Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா? : ஆர்.கே

Featured Replies

PARAMAKUDI.jpgதாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் பன்மடங்கு பல்கிப் பெருகி வருகின்றன. இதில் மாறுபட்ட கருத்தோ இருவேறு கருத்தோ கிடையாது. அத்தாக்குதல்களைத் தொடுப்பவர்களின் தரப்பை பல்வேறு வகைகளிலும் அளவுகளிலும் நியாயப்படுத்துபவர்களும் கூட, இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இணையாக அரசு எந்திரத்தின் ஆயுதப் படையாகிய போலீசும் இந்தக் கிரிமினல் குற்றச் செயல்களை நடத்துகின்றன.

இத்தாக்குதல்கள் எல்லாம் இப்போது புதுப்புது, ஆபாசமான, வக்கிரமான, குரூரமான பயங்கரவாத வடிவங்களை எடுக்கின்றன. தாழ்த்தப்பட்ட பெண்களானால் நிர்வாணப்படுத்தித் தெருத்தெருவாக இழுத்துச் செல்வது; பலர் கூடி நிற்க கும்பலாகத் திரண்டு பாலியல் வன்புணர்ச்சி கொள்வது; ஆண்களானால் மலம் திண்ண வைப்பது, மூத்திரம் குடிக்க வைப்பது என்று நடக்கிறது. சிறுவர் சிறுமிகளைப் படுகொலை செய்வதோ, கால்களைப் பிடித்து பாறைகளில் மோதி அடித்துக் கொன்ற காட்டுமிராண்டி கால இனக்குழுச் சண்டைகளின் வெறிச் செயலை நினைவுபடுத்துகின்றன.

முற்போக்கு எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; மனித உணர்வு கொண்ட நாகரிக காலத்து மனிதர்கள் எவரையும், அதிர்ச்சியும் ஆத்திரமும் பொங்கச் செய்வன இந்த வன்கொடுமைச் செய்திகள். ஆனால், வன்கொடுமைக் குற்றச் செயல்களுக்கு போலீசும், அதிகார வர்க்கமும் காட்டும் பாராமுகமும், குற்றவாளிகளைத் தண்டனையின்றி விடுவிப்பதற்கு உயர்நீதி, உச்சநீதிமன்ற நீதியரசர்கள் கூறும் விளக்கங்களும் மேலும் அதிர்ச்சியும் ஆத்திரமும் பொங்கச் செய்வனவாக உள்ளன. சாதிவெறியர்களால் வெட்டப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் காயங்களில் அமிலத்தை ஊற்றுவதாக உள்ளன.

ஆதிக்க சாதிவெறியர்கள் கலப்பு மண இணையர்களைப் படுகொலை செய்யும் கொடுங்குற்றங்களுக்கு “கௌரவக் கொலைகள்” என்று நீதியரசர்கள் பட்டஞ் சூட்டிக் கொண்டாடும் வெட்கக்கேடுகள் இந்த நாட்டில்தான் நடக்கின்றன. இவ்வாறான போக்கால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கிரிமினல் குற்றச் செயல்களாகக் கருதி சாதி வெறியர்கள் அஞ்சி இரகசியமாகச் செய்வதில்லை. சமூக மதிப்புக்குரிய வீரதீரச் செயல்களாகவும், தாழ்த்தப்பட்ட சமூகம் முழுவதையும் அஞ்சி நடுநடுங்கச் செய்யும் பயங்கரவாத நடவடிக்கையாகவும் கருதி நடத்துகின்றனர்.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, பொருளாதாரத் துறையிலும் வேறு பிற துறைகளிலும் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக ஆட்சியாளர்கள் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் கூறும் வளர்ச்சி முன்னேற்றத்துக்கு ஏற்ப தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நேர் விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. சாதிவெறிச் சக்திகளும் ஆதிக்க பலம் பெற்று வருகின்றன. பொதுவில் பழங்குடியினர், பெண்கள், மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகளும் அளவிலும் தன்மையிலும் பெருகி வந்தாலும், குறிப்பாக, சாதிய அடுக்குகளின் படிநிலையில் அடித்தட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள்தாம் தமக்கு மேலிருக்கும் அனைத்துச் சாதிகளாலும் வன்கொடுமை ஆதிக்கத்துக்குப் பலியாகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து மதுரையில் உள்ள ‘எவிடன்ஸ்’ (சாட்சியம்) என்ற தன்னார்வக் குழு நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், “தமிழ்த் தேசத்தில் சேரித் தமிழர்களின் நிலை!” என்ற கட்டுரையை டிசம்பர், 2011 “தலித் முரசு” இதழ் வெளியிட்டிருக்கிறது. அதில் காணக் கிடைக்கும் ஆதாரங்களின்படி, 2008ஆம் ஆண்டு 34 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1545 வன்கொடுமைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்துள்ளன. 2009ஆம் ஆண்டு 27 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1264 வன்கொடுமைகள் நடந்துள்ளன. 2010ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாதங்கள் 22 படுகொலைகளையும் 24 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1633 வன்கொடுமைகளைக் கண்டுள்ளன. 2011ஆம் ஆண்டு 44 படுகொலைகளும் 20 பாலியல் வல்லுறவும், 12 பாலியல் வல்லுறவு முயற்சிகளும் உள்ளடக்கிய 336 வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 44 பேரில் 4 வயது, 6 வயது, 11 வயது, 16 வயது சிறுமிகள் உட்பட 8 பேர் சிறுவர் சிறுமியர். இந்த ஆண்டு முதல் மூன்று வாரங்களில் மட்டும் எட்டு தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

“தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதியரீதியான வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்த அளவே பதிவு செய்யப்பட்டாலும் தண்டனை வெறும் 5 சதவிகித@ம உள்ளன. குறிப்பாக, கொலை (3.9%), பாலியல் வன்கொடுமை (5.8%) உள்ளிட்ட கொடுங் குற்றங்களில் ஈடுபடுகிற குற்றவாளிகளில் 95 சதவிகிதத்தினர் தப்பித்துக் கொள்கின்றனர்.

“இத்தகைய துயரப் போக்கிற்கு காவல் துறையும், நீதித்துறையும் முக்கியப் பொறுப்பு என்றாலும் அத்துறைகளை சரியாக இயக்க வைப்பதற்கான அரசியல் அழுத்தம் அண்மைக் காலங்களில் பெரிய அளவில் இல்லை.

“தலித் அரசியல் கட்சிகள், இயக்கங்களாக இருக்கின்ற போது இத்தகைய படுகொலைக்கு எதிராக வீறுகொண்டு ஜனநாயகப் போராட்டங்களை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தி வந்தனர். ஆனால், தற்போது இதுபோன்ற எதிர்ப்பு போராட்டங்களோ, குறைந்தபட்சம் இப்படுகொலைகளைக் கண்டித்து அரசுக்குக் கொடுக்கக்கூடிய அழுத்தங்களோ முற்றிலும் இல்லாமல் போனது கெடுவாய்ப்பானது. தலித் படுகொலைகளை தலித் அல்லாத அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என்கிற ஜனநாயகப் பண்பு இருந்தாலும், தலித் தலைமையிலான அரசியல் கட்சிகளுக்குக் கூடுதல் கடமையும் பொறுப்பும் உள்ளது. ஆனால், இன்று அரசு நிறுவனங்களோடு சமரசம் செய்து கொண்டு, விலை போய்க் கொண்டு அல்லது இத்தகைய படுகொலைகளைக் கண்டிக்கிற செயல்பாட்டில் ஒருவிதமான சலிப்போடு தலித் அரசியல் கட்சிகள் உள்ளன. இந்நிலையில் இதுபோன்ற படுகொலைகளைக் கண்டித்து ஆங்காங்கே பாதிக்கப்பட்ட மக்களும் மக்கள் இயக்கங்களும் வலிமையான அளவில் குரல் கொடுத்தாலும் அத்தகைய போராட்டங்கள் வெளியே தெரியாமல் போய் விடுகின்றன.” (தலித் முரசு, டிசம்பர் 2011)

இவையெல்லாம் நம்முடைய சொந்த ஆய்வு முடிவுகள் அல்ல. தலித் அரசியல் கட்சிகள் மீதான கருத்துக்களும்‘எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.கதிர் எழுதி, “தலித் முரசு” ஏட்டில் வெளிவந்திருப்பவை. இதே கருத்தை “புதிய ஜனநாயகம்” ஏட்டில் நாம் எழுதியிருந்தால், “தலித் அரசியல் தலைவர்கள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் நம்மீது பாய்ந்து குதறியிருப்பார்கள்.

1989ஆம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு 22 ஆண்டுகள் கடந்த பின்னரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியர்களின் வன்கொடுமைத் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவோ அல்லது குறைந்ததாகவோ சொல்ல முடியாது. மிகக் கடுமையான இச்சட்டத்தால்கூடத் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிருக்குப் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

அதேசமயம், வன்கொடுமைத் தாக்குதல்களைவிட மோசமாக தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கி வைக்கக்கூடிய புதிய சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் ஆதிக்க சாதிகள் இப்போது மேற்கொண்டு வருகின்றன. அதாவது, தீண்டாமைக்குப் புதிய வடிவம் கொடுக்கப்படுகிறது.

• மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் சேரிக்கும் ஊருக்கும் இடையில் எழுப்பப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர் நீண்ட “போராட்டம்” முயற்சிக்குப் பிறகு அகற்றப்பட்ட போதும் அங்கு இன்னமும் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் “இணைந்து வாழ முடியாது” என்று அடம் பிடிக்கின்றனர். அருகிலுள்ள மலைமீது குடிபுகுந்து ஊர்ப் “புறக்கணிப்பு” என்ற புதிய முறையில் தீண்டாமையைத் தொடர்ந்தனர். அதேமுறையில் இப்போது ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள நகப்பாளையம் கிராமத்தில் ஒரு தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது.

• திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இரு குழந்தைகளை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் சேர்த்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிக்க சாதியினர் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திக்கொண்டனர். இதனால் அந்தப் பள்ளியையே மூடிவிடும்படி நிர்ப்பந்தித்தனர்.

• விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி பஞ்சாயத்து ஒன்றியப் பள்ளியில் மதிய உணவு சமைப்பதற்கு இரு தாழ்த்தப்பட்ட பெண்கள் நியமிக்கப்பட்டனர். இதை அறிந்த அவ்வூர் கம்பளத்து நாயக்கர் சாதியினர் தமது 50 சிறுவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டனர். பிற சாதியினர் சமைத்த உணவை உண்ணுவதில்லை என்பது தமது சாதிவழக்கம் என்பதால் (உணவு விடுதிகளில் என்ன செய்வார்களோ; கோவில் பிரசாதத்தைக்கூட உண்ணமாட்டார்களோ!) இப்படிச் செய்கிறோம் என்று கம்பளத்து நாயக்கர்கள் செய்த முறையீட்டின் பேரில், அத்தாழ்த்தப்பட்ட பணியாளர்களை இடமாற்றம் செய்துள்ளார் வட்டார வளர்ச்சி அதிகாரி. “இது அந்த சமூகத்தின் தனிச்சிறப்பான வழக்கம்தான்” என்று நியாயப்படுத்தும் மாவட்ட ஆட்சியர், அடுத்தமுறை கம்பளத்து நாயக்கர் சாதியினரையே பணியமர்த்தப் போவதாக வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்.

* சமூகத்தின் பொதுவான கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை ஏற்கும்படி நிர்பந்திக்கப்படும் கிராமங்களில், ஆதிக்க சாதியினர் தமக்கெனத் தனியார் கோயில்களைக் கட்டிக் கொள்வதும், அக்கோவில்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நுழைவதற்குத் தடை விதிப்பதும் இப்போது புதுப் போக்காகத் தலையெடுத்துள்ளது. இந்த வகையான கோவில்கள் தனியாருக்குச் சொந்தமானவை என்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டுரிமையை அரசு உட்பட யாரும் கோரமுடியாது என்றும் ஆதிக்க சாதியினர் வாதிடுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுடனான காதல்மண உறவை மறுப்பதற்காகவும், சாதியத்தின் இறுக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் சாதிவெறிக் “கௌரவக் கொலைகள்” அப்பட்டமான பயங்கரவாதவன்கொடுமைப் படுகொலைகள் என்றால், மேற்கண்டவை மாதிரியான ஆதிக்க சாதிகளின் நடவடிக்கைகள் தாழ்த்தப்பட்ட மக்களைச் சமூக விலக்கம் செய்யும் வக்கிரமான, நரித்தனமான தீண்டாமைக் குற்றங்கள் ஆகும்.

• • •

தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார “அவலநிலை” கண்டு, கிறித்தவப் பாதிரியார்கள் கண்டுபிடித்தத் தீர்வுதான் Dalit.jpgஇலவசக் கல்வி வாய்ப்பு. கிறித்தவ மதத்தைப் பரப்பவும் மதமாற்றம் செய்யவும் ஒரு வாய்ப்பாக அது அமைந்தது. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்கள் கண்டுபிடித்த இன்னொரு தீர்வுதான் இடஒதுக்கீடு. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்கள் புகுத்திய இந்த இடஒதுக்கீடு கொள்கையைத்தான் “சமூக நீதிக் கொள்கை” என்ற பெயரில் “பார்ப்பனரல்லாத இயக்கம்” நிறுவிய வேளாள, வேளம, நாயர், வொக்கலிகா, லிங்காயத்து, நாயுடு, ரெட்டி ஆகிய சாதி இந்துத் தலைவர்கள் கையிலெடுத்துக் கொண்டார்கள். (ஆதாரம்: 1945 சேலம் திராவிடர் கழக நிறுவன மாநாட்டு அண்ணா உரை. பார்த்தசாரதி எழுதிய தி.மு.க.வின் வரலாறு) பின்னாளில் இதையே “சமூகப் புரட்சிக் கொள்கை”யாக பெரியாரியவாதிகளும் அம்பேத்கரியவாதிகளும் வரித்துக் கொண்டார்கள்.

சமூக நீதி, சமூகப் புரட்சிக் கொள்கையை மேலும் விரிவு படுத்துவது ஆழப்படுத்துவது என்கிற பெயரில் புகுத்தப்பட்டவைதாம் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் பரிந்துரை அமலாக்கம், உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் இடஒதுக்கீடுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், கல்வி உரிமையை அடிப்படையாக்கும் சட்டம் ஆகியன. இவற்றில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அமலாக்கப்படும் இலட்சணத்தை இதுவரைப் பார்த்தோம்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்படும் வரை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஓரளவு இருந்தது. அதிலும் உயர் கல்வியிலும், ஆசிரியர் மற்றும் நிர்வாகத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் தொடர்ந்து வஞ்சனை செய்யப்படுவதை கிருஷ்ணசாமியும் திருமாவளவனும் பலமுறை சுட்டிக் காட்டி வெள்ளை அறிக்கை கோரி வருகின்றனர். ஆனால், அரசுகள் எதுவானாலும் செவி சாய்ப்பதே கிடையாது.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகோ கல்வித்துறையில் அரசின் பொறுப்புகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. எங்கும் மேட்டுக்குடி ஆதிக்க சாதிப் பிள்ளைகள் மட்டு@ம படிக்கக் கூடிய ஆங்கில வழிப் பொதுப்பள்ளிகள் (மெட்ரிக்) அதையும் விட “உயர்தரம்”, “உலகத்தரத்தில்” சீமான்வீட்டுப் பிள்ளைகள் தங்கிப் படிக்கும் பள்ளிகள் பல்கிப் பெருகி வருகின்றன. கல்விக்கான அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏழை மாணவர்க்கு 25 சதவீத இடஒதுக்கீடு என்பதும், தனியார் பொதுத்துறை கூட்டுப் பங்கேற்பு என்ற பெயரிலும் புதிய மனுதர்ம அடிப்படையில் நவீன தீண்டாமை பின்பற்றப்படுகிறது. பழைய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டு பாழடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அடிப்படைக் கட்டுமான வசதிகளும் இல்லை; தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் இல்லை. அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இதே நிலையில்தான் உள்ளன. இந்த வகைப் பள்ளிகள் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் தனியார்துறைத் தொழில் மற்றும் நிர்வாகக் கல்வியிலும் வேலைகளிலும் பணிகளிலும் புறக்கணிக்கப்பட்டு, ஒருவகைத் தீண்டாமைக் கொள்கை பின்பற்றப்படுகிறது.

பொறியியல், மருத்துவம், நிர்வாகம், சட்டம் போன்ற தொழிற்சார் கல்வி நிறுவனங்கள், மிகப் பெரும்பாலும் சுயநிதித் தனியார் துறையில் புற்றீசல்களாகப் பல்கிப் பெருகி வருகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் அரசுக்கான இட ஒதுக்கீடுகள் இருப்பினும், சாமானிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில முடியாதவாறு கட்டாயக் கட்டணம் கடுமையாக வசூலிக்கப்படுகிறது. பொதுத்துறைத் தொழில்கள் தனியார்மயமாக்கப்படுவதோடு, உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்ப@ரட் தரகு முதலாளிகளின் ஏகபோகமாக தொழிற்துறை மாறிவிட்டது. ஆகவே, தாழ்த்தப்பட்டோருக்குத் தொழில்துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது வெறுங்கனவாகி வருகிறது. மேற்படிக் கல்வியிலும் பணிகளிலும் தனிநபர் என்கிற முறையில் ஒரு சிலரின் “சாதனைகள்” முன்னேற்றங்கள் மட்டும் எடுத்துக்காட்டுகளாக செய்தி ஊடகங்களில் பிரபலப்படுத்தப்படுகின்றன. மற்றபடி ஒரு சமூகம் என்கிற முறையில் பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலனடைந்து வருவதாகக் கூற முடியாது. ஆக, தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி என்பது கானல் நீராக உள்ளதென்பதே உண்மையாகும்.

ஆனால், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற்றதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறிவிட்டதாகவும், சமூக நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாகவும், அதை அரசியல் ரீதியில் விரிவுபடுத்த வேண்டியதுதான் குறைபாடாக நிலவுவதாகவும் கற்பிக்கும் ஆளும் கட்சிகள் ஜனநாயகத்தைப் பரவலாக்குவது, சமூக நீதியை உறுதி செய்வது என்ற பெயரில் உள்ளூராட்சி வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு செய்து அதிகாரப் பகிர்வு கொண்டு வந்தன. உள்ளூராட்சிகளில் அதிகாரப் பகிர்வு, இடஒதுக்கீடு என்ற ஏற்பாட்டைக் கேலிக்கூத்தாக்கி விடும் வகையில் ஆதிக்க சாதியினர் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். முக்குலத்தோரின் கடும் எதிர்ப்பையும் மீறி உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மேலவளவு முருகேசன் படுகொலை நாடு தழுவிய அளவில் தெரிந்த விவகாரம். கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தவிடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்து நிறுத்தியிருந்ததும் அனைவரும் அறிந்ததே. ஆனால், தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளூராட்சித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தாழ்த்தப்பட்ட மக்கள் “ஆட்சி” நடத்த முடியாமல் முடக்கி வைத்து அவமானத்துக்குள்ளாக்கும் நிகழ்வுகள் பலவும் நடந்து வருகின்றன.

நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளி தெய்வானை போன்றவர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல் வன்முறைகள் தொடர்கதைகளாக உள்ளன. விருதுநகர் மாவட்டம் கொட்டக்கச்சியேந்தல் கிராம ஊராட்சித் தலைவர் கருப்பன் கொடுத்துள்ள புகாரின்படி, அவர் தொடர்ந்து சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்படுகிறார்; மன்றக் கூட்டங்களின்போது தரையில் உட்கார வைக்கப்படுகிறார்; தொகை நிரப்பப்படாத காசோலைகளில் கையொப்பமிடும்படி நிர்பந்திக்கப்படுகிறார்; மன்ற ஆவணங்கள், கணக்கேடுகள் காட்டப்படுவதில்லை; ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவனும் அலுவலக எழுத்தருமே தலைவரை ஒடுக்கி வைக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருவடத்தெரு ஊராட்சி மன்றத் தலைவர் அ.கலைமணியை குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்துத் தாக்கியுள்ளனர், ஊராட்சி மன்ற ஆதிக்கசாதித் துணைத்தலைவரின் மகனும் 20 ரௌடிகளும். இவ்வாறு செய்வதென்று கள்ளர் சாதியினர் திட்டமிட்டிருந்ததை அறிந்து போலீசிடம் முன்கூட்டியே கலைமணி புகார் அளித்தும் பாதுகாப்புக் கோரியதும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

ஊராட்சிமன்றத் தலைவர்கள் கருப்பனுக்கும் கலைமணிக்கும் கிருஷ்ணவேணி மற்றும் வள்ளி தெய்வானைக்கும் நேர்ந்துள்ளது தனிப்பட்ட ஒரு சில சம்பவங்கள் அல்ல. தமிழ்நாடு மகளிர் பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு புதுச்சேரி தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்பு ஆகியவை சார்பாக உண்மை அறியும் குழு கடந்த இரண்டாண்டுகள் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது ஆதிக்கச் சாதியினர் தொடுக்கும் வன்கொடுமைத் தாக்குதல்களைப் பற்றிப் பல உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. பல கிராமங்களில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த துணைத் தலைவர்கள், எழுத்தர்கள், மக்கள் நலப் பணியாளர்களே அதிகாரத்தைப் பறித்துக் கொள்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்கென்று அரசு ஒதுக்கும் நிதியை அம்மக்களுக்கென்று தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களேகூட பயன்படுத்த முடியாத நிலைதான் உள்ளது. அவர்கள் கொடுக்கும் புகார்களைப் பதிவுகூட செய்ய மறுக்கும் அதிகாரவர்க்கமும் போலீசும் நீதித்துறையும் ஆதிக்க சாதியினரின் முழுக் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இவையே ஒடுக்குமுறை வன்கொடுமை அமைப்புகளாகவும் உள்ளன.

இடஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி என்ற ஏற்பாடு கொண்டு வரப்பட்டு ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலாகி விட்டது. காந்தி அம்பேத்கருக்கிடையே ஏற்பட்ட பூனே ஒப்பந்தம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ ஜனநாயக உரிமையைக் கொண்டு வந்து முக்கால் நூற்றாண்டு கால சாதனையாகப் போற்றப்படுகிறது. உள்ளூராட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மகளிருக்கான இடஒதுக்கீடு செய்யும் 73வது அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு முப்பதாண்டுகளுக்கும் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 22 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இத்தனை ஆண்டுகளில் இத்தகைய சட்டங்களும், அவற்றின் அமலாக்கங்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், விளைவுகள், முன்னேற்றங்கள் பற்றிய ஆய்வும் தொகுப்பும் செய்யப்படவே இல்லை.

அரசும், அரசு சார்பு அமைப்புகளும் இதைச் செய்யாததில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்த வகையில் அவற்றின் தோல்வியையும் செயலற்ற தன்மையையும் சார்புத் தன்மையையும் அத்தகைய ஆய்வும், தொகுப்பும் சொல்லிவிடும். தாழ்த்தப்பட்டோருக்கான கட்சிகள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும்கூட இதைச் செய்வதில்லை. தனிப்பட்ட சம்பவங்களாக மட்டுமே இவை கையாளுகின்றன. தமது கையாலாகாத்தனம் அப்பட்டமாகி விடும் என்பதாலேயே தொகுப்பான ஆய்வுகளுக்கும் முடிவுகளுக்கும் இவை வர மறுக்கின்றன. முற்போக்கு சிந்தனையாளர்களாகக் காட்டிக் கொள்ளும் பின்நவீனத்துவ, பின் மார்க்சிய அறிஞர்கள், இவை பற்றிய தொகுப்பான ஆய்வுகளுக்கும் முடிவுகளுக்கும் வருவதே தவறான அணுகுமுறை என்றும், பெருங்கதையாடல் என்றும் ஒதுக்கிவிட்டுத் தனித்தனி நிகழ்வுகளாக மட்டுமே பார்த்து, மனித உரிமை மீறல்களாகக் கருதி, உண்மை அறியும் குழுக்களை அமைத்துக் கொண்டுபோய் ‘கள’ நிலைமைகளை ஆய்வு செய்து அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தாலே போதும் என்றிருக்கின்றனர்.

இதுவரை இத்தனை ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு மேற்கொண்ட சமூகநீதிக்கான இடஒதுக்கீடுகள் போன்ற ஏற்பாடுகளும், சீர்திருத்தச் சட்டங்களும், வளர்ச்சிமுன்னேற்றத்துக்கான திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இம்மக்கள் வாழ்வில், சமூகத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டன என்று யாராலும் துணிந்து கூற முடியாது. மாறாக, இத்தகைய முயற்சிகள் மூலம் சாதிய சமத்துவத்தை ஒருக்காலும் ஏற்படுத்தி விட முடியாது என்பதையே நாட்டில் நாளும் பெருகிவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல்கள் திரும்பத் திரும்பக் காட்டுகின்றன.

புகார்களும், முறையீடுகளும் முன்வைக்கப்படும் இடங்களில், விவகாரங்களில் மட்டுமே பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றில் தலையிட்டுச் சரிசெய்து விட்டால் போதுமானது என்றும் அரசு மாய்மாலம் போடுகிறது. மற்ற இடங்களில், விவகாரங்களில் பிரச்சினைகள் ஏதும் இல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் சீரான முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் என்றதொரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.

“தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும். சமூக நீதிக்கான இடஒதுக்கீடுகளை மேலும் உறுதியாக்க வேண்டும், இம்மக்களின் நலன்களுக்கான திட்டங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் அதிகமாக்க வேண்டும்” என்பதற்கு மேல் செல்வதில்லை. “தலித்” அமைப்புகளின் முறையீடுகள், புகார்கள் எல்லாம் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோரின் பாராமுகச் செயல்பாடுகள் மீது குறை காண்பதோடு நின்று விடுகின்றன. ஆனால், இத்தகைய கோரிக்கைகள், முறையீடுகள், புகார்கள் எல்லாமும் ஒட்டு மொத்த அரசு அமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாகவே உள்ளன.

“தலித்” அமைப்புகளுக்கு மட்டுமல்ல; அவற்றின் பேராசானாக கருதப்படும் அம்பேத்கருக்கே கூட அரசு மூலமாக மேற்கொள்ளப்படும் சட்டபூர்வ, அதிகாரபூர்வ நடவடிக்கைகளைக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக, அரசியல் ,பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டு விட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அம்பேத்கரியவாதிகள் ஒவ்வொரு விவகாரத்திலும் திரும்பத் திரும்பக் கூறும் குற்றச்சாட்டு, “தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கும் பாதுகாப்புக்கும், உரிமைக்கும் பெரும் இடையூறாகவும் கேடு விளைவிப்பதாகவும் இருப்பது ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அதிகார வர்க்கத்தினரும் காவல்துறையினரும்” என்பதுதான்.

ஆங்கிலேயக் காலனியவாதிகளால் கட்டியெழுப்பப் பட்டு, ஆதிக்க சாதிகள் மற்றும் தரகு முதலாளிகள் அடங்கிய ஆளும் வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகளான காந்திநேரு காங்கிரசினால் வரித்துக் கொள்ளப்பட்ட இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது, சாதிய சமுதாய அமைப்பு குலைந்து போகாமல் காப்பதற்கானதுதான். இதன் அங்கங்களான அதிகார வர்க்கம், இராணுவம், போலீசு, நீதிமன்றங்கள் எல்லாம் சாதிய சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக உள்ளவைதாம்.

இந்த நோக்கத்துக்காகவே போதனையும் பயிற்சியும் அளிக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்படும் மேற்படி அரசு அமைப்பினரே ஒரு தனிவகை சாதியினர். சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ இந்தத் தனிவகை சாதிய அமைப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை, தனி ஒரு சாதியினை தாக்கித் தகர்த்து விட்டு, தமக்கென ஒரு புதிய அரசுக் கட்டுமானத்தை நிறுவிக் கொள்வதுதான் அரசியல் புரட்சி; இவ்வாறான அரசியல் புரட்சி ஒன்றின்றி சமூகப் புரட்சி சாத்தியமே கிடையாது. பழைய கட்டுமான அமைப்பை அப்படியே தக்க வைத்துக் கொண்டு உழைக்கும் மக்கள் ஒடுக்கப்படும் சாதியினர் தமது நலன்களுக்கான சமத்துவம், ஜனநாயகம், சமூக நீதியை நிறுவுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

இதுதான் புரட்சிகரக் கண்ணோட்டம். ஆனால், புரட்சி பற்றிய இத்தகைய பார்வையின்றி, நமது நாட்டில், தமிழகத்தில் எத்தனையோ ‘புரட்சிகள்’ அவதாரமெடுத்துள்ளன. அம்பேத்கர் தலைமையில் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டமும், அதன் பிறகு இடஒதுக்கீட்டை உறுதி செய்த முதலாவது அரசியல் சட்டமும்கூட இந்திய அரசியலமைப்பின் மேற்படி குணத்தை (சாதிய வர்க்கத் தன்மையை) மாற்றி அமைத்துவிடவில்லை. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் இடஒதுக்கீடு ஏற்பாடு மூலம் இந்த அரசு இயந்திர அமைப்பில் சேருவதனால், அவ்வாறான மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடுவதில்லை. மாறாக, இவர்களும் அந்தப் புதிய, தனிவகை சாதியினராக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கான போதனை, பயிற்சி, குடியிருப்பு, வாழ்க்கைமுறை, பண்பாடு, அதிகாரம் எல்லாமும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுகின்றன. குடியரசுத் தலைவரான கே.ஆர். நாராயணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் முதல் தமிழகத் தலைமைப் போலீசு அதிகாரிகளான காளிமுத்து, முத்துக்கருப்பன் வரை இதுதான் பொதுவிதியாக உள்ளது. அரசு அமைப்புக்குள்ளாகவே ஆதிக்க சாதி அதிகாரிகளால் ஒடுக்கப்படும் சாதி அதிகாரிகள் சமமாக நடத்தப்படுவதில்லை, இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்கிற உண்மையும் கூட இந்தப் பொதுவிதியை மறுப்பதில்லை. சாதிய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக நிறுவப்பட்டுள்ள அரசு அமைப்புக்குள் மட்டும் சாதிய சமத்துவம் நிலவுமா, என்ன? உமாசங்கர், சிவகாமி போன்றவர்களுக்கு மட்டும் நீதியும் சமத்துவமும் கொடுக்கப்படுமா, என்ன?

தாழ்த்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி ஏற்பாடுகள், முன்னேற்றத்துக்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், பாதுகாப்புக்கான சட்டங்கள், ஆட்சி அதிகாரப் பகிர்வுக்கான உள்ளூராட்சி ஒதுக்கீடுகள் இவை எல்லாமும் ஏற்கெனவே உள்ள அரசியல், சமுதாய, பொருளாதாரக் கட்டமைவுக்குள்ளாகவே செய்யப்படும் சீர்திருத்தங்கள் தாமே தவிர, இக்கட்டமைப்பைத் தகர்ப்பதற்கான, இதற்கு வெளியே மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எதுவும் கிடையாது. பெரியார், அம்பேத்கார் முதலியவர்களுக்கு எவ்வளவுதான் நேர்மையான, உயரிய நோக்கங்கள் இருந்தபோதும், அவர்கள் முன்வைத்த தீர்வுகள் இந்தக் கட்டமைவைத் தகர்த்துப் புதிய கட்டுமானத்தை நிறுவுவதற்கான புரட்சிகர உள்ளடக்கத்தையும் வழிமுறைகளையும் கொண்டவையாக இல்லை. அம்பேத்கர் உயர்த்திப் பிடித்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகத் தத்துவம்கூட மேற்கத்திய முதலாளியக் கண்ணோட்டம்தானே தவிர, உழைக்கும் மக்களின் ஜனநாயகம் அல்ல.

மார்க்சிய ஆசான்களாலேயே முன்வைக்கப்படாத, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பான சாதியாதிக்க சமூகத்தைக் கொண்டது இந்திய நாடு என்கிற பேருண்மையைப் பெரியாரும் அம்பேத்கரும் மட்டுமே கண்டுபிடித்து விட்டதாக அம்பேத்கரிய, பெரியாரியவாதிகளால் உரிமை பாராட்டப்படுகிறது. ஆனால், அச்சாதி ஆதிக்க சமூகத்தைத் தகர்க்கவும், சமத்துவ, ஜனநாயக சமுதாயத்தை உருவாக்கவும் கூடிய, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பான புரட்சிகரமான தீர்வுகளையும் வழிமுறைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளார்களா?

அடுக்கடுக்கான படிநிலை சாதிய சமுதாயத்தில், சாதி இந்துக்களுக்கு மட்டுமே சாதி ஆதிக்கமும் அதிகாரமும் உள்ளது. அவை பலவீனமடைவதாக உணரும்போதெல்லாம் ஆதிக்க சாதிகள் கூட்டுச் சேர்ந்து புதுப்புது நடைமுறைகளைக் கண்டுபிடித்து மீண்டும் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். ஆகவே, வேண்டுவது மேலும் மேலும் சீர்திருத்தங்கள் அல்ல! கெட்டி தட்டிப் போயிருக்கும் சாதியாதிக்க சமுதாயத்தை உலுக்கித் தலைகீழாகப் புரட்டிப் போடும் உழைக்கும் மக்கள் தலைமையிலான சமூக அரசியல் புரட்சி! ‘தலித்’ தலைவர்களும் அமைப்புகளும் அத்தகைய புரட்சிக்குத்தான் பணியாற்றுகிறார்களா?

புதிய ஜனநாயகம்

www.inioru.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.