Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரைக் குறைக்க முழுமூச்சு! - கந்தரதன்

Featured Replies

சிறீலங்காப் பேரினவாத சிங்கள கொடுங்கோல் ஆட்சியாளர்களால் தமிழர் தாயகப் பூமி சூறையாடப்படுவது தொடர்பாக இப்பகுதியில் பல தடவை குறிப்பிட்டிருந்தோம். தற்போது தமிழ் மக்களை கடுமையாக சிந்தித்து கொதித்தெழும் நிலைமைக்கு ஆளாக்கும் அளவிற்கு சூறையாடால்கள் அங்கு மேலும் மேலும் உச்சம் பெற்றுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களின் எண்ணிக்கையையும் குடிப்பரம்பலையும் நன்கு குறைத்து, அங்கு சிங்களவர்களைக் குடியமர்த்தி இலங்கை பூராகவும் சிங்களவர்களுக்கே உரித்தானதாக ஆக்கும் நடவடிக்கையிலேயே சிங்களம் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றது.

தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழித்து பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கையிலும் ஒரு ஆக்கிரமிப்புக் குழு செயற்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ் அரச உத்தியோகத்தர்களையும் சிங்கள அரசு பயன் படுத்திவருகின்றமை வேதனையான விடயம். இது எங்கள் கைகளை எடுத்தே எமது கண்களைக் குற்றிக் கொள்ளும் நிலைமைக்கு ஒப்பானதாகும்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் 1981ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 7 இலட்சத்து 38ஆயிரத்து 788பேர் வாழ்வதாக கணிப்பிடப்பட்டிருந்தது. ஏனைய மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட சனத்தொகை வளர்ச்சியோடு ஒப்பிட்டால் யாழ் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 12 இலட்சம் பேர் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 6 இலட்சத்து 17 ஆயிரம் பேரே வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சரியாக 50 வீதத்தால் சனத்தொகை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தமை, போரில் கொல்லப்பட்டமை, கொழும்பு நீர்கொழும்பு போன்ற தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்தமை, போரில் இளைஞர்கள் கொல்லப்பட்டமை போன்ற காரணிகளால் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

சிங்களத்தின் திட்டமிட்ட செயற்பாட்டின் மூலமே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். இதற்கு சான்று பகர்வதாக வடபகுதியிலிருந்து தமிழர்களை அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பும் நடவடிக்கைகளின் பின்னணியில் மகிந்தவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவே செயற்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு ஒருவரை அனுப்பிவைப்பதற்காக இவர் 10 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்

கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு கடற்பகுதியிலிருந்தே இவ்வாறு படகுகள் மூலம் இவர் ஆட்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பிவைப்பதாக ஏற்கனவே தமது பிள்ளைகளை அனுப்பிவைத்த பெற்றோர் தெரிவித்திருப்பதாக இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

அடிக்கடி முல்லைத்தீவுப் பகுதிக்குச் செல்லும் நாமல் ராஜபக்சவும் அவரது சகாக்களும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஆட்களைக் கடத்துவது உட்பட பல்வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னி மற்றும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 25 பேர்களைக் கொண்ட குழு ஒன்று முல்லைத்தீவின் கள்ளப்பாடு கடற்கரைப் பகுதியிலிருந்து படகு ஒன்றின் மூலம் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுப்பப்பட்ட ஒவ்வொருவரிடமிருந்தும் முற்பணமாக இரண்டு இலட்சம் ரூபா பெறப்பட்டிருக்கின்றது. அடைக்கலம் கோரிச் செல்பவர்கள் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த பின்னர் மிகுதிப் பணம் கொடுக்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் உறவினர்களே மிகுதிப் பணத்தைக் கொடுப்பதற்கான உறுதிப்பாட்டை வழங்கியிருக்கின்றார்கள். முல்லைத்தீவில் செயற்படும் நாமல் ராஜபக்சவின் கையாட்கள் மிகுதிப் பணத்தை வசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கின்றார்கள்.

இவ்விதம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைப்பதற்காக மற்றொரு குழுவும் தெரிவு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவிலிருந்து சிறிய படகுகளில் ஏற்றப்படும் அடைக்கலம் கோரிச் செல்பவர்கள் பின்னர் கப்பல் ஒன்றுக்கு மாற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றார்கள். நாமல் ராஜபக்ச மகிந்தவின் மகனாக இருப்பதால் அவரது படகில் சென்றால் கடற்படையினரிடமிருந்து தப்பித்துச் செல்லலாம் எனக்கருதி மக்கள் செல்ல முற்படுவதாகவும் சிங்களம் விரித்த வலையில் மாட்டிக்கொள்ளாதவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, அமைச்சர் றிசார்ட் பதியுதீன் உட்பட படையினர் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலரும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் படைக் கட்டுப்பாட்டில் வாழ்வாதார வசதிகள் இன்றித் தவிக்கும் மக்கள் தமது சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்றாவது தமது பிள்ளைகளைப் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்குத் துடிக்கின்றார்கள்.

30 முதல் 40 இலட்சம் ரூபா வரையில் பிரயாண முகவர்கள் கேட்பதால் நாமல் ராஜபக்சவின் கப்பலை நம்பி தமது பிள்ளைகளை அனுப்பி வைப்பதற்கு பெற்றோர் விரும்பவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச, முல்லைத்தீவின் அபிவிருத்திக்காக உழைப்பதாகக் கூறி அங்கு பெருமளவு நேரத்தைச் செலவிடுவதன் பின்னணியில் மேலும் பல மர்மங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிப் பகுதியில் மக்களை மீள் குடியேற்றம் செய்வதில் பின்னடித்து வரும் சிறீலங்கா அரசு, மக்களை வன்னியில் இருந்து விரட்டுவதில் குறியாக இருந்து வருகின்றது. நாமல் ராஜபக்சவின் சூழ்ச்சி அறியாத மக்கள் தமது பணத்தையும் அள்ளிக்கொடுத்து வருகின்றனர். சிலர் தமது காணிகளையும் தாரைவார்த்து வருகின்றனர். குறித்த விடயத்தின் மூலம் சிங்களம் தமிழ் மக்களின் சனத்தொகையை குறைப்பதுடன், தமிழர் சொத்துக்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சூறையாடி வருகின்றனர்.

இதேவேளை, கடந்த யுத்தகாலங்களில், வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு செல்ல

முடியாத நிலை இருந்துள்ளது. இதனால், முள்ளியவளை சந்திப்பகுதியில் வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருந்தது. அந்த ஆலயம் காலப்போக்கில் மக்களின் நம்பிக்கைக்குரிய ஆலயமாக விளங்கி வந்தது. வீதியில் செல்வோர் வருவோர் எல்லாம் நின்று வணங்கிவிட்டு தமது கடமைகளுக்குச் செல்வது வழமை. ஆனால், இன்று அந்த ஆலயத்தை அகற்றும்படி வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் இராணுவத்தினரும் வற்புறுத்தி வந்த நிலையில் சந்தி அம்மன் ஆலயத்தை அகற்றி எதிர்ப்புறமாக உள்ள தனியார் காணியில் அதனை அமைக்க முடிவுசெய்யப்பட்டது.

VATTAPPALAI.jpg

தற்காலிகமாக ஓர் ஆலயம் அமைக்கப்பட்டு வந்த நிலையில், புலம்பெயர் நாடு ஒன்றில் தங்கியிருந்த ஒருவர், அந்தக் காணிக்கு உரிமையாளர் எனக் கூறிக்கொண்டு அங்கு சென்று புதிதாக அமைக்கப்பட்ட ஆலயத்தையும் அகற்றும் படி இராணுவத்தினருடன் சேர்ந்து ஆலய நிர்வாகத்தினரை மிரட்டியுள்ள நிலையில், கடந்த 19.06.2012 அன்று இரவோடு இரவாக இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் விசமிகள் இணைந்து புதிதாக அமைக்கப்பட்ட ஆலயத்தை இடித்து சிதைத்துள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளில் வீதிக்கு வீதி தனியார் காணிகளில் அமைக்கப்படும் புத்த விகாரைகளை இவர்களால் இவ்வாறு தடுத்து நிறுத்த முடியுமா? இதுதான் இன்றைய நிலை.

இந்நிலையில், தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இந்து கிறிஸ்தவ முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு தமிழக அனைத்து மத தலைவர்களும் சென்னையில் ஒன்றுகூடி கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறீலங்காவில் போருக்கு முன்னும் பின்னும் போரின் போதும் ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதோடு அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் முற்றிலும் அழிப்பதில் சிங்கள அரசு வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது. இந்துக்களின் கோவில்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள் முஸ்லிம் மசூதிகள் தொடர்ந்து தகர்க்கப்படுகின்றன.

தேவாலயங்களை தகர்ப்பதோடு கத்தோலிக்க குருமார்களைக்கொலை செய்தும் கடத்தி சென்றும் விடுகின்றனர். மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்புக்கு சிங்கள அரசால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. சிங்கள அரசினர் அடக்கு முறைகளை உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத்தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டிய கடமை தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது.

தமிழர்கள் அங்கு வாழ இனி வாய்ப்பு இல்லை. எல்லா மதத்தினரும் நம்பிக்கை இழக்கும் வகையில் அனைத்து கோவில்களும் தரைமட்டமாக்கப்படுகின்றன. மனித உரிமை அங்கு இல்லை. இது ஒரு பயங்கரவாத நிகழ்ச்சியாகும். மதத்திற்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் கலாசாரத்திற்கு எதிராகவும் நடக்கின்றன. இந்த பயங்கரவாதத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இதற்கு குரல் கொடுக்க ஒன்று சேர வேண்டும். ரோமில் உள்ள போப் ஆண்டவருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறோம்.

பன்னாட்டுச்சபையும் உடனடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாக அவர்கள் அங்கு கருத்துவெளியிட்டுள்ளார்கள். இதேவேளை மன்னார் மாவட்டத்திலும் சிங்கள இனவாத அரச படைகள், மக்களைத் துன்புறுத்தி நிலம் அபகரிக்கும் படலம் தொடர்வதாக மன்னார் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மன்னார் பேசாலை பகுதியில் அமைந்துள்ள பற்றிமா வீட்டுத்திட்டத்தில் மீள்குடியேறியிருந்த குடும்பங்களை கடந்த சனிக்கிழமை இரவு அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளது. சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை நடைபயணத்தில் கடந்து வந்த இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பேசாலை தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கடற்படையினரிடம் பதிந்து அனுமதி பெற்றபிறகுதான் குறித்த பகுதியில் இருக்கலாம் என்று கடற்படையினர் அச்சுறுத்தியுள்ளார்கள்.

பற்றிமா வீட்டுத்திட்டப்பகுதியில் இருந்து யுத்த மோதல்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருந்த 50 குடும்பங்களில் 25 குடும்பங்கள் கடந்த வாரமே அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தன. காடடர்ந்து பாழடைந்து கிடந்த அந்த வீட்டுத்திட்டப் பகுதியை கடந்த 2 மாதங்களாக அங்கு சென்று வந்த இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மன்னார் பிரதேச செயலாளரின் மீள்குடியேற்ற நடவடிக்கையின் ஊடாகப் படிப்படியாகத் தாங்களே துப்பரவு செய்த பின்னர் அங்கு சென்று மீள்குடியேறியிருந்தனர்.

அந்தப் பகுதியில் முகாம் அமைத்து நிலைகொண்டிருக்கும் கடற்படையினர் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளை நன்கு அவதானித்து, துப்புரவுப் பணிகள் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு கடந்த சனிக்கிழமை இரவு அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 25 குடும்பங்களைச் சேர்ந்த மக்களையும் திடீரென விரட்டி அடித்துள்ளனர். இந்த மக்கள் தற்போது, பேசாலை தேவாலயத்தில் தங்கியுள்ளனர். மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை உடனடியாக அங்கு சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மன்னாரில் உள்ள கடற்படை அதிகாரிகளிடம் அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது மேலிடத்தின் உத்தரவுக்கமைய தாங்கள் கடற்கரைப் பகுதியில் 5 கிலோ மீற்றர் தூரமுள்ள பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருப்பதாகவும், இந்தியாவில் இருந்து சந்தேகத்திற்குரிய ஒரு குழுவினர் இங்கு வந்துள்ளது தொடர்பில் தகவல் கிடைத்திருப்பதனாலுமே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருப்பதாகக் கடற்படையினர் வாய்க்குவந்த படி தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தின் சன்னார் பகுதியில் படையினருக்கான பயிற்சி தளமொன்றை அமைப்பதற்கு சுமார் 1500 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது. அந்தக் காணியை அளவிடும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியிருப்பதாக மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன. மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு பெரிய மடு வீதியிலிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரமளவில் குறித்த நிலம் அமைந்துள்ளது.

மேட்டு நிலப்பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தக் கூடிய இந்நிலப்பகுதியை படை பயன்பாட்டிற்கு ஒதுக்குவது உள்நோக்கம் கொண்டதென அவதானிகள் கூறுகின்றனர். குறிப்பாக சன்னார் குளத்தை அண்மித்ததாக உள்ள மேட்டு நிலப்பரப்பே இவ்வாறு சுவீகரிக்கப்படுகின்றது. கையகப்படுத்தப்படும் காணிகளுக்கான எல்லையிடும் நடவடிக்கைகளும் மறுபுறத்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே மாதிரிக் குடியேற்ற கிராமங்கள் சிலவற்றை இதே சூழலில் அமைப்பதற்கு காடழிக்கும் நடவடிக்கைகள் புல்டோசர்கள் சகிதம் சுத்திகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன. எனினும் குறித்த குடியிருப்புத் திட்டம் உள்ளூர் மக்களுக்கானதல்ல எனவும் வெளியிலிருந்து அழைத்து வரப் போவதாக கூறப்படும் சிங்களக் காடைக் கும்பல்களுக்கே வழங்கப்படப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இப்பகுதிகளில் பூர்வீகமாக குடியமர்த்தப்பட்டிருந்த குடும்பங்களுக்கு அதிகாரிகளது அசட்டையீனங் காரணமாக காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இதனால் தமக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணிகளை உரிமை கோர முடியாதநிலை தமிழ்க் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மன்னார் மடு பிரதேச செயலர் பிரிவினுள் அடங்கும் குஞ்சுக்குளம் பிரதேசத்தின் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களை சிங்கள கடற்படையினர் ஆக்கிரமித்து அங்கு தமது அறிவிப்பு பலகையை இட்டுள்ளனர். இன்று தமிழ் மக்களுக்கென இருக்கும் ஒரு சுற்றுலா நிலையமாக மன்னார் குஞ்சுக்குளம் மாறியுள்ள நிலையில் அப்பகுதியிலும் கடற்படையினர் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இதன் மூலமாக மடுச்சந்திக்கு அடுத்தபடியாக ஒரு சிங்கள கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் ஆக்கிரமிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. குஞ்சுக்குளம் தொங்குபாலத்துக்கு பின்புறமாக அமைந்துள்ள காட்டை அண்டிய பெரும் தொகை நிலம் உட்பிரவேசிக்க முடியாதவாறு வேலியிடப்பட்டு அறிவிப்பு பலைகைகள் வைக்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே. பொதுமக்களிற்குச் சொந்தமான இந்தப் பகுதியை கடற்படையினர் உரிமை கொண்டாடுவது தொடர்பாக பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாத நிலையிலும் தெரிந்தும் எதுவும் வெளியே தெரிவிக்க முடியாத நிலையிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் சத்தமின்றி தொடரும் நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் மௌனம் காக்கப்படுகின்றது. இதற்கு எதிராக குரல் கொடுத்து வந்த மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை தொடர்ச்சியாக பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்.

இதேவேளை, சிங்கள இராணுவத்தினால் தமிழரின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டம் ஒன்று திட்டமிட்டபடி திருமுறிகண்டி பகுதியில் இன்று 26ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும் எனவும் - எந்த நெருக்கடிகளையும் பொருட்படுத்தாது இப் போராட்டத்தில் மக்கள் அனைவரும் வருகை தந்து தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், படையினரின் காணி சுவீகரிப்புக்கு எதிராக முறிகண்டியில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பாகப் பொதுமக்களின் வீடு வீடாகச் சென்று இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதுடன் அவர்களின் விவரங்களையும் திரட்டுவதாகத் தெரியவருகிறது. இதனால் தாம் அச்சமடைந்துள்ளதாக கிளிநொச்சிப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளே நாம் ஒருமித்து செயற்படவேண்டிய நேரம் இது. எல்லாம் முடிந்து விட்டது என வீட்டில் உறங்கிக் கிடந்து வரலாற்றுத் துரோகத்திற்குக் காரணமாக இருக்கலாமா? தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் சிறிலங்கா இனவாத அரசின் நில அபகரிப்பைக் கண்டித்தும் பிரான்சிலும் ஏனைய நாடுகளிலும் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்களுக்கு அகதி உரிமை வழங்கக் கோரியும் பிரான்சின் புதிய பாராளுமன்ற முதல் அமர்வு நாளான இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக ஒருமித்துக் குரல் கொடுப்போம் வாரீர்! இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்.

(சூறையாடல் தொடரும்)

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.