Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் இலக்கியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் இலக்கியம்

முனைவர் க.பூரணச்சந்திரன்

pulam-peyar-ilakkiyam2.jpg

பழங்காலத்தில் ஒரு நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்வதைப் புலம் பெயர்தல் என்று குறித்தார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் மிகுதியாகக் கிடையாது. பழந்தமிழகத்தில் நாடு என்பது மிகக்குறுகிய இடம்தான். இன்றைய பார்வையில் ஒரு முந்நூறு நானூறு கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு நாடுகள் வந்து விடும். இப்படி நாடுவிட்டு நாடு செல்பவர்களையும் அக்காலத் தமிழர் மதிக்க வில்லை. புலம்பெயர்வது என்ன-ஊரைவிட்டுச் செல்வதுகூட விரும்பப்பட வில்லை என்றே தோன்றுகிறது. பூம்புகார் நகரைப் பற்றிக் குறிப்பிடும்போது “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” அங்கு வாழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதாவது அந்த நகரத்தைவிட்டு மக்கள் இடம்பெயரவே மாட்டார்களாம்!

பழங்காலத்தில் சாதுவன் போன்ற வணிகர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்த செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்கிப் புலம்பெயர்ந்து வாழ்ந்ததற்கான குறிப்புகள் இல்லை. ஆனால் பழந்தமிழகத்தில் யவனர் சோனகர் போன்ற பிறநாட்டினர் வந்து வாழ்க்கை நடத்தி வந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட புலம்பெயர் ‘மாக்களைச்’ சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. (கவனிக்கவும்-புலம் பெயர்பவர்கள் ‘மாக்களாம்’–அதாவது மனிதத்தன்மையில் குறைந்தவர்களாம்!) புகார் நகரில் புகார் நகர மக்களோடும் புலம்பெயர் மாக்கள் “கலந்து இனிது உறைந்ததாகத்” தெரிகிறது.

ஆக, தமிழ்ச்சமுதாயம் அண்மைக்காலம்வரை புலம்பெயர்தலை அறியாத ஒரு நிம்மதியான சமுதாயம்தான். ஈழத்தமிழர்கள் அந்தநாட்டுக் குடிமக்களே ஒழிய, தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அல்ல. உண்மையில் இன்றுள்ள சிங்களவர்தான் அசோகச் சக்ரவர்த்தியின் காலத்தில் இலங்கையில் குடியேற்றப்பட்ட புலம்பெயர் மாக்கள். ஆனால் இன்று புலம்பெயர்ந்தவர்கள், உண்மைக் குடிகளான தமிழரை அழித்தும் வெளியேற்றியும் இருக்கும் தன்மை ஒண்டவந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாகத்தான் தோன்றுகிறது.

உண்மையில் தமிழ்நாட்டினருக்குப் புலம்பெயர் இலக்கியம் இல்லை. அண்மைக்காலத்தில் ஈழத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்குத்தான் புலம் பெயர் இலக்கியம் உண்டு. அதனால்தானோ என்னவோ தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இந்தத் துறையில் அதிக ஆர்வம் ஏற்படவில்லை.

ஆங்கிலேயர்கள் வந்தபிறகுதான் நகரத்தார் பலர் மலேயா போன்ற நாடுகளுக்குச் சென்றார்கள். கண்காணிகளால் இங்குள்ள ஏழைமக்கள் பலர் இலங்கை மலேசிய போன்ற நாடுகளுக்குத் தேயிலைத் தோட்ட, ரப்பர் தோட்ட உழைப்பாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். இவர்களைத்தான் முதன் முதலாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் எனக் குறிக்கமுடியும். இப்படிப்பட்ட புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி முதன்முதலில் சிறுகதை எழுதியவர் புதுமைப்பித்தன். நாற்பதுகள் ஐம்பதுகளில் சில சிறுகதைகள் வந்துள்ளன. ப. சிங்காரம் என்னும் எழுத்தாளர் தமது இரு நாவல்களில் மலேசியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளார். அநேகமாகப் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றித் தமிழ்நாட்டில் நாவல் எழுதியவர் அவராகத்தான் இருக்க வேண்டும். அகிலனின் ‘பால்மரக் காட்டினிலே’ போன்ற நாவல்களும் புலம் பெயர்ந்தவர்கள் பற்றியவைதான். புலத்திலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக மீண்டும் தாய்நாட்டுக்கு இடம்பெயர்ந்த பர்மாத் தமிழர்களைப் பற்றி மு. வ. ‘பெற்ற மனம்’ என்ற நாவலில் எழுதியுள்ளார். இவையெல்லாம் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றிப் பிறர் எழுதியவை.

pulam-peyar-ilakkiyam3.jpg

நாற்பதாண்டுகளாகத்தான் வேலைதேடிப் புலம்பெயர்ந்த தமிழ்நாட்டவர்கள் சிலரைக் கூறமுடியும். அதிகமாகப் புலம்பெயர்ந்தது ஈழத்தமிழர்கள்தான். வேறு வழியில்லாமல் தங்கள் சொந்த நாட்டைவிட்டு அரசியல் காரணங்களுக்காக அந்நிய நாடுகளில் புகலிடம் தேடவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இன்று இலங்கைத் தமிழர்கள் கனடா முதல் ஆஸ்திரேலியா வரை, ஸ்வீடன் முதல் நைஜீரியா வரை உலகெங்கும் பலநாடுகளுக்கு வீசியெறியப்பட்டிருக்கிறார்கள். குடிபெயர்தலைக் குறிக்க மைக்ரேஷன், டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்னும் இரு சொற்களும் ஆளப்படுகின்றன. மைக்ரேஷன் என்பது ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குப் பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்தலாகக் காணக் கூடாது என்பது பன்னாட்டு வரையறை. உலகில் பல சமூகங்கள் புலம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சான்றாக ஆப்பிரிக்க மக்கள் பலநாடுகளுக்குப் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. அடிமைகளாகவே அவர்கள் அமெரிக்க நாட்டிற்கு மூன்று நூற்றாண்டுகள் முன்பு புலம்பெயர்க்கப்பட்டார்கள். யூதர்கள்தான் பல காலமாகவே உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள். புலம் பெயர்ந்தவர்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான டயஸ்போரா என்பது யூத மக்களில் புலம் பெயர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் இஸ்லாமியர் வாழ்ந்த நாடுகளிலிருந்து சில பகுதிகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்களுக்கென ஒரு நாடு ஏற்படுத்தப்பட்டது.

ஸ்டாலின் காலத்து ரஷ்யாவிலிருந்து பல எழுத்தாளர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களில் ரஷ்ய உருவவியல் குழுவைச் சேர்ந்த ரோமன் யாகப்சன் போன்ற பலருண்டு. ரஷ்ய உருவவியல் குழுவினர், செக்கோஸ்லவகியாவில் ப்ராஹா நகரில் முக்கியமான மொழியியல் வட்டத்தைப் பின்னர் உருவாக்கினார்கள். நவஃப்ராய்டியச் சிந்தனைக் குழுவினரும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தனர். ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்த முக்கியமானதோர் எழுத்தாளர் சோல்சினிட்ஸின். இவருடைய கேன்சர் வார்டு என்ற நாவல் புகழ்பெற்றது.

pulam-peyar-ilakkiyam4.jpg

இந்தியாவின் வடபகுதியிலிருந்து பலர் ஐரோப்பாவுக்குச் சில நூற்றாண்டுகள் முன்னரே புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களை ஐரோப்பிய இலக்கியங்கள் நாடோடிகள் (ஜிப்சிகள்) எனப் பதிவுசெய்துள்ளன. இவர்கள் நிலம் விட்டு நிலம் பெயர்ந்துகொண்டே இருப்பதால் புதிதுபுதிதான பொருள்களை அறிமுகப்படுத்துபவர்களாகவும், அரிய நோய்களையும் எளிமையான இயற்கை முறைகளால் குணப்படுத்துபவர்களாகவும், மந்திரவாதம் சூனியவாதம் செய்பவர்களாகவும் ஐரோப்பிய இலக்கியங்கள் சித்திரித்துள்ளன. ஆனால் இடம்பெயர்பவர்களுக்கு ஒருபோதும் மதிப்புக்கிடையாது. எனவே இவர்களுக்கு எந்த ஐரோப்பிய நாடும் இடம்தராமல் இன்றுவரை விரட்டிக் கொண்டே இருக்கின்றன. ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலத்தில் இஸ்லாமியரும் புலம்பெயர வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அரசியல் தஞ்சம்கோரி இடம்பெயர்ந்தவர்கள், காலனியாதிக்க விளைவுகளின் பொருட்டுக் குடிபெயர்ந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். குடியேறிய வசதி படைத்தவர்கள், சென்ற நாட்டிலேயே குடியுரிமை பெற்றார்கள். இவர்கள் யாவருமே புலம்பெயர்ந்தவர்கள் என்பதில் அடங்குவர்.

புலம்பெயர்தல் என்ற சொல்லோடு புலம்புதலுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. என்றாலும் புலம்புதல், புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு முக்கியப் பொருளாக இன்று அமைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த வாழ்க்கை விடைசொல்ல முடியாத பல வினாக்களை எழுப்புகிறது. தாய்நாட்டில்(!) வசிக்கும் நம் போன் றோர் இத்தகைய பிரச்சினைகள் குறித்துச் சிந்திப்பதே இல்லை. நமது தமிழ் இன அடையாளம் பற்றி நாம் சிந்தித்திருக்கிறோமா? நாம் சுதந்திரமான, நமக்குரிய வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

புலம்பெயர் வாழ்க்கை பலருக்கு நல்வாழ்வைத் தந்தது போன்ற தோற்றம் இருப்பினும் உண்மையில் அதிக அளவுக்கு வலியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. இங்கேதான் நமக்கு வாழ்க்கையா, அங்கேதானா என்ற ஊடாட்டங்கள் அநேகமாக இன்று குறைந்துபோய் அங்கேதான் என்று பலருக்கு முடிவாகி விட்டது. என்றாலும் நம்பிக்கையற்ற நிலையில், புலம்பெயர் இலக்கியம் பெரும்பாலும் விரக்தியையும் சோகத்தையுமே கொண்டிருக்கிறது.

pulam-peyar-ilakkiyam6.jpg

புலம்பெயர் இலக்கியம் குறித்து நிறைய விவாதங்கள் மேற்கிலும் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. புலம்பெயர் இலக்கியத்தைப் புகலிட இலக்கியம் என்றும் குறிப்பிடுகின்றனர். புகலிட இலக்கிய முயற்சிகளில் பின்வருவனவும் அடங்கும்:

1. அரசின் ஒடுக்குமுறை, இன அழிப்பு, அதனால் ஏற்படும் சீரழிவுகளை வெளிப்படுத்துவது;

2. புகலிடத்தின் புதிய சூழல்கள் தரும் அனுபவங்களை வெளிப்படுத்துவது;

3. போர் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் பற்றிய எவ்விதத் தொடர்புமற்ற, சாதாரண வாழ்க்கை பற்றிய படைப்புகள்.

என்றாலும் இவற்றை இன்னும் விரிவாகக் காண இடமிருக்கிறது.

ஃ பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே சீர்குலைந்துவரும் குடும்ப உறவுகள் அல்லது உறவு இடைவெளிகள் பற்றிய பிரச்சினை புலம்பெயர்ந்தவர்களுக்கு முக்கியமாகிறது. மண்ணை இழந்து, மக்களை இழந்து நிற்கும் ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சொத்து அவர்களுடைய மக்கள். அவர்களுக்குத் தமிழ் தெரிவதில்லை. புகலிடத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் நேற்றைய வாழ்க்கையை நிலைநாட்ட விரும்புகின்ற பெற்றோர்; இன்றைய வாழ்க்கையை மட்டுமே அறிந்து, நாளைய கனவில் மிதக்கும் இளந்தலைமுறையினர்- என உளவியல் ரீதியாகப் பிரிந்துவிடுகின்றனர்.

ஃ இளந்தலைமுறையினர்க்குத் தமிழ் தெரிவதில்லை என்றால், முன்பு சென்றவர்களுக்கு வாழுகின்ற நாடுகளின் மொழிகளோடும் கலாச்சாரத்தோடும் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை. அறிதலில் ஆர்வமற்ற போக்கும் நிலவுகிறது. அறிந்துகொண்டாலும் அவற்றைப் பின்பற்ற முடிவதில்லை. பிறருடன் நட்புறவு கொள்ள முடிவதில்லை.

ஃ மொழியறிவில்லாததால் சுரண்டலுக்கு பலியாகி, தொடர்ந்து சில குறிப்பிட்ட பணிகளுக்குள் உழலுகின்ற நிலை பல தமிழர்களுக்கு இருக்கிறது. இதனால் ஏற்படும் மனவியல் ரீதியான பாதிப்பும் மிகுதி.

ஃ உலகில் நமது மொழிதான் உயர்ந்தது, நமது கலாச்சாரம்தான் பழமையானது என்னும் மனப்பான்மை புகலிடத் தமிழர்கள் சிலருக்கு விடாப்பிடியாக இருக்கிறது. புகலிடத்திலும், தென்னிந்தியப் பொழுதுபோக்குச் சாதனங்களிலேயே மயங்கிக் கிடப்பவர்கள் பலர்.

pulam-peyar-ilakkiyam1.jpg

புலம்பெயர் இலக்கியம் இப்போது இரு நாடுகளிலிருந்துமே எழுதப்படுகிறது. சொந்த நாட்டில், வாழ்வு மறுக்கப்பட்டவர் தாங்கள் இழந்துவிட்ட நாட்டையும் மக்களையும் உறவுகளையும் பற்றிய பிரிவாற்றாமையை வெளிப்படுத்துவதாகப் புகலிட இலக்கியம் இருக்கிறது. அவை தங்கள் வாழ்க்கை சூறையாடப்பட்டதற்கான காரணிகளைத் தேடுகின்றன. யுத்தத்தினால் விளையும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்துபவையாகச் சில உள்ளன. புகலிட நாட்டில், அதன் பண்பாடு, அரசியல் தன்மைகளுக்குள் அகப்பட்டு முகமிழந்து தவிக்கும் தவிப்பை உணர்த்துவதாகவும் புகலிட இலக்கியம் உள்ளது. இன்னொரு நாட்டில் அந்நியர்களாகவும், அந்நாட்டு மக்களுக்கு உபத்திரவம் தர வந்தவர்களாகவும் உதவாதவர்களாகவும் பார்க்கப்படும் நிலை இருப்பதால், அம்மக்கள் தங்களை தலித்துகளாகவே உணர்கின்றனர். மேம்போக்காக இன்று நிறவேற்றுமை இல்லை என்று சொல்லப்பட்டாலும், பல நாடுகளில், பலவித வீதங்களில், வெள்ளையர் -வெள்ளையர் அல்லாதவர் பாகுபாடு நிலவவே செய்கிறது.

“அதிகாரத்துக்கு எதிரான போராட்டம் என்பது மறதிக்கு எதிராக ஞாபகங்களின் போராட்டம்தான்” என்று செக்கோஸ்லவகிய எழுத்தாளர் மிலன் குண்டேரா குறிப்பிடுகிறார். நினைவுகள் இறக்கும்போது மனிதன் உயிர்ப்பற்ற பிணமாகிவிடுகிறான். நினைவுகள்தான் புலம்பெயரும் மனிதனைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. எனவே புலம்பெயர் எழுத்தாளர்கள் பெரும்பாலும் அதிகாரத்துக்கு எதிராக இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் தாய்நாடு கற்பனையானது என்பதுபோலவே புலம்பெயர்ந்த நாடும் அவர்களுக்குக் கற்பனைகளை எதிர்நோக்கியதாகவே இருக்கிறது. புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் இருத்தல் ஒரு நிலப்பரப்பில் காலூன்றியது அல்ல. ஒரேசமயத்தில் அவர்கள் காலனியாதிக்க இனவெறிக்கும், தமது சொந்த தொலைதூர நாட்டின் மூடநம்பிக்கைகளுக்கும் கொலைகளுக்கும் பெண்அடிமைத் தனத்துக்கும் எதிரானவர்கள். அவர்கள் புகலிட நாட்டிலும் அதிகார அரசியலுக்கு எதிராகவே இருப்பார்கள். தொலைதூரச் சொந்த நாட்டிலும் அவர்கள் அதிகார அரசியலுக்கு விமரிசகர்களாக இருந்தவர்கள்தானே அவர்கள்? ஆனால் வந்த நாட்டிலும் விடமுடியாத பழைய நம்பிக்கைகளும், அடிமைத்தனச் செயல்பாடுகளும் வந்தநாட்டின் வக்கிரங்களும் அவர்களை பாதித்து முரண்களை ஏற்படுத்துகின்றன. இந்த முரண்களுக்குள் வாழ்வதாகவே அவர்களது எழுத்துக்கள் அமைகின்றன.

இன்று உலகஅளவில் புலம்பெயர்ந்த இலக்கியத்தின் பாதிப்பும் வீச்சும் மிகுதி. இங்கிலாந்தில் வசிக்கும் சல்மான் ருஷ்தியின் நாவல்கள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. ஈரான் நாடு அவருக்குக் கொலைத் தண்டனை விதித்துள்ளது.

இந்திய வம்சாவளியினரில் இன்னொருவர் வித்யாதர் சூரஜ் பிரசாத் நைபால். டிரிடினாடில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்பவர். (அவருடைய ‘பெண்ட் இன் தி ரிவர்’ ஆப்பிரிக்கச் சர்வாதிகார ஆட்சியின்கீழ் வாழ்வதிலுள்ள பிரச்சினைகளை விளக்கும் நாவல்.)

ஜோசப் பிராட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர். ஸ்டாலின் காலத்தில் புலம்பெயர்ந்தவர். அமெரிக்காவில் இறந்தார். சுஜாதா பட், குஜராத்தில் பிறந்து பிரிட்டனில் வாழ்பவர். (மங்கீ ஷேடோஸ், ஸ்டிங்கிங் ரோசஸ் போன்ற நூல்களை எழுதியவர்). தஸ்லிமா நஸ்ரீன் பற்றி அறியாதவர் குறைவு. வங்காளதேசத்தில் பிறந்து அகதியாகச் சுற்றிவருபவர். (இவரது முக்கிய நாவல் லஜ்ஜா. )

சியாம் செல்வதுரை, இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்பவர். இவருடைய முக்கியமான நாவல் ஃபன்னி பாய். ஏ. சிவானந்தன், இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்தவர். ரேஸ் அண் கிளாஸ் என்ற இதழை நடத்திவரும் இவரது மிக முக்கியமான நாவல் ‘வென் மெமரி டைஸ்’. கம்யூனி டீஸ் இன் ரெசிஸ்டன்ஸ் என்னும் முக்கியமான நூலையும் எழுதியுள்ளார். ஜீன் அரசநாயகம், இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்த தமிழ்ப்பெண்கவிஞர்.

உலகில், புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமாக, பென் ஆக்ரி, செர்கே பேகஸ், ஏரியல் டாப்மேன், ழான் ஜோர்டன், இல்மஸ் குனே, மிலன் குண்டேரா, வோலே சோயிங்கா, தர்வேஷ் மஹமூத் எனப் பலர் உள்ளனர்.

புலம்பெயர் இலக்கியத்தின் அறிமுகமாகச் சில சான்றுகளை இங்கே காணலாம். சிறுகதைகள், நாவல்கள் பட்டியலையோ, எழுத்தாளர்கள் பெயர்களையோ சொல்வது பெயருதிர்த்தலாகவே அமையும். பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சுவடுகள் என்னும் கவிதைத்தொகுதி இங்கு நினைவுக்கு வருகிறது. நார்வேக்குப் புலம்பெயர்ந்த தம்பா என்பவரின் கவிதை இது. நார்வேயின் நீண்ட இரவு கவிஞரின் அகதி வாழ்க்கைக்கு உவமையாக அமைகிறது.

நாழிகையாகியும் படுக்கைக்குச் செல்லாத சூரியனும்

குளிர்ந்தும் இருள்போர்வை போர்த்தாத துருவதேசமும் கண்டுவியந்தேன்

எனது தேசத்தின் துயர்தோய்ந்த இரவினின்றும் மீண்ட எனக்கு

இங்கு ஒளித்திரளாய்ப் பகல் மிக நீண்டே தெரிகிறது. . . .

மக்பை என்னும் பறவை இடம்பெயராமல் தன் நாட்டிலேயே வசிக்கக்கூடியது. இது வ. ஐ. ச. ஜெயபாலனுக்கு ஆதரவின்மை, தனிமை இவற்றிற்கான குறியீடு ஆகிறது.

உலகெங்கும்

வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற

மனிதச் சருகுகளாய்ப் புரள்கின்றோம்

என் நம் தாய்நாடு

ஓயாமல் இலை உதிர்க்கும்

உயிர்ப்பிழந்த முதுமரமா?

இப்படிப்பட்ட கவிதைகளில் அந்தந்த நாட்டுப் புதிய சொற்களும் சொற்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன. அந்நியப்பட்ட உணர்வு புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் அதிகமாக இடம்பெறுவதில் ஆச்சரியமில்லை. ஈழக் கவிஞரும் திறனாய் வாளருமான சிவசேகரத்தின் ஒரு கவிதை (நையாண்டி) இது.

நாராய் நாராய் செங்கால் நாராய் / பழம்படு பனையின் கிழங்கு பிளந்து / பயன் மிக அறிந்த பனைசெறி நாட்டார் / வழிபல சென்றே பலதிசை பரந்தார் / வருகுவதெந்நாள் அறிவையோ நாராய். . . . .

அகதியின் வாழ்வின் இழிநிலை தாங்கி / அந்நிய மண்ணில் அண்டிக்கிடந்து / மிகநலி மாதர் தம்நகர் மீளும் / வகையென ஒன்றை மொழிவையோ நாராய். . . .

நாராய் நினக்கோ யாதும் ஊரே / நாராய் நின் இனம் யாவரும் கேளிர் / பாராய் எங்கள் மனிதரின் நிலையை / நாராய் நமக்கோர் நல்வழி கூறாய். . . .

மைத்ரேயி என்னும் கவிஞர் எழுதும் சுற்றுச்சூழல் கரிசனை மிக்க கவிதை இது:

புற்றரையும் பசுங்காடும் / சலசலத்து நகர்ந்த சிற்றாறும் / கீச்சிட்டுச் சிற

கடித்த புள்ளினமும் / ஊர்வனவும் விலங்கினமும் / காளானென

முளைக்கும் / தொடர்மாடிக் கட்டடங்களில் / காணாமற் போயின.

நிலவும், கறுப்புப் பட்டில் / வெள்ளிக் கோலமிட்ட / நட்சத்திரங்களும்

நகரத்துத் தெருவிளக்கில் / வாங்கு வாங்கு என / விளம்பரிக்கும்

நியோன் விளக்கில் / மறைந்துபோயின.

தொழிற்சாலைக் கழிவில் / வாகனப் புகையில் / விமான செய்திப்

போக்குவரவில் / பஞ்சபூதங்களில் நாலுடன் / தொலைந்தது சூழல்.

நேரடிச் சந்திப்புத் தொலைபேசியிலும் / தொலைபேசித் தொடர்பு இலத்

திரனியற் கடிதத்திலும் / ஓய்வுநேரம் தொலைக்காட்சியிலுமாய்த் /

தொலைந்தது உறவும் நட்பும்.

தொடர்புசாதனம் கக்கும் குப்பையில் / மூளை சலவைபெற ரசனை

கரைய / எண்ணியப் படுத்தப்பட்ட / கலை இலக்கியத்தில் / கணினி

வரையும் ஓவியத்தில் / இயந்திர மனிதன் செதுக்கும் சிற்பத்தில் /

அழகியல் தொலைய / உலகளாவிய இணையவலையூடு / கணினித்

திரையில் மினுங்கும் மாய யதார்த்தத்தில் / நிஜ யதார்த்தம் தொலைய /

எஞ்சுமா / மனிதநேயமும் / மானிட இருப்பும்?

இன்றைய பிரச்சினைகளை மிக எளிமையாக விளக்கி அழகாக நமது கவலையைக் கேள்வியாக முன்நிறுத்தும் கவிதை இது. புலம்பெயர்ந்த பிறநாட்டுக் கவிதைகளும் இவை போன்று ஒருவகையில் மனஅமைதி இழக்கவே உள்ளன. சான்று ஒன்று.

எங்கேயோ பிறந்தோம் / நான்கு திசைக் காற்றிலும் பரவினோம் / நூறு குழந்தைகள் / நூறு நாவுகளோடு பேசுகின்றன / நாளை நம் நாட்டுக்கு மீளவும் திரும்புவோமாயின் / கண்ணீரின் பொதுமொழியில் பேசுவோமென / நம்பிக்கை கொள்வோம்.

இது வியென் சின் என்ற வியட்நாமியக் கவிஞரின் கவிதை.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் சிலருடைய சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். அமுதன், பார்த்திபன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. பார்த்திபனுடைய ஒரே ஒரு சிறுகதையைப் பார்க்கலாம். இக்கதையில் ஜெர்மனி செல்ல விசாவோடு வீட்டில் காத்திருக்கும் ஒரு தமிழ்க்குடும்பம் முதலில் காட்டப்படுகிறது. அந்த ஊரில் ஒரு சிங்களப் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவனுக்குக் கடன் தொல்லை. கடனை அடைத்தாக வேண்டும் என்ற நிலையில் தமிழ்க் குடும்பத்தின் தலைவனைக் கைதுசெய்து சிறையில் மிரட்டி, வெளி நாட்டிலிருந்து பணம் வாங்கிக் கொடுத்தால் விட்டுவிடுவதாகச் சொல்கிறான்.

அடுத்த காட்சியில் இலங்கையிலிருந்து லாவோஸுக்குத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள். லாவோஸிலிருந்து அவர்கள் ஜெர்மனி செல்லவேண்டும். வேலையும் வாழ்வும் கிடைக்கும் கனவுகளில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

மூன்றாவது காட்சியில் ஜெர்மனியில் இம்மாதிரி மனித ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தமிழர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். லாவோஸிலிருந்து ஜெர்மனிக்குப் புறப்பட்டுவந்த தமிழர்கள் ஏற்றிய கப்பல் ஒன்று மூழ்கிப்போய்விட்டது. பிணங்கள் கடலில் மிதக்கின்றன. முழுகி இறந்தவர்களப் பற்றி ஒருவன் (சிவா) கவலை தெரிவிக்கிறான். அதைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த கப்பலைப் பற்றி-வியாபாரத்தைப் பற்றிக் கவலைப்படுமாறு அவனுடைய நண்பன் அறிவுரை சொல்கிறான்.

pulam-peyar-ilakkiyam8.jpg

சிவாவுக்கு திடீரென்று ஒரு போன் வருகிறது. மாஸ்கோவில் நட்டநடுவீதியில் தெரிந்த ஒரு தமிழ்ப்பெண் இறந்து கிடக்கிறாள். அவனது நண்பன் ஒருவன் அதைத் தெரிவிக்கிறான். கைவிடப்பட்ட பெண்கள் நடுவீதியில் அநாதைப் பிணமாகக் கிடக்கக் கேள்வியுறும்போது மனம் கனக்கிறது.

தங்களுக்குத் தெரிந்த பெண். அவளது சாவை நண்பர்கள்மூலம் ஊரிலுள்ள அவளது பெற்றோர்களுக்குத் தெரிவிக்கலாமே என்று சிவா சொல்கிறான். அதை அவன் நண்பன் ஒப்புக்கொள்ளாமல் வேலையைப் பார்க்கச் சொல்கிறான்.

“வியாபாரம் நிற்கவில்லை. மனிதர்கள் மிருகங்கள் பழைய கப்பல்கள் நகர்ந்தபடியே இருக்கின்றன. அடுத்துவந்த நாட்களில் லாவோசிலிருந்து புறப்பட்ட ஆதிகால உக்ரெய்ன் கப்பல் ஒன்றில் பிள்ளை குட்டிகளுடன் இருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வண்ணக் கனவு கண்டுகொண்டிருந்தனர். கொழும்பிலிருந்து பலர் லாவோசுக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். “

என்று இக்கதை முடிகிறது. கதையின் தலைப்பு இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். ஈழத் தமிழர்கள் அயல்நாடுகளுக்குச் செல்லும்போது தொடக்கம் முதல் முடிவு வரை எத்தகைய அவதிக்கு ஆளாகிறார்கள் என்பதை இக்கதை மிக நன்றாகச் சொல்லியிருக்கிறது. தாய்நாட்டைப் பிரிந்த சோகத்தையும் புலம்பெயர் நாடுகளில் அவர்கள் தேடிச் செல்லும்-கருணைக்கு ஏங்கும்-பிரபஞ்ச மனிதர்கள் குறித்த அவஸ்தையையும் இதில் காணலாம்.

அயல்நாடுகளிலிருந்து நிறையச் சிறுபத்திரிகைகள் தமிழில் வந்தன. நின்று போயின. மறுபடியும் சில வருகின்றன. நம் தமிழின் புலம்பெயர் இலக்கியம் இன்று ஈழத்தமிழ் இலக்கியமாகவே இருக்கிறது. ஈழக்கவிதைகளை நோக்கும் போது, முதல் கட்டம், பழங்கால முதல் மகாகவி ஊடாக நீலவாணன் வரை எனலாம். இரண்டாவது கட்டக் கவிதைகள் சேரன் போன்றோருடைய போர்க் காலகட்டக் கவிதைகளாக அமைந்துவிட்டன. இன்று மூன்றாம் கட்டத்தில் இருக்கிறோம். புலம்பெயர் கவிதைக் காலம். இதன் பொருள்விரிவை நோக்கி, எஸ். பொ. அடுத்த நூற்றாண்டுத் தமிழர் இலக்கியம் புகலிடத்தில் மையம் கொள்வதாகக் கூறுகிறார்.

புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை நம் தமிழ்ச் சமூகத்திலும் சில புதிய நிலைமைகளைத் தோற்றுவித்திருக்கிறது. முன்பு நமக்கு ஆங்கிலத்தோடும் ஆங்கில வாயிலாகவும் மட்டுமே தொடர்பு. இன்று நமது இலக்கியமும் மொழியும் பல்வேறு வித்தியாசமான கலாச்சாரங்களோடும், மொழிகளோடும், இலக்கியப் பாரம்பரியங்களோடும் தொடர்புறுகின்றன. புலம்பெயர் எழுத்தாளர்கள் புதிய உணர்வுகளையும், அனுபவங்களையும் தமிழ் இலக்கியத்தில் வரைகிறார்கள். மேற் கத்தியச் சமுதாயத்தின் முன்னேற்றம், விநோதம், அபிவிருத்தி, தனிமனித சுதந்திரம், பாலியல் விடுதலை போன்றவற்றால் ஏற்படும் ஈர்ப்பு, நிறவாதம், இன பயங்கரவாதம், புரியாத பண்பாடு, பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம், அந்நிய நாட்டில் ஏற்படும் பயம், அங்கலாய்ப்பு, அந்நிய மாதல், சாதி வேற்றுமையை எதிர்கொள்ளல் என்று பொருள்விரிவு நிகழ்கிறது.

இன்று பல்வேறு மொழிகளும் பண்பாடுகளும் மோதுவது சர்வதேச அரங்கில் ஒரு நியதியாகிவிட்டது. இனங்களுக்கிடையில் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுகின்றன. மொழிகளும் கலாச்சாரங்களும் கலப்படைவது தவிர்க்க முடியாதிருக்கிறது. உலக இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சில படைப்புகளையேனும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அளித்திருக்கிறார்கள் என்பது நமக்குப் பெருமையே.

http://www.poornachandran.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.