Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதய நோய் Heart Attack வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்!

Featured Replies

இதய நோய் Heart Attack வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்!

 

 

heart%20attack.jpg

 

2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும்.

 

உணவுக் கட்டுப்பாடு:

 

முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

 

கட்டுப்பாடான உணவும் அதன் அளவுகோலும்:

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான சக்தி 1800 – 2400 கிலோ காலரி. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்த மொத்த அளவில், 65% சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியை கொழுப்பிலிருந்தும், 15% சக்தியை புரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!

 

ஆரோக்கியமான சக்திகளை எந்த மாதிரி உணவுகளில் இருந்து பெறலாம்?:

 

அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு, உடல் எடையைக் கூட்டும். அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசியையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு, காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள்! பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும்.

 

கொழுப்புச் சத்து பற்றி?:

 

அதைப் பற்றி விரிவாகவே கூற வேண்டும். கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்று இரண்டு வகை உண்டு. ஆடு, மாடுகளின் மாமிசம், முட்டை, பால், நெய், வெண்ணெய், வனஸ்பதி, தேங்காய், எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும். தாவர உணவுகள், தாவர எண்ணெய், மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு. இவற்றிலிருந்து கொழுப்புச் சக்தியை பெறுவதுதான் ஆரோக்கியம்! மார்க்கெட்டில் ஏராளமான எண்ணெய் வகைகள் உள்ளன.

 

எண்ணெயைப் பற்றி:

 

‘சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், நெய், வனஸ்பதி ஆகியன) இதயத்துக்கு எதிரானவை. அவற்றை தவிர்த்துவிட வேண்டும். ‘அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் இதயத்துக்கு நண்பர்கள். இவற்றிலும்கூட, சூரியகாந்தி, சோயா எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ‘பாலி அன் சாச்சுரேட்டட்’ வகை எண்ணெய்களைத் தான் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கடலை எண்ணெய் போன்ற ‘மோனோ அன்சாச்சுரேட்டட்’ வகை எண்ணெயிலுள்ள சத்தும் உடலுக்கு தேவை என்பதால், இவற்றையும் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

 

இவற்றைவிட ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’ வகைதான் இதயத்துக்கு மிக நல்ல தோழன். இந்தச் சத்தை கம்பு, கேழ்வரகு, பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகள் மூலம் அபரிமிதமாகப் பெறலாம். எப்போதுமே ஒரே வகை எண்ணெயை உபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க, பொரிக்கக் கூடாது. ஒரு முறை உபயோகித்த எண்ணெயை பல முறை உபயோகிக்கக் கூடாது.

 

பயமில்லாமல் சாப்பிடக் கூடிய உணவு வகை:

 

இயற்கை கொடுக்கும் காய்கறிகள் உள்ளனவே! அவை இதயத்தின் நண்பர்கள். அதிக சத்து, குறைந்த கொழுப்பு, தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின் சத்துக்கள் அடங்கியவை. குறைந்த கலோரியில் அதிக சத்து கொடுப்பவை. நாம் அதிகம் சாப்பிட்டாலும் எடையும் போடாதவை. எப்போதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். தொட்டுக்க வைப்பதை சாதமாகவும், சாதத்தைத் தொட்டுக்கவும் உபயோகப்படுத்துங்கள். ஆரோக்கியம் தேடி வரும்!

 

சில காய்கறியின் பயன்கள்:

 

கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவை நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றன. காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய் ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன. அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது. சுண்டைக்காயிலும் நார்ச் சத்துதான். வெள்ளரிக்காயில் எல்லாச் சத்துக்களுமே உள்ளன.

 

வெங்காயம், பூண்டு இரண்டுமே நல்லது. கீரைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சத்துக்களின் தொழிற்சாலைகள் அவை. இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு. பழங்களிலும் அபரிதமான சத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை பழங்கள். இதயத் துக்கு நார்ச்சத்து மிகவும் நல்லது. எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டியது நாம் உயிர் வாழத்தான் உண்ண வேண்டுமெ அன்றி; உண்ணுவதற்காகவே உயிர் வாழக் கூடாது!

 

உடல் எடை என்பது பேங்க் பாலன்ஸ் மாதிரி. சாப்பிடச் சாப்பிட, ஏறிக்கொண்டேதான் போகும். பணத்தை எடுத்து செலவழித்தால்தானே பாலன்ஸ் குறையும்? அதுபோல, உடலின் சக்தியை செலவழித்தால்தான் எடை குறையும்!’’. அதற்காகத்தான் உடற் பயிற்சி அவசியமாகின்றது.

 

ஹெல்த் டிப்ஸ்…:

 

எடை அதிகம் இருப்பவர்களுக்கு, கழுத்து குட்டை யாக இருக்கும். அவர்கள் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். குறட்டை விடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால், எடையைக் கட்டாயம் குறைக்க வேண்டும்.

 

எல்லோருமே காலையில் அதிகம் சாப்பிட்டு, இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. காலையில் ஒரு மகாராஜா போலவும் (விருந்து) இரவில் ஒரு பிச்சைக்காரர் போலவும் (குறைவான உணவு) சாப்பிட வேண்டும் என்பார்கள். மெனோபாஸ் வரைக்கும் பெண்களுக்கு இதய நோய் ஆபத்து குறைவு. ஆனால், அதன் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், இதயம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை! ‘‘டயட்டினால் எடையைக் குறைக்கலாம். ஆனால், உடற்பயிற்சியால்தான் அதை அப்படியே பராமரிக்க முடியும்’’.

 

இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடாக அமெரிக்கா விளங்குகின்றது அங்கு பெரும்பாலானோர் இறப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், அது இதய நோயாகத் தான் இருக்கும். 

 

ஏனெனில் அங்குள்ளவர்கள் உண்ணும் உணவு முறைப் பார்த்தால், நிச்சயம் இதய நோய் வராமல் என்ன வரும். எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான பிட்சா, பர்க்கர் போன்றவற்றை சாப்பிடுவது, மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்துவது, புகைப்பிடிப்பது என்றெல்லாம் இருந்தால், இதயம் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருக்குமா என்ன? அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். 

 

ஏனெனில் இந்த நேரம், மனமானது பெரிதும் பாதிக்கப்பட்டு, இதயத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. எனவே இத்தகைய பாதிப்பு இதயத்தில் ஏற்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டுள்ள இதயம் குணமாகவும் ஒருசிலவற்றை மனதில் கொண்டு, அதனை பின்பற்றி வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

 

புகைப்பிடிப்பது: 

 

இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

 

கொலஸ்ட்ரால்: 

 

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படியெனில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைந்து, இரத்த ஓட்டத்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200 mg/dL-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

 

உடல் எடை: 

 

இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடையானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.

 

உடற்பயிற்சி: 

 

தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. ஏனெனில் தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

 

நீரிழிவு: 

 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் நீரிழிவும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும். எனவே நீரிழிவை தடுக்கும் உணவுகளை டயட்டில் மேற்கொள்வது அவசியம்.

 

உணவுகள் 

 

டயட்டில் இருக்கும் போது, குறைந்த கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், இதய நோய் வருவதை தடுக்க முடியும். குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும்.

 

ஆல்கஹால்: 

 

ஆல்கஹாலை சரியதான அளவு குடித்தால், இதய நோய் வருவதை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அதையே அதிகம் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, மார்பக புற்றுநோயும் வரும். எனவே அளவாக, டானிக் போன்று சாப்பிடுவது நல்லது.

 

ட்ரான்ஸ் கொழுப்புகள்: 

 

ஃபேட்டி ஆசிட்களில், ட்ரான்ஸ் ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிட்டால், இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இந்த கொழுப்புகள் மிகவும் கொடுமையானது. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகள் இறைச்சிகளில் அதிகம் இருக்கும். குறிப்பாக மாட்டிறைச்சியில் அதிகம் இருக்கும்.

 

வைட்டமின்களில் கவனம்: 

 

ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்கும் வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின் ஈ மற்றும் போலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஹோமோசைஸ்டீனை குறைக்கும் ஏஜென்ட்களை உடலில் சேர்க்கும் போது, அவை இதய நோய் வராமல் தடுக்கும். ஆனால் அந்த ஹோமோசைஸ்டீன் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிக கொழுப்புக்கள் உடலில் இருந்தால் எப்படி இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்குமோ, அதே அளவு ஆபத்தை உருவாக்கும். எனவே இந்த ஹோமோசைஸ்டீனை குறைக்க மருந்துகள் எதுவும் சாப்பிடாமல், போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ்டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம்.

 

மனஅழுத்தம்: 

 

அதிகமான வேலைப் பளுவின் காரணமாக நிறைய பேர் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது, அப்போது அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும்.

 

மருத்துவ ஆலோசனை: 

 

குடும்ப நல மருத்துவரிடம் அவ்வப்போது உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதிக்கும் போது, ஏதாவது குறைபாடு உடலில் தென்பட்டால், அதனை சரிசெய்ய என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்று, அந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இதனாலும் இதய நோய் வராமல் தடுக்கலாம். ஏனெனில் அனைவருக்குமே ஒரே மாதிரியான நிலையில் உடலானது இருக்காது, எனவே மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ள வேண்டும்.

 

http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=10538:-the-best-ways-to-prevent-heart-disease-occur-in&catid=55:diet-fitness&Itemid=412

  • 3 months later...

நெஞ்சு வலியும், மாரடைப்பும் ஒன்றல்ல!

Tamil_News_large_1264641.jpg

 

நெஞ்சு வலியும், மாரடைப்பும் ஒன்றல்ல!

சென்னையைச் சேர்ந்த இதய நோய் மருத்துவ நிபுணர் தியாகராஜமூர்த்தி-
 
 
நம் இதயம் ஒரு தசை. நிமிடத்துக்கு, 70 - 80 முறை துடிக்கும். இந்த தசைப் பகுதிக்கு ரத்தத்தைக் கடத்தும் மூன்று முக்கிய ரத்தக் குழாய்களில் சிதைவு ஏற்பட்டால், ரத்தக் கட்டி உருவானால் அல்லது இன்னும் சில காரணங்களால், இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவது தான் மாரடைப்பு.தசைப் பிடிப்பு, நெஞ்சு எலும்பிலோ, உணவுக் குழாயிலோ பிரச்னை போன்ற பல காரணங்களால் நெஞ்சு வலி ஏற்படலாம்; அது மாரடைப்பல்ல. சாதாரண நெஞ்சு வலி, தாங்க முடிகிற அளவில் இருக்கும். மாரடைப்பின்போது நெஞ்சில் மிக அதிக வலி இருக்கும். அந்த வலி இடது கையில் பரவும்; அதிகமாக வியர்க்கும்; மூச்சடைக்கும்; மயக்கமும், உச்சபட்சமாக மரணம் கூட ஏற்படும்.பொதுவாக முதல், 'அட்டாக்'கில், 10 - 20 சதவீதம் பேர், மருத்துவமனைக்கு வருவதற்குள்ளாகவே இறந்து விடுகின்றனர்; அந்தளவுக்கு அது தீவிரமாக இருக்கும்.பெரும்பாலும் நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களையே இலக்காகக் கொண்டிருந்த மாரடைப்பு, இப்போது, 20 வயதினருக்கு கூட ஏற்படுகிறது. மரபு, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை, மாரடைப்பின் காரணிகள். தேங்காய் எண்ணெயில் சமைத்தால், 'ஹார்ட் அட்டாக்' வரும் என்பது தவறான தகவல். தேங்காய் எண்ணெய், குறிப்பாக, 'வெர்ஜின் தேங்காய் எண்ணெய்' நம் உடலுக்கு நல்லதே. இதய நோயாளிகள், காய், பழங்கள் அதிகமாகவும், சாதத்தைக் குறைத்தும், எண்ணெய் உணவுகள், வெண்ணெய், நெய் போன்றவற்றைத் தவிர்த்தும், சாப்பிட வேண்டியது அவசியம். விலை குறைவாகக் கிடைக்கும் மத்தி மீனில், இதயத்துக்கு ஆரோக்கியம் தரும், 'ஒமேகா 3' ஆயில் இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடலாம்.பத்து ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை நோய் இருப்போருக்கு, 'சைலன்ட் அட்டாக்' வர வாய்ப்புகள் அதி கம். இவர்களுக்கு நரம்புகள் பாதிப்படைந்திருக்கும் என்பதால், மாரடைப்பு வந்தாலும் நெஞ்சுவலி தெரியாது. வாந்தி உணர்வு, மூச்சு விட சிரமம் மற்றும் வியர்வை போன்ற அறிகுறிகளை உணரலாம்.இதய நோயாளிகள், ஆஸ்பிரின், அடோர்வாஸ்டாடின், க்ளோபிடாப் மாத்திரைகள், கையுடன் வைத்திருக்க வேண்டியவை என்றும், ஹார்ட் அட்டாக் வந்த நேரத்தில், உடனடியாக இவற்றை சாப்பிட்டால், மூன்று மணி நேரத்துக்கு ஆபத்தில்லை என்றும், ஒரு செய்தி பரவலாக இருக்கிறது.இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் தப்பில்லை. முதல் ஒரு மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை உட்கொண்டால், மேலும் ரத்தக் கட்டி உருவாவதை தடுக்கும். ஆனால், இது மட்டுமே சிகிச்சை அல்ல; இது, முதலுதவி மட்டுமே.
 
  • 2 months later...

உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இதய நோயைக் கட்டுப்படுத்தலாம்

 

இதய நோயால் வருடந்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம், அதிகரித்த கொழுப்புச் சத்து, இரத்த உறவுத் திருமணங்கள் போன்றன இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

இத்தோடு வளர்ச்சி மாற்றம் என்று சொல்லப்படும் அதிகரிக்கும் உடல் எடை முக்கிய காரணம் ஆகும். இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளின் பெண்களே பெரிதும் இதற்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

பெண்களின் சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. ஆகையால், பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பிறகே பெண்கள் மாரடைப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.

இது குறித்து ஆராய்ந்த மருத்துவ விஞ்ஞானிகள், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு 'ஹார்மோன் ரிப்ளேஸ்மன்ட் தெரபி" எனும் செயற்கை முறையில் ஈஸ்ட்ரோஜனை வழங்கும் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும், இது, குறிப்பாக மாரடைப்பு நோயைத் தடுப்பதற்காகவின்றி, மாதவிடாய் நிறுத்தத்துக்கான அறிகுறிகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும். எப்படியெனினும், மாதவிடாய் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் செய்து கொள்ளவேண்டும்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, பெண்கள் மாரடைப்பு நோயினால் இறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன. ஆண்களைப் போலவே பெண்களும் நெஞ்சு வலியில் துடித்தால் இந்நோய் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். மாறாக, இந்த நோய் சில அசாதாரண அறிகுறிகளைப் பெண்களிடம் ஏற்படுத்துவதால் இதை ஆரம்பகட்டத்தில் இனம் காணுவது கடினமாகிறது.

அஜீரணம், அதிக சோர்வு, மூச்சு வாங்குதல், தலை சுற்றுதல், குமட்டல், அதிக வியர்வை போன்ற அசாதாரண அறிகுறிகள் காணப்பட்டால், மாரடைப்பால் இவை ஏற்படுகின்றனவா என்பதை மருத்துவப் பரிசோதனைகள் செய்து அறிந்துகொள்ள வேண்டும்.

'Nuclear Isotope' என்ற ஒருவிதப் பொருளை உடலில் செலுத்தி, அதன்பின் ஏற்படும் மாறுதல்களைப் படம் பிடிப்பதே பெண்களுக்கு ஏற்ற பரிசோதனை ஆகும். குறிப்பாக, உடலுழைப்பு, உடற்பயிற்சி செய்யாத பெண்களுக்கு இந்தப் பரிசோதனை மிகப் பொருத்தமானது.

நோயின் அறிகுறிகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் சோதனை மேற்கொள்ளலாம். அனைவரும் உடல் எடையை மிதமாக வைத்துக்கொள்வதால் இந்நோயின் சாத்தியக் கூறுகளைக் குறைக்கலாம்.

தொடர்புக்கு: 0091 452-2545400
தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/articles/2015/08/10/உடல்-எடையைக்-குறைப்பதன்-மூலம்-இதய-நோயைக்-கட்டுப்படுத்தலாம்

  • 10 months later...

மாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்

book_2899406g.jpg

இன்றைய தேதியில் மாரடைப்பும் பக்கவாதமும் மோசமான உடல் பாதிப்புகளையும் இறப்பையும் ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. இவை வராமல் இருப்பதற்கு, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு 8 முக்கிய உத்திகள் கூறப்படுகின்றன. அவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்:

புகை பிடிக்காதீர்

புகையிலைப் புகையில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இதில் பெரும்பாலான வேதிப்பொருட்கள் இதயத்துக்கும் மூளைக்கும் ரத்தத்தைக் கொண்டுசெல்லும் ரத்த நாளங்களையும் இதயத்தையும் பாதிக்கக் கூடியவை. மாரடைப்பும் பக்கவாதமும் வரும் அபாயத்தைக் குறைப்பதற்காக ஒருவர் செய்யக்கூடிய மிகச் சிறந்த செயல், புகைபிடிக்காமல் இருப்பதுதான்.

கொழுப்பைக் கட்டுப்படுத்துங்கள்

கொழுப்பு நிறைந்த உணவு, ரத்தத்தில் கொழுப்பையும் கொலஸ்டிராலையும் அதிகரிக்கச் செய்து, நாளம் கடினமாதலை (அதாவது நாளங்களில் கொழுப்பு படிதல்) உருவாக்குகிறது. மருந்துகள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவை கட்டுப்படுத்தினாலும், ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுடன் தொடர் உடற்பயிற்சியும் இணைந்தால் மட்டுமே, அது உடலுக்குப் பாதுகாப்பு அரணை உருவாக்கித் தரும்.

அன்றாடம் உடற்பயிற்சி

வழக்கமாக உடற்பயிற்சி செய்தால், உடல் உருவத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அது மட்டுமல்லாமல் உட்கார்ந்தே வேலை செய்பவர்களைவிட மாரடைப்பு வரக்கூடிய அபாயம், உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் பாதியளவே இருக்கிறது.

வழக்கமாக உடற்பயிற்சி செய்வது இதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளிலிருந்து மட்டுமல்லாமல், மரணத்தின் அபாயத்தையும் குறைக்கிறது. அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்வதன்மூலம், நம்மைவிட 10 20 வயது இளமையான உடற்பயிற்சி செய்யாதவரோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு உடல் தகுதித் திறன் அளவை அடைய முடியும்.

ஆரோக்கியமான உடல் எடை

உடல் அதிக எடையுடன் இருப்பது ரத்த மிகை அழுத்தம், இதயநாள நோய் அல்லது நீரிழிவு வரும் சாத்தியத்தை அதிகரிக்கிறது. உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமாக உடல் எடையைக் குறைக்க முடியும்போது, கூடவே ரத்த அழுத்தத்தைக் குறைத்து, கொலஸ்டிரால் அளவுகள் மேம்பட்டு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரும் அபாயமும் குறையும் வாய்ப்பு உண்டு.

நார்ச்சத்துள்ள உணவு

தானியங்கள், பயறுகள் (பருப்புகள், உலர்ந்த பட்டாணிகள், அவரை வகைகள்), பழங்கள், காய்கறிகள், ஆகியவற்றில் இரண்டு வகையான உணவு நார்ச்சத்துகள் உள்ளன ஒன்று கரையாதது, மற்றொன்று கரையக்கூடியது. கரையாத நார்ச்சத்து பெரும்பாலும் முழு தானியங்களில் உள்ளது. இவை மலச்சிக்கலையும், குடல் அழற்சியால் உணவுப் பாதையில் தோன்றும் பைவடிவக்கட்டிகள் (டைவர்டி குளோசிஸ்) உருவாவதையும் தடுக்க உதவுகிறது. அத்துடன் கூடுமானவரை குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. ஓட்ஸ், உலர்ந்த பயறுகள், அவரைகள், (ஆப்பிள், ஆரஞ்சு, பம்ளிமாஸ் போன்ற) பழங்கள் போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது ரத்தக் கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவும். மேலும், அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவை உண்பது, உடல்பருமன் ஆவதைக் குறைப்பதற்கான சாத்தியத்துடன் தொடர்புடையது.

ஆன்டி ஆக்சிடண்டு உணவு

உடல் செல்களில் ஏற்படும் ஆக்ஸிஜன் சேதம் (ஆக்ஸிடேஷன்), மூப்படையும் பாதிப்புகளையும் சில நோய்கள் தோன்றுவதற்கும் ஓரளவுக்குக் காரணமாக இருக்கிறது. நாளங்களில் உள்ள செல்கள் மிக எளிதாகக் கொழுப்புகளையும் எல்.டி.எல் (கெட்ட) கொலஸ்டிராலையும் உறிஞ்சச் செய்யும் இயல்பான வேதி செயல்பாடே ஆக்ஸிடேஷன். ஆக்ஸிஜன் சேதம் நாளங்களில் கொழுப்புப் படிவு ஏற்படுவதை விரைவுபடுத்தி, அதன் விளைவாக உடலில் உருவாகும் ஆன்டி ஆக்சிடண்டுகளும் (ஆக்ஸிஜன் இணைவு எதிர்ப்பி) சில வகை உணவில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடண்டுகளும் இந்தச் சேதத்தை ஓரளவுக்குத் தடுக்கின்றன.

ரத்த அழுத்தத்தைக் கண்காணியுங்கள்

மாரடைப்போ பக்கவாதமோ ஏற்படுவதற்கு முக்கியமான அபாயக் காரணி, ரத்த மிகை அழுத்தம். அதனால் ரத்த அழுத்தத்தைக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அடிக்கடி சோதித்துப் பார்ப்பது நல்லது. இது மருத்துவ நிலை, உடல்நிலை, குடும்பத்தின் மருத்துவ வரலாறு போன்றவற்றையும் பிற அபாயக் காரணிகளைப் பொறுத்தும் அமையும். ஒருவருக்கு ஏற்கெனவே ரத்த மிகை அழுத்தம் இருந்தால், ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே சோதித்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தத்தை அளக்க உதவும் ரத்த அழுத்தமானி, மருத்துவப் பொருட்கள் விற்கும் கடைகளில் அல்லது மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மன அழுத்தக் கட்டுப்பாடு

ஒருவருக்கு இதயநாள நோய் உருவாவதில், உளவியல் ரீதியான அழுத்தம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதிப்பதற்கு மிகக் குறைவான ஆய்வுகளே இருக்கின்றன. பிரச்சினையின் ஒரு பரிமாணம் என்னவென்றால், மனஅழுத்தத்தை அளப்பதும் வரையறுப்பதும் கடினமான விஷயம். ஒருவருக்கு மனஅழுத்தத்தை விளைவிக்கும் ஒன்று, மற்றவருக்கு உற்சாகமூட்டுவதாக அமையலாம்.

இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றாலும், இதயநாள நோய் உருவாவதில் மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல்வேறு இதயநோய் மறுவாழ்வுத் திட்டங்களில், மனஅழுத்தத்தை நிர்வகிப்பது அல்லது கட்டுக்குள் வைத்திருப்பது ஒரு முக்கியமான கருவியாகப் பயன்படுத்தப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

நன்றி: மேயோ கிளினிக் - உங்களுக்கு மாரடைப்போ மூளைத்தாக்கோ ஏற்படாமலிருக்க 8 வழிகள், அடையாளம் வெளியீடு, தொடர்புக்கு: 04332 273444.

http://tamil.thehindu.com/general/health/மாரடைப்பு-பக்கவாதம்-தவிர்க்கும்-உத்திகள்/article8745579.ece?widget-art=four-all

  • 2 months later...

 

  • 2 weeks later...

 

  • 2 weeks later...

மார்பில் வலி வந்தால் மாரடைப்பா?

 

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி

மார்பில் வலி ஏற்பட்டால் அது மாரடைப்பாகத்தான் இருக்கும் என்கிறார்கள். உடனே இ.சி.ஜி. எடுத்துப்பார்த்துவிடுவது நல்லது என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா?

உண்மையில்லை.

மார்பில் வலி வந்தால் அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மார்பு வலிக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மார்புக்கூட்டில் ஒரு டஜன் விலா எலும்புகள் உள்ளன. இவை அனைத்தும் மைய மார்பு எலும்போடு இணைகின்றன. விலா எலும்புகளுக்கு இடையில் தசைகள் உள்ளன.

மார்புக்கூட்டுக்குள் நுரையீரல்கள், நுரையீரல் உறைகள், சுவாசக்குழாய்கள், இதயம், இதய உறை, ரத்தக்குழாய்கள், உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, உதரவிதானம் எனப் பல உறுப்புகள் உள்ளன. இவற்றில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் மார்பில் வலி ஏற்படும்.

இதயம் உயிர் காக்கும் உறுப்பு. இதயத்தில் வலி ஏற்பட்டால், உயிருக்கு ஆபத்து நேரிடலாம். இதயவலியையும் மார்பில் ஏற்படும் மற்ற வலிகளையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்துகொண்டால், மார்பில் வலி வரும்போது மிரட்சி அடையத் தேவையில்லை.

இதயவலியில் இரண்டு நிலைகள் உண்டு. நடக்கும்போது, மாடிப்படிகளில் ஏறும்போது, ஓடும்போது மார்பில் வலிப்பது, சிறிது ஓய்வுக்குப் பின் வலி குறைவது இதயவலியில் முதல் வகை. இதற்குப் பெயர் ‘ஆஞ்சைனா’. மாரடைப்புக்கு முந்தைய நிலை இது. நடு மார்பில் கயிறு கட்டி அழுத்துவது போல் வலிவந்து கழுத்து, தாடை, இடது கைக்கு அது பரவினால் மாரடைப்பு. இது இதயவலியின் இரண்டாம் நிலை. இந்த வலியின்போது உடல் கடுமையாக வியர்க்கும், மூச்சுத் திணறும், மயக்கம் வரும். இதுதான் உயிருக்கு ஆபத்து தரும்.

நுரையீரலில் நிமோனியா, காசநோய், சுவாசக்குழாய் அழற்சி காரணமாகச் சளி கட்டும். இதனால் மார்பில் வலி வரும். அப்போது காய்ச்சல், இருமல், சளி, சளியில் ரத்தம் போன்ற துணை அறிகுறிகளும் காணப்படும். நுரையீரல் உறையில் பாதிப்பு இருந்தால், மார்பின் பக்கவாட்டுப் பகுதிகளில் வலி கடுமையாக இருக்கும். தும்மும்போதும் இருமும்போதும் வலி அதிகரிக்கும்.

பெரும்பாலான நேரம் மார்புவலிக்கு இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்சினைகள்தான் காரணமாக இருக்கும். இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் பிதுக்கம், உணவுக்குழாய் அழற்சி போன்றவை ஏற்பட்டிருந்தால், மார்பில் வலிவரும். இந்த வலியை எளிதில் இனம் கண்டுகொள்ளலாம். நடு மார்பில் வலி அல்லது எரிச்சல் தோன்றும். வாந்தி, ஏப்பம் வரும். நாம் சாப்பிடும் உணவுக்கும் மார்பில் வலி ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதை உணரமுடியும்.

கல்லீரல் அழற்சி காரண மாகவும் மார்பில் வலி வரலாம். அப்போது காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்திருக்கும். பித்தப்பைக் கோளாறுகள் காரணமாக இருந்தால், மார்பில் ஏற்படும் வலி வலது தோள்பட்டைக்குப் பரவும். உதரவிதானத்தில் பிரச்சினை இருந்தாலும் மார்பு வலியானது தோள்பட்டைக்குப் பரவும்.

மார்பில் அடிபடுவது, எலும்பு முறிவு, ரத்த உறைவு, தசைப்பிடிப்பு போன்றவற்றாலும் மார்பில் வலி வரலாம். அப்போது மார்பைத் தொட்டாலோ, அசைத்தாலோ வலி அதிகரிக்கும். மார்பின் மேல்பகுதியான சருமத்தில் அக்கி அம்மை ஏற்பட்டால், ஆரம்பத்தில் மார்பில் கடுமையாக வலிக்கும். அதற்குப் பிறகுதான் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். மனம் சார்ந்த பிரச்சினை, ரத்தச் சோகை போன்றவையும் மார்பில் வலியைத் தோற்றுவிக்கும்.

அடிக்கடி மார்பில் வலி ஏற்படுபவர்கள் மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி., இரைப்பை எண்டாஸ்கோப்பி பரிசோதனைகளை மேற்கொண்டு காரணம் தெரிந்துகொண்டால், மார்பில் வலி வரும்போதெல்லாம் மாரடைப்பாக இருக்குமோ எனப் பதற வேண்டியதில்லை.

 

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர். 
தொடர்புக்கு: gganesan95@gmail.com

ku_gu_3013773a.jpg

ராஜபாளையத்தைச் சேர்ந்த டாக்டர் கு. கணேசன் பொதுநல மருத்துவர், மருத்துவ எழுத்தாளர். 35 மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறார். மருத்துவத் தமிழ் வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினர். மத்திய அரசின் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்பியல் விருது, தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

http://tamil.thehindu.com/general/health/சந்தேகம்-சரியா-01-மார்பில்-வலி-வந்தால்-மாரடைப்பா/article9118460.ece?widget-art=four-all

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.