Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணத்தோட்டம் | ஒரு விவசாய புரட்சியை நோக்கி உங்களை இழுத்துச் செல்ல? பாகம் - 1

Featured Replies

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0

 

'பணத்தோட்டம்' என்ற பெயரில் உங்கள் முன் விரியும் இந்தத் தொடர், பெரிதான ஒரு விவசாய புரட்சியை நோக்கி உங்களை இழுத்துச் செல்வதற்காக எழுதப்படுகிறது.

 'விவசாயமும் லாபகரமான விஷயம்தான்' என்பதை உரக்கச் சொல்லப்போகும் இந்தத் தொடர் ஒருவழிப் பாதையல்ல... அதனால்தான் விவாதத் தொடர் என்றே பெயர் சூட்டியிருக்கிறோம். இங்கே நாங்கள் முன் வைக்கும் விஷயங்கள்... திட்டங்கள் எல்லாம் முடிந்த முடிவல்ல.

இந்தத் விவசாய புரட்சி திட்டத்தை மேலும் செம்மைப் படுத்தும் வகையில் உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை எழுதலாம். எதிர்கருத்துக்கள் இருந்தாலும் எழுதலாம். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கடைசியில் வெற்றிகரமான ஒரு தீர்வை காண வேண்டும் என்பதுதான் முக்கியம். எந்த வகையிலாவது விவசாயம் தூக்கி நிறுத்தப்பட வேண்டும் என்பதை நோக்கியே நாம் கைகோப்போம்.

''ஓரு பக்கம் ஷேர் மார்க்கெட்ல சென்செக்ஸ் பத்தாயிரம்... பதினையாயிரத்தை தாண்டி சீறுதுங்கறாங்க. அதனால இந்திய பொருளாதாரமே பொங்கி பெருகுதுங்கறாங்க.

இன்னொரு பக்கம் இந்த பாழாப் போன விவசாயி செத்து சுண்ணாம்பா போயிட்டுருக்கான். இந்த நாட்டோட 'முதுகெலும்பு'னு சொல்லப்படுற விவசாயியை காப்பாத்த முடியாத அந்தப் பொருளாதாரம், அப்ப யாருக்காக மட்டும் பொங்கிக்கிட்டிருக்கு?''

உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளையட்டி சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் விவசாய பிரதிநிதி ஒருவர் ஆதங்கத்துடன் இப்படி வெடித்தார்!

அதைக் கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு... 'சுருக்' என்று தைத்தது. காரணம்... அந்தக் கேள்வியில் இருந்த நியாயங்கள் அத்தனை வலுவானவை.
அன்றைய தினம் அப்படி பொங்கிய விவசாயி, கோவைக்கு கூப்பிடு தூரத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்திருந்தவர்.

அவர்தான் என்றில்லை. மதுரைக்கு மேற்கே... நெல்லைக்கு நெருக்கத்தில்... தஞ்சாவூரை தாண்டி... என தமிழகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் விவசாயிகள் இப்படி கேள்வி எழுப்பிக் கொண்டிருக் கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

உலக அளவில் இந்தியாவின் ஸ்திரத் தன்மைக்கு அடிப்படைக் காரணம், உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததுதான். 'ஒரு நாடு பொருளாதார வல்லரசாக வேண்டுமென்றால், உலக அளவில் விவசாயத்தில் தலைசிறந்த நாடாக இருக்க வேண்டும்' என்பது எழுதப்படாத விதி. உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்பது நாட்டின் இறையாண்மைக்கு மிகமிக முக்கியம்!


பொக்ரான் அணுகுண்டு பரிசோதனைக்குப் பின் இந்தியாவின் மீது பொருளாதார ரீதியில் சில தடைகள் விதிக்கப்பட்டபோதும் நாம் அதைச் சட்டை செய்யவில்லை. காரணம், உணவு மற்றும் இதர துறைகளில் நாம் பெற்றிருந்த தன்னிறைவே நமக்குப் பெரிய பலமாக இருந்து நம்மைக் காப்பாற்றியது. நாடு சுதந்திரம் பெற்றபோது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( GDP- Gross Domestic Product ) விவசாயத்தின் பங்கு கணிசமானது. இன்றோ... பாதாளம் நோக்கிப் பாய்கிறது.

விவசாயத்தையே நம்பியிருக்கும் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைகிறது. பூர்வீகமாக விவசாயம் செய்து வந்த பல குடும்பங்களின் இன்றைய தலைமுறையினர் தொழில் நிறுவனங்களில் பணி புரியும் மோகத்தோடு நகர்புறங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் படையெடுக் கின்றனர். காரணம்... 'விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக இல்லை' என்ற எண்ணம் பரவலாக வேர் விட்டதுதான்.


'நம் ஜீவனே விவசாயம்தான்... அதிலும் லாபம் பார்க்க முடியும்' என்று அவர்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்வதற்கு போதுமான ஆட்கள் இல்லை. அரசுத் தரப்பிலும் பெரிதாக முயற்சிகள் இல்லை. ஆனால், அதே அரசு இன்றைக்கு 'செஸ்' ( SEZ ) எனப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ( Special Economic Zones ) அமைப்பதற்காக விவசாய நிலங்களை வளைத்துக் கொடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் துடிப்பில் பத்தில் ஒரு பங்கை விவசாயத்தின் பக்கம் காட்டினால் போதும்... நம் விவசாயம் பிழைத்துக் கொள்ளும்.

அரசுத்தரப்பில் ஏகத்துக்கும் மரியாதை காட்டப்படும் 'செஸ்' என்பது கடலளவு விஷயங்கள் நிறைந்தது. இங்கே புல் நுனியளவுக்கு பார்த்துவிட்டு மேலே தொடர்வோம்.. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பெரிய பெரிய தொழிற்சாலைகள் அமையப் போகின்றன.

எந்த வித இடர்பாடுமில்லாமல் பொருட்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி மூலம் அன்னிய செலவாணியை பெருக்குவதுதான் இதன் அடிப்படை சித்தாந்தம். இந்தத் தொழிற்சாலைகளுக்காக வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி செலுத்த வேண்டியதில்லை, லைசென்ஸ் வாங்க வேண்டியதில்லை, உள்நாட்டில் பொருட்கள் வாங்கினால் அதற்கு வரி விலக்கு, சேவை வரி இல்லை. வருமான வரி விலக்கு, 100 சதவிகிதம் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதி என்று சலுகை மழை பொழிந்து கொண்டிருக்கிறது அரசு.


'அப்பப்பா எத்தனை எத்தனை சலுகைகள். இதேபோல விவசாயத்துக்கும் சலுகைகளைக் கொடுத்தா எங்க தோட்டமெல்லாம் பணத்தோட்டமாகிவிடுமே!' என்ற விவசாய புரட்சி யோசனை உங்களுக்குள் ஓட ஆரம்பித்து விட்டதா.... அதைத்தான் நாங்களும் சொல்ல வருகிறோம். 'செஸ்' கோட்பாடுகளை அப்படியே படியெடுத்து, விவசாயத் துறையில் புகுத்திப் பார்த்தால். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது எப்படி?

வரும் தலைமுறையினரை விவசாயத் தொழிலில் ஈடுபடச் செய்வது எப்படி?

மாணவர்களை விவசாய பட்டப் படிப்புகளுக்கு போட்டி போட வைப்பது எப்படி?

எல்லோருமே விவசாயத்தில் காலடி வைக்கும் நிலையை உருவாக்குவது எப்போது?

மியூச்சுவல் ஃபண்டு, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் என்று முதலீடு செய்பவர்களை எப்படி விவசாயத்தில் முதலீடு செய்ய வைப்பது?
இது போன்ற கேள்விகளுக்கு விடை எளிதாக கிடைத்துவிடும்.


'செஸ்' எனப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போல, 'செஸ்' ( SAZ ) என்ற பெயரில் சிறப்பு வேளாண் மண்டலங்களை ( Special Agricultural Zones ) உருவாக்குவது என்பது கிட்டத்தட்ட கூட்டுப்பண்ணை விவசாயம் மாதிரிதான்.

இது நம்ம நாட்டுக்கு மிகமிக பொருத்தமானதும் கூட... என்று ஐம்பது ஆண்டு காலத்துக்கு முன்பே உடுமலை நாராயணகவி, சினிமாவில் பாட்டாக எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

விவசாய புரட்சி தொடரும் 
Thanks to Pasumai Vikatan

 

http://enntamilnadu.blogspot.ch/2014/06/special-agricultural-zones-1.html

  • தொடங்கியவர்

ஒரு விவசாய புரட்சியை நோக்கி உங்களை இழுத்துச் செல்ல? பாகம் - 2

 

'விவசாயம் நல்ல லாபம் தரும் தொழிலா?' என்பது உட்பட பல கேள்விகளைக் கடந்த இதழில் எழுப்பியிருந்தோம். அதை மேற்கொண்டு விவாதிக்கும் வகையில்... இன்னொரு கேள்வி!

பின் வரும் நிறுவனங்களை உங்கள் பார்வையில் எப்படி நினைக்கிறீர்கள்?

ஐ.டி.சி., ஹிந்துஸ்தான் லீவர், ரிலையன்ஸ், பெப்சி, கோகோ கோலா, பாரதிடெல், கோத்ரெஜ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா... இப்படிப்பட்ட நிறுவனங்களின் பெயரைச் சொன்னாலே, சிகெரெட், சோப், ஷாம்பூ, பற்பசை, பெட்ரோலியப் பொருட்கள், ஜவுளி, குளிர்பானங்கள், தொலைபேசி, மாட்டுத் தீவனம், ஸ்கார்பியோ கார், டிராக்டர் இவைதானே வரிசையாக உங்களுக்கு ஞாபகம் வரும்.

இன்று இந்நிறுவனங்கள் வேறு ஒரு விஷயத்தையும் தங்களின் அடையாளமாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றன. அந்த வேறொரு விஷயம்... இன்று பலரும் 'ஐயோ ஆளவிடுங்க சாமி' என்று பயந்து, தலைதெறித்து ஓடத்தயாராக இருக்கும் விவசாயம்தான்!

ஆம், இந்த நிறுவனங்கள் மட்டுமல்ல... வேறு பல நிறுவனங்களும் கூட விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த துறைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இன்றைக்கு மின்னல் வேகத்தில் இறங்கிக் கொண்டிருக்கின்றன.

உங்களில் பலரும் சொல்வது... 'விவசாயம், லாபம் தரும் ஒரு தொழில் இல்லை'. அது உண்மை என்றால், லாபம் குவிப்பதை லட்சியமாகக் கொண்டிருக்கும் பெரியபெரிய நிறுவனங்கள் எல்லாம் எப்படி அதில் இறங்குவார்கள்? ஒரே ஒரு வித்தியாசம்; இவர்கள் எதைச் செய்தாலும் பெரிய அளவில் செய்கிறார்கள்.

மொத்த வியாபாரம் மாதிரி!

மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் ஒருங்கிணைப்பு ( consolidation ) மற்றும் வியாபார அளவு ( Scale) முக்கியமென்பார்கள். நேரடியாக விவசாயத்தில் இறங்காமல், இடைத்தரகர்களைத் தவிர்த்து, தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு உதவி செய்து, அதனை கொள்முதல் செய்து லாபம் பார்க்கின்றன இந்த நிறுவனங்கள்.

விவசாயிகள் அதிகமான லாபத்தைக் காண வேண்டுமானால், பெரிய நிறுவனங்களின் வியாபாரத் தந்திரத்தை தங்களது விளைபொருட்கள் உற்பத்தியில் காட்ட வேண்டும். அதாவது, ஒருங்கிணைப்பு மற்றும் விவசாயத்தின் அளவு! இந்த தந்திரங்கள் இரண்டு பெரிய விளைவை உண்டு பண்ணும்.

ஒன்று ஆண்டு முழுவதும் நிலையான வருமானத்தை விவசாயத் தொழிலுக்குத் தரும்... இரண்டாவது, விளைபொருட்களை உற்பத்தி செய்யும் செலவு குறையும். இதனால் மக்களுக்கு விற்கும் விலையில் மாற்றமில்லாமல், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
பெரிய நிறுவனங்களைப் போல, விவசாயமும் ஒரு பிரமாண்டமான தொழிலாக, ஏனைய தொழில்களோட போட்டிபோட வேண்டுமென்றால், நாமும் பெரிதாக வளர வேண்டும்.

நம் கைகள் இணைய வேண்டும். இதைத்தான் நமது வாசகர் சிவசங்கரன், 'இமெயில்' மூலம் ஆர்வத்துடன் விவரித்திருக்கிறார். இவரின் ஈடுபாடும் மண்ணின் மீது இவர் வைத்திருக்கும் பாசமும் நம்மை வியக்க வைக்கிறது. இன்றைய தேதியில் உலகின் எல்லாவித வளர்ச்சிக்கும் முன்னணி நாடாக பெரும்பாலோர் சுட்டிக் காட்டும் நாகரிக தேசமான அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கிறார் சிவசங்கரன்.

'பட்டனைத் தட்டிவிட்டா ரெண்டு இட்லியும் சட்னியும் பட்டுனு பக்கத்தில் வந்துடணும்' என்று 'கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணன் சொல்வது போல... வசதி-வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லாத அப்படிப்பட்ட தேசத்தில் வசிக்கும் அவரின் மனமே மண்ணை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது.
சரி..., சிவசங்கரன் என்ன தான் எழுதியிருக்கிறார்?


'உங்கள் பணத்தோட்டம் கட்டு ரையைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகெ £ள்ள ஆவலாக உள்ளேன். பிரச்னைகளுக்கு மத்தியில் வாழும் நம் விவசாயிகளைப் பற்றியும், அவர்களின் மீது அக்கறை காட்டாத நம் அரசைப் பற்றியும் எனக்கு எப்போதுமே கவலை உண்டு. எந்த ஒரு நாட்டின் பொருளா தாரத்துக்கும் முதுகெலும் பானவர்கள் விவசாயிகள்தான்.

அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதோடு நாம் உண்ணும் ஒவ்வொரு கவளம் சோற்றுக்கும் நன்றி செலுத்தி விட்டுத்தான் உண்ண வேண்டும்.

அந்நியச் செலாவணியைக் கொண்டுவரும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நமது முழுக்கவனத்தையும் செலுத்தினால் ஏகப்பட்ட பணம் குவியும். ஆனால், ஒரு காலகட்டத்தில் உணவை இறக்குமதி செய்வதற்காக இப்பணம் மொத்தத்தையும் நாம் திருப்பிச் செலவு செய்யவேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

விவசாயத்தைப் பற்றிய நம் மக்களின் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். நம் நாட்டின் இதயமே அங்குதான் இருக்கிறது. நான் தமிழக கிராமத்தைச் சேர்ந்தவன் என்றாலும் எனக்கென்று சொந்தமாக விவசாய நிலம் இருந்ததில்லை. ஆனால், இனி வரும் காலங்களில் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருக்கிறது. கொஞ்ச காலமாகவே கூட்டுறவு முறையில் விவசாயப் பண்ணை அமைக்க வேண்டும் என்று ஒரு திட்டம் என்னுள் ஊறிக்கொண்டிருக்கிறது.

கிராமங்களில் வளர்ந்தவன் என்கிற வகையில், வரப்புகளால் விவசாய நிலங்கள் பிரிக்கப்பட்டி ருப்பதைப் பார்த்திருக்கிறேன். தாத்தாவிடமிருந்து தந்தைக்கும் அவர் சகோதரர்களுக்கும் பின் பேரன்களுக்கும் என பிரிந்து வருகையில், பயிரிடும் இடம் சுருங்கி வரப்புகள் அதிகரிக்கும்! ஒரு கால கட்டத்தில் மிகச் சிறிய இடமே மிஞ்சும். இதைப் பார்க்கையில் வரப்புகளால் இப்படி இடம் வீணாகிறதே என என் மனம் வருந்தும்.

நாம் என்ன செய்ய வேண்டும்? விவசாய விளை நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்; அனைவரும் பங்குதாரர்களாக இணைந்து ஒரு அமைப்பைத் துவங்க வேண்டும். வரப்புகள் உடைந்து... நிலப்பரப்பு விரியும் பட்சத்தில் லாபமும் கூடும்.

நாம் எல்லோருமே உரிமையாளர் களாகிவிட்டதால், அதற்குத் தக்க ஒவ்வொருவரும் நம் உழைப்பையும் தேவையான பணத்தையும் கொடுப்போம். நிச்சயமாக அதிக வருவாயை ஈட்ட முடியும்.
விவசாய சமூகத்தையே ஒருங்கிணைக்கும் இத்திட்டம் 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை நிச்சயம் புரியவைக்கும். முக்கியமாக, வரப்புச் சண்டைகள் ஓய்ந்து சமூக அமைதி நிலவும்!


நம் விவசாயிகளின் வாழ்க்கையில் மீண்டும் 'பசுமை'யைக் கொண்டுவரும் உங்கள் முயற்சிக்கு எனது நன்றி.
அன்புடன்
சிவசங்கரன்'


இவரைப் போல பலரும் இ-மெயில், கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக இந்த விவாதத் தொடரில் நம்மோடு இணைந்த படி இருக்கிறார்கள். அவர்களில் பலரும் விவசாயத்தில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள், விவசாயத் தொழிலில் ஈடுபடும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

அதற்கு முதலில் நமது மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். விவசாயத்தை தொழிலாக பார்க்க வேண்டும்.
சரி... விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றும்போது எப்படி இந்த மாற்றம் ஒரு உயரிய சமூக மேம்பாட்டை உருவாக்கும்?

விவசாய புரட்சி தொடரும் 

 

http://enntamilnadu.blogspot.ch/2014/06/corporate-agriculture-in-tamil-1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.