Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNAயின் தலைமையில் இருப்பவர்களும் – முரண் படுபவர்களும் தொடர்ந்து முட்டி மோதப் போகிறீர்களா?

Featured Replies

TNA-press-meet_CI.jpg

 

கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்களும் – முரண்படுபவர்களும் தொடர்ந்து முட்டி மோதி இராணுவ புலனாய்வுக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் மூழ்கப் போகிறீர்களா? என்பதனை தீர்மானியுங்கள்.....

நீண்ட் நாட்களாகவே என் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் முக்கிய விடயத்தை பதிவிட வேண்டும் என நினைப்பது உண்டு... பின்பு ஏன் இந்த கட்சி அரசியல் வில்ங்கங்களுக்குள் நேரத்தை மண்ணாக்குவான் என ஒதுங்கிக் கொள்வது உண்டு...

ஆனால் நேற்று (04.05.15) எனக்கு வந்த ஒரு செய்தி எனது பதிவின் அவசியத்தை உணர்த்தி நின்றது... அதனை நான் வெளியிடவில்லை காரணம் ஆதாரம் இல்லாத செய்திகளை நான் பதிவிடுவதில்லை.... ஒரு சந்திப்பாக இருந்தால் அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் அதனை உறுதிப்படுத்தி தெரிவிக்க வேண்டும்... தவிர ஊகத்தின் அடிப்படையில் அல்லது குறித்த உத்தியோகபூர்வ சந்திப்புகள் குறித்து வெளிப்படையான கருத்துகள் வெளிப்படுத்த வேண்டும்...

இன்று எனக்கு கிடைத்த செய்தி இதுதான்...

இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து பேச்சு நடத்தியபோது வடக்கு முதலமைச்சரினை வாயை திறக்க சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அனுமதிக்கவில்லை...

எனினும் நிலைவரத்தை முன்கூட்டியே சுதாகரித்துக் கொண்ட முதலமைச்சர் சந்திப்பின் ஆரம்பத்தில் ஜோன் கெரியிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தார். வடக்கு மாகாணசபையின் தற்போதைய தேவைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

சந்திப்பில் மைத்திரி அரசிற்கு சம்பந்தன் பாராட்டுப்பத்திரம் வாசிக்க இரண்டு தடவைகளாக குறுக்கிட்ட சுரேஸ் பிறேமச்சந்திரன் அதனை மறுதலித்து அரசியல் தீர்வு ஒன்று கிட்டும் வரையில் இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்குவது பற்றி பேச முற்பட இரு தடவைகளும் சம்பந்தன் அதனை தடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் வாயை மூடிக்கொண்டிருக்குமாறு சுரேஸிற்கு தமிழில் சம்பந்தன் சீற அவர் அமைதியாகியுள்ளார்.

இதனிடையே அழைத்துவரப்பட்டிருந்த வடக்கு முதலமைச்சரோ வெறும் காட்சிப்பொம்மை போல இருக்க வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் 

இலங்கை ஆட்சி மாற்றத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும்:- 3 மே 15 10:37 (GMT)

என்ற செய்தியில் ஜோன் கெரியுடனான சந்திப்புக் குறித்து முதலமைச்சரே ஊடகங்களுக்கு கருது வெளியிட்டு இருந்தார்....முதலமைச்சரின் கருத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்...

 

(http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119343/language/ta-IN/article.aspx)

 

மேலே வந்த இந்த செய்தியை நான் பதிவேற்றவில்லை என்றாலும் வேறு பல ஊடகங்கள் இதனை வெளியிட்டு உள்ளன.... இந்த தகவல் குறித்து எனது கருத்தை இங்கு பதிவிடுகிறேன்.... தவிர இந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கான எனது பதிலாக தயவு செய்து யாரும் கருதிவிடாதீர்கள்.....

தவிரவும் இவ்வாறான பதிவுகளை எமது இணையத் தளமான குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்திலும் பதிவிடுவதனை தவிர்த்து ஒரு ஊடகவியலாளன் என்பதற்கு அப்பால் என் இனத்தின் மீதான பற்றுதலால் எனது தனிப்பட்ட கருத்துகளையும், அனுபவங்களையும் முகநூலில் பதிவிட்டு வருகிறேக் அதன் அடிப்படையில் நேற்று இரவு (04.05.15) முகநூலில் பதிவிட்ட இந்தப் பதிவை இணையத்தில் பதிவிடுமாறு பலர் தனிப்பட்ட வகையில் என் மின் அஞ்சல் மூலமாகவும், முகநூல் இன்பொக்சிலும் கேட்டதற்கு இணங்க இணையத்தில் மீள்பதிவு செய்கிறேன்...

பாவம் மக்கள்..

...

அண்மைக்காலமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்பாகவும், அதனை தலைவர் சம்பந்தன் தொடர்பாகவும் சுமந்திரன் தொடர்பாகவும் பல பயனுள்ள விமர்சனங்களும், பல அநாகரீக, மூன்றாம் தரவிமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன....

கூட்டமைப்பு தொடர்பாகவும் அதன் போக்கு குறித்தும் நிறைய விமர்சனங்கள் எனக்கு உண்டு... அவ்வாறான விமர்சனங்கள் சரியான அரசியல் தளத்தில் இருந்தோ, அல்லது ஊடக தளத்தில் இருந்தோ முன்வைக்கப்பட வேண்டும் என முன்பும் நான் குறிப்பிட்டு இருந்தேன்.....

தவிரவும் உண்மையிலேயே கூட்டமைப்பு தவறான பாதையில் செல்கிறது.. அதனை உடைத்தெறிய வேண்டும் என நினைப்பவர்கள் அதற்கு ஈடான மாற்றுத் தலைமையை கட்டி எழுப்பி இருக்க வேண்டும்....

இன்று உள்ள சூழலில் கூட்டமைப்புக்கு பிரதியீடான பலமான மாற்று சக்தியை உருவாக்காமல் அதனை உடைத்தெறிவது புலிகளை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டி நின்ற தமிழ்த் தரப்பின் சிந்தனைக்கு ஈடானது.... என நான் நினைக்கிறேன்....

இலங்கையின் ஆட்சிதொடர்பாக பேசும் போது சுதந்திரத்திற்கு முன் சுதந்திரத்திற்கு பின் என இரண்டு காலக்கட்டங்களை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.. . ஆனால் தமிழ் மக்களின் இனவிடுதலைப் போராட்ட வரலாற்றைப் பார்க்கும் போது ராஜபக்ஸக்களுக்கு முன் ராஜபக்ஸக்களுக்கு பின் ஆகவே நான் பார்க்கிறேன்...

காரணம்... சுதந்திரத்திற்கு பின் ஆட்சிக்கு வந்த டீ.எஸ்.சேனநாயக்கா, டட்லிசேனநாயக்கா, சேர்ஜோன் கொத்தலாவல, எஸ். டபிள்யு பண்டாரநாயக்கா, தகநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்க உள்ளிட்டவர்களும், 1978ஆம் ஆண்டில் ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆட்சிப்பீடம் ஏறியதில் இருந்து பிரேமதாஸா, டீ.பீ.விஜயதுங்க, சந்திரிக்கா, வரையிலும் ஆட்சியில் இருந்த தலைவர்களாக இருந்தாலும் சரி...

பாதுகாப்பு அமைச்சர்களாக 

• Mrvyn Kularatne - Deputy Minister of defence [7]

• T.B. Werapitiya (former DIG) - Minister of Internal Security

• Lalith Athulathmudali - Minister of National Security

• General Ranjan Wijeratne - Minister of State for defence

• D.B Wijetunga - Minister of State for defence

• General Anuruddha Ratwatte - Deputy Minister of defence

• Ratnasiri Wickremanayake - Deputy Minister of defence

• Thilak Marapana - Minister of defence

இருந்தவர்களும் சரி

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களாக இருந்த (Permanent Secretaries)

• Colonel C. A. Dharmapala, ED, CLI

• General Deshamanya D. S. Attygalle, LVO, SLAC

• General S. Cyril Ranatunge, VSV, SLAC

• Lieutenant General Hamilton Wanasinghe, VSV, SLA

• Chandananda de Silva, SLAS

• Austin Fernando, SLAS

• Cyril Herath (former IGP)

• Major General Asoka Jayewardene

இருந்தவர்களும் சரி

இலங்கையை ஒரு இராராணுவக் கட்டமைப்புக்கு உட்பட்ட, புலனாய்வுக் கட்டமைப்பின் ஆளுகையுடன் கூடிய இராணுவ மேலாண்மைக்கு அமைவாக இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை...

ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சை தமது மேற்பார்வையில் வைத்திருந்தாலும் பிரதி அமைச்சர்கள் செயலாளர்களுடாக பாதுகாப்பு மற்றும் விடுதலை இயக்கங்களுக்கு எதிரான யுத்தம் என்பவற்றை முன்னெடுத்தார்கள்....

ஆனால் 2005ஆம் ஆண்டு ஆட்சிப் பீடம் ஏறிய மகிந்த ராஜபக்ஸவே முதன் முறையாக இலங்கையின் பாதுகாப்பை தனது நம்பிக்கைக்கு உரிய தன் சகோரர் கோத்தாபய ராஜபக்ஸவிடம் ஒப்படைத்து புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் கையாள வேண்டிய மூலோபாயம் - யுத்த தந்நிரம் நடைமுறைத் தந்திரம் என்பவற்றை வகுக்கும் முழுமையான கட்டில்லா சுதந்திரத்தை படையாழுமைக்கு வழங்கியிருந்தார்...

அந்த சுதந்திரத்தின் அடிப்படையில் கோத்தாபய – பீல்ட் மார்ஸல் சரத்பொன்சேகா – புலனாய்வுக் கட்டமைப்பின் ஜாம்பவான் கப்பில ஹெந்தவிதாரண ஆகியோரின் முக் கூட்டணி இலங்கையின் பாதுகாப்பு – யுத்த – மூலோபாயங்களை தீர்மானிக்கும் வெற்றிக் கூட்டணியாக மாறியது...

மகிந்தவுக்கு முந்திய காலப் பகுதியில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள், இராணுவ நகர்வுகள், புலிகளுக்கு எதிரான பாரிய யுத்தங்கள் யாவற்றிலும் அரசியல் மேலாண்மை இருந்தது... மக்களை பாதிக்கும் இராணுவ நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது உலக நாடுகளின் அழுத்தங்கள் வரும் போது ஆட்சியில் இருந்த தலைவர்கள் அதனை நிறுத்த உத்திரவிட்டு இருக்கிறார்கள்....

ஒப்பரேசன் லிபரேசனில் இருந்து இந்திய அமைதிகாக்கும் படையினரின் காலத்தில் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல கடினமான நகர்வுகள் அரசியல் உத்தரவுகளால் நிறுத்தப்பட்டு இருந்தன... இதனை இந்திய அமைதிகாக்கும் படையின் தளபதி கூட சொல்லி இருக்கிறார் ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தை சுற்றி வளைத்த போது டில்லியில் இருந்து வந்த உத்தரவால் அவருக்கு எந்த தீங்கும் இல்லாது பின்னேற வேண்டி ஏற்பட்டது... என்று..

. அது போல் யாழ் குடாநாட்டில் சரத்பொன்சேகா சில கட்டங்களில் இராணுவ மேலாண்மையை வெளிப்படுத்த முற்பட்ட வேளை சந்திரிக்கா அதனை தடுத்து நிறுத்தியிருந்தார்...

ஆனால் சர்வதேச வல்லரசுகளின் இராணுவக் கட்டமைப்பிற்கு ஈடாக புலனாய்வுக் கட்டமைப்பை வலுப்படுத்தியது மட்டும் அல்லாமல் அரசியல் ஆளுமைகள் நாட்டின் பாதுகாப்பின் மீது ஆதிக்கம் செலுத்ததாத இராணுவ அமைப்பியலை ராஜபக்ஸக்கள் பலமாக உருவாக்கி இருக்கிறார்கள்....

அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா, பிரான்ஸ், சீனா, ஜேர்மன், இந்தியா முதலான நாடுகளில் ஆட்சியாளர்கள் மாறுவார்கள்... ஆட்சிப் பீடத்தில் கட்சிகள் மாறி மாறி வந்து செல்லும். ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பில் புலனாய்வுக் கட்டமைப்பும் இராணுவமுமே பிரதான வகிபாகத்தை வைத்திருக்கும்...

இந்த வகையில் இந்தியாவின் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மீது கயிறு இறுகி வருவதற்கும் தேசிய பாதுகாப்புக் கொள்கைமீது உரசப் முற்பட்டதே காரணம் என என் சிற்றறிவு சொல்கிறது...

ஜெயலலிதாவை விட இந்தியாவில் ஊழல் செய்த மலை விழுங்கிகளே தப்பிச் செல்லும் போது ஆயிரக்கணக்கான கோடி ஊழல்களைப் புரிந்தவர்கள் எல்லாம் உலாவி வருக்கின்ற போது ஜெயலலிதா மீது மட்டும் இந்திய ஊழல் பாதகாப்பு சட்டம் இப்படி இறுகி நிற்கிறது என்றால் ஒரு மாநில அரசின் முதலமைச்சர் இந்திய தேசிய பாதுகாப்போடு தொடர்புடைய கொள்கைகளுக்கு எதிராக சட்டமன்றில் தீர்மானங்களை நிறைவேற்றுவதனை இந்திய புலனாய்வுக் கட்டபை்பு அனுமதிக்கப் போவதில்லை... அதனால் ஜெயலலிதாவை மன்னிக்க அரசியல் தலமைகள் விரும்பினாலும் தேசிய பாதுகாப்புக் கொள்கையை தீர்மானிக்கும் கட்டமை்ப்புகள் அதனை அனுமதிக்கப் போவதில்லை...

இந்த உதாரணங்களோடு ராஜபக்ஸக்கள் கட்டி எழுப்பி உள்ள புலனாய்வுக் கட்டமைப்பின் மேலோண்மையோடு கூடிய இலங்கையின் பாதுகாப்பு படைகளின் கட்டமைப்புகள் ஆட்சிகள் மாறினாலும் தமது நிகழ்ச்சி நிரல்களை தொடர்ந்தவண்ணமே இருப்பார்கள்... இருக்கிறார்கள்....

இலங்கையின் அரசியல் கட்சிகளை அவர்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்கான புலனாய்வுப் பிரிவுகள் 2005ன் இறுதிப் பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டன...

இந்தப் பிரிவுகள் நாடு முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களுடனும், கட்சிகளுக்குள் இருக்கும் முக்கியஸ்த்தர்களுடனும் தனிப்பட்ட நட்புக்களை பேணி வந்தன...

அந்த வகையில் என்னுடனும் கொழும்பில் சிலர் தொடர்புகளை எடுக்க முற்பட்ட தோடு தமிழ்க் கட்சிகளின் நகர்வுகள் பற்றிய செய்திகளை தங்களுடன் பரிமாறுமாறு கேட்டு இருந்தார்கள்..

.

இதனை மிக துல்லியமாகக் கையாண்டு பட்டும்படாமலும் தொட்டும் தொடாமலும் நகர்வுகளை முன்னெடுத்ததனால் ஒரு கட்டத்தில் அவர்கள் என்னுடன் தொடர்பு கொள்வதில் பிரயோசனம் இல்லை என உணர்ந்து வேறு சிலருடன் உறவை வளர்த்துக் கொண்டார்கள்.. (அவர்களையும் நன்கு அறிவேன்).

அரசியல் கட்சிகளை கண்காணிக்கும் இந்த புலனாய்வுக் கட்டமைப்புகள் கட்சிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகளை, தனிநபர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான செய்திகளை தமது நெருக்கமான ஊடக தரப்புகளின் ஊடாக, அல்லது சிங்கள மொழி ஊடகங்களின் ஊடாக கசிய விடுவார்கள்....

இந்த செய்திகளை சரியாக ஆராயாமல் பரபரப்புக்கும், தமது வாசகர் பெருக்கத்திற்குமாக நேரடியாகவோ, மொழிபெயர்த்தோ செய்திகளை வெளியிடுவார்கள்...

இவ்வாறு தொடர்ச்சியாக இட்டுக் கட்டி புலனாய்வுக் கட்டமைப்புகளால் கசியவிடப்படும் செய்திகள் நாளடைவில் பிரதான ஊடகங்களையும் ஆக்கிரமித்து, கட்சிகள் பல கூறுகளாக சின்னாபின்னமாக்கி உடைந்து போக காரணமாயின...

ராஜபக்ஸக்களின் நன்கு திட்டமிடப்பட்ட புலனாய்வு வலைப்பின்னலில் சிக்காத கட்சிகளும் இல்லை ஏற்படாத முரண்பாடுகளும் இல்லை... சிறுபான்மைக் கட்சிகளில் இருந்து பெரும்பான்மைக் கட்சிகள் வரை அனைத்தும் சின்னாபின்னமாகிப் போயின...

என்னறிவில் தமிழ்த் தேசியக் கூட்டைப்ப்பில் மட்டுமே அம்பாறையில் பியசேனவின் உடைப்பை தவிர வேறு எவரையும் ராஜபக்ஸக்களால் உடைத்தெடுக்க முடியாது போயின... அதுவே ராஜபக்ஸக்களுக்கு கடந்த தேர்தலில் சாவு மணி அடிக்கக் காரணமாகவும் இருந்தன...

ஆனாலும் ஏற்கனவே நான் கூறியது போன்று இனிவரும் காலங்களில் ஆட்சிகள் மாறலாம் ஆட்கள் மாறலாம் – இராணுவ நிகழ்ச்சி நிரல் மாறமாட்டாது... அதனை ஆட்சிமாற்றத்தின் பின் தொடரும் பல விடயங்கள் எமக்கு புலப்படுத்துகின்றன...

மீள் குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலையம், தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை, காணிகளை மீள ஒப்படைத்தல், தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்பு உள்ளிட்ட விடயங்களில் ஜனாதிபதி, பிரதமர், நல்லிணக்கத்தை ஏற்படுத்த விரும்பும் அமைச்சர்கள் மென்மைப் போக்கை கடைப்பிடிக்க முற்படுகின்ற போதும்... அதனை முழுமையாக மேற்கொள்ள படைக் கட்டமைப்பு இடம்கொடுக்க மறுக்கிறது...

இந்த வகையில் தமிழ்த்தேசயக் கூட்மைப்பை உடைப்பதற்கான நிகழ்ச்சி நிரலை படைப் புலனாய்வின் மோலாண்மையிலான இராணுவக் கட்டமைப்பு தொடர்ந்த வண்ணமே இருந்தது - இருக்கிறது - இருக்கும்...

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, நீதியரசர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான – தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் – மற்றும் கூட்டமைப்பின் மாகாண – உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும்....

கூட்டமைப்பின் தலமை அமைப்பின் கட்டுப்பாட்டை பேணுகின்ற அதே வேளை எதேட்சாதிகார போக்கை கைவிட வேண்டும்.... ஏனைய கட்சிகளை மதிக்காத தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்... கட்ந்த காலங்களில் மற்றவர்களை மதிக்காத ராஜபக்ஸக்களின் எதேட்சாதிகாரப் போக்கு இறுதியில் எவ்வளவு பலமாக இருந்த போதும், மக்களால் அவர்களின் சகபாடிகளால் தூக்கிஎறியப்பட்ட உதாரணம் கண்முன்னே இருக்கிறது....

கூட்டு முடிவுகள் இன்றி மற்றவர்களை கணக்கில் எடுக்காது, தான்தோன்றித் தனமாக முடிவுகளை எடுத்த ஆட்சியாளர்கள், தலைவர்கள் இறுதியில் எனவானார்கள் என்பதனை கூட்டமைப்பின் தலைமை நன்கு உணர வேண்டும்....

அதே போல் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் கட்சிகள் தலைவர்கள்.. சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளை தவிர்த்து அரசியல் முதிர்ச்சியுடன் கூடிய ஆளுமையுள்ள தலைவர்களாக தங்களை வெளிப்படுத்த வேண்டும்...

கட்சிக்குள் இடம்பெறும் பேச்சுவார்த்தைகள், முடிவுகளை அவற்றின் முக்கியத்துவம் கருதி வெளியிட முடியுமா? வெளியிட முடியாதா என்பதனை தீர்மாணித்து தமது ஊடக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் இலாபங்களுக்காக வாக்கு வங்கிகளுக்காக முடிவுகளை எடுக்கும் போது ஒன்றாக இருந்து விட்டு வெளியில் வந்து அந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிவிட முடியாது.

ஒரு நாட்டின் ஆழும் அரசாங்கத்தில் அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் கூட்டு முடிவுகள்... அதில் உள்ள முரண்பாடுகளை அமைச்சரவையிலேயே விவாதிப்பார்கள்...

இறுதியில் முரண்பாடுகளுக்குள் உடன்பாட்டுடன் முடிவை அறிவிப்பார்கள்... சில மேலைத்தேய நாடுகளில் அமைச்சரவை முடிவுடன் முரண்பட்ட அமைச்சர்கள் சிலர் தமது பதவியை ராஜினாமாச் செய்திருக்கிறார்கள்...

உண்மையில் கூட்டமைப்பின் தலைமையுடன் முரண்பாடு இருந்தால் பேசித் தீர்க்க வேண்டும்... இல்லையேல் உடன்பட்டு செல்ல வேண்டும்... உடன்பட முடியாவிட்டால் தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்தது போன்று தற்துணிவுடன் வெளியேற வேண்டும்...

அப்படி இல்லாமல்... எனக்கு தெரிந்த ஒரு தம்பதிபோல் இருக்கக் கூடாது.. கணவன் மனைவி பகல் முழுக்க சண்டை போடுவார்கள்... சண்டை போடாத நாட்களே குறைவு. அடி, தடி பின் மனைவி வீட்டை விட்டு கணவனை வெளியில் அனுப்பி விடுவார்... கணவன் எங்களிடம் வந்து கேட்பார் ஒருவாறு தனது மனைவியை சமாதானப்படுத்தி என்னை வீட்டுக்குள் சேர்த்து விடுங்கள் என்று அப்படியே செய்வோம்....

காலையில் இருவரும் சேர்ந்து எம்மை வெளியில் விடவா எனக் கேட்பார்கள்.... பிள்ளைகளின் வாழ்வு (ஒருவரைத் தவிர) சீரழிந்து போயின.. (மன்னிக்கவும் இந்த உதாரணம் சற்று உணர்வு சார்ந்ததாக இருந்தர்லம் 1980களில் நடந்த இந்த சம்பவத்தை விட வேறு உதாரணம் எனக்கு தெரியவில்லை)

அது போலத்தான் குத்து வெட்டு குழிபறிப்பு எல்லாவற்றையும் எல்லோரும் பரஸ்பரம் செய்து கொண்டு தேர்தல் காலங்களில் மட்டும் ஒன்றாவதாக மக்களை ஏமாற்ற வேண்டாம்....

மீண்டும் மீண்டும் நெஞ்சுருகிச் சொல்கிறேன்... லட்சோப லட்சம் மக்களினதும், லட்சக்கணக்கான அனைத்து போராளிகளினதும் தியாகங்களில் மாகாண சபை உள்ளுராட்சி, பாராளுமன்றக் கதிரைச் சுகங்களை அனுபவிக்கும் நீங்கள்.... கமரோனை, மோடியை, ஜோன்ஜெரியை இப்படி உலகத் தலைவர்களுடன் கைகுலுக்கும் நீங்கள், வெள்ளை மாளிகையையும், டவுனிங் ஸ்ரீற்றையும், டில்லி இந்தியா கேற்றையும், இப்படி உலக நாடுகளின் முக்கிய இடங்களையும் தரிசிக்கும் நீங்கள்... அந்த மக்களின் வாழ்வுரிமையை சுபீட்ச வாழ்வை முன்னிறுத்தி உங்கள் அரசியல் தகுடு தத்தங்களை கைவிடுங்கள்...

தலைமையில் இருப்பவர்களும் – முரண்படுபவர்களும் தொடர்ந்து முட்டி மோதி இராணுவ புலனாய்வுக் கட்டமைப்பின் நிகழ்ச்சிநிரலுக்கும் மூழ்கப் போகிறீர்களா? என்பதனை தீர்மானியுங்கள்.....

நடராஜா குருபரன்..

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119366/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.