Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இஸ்ரேல் பாலத்தீன மோதல்- 10 கேள்விகள்

Featured Replies

151014154253_palestinian_protesters_950x

பாலத்தீனப் போராட்டக்காரர்கள்

இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது.

இஸ்ரேலியப் பிரஜைகள் மீது நடந்த பல தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் தனது ராணுவத்தை இந்த வாரம் ஜெருசலேத்தின் வீதிகளில் நிறுத்தி , நகரின் சில பகுதிகளுக்குள் நுழையத் தடை விதித்தது.
இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் பாலத்தீனர்கள் சிலரின் உயிர்களையும் பலிவாங்கிவிட்டன. இந்த வன்முறை மீண்டும் வெடித்திருப்பதை, பலர் ஒரு புதிய "இண்டிஃபாடா" ( எழுச்சி என்பதற்கான அரபு வார்த்தை) உருவாவகக் கூடும் என்று அஞ்சுகிறார்கள்.

இந்த சமீபத்திய பதற்ற நிலை, ஜெருசலேத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியைச் சுற்றி எழுந்துள்ளது. இந்த நகரை இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்கள் ஆகிய இரு தரப்பினருமே உரிமை கொண்டாடுகிறார்கள்.
ஆனால் இது நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு சிக்கலான மோதலின் மிகச்சமீபத்திய ஒரு அத்தியாயம்தான். இதற்கு தீர்வு என்பது வெகு தொலைவில் இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது
கருத்துக்களை பிளவு படுத்தும் இந்த மோதலைப் புரிந்துகொள்ள உதவ 10 கேள்விகளை பிபிசி தமிழோசை பரிசீலிக்கிறது.

1.மோதல் எப்படி தொடங்கியது ?

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய யூதர்கள் அனுபவித்த யூத எதிர்ப்பு நடவடிக்கைகளால் உத்வேகம் பெற்று, யூதர்களுக்கு ஐரோப்பாவுக்கு வெளியே ஒரு சொந்த நாடொன்றை நிறுவும் நோக்கில் சையோனிச இயக்கம் உருவானது.
அந்தக் காலகட்டத்தில், பாலத்தீனப் பிராந்தியம் ஆட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தப் பகுதி முஸ்லீம்கள், யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் என்ற மும்மதத்தினராலும் புனிதமான இடமாகக் கருதப்பட்டது.

151015200315_140801121107_israel_gaza_62
மிக நீண்ட மோதலில் இது ஒரு மிகச்சமீபத்திய அத்தியாயம்

சையோனிய அபிலாஷைகளால் உந்தப்பட்ட யூதக் குடியேற்றத்துக்கு , அப்பகுதியில் பெரும்பான்மையாக இருந்த அரபு மற்றும் பிற முஸ்லீம் சமூகங்களிலிருந்து எதிர்ப்பு எழத்தொடங்கியது.

ஆட்டோமான் பேரரசு முதலாம் உலகப்போரின் முடிவில் வீழ்ந்த நிலையில், ஐநா மன்றத்தின் முன்னோடியாக உருவான சர்வதேச நாடுகள் லீக் என்ற அமைப்பு பிரிட்டனுக்கு பாலத்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பைத் தந்தது.
பிரிட்டிஷ் அரசு முதலாம் உலகப்போரின் போதும் அதற்கு முன்னரும் அரபுகளுக்கும் யூதர்களுக்கும் பல்வேறுவகையான உறுதிமொழிகளைத் தந்திருந்தது. ஆனால் அவை எதையும் அது நிறைவேற்றவில்லை. இதற்குக் காரணம், மத்தியக்கிழக்குப் பகுதியே பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசுகளின் கட்டுப்பாட்டில் பிரித்து வைக்கப்பட்டிருந்ததுதான். இந்த இரு நாடுகளும் மத்தியக் கிழக்கு பிரதேசத்தை தத்தம் செல்வாக்குக்குட்பட்ட வலயங்களாகப் பிரித்துக்கொள்ள உடன்பட்டிருந்தன.

அரபு தேசியவாதிகளுக்கும் சையோனிஸ்டுகளுக்குமிடையே நடந்த மோதல்கள், யூத மற்றும் அரபு ஆயுதக்குழுக்களுக்கிடையேயான மோதல்களால வலுப்பெற்றன.


151014163706_palestine_israel_historical
ஆட்டோமான் பேரரசு வீழ்ந்தபின், பாலத்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்குக் கிடைத்தது

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் , யூத நாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் வலுத்தன.
பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை பாலத்தீனர்களுக்கும் யூதர்களுக்குமிடையே பிரித்துத் தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இது 1948 மே 14ம் தேதி இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவாகக் காரணமாயிருந்தது.
இதற்கடுத்த நாள், எகிப்து, ஜோர்டான், சிரியா மற்றும் இராக் ஆகிய நாடுகள் பிரிட்டிஷாரின் முந்தையக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தின. இது முதல் அரபு-இஸ்ரேலிய யுத்தம் உருவாகக் காரணமாக இருந்தது. இதைத்தான் யூதர்கள் சுதந்திரப் போர் அல்லது விடுதலைக்கான போர் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த மோதலுக்குப் பின்னர், அரபு நாடு என்ற ஒன்றுக்காக ஐநா முதலில் திட்டமிட்டிருந்த நிலப்பரப்பு பாதியாகக் குறைக்கப்பட்டது.
ஆனால் இதை பாலத்தீனர்கள் "நக்பா" அல்லது பேரழிவு என்ற ஒன்று தொடங்கிவிட்டதாகக் கருதினார்கள். சுமார் 7.5 லட்சம் பாலத்தீனர்கள் அண்டைநாடுகளுக்கு வெளியேறிவிட்டனர் அல்லது யூதப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால், 1948 போர் ஒன்றும் அரேபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையே கடைசியாக நடந்த போரல்ல.


150707163807_1abdulrahman.jpg
இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே கடைசியாக நடந்த ஆயுதமோதல், 2014ல் காசா நிலப்பரப்பில் நடந்தது. இதில் பெரும்பாலும் பாலத்தீனர்கள் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

1956ல் சூயஸ் கால்வாய் தொடர்பான நெருக்கடி ஒன்று, இஸ்ரேலை எகிப்துக்கு எதிராக நிறுத்தியது. ஆனால் இந்த மோதல் ஒரு திட்டவட்டமான ராணுவ வெற்றியில் முடியவில்லை. ஏனென்றால், இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீது வந்த சர்வதேச அழுத்தம் அவைகளைப் பின்வாங்கச் செய்தன.

ஆனால் 1967ல் நடந்த ஆறு நாள் போரில், ஒரு திட்டவட்டமான முடிவு ஏற்பட்டது. அந்தப் போரில் அந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதியும் 10ம் தேதியும் நடந்த நிகழ்வுகள் ஆழமான விளைவுகளுக்கு இட்டுச்சென்றன.
இஸ்ரேல் பெற்ற பெருவெற்றி அது காசா நிலப்பரப்பையும் சைனாய் தீபகற்பத்தையும் கைப்பற்ற உதவியது. இவை 1948லிருந்து எகிப்து கட்டுப்பாட்டில் இருந்தன. கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரை ஜோர்டான் கட்டுப்பாட்டில் இருந்தது , கோலான் குன்றுகள் சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவை அனைத்தையும் இஸ்ரேல் கைப்பற்றிவிட்டது. சுமார் 5 லட்சம் பாலத்தீனர்கள் வெளியேறினர்.

இந்தப் போரை அடுத்து, 1973ல் 'யொம் கிப்பூர்' போர் நடந்தது இதில் எகிப்தும் சிரியாவும், இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்தப் போரில் எகிப்து சைனாய் தீபகற்பத்தில் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியது. ( மீதமிருந்த பகுதியை இஸ்ரேல் 1982ல் கையளித்துவிட்டது). ஆனால் காசா நிலப்பரப்போ அல்லது சிரியாவின் கோலன் குன்றுகளையோ இஸ்ரேலிடமிருந்து பெற முடியவில்லை.
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் எகிப்து இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்ட முதல் அரபு நாடாகியது. அதன் பின்னர் ஜோர்டான் மட்டும் இதே போன்று ஒப்பந்தம் ஒன்றை எட்டியது.
பாலத்தீனக் கட்டுப்பாட்டுக்கு 1994க்கு பின்னர் திரும்பக் கையளிக்கப்பட்ட காசா நிலப்பரப்பு , பின்னர் 2008, 2009 ,2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே மேலும் ஆயுத மோதலைக் கண்டது.

2. இஸ்ரேல் ஏன் மத்தியக் கிழக்கில் உருவானது?

யூத பாரம்பரியம் நவீன இஸ்ரேலை, பைபிளில் வரும் மூன்று நாயகர்களில் முதல்வரான , ஆப்ரகாம் மற்றும் அவரது வழித்தோன்றல்களுக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில் உருவான நாடாகக் கருதுகிறது.
இந்தப் பிரதேசம், பழங்காலங்களில், அசீரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகத்தினர்,மாசிடோனியர்கள் பின்னர் ரோமானியர்கள் என்று பலதரப்பட்டவர்களால் போர் தொடுக்கப்பட்ட ஒன்று. ரோமானியர்கள் இந்தப் பகுதியில் ஜுடேயியா என்ற மாகாணத்தை நிறுவினர்.

இந்த மாகாணத்தில் வசித்த யூதர்கள் பல முறை கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பிறகு கி.பி 135ம் ஆண்டு, தேசியவாத யூத கிளர்ச்சியொன்றை முறியடித்த பேரரசர் ஹேட்ரியன், ரோமானிய சிரியாவையும் ரோமானிய ஜுடேயியாவை ஒன்றிணைத்து , புதிய சிரியா-பாலத்தீனம் என்ற ஒரு மாகாணத்தை நிறுவினார். இந்தப் போரின் போது, யூத மக்கள்தொகை, கொல்லப்பட்டோ, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டோ, அல்லது அடிமைகளாக விற்கப்பட்டோ, வெகுவாகக் குறைந்தது.


151014170516_orthodox_jew_624x351_afp_no
யூதர்களைப் பொறுத்தவரை, பழைய பாலத்தீனத்துக்குத் திரும்புவது என்பது, தங்களுக்கு பைபிளில் உறுதியளிக்கப்பட்ட நிலத்துக்குத் திரும்புவதாக அர்த்தம்

கி.பி ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் உருவானதை அடுத்து, பாலத்தீனம் அரேபியர்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஐரோப்பிய சிலுவைப்போராளிகளும் இதன் மீது போர் தொடுத்தனர்.
பிறகு 1516ல் தொடங்கிய துருக்கிய ஆதிக்கம், முதலாம் உலகப்போர் வரை நீடித்தது.
போருக்குப் பின் சர்வதேச நாடுகள் சபை ( லீக் அஃப் நேஷன்ஸ்) பிரிட்டனுக்கு பாலத்தீனத்தை நிர்வகிக்க உத்தரவை வழங்கியது. இது 1948 வரை நீடித்தது.

இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களால் நடத்தப்பட்ட யூத இனப்படுகொலையில் பல லட்சம் ஐரோப்பிய யூதர்கள் மாண்ட பிறகு, யூத நாடு ஒன்றை அங்கீகரிக்க சர்வதேச அழுத்தம் அதிகரித்தது.
பிரிட்டிஷ் அரசால், அரபு தேசியவாதிகள் மற்றும் சையோனிஸ்டுகளிடையே எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கமுடியவில்லை. பிரச்சனை ஐநாவுக்கு போனது. அது ஒரு சிறப்பு ஆணையத்தை உருவாக்கியது.
1947ம் ஆண்டு நவம்பர் 29ம் நாள், ஐநா மன்ற பொதுச்சபை, பாலத்தீனத்தைப் பிரிக்கும் ஒரு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இது அரபு நாடு, ஒரு யூத நாடு, ஜெருசலேத்துக்கென்று சிறப்பு திட்டம் என்று மூன்று விஷயங்களை பரிந்துரைத்தது.

இஸ்ரேலியர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் அரேபியர்கள் இது தங்கள் நிலத்தைப் பறிக்கும் ஒரு முயற்சியாகக் கருது , இதை ஏற்றுக்கொள்ளவிலை. எனவே இத்திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

151014163951_palestine_israel_historical

இஸ்ரேல் நாடு 1948 மே மாதம் 14ம் நாள் உதயமானது

ஆனால் பிரிட்டிஷ் நிர்வாக ஏற்பாடு முடிவுக்கு வர ஒரு நாள் முன்னதாக , 1948ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதியே, இந்த ஏற்பாடு காலத்தின் போது, யூதர்களை பிரதிநிதித்துவப் படுத்திய யூத அமைப்பு, இஸ்ரேல் என்ற நாடு உருவாகிவிட்டதாக அறிவித்தது.
அடுத்த நாள் இஸ்ரேல் என்ற அந்தப் புதிய நாடு, ஐநா மன்ற உறுப்பினராக விண்ணப்பித்தது. இந்த அந்தஸ்தை அடுத்த ஆண்டில் அது பெற்றது. தற்போது ஐநா மன்றத்தில் சுமார் 83 சதவீத உறுப்பு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்துள்ளன. ( 192 உறுப்பு நாடுகளில் 160 நாடுகள்).

3.இரண்டு பாலத்தீனப் பிரதேசங்கள் ஏன்?

1947ல் பாலத்தீனத்துக்கான ஐநா மன்ற சிறப்பு கமிட்டி பாலத்தீன நாடு என்பது மேற்கு கலிலீ, சமாரியா மற்றும் ஜுடேயியா மலைப்பிரதேசம் ( ஜெருசலேம் நீங்கலாக), மற்றும் எகிப்து எல்லை வரையிலான இஸ்துத் கடற்கரைச் சமவெளிப் பிரதேசம் ஆகியவை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது
ஆனால் உண்மையில் முதல் அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் 1949ல் ஏற்பட்ட போர் நிறுத்தக் கோடே பிரதேசப் பிரிவினையை நிர்ணயித்தது.
இந்த இரு பாலத்தீன பிரதேசங்கள் என்பவை, மேற்குக் கரை மற்றும் காசா நிலப்பரப்பு ஆகியவை. இவைகளுக்கிடையே உள்ள இடைவெளி,மிக நெருங்கிய நிலப்பரப்பில், சுமார் 40 கிமீ இருக்கும்.
ஜோர்டான் நதிக்கு மேற்கே இருப்பதால் மேற்குக் கரைக்கு அந்தப் பெயர் வந்தது. இது ஜெருசலேம் வரை நீள்கிறது. பாலத்தீனர்களும், யூதர்களும் ஜெருசலேத்தைத்தான் தங்கள் தலைநகர் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
இந்த மேற்குக் கரை தற்போது பாலத்தீன தேசிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு. இதன் முக்கிய குழு என்பது மதசார்பற்ற ஃபத்தா கட்சி.
காசா நிலப்பரப்புக்கு இஸ்ரேலுடன் சுமார் 51கிமி தொலைவுள்ள எல்லைப்பகுதி இருக்கிறது. அதற்கு 40கிமீ நீளமுள்ள மத்தியதரைக் கடற்கரையும் இருக்கிறது. எகிப்துடன் அது 7 கிமீ எல்லைப் பகுதியைக் கொண்டிருக்கிறது.
தற்போது ஹமாஸ் என்ற முக்கிய பாலத்தீன இஸ்லாமியவாத அமைப்பு காசா நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இது பாலத்தீன குழுக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட எந்தவொரு ஒப்பந்தத்தையும் அங்கீகரிக்கவில்லை.

4.இஸ்ரேலியர்களும் பாலத்தீனர்களும் எப்போதாவது ஒரு அமைதி ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களா?

இஸ்ரேல் நாடு உருவான பின், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர நேரிட்ட பின், பாலத்தீன தேசியவாத இயக்கங்கள் காசாவிலும், மேற்குக்கரையிலும் மீண்டும் அணிதிரண்டன. அவைகளுக்கு முறையே, எகிப்து மற்றும் ஜோர்டானின் ஆதரவு கிடைத்தது. இந்த இயக்கங்கள் மற்ற அரபு நாடுகளில் உருவாக்கப்பட்ட அகதி முகாம்களிலும் வேறூன்றின.

1967ம் ஆண்டு போருக்கு சற்று முன்பு, ஃபத்தா போன்ற இயக்கங்கள் பாலத்தீன விடுதலை இயக்கம் (பி.எல்.ஓ) என்ற அமைப்பை உருவாக்கி, இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின. முதலில் ஜோர்டானிலிருந்தும் பின்னர் லெபனானிலிருந்தும் இந்தத் தாக்குதல்கள் நடந்தன.
இந்தத் தாக்குதல்கள் , விமானங்கள், தூதரகங்கள் , தடகள விரர்கள் என பல்வேறு யூத இலக்குகளை குறிவைத்து நடந்தன.

பல ஆண்டுகாலம் இவ்வாறான பாலத்தீனத் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்குப் பின், பாலத்தீன விடுதலை அமைப்பும், இஸ்ரேலும், 1993ல் ஆஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, பாலத்தீன அமைப்பு "வன்முறையையும், பயங்கரவாதத்தையும்" கைவிட்டது. மேலும் அது இஸ்ரேல் 'அமைதியுடனும் பாதுகாப்புடனும்' வாழ அதற்கிருக்கும் உரிமையையும் அங்கீகரித்தது.

இந்த அங்கீகாரத்தை ஹமாஸ் அமைப்பு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இஸ்ரேல் மேற்குக்கரையிலிருந்தும், காசாவிலிருந்தும் அதன் யூதக் குடியேற்றங்களை படிப்படியாக விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டது. இதன் மூலம் பாலத்தீனர்கள் ஒரு சுதந்திரமான நாடாக உருவாக அனுமதிக்க இந்த முடிவுக்கு அது ஒப்புக்கொண்டது.
ஆனால் இதை இஸ்ரேல் ஒரு போதும் அமல்படுத்தவில்லை.

151014132335_israel_624x351_bbc_nocredit
பிரச்சனைக்குரிய ஜெருசலேம்

இந்த ஒப்பந்தங்களின் விளைவாகத்தான் பாலத்தீனர்களை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும், பாலத்தீன தேசிய நிர்வாக அமைப்பு உருவானது.
அதன் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் தனது பிரதமரையும், கேபினட் அமைச்சர்களையும் தேர்ந்தெடுக்கிறார்.

ஆனால் ஜெருசலேத்தின் அந்தஸ்து இரண்டு தரப்புகளுக்கும் இடையே நிலவும் மோதலுக்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்தாலும், இந்த விஷயம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. ஜெருசலேத்தை பாலத்தீனர்கள் தங்கள் வரலாற்று ரீதியான தலைநகராகக் கருதுகிறார்கள்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ந்தேதி, பாலத்தீன தேசிய நிர்வாக அமைப்பின் அதிபர் , மகமூத் அப்பாஸ், ஐநா மன்ற 70வது பொதுச்சபையில் பேசும்போது,இஸ்ரேல் ஆஸ்லோ ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறியதால், தனது அரசு ஆஸ்லோ உடன்படிக்கைகளுக்குக் இனி கட்டுப்படாது என்று அறிவித்துவிட்டார்.

150930163645_abbas_un_assembly_624x351_e
ஆஸ்லோ ஒப்பந்தத்துக்கு பாலத்தீன நிர்வாக அமைப்பு கட்டுப்படாது - மகமூத் அப்பாஸ்

5.பாலத்தீனர்கள் இஸ்ரேலியர்கள் மோதல் - முக்கிய பிரச்சனைகள் என்ன ?

பாலத்தீன சுதந்திர நாடை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம், மேற்குக்கரையில் யூதக் குடியிருப்புகள் கட்டப்படுவது, யூத மற்றும் பாலத்தீனப் பகுதிகளைப் பிரிக்கும் பாதுகாப்புச் சுவர் ஆகிய இவைகள் அமைதி வழிமுறையை சிக்கலாக்கியிருக்கின்றன. இந்த சுவர் தெ ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தாலேயே கண்டனத்துக்குள்ளானது.
ஆனால் இவையெல்லாம் வெறும் இடைஞ்சல்கள்தான். அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் 2000ம் ஆண்டில் நடந்த இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளின்போது, அதிபர் பில் கிளிண்டனால் யாசர் அராபத்தையும், இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் பராக்கையும் இணங்க வைக்க முடியவில்லை என்பதிலிருந்தே இது தெளிவானது.

150930164159_sp_acuerdo_oslo_624x351_afp
ஜெருசலேம்: இஸ்ரேல் இந்த நகரின் மீது இறையாண்மை கொண்டாடுகிறது. 1967ல் கிழக்கு ஜெருசலேத்தைப் பிடித்ததிலிருந்தே, அது இந்நகரை தனது தலைநகராகக் கருதுகிறது. இது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. பாலத்தீனர்களும் கிழக்கு ஜெருசலேத்தை தங்கள் தலைநகராக விரும்புகிறார்கள்.

எல்லைகள் மற்றும் நிலப்பரப்பு: பாலத்தீனர்கள் தங்களது எதிர்கால நாடு, 1967ல் நடந்த ஆறு நாள் போருக்கு முந்தைய எல்லைகள் அடைப்படையில் உருவாக்கப்படவேண்டும் என்று கோருகிறார்கள். இதை இஸ்ரேல் நிராகரிக்கிறது.

குடியேற்றங்கள்:இவை சர்வதேச சட்டப்படி, சட்டவிரோதக் கட்டிடங்கள். இவைகளை 1967 போருக்குப் பின்னர் இஸ்ரேல் ஆக்ரமித்த நிலப்பரப்புகளில் கட்ட இஸ்ரேலிய அரசு அனுமதித்தது. மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெருசலேத்திலும் இப்போது ஐந்து லட்சத்துக்கும் மேலான யூதக் குடியேறிகள் இருக்கிறார்கள்.

பாலத்தீன அகதிகள்:பாலத்தீனர்கள் இஸ்ரேல் உருவான பின்னர் அங்கிருந்து வெளியேறிய அனைத்து பாலத்தீன அகதிகளுக்கும் இஸ்ரேல் திரும்ப உரிமை உண்டு என்கிறார்கள். பி.எல்.ஓ கணக்குப்படி, இந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 10.6 மிலியன். இதில் சுமார் பாதி எண்ணிக்கையினர் ஐநாவால் பதியப்பட்டவர்கள். ஆனால் இவ்வளவு பேரையும் இஸ்ரேலுக்குள் அனுமதிப்பது என்பது இஸ்ரேல் ஒரு யூத நாடு என்ற அடையாளத்தையே அழித்துவிடும் என்று இஸ்ரேல் கூறுகிறது.

6.பாலத்தீனம் என்பது ஒரு நாடா?

கடந்த 2012 நவம்பர் 29ம் தேதி, ஐநா மன்றப் பொதுச்சபை பாலத்தீனர்களின் பிரதிநிதித்துவ அந்தஸ்தை, "உறுப்பினரல்லாத பார்வையாளர் நாடு" என்ற தரத்துக்கு வாக்களிப்பு மூலம் உயர்த்தியது.
இந்த மாற்றம், பாலத்தீனர்களை, பொதுச்சபை விவாதங்களில் பங்கேற்கவும், அது பிற ஐநா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் உறுப்பினராகு வாய்ப்புகளைக் கூட்டவும் உதவியது.
இது 2011ல் ஐநாவில் முழு உறுப்பு நாடாகச் சேர பாலத்தீனம் செய்து தோல்வியடைந்த முயற்சியை அடுத்து வந்தது. பாலத்தீனத்தின் இந்த முயற்சிக்கு ஐநா மன்ற பாதுகாப்பு கவுன்சிலில் போதிய ஆதரவு கிட்டவில்லை.


150930181309_palestinian_flag_640x360_re
2015ல் ஐநா மன்ற தலைமையகத்துக்கு வெளியே பறக்கத் தொடங்கிய பாலத்தீனக் கொடி
ஆனால் பாலத்தீனத்துக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து இன்னும் ஐநா மன்றத்தால் தரப்படவில்லை என்றாலும், ஐநா பொதுச்சபையில் உள்ள உறுப்பு நாடுகளில் ஏறக்குறைய 70 சதவீதத்தினர் பாலத்தீனத்தை ஒரு நாடாகவே அங்கீகரிக்கின்றனர்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐநா மன்றத்தின் பொதுச்சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள், பாலத்தீனக் கொடியை ஐநா மன்ற தலைமையகத்திற்கு வெளியே பறக்கவிட அனுமதித்து வாக்களித்தனர்.

7.அமெரிக்கா ஏன் இஸ்ரேலின் முக்கிய கூட்டாளி ? பாலத்தீனத்துக்கு யார் ஆதரவு?


அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவான ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரக் குழு இருக்கிறது. பொதுமக்கள் கருத்துணர்வும், இஸ்ரேலுக்கு சாதகமாகவே இருக்கிறது. எனவே அமெரிக்காவின் எந்த ஒரு அதிபரும் இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவைக் கைவிடமுடியாத நிலை இருக்கிறது.
பிபிசி 2013ல் 22 நாடுகளில் நடத்திய ஒரு ஆய்வில், இஸ்ரேலைப் பற்றி சாதகமான மக்கள் கருத்துணர்வு நிலவும் ஒரே மேலை நாடு அமெரிக்காதான் என்று தெரியவந்தது.

இதைக்காட்டிலும், இந்த இரு நாடுகளும் ராணுவரீதியில் கூட்டாளி நாடுகள். இஸ்ரேல்தான் அமெரிக்காவால் மிக அதிக சர்வதேச உதவி பெறும் நாடு. இதில் பெருமளவு உதவித் தொகை, கொடையாக வழங்கப்படுகிறது. இந்தக் கொடை ஆயுதம் வாங்கவே தரப்படுகிறது.

140805152548_israel_eeuu_624x351_getty.j
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இஸ்ரேல் பிரதமர் நெடன்யாகூவுக்கும் இடையே உறவுகள் சுமுகமாக இல்லை என்றாலும் இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு பலமாகவே இருக்கிறது
ஆனால் பாலத்தீனர்களுக்கு இது போல ஒரு சக்தி வாய்ந்த நாட்டின் வெளிப்படையான ஆதரவு இல்லை.
எகிப்தின் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்துடன் ஹமாஸ் நீண்ட காலமாகத் தொடர்பு வைத்திருக்கிறது. ஆனால் எகிப்தில் இஸ்லாமியவாத அதிபர் மொஹமது மோர்சி ராணுவ அதிரடிப் புரட்சியில் பதவிநீக்கம் செய்யப்பட்டபின் , ஹமாஸுக்கு எகிப்து ஆதரவு தருவதை நிறுத்திக்கொண்டது.

சிரியா,இரான் மற்றும் லெபனான் குழுவான, ஹெஸ்புல்லாவும் , ஹமாஸின் முக்கிய ஆதரவாளர்கள். வேறு பல நாடுகள்கூட பாலத்தீன லட்சியத்துக்கு அனுதாபத்துடன் இருக்கலாம். ஆனால் இந்த அனுதாபம் என்பது நடவடிக்கையாக மாறுவதில்லை.
மத்திய கிழக்கில் தற்போது நடந்து வரும் மோதல்களும் சர்வதேச மக்கள் கருத்துணர்வை திசைதிருப்பியிருக்கின்றன.

8.தற்போதைய மோதல் ஏன் ?

சில காலம் ஒப்பீட்டளவிலான அமைதிக்குப் பின்னர், பாலத்தீன மற்றும் யூத சமூகங்களிடையே மீண்டும் வன்முறை செப்டம்பர் மத்தியில் வெடித்தது. அல் அஸ்கா மசூதியில் நடந்த மோதல்களுக்குப் பின்னர் இந்த வன்முறை தோன்றியது. இந்த மசூதி ஜெருசலேத்தில் உள்ள முஸ்லிம்களால் புனிதமான ஒரு இடமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த இடத்தின் நிர்வாகத்துக்கான தற்போதைய ஏற்பாடுகளை மாற்றியமைக்க இஸ்ரேல் திட்டமிடுகிறது என்ற வதந்திகளே இந்த வன்முறையைத் தூண்டின.

151014120752_israel_624x351_getty_nocred
சமீபத்திய வன்முறையில் 7 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த வதந்திகளை இஸ்ரேல் மறுத்தது. ஆனால் இதற்கு சற்று பின்னர், இரண்டு இஸ்ரேலியர்கள் பாலத்தீனர்களால் மேற்குக் கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதன் பின்னர் வெடித்த கத்திக்குத்து சம்பவங்கள், துப்பாக்கிச் சூடுகளில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட பாலத்தீனர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்படும், அவர்கள் ஜெருசலேத்தில் வசிக்கும் உரிமை இழப்பார்கள் என்று இஸ்ரேல் அறிவித்தது.

இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் கிழக்கு ஜெருசலேத்தில் பல பகுதிகளின் எல்லைகளில் சோதனைச்சாவடிகளை அமைக்க ஆரம்பித்தனர். இம்மாதிரி சோதனைச்சாவடிகள் அமைக்கப்படுவது 1967லிருந்து இதுவே முதல் முறை.
இதனிடையே, பாலத்தீனர்கள் மேற்குக் கரையில் உள்ள பெத்லஹேமில் " கோப நாளை" அனுசரித்தனர். இளைஞர்கள் யூத பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்தனர். காசா நிலப்பரப்புக்கு வன்முறை பரவியது. அங்கும் கல்லெறிதலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலியப் படைகளுடன் மோதினர்.

9.புதிய இண்டிபாடா ( அதிர்வு) ஏற்படுமா?

பாலத்தீனர்கள் 1980களிலும், 2000களின் ஆரம்பத்திலும் இரண்டு பெரும் கிளர்ச்சிகளைச் செய்தனர். அமைதி வழிமுறை ஏறக்குறைய செத்துவிட்ட நிலையில், இது ஒரு மூன்றாவது கிளர்ச்சியின் ஆரம்பமாக இருக்குமோ என்று பலர் சந்தேகப்படுகின்றனர்.

I151021095135_intifada_640x360_epa_nocred
புதிய "இண்டிபாடா" (அதிர்வு) ?

ஆனால் இந்த சமீபத்திய தாக்குதல்கள் குறிப்பாக ஒன்றும் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டவை போலத் தெரியவில்லை. ஆனாலும், அவை பாலத்தீனர்கள் சிலரின் மத்தியில் அதிகரித்துவரும் கோபம் மற்றும் விரக்தியின் பிரதிபலிப்பாகவே கருதப்படுகின்றன.

சில தீவிரவாதக் குழுக்களால் இந்த வன்முறை சிலாகிக்கப்பட்டாலும், பாலத்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இந்த வன்முறை அதிகரிப்பதை பாலத்தீனர்கள் விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
ஆனாலும், ஜெருசலேத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் கெவின் கொனலி கூறுவதைப் போல, உண்மையில் யாராலும் அடுத்து என்ன நடக்கும் என்று ஆருடம் கூற முடியாது.
இந்த வன்முறை தோன்றியதைப் போலவே உடனடியாக முடியலாம் அல்லது மேலும் அதிக வன்முறைக்கு இட்டுச்செல்லலாம் என்கிறார் அவர்.

10. நீடித்த அமைதிக்கு என்ன தேவை?

பாலத்தீனர்கள் பார்வையில், ஹமாஸையும் உள்ளடக்கிய ஒரு இறையாண்மை மிக்க பாலத்தீன நாடு உருவாவதை இஸ்ரேல் ஆதரிக்கவேண்டும், காசா நிலப்பரப்பின் மீது அது வைத்திருக்கும் முற்றுகை நிலையை விலக்கிக்கொள்ள வேண்டும், மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேத்தில் நடமாட்டங்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.
இஸ்ரேலோ, அனைத்துப் பாலத்தீனக் குழுக்களும் வன்முறையைக் கைவிட்டு, இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்கவேண்டும் என்று கூறுகிறது.
இரு தரப்புகளுமே எல்லைகள் விஷயத்திலும், யூதக் குடியிருப்புகள் மற்றும் அகதிகள் நாடு திரும்பல் ஆகிய விஷயங்களிலும் நியாயமான ஒரு ஒப்பந்தத்தை எட்ட வேண்டும்.


151011155720_israel_624x351_afp_nocredit
எட்டப்பட முடியாத நிலையில் தீர்வு ?

ஆனால் இஸ்ரேல் என்ற நாடு உருவான 1948லிருந்தே, பல விஷயங்கள் மாறிவிட்டன. குறிப்பாக சர்ச்சைக்குரிய நிலப்பரப்புகளின் அளவு போன்றவை, அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே நடந்த போர்களுக்குப் பின்னர் மாறிவிட்டன.
இஸ்ரேல் தற்போது கட்டுப்பாட்டிலிருக்கும் நிலப்பரப்பின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்த விரும்புகிறது. ஆனால் பாலத்தீனர்களோ 1967 போருக்கு முன்னர் இருந்த எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த எல்லைகள் வகுக்கப்படவேண்டும் என்று கருதுகிறார்கள்.

மேலும், மேற்குக் கரையில், யூதக் குடியேற்றங்கள் தொடர்வது அங்கு இருக்கும் பாலத்தீன சுயாதீன நிலப்பரப்பைப் பாதிக்கிறது என்பதால் அங்கு ஒரு மௌன யுத்தம் நிலவுகிறது.
ஆனால் மிகவும் சிக்கலான பிரச்சனை, ஜெருசலேத்துக்கு உள்ள குறியீட்டளவிலான முக்கியத்துவம்தான்.
பாலத்தீன நிர்வாகம் மற்றும் ஹமாஸ் குழு ஆகிய இரண்டுமே கிழக்கு ஜெருசலேத்தை தங்களது தலைநகராகக் கோருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதை 1967லிருந்து ஆக்ரமித்து வைத்திருக்கிறது.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் இறுதி ஒப்பந்தம் எட்டப்படவே முடியாமல் போகலாம்.
மற்ற விட்டுக்கொடுப்புகளை செய்யலாம். ஆனால் ஜெருசலேம் விட்டுக்கொடுக்கப்படமுடியாத ஒன்றாகிவிட்டது.


140409222020_obama_netanyahu_abbas_304x1
ஒபாமா, நெடன்யாகூ,மஹ்மூத் அப்பாஸ்

தற்போதைக்கு , முடங்கிப்போன அமைதி வழிமுறையை உயிர்ப்பிக்க முடியும் என்று தோன்றவில்லை.
உண்மையில் இந்த பிரச்சனையின் வரலாற்றின் எந்தக் கட்டதைக் காட்டிலும் , தற்போதைய கட்டத்தில், இந்த பழைய மோதலுக்கு தீர்வு காண முயற்சிகள் சொற்பமாகவே எடுக்கப்படுகின்றன.
பாலத்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் இஸ்ரேலியப் பிரதமர் பின்யமின் நெடன்யாகூவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டத் தேவையான விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வார்கள் என்று யாரும் நம்பவில்லை.

http://www.bbc.com/tamil/global/2015/10/151019_israelpalestineq

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.