Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்லொவாக்கியா: நவ-நாஸிசத்தின் புத்துயிர்ப்பு

Featured Replies

article_1458800818-Slovakia.jpg

தேசப்பற்று என்பது ஆபத்தான ஒரு கருவியாகும். அதைப் பற்றுவோர், தத்தம் நாடுகளில் அழிவுக்கே வித்திட்டுள்ளனர். தேசப்பற்றைக் கையாளல், கத்தி மேல் நடப்பதைப் போன்றது. கொலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடைய, முற்போக்கான திசைகாட்டிய தேசப்பற்றும் தேசநலனும், அடக்குமுறையின் ஆயுதங்களாகவும் சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தும் கோட்பாடுகளாகவும் இன்று மாறியுள்ளன.

இம்மாதத் தொடக்கத்தில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லொவாக்கியாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்லொவாக்கிய தேசியவெறியை, அதன் நவீன நாஸிச வடிவில் பரப்புகின்ற 'எங்கள் ஸ்லொவாக்கியா' கட்சியானது, 8 சதவீத வாக்குகளைப் பெற்று 10 சதவீத நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றமை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களில் 23 சதவீதம் பேர், இக்கட்சிக்கு வாக்களித்துள்ளமை, கடும்போக்குத் தேசியவாதச் சக்திகளுக்கு, இன்று ஐரோப்பாவெங்கும் இளையோரிடையே ஆதரவு வலுவடைவதை உணர்த்துகிறது.

இன்று ஐரோப்பாவில் நிகழும் இம்மாற்றம் புதிதல்ல. ஆனால் இவ்வாறான நவ-நாஸிச சக்திகளுக்கான ஆதரவு, நாடாளுமன்ற அரசியலில் மெதுமெதுவாகச் செல்வாக்குச் செலுத்துவதாகவும் நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையைத் தீர்மானிப்பதாகவும் அமைவது புதிது. இம்மாற்றம், எதிர்கால ஐரோப்பாவின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. ஒரு புறம், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய ஐரோப்பா, தாராள ஜனநாயகத்தையும் அதன் தூண்களாக மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், கட்டற்ற சந்தை, நாடாளுமன்ற ஜனநாயகம் என்பவற்றையும் கொண்டு வளர்ந்தது. மறுபுறம் சோசலிசம், சோவியத் யூனியனின் அண்டை நாடுகளில் செல்வாக்குச் செலுத்தியது. இன்றைய மாற்றம், இவை இரண்டுக்கும் மாறாக, தீவிர தேசியவாத, அதி வலதுசாரி எழுச்சியைக் குறிக்கின்றது. உலகப் பொருளாதார நெருக்கடியோடு இவ்வெழுச்சி மெதுவாகத் தொடங்கினாலும் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி, தீவிர வலதுசாரிகள், தேசியவாதத்தைக் கையிலெடுக்க உதவியது.

கடந்த ஆண்டு, முழு ஐரோப்பாவையும் சூறாவளி போல் தாக்கிய அகதிகளின் வருகைக்கு அரசுகளின் ஆதரவு, தீவிர வலதுசாரி சக்திகளின் எழுச்சியை ஒரு பேரலையாக்கியது. இன்று, ஐரோப்பிய நாடுகளின் பிரச்சனைகளுக்கு ஆபிரிக்க, மத்திய-கிழக்கு நாடுகளின் அகதிகளே காரணம் என்றும் அவர்களைத் திருப்பியனுப்ப வேண்டும் என்றும், அகதிகளுக்கு ஆதரவான ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறி, தேசநலனைக் காக்க வேண்டும் என்றும் செய்யும் பிரசாரம் பலன் தருகிறது. வேலையின்மை, அரச உதவிகளின் குறைப்பு, சமூக நலத்திட்டங்களில் வெட்டு என்பவற்றாற் பல நெருக்கடிகளை இளஞ்சமுதாயம், குறிப்பாக எதிர்நோக்குகிறது. அதன் காரணம் அகதிகளும், ஐரோப்பிய ஒன்றியமுமே என்ற வாதம் நன்கு எடுபடுவதால், இளம் வாக்காளர்களிடையே தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவு வலுத்துள்ளது. ஸ்லொவாக்கியா, இன்று வளர்ச்சியடையும் முக்கியமான கிழக்கு ஐரோப்பிய நாடாகும். இரண்டாம் உலகப் போரின் பின்னர், வலுவான சோசலிச நாடாயிருந்த செக்கோஸ்லொவாக்கியா, சோவியத் யூனியனின் முடிவின் பின்; இரு நாடுகளாகப் பிரிந்து செக் குடியரசு, ஸ்லொவாக்கியா ஆகிய இரு நாடுகள்; தோன்றின.

1918இல் ஓஸ்ற்றிய - ஹங்கேரியப் பேரரசிலிருந்து விடுதலை பெற்ற, முதல் கிழக்கு ஐரோப்பிய நாடான செக்கோஸ்லொவாக்கியப் பிரிவினையில், தேசியவாதத்தின் பங்கு பெரிது. இன்று, பெருந் தேசியவாதத்தின் எச்சங்களின் எழுச்சியை, நவீன வடிவில் ஸ்லொவாக்கியா எதிர்நோக்குகிறது. இவ்வகையில், ஸ்லொவாக்கியத் தேர்தல் முடிவுகள் முக்கியமானவை. தொடர்ந்து சோசலிசத் தன்மையுடைய ஆட்சிகளைக் கொண்டிருந்த ஒரு நாட்டில், ஆளும் சோசலிசக் கூட்டணி, நாடாளுமன்றப் பெரும்பான்மையை முதற்தடவையாக இழந்துள்ளது. அதேவேளை, தீவிர வலதுசாரிக் கட்சிகள் இரண்டும் மொத்தமாக, நாடாளுமன்றில் காற்பங்கு ஆசனங்களைப் பெற்றுள்ளன. அதில்; நவ-நாஸிச சித்தாந்ததை வெளிப்படையாக ஆதரிக்கும் 'நமது ஸ்லொவாக்கியா' கட்சியின் வளர்ச்சி குறிப்பான கவனிப்புக்குரியது.

2011ம் ஆண்டு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்து, ஐந்து ஆண்டுகளில் ஸ்லொவாக்கியாவின் முக்கியமான அரசியல் சக்தியாக 'நமது ஸ்லொவாக்கியா' வளர்ந்திருக்கிறது. இதன் தலைவரான மரியன் கொட்லேபா, ஸ்லொவாக்கியாவில் தடைசெய்யப்பட்ட நவ-நாஸிக் கட்சியின் தலைவராக இருந்தவர். இக்கட்சி, இரண்டாம் உலக யுத்தத்தில் செக்கோஸ்லொவாக்கியாவில் இருந்து பிரிந்து, ஜேர்மனியின் ஆதரவுடன் 1939 முதல் 1945 வரை இருந்த ஸ்லொவாக் குடியரசை ஆண்ட நாஸி ஆதரவாளரும் ஹிட்லரின் கூட்டாளியுமாகிய ஜோசவ் டிசோவின் வாரிசுகள் என்று தம்மைக் கூறுகிறார்கள். டிசோவின் ஆட்சியில் யூதர்கள், ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். ஸ்லொவாக்கியா ஏற்றுமதி செய்த யூதர்கள், நாட்டுக்கு மீண்டும் திரும்பமாட்டார்கள் என்ற உத்தரவாதம் தந்தால், ஒவ்வொரு யூதருக்கும் 500 ஜேர்மன் மார்க்குகள் தருவதாக, ஜேர்மனிக்கு டிசோவின் ஆட்சி தெரிவித்தது. ஸ்லொவாக்கியாவில் இருந்து அனுப்பிய யூதர்களில் 83 சதவீதம் பேர் கொல்லப்பட்டார்கள்.

ஸ்லொவாக்கியாவைப் போல ரொமானியா, பல்கேரியா, ஹங்கேரி, போலந்து உட்பட்ட ஏனய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், தீவிர வலதுசாரித் தன்மையுடைய பாஸிச, நவநாஸிசக் கொள்கைகளை முன்மொழியும் கட்சிகளுக்கான ஆதரவு வலுக்கிறது. இது, பேர்லின் சுவரின் வீழ்ச்சியின் பின் மேற்குலகு 'ஜனநாயகப்படுத்திய' அரசுகளின் இருப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் பின் சோவியத் யூனியனின் ஆதரவுடன், சோசலிசத் தன்மையுடையதாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 1990களில் 'கம்யூனிசத்தின் முடிவு' அறிவிக்கப்பட்டு அவை தாராள ஜனநாயகங்களாகின. அம்மாற்றத்தில், தேசிய நலனும் தூண்டப்பட்ட தேசியவாதமும் முக்கிய பங்காற்றின. தேசியவாதம், ஐரோப்பாவில் எவ்வாறு முதலாளித்துவ நலன்களுக்குப் பயன்பட்டது என்பதும் சோசலிசவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொண்டோர் எவ்வாறு மேற்குலக நலன்களுக்கு உதவினார்கள் என்பதும் நோக்கப் பயனுடையன.

முன்னேறிய முதலாளிய நாடுகளில், மத அடையாளத்தை விட வலுவான சக்தியாகத் தேசியவாதம் இருந்துள்ளது. அங்கெல்லாம் தேசியவாதத்தின் வலிமைக்கு முன் பணிந்து தேசியவாதிகளாகவும் சோசலிசவாதிகளாகவும் தோற்றங்காட்டுகிறவர்கள் இருந்துள்ளனர். அதேவேளை, சோசலிசம் என்ற பேரில், மக்களைக் கவரவும் தேசியவாதத்தை ஒரு வெறியாக வளர்த்துப் பெருமுதலாளியத்துக்குப் பணியாற்றியவர்களும் இருந்துள்ளனர். இவ்வாறான போலி சோஷலிசத்தை பாஸிஸவாதிகள்; பயன்படுத்தியுள்ளனர். அத்துடன், சமூக ஜனநாயகவாதிகள் என்று தம்மைக் கூறிய பல அரசியல் அமைப்புகள், தமது நாடுகளின் ஆளும் வர்க்கங்கள், தேசபக்தியின் பெயரால் பிற தேசங்களையும் தமது நாட்டினுள் உள்ள தேசிய இனங்களையும் சமூகப் பிரிவுகளையும் ஒடுக்கும்போது அந்த ஒடுக்குமுறைக்கு உடந்தையாகவும் காணப்பட்டமை நேர்ந்துள்ளது.

தேசியவாதத்தின் பின்னாலுள்ள அதிகார வர்க்கங்கள், பிற தேசங்கள் மீதான தமது ஆக்கிரமிப்பையும் அடக்குமுறையையும் சுரண்டலையும் நியாயப்படுத்த, தமது சமூகத்தின் பெரும்பான்மையைத் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. கடும் வலதுசாரிப் போக்குடையோர், தேச நலன் என்பதை மட்டுமே வலியுறுத்தி, தமது ஒடுக்குமுறையை உள்நாட்டிலும் பிரயோகிப்பது வழக்கம். ஐரோப்பாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் மீதான வெறுப்பும் அதனடிப்படையில் உருவான தேசிய வெறியும், இன்று தீவிர வலதுசாரிகளின் கைகளைப் பலப்படுத்தியுள்ளன.

தீவிர வலதுசாரிச் சிந்தனை, ஐரோப்பாவுக்குப் புதிதல்ல. ஆனால் இன்றுவரை அது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பங்காளியாகவில்லை. பிரான்ஸின் தீவிர வலதுசாரிக் கட்சியாக லூயி பென்னின் தேசிய முன்னணியாகட்டும், ஒஸ்ற்றியாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், டென்மார்க்கின் மக்கள் கட்சியாகட்டும் - யாவும் தீவிர வலதுசாரித் தன்மையை உடையனவாயினும், வாக்கு அரசியலில் அங்கிகாரம் பெற, பாஸிசத்தை வெளிப்படையாகக் கண்டிப்பதோடு தாராளவாத ஜனநாயக விழுமியங்களை மதிப்பதாக அறிவித்து, தங்கள் தீவிர-வலது நிலைப்பாட்டை விலகி நிற்பதாகத் தோற்றங்காட்டியே வாக்குகளைப் பெற்று, பிரதிநிதிகளை நாடாளுமன்றுக்கு அனுப்பக்கூடிய கட்சிகளாக முடிந்தது. இப்போதைய ஸ்லொவாக்கிய நிலவரம் வேறு. அது, கிழக்கு ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின் தன்மையையும் ஆதரவையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

மேற்கத்தைய ஐரோப்பாவின் தீவிர-வலது கட்சிகள் போலன்றி, ஒரு சமரசமுமின்றி வெளிப்படையான பாஸிச, நவ-நாஸிசக் கொள்கைகளை வெளிப்படையாக முன்மொழிவதன் மூலமும் அதைப் பிரசாரஞ் செய்வதன் மூலமும் இக் கட்சிகள், தங்கள் ஆதரவை உருவாக்குகின்றன. மேற்கு ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் செய்யத் தவறியதை, இவர்கள் செய்கிறார்கள். இது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருக்கும் தாராள ஜனநாயகம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. முதலாளியம், ஏகாதிபத்தியமாக மாறியபின், நிதி மூலதனத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் உலக மயமாதலும் மூலதனத்தின் அசைவாற்றலும், அரசியல் சக்தியொன்றாக, நவ-தாராளவாத எழுச்சியுடன் இணைந்தன. முன்னேறிய முதலாளிய நாடுகளில், சமூகப் பாதுகாப்பினதும் சமூக நலனினதும் பிரதான ஆதாரமான அரசாங்கம் ஆற்றிய பங்குக்கு, அவை குழிபறித்தன. இப்பின்னணியில், பொருளாதார நெருக்கடியும் அகதிகள் நெருக்கடியும் இணைந்து, தேசியவாதத்தை முன்தள்ளுகையில், தாராளவாத ஜனநாயகம் தாக்குப்பிடிக்க இயலாமல் தடுமாறுகிறது. வலது தீவிரவாதம், இந்நெருக்கடிகளுக்கான காரணங்களை உள்ளே தேடாமல், திட்டமிட்டு வெளியே தேடுகிறது. சுட்டிக்காட்டுவதற்கான ஓர் எதிரியோ அல்லது பல எதிரிகளோ அகப்பட்டுவிட்ட நிலையில், அதைக் காட்டித் தேசியவெறியை ஊட்டுகிறது.

இவ்விடத்தில், தேசியம் பற்றிய புரிதல் முக்கியமானது. மேலாதிக்கத்துக்கும் ஒடுக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக, விடுதலைக்காகப் போராடும் தேசியம், அந்த நோக்கங்கட்குட்பட்டு மட்டும் முற்போக்கானது. அதேவேளை பழைமைவாதம், அடிப்படையான சமூக அமைப்பைப் பேணும் நோக்கு என்பனவற்றையும் பிற தேசிய இனங்களையும் தேசங்களையும் இழிவாகவும் பகைமையுடனும் நோக்குகின்ற தன்மையையும், அது தன்னுள் உட்பொதித்து வைத்திருக்கிறது. ஸ்லொவாக்கியா கொழுந்துவிட்டு எரியவுள்ள தீயின் சுவாலை மட்டுமே. இச்சுவாலை, பல்லினச் சமூகங்களின் இருப்பையும் ஒற்றுமையையும் வாழ்வியலையும் மட்டுமன்றி மொத்த ஐரோப்பாவையுமே பற்றி எரியச் செய்யக்கூடியது. விந்தை என்னவென்றால், எது ஜனநாயகம் என்று எமக்குப் போதிக்கப்பட்டதோ அதே ஜனநாயகத்தின் பெயரால் நவ-நாஸிசம் தன் கால்களை வலிதாக ஊன்றுகிறது. இது, ஐரோப்பாவில் தாராளவாத ஜனநாயகத்தின் முடிவை அறிவிக்கிறது. -

http://www.tamilmirror.lk/168732/%E0%AE%B8-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%B8-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.sJt0GZyi.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.