Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எகிப்தில் என்ன நடக்கிறது..? - விவேகன்

Featured Replies

egypt%204.jpgஎகிப்தில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் வன்முறைகள் பல நூற்றுக்கணக்கானவர்களை பலியெடுத்திருக்கின்றது. ‘நைல் நதியின் நன்கொடை’ என்று அழைக்கப்படும் எகிப்து, இப்போது இரத்தத்தால் நனைந்து கொண்டிருக்கின்றது. இரத்த ஆறு அங்கு பாயத் தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துனிசியாவில் தொடங்கிய அரபு வசந்தம் எகிப்தையும் ஆட்டம் காணவைத்தது. 30 வருடங்களாக எகிப்தின் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருந்த ஹோஸ்னி முபாரக்கை எப்படி அகற்றலாம் என்று காத்திருந்தவர்களுக்கு, துனீசியா ஒரு வழிகாட்டியாக இருந்தது. அரசுக்கு எதிராக 2011ம் ஆண்டில் எகிபத்திலும் மக்கள் புரட்சி வெடித்தது. உயிரிழப்புக்கள் ஏற்பட்டபோதும் துனீசியாவைப் போலன்றி, பெரும் இரத்தக்களரியின்றி 18 நாட்களில் (2011ம் ஆண்டு பெப்ரவரி 11ம் திகதி) ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியில் இருந்து தூக்கியெறிந்தனர் எகிப்திய மக்கள்.

அதன்பிறகுதான் அங்கு முதற் தடவையாக ஜனநாயக ரீதியாக அதிபர் தேர்தலே நடைபெற்றது. முகமது  மோர்சி (61) வெற்றி பெற்றார். இவருக்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு (Muslim brotherhood) பேராதரவு இருந்ததே வெற்றிக்கு காரணமாகியது. ஆனால், எகிப்தின் வரலாறு பேயிடம் இருந்து தப்பித்து பிசாசிடம் மாட்டிய கதையாகியது. தீவிர இஸ்லாமியரான முகமது மோர்சி நாட்டில் இஸ்லாமியச் சட்டங்களை அமூலாக்குவதிலும் தமது பிடியை ஆட்சியில் இறுக்குவதிலும் அதிக கவனம் செலுத்தினர். பதவியேற்று ஓராண்டு நிறைவடையும் (யூன் 30) நிலையிலும் சீரழிந்து கிடந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. ஏற்பட்டிருந்த பல்வேறு சமூகப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவும் அவர் முனையவில்லை.

அத்துடன், நாட்டை சீரமைப்பதற்காக மோர்சி மேற்கொண்ட மத ரீதியான சில நடவடிக்கைகளுக்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தீவிர இஸ்லாமியவாதிகள் தவிர்ந்த பெரும்பான்மையானவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டனர். விளைவு மீண்டும் அங்கு மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மோர்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த நிலையில், ஆளும் கட்சிக்குள்ளும் முரண்பாடு வெடித்தது.

egypt%201.jpg

மோர்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிவிவகார அமைச்சர் முகமது கமல் அமிர் உள்ளிட்ட 5 அமைச்சர் பதவி விலகினார்கள். இதனால், அதிபருக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரம் பெற்றது. இந்நிலையில், ‘48 மணி நேரத்துக்குள் மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் நாங்கள் தலையிடுவோம்’ என்று யூலை முதலாம் திகதி அதிபர் முகமது மோர்சிக்கு இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் அந்த எச்சரிக்கையை நிராகரித்த முகமது மோர்சி, தனது திட்டத்தின்படி நாட்டை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். மோர்சியின் இந்த நடவடிக்கைக்கு அவரது முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில், இராணுவம் விதித்திருந்த 48 மணி நேர ‘கெடு’ முடிவடைந்தது. கெடு முடிவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பே எகிப்து முழுவதும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இராணுவக் கெடு முடிவை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், தொலைக்காட்சியில் தோன்றி உணர்ச்சிகரமாக பேசிய அதிபர் முகமது மோர்சி, தான் ஜனநாயக ரீதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட அதிபர் என்றும், வன்முறைக்குப் பணிந்து பதவி விலகமுடியாது என்றும் கூறினார். அத்துடன் இராணுவ பலத்தைக் கொண்டு தன்னைப் பதவியில் இருந்து அகற்றினால் நாடு குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் மூழ்கும் என்று அவர் எச்சரித்திருந்தார். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யத் தான் தயார் என்றும் அவர் அறிவித்தார்.

egypt%202.jpg

இதேவேளை, முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சியின் மூத்த தலைவர் வாலீத் அல் ஹதாத் கெய்ரோவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், நாங்கள் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தப் போவது இல்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்களைத் தொடர்ந்து, இராணுவத் தளபதிகள் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். அதன் முடிவில் இராணுவப் புரட்சி வெடித்தது. 3ம் திகதி நள்ளிரவு இராணுவ டாங்கிகள் தெருக்களில் இறங்கின. தொலைக்காட்சி நிலையத்தை இராணுவம் முதலில் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

அதிபர் மோர்சி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவும் இராணுவம் தடை விதித்தது. இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அப்துல் ஃபதா அல் சிஸ்ஸி, ‘அதிபர் மோர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும், நாட்டின் அரசியல் சாசனம் இடைநிறுத்தி வைக்கப்படுவதாகவும், நாட்டின் தலைமை நீதிபதி அத்லி மன்சூர் தலைமையில், துறைசார் நிபுணர்களால் தற்காலிக அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும், நாட்டில் அடுத்த அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நடக்கும்வரை நாட்டை இந்த இடைக்கால அரசு நிர்வகிக்கும்’ என்றும் தொலைக்காட்சி ஊடாக அறிவித்தார். 

தலைநகர் கெய்ரோவில் உள்ள தாக்ரிர் சதுக்கத்தில் ஏராளமானவர்கள் திரண்டு இராணுவத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். எகிப்தின் அதியுயர் இஸ்லாமிய மதபீடமான அல் அஸாரின் தலைமை மதகுருவும் மோர்சி அகற்றப்பட்டதற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆனால், இன்னொரு பக்கம் கெய்ரோ பல்கலைக்கழக வளாகத்தில், திரண்டிருந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கினார்கள். இதன்போது காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதில் 23 பேர் பலியாக, 200ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இதனை எகிப்து சுகாதாரத்துறை அமைச்சகமும் ஒத்துக்கொண்டிருந்தது.

egypt%203.jpg

பதவிநீக்கப்பட்ட முகமது மோர்சி இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, இரகசியமான ஒரு இடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். கலவரங்கள் வெடிப்பதைத் தடுப்பதற்காக முன்கூட்டியே இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். தலைநகரின் முக்கிய இடங்களை இராணுவத் துருப்புகள் கவச வாகனங்கள் சகிதம் முற்றுகையிட்டன. ஆனாலும் இவற்றையும் மீறி முகமது மோர்சியின் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, மோர்சியின் எதிர்ப்பாளர்களும் இன்னொருபுறம் வீதிகளில் இறங்கினர். இரு தரப்புக்கும் இடையில் நடந்த மோதல்களில் பலர் உயிரிழந்தனர். போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் காவல்துறையினரும், படையினரும் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைநகர் கெய்ரோவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ரபா அல்-அதாவியா என்ற இடத்தில் மோர்சியின் ஆதரவாளர்கள் முகாம் ஒன்றை அமைத்தனர். அதனைச்சுற்றி சிறு சிறு கூடாரங்கள் அமைத்து பல்லாயிரக் கணக்கானவர்கள் இரவு பகலாக அங்கு நிரந்தரமாகத் தங்கியிருந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனையடுத்து அந்த முகாம் அமைக்கப்பட்ட பகுதியை சுற்றியிருந்த வீதிகளை இராணுவம் மூடியது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் கலைந்துசொல்ல மறுத்துவந்தனர். பேச்சுக்களுக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்களையும் நிராகரித்தனர்.

இந்நிலையில், அந்த முகாம் மீது கடந்த 14ம் திகதி புதன்கிழமை காலை காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து திடீரென்று தாக்குதல் நடத்தினார்கள். கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்தனர். பதிலுக்கு மோர்சியின் ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தினர். இதன்போது அவர்கள் தரப்பில் இருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து இராணுவ உலங்குவானூர்திகளும் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதனால் முகாம் அமைத்திருந்த பகுதி முழுமையாகப் போர்க்களமானது.

இதேவேளை, அருகிலுள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் இருந்து இராணுவத்தின் குறிசூட்டு துப்பாக்கி அணியினரும் முக்கிய நபர்களை இலக்குவைத்து சுட்டுக்கொன்றதாக தற்போது குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துள்ளன. தாக்குதல் முடிவில் 638 பேர் பலியானதாகவும் 2000 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. பிரித்தானியாவைச் சேர்ந்த ‘ஸ்கைநியூஸ்’ தொலைக்காட்சியின் ஒளிப்படப்பிடிப்பாளர், ஐக்கிய அரபுக் குடியரசைச் சேர்ந்த ஆங்கில தினசரியின் செய்தியாளர் ஆகியோரும் இந்த இராணுவ நடவடிக்கையின்போது உயிரிழந்துள்ளனர். முகாம் அமைத்திருந்த பகுதியிலுள்ள தற்காலிக கூடாரங்களை படையினர் முழுமையாக அகற்றி அப்புறப்படுத்தினார்கள்.

“சமரசத்துக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. எந்த தன்மானமுள்ள அரசும் ஏற்க முடியாத நிலை உருவானதால்தான் இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. வன்முறை அதிகரித்ததற்கு முஸ்லிம் சகோதரத்துவ கட்சிதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என இராணுவ நடவடிக்கை சரியானதே” என்று இடைக்கால பிரதமராக உள்ள ஹசீம் அல் பப்லாவி தாக்குதலுக்கு நியாயம் கற்பித்தார்.

இராணுவத் தரப்பில் இருவரும் காவல்துறை தரப்பில் 43 பேரும் உயிரிழந்திருந்தததாக உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. ஆனால், முஸ்லிம் சகோதர அமைப்பினர் கூறுகையில், இதுவரை இராணுவத்தின் தாக்குதலில் 2,200 பேர் பலியாகியுள்ளதாகவும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், முஸ்லிம் சகோதரத்தவக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கெஹாத் எல் ஹதாத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘எங்களில் எத்தனை பேரை இராணுவம் கொன்றாலும், தொடர்ந்து எங்கள் போராட்டம் நடக்கும். மோர்சியை மீண்டும் பதவியில் நியமிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு படையினரின் அடக்குமுறையை கண்டித்து வீதிகளில் இறங்கி போராடுமாறு மோர்சியின் ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தனர். கலவரம் மேலும் தீவிரம் அடையும் என கருதிய இடைக்கால அரசு, நாடு முழுவதும் ஒரு மாதம் அவசரகால நிலையை அறிவித்தது. இந்நிலையில், துணை அதிபர் எல் பராடி தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் சமரசம் மூலம்தான் தீர்வு காணவேண்டும். அவ்வாறில்லாமல் அடக்குமுறையை கையாள்வது சரியல்ல. மேலும், பொதுமக்கள் மீது இராணுவத்தை ஏவிவிடும் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. இம்முடிவை நிர்வாகம் என்னை ஆலோசிக்காமலேயே எடுத்துள்ளது. இதுபோன்ற செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பதவி விலகுகிறேன்’ என்று கூறியுள்ளார். எல் பராடியின் பதவி விலகலுக்கு ஒரு தரப்பு ஆதரவும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மோர்சியின் ஆதரவாளர்கள் பின்வாங்கி கெய்ரோ நகரின் மையப்பகுதியில் இருக்கும் மசூதியில் தஞ்சம் புகுந்தனர். அந்த மசூதியைப் படையினர் சுற்றிவளைத்து, ஆயிரக் கணக்கானவர்களை கைது செய்துள்ளனர். ஆனாலும் போராட்டம் தொடரும் என்றும் மோர்சியை மக்கள் முன் கொண்டுவரும் வரை எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் மோர்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்து இராணுவ நடவடிக்கையை ஐ.நா., அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ஈரான், கட்டார், துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்துள்ளன. ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எகிப்து விவகாரம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஜெனீவாவில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் மனித உரிமையகம் விடுத்த அறிக்கையில், இராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக, நீதியான, நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் தலைவர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

“சிரியாவில் புரட்சி வெடித்து, தற்போது உள்நாட்டு போராக மாறி விட்டது. அங்கு நிலைமை மிக மோசமாகி விட்டது. சிரியாவைத் தொடர்ந்து எகிப்தும் உள்நாட்டு போரை சந்திக்கும் நிலை உருவாகி வருகிறது. அங்கும் மோதல்கள், உள்நாட்டு போராக மாற வாய்ப்புள்ளது. எனவே, எகிப்தில் அனைத்து தரப்பினரும் அமைதி காத்து அரசியல் சுமூக நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டீன் கஜகஸ்தான் செல்லும் வழியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்.

எகிப்து நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் எகிப்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டு முழுமையான ஜனநாயகத்துக்கு திரும்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது. எகிப்து மக்கள் சுதந்திரமாக தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் இராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரான்சின் அதிபர், பிரான்சுக்கான எகிப்துத் தூதரை அழைத்து அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். 

இதேவேளை, இராணுவ நடவடிக்கைகளுக்கு சில நாடுகள் ஆதரவும் வழங்கியுள்ளன. முக்கியமாக அரபு நாடுகளான சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபுக் குடியரசும் எகிப்தில் நடந்த மாற்றத்தை வரவேற்பதாகக்கூறி எகிப்து இராணுவத்துக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளன. முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்தின் நட்பு நாடாக இருக்கும் கட்டார் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அத்துடன், இராணுவ நடவடிக்கையை கண்டிக்க மறுத்ததன் மூலம் மறைமுகமாக எகிப்து இராணுவத்துக்கு பல்வேறு உலக நாடுகளும் தங்களது ஆதரவினை அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை இராணுவம் கவிழ்ப்பது கவலைக்குரியது என்று தெரிவித்திருக்கின்றது. ஆனால், மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தை கண்டிக்கவோ அல்லது எகிப்தில் நடந்தது இராணுவ புரட்சி என்று கூறுவதற்கோ முன்வரவில்லை. இந்த இராணுவப் புரட்சிக்குக் காரணமே அமெரிக்காதான் என்றும் குற்றம்சாட்டப்படுகின்றது. சர்வாதிகார, மக்கள் விரோத ஆட்சியாளர்களை அகற்றவேண்டும் என்ற எண்ணம் அரபுலக நாட்டு மக்களிடம் இருந்தாலும், புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் யாருக்கு சார்பாக இருக்க வேண்டும் என்ற போட்டியே இன்று அரபுலகில் தொடரும் மோதல்களுக்கு காரணம்.

அதனை அடுத்த வாரம் பார்ப்போம்...

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32540/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.