Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கழுகு நிழல் -புதிய அரசியல் பத்தி எழுத்து பாரம்பரியத்தின் தொடக்கம் - யோ.கர்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கழுகு நிழல் -புதிய அரசியல் பத்தி எழுத்து பாரம்பரியத்தின் தொடக்கம்

யோ.கர்ணன்

 

தமிழில் புனைவெழுத்துக்கள் அச்சாகும் அளவிற்கு புனைவுசாரா எழுத்துக்கள் அச்சாகின்றனவா என்பது தெரியவில்லை. இதற்கான பதில் பெரும்பாலும் இல்லையென்பதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக ஈழத்தமிழ் சூழலில் புனைவுசாரா எழுத்துக்களின் தொகுப்பென்பது கோடைமழையை ஒத்த நிகழ்வென்பதே என் அபிப்பிராயம். பொதுவாகவே ஈழத்தில் பதிப்பக முயற்சிகள் சிரமமான விடயமென்று ஆகி வருகின்றன. இந்திய சூழலுடன் ஒப்பிடுகையில் புத்தகங்களிற்கான சந்தை வாய்ப்பு, விநியோக வலையமைப்பு, அச்சு தரம் என்பனவற்றில் வெகுவாக பின்தங்கியிருப்பதும் இதற்கான குறிப்பிடத்தகுந்த காரணங்கள். இப்பொழுது சொல்லிக் கொள்ளும்படியான பதிப்பக முயற்சிகள் இலங்கைக்குள் இல்லையென்றே ஆகிவிட்டது. இருக்கும் ஓரிரண்டு சிறிய முயற்சிகளும் ‘கிராமிய இலக்கிய’ கொள்கைகளையே தமது இலக்கிய கொள்கையாக கொண்டிருக்கின்றன. தாம் வாழும் கிராமங்களிற்குள்ளிருக்கும் இலக்கியங்களை நூலாக்கி, கிராமத்திற்குள்ளேயே வெளியீட்டுவிழா நடத்தி, கிராமத்தவர்களிடமே விற்பனையும் செய்து விடுகிறார்கள். யார் கண்டது, இலக்கியத்தை கிராமியமட்டத்தில் தன்னிறைவு அடையச் செய்வது கூட அவர்களின் நோக்கமாக இருக்கலாம். இதனை தவிர்த்தால், மிகுதியனைவரும் விடாப்பிடியாக இலக்கியம் படைத்தபடி, சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டிருப்பவர்கள்தான்.

 

ஓப்பிட்டளவில் புனைவுசாரா எழுத்துக்களைவிடவும் புனைவெழுத்துக்களிற்கு இருக்கும் மேம்பட்ட சந்தை வாய்ப்பு காரணமாக, பணச்சடங்கை ஒத்த அளவிலேனும் புனைவெழுத்துக்களில் தனிநபர் முயற்சிகள் நடந்தபடிதான் இருக்கின்றன. எழுதாவிட்டால் இறந்துவிடக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியபடியிருக்கும் ஜீவன்கள் அல்லவா எழுத்தாளர்கள்! புனைவுசாரா எழுத்துக்களிற்கு அந்த வாய்ப்பு குறைவு. அதனால் அவை கல்விபுலங்கள் சார்ந்த இடங்களை இலக்கு வைத்தும், மட்டுப்படுத்தியும் இயங்கிக் கொண்டிருக்கினறன.

 

இன்னும் குறிப்பாக குறிப்பிட்டால், புனைவுசாரா எழுத்துக்களிற்குள் வகைப்படுத்தக்கூடிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்புக்கள் வெளியாவதென்பது அரிதானதும், அச்சரியமானதுமான சங்கதியாகவே ஆகிவிட்டது. நானறிந்தவரையில் அப்படி எதுவும் வெளிவந்ததாக தெரியவில்லை. (வெளிவந்திருப்பதற்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை) பத்திரிகை ஆசிரியர்களின் பத்திகளும், ஆசிரியர் தலையங்கங்களும் மிக குறைந்தளவில் தொகுக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் இல்லையென்றாலும், குறைந்தளவிலேனும் அது நடந்துள்ளது. சபாரட்ணம், எஸ்.எம்.கோபு என சில உதாரணங்கள் உண்டு.

 

கிட்டத்தட்ட தமிழ்சூழலில் கவிஞர்களிற்கடுத்தபடியாக அரசியல் ஆய்வாளர்கள்தான் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள போதும், அவர்களின் எழுத்துக்களின் தொகுப்புக்கள் என்று ஏதாவது இருக்கினறனவா என்பதை மிகப்பெரியளவில் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய நிலமை எதனால் உண்டானது? எனக்கு தெரிந்த பல அரசியல் ஆய்வாளர்களும், பத்திரிகையாளர்களும் வாரவாரம் நான்கைந்து கட்டுரைகளாவது எழுதிவிட தயாராகவே கனணியின் முன் உட்கார்ந்திருக்கிறார்கள். துரதிஸ்டம் என்னவெனில், அவர்களின் வேகத்திற்கு இணையாக பத்திரிகைகளின் எண்ணிக்கை இல்லாதிருக்கின்றன. அப்படியானால் அவர்கள் வருடமொரு புத்தகம் வெளியிடலாமல்லவா? அது ஏன் நடைபெறவில்லை? இதற்கான காரணமாக தனியே மேற்சொன்ன பதிப்பு, வாசக சூழலை மட்டுமே கொள்ளலாமா?

 

இல்லை. அதற்கு மிகமிக முக்கியமான பிறிதொரு காரணமும் இருக்கிறது.

 

ஈழத்தமிழ் சூழல் எனப்படுவது மிக அதிகமாக உணர்ச்சிகரமான அரசியல் சமூகமாக மாறிவிட்டது. அல்லது அப்படி மாற்றிவிட்டது. பல இனங்குழுமங்களின் நிலத்தொகுப்பு தம்மிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றதென்ற மனவிரிவும், பரந்த சிந்தனையும் கொண்ட முடிக்குரியவர்கள் யாரையும் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை கொண்டிருக்கவில்லை. இந்த மனச்சுருக்கம், ஏற்கனவே இருந்த பல தேசிய இனங்களையும், தங்கள் தங்கள் அடையாளங்கள் குறித்த தீவிர நிலைப்பாடுகளிற்குள் தள்ளி விட்டது.

 

அடையாளங்கள் சார்ந்த இனமோதலானது கூர்மைமிக்க இனஉணர்வு சார்ந்த சமூகங்களாக பரிணமித்திருக்கிறது. அதிக உணர்திறன் வாய்ந்த தொடுகை நரம்புகள் எல்லா இனங்களிடமும் உள்ளன. இனமாக, மதமாக, மொழியாக, பண்பாடாக, பாரம்பரியமாக, கலைகளாக அவை விரிந்துள்ளன.

 

இந்த சூழலிற்குள் கலை, இலக்கிய, அரசியல் எழுத்துக்கள் சவாலான காரியமாக மாறிவிட்டன. இந்த கூர்மையான பின்னணியில் அரசியல் எழுத்துக்கள் நூலாகாமல் போவதற்கான காரணங்களை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று, எல்லா இனங்களிலும் அவர்கள் குறிவைக்கப்பட்டார்கள். குறிப்பாக பத்திரிகையாளர்களின் நிலை மிக மோசமாக இருந்தது. சமரசங்களற்றிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். நாட்டைவிட்டு தப்பியோடினர். அஞ்ஞானவாசம் புகுந்தனர். மூர்க்கமாக மோதிக்கொள்ளும் இரண்டு விலங்குகளிற்கிடையில் மாட்டிக் கொள்ளும் சாதுவான, பலம்குன்றிய விலங்கொன்றாக அவர்கள் இருந்தனர். எழுத்தும் சவால்மிக்க காரியமொன்றாக மாறிவிட்டது. இது முதலாவது. துயரமானது.

 

இரண்டாவதாக இன்னொன்றுமிருக்கிறது. அது துரதிஸ்டவசமானது. அதாவது ஈழத்தமிழ் சூழலில் இருக்கும் அரசியல் பத்தி எழுத்தாளர்களில் ஒரு சில விதிவிலக்குகள் தவிர்ந்த மிகுதியனைவருமே ஏதோ ஒரு அணி அல்லது இயக்கம் சார்ந்தவர்கள். தாங்கள் சார்ந்திருந்தவற்றின் தொடர்பறாத வால்களாக இருந்தனர். இன்னும் தெளிவாக சொன்னால் அவற்றின் பிரசாரகர்களாக இருந்தார்கள். அதாவது அரசியல் பத்தி எழுத்தென்பது தாங்கள் சார்ந்திருப்பவர்களின் நடத்தைகளிற்கும், தீர்மானங்களிற்குமான நியாயங்களை கற்பிப்பதென்ற அளவில் இயங்கினார்கள். விடுதலை வேண்டிய ஈழத்தமிழ் சூழலில் தோன்றிய அணிகள், இயக்கங்கள், நிலைப்பாடுகள் குறித்த மிகச்சரியான கணக்குகள் நம்மிடம் இல்லை. அப்படியொரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் சில சமயங்களில், பெரிய இயக்கமொன்றிடமிருந்த ஆட்தொகையை அது எட்டிவிடவும் கூடும். இத்தனை வகையினரும் தமக்குள் ஆயுதங்களினால் மோதிக் கொண்டதைப்போலவே, அவர்களின் கருத்துக்காவிகளும் மூர்க்கமாக மோதிக் கொண்டார்கள். ஆயுதங்களினால் குரல்களை மௌனமாக்கும் வித்தையை போலவே, கருத்துக்களினால் மௌனமாக்கும் வித்தைகளையும் நிகழ்த்திக்காட்டினார்கள். இவர்கள்தான் பெரும்போக்காக இருந்தார்கள்.

 

இந்த பின்னணியில் உருவான அரசியல்பத்தி எழுத்து பாராம்பரியத்திற்கு நிகழ்ந்த மிகப்பெரிய அவலம் எதுவெனில், அணிகளும், இயக்கங்களும், கொள்கைகளும் தோற்றுப்போனபோது அல்லது சமரசம் செய்து கொண்டபோது அவையும் இல்லாமல் போயின. தாம் சார்ந்திருந்த அல்லது நம்பியிருந்த அல்லது நம்பவைத்த ஒன்றிற்காக தீவிரமாக எழுதி கொண்டிருந்தவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மேலெழுவதும் பின்னர் அவர்கள் சார்ந்திருந்த அமைப்புக்கள் இல்லாமல் போனதும் தலைமறைவாவதும்தான் ஈழப்போராட்டம் நெடுகலிலுமுள்ள துயர வரலாறு.

 

இடதுசாரிகளின் பொற்காலத்தில் கருத்துக்களை கொண்டு சென்றவர்கள் தீண்டப்படாமலிருக்கும் காலமொன்று பின்னாளில் உருவானது. அது தீவிர எண்ணம் கொண்ட இளைஞர்களின் காலம். ஒன்றன்றி பலவாக இயக்கங்கள் இருந்தன. ஒவ்வொரு இயக்கங்களுடனும் பலர் நின்றனர். இயக்க மோதல்களை தொடர்ந்து மிக சிலர் கொல்லப்பட, மற்றவர்கள் புலம்பெயர்ந்தனர். தலைமறைவானார்கள். பின்னர் ஒற்றைமையமாக புலிகள் எழச்சி பெற்றனர். புலிகளின் கைகளிலிருந்த எண்ணற்ற ஊடகங்களை நிரப்ப வேண்டிய சூழல் உருவான பொழுது, உலகெங்கிலுமிருந்து எண்ணற்ற அரசியல் ஆய்வாளர்கள் தோன்றினார்கள். கிட்டதட்ட புலிகளின் கரும்புலிகள் படையணியில் இருந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமான அரசியல் ஆய்வாளர்கள் இருந்தார்கள். இந்த காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான கட்டுரைகள் ‘அரசியல் சோதிட கட்டுரைகள்’ என்ற வகைக்குள்தான் அடங்கும் என்று நினைக்கிறேன். உலக ஒழுங்கென பொதுவாக கருதப்பட்ட ஒரு ஒழுங்கை கணித்து, வான சாஸ்திரகாரர்களை போல எந்தெந்த கட்டத்தில் எந்தெந்த நாடுகள் நிற்கின்றன என்று எழுதும் பாரம்பரியமொன்று உருவானது. அதனால்தான் ‘அரசியல் சாத்திரிகள்’ என முன்னர் ஒருமுறை நமது அரசியல் ஆய்வாளர்களை குறிப்பிட்டிருந்தேன்.

 

ஏதிர்பாராத விதமாக 2009 இல் புலிகள் அழிவடைந்ததும் அரசியல் பத்தி எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் காணாமல் போய்விட்டார்கள். பலர் நிரந்தரமான உறங்கு நிலைக்கு சென்றனர். சிலர் மட்டும்தான் உடலிலிருந்த கோடுகளை அழித்துவிட்டு, சாம்பல், சிவப்பு, கறுப்பு, வெள்ளை என வெவ்வேறு வர்ணங்கள் பூசிக்கொண்டு மெதுமெதுவாக பதுங்கி பதுங்கி திரும்பிவந்தனர். துயரமென்னவெனில், இவர்கள் அனைவரும் திரும்பி வருவதற்கு முன்னர் தமது கடந்த கால ஆய்வுகளையெல்லாம் குழிதோண்டி தடயமற்று புதைத்துவிட்டுத்தான் திரும்பி வந்தார்கள்.

 

அரசியல் ஆய்வாளர்கள் என்ற அடையாளத்துடன் உலாவும் எண்ணற்றவர்களுடன் பழகியிருக்கிறேன். களத்தில் நிற்கும் போராளிகளை விஞ்சிய மூர்க்கத்துடன் அவர்கள் பேச கேட்டிருக்கிறேன். இதெல்லாம் ஒரு காலத்தில் என்னை ஆச்சரியப்பட வைத்திருந்தது. எனது இருபதுகளின் ஆரம்பத்தில் போராளியாக இருந்த நாட்களில் அரசியல் ஆய்வாளர்கள் எனக்குள் மிகப்பெரிய பிரமிப்பை உண்டு பண்ணியிருந்தார்கள். சினிமா நடிகைகளை மோகித்திருக்கும் பால்ய வயதுக்காரன் ஒருவனை போல, அரசியல் ஆய்வுகளையும், ஆய்வாளர்களையும் மோகித்திருந்தேன். அந்த நாட்களில் உதயசங்கரின் சிறுகதைகளை பித்துபிடித்தவன் போல வாசித்து தள்ளி கொண்டிருந்தேன். வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு எழுத்தாளர்கள் என்னில் நிறைந்திருந்தனர். அது உதயசங்கரின் காலகட்டம். அப்பொழுதுதான் ஆய்வாளர்கள் மீதான வெறி என்னுள் ஊறிக் கொண்டிருந்தது. உண்மையை சொன்னால், இலக்கியகாரர்களைவிட, இலக்கியங்களை விட அரசியல் ஆய்வுதான் என்னை ஈர்த்திருந்தது.

 

பத்திரிகையை விரித்தால், சந்திரிக்கா சந்திக்கு வந்தார் என்பது மாதிரியோ, இராஜதந்திர பொறியில் சிங்களம் என்பது மாதிரியோ விதம்விதமான கட்டுரைகள் வரும். பிரபலமான வாரப்பத்திரிகை ஒன்றில் ஆய்வாளரொருவர் கட்டுரை எழுதி வந்தார். இலண்டனிலிருந்து இன்னார் என பெயரை குறிப்பிடுவார். அனேகமாக அவரது வலது கையில் மூன்று கட்டைகள் இருந்திருக்க வேண்டும். எனது ஊகம் சரியெனில், ஒன்றில் சீனா என எழுதப்பட்டிருந்திருக்க வேண்டும். மற்றையவற்றில் இந்தியா, அமெரிக்கா என எழுதப்பட்டிருக்க வேண்டும். கட்டைகளை குலுக்கி போட்டு போட்டு கட்டுரை எழுதியிருக்க வேண்டும். மேற்படி மூன்று நாடுகளும் பின்னும் வலை பற்றியும், அதற்குள் நமது இயக்கம் சுளித்தபடி வெளியேறும் இலாவகம் பற்றியும் எழுதி தள்ளுவார். அவரது கட்டுரைகளை தொடர்ந்து படிக்க படிக்க எனக்கு இரண்டு விடயங்கள் பட்டன. முதலாவது, இந்த சங்கீத கதிரை விளையாட்டில் நமது இயக்கம் வெற்றிபெறும். இரண்டு, காதல் கடிதம் எழுதுவதற்கு பிறகு உலகத்திலேயே மிகச்சுலபமானது அரசியல் கட்டுரைகள் எழுதுவதே. அவரது கட்டுரைகளை படித்ததால் உண்டான நம்பிக்கை என்னையும் அரசியல் ஆய்வாளனாக மாற்றியது.

 

நவம் அறிவுகூடத்தில் வெளியான சஞ்சிகை ஒன்றில் நானும் ஒரு அரசியல் ஆய்வு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் தலையங்கம் இப்பொழுது நினைவிலில்லை. நாளை மலரும் தமிழீழம் என்பது மாதிரியானதாக கூட இருக்கலாம். ஆனாலும் விரைவிலேயே இந்த மயக்கங்களிலிருந்து விடுபட்டு விட்டேன். ஆனாலும் எனது இலண்டன் குரு விடுபடவில்லை. வாரப்பத்திரிகைகளில் இடையிடையே அவரை படிப்பதுண்டு. அவரும் இல்லாத பின்னலையெல்லாம் பின்னிக் கொண்டிருந்தார். இன்னும் சிறிது காலம் சென்ற பின்னர், இந்த வகையான சோதிடங்களை படிப்பதையே நிறுத்திவிட்டிருந்தேன்.

 

இதில் துயரமென்னவெனில், யுத்தத்தின் இறுதி மாதங்களில் வன்னிக்கு பத்திரிகை வருவது நின்று போயிருந்தது. ஏதாவது அதிசயங்கள் நடந்து, இடையிடையே வந்தன. அனேகமாக விசுவமடுவிற்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையில்தான் எங்கோ நின்றுபோனது. அந்த வார பத்திரிகையொன்று வாங்கினேன். எனது முன்னாள் குரு சோதிடம் கூறியிரந்தார். அதாவது இதெல்லாம் சின்ன நெருக்கடி. திட்டமிருக்கு என்ற சாரப்பட அவரது கட்டைகள் விழுந்திருக்க வேண்டும்.

 

எனது போராளி நண்பனொருவனிடம் அந்த கட்டுரையை படிக்க கொடுத்தேன். முகத்தில் எந்த சலனமுமின்றி படித்து முடித்துவிட்டு, அழுவாரை போல என்னை பார்த்தான். இந்த உலகத்திலேயே அவன் அனுபவித்த மோசமான சித்திரவதை ஒன்றை இலண்டன் வாசியுடன் இணைந்து நான் மேற் கொண்டிருந்திருக்க வேண்டும். இப்படித்தான் வன்னியிலிருந்த ஒருவர் பற்றிய கதையிது. அவரும் நிறைய ஆய்ந்திருந்தார். தமிழீழ தேசிய தொலைகாட்சியில் பணியாற்றிய காலத்தில் அறிமுகமானவர். திருமணங்களிற்கு தேதி குறிக்கும் சோதிடர்களை ஒத்தவர் இவர். தமிழீழத்திற்கு தேதி குறித்து விட்டிருந்தார். அந்த நாட்களில்தான் வன்னியிலிருந்த பிரபல எண்சோதிடன் ஒருவர் எனக்கு அறிமுகமாகியிருந்தார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் 2009 ஏப்ரல் இறுதியில் முற்றாக அழிந்து விடும் என ஒருமுறை கூறினார். இது 2008 இன் நடுப்பகுதியில் நடந்தது. வியப்புதீராமல் எனது நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் அதனை கூறி கொண்டு திரிந்தேன். நமது அரசியல் சோதிடனிடமும் கூறினேன். அவர் ரௌத்திரம் கொண்டுவிட்டார். எந்தெந்த கட்டத்தில் எந்தெந்த நாடுகள் நிற்கின்றன என விளங்கப்படுத்தி, இதெல்லாம் தற்காலிக பின்னடைவுகள் என்றார். கூடவே, புலி பதுங்குவது எதற்காக என்ற கேள்வியையும் கேட்டு வைத்தார்.

 

சரியாக ஒருவருடம் கழித்து நான் மெனிக்பாம் முகாமில் போய் இறங்கினேன். அவர் அடுத்த பஸ்சில் வந்திறங்கினார். முக்காடிட்டிருந்தார். வாய் நிறைய வெற்றிலையிட்டிருந்தார். வயோதிகதன்மையை உண்டாக்கவாம். என்னை கண்டதும், அருகாக வந்து, வலது கையை பிடித்து அழுத்தியபடி ‘எல்லாம் முடிஞ்சுது’ என்றார் நாத்தழுதழுக்க. இதுதான் ஈழப்போராட்டத்தின் அரசியல் ஆய்வுதுறையின் கதை.

 

*****

 

மேற்படி சூழலின் பின்னணியில் பார்த்தால் ஈழத்தவர் ஒருவரது அரசியல்பத்திகள் தொகுக்கப்படுவதென்பதே ஆச்சரியமானதும் அரிதானதுமான சங்கதிதான். இதுவரையிருந்து வந்த எல்லா புனிதங்களும், மகிமைப்படுத்தப்பட்டவையும் திருவழிந்து வந்த துயரவரலாற்று பாதையில் அவர் யாரதும் உபதேசங்களிற்காகவும் பல்லக்கு தூக்கியிருக்கவில்லை என்பதற்கான சான்றாகவும் கொள்ளலாம். அல்லது, மாயமான்களின் வழித்தடத்தை மெய்மானின் வழித்தடமாக்கும் அழிச்சாட்டியம் எதிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் கொள்ளலாம். ஏனெனில் கடந்த காலத்தின் நீதிமன்றங்களிலிருந்து தப்பித்து யாராலும் அச்சுக்கூடங்களிற்குள் நுழைய முடியாது. இந்த சூழலில், கோவை நந்தனது ‘கழுகு நிழல்’ எனும் கட்டுரைகளின் தொகுப்பு வெளியாகியுள்ளது ஒரு மகிழ்ச்சியான சங்கதி. மேற்படி பருவகால அரசியல் கட்டுரையார்களிற்கு மாற்றான புதியதொரு பாரம்பரியத்திற்கான அவசியங்கள் உணரப்பட்டு கொண்டிருக்கையில் இந்த வகையான வருகைகள் ஆதரிக்கப்பட வேண்டியவை. கடந்து வந்த நீண்ட வரலாற்று பாதையில் சின்ன சின்ன அளவுகளிலேனும், ஒன்றிரண்டாகவேனும் இப்படியான மின்மினியளவான ஒளிபாய்ச்சும் முயற்சிகளும் இருந்திருக்கின்றன என்பது ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்றுதான்.

 

கலை இலக்கியம், சமூகம், பொருளாதாரம், சினிமா என பல தளங்களில் கட்டுரைகள் விரிந்திருந்தாலும், இது அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு என்பதே சரியாக இருக்கும். ஏனெனில், தொகுதியிலிருக்கும் பெருமளவான கட்டுரைகள் நேரடியான அரசியல் கட்டுரைகளாக இருப்பதும், மிகுதியானவையும் பகுதியளவில் பேசுபவையாகவோ அல்லது சமூக, பொருளாதார, கலைஇலக்கியங்களில் ஊடாடும் நுணுக்கமான அரசியலை பேசுபவையாகவோதான் உள்ளன. நிச்சாமம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியானவை.

 

மேலே குறிப்பிட்டுள்ள ஈழப்போராட்ட வரலாற்றிற்கும் அரசியல் ஆய்வு பாரம்பரியத்திற்குமிடையிலான சிக்கலானதும் பிரிக்க முடியாததுமான உறவின் அடிப்படையில் பார்த்தால், இந்த தொகுப்பு வெளியாகி இருப்பதே குறிப்பிடத்தகுந்ததொரு நிகழ்ச்சிதான். ஈழப்போராட்டத்தில் இதுவரை இருந்து வந்த எல்லா அணிகளும், இயக்கங்களும், கோட்பாடுகளும் தோல்வியடைந்தும், சமரசம் செய்து கொண்டும் களம்விட்டகன்றுவிட்ட நிலையில், அதன் கருத்துக்காவிகள் எல்லோரும் மின்னுவதும் மறைவதுமாக இருக்கையில் நீண்ட கால அரசியல், இதழியல் செயற்பாட்டுக்காரனான கோவை நந்தன் தனது எழுத்துக்களை தொகுத்திருப்பது முக்கியமானது. அதாவது ஈழப்போராட்டத்தின் இதுவரையான எந்த எழுச்சிகளிலும் அவர் போதை கொள்ளவில்லை. எந்த வீழ்ச்சிகளிலும் தலையில் துண்டை போட்டு கொள்ளவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய, அரிதான சம்பவமொன்று. இது எப்படி சாத்தியமாயிற்று? ஆரம்பத்தில்- எழுபதுகளின் தொடக்க கூறுகளில் மொழிமூல உந்துதல் பெற்ற ஒரு மாணவச் செயற்பாட்டாளனாக, பின் மாணவ போராட்டகாரனாக, பிறகு ஒரு விடுதலை இயக்ககாரனாக, பின்னர் அதிலும் இன்னொரு வடிவம் கொண்டு இடதுசாரித்துவ சாய்வையுடைய விடுதலை இயக்ககாரனாக என நீண்ட செயற்பாட்டு பாரம்பரியம் மிக்கவரான அவர், காலத்திற்கு காலம் எண்ணங்களில் தன்னை தகவமைத்துக் கொண்டே வந்திருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். அதனால்தான் அவரால் தொடர்ந்து செயற்பட முடிகிறது. கடந்த காலங்கள் பற்றிய எந்த கூச்சங்களும், பயங்களும் இல்லாமல் பகிரங்கமாக வர முடிகிறது.

 

அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் தமிழில் இயங்கும் பெரும்பாலானவர்களிற்கு தாங்கள் சார்ந்த அணிகள், இயக்கங்கள், அதிகமேன் இனத்தின் அரசியல் பற்றிய ஆழமானதும், தீர்க்கதரிசனம் மிக்கதும், அர்ப்பணிப்பு மிக்கதுமான பார்வைகள் இல்லாதமைதான் மிகப்பெரிய குறைபாடாகும். இதனாலேயே எல்லா கட்டுரைகளும் அந்தந்த வாரத்திற்கு அப்பாலான ஆயுளை கொண்டிருப்பதில்லை. இந்த வருட மார்ச் மாதமளவில் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை பற்றி தமிழில் கட்டுரையெழுதாத ஆய்வாளர் யார்? பின்னர் ஏப்ரல் தொடக்கத்தில் எல்லா கட்டுரைகளும் நகைச்சுவை கட்டுரையென்றளவில் சுருங்கி போன துயரத்தையும் கண்டோம்.

 

ஈழத்தில் புழக்கத்தில் உள்ள மேற்படி ‘அரசியல் சோதிட கட்டுரை’ பாரம்பரியத்திலிருந்து முற்றிலும் வேறான பாரம்பரியமொன்றின் தொடக்கமாக கோவை நந்தனது எழுத்துக்களை கொள்ளலாம். இந்த தொகுப்பில் தனியே இலங்கை பிரச்சனைதான் எழுதப்பட்டிருக்கிறது என்றோ அல்லது அரசியல் பிரச்சனைகள்தான் எழுதப்பட்டிருக்கிறது என்றோ இல்லை. ஒரு சமூகப்போராளிக்குத் தேவையான விசாலித்த பார்வை அவரிடமுள்ளது. பார்வதியம்மாள் தொடக்கம் பஸ்க் போராட்டம்வரை, கார்ள் மார்க்ஸ் தொடக்கம் ரஞ்சிதா வரை என பல்வேறு புள்ளிகளையும் தொட்டிருக்கிறார். இலங்கை அரசியல், பிராந்திய அரசியல், பூளோகஅரசியல், பொருளாதாரம், கலை, சமூகம் என பரவலான கவனக்குவிப்பை செய்திருக்கிறார். ஒரு பத்திரிகையாளனாக, பத்தி எழுத்தாளனாக தனியே அவர் ஈழம் பற்றிய உள்ளொடுங்கிய பார்வைகளை வெளிப்படுத்தாமைக்கு, அவரது நீண்டகால புலம்பெயர் வாழ்வு உதவியிருக்கின்றது போல்த்தான்படுகிறது. இதனால்த்தான் உலகளாவிய பார்வை சாத்தியப்பட்டிருக்கின்றது.

 

கடந்த பல வருடங்களாக பத்திரிகைகளில் எழுதப்பட்டவற்றில் தேர்வு செய்யப்பட்டவையே தொகுக்கப்பட்டிருக்கின்றன. அரசியல், கலை, சமூகம். சாதி, பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகளின் கலவையாக இருப்பதால் வாசிப்பு சுவாரஸ்யமும் கூடியிருக்கின்றது. இந்த பார்வை விரிவிற்கு அவரது புலம்பெயர் வாழ்வும் காரணமாக இருக்குமென நம்பும் அதேவேளை, அந்த காரணம் பக்கவிளைவுகளையுடையது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

 

புலம்பெயர் தேசமொன்றிலிருந்து உணர்ந்து கொள்ளப்படுவதைவிடவும் அதிக சிக்கல்கள், நெருக்கடிகள். ஜனநாயக மறுப்புக்கள் இலங்கையில் உள்ளன. அவை இன்னமும் ஆழமாக பதியப்பட வேண்டும். குறிப்பாக, அமெரிக்க மற்றும் தாராளவாத பொருளாதாரங்கள் மீதானதும் அவற்றின் தொடர்ச்சியாக நடக்கும் இலங்கை அரசியல் நகர்வுகள் குறித்ததுமான கறாரானதும் மெலிதானதுமான விமர்சனங்கள் தொடர்பான மாறுபட்ட எண்ணங்கள் என்னிடமுண்டு. கோவை நந்தன் ஒரு இடதுசாய்வுடையவர் என்பதால் இது நேர்ந்திருக்கலாம். இந்த அடிப்படையிலிருந்து அமெரிக்காவின் அனைத்து நகர்வுகளையும், வெளியுறவு கொள்கைகளையும் அணுகுவது தவறானது. அரசியலோ, ஐநாவோ, ஜெனிவாவோ புனிதர்களின் இருப்பிடமல்ல என்பதை எல்லோரும் அறிந்தவர்கள்தான். எல்லா நெருக்கடிகளிலும் சுளித்துச் செல்லும் திறனும், சூழ்ச்சித்திறனும் மிக்கவர்களே வெற்றிபெறலாம் என்று ஆன பின்னர், அறம் என்பதற்கும் மனிதநேயம் என்பதற்கும் பொருளென்ன? அவை பற்றிய கறாரான நியாயத்தராசுகளை எப்படி உருவாக்கி கொள்வது? அவர் தனது எழுத்துக்களை தொகுத்திருக்கிறார் என்பதே, அவர் காலங்களிற்குள் சிறைப்பட்டிருக்கிற மனிதர் அல்ல என்பதற்கு உதாரணம்தான். சட்டென எழுவதும் வீழ்வதுமாக இருக்கும் நமது இயக்கங்களினதும், கொள்கைளினம் பிரதிநிதியாக அவர் இருக்கவில்லை, அது நம் காலத்தின் அரிதான உதாரணம். ஆயினும் அவரது எழுத்துக்களின் சில பகுதிகளில் இன்னும் வெளிப்படைத்தன்மை வரவேண்டும். சிறியளவிலேனும் அவரிடமும் மென்சாய்வொன்றிருக்கிறது. ஈழவிடுதலை இயக்கங்கள் சில தொடர்பான அனுதாபமான பார்வையிருக்கிறது. (அவற்றின் பிரச்சாரகர் அல்ல) யுத்தகளத்தில் வில்வீரர்கள் எல்லா இலக்குகளின் தலைகளையும்தான் குறிவைக்க வேண்டும். சில தலைகளையும், சில மகுடங்களையும் குறிவைத்து பானம்விட கூடாது.

 

ஏனெனில், ஈழத்தமிழர்கள் இன்னும் வெற்றிக் கோட்டை தொடாதவர்கள். இன்றிருக்கும் எதுவும் நாளை இல்லாமலும் போகலாம். இவ்வளவு காலமும் நிலைத்ததைப் போலவே, அப்பொழுதும் அவர் நிலைத்து இருக்க வேண்டும்.

 

நூல்: கழுகு நிழல்

 

ஆசிரியர்: கோவை நந்தன்

 

வெளியீடு: நிச்சாமம் பதிப்பகம்

 

(திருத்திய வடிவம்) -

See more at: http://yokarnan.com/?p=455

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.