Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னை பூபதியின் உண்ணாவிரதம் -பழ.நெடுமாறன்

Featured Replies

நாவலடியில் உள்ள நினைவு மண்டபம் கிழக்கு மாவட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு என மாவட்டங்கள் இருந்த நிலையில், சிங்களக் குடியேற்றத்தினால் மேலும் ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு, சிங்களப் பெயர் வைத்து, “திகாடுமல்லை’ என்ற நாடாளுமன்றத் தொகுதியாக உருப்பெற்றது. இந்த மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழப் பகுதியின் நெற்களஞ்சியமாகும். இம்மாவட்டத்தில் அமைதிப்படை 1988 ஜனவரி 2-இல் பெரியதொரு அளவில் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில் புலிகள் என்று கூறி 2500 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அழைத்துப் போகப்பட்டார்கள். இவர்களில் 800 பேர் காங்கேயன்துறை முகாமில் அடைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளோர் விவரம் அறியக் கிடைக்கவில்லை.

இவர்களில் விடுதலையானவர்கள் வெகு சிலரே. பெரும்பாலோர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேடுதல் வேட்டையில் இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் வயது வித்தியாசமே இல்லையென்பது வேதனை தரும் விஷயமாகும்.

இதன் ஆரம்பம், “மட்டக்களப்பு நகரின் வெள்ளைப்பாலத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த இரு இளம்பெண்களை விரட்டிப் பிடித்து, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதுதான். இதுவே முதல் சம்பவம்’ என்று பழ.நெடுமாறன் தனது நூலில் கூறியுள்ளார்.

இந்தப் பாலியல் பலாத்காரத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று “முறிந்தபனை’ நூல் விரிவாக விளக்கியிருக்கிறது. அதாவது பக்.365-லிருந்து 370 வரையும், 377-லிருந்து 412 வரையும் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என வயதுக்கு வராத மற்றும் பேரிளம் பெண்கள் பேட்டியளித்திருக்கிறார்கள். ரத்தமும், நிணமும், கண்ணீரும், கம்பலையும், கதறலும், பைத்தியமும் பிடித்த நிலையுமான சம்பவங்களின் பதிவுகள் இப்பக்கங்களில் பதியப்பட்டுள்ளன.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களின் நிலை என்ன? “நமது சமூகத்தில் தன்னுடைய சுய விருப்பத்துக்கு எதிராக ஓர் இளம்பெண்ணின் கன்னித்தன்மை அழிக்கப்பட்டு விடுமானால், அவள் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அப்பெண் திருமணமானவளாக இருந்தால், அவள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன.

ஆகையால், பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் தங்கள் துன்பங்களையும், மனக்காயங்களையும் மௌனமாகத் தமக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு, குறித்த சம்பவங்களைப் பற்றிப் புகார் செய்ய முன் வருவதில்லை. “”பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் சமூகக் களங்கத்தையும் ராணுவ அச்சுறுத்தலையும் மீறி, புகார் செய்தபோது அவர்கள் போராளிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்ததால்தான் இவ்வாறு புகார் செய்வதற்கு தைரியம் வந்திருக்கிறது.. என்று கூறி அவர்கள் மேலும் காவலுக்குட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்” – என்று “முறிந்தபனை’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, கடுமையான வார்த்தைகள் சி.புஷ்பராஜாவின், “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் காணப்படுகின்றன. (நாம் மென்மையான விமர்சனத்தை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளோம்.) பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவது பெண் புலிகள் என்று சொல்லப்பட்டும், ஆயுதம் தேடுகிறோம் என்று பெண்களைத் தீண்டுகிற செயலும் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது (பக்.459 – 460).

இச்செயல்கள் மட்டக்களப்பில் அதிகரித்த நிலையில், தாய்மார்கள் கொதித்து எழுந்தனர். இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் வருமாறு:

“திலீபன் வழியைப் பின்பற்றி அன்னையர் முன்னணி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக “உடனடியாகப் போர் நிறுத்தம் மற்றும் புலிகளுடன் பேச்சு வார்த்தை’ மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இக் கோரிக்கை பயனளிக்காது போகவே, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில் எதிரே அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பெண்களும் மாணவிகளும் இதில் பெருமளவில் பங்கேற்றனர்’.

அந்தக் கூட்டம் அதிகரிக்கவே, சிங்களக் காவல்படை, சந்தையில் திரண்டிருந்த பெண்களைச் சுற்றிவளைத்துத் தாக்கத் தொடங்கியது. பெண்களும் குழந்தைகளும் பலத்த காயத்துக்கு ஆளானார்கள். கலைந்தோடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அமைதிப் படையினர் இந்த அடக்குமுறையை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய கட்டுப்படுத்தவில்லை.

இதன் எதிரொலியாக, அன்னையர் முன்னணி – அடையாள உண்ணாவிரதத்தைத் தொடர் உண்ணாவிரதமாக்கியது. இதன் எழுச்சி கண்டதும், பிரதமர் ராஜீவ் காந்தி “அமைதிப்படை தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை; புலிகளுக்கு எதிராகவே பேராடுகிறது’ என்றார். அன்னையர் முன்னணியினரைப் பேச்சு வார்த்தைக்கு அமைதிப்படை அழைத்தது. பிரிகேடியர் சந்தேஷ் கலந்துகொண்டு, “புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் – அதன்பின்னரே பேச்சுவார்த்தை’ என்றார்.

அன்னையர் முன்னணியினரோ, “”எங்கள் நகைகளைக் கொடுத்து, எங்களைக் காக்க, எமது பிள்ளைகள் வாங்கிய ஆயுதங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்” என்று கேட்டனர். பேச்சுவார்த்தை முறிந்தது; பலனில்லை. பிப்ரவரி 10-ஆம் தேதியன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜே.என்.தீட்சித் நேரடியாகப் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு, “புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்’ என்று மீண்டும் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.

மாறாக, அந்தப் பகுதியை ராணுவம் சுற்றிவளைத்தது. ராணுவ முகாம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 12,13,14 நாள்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்கள் பயப்படவில்லை. எழுந்தும் செல்லவில்லை. மேலும் மேலும் கூடினர்.

அன்னையர் முன்னணியின் ஆலோசகர் கிங்ஸ்லி இராசநாயகம் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தையொட்டி, அன்னையர் முன்னணி முன்னிலும் கடுமையான முடிவுகளை எடுத்தது. சாகும்வரை உண்ணாவிரதம் என்கிற முடிவுக்கு வந்தது. யார் முதலில் உண்ணாவிரதம் இருப்பது என்பது குறித்து கடும்போட்டி நிலவியது.

Annai-poopathy.jpg

இரு பிள்ளைகளை சிங்கள அடக்குமுறைக் கொடுமைக்கு பறிகொடுத்த அன்னை பூபதி முன்னுரிமை கோரினார். அன்னம்மா டேவிட்டும் உரிமை கோரினார். சீட்டுக்குலுக்கிப்போட்டதில், அன்னமா டேவிட் தேர்வானார். 1988-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் அன்னம்மா மாமாங்கப் பிள்ளையார் கோயில் முன்பாக சாகும்வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அன்னம்மா டேவிட் இறந்தால், அமைப்பாளர்கள் மீது வழக்குப் போடப்படும் என அமைதிப்படை மிரட்டியது. ஆனாலும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவரின் மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் அரசியல் ஆதாயம் தேட, பலவந்தமாகத் தங்களது தாயாரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தி உள்ளார்கள் என்று எழுதி வாங்கப்பட்டது. இந்தக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி அன்னம்மா டேவிட் தூக்கிச் செல்லப்பட்டார். இதன் பின்னர், அன்னை பூபதி களத்தில் குதித்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் முன்பாக, தனது சுயவிருப்பம் காரணமாக உண்ணாவிரதம் இருப்பதாகவும், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சுயநினைவு இழந்தால் என் குடும்பத்தார் என்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், முக்கியமாகத் தூக்கிச் செல்லக்கூடாது என்றும் மரணசாசனம் எழுதிக்கொடுத்தார்.

19-03-1988 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். மாமாங்கத் திடல் மக்கள் கூட்டத்தால் நிறைந்தது. அமைதிப்படையைக் குறித்து எங்கும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மற்ற இயக்கங்கள் துணைகொண்டு பூபதி அம்மாளைத் தூக்கிச்செல்லும் முயற்சியும், துப்பாக்கியால் சுட்டும், பதற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.

மட்டக்களப்பை நோக்கி உலகப் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். பூபதி அம்மாளின் உண்ணாவிரதத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்பட்டு, இலங்கைத் தமிழாசிரியர் வணசிங்கா, கிறிஸ்தவ பாதிரியார் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ ஆகியோருடன் ஏற்கெனவே கைதாதி விடுதலைபெற்ற கிங்ஸ்லி இராசநாயகாவும் கைது செய்யப்பட்டனர்.

அன்னை பூபதியின் கணவர் கணபதிப் பிள்ளையை அழைத்து மிரட்டிப் பார்த்தார்கள். அவர் பணியவில்லை. லட்சியம் ஒன்றுக்காக அவர் விருப்பப்பட்டு இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று பதிலளித்தார். பூபதி அம்மாள் 19-04-1988 அன்று, உண்ணாவிரதத்தின் 31-ஆம் நாளில் மரணமுற்றார்.

அவரது இறுதி ஊர்வலம் தடைசெய்யப்பட்டது. அவரது உடலை எடுத்துச்செல்ல அமைதிப்படை, சிங்களக் காவல்படை இரண்டும் முயன்றன. பூபதி அம்மாளின் உடல், அன்னையர் முன்னணியால் மறைத்து வைக்கப்பட்டு, திடீரென ஊர்வலம் தொடங்கியது. நாவலடி கடற்கரை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது. ஒரு பக்கம் கடல்; மறுபக்கம் மக்கள் கடல்! “தமிழீழப் பெண்டிரின் எழுச்சியின் வடிவமாக பூபதி அம்மாள் என்றும் திகழ்வார்’ என்று பழ.நெடுமாறன் அந்தக் கட்டுரையை முடித்துள்ளார்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.