Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒஸ்கார் விருதினை வென்ற ஈரானின் முதல் திரைப்படம்– எம்.ரிஷான் ஷெரீப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rishaan-heading-1024x254.jpg

நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்‘ -

 

          விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள்.

“ஒரு வேலைக்காரரை வச்சுப் பார்த்துக்கலாமே. அவருக்கு இவர் தன்னோட மகன் என்பது கூடத் தெரியாது.”

“ஆனா அவர் என்னோட தந்தைன்னு எனக்குத் தெரியும்.”

இவ்வாறாக நீதிபதியின் முன்னால் வாதிட்டுக் கொள்ளும் தம்பதியினது விவாகரத்து குறித்த விசாரணையின் முடிவில் விவாகரத்துக்கான காரணம் வலிதற்றதெனக் கூறி அவ் விண்ணப்பத்தை நிராகரிக்கிறது நீதிமன்றம். அதற்கு மேலும் கணவன், மகளுடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி தனது பெற்றோரிடம் சென்று விடுகிறாள். அதற்கு முன்பு, கணவன் வங்கி வேலைக்கும், மகள் பாடசாலைக்கும் சென்றதன் பின்னால் வீட்டில் தனித்திருக்கும் தனது வயோதிப மாமனாரைப் பார்த்துக் கொள்வது யாரென்ற கவலையில் மனைவி, ஒரு பெண்ணை அதற்காக ஏற்பாடு செய்கிறாள். அதன் பின்னர் அக் குடும்பத்தில் நடந்தவை என்ன என்பதுதான் படத்தின் கதை.

ri-1.jpg

 

இஸ்ரேலை ஆட்டம் காண வைத்து, இஸ்ரேலின் திரைப்படமான ‘ஃபுட் நோட்(Footnote)”டைத் தோற்கடித்து, இந்த வருடத்துக்கான 84 ஆவது ஒஸ்கார் விருது விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதினை வென்றெடுத்திருக்கிறது “எ ஸெபரேஷன் – A Separation (பிரிவொன்று)” எனும் இந்த ஈரான் திரைப்படம். ஈரானிய, இஸ்லாமியப் பண்பாடுகளை விளக்கும் இத் திரைப்படமானது ஒஸ்கார் விருதினை வென்று தனது இருப்பை அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் உரக்கச் சொல்லியிருக்கிறது.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் இணைந்து படத்தினை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார்கள். நாம் பார்த்துப் பழகியிருக்கும் சினிமாக்களில் மிகைத்திருக்கும் சினிமாத்தனங்களுக்கு மத்தியில் எந்தவொரு சினிமாத்தனமும் இல்லாத காட்சியமைப்புக்களும், நடிப்பும், யதார்த்தமும் அதன் ஒவ்வொரு உணர்வுகளையும் பார்வையாளனுக்குள்ளும் ஏற்படுத்தி விடுகிறது.

தனது கணவன் கடனாளியான நிலையில், அன்றாட வாழ்க்கையைக் கழிக்கச் சிரமப்படும் ஏழைப் பெண் ராஸியா தனது கணவனுக்குத் தெரியாமல் நாளாந்த வருமானத்துக்காக தனது ஆரம்பப் பாடசாலை செல்லும் மகளுடன்  அம் முதியவரைக் கவனித்துக் கொள்ளவென வந்து செல்கிறாள். இறைபக்தி மிக்க அவள், பகல்வேளையில் அவ் வீட்டுக்கு வந்து முதியவருக்கு பணிவிடை செய்துவிட்டு, அவ் வீட்டவர்கள் வந்ததும், தனக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்புகிறாள். ஒரு நாள், அவள் வீட்டினைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கையில், முதியவர் வீதிக்குச் சென்று விடுகிறார். வாகன நெருக்கடிக்கிடையே வீதியைக் கடக்கும் முதியவரைக் காப்பாற்ற அவள் ஓடுகிறாள்.

அடுத்த நாள் வங்கிக்குச் சென்ற நாதிரும், பாடசாலை சென்ற அவனது மகள் தேமேயும் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தால் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. சாவி வைக்குமிடத்தில் சாவி இல்லை. தன்னிடமிருந்த திறப்பைக் கொண்டு கதவைத் திறக்கும் 

 

ri-2.jpg

 

கணவன், உள்ளே சென்று பார்க்கிறான். மகள் அலறுகிறாள். அவனது முதிய தந்தை கட்டிலருகே விழுந்து பேச்சு மூச்சற்றிருக்கிறார். அவரது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. திகைத்துப் போகின்றனர் கணவனும் மகளும். முதலுதவிகள் செய்து தந்தையைக் காப்பாற்றுகிறான்  கணவன். கோபமும், கழிவிரக்கமும், அழுகையும் அவனிடம் மிகைத்திருக்கும் நிலையில் ராஸியா, தனது மகளுடன் வீட்டுக்கு வருகிறாள். தனது தந்தையை அநாதரவான நிலையில், கைகளைக் கட்டித் தனியாக விட்டுச் சென்றதற்கு ராஸியாவைத் திட்டி வெளியே தள்ளுகிறான் கணவன். தனது பணத்தைத் திருடியதாகவும் அவள் மீது குற்றம் சுமத்துகிறான். அவள் வாசலிலிருந்து கதறுகிறாள். தனது அன்றைய ஊதியத்தைத் தருமாறு கெஞ்சுகிறாள். திடீரென ராஸியாவும் அவளது மகளும் கதறியழுவதைக் கேட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறாள் தேமே. படிகளில் விழுந்து எழும்பும் ராஸியாவைக் காண்கிறாள் அவள்.

அதன்பிறகுதான் அக் குடும்பத்தில் பாரிய சிக்கல்கள் எழுகின்றன. ராஸியா ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்திருக்கிறாள் என்பதுவும், அந்தச் சம்பவத்தில் அவளது குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது என்பதுவும் அக் கணவனைக் கொலைகாரனெனக் குற்றம்சாட்டி அவனைக் கைது செய்ய ஏதுவாக அமைகிறது. அதன் பின்னர் நடந்தவை என்ன? அக் கணவன், மனைவி விவாகரத்து வழக்கிற்கு என்னவானது? மகள் தேமே, முதிய தந்தை ஆகியோரின் நிலைமை என்ன? என்பவற்றை உணர்வுபூர்வமாக இத் திரைப்படம் சித்தரிக்கிறது.

நடிப்பென்றே சொல்லமுடியாத அளவுக்கு மிகவும் ஆழமாக, கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள் படத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் எல்லா நடிகர்களும். பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பேமென் மோடி, திரைக்கதையாசிரியராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றியவர். இத் திரைப்படத்தின் இயக்குனரான அஸ்கர் ஃபர்ஹதியின் திரைப்படமான ‘அபௌட் எல்லெ(About Elle)’யில் 2009இல் அறிமுகமானவர். இத் திரைப்படத்துக்காக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதினை வென்றிருக்கிறார்.

 

ri-4.jpg

 

கணவனோடு வாதிடும்போதும், கணவனுக்காக வாதிடும்போதும் மிகச் சிறப்பாகத் தனது நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கும் நடிகை லைலா ஹாதமி, சிறந்த நடிகைக்கான விருதினை பல தடவைகள் வென்றவர். இவர்களது மகளாக இயக்குனரின் சொந்த மகளான ஸரீனா ஃபர்ஹதி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அழுகையையும், கவலையையும் உள்ளடக்கியபடி இவர் துயருரும் ஒவ்வொரு காட்சியும் மிகவும் தத்ரூபமானது.

கர்ப்பிணியாக வீட்டு வேலைகள் செய்கையிலும், அபாண்டமான பழி சுமத்தப்பட்ட நிலையில் அழுகையுடன் குரலுயர்த்திப் பேசும்போதும், தனது குழந்தையை இழந்து கையறு நிலையில் தவிக்கும்போதும், கணவனுடைய கோபத்தை எதிர்கொள்ளும்போதும் என பல முகங்களைக் காட்டி நடிக்க முடிந்திருக்கிறது பணிப்பெண்ணாக நடித்திருக்கும் நடிகை சரே ஃபயத்திற்கு. ஏற்கெனவே பலமுறை சிறந்த நடிகை விருதினை வென்றிருக்கும் இவர் இத் திரைப்படத்துக்காக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருதினையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல திரைப்படங்களை இயக்கி விருதுகளை வென்று சிறந்த இயக்குனராக தனது பெயரை நிலைநாட்டியுள்ள இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதிக்கு இத் திரைப்படத்தின் மூலமும் சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது. எட்டு லட்சம் அமெரிக்க டொலர் செலவில் தயாரிக்கப்பட்ட இத் திரைப்படமானது, இதுவரையில் இருபது மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகளையும், டர்பன் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளையும், ஃபஜ்ர் திரைப்பட விழாவில் ஏழு விருதுகளையும், 15 ஆவது ஈரான் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளையும், இன்னும் பல முக்கியமான திரைப்பட விழாக்கள் பலவற்றில் விருதுகள் பலவற்றையும் வென்றுள்ளது.

படத்தின் ஒரு காட்சியில் நாதிருக்கும் ஸிமினுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான உரையாடல் இப்படி இருக்கிறது.

“இந்தப் பிரச்சினைக்கு நான் காரணமல்ல.”

“அவர்களுடைய குழந்தை இறந்து விட்டது.”

“என்னோட தந்தையும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். அவர் இன்னும் கதைக்கவேயில்ல.”

 

ri-5.jpg

 

“அவர் இதுக்கு முன்னாடியும் கூடக் கதைக்கல்ல”

“ஆனா அவர் பேசிய சில சொற்கள்ல நான் சந்தோஷப்பட்டிருக்கேன்.”

“அவர் பேசாம இருக்கிறது ஒரு குழந்தையை இழக்கிறதை விட அவ்வளவு மோசமானதா?”

“அதுக்கு நான்தான் காரணம்னு நீங்க எப்படிப் பார்க்குறீங்க?”

“அப்புறம் எப்படி அவ தன்னோட குழந்தையை இழந்தா?”

“எனக்குத் தெரியாது. அவளோட கணவன் அவளுக்கு ஏதோ செய்து அதனால குழந்தையை இழந்திருக்கலாம். இப்ப என் மீது குற்றம் சுமத்துறா. அன்னிக்கு டொக்டர்கிட்ட போனதா அவளோட பிள்ளை சொல்லுது. நான் வீட்டுக்கு வரும்வரை டொக்டரிடம் போறதுக்கு அவளால ஏன் காத்திருக்க முடியாமப் போனது? இவ்வளவு வயதானவரை அவள் ஏன் கட்டிலோடு கட்டி வச்சுட்டுப் போனாள்?”

எல்லாக் கதாபாத்திரத்தின் மீதும் அனுதாபத்தை ஏற்படுத்தி விடும்படியான படத்தின் ஒவ்வொரு காட்சியும் உரையாடல்களும் நாற்காலியின் முனைக்கு நம்மை இழுத்து வருகிறது. காந்தமாக ஈர்க்கிறது. எந்தநிலையிலும் எதுவும் நடக்கலாம் எனும் உயிர்ப்பு நிலை படம் முழுவதும் விரவியிருக்கிறது. இக் கதை இடம்பெறும் களம் ஈரானாக இருந்தபோதிலும், இக் கதையானது ஈரானுக்கு மாத்திரமானதேயல்ல. முழு உலகத்தின் எல்லா மூலைகளிலும் எக் கணத்திலும் நடைபெறக் கூடியது.

நடுத்தர வர்க்க இஸ்லாமியக் குடும்பங்களிலெழும் சிக்கல்கள், பாசப் போராட்டங்கள், பிரிவுகள் என முக்கியமானவற்றை உள்ளடக்கி உருவாகியிருக்கும் இத் திரைப்படமானது ஈரானின் கலாசாரத்தையும், அரசியலையும் மறைமுகமாகப் பிரதிபலிக்கிறது. பழமைக்கும் நவீனத்துக்கும் இடையிலான நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் நவீன ஈரானில் ஆண் பெண் உறவு குறித்துச் சித்தரித்துள்ளதோடு, இஸ்லாமியர்களுக்கு குர்ஆன் மீதுள்ள மரியாதையையும் நம்பிக்கையையும் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தியுள்ளதன் மூலம் அமெரிக்காவின், முஸ்லிம்கள் மீதான தீவிரவாத எண்ணங்களையும் அசைத்துப் பார்க்கிறது. திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது மார்க்கத்தின் எல்லைக்குள் நின்று உண்மையாகவும், நேர்மையாகவும் வாழப் போராடுகின்றமையை எடுத்துக் காட்டுகிறது.

 

ri-3.jpg

 

ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது ஈரான் திரைப்படமாக இது இருப்பதோடு, ஒஸ்கார் விருதினை வென்ற முதல் ஈரான் திரைப்படமாகவும் இது அமைகிறது. ஈரானிய மக்கள் இத் திரைப்படத்தைக் கொண்டாடுகிறார்கள். ஒஸ்கார் விருதினை வென்றதை விடவும், தமது எதிரி தேசமான இஸ்ரேலின் திரைப்படத்தைத் தோல்வியடையச் செய்து முதலிடத்தைப் பிடித்ததனால் ஈரானில் இத் திரைப்படம் மிகவும் முக்கியமான ஒன்றாகவும் அமைந்திருக்கிறது. பெண்ணுடலையும் ஆபாசங்களையும் காட்டி பார்வையாளர்களை ஈர்க்கும் நமது இந்திய மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கிடையில், துளியும் ஆபாசமற்றும் சிறந்த, உலகத்தரமான, நல்ல திரைப்படங்களைத் தர முடியுமென்று நீருபித்திருக்கிறது இந்த ஈரானியத் திரைப்படம். பல நல்ல திரைப்படங்களை உலகுக்குத் தந்திருக்கும் ஈரான், இத் திரைப்படத்தின் மூலமும் தனது படைப்பாற்றலை மீண்டும் உறுதியாக  நிலைநிறுத்தியிருக்கிறது. வரவேற்போம்.

 

௦௦௦௦

 

http://eathuvarai.net/?p=2504

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.