frustrated, sit on a hillock among the rocks as that the Cauvery river itself flowing from her eyes. Friend could not understand any thing. She went closer to her & looked up at her. She unfasten silk like long hair of Athimanthi, running her fingers through the soft fall, Asked gently "What happened to her" Ohhh ... how can I say -- She confused. After few lapse .. she continued .. Hoping that the friend will tell her good and pleasant answer. Athimanthi started to tell her plight, looking her friend face with eagerly. "I cannot find my esteemed man among warriors at their festival, nor with the thunangai girls who hug and dance. I am a dancer whose love for him has made my shell bangles slip off my wasting hands. My proud lover is a dancer too." [Kurunthokai/குறுந்தொகை 31] I was looking for my lover, the dancer - Attanathi .. Where the warriors are gathered in their festival .. Where Thunangai dances [துணங்கை – Thunangai dance was performed by young women. It was performed during festivities. It was also performed in the battlefield by victorious soldiers. / Kurunthogai [குறுந்தொகை] 364:--women with bright bangles and bamboo like arms dance bending their forearms --] were performed by women during festivals ,.. I can’t find him .. my esteemed man is not there .. I am a dancing girl .. bangles made from cutting conch shells, slipped from my hands now .. My esteemed hero is a dancer too .. Athimanthi complained to her friend very openly, without showing any shyness, Her friend laughed at Athimanthi's complaints. Why are you worrying for this? You know very well .. Attanathi will perform dance front of our king, Chola Karikalan tomorrow. As we already planned, We will sit in front raw & watch Cauvery river dance festival closely. Then what do you want more than that? He may be doing rehearsal today with co-dancer Kaveri. So do not worry any more .. Be happy. Her friend replied to her. For Chola country, This Cauvery river is their Mother, Goddess & every thing. Because of her mercy, they do cultivation three times in a year. This Cauvery water helps thousand & thousand of farmers & make them happy. Today all Chola country people had paid a respect to this great Cauvery goddess, by observing Pongal feast along the river bank as well as lighting lamps in the river water and waiting happily to see the Attanathi - Kaveri water dance about to commence. Athimanthi dressed elegantly, appropriately for this dance occasion & came to this festival with her friend, excited to see her lover's dance. She is also a beautiful & talented dancer. She was so happy to see the flow of the Cauvery water where her lover is going to dance today. She imagine, She was dancing with him instead of Kaveri. In the front port of Kazhar city where groves are dense with marutham trees and fields are heavy with grains, Attanathi with his co dancer Kaveri is going to perform water dance festival Today. This water dance will be held in front of Chozha king Karikalan , who will watch with his happy relatives, As every one is expecting to see this wonderful dance, Attanathi greet [salute] Chola king, Karikalan & went into the Cauvery water with his co dancer Kaveri. He was a very handsome man and a talented dancer. Silent Everywhere ... everyone eyes look only both dancers & nothing else. "In the front port of Kazhar city where fields are heavy with grains, Chozha king Karikalan watched with his happy relatives, Athi dance with desire in the flowing river water donning crafted anklets with bright spots, swirling on his red feet, cloth tied around his beautiful waist, and with jingling, golden round bells. Like Kaveri who took him," [Akananuru/அகநானுறு 376] With beautiful music in all four direction, Attanathi who wore black cloth tied around his body, danced such a way that the bright spots crafted anklets [chalangai] rolling on his red feet & big golden round bells tied around his beautiful stomach make sound along with flowing water. While he dance with desire with co dancer Kaveri, like Cauvery river itself excited by looking his dance, it swell [rise up] suddenly. When Cauvery river seized him & dragged him into the river, the co dancer, who had a long beautiful dark hanging hair, attracted by his handsome, held the hand of beautiful Attanathi, hiding [protecting] him with her long hair. However Kaveri had died in the continuous non-breaking river water swell & Attanathi was unconsciously left at the bank of the river by the rise up of the river. A young lady named Maruthi saved Attanathi. She was a daughter of a headman of fisherman. She treat him with full attention as one of them. Attanathi slowly but steadily recovered. Mean time unknowingly Maruthi fell in love with him and wants to marry him too. She already decided that he is her man, her Lover, her Husband. While her excessive love & affection has made her to think this way ......., Athimanthi is confused and sad and she is searching for her handsome lover in every country, every town and wonders whether the ocean took him or the river took him. She roam around the river flow & are crying, whether any one found my lord, "who has high & flourishing strong shoulders" "Attanathi with tight kachai clothing, war anklets,chest with honey-oozing, splendid, perfect flower garland and curly hair, leaving Athimanthi to be confused and sad, asking, “Did you see my lord?”." [Akananuru/அகநானுறு 76:7-10] He with cloth tied around his body, He with war anklets, His chest with flower garlands with honey, perfectly arranged splendid garland, He with curly hair, He is beautiful & handsome man, did you see my lover? She asked each & every one who come across on her way. Maruthi too heard this. She was shocked to hear the descriptions which Athmanthi told coincide with him, Who she rescued, Whom she lost her heart, Who she decided as her man / lover / husband. "May you achieve esteemed fame like Maruthi who is fit for songs. She showed the searching, confused and baffled Athimanthi where her lover was, the splendid and greatly handsome dancer Attan Athi who danced with desire, with lifted, high and strong shoulders, who was seized by Kavery with dark hanging hair when he danced at Kazhar town’s big port with endless festivities where the mud on the drum eyes don’t dry." [Akananuru/அகநானூறு 222] When Athimanthi confused and baffled , asking, “Did you see my Lover, the handsome dancer, with thick black, curled fragrant hair, bull - like elegant walk ...., with the hope that some one may help her ..., Maruthi instantly understood the truth and reluctantly returned him to his Lover, Athimanthi. Her eyes once again moisten with tears & streaming down her Beautiful and glowing rosy cheeks. But it is not hot ,It gives her pleasure & happiness. . After Maruthi shows Athimanthi where her lover is, she dies [suicide], plunging herself in the ocean as she don't have any other love or affection in life. Because of this, She achieved esteemed fame & consider as she is fit for songs by sangam poets. The greatest modern Tamil Poet Bharathidasan wrote a drama called "CHERA THANDAVAM" [சேர தாண்டவம்] based on this love story. In the year, 1960, based on this story a Tamil move "Mannathi Mannan" [மன்னாதி மன்னன்] was produced, acted by M G R. Further more Akananuru 45:- "I am struggling greatly with dreadful affliction. Will I roam around in confusion like Athimanthi?"-,135:- "My beloved, beautiful friend! I am confused like Athimanthi whose thinking was warped, afflicated by this love disease. My dark skin has pallor, my sprout - like beauty ruined, my forehead is pale, and my painting-like eyes are crying." -,236:- "I escaped without being confused like crying Athimanthi who searched in every country, in every town, and wondered whether the ocean took him or the river took him, her lost lover Attanathi with thick black, curled fragrant hair, bull-like elegant walk and flourishing strong shoulders."-, and 396:- "Like the Cauvery river which fell in love with the beautiful dancer Athi and took him away from his wife Athimanthi," are also describe their [Attanathi-Athimanthi] love story. Not only that even Silappathikaram too mentioned this story in Vanchina maalai /வஞ்சின மாலை: 10 to 15,as below: "-- உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று ‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]